கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்கள் – க. மோகனரங்கன்

எழுத்தாளர் க. மோகனரங்கனின் ”சொல் பொருள் மெளனம்” என்ற விமர்சனத் தொகுப்பு தமிழினி வெளியீடாக டிசம்பர் 2004-ல் வெளிவந்தது. அத்தொகுப்பிலுள்ள “கவிதை சொல்லியின் பாலியில் அடையாளங்கள்” என்ற கட்டுரையை முதன்முதலாக பிரம்மராஜன் , ஆர். சிவக்குமார் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நவம்பர் 18, 19, 2000-ல் வாசித்ததாக க.மோகனரங்கன் குறிப்பிடுகிறார். இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ”அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் நூலாக வெளியானது. இக்கருத்தரங்கைப் பற்றி பிரம்மராஜன் மற்றும் ஆர். சிவக்குமார் குறிப்பிடுகையில் “எங்களுக்குத் தெரிந்த வரையில் இப்படி ஒரு பிரத்யேகக் கருத்தரங்கம் தமிழ்ச்சூழலில் நடந்தது இதுதான் முதல் முறை. கலந்து கொண்ட இருபால் எழுத்தாளர்களும் காட்டிய ஈடுபாடு மெச்சத்தக்கதாக இருந்தது. பெண்ணியம், பெண் எழுத்து, பெண் மொழி ஆகியவை வெவ்வேறு கோணங்களில் இருந்து விவாதிக்கப்பட்டமை ஒரு நல்ல கருத்து சூழலை உருவாக்கியது.” என்கின்றனர்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுத வந்த எழுத்தாளர்களில் ஒருவர் க. மோகனரங்கன். தொண்ணூறுகளின் ஆரம்பம் என்பது தமிழ்க் கவிதைகளில் பெண்ணியமும், உடல் அரசியலும் முதன்மையாக பேசப்பட்ட காலம். இக்காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞர் பாலியல் சார்ந்து எழுதும் எழுத்து குறித்த பார்வையை அளிப்பது முக்கியமான ஒன்று. மேலும் இத்தகைய தீவிரமான உரையாடல்கள், கருத்தரங்கங்கள் நிகழ்ந்த காலகட்டத்தை மீட்டுப் பார்ப்பதும் முக்கியமானது. இந்தக் கட்டுரையை நீலி நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கிறது.

*

சொல் பொருள் மௌனம்

1

தனது விலங்குத் தன்மைகளை ஒடுக்கிக்கொண்டு, சமூகத்தின் ஒரு உறுப்பாக மனிதன் வாழ முற்படுகையில், அவனைக் கட்டுப்படுத்தும் சக்தியாக இருந்தது குடும்பம் என்ற அமைப்பும், அது சார்ந்த ரத்த பூர்வமான தொடர்பும் மட்டுமே. தன் தொடர்ச்சியாக தனது உதிரவழி பிறப்பு என்றும், பிறப்பில் கலப்பில்லாமல் இருக்கவேண்டி பெண்ணிற்கான கற்பு, அதை மையப்படுத்தி குடும்பம் என்றும் சமூகம், கலாச்சாரம் என்றும் மனித சரித்திரம் விரிவடைகிறது.

மறு உற்பத்தி செய்தல் என்ற சிறப்புத் தகவமைப்பு காரணமாக பெண்ணும் நிலமும் ஆதி சமூகத்தின் மையமாகவும் சொத்தாகவும் கருதப்பட்டு அவற்றின் மீதான அந்நியரின் பிரவேசம் தடை செய்யப்பட்டது. வளமான நிலங்கள் காரணமாக நிகழ்ந்த பல போர்களும், அப்போர்களை முடிவுக்கு கொண்டுவர பெண்களுடனான மணஉறவுகளும் நிகழ்ந்திருப்பதை வரலாற்றில் காண முடிகிறது.

பிசாசு, தேவதை என்ற துருவ நிலைப்பாடுகளில் வைத்து பெண்களைப் பற்றிய ஏராளமான புனைவுகளை வாய்மொழிக்கதைகள், இலக்கியங்கள், ஊடகங்கள் ஆகியவை உருவாக்கி வைத்திருக்கின்றன. இத்துடன் அச்சம், மடம், நாணம் போன்ற கற்பிதங்களும் சேர்ந்து பெண்ணை அறியப்பட வேண்டியதொரு மர்மமாகவும், அப்படி அறியும் செயலை, நிலத்தை கைக்கொள்ள நிகழ்த்தும் போருக்கு இணையான ஒரு சாகசமாகவும் கொள்ளும்படியாக ஆணாதிக்கம் வக்கிரத்துடன் செயல் படுகிறது. நடக்கும் எந்த ஒரு போரிலும், தேசத்தின் எல்லைகள் மாற்றி எழுதப்படும் அதே வேளையில் அடுத்த தலைமுறையில் தகப்பன் பெயர் தெரியாத அவமானத்துடன் பல குழந்தைகள் அநாதையாக வளரும் குரூரமும் நிகழ்வதை அறிவோம்.

குடும்பம், மதம், அரசு என அனைத்து வகையான நிறுவனங்களும் தொடர்ந்து உருவாக்கி வந்திருக்கும் வேறுபட்ட பிம்பங்களின் தொகுப்பாகவே இன்று ஒரு பெண்ணை நாம் அடையாளம் காணமுடியும். இப்பிம்பங்கள் காலந்தோறும் பலவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருப்பினும் அடிப்படையில் அவை எப்போதும் பெண்ணின் உடலை மையமாகக் கொண்டு ஆண்களின் நோக்கில் கட்டமைக்கப் பட்டவையாகவே இருந்து வருகின்றன. பெண்களின் சிந்தனை, அடையாளம், சுதந்திரம் என்பதை இப்பிம்பங்கள் மறைமுகமாகவும், மறுதலிக்க முடியாத நுட்பத்துடனும், வரையறுக்கவும் ஒடுக்கவும் முற்படுகின்றன. அந்த வரையறைகளை மீறாத வரையிலும் ஒரு பெண்ணைப் புகழும் சமூகம், அந்த எல்லைகளை அறிந்தோ அறியாமலோ மீற எத்தனிக்கும் பெண்ணை, அவளுடைய பாலியல் ஒழுக்கம் பற்றிய அவதூறை எழுப்புவதன் மூலம் சுலபமாகத் தண்டிக்க முயலுகிறது. நமது சட்டமும், அதைச் செயல்படுத்தும் அரசும், செய்திகளையும் கருத்துகளையும் வியாபாரமாக்கும் தகவல் தொடர்பு ஊடகங்களும் முழுவதும் ஆண்களின் மரபுவழிப்பட்ட கருத்தியலையே பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளதால் சமூக நீதி என்பதும் பெண்ணிற்கு பேதம் பாராட்டும் ஒன்றாகவே அமைகிறது.

இன்று பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் மேலதிகமான சுதந்திரமும் அதனால் கூடுதலான சுயசார்பும் உருவாகியிருக்கிறது. முன்பு போல வெளிப்படையானவையாக பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள் இல்லை என்றாலும், எளிதில் அடையாளம் காணமுடியாத அளவு மறைமுகமானதாகவும், நுட்பமானதாகவும் அவை தொடருகின்றன. பெண்களின் மேல் பேரளவில் செலுத்தப்பட்ட உடல் ரீதியான வன்முறை என்பது வெகுவாகக் குறைந்து அவளது மனம் மீதான வன்முறையாக அவை மாற்றம் பெற்றிருக்கின்றன. அவற்றை ஒரு பெண்ணின் மீது செலுத்துவதற்கு முன், அதற்கான அவளது சுய சம்மதத்தையும் கோரிப் பெருமளவிற்கு கருணையைக் கொண்டுள்ளதாக இன்றைய அதிகாரம் நுண்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை புறக்கணிப்பது எதிர்ப்பதும் அத்தனை எளிதானதல்ல.

ஒரு படைப்பாளி என்ற வகையில், மேற்சொன்னவை பற்றிய கூடுதலான அறிந்துணர்வுடன் செயல்படும் ஒரு பெண், தன் படைப்புகளின் பல்வேறு சாத்தியங்களினூடாக, எவ்விதமாக தனது பாலியல் அடையாளத்தை எதிர்கொள்கிறாள் என்பதை இக்கட்டுரை புறவயமாக அணுக முயல்கிறது.

ஒரு கவிதை என்பது, எழுதப்படும் தருணத்திலும், வாசிக்கப்படும் சமயத்திலும் உண்டாகும் அனுபவம் என்பது பெரிதும் அகவயமானது. எனவே கவிதைகளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பகுத்து அணுகும்போது அது புறவயமாக அமைந்து விடுவதுடன் அக்கவிதைகளின் முழுமையை நாம் உணரத் தடையாகவும் அமைந்துவிடலாம். என்றாலும் இத்தகைய அணுகுமுறைகள் வாசகர்களாகிய நமக்கு மட்டுமின்றி படைப்பாளிக்கும் சில சமயங்களில் தன் படைப்பு பற்றிய மேலதிக பரிமாணத்தை அடைய உதவக்கூடும் என்பதால் விமர்சன நோக்கில் அவசியமானதாகின்றன.

2

பின்னோக்கிப் பார்க்கையில் சங்க காலத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான மகளிர் கவிதை புனைவோராக இருந்துள்ளனர். ஏறத்தாழ 45 பெண்பாற் புலவர்களின் கவிதைகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அவ்வையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், நக்கன்னையார், நப்பசலையார், முடத்தாமக் கண்ணியார், காக்கைப்பாடினியார் முதலியோரின் பெயர்கள் தமிழறிந்தோர் மத்தியில் பிரபலமானவை. ஆண் புலவர்களின் கவிதைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத கவித்துவம் கொண்டவையாக இப்புலவர்களின் கவிதைகளும் மிளிர்கின்றன. இவர்களுள் ஒவ்வையார் அதிகபட்ச பாடல்களை பாடியுள்ளார். முடத்தாமக் கண்ணியார் அதிக எண்ணிக்கையிலான வரிகளை(248) உடைய பாடலை பொருநராற்றுப்படையில் பாடியுள்ளார். அதன் பிறகு பெண்பாற்புலவர் எவரும் குறிப்பிடும்படியாக காணப்படவில்லை. சங்கம் மருவிய காலத்தின் இறுதியில் கி.பி 5(அ) 6ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் காரைக்காலம்மையார்தான் அடுத்ததாக பெயர்பெற்ற புலவராக வருகிறார். இவர் அக்காலச் சூழலுக்கு மாறாக சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியபடி ஆடும் சிவனைப் பற்றிய துதிப்பாடல்களை ‘திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகம்’ என்ற பெயரில் பாடியுள்ளார். அப்பாடல்களில் நிரம்பியுள்ள சுடுகாட்டு வருணனைகள் அசாதாரணமான சித்தரிப்புத் தன்மைகளுடன் காணப்படுகின்றன. அதற்குப் பிறகு பக்தி இலக்கிய காலகட்டத்தில் ஆண்டாள்தான் தனிப்பெரும் கவிஞராக அறியப்படுகிறார். அவருடைய கவிதைகளின் கவித்துவமும் வேகமும் அழகும் இன்றளவும் மங்காத புத்துணர்வோடு திகழ்பவை. அதன்பிறகான காலகட்டத்திலிருந்து தமிழ் நவீன இலக்கியம் தொடங்கி வளர்ந்த 70கள் வரையிலும் தனித்துச் சொல்லும்படியான பெண்புலவர்கள் எவர் பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கவில்லை.

அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள்

3

எழுபதுகளில் எழுதத் துவங்கிய பெண் கவிஞர்களில் குறிப்பிடும்படியான கவனத்தை பெற்றவர்கள் இரா. மீனாட்சியும் திரிசடையும்.

‘சுடுபூக்கள்’ என்ற தொகுப்பின் மூலம் பரவலான கவனம் பெற்றவர் இரா. மீனாட்சி. இவருடைய பிற்கால கவிதைகளில், திட்டவட்டமான சுய அடையாளங்கள் கரைந்த ஒருவித பிரபஞ்ச விசார நோக்கு தென்படுவதைக் காணமுடிகிறது. இரா. மீனாட்சி கவிதைகள் என்ற பெயரில் முழுத் தொகுப்பு வந்துள்ளது. அவருடைய கவிதை ஒன்று.

மிதப்பு 

நிலவில் குளிக்க 
மணலில் அளைய 
கடலில் மிதக்க
நீ வேண்டும். 

இருட்டில் இசைக்க 
கதைப்பில் கலக்க 
பிடியில் இறுக
நான் வேண்டும். 

நிலவும் மணலும் 
கடலுள் ஒருநாள் தொலைந்தன 
இருட்டும் கதையும் 
பிடியுள் அன்றே ஒடுங்கின. 

மூச்சற்ற பொழுதின் 
பேச்சற்ற காலநெளிப்பில் 
என்னைக் காணவில்லை 
உன்னைத் தேடுகிறேன்.

ஒரு வாசிப்பில் ஆண் பெண் உறவைக் குறிப்புணர்த்தும் எளிய காதல் கவிதையாகவும், இன்னொரு கோணத்தில் இது மேற்சொன்ன அவரது விசாரத்தை ஒட்டி பிரபஞ்சத்தின் ஆதி முழுமையோடு தனது தன்னிலையை கரைந்து போகச் செய்வதற்கான எத்தனமாகவும் வெளிப்படுகிறது.

‘தனிமையில் தமிழோடும், உற்றவரோடும் ஒன்றறக் கலக்கும் ஆசையால் வந்த ஒருவகை உணர்ச்சி மோதலே’ தன் கவிதைகள் என்று குறிப்பிடும் திரிசடைக்கு, அந்நிய மண்ணில் பனியால் பட்ட பத்து மரங்களும் கூட உற்றவனின் தோற்றமாகவே காட்சியளிக்கின்றன. மரபு, சம்பிரதாயம், சடங்குகள் ஆகியவற்றை தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே கொண்ட ஒரு பெண்மணியின் எதிர்பார்ப்புகளும், பிரார்த்தனைகளுமே இவருடைய கவிதைகள்.

திரிசடை, மீனாட்சி இருவரிலுமே அவர்களுடைய பாலியல் அடையாளம் காரணமாக, இச் சமூக அடுக்குகளுடன் நேரிட வேண்டியிருந்த முரண்களையும், உரசல்களையும் நாம் அழுத்தமாகக் காண முடிவதில்லை. ஒருவேளை அவர்கள் லௌகீக தளத்தில் தவிர்க்க முடியாத இம்முரண்பாடுகளைத் தங்கள் ஆன்ம விசாரங்களில் கரைத்துக் கொண்டதுவும் அதற்குக் காரணமாகயிருக்கலாம்.

பெண் என்ற பால் அடையாளத்தினால் தான் சந்திக்க நேரிடுகிற தினப்படி யதார்த்தத்தின் நெருடல்களையும் அது சார்ந்த உணர்வுகளின் நெகிழ்வையும் கவிப் பொருளாக்கியிருப்பவர் சுகந்தி சுப்ரமணியன். 88ல் 2004ல் ‘மீண்டெழுதலின் ரகசியம்’ என்ற முழுத் தொகுப்பு வெளிவந்துள்ளது. பெண்கள் பேசுவதற்கென்று தனிப்பட்ட பல விஷயங்கள் உள்ளன என்பதைத் தொட்டுக் காட்டிய முதல் குரல் என்ற வகையில் இவருடைய கவிதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

‘குறிப்பான உணர்வுகள் எளிமையாகவோ, தட்டையாகவோ, சிறியதாகவோ இருக்கலாம்; ஆனால் அவை கவிதையாக உருமாறும் போது சிக்கலாகி விடுவதாகத் தோன்றுகிறது’ என்று கூறும் உமா மகேஸ்வரியின் கவிதைகள் ‘வெறும் பொழுது’ என்ற தலைப்பில் முழுத் தொகுப்பாக வந்துள்ளது. தன் சுவாதீனத்தின் மீது நிர்ப்பந்தத்தை பிரயோகிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ, அவற்றிற்கெதிராக வளர்த்தெடுத்துக் கொண்ட வன்மமோ இவரிடம் தென்படுவதில்லை. மாறாக அவற்றை உதாசீனப்படுத்தும் விதமாக சூழ்ந்திருக்கும் இயற்கையின் நித்திய நிற மாறுதல்களில், கண்ணில்படும் சேதன அசேதன பொருட்களின் மீதான பரிவுணர்வில் எனத் தன் அகத்தை கரையச் செய்வதன் வழி இவருடைய எளிய அழகிய சொற்கள் பிணைந்து இயக்கம் மிகுந்த காட்சிப் படிமங்களாக உருமாறிவிடுகிறது. பின்வரும் கவிதை அதற்கு கச்சிதமான உதாரணமாகிறது.

நட்சத்திரங்களின் வாசனை

திரள்கிறது கசிந்தபடியே.
அதை முகர வேண்டும்.
சிற்றொளியாயிருந்தது முதலில்;
ஒளிவட்டங்கள் விரிந்து பெருகித்
தற்சமயம் அதன்
வெளிச்சப் பிரவாகம்
என்னை இழுத்து அலைப்பதாகப்
பொங்குகிறது.
வானம் மகிழ்வோடு
துளைப்படுகிறது.
விரியும் வானில் வாழும் ஆசையை
மனதில் தூண்டும் விண்மீன்கள்
உடலைச் சிறகாக்கும்
வித்தையும் அறிந்தவை.
விடியல் பூசி அவை மறையும்
எனும் கவலை
அடர்கிறது அடிவயிற்றில் ஒரு புதராக.
என்றாலும் ஜன்னலிருக்கும்
என் அறைக்குள்
அவற்றின் மணம்
ஒரு குருவி போல்
படபடக்குமென நம்புகிறேன்.

இவருடைய கவிதைகள் கையகப்படுத்தும் புறஉலகின் பரப்பு ஒப்பீட்டளவில் குறுகியதுதான். இருப்பினும் அது தனக்கேயுரிய பொருண்மையும், நிறையும், ஈர்ப்பு விசையும் கூடியதொரு முழுப்பிரபஞ்சமாக சுழல்கிறது.

‘என்னை வெளிப்படுத்திக் கொள்ள இதைவிட எளிதாய் ஒரு வழி தெரியாததால் கவிதை என்ற வடிவத்தை தேர்ந்தெடுத்தேன்’ எனக் குறிப்பிடும் கனிமொழியின் கவிதைகளில் சுய அடையாளம் குறித்த கேள்விகள் பாவனைகள் ஏதுமின்றி பதிவு பெற்றுள்ளன. ‘கருவறை வாசனை’ ‘அகத்திணை’ ஆகியவை அவருடைய தொகுப்புகள்.

எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்

யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்து தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ, கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர

இவருடைய கவிதைகளில் சொற்சிக்கனத்தின் காரணமாக கூடி வருகின்ற வாக்கிய அமைதியை இவருடைய பலமாகக் கொள்ளலாமெனில், அழுத்தமான படிமங்களோ, உள்ளார்ந்த இசையுடன் கூடிய மொழிப் பிரயோகங்களோ அதிகமின்றி உணர்வுகளைப் பெரிதும் கருத்தியல் தளத்திலேயே சந்திப்பது என்பது இவருடைய பலவீனமாகிறது.

‘பார்வையிலிருந்து சொல்லுக்கு’ ப.கல்பனாவின் தொகுப்பு. பெண் என்ற வகையில் தனக்கு உண்டாகிற எல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது குறித்த ஆற்றாமையின் நுட்பமான குரலை இவரிடம் நாம் அதிகம் கேட்க முடிகிறது. மிக எளிமையானதாகத் தோன்றும் வரிகளைத் தொடர்ந்து அக எழுச்சியின் தீவிரத்தை நோக்கி மெல்ல நகர்ந்துவிடுபவை இவருடைய பல கவிதைகள். ‘கிளிக்கதை’ என்கிற பின்வரும் கவிதை அவற்றுள் ஒன்று. 

கிளிக்கதை

கிளிக்கதை கேட்டாள் குழந்தை
சொன்னேன்

எங்கள் வீட்டில் முன்பொரு கிளி இருந்தது
தளிர்போல மென்மையாய்

சிறகு விரித்தால்
பச்சை விசிறி போலிருக்கும்
சில நேரங்களில் பேசும்

வீடு திரும்பும் போது
தோள்களில் அமர்ந்து காதைக் கவ்வும்
தாத்தாவின் மடியிலமர்ந்து
செய்தித்தாள் ஓரத்தைக் கொத்திக் கிழிக்கும்

இடது ஆள்காட்டி விரலில் சுமந்து
வலக்கையில்
வாழைப்பழத்துடன் திரிவான் கடைக்குட்டி
எல்லோரையும் மகிழ்வித்தது
எல்லாம் கிடைத்தது அதற்கு

தங்களுடனேயே இருக்கட்டுமென்று
சிறகு கத்தரித்து
அழகு பார்ப்பர் மாதமொரு முறை

தத்தித் தத்திப் பறந்து
மரக்கிளையில் அமர்ந்த அன்று மட்டும்
அதிகமாய்க் கத்தரித்து ரசித்தனர்
தடுக்கித் தடுக்கி விழுவதை

“அச்சச்சோ… கடைசியில் என்னவாயிற்று?”
பதறினாள் குழந்தை

“எல்லாக் கிளிகளையும் போலவே
அதையும் ஒரு துரதிர்ஷ்ட நாளில்
பூனை பிடித்துக்கொண்டு போனது
பிறகென்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது.”

தன்னுடையதாக அல்லாமல் யாருடையதோபோல கூறும் கதை கூறல் உத்தியினால் உண்டாகும் விலகலும், தூரமும் இக்கவிதையின் தீவிரத்தைத் கூட்டுவதை உணரலாம். ‘பூனையிடத்து சிக்கிய கிளி’ தேய்வழக்கான உவமையேயெனினும் இக்கவிதையின் கூறுமுறையினால் அது தொனிப்பொருளும், குறியீட்டுத்தன்மையும் கொண்டதாக மாறிவிடுகிறது.

நவம்பர் 18, 19, 2000 அன்று நடந்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட பிற கட்டுரைகள்

பெருந்தேவியின் கவிதைகளில் பயின்று வரும் சொற்கள் பழந்தமிழுக்கு நெருக்கமானது. எனவே முதல் வாசிப்பில் அவ்வளவாக பிடிபடாததொரு அந்நியத்தன்மை கொண்டதாக இருந்தாலும் பொறுமையாகத் தொடர்பவர்களுக்கு சொல்லாட்சியுடன் கூடிய சில அபூர்வமான படிமச்சித்திரங்கள் தென்படும். ‘தீயுறைத் தூக்கம்’ என்ற இவரது தொகுப்பிலுள்ள கவிதைகளிலும் எவ்விதமான பால் அடையாளத்தையும் நாம் அழுத்தமாக காணமுடிகிறதில்லை.

‘கானல் சதுரம்’ என்ற க்ருஷாங்கினியின் தொகுப்பிலுள்ள கவிதைகள், வண்ணங்கள் மற்றும் ஜியோமிதி வடிவங்களைப் பற்றிய அரூபமான உணர்வுகளை முன்வைப்பானவாகத் தோன்றினாலும் அவற்றினின்றும் கிடைக்கும் வாசக அனுபவத்தை ஒரு தெளிவான வகைப்படுத்துதலுக்கு என்னால் உட்படுத்த முடியவில்லை. தவிரவும் இக்கவிதைகளை எழுதும் தன்னிலையும் பாலடையாளமற்ற நிலையிலிருந்தே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

தனது நாற்பத்தெட்டாவது வயதில் எழுதத்துவங்கிய வத்சலாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு ‘சுயம்’ திடீரென தனது பார்வையில் ஒரு திரை விலக தன்னைத் தனிமையாகவும் அதற்கு காரணம் தனது பால் அடையாளமே என்பதாகவும் உணர்ந்தவரின் எதிர்கொள்ளல்களே இவரது பாடுபொருளாகியிருக்கின்றன. பெரிதும் உரைநடைத்தன்மை கொண்ட வரிகள் காரணமாக இவர் கவிதைகளில் அனுபவப் பகிர்வு அவற்றின் துவக்க நிலையிலேயே நின்று விடுகிறது.

அண்மைக்காலத்தில் எழுதத்துவங்கியவர்களில் ஒருவர் சே. பிருந்தா. ‘மழை பற்றிய பகிர்தல்கள்’ என்ற அவரது முதல் தொகுப்பிலுள்ள கவிதைகள், சிநேகமும் அது தரும் அவஸ்தைகளையும் பற்றி மெல்லிய குரலில் பேசுகின்றன. தனது ஆளுமையில் தந்தையின் பாதிப்பு குறித்து அடையாளம் காட்டும் வரிகள் இவரிடம் கவனிக்கத் தகுந்தது. அத்தகைய ஒரு கவிதை:

அம்மாவின் கணவர்

எல்லா அப்பாக்களின் விரல்களும்
அகப்படாமல் பிஞ்சுக் கைகளுள்
அதன் ரகசிய எல்லைகளுடன்
பருத்திருக்கின்றன.
சைக்கிள் கேரியரின் பின் அமர்ந்து
ராஜா டாக்டரிடம்
காய்ச்சலுக்குப் போகையில்
அப்பாவின்
அசைந்து நகரும் முதுகு
காட்சிகளை நிறைக்கிறது
ஏனோ வளர்ந்து பெரிதானதும்
எல்லைகள் சுருங்கி
அப்பாவின் பரிமாணங்கள்
அதன் ஆரம்பப் புள்ளியுள்
ஒடுங்கிப் போயின
அம்மா அறிமுகப்படுத்தின
அம்மாவின் கணவானாலும்.

இக்கவிதையில் சுட்டப்பெறும் நபர் ஒருவரே எனினும் தந்தை, கணவன் என்ற எதிரீடுகளின் வழியாக நோக்கும் போது உருவாகும் பிம்ப அழிப்பு கவனிக்கத்தக்கது.

தனித்துவமும், தீவிரமும் கூடிய பெண் குரல் குட்டி ரேவதியினுடையது. கவித்துவமான உருவகங்களும் சுயேச்சையான மொழியும் கூடிய அடர்த்தியான வரிகளைக் கொண்டவை இவரது கவிதைகள். இக்கவிதைகள் பலவும் தமது உணர்த்துதல்களின் வாயிலாக ஒருமையை அல்லது உச்சத்தை நோக்கிய முழுமையை அடைவதாக அல்லாமல் ஒரே சமயத்தில் தன்னிச்சையான மனவெழுச்சியின் பல்வேறு முனைகளையும் தீண்ட முயல்வதாக, கிளைத்துப் பரவுவதாகவே உள்ளது. இதுதவிர ஒரு உடலுக்கு இயல்பாக விதிக்கப்பட்டிருக்கிற பல்வேறு உணர்வுகளையும் குறித்து, சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திரமான மொழியில் இவர் பேச முனைகையில் பலருக்கும் ஏற்படுகின்ற மனத்தடையே இவர் கவிதைகளைக் குறித்த விமரிசனங்களாக பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. இவர் பேச முனைகிற உணர்வுகள் கவிதையாகாமலே இடைவழியில் நின்றுவிடுகின்றன என ஒருவர் குறைபட்டுக் கொண்டால் அது வேறு விஷயம், விவாதிக்கப்படவும் வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட உணர்வுகளை எழுதவே கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை.

சங்கக் கவிதைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பொதுவாக நமது மொழியின் நினைவில் காமம் என்பது பாவத்துடனும், குற்றவுணர்வுடனும் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டதாகவும் அது ஒதுக்கப்பட வேண்டிய (அ) கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய ஒன்றாகவுமே பதிந்து இருக்கிறது. இந்த பாவம் (அ) குற்ற உணர்விலிருந்துதான் உடலிச்சை பற்றிய பேச்சுக்கள் ரகசியமாக துய்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப்பட்டு பொது வழக்கிலிருந்து விலக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண் தன் படைப்பினூடாக அம்மர்மத்தை தொட்டுப் பேசுகையில் அதைக் குறுகுறுப்புடனும், கிளர்ச்சியுடனும் படிப்பவர்கள் அதையே ஒரு பெண் எழுத முனைகையில் அந்தரங்கம் சந்திக்கு வந்து விட்டதாக அதிர்ச்சியடைந்து போகிறார்கள்.

நமது மொழியின் முதல் இலக்கண நூலாக அறியப்படுகிற தொல்காப்பியத்திலேயே இது பற்றிய குறிப்பு வருகிறது. தன் காதல் பற்றிய உணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்தும் சுதந்திரம் ஒரு ஆணுக்கு உண்டே தவிர பெண்ணுக்கில்லை என்கிறது அது.

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை

ஆனால் ஒவ்வை (குறுந்தொகை 28) நக்கன்னையார் (புறம் 83,84,84) முதலியோரின் பாடல்களில் அப்போதே அவ்விலக்கணம் மீறப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. குறிப்பாக பக்தி இலக்கிய காலத்தில் ஆண்டாளின் பாடல்கள் அவ்வகையில் அசாதாரணமான உச்சங்களை அடைந்தவை. அவற்றின் கவித்துவமும், வீர்யமும் இறைபக்தி என்ற திரையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே வழங்கப்படுகிறது. நாச்சியார் திருமொழியில் உள்ளது பின்வரும் பாடல்.

காதல் நோய் ஆண்டாளின் உடலை வருத்துகிறது. கண்ணன் அணிந்திருந்த வண்ண ஆடையை, துளசி மாலையை, அவனது புல்லாங் குழலின் துளைவாய் நீரை, அவன் நடந்து சென்ற சுவட்டின் மண்துகளை என் மீது கொண்டு வந்து பூசுங்கள் என்றெல்லாம் புலம்புகிறவள் இறுதியாக, 

உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே

என்று ஆவேசமாகக் கூறுகிறாள். அக்குரலின் அதே உணர்வுத் தொடர்ச்சியை பல நூற்றாண்டுகள் கழித்து ரேவதியிடம் கேட்கிறோம்.

முலைகள் 

முலைகள் 
சதுப்புநிறக் குமிழிகள் 
பருவத்தின் வரப்புகளில் 
மெல்ல அவை பொங்கி மலர்வதை 
அதிசயித்துக் காத்தேன் 
எவரோடும் ஏதும் பேசாமல் 
என்னோடே எப்போதும் 
பாடுகின்றன 
விம்மலை 
காதலை 
போதையை…. 
மாறிடும் பருவங்களின் 
நாற்றங்கால்களில் 
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை 
தவத்தில் 
திமிறிய பாவனையையும் 
காமச்சுண்டுதலில் 
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன 
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும் 
சிசு கண்ட அதிர்வில் 
குருதியின் பாலையும் 
சாறெடுக்கின்றன 
ஒரு நிறைவேறாத காதலில் 
துடைத்தகற்ற முடியாத 
இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித் 
தளும்புகின்றன.

ஒரு சுரப்பி எவ்விதம் பாலுணர்வின் குறியீடானது என்ற கேள்விக்கு ரஜனிஷ் தந்த விளக்கத்தை இச்சந்தர்ப்பத்தில் காண்பது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகிறது. ஒவ்வொரு உயிரும் இன்னொன்றை முதல் முறையாக அறிவது முலைகள் மூலமாகவே. அது வெறும் உணவூட்டும் அவயம் மாத்திரமல்ல. அதன் மூலமாகவே அன்பு, பாதுகாப்பு, அரவணைப்பு எல்லாமே சிசுவிற்கு கிடைக்கிறது. எனவேதான் அதன் உபயோகம் தீர்ந்து நாம் வளர்ந்துவிட்ட பிறகும் அதைப் பற்றிய மனப் பீடிப்பு நீங்காதவர்களாகவே சாகும் வரைக்கும் இருக்கிறோம். அதனாலேயே இலக்கியங்கள் முலைகள் பற்றிய வருணனைகளால் நிரம்பி வழிகின்றன. ஓவியர்கள் முலைகளை ஓயாமல் வரைந்து தள்ளுகிறார்கள். சிற்பிகள் பெரிய பெரிய ஸ்தனங்களுடன் சிற்பங்களை செதுக்கிக்கொண்டே போகிறார்கள். அவை வெறும் பால் சுரப்பிகளோ, தீராத துக்கத்தின் கண்ணீர்த் துளிகளோ மட்டுமல்ல; ஆற்றமுடியாத சினத்தின் தீத்துளிகளும் கூடதான் என்பதையும் சிலப்பதிகாரம் மூலம் நாம் அறிந்திருக்கிறோம்.

குறிப்பிடும்படியான மற்றொரு பெண் கவிஞர் சல்மா. உறவுகளின் மீதான எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகையில் கவியும் ஏமாற்றமும், அதன் காரணமாக தனக்குள்ளாகவே ஒதுங்கிக் கொள்வதால் உருவாகும் தனிமையும் கலந்து உருவாவது இவருடைய கவிதைகளின் உணர்வுத் தளம். இவரது இயல்பான பல வரிகள் அவற்றின் அடங்கிய தொனி காரணமாகவே உணர்வுகளைத் தீவிரமாக எழுப்ப வல்லவையாகின்றன. ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ ‘பச்சை தேவதை’ ஆகியவை இவருடைய தொகுப்புகள். ‘ஒப்பந்தம்’ என்ற கவிதையிலிருந்து ஒரு பகுதி.

என் நிலைப்பாடு
காலத்தாலும்,
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது

உன்னிடமிருந்து
கலங்கலானதே எனினும்
சிறிது அன்பைப் பெற

உனது குழந்தையின்
தாய் என்னும் பொறுப்பை
நிறைவேற்ற

வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள

எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி.

மனிதர்கள் தமது துவக்க காலத்தில் குகைகளிலும், காடுகளிலும் வேட்டையாடி வாழ்ந்திருந்த காலத்தில் தாய்வழிச் சமூக அமைப்பாகவே அவர்களுடைய கூட்டு வாழ்க்கை முறை இருந்திருக்கிறது. பிறகு சமவெளிகளில் நிரந்தரமாகத் தங்கி விவசாயம் முதலிய உற்பத்தி முறையிலான தொழில்களில் ஈடுபடத் துவங்கும் போது மெல்ல மெல்ல தந்தை வழிச் சமூகமாகிறது. உபரி, தனிச்சொத்து ஆகியவை உருவாகும் போது குடும்பம் என்ற அமைப்பு உறுதிப்படுகிறது. பெண் வெளியைத் துறந்து வீட்டிற்குள் அமர்கிறாள். அவளின் இயற்கைத் தகவமைப்பும் அதற்கு ஒரு காரணமாகிறது. இன்றும் அதிக மாறுதலுக்குள்ளாகாத ஒரு ஆதி நிறுவனமாக எஞ்சியிருப்பது குடும்ப அமைப்பு மாத்திரமே. இவ்வமைப்பு பெண்களைச் சுரண்டுவதாக பெண்ணியலாளர்களால் சுட்டிக்காட்டப் பட்டாலும், இதற்கு மாற்றான ஒரு அமைப்பை இதுவரையிலும் உருவகிக்க முடியவில்லை. இந்த உள்ளார்ந்த தேவை காரணமாகவே அவ்வமைப்பு இன்னும் நீடித்து வருகிறது போலும்.

இந்நிலையில் இவ்வமைப்பிலிருந்து கொண்டே அதன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ள எத்தனிப்பது என்ற அளவிலேயே நமது பெண்களின் முயற்சிகள் உள்ளன. அவ்வகையில் தனது எல்லைகளைக் குறித்த தெளிவான அறிதல், அறிந்திருந்தும் அதை மீறமுடியாத யதார்த்தம், இவ்விரண்டு முனைகளுக்கும் நடுவிலான முரணை தன் படைப்பின் வழியாக தீர்க்க முயலும் போது உருவாவதே சல்மாவின் மேற்காண் கவிதையை ஒத்த படைப்புகள். இப்போது நாமிருப்பதாகக் கருதப்படுகின்ற இந்த பின் நவீனத்துவக் காலத்திலுமே கூட எழுத்தை அதை எழுதியவரின் சுய அனுபவமாகவே கற்பனை செய்து கொள்கிற பாமரத்தனத்திலிருந்து விடுபடமுடியாதவர்கள் அநேகர் உள்ளனர் என்பது ஆச்சரியமே. அதனாலேயே, தங்களுடைய அறியாமையிலிருந்து பிறக்கின்ற தன் நிச்சயத்தோடு அவர்கள் எழுத்தாளர்கள் பற்றிய தங்கள் கண்டனத் தீர்ப்புகளை வெளியிட்டு வரும் அபத்தமும் நிகழ்கிறது.

பொதுவாக பெண்கள் தங்களுடையது என வரித்துக் கொள்ளும் சுய அனுபவ வரையறைகளைத் தனது புனைவின் மூலம் கடக்க முனைபவையாக அமைபவை மாலதி மைத்ரியின் கவிதைகள். ‘சங்கரா பரணி’ ‘நீரின்றி அமையாது’ ஆகியவை பரவலாகப் பேசப்பட்ட இவரது கவிதைத் தொகுப்புகள். இவருடைய கவிதைகளில் பெண்மை என்பது வெறும் சமூக கலாச்சார அடையாளமாக மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அதை, அனைத்தையும் பிறப்பித்து, ஊட்டி வளர்க்கும் இயற்கையின் உயிர்ச்சக்தியோடு இணையாக வைத்துக் காணும் மாலதி தாய்மை என்பதன் கனிவை, கருணையை, உக்கிரத்தை, அளவின்மையை பரவசத்துடன் விதந்தோதுபவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். ‘விஸ்வரூபம்’ என்ற கவிதை அவ்வகையில் குறிப்பிடத்தகுந்தது.

விஸ்வரூபம்

ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு விலகிச்
செல்லத் தொடங்கின

அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரைபோலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக் காலவெளியிலும் அலையத் துவங்கின.

நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்து விடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன

யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்.

உறவின் மென் சோகங்களை தன் நினைவுள் பதிந்து கிடக்கும் இயற்கையின் துளிகளுடன் குழைத்து சிக்கனமான சொற்களுடன் சித்திரப்படுத்துபவை தேன்மொழியின் கவிதைகள். ‘இசை இல்லாத இலை இல்லை’ ‘அநாதி காலம்’ இவரது தொகுப்புகள். இக்கவிதைகளில் உணரக் கிடைக்கும் பிரதேச வாசனையின் அளவிற்கு இவருடைய தன்னிலையின் அடையாளம் அழுத்தமாகப் பதிவு பெறவில்லை என்றே கூறலாம்.

‘கைப்பற்றி என் கனவு கேள்’ என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமான சுகிர்தராணி அத்தொகுப்பின் தொனியிலிருந்து வெகுவாக விலகி வந்தவராகத் தற்போதைய கவிதைகளில் வெளிப்படுகிறார். என்புதோல் போர்த்திய பருவடிவாக இருக்கும் உடலின் அறியப்படாத மர்மங்களை தாபத்தின் ஊடாக மூழ்கி அறியத் துடிப்பவையாக நகர்கின்றன இவரது வரிகள்.

இரவு மிருகம்

பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவியத் தொடங்கியிருந்தது இருள்.
கதவடைத்துவிட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போதுதான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது.
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது.
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.

ஒவ்வையாரின் அகப்பாடல் ஒன்றில் ஒரு உவமை வருகிறது. பேயைக் கனவில் கண்டால் அதைப் பிறரிடம் கூறாமல் மறைப்பது போல தலைவி தன் காதல் துயரை மறைத்து வைக்கிறாள்

இடைபிற ரறித லஞ்சி மறைகரந்து
பேஎய் கண்ட கனவிற் பன் மாண் (அகம் 303)

இங்கே சுகிர்தராணி இரண்டையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுவதன் வழியாக அவ்வனுபவத்தினை சொற்களால் கடக்க முயல்கிறார்.

மேலே பேசப்பட்டவர்களைத் தவிர்த்து ரிஷி, அ. வெண்ணிலா, இளம்பிறை, மு.சத்யா, தென்றல் ஆகியோரும் குறிப்பிடும்படியான கவிதைகளைத் தொடர்ந்து எழுதி வருகின்றனர் இவர்களுள் ரிஷி, வெண்ணிலா போன்றோர் பெண் கவிஞர் என்ற பகுப்பிற்குள் வைத்து தங்களைப் பார்ப்பதை விடவும் பாலடையாளமற்று கவிஞர் என்ற பொது அடையிலேயே தங்களை மதிப்பிட வேண்டுமென்று கூறுகின்றனர்.

எழுத்து எழுத்தாக நிற்குமே ஒழிய கால ஓட்டத்தில் ஆண் எழுத்து பெண் எழுத்து எனப் பிரிந்து நிற்காது என்ற கருத்தும் ஒரு சாராரிடம் உள்ளது.

க. மோகனரங்கன்

இலக்கியத்தில் பிரதான போக்கிலிருந்து கிளைத்து புதியதொரு போக்கு வடிவெடுக்க நேரிடுகையில் இதுபோன்ற தத்தளிப்புகளும், குழப்பங்களும், மிகையான பாவனைகளும், குறை மதிப்பீடுகளும் நிகழ்வது இயல்பானதே. அப்போக்கு தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரையிலான நிர்ணய காலம் வரையிலும் இதற்கான உறுதிப்படுத்தப்பட்ட விடைகளை யாரும் தரமுடியாது.

4

சித்ரலேகா மௌன குரு ‘பெண்கள் ஆய்வு வட்டத்திற்காக’ தொகுத்த இலங்கை பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளான ‘சொல்லாத சேதிகள்’ மற்றும் ‘செல்வி சிவரமணி கவிதைகள்’ இரண்டும் முக்கியமானவை. தமிழகப் பெண்கவிஞர்களிடைய பொதுவாகக் காணப்படாத சித்தாந்த அரசியல், போராட்ட நிலைப்பாடுகள் இலங்கைப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் தீவிரமாக வெளிப்படுகின்றன. உள்நாட்டு போரின் காரணமாக உயிர் வாழ்தலின் நிச்சயமின்மைக்கு இடையேயும் தம் இருப்பு, அடையாளம், சுதந்திரம் பற்றியெல்லாம் உளவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அதிகமும் சிந்தித்துள்ளனர். இவர்களில் சங்கரி, சன்மார்க்கா, ஊர்வசி, சிவரமணி, பஹீமா ஜஹான் முதலியோரின் கவிதைகள் குறிப்பிடத் தகுந்தவை. இவர்களுள் சிவரமணி மூர்க்கமான அரசியல் மற்றும் கலாச்சார நெருக்குதல்களுக்குப் பணிந்து தன் குரலை மௌனமாக்கிக் கொள்ள மறுத்தமையால் தொடர்ந்து உயிர்வாழ முடியாமல் போன அவலமும் நிகழ்ந்தது. இவர்களின் கவிதைகள் குறித்து விரிவாகப் பேச வேண்டும்.

*

துணை நூற்பட்டியல்:

1) மகடுஉ முன்னிலை – தாயம்மாள் அறவாணன் 
2) கொங்குதேர் வாழ்க்கை – 2 – ராஜமார்த்தாண்டன் 
3) காலச்சுவடு கவிதைகள் – சிபிச்செல்வன்

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *