”நீங்கள் அரசர், நான் அன்னை” – V.S. செந்தில்குமார்

(தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலை முன்வைத்து)

சிவகாமி ஜெயக்குமார் என்ற தமிழினி

“எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான்உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளை சொல்ல வேண்டும்”. இந்த புத்தகம் வெளியான தருணத்தில் பல்வேறு கடும்கண்டனங்களும், தமிழினியை பற்றிய அவதூறுகளும், ஏளன, இழி பேச்சுகளும் அவருக்கு எதிராக பரப்பப்பட்டன. இதை முன்பேஅறிந்திருந்த அவர், இப்புத்தகத்தின் நோக்கம் பற்றி என்னுரையில் மேற்சொன்னவாறு மிகத் தெளிவாக கூறுகிறார்.

சிவகாமி ஜெயக்குமார் என்கிற தமிழினி 1972ஆம் ஆண்டு இலங்கையின் பரந்தன் என்ற சிறு கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில்பிறந்து, பள்ளியில் கல்வி, கலை என அனைத்திலும் சிறந்து விளங்கி, இளையராஜா இசை, கமல் ரஜினி படங்கள் என அந்த வயதுக்குரியஅனைத்து கனவுகளும், கற்பனைகளுடனும் துள்ளி திரிந்து கொண்டிருந்த பெண். கண் முன் நடக்கும் கொடூரங்களையும், அவலங்களையும், அவமதிப்பையும் தாங்கிக்கொள்ள முடியாமல் இவற்றிக்கு எல்லாம் ஒரே தீர்வு ஆயுதம் ஏந்திய போராட்டம் மட்டுமேஎன்று தொடர்ச்சியாக சூழலில் கொடுக்கப்பட்ட சித்திரத்தை நம்பி உணர்ச்சிபொங்க, மக்களின் துயர் களையும் பொருட்டு புலிகள்அமைப்பில் இணைந்து ஆயுதமேந்தியவர். தனது போராட்ட வாழ்க்கையையும், போர் ஏற்படுத்திய அழிவுகளையும், விளைவுகளையும், தான் கொண்டிருந்த நம்பிக்கைகளையும், கனவுகளையும் சிதைத்து முற்றழிக்கப்பட்ட ஒரு வரலாற்றை நம்மிடம் பகிர்ந்துகொள்வதுதான் “கூர்வாளின் நிழலில்”.

ஈழம் பற்றிய எந்த செய்தியும் இங்கு பெரும் உணர்வு கொந்தளிப்புடனே விவாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் இங்குதமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு என்றால் அது ஈழப்போராட்டம் தான். ராமேஸ்வரத்திலிருந்து நீந்தி தலைமன்னார் சென்று விடலாம் என்று அறிந்து அதற்கவே நான் நீச்சல் கற்றுக் கொண்டேன். ஏதோ ஒருவகையில் ஈழப்போராட்டம் இங்கு அனைவரின் கனவுகளிலும் கலந்திருந்தது. எண்ணற்ற போராட்டங்கள், அரசியல்கள். ஒவ்வொருநாளும் போற்றிப் புகழ்ந்து, வழிபட்ட தலைவர்  யுத்தத்தில் கொல்லப்பட்டார் என்பதை மனம் ஏற்பதற்கே பல ஆண்டுகள் ஆயிற்று.  ஆனால் பெரும்பாலான நம்மவர்கள் எவ்வித கஷ்டங்களும் இன்றி, தனது அன்றாடத்தை சுகபோகமாக கழித்துக்கொண்டு, கல்விகுடும்பம் வேலை என ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது சில போராட்டங்களில் கலந்தும், சிறு நிதிஅளித்தும், நண்பர்கள் மத்தியில் நரம்பு புடைக்க ஈழ ஆதரவு குரல் கொடுத்து விவாதித்தும்,  தன்னையும் ஒரு தியாகியாக பாவித்து  அதன்மூலம் ஒரு நிறைவை அடைந்தவர்கள் தான் ஏராளம். உண்மையில் அங்கு என்ன நடந்தது, அவர்கள் சந்தித்த கஷ்டங்களும், அனுபவித்தவலிகளும், அடைந்த வேதனைகளும், இழப்புகளும், வீழ்ச்சிக்கான காரணங்களும் என எதையும் யாரும்தெரிந்துகொள்ளவில்லை. உண்மையில் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அதைத் தான் விரிவாக தமிழினியின் தன் வரலாறுகூறுகிறது.

 புலிகளின் அமைப்பு, அதன் கொள்கை, அரசியல், நிர்வாகம், பல்வேறு பிரிவுகள், அவற்றின் செயல்பாடுகள், தலைவர்களின் பண்புகள், போராளிகளின் திறன்கள்,  போர் யுக்தி, பெற்ற வெற்றிகள், அடைந்த தோல்விகள் என மிக விரிவாக விவரிக்கிறார். ஆனால் இந்தநூலின் சிறப்பம்சம் என்பது தமிழினி என்ற ஆளுமை உருவான விதமும்   பெண் போராளிகளைப் பற்றிய விரிவான சித்தரிப்பும்தான். இவை அனைத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை ஒற்றைப்படையாக, மூர்க்கமாக பின்பற்றுகையில் ஏற்படும் அழிவுகள்.

சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து 18 வயதில் ஒரு சாதாரண போராளியாக அமைப்பில் சேர்ந்த தமிழினி, புலிகள் இயக்கத்தில்மகளிர் அணி அரசியல் பிரிவு தலைவராக உயர்ந்து செயல்பட்டுள்ளார். இவரின் உயர்வுக்கு ஆயுதமேந்தி வீர தீர செயல்கள் காரணமாகஅமையவில்லை. மாறாக மக்கள் நலனில் இவர் கொண்டிருந்த நாட்டமும் அதன் தொடர்ச்சியாக மக்களிடமும், சகபோராளிகளிடமும் இவர் பெற்ற செல்வாக்கும், கல்வி மேல் கொண்டிருந்த ஈடுபாட்டால் அறிவு செயல்பாட்டின் மேல் இருந்த ஈர்ப்பும்தமிழினியை ஒரு பெரும் தலைமை பொறுப்பை வகிக்கும் ஆளுமையை பெற்றுத்தந்துள்ளது. பெண் போராளிகளுக்கு அரசியல், வரலாறு,பொது அறிவு  பற்றி வகுப்பெடுத்தல், பத்திரிகை வெளியிடுதல்,கல்வி கலை பணிகளை ஒருங்கிணைத்தல், நாடக உரைஎழுதுதல், வீதி நாடகங்கள் இசை நிகழ்வுகள் என்பவற்றின் மூலம் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைமக்களிடையே பரப்புதல், பிரச்சாரத்திற்கான அறிக்கை தயாரித்தல், அரசியல் விழிப்புணர்வை உருவாக்கவும், இயக்க சித்தாந்தம், அமைப்பு, செயல்பாடுகள், அவற்றின் தேவைகள் என அனைத்தையும் தொடர் பிரச்சாரத்தின் மூலம் மக்களின் பெரும் ஆதரவைஇயக்கத்திற்கு பெற்று தருவதற்கு பெரும் பங்காற்றியுள்ளார். பெண் போராளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பெற்று அதைசெயல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். பேரழிவு மற்றும் சமாதான காலங்களில் மக்கள் நலனில் இவரின் கள செயல்பாடுபிரமிப்பூட்டுவதாக உள்ளது.  போர் நிறுத்த காலத்தில் நார்வே தலைமையில் அமைந்த  சமாதான பேச்சுவார்த்தையில் பெண்புலிகள் சார்பாக தமிழினியை பங்கேற்க இயக்கம் அனுப்பியதன் மூலம் தலைமை அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையும், அவரின்ஆளுமையும் புலப்படுகிறது. 

காலச்சுவடு பதிப்பகம்

தலைவர் பிரபாகரன் ஒரு முறை இவரிடம், “நான் கூட உங்களை விடவும் நன்றாக பெண்ணியம் பேசுவேன் ஆனால் உங்களின்பிரச்சனைகளை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. எந்த ஆண்களாலுமே பெண்களின் அனைத்து பிரச்சனைகளையும்சரிவரப் புரிந்து கொள்ள முடியாது. பெண் பிரச்சனைகளை பெண்கள் தான் பேச வேண்டும், எழுத வேண்டும் அப்போது தான் அதுஉண்மையாக இருக்கும். ஆகவே சுதந்திர பறவையில் பெண்கள் அதிக அளவில் எழுத வேண்டும். எழுத்தாற்றல் உள்ள பெண்போராளிகளை இனங்கண்டு எழுத்துப் பயிற்சிகள், கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்” என குறிப்பிட்டதாக கூறுகிறார். தலைவரின் எதிர்பார்ப்பை தமிழினி மிக சிறப்பாகவே நிறைவேற்றியுள்ளார். 

ஈழ வரலாற்றை, புலிகளின் செயல்பாட்டை ஆதரித்தும் விமர்சித்தும் பல்வேறு புத்தகங்கள் கட்டுரைகள் உள்ளன. அவை அனைத்தும்அரசியலையும் சித்தாந்தத்தையும் பேசுபவை. தன் இனம், நாடு, கொள்கை சார்ந்த கருத்துக்களை முன்வைப்பவையாக உள்ளன. எதிலும் பெண்களின் பங்களிப்பு, அவர்கள் சந்தித்த இன்னல்கள், அடைந்த இழப்புகள் என எதைப்பற்றியும் பெரிதாக ஒன்றும் இல்லை. கூர்வாளின் நிழலில் இவையனைத்தும் மிக சிறப்பாக பதிவு படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே  இது மிக முக்கிய வரலாற்றுஆவணமாக கருதப்பட வேண்டும். 

தமிழினி விடுதலைப் புலிகளின் பெண்கள் படையுடன்

இந்தியாவில் இன்னும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனநிலை தீவிரமாக செயல்படும் துறைகளில் ஒன்று இராணுவம். உயர்பதவிகளுக்கு இன்றும் பெண்களுக்கான அனுமதி தொடர்ச்சியாக மறுக்கப்படுகிறது. தேசத்தையே பல பெண் தலைவர்கள் ஆண்டுகொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் இராணுவத்திற்கான தலைமை பதவிகளுக்கு பெண்களுக்கு தகுதி இல்லை என அரசுகருதுகிறது. தலைமை பதவிக்கு வந்தால் கீழ் பணியாற்றும் ஆண் இராணுவத்தினர் கட்டளைகளை சரிவர நிறைவேற்ற மாட்டார்கள்என்று ஒரு அயோக்கியத்தனமான அபிடவிட்டை தைரியமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. பல்வேறு போராட்டத்திற்கும், உச்ச நீதிமன்ற தொடர் அழுத்தத்திற்கு பிறகு இப்போது தான் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (NDA)  பெண்கள் சேர்வதற்கு அனுமதிஅளித்துள்ளது. ஆனால் ஈழத்தில் புலிகள் அமைப்பு வளர்ந்து பல வெற்றிகளை பெற்று ஒரு அரசாங்கமாக மாறுவதற்கு மிக முக்கியபங்களித்தவர்கள் பெண்புலிகள். சந்தேகமே இல்லாமல் புலிகள் அமைப்பு உலகிலேயே ஒரு மிக சிறந்த பெண்கள் படையை உருவாக்கிஇருந்தார்கள் எனக் கூறலாம். படையணி, அரசியல் துறை, நிதித்துறை, நிர்வாகத்துறை, புலனாய்வுத்துறை, கடற்புலிகள் என பல்வேறுதுறைகளில் பெண்களின் ஈடுபாடும், அவர்களின் பங்களிப்பும் கற்பனையை மிஞ்சும் வகையில் உள்ளது. புலிகளின் ஒவ்வொருதாக்குதலிலும் ஆயதமேந்திய பெண்புலிகள் மிகத் தீவிரமாக செயல்பட்டு உள்ளார்கள். ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல்களமுனையில் போர்புரிந்துள்ளார்கள். அதோடு புலிகளுக்கு ஆட்கள் சேர்ப்பதிலும், மக்களிடையே அமைப்பிற்கு ஆதரவுபெருகுவதற்கும் பெண் புலிகளின் தொடர் பிரச்சார செயல்பாடே காரணமாக இருந்துள்ளது. 

பெண் போராளிகளின் திறமையை, பெருமையை பறைசாற்றும் அதே வேளையில் அவர்கள் அடைந்த துயர்களையும், இழப்புகளையும்மிக விரிவாக பதிவு செய்கிறார். நமக்கு சீருடை அணிந்து கையில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் பெண் போராளிகளை புத்தகபடங்களில் பார்க்கும் போது ஒரு வீர நாயகி பிம்பம் மட்டும் தான் தோன்றுகிறது ஆனால் அவர்கள் அடைந்த துயரங்கள், வேதனைகளைஅறிகையில் வார்த்தைகள் ஏதுமற்று கண்ணீரோடு கலங்கி அமர்ந்திருந்தேன். நாம் அறிந்திராத பல உண்மைகள் நெஞ்சைஉலுக்குகின்றன. பல நேரங்களில் இத்துப்போன வெளிறிய உடைகளுடன், அதை பல இடங்களில் ஒட்டு போட்டு தைத்து அணிந்துகொண்டிருந்தது,  கிழிந்த ஆடையை அணிய முடியாமல் வேறு உடை கேட்ட பெண் போராளிக்கு அடுத்த முறை மாற்று உடை கொண்டுசெல்லும் முன் போரில் அவள் உயிர் துறந்தது, காட்டுக்குளேயே வாழ்ந்து காட்டு மரங்களில் தமக்கு பிடித்தமானவர்களின் பெயரெழுதிபார்த்து, கனவிலே காதலித்து அங்கேயே மாண்டு போனது, நேற்று சிரித்து கதைத்த தோழி இன்று குண்டடிபட்டு இறந்த செய்திகளைதொடர்ந்து கேட்பது, கண்ணெதிரே உறுப்புகள் சிதைவது, உயிரிழப்புகள் நேர்வது, உயிருக்குயிராக நேசித்த தங்கை யுத்தத்தில்மடிந்தது, கதறி அழுத தாயாருக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் மௌனமாய் திரும்பியது என ஒவ்வொரு தருணமும் உயிர்வலி தரக்கூடியதாக இருக்கிறது. ஆயுதமேந்தி மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் போராடிய பெண், திரும்பவும்  சராசரி வாழ்க்கைக்குதிரும்புகையில் அவளை சமூகம் மொத்தமாக நிராகரிப்பதை தமிழினி கடும் வேதனையுடன் பதிவு செய்கிறார். ஒரு முறை ஆயுதம்ஏந்தியவள் பின்பு ஒருபோதும் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முடிவதில்லை.

சிவகாமி ஜெயக்குமார் கணவருடன்

இந்த புத்தகம் வந்தபொழுது தமிழினி மேல் கடுமையான அவதூறுகள் பரப்பப்பட்டன. வழக்கம் போல் நம்பிக்கை துரோகி, விலைபோய்விட்டார் இன்னும் ஏதேதோ குற்றச்சாட்டுகள். அதுவும் இங்கு தமிழகத்தில் வெறும் கோஷங்களில் தங்களது வீரத்தை காட்டும்காகித புலிகள் இந்த புத்தகத்தை கடுமையாக எதிர்த்தனர். ஒரு சித்தாந்தத்தை உயிர் கொடுத்தோ அல்லது எடுத்தேனும் காப்பது, எதிர்கேள்வியே இல்லாமல் வழிபடக் கூடிய ஒற்றைத் தலைமை, அமைப்பின் விதிகளுக்கு முரண்பட்டால் மரண தண்டனை, விலகி சென்றால்சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தூக்கிலிடுதல், ஆயுதத்தின் மூலம் மட்டுமே தீர்வு என செயல்படக்கூடிய எந்த அமைப்பும் அடைந்தவீழ்ச்சியை அதில் மக்கள் அடைந்த இழப்புகளை உலக வரலாறு தொடர்ச்சியாக நமக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றன. அதைத்தான் தமிழினியும் விரிவாக பதிவு செய்திருக்கிறார். எங்கும் எவரையும் சிறுமைப்படுத்த வேண்டும் அதன் மூலம் தான் பலன்பெறவேண்டும் என்பது உறுதியாக அவரின் நோக்கமாக இருந்திருக்காது. இந்த புத்தகத்தை எழுதுகையில் அவர் புற்றுநோய்தாக்கப்பட்டு தனது இறுதி நாட்களில் இருந்தார். கிட்டத்தட்ட இதை அவரின் மரண வாக்குமூலமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்புத்தகத்தின் முதல் பதிப்பு வெளிவருகையில் தமிழினி உயிர் நீத்து விட்டார். தாங்கள் பயணித்த தவறான பாதையில் மீண்டும் யாரும்சென்றுவிடக்கூடாது, மற்றுமொரு பேரழிவிற்கு மக்களை கொண்டு சென்று விடக்கூடாது என்ற பெருவிருப்பதின் அடிப்படையில்   இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.

கட்டுரையாளர் செந்தில்குமார்

வெண்முரசில் வல்லமை கொண்ட மைந்தர் மட்டுமே வேண்டும் என  விரும்பும் அசுர அரசர் தனுவிடம், அவரின் அரசி ரம்பை கண்ணீருடன் மன்றாடுவாள். “நான் விழைவது மைந்தனை மட்டுமே, என் தூண்டிலில் வைக்கும் புழுக்களை அல்ல” என்பாள் ரம்பை. “நீ பெண், நான் அரசன்” என்பான்தனு. “நீங்கள் அரசர், நான் அன்னை” என்பாள் ரம்பை. தமிழினி ஒரு அன்னை. 

***

ஒரு கூர்வாளின் நிழலில்: சிவகாமி ஜெயக்குமார் என்ற தமிழினியின் தன்வரலாற்று நூல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண்கள் பிரிவின் தலைவியாக இருந்தவரின் நினைவுப்பதிவாக இந்த நூல் முக்கியமானது. காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

சிவகாமி ஜெயக்குமார்/தமிழினி: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *