விடையில்லா கேள்விகள்? – வேலாயுதம் பெரியசாமி

(தீபு ஹரியின் ‘கடவுளுக்குப் பின்’ சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து)

கடவுளுக்குப் பின் (காலச்சுவடு, 2024)

இந்த தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளும் பெண்களின் உணர்வுகளை, அக உலகை  நவீன வாழ்க்கை, குடும்ப அமைப்பு, உளவியல், வரலாறு, சமூகம் என அனைத்து பின்னனிகளிலும் இருந்து முன்வைக்கிறது. சிறுகதைகளில் வரும் பெண்களின் வாழ்க்கையை அரசியல் நிலைபாடுகள், முற்போக்கு கோசங்கள் என எந்த உடை கொண்டும் சோடிக்காமல்  அப்பட்டமாகவும், தத்துவார்தமாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தத்துவார்த்தமான எல்லா கேள்விகளுக்கும் குழப்பங்களோ, மென்சிரிப்போ, குற்றவுணர்வோ, கையறுநிலையோதான் பதில்களாக உள்ளன. ஏனென்றால் அனைவரும் வரலாறு, சமூகம், குடும்பம், உறவுகள், திருமணம் என பல்வேறு கட்டமைப்புகளின் விரிந்த பின்னலில் சிக்கி கொண்டவரகளாகவே இருக்கிறார்கள். 

 இந்தப் பெண்கள் அனைவருமே வாழ்க்கையின் முன் விடையற்ற கேள்விகளுடன் குழம்பி, ஒடுங்கி, பாதிக்கப்பட்டு  நிற்பவர்கள். யாருக்கும் வாழ்க்கையை எதிர்த்து போராடி எழுந்துவிட வேண்டும் என்ற வேட்கை எல்லாம் கிடையாது. 

அதன் புரிந்து கொள்ள முடியாத இயங்களுக்கிடையில் சிக்கி கொண்டவர்கள். அதற்காக யாரையும் குறை சொல்வதில்லை. அதன் முன் நின்று அழுகிறார்கள், சிரிக்கிறார்கள், பயந்து ஒடுங்குகிறார்கள், உதாசீனப்படுத்துகிறார்கள் அவ்வளவு தான். ஆனால் இவர்களின் அத்தனை அல்லல்களுக்கு பின்னாலும் மனித பண்பாடு, சமூகம், வரலாறு, குடும்பம், ஆண் என ஏதாவது ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. அந்த காரணங்கள் அனைத்தும் இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகளில்  தவிர்க்க முடியாத காரணியாக அவர்களது வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாக்கிய படியே இருக்கிறது. இறுதியில் அனைவருமே  விடையற்ற கேள்விகளுடன் நம் முன்னே நிற்கிறார்கள். 

தீபு ஹரி @ பொன்முகலி எழுதிய இந்த கவிதையில் அவரது சிறுகதைகளில் வெளிப்பட்டிருக்கும் வாழ்க்கை பார்வைக்கான   சாராம்சம் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே அவரது சிறுகதை உலகத்தை புரிந்து கொள்ள முயல்கிறேன்.

நம் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது
என்பதற்கு
என்னிடம் எந்த பதிலும் இல்லை
அது இப்படித்தான் இருக்கிறது…
பரந்தவெளியோ
ஆதுரமாய் வீசுகிற காற்றோ
சிறு பிறையோ
அமைதிபடுத்த இயலாத
மனதோடானதாகத்தான்
அது இருக்கிறது.
இனிப்பின் நினைவுகளில் 
தேம்பியழும்
நினைவுகளோடானதாகத்தான்
அது இருக்கிறது…
எல்லா ஆறுதல்களையும்
கசப்போடு புறந் தள்ளுகிற 
கைகளோடானதாகத்தான்
அது இருக்கிறது…
எந்த கேள்விகளையும்
குளிர்விக்கிற
பதில்கள் அற்றதாகத்தான் 
அது இருக்கிறது.

-பொன்முகலி

அலர்சிறுகதையின் ஒரு இழை சமகாலத்தில் கதைசொல்லிக்கும், வசு நந்தனுக்கும் ஏற்படும் திடீர் உறவு, உறவுச் சிக்கல் அதன் வழியாக, அவனுடைய சிறுவயதில் அவனது தாய் மீது  அவனுக்கு ஏற்பட்ட பாலியல் ஈர்ப்பு (Oedipus Complex) மற்றும் அதை அவனது பெற்றோர்கள் எதிர்கொண்ட விதமும், அதனால் அவனுக்குள் விளைந்த மனநல பிரச்சனை(Infantile nuerosis)ஐ கதை சொல்லி தெரிந்து கொள்கிறாள். 

சமகாலத்தில் நிகழும் இந்த உரையாடலுக்கு இடையில்  இன்னொரு இழையாக  கதையில் வருவது, கதைசொல்லி  படித்த கல்லூரி  விடுதியில் சக மாணவிகளான கார்த்திகா, தாமரைச்செல்வியின் ஓர்பாலின ஈர்ப்பை (Lesbian) புரிதலின்மையாலும், அறியாமையாலும் கதைசொல்லி மற்றும் அவளுடைய தோழி இருவரும் வார்டனிடம் சொல்ல அது கல்லூரி நிர்வாகம் வரை சென்று, அவரகள் இருவருடனும் அவர்களுடைய பெற்றோர்களும் அசிங்கப்படுத்தப்பட,  இருவரும் டி.சி வாங்கி கொண்டு செல்கிறார்கள். செல்லும் போது கார்த்திகா கதைசொல்லியையும், தோழியையும் ஆங்காரத்துடன் பார்த்த பார்வை அவர்களை புலுவென எண்ணச் செய்கிறது. இறுதி பரீட்சையில் தாமரைச் செல்வி விஷம் குடித்து இறந்து விட்டால் என்ற செய்தி கேட்டு இருவரும் ஸ்தம்பித்து விடுகிறார்கள்.

இந்த இரண்டு இழைகளும் பின்னிப் பின்னி வந்து இறுதியில் கதைசொல்லியின் மனத்தில் அனைவரின் முகமும் சுழன்று எழ ஏற்படும் மொட்டவில்தழுடன்(குற்றவுணர்ச்சி) முடிகிறது கதை.

இந்த இரண்டு பாலியல் கூறுகளுமே, உயிரியல் ரீதியான ஒரு மாறுபாடே ஒழிய இதில் இயற்கைக்கு எதிரான எதுவும் கிடையாது என்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு, அது பல நாடுகளாலும் ஒத்து கொள்ளப்பட்டு, சட்டங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் விருப்பத்துடனான ஓரின உறவு என்பது தணடனைகுறியதல்ல. 

ஆனால் இந்த கதை பேசுவது அது குறித்தான எந்த புரிதலும், அக்கறையும் இல்லாத ஒரு சமூக மொன்னைத்தனத்தைதான். குறிப்பாக படித்தவர்களிடமே இது குறித்து தென்படும் அறியாமையையும், போலித்தனத்தையும் தான். 

பாலியல் ரீதியான சிக்கல்களுக்கு உணர்ச்சிபூர்வமாகவும், அருவருப்புடனும் எதிர்வினையாற்றுவதிலிருந்து,  சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அது ஏற்படுத்தும் உளவியல் மற்றும் வாழ்க்கை சிக்கல்களுக்கு காரணமாகிறார்கள். ஆனால் அது குறித்த எந்த குற்றவுணர்வும் அவர்களுக்கு கிடையாது.

இந்த கதையின் முடிவில் கதைசொல்லி வசுநந்தனின் கதை வழியாக அந்த குற்றவுணர்வை அடைந்து திடுக்கிடுகிறாள். 

சட்டத்தில் “Ignorance of law is not an excuse” என்று ஒரு கருத்து உண்டு. சட்டப்படி தவறு என்று தெரியாததால் இந்த குற்றத்தை செய்து விட்டேன் என்று வாதாட முடியாது. ஓரின ஈர்ப்பு குறித்த அறியாமையாலேயே அவளும் அவளது தோழியும் அவர்களை மாட்டிவிடுகிறார்கள். அதில் ஒரு உயிரும் போகிறது. இன்னொருத்தி மனதளவில் என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். அவர்கள் பெண்களாக இருப்பதால் அழுத்தம் தீவிரமாகவும் இருந்திருக்கும். ரகு நந்தனுக்கு இருக்கும் சிக்கல் என்பது அவனுடைய பெற்றோர் பொறுமையாகவும், மருத்துவர் ஆலோசனைப்படியும் கையாண்டிருந்தால் வளர வளர மறைந்து விட்டிருக்கும். ஆனால் Oedipus complex குறித்த அறியாமையால் அவனை ஒரு மன நோயாளியாக மாற்றி வைத்து விட்டார்கள். 

இந்த சிறுகதை முடிவில் கதைசொல்லி மனதில் ஒரு மொட்டவிழ்தல் போல நிகழும் அந்த குற்றவுணர்வை ஒட்டுமொத்த சமூகமும் அடைந்தால் மாற்றங்கள் வரலாம்.

*

’பிறகு சிறுகதை நவீன விழுமியமான தனிமனித சுதந்திரத்திற்கும், குடும்பம் எனும் கூட்டு வாழ்க்கையில் உள்ள அனுகூலம் மீதான ஏக்கத்திற்கும் இடையில் எதைப் பற்றிக் கொள்வது என்ற ஒரு பெண்ணின் குழப்பங்களும், தனிமையுமே பேசப்பட்டுள்ளது.

இதில் யதார்தத்தை  ஒரு இழையாகவும், அவளது தனிமையுணர்வை மிகுபுனைவு வழியே இன்னொரு இழையாகவும் சொல்கிறார். யதார்த்தத்தில் சிக்கல்களும், சண்டையும், குழப்பங்களும் மேலிட, மிகுபுனைவில் அவள் அடையும் தனிமையுணர்வு சித்தரிக்கப்படுகிறது. 

கதைசொல்லியின் தாயும், தந்தையும் வேறு வேறு ஜாதி. அனைவரும் திருமணம் செய்ய சொல்லியும் ‘Live in relationship’-ல் கடைசி வரை வாழ்கிறார்கள். அதனால் உறவுமுறை, சுற்றத்தாரால் விலக்கப்பட்டு தனிக்குடும்பமாக நகரத்தில் வாழ்கிறார்கள். பெருளாதார சிக்கல்கள் கிடையாது. ஆனால்

தாய்க்கும், தந்தைக்குமான உறவு சீராக இல்லை,  இருந்தாலும் அவர்கள் பிரியாமல் நண்பர்களாக வாழ்கிறார்கள். கதை சொல்லியான மகள், ஓவியரான தாயை சுதந்திரமானவளாக, தன்னுணர்வு மிக்கவளாக உணர்கிறாள். தந்தையிடமிருந்தே பாசத்தையும், பாதுகாப்புணர்வையும் அடைகிறாள். 

அதாவது தாய் நவீன விழுமியமான தனிமனித சுதந்திரம், தேடல், ஆன்மீக நிறைவிற்காக தன் வாழ்க்கையை அமைத்து கொள்ளும் போது, தந்தை ஒரு சாதாரணமான குடும்ப மனிதனாக இருக்கிறார். இவர்களுக்கிடையில் வளரும் அவள் அடையும் குழப்பங்களும், தனிமையுணர்வும் அவளை வாட்டுகிறது. அவளை சுற்றி தன்னுடைய பண்பாட்டு வேர் சார்ந்த எதுவும் இல்லை. ஒரு ‘Westernised’ உலகமே திறந்து வைக்கப்படுகிறது. இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்ற நிலைமை. தாயின் சுதந்திரம், நிமிர்வின் மீதும் பயம் கலந்த பெருமை இருந்தாலும், அவளிடம் உள்ள உணர்ச்சியற்ற தன்மையை வெறுக்கிறாள். தந்தையிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்புணர்வு மற்றும் அன்பினால் தாயின் மீது கசப்பை அடைகிறாள். ஒரு வகையில் நவீன வாழ்க்கை முன்வைக்கும் பெண்ணில்  உள்ள ஆண்தன்மையை வெறுக்கிறாள், பெண் தண்மை மேலோங்கி இருக்கிறாள். நீலத்தையா அல்லது சிவப்பையா.  எதை தேர்வது? தேர்ந்து கொள்ள முடியுமா?அவளால் தனக்கு தைரியம் சொல்லி கண்ணீர் வடிக்கத்தான் முடிகிறது.

தீபு ஹரி

’கடவுளுக்குப் பின் சிறுகதை அறிவியல் புனைவாக எழுதப்பட்ட கதை. முழுக்க தர்க்க அறிவை மட்டுமே நம்பும் மனிதர்களை எதிர்காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் கூட்டிச் செல்கிறார்கள். கதைசொல்லி மதுராவின் குடும்பத்தில் அவளது தாய் இறந்த காலத்திற்கும், இவள், தம்பி, தந்தை எதிர்காலத்திற்கும் செல்கிறார்கள். முதலில் பூமியில் இருந்த தர்க்கத்தை கைவிட சொல்கிறார்கள். அங்கே உணவுக்கு மாத்திரை தான் வழங்கப்படுகிறது. பூமியில் இருந்த எதுவும் கிடையாது. மனிதர்கள் மிதந்தபடி நடக்கிறார்கள். படிக்கட்டுகள் தோன்றி மறைகிறது. இரவு, பகல்களை விளக்குகளால் உண்டாக்கி கொள்ளலாம்.

எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். பூமியில் இருந்த மொழிகளை பயன்படுத்த கூடாது. அங்கு வசிக்கும் மனிதர்கள் ஆராய்சிக்காக ஏங்கி இருக்கிறார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நாளடைவில் கதைசொல்லியின் தந்தையின் தலைமையில் ஒரு குழு உருவாகிறது. முதலில் அந்த நிலப்பரப்பிற்கு ஏத்தாற் போல் மொழியை உருவாக்குகிறது. பின்னர் புத்தி பேதளித்து இறந்துபோன கதைசொல்லியின் தம்பியின் உளறலை கடவுள் வாக்கு என்றும், அவனை கடவுளாகவும் மாற்றுகிறார்கள். அந்த மத நிறுவன தலைவராக தந்தையும், துனை தலைவராக இவளும் இருக்கிறார்கள். எதிர் குழுக்கள் உருவாகிறார்கள். பின்னர் எல்லைகள் உருவாகி தேசியம் பிரிக்கப்படுகிறது. இறுதியில் எதிர்காலத்திற்கு அவர்களை கூட்டி வந்த நிறுவனம் உங்கள் மீதான ஆராய்ச்சியே இது தான் என்று சொல்லி எஞ்சி இருப்பவர்களை, பூமிக்கே அனுப்பி வைக்கிறது.

பூமியில் கதை சொல்லியும், இறந்த காலத்திலிருந்து திரும்பி வந்த தாயும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த காலத்தில் முதல் புத்தகத்தின் முதல்வரியாக “ உலகம் ஒரு மயிர்கற்றை” என்று எழுதியதற்காக அதை எழுதிய பெண் எழுத்தாளர் கொலை செய்யப்பட்டாள் என்று தாய் சொல்கிறாள். எதிர்காலத்தின் கடைசி புத்தகத்தில் அதே வரியை எழுதியதற்காக ஒரு பெண் கவிஞர் கொல்லப்பட்டாள் என்பதை சொல்லி இருவரும் “மயிர்கற்றைகளுக்காக” என்று சியர்ஸ் சொல்லி பொங்கி சிரிக்கிறார்கள். 

மனிதன்(ஆண்) எப்படி எல்லா காலங்களிலும் மொழி, மதம், தேசியம், அதிகார அடுக்குகள் என்று அமைப்புகளை உருவாக்கும் தன்முனைப்போடு இயங்குகிறான். அதை உருவாக்கி குழுக்களாக பிரித்து, அடிமைப்படுத்தி, சுரண்டி,  நாகரீகம், வளர்ச்சி என்ற கட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. 

உச்சகட்ட அறிவியல் வளர்ச்சி, தர்க்க அறிவு வளர்ந்த பின்பும் எப்படி எளிதாக தன்னுடைய தன்முனைப்பான அடிப்படைக்கே திரும்பி செல்கிறான் மனிதன் (ஆண்) என்பதையே பேசுகிறது கதை.

பெண்களின் குருதியின் மேல் ஆண்களால் உருவாக்கப்பட்ட இந்த நாகரீக வளர்ச்சியை, மனித பண்பாட்டை, வரலாற்றை உதாசீனப்படுத்தும் சிரிப்பு அது. இன்று பலரும் சொல்வது தான், பெண்களால் இந்த உலகம் கட்டமைக்கப்பட்டிருந்தால் மனித வரலாறு வேறு ஒன்றாகத்தான் இருந்திருக்குமோ? இத்தனை போர்கள், பஞ்சங்கள், சுரண்டல்கள், அடிமைப்படுத்தல்கள், வன்முறை நிகழ்ந்திருந்திருக்காதோ?

அப்படியென்றால் அவர்கள் சொல்வது போல ஆண்கள் வெறும் மயிர்கற்றைகள் தானா?

*

’கனா சிறுகதை ஆரம்பத்தில் கனவுகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொள்கிறது. அப்படியே கனவுகள் வழியாகவே நம்மையும் கூட்டிச் செல்கிறது. கனவுகள் அனைத்தும் பாட்டி மற்றும் பிரபுவின் மரணம் சார்ந்தது. பாட்டி அவளுடைய சிறுவயதை கதைகளால் நிறைத்தவள். அந்த அவசரமற்ற, நிதானமான கிராமத்து வாழ்க்கை அவளுக்குள் பாட்டி வழியாக ஒரு ஏக்கமாகவே கனவுகளில் வருகிறது. பாட்டியின் இறப்போடு அது முடிந்து விட்டது. அதற்கு பிறகு அம்மாவின் புரிந்து கொள்ள முடியாத ஒரு செயலால் வாழ்க்கை அவளுக்கும், தந்தைக்கும் பெரிய வலியாகிறது. பின்னர் பிரபுவால் சின்ன வசந்த காலம் அவள் வாழ்வில். அதுவும் மறைந்து போகிறது. அங்கே தான் அவள், தன் தந்தையை உள்ளூர சந்திக்கிறாள். 

கனவுகளுக்கு எப்படி எந்த தர்க்கமும் இல்லையோ, அப்படியே தான் வாழ்க்கைக்கும். எதனாலும் வகுத்து கூறிவிட முடியாத விதிகளால் இயங்கி கொண்டிருக்கிறது வாழ்க்கை. மனிதர்கள் அதில் மிகப்பெரிய கை ஒன்றால் நகர்த்தப்படும் சதுரங்க காய்களை போல 

வாழ்ந்து மடிகிறார்கள். வாழ்க்கையே கனவென்று நிகழ்ந்து கொண்டிருப்பது தானோ? இரண்டிலிருந்தும் எழும் எந்த கேளிவிகளுக்கும் அறுதியான பதில் கிடைக்காது போல.

ஆனாலும் வாழ்க்கையின் எல்லா நிலையாமைகளையும் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் அன்பு மற்றும் நம்பிக்கை வழியே தான் கடந்து செல்கிறார்கள். அதுவே வாழ்க்கையை நகர்த்தும் உந்து சக்தியாக இருக்கிறது. அவளுடைய துயரத்தை விட பெரிய துயரம் அவருடையது. அவள் அம்மா எந்தவித எதிர்மறை காரணங்களும் இல்லாமல் அவரை நிராகரித்து விட்டு சென்றவள். தன் மகளுக்காகவே அனைத்து வலிகளையும் மறைத்து வைத்துவிட்டு இன்று வரை வாழ்கிறவர் அவர். அந்த பெரு வலியை உணர்தவளாகவே, நானும் உங்களைவிட்டு சென்று விடமாட்டேன்    ‘சீக்கிரம் திரும்பி வருவேன்’ என்ற இறுதி வரியை அவரிடம் சொல்கிறாள். அவரும் கண்கள் கலங்க தலயசைக்கிறார்.

*

தேன்கூடுசிறுகதை தேவதேவனின் ஒரு கவிதையை நினைவூட்டியது

உயர் அடுக்க இல்லக்கட்டிடங்கள்
மலைகளாய் உயர்ந்துவிட்ட 
தேன்கூடுகள்!
இனி தேனீக்கள் சிறகடித்தலையும்
மலர்வெளியாகத்தானே 
இருக்க முடியும் இந்த பூமி?

-தேவதேவன்

இந்த கவிதையை படிபதற்கு முன்புவரை அப்பார்ட்மெண்ட்ஸ், அதுவும் உயர் அடுக்கக கட்டிடங்கள் என்றாலே ஒருவித எதிர்மறையான சித்திரம் மனதில் இருந்தது. இதை படித்தபோது மனதிலேயே ஒரு மெல்லிய புன்னகை பூத்துக் கொண்டேன். அகம் மலர்ந்த கவிஞனால் மட்டுமே இப்படி பார்க்க முடியும் அல்லது குழந்தைகளால். அன்றிலிருந்து வின்முட்ட நிற்கும் அடுக்கு வீடுகளை பார்த்தால், தேன்கூடு என்றே தோன்றும்.

இந்த கவிதைக்கு நேர் எதிரான பொருளில் வருகிறது சிறுகதையிலுள்ள வீடும், தேன்கூடும்.

இந்த சிறுகதையில் உள்ள மனநிலையை, இந்த தொகுப்பில் ஆசிரியர் எழுதியுள்ள பிற கதைகளிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

கிராமம், குடும்பம், உறவுகள், இயற்கை என சென்ற காலகட்ட கூட்டு வாழ்க்கை முறையிலிருந்து பிரிந்து வந்து நகரங்களில் படிப்பு, வேலை, நுகர்வு என மீச்சிறு வட்டத்திற்குள் வாழ நேர்ந்த நடுத்தரவர்க்க படித்த (சிந்திக்கும்) பெண்களில் அது உருவாக்கியிருக்கும் பாதிப்புகளாகவே இந்த சிறுகதையை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் தங்களை சென்ற காலகட்டதுடனும் பொருத்தி கொள்ள முடியாமலும், நவீன வாழ்க்கையின் நெருகடிக்கலுக்குள்ளும் மாட்டிக் கொண்டவர்களாகவே உணர்கிறார்கள். சென்ற காலத்தில் அனைவரும் கூட்டு அடையாளத்துக்குள் மறைந்து கொண்டு வாழ்ந்து விடலாம். ஆனால் இன்று தனிமனிதன், தனிப்பட்ட தேடல் என்ற கருத்து வலுப்பட்டு வரும் நிலையில் ஒரு நடுத்தர வர்க்க படித்த பெண் தன்னுடைய சுயத்தை/self-ஐ கணடடைவதில் உள்ள சிக்கல்கள், குழப்பங்கள் மன நலம் சார்ந்த பிரச்சனைகளாக பரிணமிக்கிறது. குடும்பம் அமைப்பு எத்தனை சிறிதானாலும் அவர்களின் பொறுப்புகள் கூடிக்கொண்டு தான் வருகிறது. இங்கே அவள் முதலில் வெறுப்பது இயற்கையை தான். புறா, தேனீக்கள் என அவற்றை தன் வீட்டிற்குள் வரவிடக் கூடாது என்கிறாள். ஏனென்றால் குடும்பம் அமைப்பு இயற்கை என்று தானே சொல்லப்பட்டு அவர்கள் தலையில் கட்டப்பட்டது.

தேனீக்கள், தேன்கூடு என்பது பெண்களும், குடும்ப அமைப்பும் தான். I hate bee hives என்று கத்துகிறாள். அவன் வந்து ‘தேன் கூட்டிற்குள் இருப்பானா’ என்று வாட்ச்மேனை திட்டுகிறாள். குடும்பம் என்ற தேன் கூடே பெண்களை தங்களின் self-ஐ கண்டடைய தடையாக இருக்கிறது. அவர்களின் உடல், மன நல பிரச்சனைகள் அதிலிருந்து தான் வருகிறது. அவள் நண்பனிடம் தேன்கூட்டை சொல்லும் போது, அவன் சிரிப்பு எமோஜி அனுப்புகிறான். ஆண் அதை சாதரணமாக பார்க்கிறான். அவன் அதன் தேனை மட்டும் உறிஞ்சுபவன். அந்த கூட்டை கட்டி தேனை அளிப்பவள் அவள். அவனது அந்த சிரிப்பு, அதை பற்றிய பிரஞ்ஞையின்மையிலிருந்து வருகிறது. எல்லா ஆண்களும், எல்லா காலங்களிலும் அப்படித்தானா?

எப்படி இருந்தாலும் அவள் கணவனிடம் இந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு  செல்லலாம் என்று தான் அவளால் சொல்ல முடிகிறதே தவிர வேறு ஒன்றையும் செய்வதற்கில்லை. சுயமா/குடும்பமா இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது? உள்ளூர அவளை தேன்கூடு அரித்தாலும் அவளால் அந்த தேன்கூட்டிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியாதவாறு அவளது அகம் பினைத்து வைக்கப்பட்டிருகிறது அல்லது அதிலிருந்து வெளியேறி செல்வதற்கான வழி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்கி, அதிலேயே மடிந்து போவது தான் விதியா? 

ஒரு அகம் மலர்ந்த கவிஞன் வானத்திலிருந்து ஒன்றை சொல்கிறான்.அது அழகை தாங்கி நிற்கும் சத்தியம் தான். ஆனால் இந்த சிறுகதை தரையிலிருந்து ஒன்றை சொல்கிறது அதன் சத்தியத்தையும் நம்மால் என்றுமே நிராகரிக்க முடியாது. அவர்கள் சுயத்தை கண்டைந்து அதில் மலர்வதை தடுக்கும் ஏதோ ஒன்று இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறதா?

*

’மல்லிகா சிறுகதை நகைமுரணை சொல்லும் கதை. மல்லிகா கொங்கு பகுதியில் வாழும் கீழ் சாதி பெண். அழகி. செல்வி அவளது இளம் தோழி, இன்னொரு பெண்ணின் கையில் குத்தியிருக்கும் மூன்று புள்ளி பச்சை வழியாக மல்லிகா குறித்த நினைவுகளுக்குள் மூழ்குகிறாள். மல்லிகா அப்பா இல்லாதவள். படிக்க செல்லவில்லை. திருமணத்தன்று முதலாளியிடம் தங்க நகை வாங்க பஞ்சு மில்லில் வேலை செய்கிறாள். அங்கு மேல் சாதி பையனுடன் பேசி பழகுவது தெரிந்து அவள் அம்மா வேலையை விட்டு நிறுத்தி விடுகிறாள். செல்வி அவளை விட எட்டு வயது இளையவள். ஆனால் மல்லிகாவிற்கு செல்வியை தான் பிடிக்கும்.  செல்வியை முதன் முதலில் கமலஹாசன் படத்திற்கு அழைத்து சென்றவள். கடலை காட்டு காம சரசங்களை பேசியவள். அவள் சித்தப்பாவே அவள் குளித்ததை எட்டி பார்த்ததை சொன்னவள். கவுண்டச்சி வீட்டில் டி.வி பார்க்க விடவில்லை என்று அங்கு திரும்பி செல்லாதவள். கேபிள் இனைப்பை தன் வீட்டில் இனைத்து எல்லாப் பெண்களையும் வீட்டிற்கு அழைத்து படங்களை போட்டு காட்டியவள். பாட்டு புத்தகங்கள் படித்து, தன் முன்னால் காதலன் மாரியப்பனை நினைத்து ‘ராசாவே உன்ன நம்பி’ பாட்டை குளிக்கும் போது ஏக்கமாக பாடுபவள் மல்லிகா.

குதித்து, குதித்து நடக்கும் கனேசனை காதலித்து, தற்கொலை முயற்சி செய்கிறாள். அது குறித்து செல்வியிடம் குழந்தை போல குபு குபுன்னு ரத்தம் வந்திடுச்சு, நானே பயந்துட்டேன் என்கிறாள். அம்மா எந்த நேரமும் அவளை திட்டுகிறாள். அப்பாவை போல பிறந்திருக்கு என்று சினக்கிறாள். செல்வி மற்றும் பிற பெண் பிள்ளைகள் மல்லிகாவுடன் சேர தடை விதிக்கப்படுகிறது. திருவிழா நாளன்று மல்லிகாவின் அம்மா அழுகை குறள் கேட்டு அனைவரும் அங்கு செல்ல, ஆண்கள்  கணேசனை தேடிப் போகிறார்கள். கணேசன் மாரியப்பனின் கடையில் சிகரெட் குடித்து கொண்டிருக்க மாரியப்பன் மனைவி டீ கடை முன்பு நின்று அழுது கொண்டிருக்கிறாள்.

செல்வி நினைவில் எழும் மல்லிகா சுதந்திரமானவளாக, நிமிர்வானவளாக, மீறலின் பிரநிதியாகவே வருகிறாள். கனவுகளில் மிதப்பவள். அவள் யாருக்காகவும், எதற்காகவும் தன்னுடைய சந்தோசத்தை விட்டு கொடுப்பதில்லை. அனைவரும் பள்ளி செல்லும் போது அவள் படங்களுக்கு செல்கிறாள், பாட்டு புத்தகஙகள் படித்து கனவுகளில் ஏங்குகிறாள். மேல் சாதிகாரர் வீட்டு குழந்தைகள் சுடு சொல் சொன்னதற்காக டி.வி பார்க்க அவர்கள் வீட்டிற்கு செல்லாமல், அனைவரையும் தன் வீட்டிற்கு கூப்பிட்டு படம் பார்க்க வைக்கும் நிமிர்வுடன் இருக்கிறாள்.இந்த சமூகம் பெண்கள் மீது போட்டு பார்க்கும் எல்லா பாவனைகளையும் மீறிச் செல்கிறாள்.

ஒழுக்கம் சார்ந்த போலித்தனங்களும் இல்லை. பிடித்தவர்களை விரும்புகிறாள். யார் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் பயப்படுவதில்லை. தன்னுடைய சந்தோசத்திற்கு முன் அம்மா, சுற்றம், சமூகம் எதையும் வைத்து பார்ப்பதில்லை. கணேசனை காதலித்தவள், இறுதியாக திருமணமான மாரியப்பனை கூட்டி கொண்டு ஓடிவிடுகிறாள்.

செல்வி போன்ற பெண்கள் மடியில் சுமக்கும் வேப்பம் பழங்களுக்கு இடையில் இனிப்பாக வருகிறது மல்லிகாவின் நினைவு. அடித்தட்டு வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கும் மீறல், சுதந்திரம் மல்லிகாவின் வழியாக இந்த சிறுகதையில் துலங்கி வருகிறது.

*

’மித்ரா என்ற சிறுகதையில் வரும் Pink floyd-ன் அந்த பாடல் பெயர் ‘Comfortably numb’ ஆனால் கதையில் அது ‘Uncomfortably numb’ என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. Roger waters எழுதிய அந்த பாடலை அனைவரும் போதை பற்றி என்றனர். ஆனால் அவர் அதை மறுத்து

தனது சிறுவயதில் காய்ச்சலில் கிடந்த போது தான் உணர்ந்தவை தான் அந்த பாடலில் உள்ளது என்றார். வளர்ந்த பிறகு அதே உணர்வுகளுக்கு ஆட்பட்டு யதார்தத்திலிருந்து விலகி ‘delirium’ போன்ற நிலைகளுக்கு சென்றதாக சொல்கிறார். அந்த அனுபவம் தான் பாடல் வரிகளாக எழுதப்பட்டது என்றார். ஆனால் அது கடைசி வரை புரிந்து கொள்ளப்படவில்லை. அதுபோல தான் மித்ராவின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளப்படாமலேயே இருக்கிறது.

அப்பா இல்லாமல், தனி அன்னைகளால் வளர்க்கப்படும் பெண் குழந்தைகளின் மேல் சுமத்தும் கண்டிப்பு, கண்கானிப்பு என அழுத்தம் நிறைந்த சிறு வயது பிராயம் மித்ராவுடையது. ஹாஸ்டலில் தான் படிக்க வைக்கப்படுகிறாள். மித்ராவின் தாய் இந்த சமூக அழுத்தத்தின் விழைவாக தனது மகளை வளர்த்த விதம், அதனால் சிறுவயதில் அவள் அடைந்த துயரம் எல்லாம் அவளை போதைக்குள் தள்ளி, மன நோய்களை உண்டாக்கி இப்போது அதிலிருந்து வெளி வரமுடியாத ஒரு இருளுக்குள் தள்ளி விட்டிருக்கிறது. அவளது ஆன்மா கலை வழியாக அதை வெளிப்படுத்த வேடுமென்றாலும் கூட அதற்கான எந்த புரிதலும் அவளுடைய சுற்றத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் இல்லை. சமூகத்தில் அதற்கான இடமே இல்லை. குறிப்பாக பெண்களுக்கு. இந்த சமூகம் அறிவியல், கலை, உளவியல் ரீதியான எந்த கல்வியுமே அற்று வெறும் நம்பிக்கையையும், பிழைப்பையும் தாண்டி எதையுமே சிந்திக்காதது என்பதே நடைமுறை உண்மை. அவளது பிரச்சனைக்கான வேர் தந்தையற்ற பெண் என்பதால் அவளது தாயால் கையாளப்பட்ட விதத்திலேயே உள்ளது. பிறகு அவளது நோயை கையாளும் அறிவார்ந்த எந்த பிரக்ஞையும் குடும்பம், மருத்துவம் போன்ற அமைப்புகளிலும் இன்னும் உருவாகவில்லை. 

‘Uncomfortably numb’ பாடலை சமூகம் அதை போதைக்கான பாடல் என்று நினைத்தது ஆனால் Roger waters-க்கு சிறுவயதில் ஏற்பட்ட வலியின் வரிகள் அவை. அதுபோல  மித்ராவுக்கு போதையால் ஏற்பட்ட வியாதி இல்லை இது, பெண் குழந்தைகள் மேல் சமூகம் சுமத்தும் கண்கானிப்பின் அழுத்தம் காரணமாக இளமையில் போதைக்குள் தள்ளப்பட்ட கலையுள்ளம் கொண்ட ஒரு மனித உயிரின் வீழ்ச்சி. அது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாமல் நம் குடும்ப அமைப்பு, சமூகம் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது அறிவியலுக்குள்ளும் இன்னும் வரவில்லை. கலை, இலக்கியங்கள் சார்ந்த எந்த புரிதலும் இல்லை. மன நோய்களை கையாளவதற்கான எந்த பயிற்சியும் இங்கு இல்லை. அதனால் சராசரிக்கு மேலான மனம் கொண்ட ஒருத்தியான மித்ராவின் அழிவு என்பது நம் சமூகத்தில் இயல்பானதே. 

*

’வடு சிறுகதை போர், கலவரங்கள் என தீவிரமான காலகட்டங்களில் எப்படி மனிதர்களில் அன்பு, அறம், பண்பாடு என உயர் விழுமியங்கள் அனைத்தும் அழிந்துபோய் இயல்பாக தன்னையும், தன் சார்ந்தவர்களையும் மட்டுமே காப்பாற்றி கொள்ளும் தன்முனைப்பு மேலெழுகிறது என இரு பெண்களின் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. சிங்கின் அம்மா தனது மகளை காப்பாற்ற, கணவனின் தங்கையை விட்டு விடுகிறாள். அப்போது அவளுக்குள்ளிலிருந்து இயல்பாக எழுந்த உணர்வு அது. இங்கு பன்பாடு உருவாக்கி இருக்கும் அத்தனை உயர் விழுமியங்களும் தகர்ந்து வெறும் ஆதி உணர்ச்சியால் உந்தப்படுகிறாள். அந்த நினைவு அவள் மனதில் ஒரு வடுவாக மாறிவிடுகிறது. அந்த வடு அவளது மிச்ச வாழ்கையில் ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகி குற்றவுணர்ச்சியால் மிச்ச வாழ்க்கையை அழித்து கொள்கிறாள். ரவியின் மனைவியோ புத்தகம் படிப்பவள், அரசியல் தெரிந்தவள், புத்தியுள்ளவள். அவளுக்கு கன்னடர்களின் நடவடிக்கை பாசிசமாக தெரியும் போது, தமிழ்  மொழி சார்ந்த தனது பற்றிற்கு அரசியல் நியாயம் இருப்பதாக சொல்லி வாதாடுகிறவள்.

இதுவரை புத்தகங்களிலும், டி.வி நியூஸிலும் மட்டுமே கலவரங்களை பார்த்த தலைமுறையை சேர்ந்தவள். நேரடியாக ஒரு கலவரத்தில் மாட்டி கொள்ளும் போது அவள் ஸ்தம்பித்து விடுகிறாள். கலவரத்தின் போது அனைத்தையும் மறந்து நிர்கதியாக தனது மகனுக்காகவும், கணவனுக்காகவும் சாமி முன்னால் கண்ணீர் விட்டு மட்டுமே அவளால் நிற்க முடிகிறது. 

அவள் பூங்காவில் சந்திக்கும் சிங்கும் புத்தகங்கள் படிப்பவர் தான். ஆனால் ஒரு கலவரம் ஏற்படுத்தும் வன்முறையை, இழப்புகளை தன் அம்மா வழியாக நேரடியாக வாழ்க்கையில் உணர்ந்தவர். அதனால் அவருக்கு இன, மொழி சார்ந்த அரசியலில் உள்ள அர்த்தமின்மை தெரிகிறது. அவற்றுக்கு அப்பாற்பட்டவர், மனம் முதிர்ந்தவர். தீவிரமான வாழ்க்கை அனுபவம் எதற்குமே ஆளாகாமல், புத்தகங்களில் மட்டுமே படித்து அதற்கு உணர்ச்சி பொங்க எதிர்வினையாற்றும் தலைமுறையை சேர்ந்தவள் இவள். இந்த கலவரத்தின் வழியே அவள் இரண்டிற்கும் உள்ள இடைவெளிகளை உணர்ந்திருக்கலாம். அவள் அடைந்த அல்லல்கள் இது போன்ற அரசியல்களில் உள்ள வன்முறையையும், அர்த்தமினையையும் உணரச் செய்யலாம். இன, மொழி, தேச வரையறை சார்ந்த எந்த பற்றுக்கும் என்ன தான் நியாயம் சென்னாலும் அதன் உள்ளுரையாக அதிகார வெறியும், வன்முறையுமே ஒளிந்திருக்கிறது என்பதை ஊர்ஜிதமாகியிருக்கலாம்.

*

‘வெளியற்ற நிழல்என்ற சிறுகதையை படித்தவுடன் வீரான் குட்டியின் ‘கடைசியில்’ என்ற கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது.

நதியைக் குற்றஞ்சாட்டும் எந்தப் பேச்சும்
எனக்கு பிடிப்பதில்லை
மூழ்கி அமிழ வரும் ஒருவரை
அது முழுதும் ஏற்றுக்கொள்கிறவரையில்
பிளந்து கடக்க வருபவரை அனுமதிக்கிறவரையில்
காண வருபவருக்குக் கொடுக்கவென்று
சிறுமீன்களின் கண்ணாடிக்குடுவையை
அது பாதுகாத்து வைத்திருக்கிறது
முத்துகளில்லை
பவழங்களில்லை
அதீத உருமல்களோ
அலையதிர்வோ இல்லை
இவ்வளவு விச்ராந்தியாகத் தொடங்கினால்
இந்த நதி ஒரு யோகியாகவே
மாறிவிடப் போகிறதென்று நினைத்தேன்.
ஆனால் 
கழிமுகத்தை அடைந்ததும்
என்ன நடக்கிறதென்றுதான்
எனக்குப் புரியவில்லை
கடலோடு கூட்டு சேர்ந்ததும்
அது தன் சொந்தப் பெயரிழக்கிறது
நீண்ட பயணத்தின் ஞானமனைத்தையும்
மடிமைக்குச் சமர்ப்பிக்கிறது
பாய்ச்சலை
பாறை மேல் குதித்தேறிய பின்பு வரும்
வெடிச்சிரிப்பை அக்கணமே மறந்துவிடுகிறது.
இந்தப் பயணம்
என்றென்றைக்குமாய்த் தேங்கிக் கிடக்கத்தானா என்றெண்ணும்போது
கணவன் வீடு போகும் 
புதுப்பெண்ணின் நினைவு வருகிறது.
ஆனால் நதியிடம் இந்த விஷயத்தை சொல்லிப் பாருங்கள்
அதற்குப் புரியப்போவதில்லை
ஏனென்று கேட்காதீர்கள்
அது அப்படித்தான்.

அவள் சிறுவயதிலிருந்து பார்த்த அவள் அப்பா, வன்முறையாளர், பெண்களை வேட்டையாடுபவர், தாயின் சாவுக்கு காரணமானவர். அவளது அண்ணன் அவரை தூக்கி எறிந்துவிட்டான். பாட்டி காறித் துப்பிவிட்டாள். ஆனால் அவளால் எப்போதுமே அவரை நிராகரிக்க முடியவில்லை. அந்த எல்லா கெட்ட குணங்களுடன் சேர்த்து அவரது அன்பான தொடுகை, முத்தங்கள், அனைப்புகள், சிரிப்பு என அனைத்தும் அவளது நெஞ்சில் தங்கியிருக்கிறது. 

வேலாயுதம் பெரியசாமி

அவரை வெறுப்பதா, மன்னிப்பதா என்ற குழப்பத்துனூடே தான் இன்னும் இருக்கிறாள்.அந்த குழப்பம் தான் பெண்களை இந்த வெளியில் இன்னும் நிழலாக மட்டுமே ஆக்கி வைத்திருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது. அவள் குழப்பத்துடன் நிற்கையில் அவளுக்கு கணவனாகப் போகிறவனை கட்டி அனைத்து கொள்ள வேண்டும் என்று தோண்றும் இடம் மிகவும் மர்மமானது. அது காலம் காலமாக இங்கே யாராலும் அவிழ்க்கப்படாத முடிச்சு. அந்த இடம் தான் கவிதையில் வரும்

‘ஆனால் நதியிடம் இந்த விஷயத்தை சொல்லிப் பாருங்கள்
அதற்குப் புரியப்போவதில்லை
ஏனென்று கேட்காதீர்கள்
அது அப்படித்தான்’.
 

தீபு ஹரி ஒரு கவிஞரும் என்பதால், கதைகளில் உள்ள ஆழமான வாழ்க்கை பார்வை, உளவியல் நுட்பம், மாறுபட்ட பாலியல் இயல்புகள் சார்ந்த பேசும் துணிவு, பல தரப்பட்ட வாழ்க்கை சந்தர்ப்பங்களில்  வைத்து பெண்களின் வாழ்க்கையையும், மன ஓட்டங்களையும் சொல்லுவதில் உள்ள  தேர்ச்சி, குறிப்பாக எந்த அரசியல் நிலைபாடுகளிலிருந்தும் வாழ்க்கையை  பார்க்காமல் உள்ளதை உள்ளபடியே காட்டி அதில் தத்துவார்தமாக அடிப்படை வினாக்களுக்கு செல்வது  என பல ஆழமான  முக்கியமான அம்சங்களை உள்ளடக்கிய சிறப்பான முதல் தொகுப்பு இது. 

*

தீபுஹரி: தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *