சாளரத்தின் வழியான பிரபஞ்சம் – மதுமிதா

(ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைகளை முன்வைத்து)

ஆஷாபூர்ணா தேவி கொல்கத்தாவிலுள்ள தன் எழுத்து அறையில்

ஆஷாபூர்ணா தேவி அறுபது ஆண்டுகள் இலக்கியம் படைத்தவர். மனித இயல்பை அதன் பல்வேறு சரடுகளின் வழியாக எடுத்து எழுதியவர். அவர்களின் திரிபுகளை, அபத்தங்களை, அச்சங்களை, ஆசைகளை, மிக நுணுக்கமாக அவர்கள் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் வன்முறைகளை, அதை கடந்து திகழும் கருணையை, அருகமர்ந்து நோக்கிய அன்னையே அவரின் கதைசொல்லி. அடர் இருளில் ஆங்காங்கே ஊடுருவும் ஒளிக்கீற்றில் துலங்கி வரும் காட்சிகள் போன்றவை அவரது சிறுகதைகள். அந்த ஒளித்தடத்தில் தெரிவதை கொண்டு, இருட்டில் கண்களுக்கு புலப்படாத மீதியை நுணுக்கமாக காட்டும் அந்த நெசவே அதன் அழகியல். 

ஞானியர் உலகம் சுற்றி அறிவதை அன்னையர் இல்லம் இருந்து அடைய முடியும்’ என்ற உண்மைக்கு ஆஷா பூர்ணா தேவியின் படைப்புலக விரிவே சான்று. முழுக்க வீட்டிலேயே தான் வாசித்த நூல்களின் வழி மட்டுமே கல்வி கற்றவர் அவர். அவரது அன்னை சரளா தேவியின் பிடிவாதத்தால் மட்டுமே அது அவருக்கு சாத்திய பட்டிருக்கிறது. மரபின் இருண்ட பக்கம் என்ன செய்ய முடியும் என்று தன்னளவிலேயே கண்டவர். அதே மரபில் நின்றுகொண்டே வெளிச்சம் காண முடியும் என்பதையும் தனது வாழ்வில் அறிந்தவர். அதை தனது எழுத்தில் மீள மீள அவர் காட்டுகிறார்.

ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைத் தொகுப்புகள்

வங்காள பண்பாட்டின் பின்புலத்தில், கல்கத்தாவின் கசங்கலுக்கு நடுவில் வாழும் மனிதர்களை அல்லது அந்த நகரத்தை நோக்கி மனதளவிலாவது வந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அவரது கதைகளில் நிறைந்துள்ளனர். இந்த வார்ப்பில் வரும் அவரது சிறுகதைகள் குடிபெயர்தல் எனும் நிலையை கழிவிரக்கத்துடன் காண மறுக்கின்றன. அந்த குடிபெயர்தலுக்கான காரணிகளில் வாழ்வாதாரமும், சுயமுன்னேற்றமும்  முக்கியமானவை. புதிய வாழ்வுக்கான எதிர்பார்ப்பு, விட்டொழிக்க முடியாத சாதிய அடுக்குகள் அல்லது மரபார்ந்த சுயம் ஒழிக்கும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் பிடியில் இருந்து தப்பி விட முடியும் என்ற நம்பிக்கை,  இவற்றை ஆதாரமாக கொண்டு குடிபெயர்கிறார்கள் மக்கள். அந்த எதிர்பார்ப்பின் நம்பிக்கையில் ஆங்காங்கே விழும் பொத்தல்களை வலியுடன் சுமந்தாலும் அந்த நம்பிக்கையை கை விடுவதில்லை.

“பால்கனி (balcony)” என்ற சிறுகதையில், சுப்ரா கல்கத்தாவுக்கு வருகிறாள். ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் அந்த வீட்டில் உழைக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அங்கிருக்கும் பால்கனி அவளுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது. யாரும் அறியாமல் தான் நின்று உலகம் காண ஒரு வழி. பிறகு தன் கணவனுக்கு வேலை இல்லாமல் போகும் போது தன் வாழ்க்கை அங்கேயே தொடர முடியாமல் போய் விடுமோ என்று வருந்தும் சுப்ரா, துணிந்து வேலைக்கு செல்கிறாள். ஒரு நோயாளி குடும்ப தலைவிக்கு உதவியாக இருக்கும் வேலையே கிடைக்கிறது. முழுதாய் வீட்டையே சமாளிக்க அவளுடைய சம்பளத்தால் இயன்றாலும் அவளது கணவன் கூட அதை உதாசீனமாக, வீட்டு வேலை தானே என்கிறான். இன்னும் அவள் வேலைக்கு செல்லும் இடத்திற்கு அவளது பக்கத்து வீட்டில் வசிக்கும் டாக்டர் வந்து அவளை அடையாளம் கண்டு கொள்கிறாள். அதை சுப்ராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த பால்கனியில் பிறர் அறியும் வண்ணம் இனி தான் நிற்கக்கூடாது என்ற முடிவை எடுக்கிறாள்.

இளம் ஆஷாபூர்ணாதேவி

கூட்டத்தில் தொலைவதையே மனிதர்கள் விரும்புகிறார்கள், ஏனென்றால் அடையாளம் என்பது தனியே வருவதில்லை. அங்கே ஒரு இட வரையறை, அந்த சூழலுக்கான எதிர்பார்ப்புகள், அதனுடன் இணைந்து வரும் ஏமாற்றங்கள் என அனைத்தையும் இழுத்தே வருகிறது. விட்டு உதறி வரும் அவமானங்களை வேறு வகையில் சூடி விடுவோமோ என்ற அச்சம் அவர்களை விடுவதில்லை. இதையே இன்னும் விரித்தெடுத்து செல்கிறது “சொந்த வீடு” என்ற சிறுகதை. சகோதரர்கள் இருவர் அவரவர் மனைவி, பத்மோ மற்றும் சம்பாவுடன் ஒரு சிறிய வீடு கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் இருவரும் சகோதரிகள் போலவே வீட்டில் வாழ்கிறார்கள். மகிழ்வாய் தொடங்கும் அந்த வாழ்க்கையில் வீட்டை விரிவிக்கும் தேவையில் சிறு சிறு பூசல்கள் தொடங்குகின்றன. அவர்கள் தொடங்கி, அவர்களின் பேரப்பிள்ளைகள் வரை அது தொடர்கிறது. அண்ணனின் சம்பாத்ய குறைவை விஸ்தரித்த மேல் தளத்தை குறை சொல்வது மூலம் அவன் காட்டிக்கொள்கிறான். அதை எதிர்கொள்ள சம்பா பத்மோ பார்த்து பார்த்து சேகரித்த அலங்கார பொருட்களை வெறும் குப்பை தானே, நானெல்லாம் நல்ல அலங்கார பொருட்களை மட்டுமே என் அறையில் வைப்பேன் எனும் அளவில் உதாசீன படுத்துகிறாள். அதுவே பின் பத்மோ புறம் தள்ளப்படுவதற்கு முதற்படி ஆகிறது, பிறகு சம்பா அவளது மருமகளால் அதே சூழ்நிலைக்கு ஆட்படுகிறாள். அந்த அர்த்தமற்ற காட்சி நேற்று, இன்று, நாளையென தொடர்கிறது. “அருகிருப்பதனால் மட்டும் ஒருவர் சுற்றம் ஆவதில்லை. அத்தி மரத்தின் கீழ் வளர்வதால் மட்டும் புல் அதற்கு சொந்தம் ஆக முடியுமா என்ன?” கிராமத்தில்லிருந்து வந்தவர் நாம் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அண்டை வீட்டாருடன் பழகுபவர்கள், தங்கள் வீடு பெரியதாய் ஆகும்போது அந்த எண்ணத்தை விட்டு ஏற்றம் அடைய முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் சொந்த வீட்டில் அந்த ஏற்றத்தாழ்வுகள் அதிகமாய் ஆகிறது. ஒரு கட்டத்தில் ஏன் எதற்கு என்று புலப்படாத ஒரு கொடும் சுழற்சியில் எதற்கென்றே அறியாமல் அந்த விரிசலை வேறு வகைகளில் பெரிதாக்கி கொள்கிறார்கள். இதற்காக வீடு இல்லாமல் போவதில்லை.

ஆஷா பூர்ணா தேவியின் கதைகளில் வரும் பெருங்கருணை கொண்ட மனிதர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள். அவர்களின் கருணை ஒன்று பெரும் இழிசொல்லுக்கு அவர்களை ஆட்படுத்துகிறது, இல்லையெனில் அது மிக சிலரால் மட்டுமே அறியப்படும் ஒன்றாக உள்ளது. “தீராப்பழி” என்ற சிறுகதையில் அவளது கணவன் இறந்த செய்தியை மறைத்ததற்காக சுபாஸ் பழிச் சொல்லுக்கு ஆளாகிறாள். அவளது மாமனார் இறந்த பின்னரே அவள் அதைச் சொல்கிறாள். இப்படியும் ஒரு பெண்ணா, இவளும் பெண் தானா போன்ற வழக்கமான பழிகள் வருகின்றன. ஆனால் அதை அவள் செய்ய காரணம், தனது வயதான மாமனார் அவரது மகன் இறந்த செய்தியை தாங்க மாட்டார் என்ற பரிதாபம் மட்டுமே. எப்படியும் தன் கணவன் இறந்தவன் இறந்தவனே, இருப்பவரை பார்த்து கொள்வோம் என்ற நிலையில் அவள் எடுக்கும் முடிவு இது. இத்தனைக்கும் அவர் கனிவான மனிதரோ, தந்தையோ இல்லை. ஆனால் இயலாத ஒரு மனிதர் மேல் கொள்ளும் அவளது கருணை இது. இதை போலவே “பெருங்காதல்” சிறுகதையில் வரும் அபானிபூஷன். தனது மனைவி இன்னொருவரை காதலிக்கிறாள் என்று அறிந்தும் அவளிடம் மிகுந்த காதலோடு வாழ்ந்தவன். அவள் திடீரென இறந்ததும், அவளை யாரும் ஒரு சொல்லும் சொல்லக்கூடாது என்ற தீர்மானத்தோடு அவள் பார்த்து பார்த்து சேமித்து வைத்த அவளது காதல் கடிதங்களை பிறர் அறியாமல் எடுத்து வைக்கிறான். ஆனால் அவள் அவ்வளவு ஆசையாக வைத்திருந்த அந்த கடிதங்களை அவனால் எரிக்க முடியவில்லை, அவளது காதலனிடமே கொண்டு வந்து கொடுக்கிறான். இந்த இரு கதைகளிலும் இந்த நிகழ்வை செய்தவர் தவிர ஒருவர் மட்டுமே அதை அறிகிறார்கள். அந்த செயல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அதை பெற்றுக்கொண்டவர் அதை அறிவதில்லை. அந்த செயலினால் செய்தவருக்கு எந்த வித பயனும் இல்லை. ஆனால் அந்த நிலையில் அங்கிருந்து கொடுக்க அவர்களிடம் கருணை அன்றி வேறு எதுவும் இல்லை. ஆகவே அதை அவர்கள் கொடுக்கிறார்கள். அபானி பூஷன் அதை பெருங்காதலால் செய்கிறான். சுபாஸ் அதை அவளது இயல்பால், பெருங்கருணையால் செய்கிறாள்.

ஆஷாபூர்ணாதேவி

வாழ்வை இத்தனை ருசியோடு எழுதும் ஆஷா பூர்ணா தேவி மரணத்தை அதே அளவு எழுதியதில் வியப்பில்லை. மரணம் எத்தனை முகமூடிகளோடு அவர் கதைகளில் வருகிறது. மறைக்கப்பட்டதாக, நடிக்கப்பட்டதாக, ஏமாற்றுவதாக, ஏமாற்றிக்கொள்வதாக, இப்படி நிறையவே. இவை அனைத்திலும் உள்ள ஒற்றுமை அவை எந்த விதத்திலும் இறந்தவரை பற்றி அல்ல, ஆனால் அந்த மரணத்தின் விளைவுகளுக்கு ஆளானவர்களை பற்றி மட்டுமே. தனது மகளின் கணவன் இறந்த செய்தி அறிந்ததும் அவளுக்கு அந்த செய்தியை சொல்லாமல் ஒரு திருமணத்திற்கு கூட்டிச் செல்லும் அம்மா. இருக்கட்டுமே, இதோ இருள் சூழ போகும் அவளது வாழ்வில் ஒரு கடைசி மகிழ்ச்சி என்கிறாள். இன்னொரு சிறுகதையில் பள்ளி பயணத்தில் சென்ற மகள் வீடு திரும்பாமலேயே போக, அவள் இறந்து விட்டாள் என்றே சொல்லி வருகின்றனர் பெற்றோர். அவளிடம் இருந்து வருடங்கள் கழிந்து வரும் கடிதத்தை கண்டும் காணாதது போலவே இருவரும் இருக்கின்றனர். அவள் இறந்ததாகவே நிறுவப்பட்டது அப்படியே இருக்கட்டும் என்று விடுகின்றனர். அவள் இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியை விட தொலைதூரத்தில் தங்கள் சுற்றம் அறியாமல் இருக்கிறாள் என்பதே தேவையாக இருக்கிறது அவர்களுக்கு. மரணம் என்ற பொய் அங்கே தரும் அந்த போலி அங்கீகாரம் அவர்களை தினமும் ஒருவருக்கு ஒருவர் நடிக்க வைக்கிறது. அவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டால் கூட ஏதோ அவள் எதிரிலேயே வந்து விடுவதை போல அச்சம் கொண்டு ஒருவருக்கு ஒருவர் நடித்தே வாழ்கின்றனர். மனித மனத்தின் அசாத்திய முட்டாள்த்தனத்தை இதை விட வேறு என்ன சொல்ல முடியும்?

இதே போல இன்னொரு சிறுகதையில், ஒரு மனைவி இறக்கிறாள். அவளது கணவனின் மிகப்பெரிய அச்சம் அது எந்த விதத்திலும் தன்னுடைய தவறாக சித்தரிக்கப்படலாகாது என்பதே. அதற்கு எத்தனை பெரிய நாடகம்! கடைசியில் அவள் இறந்திருக்கவில்லை என்று அறிந்ததும், இப்படி தன்னை ஏமாற்றி அலைய விட்டாளே என்பதே அவனது சிந்தனையாக இருக்கிறது. மரணம்  நிலைநாட்டுவது இறந்தவரின் நினைவுகளை அல்ல, அவர்கள் இல்லாத இடத்தில் நிகழ்ந்து விடுவதாக மனம் கொள்ளும் மாயங்கள் மட்டுமே. “பயம்” என்ற சிறுகதை இதன் தீவிரமான மறுபக்கத்தை பேசுகிறது. த்ரோபோமோயி சிறு வயதில் மணமாகி வந்தவள். உலகமறியும் முன்னே ஒரு குழந்தைக்கு தாயாகி அதை இழக்கவும் செய்கிறாள். அதுவும் அர்த்தமற்ற மரணம். அதனால் அவளது மனம் பேதலிக்கிறது, இன்னும் அவன் அங்கேயே இருக்கிறான், அவனுக்கு பசிக்கிறது, வலிக்கிறது என அவள் உள்ளம் சொல்லிகொண்டே இருக்கிறது. அந்த குழந்தையின் இழப்பை அவள் புரிந்து கொண்டு மீண்டு வரும்முன் அவள் இன்னும் மூன்று குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாள். குடும்பம், வேலை, அதன் உள்ளமைப்பு, அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடமை என்ற தர வரிசையில் மனித மனம் அதன் உணர்ச்சிகள் எல்லாம் அந்த வரிசையில் சேராத காலமும் குடும்ப அமைப்பும் அவளுக்கு. அவள் அப்படியே அந்த வலியை புதைத்தே வாழ்கிறாள். இன்னும் சில பிள்ளைகள் பெறுகிறாள், சில வாழ்கின்றன, சில சாகின்றன. அவள் கணவனும் இறக்கிறான். குழந்தைகள் வளர்ந்து அவர்களுக்கு திருமணம் ஆகி பேரப் பிள்ளைகள் பெறுகிறாள் த்ரோபோமோயி. அவளது ஒரு மருமகள் அவளது குழந்தையை பிரசவத்தில் இழக்கும் போது மிக இயல்பாக, “இதெல்லாம் நடப்பது தான். நான் இழக்காததா? சும்மா அழுது கொண்டே இருந்தால் வீட்டில் எப்படி லக்ஷ்மி வருவாள்”, என்கிறாள். கொடுஞ்சுழல் இதுவன்றி வேறென்ன? ஆனால் அங்கே முடிவதில்லை த்ரோபோமோயியின் கதை. அவள் இன்னும் வாழ்கிறாள், தன் பிள்ளைகளையும் கூட இழக்கிறாள். இன்னுமா இருக்கிறாய் என்று சுற்றம், சொந்தம் எல்லோராலும் தூற்ற படுகிறாள். கடைசியாய் எஞ்சியிருக்கும் ஒரே பிள்ளையையும் பரிகொடுக்கும் அன்று, மயக்கத்தில் விழுந்த அவளை எடுத்து தூக்கி பார்க்கும் அண்டை வைத்தியரிடம், “படபடவென வருகிறது, பயமாய் இருக்கிறது, மருந்து கொடு”, என்று கேட்கிறாள். அவர் கூட அவளை இன்னுமா வாழ வேண்டும் என்று ஏளனமாய் கேட்கிறார். அவர் கை பிடித்து அவள் கூறுகிறாள், “எனக்கு வயதாகவிட்டது, உண்மைதான். எனக்கு வாழ துளியும் விருப்பமில்லை. ஆனால் புஷன், எனக்கு சாக பயமாய் இருக்கிறதே! எனக்கு ஏதாவது மருந்து கொடேன்!” அந்த முதல் குழந்தையை இழந்த அன்றே அவள் வாழ்க்கை ஒரு சுழற்சியை முடித்து விட்டது. கொஞ்சமும் ஆறுதல் இல்லாது போன அந்த வாழ்வில் அவள் அதன் பின் இருந்தாள் என்றாலும் அது வெறும் சாக முடியாத அச்சத்தால் மட்டுமே. அவள் வெறுமே உயிர் சுமந்து வாழ்ந்த ஜடம் மட்டுமே.

அவளைப் போன்றே வெறும் கழிவரக்கத்தை மட்டுமே பெறுமதியாய் கொண்ட ஆஷா பூர்ணா தேவியின் இன்னொரு கதை மாந்தர் என்றால், அது பிரதம பிரதிஶ்ருதி (முதல் சபதம்) நாவலில் வரும் மோக்ஷதா அத்தை மட்டும் தான். உருட்டி, மிரட்டி ராம்கலியின் வீட்டையே தன் கையில் வைத்திருக்கும்  மோக்ஷதா அத்தை. கணவனை இழந்ததால் அவள் தந்தை வீட்டிலேயே இருப்பவள். ராம்கலிக்கு அத்தை, அதனால் அவர் மரியாதையோடு நடத்தும் பெரியவள்.  அத்தனை நியதிகள், அத்தனை கோட்பாடுகள், அவளை கண்டு அதிரும் வீடும் வீட்டின் பிற பெண்களும். கடைசியில் வயது முதிர்ந்து அவளது மனம் கைவிடும்போது அவள் எவரும் அறியாமல் மீன் வறுவலை அள்ளி அள்ளி தின்னும் நிலைக்கு போகிறாள். அது விதவைகளுக்கு விலக்கப்பட்ட உணவு, எட்டு வயதிலிருந்து அவளுக்கு வாய்க்கப்பெறாத உணவு. ஏன், அந்த வீட்டின் எல்லா கணவன் இழந்த பெண்களுக்கும் அதை அவளே முன் நின்று விலக்கி இருக்கிறாள், ஆனால் நினைவழிந்த முதல் நொடி, அவள் மனம் அதையே தேடுகிறது.  ஆஷாபூர்ணா தேவியின் வெற்றி நிலத்தோடு நிலமாய் சுவடே இல்லாமல் போன இந்த இரக்கத்திற்குறிய பெண்களின் கதைகளை கொண்டு வருதில் இல்லை, அவர்களும் மிக எளிய உயிர்களே, அவர்களின் மேல் மரபு எனும் மிகப்பெரிய தேரை ஏற்றி காப்பாற்று எனும் போது அவர்கள் அதனடியில் தன்னோடு சேர்த்து பிறரையும் ஒன்றாகவே பலி கொள்கிறார்கள் என்று காட்டுவதில் இருக்கிறது.

ஆஷாபூர்ணாதேவி

இந்த சிறுகதைகளில், வாழ்விலும் மனிதர்களின் செயலிலும், எஞ்சி நின்று விடும் அபத்தங்களை சொல்லும் கதைகள் இன்னொரு வகைமை. “ஜார்ஜெட் புடவை”, தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஒரு புடவை வாங்கி ரயில் ஏறி சென்று கொண்டிருக்கும் அனில், தனது பழைய காதலி அனுபமாவை சந்திக்கிறான். அவர்களின் உரையாடலில் ஒரு கட்டத்தில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நாடகம் ஆடும் அனில், அதை திரும்பி செல்ல முடியாத அளவிற்கு பெரிதாக்குகிறான். அவள் வீட்டிற்கு சென்று, அவள் கணவன் குழந்தைகளை சந்தித்த பின்னரும் அதை தொடருகிறான். அனுபமா அவன் பெட்டியில் உள்ள ஜார்ஜட் புடவையை பார்த்துவிட்டு, “பார், ஏன் இப்படி பொய் சொல்கிறாய், திருமணம் ஆகி விட்டது தானே?” என்று கேட்க, அதை உனக்கே வாங்கி வந்தேன் என்று சொல்லி பரிசளிக்கிறான். கடைசியில் அவன் வீடு வந்து சேரும் போது அவள் அந்த பெட்டியில் இருக்கும் அவனது மனைவியின் புகைப்படத்துடன் அவளுக்காக புடவை வாங்கி கொடுக்க சொல்லி வைத்த கடிதத்தையும், பணத்தை காண்கிறான். அவனது நாடகம் அவனுக்கு மட்டும் என்றே ஆகிறது. இந்த கதையின் முக்கிய நகர்வு அனுபமாவின் கணவனுக்கு அனிலை தெரியும் என்பதும், அவனுடைய இருப்பை அவர் எந்த விதத்திலும் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பது தான். அந்த முள், அவனால் அகற்ற முடியாத முள். அவளிடம் ஒரு ஏமாற்றமோ, அல்லது அவள் கணவனிடம் ஒரு சிறு அதிர்வோ கண்டிருந்தால் ஒரு வேளை அவன் அந்த முட்டாள்தனத்தை நிறுத்தியிருப்பான். அதே போல, அனுபமாவும் அவன் ஆடும் நாடகத்தை எப்பொழுதோ நிறுத்தியிருந்த முடியும். ஆனால் அவள் அந்த நாடகத்தை, அதன் பின்னால் இருக்கும் அந்த அசட்டுதனத்தை, தனக்கான ஒரு துதியாகவே கொள்கிறாள். அதனாலேயே அந்த நாடகம் நடைபெறுகிறது. இந்த நுண்ணிய உணர்வுகளை, அவற்றால் பின்னப்படும் பெரு வலைகளை, அதன் அடியில் இருக்கும் பொருளின்மையை நுண்ணோக்கியை கொண்டு கிருமிகளை ஆராயும் அறிவியலாளர் என எழுதுகிறார் ஆஷாபூர்ணா தேவி.

“கோணங்கள்” எனும் சிறுகதையில், தனது பிள்ளைகளிடம் தனது தயாள குணமுடைய அண்ணனை பற்றி பெருமையாய் சொல்கிறாள் ஒரு தாய். வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில், அதற்கு பணம் தேவைப்பட, அதை அவனது மாமாவிடம் இருந்து கடனாக கேட்க சொல்கிறாள். அந்த உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பம் அவரிடமிருந்து பதில் வரும் முன்னேயே அவர் அதை தரப்போவதில்லை, அவர் சரியான கஞ்சன் என்று முதலில் முடிவெடுத்து அவரை வசை பாடுகிறது. ஒரு கட்டத்தில் கடிதம் வருகிறது, பணத்துடன். உடனே அவர் நல்லவர் தான், ஆனால் எதற்கு இப்படி நாள் எடுத்து கொண்டு செய்ய வேண்டும், சரியான தலைகனம் கொண்டவர் என்று வசை. அந்த கடிதத்தில் அவர் இவ்வளவு நன்றாக பிடித்திருக்கும் பிள்ளைக்காக அந்த பணத்தில் பாதியை தான் பரிசாக தருவதாகவும், பாதி மட்டும் திருப்பி கொடுத்தால் போதும் என்றதும் வாயடைத்து போகிறது. ஆனால் அது வெறும் சொற்ப நேரத்திற்கு மட்டுமே. சிறிது நேரத்திலேயே அவர் நம்மை வேண்டும் என்றே கடனாளி ஆக்குகிறார், கொடுத்தால் அனைத்தையும் அல்லவா பரிசாக தர வேண்டும். தன்னிடம் இருக்கிறது என்று சொல்லிக்காட்டுகிறார் என்று பேசுகின்றனர். சிறுமை எப்போதும் இயல்பான நற்செயல்களை அறிவதே இல்லை.

ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைத் தொகுப்புகள்

“போதை” சிறுகதை காதல் திருமணத்தால் வசதியான வீட்டிற்கு மருமகளாகும் சுமிதா, அவர்கள் தன்னை நடத்தும் விதத்தையும் அவளது கணவனின் குணத்தையும் சகிக்க முடியாமல் வெளியேறுகிறாள். ஆனால் அந்த பெரிய வீட்டிலிருந்த வாழ்வை மறக்க முடியாமல் அவளது கணவனுக்கு கடிதம் எழுதி கூட்டி போக சொல்கிறாள். வெறும் பேச்சில் இல்லை, செயலில் இல்லை, மீள மீள நிறுவப்பட வேண்டிய இடத்தில் இருக்கும் ஒருவரது அறம் எவ்வளவு கடினமானது. ஒரு நாள் மட்டும் உயர்ந்த கோட்பாடுகள் கொண்டு வாழ்ந்தால் போதும் என்று ஆவதில்லை, அதை தினம் தினம் கடைபிடிக்க வேண்டிய சுமை அதிகம் தான். இந்த அத்தனை கதைகளிலும் உள்ள பொதுக்கூறுகள் மனிதர்கள் அதில் தங்கள் அன்பானவர்களே மீதே தொடுக்கும் நுண்வதையும் சில்லறை பழிவாங்கல்களும். பெருந்தன்மை என்பது நம்மை நெருங்கி நிற்பவர்களிடம் காட்டுவதே கடினம். எட்டி தொலைவில் நிற்கும் போது உறவுகள் பலப்படும் அருமை அதனாலேயே,  மணிக்கு ஒரு முறை கனிவாக இருக்க வேண்டிய கட்டாயம் அதில் இருப்பதில்லை.

ஒரு வட்டத்தில் நின்று இந்த கதைகளை அடுக்கி விடலாம் என்று எண்ணும் போது, அங்கே மிச்சம் என, புதிது என ஒன்று மீதம் வைக்கும் கதைசொல்லி, ஆஷாபூர்ணாதேவி. “நிபாரன் சந்திராவின் இறுதி சடங்குகள்” அவ்வாறான கதைகளில் ஒன்று. கதை என்னவோ நிபாரன் சந்திராவின் இறுதி சடங்குகள் பற்றி தான். சாகாவரம் வாங்கி வந்த கிழவர் என பேர் வாங்கிய, நான்காம் தலைமுறை திருமணங்களைக் கண்ட, மிகப் பல வருடங்களாக படுக்கையில் முடியாமல் இருந்த நிபாரன் சந்திரா ஒரு வழியாக இறந்து விட, உலக பொது விதிகளின் படி அவரது சுற்றம் கூடி அவரது அருமை பெருமைகளை பேசி, அவரது இறுதி காரியங்களை பெருமளவில் தயார் செய்கிறது. அப்பாவுக்கு அது பிடிக்கும், தாத்தாவுக்கு இது பிடிக்கும், மாமா, சித்தப்பா, பெரியப்பா, என்று கூப்பிட வந்த எல்லா சொந்தமும் அவருக்கு பிடித்த ஏதாவது ஒன்றை அன்று இலையில் பரிமாற ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது அங்கே வரும் நிபாரணின் மனைவி ஹேமாங்கினி, அந்த விழாவிற்கு கொஞ்சம் திராட்சை வாங்கி வர சொல்கிறாள். “அப்பா பாவம், கேட்டுக் கொண்டே இருந்தார், ஆனால் நல்ல திராட்சை கடைசியாக சாப்பிடவே இல்லை”, என. ஆத்திரம் கொண்ட பிள்ளைகள், “ஏன் அப்பா இருக்கும் போது கேட்கவில்லை, எங்களிடம் சொல்ல என்ன வெட்கம், கடைசி ஆசை நிறைவேறாமல் அந்த மனிதன் போனானே, எவ்வளவு வெட்க கேடு” என்று அரற்றுகிறார்கள். “இல்லையா? வெட்க கேடு தான். நான் கூட அதையே நினைத்தேன்” என்று சொல்லிவிட்டு சட்டென அந்த இடத்தை விட்டு செல்கிறாள் ஹேமாங்கினி.

மேலோட்டமாக ஒருவர் இறந்த பின்னரே அவரை தூக்கி வைத்து பேசுகிறது உலகம், இருக்கும் போது காட்ட மறுக்கும் அன்பை சாவிலேயே வெளிப்படுத்துகிறது என்ற அளவில் இந்த சிறுகதை போனாலும், அதில் இழையோடுவது எப்போதும் போலவே, இறந்தவனை பற்றிய கதை அல்ல, அவர் விட்டு சென்ற மனைவியை பற்றிய கதை. ஹேமாங்கினியை பற்றிய முதல் சித்திரம் அவள் நிபாரணை வீட்டினுள் கோழி உண்ண அனுமதித்தில்லை, அப்பாவின் ஆசைக்கு தடை போட்ட கெடுபிடியான அம்மா, எப்போதும் மரபார்ந்த பழக்கங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர் என்பது முதல் இழை. இன்னும் கொஞ்சம் விட்டு, நிபாரனின் உடல்நிலை மோசமாக ஆனபோது, இன்னொரு உலக பொது விதிப்படி அம்மா அப்பாவை பார்த்து கொண்டாள் என்கிறது கதை. அந்த கிழவரை பார்த்து கொள்ள அமர்ந்த அந்த கிழவிக்கும் வயதானதை அங்கே காண மறுக்கும் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் தன்னலம் இன்னொரு இழை. தான் கோலோச்சிய அந்த வீட்டில் அவள் கணவருக்கு வைத்தியரை பார்க்க ஒவ்வொரு முறையும் பிறரை நம்பும் நிலை வரும் போது, அவள் தன்னுணர்ச்சி கொஞ்சமாவது சீண்டப்பட்டிருக்கும். அதனால் எதையும் குறைவாகவே தனது பிள்ளைகளிடம் அவள் கேட்டது வியப்பதற்கில்லை. அதனாலேயே அவள் அந்த திராட்சைக்கு அவ்வளவு மெனக்கெடவில்லை. இரண்டு முறை வேலையாட்களிடம் சொல்கிறாள், ஆனால் ஒவ்வொரு முறையும் புளித்த பழங்கள் மட்டுமே கிடைக்க, அவள் அந்த முயற்சியை கைவிடுகிறாள். அதனால் என்ன. எல்லோரையும் போல, அவளும் தான் அவர் இருக்கும் போது காட்டாத அக்கறையை ஒரு விதமாக கழித்து விடலாம் என்று எண்ணியே இறுதி சடங்குகளுக்கு திராட்சை வாங்க சொல்கிறாள். ஆனால் அவள் செய்யும் போது அது தவறாகிறது, பாவமாகிறது, மீளா அவமானமாகிறது. அன்னையர் தவறு செய்யலாகாது என்பது இன்னும் திட்டவட்டமான உலக நியதி, அதுவும் பெருநியதி. எத்தனை அழுத்தும், எத்தனை மூச்சு திணற செய்யும் விதிகள். சாவின் விளிம்பில் நிற்கும் வயதானவளுக்கு கூட விடுதலை இல்லை.

மதுமிதா

“நான் இருந்தது எல்லாம் நான்கு சுவருக்குள் மட்டுமே. எனது நோக்கு வெறும் சாளரத்தின் ஊடாகவே” என்கிறார் ஆஷாபூர்ணாதேவி. அந்த சாளரத்தின் வழியாக அவர் கண்ட வானத்தின் முடிவின்மையையும், அங்கே உலவும் கோடானு கோடி விண்மீன்களின் நிலையின்மையையும் அவரது இலக்கியம் ஒன்றாகவே வைக்கிறது. பேரன்னைகள் அவ்வாறன்றி வேறு எப்படியும் இருக்க முடியாது.

*

ஆஷாபூர்ணா தேவி – தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *