பெய்து தீராத மழை – கமலதேவி
(எழுத்தாளர் ஷீபா இ.கே – நீலலோகிதம் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து)

தன் எழுத்தைப்பற்றி எழுத்தாளர் ஷீபா கூறுவது….
‘யாரும் உரிமை கோர முடியாமல்
யாரின் அனுமதியும் இல்லாமல்
இங்கே நான் நானாகிவிடுகிறேன்.
கனவுகளின் வெளிச்சத்தில்
வாழ்கிறேன்
இறப்பதற்கு மீண்டும் பிறப்பதற்கு’
கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிந்தல்மண்ண ஷீபா இ.கே -ன் சொந்த ஊர். ஒய் டு கே (கதைகள்); ருது மர்மங்கள் (குறுநாவல்); நீலலோகிதம் (கதைகள்); துனியா (நாவல்) ஆகிய படைப்புகளை எழுதியுள்ளார்.
நீலலோகிதம் சிறுகதைத்தொகுப்பில் இருபத்து மூன்று கதைகள் உள்ளன. இந்தத் தொகுப்பை கவிஞர் யூமாவாசுகி மலையாளத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார். அனைத்து கதைகளுமே பெண்களின் கதைகள். சிறுமிகள், பதின்வயது பெண்கள், இளம்பெண்கள், நடுவயது பெண்கள் மற்றும் வயோதிகப் பெண்களை மையப்படுத்திய கதைகளாக உள்ளன. பெரும்பாலும் இந்தப்பெண்கள் உடல் சார்ந்த வன்முறைக்கு உள்ளாகிறார்கள் அல்லது அதில் தள்ளப்படுகிறார்கள். நான்கு பக்கங்களிலான சிறிய கதைகளாக இருந்தாலும் ஒரு தோட்டம் போல இந்தத்தொகுப்பு உள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைகள். விதவிதமான குணநலன்கள் உள்ள பெண்கள்.
இத்தனை சிறிய கதைகளிலும் நான்கு ஐந்து வரிகளில் சூழலையும், மன நிலையையும் கூறி அந்த இடத்தை, கதை மாந்தரை நமக்கு நெருக்கமாக்குகிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதத்துவங்கிய நம் பெண் படைப்பாளிகளின் மையமான கேள்வி ஷீபாவின் இந்த சிறுகதை உலகிலும் உள்ளது. அதனாலோ என்னவோ அவர்கள் பெண் உடல் பற்றி, மனம் பற்றி எழுதிக்கொண்டேயிருந்தார்கள். பெண் என்பவள் உடல் மட்டும் தானா? வேறெதுவும் இல்லையா? என்ற கேள்வி அது. அந்த காலகட்டத்தில் ஒரு நீலலோகிதம் அனைத்து பெண் படைப்பாளிகள் ஆழ்மனதிலும் மலர்ந்திருக்கலாம்.
இந்த சிறுகதைத் தொகுப்பில் கதைகள் மூன்று தளங்களில் உள்ளன. முதலாவதாக பெண்கள் மீதான வன்முறை கதைகள். இரண்டாவது குடும்பத்திற்குள் அடைபட்டிருக்கும் பெண்களின் கதைகள். மூன்றாவது பதின்வயதின் கனவுகளை அடைக்காகும் பெண்களின் கதைகள். மனிதர்கள் நிறைந்த கதையுலகம் இது. அன்றாட வாழ்க்கை உள்ள கதைகள் என்றாலும் அன்றாடம் மிகக்குறைவான கதைகளில் மட்டுமே உள்ளது. ஒரே நிலப்பரப்பில் நிகழும் கதைகளாகவும் இல்லை. ஒரே சாயல்கள் கொண்ட பெண்களும் இல்லை.
பள்ளிச்செல்லும் சிறுமி முதல் அறுபது வயது முதிர்ந்த பெண் என்ற வேறுபாடு இல்லாது பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். ஒரு கதையில் காணாமல் போன சிறுமியின் சீறுடை மட்டும் ஒரு நீர்நிலையில் மிதக்கிறது. நடந்த எதுவும் சொல்லப்படுவதில்லை. கல்லூரி முடித்தப்பின் திருமணமாகி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அடுத்த வேளை சமையலுக்கு ஆயத்தமாகும் அன்றாட பெண்களின் வெறுமை சில கதைகளில் உள்ளது. காதலனால் பாலியல் தொழிலிற்கு தள்ளப்படும் பெண். தத்தெடுக்கும் தந்தையால் வன்முறைக்கு உள்ளாகும் பெண் என்று பலவகை சுவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட பெண்களின் கதைகள் இவை.

தன் பக்கத்து ஊரான திருநெல்லி மிகவும் தொலைவாகிப்போன இல்லத்தரசி. அவளின் ஒரு நாளின் அன் றாடம் திருநெல்லிக்கான தூரங்கள் என்ற கதையில் உள்ளது. குடும்பமும் கணவனின் தாழ்வுமனப்பான்மையும் அந்தத்தொலைவை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது. இங்கு திருநெல்லி என்பது ஒரு குறியீடு. அவள் கனவுக்கான களம் மிக அருகில் இருக்கிறது. அதே போல சில புகார்க் குறிப்புகள் என்ற கதையில் அறிவாளி பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சராசரி கணவனின் மனநிலை அவர்கள் வாழ்க்கையை சிக்கலாக்கத் தொடங்குகிறது.
பெய்து தீராமல் என்ற கதையில் தரவாட்டில் வேலையில் இருக்கும் முண்டன், சிறுபிள்ளையில் இருந்து அந்தப்பெண்ணை தூக்கி வளர்க்கிறார். அவர் இறந்த பின்பு பெரியகுடும்பத்து பெண் யார் முன்னிலையிலும் அழக்கூடாது என்ற நிலையில், அழுகையை கட்டுப்படுத்தி அழுந்தி நிற்கிறாள். இது வெறும் அழுகையை கட்டுப்படுத்தும் கதையாக மட்டும் இல்லை. பெண் தன் இயல்புகளை தானே ஒடுக்கிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவது பற்றிய கதையாக இருக்கிறது.
தீவிரவாதியாகிப்போன ஒருவனின் மனைவியின் நிலை ஒரு கதையில் வருகிறது. நிலா வெளிச்சம் படரும் ஜன்னலருக்கே படுத்தபடி தன் காயங்களின் வலிகளுடன், நினைவுகளில் மூழ்கியிருக்கும் அவளுக்கு சட்டென்று இனி இந்த வாழ்க்கை தேவையில்லை என்று தோன்றுகிறது . வீட்டை திரும்பி பார்த்தபடி இருட்டுப்பாதையில் நடக்கத்தொடங்குகிறாள்.
தன் வீட்டிற்கு அருகில் வேலைக்கு வரும் ஜப்பானியருடன் ஒரு சிறுமி மகளின் அன்புடன் பழகுகிறாள். அவர் மறுமுறை வருவதாகக்கூறி ஜப்பானிற்கு திரும்பிச்செல்கிறார். அவருக்காக ஒரு செர்ரி மரத்தை வளர்க்கிறாள். நடுவயது வரை எப்போதாவது அவர் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அந்தப்பெண் இருக்கிறாள். அவர் இறந்த செய்தி அவளுக்குக் கிடைக்கிறது. அந்த மரத்தை பார்த்தபடி அவள் அவருடனான இனிய நினைவுகள் அப்படியே இருக்கட்டுமே…அவர் எங்கோ இருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறாள். அவர்களின் அன்பின் சாட்சியாக செர்ரி மரம் நிற்கிறது.
இன்னொரு ஒரு கோடை விடுமுறையில் மாமா அடித்ததன் பின் அந்த வீட்டிற்கு திரும்பி வராமல் போன ஒருத்தி அவரின் இறப்பிற்காக திரும்பி வரும் போது கோடைகாலங்களில் நினைவுகளில் மனம் தடுமாறுகிறாள்.
இந்தக்கதைகளில் வரும் பெண்களுக்கு வெவ்வேறு சிக்கல்கள் சூழல்கள் இருந்தாலும் சில அடிப்படை இயல்புகளில் ஒன்று போல இருக்கிறார்கள். உதாரணத்திற்கு எதையும் இழக்கத்தயங்குபவர்களாக, தங்கள் விருப்பங்களை கனவுகளில் காண்பவர்களாக, தங்கள் உணர்வுகளை மறைத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். பெண் இயல்புகளை சொல்லும் கதைகளாக இருக்கின்றன.
ஷீபாவின் சூழல் வர்ணனைகள் வாசிப்பவருக்கு கதையை அந்தரங்கமான அனுபவமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு அந்தியை, இரவை, உதயத்தை, மதியத்தை அவரால் நான்கு வரிகளில் அதன் வண்ணங்களுடன், சத்தங்களுடன், மலர்களுடன் சொல்லிவிட முடிகிறது. அந்த வர்ணனை கதாபாத்திரத்தின் மனநிலையுடன் நம்மை ஒன்றச்செய்கிறது. வெகுசில கதைகள் நிகழ்வுகளாக நின்றுவிடுகிறது.
இந்தக்கதைகள் அனைத்திலுமே பெண்களின் உடல் மன வலிகள், ஏக்கங்கள் பதிவாகியிருக்கின்றன. வாசித்தப்பின் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஆரஞ்சு நிற அந்தி நேரத்தை போல மனம் கனக்கிறது. அது கடக்க முடியாத அந்தி. தென்னங்கீற்றின் இடைவெளிகளில் தெரியும் நிலவைப் போல நம்மை மீட்டுக்கொண்டு வர ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அதுவே இந்த தொகுப்பின் முக்கியத்துவம்.
வளர்ப்பு தந்தையால் வன்முறைக்கு ஆளாகும் சிறுமியின் தாய் தன் கணவனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறாள். சிறுமியின் வயதுஒத்த பிள்ளைகள் தேர்வு முடிந்து விடுமுறைக்கு தயாராகிறார்கள். அவளின் ஆசிரியை வீட்டிற்கு வந்து நாளை மருந்துவமனை செல்லலாம். பின்பு இவர்களைப் போல உனக்கு ஒரு சுமையும் இல்லை. நீ இன்னும் குழந்தை என்று சொல்லிவிட்டு செல்கிறார். துணைக்கு படுத்துக்கொள்ள வரும் பக்கத்துவீட்டு அம்மாவும் இன்னும் நீ குழந்தை என்கிறார். அந்த சிறுமியின் மனதில் சரியாக விளங்கிக்கொள்ள இயலாத தத்தளிப்பு. அவளால் சரியாக எதையும் முடிவு செய்ய முடியவில்லை. தன் குடும்பம் ஏன் இப்படியானது என்றே இன்னும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. என்றாலும் அவள் ஒரு சிசுவை சிதைக்க விரும்பாதவளாக இருக்கிறாள். இந்த முடிவு அறிவுபூர்வமானதா என்ற கேள்விக்கு அப்பால் அது பெண்ணின் இயல்பு என்று கொள்ள வேண்டியிருக்கிறது. அவள் அந்த அந்தியில் யாரிடமும் சொல்லாமல் ஆதரவற்றோர் இல்லம் முன்பு சென்று நிற்கிறாள். அப்போது ‘திராட்சைக் கொடிகள் இருள் பரப்பும் வாசலில் மாலைப் பிரார்த்தனைகள் கேட்டன…’ என்று ஷீபா எழுதுகிறார்.
அந்த பிரார்த்தனை போல இந்த தொகுப்பு உள்ளது. மகளை பாலியல் வன்முறையில் இழந்த தந்தை ஒவ்வொரு அலுவலக வாயிலிலும் காத்துநின்று செக்ஸ்டாய்ஸ் வினியோகிக்கிறார். அதுவும் ஒருவகையில் பிரார்த்தனை தானே?
இன்னொரு கதையில் ஒரு நடுவயதுப்பெண் கல்லூரியில் காதலித்தவனை பல ஆண்டுகள் சென்று சந்திக்கிறாள். ஒரு நாள் சேர்ந்து பயணிக்கலாம் என்று அழைத்து செல்கிறாள். அவன் இயல்பாக அவளுடன் சென்றாலும் மனஆழம் இவளை பழிக்கிறது. இறுதியில் உன்னுடன் பேசி ஒரு பொழுது கழிப்பதற்காக மட்டுமே அழைத்தேன் என்று தன் செய்கைகளால் உணர்த்தி விடைபெறும் அவளின் ப்ரியம் ஒரு பிரார்த்தனை.

கிராமத்திலிருத்து காதலிப்பவனை நம்பி வெளியேறும் ஒருத்தியை அவன் விலைமகளாக்குகிறான். துறுதுறு வென்றிருந்த அந்தப்பெண் குடும்பத்துயரிலிருந்து மீள்வதற்காக இவனுடன் வந்து பெரிய வலையில் மாட்டிக்கொள்கிறாள். பணம் சம்பாதித்து இளமையிலேயே வாழ்க்கையில் சலித்து கடற்கரையில் நிற்கிறாள். அவளிடம் எப்போதோ கடல் போல இருந்து வற்றிப்போன துயர் கண்டு இரங்கும் தன்மையை நோக்கியே இந்தக்கதைகள் பேசுகின்றன. பெண்ணின் அளிக்கும் தன்மை அவளுக்கு சுமையா அல்லது பலமா? என்ற கேள்வியை எழுப்பும் கதைகளாக இந்தக்கதைகள் உள்ளன. அது அவளின் இயல்பு என்பதால் இப்போதும் எங்கோ நடந்து கொண்டே இருக்கும் கதைகள் இவை. அவ்வகையில் பெய்து தீராத மழையால் ஆனது இந்தத்தொகுப்பு.
*
ஷீபா இ.கே: மலையாள எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிந்தல்மண்ண என்ற ஊரில் இ.கே. ஸூப்பி, கே. ஆயிஷா இணையருக்கு ஆகஸ்ட் 20, 1975-ல் பிறந்தார். நாவல், குறுநாவல், சிறுகதைகள் எழுதியுள்ளார். தற்போது மலப்புரம் கல்வி துணைக் காரியாலயத்தில் பணியாற்றுகிறார். பாஷாபோஷிணி பத்திரிக்கை வழங்கிய இலக்கிய ரசனை விருது, வனிதா கதை விருது, மலையாள மனோரமா கதை விருது, துளுநாடு நாவல் பாரட்டுப் பத்திரம், புலம் பெயர்ந்தோர் குரல் கதை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
நீலலோகிதம் (மலையாளச் சிறுகதைகள்): எழுத்தாளர் யூமாவாசுகி தமிழில் மொழிபெயர்த்தார். இதன் முதல் பதிப்பு மே, 2016-ல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் வழியாக வெளியானது.
*
ஷீபா இ கேயின் நீலலோகிதம் சிறுகதை மட்டுமே இணைய இதழ் ஒன்றில் வாசிக்கக் கிடைத்தது. ஆண் உடல் மீதான பெண்ணின் ஒவ்வாமையைச் சொல்லும் கதை அது. அந்த ஒரு பருக்கை பதம் என்னை அவரைத் தேட வைத்தது. கிடைக்காத ஏமாற்றம் எனக்குண்டு. இந்த என் ஏக்கத்தை கமலதேவி நிறைவு செய்திருக்கிறார். கலதேவியின் இந்த மதிப்புரையும் யுமா வாசுகியின் மொழிபெயெர்ப்பும் ஷீபாவைப் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்க்கும். ஷீபாவின் கதை தமிழில், வேறெங்கும் இருந்தால் எனக்கு அனுப்பி உதவலாம்.