“சிறு பாதத் தடங்கள்” – சுனந்தா பிரகாஷ் கடமே

“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன்

பகுதி 2: சுனந்தா பிரகாஷ் கடமே (கன்னடம்)

சுனந்தா பிரகாஷ் கடமே

எழுத்தாளர் விவேக் ஷான்பேக் 2010 இல் கன்னட நவீன இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளர்களின் சென்ற இருபது ஆண்டுகளில் வெளிவந்த சமகால எழுத்துக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முகமாக ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வந்தார். அதில் சுமார் இருபது எழுத்தாளர்களின் படைப்புகள் வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டிருந்தன. மூத்த எழுத்தாளர்களான ஹெச்.எஸ். சிவப்பிரகாஷ், யூ.ஆர். அனந்தமூர்த்தி ஆகியோரின் படைப்புகளின் வரிசையில் 1997க்குப் பிறகு எழுத வந்த சுனந்தா பிரகாஷ் கடமே அவர்களின் ஒரு சிறுகதையும் அதில் இடம்பெற்றிருந்தது.

சுனந்தா கடமே உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள அலகேரி கிராமத்தில் 1967இல் பிறந்தவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் பெண்ணிய எழுத்தாளர். தன்னுடைய சிறுகதைகளால் கன்னட இலக்கிய உலகில் பெரும் கவனமும் பல முதன்மையான விருதுகளையும் பெற்றிருப்பவர். அன்றாடத்திலிருந்து ஊற்றெனக் கிளர்ந்து வரும் சின்னஞ்சிறு ஆனந்தங்களும் நூலிழை வலிகளும் இவர் கதைகளில் பிரத்தியேகமான குரலை அடைகின்றன. மனதில் உறைந்து நிற்கும் ஆழமான துயரத்தை உருவாக்கும் குரல் அது. யதார்த்தமான கதை சொல்லலில் ஒரு கனவுலகை நுழைத்து நெய்யும் கலை தேர்ந்தவர்.

‘சிறு பாதத் தடங்கள்’ மிக நுண்மையாகப் புனையப்பட்ட சிறுகதை. ஒரு சிறு இழை அதிகமாக இணைந்தால் கூட பெரும் நாடகத்தன்மை உருவாகிவிடக்கூடிய சாத்தியம் உள்ள கதை. மாறி வரும் உணர்வுகளையும், தொலைந்து போன சுயத்தையும் மிக எளியது போலத் தோன்றும் ஒரு கதை சொல்லல் முறையைத் தேர்ந்து தனித்துவமான காட்சிகளாக உருவாக்குகிறார் சுனந்தா. இக்கதையில் இருவேறு உலகங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் அஞ்சக்கா, மன வறுமையிலிருந்து தப்பிக்கும் வழியை ஒரு கனவென மீட்டெடுக்கிறார். வானையும் மண்ணையும் இணைக்கும் கனத்த நீண்ட மழை நூலினைப் பிடித்து கனவில் ஊஞ்சலாடுவதுதான் இரு வாழ்வையும் தொட்டுப் பார்ப்பதற்கான எளிய உத்தி. அன்றாடத்தின் அத்தனை சிக்கல்களிலிருந்தும் விடைபெறுவது கூட சில சமயம் அவ்வளவு எளிதானதுதான்.    

*

                                    சிறு பாதத் தடங்கள் – சுனந்தா பிரகாஷ் கடமே

                                                              (தமிழில் – நரேன்)

நகரத்தில் தன் மகனுடன் தங்குவதற்காக அஞ்சக்கா வீட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. அன்று காலையிலிருந்தே ஏதோவொரு மனக்குறை ஒரு பனிமூட்டமென அவரை முற்றிலுமாக சூழ்ந்திருந்தது. இருக்கும் இடத்திலிருந்து நாள் முழுதும் சற்றும் அசையாதிருந்த போதிலும், தன் தனிமைக்குத் தானே காரணம் என்று தன்னைத்தானே சபித்துக் கொள்வதிலேயே சோர்ந்து போயிருந்தார். அற்ப விஷயங்களினால் கூட தூண்டப்பட்டு எரிச்சலடைந்தார், அதற்கான காரணத்தை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அஞ்சக்கா தன்னை அள்ளி அணைத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில், கையில் பொம்மையுடன் அவரிடம் ஓடி வரும் ஐந்து வயதான பேத்தி சிம்மியை வெடுக்கெனக் கடுமையாகத் தடுத்து நிறுத்தினார். “என்னா இருந்தாலும் நீ உன் அம்மா பொண்ணுதானே…” என மூச்சோடு முனுமுனுத்தார். அதே கடுகடுப்புடன் சமையலறைக்குள் பாய்ந்தார்.

“நேத்து சாயந்திரம் திண்ணையில் நான் உட்கார்ந்திருந்தபோது கதவை எதுக்கு நீ ஓங்கி சாத்தினே?” மும்முரமாக தக்காளியை நறுக்கிக்கொண்டிருந்த தன் மருமகளிடம் சடாரெனச் சீறினார்.

அஞ்சுவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டன. “ஆ… யார்? நானா? எந்தக் கதவு?” அவள் நடுக்கத்தில் தடுமாறினாள், தன் இரவு மேலாடையின் கீழே அணிந்திருந்த நீண்ட பாவாடையின் நுனியை  கண்ணீரைத் துடைப்பதற்காக இழுத்தாள். அஞ்சக்காவின் மகன் விட்டலா குளியலறையிலிருந்து வெளியே வந்திருந்தான், இடுப்பில் சுற்றிய ஈரத் துண்டுடன் சாமி சிலையை பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தான். அவனும் சமயலைறைக்குள் நுழைந்து விசாரணையை மேற்கொண்டான், “நான் கதவைச் சாத்தலை, நீயும் இல்லை..” என்ன நடந்திருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதற்குள்ளாகவே அது ஒரு தீவிரமான விவாதமாக மாறியது. சிம்மி வரவழைக்கப்பட்டு, அவளது பக்கத்தையும்  முன்வைக்குமாறு கொஞ்சலுடன் கேட்டுக்கொள்ளப்பட்டாள்.

“ஆ… உம்ம்ம்ம்…” தன் இருமுனை குதிரைவால் ஜிண்டியை இழுத்தபடி, நினைவை மீட்ட தன் விருப்பம் போல நேரத்தை எடுத்துக்கொண்டாள்.

“மம்மி, நீ தானே என்னைக் கதவைச் சாத்தச் சொன்ன? போய் எல்லா கதவையும் மூடு இல்லைன்னா வீடு முழுக்க கொசு வந்திடும்னு நீதானே எங்கிட்ட சொன்ன?” நேசம் மிகும் மழலைக்குரலில் சொன்னாள்.

“சரி, நீ போய் விளையாடு” அப்பா அவள் முதுகில் தட்டி அனுப்பி வைத்தார். தன் தாயின் கோபத்தை புரிந்துகொண்டார்: “இனிமேல், அம்மா வெளியே உட்கார்ந்திருக்கும்போது யாரும் கதவை மூடக்கூடாது. கொசு கூட்டம் உள்ளே புகுந்து தொல்லை கொடுத்தால் பரவாயில்லை. யார் முக்கியம்? அம்மாவா, கொசுக்களா?” என்று சத்தம் போட்டான். கோபமாகக் கத்துவதைப் போல பாவனை செய்தான். விட்டலாவின் இந்த சமாதான வார்த்தைகள் லேசான பரிகாசத்துடன் வெளிவந்ததைக் கண்டவுடன், “ஆமா… ஆமா.. அது சரி, இப்போவெல்லாம் நான் உங்களுக்கு வெறும் பொம்மைதானே… வெறும் பொம்மைதானே…” அஞ்சக்கா தன் அதே கடுகடுத்த மனநிலையில் கசப்புடன் முனகினார்.

நறுக்கிய தக்காளிகளுடன் எழுந்தபோது, விட்டலாவை ஊடுருவப் பார்த்தாள் அஞ்சு. எனினும், அவள் வருத்தம் கொண்டிருந்தாள். அத்தை எல்லாவற்றிலும் எப்படியாவது குற்றம் கண்டுபிடித்துவிடுகிறாள் – பேசினாலும் பேசாவிட்டாலும். அஞ்சுவின் கம்மல்கள் சற்று குலுங்கினாலும் தன்னிடம் முகத்தைக் காட்டுவதாக அஞ்சக்கா எண்ணிக்கொள்கிறார். மருமகள் தன்னை எந்த வீட்டு வேலையையும் செய்ய விடாததால்தான் அஞ்சக்கா இப்படிக் கொந்தளிக்கிறார்.

“நான் என்ன விருந்தாளியா… எப்பப் பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதேன்னு சொல்லிட்டே இருக்கிறதுக்கு…” திடீரென இப்படித் தாக்கினார். அனேகமாக அவரின் இரத்த அழுத்தம் அதிகரித்திருக்கலாம். அஞ்சு எப்போதும்  போல் அமைதியாக இருந்தாள். விட்டலா தன் மனைவியின் காதருகே வந்து அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று முணுமுணுத்தான். அவன் ஸ்கூட்டரை கிளப்பும்போது, அவனைப் பின்தொடர்ந்து சென்ற அஞ்சக்கா சொன்னார்: “நீ இப்போதெல்லாம் என்னிடம் சரியாப் பேசறதில்லை.”

“என்ன? தினமும் பேசறதுக்கு என்ன இருக்கு…?” விட்டலாவும் அதே சிடுசிடுப்புடன் பதிலடி கொடுத்தான். அம்மாவின் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவனும் கூட உணரத் தொடங்கினான்.

விட்டலா சீக்கிரமே வீடு திரும்பினான்; விடுப்பு எடுத்துவிட்டான் போலிருந்தது. உடனே அஞ்சு ஒரு ஆலோசனை சொன்னாள்: “நாம எல்லோரும் ஒன்றிரண்டு நாள் ஏதாவது கோவிலுக்கு பயணம் போகலாம். வேண்டுமானால் தர்மஸ்தலாவுக்கு போகலாம். அம்மா இங்கேயே அடைபட்டிருக்கிறதால சலிப்பாயிருக்காங்க போல.” விட்டலா எரிச்சலுடன் அவள் பேச்சைத் துண்டித்தான். “அதுக்கு லீவுன்னு ஒன்னு கிடைக்கனும். என்னது சொல்லு, லீவூ…” தன் வழக்கத்தை மீறிய வலி மிகுந்த குரலில் அஞ்சு கேட்டாள், “இப்படியொரு வீட்ல எப்படி வாழறது, நீங்களே சொல்லுங்க?” படுக்கையறைக்குள் புகுந்து தன்னை பூட்டிக்கொண்டு அழுதாள். சற்று நேரம் கழித்து, அஞ்சு அலட்சியமாக உடுத்திய புடவையுடனும் கலைந்த கூந்தலுடனும் தன் இடுப்பையும் அடிவயிற்றையும் தடவியபடியே விட்டாலாவை பின்தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேறுவதைப் பார்த்ததும் அவள் மருத்தவரைத்தான் பார்க்கப்போகிறாள் என்பதை அஞ்சக்கா சரியாக கணித்தார். இவையெல்லாம் கணவனின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பெண்கள் செய்யும் சிறிய தந்திரங்கள் என்று யாரோ அஞ்சக்காவின் தலையில் புகுத்தியிருக்கிறார்கள். அன்றிலிருந்து இந்த எண்ணம் அவரின் தலையில் சிக்கிக் கொண்டது. அப்போதுதான் பாலகர் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிம்மி பெற்றோருடன் சேர்ந்து வெளியே செல்ல உடனடியாகத் தயாரானாள். பிஞ்சு இளஞ்சிவப்பு மேலாடையில் அள்ளி கொஞ்சத் தக்கவளாய் தோன்றினாள். ஆனால் முன்பைப் போலல்லாமல் அஞ்சக்கா அவளை அணைத்துக் கொஞ்சவுமில்லை, வம்புக்கிழுத்து விளையாடவுமில்லை. அவள் ஸ்கூட்டரில் ஏறியதும் அஞ்சு அவளை லேசாக இடித்து, “பாட்டிக்கு டாட்டா சொல்லு” என்றாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி நின்றிருந்த அஞ்சக்காவின் மீது வெற்றுப் பார்வையை வீசிவிட்டு அங்கிருந்து வண்டியை ஓட்டிச் சென்றான் விட்டலா.

எல்லா நாளும் இப்படித்தான்: எங்கேயும் வெளியே போக முடியாது, கிழட்டு ஆந்தையைப் போல வீட்டுக்குள்ளேயே எப்போதும் முடங்கிக் கிடக்க வேண்டும். அஞ்சக்கா தன்னுடைய கடந்த காலங்களை முற்றிலுமாக மறந்துவிட்டார். எத்தனையோ பொறுப்புகளை அக்காலங்களில் ஏற்றிருக்கிறார்… ஒரு மனைவியாக, தன் மகனுக்குத் தாயாக… அவருக்கும் கூட மாமியாரும் மாமனாரும், கூட்டம் கூட்டமாக உறவினர்களும் என இருந்திருக்கின்றனர்… அனைவருக்கும் பிரியமான ஆஞ்சி எனும் அஞ்சக்கா அவர். தன்னைச் சூழ கவிழ்ந்திருக்கும் இந்நிகழ்காலம் மிகுந்த வேதனையைத் தருவதாக இருந்தது அவருக்கு.

அஞ்சக்காவிற்கும் தன் பங்கிற்கு ஒரு களேபரத்தை உண்டாக்க வேண்டுமென்று தோன்றியது : “எனக்கும் உடம்பு சரியில்லை. என்னையும் டாக்டரிடம் கூட்டிப் போ.” பொழுதைக் கழித்தாகவேண்டுமே என்ற பிரயத்தனத்தில் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்குப் படபடப்புடன் மாறிக்கொண்டே இருந்தார். இரு கைகளாலும் தொடைகளை இறுகப் பற்றிக்கொண்டார், என்ன செய்வதென்று அறியாமல் தொடைகள் மீது ஓங்கி அறைந்தார். அவர் நடுக்கத்துடன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தபோது மகனும் மருமகளும் தன் பேத்தியுடன் அவர் எதிர்பார்த்ததை விட வெகு முன்னரே வீடு திரும்பிவிட்டனர். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து டாக்டர் இல்லை என்பதைப் புரிந்துகொண்டார். வந்ததும் சமையலறைக்குள் மறைந்துபோன அஞ்சுவை நோக்கி முனகினார் : “எல்லோரும் அவங்கவங்க இஷ்டப்படி செய்யறாங்க. எனக்கு எந்த மதிப்பும் இல்லை. விட்டலாவின் கோபமான பேச்சைக் காது கொடுத்து கேட்டதாலதான் இப்போ எனக்கு இந்த நிலைமை. கிராமத்தில தனியா இருக்க வேண்டாமுன்னு நயமா பேசி கூட்டிவந்தது அவன்தானே? இப்போ வாயைக் கூட திறக்க மாட்டான். தந்திரக்காரன்.”

‘தினமும் நான் உன் பின்னாடியே அம்மா அம்மான்னு சுத்தி வராததால எனக்கு உன் மேலே அன்பு இல்லைன்னு அர்த்தமாயிடுமா? அம்மா அம்மாதான், அஞ்சு அஞ்சுதான், சிம்மி சிம்மிதான். அன்பைக் காட்ட எனக்கு மூன்று வழிகள் இருக்கு, ஆனா எல்லாத்தையும் நான் சமமாகத்தான் வைத்திருக்கேன். ஒருவனுக்கு நேசிக்கும் இதயம் இருக்குமானால் அதில் மூன்று பேருக்கும் இடம் இல்லாமலா போகும்? ஒருவேளை எனக்கு அன்பைக் காட்டவே தெரியலைன்னா அது வேற விஷயம்.’ விட்டலா தனக்குள்ளே புலம்பினான். “இதையெல்லாம் நான் அம்மாவுக்கு எப்படி விளக்குவது? விளக்கத்தான் வேண்டுமா?”

எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது: இந்தக் காற்று, நீர், வெளிச்சமும் கூட. அவருடைய வாழ்க்கை முறையும் நற்பழக்கங்களும் கூட வித்தியாசமானவை. ஒரு புதிய சூழலுக்கு, முற்றிலும் புதிய வாழ்க்கை முறைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டிய பெரும் அழுத்தத்தை அஞ்சக்கா உணர்ந்தார்.  ‘இப்போது அஞ்சுவுக்கு கூடுதலாக அவள் அப்பாவும் அருகிலேயே மாற்றலாகி வந்துவிட்டார். இனி அவளை யாரும் கையிலே பிடிக்க முடியாது.’ அஞ்சக்கா தனக்குள்ளேயே பொருமினார். ஆனால், உண்மையிலேயே அஞ்சுவுடனான தன்னுடைய கோபத்துக்கு என்ன காரணம் என்பதில் அஞ்சக்காவிற்கே தெளிவு இல்லை. எங்கோ தொலைதூரத்தில் தேச எல்லையில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அஞ்சுவின் தந்தை, சமீபத்தில் தனது மகளின் வீட்டிற்கு அருகில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை விலைக்கு வாங்கி தன் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த எட்டு-பத்து நாட்களில் காலை நடை போகும்போது ஒவ்வொருநாளும் அவர்களது வீட்டைக் கடந்து செல்கிறார். ‘என்னுடன் அவள் கேட்ட கேள்விக்குப் பதிலை மட்டும் அதுவும் ஒற்றை சொல்லில் மட்டும் தான் பேசுகிறாள். ஆனால் அவள் அப்பாவுடன் அவள் எப்படிச் சிரித்துப் பேசுகிறாள், அதுவும் முடிவே இல்லாமல்… பேசும்போது ‘அப்பா… அப்பா…’ என நூறு முறையாவது அள்ளித் தெளிக்கிறாள்,’ அஞ்சக்கா குமைந்தார். அவரின் பாதி கோபம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.

இத்தனைக்கும் அஞ்சுவின் தந்தை அஞ்சக்கா பிறந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அஞ்சுவின் அப்பா என்பதாலேயே அவரை சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரிடம் பேசக்கூடப் பயமாக இருக்கிறது. ‘நான் இப்படிப்பட்ட பெரிய ஆட்களிடமிருந்து தள்ளியே இருந்துகொள்கிறேன். அவர் இராணுவத்தில் இருந்தவர், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர். அவருக்கு என்னை மாதிரி கிராமத்து கிழட்டு முட்டாளிடம் பேசுவதற்கு என்ன இருக்கப் போகிறது?’

இதற்கிடையில் மருமகள் மீண்டும் வெளியே கிளம்பத் தயாராகியிருந்தாள், அஞ்சக்காவிற்கு முள் தைப்பது போலிருந்தது. புறப்படுவதற்கு முன் உலர போட்டிருந்த துணிகளை எடுத்து வர மாடிக்கு விரைந்தாள் அஞ்சு. அவள் மாமியாரின் புடவையை மடித்து வைக்கும்போது, அதன் இனிமையான  நறுமணமும் ரவிக்கையில் உள்ள வெள்ளை பொத்தான்களும் – அஞ்சக்காவின் ரவிக்கைகளிலுள்ள ஸ்டீல் கொக்கிகளுக்கு நேர் மாறானது – அஞ்சுவிற்கு அவளுடைய அம்மாவை நினைவூட்டியது. மாமியார் மீது திடீர் பாச வெள்ளத்தால் அடித்து இழுக்கப்பட்டாள். அஞ்சக்கா மதிய உணவைச் சரியாக உண்ணுவதில்லை என்பதால் ஜவ்வரிசி கிச்சடி செய்து கொடுப்பதென முடிவு செய்தாள். சிம்மிகூட பாட்டியுடன் அமர்ந்து மகிழ்வாக கிச்சடி அள்ளி சாப்பிடுவாள்.

அஞ்சுவிற்கு வயிற்று வலி என்பதைத் தன்னிடம் சொல்லவில்லையே என்ற வருத்தத்திலிருந்தார் அஞ்சக்கா. பேசுவதற்கு விருப்பம் இல்லை என்பதைப் போல முறைப்புடன் வெளியில் அமர்ந்திருந்தார். டீ அருந்துவதற்கு அஞ்சு பலமுறை அழைத்தும் அது கேட்காததுபோல நடித்தார். “ஆறிப் போகுது” என்று சொல்லியபடி அஞ்சு தேநீரை கொண்டு வந்து கொடுத்தாள். ‘நீரிழிவு நோயைக் காரணம் காட்டி என்னை சர்க்கரையை முற்றிலுமாக கைவிடுமாறு மிரட்டியது யார்? டாக்டரா அல்லது மருமகளா?’ சர்க்கரை அற்ற தேநீரை ஏதோ கசப்பு மருந்தைப் போல விழுங்கினார். சில சமயங்களில் தான் பாரமாக இருக்கிறோமா என்று அவர்களிடம் கேட்டுவிட வேண்டுமென்று அஞ்சக்காவிற்குத் தோன்றும். உள்ளூர ஆழமாக அத்தனை செயல்களிலும் மையமாக தான் இருக்க வேண்டும் விழைந்தார், அத்தனையும் தன் எண்ணம் போல தன் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டுமென ஆசைப்பட்டார்.

இந்த முறை விட்டலா, சிம்மியை பாட்டியுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார், விரைவில் திரும்பிவிடுவதாக உறுதியளித்தார். ஆனால் சிம்மி பிடிவாதமாக இருந்தாள், அதற்குள்ளாகவே ஸ்கூட்டரில் ஏறி தொற்றிக்கொண்டாள். அவள் அம்மா சொல்லாமலே இம்முறை அவளே பாட்டியிடம் டாட்டா சொன்னாள். அஞ்சக்கா இறுக்கமாக குழந்தையை வியந்து நோக்கினார். பின், சாலையின் மீது வெற்றுப் பார்வையை வீசினார், எண்ணத்தை எங்கோ தொலைத்து விட்டவர் போலக் காணப்பட்டார்.

சற்று நேரம் கழிந்த பின், அஞ்சுவின் அப்பா அவர்களின் வீட்டுப் பக்கமாக வந்தார். குட்டையான டிரவுசரும் மேலே சட்டையும் அணிந்திருந்தார். வீட்டின் முன்புறம் இருந்த வேப்பமரத்தைக் குதித்துப் பிடித்து, அதன் கிளையைக் கீழே வளைத்து பூக்களைப் பறித்தார். அதில் சிலவற்றை வாயில் போட்டுக்கொண்டு மீதியை அஞ்சக்காவிற்காக நீட்டினார். அவரது எதிர்பாராத வருகை, அதுவும் தனிமையில் இருக்கும்போது, அஞ்சக்காவை வேறு வழியில்லாமல் உரையாடலுக்கு உட்படவேண்டியிருந்தது. “இது சர்க்கரை நோய்க்கு ரொம்ப நல்லது. வீட்டுக்கு முன்னாலேயே மரம் இருக்கு. தினமும் பறித்துக் கொடுக்கச் சொல்லி விட்டலாவை கேட்கலாமே” அஞ்சக்காவிடமிருந்து முழங்கை தூரத்தில் திண்ணையின் மீது அமர்ந்தவாறே சொன்னார். அவர் வரும்போதே மேகங்கள் கூடி அடர்ந்திருந்தது, இப்போது அவை பெரிய மழைத் துளிகளாக விழத் தொடங்கின. “அஞ்சு வயிற்று வலி என்று சொல்லிக்கொண்டிருந்தாளே, ஹாஸ்பிடல் போயிருக்காங்களா?”

“ஆமாம்” என்று தலையசைத்தார் அஞ்சக்கா.

மழைத்துளிகள் கனக்கத் தொடங்கியது. அவை எங்கிருந்தோ சிதறி நனையுமளவிற்கு அவர்கள் மீது தெறித்தன. அவர்கள் பரபரத்து எழுந்து சிறுவர்களைப் போலத் துள்ளிக் குதித்து வீட்டிற்குள் புகுந்து கதவைச் சாத்தினர். அஞ்சுவின் அப்பா தலையைத் துவட்டிக் குறைபட்டுக் கொள்பவரைப் போலச் சொன்னார், “ஓ!… என்ன மழை.”  ஆனால் உண்மையில், மழையில் சற்று நனைந்ததில் அவர் மகிழ்ந்துதான் போனார். ஒருவருக்கொருவர் புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டு எதிரெதிர் நாற்காலிகளில் அமர்ந்தனர். அஞ்சக்கா தன் புடவையின் முந்தானையால் முகத்தில் வழிந்த மழை நீரைத் துடைத்தாள்.

வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. இருவரும் அமைதியாக அமர்ந்து மழையின் சீறொலியைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பூர்வ நிலத்தின் மழைத்துளிகளின் சந்தத்தை அது சுமந்து வந்திருந்தது. இருவரும் பேசிக்கொள்ள வேண்டிய தேவையை அகத்தில் உணர்ந்தனர். ஆனால் சொற்கள் தயங்கிப் பிந்தங்கிவிடுவதைப் போலத் தோன்றியது அஞ்சக்காவிற்கு. இந்தக் காலையிலிருந்து அஞ்சக்கா தன் மகனிடமும் மருமகளிடமும் குறைபட்டுக்கொண்டும் முணுமுணுத்துக் கொண்டுமே இருந்தார். ஆனால் தற்போது, இந்த மனிதரின் முன்னிலையில், தன் குரலை இழந்துவிட்டதாய் உணர்ந்தார். தன் நிலையை நினைத்து அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. “இந்த மழையின் சப்தம் உனக்கு உன் கிராமத்தை ஞாபகப்படுத்துது இல்லையா?” அஞ்சுவின் அப்பா பேச்சைத் தொடங்கும் விதமாகக் கேட்டார்.

“சமீபமா நீ உன் கிராமத்தின் பக்கம் போகவில்லை போலிருக்கே?” என்று அவர் குறிப்பிட்டுக் கேட்டதும் அஞ்சக்கா பெரும் குழப்பத்தில் விழுந்தார். எந்த கிராமத்தைப் பற்றிக் கேட்கிறார் என்பது அவருக்கு விளங்கவில்லை. ஏனென்றால் அவர் தன் பிறந்த கிராமத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது.

“உன் சித்தப்பாக்கள் பெரியப்பாக்கள் மாமா என யாரும் இப்போது உயிருடன் இல்லை என நினைக்கிறேன்.…” என்று அஞ்சுவின் அப்பா கேட்க, எல்லாம் தெளிவாகிவிட்டது அஞ்சக்காவிற்கு. அவர் நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னார்:

“ஆமாம்… அவர்கள் யாரும் இல்லை.”

“உன்னுடைய சகோதரர்கள் எல்லோரும் கூட நகரங்களுக்கு போய்விட்டிருப்பார்கள் எங்களைப் போல…”

“ஆ… ஆமாம்!”

“உங்க வீட்டுக்கு முன்னாடி பெரிய ஆலமரம் இருந்தது…”

“ஆமா… நீங்க சொல்றது சரிதான்.” 

“பணக்காரன் ஒருவன் யாரோ அதைச் சுற்றி ஒரு மேடையைக் கட்டி அதில் அவன் பெயரைப் பொறித்துக்கொண்டான், இல்லையா?”

“ஆமாம்… ஆமாம்… அவன் பெயர்தான் அதில் இருந்தது.” 

“கார்த்திகை மாதத்தில் பஜனைக் குழுவுடன் போய் அந்த மரத்தைச் சுற்றி வந்து பஜனைகள் பாடுவேன்.”

“ஹ்ம்ம்ம்…” இத்தனை வருடங்களாக அஞ்சக்கா தன் கிராமத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவருக்கு அதை ஞாபகப்படுத்த ஒருவருமில்லை.

“சின்னப் பெண்ணா உன்னைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கு”.

“ஹ்ம்ம்ம்….”

“நீ வெள்ளையா கொழுகொழுன்னு இருந்தாய் இல்லையா.”

இம்முறை ‘ஹ்ம்ம்ம்’ என்ற ஒற்றைக் குரலொலி எழுப்பாமல் தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டார். அஞ்சுவின் அப்பாவின் சொற்கள் தன் கடைசி நாற்பது வருட வாழ்க்கையை நிராகரிக்கும் வகையில் பால்ய காலத்திற்கு அஞ்சக்காவைச் சட்டெனக் கடத்திச் சென்றது. கடந்த காலத்திலிருந்து எழும் இக்காட்சிக்கு மெல்லிசையாகப் பின்னணியில் மழை பெய்துகொண்டிருந்தது.

“தேர்த் தெருவில் இருந்த உன் பாண்டு மாமாவின் தேநீர்க் கடையில் கல்லாவில் அடிக்கடி உட்கார்ந்திருப்பாய்தானே?“ என்று கேட்டார் அஞ்சுவின் அப்பா. அவரது குரல் குளிரில் நடுங்கியது.

“இந்தக் குளிரில் ஒரு சூடான டீ குடித்தால் நல்லாயிருக்கும்ல,” கேட்டார் அஞ்சக்கா. ஒருவழியாக தன் குரலில் உறுதியைக் கூட்டினார்.

“இல்லை… வேண்டாம். நான் அடிக்கடி டீ குடிப்பதில்லை. இந்த வயசுல நீ கூட சும்மா சும்மா டீ குடிக்கக் கூடாது.” என்று பதிலளித்தார். கொஞ்சம் வெதுவெதுப்பு கூட்ட எண்ணி தன் இரு கைகளாலும் மடக்கிய முழங்கால்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டார்.

அஞ்சக்கா எழுந்து மெதுவாக அஞ்சுவின் அறைக்குள் சென்றார். அலமாரியிலிருந்து சால்வை ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்து சொன்னார், “இதைச் சுற்றி போர்த்திக்கொள்ளுங்க, அஞ்வுடையதுதான்.”.

“பெண்களுக்குப் புடவையே சால்வை போலவும் பயன்படுவது வசதியா போச்சு இல்லையா,” என்று சிரித்துக்கொண்டே சால்வையைப் போர்த்திக்கொண்டார் அஞ்சுவின் அப்பா. மேகம் மூடிய வானம் வீட்டை இருட்டடித்தது. இருவருக்குமே விளக்கை ஏற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை.

“நான்காம் வகுப்போட பள்ளிப் படிப்பை ஏன் பாதியிலேயே நிறுத்திட்ட?”

வெறும் “ஹ்ம்ம்ம்…” என்ற பதிலோடு அமைதியாக இருந்துவிட அஞ்சக்கா முடிவெடுத்தார்.

“இதில வேடிக்கையான விஷயம் என்னன்னா, உன் அக்கா மாதேவியும் உன்னால பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டாள்,” என்று சொல்லி அஞ்சுவின் அப்பா வெடித்துச் சிரித்தார். அஞ்சக்கா சற்று வெட்கம் கொண்டார். இருவரும் தங்கள் குழந்தைப் பருவங்களை ஒரே நிலத்தில் கழித்திருப்பது அவர்களை மேலும் நெருக்கமானவர்களாக ஆக்கியது.

“என் தம்பி அந்த வருடம்தான் பிறந்தான். அவனைப் பார்த்துக்கொள்ளத்தான் நான் பள்ளியிலிருந்து நிற்க வேண்டியதானது.” என்றார் அஞ்சக்கா.

“உன் அண்ணன் பெரிய அடாவடிக்காரன். ஒருமுறை அவனோடு நான் உன் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.” முன்னும் பின்னும் அசைந்தவாறே சொன்னார் அஞ்சுவின் அப்பா. அஞ்சக்கா சிட்டுக்குருவியைப் போலச் சுருண்டு அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். தன்னை முந்தானையால் முழுதும் மூடிக்கொண்டு முகம் மட்டும் தெரியுமளவு விட்டிருந்தார்.

“உனக்கு முந்திரி மரமெல்லாம் ஏறத் தெரியுமில்லையா. நான் வந்தபோது நீ குட்டி பாவாடை போட்டுக்கொண்டு மரத்தின் மீது உட்கார்ந்திருந்தாய்.”

“ஐயோ… சிவ சிவா…” என்று நாணத்துடன் இடது கை உள்ளங்கையால் தன் நெற்றியையும் கண்களையும் சட்டென மறைத்துக்கொண்டார். அத்தனை சிறுவர்களும் ஊஞ்சல் கட்டித் தொங்கிய, வேலியோரம் வளர்ந்திருந்த பெருத்த முந்திரி மரத்தின் தோற்றத்தை தன் நினைவில் மீட்டுக்கொண்டு வந்தார். அவர் உலகம் சட்டென மாற்றம் கொண்டது. கண்ணாடித் துண்டின் மீது பல ஆண்டுகளாகப் படிந்து கனத்திருந்த தூசிப்படலத்தை யாரோ ஊதி விலக்கி விட்டதைப் போல, அஞ்சுவின் அப்பா காலத்தில் பின்னோக்கிச் சென்று மூடி மறைக்கப்பட்டிருந்த அஞ்சக்காவின் நினைவுகளை ஒவ்வொரு கணமாக மீண்டும் ருசிக்கத் திறந்து வைத்தார். அத்தருணத்தில் அவருக்கு வாழ்த்தளிக்கப்பட்டிருந்த அத்தனையையும் அஞ்சக்காவால் சிறு கறையுமின்றி புதுத் தெளிவுடன், மூக்குக் கண்ணாடிகூட இல்லாமல், காணமுடிந்தது.

“உன் வீட்டின் தென் மூலையில் ஒரு மாமரம் இருந்தது இல்லையா? அம்மரத்தின் பழங்கள் அவ்வளவு சுவையா இருக்கும். நானும் நண்பர்களும் பல தடவை அம்மாமரத்தின் மேலே கல்லெறிந்து பழங்கள் எடுத்து விருந்தே கொண்டாடியிருக்கிறோம். காய் கூட அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால்தான் உன் அப்பா எங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.”

இந்தக் கட்டத்தில் அஞ்சுவின் அப்பா அந்நினைவுகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்ள முடியாது என்பதைப் போல அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தார். அஞ்சக்காவும் தன் பால்ய நினைவுகளின் உலகத்திற்குள் விரும்பி விழுந்தார். நினைவுகள் அங்கேயே நிலை கொள்ளட்டும். அங்கிருந்து நகர வேண்டாம். என்றென்றும் குழந்தைகளாகவே இருந்துவிட வேண்டும் என்ற விழைவு இருந்தது இருவருக்கும். இடைப்பட்ட நாற்பது வருடங்கள் வெறும் சிறு புளுகுதான் என்று தோன்றியது. அஞ்சுவின் அப்பாவிடம் தன் பால்ய கால நினைவுகள் அத்தனையும் பாதுகாத்து வைப்பதற்காகக் கொடுத்து வைத்திருந்ததைப் போல உணர்ந்தார் அஞ்சக்கா. 

இனிமை நிறைந்த கடந்த காலத்தின் இந்த அழகான தருணங்கள் ஒரு புதிய திசையில் பயணிக்கத் தொடங்கின. அந்தி வேளையில் அவர்களிருவருக்கும் பாதுகாப்பான புகலிடத்தை அளித்து அவர்களை அற்புதமான ஆனந்தத்தால் அது நிறைத்தது. வேலிகளைக் கடந்து வீசும் குளிர்ந்த தென்றலின் ஓசையும், ஆர்ப்பரித்து மோதும் அலைகடலின் ஒலியும், பிராமண புரோகிதர்களின் வேத மந்திரங்களும் அவர்களின் காதுகளில் எதிரொலித்தன. தெருவில் ஊர்வலம் போகும் தேர், முனீஸ்வரன் கோவிலின் படிக்கட்டுகள், சந்தையில் வரிசையாக நிற்கும், சிவப்பிலும் நீலத்திலும் குளிர்பானங்கள் நிறைந்த, கண்கள் குளிரும் வண்ணமயமான சர்பத் கடைகள், கோடிதீர்த்தத்தின் பச்சை நீர்… இவை ஒவ்வொன்றையும் துல்லியமாக அவர்களின் கண்கள் பிடித்து வைத்திருந்தன. வேலியின் ஓரம் குவிந்திருந்த சரளைக் கற்களின் வயற்றில் சிறிய பாதத் தடங்கள் பாதுகாப்பாகப் பொத்தி வைக்கப்பட்டிருந்தன. வெளியே, அதே மழை கொட்டிக்கொண்டிருந்தது.

வாசலில் யாரோ சத்தம் எழுப்பினார்கள். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் வாசலில் அவரை அழைத்துப் போக மகன் வந்திருந்தான். அஞ்சுவின் அப்பா எழுந்து ஒரு வார்த்தையும் பேசாமல்  வெளியே சென்றார். கேட்டை சாத்தும் சாக்கில் அஞ்சக்காவை நோக்கித் திரும்பிக் கையசைத்தார். மழை முடிவில்லாமல் கொட்டிக்கொண்டிருந்தது.

பின்னர் விட்டலாவும் அஞ்சுவும் சிம்மியும் திரும்பி வந்தனர். ஈரம் சொட்டும் ஆடைகளைக்கூட மாற்றிக்கொண்டு மாறி மாறி தலையைத் துவட்டிக்கொண்டிருந்தனர். இந்த அன்றாடச் செயல்களின் மீதான அஞ்சக்காவின் கவனத்தை அஞ்சுவின் அப்பா முற்றிலுமாக மங்கலடித்துவிட்டார்; அவரை சின்னஞ்சிறுமியாக மாற்றிவிட்டார். அந்த வண்ணங்கள் நிறைந்த உலகிற்கும் கட்டிப்போடும்  இடைவிடாத அம்மழையின் ஓசைக்கும் இட்டுச் செல்லும் சக்தி அவரிடம் மட்டுமே இருந்தது.

சமையலறையில் அஞ்சுவின் வேலைகள் மீண்டும் துவங்கியது. அஞ்சக்கா சிம்மியுடன் அமர்ந்திருந்தபோது, லேசான உளமயக்கம் அவரைச் சூழ்ந்தது. அவர் இருக்கும் இடம், அவரின் இருப்பு, அவரின் அடிப்படைத் தகவல்களைக் கூட அவரே மறந்துவிட்டது போல் தோன்றியது. அதுவரை உறைந்து போனதாகத் தோன்றியவையெல்லாம் இப்போது புதிய உயிர் பெற்று வெடித்து மலரத் தொடங்கியது. சிம்மியின் நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதன் கடைசிப் பக்கத்தில் ‘அனுசுயாதேவி’ என்று எழுதினார், ஒவ்வொரு எழுத்தும் உப்பிய உருளைக்கிழங்கைப் போல பெரியதாக இருந்தது. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த சிம்மி தன் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து, பாட்டியும் தன்னைப் போலவே எழுத முடியும் என்று காட்டப் பெற்றோரிடம் நீட்டினாள்.

அப்போது மாற்று உடைக்கு மாறுவதற்காக விட்டாலா தன் சட்டையைக் கழற்றி இருந்தான். அஞ்சக்கா அவனைப் பார்த்தார். தன் அப்பாவை நினைவு கூர்ந்தார். அவனது மார்பு… அவனது வயிறு… மீசை மட்டும்தான் இல்லை. உணவு பரிமாறுவதற்கு அஞ்சு தயாரானாள். அஞ்சக்காவிற்கு, அஞ்சுவின் கைகளும் அதில் அவள் பிடித்திருந்த கரண்டியும் அவரது அம்மாவினுடையது போல் தெரிந்தது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது வெங்கடரமணா கோயிலுக்கு எதிரே இருந்த தேர்த் தெருவில் தொலைந்துபோனார். தன் அம்மா என்று நினைத்து பதினெட்டு முழ சேலை உடுத்தியிருந்த யாரோ ஒரு பெண்மணியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டார். வெகு நேரம் கழித்து யாரோ அவரை அடையாளம் கண்டு பாண்டு மாமாவின் தேநீர்க் கடையில் கொண்டு சேர்த்தார்கள்.

அஞ்சக்காவின் உடல் வலிகள் அவரது அனுபவ வரம்பிற்குள் பொருந்த மறுத்தன. “இந்த உடல் என்னுடையது அல்ல. அஞ்சுவின் அப்பா எனக்களித்த சாந்தமான, தெளிவான, இருத்தலின் எடையற்ற அந்த உடல்தான் என்னுடையது.” அஞ்சக்கா சிம்மியின் சிறு மடியில் தன் கன்னத்தை வைத்து அவளைத் தன்னை உறங்கச் செய்யுமாறு கெஞ்சினார். குட்டி சிம்மி தன் பாட்டியின் நரைத்த தலை முடியைத் தடவினாள், தூங்க வைக்கத் தட்டிக் கொடுத்தாள். அவளது நர்சரி பாடல் ஒன்றை தாலாட்டு போல் பாடினாள்,

“ஜப்பி சீக்ஸ், டிம்பிள் சின், ரோஸி லிப்ஸ்……”

அஞ்சக்காவிற்கு தூக்கம் வந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் ஆஞ்சியை தூக்கிக் கொண்டு பாண்டு மாமா தெருவில் இறங்கி நடந்தார். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி ஊர்வலம் தனது கடையைக் கடந்து செல்லும்போது, ஆஞ்சியின் குட்டிக் கைகளில் வாழைப்பழங்களையும் உலர்ந்த திராட்சைகளும் நிரப்புவார். அசையும் ஊர்வலத்தைக் காண்பிப்பதற்காக அவளைக் காற்றில் உயர்த்திப் பிடித்து வாழைப் பழங்களையும் உலர் திராட்சைகளையும் காணிக்கையாக்குமாறு தூண்டினார். ஆஞ்சி வாழைப்பழங்களை மட்டும் எறிந்துவிட்டு, திராட்சைகளை வாயில் திணித்துக்கொண்டாள். அவள் வீசியெறிந்த வாழைப்பழங்களில் ஒன்று, ஊர்வலம் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் விழுந்தது. அவன் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். அட… அஞ்சுவின் அப்பா!

*

நரேன்: தமிழ்விக்கி

*

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *