“சிலவற்றை கலைஞர்களால் விளக்க முடியாது”

(கலைஞர் மனீஷா ராஜுவுடன், கலைஞர் ஜெயராமின் உரையாடல்)

மனீஷா ராஜு

நீலி மின்னிதழுக்கான முகப்போவியம் மற்றும் முதல் இதழுக்கான அட்டை விளம்பரங்களுக்கு(posters) ஓவியரான மனீஷா ராஜுவின் படைப்புகள் பயன்படுத்தப்பட்டது. அவ்வகையில் குக்கூ சிவராஜ் தான் மனிஷா ராஜுவை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிறைந்த நெற்றியில் பெரிய சிவப்பு பொட்டுடன் கூடிய பெண் முகங்கள், சிவப்பு மஞ்சள் நிறப் பின்னணி, பல இடங்களில் அதை சமன் செய்யும் விதத்தில் குளிர்ந்த நீலம் பச்சை ஊதா வண்ணங்களுடன் கூடிய நிறக்கலவை, சிவப்புநிற பூக்கள் ஆகியவை கொண்ட அவரது ஓவியங்கள் பெண் எழுத்தாளர்கள்/கலைஞர்களின் படைப்புகளை பற்றி பேசுவதை நோக்கமாக கொண்ட நீலி மின்னிதழுக்கு பொருத்தமாக அமைந்தது. கைப்பேசி வழியாக நடந்த கேள்வி-பதில் உரையாடலில் மனீஷா ராஜு தன் படைப்புலகம் சார்ந்தும் சென்னை கலைச்சூழல் குறித்த சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மனீஷா ராஜுவிடம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடலின் பதிவை திருப்பி கேட்டுப் பார்த்த போது என் சமாளிக்கும் ஆங்கிலத்தில் வெட்டி வெட்டி பேசும் கேள்விகளுக்கு அவர் இசை போன்ற ஒழுக்குடன் பதில் சொல்லிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அந்த இசைத்தன்மைக்கு அவர் ஹிந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றவர் என்பது காரணமாக இருக்கலாம். வடஇந்திய ஆங்கில உச்சரிப்பு என ஒன்று உண்டு. தேவநாகரி உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலம். அதை தென்னிந்தியர்கள் கேட்கும் போது சில வார்த்தைகளை தவறவிட வாய்ப்பு அதிகம். மனீஷா ராஜு பேசிய வாக்கியங்களையும் அதன் நோக்கங்களையும் முடிந்தவரை தவறவிடாமல் கோர்த்திணக்கப்பட்டது இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம்.

உங்களைப் பற்றி?

1969 ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்தேன்.  அப்பா ஹரிஹர் குகில்வார். ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் (Ordnance Factory Board) பணியாற்றினார். அம்மா பிரதீபா. பெற்றோர்கள் இருவரும் காலமாகிவிட்டார்கள். நான் தான் மூத்த பெண். எனக்கடுத்து ஒரு தங்கையும் இரு தம்பிகளும் உள்ளனர். தங்கை சங்கீதா ஒரு பெருநிறுவனத்தின் சமூக பொறுப்பு(Corporate Social Responsibility) துறையில் பணியாற்றுகிறார். தம்பி ஶ்ரீகாந்த் சென்னையில் ஒரு மருந்து நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடைசி தம்பி அஜய் ஊறுகாய் தயாரித்து விற்கும் சிறு தொழில் நிறுவனம் நடத்துகிறார். பள்ளி கல்லூரி படிப்பை நாக்பூரிலேயே முடித்தேன். 1997ல் திருமணமானவுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தேன். கணவர் பெயர் ராஜு துர்ஷெட்டிவாலா. ஓவியரான அவரும் நாக்பூரை சேர்ந்தவர் தான். நாக்பூர் கலைக் கல்லூரியில் படித்தவர். ஆனால் 1992 முதல் சென்னையில் வசிக்கிறார். இப்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறோம். மகள் ஹர்ஷதா கலை விமர்சனத்தில் முதுகலை பயின்று வருகிறாள்.

கே: ஓவிய ஆர்வம் எப்படி வந்தது? உங்கள் கலை வாழ்க்கை சார்ந்த பயணத்தை பற்றி பகிர முடியுமா?

ப: சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. வீட்டில் என் அப்பாவுக்கு கலையார்வம் உண்டு. அம்மா பட்டு நூல், துணிகள் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர். ஆனால் என் உடன்பிறப்புகள் யாருக்கும் ஓவிய ஆர்வம் இல்லை. ஓவியக்கலை மீதான ஆர்வம் எனக்கு மட்டுமே இருந்ததால் என் அப்பா என்னை ஓவியம் கற்க உற்சாகப்படுத்தினார். என்னை அவர் கலை பள்ளிகளுக்கு எல்லாம் அழைத்து சென்று அங்குள்ள கலை ஆசிரியர்கள் வரைவதையும், வண்ணத்தை பயன்படுத்தும் விதத்தையும் அறிமுகப்படுத்தினார். ஓவிய வகுப்புகளுக்கும் சென்றோம். ஆனால் கல்லூரி படிப்பிற்கு ஓவியம், கலை சார்ந்து படிக்கும் எண்ணம் இருக்கவில்லை. மாறாக இளங்கலை படிப்பிற்கு வேதியியல், கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு, மனித வளத்தில் எம்.பி.ஏ, பொது நிர்வாகத்தில் முதுகலை படித்தேன். பிறகு ஒரு ஓவியரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு குடிபெயர நேர்ந்தது. நாங்கள் அப்போது சோழமண்டலத்தின் தலைவர் சேனாதிபதியின் வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்கு குடியிருந்தோம். நல்ல புத்தக சேகரிப்புகள் நிறைந்த சேனாதிபதியின் நூலகம் என் பயன்பாட்டிற்கு எப்போதும் திறந்தே இருந்தது. நான் இங்கு வந்து சேர்ந்த 90-கள் முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சோழமண்டலமும் சென்னையும் கலை செயல்பாட்டின் உச்சத்தில் இருந்தது. சேனாதிபதி, கோபிநாத், நந்தன், டக்ளஸ், வெங்கடபதி போன்ற பல முக்கிய கலைஞர்களுடன் நேரடியாக உரையாடவும் கலைஞர்களின் படைப்புகளை பார்க்கவும் கலைக் கூடங்களுக்கு செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. கலைஞர்கள் படைப்புகளை எப்படி அணுகிறார்கள், அவர்களின் மனவோட்டங்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது. சென்னைக்கு வந்த பிறகு மூன்று நான்கு வருடங்கள் கலையை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருந்தேன். அதற்கு அரூப ஓவியரான(abstract painter) என் கணவர்  ராஜுவுடனான உரையாடல்கள் உதவின. இப்படி எனக்கு வாய்த்த கலைச்சூழல் என்னை வளர்த்துக் கொள்ள பேருதவி புரிந்தது. தொடர்ந்து நீர்வண்ணம்(water color), வண்ணக்குச்சிகள்(pastels), அக்ரிலிக்(acrylic) போன்ற பல ஊடகங்களை(medium) பயன்படுத்தி பயிற்சிகளில் மட்டும் ஈடுபட்டிருந்தேன். ஒரு கலைக் கல்லூரி மாணவர் கலை பற்றியும் தான் பயன்படுத்தும் ஊடகங்கள் பற்றியும் ஒரு புரிதலுக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதே அளவு நேரத்தை நானும் எடுத்துக் கொண்டேன். 2000ம் ஆண்டிற்கு பிறகு தான் நான் ஒரு முழுநேர ஓவியராக கலை உலகில் செயல்பட துவங்கினேன். என் முதல் கண்காட்சி 2002ல் நடந்தது. இன்னொரு பக்கம் 1997 முதல் 2002 வரை என் முனைவர்பட்ட ஆய்வில் மூழ்கி இருந்தேன். அதற்காக நாக்பூருக்கு அவ்வப்போது சென்று கொண்டிருந்தேன். ஒரு விருதும் கிடைத்தது. அது முடித்த பிறகு சென்னையில் ஒரு கல்லூரியின் மேலாண்மை பிரிவில் பேராசிரியராக 4 வருடங்கள் பணியாற்றினேன். கலை செயல்பாட்டிலும் வேலையிலும் ஒரே நேரத்தில் தொடர்வது சிரமமாக இருந்ததால் என் வேலையை விட்டுவிட்டு 2008ஆம் ஆண்டு முதல் என்னை முழுவதுமாக கலைக்கு அர்பணித்துக் கொண்டு இன்றுவரை முழுநேர ஓவியராக உள்ளேன்.

கே: நிர்வாகம் மற்றும் மேலாண்மை சார்ந்த உங்கள் படிப்புகள் கலைத்துறைக்கு பயன்படுகிறதா?

ப: தெரிந்தோ தெரியாமலோ கண்டிப்பாக உதவுகிறது. அதில் உள்ள வர்த்தகம் ஓவியத்தில் உதவாது. அதை நான் இங்கே பயன்படுத்துவதில்லை. நம் படைப்புகளை மக்கள் விரும்பினால் மட்டுமே விற்பனையாகும். ஆனால் மக்கள் தொடர்பு, நிர்வாகம் ஆகியவைகளில் நான் தேர்ந்தவள். கண்காட்சிகள் ஒருங்கிணைப்பது, ஒரு வேலையை குறித்த நேரத்தில் முடிப்பது, வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே காண்பது ஆகியவற்றை சரியாக என்னால் செய்ய முடியும். அக்காரணத்தால் என் கண்காட்சிகள் ஒரு சாதாரண நபர் நடத்துவது போல இருக்காது. மிக கச்சிதமாக அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கும். பெரும்பாலான கலைஞர்களுக்கு தங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் தங்கள் படைப்புகளுக்கான சந்தையை கண்டடையவும் தெரியாது. 2004-ல் என் ஆரம்ப நாட்களில் கலை ஆக்கங்களை காட்சிப்படுத்த சென்னையில் எந்த கலைக்கூடங்கள்(art gallery) உள்ளன என்பது கூட எனக்கு தெரியாமல் இருந்தது. சரியான நபர்களை கண்டடைவது, கலைக்கூடங்களுக்கு சென்று என் படைப்புகளை காண்பிப்பது என்று நானே முயற்சிகள் எடுத்தேன். அதன் பலனாக இரு கலைக்கூடங்கள் எனக்கு வாய்ப்பு வழங்கியது. அப்படி ஆரம்பித்து இங்கு வரை வந்து சேர்ந்திருக்கிறேன்.

கே: உங்களிடம் இந்திய மரபோவியங்களின் சிற்பங்களின் தாக்கம் உள்ளது. உங்கள் படைப்புகளில் சிவப்பு நிறம் நிறைந்து காணப்படுகிறது. ஓவியங்களில் சிவப்பு நிறப்பின்னணி, சிவப்பு பூக்கள், இந்திய மரபு ஓவிய சிற்பங்களில் உள்ளது போன்ற பெண் முகம் மற்றும் உருவங்கள், அப்பெண்களின் நெற்றியில் சிவப்பு பொட்டு போன்ற கூறுகள் தொடர்ந்து வருகிறது. அது சாக்தம் மற்றும் காளி வழிபாடு நிறைந்த வங்காள மண்ணின் கலாச்சாரத்தை உங்கள் படைப்புகள் ஞாபகப்படுத்துகிறது. நானும் ரம்யாவும் இதை பற்றி பேசும் போது நீங்கள் பெங்காளியாக இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக ஊகித்தோம். இப்போது தான் நீங்கள் மராத்தி என்பது தெரிந்தது. உங்களுக்கு வங்காள மண் சார்ந்த பின்புலம் ஏதும் உண்டா?

ப: நான் ஏன் இது போன்ற படைப்பு பாணியை வடிவத்தை அடைந்தேன் என்பதை பற்றியும் அதன் பின்புலத்தையும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு மரபான குடும்பத்தில் பிறந்து புராண இதிகாசங்களை கேட்டு வளர்ந்தவள். என் 25 வயது வரை நான் நாக்பூரில் இருந்தேன். என் குடும்ப சூழல் மற்றும் வடஇந்திய பின்புலம் என்னை அறியாமல் என் படைப்புகளில் இருந்து கொண்டிருக்கும். ஆனால் என் படைப்புகளில் உள்ள பெண் உருவங்கள் கூறுகள் எல்லாம் தென்னிந்திய தன்மையை அதிகம் கொண்டுள்ளன என்றே நம்புகிறேன். நான் சென்னையில் குடியேறிய பிறகு சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற அனைத்து கோவில்களுக்கும் போய் வருவேன். மகாபலிபுரத்திற்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கும் பல தடவை போயிருக்கிறேன். இக்கோவில்களில் கிடைக்கும் ஆன்மீக உணர்வும் அங்குள்ள கருங்கல் சிற்பங்களும் என் கலை படைப்புகளுக்கான தூண்டுதல்களுள் ஒன்று.

கே: உங்கள் படைப்புகளில் உள்ள பெண் மற்றும் கடவுள் உருவங்களில் நீங்கள் சொன்ன கோவில் சிற்பங்களின் செல்வாக்கை உணர முடிகிறது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மரபுக் கோவில்களின் சிற்பங்கள் கருமை நிறம் கொண்டவை. அப்படியென்றால் உங்கள் படைப்புகளில் நிறைந்திருக்கும் சிவப்பு நிறம் எங்கிருந்து வந்தது?

ப: சிலவற்றை கலைஞர்களால் விளக்க முடியாது. அது கலையின் தொழில்நுட்பம் சார்ந்தது. என் ஓவியங்களில் ஒரு சமநிலைக்காக எந்த இடங்களில் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தினால் சரி என்று படுமோ அங்கெல்லாம் சிவப்பை பயன்படுத்துகிறேன். அது படைப்பின் போக்கில் உருவாகி படைப்பின் பகுதியாக ஆகி விடுபவை. சிவப்பு நிறத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது ஆன்மீகத் தன்மையும் துடிப்பும் நிறைந்தது. இந்தியத் தன்மையை பிரதிபலிப்பது…

கே: உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டா?

ப: ஆம். அதற்கான பின்புலத்தை சொல்கிறேன். நான் நாக்பூர் என்ற சிறு நகரத்திலிருந்து சென்னை என்ற பெரு நகருக்கு வந்து சேர்ந்த போது முதலில் ஒரு வித தனிமையை உணர்ந்தேன். எனக்கு அப்போது தமிழ் பேச தெரியாது. இங்குள்ள உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாம் புதிதாக இருந்தது. மக்கள் தங்களுக்கென்று நேரம் இல்லாமல் மற்ற பல விஷயங்களில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அது எதோ ஒரு விதத்தில் நாம் நம்முடன் உள்ள தொடர்பை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தை எனக்கு உருவாக்கியது. என் படைப்பில் சுய தேடல், தன்னை உணர்தல் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அப்போது தான் சிறு வயதில் கேட்ட புராண இதிகாச கதைகள் எல்லாம் என் படைப்பில் எதிரொலிக்க ஆரம்பித்தது. அந்த கதைகள் மூலமாக என்னால் தமிழக தென்னிந்திய கோவில்களுடன் இங்குள்ள தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. அப்படித்தான் புராண இதிகாசங்கள் என் படைப்பில் வர ஆரம்பித்தது. பெண் தெய்வம் அல்லது சக்தி ஆரம்பம் முதல் என் படைப்புகளின் பேசுபொருளாக ஆனது.

அதேநேரத்தில் கடவுள்களை பற்றி மட்டும் பேசும் எல்லைக்குள் என்னை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட தெய்வத்திடம் கொண்ட பக்தியால் தங்களை முற்றாக அத்தெய்வத்திடம் சமர்பிக்கும் பக்தர்களையும் என் படைப்பில் காட்ட விரும்புகிறேன். பக்தியின் உச்சத்தில் அவர்களது வாழ்வு எப்படி திகழ்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆண்டாள், கண்ணகி போன்ற தமிழ் மரபு பெண்களின் கதைகளை மொழிபெயர்ப்புகள் மூலம் வாசித்த போது ஆண்டாள் என்னை மிகவும் கவர்ந்தாள். வடஇந்தியாவில் மீராபாய் பிரபலம். ஆனால் ஆண்டாள் தனித்தன்மை வாய்ந்தவள். மீரா ஒரு அரச குலத்தில் பிறந்து கிருஷ்ணபக்தையாக ஆனாள். ஆண்டாள் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டவள். அவள் பெருமாளின் மேல் உள்ள பேரன்பால் மாலையை சூடிக்கொடுத்தவள். அவளுக்காக இங்கே மார்கழி மாதம் களை கட்டும். அந்த சூழலை எதோ விதத்தில் நான் பிறந்து வளர்ந்த சூழலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறது. நான் இரு சூழல்களில் இருந்தும் சிறந்ததை என் படைப்பில் கொண்டு வர முயற்சிக்கிறேன். அல்லது தத்துவார்த்தமாக ஒன்றை மற்றொன்றுடன் இணைத்துப் பார்த்து உருவகப்படுத்திக் கொள்கிறேன். இவையெல்லாம் என் படைப்பில் பெரிய செல்வாக்கை உருவாக்கின. ஆண்டாளை பேசு பொருளாக கொண்ட பல படைப்புகளை செய்திருக்கிறேன். கன்னடத்தின் சிவ பக்தையான அக்கமகாதேவியும் என்னை கவர்ந்தவர். இது போன்ற பக்தர்கள் தங்களை முழுவதுமாக தான் வணங்கும் தெய்வத்திடம் சமர்பித்தவர்கள். உதாரணமாக மீராபாய் தன் கிருஷ்ண பக்தியில் மூழ்கி அன்றாட உலகியல் வாழ்க்கையை பொருட்டாகவே நினைக்காதவள்.

கேள்வி: ஆண்டாளை சித்தரித்திருக்கும் உங்கள் ஆக்கங்களை பார்த்திருக்கிறேன். உங்கள் சில படைப்புகளில் பார்த்த பச்சைகிளிகளும் ஆண்டாளை ஞாபகப்படுத்துகிறது. நீங்கள் கண்ணகி, அக்கமாதேவி போன்றவர்களை பற்றி வாசித்திருந்தும் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து கிருஷ்ண பக்தியால் அனைத்தையும் துறந்த மீரா பாயை தெரிந்திருந்தும் ஏன் ஆண்டாளை மட்டும் அணுக்கமாக உணர்கிறீர்கள்.

ப: அதற்கான காரணத்தை எனக்கும் சொல்லத் தெரியவில்லை:)

ஒரு வேளை திருமாலிடம் ஆண்டாளுக்கு உள்ள அர்பணிப்பாக இருக்கலாம். அது ஆழமானது. தெய்வீகமானது. அவற்றால் கவரப்பெற்றேன். நான் மீரா, கபீர் பற்றியெல்லாம் வாசித்திருக்கிறேன். அவர்களிடம் ஆண்டாளிடம் நான் உணர்வது போன்ற அணுக்கத்தை உணர்ந்ததில்லை. மீராவும் கிருஷ்ண பக்தி நிறைந்தவள். அதற்காக அனைத்தையும் துறந்தவள் தான். வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருந்தாலும் மீராவும் ஆண்டாளும் ஒரே நோக்கை கொண்டவர்கள். ஆனாலும் ஆண்டாளே எனக்கு நெருக்கமானவள். பிரம்மாண்ட கோவில்களுக்கும் நம்மை மலைக்க வைக்கும் தாஜ்மகாலுக்கும் போவது நமக்கு பிடிக்கும். இருப்பினும் ரோட்டோரத்தில் உள்ள ஒரு சிறு கோவிலின் கற்பக்கிரகத்தில் ஒளிரும் சிறு விளக்கும் அங்குள்ள தெய்வமும் அங்கு நிலவும் தெய்வீகத் தன்மையும் வேறொரு உணர்வை தருவன. நான் அதை விரும்புவேன். அல்லது இப்படி சொல்லலாம். நம் வீட்டின் முன் பல வண்ண மின்சார விளக்குகளால் அலங்கரிக்கிறோம். இன்னொரு பக்கம் தெய்வத்தின் முன் ஒரு சிறு அகல்விளக்கை ஏற்றி வைக்கிறோம். இரண்டும் விளக்குகளே. இரண்டும் ஒளியையே தருகிறது. ஆனால் இரண்டு விளக்குகளும் நமக்கு தரும் உணர்வு வேறு வேறு அல்லவா? அந்த உணர்வு முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற ஆன்மீகமான உணர்வுகளை விளக்க முடியாது.

கே: நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் பெரிய கோவில்களுக்கு செல்வதை விட சிறிய கோவில்களுக்கு செல்ல விரும்புகிறீர்கள் அல்லவா? அதே போல தான் அரச பரம்பரையில் பிறந்த மீராவை விட சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆண்டாள் முக்கியமாகப் படுகிறாள் என்று…..

ப: இது அவர்களை ஒப்பிட்டு பார்த்து முடிவுக்கு வருவது பற்றி அல்ல. இது என் அந்தரங்கமான உணர்வு சார்ந்தது.

கே: உங்களால் முழுநேர கலைஞராக வெற்றிகரமாக இயங்க முடிகிறதா? படைப்புகளை எப்படி விற்பனை செய்கிறீர்கள்? இதில் உள்ள சவால்கள் என்னென்ன?

ப: 2002ஆம் ஆண்டு வரை பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினேன். பிறகு என் படைப்புகளை காட்சிப்படுத்த ஆரம்பித்தவுடன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளித்தது. என் படைப்புகளை விரும்பி வாங்கினார்கள். நெடுங்காலமாக இத்துறையில் இயங்குவதால் இங்குள்ள கலை சேகரிப்பாளர்கள்(collectors), படைப்புகளை வாங்குபவர்கள்(buyers) எல்லோரும் அறிமுகமானவர்கள். அவர்களுக்கு படைப்புகளின் தேவைகள் இருக்கும் போது நம்மை அணுகுவார்கள். கலைக் கூடங்கள்(art galleries) மூலமாகவும் படைப்புகள் விற்பனை ஆகும். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை மிக நன்றாக போய் கொண்டிருந்தது. ஊரடங்கிற்கு பிறகு நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால் பிற வருமானங்கள் இல்லாமல் கலையை மட்டும் நம்பி வாழ முடிகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியே.

இருந்தாலும் இது எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தி வருவதில்லை. இத்துறை தினமும் காலை முதல் மாலை வரை பணியாற்றிவிட்டு மாதக் கடைசியில் சம்பளத்தை எதிர்பார்ப்பது போன்றதல்ல. சவால்களும் போராட்டங்களும் நிறைந்தது. ஒவ்வொரு முறையும் படைப்புகளில் புதியவைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கே: சமீபகாலங்களில் நீங்கள் பங்கெடுத்த கலை கண்காட்சிகள் பற்றி

ப: சென்ற 2021-ஆம் வருடம் சென்னை போரம் ஆர்ட் காலரியில்(Forum Art Gallery, Chennai) என் தனிநபர் கண்காட்சி ‘நொஸ்டாள்ஜியா'(Nostalgia) நடந்தது. அக்கண்காட்சி அஷ்டலட்சுமிகளை மையமாக கொண்டது. நவராத்ரி நாட்களில் நான் நமஸ்தேஸ்து மகாமாயே…என்று துவங்கும் சம்ஸ்கிருத ஸ்தோத்திர பாடலை கடவுள் முன் பாடுவது உண்டு. இரு வருடங்களுக்கு முன் அப்படி ஒரு தருணத்தில் ஏன் அஷ்டலட்சுமிகளை மையமாக கொண்டு படைப்புகள் செய்யக்கூடாது என்று தோன்றியதன் பலனே அந்த கண்காட்சி.

சென்ற மாதம் போரம் ஆர்ட் காலரியில் ‘கேம்ஸ் பீப்பிள் ப்ளே'(Games people play) என்ற ஒரு குழு கண்காட்சியில் பங்கெடுத்தேன். க்ரீடா கேம்ஸின்(Kreeda Games) நிறுவனரான வினிதா சித்தார்த் இந்திய பாரம்பரிய உள்ளரங்க விளையாட்டுகளை தொகுத்து புத்தகமாக எழுதினார். போரம் ஆர்ட் கேலரி உரிமையாளர் அந்த விளையாட்டுகள் சார்ந்து ஒரு கலை கண்காட்சி நடந்தால் புதுமையாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்க தேர்ந்தெடுத்த விளையாட்டுகளை அடிப்படையாகக்கொண்டு நாங்கள் சில கலைஞர்கள் படைப்புகளை உருவாக்கினோம். நான் சௌசர்(தாயம்),  அஷ்டா சங்கா, பவ்ரா(பம்பரம்) ஆகிய மூன்று விளையாட்டுகளில் படைப்புகள் செய்தேன். அஷ்டா சங்காவில் நான்கு பேர்கள் ஆடலாம். கிளிஞ்சல்களை நகர்த்தி பாதுகாப்பான பகுதி அல்லது இலக்கு நோக்கி நகரும் விளையாட்டு. கிளிஞ்சல்களை எறிந்தால் நமக்கான எண்கள் கிடைக்கும். அதை வைத்து நாம் நகர வேண்டும். நம் வாழ்க்கையில் கிடைப்பவற்றை கொண்டு நமக்கான இடம் நோக்கி செல்வது போன்றது அது. பழைய காலத்தில் கிளிஞ்சல்களை பணமாக பயன்படுத்தினார்கள். அதனால் கிளிஞ்சல்கள் லட்சுமியின் அடையாளம். லட்சுமி நம் இலக்கு நோக்கி செல்ல உதவுமே தவிர லட்சுமியை இலக்காக கொள்ள முடியாது. பம்பரம் விளையாட்டை கிருஷ்ணனுடன் இணைத்து பார்த்தேன். பம்பரம் வேகமாக சுற்றும் போது தான் அது தன் முனையில் சமநிலையுடன் நிற்கும். கிருஷ்ணனின் வாழ்வும் அப்படிப்பட்டதாக இருந்தது. தொடர்ந்து வெளியுலக அலைச்சல்கள் போராட்டங்கள் இருந்தும் அகச்சமநிலையை கைவிடாதவர் அவர். சௌசர் விளையாட்டு மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். சிவனும் பார்வதியும் ஆடும் விளையாட்டு அது. அவ்விளையாட்டில் எப்போதும் பார்வதி வெல்வாள். அழித்தலின் கடவுளான சிவன் குறுக்கு வழியெல்லாம் பயன்படுத்தி வெல்ல முயற்சித்தாலும் வெல்ல முடிவதில்லை. பிரபஞ்ச இயக்கத்தின் அடையாளம் பார்வதி. அவள் வென்றால் தான் பிரபஞ்சம் தொடர்ந்து இயங்கும். சிவன் உடல் என்றால் சக்தி அதில் உறையும் ஆன்மா. சக்தி இல்லையேல் சிவம் வெறும் சடம். சென்ற அக்டோபர் 15 வரை இக்கண்காட்சி சென்னையில் உள்ள போரம் ஆர்ட் காலரியில் நடந்தது.

கே: ஒரு பெண் கலைஞராக நீங்கள் சந்திக்கும் சவால்கள் எதாவது உண்டா? கலைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சிரமங்கள் என்னென்ன?

ப: எனக்கு எந்த சவால்களும் இல்லை. நான் என் பெற்றோர்களால் ஆண் குழந்தைகளுக்கு நிகராக வளர்க்கப் பெற்றேன். ஆண்பிள்ளைகளுக்கு தரும் சுதந்திரத்தை எனக்கும் கொடுத்தார்கள். திருமணத்திற்கு பிறகும் என் கணவரால் நிகராக நடத்தப்படுகிறேன். அதனால் நான் பெண் என்ற காரணத்தால் எந்த பாகுபாட்டையும் உணர்ந்ததில்லை. குடும்பத்தில் மட்டுமல்ல புறவுலகிலும் இதையே உணர்கிறேன். பல பெண் கலைஞர்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் என்னளவில் நிஜமாகவே அப்படி எந்த புகார்களும் இல்லை.

இங்குள்ள மற்ற பெண்களால் கலையில் பட்டப்படிப்பு முடித்த பிறகும் என்னை போல முழுநேரமாக கலைத்துறையில் இயங்க முடிவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வீட்டாரிடமிருந்து அழுத்தம் மற்றும் பிரச்சினைகள் இருக்கும். கலைத்துறையில் நிறைய உழைப்பு மற்றும் நேர அவகாசம் தேவைப்படுகிறது. இத்துறையில் நாம் ஒரு நிலைக்கு வர ஒரு பத்து வருட காலமாவது ஆகும். பத்துவருடங்கள் கழித்தே நம் உழைப்பின் பலனை நம்மால் பார்க்க முடியும். 9-5 வேலை, அதற்கு உடனடி பலனாக மாதச்சம்பளம் என்ற மனநிலை உதவாது. நமக்கு பழக்கப்பட்ட அன்றாடத்திற்கும்(comfort zone) அப்பாற்பட்ட ஒரு தளத்தில் தான் கலை செயல்பாடு நிகழ்கிறது. அதற்கு எந்த நேர எல்லைகளும் இல்லை. நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவ்வளவு நேரம் நம் உழைப்பை தொடரலாம். சில படைப்புகள் கால அவகாசத்திற்குள் முடிக்க வேண்டியிருந்தால் அதை முடித்தே ஆக வேண்டும். தள்ளிப்போட முடியாது. ஒரு சாதாரண படைப்பை உருவாக்கிவிட்டு அதை சிரமமின்றி விற்றுவிடலாம் என்று யோசிக்கவே முடியாது. கலைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் அர்பணிப்புணர்வு மட்டுமே இங்கே உதவும். மாதச்செலவுகளும் குடும்ப பிரச்சினைகளும் முன்னால் நிற்கும் போது பெண்களால் கலைத்துறையில் சாதிப்பது கடினம். இது கலை என்பதால் பெண்கள் தான் விரும்புவதை செயல்படுத்துவதற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். சுதந்திரம் இல்லையேல் கலை இல்லை. இதெல்லாம் நிறைய பெண்களுக்கு சாத்தியமேயில்லை. இதை போன்ற துறைகளில் பெண்கள் சாதிக்க அத் துறைகளின் ஏற்ற இறக்கங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உளவியல் ரீதியான ஊக்கமும் ஆதரவும் அளிக்கும் ஒருவர் அல்லது புரிந்து கொள்ளும் குடும்பப் பின்புலம் வேண்டும்.

பெண்கள் தங்களுக்கரிய பிரச்சினைகளில் சிக்கி கொண்டிருப்பதும் அவர்களுக்கு தடையாக இருக்கலாம். அப்பெண்களின் உளவியல் சார்ந்த பிரச்சினையும் இதில் அடக்கம். கலைக்கு தேவையான அர்பணிப்பு அவர்களிடம் குறைவாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக நான் இப்பிரச்சினைகள் எதிலும் சிக்கி கொள்ளவில்லை. நீங்களும் கலைஞன் என்பதால் உங்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பெண் கலைஞர்கள் குறைவாகவே உள்ளனர். 

கே: உங்களை ஈர்த்த கலைஞர்கள் பற்றி சொல்ல முடியுமா?

ப: சென்னையில் சோழமண்டலத்தின் முன்னோடியான கே.சி.எஸ்.பணிக்கர் ஒரு பெரிய ஆளுமை. அவரது படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் பயில்வதற்கான பல விஷயங்கள் அவரது படைப்பில் உள்ளன. நான் அவரது படைப்பில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். கே.சி.எஸ் பணிக்கர் ஒரு நாயை சித்தரித்திருக்கும் நீலநிற பின்னணியுடன் கூடிய படைப்பு ஒன்று சோழமண்டலம் கலைகூடத்தின் மேல்தளத்தில் காட்சியில் உள்ளது. தனிப்பட்ட முறையில் நான் விரும்பும் படைப்பு அது. அடுத்ததாக ரெட்டப்ப நாயுடுவின் படைப்புகள் என்னை கவர்ந்தவை. ஆன்மீக உள்ளடக்கமும் எளிமைபடுத்தப்பட்ட கடவுள் உருவங்களும் கொண்டது அவரது படைப்புலகம். பாரிஸ் விஸ்வநாதனின் அரூப ஓவியங்களும் பிடிக்கும். பாரிஸ் விஸ்வநாதனின் படைப்புகளில் அவருக்கென்றே உரிய வண்ணங்களும் வடிவங்களும் உள்ளது. கோபிநாத், பி.எஸ். நந்தன், சி. டக்ளஸ், ஜானகிராமன், எஸ். தனபால், சந்தான ராஜ், கே.வி. ஹரிதாசன், முனுசாமி போன்ற கலைஞர்களின் படைப்புகளும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சந்தான ராஜின் ஆக்கங்களில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். வெங்கடபதியின் உருவாக்கங்களும் அற்புதமானவை.

இந்திய அளவில் வங்காள கலை பள்ளி(Bengal School of Arts) கலைஞர்களின் படைப்புகள் என்னை பெரியளவில் ஈர்த்தவை. அபனேந்திரநாத் தாகூர் என் மனதிற்கு நெருக்கமானவர். ரபீந்திரநாத் தாகூர், ககனேந்திரநாத் தாகூர், கணேஷ் பைன், கணேஷ் ஹலோய் போன்ற வங்கத்தின் முக்கிய படைப்பாளர்கள் அனைவரும் எனக்கு பிடித்தமானவர்கள். ஹைதராபாத் கலைஞர்களில் சூர்ய பிரகாஷ், மும்பையில் பிரபாகர் கோல்டே, போபால் பாரத் பவனின் ஜெ சுவாமிநாதன் ஆகிய கலைஞர்களும் என் விருப்பப்பட்டியலில் உள்ளவர்கள். இக்கலைஞர்களின் படைப்புகளில் இருந்து கற்றுக் கொள்வதால் அவர்களது செல்வாக்கு நம்மிடம் உருவாகும் என்று நினைப்பது தவறு. என்னை பற்றி நானே அறிந்து கொள்வதற்கும் என் தேடலுக்கும் அவர்களது படைப்புகள் பெரியளவில் உதவுகிறது.

உலகளவில் பால் கானின் கலை ஆக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஓவியங்களில் உருவ சித்தரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அதேபோல் தான் வான்காவும். அடுத்து பிக்காசோ, மோனே, செசான் போன்ற கலைஞர்கள். எனக்கு மட்டுமல்ல கலையுலகைச் சேர்ந்த அனைவரும் விரும்பும் கலைஞர்கள் இவர்கள்.

கே: உங்களுக்கு பிடித்தமான பெண் கலைஞர்கள் யார்?

ப: நிறையபேர் இருக்கிறார்கள். அதில் தங்கள் படைப்புகளால் என்னை கவர்ந்தவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அர்பணா கோரின்(Arpana Cour) கலை ஆக்கங்கள் பிடிக்கும். பரோடாவின் றினி துமல்(Rini Dhumal), நீலிமா ஷேக் ஆகிய கலைஞர்கள் பிடித்தமானவர்கள்.

மேற்கில் அப்படி எந்த பெண் கலைஞர்களும் என் ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் ப்ரீடா காலோ(Frida Kahlo) இருக்கிறார்கள். அனைவருக்கும் விருப்பமானவர் அவர். சென்னையில் அர்னாவஸின் ஆக்கங்கள் பிடிக்கும். அவரது கணவர் எஸ்.ஜி. வாசுதேவும் சிறந்த கலைஞர். சோழமண்டலத்தை சேர்ந்தவர்.

கே: உங்களுக்கு பிடித்த நீங்கள் வழிபடும் கடவுள்கள் எவை? எந்தெந்த கோவில்களுக்கு வழக்கமாக போய் வருவீர்கள்?

ப: இது கொஞ்சம் கடினமான கேள்வி:)
நானும் என் கணவரும் சக்தியை வழிபடக்கூடியவர்கள். ஹனுமன் எங்களிருவருக்கும் பிடித்தமான கடவுள். நான் வழக்கமாக சிறுதெய்வ அம்மன் கோவில்களுக்கு செல்ல விரும்புபவள். பெரிய கோவில்களுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இங்கே ஈஞ்சம்பாக்கத்தில் கூட நான் அடிக்கடி போகும் கௌரி அம்மனின் சிறு கோவில் உள்ளது. நான் வழக்கமாக வழிபடுவதில்லை என்றாலும் இங்கே உள்ள குளத்தின் கரையில் இருக்கும் நாக சிற்பங்களின் நளினமான வடிவங்கள் பிடிக்கும்.

கே: சக்தி வழிபாட்டில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தில் இருந்து தான் உங்கள் படைப்புகளில் நிறைந்திருக்கும் சிவப்பு நிறம் வந்தது என்று நினைக்கிறேன். அது போல பெரிய கோவில்களில் சிவப்பு நிறம் குறைவாகவே கண்ணுக்கு படும். அக்கோவில்களின் உள்ளே இருக்கும் முக்கிய கடவுள்களின் அலங்காரங்களில் மட்டும் தான் நிறங்களை பார்க்க முடியும். வெளியே இருக்கும் சிற்பங்கள் அனைத்தும் அலங்காரம் இல்லாமல் கல்லின் கருமை நிறத்துடன் மட்டுமே இருக்கும். ஆனால் சிறு அம்மன் கோவில்களுக்கு நாம் சென்றால் மஞ்சள் குங்குமத்துடன் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் சிலைகளே நம் மனதில் நிறைந்திருக்கும். சிறு தெய்வம், அம்மன் ஆலயங்களின் மேல் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும் உங்கள் ஓவியங்களின் சிவப்பு-மஞ்சள் நிறத்திற்கு காரணமாகலாம்.

ப: சரியாகச் சொன்னீர்கள். அதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதை இப்போது நீங்கள் தான் கண்டறிந்திருக்கிறீர்கள்:)
சிறு கோவில்களில் அம்மனை காட்சிப்படுத்தும் விதம் மற்றும் நான் தமிழில் விரும்பி பார்க்கும் அம்மன் திரைப்படங்களில் வரும் அம்மன் சித்தரிப்புகள் கூட என் படைப்புகளில் எதிரொலிக்கிறது என்று நினைக்கிறேன்.

கேள்வி: உங்கள் கணவரும் ஒரு ஓவியக் கலைஞராக இருக்கிறார். அவரது படைப்புகள்/சிந்தனைகள் உங்களையும் உங்களது படைப்புகள்/சிந்தனைகள் உங்கள் கணவரையும் பாதித்திருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா?

ப: நானும் என் கணவர் ராஜுவும் கலைஞர்கள். நாங்கள் ஒரே ஸ்டுடியோவில் அவரவர் படைப்புகளை உருவாக்குகிறோம். எங்கள் இருவரது வாழ்க்கையிலும் ஆன்மீகம் என்பது பொதுவான தளம். அவரும் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர். ஆனால் எங்கள் இருவரது படைப்பு வெளிப்பாடுகளும் முற்றிலும் வேறானவை. என் படைப்புகள் தனித்துவமான உருவங்களை(figurative) கொண்டவை. அப்படைப்புகளை உருவாக்க எனக்கென்ற சிந்தனை மற்றும் செயல் முறைகள் உள்ளன. அதற்கு மாறாக ராஜுவின் படைப்புகள் முற்றிலும் அருவமானவை(abstract). அவர் வண்ணங்களுடன் புழங்குபவர். நான் வடிவங்களுடன் புழங்குபவள். அவ்விதத்தில் இரு துருவங்கள் நாங்கள். எங்கள் ஸ்டுடியோவில் வருபவர்கள் எங்கள் படைப்புகளில் இருக்கும் இந்த வித்தியாசத்தை பார்த்து திகைப்படைவதை பார்த்திருக்கிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் எந்த செல்வாக்கையும் செலுத்தவில்லை என்று சொல்வார்கள். எங்களை ஆன்மீகம் என்ற புள்ளி இணைக்கிறது. ஆனால் எங்கள் படைப்புகளில் நாங்கள் ஒருவருக்கொருவர் செல்வாக்கை செலுத்துவதாக நான் உணரவில்லை. அப்படி எங்காவது செல்வாக்கு உள்ளதா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்:)

கேள்வி: நீங்கள் பெண்ணியவாதியா?பெண்ணிய இயக்கங்களில் நேரடியாக பங்கெடுத்த அனுபவங்கள் உண்டா? பெண்ணியவாதத்தின்(feminist) தாக்கம் உங்கள் சிந்தனைகளில்/படைப்புகளில் உள்ளதா?

ப: ஒரு பெண்ணுக்கு எல்லா விதத்திலும் சம உரிமை வேண்டும் என்பதை நான் வலுவாக ஆதரிக்கிறேன். இரண்டாவதாக ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவுகள் எக்காரணம் கொண்டும் கேள்விக்குள்ளாக்கப்படலாகாது. இவை இரண்டும் பெண்ணியத்தின் அடிப்படை என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் எந்த பெண்ணிய இயக்கங்களிலும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல நான் பாலின பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். நான் அரத்தநாரீஸ்வரரை வழிபடுபவள். ஆணையும் பெண்ணையும் சமமாக பார்ப்பவள். இருந்தாலும் சமூகத்தில் பல பெண்கள் போராடியே வர வேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பெண்களை சமமாக நடத்தி அவர்கள் தங்கள் வாழ்க்கை சார்ந்த முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தை கேள்வி கேட்காமல் இருந்தால் அதுவே போதுமானது என்பது என் கருத்து.

என் கலைப்படைப்புகளும் பெண்ணியத்தையே பேசுகிறது என்று நினைக்கிறேன். சிலர் பெண்ணிய இயக்கங்களின் போராட்டக் கூட்டங்களில் நேரடியாக பங்கெடுப்பார்கள். வேறு சிலர் பெண்ணியம் இன்று எப்படி பொருள் கொள்கிறது என்பதைப் பற்றி பேசுவார்கள். நான் பெண்ணியத்தை என் படைப்புகளில் ஆன்மீக தளத்திற்கு கொண்டு செல்கிறேன். அதற்கான இடம் உள்ளது. ஏனெனில் நான் எப்போதும் பெண்ணை வலிமை குறைந்தவளாக பார்க்கவில்லை. அவள் இயற்கையாகவே சக்தி வாய்ந்தவள். தனக்கான வலிமையை பிறரிடமிருந்து பெற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் தன்னளவில் அவள் வலிமையானவள். அந்த உள்ளுறையும் சக்தி தெய்வீகமானது. நானும் என்னை வலுவற்றவளாக உணர்ந்ததில்லை. நான் சக்தியை வழிபடுபவள் ஆதலால் இதை என்னுள் ஆழமாக உணர்கிறேன்.

கே: உங்களுள் நீங்கள் சக்தி வாய்ந்தவளாக உணர்வது கூட உங்கள் ஓவியங்களில் சிவப்பு நிறமாக பிரதிபலிக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் சிவப்பு நிறம் சக்தி வாய்ந்தது. மற்ற நிறங்களுடன் ஒப்பிடும்போது நம் கண்ணை உடனே கவரும் அளவிற்கு ஆதிக்கமும் கம்பீரமும் நிறைந்தது.

ப: ஆம். மிகவும் உண்மை.

கே: உங்கள் ஓவியங்களில் பெண் கடவுள் உருவங்கள் புராண இதிகாச பாத்திரங்கள் எல்லாம் நிரம்பி இருக்கிறது. நிலக்காட்சிகளோ அரூப ஓவியங்களோ நம் வாழ்க்கையின் அன்றாடச் சித்தரிப்புகளோ இல்லை. அது ஏன்?

ப: 2004, 2005, 2006 ஆண்டுகால ஆரம்பகால ஓவியங்களில் பெண்களின் அன்றாடங்களான தினசரி வேலைகள், குடும்பம், வீடு, உறவுகள் எல்லாம் நான் நிறைய வரைந்திருக்கிறேன். நான் நாக்பூரில் இருந்து வந்தவள். நாக்பூர் மகாராஷ்டிராவின் இரண்டாவது தலைநகர் என்று சொல்லப்பட்டாலும் பெருநகர்களான மும்பையுடனும் சென்னையுடனும் ஒப்பிட்டால் சிறு நகரமே. சென்னை வந்த புதிதில் இங்கே மக்கள் பரபரப்புடன் தங்களுடனான சுய தொடர்பை இழந்தவர்களாக இருப்பதை பார்த்தேன். என் சொந்த ஊரில் மக்கள் இவ்வளவு பரபரப்பாக இருக்க மாட்டார்கள். இது ஒரு பெருநகரம் ஆதலால் மக்களுக்கு நேரம் இல்லை. அது எனக்கு புதிதாக இருந்தது. தனிமையை உணர்ந்தேன். அது என்னை சுய தொடர்பு(self connection) நோக்கி கவனம் செலுத்த வைத்தது. பெண்கள் தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருப்பது போலவும் அதே நேரத்தில் தங்கள் சுய தொடர்பை இழக்காமலும் இருக்கும் ஓவியங்கள் வரைந்தேன். அம்மா-மகள், குழந்தைகள், சகோதரிகள், மக்களுடன் உரையாடுவது, தங்களுக்குள் உரையாடுவது போன்ற பேசு பொருள்கள். இதை கிட்டத்தட்ட 2007 வரை தொடர்ந்தேன். அப்போது ஜோதிடம் ஜாதகம் எல்லாம் படித்து கொண்டிருந்ததால் அதை படைப்பில் கொண்டு வர விரும்பினேன். 2007-ல் நவக்கிரகா என்ற அக்ரிலிக் ஓவியங்களின் தனிநபர் கண்காட்சியை நடத்தினேன். அது முதல் புராண இதிகாச விஷயங்கள் கடவுள்கள் எல்லாம் என் படைப்பில் வர ஆரம்பித்தது. இருந்தாலும் இப்போதும் அன்றாடங்களை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவதுண்டு. ஆனால் பெரும்பாலான படைப்புகளில் புராண இதிகாசங்கள் கடவுள்கள் தான் மைய பேசுபொருள். மக்களும் அந்த ஓவியங்களுடன் என்னை அடையாளம் காண ஆரம்பித்தார்கள். நான் புராணங்கள் சார்ந்து நிறைய வாசிப்பவள் கூட. அதுவும் படைப்புகளில் எதிரொலிக்கலாம். இதில் இன்னும் பயணப்படுவதற்கு வாய்ப்புகள் நிறைந்து உள்ளன.

கே: மக்களின் விருப்பமும் உங்கள் படைப்புகளின் போக்கை தீர்மானிக்கிறதா?

ப: அப்படி இல்லை. இது என்னுடைய ஆர்வம் சார்ந்தது. நான் உருவாக்கும் படைப்புகளை மக்கள் விரும்புகிறார்கள். எனக்கு மாறுபட்ட ஆக்கங்களை உருவாக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அதை செய்ய எதுவும் தடையாக இல்லை. ஆனால் ஏற்கனவே சொன்னது போல் எனக்கு புராண இதிகாசங்களில் ஆர்வம் மிகுதி. எப்படியோ அதை நோக்கி ஈர்க்கப்பட்டேன். இவ்வோவியங்களில் உள்ள உருவங்கள், கூறுகள், அதன் பின்னால் உள்ள கதைகள் எல்லாம் என்னை ஈர்க்கிறது. என் வாழ்க்கை, சிந்தனை ஓட்டம் எல்லாம் அதை சுற்றியே இருப்பதால் கூட இருக்கலாம். இவையனைத்தும் கூட்டாக என்னை இது போன்ற படைப்புகளை செய்ய வைக்கிறது. ஆனால் கண்டிப்பாக மக்களின் விருப்பமோ மற்றவர்களின் வற்புறுத்தலோ என்னை இயக்கவில்லை.

கேள்வி: சோழ மண்டலம் கலை கிராமத்துடனான உங்கள் உறவு நெருக்கமானது. அறுபது எழுபதுகளில் சோழ மண்டலம் மற்றும் மெட்ராஸ் கலைக் கல்லூரியை மையமாக கொண்டு பல முக்கிய கலைஞர்கள் இந்திய/உலக அளவில் உருவானார்கள். அன்று இந்திய அளவில் சென்னை கலைசூழலுக்கென்று ஒரு இடம் இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. இன்று சென்னை மற்றும் சோழமண்டலத்தின் கலைச்சூழல் அப்படி பெயர் சொல்லும்படியாக இல்லை. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ப: இது கொஞ்சம் வருத்தத்தை தரக் கூடிய விஷயம். ஆனால் நீங்கள் சொல்வது உண்மை. அதற்கு காரணமாக நான் கருதுவது சரியான தலைமை இல்லாதது தான் என்று நினைக்கிறேன். அன்று கே.சி.எஸ். பணிக்கர் சோழமண்டலத்தின் தலைவராக இருந்தார். அவர் ஒரு கலைஞனிடம் கலைக்கான வேட்கையை பற்ற வைக்கக்கூடியவர். முதல் தலைமுறை கலைஞர்கள் அந்த இயக்கத்தை வீரியமுடன் முன்னெடுத்தார்கள். அதற்கு அடுத்த தலைமுறை வந்த போது அந்த உத்வேகம் குறைந்தது. மூன்றாவது தலைமுறையில் எதுவும் இல்லாமல் ஆனது. அது ஒரு சுழற்சி. நான் அதை குறை சொல்லவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு வெளியே மும்பை, பூனே, டெல்லி போன்ற இடங்களில் கலைக்காக பல அமைப்புகள் உள்ளன. அந்த இயக்கங்களுக்கெல்லாம் அதற்கான வரையறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. ஏன் சோழமண்டலம் அவ்வமைப்புகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்றால் சோழமண்டலம் கலைஞர்களுக்காக கலைஞர்களால் உருவாக்கப்பட்டு கலைஞர்களால் வழிநடத்தப்படும் அமைப்புமுறையை கொண்டது. இங்கே கலைஞர்கள் வெளியிலிருந்து வரும் நிதியுதவிகள் இல்லாமல் தங்களை தாங்களே நிர்வகிக்க முடியும். அதுவே கே.சி.எஸ். பணிக்கரால் கொண்டு வரப்பட்ட இந்த அமைப்பின் அழகு. அது ஒரு நல்ல திட்டம். ஆனால் காலப்போக்கில் அத்திட்டம் தன் முக்கியத்துவத்தை இழந்தது. இன்று டிஜிட்டல்மயமாக்கலின் காலம். எல்லாம் இணையதளத்தில் வந்துவிட்டது.  படைப்பின் விற்பனைக்கோ பிறரை தொடர்பு கொள்ளவோ யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இணையத்தை சார்ந்து செயல்படும் நிலை மேலும் வலுப்பெற்றது. உங்கள் படைப்பின் படங்களை அனுப்ப சொல்லுவார்கள். பிடித்திருந்தால் உடனே வண்டியை உங்களிடத்திற்கே அனுப்பி படைப்பை வாங்கிக் கொள்வார்கள். பரிவர்த்தனை வியாபார வடிவம் எல்லாம் இன்று மாறிவிட்டது. அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. ஒரு கலை அமைப்பு இங்கே சரிவர செயல்பட முடியாமல் போவதற்கு சில உளவியல் காரணங்களும் உள்ளன. அதைப் பற்றி நாம் இப்போது பேச வேண்டாம்.

கே: உங்களிடம் யாரையும் குறை கூறவோ அவர்களின் பெயர்களை குறிப்பிடவோ நான் கேட்டுக் கொள்ளவில்லை. நான் இங்குள்ள மைய கலை செயல்பாட்டில் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் சென்னை கலைக்கல்லூரியின் பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால் சில புரிதல்கள் உள்ளன. இது போன்றதொரு கலை இயக்கத்தை முன்னெடுப்பதற்கு தடையாக இருப்பது கலைஞர்களின் மன அமைப்பு என்று நினைக்கிறேன். கலைஞர்கள் தங்கள் படைப்புகளை விற்பனை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். படைப்புகள் விற்பனை ஆகாமல் அவர்களால் இயங்குவது கடினம். அது கலைஞர்கள் மத்தியில் போட்டியுணர்வை உருவாக்குகின்றன. அந்த போட்டியுணர்வு அவர்கள் அமைப்பாக உருவாவதற்கும் கலை இயக்கங்களை முன்னெடுப்பதற்கும் எதிராக உள்ளன. இது நிதர்சனம் இல்லையா?

ப: உண்மை தான். போபால், நாக்பூர், மும்பை போன்ற இடங்களில் கலைஞர்களின் சங்கங்கள் உள்ளன. அங்கே ஒரு நல்ல கலைஞன் இருப்பானென்றால் அங்குள்ளவர்கள் அவனை பற்றி மற்றவர்களிடம் பகிர்வார்கள். எல்லோரும் ஒன்றாக இணைவார்கள். பரோடாவில் கூட அப்படியே. மன்னிக்கவும்! ஆனால் இங்குள்ள நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக நீங்கள் சொல்வது போல இருக்கிறது. கலைஞர்கள் தங்கள் சக கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கலைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இணைந்து வேலை செய்ய வேண்டும். இணைந்து படைப்புகளை விற்பனை செய்து வளர வேண்டும். அது தான் கே.சி.எஸ். பணிக்கரின் திட்டமாக இருந்தது. இன்று அனைவரும் தங்கள் அளவில் நிறைவுடன் இருப்பதால் யாருக்கும் மற்றவர்களின் உதவி தேவை இல்லாததால் இதுபோன்றதொரு திட்டத்திற்கு அவசியமில்லாமல் போகிறது.

கேள்வி: புத்தகங்கள் வாசிப்பதுண்டா? பிடித்த எழுத்தாளர்கள் பற்றி?

ப: சிறுவயதில் இருந்து எனக்கு வாசிக்கும் பழக்கம் உண்டு. என் பள்ளிப் பருவத்தில் நிறைய வாசித்திருக்கிறேன். என் ஆளுமையை வடிவமைத்ததில் வாசிப்பிற்கும் பங்குண்டு. நான் தத்துவம் சார்ந்த வாசிப்பை விரும்புபவள். எனக்கு ஓஷோ, பகவத் கீதை வாசிக்க பிடிக்கும். அவ்வாசிப்புகள் மூலம் நமக்கு பல திறப்புகள் நிகழும். பௌத்தம், ஹிந்து மதம், கிருஷ்ணர், பகவத் கீதை, ஜப்பானிய சென் தத்துவம், கபீர் என்று ஓஷோ பகுத்தாய்வு செய்து விளக்கியிருக்கும் விஷயங்கள் உண்மையை அப்பட்டமாக முன்வைப்பது. நாம் பகவத் கீதையை வாசித்தால் கிருஷ்ணர் என்ன சொல்லியிருக்கிறார் என்று மேலோட்டமாக வாசிப்போம். ஆனால் ஓஷோவின் விளக்கங்களை படித்தோமானால் பகவத் கீதையில் மறைந்திருக்கும் உண்மைகள் புலப்படும். இதை தாண்டி விவேகானந்தரின் புத்தகங்களும் மராத்தி இலக்கியங்களும் வாசித்திருக்கிறேன். காண்டேக்கரின் யயாதி, பி.எல். தேஷ்பாண்டேவின் பட்டட்யச்சி சால்- எப்படி மக்கள் அங்குள்ள குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார். மராத்தி நாடகங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். என் ஏழாம் வகுப்பு முதல் ஹிந்துஸ்தானி இசை பயின்று வந்தேன். கடந்த சில வருடங்களாக தான் தொடர முடியவில்லை.

கே: சென்னையில் நான் பார்த்த பல கலைஞர்கள் படைப்புகள் செய்வதில் கைதேர்ந்தவர்களாகவும்(craftsmanship) ஆனால் கலை வரலாறு மற்றும் பிற துறை வாசிப்புகள் குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் தங்களுடைய சொந்த படைப்புகள் பற்றி கூட பேசத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் கலை வரலாறு சார்ந்து நிறைய வாசித்திருக்கிறீர்களா?

ப: நான் மைய கலைச்சூழலுக்கு வரும் போது இத்துறை பற்றிய வாசிப்புடன் தான் வந்தேன். ஆரம்பித்தவுடன் ஓவியம் வரைய ஆரம்பிக்கவில்லை. அடிப்படையில் நான் ஆய்வாளராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவள். அந்த அனுபவத்தை இங்கேயும் பயன்படுத்தினேன். கலைத்துறையின் அடிப்படை என்ன, இத்துறை எப்படி செயல்படுகிறது என்றெல்லாம் விரிவாக தெரிந்து கொண்டபின் தான் ஆரம்பித்தேன். ஆனாலும் கலை வரலாறு சார்ந்த என் வாசிப்பு என்பது துண்டுபட்ட வாசிப்பு தான். என்னிடம் கலை நூல்களுடன் கூடிய நல்ல நூலகம் உள்ளது. அவ்வப்போது அங்கே வாசி்ப்பது உண்டு. இப்போது என் மகள் கலை விமர்சனத்தில் பட்டப்படிப்பு படிப்பதால் நல்ல கட்டுரைகளை எனக்கு அவள் பகிர்வதுண்டு. நாங்கள் இருவரும் அதை பற்றி விவாதிப்போம். அது எனக்கு புதிய பார்வை கோணங்களை தருகிறது.

கேள்வி: நீங்கள் படைப்புகளை உருவாக்க எந்தெந்த ஊடகங்களை(medium) பயன்படுத்துகிறீர்கள்?

ப: கேன்வாசில் அக்ரிலிக்(acrylic on canvas), காகிதத்தில் நீர் வண்ணம்(water color) மற்றும் வண்ணக்குச்சிகள்(pastels) பயன்படுத்தி படைப்புகள் உருவாக்குகிறேன். நான் ஒரு அடிக்கு ஒரு அடி(1×1 feet) முதல் 7-8 அடி அளவு வரையிலான ஆக்கங்கள் வரை செய்வது உண்டு.

கேள்வி: சமகால காட்சிக் கலையில் கேன்வாசிலும் பேப்பரிலும் மட்டும் வரைவதை தாண்டி படைப்புகளிலும் அதை உருவாக்க பயன்படுத்தும் ஊடகங்களிலும் பல்வேறு புதுமைகளை செய்கிறார்கள். நீங்கள் இப்போது பயன்படுத்தும் ஊடகங்களை தாண்டி அதுபோன்ற சோதனை முயற்சிகளை செய்து பார்த்ததுண்டா?

ப: நான் இதுவரை அப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் செய்து பார்த்ததில்லை. ஆனால் அது சார்ந்த யோசனை ஒன்று உள்ளது. வருங்காலத்தில் எனக்கு துணியில் படைப்புகளை உருவாக்கும் எண்ணம் உள்ளது. இதுவரை நான் பயன்படுத்தியிராத மற்ற பொருள்களை ஊடகங்களாக(medium) பயன்படுத்தியும் படைப்புச் சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். அதன்மூலம் நாம் உபயோகப்படுத்தும் அந்த பொருளை எப்படி கையாள வேண்டும், அதை படைப்பாக மாற்றும் போது அந்த ஊடகத்திற்கு என்ன நிகழ்கிறது, அதிலிருந்து என்ன படைப்பை  உருவாக்கலாம் என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். நான் இப்போது கையாளும் ஊடகங்களை நிறுத்தப் போவதில்லை. அவை என் படைப்புகளின் அடித்தளம். அதே நேரத்தில் சில ஊடகங்களுடன் மட்டும் தேங்கியிராமல் சோதனைகளில் ஈடுபடவும் விரும்புகிறேன்.

கே: சமகால கலைஞர்களில் நீங்கள்  முன்மாதிரியாக கருதும் படைப்பாளர்கள் எவரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா?

ப: வேறுபட்ட பொருள்களை பயன்படுத்தி சோதனை முயற்சிகள் செய்வதில் தங்கள் பங்களிப்பை செய்த பல கலைஞர்கள் உள்ளனர். அதில் பிரம்மாண்டமான கலை படைப்புகள் செய்யும் அனீஷ் கபூரை பிடிக்கும். ஏனென்றால் அவரது முயற்சிகள் முற்றிலும் புதிய தளத்தை சேர்ந்தவை. அடுத்து சுபோத் குப்தாவை பிடிக்கும். புகழ்பெற்ற ‘மும்பை டப்பாவாலா’ படைப்புகளை உருவாக்கிய வாலாய் ஷிண்டேயை பிடிக்கும்.

கே: இன்று காட்சிக் கலைக்கு(Visual Arts) சென்னையை விட மும்பையே சாதகமான இடம். அப்படியிருந்தும் ஏன் நீங்களும் உங்கள் கணவரும் சென்னையிலேயே வாழ்க்கையை தொடர்கிறீர்கள்?

ப: இது மரத்தை நடுவது போல. ஓரிடத்தில் நடப்பட்டு விட்டால் மரத்தை அங்கிருந்து பெயர்த்து வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று நடுவது கடினம். அதே நிலை தான் எங்களுக்கும். சென்ற வருடம் வரை சோழமண்டலத்தில் குடியிருந்தோம். இப்போது ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிறோம். தொடர்ந்து கண்காட்சிகளில் பங்குபெறுவதால் இங்குள்ள மக்களும் படைப்புகளுக்கான(art market) சந்தையும் எங்களுக்கு பரிச்சயமானது. மக்கள் என் படைப்புகளை அடையாளம் காண்கிறார்கள். அன்பு, அங்கீகாரம், பாராட்டுகள் எல்லாம் இங்கேயே கிடைக்கிறது. நாங்கள் மும்பையில் குடியேறுவதை பற்றி யோசித்ததேயில்லை. சென்னையில் வசதியாகவே உணர்கிறோம். நானும் என் கணவரும் சென்னையில் வரும் போது கல்லூரி படிப்பு மட்டும் முடித்திருந்தோம். மைய கலைச்சூழல் எங்களுக்கு அப்போது தான் அறிமுகமாகிறது. சிறிது சிறிதாக இந்த சூழலுடன் பழகி நாங்கள் எங்களை வளர்த்துக் கொண்டோம். எந்த சூழலில் நாங்கள் வளர்ந்தோமோ அதை உதறிவிட்டு மற்றொன்றிற்கு செல்வது எளிதல்ல. ஆடம்பரத்திற்காக சமரசங்களில் ஈடுபட ஆர்வம் இல்லை. ஆடம்பரத்தை பின்தொடர்ந்தால் கலையை இழந்து விடுவோம். இது பொருளாதாரம் சம்பந்தமானது அல்ல. படைப்புகளின் விற்பனை தொடர்பாக நாம் எதுவும் செய்ய முடியாது. யாரிடமும் சென்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அது தானே நடக்க வேண்டும். என் படைப்புகள் சென்னையில் மட்டுமல்லாமல் மும்பையிலும் வெளிநாடுகளிலும் கூட விரும்பி வாங்கப்படுகிறது. படைப்புகள் விற்கப்படுவது மும்பைக்கோ நாக்பூருக்கோ டெல்லிக்கோ குடிபெயர்ந்தால் மாறுபடப் போவதில்லை. அதனால் அதை இங்கிருந்து கொண்டே செய்யலாம். சென்னையிடமிருந்து நான் பெற்றுக் கொண்டது ஏராளம். அப்படி இருக்கும் போது நான் ஏன் சென்னையை விட்டு விலக வேண்டும் என்பதே என் எண்ணம். நான் நாக்பூரில் பிறந்ததால் மராத்தி. ஆகவே சென்னைக்கும் எனக்கும் எந்த உறவும் இருக்க கூடாது என்பதில்லை. நாம் படிப்பு முடித்து விட்டு ஒரு நகரத்தில் வேலைக்காக செல்லும் போது அந்த நகரத்துடன் பிணைத்துக் கொள்கிறோம். அந்நகரின் வளர்ச்சிக்கு நாமும் நம் வளர்ச்சிக்கு அந்நகரும் பங்களிக்கிறது. அங்குள்ள கலாச்சாரத்துடன் இணையும் போது நாம் அந்த நகரத்து ஆளாகவே மாறுகிறோம். சென்னை எங்களுக்கு கர்ம பூமி. நான் என்னை சென்னை பெண்ணாகவே கருதுகிறேன்.

கே: ஆன்மீக தலங்கள் கோவில்கள் தவிர நீங்கள் பயணம் செய்யும் இடங்கள் எது?

ப: நான் ஹம்பி, அஜந்தா, எல்லோரா, ஆக்ரா போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். வெளிநாட்டு பயணங்கள் எதுவும் சென்றதில்லை.

கே: நீங்கள் ஈடுபட்ட சுவாரஸ்யமான பணிகள் எதையாவது கூற முடியுமா?

ப: 2018 வாக்கில் நாக்பூர் நகரை அழகுபடுத்தும் நோக்கத்தில் ‘சுந்தர் நாக்பூர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பகுதியாக ஒரு அர்த்தநாரீஸ்வரரின் சுவரோவியம் வரைந்தேன். நான் கொஞ்சம் சமூக செயல்பாட்டிலும் நாட்டம் கொண்டவள். ஏற்கனவே குறிப்பிட்டதை போல என் தங்கை ஒரு பெரு நிறுவனத்தின் சமூக பொறுப்புத் துறையில்(Corporate Social Responsibility) பணியாற்றுகிறாள். அந்நிறுவனத்தின் ஆதரவுடன் மகாராஷ்டிராவின் சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி குடியிருப்பில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு பெரிய ஓவிய முகாம் ஒன்றை நடத்தினோம். அக்குழந்தைகளுக்கு வரைவதற்கான பேப்பர், வண்ணங்கள் என்பதெல்லாம் அரிய பொருள்கள். நாங்கள் அங்குள்ள எல்லா குழந்தைகளையும் ஈடுபடுத்தி பள்ளி சுவர்களில் வார்லி, கோந்த் போன்ற பழங்குடி ஓவியங்களை வரைந்தோம். குழந்தைகளுக்கு மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது அது.

ஊரடங்கிற்கு முன்பு சில வருடங்கள் சென்னை மற்றும் நாக்பூர் கலைஞர்களை இணைத்து கலை முகாம்கள் நடத்திக் கொண்டிருந்தேன். என் கணவரின் சகோதரர் சஷிகாந்த் சென்னையின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். அவருக்கு கொட்டிவாக்கத்தில் ஒரு பெரிய இடம் இருந்தது. அங்கே முகாம் நடக்கும். முகாமுக்கான செலவு முழுவதும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நாக்பூர் கலைஞர்களின் படைப்புகளை சென்னையில் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். கலையில் இருந்து நான் நிறைய பெற்றுக் கொண்டதால் அதற்கு நான் திருப்பி செலுத்தும் நன்றியாகவே இம்மாதிரி பணிகளை காண்கிறேன்.

கே: நீங்கள் என்றும் நினைவுகூரும் அளவிற்கு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கலை வாழ்க்கையிலும் துணையாக இருந்தவர்கள் உண்டா?

ப: முதலில் என் கணவர். அவர் என்னுடைய ஓவிய வாழ்க்கையில் தொடர்ந்து துணையாக இருப்பவர். தொடக்க காலத்தில் எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். அதன்பின் தான் ஓவியத்தில் எனக்கான பாணியை உருவாக்கிக் கொண்டேன். எல்லாத்தையும் ஒருவர் மற்றொருவருக்கு சொல்லிக் கொடுக்க முடியாது. தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கலாம். ஆனால் நமக்கான பாதையை நாம் தான் தேடி தேடி கண்டடைய வேண்டும். ஆனாலும் என் கணவர் என்னுடன் இருந்தார். என் கணவரின் அண்ணனும் வழிகாட்டியாக இருந்தார். குடும்ப உறுப்பினர்களும் இருந்தார்கள்.

அடுத்து இருவர் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஓவியத்தில் எனக்கு வழிகாட்டியவர்களில்  தாதாசாகெப் தேஷ்முக் என்ற நாக்பூரில் இருந்த மாமா முக்கியமானவர். சாந்திநிகேதனில் பயின்றவர். அபனேந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளுடன் பழக்கமானவர். அவர் என் உறவுக்காரர் அல்ல. ஆனால் நான் என் கல்லூரி படிக்கும் போது எனக்கு ஓவிய ஆர்வம் இருந்தும் அதற்கு போதிய நேரம் கிடைக்காத நேரத்தில் தேஷ்முக் மாமாவின் ஸ்டுடியோவிற்கு சென்றால் ஓவியத்திற்கான வண்ணங்களை உபகரணங்களை கொடுத்து வரைய உற்சாகப்படுத்துவார். அவரிடத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருந்தது நூலகம் ஒன்று இருந்தது. மற்ற இடங்களில் கிடைக்காத அரிய புத்தகங்கள் எல்லாம் அவரது சேகரிப்பில் இருந்தன. மற்றொருவர் என் முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் வைத்யா. இருவரும் இப்போது உயிருடன் இல்லை.

கே: உங்கள் வருங்காலத் திட்டங்கள் என்ன?

ப: சப்தமாதர்களை கருவாக கொண்டு படைப்புகள் செய்யும் திட்டம் உள்ளது.

அதே போல துணி மற்றும் நினைவை(Fabric & Memory) அடிப்படையாகக் கொண்டு படைப்புகள் செய்ய ஆசைப்படுகிறேன். துணிகளின் மூலமாக நான் எப்படி என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் இணைக்கப்பட்டுள்ளேன் என்பதை பற்றிய படைப்புகளாக இருக்கும் அது. இப்போதைக்கு யோசனை நிலையிலேயே உள்ளது. அதைப்பற்றிய ஆய்வுகளை தொடங்கும் போது தான் எனக்கே பாதை பிடிபடும்:)

இப்போது தான் ஊரடங்கால் தொய்வுற்றிருந்த பணிகள் எல்லாம் சீரடைய ஆரம்பித்திருக்கின்றன. சமீபகாலமாக கலை கண்காட்சிகளும் நடக்கிறது. கொரோனா ஊரடங்கால் நின்று போன சென்னை-நாக்பூர் கலைஞர்கள் இணையும் வருடாந்திர கலை முகாமையும் திருப்பி ஆரம்பிக்க வேண்டும்! 

நன்றி. உங்கள் பணி சிறக்க நீலி மின்னிதழ் சார்பாக வாழ்த்துக்கள்!

கலைஞர் ஜெயராம்
12 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *