தன் நிழலை இழுத்துச் செல்பவள் – சில்வியா ப்ளாத்

சில்வியா பிளாத் (புகைப்படம்: McKenna)

“நான் வெள்ளியாக, துல்லியமாக, முன்முடிவுகளற்று இருக்கிறேன்.
விருப்பு வெறுப்புகளின் பனி மூடாது,
பார்பனவற்றையெல்லாம் அப்படியே சடுதியில் முழுங்குகிறேன்.
நான் கொடூரமானவளல்ல உண்மையானவள்-
நாற்கோணமான ஒரு சிறு கடவுளின் கண்…”

அவரது வாழ்வை விட இறப்பால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கொடூரமான முறையினால் அறியப்பட்ட சில்வியா ப்ளாத்தின் உலகம் இருண்ட தனிமை, பெருத்த ஏமாற்றம், மறுக்கப்பட்ட நியாயமான அங்கீகாரம் அதனால் ஏற்பட்ட சுய சந்தேகம், அவரை விட்டு அகலாது தொடர்ந்த தோல்வி என்ற மன உளைச்சல் தரும் புறவயமான காரணிகள் கொண்டது . கூடுதலாக கடுமையான, தயவு தாட்சண்யமற்ற சுய விமர்சனம், அழுத்தத்தில் சிதைவுற்ற மிக மெல்லிய மனமும் அகவயமாக அவருக்கு பெரும் வாதையளித்தன.ஆனால் இந்த சிக்கல்கள் எதையும் பொருட்படுத்தாமல், அவரது படைப்புகளை மட்டும் தனியாக நோக்கினால், ஆங்கில கவிதை புலத்தின் பாதையை மாற்றிய, வேறோர் உயரிய திரனளவை நிறுவ காரணமாக இருந்தவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த அபூர்வ, அதீத படைப்பூக்கத் திறனாலேயே அவர் இன்றும் படித்துத் தீராத கவிஞராகவும், பேசித் தீராத எழுத்தாளராகவும் எழுத்துலகில் இருந்து வருகிறார். இன்று அவரை அங்கீகரித்து, அவரது கூறுகளை தங்களது படைப்பில் இனங்கண்டு எடுத்தியம்புவதாகட்டும் , அல்லது எதிர்மறையாக அந்த தீவிர இருண்மைகள் காணக்கிடைக்காத நவீனமானது தங்கள் எழுத்து என்று அவரை மறுதலிப்பதாகட்டும், இருவிடங்களிலுமே சில்வியா ஒரு நியதியை நிர்ணயித்து நிரந்தரமானவராக தன்னை இருத்திக் கொண்டுள்ளார்.

ஆரம்பகால கவிதைகள் முதல், இறப்பதற்கு முன், வாழ்நாளின் இறுதி எட்டு மாதங்களில் எழுதப்பட்ட படைப்புகள் வரை , சில்வியாவின் தனித்துவ பாணி என்று இன்று கொண்டாடப்படுபவை எல்லாமுமே அவரது வாழ்வின் சூழலையும், மனச்சிதைவையும்,தற்கொலையும் சேர்த்தே கருத்தில் கொண்டு பேசப்படுவது சில்வியா என்ற அதிசய மனுஷியின் ஒப்பற்ற கவிமனதிற்கு தகுந்த அங்கீகாரம் அளிக்க தவறுவதாகவே தோன்றுகிறது . படைப்பின் பேசுபொருட்கள், தீர்மானங்கள், முடிவுகள், பார்வைகள், மனித மதிப்பீடுகள் இவையெல்லாம் வேண்டுமானால் வாழ்வோடு தொடர்புடையவையாக இருக்கலாமேயன்றி அவரது படிமங்கள் உருவகங்கள், மற்றும் அதுவரையில் காணக்கிடைக்காத கவித்துவம் (கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாவல் எல்லாவற்றிலும் தாராளமாக விரவிக் கிடக்கும்) எல்லாமும் மொழியின் பால் அவர் கொண்டிருந்த அசாதாரண திரத்தை எடுத்துக்காட்டுகின்றன.

அவரது கவிதைகளின் உள்ளீடுகளில் முக்கியமான தன்மையாக ஒப்புதல் வாக்குமூலம் (confessional) இருக்கிறது. சில்வியா என்ற பெண்ணின் குரலும் அவரது படைப்பில் தெரியும் மொத்த ஆளுமையின் குரலும் முற்றிலும் வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்வது அல்லது ஒன்றிலிருந்து ஒன்று, கொண்டும் கொடுத்தும் உறவாடியவை என்கிற நோக்கத்தில் அவரது படைப்புலகத்தை அனுகுவது முற்றிலும் தவறான பார்வையாகும். எழுத்தில் காணக்கிடைக்கும் ஆளுமையின் குரல் கவிதை என்ற வடிவத்தை, எழுத்தின் நுட்பத்தை, மொழியின் வார்த்தைகளின் ரகசியங்களை அறிந்த, வரிசைகளை கலைத்து கலைத்து , உடைத்து உடைத்து ஒன்று சேர்க்கும் முறைகளை, தன்னளவில் சோதனை செய்து அறிந்த, தெளிவுற கற்ற, ஒரு தீர்கமான குரல். சில்வியா என்ற பெண்ணிற்கு இருந்த தயக்கமும், சந்தேகமும், தாழ்வுணர்ச்சிகளும், தடுமாற்றங்களும் எல்லாவற்றையும் களைந்து அதற்குபதிலாக நிமிர்வையும் நம்பிக்கையையும் நிறைத்துக் கொண்ட குரல். எந்தப் படைப்பிலும் எந்தத் தருவாயிலும் ஒரு அபலைப் பெண்ணின் குரலாக, தன் புராணமாக, சுயநலமாக தன் மீது மட்டுமே கவனம் கொண்ட சுயமோகம் நிறைந்த கவிதையின் குரலாக ஒருபோதும் ஒலிப்பதில்லை.

சில்வியா 1932 அக்டோபர் மாதம் 27 இல் மாஸசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகரில் பிறந்தவர். தாய் அவ்ரீலியா ப்ளாத் (1906–1994) ஐரோப்பாவின் ஆஸ்ட்ரிய நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். அப்பா ஓட்டோ ப்ளாத்(1885–1940) ஜர்மானியர். பூச்சியியல் வல்லுனராக பாஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பம்பில் பீஸ் ( பெரிய கருவண்டுகள்) என்ற புத்தகத்தை எழுதியவர். சில்வியாவின் எட்டாவது வயதில் அவரது தந்தை நோய்வாயப்பட்டு இறக்கிறார்.

“அப்பா உங்களை நான் கொன்றிருக்க வேண்டும்
அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டீர்கள்….
உங்கள் ஜர்மானிய மொழியில் உங்களுடன்
பேசமிடியவில்லை.
என் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
முள் வேலியல் அமைந்த பொரியில் மாட்டிக் கொண்டது …
தடுமாறினேன். பேசமுடியவில்லை
எல்லா ஜர்மானியர்களையும் உங்களைப் போல
பாவித்தேன்.
அந்த மொழியை ஆபாசமானதாக்க் கருதினேன்.”

அவரது ‘அப்பா’ என்ற கவிதையில் தனது தந்தையைப் பற்றி எழுதுகிறார். அன்பை பகிர முடியாத கண்டிப்பான,தண்டனைகளை தவறாது தரும் தன் தந்தையைப் பற்றி கூறும் போது நாட்ஸியான ஹிட்லருடன் ஒப்பிடுகிறார்.

‘லாசரஸ் அம்மையார்’ என்ற கவிதையிலும் தந்தையைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன

“நான் உங்௧ள் வாழ்வின் ஆகச் சிறந்த படைப்பு
நீங்கள் சமைத்த மகத்தான இசைக்கோர்வை.
கூச்சலில் கரைந்து போகும்
நீங்கள் பிரசவித்த பொன்சிசு”

கருவண்டுகள் தேநீக்களைப் பற்றியும் கவிதைகள் உண்டு . ‘தேநீ வளர்க்கும் பெட்டியின் வருகை’ என்ற கவிதையில் அந்த பெட்டி சவப் பெட்டியைப் போல் உள்ளதாக எழுதுகிறார்.

“நாற்காலியைப் போல சதுரமாக
தூக்குவதற்கு கனமானதாக ..
உள்ளே இத்தனை இரைச்சல் இல்லாவிட்டால் இதை
மீச்சிறிய மனிதனின் சவப் பெட்டி என்றோ
சதுரமான குழந்தையின் சவப்பெட்டி என்றோ
சொல்லலாம்…
கதவுகளோ வெளியேரும் வழிகளோ இல்லை
ஒரு கம்பிச் சட்டம் மட்டுமே
நாளை அன்பான கடவுளாக அவற்றை விடுவிப்பேன்
இந்தப் பெட்டி தாற்காலிகமானது”

1935 யில் சில்வியாவின் தம்பி வாரன் பிறக்கிறான். 1936யில் மாஸாசூசெட்ஸ் மாகாணத்திலேயே வின்த்ராப் என்ற இடத்திற்கு அவரது தாய் அவ்ரீலியாவின் பெற்றொர் வசிக்கும் இடத்திற்கு பக்கத்தில் குடியேறுகிறார்கள்.அங்குதான் எட்டு வயது சில்வியவின் முதல் கவிதை பாஸ்டன் ஹெரால்ட் பத்திரிகையின் குழந்தைகள் பிரிவில் பிரசுரமாகிறது. தொடர்ந்து பல குழந்தைகள் இதழ்களில் அவரது படைப்புகள் பிரசுரமாகின்றன. ஓவியத்திலும் தேர்ந்த கலைஞராக பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

1940 நவம்பர் 5யில் ஒட்டோ ப்ளாத் சிகிச்சை அளிக்கப்படாத சர்க்கரை நோயால் கால்கள் அழுகிய நிலையில் அதை நீக்க நடந்த அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்ட சிக்கலில் உயிரிழக்கிறார். அந்த சிறு வயதிலேயே தந்தையின் இழப்பிற்கு பிறகு யுனிட்டேரியனாக வளர்க்கப்பட்ட சில்வியா கடவுள் நம்பிக்கையற்றவராகிறார்.

1950 வெலெஸ்லி பள்ளியில் தேர்ந்து பட்டம் பெறுகிறார். அந்நேரம் தி கிரிஸ்டியன் ஸயன்ஸ் மானிடர் என்ற இதழில் அவரது கவிதை பிரசுரமாகிறது.

1950 ஸ்மித் காலேஜில் லிபரல் ஆர்ட்ஸ் பயில்கிறார். கல்லூரி இதழான ஸ்மித் ரிவ்யூவின் ஆசிரியராக பணியாற்றுகிறார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பிரபல்ல பத்திரிகையான மாத்ம்வாசில்லி்ல் கௌரவ ஆசிரியர் பதவி அவரை நாடி வருகிறது. அந்நேரம் ஒரு மாதம் ந்யு யார்க் நகரில் பணியாற்றுகிறார்.

அவரது பிரசுரமான ஒரே நாவல் ‘பெல் ஜார்’ இல் நியு யார்க் அனுபவங்களை பகடியாக எழுதியுள்ளார். அந்த பெண்கள் பத்திரிகையில் வேலை செய்தது சில்வியாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததாக தனது டயரியில் குறிப்பிடுகிறார். (தனது பதினொராவது வயதிலருந்து தொடர்ந்து தன்குறிப்புகளை எழுதிவந்துள்ளார்)

பெல் ஜார் லண்டனில் 1963 ஜனவரி மாதம் விக்டோரிய லூகஸ் என்ற புனைப் பெயரில் பிரசுரமானது — சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு .

அதில் இடம்பெற்றிருந்த பாத்திரங்களில் பலர் தங்களை இனங்கண்டு கொள்ளக் கூடும் என்ற அச்சத்தில் அவர் புனைப் பெயரை எடுத்துக் கொண்டார். எனினும் அது பெரிய அளவில் பேசப்படும் என்பது பற்றிய எந்த சந்தேகமும் சில்வியாவிற்கு இல்லை. இதை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றும் அதன் உரிமைத் தொகையில் தன் பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் அதை பிரசுரித்தார். எனினும் அமெரிக்காவில் இதை பிரசுரிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை .

“இங்கிருந்து வெளியேறும் நேரம் என் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைக்கப் பெறும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தேன். என் மனதின் சிக்கல்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு சொல்லுவது தானே இங்குள்ள மருத்துவர்களின் கடமை. ஆனால் இப்போது எனக்கு தெரிவதெல்லாம் கேள்விக் குறிகள் மட்டுமே.” எஸ்தர் நாவலின் இறுதியில் சொல்கிறார்.

ஐம்பதுகளின் சமூக அரசியலை பகடி செய்த, பெண் உரிமை பேசிய எஸ்தர் க்ரீன்வுட் என்ற முக்கிய காதாபாத்திரம் சில்வியாவின் சாயலி்ல் இருப்பதை மறுக்கமுடியாது. மரத்தட்டுகளில் வைக்கப்படும் கேக் பேஸ்டிரி போன்ற இனிப்பு வகைகளை பாதுகாத்து அதே நேரம் காட்சிபடுத்தும் வண்ணம், ஆலய மணியின் வடிவத்தை ஒத்த தடிமனான கண்ணாடி மூடிகள் பெல் ஜார் என்று அழைக்கப்பட்டன. அதனுள் பாதுகாப்பாக இருந்து கொண்டு வெளி உலகை ஒரு பார்வையாளனைப் போல பங்கேற்காமல் கண்டு கழிக்க முடியும் என்று தன் வாழ்வை ஒட்டிய படிமத்தை எடுத்துறைக்க அந்த பெயரை பயண்படுத்தியுள்ளார். வேறொரு கோணத்தில் சுத்தமான வெளிகாற்று தரும் ஆசுவாசமின்றி தன் இனிப்பான ஆனால் திகட்டும் வாசத்திலேயே கிடந்து புழுங்கிப் புழுங்கிப் தவிக்கும் தன் அகவுணர்வையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது. பெண்ணாக இந்தக் குமைச்சல் எஸ்தரை கீழ் நோக்கி இழுக்கும் சுழலாக மனச்சிதைவிற்கு இட்டுச் செல்கிறது. தற்கொலை முயற்சியில் தோல்வியுற்று மனநல சிகிச்சை பெறுகிறார். இருந்தாலும் அவரை விடாது பின்தொடரும் இந்த பொல்லாப்பித்து எந்தேரமும் தன்னை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் இந்த புதனம் முடிகிறது .

எஸ்தரின் குணவார்ப்பும், புத்திசாலித்தனமான கருத்துகளும் மனவோட்டமும் நம் வாசிப்பனுவத்தை வேறு தளத்திற்கு இட்டு செல்கின்றன. அண்களைப் பற்றியும், பெண்களைப்பற்றயும் அவர்கள் இடையில் உள்ள உறவைப் பற்றியும் எந்நாளைக்கும் பொருத்தமான விவரணைகளை எஸ்தரின் மூலமாக உலகிற்கு அளித்துச் செல்கிறார் சில்வியா. அது மட்டுமல்லாது பெருநகரத்தின் தனிமையும், அந்நியபடுத்துதலையும் அது எப்படி மனச்சிதைவிற்கு கொண்டு விடுகிறது என்பதையும் மிக உணர்வுப்பூர்வமாக எடுத்துறைக்கிறார். பெண்ணிற்காக தன் தேடலை முன்னெடுக்க இடம் கொடுக்காமல் சமூக பண்பாட்டு அரசியல், அவளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை எஸ்தர் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார்.

சில்வியா ப்ளாத் & டெட் ஹ்யூக்ஸ் (புகைப்படம்: Hary Odgen)

புனைப் பெயரில் இங்கிலாந்தில் வெளிவந்த போது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் அவரது இறப்பிற்கு பின் டெட் ஹ்யூக்ஸால் 1966 இல் இங்கிலாந்திலும் , 1971 யில் அமெரிக்காவில் மறு பிரசுரம் செய்யப்பட்டது . அவரது அம்மா அவ்ரீலியா அமெரிக்காவில் வெளியடுவதை சில்வியா விரும்பியிருக்க மாட்டார் என்று இதை தடுக்க முயன்றார். ஆனால் டெட்டிற்கு இங்கிலாந்தில் வீடு வாங்குவதற்கு பணம் தேவைபட்டது. மேலும் சில்வியாவின் உடைமைகள் முழுவதும் கணவன் என்ற உரிமையில் டெட் ஹ்யூக்ஸிடம் தான் வழங்கப்பட்டது . அவரது இறப்பிற்கு முன்னதான டயரி குறிப்புகள் மற்றும் சில கவிதைகள் கதைகளை தீயில் இட்டு கொளுத்தியதாக ( அவை வெளி வந்தால் பிள்ளைகள் சங்கட

படுவார்கள் மேலும் அவை ஒரு பெண் எழுதக்கூடாதவைகள் அதனால் சில்வியாவின் மரியாதையை காப்பாற்றுவதற்காக அவற்றை அழித்ததாக கூறியுள்ளார்) டெட் பல இடங்களில் கூறியுள்ளார்.

வெல்ஷ் மொழி கவிஞரான டிலன் தாமஸ் மேல் பெருமதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார் சில்வியா . மாத்ம்வாசிலில் பணியாற்றிய நேரம் அவரை சந்திக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிடுகிறார். அவரது டயரி குறிப்புகளில் “என் வாழ்வினும் பெரிதான கவிஞர் டிலன்” என்று குறிப்பிடுகிறார். டிலன் தாமஸின்

‘எளிதாய் இந்த நல்லிரவிற்குள் சென்றுவிடாதீர்கள்
மறைந்துகொண்டிருக்கும் ஒளியை எதிர்த்து ஆவேசங்கொண்டு
போராடுங்கள்’

இறக்கும் தருவாயில் இருக்கும் தனது தந்தையிடம் மகன் சொல்வதாக அமைந்த இக்கவிதையும் குறிப்பிட்டுள்ளார்.

டிலன் தாமஸை சந்திக்க முடியாத ஏமாற்றமும், ஃப்ராங்க் ஓ கானர் என்ற கவிஞரின் பயிற்சிப் பட்டறையில் (ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில்) அவருக்கு இடம் கிடைக்காத ஏமாற்றமும் சேர்ந்து

“நான் என் கால்களில் கத்தியால் ஆழமாக கிழித்துக் கொண்டேன்… தற்கொலை செய்து கொள்ளும் மன திடம் உள்ளதா என்று பார்ப்பதற்கு. சுழலும் சுகமான இருட்டினுள் நிம்மதியாக அமிழ்ந்தேன். உண்மையாக அந்த இருட்டு நிரந்தரமானதென்று நம்பினேன்”

என்று தனது டயரியில் எழுதியுள்ளார்.

“ஒரு கேவல் என்னுள் குடியிருக்கிறது
இரவானால் இறக்கைகளை அடித்துக் கொண்டு வெளியில்
பறந்துச் செல்கிறது
காதலிப்பதற்கு ஏதாவது இருக்கிறதாவென
அதன் கொக்கிகளினால் தேடியலைகிறது
என்னுள் உறங்கும் இக்கருமையைக் கண்டு
நான் பயந்து நடுங்குகிறேன்;
நாளெல்லாம் அதன் மென் இறகுகளின்
படபடப்பையும்
விரோத்த்தையும் எச்சரிக்கையுடன்
கவனித்துக் கொண்டிருக்கிறேன்”

அடுத்த ஆறு மாதங்கள் மனநல விடுதியில் கரண்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாங்கமுடியாத வலியும் வாதையும் பயமும் நிரம்பிய அந்நாட்களைப் பற்றி மிக விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

(அந்நேரத்தில் நிறைய ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிபணிய வைக்க மனநல விடுதியின் சிகிச்சை முறைகளை சொல்லி பயங்காட்டியுள்ளனர். வேறு பெண்களை காதலித்த ஆண்கள்,தங்கள் மனைவிகளை ஹிஸ்டீரியா பீடிக்கப்பட்டவர்கள் என்று பொய் சொல்லி இவ்விடுதிகளில் தள்ளி உள்ளனர். ஆண்கள் நிறம்பிய இச்சூழலில் கணவனின் வார்த்தை ஒன்றே போதுமானதாக இருந்ததுள்ளது. இவ்விடுதிகளில் ஆண்கள் எவரையும் காணமுடியாது , பெண்களாலேயே நிறைந்திருந்தது. ஹிஸ்டீரியா என்ற நோய் பெண்களை மட்டுமே தாக்கும் என்றும் நம்பப்பட்டது. பின்நாட்களில் இந்த இ.சி.டி சிகிச்சை முறை முற்றிலும் அறிவியல்பூர்மற்றது என்று நிரூபிக்கப்பட்டு கைவிடப்பட்டது )

சில்வியா ப்ளாத் & டெட் ஹ்யூக்ஸ்

சில்வியா நோயிலிருந்து தற்காலிகமாக மீண்டு ஜனவரி 1955 ஆம் ஆண்டு கல்லூரி திரும்புகிறார்.முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை

“மாயக் கண்ணாடி: டஸ்டாவேய்ஸ்கியின் இரு புதினங்களில் உள்ள இரட்டைகளைப் பற்றிய ஆய்வு” என்ற தலைப்பில் சமர்பிக்கிறார். சம்மா கம் லாட் என்ற முதன்மையான, இருப்பதிலேயே உயர்ந்த நிலையில் தேர்ந்து ,இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பலகலைகழகத்தில் முழு உதவித்தொகை பெற்ற மாணவியாக (இரண்டு மாணவிகள் மட்டுமே உள்ள வகுப்பு ) சேர்கிறார். விடுமுறை நாட்களில் ஐரோப்பாவை சுற்றி பயணம் செய்கிறார்.

1956 பிப்ரவரி மாதம் கவிஞர் டெட் ஹ்யூக்ஸை சந்திக்கிறார்.

“சில இதழ்களில் டெட்டின் கவிதைகளை படித்திருக்கிறேன்; பிடித்திருந்தது அவரை சந்திக்க விரும்பினேன். ஒரு சிறிய விழாவில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தொடர்ந்து பல முறை சந்தித்தோம். டெட் கேம்ப்ரிஜ் பல்கலைக்கு திரும்பினார். ஒருவருக்கு ஒருவர் நிறைய கவிதைகளை பரிமாறிக் கொண்டோம்… சட்டென்று திருமணம் செய்து கொண்டோம். இருவரும் அவ்வளவு எழுதினோம் … இது இப்படியே தொடர வேண்டும்….

டெட் ஒரு பாடகன்,கதைசொல்லி,சிங்கம்,உலகம் சுற்றுபவன், கடவுளின் இடிமுழக்கம் போல குரல் கொண்டவன்”

ஜீன் 16, 1956 லண்டனின் ஸேன்ட ஜார்ஜ் தி மார்ட்யர் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். பாரீஸிலும் ஸ்பேயினிலும் தேன்நிலவு கொண்டாடினர்.

“உன் தெளிவான ஒளி உமிழும் கண்கள் போன்ற
அழகான ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை
அதை நான் காதலால் வண்ணங்களால் நிரப்ப வேண்டும்”

இருவரும் கல்லூரிக்கு திரும்பினர். இந்த சமயத்தில் டெட்டிற்கு விய்ஜா பலகையை வைத்து ஆரூடம் பார்ப்பதிலும், சோதிடத்திலும் ஆர்வம் வந்தது. டெட் அதை சில நாட்கள் பயின்று வந்தார். தன் வாழ்வின் முடிவுகளை அதன் ஆரூடத்தின் பெயரில் எடுக்கத் தொடங்கினார். சில்வியாவும் கணவனுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று அதில் ஆர்வம் கொள்ள முயல்கிறார்.

1957 யில் இருவரும் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர். தான் பயின்ற ஸ்மித் கல்லூரியிலேயே பணியில் அமர்ந்தார் சில்வியா. ஆசிரியப் பணியுடன் சேர்ந்து எழுதுவதையும் தொடர்ந்து வந்தார்..1958 பாஸ்டன் நகருக்கு மறுபடி இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் வரவேற்பாளாராக பணியில் சேர்ந்தார். இந்த இட மாற்றங்கள் எல்லாமுமே கணவன் டெட் ஹ்யூக்ஸின் வேலையின் நிமித்தமாக நடந்தவை.

சில்வியா எங்குமே தனக்கு வேண்டியதை அழுத்தமாக கூறி பெற முடியாதவராக இருந்துள்ளார் . கணவனுக்காக ஒவ்வொரு முறையும் தன் வாழ்வை , வேலையை மாற்றியமைக்க தயங்கவில்லை. ஒவ்வொரு முறையும் சில்வியா முதலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயதிற்கு உட்பட்டார் .மேலும் ஒவ்வொரு இடப் பெயர்வும் தாங்கமுடியாத மன வாதையை அளித்துள்ளது . ஏற்கனவே மன சிக்கலில் உள்ளவர்களுக்கு ஒரு நிலையான இடமும் வேலையும் மிகவும் இன்றியமையாததாகும். ஒவ்வொரு முறையும் புது சூழலும் மனிதர்களும் , தனது தகுதிக்கு சிறிதும் பொருந்தாத வேலையும் அவரது மன நோய் மேலும் தீவிரமடைய காரணமாக இருந்தன. ஆனால் விடாது ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே மீட்டெடுக்கவும் பெரு முயற்சிகள் மேற்கொள்கிறார். இங்கு ராபர்ட் லோவெல் என்ற பின்நாளில் புலிட்சர் பரிசு வென்ற அமெரிக்க கவிஞரின் வகுப்புகளில் சேர்ந்து தன் கவிமனதையும் ,இலக்கியச் செயல்பாட்டையும் தக்க வைத்துக் கொள்கிறார்.

உணர்வுப் பூர்வமான, சமகாலத்தைப் பேசிய லோவெல் -(confessional poetry) யின் தந்தை) கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

“இந்த வாரம் எங்கள் வீடு விலைபேசப்பட்டது
அந்நியர்களின் மத்தியில் விழித்தெழுந்தேன்;
நான் ஒரு அறைக்குள் சென்றால் அது கூச்சத்தால்
நெழிகிறது, சட்டென்று போய் வேறொர் அறைக்குப்
பின்னால் ஒளிந்து கொள்கிறது”

-ராபர்ட் லோவெல்.

இந்தச் செஞ்சுவர் வலியில் ஓயாமல் நடுங்குகிறது
சிவந்த கையொன்று முட்டியதால், திறந்து திறந்து
மூடுகிறது.

-சில்வியா ப்ளாத்

இந்த வகுப்புகளில் சில்வியா ஆன் செக்ஸ்டன் என்ற கவிஞரையும் சந்திக்கிறார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். ஆனும் பின்னால் புலிட்சர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது . சில்வியா உடன் சேர்த்து லோவொல், ஆன் மூவருமே இந்த வகைமை (confessional) கவிதைகளின் பிதாமகர்களாக கருதப்படுகிறார்கள்.

சில்வியா ப்ளாத்

லோவெலும் ஆனும் சில்வியாவை எழுத தூண்டுகிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள். சில்வியாவால் இவர்களிடன் மனம் திறந்து பேச முடிகிறது . தன்னுடைய மனச்சிக்கல்களை ப் பற்றி வெளிப்படையாக உரையாட முடிகிறது . முன்முடிவுகள் ஏதும் இல்லாமல் சில்வியாவை, தன் மனதிற்கு பிடித்தமான செயல்களைச் செய்ய, தன் இயல்பாக எழுத உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த காலகட்டத்திலும்,இதைத் தொடர்ந்தும் சில்வியாவின் கவிதைகள் வேறு வண்ணம் பூசிக் கொள்கின்றன. அவரது குரல் தயக்கமின்றி ஓங்கி ஒலிக்கிறது. அதுவரை பேசாத தனது அகமனச் சிடுக்குகளை, வெளிப்படையாக கவிதைக்குள் வைக்கிறார்.

“நான் காகிதத்தாலான லாந்தர் விளக்கு — என் தலை
ஜப்பானிய தாளால் செய்த நிலவு
என் தோல் அடித்துத் தட்டையாக்கப்பட்ட பொன்
அதி மிருதுவானது, விலைமதிப்பற்றது”

ஆண் கவிஞர்களின் அடியொட்டியே பெண்களும் எழுத வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை என்றும், சில்வியாவின் பெண்ணிய பார்வை கொண்டு, ஆன்மாவிற்கு உண்மையாக எழுதுவதே சிறந்தது என்றும், அது சிலருக்கு உவப்பானதாக இல்லையென்றாலும் அதைப் பற்றிய கவலைக் கொள்ள அவசியமில்லை என்றும் ஆன் தான் சில்வியாவிற்கு நம்பிக்கை தருகிறார். கவிதை புலத்தின் வேறு வேறு தளங்களில் உலவ தைரியமூட்டுகிறார் ஆன். சில்வியாவின் கவிதைகளில் ஒலிக்கும் ஆளுமை மிகுந்த குரலை, கண்டடைய தனக்கு உதவியவர் ஆன்தான் என்று தனது டயரியில் சொல்லியிருக்கிறார். தான் ஒரு கவிஞர் என்றும் எழுத்தாளர் என்றும் உணரத்தொடங்கியதே ஆனை சந்தித்த பின்னர்தான் என்றும் சொல்கிறார்.

“நான் செங்குத்தானவள்
ஆனாலும் கிடைமட்டமாக இருப்பதையே விரும்புகிறேன்

மீச்சிறு வெளிச்சம் கொண்ட நட்சத்திரங்கள்
நிறைந்த இவ்விரவில்
மரங்களும் பூக்களும் தங்கள்
குளுமையான சுகந்தத்தை
சிதறுகின்றன

இப்படிப் படுத்திருப்பதே எனதியல்பாக இருக்கிறது
வானமும் நானும் இயல்பாக உரையாடுகிறோம்

மரங்கள் எனை தொடத் தோதாக
பூக்கள் என்னுடன் பேச ஏதுவாக

இவர்கள் இருவர் தந்த ஊக்கத்தால் தனது கவி பயணத்தில் பல சோதணை முயற்சிகளை செய்ததாகவும், தன் பார்வையும் ,தனது எழுத்தின் தன்மையும் மாறியதாக குறிப்பிடுகிறார். எனினும் இது வெகு நாட்கள் நீடிக்கவில்லை.

மறுபடியும் இடப்பெயர்வு செய்யவேண்டி வருகிறது . சில்வியாவும் டெட்டும் கானடா முழுவதும் ஊரூராக மாறி வசிக்கிறார்கள். தனது மனச் சிக்கலுக்கான சகிச்சையை மறுபடி தொடங்குகிறார்.ஆனால் இந்த தொடர் இடப் பெயர்வுதான் தன்னை தனக்கே அறிமுகப்படுத்தியதாகவும் ஒரு கட்டத்தில் எழுதுகிறார் சில்வியா.

“எனக்கான பிரத்யேகமான பைத்தியக்காரத்தனத்தை, பித்தை, தனித்துவத்தை வெட்கமின்றி ஏற்கவும், பிரகடனபடுத்தவும் கற்றுத் தந்த வருடங்கள்”

1959 யில் லண்டனுக்கு திரும்புகிறார்கள் .1960 ஏப்ரல் மாதம், முதல் மகள் ஃப்ரீடா பிறக்கிறார். அதே வருடம் அக்டோபரில் தனது முதல் கவிதைத் தொகுப்பான – The Colossus-யை பிரசுரிக்கிறார் சல்வியா

1961 ஆம் ஆண்டு இரண்டாம் முறை உண்டாகி அது கலைந்துவிடுகிறது . தனது மனநல மருத்துவருக்கு எழுதிய கடித்த்தில் கணவன் டெட் ஹ்யூக்ஸ் தன்னை இரு தினங்களுக்கு முன் அடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“உங்களை பார்க்கப் பார்க்க அயர்ச்சியாக உள்ளது
சுருக்கங்களுடன் தெளிந்த சிவப்பில்
உதடுகளைப் போல அசைகிறீர்கள்
இப்போது ரத்தம் வடியும் உதடுகள்
ரத்தம் படிந்த பாவாடைகள்!

அதே வருட ஆகஸ்ட் மாத்த்தில் தன்னுடைய நாவலான பெல் ஜாரை எழுதி முடித்துவிட்டார். லண்டனை விட்டு சிறு நகரமான டாய்டனில் குடி புகுகிறார்கள்.இரண்டாவது மகன் நிக்கலஸ் 1962 ஜனவரியில் பிறக்கிறான். லண்டனுக்கு திரும்பிய காலம் முதலே அவரது கணவன் டெட் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இது நன்றாக அறிந்திருந்தும் சில்வியா, டெட் திருந்தி தன்னிடன் வருவார் என்று காதலோடு பொருமையாக காத்திருக்கிறார். ஆனால் வன்முறையும், விலகலும், அவமரியாதையும் வேறு பெண்களுடன் தொடர்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது .ஜூன் 1962 இல் ஒரு சிறிய கார் விபத்தில் காயமடைகிறார் சில்வியா. இதை தனது டயரியில் தனது பல தற்கொலை முயற்ச்சிகளில் ஒன்றென குறிப்பிடுகிறார்.

சில்வியா ப்ளாத்

பல பெண்களுடன் தொடர்பென்பது ஆசிய வீவில் என்ற ஒரு பெண்ணுடன் காதலாக மாறுகிறது. 1962 செப்டெம்பரில் டெட் ஹ்யூக்ஸூம் சில்வியாவும் விவாகரத்து செய்துகொள்கிறார்கள்.( சட்டபூர்வமாக இல்லாமல் ,தங்களுக்குள் எழுதப்படாத உடன்படிக்கையாக)

அக்டோபர் மாதம் தொடங்கி தனது இறப்பு வரைக்கும் கவிதைப் பிசாசால் ஆட்கொண்டது போல கவிதைகளை எழுதி குவிக்கிறார். அவர் இறப்பிற்கு பின் வெளியடப்பட்ட ‘ஏரியல்’ என்ற தொகுப்பின் பொரும்பான்மையான கவிதைகள் இந்த காலகட்டத்தில் எழுதியவையே.

“இரவெல்லாம் இப்படியே நான்கு கால் பாய்ச்சலில் ஓடுவேன்
யோசனையற்று வேகமாக
உன் தலை கல்லாகும் வரை
உன் தலையணை சிறு மைதானமாகும் வரை
குளம்படிகள் உன்னுள் திரும்பத் திரும்ப எதிரொலிக்க”

1962 -1963 இன் கூதிர் காலம் மிக கடுமையானதாக இருந்தது. இங்கிலாந்தின் 100 வருடத்தில் அப்படி ஒரு குளிரை பார்த்ததில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இரண்டு வயதும் ஒன்பது மாதமும் ஆன, அடிக்கடி உடல்நலம் குன்றி அழுதுக் கொண்டும் இறுமிக் கொண்டும் இருக்கும் இரண்டு சிறு குழந்தைகளுடன், தண்ணீர் குழாயில் கூட நீர் வராமல் உரைந்து போயிருந்த கடும் குளிரில், தொலைபேசி வசதியில்லாத வீட்டில் , அமெரிக்காவிற்கு அம்மா வீட்டிற்கு திரும்பிச் செல்ல பொருளாதார வசதியன்றி , தன் குழந்தைகள் பராமரிப்பிற்கு கூட பணம் தராமல் காதலியுடன் உல்லாசமாக பக்கத்தில் தெருவிலேயே வசிக்கும் டெட் ஹ்யூக்ஸை பற்றிய மன உளைச்சலுடன் ,தனது மனச்சிதைவிற்கும் மருத்துவம் பார்க்க இயலாத சூழலில் சில்வியா உலகின் கவிதைப் போக்கையே மடைமாற்றும் , காலத்திற்கும் நிற்கும் மிக உன்னதமான கவிதைகளை தட்டச்சுசெய்துகொண்டிருந்தார்..

“இறப்பது ஒரு கலை, நான் அதை ஆகச்சிறந்த முறையில் செய்பவள்”

1963 ஜனவரியில் தன்னுடைய மருத்துவரிடம் பேசியுள்ளார். கடந்து எட்டு மாதங்களாக உணரும் கடுமையான மன உளைச்சலைப் பற்றி கூறியுள்ளார். தூக்கமின்னையாலும் பீடிக்கப்பட்டுள்ளார். தூக்க மாத்திரைகள் எடுத்தும் எந்த பயணும் இல்லாது போய் உள்ளது.10 கிலோ இடை குறைந்து காணப்பட்டுள்ளார். மருத்துவர் சில்வியாவின் தோழரும் கூட அதனால் தினமும் அவரைச் சென்று பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். ஹ்யூக்ஸ் அந்த மருத்துவரின் தப்பான சிகிச்சையே சில்வியாவின் இறப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எது எப்படியோ ஃபெப்ரவரி 11 1963 காலை ஒன்பது மணிக்கு அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது சில்வியா அடுப்பினுள் தலை வைத்த நிலையில் இறந்து கிடந்தார். அடுப்பின் வாயூ அடுத்த அறைக்கு போகாதவாறு துவாலைகள் டேப்புகள் கொண்டு இண்டு இடுக்குகளை அடைத்துள்ளார். அவருக்கு அப்போது 30 வயது .

(ஆறு வருடங்கள் கழித்து ஹ்யூக்ஸின் காதலி ஆசிய வீவிலும் இதே போல அடுப்பை திறந்து விட்டு விஷ வாயுவினால் தற்கொலை செய்து கொண்டார்)

ஹெப்டோன்ஸ்டாலில் சென் தாமஸ் தி அபோஸில் ஆலய கல்லறை தோட்டத்தில் சில்வியாவின் கல்லறை உள்ளது.

அவரது மகள் ஃப்ரீடா ஹ்யூக்ஸ் ஓவியர் மற்றும் எழுத்தாளர். மகன் நிக்கோலஸ் மார்ச் 16 2009 யில் அலாஸ்காவில் தற்கொலை செய்து கொண்டார். அவரும் தீவிர மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அறுபதுகளின் இறுதியில் அவரது தொகுப்பு கொலாசஸ் மற்றும் வேறு கவிதைகள் வெளிவந்த போதே சில்வியா பல விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் . ஆனாலும் 1965 யில் பிரசுரமான தொகுப்பு ஏரியல் தான் உலகமெங்கும் அவரது புகழை , புலமையை எடுத்து சென்றது.

“இது மூன்றாவது முறை
என்ன ஒரு அவலம்
ஒவ்வொரு தசாப்தத்தையும்
அழித்து நிர்மூலமாக்குகிறேன்

ஆயிரம் வெளிச்ச இழைகள்
வேர்கடலை கொரிக்கும் கூட்டம்
முண்டியடித்துக் கொண்டு வரும்”

பத்து வயதில் ஒரு முறை , இருபதாவது வயதில் ஒரு முறை 30 வயதில் பலமுறைகள் என ஒவ்வொரு தசாப்தத்திலும் தான் மேற்கொண்ட தற்கொலை முயற்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறார் லாசரஸ் அம்மையார் என்ற கவிதையில்.

“ஒரு வருடம் அல்ல ஏழு வருடங்களாக
என் ரத்தத்தை குடித்த அந்த சாத்தான்
உங்கள் அடையாளத்தைக் கொண்டிருந்தது”

அப்பா என்கிற கவிதையில் தன் தந்தையையும் கணவனையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

விடியல் கானம் என்ற கவிதை ஒரு கலைஞனின் வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் பற்றிய மக உன்னதமான கவிதையாக இன்று வரை புகழப்படுகிறது

“காதலினால் உருவானவன் நீ
தடித்த பொன் கடிகாரத்தைப் போல
தலைகீழாகப் பிடித்து உன் பாதங்களை
தட்டினாள் மருத்துவச்சி
உணர்வற்ற உன் அழுகை
இப்பிரபஞ்சத்தின் அங்கமானது….

சதுர ஜன்னல் வெளுத்து
நட்சத்திரங்களை முழுங்குகிறது
உயிரெழுத்தின் சுத்தமான ஒலிகள்
ஒரு பலூனைப்போல மேலெழும்புகின்றன”

கவிஞராக பரவலாக அறியப்பட்ட சில்வியா ப்ளாத் கவிதைகளை மிஞ்சும் அளவு உறைநடைகளும் எழுதியுள்ளார்.எண்ணிக்கையில் எழுவதிற்கும் மேல் பிரசுரிக்கப்படாத சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது தட்டச்சுப் பிரதியின் நகல்கள் இன்றும் பல நூலகங்களில் காணக்கிடைக்கின்றன. இந்தியானா பல்கலைக் கழகத்தின் லில்லி நூலகத்திற்கு சில்வியாவின் அம்மா அவ்ரீலிய ப்ளாத் வழங்கிய ஆவணங்களில் 70 சிறுகதைகள்—1960 யில் தொடங்கி அவரது இறுதி காலம் வரை எழுதியவை. அவரே எல்லாவற்றையும் நிராகரித்திருந்தார்.

பெல் ஜார் என்ற நாவல் வருவதற்கு முன் ‘stone boy with a dolphin’ என்ற நாவலின் பெரும்பான்மை பிரதி இன்றும் இருக்கிறது .பெல் ஜாரிற்கு பிறகு 130 பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட , Double exposure என்று தலைப்பிடப்பட்ட நாவல் ஒன்று மர்மமான முறையில் 1970 களில் தொலைந்து போனது. டெட் அந்த நாவலின் 130 பக்கங்கள் மட்டும் உள்ளதென்று சில்வியாவின் இறப்பிற்குப் பின் சொன்னார். 2 வருடங்கள் போனதும் அதில் 60 பக்கங்கள் மட்டுமே உள்ளதென்றார். சிறிது வருடங்களுக்குப் பின் 20 பக்கங்கள் கூட இருக்காது அது நாவலாகவோ, சிறு கதையாகவோ மாற்ற முடியாத கரட்டு வடிவம் என்று கூறிவிட்டார்.

ஜானி பானிக் அண்ட் தி பைபில் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற சிறு கதைகள் மற்றும் குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு டெட்டின் முன்னுறையுடன் 1977 யில் வெளியிடப்பட்டது . அதில்

“இந்த தொகுப்பில் சில்வியா நிராகரித்த கதைகள் சிலவற்றைச் சேர்த்திருக்கிறேன். அவர் தேர்ந்த கதைகள் சிலவற்றை நான் நிராகரித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும்

“சில்வியா ஒரு கவிஞர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது அதுவும் அவரது வாழ்நாளின் கடைசி 6 மாதங்களில் எழுதிய கவிதைகள் மூலமாக மட்டுமே இன்றும் பேசப்படுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று எழுதியுள்ளார் டெட்.

அதன் இரண்டாவது பிரசுரத்தில் மேலும் பல கதைகளையும் சேர்த்திருந்தார். தொகுப்பின் தலைப்பாக இருக்கும் சிறு கதையில் தன்னுடைய பதற்றத்திற்கு (panic) ஜானி என்ற பெயரிட்டு அதையும் ஒரு பாத்திரமாக சமைத்திருப்பார்.

“பயம்; அது ஒன்று மட்டுமே நம் காதலுக்குத் தகுதியானது
பயத்தை காதலிப்பதே நம் ஞானத்தின் தொடக்கம்
பயம் மட்டுமே நம் காதலுக்கு தகுதியானது
பயம், பயம் மேலும் பயம் எல்லாவிடங்களிலும் பிரவகிக்கட்டும்

நான் தொலைந்து விட்டேன் என்று நம்பிய தருணத்தில் ஜானி பானிக்கின் முகம் விதானத்தில் பல வண்ணங்களில் மிளிர்ந்தது. அவனது தாடி மின்னலை போன்றது. அவனது கண்களில் மின்னல்; அவனது வார்த்தை பிரபஞ்சத்தில் உணர்வேற்றி ஒளியூட்டுகிறது. மின்னலை ஒளிவட்டமாகக் கொண்ட அவனது நீல நாக்குத் தேவதைகள்
வெளியெங்கும் வியாபித்திருக்கிறார்கள்.
அவனது காதல் இருபது மாடி பாய்ச்சல், கழுத்தில் கயிறு, இதயத்தில் கத்தி.
அவன் தனக்குண்டானர்களை மறப்பதில்லை.

என்று அந்த சிறுகதையை முடித்துள்ளார். இதில் தன் பயங்களும் , பதற்றங்களும் தன் வாழ்வை, எண்ணத்தை , எழுத்தை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருப்பார்.

1971 இல் வின்டர் ட்ரீஸ் மற்றும் க்ராசிங் த வாடர் என்ற கவிதைத் தொகுப்புகள் வெளியிடப் பட்டன. 1981 இல் தி கலெக்டெட் பொயம்ஸ் என்ற தொகுப்பை டெட் தன் திருத்தங்களோடு வெளியிட்டுள்ளார். இதில் 1956 முதல் இறுதி காலம் வரை அவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் உள்ளன. 1982 ஆம் ஆண்டு இந்தத் தொகுப்பு புலட்சர் பரிசு பெற்றது . சில்வியா ,இறப்பிற்கு பின் புலட்சர் பரிசு பெரும் முதல் படைப்பாளியாவார்.ஆனால் 2006 யில் ஆனா ஜார்னி என்ற வர்ஜீனிய பல்கலைகழக மாணவி “ஆன்வி” என்ற சில்வியாவின் இதுவரை வெளிவராத சொனட் வகை கவிதை ஒன்றை ( சில்வியா ஸ்மித் கல்லூரியில் இருந்த காலகட்டத்தில் எழுதியது ) கண்டெடுத்தார். 2007 யில் அந்தக் கவிதை இணைய பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது.

சில்வியாவின் தாய் அவ்ரீலியா 1975 யில் அவரது கடிதங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து லெட்டர்ஸ் ஹோம்: கரஸ்பாண்டன்ஸ் 1950- 1963 என்று புத்தகமாக வெளியிட்டார். 1950 யிலிருந்த அவர் எழுதி வந்த டயரி குறிப்புகள் 1980 இல் டெட் ஹ்யூக்ஸின் திருத்தங்களுடன் தி ஜார்னல்ஸ் ஆஃப் சில்வியா ப்ளாத் என்று வெளியடப்பட்டன. ஆனால் அதில் சிலவற்றை டெட் தர மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது .

1959 இல் சில்வியா குழந்தைகளுக்காக எழுதிய “இட் டஸன்ட் மேட்டர் சூட்” என்ற கதை 1996 இல் வெளிவந்தது. 2003இல் அவரது வாழ்வு ஒரு திரைப்படமாக வெளிவந்தது. க்வினித் பால்ட்ரோ சில்வியா இன் பாத்திரைத்தை ஏற்று நடித்துள்ளார்.

1998 யில் டெட் ஹ்யூக்ஸின் இறப்பிற்கு பிறகு 2000 தில் ஆங்கர் புக்ஸ் என்ற நிறுவனம் “தி அன்அப்ரிஜிட் ஜர்னல்ஸ் ஆஃப் சில்வியா ப்ளாத்” என்று, டெட்டின் தலையீடு இல்லாமல் வெளியட்டது. இந்த புத்தகத்தை, வெயீட்டை ஆங்கில இலக்கிய உலகு ஒரு உன்னத இலக்கிய செயல்பாடாக கொண்டாடியது . இதில் பாதிக்கும் மேல் புதிதாக வெளிவருபவை. முதல் முறையாக எந்தத் தணிக்கையும் இல்லாமல் சில்வியா என்ற மாபெரும் கவிஞரின், எழுத்தாளரின், மனுஷியன் உண்மையான முகத்தை உலகிற்கு காட்டிய நூல் இது.

(தமிழில்: அனுராதா ஆனந்த்)

சல்வியா ரேடியோவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு கவிஞர் எதற்காக நாவல் எழுதவேண்டும் என்று கேட்கப்பட்ட போது

“கவிதை என்பது ஒரு கறாரான வடிவம் – ஒரு சர்வாதிகாரியைப் போன்றது இவ்வளவு தூரம் தான் செல்லலாம், இவ்வளவு விரைவாகச் செல்லவேண்டும் இவ்வளவு இடம் தான் எடுத்துக் கொள்ளலாம் என்ற எழுதாச் சட்டதிட்டங்கள் நிறைந்தது. நான் ஒரு பெண். வெளிப்பார்வைக்கு அற்பமாக தோன்றுபவை, முக்கியமற்றவை,சாரமற்றவை எல்லாம் எனக்கு முக்கியம். அன்றாடங்களும், அன்றாட பொருட்களும் எனக்கு தேவை. உதாரணத்திற்கு பல்துலக்கியை எப்படி கவிதைக்குள் கொண்டு வர முடியும் ஆனால் நாவலில் பல்துலக்குதலை , பல்துலக்கியைப் பற்றி எழுதலாம். அதனால்தான் நாவல் எழுதினேன்”

என்று தேவையில்லாத கேள்விகளுக்கு பகடியாக பதில் தந்திருக்கிறார். அன்றாடங்களை தனது கவிதைகளில் பல இடங்களில் கையாண்டிருக்கிறார். அன்றாடங்கள உன்னதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு சோப்புக்கட்டி
ஒரு தங்க மோதரம்
ஒரு தங்கப் பல்

இச்சாம்பலில் இருந்து
உயிர்த்தெழுவேன்
செம்பட்டு கேசத்துடன்”

மொழிபெயர்ப்பாளர் அனுராதா ஆனந்த்

பெல் ஜார் நாவலில் “ இங்கு நான் சந்திக்கும்  ஒவ்வொருவரும், பெண்ணின் ஆளுமையை, நம்பிக்கையை,  அவளடைந்த வெற்றிகளை குறைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆண்களின் எல்லாவற்றையும் ஊதிப் பெருக்குகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார் சில்வியா. இன்று வரை இந்த முரண்களும், இரட்டை மதிப்பீடுகளும் முழுவதுமாக நீங்கவில்லை. கேட்லின் மோர் எழுதிய “ How to be a woman” மற்றும் டினா ஃபேயின் “Bossy pants” போன்ற சம கால நாவல்கள் சில்வியாவின் பெல் ஜார் விட்ட இடத்திலிருந்து தொடங்குபவையாக விளங்குவதிலிருந்து  இதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிகிறது  

“இறந்து பிறந்தவை
இக்கவிதைகள் வாழவில்லை…..
உயிரோடிருந்தால் நன்றாக இருக்கும்
உயிரோடிருந்தவைகள்தாம்
இப்போது இறந்துவிட்டன
அவற்றின் தாய் கிட்டதட்ட இறந்துவிட்டாள்
அவளது கவிதைகள் பொருளற்று விழிக்கின்றன
அவளைப்பற்றி பேச மறுக்கின்றன”

வசிக்கும் இடத்தின் நிலவியலே மனதின் நிலவியலை நிர்ணயம் செய்கிறது . மனதின் நிலவியலே எழுதின் நிலவியலை நிர்ணயம் செய்கிறது .  மொழிதிறத்தாலும் கவித்திறத்தாலும்  அற்புத ரசவாதங்கள் செய்து காலத்திற்கும் நிற்கும் கவிதைகளை உரைநடையைப்  படைத்த, நவீன  கவி உத்திகளை கண்டெடுத்த சில்வியா, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட எட்டா உயரத்தின் உன்னத இலக்குகளை எட்டிப் பிடித்திருக்கிறார். அவரது ஆளுமையின் விஸ்தீரணமும்,ஆழமும், கவிதிறனும் இன்னும் முழுதாக பேசப்படவில்லை  என்பதே உண்மை.

*

அனுராதா ஆனந்த்: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *