பெண் இதழ்கள் – ரம்யா
பெண்களுக்கென தனி இதழ் வேண்டும் என்ற எண்ணம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டது. பொ.யு 1835-க்குப் பிறகு தமிழர்கள் அச்சு இயந்திரங்களை சொந்தமாக்கி அச்சிடத் துவங்கிய காலகட்டத்திற்குப் பின்னர் அச்சுப் புத்தகங்கள் வெளியாகின. அரசியல் சமூகவியல் காரணங்களுக்காக இதழ்கள் உருவானதென்றாலும் இணையாகவே புனைவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மெல்ல நவீன இலக்கியம் வளர ஆரம்பித்த காலகட்டமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியே. ஆரம்பகாலத்தில் ”பெண் இதழ்கள்” என்பது பெண்கள் வாசிப்பதற்காக வெளியிடப்படும் இதழ் என எளிமையாக வரையறுக்கப்பட்டது. பெண்களை ஆசிரியராகக் கொண்டோ அல்லது இல்லாமலோ; பெண்கள் மட்டும் அல்லது ஆண்களும் எழுதுவதாகவோ அவை இருந்தன. ஆனால் இன்று அதன் வரையறை மாறியுள்ளது.
தமிழ்ப் பெண்கள் இதழ்களைப் பொறுத்து விடுதலைக்கு முந்தைய காலகட்ட இதழ்களை 1905-ல் பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்திப்பதற்கு முன் – பின் என்று பிரிக்கலாம். அதற்கு முன் இருந்த இதழ்களில் பெரும்பாலும் பெண்களுக்கான அறிவுரைகளே இருந்தன. படித்த முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஆண்களின் குடும்பத்திலிருந்த பெண்களுக்கான அறிவுரைகள் மற்றும் பொழுது போக்கும் அம்சத்தைக் கொண்டவையாக இவை இருந்தன. பழமொழிகளும், விடுகதைகளும் தவறாமல் இடம் பெற்றன. கதைகள் இன்றைய நோக்கில் சிறியவர்களுக்கான எளிய கதையம்சம் கொண்டவையாக இருந்தன. பாரதி-நிவேதிதா சந்திப்புக்குப் பின் படைப்பிலக்கியம் சார்ந்து பெரிய அளவில் மாற்றம் நிகழவில்லை எனினும் “புதுமைப் பெண்” என்ற ஒரு லட்சிய பிம்பத்தை தமிழ்ச்சமூகத்துக்கு அவர் அறிமுகப்படுத்தினார். அறிவும், நிமிர்வும் கொண்ட ஆண்களுக்கு உற்ற துணையாக இருக்கும் ஒரு ஆளுமையாக பாரதி அவளை உருவகித்தார். ஆனால் படைப்பிலக்கியம் சார்ந்து புதிய முன்னெடுப்புகள் பெண்களுக்கென சிறப்பாக நிகழவில்லை.
1883-ல் இ.பாலசுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு சுகுணபோதினி என்ற பெண்கள் இதழை முதல் இதழாகக் கொண்டாலும் கூட நூற்றி நாற்பது வருடங்களுக்கும் மேலாக இதழ்களில் பெண்களுக்கென இத்தகைய தனிப் போக்குகள் ஆரம்பித்துவிட்டன. உண்மையிலேயே பெண்கள் எழுதினார்களா? அல்லது பெண்களின் பெயரை புனைப்பெயராகக் கொண்டு ஆண்கள் எழுதினார்களா என்ற சந்தேகங்களை எல்லாம் ஓரம் வைத்தாலும் கூட ஆண்களுக்கு இணையாக எண்ணிக்கை அளவில் பெண்கள் புழங்கியிருக்கும் தளமாகவே இதழியல் உள்ளது. ஆனால் தீவிர இலக்கிய இதழ்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அங்கு பங்களிப்பாளர்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் காணமுடிந்தது.
அதற்கான ஒரு காரணமாக இலக்கிய வம்புகள், சண்டைகள் அதிகம் நிகழ்ந்தது என்ற காரணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த இலக்கியச் சண்டைகளே நவீன தமிழ் இலக்கியத்தின் செல்திசையைத் தீர்மானித்ததாக எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். வெங்கட் சாமிநாதனுக்கும், கா.ந.சு -விற்கும் இடைப்பட்ட ரசனை வேறுபாட்டின் வழியாக நிகழும் உரையாடல் ஒட்டுமொத்தமாக நவீனத்தமிழிலக்கியத்தின் ரசனை உருவாக்கத்திற்கு துணை புரிந்திருக்கிறது என்கிறார். இந்த நெடிய இலக்கிய மரபில் கறாரான விமர்சனப் போக்கு கொண்டவர்கள் என க.நா.சு, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடலாம். தொடர்ந்து தங்கள் ரசனை மதிப்பீட்டை முன் வைத்ததன் வழியாகவும், அதன் மேல் தொடர்ச்சியாக வாசகர்களின் உரையாடல் நிகழ்ந்ததைக் கொண்டும் ஒரு எழுத்தாளர்களின் வரிசையை தமிழ் இலக்கிய உலகில் இவர்கள் முன்வைத்தனர். இந்த விமர்சகர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டவர்களே பெரும்பாலும் இலக்கிய உலகில் நுழையும் இன்று எழுத்தாளர்களுக்கு, வாசககர்களுக்கு முதன்மையாக படித்துப் பார்க்க உதவும் பாடத்திட்டமாக உள்ளனர்.
ஆனால் பெரும்பான்மையான பெண்கள் இதழ்கள் இந்த மைய இலக்கியப் போக்கிலிருந்து விலகியே இருந்துள்ளனர். தீவிர இலக்கிய இதழ்கள் அல்லது விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்த இதழ்களான மணிக்கொடி, எழுத்து, கசடதபற, பிரக்ஞை, மீட்சி, சொல்புதிது போன்ற இதழ்களில் மிகக் குறைவான பெண் படைப்பாளர்களே எழுதினர். இந்தத் தீவிர இலக்கிய இதழ்களுடன் உரையாடிய பெண் படைப்பாளர்கள் இன்றும் நினைவுகூறத்தக்கவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து இதழில் கி.சரஸ்வதியம்மாளின் “நிழலும் ஒளியும்” நாவல் (ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல்) குறித்த வெ.சா -வின் விமர்சனம் நீலியில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. போலவே ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு குறித்த சி.சு.செல்லப்பா மற்றும் ஜேசுதாசனுக்கு இடையே நிகழ்ந்த உரையாடலும் பிரசுரம் செய்யப்பட்டது. அழிசி ஸ்ரீநி எழுத்து இதழில் வெளியான சூடாமணியின் ஒரு கதை குறித்த எதிர்மறை விமர்சனத்தையும் அதற்கான சூடாமணியின் பதில் கடிதத்தையும் காண்பித்தபோது அவர் எழுதிய கதையுடன் இணைத்து அவை மறுபிரசுரம் செய்யலாம் என்று சொன்னேன். ஒரு சுமாரான கதை எப்படி எழுத்து இதழில் வந்தது, இதற்கு யாரும் எதிர்வினையாற்றவில்லையா? என்ற எண்ணம் வந்தபோது தான் வெ.சா 6-வது இதழில் எதிர்வினையாற்றியது நிம்மதியைத் தந்ததாகச் சொன்னார். ஆனால் இதை மறுபிரசூரம் செய்ய வேண்டாம் என்ற கருத்தையும் உடன் முனவைத்தார். ஏன் என்று கேட்டபோது சூடாமணி பிற்பாடு பல கதைகளை எழுதியிருக்கிறார், இதை பிரசுரம் செய்து அவரை அறிமுகப்படுத்துவது சூடாமணிக்கு நாம் செய்யும் நன்மை இல்லை என்றார். என்வரையில் அது நீலியில் பிரசுரம் செய்யப்பட வேண்டியது மிக முக்கியம் என்று கருதினேன். விந்தியா, சரோஜா ராமமூர்த்தி, ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, லஷ்மி, கி. சரஸ்வதி அம்மாள், ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, அம்பை உள்ளிட்ட எழுத்தாளர்களில் யாருடைய பெயரை குறைந்தபட்சம் நாம் நினைவு கூற முடிகிறது என்று நோக்கினால் தீவிர இதழ்களில் எழுதி ஓரளவேனும் தொடர் உரையாடலில் இருந்தவர்கள் மட்டுமே. சூடாமணி அவ்வாறு உரையாடியவராக முன்வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
சரோஜா ராமமூர்த்தி, விந்தியா போன்ற பெயர்கள் மறக்கப்பட்டதன் காரணம் அவர்கள் எழுத்து போன்ற இதழ்களுடன், அக்காலகட்டத்தில் புதிய வீச்சுடன் எழுந்து வந்து கொண்டிருந்த மையச் சூழலுடன் உரையாடாமல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. கலைமகள் போன்ற பெண்கள் அதிகம் புழங்கிய இதழ்களில் எழுதியவர்கள் அதன் தரப்போக்கோடு இணைந்து தங்களுடைய உச்சப்படைப்புகளை படைக்காமல் ஆயினர். வணிக இதழ்களில் எழுதி பெயரும் புகழும் பெற்றவர்களை இந்தத் தேடலில் கவனத்தில் கொள்ளவில்லை.
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் இதழ்கள் நடத்திய பெண்களான குகப்ரியை, வை.மு. கோதைநாயகி அம்மாள் (ஜகன்மோகினி), எஸ். விசாலாட்சி (ஹிதகாரிணி), சகோதரி வி. பாலாம்மாள் (சிந்தாமணி), மு. மரகதவள்ளி (மாதர் மறுமணம்) போன்றவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்டிலும் இதழியல் செயல்பாடுகளின் பொருட்டே நினைவில் உள்ளனர். அங்கிருந்து நவீனத்தமிழ் இலக்கியத்தை மாற்று திசைக்கு எடுத்துச் சென்றவர்கள் என ஒருவரையும் குறிப்பிட இயலவில்லை.
பெண்கள் நடத்திய பெண்கள் இதழ்கள், ஆண்கள் நடத்திய பெண்கள் இதழ்கள் என எந்தவகையான வகைப்பாட்டை எடுத்து நோக்கி ஆராய்ந்தாலும் தீவிர விமர்சனப் போக்குகள் கொண்ட கட்டுரைகள் வெளிவந்ததா? தீவிர இலக்கியப் படைப்புகள் வெளிவந்ததா? போன்ற கேள்விகளுக்கு “இல்லை” என்றே பதில் சொல்ல முடிகிறது. மாறாக பெண்கள் எழுத வருவதே பெரிதாக இருந்தது என்னும் ரீதியில் கவிதைகளும், புனைவுகளும் வெளிவந்தன. வெறுமே நூல் அறிமுகமாகவும், பெண்கள் எழுதுவதற்கான பிரிதொரு தளமாக மட்டுமே இந்த இதழ்கள் இருந்தன.
விடுதலைக்கு முந்தய காலகட்டத்து இதழ்களில் மரபு, பண்பாடு, குண மேன்மை, குடும்பக் கடமைகள், பெண்கல்வி, பொது அறிவு, குழந்தை வளர்ப்பு, பொழுது போக்கு, தோட்டக்கலை, நீச்சல், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் போன்ற எளியவைகளைப் பேசுபொருளாகக் கொண்டே இதழ்கள் வெளிவந்தன. “பெண்களுக்கு நன்றாய் உபயோகப்படும்படி அவர்களுக்கு எவை முக்கியமோ அவற்றை பற்றி அதிகமாக எழுதப்படும். இதில் பெரும்பாலும் எம்மதத்தவர்களுக்கும் சம்மதமானவை மட்டும் எழுதப்படும். பெண்களின் நன்மையை நாடும் விஷயங்களை எழுதி அனுப்புங்கள். பெண்கள் நமது நாட்டில் தலையெடுக்க வேண்டுமென்று விரும்புங்கள். இதைப் பரவச் செய்யலாம்” என்பதே சுகுணபோதினியின் நோக்கமாக இருந்தது. சுகுணபோதினியில் இடம்பெற்ற சிறுகதைகள் பெரும்பாலும் சிறார்களுக்கானவை. நாட்டுப்புறக் கதைகளை, நீதிக் கதைகளை அடியொற்றி, அறிவுரை கூறும் விதத்தில் இவை எழுதப்பட்டன. “பெண்மதிபோதினி”, “மஹாராணி”, ”மாதர் மித்ரி” இதழும் இத்தகைய போக்கு கொண்டதே. இவற்றில் கிருபா சத்யநாதன் தொடங்கிய ”தி இந்தியன் லேடீஸ் மேகஸின்” மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைத் திருமணம், பெண் கல்வி, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது.
விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் குழந்தைத்திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்கல்வி, பெண்சிசுக்கொலை எதிர்ப்பு போன்றவைகள் பேசுபொருளாக இருந்தன. ஜகன்மோகினி, நந்தவனம் ஆகியவை இக்காலகட்டத்தைச் சேர்ந்த இதழ்கள். இடைக்காலத்தில் பெண்களுக்கான சொத்துரிமை, வன்கொடுமைகளுக்கெதிரான போராட்டம் ஆகியவை முக்கிய பேசுபொருளாக இருந்தன. சட்ட அறிவுரைகள், மருத்துவ அறிவுரைகள் ஆகியவை வெளிவந்தன. சுமங்கலி இதழை இக்காலகட்டத்தின் இதழாகச் சொல்லலாம். எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் உடல் அரசியல், பெண்ணியம், பெண் மொழி போன்றவை முன்வைக்கப்பட்டன. இந்தப் போக்கு மற்றும் இதன் சுவடுகளை பனிக்குடம் இதழ் வரை காண முடிகிறது.
தொண்ணூறுகளுக்குப் பிறகு வந்த பெண் இதழ்களில் பனிக்குடம் இதழ் முக்கியமானது. 2002 முதல் 2007 வரை குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த நூல். பனிக்குடத்தில் வெளிவந்த நேர்காணல்கள் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு விரிவான சித்தி்ரத்தை அளித்தது. அன்றைய சூழலில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் அனைவருமே அதில் எழுதினர். ஆனால் அவற்றிலும் ஆவணப்படுத்தல் தன்மையும், பெண்ணியம், உடலரசியல் சார்ந்த உரையாடலும் நிகழ்ந்ததே தவிர தீவிர இலக்கியப் போக்குடன் ஒரு உரையாடலை நிகழ்த்த அவை தவறிவிட்டது. முற்றிலும் பெண்கள் மட்டுமே படைப்புகள் அளிப்பதும் ஒருவகையில் தளையாகக் கூடும் என்பது இதன்வழியாகப் புரிந்தது.
புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர்களும் பெண்களுக்கான இதழ்களை நடத்தினர். நூலகம் ஆவண்க்காப்பகத்தில் பெரும்பாலான இதழ்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அவைகளை ஆராய்ந்ததில் பிரவாகினி, சக்தி, நிவேதினி, பெண்கள் சந்திப்பு மலர் ஆகிய இதழ்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன. மேலை நாட்டு பெண்களின் இலக்கியம் பற்றிய அறிமுகங்கள், உரையாடல்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த இதழ்களில் உள்ள முக்கிய குறைபாடாக கவிதைகளின் பெருக்கத்தைச் சொல்லலாம். பெரும்பாலும் பெண்ணியக் கோஷங்கள், ஆணாதிக்க எதிர்ப்பு, ஈழப்போராட்டம் சார்ந்த குமுறல்களே கவிதைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெண்களுக்கான அரசியல், சமூகவியல், உயிரியல் சார்ந்த பிரச்சனைகள் பெண்களுக்குத் தடையாகவே இருந்து வந்திருக்கின்றன என்பது சுகுணபோதினி முதல் பனிக்குடம் வரையான ஆய்வில் தெரிகிறது. அதைத் தவிர்த்துவிட்டு மையத்தில் தீவிர இலக்கிய ஓட்டத்துடன் உரையாடக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட பெண்கள் சொற்பமானவர்களே. அத்தகைய பெண்களை அதே காலகட்டத்தைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கவே செய்திருக்கின்றனர். உமா மகேஸ்வரியைப் போன்ற படைப்பாளரை தொடர்ந்து முன்னிலைப் படுத்துவது யார்? என்பதிலிருந்தே இதற்கான விடையை நாம் சென்றடையலாம்.
பெண் படைப்பாளர்கள், படைப்புகள், இதழ்கள் சார்ந்து உள்ள குற்றச்சாட்டுகளை ஒரு புறம் ஒதுக்கிக் கொண்டு தீவிர இலக்கியச் சூழலை நோக்கி சில கேள்விகளை எழுப்பிக் கொள்வது இன்று உள் நுழையும் ஒரு பெண் எழுத்தாளருக்கு முக்கியமானது. ”ஏற்கனவே இருக்கும் விமர்சன அளவுகோல் பெண் படைப்புகளை மதிப்பிட போதுமானதா? தமிழ் விமர்சன மரபு ரசனை மரபு ஏன் ஒருவரை முன்வைக்கிறது அல்லது ஒருவரை விலக்குகிறது? ஆண்மையப் பார்வை உண்மையில் தமிழிலக்கியத்தில் உள்ளதா? உலக இலக்கியத்தில் பெண் எழுத்தின் போக்குக்கும் அல்லது இந்திய இலக்கியத்தில் பிற மொழிகளில் பெண்களின் போக்கிற்கும் தமிழ் மொழியில் பெண் எழுத்தின் போக்கிற்கும் உள்ள தூரம் எவ்வளவு? பெண்மொழி, பெண் வெளிப்பாட்டு வடிவம், பெண்தன்மை என பிரத்யேகமான ஒன்று பொதுவாக இலக்கியத்தில் உள்ளதா, அதன் வழியாக உச்சம் தொட்ட படைப்புகள் என்பவை எவை? இதுவரை எழுதப்பட்டவைகளில் பெண் எழுத்தில் தீவிரப் படைப்புகள் என்று இனம் காணத்தக்க படைப்புகள் எவை?” படைப்பிலக்கியம் சார்ந்த பெண்களுக்கான இதழ்கள் முதன்மையாக செய்ய வேண்டிய பணியாகவே இக்கேள்விகளைக் கொள்ளலாம். இது ஒரு மிகப் பெரிய பணி. இக்கேள்விகளையெல்லாம் இதுவரை வந்த பெண்கள் இதழ்கள் முழுவதுமாக எடுத்துக் கொண்டு விவாதிக்கவில்லை.
இலக்கிய மரபு முன்வைக்கும் விமர்சன அளவுகோலை முழுமையாக விலக்குபவர்களுக்கும் இந்த உரையாடலுக்கும் தொடர்பில்லை. அதை நிராகரிப்பவர்கள் கலையின் உச்ச சாத்தியத்தை நிராகரிப்பவர்கள். கலையை இலக்கியத்தின் ஆன்மா எனலாம். ஆண்-பெண் என்பதும், தலித் என்பதும், சிறுபான்மையினர் என்பதும், பிற யாவும் தளையே. முதலில் அவை தளை என உணரப்பட வேண்டும். அதற்கு முன் அவை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் கொண்டிருப்பது ஒரே ஜோதியே. ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமையானது.
படைப்பிலக்கியம் சார்ந்த பயணத்தில் பெண்களுக்கான இதழ்கள் எவ்வகையில் உதவி புரிந்தன அல்லது புரியவில்லை என்பதைப் பற்றி புரிந்து கொள்ள மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் அவற்றில் கிடைத்தனவா என்று ஆராய வேண்டியுள்ளது. ஆனால் அதற்கான விடை ”இல்லை” என்றே கிடைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெண் இதழ்கள் என்பது பெண்கள் படிப்பதற்காகவோ அல்லது பெண்கள் மட்டுமே ஆசிரியராக இருந்து, பெண்களே எழுதி, பெண் படைப்புகள் மட்டுமே வெளிவரும் இதழாக இருக்கக் கூடாது. மாறாக இலக்கியத்திலுள்ள பெண்-தன்மையை அங்கீகரிக்கும் விதமாக, ஆய்வு செய்யும் விதமாக அமைய வேண்டும். அது இதுவரை எழுதப்பட்ட பெண் படைப்புகளுக்கான சரியான ரசனை மற்றும் விமர்சன மதிப்பீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதன்வழியாக அதற்கான விமர்சன அளவுகோலையும், அது சென்று தொட இயலும் உச்ச சாத்தியத்தையும் கண்டறிய வேண்டும். இலக்கியத்தில் ”பெண் தன்மை” என்பதற்கான வரையறை உருவாகி வர பெண் இதழ்கள் வழிவகை செய்ய வேண்டும்.
*
”கவிஞன் காலத்தைக் கடந்த ஒரு அனுபவத்தையே கவிதை வழியாகக் கடத்த முற்படுகிறான்” என கவிஞர் தேவதேவன் சொல்வார். எழுத்தாளரும் காலத்தைக் கடந்தவரே. காலம் எனில் உடலைக் கடந்தவரும் ஆவார். உடலைக் கடந்தவர் எனில் பெண் என்பதை, தலித் என்பதை, சிறுபான்மையினர் என்பதை, இன்ன ஊர், இன்ன சாதி, இன்ன மதம் என்பதையும் கடந்தவரே. அனைத்தையும் உதிர்த்து உதிர்த்து கலையின் உச்ச சாத்தியத்தை எய்த அவர் முயல்வதற்கான வாய்ப்பையே இதழ்கள் முதன்மையாக ஏற்படுத்தித் தர வேண்டும். பிறப்பால் நமக்கு ஏற்படும் அடையாளங்களை நம்மால் ஏதும் செய்ய இயலாது. ஆனால் கலைஞனால் அவற்றைத் தன் படைப்பு வழியாக உதிர்த்து மேலெழ முடியும் என்றே தோன்றுகிறது. கொடுக்கப்பட்ட அடையாளங்கள் வழியாகவும், அதைக் கடந்து நம்மால் என்ன செய்ய இயலும் என்பதையே கலை நம்முன் கோரி நிற்கிறது. அவற்றை இதுகாறும் உருவாகி வந்த பெண் இதழ்கள் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும்.
*
உசாத்துணை:
- பெண் எழுத்து – இரெ.மிதிலா: 1901-1950 காலத்தில் உருவான பெண் படைப்புகள் குறித்த உரையாடலும் ஆவணமும் – அடையாளம் பதிப்பகம்
- உடலெனும் வெளி – அம்பை – கிழக்கு பதிப்பகம்
- விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – 2 (பெண்ணெழுத்து – 1: 1907-1947): தேவும் தொகுப்பும் – அரவிந்த் சுவாமிநாதன் – யாவரும் பதிப்பகம்
*