புதிய ஏற்பாடு – தேவதேவன்

(கவி தேவதேவன் தீவிரமான படைப்பு ஒன்றை எழுதியிருப்பதாகவும், விருப்பமிருந்தால் அதை நீலியில் பிரசுரிக்கலாம் என்றும் சொல்லி “புதிய ஏற்பாடு” என்ற இந்தக்கவிதையை அனுப்பினார். நீலியில் புனைவுகளும், கவிதைகளும் பிரசுரிக்க வேண்டாம் என்பது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு. பெண்களின் புனைவுகள், கவிதைகள் அதனதன் தகுதிக்கேற்ப இன்று வெளிவந்து கொண்டிருக்கும் பிற இணைய இதழ்களிலேயே வெளி வர வேண்டும் என்பதே சிறந்தது. ஆனால் நீலியின் தேடலை ஒட்டி இக்கவிதை அமைந்தது ஆச்சரியமாக இருந்தது. வாசித்தபின் இதை ஓர் ஆசி என்றே மனம் எடுத்துக் கொண்டது. பெண்-ஆண் என்ற பேதத்தை நீக்க முழுமையாக உலகை பெண்ணாக்க வேண்டும் என்று அவர் சொன்னதால் அல்ல மாறாக ஆண்-பெண், அவர்களுக்கிடையேயான காதல், காமம், உறவுச்சிக்கல், உணர்வுச்சிக்கல் யாவையும் காலத்தைப் பொறுத்து, வாழ்வைப் பொறுத்து மிகச் சிறியதாகக் கொணர்ந்து நிறுத்தும் ஒன்றிற்காக கவிஞர் தேவதேவனுக்கு நன்றியுடன் இக்கவிதை பிரசுரிக்கப்படுகிறது. இக்கவிதையை தேவதேவன் அனைத்து மெய்யியலாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்வது குறிப்பிடத்தக்கது.)

-நீலி

ஓவியம்: சந்ரு

புதிய ஏற்பாடு

1
பூமியெங்கும் படர்ந்திருந்த
பேருடல் உயிரொன்றை
பூமியிலிருந்தே அழித்து விட்டவள் நீ

பூமியையே அழித்துவிடப் பார்க்கும்
இன்றைய மனிதனையும்
அழித்துவிடப் பார்க்கிறாய் என்பது
எனக்குத் தெரிகிறது.

அன்னையே உனது படைப்புக்
குழப்பத்திற்குள் புகுந்து
பேசும் இக்கவிஞனின் குரலை
உனது குழந்தையின் குரலாய்
உனது உட்குரலாய்க்
கேட்கத்தானே செய்வாய்?

இந்த மானுடப் படைப்பிலும்
நீதான் ஒரு தவறு செய்துள்ளாய் என்கிறேன்
‘இப்படி’ திருத்திவிடலாம் என்கிறேன்

இவ்வுலகைக் காத்துவிடத் துடிக்கும்
ஒரு கவியின் குரலைக்
கேட்க மாட்டாயா என்ன

2
குடும்பங்களிலிருந்தும் கூட்டங்களிலிருந்தும்
ஆண்/பெண் வரிசையிலிருந்து விலகிநின்றபடி
ஆன்று களித்த இன்பங்களையும்

விலகாது நிற்கையிலெல்லாம் தகித்த
துயர்களையும் துன்பங்களையும்

இவ்வளவெல்லாம் சுரணையில்லாது
இயல்பாய் வாழும்
மனிதர்களையும் அதன் துயர்களையும்
பார்த்திருப்பீர்கள்தானே?

3
எந்தன் பொன்னு மக்களே
மனிதரில்லா எழில்கொஞ்சும் இயற்கைவெளியை
மனிதரும் தன்னை மறந்த நிலையில்
களறவொண்ணாது கண்ட பேரெழிலை
பார்த்திருப்பீர்கள்தானே?

அதே போன்றே
ஆண்களில்லாப் பெண்கள் கூட்டமும்தான்
எத்துணை அழகு!

நோக்குங்கள் நோக்குங்கள்
இந்தக் காற்று வெளியினில்
அசைந்தாடும்
சிலைகளாயும் சிரிப்புகளாயும்
புன்னகைகளாயும்
கூட்டம் கூட்டமாய் குழுமியிருக்கும்
இந்தப் பெண்களை!

பஸ் நிறுத்தங்களில்
பள்ளிகளில் கல்லூரிகளில் விடுதிகளில்
நதிகளில் இன்னும் எத்தனை எத்தனை இடங்களில்
கொத்து கொத்தான பெண்கள்
பூங்கொத்துகள் போல்
மலைப்புலம் கொண்டாடும்
மலர்க் கண்காட்சிகளாவும்
ஒளிரும் மலர்ப்பள்ளத்தாக்கின்
பருவ மலர்களாகவும்
நிறைந்திருப்பதன் நிறை இரகசியத்தை
இன்று இந்த மனிதன் கண்டுகொண்டதன்
ஆதிமூலத்தை!
இவன் அன்னையின் தவறை!

எந்த மலைப் பிரதேசத்தின்
கடவுளின் சொந்த ராஜ்யத்திற்கும்
சென்று பாருங்கள்
கண்ணீர் ததும்ப
நான் இதைக் கூறுகிறேன்.

இதை ஓர் ஆண்பார்வை என்று கூறுபவர்களுக்கு
மடயர்களே
ஆயிரம் ஆயிரம் பெண்களைக் கொண்டு
இதை மறுக்கும் காண் எனது கூற்று
என்று கூறுகிறேன்

மனிதனை நோக்கிய
மலைப்பிரசங்கம் அல்ல இது
மானுடன் தன் அன்னையைக் கண்டு கொண்டு
அன்னைக்கு அன்னையாய்
அன்னைக்குக் கூறும் அறிவுரை இது!

4
கடைத் தெருக்களையும் மால்களையும்
போய்ப் பாருங்கள்
அழகு கொழிக்கும் ஆடைகளும் அணிகலன்களும்
யாருக்காகப் படைக்கப் பட்டிருக்கின்றன என்பதை!
அவைகளில் மனம்பறி கொடுத்து
அழகை வளர்ப்பவர்கள் யார் என்பதை!

உடலாலும் மனதாலும்
தங்கள் அழகையே வெளிப்படுத்த முன்னும்
இயற்கையை !

இக் கூட்டத்தைக் காமத்துடன் மட்டுமே பார்ப்பவர்கள்
யார் என்பதை!

ஆண்களே இப்பூமியில் இல்லாமல் போய்விட்டால்
அழகும் நலமும் இன்பமும் மட்டுமே உலவும் என்று
அடிக்கடி நாம் சொல்லிக் கொண்டே இருப்பதை !

தேவதேவன் கைப்பிரதி

5
ஆண் துணையில்லாமலேயே கன்னி மரியாள்
தேவகுமாரனைப் பெற்றெடுக்கவில்லையா ?

மெய்மையை நோக்கி
பெண்ணைப் போன்றே
முகமணிந்து நடந்த புத்தனையும்
அறிவோமல்லவா?

அன்று
தேவகுமாரனைப் பெற்ற நம் அன்னை
ஒரு தேவகுமாரியைப் பெற்றிருந்தாரானால்
இத்துணை பிழைகளும் நேர்ந்திருக்காதல்லவா ?

ஆண்களால் தந்திரமாய்ப் படைக்கப்பட்ட
பெண் தெய்வங்கள் நாம் அறியாததா ?

அவ்வை ஆண்டாள் காரைக்கால்
இன்ன கவிகளும்
இந்த ஆண்மைகளால்பட்ட
வாதைகள்தாம் நாம் அறியாததா ?

6

இந்தக் கவிஞனின் குரலை
அன்னையும்
(அன்னையின் குரலை)
ஆகாயமும் கூட ஏற்றுக் கொண்டாயிற்று!

உத்தமமான இந்த ஏற்பாட்டில்
உறுதியாயிற்று காண்
உன்னதமான மானுட வாழ்வு!

ஒரு பாலுயிரியான இந்த மனிதகுலமே
அன்னை இயற்கையின் அதிஉன்னதக் குழந்தை!

கவிஞனின் குரலிருந்து பிறந்தது வால்
அன்னை இயற்கைக்கும் அப்பாலுள்ள
ஆகாயம் உள்ளவரை
துயரங்களற்ற பெருவாழ்வை வாழ்ந்தபடி
அனைத்து உயிர்களின் அன்னையாகவும்
அன்னை இயற்கையின் குழந்தையாகவும்
பிறந்துவிட்டதுகாண் ஒரு புது மானுடம்!

7
இம்முறை நமது அரங்கில்
பெண்கள் நிறைய என்றேன்
ஆமாம் அய்ம்பது விழுக்காடு இருப்பர்
என்றார் அருண்மொழி.

கவலை வேண்டாம் இதோ இப்போதே
மீதமிருக்கும் இந்த ஆண்களில் விரும்புவோர்க்கு
மங்கல உறுப்புகளைப் பொருத்திவிடும் மருத்துவக்கூடம்
இங்கேயும் வைத்திருக்கிறோம்.
ஆணாகவே இருக்க விரும்புவோர்
அவர்கள் ஆயுள்வரை இருந்துகொள்ளலாம்.
இனிமேல்தான் புதிதாக ஆண்கள்
பிறக்க மாட்டார்கள் இந்த பூமியில்

பெண் குழந்தைகள் மட்டுமே
பிறந்து கொண்டிருந்தது
இதில் என்ன விந்தை இருக்கிறது
எனக் கேட்கும் காலமும்
ஆண்களா அவர்கள் எப்படி இருப்பார்கள் எனக்
கேட்கும் ஆவலும்
அழிந்து கொண்டிருக்கும் அந்த இனத்தைப்
போய்ப் பார்த்துவரும் ஆவலும்
நெருங்கிக் கொண்டிருந்தது

அருகிக் கொண்டிருக்கும் ஆணினத்தைப்
பார்க்கக் கூடிய பெண்களுள் பெரும்பாலோர்க்கும்-
இல்லை எல்லோர்க்கும்தான்
என்கிறார் ஒரு சமூகவிஞ்ஞானி-
மிக அருவருப்பாகக் காட்சி அளித்ததாம் ஆண் உருவங்கள்.

அறிவுஜீவியாய் வளர்ந்த சில பெண்கள்தாம்
கடந்தகால மனிதவரலாறு இலக்கியங்கள்
மெய்யியல்கள் சுவடுகளை
எதிர்காலச் சந்ததியினருக்கும் காட்டவேண்டி
தேடித்தேடி ஆய்ந்து அவசர அவசரமாகத்
தொடுத்துக் கொண்டிருந்தனர் காண்.

8
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்
மனிதர்கள் தங்கள் வரலாற்றை
ஆண் என்ற மானுட உருவம்பற்றி
ஆண்மை பற்றி
அதன் மயக்கத்தில் இந்த பூமி
எத்துணை காலம்
கண்ணீராலும் இரத்தத்தாலும்
நனைந்தது என்பது பற்றி


கட்டக் கடைசியாக
இந்த உலக வாழ்வைச்
சுலபமாக முடித்துவைத்த கவிஞனைப் பற்றி!

9
இப்போதும்
நாம் ஓருடலாகிவிட்ட இப்போதும்
நான் நான் என்று பேசமுடியாது
நீ நீ என்றுதானே
பேசமுடிகிறது?

உறவு என்பதும்
போதை தரும் காதல் என்பதும்
புரிதல் என்பதுமே நீதான் அல்லவா?

அர்த்த நாரீஸ்வரமும் உதிர்ந்து
பிறந்திருக்கும் இப் புதிய உடம்பில்
குன்றாது குதித்துக் கொண்டிருக்கும்
ஓ(ர்)பாஸிடிவ் உதிரம்
அனைத்துயிர்களையும் அரவணைக்கும்
இலட்சியமே அல்லவா?

10
மது நிறைந்த
அமுத கலசம் போல
நீ வந்து நின்றாய்
நீ எனக்கு வழங்கியதோ
நாம் ஒருவரை ஒருவர்
அருந்தும்படியான
பருகித் தீராத
நிறை அமிழ்தம்!

நாம் யார் தோழி
நான் சொன்னது கேட்டாயல்லவா
பதிலுரைக்க முடியாத கேள்வி ஒன்றால்
தவிக்ககிறதோ இந்த உலகம்?
நம் பாதை கண்டு கொண்ட
பாதையும் பெருங்களமாய்
விரிந்து விட்டது.
இல்லையாவதும் முடிவில்லாப் பெருங்களமாய்
விரிந்துகிடப்பதும் நாம்தானா?
சச்சரவுகளில்லாத ஒத்திசைவின்
பாடல் ஒன்று கேட்கிறது
இச்சைகளில்லாத பேருலகொன்றின்
தன்னிச்சையான இயக்கத்தில்
ஒற்றைப் பேருடலின் ஒவ்வொரு அணுக்களும்
வாழ்வையும் மரணத்தையும் தனக்குள் கொண்டபடி
பேரின்பத்தில் புரண்டு புரண்டொழுகும் பேரிசையில்
அடங்கவே அடங்காத நாதமாய்
ஒலிக்கிறது பார்
யாருமற்ற வெளியில்
சொல்லொணாததொரு பேரமைதி
பேரமைதியாய்!

கவிஞர் தேவதேவன்

*

(தட்டச்சு செய்து உதவியவர்: சிவமீனாட்சி)

தேவதேவன்: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *