பின்னும் ஆளும் செய்வன் – ஜா. ராஜகோபாலன்

ஆண்டாள் (ஓவியம்: மனீஷா ராஜு)

பனிரெண்டாம் வயதில் திருப்பாவை வழியே அறிமுகமாகிறாள் கோதை எனும் ஆண்டாள் எனும் நாச்சியார். ஊரிலுள்ள பெரிய கோவிலில் மார்கழி மாதம் காலை மாலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பயிற்றுவிக்கப்படும். ஆர்வமுடைய பள்ளி மாணவர்கள் வந்து கற்றுக் கொள்ளலாம். தை மாதப் பிறப்பை ஒட்டி வாய்மொழித் தேர்வு வைத்து வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் (டபரா டம்ளர், தட்டு) பங்கு பெற்ற பிறருக்கு ஊக்கப் பரிசும் (டாலர் – சிவப்புக் கயிறு) கிடைக்கும். டபரா டம்ளர் வாங்கினாலும்  சிவப்புக் கயிறு டாலருக்கு ஏங்கிக் கிடந்த காலம்.  பின்னே, டபரா டம்ளரையா பள்ளிக்கு எடுத்துச் சென்று எல்லோரிடமும் காட்டி பெருமை பீற்ற முடியும்? அன்று திருப்பாவையும், திருவெம்பாவையும் தலைகீழ் மனப்பாடம். அருளேலோரெம்பாவாய் என முடியும் திருப்பாவைப் பாடல் என்ன என வாய்மொழித் தேர்வில் கேட்கப்படும். பாடல் எண், பாடல் வரிசை, பாடலின் இடையே வரும் வரி ஆகியவற்றை சொல்லி பாடல்களைக் கேட்பார்கள் என்பதால் 30 உடன் பத்தும் என 40 பாடல்களும் அப்போது மனப்பாடமாக இருந்தன. பள்ளிக்கு நடந்து போய் வருகையிலெல்லாம் அதுவரை கற்ற பாடல்கள் முணுமுணுக்கப்பட்ட நாட்கள். கோதை என் சித்தத்தில் விதை என விழுந்த நாட்கள் அவை. விதை முளைக்க மேலும் 20 ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டன (சில விதைகளோ கற்பாறையின் மீது விழுந்தன எனும் லூக்காவின்  பைபிள் வார்த்தைகளை இங்கு நினைப்போர் பரோட்டாவை தயிர் முக்கித் தின்னும் துயரை அடைவதாக). 

எழுத்தாளரும், என் அன்பிற்குரியவருமான நாஞ்சில் நாடன் அவர்கள் வழியே கம்ப ராமாயண பாடம் கேட்டு அதிலிருந்து சங்கப் பாடல்களை வாசிக்க நேர்ந்து அதை ஒட்டிய தேடலில் வைணவ இலக்கிய அறிஞர் ம பெ சீனிவாசன் அவர்கள் கட்டுரைகள் வழியே பிரபந்த பாசுரங்கள் மீண்டும் உயிரில் வேர்பற்றி வளர ஆரம்பித்தன. வெண்முரசு நூல் வரிசையில் நீலம் வந்தபோது அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கோதையும், நம்மாழ்வாரும், கலியனும் மின்னி மின்னி மறைந்து தோன்றும் அனுபவம் வழியே வேர்ப்பலா என கோதை மீண்டும் கனிந்து வந்தாள்.  திருப்பாவை முப்பது பாடல்களும், நாச்சியார் திருமொழி 143 பாடல்களுமாக மொத்தம் 173 பாடல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படும் ஆழ்வார்கள் அருளிச் செயலில் கோதையின் பங்கு. பிற பதினொரு கவிகளில் கோதைக்கு ஈடு கொடுக்க முயற்சித்து அதில் அவ்வப்போது சபாஷ் வாங்குபவர்கள் நம்மாழ்வாரும், திருமங்கை மன்னனான கலியனும்தான்.   

கவியில் ஆண்கவி, பெண்கவி என்ற பேதமில்லை. கவிஞர் எப்பாலினத்தவராயினும் கவிஞர் எனும் ஒருபாலினத்தவரே. அவர்களால் இறைவனுக்கு ஈடாக ஆணாக, பெண்ணாக, பாலிலியாக என எப்படி வேண்டுமானாலும் மாறிக்கொள்ள இயலும். சங்கப் பாடல்களில் தலைவனாகவும், தலைவியாகவும் மாறி மாறிப் பாடுவது ஒரே கவிஞர்தானே. கவிஞர்களில் பால்பேதம் தேவையில்லை என்றாலும் கவிதையின் தன்மையில், அது எழுப்பும் உணர்வின் ஆழத்தில் அக்கவிதை ஆண்தன்மை கொண்டதா, பெண்தன்மை கொண்டதா என அனுபவித்து திளைக்கும் சலுகை நல்ல வாசகனுக்கு உண்டு.   அந்த விதத்தில் கோதையின் பாசுரங்கள் பேசிய பெண்மைத்தன்மையை அவ்வளவு நேர்மையாக, துணிவாக பேசிய கவிதைகள் குறைவே. எழுதிய கோதை பெண்ணென்று நிற்பது அவள் கவிதையால்தானே தவிர அவள் பிறப்பால் அல்ல. அவளுக்கு ஈடு கொடுத்து நின்று மால் மேல் மையல் கொண்டு இலக்கண முறைமைகளை, சமூக தேய்வழக்கங்களை மீறிய, “யானைப் படை நடத்தி போர் வென்ற” மானவேல் பரகால (எதிரிகளுக்கு எமன்) வீரன் திருமங்கை மன்னனான கலியனுக்கு பக்திக் கவியுலகு அளித்த பெயர் பரகால நாயகி. படை நடத்தி பகை வென்ற மறவன் மால் மேல் மையலுற்று அடைந்த பெயரே பரகால நாயகி. ஆகவே இங்கு ஆண்தன்மை, பெண்தன்மை எனப் பேசப்படுவது பிறப்பால் உடலில் உருவான பால் பேதங்கள் அல்ல என்பதை மேலும் விளக்க வேண்டியிருக்காது என நம்புகிறேன். 

இந்திய பக்தி மரபில் நாயக நாயகி பாவம் முக்கியமானது. சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவி பாடல்களை இறைவனுக்கும் பக்தனுக்கும் போட்டுப் பார்க்கும் முறை. வைணவத்தில் நவவித சம்பந்தம் (ஒன்பான் உறவு) என ஒன்பது விதங்களில் இறைவனுக்கும் பக்தனுக்குமாக சொல்லப்படும் உறவுகளில் தலைவன் தலைவி உறவும் ஒன்று. ஆகவே கவிதை மரபாலும், பக்தி மரபாலும், மத சம்பிரதாயமாகவும் இவ்வுறவு முறை வழியே இறைவனுக்கு பக்தி செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. வைணவ மரபு இன்னும் ஒரு படி மேலே போய் பரமான்மாவாகிய இறைவன் ஒருவனே ஆண் (புருஷோத்தமன்),  ஜீவான்மாக்களாகிய நாமெல்லாம் பெண்களே என்றுதான் சொல்கிறது. இந்த இடத்தை மிகச் சரியாக உணர வைப்பவை கோதையின் பாடல்கள்.

கோதையின் கவிதைகளில் பல சிறப்புகள் உண்டு. இங்கு அவளது பெண்தன்மையின் தனித்துவத்தை மட்டுமே இக்கட்டுரை பேச விழைகிறது. பெண்மையின் ஆழமும், உச்சமும் வெளிப்படும் உணர்வுத் தருணங்களில் காதலும், தாய்மையும் ஆகிய இரு தருணங்கள் அபாரமானவை. ஒரு பார்வையில் ஆண் தன்மைக் காதல் அடைந்து மகிழ நினைப்பது என்றால் பெண் தன்மைக் காதல் அளித்து மகிழ்வது. ஆண் காதல் தா, தா என அடைவதற்குத் தவித்து நிற்கையில் பெண் காதல் கொடுப்பதற்கு ஏங்கி நிற்கும் விதமாகவே அமைகிறது. கொடுப்பதற்கு ஏங்கி நிற்கும் பெண்ணிடம் கேட்டால் எல்லாவற்றையும் கொடுத்து விடச் சித்தமாய் இருக்கிறாள். அவள் சித்தமாய் இருக்கிறாள் என்பதை விட அவள் சித்தம் அவள் வசமின்றி அவ்வாறாய் ஆகி விடுகிறாள். கோதையின் தந்தை பெரியாழ்வார் சொற்களில் “ஏடி ! வந்து காணாய், ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இளமுலையும் என் வசம் அல்லவே” என அவளையும் மீறியது பெண் கொண்ட காதல்.

இறைவன் மேல் பிற ஆழ்வார்கள் கொண்ட காதல் குறைவுபட்டதா என்ன? “”உருகும் உன் திரு உரு நினைந்து, காதன்மை பெரிது, கையறவு உடையாள்” என்று நாயகியின் காதல் பிரிவுத் துயரை திருமங்கை மன்னன் சொல்கிறார். கையறவு – வேறு எதுவும் பற்றுக்கோடாக கையில் இன்றி மால் ஒருவனையே நினைந்து உருகும் காதல். “எங்கு உற்றாய்? எம்பெருமான், உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழி தருகேனே”  என்று தேடி அலையும் காதலும் திருமங்கை மன்னன் காதல்தான். “ஊழியில் பெரிதால் நாழிகை என்னும்” என நொடியை ஆண்டாகக் கொண்டு பிரிவின் துயரைப் புலம்பும் காதல்.  உள்ளத்தால் நைந்து மெலிந்து அவனை எண்ணி உருகும் காதல் – “பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப, பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று, செங் கால மடப்புறவம் பெடைக்குப் பேசும், சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து” – மழைக்கால இரவில் அறைக்கு வெளிப்பக்க சுவரின் பொந்தில் அடைந்த இணைப்புறாக்களில் ஆண்புறா பெண்புறாவிடம் பேசும் சிறு குரலுக்கும் உடல் உருகும் காதலும் கலியன் காதலே.

கலியன் காதல் இவ்வகை எனில் நம்மாழ்வார் காதல் இன்னும் ஒரு வகை. அறியாப் பருவத்திலேயே அவனிடம் மனதைப் பறிகொடுத்துவிட்ட தலைவியின் நிலை சற்று பரிதாபம்தான் –“ முலையோ முழு முற்றும் போந்தில, மொய் பூங்குழல் குறிய; கலையோ அரை இல்லை; நாவோ குழறும்; கடல் மண் எல்லாம் விலையோ என மிளிரும் கண்” என நம்மாழ்வாரின் நாயகிக்கு அவத்தை அதிகம். நொடிக்கு நொடி நம்மாழ்வாரின் நாயகிக்கோ பிரிவுத்துயர் அதிகரிக்கிறது- “இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே” எனப் புலம்பும் அவள் உறக்கம் இன்றி “கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” எனக் கேட்கிறாள். போதாதற்கு கண்ணீர் மல்கல் – “உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும், கண்ணீர் மிகக் கலங்கிக் கைதொழும்” என உருகும் நாயகியின் கண்ணீர் சாதாரணமல்ல – “முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய் மழைக்கண்ண நீர் திருமால் கொடியான் என்று” சொல்லி வழியும் கண்ணீர். ஆறு போல என்பதும் போதாமல் நம்மாழ்வார் நாயகியின் அழுகையோ “கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே” என இரங்கும் அளவுக்கு அழுகை. அதற்கும் பலனின்றிப் போக–“ போகு நம்பீ! உன் தாமரைபுரை கண்இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய, அழிதற்கே நோற்றோம் யாம் “  என்று தன்னையே தான் நொந்து கொளல்.   இவ்வளவு துயரால் வெட்கம் துறந்து நின்று  பெற்றவளிடம் “பாடு உடை அல்குல் இழந்தது பண்பே “ என்ற வேதனை ஏச்சையும் வாங்கிக் கொள்கிறாள் நாயகி. “கண்ணபிரானுக்கே என் பெண்மை தோற்றேன்” என தளர்ந்து கிடக்கிறாள் நம்மாழ்வாரின் நாயகி.  காதலால் பெற்ற பயன் என்னவென்று புலம்புகையில் “உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து” எனவும், “ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்” எனவும் கலியன் நாயகி கதறுகிறாள். என்னைக் கைவிட வேண்டா என இப்படியாக பதறிக் குலையும் ஜீவான்மாக்களான நாயகியர் அழுது நிற்க, புதர் பிளந்து வரும் பிடி யானை போல கால் வைத்த இடமெல்லாம் வழி என ஆகும் நிமிர்ந்த நன்னடையில் கோதை நாச்சியார் வருகிறாள்.

கண்ணனை அடைய வேண்டி காமன் நோன்பு இருக்கிறாள். நோன்பின் நோக்கம் மனதுக்கு உகந்த மணாளனை அடைவது. ஆகவே நோன்பில் அவள் வைக்கும் வேண்டுதலைப் பாருங்கள் – “கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு கடல்வண்ணன் என்பதோர் பேர் எழுதி புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே”. மன்மதனே, அவன் மேல் நீ மலரம்பு தொடுத்து அவன் அதனால் என்மேல் மையலுற்று என்னைத் தேடி வரும் வரை காத்திருக்கும் பொறுமை இல்லை என்பதால் யாரை அடைய வேண்டுமென்ற குறிப்புடன் உன் கரும்பு வில்லில் என்னையே அம்பாக்கி அவனையே இலக்காக்கி எனை எய்வாயாக என்கிறாள். அவனைச் சென்றடையும் வேகம் அவளிடம் வெளிப்படும் இடம். கண்ணனைச் சென்றடைய உதவுவதால்தான் இந்த மரியாதை காமனுக்கு. அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் காமனும் அவளிடம் வாங்கிக் காட்டிக் கொள்ள வேண்டியதுதான்- “தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே” இருக்க வேண்டுமென்றால் என்னை அவனிடம் சென்று சேர்ப்பி என்று மன்மதனுக்கு மிரட்டல்.

உடல் என்பதை ஒரு புலனின்பம் துய்க்க உதவும் கருவி என பிற மரபுகள் கடுமையாக கண்டிக்கும்போது  வைணவம் அதை வேறு வழியில் கையாள்கிறது. உடலை, அதன் இயல்புகளை எதிர்த்துப் போராடும் கடினமான வழியை மாற்றி அமைக்கிறது. உடலின்பத்கை இறைவனைச் சேரும் இன்பமாக, உடல் உறுப்புகளை அவனுடையதாக ஆக்கி அவனுக்கே படைக்கும் விதத்தில் வைணவத்தில் உடல் கையாளப்படுகிறது. இறைவன்  தன் உடலை  அடைந்து மகிழும் மகிழ்ச்சியே இங்கு பக்தனால் வேண்டப்படுவது. தன் மகிழ்ச்சிக்காக இறைவனை அடைவதற்கல்ல உடல். இறைவனின்  மகிழ்ச்சிக்காக அவன் முன் படைக்கப்பட வேண்டியது. இங்கு உடலின் எவ்வுறுப்புகள் புலனின்பத்தில் கிளர்ச்சியூட்டுமோ அவற்றை நேரடியாக கோதை பேசுகிறாள். அவள் பேசும் வேகத்தில் அந்த மாலன்றி வேறெவரும் அவளை நெருங்க முடியாத பெருங்காதல் வெளிப்படும். “பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்” என அவளால் நேர்படப் பேசமுடிகிறது.

சரி, பிற ஆழ்வார்களின் நாயகியர் இப்படி பேசவில்லையா என்று கேட்டால் திருமங்கை மன்னனான பரகால நாயகி இப்படி வேதனிக்கிறாள் நாரணன் பிரிவால் –“தென்றலும் தீயினில் கொடிதாம்; தோழி! ஓ! என்னும்; துணை முலை அரக்கும்”. வைணவ உரையாசிரியர்கள் அகமரபில் நல்ல வாசிப்பு உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்த வரிக்கு அவர்கள் விளக்கம் – “இரு முலைகளும் பெருமாளுக்குரியவை ஆதலால் தம்மை உரியவரிடம் சென்று சேர்ப்பிக்கும்படி நாயகியை நச்சரிக்கின்றன. எவ்வாறெனில் பஞ்ச காலத்தில் பிள்ளைகள் சோறு சோறு என அடம் பிடிக்க உணவு தர இயலாத அன்னை ஆத்திரத்தால் அப்பிள்ளைகளை அடித்து அமைதிப்படுத்துவது போலே நாயகியும் திருமாலைச் சேர அடம் செய்யும் முலைகளை அரக்கி அமைதிப்படுத்த முயல்கிறாள். இரு முலைகளுக்கும் ஒரே நோக்கம் என்பதால் நோக்கம் நிறைவேறும்வரை அவை ஒன்றுக்கொன்று துணையாக இருக்கின்றபடியால் துணைமுலை எனப்பட்டது”.    பரகால நாயகி இவ்வாறென்றால் நம்மாழ்வாரின் நாயகி சற்று நளினமாக சொல்கிறாள் –“காண்பெருந்தோற்றத்து  என் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே” என நம்மாழ்வார் நாயகி போராடி வெட்கம் விடுகிறாள்.   ஆனால் கோதைக்கு இப்படியான வேதனையோ, தோல்வியோ இல்லை. தொழுது வைத்தேன் என்பதோடு  பிராயம் தொடங்கும்போதே என்பதையும் சேர்த்தே சொல்கிறாள். சங்கற்பித்து  தொழுது வைத்தேன்  எனும்போதே அவள் இறைவனுக்குப் படைப்பதற்கான பூசனைப்பொருளாகவே கருதிச் சொல்வது தெளிவாகிறது. அடுத்த பாடலில் அதை நேராகவே தெளிவுப்படுத்துகிறாள்- “ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்” என தன் உடல் யாருக்கானது என்பதையும், வேறெவருக்கும் இடமில்லை என்பதையும் வலியுறுத்துகிறாள். 

“அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா”

மானிடரைக் கண்டால் நாணித் தலைகுனியும் அவள் முலைக்கண் நாராயணன் முகத்தில் விழிப்பதற்கே கண் மலரும்; சிறுமானிடருக்கு அல்ல அவள் உடல்; அவளே சொல்வது போல கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா. மரபான சிலர் கோதையின் இவ்வரிகளால் பதற்றம் அடைவது இயல்பே. வாயில் என்பது பரமபத வாசலைக் குறிக்கும், கொங்கை இங்கே நெஞ்சத்தைக் குறிக்கும் என்றெல்லாம் அவைநாகரிகம் ஏற்றிச் சொல்வதுண்டு. ஆனால் கோதையின் கவிதை மானுடரை சிறுமானிடர் என்கிறது. அவள் கவிதை சுமப்பது மானுடனால் ஆளமுடியாத பெருங்காதல். மாளா அப்பெருங்காதல் முன்பு மானிடர் சிறுமானிடர் மட்டுமல்ல ,வேள்வியில் புகும் நரியும் கூட. உடலைத் துறப்பது என்பது வேறு. உடலை இறைவனுக்குரியதாய் ஆக்கி, அவனுக்குப் படைப்பது என்பது வேறு. காரைக்காலம்மையும், அக்கமாதேவியும் உணர்ந்த, சுமந்த  அப்பெருங்காதல் கோதையிடமும் நிறைந்து கிடக்கிறது.

நம் உள்ளம் கவர்ந்த ஒருவனுக்கு மானிடப் பெண் உணவு படைக்கிறாள். அவனுக்குப் பிடித்த உணவுவகைகளை சமைத்துப் பரிமாறுகிறாள். எவ்வளவு சமைத்துக் கொடுப்பாள்? அவள் அன்பின் அளவு எனக் கொண்டால் இலை நிறைய, வயிறு நிறைய பரிமாறுவாளா? நாச்சியார் என்பது தமிழ் மரபில் அரச குடும்பப் பெண்களைக் குறிக்கும் சொல். குறிப்பாக தென்தமிழக பாளைய, ஜமீன், மன்னர் குடும்பப் பெண்களுக்கு பெயரின்  பின்னொட்டாக வரும் சொல். கோதை ஏன் நாச்சியார் என்று கேட்டால் அவள் தனது உள்ளம் கவர்ந்த திருமாலிருஞ்சோலை அழகர்பிரானுக்கு அமுது படைக்கும் அழகில் தெரியும்.

“நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?”

தடா என்பது வாயகன்ற பெரிய பாத்திரம். அண்டா, டேக்ஸா என இன்று சொல்லப்படுபவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். அழகன் விரும்பியுண்ணும் பதார்த்தம் என்பதால் அழகருக்கு ஆண்டாள் வெண்ணெய் படைக்கிறாள். எவ்வளவு படைக்கிறாள்? நூறு தடா நிறைய. அதுவும் எப்படி? வாய் நேர்ந்து பராவி-விளிம்பு வரை நிறைத்து அதன் மேலும் குவிந்து இருக்குமாறு. இது போதாதென அடுத்ததாக அவனுக்குப் பிடித்த அக்கார அடிசில் ; அதுவும் நூறு தடா நிறைய சொல்லியிருக்கிறாள். நம்மை அவள் சிறுமானிடர் என்று சொல்வதில் பொருத்தமில்லாமல் இல்லை. நாம் எவ்வளவு அன்பில் ஒருவருக்கு உணவு படைத்தாலும் இப்படி நூறு தடா வழிய வழிய கற்பனையிலாவது கொடுக்க நினைத்திருப்போமா? ஒரு இலை நிறைய என்பதைத்தாண்டி பரிமாறத் தெரியாத நாம் சிறுமானிடரே. கோதை அன்னம் படைக்கும் இந்த இடத்தில் அரசியென விளங்குகிறாள். உலகையே உண்ணும் பெருவயிறுடையோனுக்கு அமுது படைக்கிறோம் என்ற உணர்வு அவளை இப்படி படைக்கச் செய்கிறது.

இதுவரை இறைவனை வணங்கிய அனைவரும் அவனிடம் பலவற்றையும் கேட்டவாறு இருக்க கோதைதான்  அவனுக்கே அள்ளி  அள்ளி கொடுக்கிறாள். தான் கொடுப்பதை மட்டுமே பேசும் பெருமனம் அவளுடையது. நாச்சியார் இப்படித் தருவதை ஒருமுறை மட்டுமே செய்பவளல்ல என்பதை அடுத்த பாடல் சொல்லும்.               

“இன்று வந்து இத்தனையும்
      அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
      கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
      திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
      மனத்தே வந்து நேர்படிலே”

தான் படைக்கும் அமுதை அவன் வந்து ஏற்றுக்கொள்வான் எனில் அடுத்தடுத்து அவள் தருவதாகச் சொல்வது ஒன்று, நூறு, ஆயிரம் என பெருகிக்கொண்டே செல்கிறது.  1,2, 3 என கூட்டல் கணக்கில் சொன்னால் கூடிக்கொண்டே எனச் சொல்லலாம். இவளோ அவனுக்குக் கொடுப்பதை 1,100,1000 என பெருக்கத்தில் ஏற்றிச் சொல்கிறாள். தான் கொண்ட பெருங்காதலால்  கொடுப்பதில் குறைந்த அளவறியாதவளாக, யானைக்கு கவளமிடும் பாகன் போல அள்ளித் தந்தாலும் கொடுப்பதில் மனம் நிறையாதவளாகவே இருக்கிறாள். ஆயிரமாயிரமாக கொடுத்தாலும் அவையும் காலத்தின் கணக்கிற்குள் வரும் என்பதால் அவள் சொல்லும் ஒரு வரி – “பின்னும் ஆளும் செய்வன்”. அதாவது ஆயிரமாயிரமாக இத்தனை கொடுத்த பின்னரும் அவனுக்கு ஆட்பட்டு தொடர்ந்து காலம் தோறும் இவற்றை தினமும் செய்து வருவேன் என்கிறாள். அவள் அள்ளி வழங்குவது ஒரு நாள், ஓராண்டு கணக்கல்ல. வாழும் காலம் முழுவதும் அவனுக்கே ஆட்பட்டு அவனுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்கிறாள். பெறுவதைக் குறித்த சிறு கோரிக்கையும் இல்லை. அற்பத்தனங்கள் அணுக முடியா அரசி அவள். கடைசி வரியை அவள்  சொல்லும் அழகு, அவள் நாச்சியார் என்பதை உறுதிப்படுத்தும்-     “திருமாலிருஞ் சோலை தன்னுள் நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே” – அவள் ஆயிரமாயிரமாகக் கொடுத்தும், எப்போதும் கொடுப்பதற்காக ஆள் செய்வதும் நடக்க வேண்டுமெனில் அழகர் தான் அவரே வந்து அவள் மனதில் நேர்பட வேண்டும். ஆம், அவன்தான் அவளிடம் வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் அவள் அளிப்பதைப் போல வேறெவரால் அவனுக்கு அளித்து விட இயலும்?     

தூது அனுப்பும் தலைவியர் தலைவனிடம் தூதாக செல்லும் தூதுவர்களிடம் நயந்து பேசி, தன் நிலை குறித்து அவனிடம் அழுத்தமாகச் சொல்லவேண்டுமென கேட்பது வழக்கம். ஆனால் ஆண்டாளிடம் அப்படி ஒரு இரங்கும் நிலை கிடையாது.

“பொழில் வாழ்குயிலே!
குறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில்”

இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்” – தூது செல்லும் குயிலுக்கு மிரட்டல். குயிலே!  நீ இங்கே தொடர்ந்து வாழவேண்டும் என நினைத்தால் அவன் இங்கு வரும்படி செய் அல்லது அவன் என்னை ஏற்கும் அடையாளமாக அவனால் தரப்படும் பொன்வளையலை வாங்கி வா! இரண்டில் ஒன்று உறுதியாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ இங்கே வாழ முடியாது என்கிறாள்.

“இன்று நாராயணனை வரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்”

அவன் இன்று இங்கு வரும்படி நீ கூவவில்லையானால் உன்னை இங்கிருந்து துரத்தி விடுவேன் எனும் ஆணை கோதை காதலிலிருந்து பிறப்பது. அக்காதலால் மிரட்டப்படும் புண்ணியம் பெற்றது குயில் மட்டுமல்ல. காதலின் தலைவனான திருமாலுக்கும் அந்த மிரட்டல் உண்டு.

“சிறுகுயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில்
அவனைநான் செய்வன்  காணே”

குயிலே! நீ மட்டும் அவனை கூவி அழைத்து இங்கே உடனே(ஒல்லை) வருமாறு கூவினால், அவன் வந்தவுடன் அவனை என்ன செய்யப்போகிறேன் என நீயும் பார் என அவள் காட்டும் உணர்வு பெருங்காதலில் விரகம், தாபம் போல கோபமும் உண்டு என்கிறது.

கோதையின் கோபத்தால் திருமால் படும்பாட்டைப் பார்க்கையில் மானுடரெல்லாம் அவள் காதலின் தூக்கிய திருவடி முன் மாவலியென தலை கொடுக்கத்தான் முடியும். பலமுறை அழைத்தும் தலைவனாகிய திருமால் வரவில்லை. பிறரால் புகழப்பட்ட திருமாலின் அவதாரங்கள் கோதையால் சொல்லப்படும் “அழகு” –

“உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்து பெண் ஆக்கை  யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்”   

– உணவு உண்ணாமல் உறங்காமல் அலை ஒலிக்கின்ற கடலுக்கு குறுக்கே  அறுத்து (அணை கட்டி )  பெண்ணாகிய சீதையின் உடல்  மீது விருப்பம் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு  தாம் உற்ற பேத நிலையை (மாயை  நிலையை ) என ராமாவதாரம் கோதையால் கோபத்தில் புகழப்படுகிறது. விரும்பும் தன்னை வந்து சேராமல் இருக்கும் திருமால் அன்று சீதையை பெரும் முயற்சியால் தேடிப் போன கோபத்தால் சீதாராமனும் “பெண் ஆக்கை யாப்புண்டவனாகிறான்”.

“பாசி  தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் மாசு உடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்”

– பண்டைய நாளொன்றில் இரணியானால் கவரப்பட்டு அண்டக்கடலுள் அழுத்தி வைக்கப்பட்டதால் பாசி பிடித்துக் கிடந்த  நிலமகளுக்காக அழுக்கேறிய  உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக வடிவெடுத்த என வராக அவதாரம் கோதையால் கோபத்தில் புகழப்படுகிறது. “எண்ணற்கு அரியது ஓர் ஏனம் (பன்றி) ஆகி” என பெரியாழ்வாராலும், ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய்” என பரகால நாயகியாலும் இன்னும் பலவகையிலும் புகழ்ந்தேத்தபடும் வராக அவதாரம்தான் தன்னை வந்து சேராத கோபத்தால் ஆண்டாளால் மானம் இல்லாப் பன்றியாக ஆகிறது.  

கோதை கொண்ட காதலில் கோபம் மட்டுமல்ல அவன் மேல் அவள் கொண்ட தாபத்தையும் பார்க்கலாம். காத்திருப்பினால் தான் படும் அவஸ்தையை, அவள் உயிர் உண்ணும் விரகத்தை கோதையின் வரிகள் உயர்ந்த கவித்திறனுடன் வெளிப்படுத்துகின்றன.

ஆண்டாள்

வைணவத்தில் சரணாகதித் தத்துவம் மிக முக்கியமாகப் பேசப்படுவது. சரணாகதி எனும் தஞ்சத்திற்கு ஒரே இடம் திருமாலின் திருவடி மட்டுமே. இது அனன்ய கதித்துவம், அதாவது அவனன்றி வேறு சரண் இல்லை எனப்படுவது. சரணாகதியின் லட்சணங்களில் ஒன்று. மற்றுமொரு லட்சணம் ஆகிஞ்சன்யம் எனப்படுவது. அதாவது வேறு பொருள்(தனக்கென எதுவும் இல்லாமலும், பிற வழிமுறைகள் இல்லாமலும்) எதுவும் கையில் இல்லாமல் அவன் ஒருவனே வழி என்றும், இலக்கென்றும் ஒப்பி முயல்வது. வைணவ உரையாடலில் கைமுதலாவது எதுவுமில்லை எனப்படும். பரகால நாயகியின் “கையறவு உடையாள்” எனும் வரி எதைக் குறிப்பது என இப்போது புரிந்திருக்கும்.

இந்த சரணாகதியின் லட்சணங்களை தலைவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த தலைவியின் நிலையாக்கி கோதை பாடும் சில பாசுர வரிகள் –

“மழையே! மழையே! மண்புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினாற்போல் ஊற்றுநல் வேங்கடத்து
உள் நின்ற அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சத்து
அகப்படத் தழுவ நின்று என்னை ததைத்துக் கொண்டு
ஊற்றவும் வல்லையே?”

க்ரியா பதிப்பகத்தின் வெளியீடாக ஜோப் தாமஸ் அவர்கள் எழுதியிருக்கும் சோழர் கால செப்புப் படிமங்கள் எனும் நூலை வாசித்தால் மேலே கோதை எழுதிய பாடல் இன்னும் தெளிவாகும். இன்றுவரை சுவாமிமலை பகுதிகளில் செப்புச் சிலை செய்யும் முறை பெருமளவு இதுதான் – (தேன்)மெழுகால்  சிலை செய்து அதைச் சுற்றிலும் சதுர வடிவ பெட்டகம் போல் களிமண்ணால் பூசுவர். அதில் சில துளைகளும் இடுவர். களிமண் காய்ந்ததும் உலோகத்தைக் காய்ச்சி உருக்கி அந்த உலோகக் குழம்பை துளை  வழியே  களிமண் அச்சுக்குள் விடுவர். மண்ணுக்குள் பொதியப்பட்ட மெழுகு உலோகக் குழம்பின் சூட்டில் உருகிக் கரைய அந்த அச்சில் உலோகம் அமைந்து விடும். ஆறியதும் மண்ணை நீக்கினால் உலோகச் சிலை வெளிவரும்.

கோதை சொல்லில் மழையிடம் சொல்லப்படும் பாசுரம் இது. மண்ணுக்குள் நிற்கும் மெழுகைப் போல என்னுடலுக்குள் ஜீவான்மா. கொதிக்கும் உலோகக் குழம்பென அந்த பரமான்மா வந்து என்னுள் நிறைய நான் அவனில் கரைந்து (என்னைத் ததைத்துக் கொண்டு) போகும் நிலை வரவில்லையே என ஏங்குகிறாள். கவியென அவள் சன்னதம் கொள்ளும் இடம் திருமால் தனக்குள் வருகையில் அவன் தன்னில் நிறைகையில் கொதிக்கும் உலோகக் குழம்பென வருவதைச் சொல்லும் இடம்தான். விரகத்தின் வேதனையை உட்பொருளோடு கலந்து சொல்லும் சன்னதமும், நுண்ணறிவும் ஒரேசேரப் பெற்ற வரிகள்.

அவன் இன்னும் வராத வாட்டத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்? கோதையின் கோரிக்கை – “பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே” . அவன் வராத வாட்டம் தணிக்க அவன் இடுப்பில் அணிந்திருக்கும் மஞ்சள் ஆடையை எடுத்து வந்து (அவன் வாசம் என்மேல் படும்படி) வீசுங்கள் எனக் கேட்கிறாள். பெருங்காதலி என எத்தனை முறைதான் சொல்வது நாச்சியை?

எவருக்கும் தலைவணங்கா பேரரசி பேரரசனுக்கு மட்டுமாக வணங்கும் இடம் ஒன்று வருகிறது

“செங்கண் மால் சேவடிக் கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து
ஒருநாள் தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே”

கோதையும் அடிபணிந்து விண்ணப்பம் செய்யும் கோரிக்கை அவள் உ  டன் அவன் வந்து கலக்க வேண்டும் என்பதையே. இல்லாவிட்டால் அவள் ஆவி தரிக்காது என்கிறாள். அதுவரை அவனை கோபித்த, ஆணையிட்ட, பிறரை விலகி நிற்கச் சொன்ன அக்குரல் சேவடிக் கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் என குழைகையில் திருமால் மேல் பொறாமைதான் வருகிறது.   

கவியாக கோதை உயர்ந்து நிற்கும் இடம் அவள் பயன்படுத்தும் படிமங்கள். வாழ்க்கையோடு இணைந்த நுட்பங்களை கோதை சொல்லால் கேட்பது பேரனுபவம். அவன் பிரிவு வருத்துகிறது. அவனை எதிர்நோக்கி உயிர் நூலிழையில் ஒட்டிக் கொண்டிருப்பது  கோதை சொல்லில் இப்படி வருகிறது –

“போர் காலத்து எழுந்தருளி பொருதவானார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல், வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்தருளாரே”

அருவியின் நீர் பொழிவதைப் போல உடலில் பட்டு வழிந்து இறங்கும் வெயிலை உணர வேண்டுமென்றால் பழைய திருநெவேலிக்காரனாக (இன்றைய திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி அனைத்தும் ஒருங்கிணைந்த மாவட்டம்) இருக்க வேண்டும். வெயிலில் வாடிய பயிர்கள் பல இருந்தாலும், எருக்கு மட்டும் தனிவகை. வெயிலைக் கண்டால் விரிந்து வளரும். கைரேகைக்காரரிடம் நீட்டும் இளம்பெண்ணின் உள்ளங்கை போல மினுமினுத்துக் கொண்டு இலைகள் மெழுகுபூசிய இளமை மிக்க பசுமை நிறத்தில் வெயிலைக் குடித்து வளரும். கோடை முடிந்ததை எருக்கின் இலையில் பார்க்கலாம். மெல்ல வெளிர் பசுமை நிறத்துக்கு மாறி மெல்ல மஞ்சள் நிறம் ஏற ஆரம்பித்து உதிரும் தருணத்தில் மெழுகு பூசிய மஞ்சளில் மின்னும்போது (அழகிய கிழவிகள் இல்லாமலா இருக்கிறார்கள் உலகில்?)காற்றடிக் காலம் முடிந்து கார்காலம் தொடங்கவிருக்கும். இப்போது  பால் வற்றி பசுமை இழந்து மஞ்சள் மினுமினுப்பில் தண்டோடு பெயருக்கு ஒட்டிக் கொண்டிருக்கும் எருக்கின் பழைய இலை. மழை ஆரம்பித்து நீர்த்துளி பட்டதும் அதையே காரணமாகக் கொண்டு இற்று விழும். வெயில் நிலங்களில் முதல் மழைக்குப் பின் எருக்கம்புதரைச் சுற்றிலும் தரையெல்லாம் மஞ்சள் மயில் தோகை விரித்திருக்கும். இதைப் பார்த்தவருக்கும், உணர்ந்தவருக்கும் கோதை சொல் காட்சியாய் விரியும்- “நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை” . காத்திருப்பிலேயே உயிர் வற்றி பெயருக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது உடலில், வருகிறானோ இல்லையோ ஒரு சொல்லாவது சொல்லி அருளமாட்டானா என கோதை இளைத்திருப்பதை தாங்க முடிவதில்லை.

ஆனாலும் திருமால் கொடியவனே. கோதையின் வரிகளில் சொல்வதென்றால் “ அழிலும் தொழிலும் உருக்காட்டான்” (அழுதாலும், தொழுதாலும் காட்சி அளிக்க மாட்டான்), “உள்ளே உருகி நைவேனை உளளோ, இலளோ என்னாத கொள்ளை கொள்ளி குறும்பனை” (அவனையே நினைந்துருகி இருக்கிறேனா, இல்லையா என்ற கவலை இல்லாத உள்ளம் கொள்ளை கொண்ட மிகுந்த குறும்புடையவன்) என திருமாலை பலவாறு சொன்னாலும் அவன் மேல் கொண்ட காதல் அளவிலாதது.

பெருங்காதலால் நிறைந்த பெண்களுக்கே உரிய திண்ணக்கம் ஒன்றுண்டு. எவையெல்லாம் பெண்களுக்குரிய குணங்களாக பயிற்றுவிக்கப்பட்டனவோ அவை அனைத்தையும் காதலுக்காக வீசி எறிந்து ஏழுலகையும் எதிர்கொள்ளும் திடம் தான் அது. கோதை தன் காதலால் தன் குடும்பத்தார் படும் துயரை அறிந்துதானிருக்கிறாள். ஆனால் அதற்காக தன் காதலை விடத் தயாரில்லை. குடும்பத்தார் மீது சற்றே கருணை கூர்ந்து ஒரு ஆலோசனை சொல்கிறாள் –

“நாணி இனியோர் கருமமில்லை
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
பண்டு பண்டாக்க உறுதிராகில்
மாணி யுருவா  உலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்”

நான் அவனை விரும்பி பித்து கொண்டு அலைவது சுற்றிலுமுள்ள அனைவருக்கும் (நால்  அயலார்) தெரிந்து விட்டது; தெரிந்தது மட்டுமல்ல அதைப் பேசிப்பேசி ஆர்வமிழக்கும் அளவுக்கு ஆகிவிட்டது( அறிந்து ஒழிந்தார்- அந்தப் பொண்ணு விஷயமா? நியூஸ் பழசு சார்!). தாமதிக்காமல்(பாணியாது) நீங்கள் ஏதாவது வைத்தியம் (பண்டுவம்-பண்டு) செய்து முன்பு போல என்னை மாற்ற நினைத்தால், என் மேல் ஆணையாகச் சொல்கிறேன், என்னைக் காக்க ஒரே வழி வாமனனாய் வந்து உலகளந்த அந்த மாயானைக் கண்டால்தான் என் தலை நிற்கும். ஆகவே அவனிருக்கும் ஆயர்பாடிக்கே என்னை அனுப்பி வையுங்கள். இனியும் ஊர்வாய்க்கு அஞ்சி வெட்கப்பட்டுக் கொண்டு இருப்பதால் எந்த காரியமும் நடக்கப்போவதில்லை. 

அனுப்புவதற்கு சற்றே தயங்கும் பெற்றோருக்கு அவள் அடுத்த பாடல் இன்னும் வலுவாக வருகிறது;

“தந்தையும், தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழி போயினள் என்னும் சொல்லு
வந்த பின்னை பழிகாப்பு அரிது;…
…நந்தகோபன் கடைத்தலைக்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்”

தாய், தந்தை, உற்றார் இருக்க தனியே கிளம்பிப் போனாள் என்ற பேச்சு வந்து விட்டால் அப்பழிச்சொல் நீங்குவது அரிது என்பதால் நீங்களே இரவோடு இரவாக ( ஊராருக்கு தெரியாமல்) என்னை நந்தகோபன் இல்லத்தின் வாயிலுக்கு கொண்டு விட்டு விடுங்கள் என்கிறாள். அவள் காதலைத் தடுக்க ஏக்கட்டுப்பாடுகளாலும் இயலாது. வேய் கொண்டு வேழத்திற்கு எதிர் நிற்பவர் எவர்? 

எல்லாவற்றுக்கும் மேலே திருமாலை வணங்கும் அனைவரும் அவனிடம் வேண்டுவது ஒன்றையே. அவன் திருவடிக்கீழ் வைகுண்டத்தில் ஒரு இடம். பிறப்பும், இறப்பும், கருமமும் இல்லாத ஆனந்தம் நிறைந்த இடம். ஜீவான்மா வைகுண்டத்தை அடைவதாலேயே பிறப்பு, இறப்பு எனும் பிறவிச்சுழலிலிருந்து விடுபடமுடியும் என்பது வைணவ சித்தாந்தம். வைணவ மரபில் சம்சார தசை, சம்சாராதீர்ண தசை, வைகுண்ட பிராப்திதசை-அதாவது உலகப் பற்றுகளால் பீடிக்கப்பட்டு உழலும் நிலை, பிறவிக் கடலை நீந்திக் கடந்து கரை ஏறும் நிலை, திருமாலால் வைகுண்டத்தில் ஜீவான்மாக்கள் அனுமதிக்கப்படும் நிலை ) என மூன்று நிலைகள் மனித உயிர்களுக்கு அமைந்திருக்கின்றன.  சம்சாரக்கடலை தாண்டிவிட்டால் முக்தியாகிய வைகுண்டப்பதவி உறுதியாகி விடுமா என்றால் இல்லை. வைகுண்டப் பிராப்தி என்பது திருமாலாகப் பார்த்து அருள்வது. ஆகவேதான் கோதையின் தந்தையான பெரியாழ்வார் “அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்” என கடலைக் கடந்த பின்னும் இளைத்து நின்று திருமாலிடம் ஒரு கை அசைவையாவது காட்டி அருள் எனக் கேட்கிறார். பிறவி குறித்து அஞ்சும் பக்தர்களில் தொண்டரடிப்பொடியாழ்வார் பிறவியை மறுப்பதற்கான  காரணங்களை தெளிவாகச் சொல்கிறார்

“வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினையாண்டு,
பேதைபா லகனதாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகருளானே”

சரி, உடல் நீங்கிய ஜீவான்மாவுக்கு வைகுண்டத்தில் இடம் தரப்படவில்லை என்றால் என்னவாகும்? ஜீவான்மா மறுபடி இவ்வுலகில் பிறவி எடுக்க நேரிடும். அதற்குத்தான் ஒவ்வொருவரும் அஞ்சி அவனிடம் இறைஞ்சுவது. வழக்கம் போலவே பேரரசியின் மிடுக்கும், மாளா பெருங்காதலும், அள்ளி அளிப்பதில் இணையற்றவளுமான கோதை திருமாலைக் கையாளும் விதம் இப்படியாக இருக்கிறது-

“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்;உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்”

திருமாலால் ஜீவான்மாவை அதிகபட்சம் என்ன செய்து விட முடியும்? பிறவியில் தள்ளலாம். அவ்வளவுதானே என்கிறாள் நாச்சியார். நீ ஏழு பிறவி என்ன, ஏழேழ் பிறவிகளாக 49 பிறவிகள் தந்தாலும் நான் உன்னையே உறவு (சரண்) எனக் கொண்டிருப்பேன்; உனக்கே அடிமை பூண்டிருப்பேன். அதை உன்னால் மாற்ற முடியாதில்லையா என்கிறாள் திருமாலிடம். அதே நேரம் பிறவிக்கு உரிய காமங்கள் உன்னை நினைப்பதில் இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதால் அவற்றை நீயே கவனித்துக் கொள் என பிறவி அளித்தவன் கையிலேயே பொறுப்பைக் கொடுத்தும் விடுகிறாள்.  ஆன்மாக்கள் அதிகம் அஞ்சுவதே பிறவிக்கு. ஆனால் அதற்கும் அஞ்சாமல் எல்லா பிறவிகளையும் தன் பெருங்காதலால் நிறைத்து விடத் துடிக்கும் கோதையை வாசித்துத் திளைப்பதே பேரனுபவம்.

பீடு மிக்க காதல் அவளுடையது. உலகெலாம் படைத்தான் மீது காதல் கொள்பவர் சராசரியாக இருக்க இயலுமா? அவனை அடைய நினைக்கையில் அவனுக்கு அருகமரும் அளவுக்கே தன்னையும் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? கோதை தனது தமிழால், கவிதையால் அவை வழியே வெளிப்படும் பெருங்காதலால் உயர்ந்த இடத்தை அடைகிறாள். பிற ஆழ்வார்கள் அனைவரும் திருமாலின் கோவிலில் தனியிடம் தந்து அமர்த்தப்பட்டிருக்க ஆண்டாள் மட்டுமே அவனுக்கு இணையாக அனைவரும் வந்து வணங்கும் பிராட்டியாக தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளுகிறாள். அவனுடன் இணையாக அமர்ந்து பல்லக்கில் ஏறி ஊர்வலம் வருகிறாள். அவன் பிரசாதத்துக்கு அனைவரும் காத்திருக்க, தானணிந்த மாலையை அவனுக்கு அணிவித்து மகிழ்கிறாள். பெருங்காதலைப் பெற்ற பேறே அவளுக்கு உரியது. அக்காதலைப் அனுபவிக்கும் பேறு பெற்ற திருமாலுக்கு அவள் அண்மையே வைகுண்டம்.     

ஆண்டாளின் சிறப்பை மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை 24ஆம் பாசுரத்தில் சொல்வதுதான் மிகப் பொருத்தமான வாழ்த்து ஆண்டாளுக்கு –

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து

*

கட்டுரையாளர் ஜா. ராஜகோபாலன்

கோதையின் பாசுரங்களை எவ்வாறு அணுகலாம்? பக்தி இலக்கியத்தில் என் வாசிப்புக்கு ஏற்ற வகையில் நான் பின்பற்றும் முறைமை இது – பக்தி இலக்கியத்தின் பாடல்களை ரசிப்பதற்கும், அனுபவிப்பதற்கும் மூவடுக்கு முறையை பின்பற்றலாம். சொல்லழகு, தருணங்களின் அழகு, தத்துவ அல்லது சித்தாந்தப் பின்புலம். மூன்றும் அடுக்கு என்பதால் மேல், கீழ் என தரவரிசைப்படுத்தப்பட வேண்டியதில்லை. ஒரு புரிதலுக்கான பகுப்பு எனக் கொள்ளலாம். ஒவ்வொரு விதத்திலும் கோதை நாச்சியார் காட்டும் உச்சங்களைப் பார்க்கலாம்.

*

ஆண்டாள்: தமிழ்விக்கி

ஜா. ராஜகோபாலன்: தமிழ்விக்கி

4 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *