க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (2) – மதுமிதா
பகுதி 2
க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளில், நடேஷ்டா ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதியவர். 1840களில் தொடங்கி 1889இல் அவரது மரணம் வரை நீண்டது அவரது இலக்கிய வாழ்க்கை. தனது 18வது அகவையில் எழுத ஆரம்பித்தவர் 68வது வயதில் மறையும் வரை தொடர்ந்து இலக்கியத்தில் ஈடுபட்டிருந்தார். ஜார்ஜ் ஸான்ட்ஸ், ஷார்லட் பரோன்டே போன்ற எழுத்தாளர்களோடும், ரஷ்ய படைப்பாளிகளில் துர்கனேவ், டால்ஸ்டாய் ஆகியோருடனும் நிகர்நிலையில் மதிப்பிடப்பட்டார். கவிதைகள், குறுநாவல்கள் (novellas), நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என இலக்கிய வடிவுகள் அனைத்திலும் பங்களித்தார். சோஃபியாவைப் போலவே உறவினர் உதவியுடன் மாஸ்கோவில் கல்வி பயின்று பன்மொழிகள், ஓவியக்கலை, மற்றும் நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றார். க்வாஷ்சின்ஸ்கயா குடும்பம் அவரது எழுத்தை மட்டுமே பல வருடங்கள் வருமானமாக்க் கொண்டிருந்தது. நடேஷ்டாவும் சோஃபியாவும் தங்களுக்குள் அளப்பரிய அன்போடு இருந்தனர். சகோதரிகள் என்பதை கடந்து இலக்கிய தளத்திலும், வாழ்வை அணுகியதிலும் உற்ற துணையாய் இருந்தனர். ஒருவக்கொருவர் படைப்புகளை பிழை நோக்கி, மதிப்பிட்டு, விமர்சித்து, ஊக்கமளித்து வந்தனர்.
பதினெட்டு வயதில் தனது இலக்கிய வாழ்வை கவிதைகளின் மூலம் தொடங்கியவர் நடேஷ்டா. பின்னர், கவிதை நடையிலேயே “ஒரு கிராம சம்பவம்” (A village incident) என்ற நாவலை எழுதினார். அப்பொழுது பெரிதும் வரவேற்பை பெறாத அந்த நாவல், இன்று அவருடைய வெற்றி பெற்ற ஒரு புது முயற்சியாக கருதப்படுகிறது. “உறைபள்ளி மாணவி” (Boarding school girl) அவரது மிக புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. ரஷ்ய வாழ்வியலில் பெண்களின் பங்களிப்பையும் இடத்தையும் கூரான விமர்சனத்திற்கு உள்ளாக்கும் ஆக்கம், முக்கியமாக பதின் வயது பெண்ணை மைய பாத்திரமாக கொண்ட நாவல். அவளின் தேடலை, முதிர்ச்சியை, வாழ்வில் அவள் அடைய நினைத்த சுதந்திரம் அவளுக்கு கிடைத்த பின் அவள் கொள்ளும் ஐயங்களை, தனமீட்சியின் பாதையாக அவள் சுதர்மத்தின் தேடலை விரித்தெடுக்கிறது. Coming-of-age என்று வகுக்கப்படும், ஒருவரின் தன்னறத் தேடலின், தன்னோக்கின் முதிர்வை கருவாக கொண்ட புனைவு ரஷ்ய இலக்கியத்தில் அதற்கு முன் பதிவிடப்பெறாத ஒரு களம். அதன் தனித்துவமாக இன்று முன்வைக்கப்படுவது பெண்ணியத்தை மறுவரையறை செய்யும் அதன் தரிசனம். லெலென்கா தனது வாழ்க்கையின் பொருளை வெரடிட்சினின் கேள்விகளால் தொகுத்துக் கொள்கிறாள். அதைக் கொண்டு அவள் சென்று நிற்கும் இடம் அவனே எண்ணியிராதது. ஆனால் அந்த இடத்தில் அவள் சந்திக்கும் முரண், அது அவளுக்கு நிறைவைக் கொடுக்கவில்லை என்பதே. இன்னொருவர் வகுக்கும் பாதையில் அவள் அதை அடைய முடியாது என்பதை அவள் வெற்றியின் உச்சியில் அறிகிறாள்.
க்வாஷ்சின்ஸ்யா சகோதரிகளின் வாழ்வில் நிகழ்ந்த முதல் துயரம் அவர்களது தந்தையின் மரணம். அதை எதிர்கொண்டு தங்கள் வாழ்வை அவர்கள் சீர் செய்து கொண்டபின் நிகழ்ந்த எதிர்பாராத இன்னொன்று 1865 இல் நிகழ்ந்த சோஃபியாவின் மரணம். இலக்கியத்தில் அவர் எய்திருக்க கூடிய சாதனைகளை விட்டு இளமையில் மறைந்தார் சோஃபியா. நடேஷ்டாவை இது மீளா துயரிலிட்டது. மரணத்தின் விளிம்பில் சோஃபியா கொடுத்த அறிவுரையின் பேரில் அவரது மருத்துவரை மணந்தார் நடேஷ்டா. மாஸ்கோவிற்கு குடியேறினார். மருத்துவர் ஜயோன்ஸ்கோவ்ஸ்கியும் சோஃபியாவை போலவே காச நோயினால் பாதிக்கப்பட்டவர். நோயின் தீவிரம் அவரை அதிகம் கவனம் கோருபவராக ஆக்கியது. தங்கையின் மரணத்தில் பாதிக்கபட்டிருந்த நடேஷ்டா அதை அவருக்கு அளிக்கும் உளநிலையில் இல்லை. இரண்டு வருடங்களில் மிகவும் மனச்சோர்வுக்கு உள்ளாகியவர் கடைசியில் தனது கணவரை சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்பினார். நான்கு வருடங்களுக்கு பின்னர் ஜயோன்ஸ்கோவ்ஸ்கி மரணமடைந்தார். மீண்டும் ர்யாஜான் வந்தார் நடேஷ்டா.
தீவிர இலக்கியம் சிலருக்கு அவர்களின் ஆழிருளில் காணும் ஒளிக்கீற்றாகவே வெளிப்படுகிறது. நடேஷ்டாவின் காலம் கடந்து நிற்கும் ஆக்கங்கள் அத்தகையவை. 1871 இல் ர்யாஜான் மீண்ட அவர் எழுமீன் (Ursa Major) என்ற நாவலை எழுதினார். அதுவே இன்றும் அவருடைய ஆகச்சிறந்த நூலாக கருதப்படுகிறது. ரஷ்யாவில் அடிமை தளைகள் நீக்கப்பட்டபோது பிணை வேலையாட்களாய் இருந்தவர்கள் உடனே விடுவிக்க படவில்லை. அவர்கள் சில வருடங்களுக்கு அந்த நிலத்தோடு பிணைக்கப்பட்டு, அவர்களின் விடுதலைக்கு ஒரு விலை வைக்கப்பட்டது. பிரபுத்துவ முறைக்கு பயின்ற ஒரு தலைமுறை, பெயரளவாயினும் பிணையிலிருந்து விடுதலை பெற்ற ஒரு சமூகத்தோடு வாழ்ந்த காலத்தை, அதில் நிறைந்த முரணை பின்னணியாக கொண்டது இந்த நாவல். அவர்களின் அறம், உண்மை, நிகழ் சூழல் ஆகியவற்றையும் அது உருவாக்கிய அறச்சிக்கல்களையும் இந்த நூல் முன்வைக்கிறது.
1870களில் துர்கனேவ், டால்ஸ்டாய், டாய்ஸ்டாவ்ஸ்யோகிவின் வரிசையில் தனது படைப்புகளுக்காக அதிக அளவு பணம் ஈட்டியவர். எழுத்தாளர்கள் தாங்களே நூல்களை பதிப்பித்தால் பெருமளவு லாபம் ஈட்ட முடிந்த காலம் அது. டாய்ஸ்டாவ்ஸ்யோகியின் சகோதரர் அவருக்காக நூல்கள் அச்சிட்டார். அவரது மனைவி அவருக்கு பிழை நோக்கியும், அச்சிடுவதில் உதவியும் புரிந்தார். டால்ஸ்டாய் அவரே நல்ல நிர்வாகி, மேலும் அவரது மனைவி அவருக்கு துணையாய் இதை செய்தார். இந்த வகையான ஆதரவு க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளுக்கு அமையவில்லை. மேலும், குடும்ப நிர்வாகம், ஐந்து அத்தைகள், சகோதரரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளை பேணும் பெரும் பொறுப்பு இருந்த நடேஷ்டாவால் அவர்களையும் தன்னையும் நல்ல நிலையில் வைக்க முடிந்தாலும், வசதியான வாழ்க்கையை மீட்டு தர இயலவில்லை. இதன் நேரடி விளைவாக, தனது நூல்களையோ, தனது தங்கைகளின் நூல்களையோ எந்த வகையிலும் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யாமல் அவரது காலம் போனது. அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. மேலும் போல்ஷவிக் அரசின் மொழிப்பெயர்ப்பு பட்டியலில் இடம் பெறாத எழுத்தாளர் என்ற வகையில் அவரது ஆக்கங்கள் ரஷ்ய வட்டத்தில் மட்டுமே அவ்வப்போது கண்டுகொள்ளப்பட்டது. ஒரு நூற்றாண்டின் கால மாற்றத்தில் அவர் மறக்கப்பட்டார். அண்மையில் புஷ்கின் ஹவுஸின் முன்னெடுப்புகளின் வழியாக க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள், இன்னும் சில எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மொழிப்பெயர்ப்பு மற்றும் பரவலான கருத்தரங்கங்களுக்கும், விவாதங்களுக்கும் கொண்டுவரப்பட்டன. இந்த முன்னேற்பாடுகள் கடந்து இன்றளவில் நடேஷ்டாவின் நூல்களில் கிடைக்கும் ஆங்கில மொழியாக்கங்கள் மிகக் குறைவு.
1880இல் வெளிவந்த நடேஷ்டாவின் குறுநாவல்களில் ஒன்று, கீலகம் (The meeting). எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழ்கிறது. தன்னறிவு இல்லாது, பலரின் கருத்துகளை ஒரு அவியலாய் இன்னொரு இடத்தில் சமைக்கும் அறிவுஜீவி அல்டசாவ். கிடைத்த வாய்பை கைவிடாது தனக்கு சாதாகமாய் அந்த சூழ்நிலையை மாற்றிக்கொளும் தந்திரம் தெரியும் அலக்ஸான்ட்ரா. சந்தித்த இருவருமே தன்னலமிகள். அவர்களின் விருப்பப்படியே செல்கிறது அந்த வாய்ப்பு, அல்லது அதற்கான பாதை அங்கே அமைகிறது. ஆனால் அதில் சற்றும் தொடர்பில்லாத ஒரு வாழ்வு நிலைக்குலைகிறது, குலைக்கப்படுகிறது. இதற்கும் அவர்கள் அந்த நிலைக்குலைவை வேண்டுமென்று செய்யவில்லை, அதற்காய் பெரிதும் வருந்தவும் இல்லை. அவர்களுக்கு அது ஒரு பொருட்டே இல்லை. அன்னையர் (Mothers) என்று தலைப்பிட்ட தொகுப்பில் நடேஷ்டா வெளியிட்ட நெடுங்கதை, கீலகம். அந்த தலைப்பு, கதை தொட்டு எடுத்த வலியின் ஆழத்தை உணர்த்துகிறது. தான் எண்ணியிராத வாழ்க்கை கிடைக்கப்பெற்ற ஒரு அன்னை, அதை நியாயம் என்று தான் எண்ணும் ஒன்றிற்கு மாற்றாய் கொடுக்கிறாள். ஆனால் அவள் நினைத்தபடி அந்த செயல் அவளுக்கு மரியாதையை அளிப்பதில்லை. ஆனால் அதற்கு ஈடாய் அவளின் இழப்புகள் நீண்டு செல்கின்றன. வாசில்யேவ்னா என்ற அந்த ஒரு பெயருக்கு, அவளுக்கு பயனே தராத, அவமானங்களை மட்டுமே அள்ளிக்குவித்த அந்த பெயருக்கு, அன்னா கொடுக்கும் விலை அளப்பரியது. அந்த விலை என்ன என்பதை அவள் உணரும் தருணம் அவள் மீட்டடுக்க முடியும் என்று நினைக்கும் இடத்திற்கு, அவளது சாஷாவிடமே செல்கிறாள்.
நடேஷ்டா காட்சிகள் அனைத்தையும் கூர் நோக்குடன் கட்டமைக்கிறார். வர்க்கம், கல்வி, குணம், தன்னோக்கு, அடுத்தவர் அவர்களை மதிப்பீடும் விதம் இவை அனைத்தையும் வெறும் காட்சிகள் மூலமாகவே கொண்டு செல்கிறார். நேரடியாக விவரிப்பதில்லை. சில சமயங்களில் அவை அந்த இடத்திலேயே புலப்படுவதில்லை, வேறொரு இடத்தில் ஒரு ஒளிக்கீற்று முந்தைய இடத்தில் பாய்ச்சப்படுகிறது, முற்றிலும் வேறு கோணத்தை நீட்டி செல்கிறது. தனது கதை மாந்தரை நிகர் நிலையிலேயே நோக்குகிறார் நடேஷ்டா. ஒவ்வொருவரின் குணங்களை கிழித்து அளவிடுகிறார். இறுதியில் அங்கே எஞ்சி நிற்கும் உண்மையை வாசகரே அனுமானிக்க இடமளிக்கிறார்.
சோஃபியாவின் ஆக்கங்களில் ஒரு கனிந்த அன்னையின் நோக்கு உள்ளது. நடேஷ்டாவின் ஆக்கங்களில் நிறைந்திருப்பது பேரன்னையின் சமரசமற்ற நோக்கு, கனிவும் எரிச்சலும் பொறுமையும் அலுப்பும், எந்த நொடியும் வெளிப்படக்கூடிய சீற்றமும் நிறைந்த பேரன்னையின் நோக்கு. நடேஷ்டா மறைந்து பல வருடங்களுக்குப் பிறகு இலக்கியம் படைத்தவர் ஆஷாபூர்ணாதேவி. பெருமளவு மொழிப்பெயர்ப்புகள் இல்லாததால் ஆஷாபூர்ணாதேவி நடேஷ்டாவை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் அவர்களின் தேர்வுகளும், பார்வைகளும், அகம் கொண்டு புறம் நோக்கி தெளியும் சொற்களும் அவர்களை இலக்கியத்தில் இணைக்கிறது.
***