”நீர்” : சமூக முன்னேற்றத்திற்கான முதல்படி – மதுமஞ்சரி

(மதுமஞ்சரியுடன் ஒரு உரையாடல்)

மதுமஞ்சரி

நீடித்த நிலையான சுற்றுசூழல், மனித வளர்ச்சி, தன்னிறைவுப் பொருளாதாரம் போன்ற சொல்லாடல்கள் கடந்த பத்தாண்டுகளாக உலக அளவில் பேசுபொருட்களாக உள்ளன. ஆனால் இந்தியாவில் காந்தியும் காந்தியவாதிகளும் இவற்றை விடுதலைப் போராட்ட காலத்திலேயே நம் எதிர்கால இலக்குகளாக விதைத்திருந்தனர். அவற்றின் தேவையை முழுமையாக உணர்ந்து கொண்டிருக்கும் தொண்ணூறுகளின் தலைமுறை ஒன்று இப்போது உள்ளது. 2015-ல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த பதினைந்து ஆண்டுகால செயல்திட்டத்தின்படி நீடித்த நிலையான வளர்ச்சிக்கென பதினேழு இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஆறாவது இலக்காக “குடிநீர் மற்றும் சுகாதாரம்” (SDG 6: Drinking Water & Sanitation) அமைந்துள்ளது. 

உலகத்தின் ஒரு பக்கத்தில் பாதிப்பு நேர்ந்தால் அது இன்னொரு பக்கத்தையும் தன்னிச்சையாக பாதிக்கிறது. உயிர்க்கோளத்தின் ஒரு கூறில் ஏற்படும் பாதிப்பு மற்றொன்றை பாதிக்கிறது. பிரபஞ்சத்தின் கூறுபடுத்த இயலாத முழுமையை உணர்ந்து, “யாதும் ஊரே” என்பதையும் “வசுதைவ குடும்பகம்” என்பதையும் மனதில் நிறுத்தி உலக அளவில்  ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“தனி மனித லெளகீகத்திற்கான வேலைகளை நிறுத்திக் கொண்டு கூட்டான மன நிலையில் உலக நன்மைக்காக செயலாற்ற வேண்டும்” என்று வாழ்ந்த நிகமானந்தாவை தன் வாழ்வின் ஊக்கியாகக் கொண்டு செயல்படுபவர்களே இக்காலகட்டத்தின் தேவை. தனக்காக அன்றி பிறருக்காக உழைக்கும் மன நிலைக்கு மானுடத்தின் மீதான பேரன்பும், பெருங்கருணையும் இன்றியமையாதது. ஆயுதங்களை விடவும், தோள்வலிமையை விடவும் இவற்றைக் கை கொள்வதற்கே வலிமை தேவை. அத்தகைய வலிமை பெண்களிடத்தில் இருப்பதாகவும், அவற்றை முன்னெடுப்பதற்கான மிகப்பெரும் சக்தி அவர்கள் தான் என்றும் காந்தி நம்பினார். அப்படியான எண்ணற்ற பெண்களில் மதுமஞ்சரி ஒரு முகம்.

தமிழ்நாடு பாடபுத்தகம்

தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைத்தவிர்த்து மேற்பரப்பு நீர்வள ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிணறுகள் (ஆதாரம்: 2017 தமிழ்நாடு புவியியல் கையேடு). ஆற்றுவடிநிலங்கள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றைத்தாண்டி இருபது லட்சத்திற்கும் அதிகமாக உள்ள கிணறுகளை நம்பியே தமிழகத்தின் நீர் ஆதாரம் உள்ளது. ஆனால் தனி மனித, சமூக, பொருளாதாரக் காரணங்களால் இந்தக் கிணறுகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து பராமரிப்பின்றி உள்ளன. அவற்றை மீட்பதென்பது அவை இருக்கும் இடத்தைச் சார்ந்த மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுப்புறங்களுக்கும் நன்மை பயப்பது. இத்தகைய முன்னெடுப்புகள் விரிவான தளத்தில் உலக நன்மைக்கும் உதவும் செயல்களே. அங்ஙனம் “ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தை தொடங்கி ஆடையூர், வலசை துருவம், நார்ச்சாம்பட்டி, அம்பேத்கர் நகர், நாயக்கனூர், செம்பியன்மாதேவி என பத்து கிணறுகளை புனரமைத்துள்ளவர் மதுமஞ்சரி. அவருடனான ஒரு உரையாடல்…

-ரம்யா

*

புனரமைத்த கிணறு

உங்களைப் பற்றியும் நீங்கள் வளர்ந்த குடும்பம், சூழல் பற்றியும் பகிர முடியுமா

என்னோட சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்துல சின்னாளப்பட்டினு ஒரு கிராமம். அப்பாவோட பூர்வீகம் அங்கதான். கூட்டுக் குடும்பத்துல வளர்ந்தேன். அப்பா செல்வராஜ் ஜவுளிக்கடை வச்சிருக்காங்க. அது எங்க தாத்தா, அவங்களுக்கு முன்னனு இருந்த பூர்வீகமான ஒரு கடை. குடும்பத்தோட எல்லாருமா சேர்ந்து வேல பாப்பாங்க. தாத்தா கடைய பார்த்தா, பாட்டி நூல் சுத்துவாங்க, அப்பா சாயம் போடுவாரு, இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையப் பாப்பாங்க. இப்டி சூழல்ல தான் சின்னவயசுல வளந்தேன். அப்பா பக்கம் ஜவுளி, கடை, சின்னாளப்பட்டி சுங்குடி சேலைனு இருந்தா, அம்மா சத்தியமங்கலத்துல சின்ன கிராமத்துல விவசாயக்குடும்பம் சார்ந்தவங்க. விடுமுறைக்கு அங்க போகும் போது அங்க நான் பாத்தது ஆடு, மாடுங்க, வயல், தோட்டம், ஆறு, விவசாயம் தான். இந்த ரெண்டு சூழல்லதான் என்னோட சின்னவயசு முழுசும் இருந்தது. திண்டுக்கல்ல எங்க ஊர்ல புதுசா ஆரம்பிச்சிருந்த ஒரு மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல படிச்சேன். கிட்டத்தட்ட அந்த ஸ்கூலும் என்கூட வளந்து வந்துச்சுனு சொல்லலாம். எனக்கு ப்ரியதர்ஷிணினு ஒரு அக்கா. அண்ணா திலகராஜன். அப்பறம் உடன்பிறக்காத ஆனா என்ன வளர்த்த சரவணன் அண்ணா. பத்தாவது வரை படிச்சிட்டு குடும்பச்சூழல் காரணமா எங்க கடைக்கு வேலைக்கு வந்தாங்க. இப்ப எங்க குடும்பத்தோட ஒரு அங்கம் அவரு.

கட்டிடக்கலையில்தான் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

சின்ன வயசுல இருந்தே வரையறது ரொம்ப பிடிக்கும். வண்ணங்கள் மேல ஒரு ஆர்வம். அப்பாவோட துணிக்கடைல பாக்கற விதவிதமான வண்ணங்கள் கூட வரையறது மேல ஆர்வத்த தூண்டுச்சுன்னு சொல்லலாம். அப்பாதான் எங்க வீட வடிவமைச்சாரு. அவருக்கு அது மேல ஒரு ஆர்வம். எங்க சொந்தக்காரங்க வீடு கட்டும்போதும் அப்பாதான் வடிவமைச்சாரு. இத எடுத்து படின்னு அப்பா சொன்னதில்ல. ஆனா எதோவொரு வகைல இந்த கட்டிடக்கலை படிப்பு அவரோட உள்ளுணர்வு வழியா எனக்குள்ள வந்ததாதான் நான் நினைக்கிறேன்.

அங்கிருந்து ”ஊர்க்கிணறு புனரமைப்பு” என்ற செயல் நோக்கி வந்தமைந்தது பற்றி சொல்லுங்கள்

படிச்சு முடிச்சதும் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டுறது மேல ஆர்வம் இருந்தது. நான் நிறைய கட்டிடக் கலைஞர்களப் பார்த்து பிரமிச்சிருக்கேன். வேறு மாநில ஆர்கிடெக்சர் ஃபர்ம்களிலையும் வேலை பார்த்தேன்.

சென்னை மாதிரி பெரு நகரங்கள்ல இருந்தப்ப என் வாழ்வே வேற மாதிரிதான் இருந்தது. வார இறுதி நாட்கள்ல ஷாப்பிங் மால் போறது; எல்லாரும் வச்சிருக்காங்கனு பொருட்கள வாங்கறதுனு நுகர்வின் உச்சத்துலதான் இருந்தேன். அந்த ஆசைகள்லாம் என்னோட அகத்துக்குள்ள இருந்து வந்த ஆசைகள் இல்ல. மாறா வெளிய இருந்து என்னை நோக்கி வர்ற ஆசைகளா இருந்தது. பொருள்தான் மரியாதைய நிர்ணயம் பண்றத அங்க பாத்தேன். அதுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அந்தத் தேவை தரக்கூடிய ஒரு பாதுகாப்பின்மைய உணர்ந்திருக்கேன். 

ஆனா, அங்க இருந்து குக்கூ வந்து நின்னப்ப பொருட்களோட தேவைன்னு ஒண்ணு இல்லைனே பட்டது. அதுனால கிடைக்கக்கூடிய மரியாதையும் ஒன்னுமில்லை. செயல் மூலமா வெளிப்படுறதுல கிடைக்கிறதே மரியாதைனு புரிஞ்சது. தேவையில்லாத பொருள குறைச்சதுமே வாழ்வு மகிழ்ச்சியா ஆகிடுச்சு. பெரிய சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருந்தது.

இப்படி மிகப் பெரியவற்றின் மேல, பகட்டின் மேல ஒரு விலக்கம் வந்தது. அந்தத் தேடல் மாற்றுவழி கட்டிடக் கலை செய்யக்கூடிய ”அகர்மா” அமைப்பு கிட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்தது. சிவராஜ் அண்ணாவை அங்கதான் பார்த்தேன். அவருடனான தொடர் உரையாடல் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டுவது, கழிவறை கட்டுவது மாதிரியான சிந்தனைகள எனக்குள்ள விதைச்சது. ஏற்கனவே மிகப்பெரிய வீடு இருக்கறவங்களுக்கு மேலும் மேலும் கட்டிடம்ன்றது அவசியமில்ல. அத நான் ஏன் கட்டணும்? தன் தலைக்குமேல கூரை இல்லாதவங்களுக்கு கட்டணும்ன்ற சிந்தனை வந்தது. 

சிவராஜ் அண்ணா ஒரு நாள் கங்கை மாசுபடுதலை எதிர்த்து 114 நாட்கள் விரதம் இருந்து உயிர் துறந்த நிகமானந்தா பற்றிய ”நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு” புத்தகத்தை கொடுத்தார். அந்தப் புத்தகம் படிச்சுட்டு அன்னைக்கு ராத்திரி தூக்கமே வரலை. தண்ணீருக்காக ஒருத்தர் தன் உயிரை மாய்ச்சுக்க முடியும்கிறதே என்னை ரொம்ப சலனப்படுத்துச்சு. இரவு முழுக்க அதை நினைச்சு அழுதுட்டிருந்தேன்.

குக்கூ வந்து அதைப்பத்தி அண்ணா கிட்ட பேசிட்டிருந்தபோது ”ஊர்க்கிணறு புனரமைப்பு” செய்யலாம்னு அண்ணா ஒரு யோசனை கொடுத்தார். “ஊர்க்கிணறு புனரமைப்பு” அப்படினு அன்னைக்கு என்னோட புத்தகத்தில எழுதினேன். அங்க இருந்து என்னோட பயணம் ஆரம்பிச்சது.

பொதுவாக இது போன்ற செயற்களத்தை வேலை செய்யும் துறையாக தேர்ந்தெடுக்கும்போது நெருக்கமானவர்கள், குடும்பத்திடமிருந்து எதிர்ப்புதான் அக்கறை என்கிற பேரில் வரும். அது இருந்ததா? 

அப்பாவோட துணை எனக்கு எப்பவும் இருக்கு. எங்க அக்காதான் எங்க ஊர்ல இருந்து முதல்ல காலேஜ்க்காக திண்டுக்கல் போய் விடுதில தங்கி படிச்சாங்க. அப்பறமும் அவங்க சென்னைக்கு போய் வேலை தேடறேன்னு சொல்லும் போதும், பூனாவுல வேலை கிடைச்சபோதும், வெளி நாடுகளுக்கு அங்க இருந்து போனப்பவும்னு அக்காவோட எல்லா வளர்ச்சிக்கும் அப்பா ஊக்கியாதான் இருந்தாங்க. சில வீடுகள்ல அப்பா இப்படி இருந்தா அம்மா பயப்படுவாங்க. ஆனா எங்க அம்மாவும் ரொம்ப தைரியமா இந்த செயல்பாடுகளுக்கெல்லாம் துணையிருந்தத பாத்திருக்கேன். என் வாழ்க்கைல சுதந்திரமா முடிவெடுக்க இதுவும் ஒரு காரணம். வீட்ல ரொம்ப சப்போர்ட்.

“ஊர்க்கிணறு புனரமைப்பு” என்பதற்கான இன்றைய தேவை என்ன?

புனரமைக்க வேண்டிய கிணறுகளைத் தேடும்போதுதான் எத்தனை கிணறுகள் அப்படி புனரமைப்புக்கு காத்துக் கொண்டிருக்குனு புரிந்தது. கிணறு மூடப்பட்டதற்கான காரணம் என்னை இன்னும் ஆச்சரியப்பட வைச்சது. தீண்டாமை காரணமா ஒரு கிணறு சுதந்திரத்திற்குப் பிறகும் கூட மூடப்படமுடியுமானு விளங்கிக்கவே முடியலை. காந்தியை அப்போதான் இன்னும் அணுக்கமா தெரிஞ்சுகிட்டேன். ”மண்ணில் உப்பானவர்கள், இன்றைய காந்தி” மாதிரியான புத்தகங்கள் எனக்கு மனிதர்களுக்காக செயல் செய்யும் உத்வேகத்தை கொடுத்தது. ”நீர், ஒரு சமூகம் முன்னேறுவதற்கான முதல் படி” ன்னு அங்கதான் தீர்க்கமா முடிவெடுத்தேன்.

ஊர்க்கிணறு

இதுவரை பத்து கிணறுகள் புனரமைத்திருக்கிறீர்கள். இந்தப் பயணத்தில் மறக்க முடியாத நினைவாக உங்கள் மனதில் தங்கிய சம்பவங்கள் என்று ஏதும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

மனதிற்கு நெருக்கமானது என்றால் “நாயக்கனூர் கிணறு”தான். முழுக்க முழுக்க விளிம்பு வரை குப்பையால மூடப்பட்ட கிணறு. எப்பவும் ஒரு இடத்தில கிணறு புனரமைக்க முடிவெடுக்கும் முன்ன அதுக்கான தேவையை முதல்ல தேடுவோம். அன்னைக்கு அந்தக் கிணறுக்கு பக்கத்துல இருந்த குடிசை வீட்டில ஒரு மெலிஞ்சு போன பதினாறு வயசுப் பொண்ணு தாய்ப்பால் கொடுத்துட்டிருந்தாங்க. அந்தப் பொண்ணுகிட்ட இருந்து அந்த குழந்தைக்கு சுரக்குற தாய்ப்பாலுக்காக இந்தப் பணிய இங்க ஆரம்பிக்கலாம்னு சிவராஜ் அண்ணா சொன்னது இன்னும் மண்டைல ஓடுது.

அந்தக் கிணறை தோண்ட ஆரம்பிச்ச போது அதை ஒரு தாத்தா நித்தமும் வந்து பார்த்துக்கிட்டிருந்தார். எத்தன அடி போயிருக்குனு ஒவ்வொரு நாளும் கேப்பார். இருபது நாளா வேலை நடந்துட்டிருந்தது. ஒரு நாள் முப்பத்தியிரண்டு அடி போயிருக்குனு சொன்னோம். “இன்னைக்கு தண்ணி வந்திரும் பாரு”னு சொல்லிட்டு போனார். அன்னைக்கு மாலை தோண்டிட்டிருந்தபோது  கரண்டிக்குள்ள நிக்கற மாதிரி கொஞ்சம் தண்ணி… (கண் கலங்குகிறார்.. சிறு மெளனம்) அந்த சின்ன அளவு தண்ணி மனசுக்கு நம்பிக்கையா இருந்தது. அந்த தருணத்த எனக்கு அருளப்பட்ட தருணமா நினைச்சேன். அந்த தாத்தா தான் அந்தக் கிணற தோண்டியவர்னு பின்ன தெரிஞ்சுக்கிட்டேன். அன்னைக்கு ஊர்மக்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்ட்டாங்க. கிணறு தோண்ட ஆரம்பிக்க அனுமதி கேட்ட போது அதை பல பொதுப்பயன்பாட்டுக்கு திட்டமிட்டிருக்கிறதாச் சொல்லி தடுத்த மக்களே தண்ணீர் ஊறி வரும்போது திருவிழா கொண்டாடுறது போல அந்தக் கிணறுக்கான துவக்க நாளை அமைச்சாஙக. மனதுக்கு நெருக்கமான நாளது.

இன்னொரு சம்பவும் சொல்லணும். பொதுவா இந்த புனரமைப்பு பணில அந்த ஊர் மக்கள்ல சிலரும் ஆர்வத்தின் பேரில தோண்ட வருவாங்க. அப்படி ஒருத்தர் மண்வெட்டியை வைச்சு தோண்டிட்டிருந்தார். அவரோட ரெண்டு வயசுக் குழந்தை கிணற்று மேல இருந்து எட்டி “அப்பா அப்பா” னு கூப்பிட்டுட்டு இருந்தது. ”என்ன! கிணத்துக்கு வரியா பாப்பா.. வா மண்ணள்ளிப் போடு. உனக்குதான் அப்பா தோண்டறேன்”னு சொன்ன அந்த சித்திரம் எனக்கு வேறு ஒண்ணை காட்டிச்சு. இது மாதிரியான நிகழ்வுகள்லாம்தான் என்னை மேலும் மேலும் செயல நோக்கி போக வைக்குது.

கிணற்றில் சுரந்த முதல் நீர்

நீங்கள் தேர்ந்தெடுத்த செயற்களம் கிராமத்தில் வெட்டவெளியில் தங்கி வேலை பார்க்கக் கூடியது. ஒரு பெண்ணாக பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் ஏதும் உள்ளதா? இயற்கை உபாதைகள், சிறுஓய்வு இதெல்லாம் எப்படி சாத்தியமாகின்றன? 

பாதுகாப்பு சார்ந்து எந்த சிக்கலும் இல்ல. மக்கள் நல்லா பாத்துக்கறாங்க. இயற்கை உபாதைகள் சார்ந்தும், பிற அனைத்துக்கும் மக்களே அழகா கவனமெடுத்துக்கறாங்க. அப்பறம் நண்பர்கள் இருக்காங்க. பிரச்சனையில்ல.

இந்த புனரமைப்புப் பணியில் நீங்கள் சவாலாகப் பார்ப்பது எதை?

மக்கள்தான். இந்த மக்கள் ஏழ்மையிலும் அறியாமையிலும் இருக்காங்க. ஒரு இடத்துல கிணறு புனரமைப்பதற்கான தேவையை சொல்லி விளங்க வைச்சு அவங்கள சம்மதிக்க வைக்கறதுதான் முதல் பெரிய சவால். தூர்வாரி முடியும் வரை அவங்க எங்ககிட்ட காட்டற சின்ன சின்ன கோவங்கள சமாளிக்க வேண்டியிருக்கும். எல்லாத்தையும் காந்தியிடமிருந்துதான் கத்துகிட்டேன். எதிர்ப்புகளுக்குப் பிறகு மக்கள் மேல மீண்டும் மீண்டும் அன்பும், நம்பிக்கையும் வைக்கறதுதான் இதுல உள்ள சவாலா பாக்கறேன்.

அவங்களுக்காக தான் முழுக்க முழுக்க வேலை செய்யப் போவோம். ஆனா அங்க இருந்து ஒரு சிறு உதவி கூட முதல்ல கிடைக்காது. எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்கும். சில சமயம் மிகவும் வலிமையா. முதல்ல அந்த கிராம மக்கள் கிட்ட பேசறது, அப்பறம் அங்க இருக்க பள்ளிக்கூடத்து குழந்தைகளிடம் நட்பா மாறி அதற்குப் பிறகு தான் வேலை செய்ய ஆரம்பிக்கணும். சாதி சார்ந்த, உறவு சார்ந்த சிக்கல்கள இந்த வேலைகள்ல காமிப்பாங்க. மக்கள அணுகறதும், ஒருங்கிணைக்கறதும்தான் கஷ்டம், அதை கத்துக்கிட்டே இருக்கேன். அப்பறம் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களும் இருக்கு.

ஒரு வேலை முடிஞ்ச பிறகு அதை முழுமையா தொடர்ந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர்றதுக்கும் மக்களோட ஒத்துழைப்பு தேவை. அந்தப் புரிதல ஏற்படுத்தறதும் சவால்தான்.

சவால்களைத் தாண்டி அவமானங்கள்னு ஏதும் உண்டா?

அவமானங்கள்னு சொல்ல முடியாது. ஆனா வேலைய ஆரம்பிக்கும் போது என்கிட்ட மக்கள் காமிக்கற அந்த நிராகரிப்ப தாங்கிக்க முடியாது. சிவராஜ் அண்ணா கிட்டதான் வந்து அழுவேன். அவர் அதை ஒன்னுமே இல்லாம பண்ணிடுவாரு. அந்த மக்கள பத்தி அவர் சொன்ன வார்த்தைகள் எப்பவும் நான் நினைச்சு பாத்துக்கறதுண்டு. “அவங்களுக்கு தேவையான ஒண்ண கூட பண்ணிக்கத் தெரியாத அறியாமைல இருக்கறாங்க இந்த மக்கள். இவங்களுக்குதான் இந்த செயல செய்றோம்ற எண்ணம் எப்பவும் இருக்கணும்” ன்ற வரிகள். இதை புரிஞ்சுகிட்டதுக்கு அப்பறம் மக்கள் சொல்ற எந்த சொல்லும் என்ன காயப்படுத்தறதில்ல. இப்பலாம் பெருசா என்ன எதுவும் அசச்சிட முடியாதுன்னு நம்பறேன்.

மதுமஞ்சரி

இவ்வளவுக்குப் பிறகும் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவது எது?

பிரச்சனைகளுக்கு இணையாவே தினம் தினம் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு சம்பவம் நிகழும் எனக்கு. நேத்து பாத்திங்கன்னா மழை பெய்ய ஆரம்பிச்சது. தார்ப்பாய் எடுத்து மூடப்போறதுக்குள்ள ஏழாவது எட்டாவது படிக்கற பசங்க அத மூட முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. நம்ம செய்யற செயலோட முக்கியத்துவம் தெரிஞ்ச ஒரு தலைமுறைய பாக்கறது ஊக்கமா இருக்கும். இது மாதிரி சில உணர்ச்சிகரமான மகிழ்வான சம்பவங்கள் துக்கங்களுக்கு இணையா நிகழறதால சமன்வயப்பட்டுப்போயிடுது.

முகநூல்ல, சமூக வலைதளங்கள்ல, சமூகத்துல காழ்ப்பு மட்டும்தான் கொட்டிக்கெடக்கான்னா அப்படி இல்ல. நேர்மறையும் அங்க இருக்கு. மக்கள் மேல நம்பிக்கை இருக்கு. எந்த ஒரு செயலும் செய்யறப்போ உயிர் போற அளவு போராட்டம் இருக்கும். அது முடியும் போது வெடிச்சு அழுது புன்னகையா மாறுகிற தருணம்தான் இத்தன நாளும் எனக்கு நடந்திருக்கு. செயல் நடக்க நடக்க நமக்கான மனிதர்கள் கிடச்சிட்டே இருப்பாங்க. அதுவும் இந்த அகச்சிக்கல போக்கறதுக்கான மருந்தா அமையுது.

இலக்கிய வாசிப்பு எப்படி செயற்களத்துக்கு உதவுகிறது உங்களுக்கு?

இலக்கிய வாசிப்புதான் மக்கள் கிட்ட போய் வேலை செய்யறதுக்கு என்ன தூண்டுது. அவங்க மேல நம்பிக்கை வைக்கறதுக்கு இலக்கியம் முக்கிய காரணம். நான் தொடர்ந்து வாசிக்கறவங்க காந்தி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன். கவிதைகள்ல தேவதேவன். காந்திக்கு இணையா புனைவு மிகவும் உதவுது. பல வகையான மனிதர்களோட வாழ்க்கைய புனைவுகள்ல பாக்கறதால மக்கள இன்னும் எளிமையா அணுக  முடியுது. 

எதிர்காலத்திட்டங்கள் என்ன?

கிணறு, ஏரி, வழித்தடம், நீர் நிலைகள உருவாக்க நம்ம முன்னோர்கள் எடுத்த மெனக்கெடல்களையும், அதை புனரமைக்கிறதோட முக்கியத்துவத்தையும் நம்ம தலைமுறைகளுக்கு, குறிப்பா பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும். இந்திய அளவிலும் அப்படியான நீர்நிலைகள், புனரமைப்பு சார்ந்து விழிப்புணர்வும், செயல்திட்டமும் வரும் காலங்களில செய்யணும்.

இந்த ஊர்க்கிணறு புனரமைப்பு க்ரெளட் ஃபண்டிங் மூலமாகத்தான் நடைபெறுகிறது. கிணறு புனரமைப்பதற்கு பொருளாதார ரீதியாக என்னென்ன தடைகள் இருக்கின்றன? எப்படி சமாளிக்கிறீர்கள்?

நண்பர்கள் வழியாகதான் இதுவரை பொருளாதாரத் தேவைகள் நிறைவடைஞ்சிருக்கு. இன்னைக்கு காலைல கூட சிமெண்ட் மூட எடுக்க பணம் இல்ல. நம்ம நண்பர்கள்ல ஒருத்தர் அனுப்பியிருந்தாங்க. இப்படி தேவை உருவாகும்போது அது பூர்த்தியாகறதுக்கு ஒரு நபர் சரியா வந்திடுவாங்க.

ஊர்மக்களே வந்து உடல் உழைப்பாக உதவி செய்தாலும் அவங்களுக்கு நாம சம்பளம் கொடுக்க வேண்டியதாயிருக்கும். ஒரு கிணறு புனரமைக்க இரண்டிலிருந்து மூணு லட்சம் வரை செலவாகுது. உதவி தேவைப்படுதுதான். சமீபத்தில அசோகமித்ரனோட மகன் அவரோட பிறந்த நாள முன்னிட்டு ஏரியை தூர்வாரினாங்க. அந்த மாதிரி அங்கங்க மக்கள் சுப காரியங்களுக்கு இது போன்ற முன்னெடுப்புகள் செய்யலாம்.

பொருளாதார சிக்கல் அதிகமா இருக்கு. சிறுகச் சிறுக பணம் சேரச் சேரதான் வேலை ஆரம்பிக்கறோம். அது தாமதம் ஆக ஆக வேலை தாமதம் ஆகும். சில சமயம் இடை நிற்கும்.

மதுமஞ்சரி

புரவலர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ஜெயமோகன் சார் ஒரு நேர்காணல்ல சொல்லிருப்பாரு, “அன்னதானம் போடறது வெறும் கழிவறைகளதான் நிரப்புமே தவிர பண்பாட்டு ரீதியா எந்த வளர்ச்சியும் செய்யாது” அப்படின்னு.. நான் அத கண்கூடா பாக்கறேன். திருவண்ணாமலைல பெளர்ணமி கிரிவலம் முடிஞ்சு அடுத்த நாள் பாத்தோம்னா மலை மலையா உணவு கொட்டிக்கிடக்கும். அப்ப என்ன தோணும்னா இது பண்பாட்டு ரீதியா எங்கையும் சேர்க்கல. ஏதோ ஒரு வகைல அந்த வீணாகற உணவு ஒரு குழந்தைக்கு கல்வியா மாறும்னா எவ்ளோ நல்லா இருக்கும்னு நினைப்பேன். புரவலர்கள் கிட்ட கேட்டுக்கறது என்னன்னா அவங்க இந்த மாதிரி உண்மையான பண்பாட்டு ரீதியான வளர்ச்சிய கண்டறிந்து அதுக்கு உதவுனா நல்லா இருக்கும்.

ஊர்க்கிணறு புனரமைப்புக்கு உதவ: Gpay: 9600713701

மதுமஞ்சரியின் பயணம் மேலும் சிறக்க நீலி இதழ் சார்பாக வாழ்த்துக்கள்!

இணைப்புகள்: 

  • Public Well Revival Movement | Sembiyanmadevi Village Public Well Revival
  • Public Well Revival Movement | Nayakkanur Public Well

9 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *