எது கொல் தோழி? – பார்கவி

(சங்கப்பாடல்களில் தோழி கூற்றை முன் வைத்து)

(உலகத்தமிழ் மாநாடு புத்தகம்)

மேலோட்டமாகப் பார்த்தால் சங்க இலக்கியம் ஒரு புகைப்படப்பேழை. கொஞ்சம் தீட்டிச் சொன்னால், இன்றைய இன்ஸ்டாக்ராம் செயலி. அதில் அனைத்து உணர்வுகளையும் மேலேற்ற இயற்கை என்னும் அரங்க மேடையை பார்க்கிறோம். அகவாழ்க்கைக்கு புறக்காட்சிகள் சட்டகமாதல் அதன் காலாதீத தன்மைக்கு வழிகோலுகிறது. இதே இயற்கைக் காட்சிகள் ஆன்மசாதகருக்கு இறை அனுபவமாகின்றன, அறிவியலாளருக்கு தேடல் கருவியாகின்றன, கவிஞனுக்கு கற்பனைக் களஞ்சியமாகின்றன, காவியகர்த்தாவிற்கு இவை யாவுமாகின்றன. மனிதர்கள் தங்கள் மகத்தான உணர்வெழுச்சியின் உந்துதலின் வழி இயற்கையின் ஒரு பெருங்கணத்தில் ஒன்றுகின்றனர். இப்படி ஒன்றும் போது அவளுள் ஒரு குரல், ’உன் கால் இன்னும் மண்ணில் தான் உள்ளது, கேட்டியா?’ என்று கேட்டால், அவள் தான் தோழி. 

செவிலித்தாயின் மகள் தோழி. அகப்பாடல்களை பொறுத்த மட்டில் தோழியை இக்காலத்து சைல்ட்ஹுட் பெஸ்டீ அல்லது பெஸ்ட் ஃப்ரெண்ட் ஃபொரெவெர் – என்றென்றைக்குமான அணுக்கத் தோழி, என்று கொள்ளலாம். இளம்பூரணர் தோழி தலைவியோடு உடன்முலை அருந்தியவள் என்கிறார்.  தலைமுறை தலைமுறையாக தொட்டுத் தொடரும் பெரு நட்பு. தோழி, தலைவனிடம் பேசும்போது தலைவிக்கு அரணாகவும், அவன் பிரிந்திருக்கும் போது தலைவிக்கு அருமருந்தாகவும் செவிலித்தாயிடம் தலைவியின் காதல் குறித்து பரிந்து சொல்லுமிடத்து தமக்கையாகவும் உருவெடுக்கிறாள். தோழிமை என்றொரு சொல், ஒரு சொல் அன்றோ?

அவளுக்கு தலைவி சொன்னதும் சொல்லாததும் என அனைத்தும் தெரியும். சங்கப்பாடல்களைப் பற்றி பேசும்போது அச்சமூகத்திலிருந்த உறவுகள் இப்பொழுதை விட மேன்மையானவை என்பர். ஆனால் தோழியின் இருப்பும் அவள் கூற்றின் உள்ளடக்கமுமே நமக்கு அதை மறுத்து அறிவித்துவிடுகின்றன. உறவுகள் எக்காலத்தும் நுட்பமும் சிக்கலும் கொண்டவை. பெண்ணின் காதல் எல்லா காலத்திலும் நிபந்தனைக்குட்பட்டதாகவே அமைந்திருக்கின்றது. தோழியின் முதன்மைச் செயலே பொய்யும் வழுவும் சூழ் உலகத்தில் களவை விடுத்து கற்பு நெறிப்படுமாறு தலைவனை வேண்டுதல். ஆகவே, நான் தோழியை ஒருபக்கம் தலைவியின் அகச்சான்றின் குரலாகவும் மறுபக்கம் சமூகத்தின் ஒழுக்க எல்லைக்கோட்டுப் பிரதிநிதியாகவும் மாறி நிற்கும் ஒருத்தியாகவும் பார்க்கிறேன். சில இடங்களில் தோழி தலைவியின் அகமனமே எனும்படியும் இருக்கிறாள். எதுவாகினும், அவள் நாடுவது தலைவியின் நலத்தையே. இதை ஒரு சில பாடல்களின் வழி பார்க்கலாம். 

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.  (குறுந்தொகை, 53, கோப்பெருஞ்சோழன்)

திருமணத்திறகான ஏற்பாடுகளைச் செய்யாமல் களவொழுக்கத்தில் இருக்கும் மருத நிலத்தில் வாழும் தலைவனை நோக்கி தோழி இவ்வாறு சொல்கிறாள் – வேலன் வெறியாட்டின் போது வெண்மையான அரிசிப்பொறி சிதறுவது போல புங்க மரத்தின் முதிர்ந்த பூக்கள் சிதறிக்கிடக்கும் வெண்மணல் மேட்டில், அணங்கேறிய மகளிரின் முன்வைத்து என் தலைவியில் கரம் பற்றி நீ சொன்ன உறுதிமொழிகள் எங்களுக்கு அச்சமூட்டுவதாகும். 

புங்க மரம் குறைந்த நீரில் வாழக்கூடியது. பல வகைகள் இருந்தாலும், அதில் வெள்ளை மலர்கள் பூக்கக் கூடியதாக நாம் எடுத்துக்கொண்டால், வெண்பூக்கள் வெண்மணல் மேட்டில் தெரிந்தும் தெரியாமலிருப்பது போல, தலைவன் தலைவிக்கு தெய்வமகளிரின் முன்னால் கொடுத்த வாக்கு இருப்பதும் இல்லாததும் ஒன்றென நினைக்கத் தூண்டுகிறது. வேலன் வெறியாட்டின் பொறி போல சிதறும் சொற்கள் என்பதை தன் செயல்களை ஊதிப் பெருக்கிக்கொள்ள எண்ணும் ஆணின் ஜாலப்பேச்சாக எடுத்துக்கொள்ளலாம். ’எம் அணங்கினவே’ – என்று சொல்லி தோழி தனக்கும் அச்சம் ஏற்படுவதாக காட்டிக்கொள்கிறாள். அதில் ‘உன்னை நன்கறிவேன் நான்’ என்ற போக்கு தெரிகிறது. கூடவே, தன்னை இணைத்துக்கொள்ளும் தன்மையும் உள்ளது. தெய்வமகளிரிடம் கொடுத்த வாக்கை மீறினால் அது உன்னைத் தாக்கிவிடும் என்ற மென்மையான மிரட்டலும் இருக்கிறது. 

இவள்தான் தலைவியை உடன்போகச் சொல்லி தலைவனுக்கு இந்த அறிவுரையை வழங்குகிறாள். 

பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே.  (குறுந்தொகை, 115, கபிலர்)

காட்டு மான் தன்னால் எட்டி உண்ண முடியாதபடி வளர்ந்த உயர்ந்த மூங்கில்களை விட்டு எட்டக்கூடிய இலைகளை சுவைத்து உண்ணும் நாடன் என்று விளித்து தோழி கூறுவது, பெரிய நன்மை செய்தோரை பேணாதவர் யார்? இவள் எந்த நன்மையும் இல்லாத காலத்திலும் இவளை வெறுப்பின்றி பாதுகாப்பாயாக, இவள் நீயன்றி வேறு யாரும் இல்லாதவள். இப்பொழுது அழகும் இளமையும் கொண்ட இவளுடன் நீ உடன்போக்குவது எளிது, ஆனால் நாளை அது குன்றும் போதும் நீ அவளுடன் இருத்தல் வேண்டும் என்று தோழி கூறுகிறாள். ஒரு பக்கம் ’மரணம் நம்மைப் பிரிக்கும் வரை இணைபிரியோம்’ என்ற உறுதிப்பாடை மணச்சடங்குகளில் பார்க்கிறோம்.  இன்னொரு பக்கம் உனக்குப் பயன்படவில்லை என்றாலும் வெறுக்காதே என்றொரு தோழி நினைவூட்டும் இடத்தில் இருக்கிறாள். நம் காலத்திலிருந்து இதைப் பார்க்கும் போது இதை ஆண்வர்க்கத்தின் மீது ஒரு பெண்ணிற்கு இருக்கும் இயல்பான நம்பிக்கையற்ற தன்மையின் வெளிப்பாடு என்றே தோன்றலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ ‘வினையே ஆடவர்க் குயிரே’ என்று தோழி தலைவியிடம் கூறுமாறு பாடலை அமைத்திருப்பதைப் பார்த்தால் வீட்டிலொருவர் பொருளீட்ட வேண்டும் என்பதை சொல்லித் தெரியும் அளவிலிருந்த அப்பாவிப் பெண்களா தலைவிகள் என்ற கேள்வியும் எழலாம். பொதுவாக, தலைவிக்கு மட்டுமல்ல தலைவனுக்கும் இவள் தோழி என்று கொண்டால் அவள் ஆற்றும் பணியை விரிவாகவே புரிந்துகொள்ளலாம். 

மேற்சொன்ன பாடல்கள் ஒருபக்கம் இருக்கட்டும். இரவில் வந்து களவொழுக்கம் பேணாது விரைந்து மணம் முடிக்கச் சொல்லும் தோழி ( ‘நல்லை அல்லை நெடு வெண்ணிலவே, குறுந்தொகை, 47, கபிலர்’), பரத்தையிடமிருந்து மீண்டு வரும் போது (’யாய் ஆகியளே விழவு முதலாட்டி’, குறுந்தொகை, 10, ஓரம்போகியார்) தலைவியின் அருமையைச் சொல்லி தலைவனை சேர்ந்து இருக்கச் சொல்கிறாள். தோழி ஒரு விதத்தில் தாயினும் இனியள். தாய்க்கு நேரடியாகத் தெரியாத காதல் செய்தியை தான் உணர்ந்து மறைமுகமாக கடத்துபவள். இத்தைகையவள் ஏன் தலைவன் தலைவியை எக்காரணத்தைக்கொண்டும் பிரியக்கூடாது என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும்? தலைவன் எத்தகையவனாக இருந்தாலும் அவனை ஏற்று வாழ்வது ஏன் தலைவியின் விதியாகிறது? இது ஒரு காலகட்டத்தின் எல்லை என்று கொண்டாலும், இலக்கிய மரபில் சில உணர்வுகள் பாடப்படவில்லை என்றாலும், சங்க இலக்கியத்தின் காதலைக்கொண்டாடும் இடத்து இதையும் கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. 

ஏனென்றால் தோழி சிறந்த ஆலோசகி, மொழியறிந்தவள். வேண்டுமென்றால் தலைவியிடம் கூட ஊடுவாள்,

”மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்

வலியோன் அன்ன வயங்குவெள் அருவி

அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்

வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்

நீயும் கண்டு நும்மரோடும் எண்ணி

அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு

அரிய வாழி தோழி பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே” ( நற்றிணை, 32, கபிலர்)

தலைவி தலைவனுடன் ஊடி இருக்கும் போது இப்பாடலை தோழி கூறுகிறாள். ஊடலை தவிர்த்து தலைவனை ஏற்றுக்கொள்ளும்படி தோழி சொன்னது பலிக்காமல் போகவே இன்னும் வலிந்து சொல்கிறாள். 

உலகத்தமிழ் மாநாடு புத்தகம்

மாயோனைப் போன்ற கரிய பெரிய மலையருகில், அவன் அண்ணன் பலதேவனைப் போல வெண்ணிற அருவிகள் பொழியும் மலை நாட்டுத் தலைவன் தினமும் நம் தினைப் புனத்தின் அருகில் வந்து நம்மை விரும்பி வருந்தி நிற்கிறான் என்று நான் கூறும் உரையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றாலும் உன்னிடத்து அன்பு கொண்ட தோழியரிடம் கேட்டாவது ஆராய்ந்து இது அறிந்து கொள்வாயாக. சான்றோர் தம்மொடு நட்பு கொள்ள விரும்பியவர்களின் குணங்களை முதலில் ஆராய்ந்து பார்த்த பின்னரே நட்பு கொள்வர். நட்பு கொண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்க மாட்டார். கிழவோன் என்னும்போது தலைவனின் செல்வமும் அதிகாரமும் அறியலாம். ‘உன் நண்பர்களிடம் கேட்டுக்கொள்’ என்பதிலிருக்கும் உரிமைகொள்ளல் புன்னகையைத் தூண்டுகிறது. அதைவிட நட்பாராய்தல் என்ற விழுமியம் என்னை ஈர்க்கிறது. ’நாடாது நட்டல்’ எனத் தொடங்கும் நட்பாராய்தல் அதிகாரத்தின் முதல் திருக்குறள் இப்பாடலின் இறுதி வரிகளை அப்படியே ஒத்திருக்கிறது என்றாலும் எனக்கு அது தெளிவைத் தரவில்லை. 

‘ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.  ’

என்ற இரண்டாவது குறளில் ஆராயாது நட்பு கொளின் அது சாவில் முடியும் என்பதை வைத்துப் பார்க்கும்போது தோழியின் கூர்ந்த பார்வையை ஊகிக்கமுடியும். தலைவனை பெருமலையில் பொங்கிப் பெருகும் காட்டருவியின் தலைவன் என்று சொல்வதை கொஞ்சம் திருகலாக இதை தலைவனுக்கு எதிராக பறக்கும் சிவப்புப் பதாகைகளாக புரிந்து கொள்ளலாமோ என்று கூடத் தோன்றுகிறது. 

உறவுச் சிக்கல்களையும் நடைமுறைக் காரணிகளையும் கடந்து தோழி என்ற அகமாந்தரின் பயனென்ன என்று சிந்திக்க வேண்டும். பெண்ணின் தனிமைக்கு அகத்தேடலுக்கு காதல்/காமம் என்பதைக் கடந்து பிற வெளிகள் அமையாத காலத்தில் சக பெண்ணின் பட்டறிவும் ஆற்றுபடுத்தும் கரங்களும் எத்துனை பெரிய பரிசில்களாக இருந்திருக்கும்? தலைவனைப்போல தலைவி கல்விக்காகவோ பொருள் தேடவோ போர் புரியவோ புற உலகத்தில் சஞ்சரிப்பவளல்ல. தலைவி அகவடிவினளாகவும் தலைவன் புறவடிவினனாகவும் இருப்பதால்தான் வெள்ளிவீதியார் ‘என்னொடு பொரும்கொல் இவ்வுலகம், உலகமொடு பொரும்கொல் என்அவலம் உறு நெஞ்சே’  (நற்றிணை, 348, வெள்ளிவீதியார்) என்கிறாள். என் நெஞ்சம் மட்டும் துஞ்சாது நோம் என்கிறாள். தோழி இரு வேறு உலகத்தை இணைக்கும் பாலமாகிறாள். ’வேந்து வினை முடித்த’ எனத் தொடங்கும் அகநானூற்றுப்பாடலில் (104, மதுரை மருதனிளநாகனார்) போர்வயின் பிரிந்த தலைவன் வழியில் எங்கும் நிற்காது தலைவியைப் பார்க்க விரைந்தோடி வந்து அவள் கூந்தலில் மலர் சூட்டுகிறான். தோழி தலைவனை “எந்தையே” என்று விளிக்கிறாள். தலைவி இவன் வரும் வரை தலைவனை பொய்யாக இகழ்ந்ததையும் தலைவன் வரும் வழியில் அவன் கண்டு கடந்தவைகளையும் சேர்த்தே பதிவிடுகிறாள். அவன் வழி தவறியதற்கும் இவள் சொல் மீறியதற்கும் இடையே வந்தமரும் மலரின் விந்தை. ஓர் உத்தியாகப் பார்த்தால் தலைவனும் தலைவியும் நெஞ்சறிந்து கூறாமல், கூறமுடியாமல் விட்டவை தோழியின் சொல்லாக வெளிப்பட்டிருக்கலாம், கவிக்குரல் போல். 

நிற்க. தோழியற்ற ஒருத்தி நாணிலாப் பெருமரமாகிய காமம் கொண்டால் என்னாவாள்? ஒளவையார் சொன்னது போல ’நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல’ சிரமமான வழிகள் நிறைந்த நீண்ட காட்டுப்பகுதியில் வெள்ளிவீதியாரைப் போல தொலைந்து போவாள். வெள்ளிவீதியாரின் அகவாழ்க்கையில் அவர் தலைவனைச் சேராதிருந்தலும் அவர் பாடல்களில் ஓங்கி நிற்கும் காமம் மிக்க கழிபடர் கிளவி என்ற முற்றிய காதலை இங்கே நினைவுகூரலாம். காமம் என்ற சொல்லிற்கு அகராதி ‘ நிறைவு’ என்ற பொருளைக்காட்டுகிறது. அன்பு முழுமையடைந்து காமம் என்றால், காமமும் முழுமை பெறும் இடத்தில் இருப்பது என்ன? அதையும் தோழி அறிவாள். 

எழுத்தாளர் பார்கவி

பார்கவி: எழுத்தாளர். இசை ஆர்வலர். தொடர்ந்து இணைய இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *