பல கடல்கள் கடந்து…(சிறுகதை)-ஆக்ன்ஸ் ச்சூவ்
(தமிழில்: நரேன்)

Agnes Chew – ஆக்னஸ் ச்சூவ்: சிங்கப்பூரைத் தன் தாயகமாகக் கொண்ட பெண் எழுத்தாளர். தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதும் இவர் சிங்கப்பூரில் அதிகம் விற்பனையாகும் நூலின் ஆசிரியர்களில் ஒருவர். 2016-ல் வெளியான இவரின் அபுனைவு கட்டுரைகளின் தொகுப்பு அவ்வாண்டின் முதன்மையான கவனம் பெற்ற நூல். 2023-ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய புனைவு பரிசுக்கான பட்டியலில் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இடம் பெற்றது. அதே ஆண்டில் ஆசியாவிற்கான காமன்வெல்த் சிறுகதை பரிசை வென்றது, பல கடல்கள் கடந்து எனும் இச்சிறுகதை.
ஜெர்மனியிலிருந்து சிறுகதைகள் எழுதினாலும் இவரின் கதைகள் பெரும்பாலும் தன் தாயகமான சிங்கப்பூரின் மீதான இவரின் பற்றையும் நன்றியையும் பறை சாற்றும் விதமாகவே அமைந்திருக்கின்றன. கடல் கடந்து வாழும் பெண்களின் சுயம் புது நிலங்களில் அடையும் மாற்றங்களே இவரின் பார்வை தொடும் மையம். இக்கதையில் பெண் உடல் கொள்ளும் மாற்றங்களுடன் அதை அழகாகக் கோர்த்து நெய்திருக்கிறார். ஒரு பெண் தன் கட்டுப்பாட்டை இழக்கும் இடங்களின் மீது கவனத்தைச் செலுத்துகிறார். சமகால உடலரசியலில் முதன்மையாகப் பேசப்படுவது பெண் தன் உடல் மீதான அதிகாரத்தை இழத்தலைப் பற்றித்தான். ஆனால் அது ஒரு மனிதனாலோ அல்லது ஒரு சமுதாயத்தாலோ நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல. சிலசமயம் இயற்கையும் வன்மையாகச் செய்யும் ஒரு சூது. உடல் தன்னை மீறும்போது பிரபஞ்சம் அவள் கைக்கு அதை இறுகக்கட்டக் கயிறென ஒரு அதிகாரத்தைக் கொடுக்கிறது. கைவிடப்படும் நிலையில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் அதிகாரமே அவள் மீது செலுத்தப்படும் பெரும் வன்முறை. அப்போதைய அவளுடைய தேவை தனக்கு பலம் அளிக்கும் உறவோ, மொழியோ அல்லது தன் தாய்நிலமோதான்.
*
பல கடல்கள் கடந்து… – ஆக்ன்ஸ் ச்சூவ்
(தமிழில் – நரேன்)
1
என் மார்பின் வளைகோட்டின் வழியே என் விரல்களைப் பிடித்துச் செலுத்துகிறார் என் கணவர். என் இதயத் துடிப்பு வேகமெடுக்கிறது. அப்போது அவர் உணர்ந்ததை நானும் உணர்ந்தேன். இச்சை என் உடலிலிருந்து வெளியேறியது. எனக்கு எப்போதும் அணுக்கமாக இருந்தவொன்று இப்போது அந்நியமாகியது. என் வெற்று மார்பகத்தை நோக்கி கீழே குனிந்தேன், என் விரல்நுனி அடியில் மென்மையான திசுக்களால் மிடைந்து நகரும் உருள் திரட்டைக் கண்களால் காண முடியவில்லை.
2
சதைத் திரட்டைக் கண்டுபிடித்ததற்கு பிறகான நாட்களில் மரியன்னாவை நினைத்துப் பார்ப்பதை நிறுத்த முடியவில்லை. என் தாய்நாடான சிங்கப்பூரில் என் தோழியின் தோழி அவள். எனக்கு அவளை அவ்வளவாகத் தெரியாது, ஆனால் அவளுடைய கதை எனக்குத் தெரியும். ஒரு வருடத்திற்கு முன்பு மரியன்னா தன் வலது மார்பில் ஒரு கட்டியைக் கண்டாள். அது தானாகப் போய்விடும் என்ற நம்பிக்கையில் மாதக்கணக்கில் அதைப் புறக்கணித்தாள். அவள் அதை மீண்டும் பரிசோதித்துப் பார்த்தபோது முழு மார்பகத்தையும் அகற்ற வேண்டிய அளவிற்கு வளர்ந்திருந்தது. மரியன்னாவிற்கு மார்பகப் புற்று நோய் கண்டறியப்பட்டபோது அவளுக்கு வெறும் முப்பத்தியொரு வயதுதான் ஆகியிருந்தது.
எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறது. நான் தற்போது வசிக்கும் ஜெர்மனியில் ஒரு மகளிர் நல மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரம் கிடைப்பதற்குக் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். ஜனவரியில்தான் வாய்ப்புள்ளது. அது மிகவும் தாமதம் என்று அஞ்சுகிறேன். சிங்கப்பூரில் இருந்திருந்தால் இரண்டு வாரங்களிலேயே ஒரு மருத்துவ நிபுணரைச் சந்தித்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியதைத் தடுக்க முடியவில்லை. எங்கள் அடுக்ககத்தின் வாசல் வழி என் கணவர் உள்ளே நுழைகையில் என் தாய்நாட்டிற்கு உடனடியாக பறந்தோடிப்போவதின் சாதக பாதகங்களை யோசிக்கத் தொடங்கினேன். மதியத்திலிருந்து நான் அமர்ந்திருக்கும் சமையலறை மர மேசையிலிருந்தபடியே தலையைத் தூக்கிப் பார்த்தேன். அவர் தன் மேலங்கியைக் கழற்றி உதறுகையில் தான் மகளிர் மருத்துவமனையை அழைத்துப் பேசியதாகவும் வரும் திங்கள் மதியமே எனக்காக நேரத்தைக் கேட்டுப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
“அனேகமாக அவர்கள் தங்கள் உணவு இடைவேளையின்போது உனக்கான நேரத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்,” என்று கூறினார்.
“எப்படி இதைச் சாதித்தாய்” என்று கேட்டேன்.
“நானும் ஒரு மருத்துவர்தான் என்பதை அவர்களுக்கு நினைவூட்டினேன். பின்னர் அக்கட்டியைச் சற்று தீவிரமாகப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் சொன்னேன்.”
அவர் முகத்தில் வெட்கச் சிரிப்பு பரவியது. என் நெஞ்சின் இறுக்கத்தையும் மீறி அச்சிரிப்பு என்னையும் தொற்றிக்கொண்டது.
3
ஒரு வாரம் கழிந்தது. தூக்கமற்ற ஏழு இரவுகள். இன்றிரவும் விதிவிலக்கல்ல. என் இடது கை என் கணவரின் கையை ஏந்திக்கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை உள்ளிழுக்கும்போது சுவாசம் மேலும் ஆழமடைந்தது என் கணவருக்கு. படபடக்கும் ஆயிரம் சுடரொளிகளை என் கண்களின் முன்னால் காண்கிறேன், எதிர்காலத்தின் ஆயிரம் சாத்தியங்கள். என் மனம் மரியன்னாவின் பக்கம் மீண்டும் சரிந்தது.
மரியன்னாவின் கதையில் என்னை மிகவும் தொந்தரவு செய்வது எதுவென்றால், அவள் வாழ்வின் தடுக்கவியலாமல் தடதடத்து ஓடிக்கொண்டிருந்த காட்சிகள் எல்லாம் இந்த நோய் கண்டறிதலால் சட்டென நிறுத்தத்திற்கு வந்ததுதான். அந்நேரத்தில் மரியன்னா ஒரு முதலீட்டு வங்கியில் தனது வேலையை விட்டுவிட்டு இடை ஓய்வு காலத்தில் உலகப் பயணம் மேற்கொள்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். அவளுடைய முதல் நிறுத்தம் பெய்ஜிங். அங்கிருந்து மாஸ்கோவிற்கு டிரான்ஸ்-சைபீரியன் இரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தாள். ஆனால் அவள் சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் நாளில் அறுவை சிகிச்சை அறைக்குள் சுருண்டிருந்தாள். பெய்ஜிங்கில் அவள் தரையிறங்கவேண்டிய நாளில் தன் ஒரு மார்பை இழந்தாள். இரயில் சாளர சட்டகத்தினூடே அவளுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நிலக் காட்சிகளின் அழகிற்கும் அமைதிக்கும் பதிலாக ஹார்மோன் சிகிச்சைகளும் கீமோதெரபியுமே அவளுக்குக் காத்திருந்தன. தனது ஓய்வு நாட்களின் மையப் புள்ளியில் மரியன்னை தன் தலையில் முடியையும் முகத்தில் பொலிவையும் உடம்பின் மீதான கட்டுப்பாட்டையும் பல நாட்களையும் இழந்திருந்தாள்.
ஆனால் அவள் இன்னமும் சுவாசிக்கிறாள். இந்த உண்மையைப் பற்றிக்கொண்டுதான் நாம் ஆறுதல் அடைய வேண்டும்.
என்னருகில் என் கணவர் குறட்டை விடுகிறார். என் கைகளை விடுத்து திரும்பி விலகி படுக்கிறார். கடந்த நான்கு வருடங்களாக நான் எழுதிக்கொண்டிருக்கும் என் நாவலைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். ஒருவழியாக இன்னும் எட்டு மாதங்களில் வெளி வந்துவிடும். கடந்த எட்டு மாதங்களில் மரியன்னா நீந்திப் பிழைத்த அலைவுகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இருள் உறிஞ்சி விட்ட பிரகாசமான விளக்குகளையும் இனி அணையப்போகும் விளக்குகளைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் பொய் சொல்லப்போவதில்லை: மூச்சு விடுவதே கடினமாகிக்கொண்டிருக்கிறது.
4
நான் ஜெர்மனியில் இருந்த கடந்த மூன்று வருடங்களில் ஒரே ஒரு முறைதான் மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். இதைப் பற்றிப் பேசினாலே என் கணவர் வெறுப்புடன் முகத்தைச் சுளிப்பார். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அதுதான் என்னுடைய முதல் முறை என்பது அவருக்குத் தெரியாது. இடைநிலை ஜெர்மன் வகுப்புகளில்தான் பயின்றுகொண்டிருந்தேன் அப்போது. ஜெர்மனியில் அது என் முதல் கோடைக்காலம். என் கணவர் என்னோடு மருத்துவ நிலையத்திற்கு வந்திருந்தார்.
என் மனதிலிருந்து அந்நினைவுகள் அனைத்தையும் முழுவதுமாக அகற்றவே விரும்புகிறேன். ஆனால் சில விவரங்கள் மட்டுமே அந்நாளிலிருந்து என்னுடனே தங்கிவிட்டன. ஒற்றைக் காத்திருப்பு அறையிலிருந்து வெளியேறி, சிலந்தி வலைகள் படர்ந்த படிகளில் இறங்கி, மங்கிய நுழைவாயில் வழியே மனிதக் கூட்டம் நுழைந்த விதம். சதை நிற கட்டிடத்திற்குள் ஒரு சீழ் கட்டியை உருவாகியதைப் போல. நானும் அதன் ஒரு பகுதியாகி நின்றேன். எனக்கென நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததை யாரும் பொருட்படுத்தவேயில்லை. கட்டிட நீளத்திற்கு விரிசல் ஊர்ந்து செல்வதை வெறித்துப் பார்த்தபடி அங்கே நானும் என் கணவரும் நாற்பது நிமிடம் வெப்பத்தில் நின்றுகொண்டிருந்தோம். என் தூசி படிந்த பழுப்பு நிற ஷூவின் நுனியில் பெருத்த எறும்புகள் சென்றுகொண்டிருந்தன.
படிகளில் இறங்கிய தடதடக்கும் காலடிச்சத்தம் எங்கள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் செவிலியின் வருகையை அறிவித்தது. கையிலிருந்த அட்டைப் பலகையைப் பார்த்து வாசித்தபோது அவள் முகம் சுருங்கியது: “ஃப்ராவ் யி – யியா – ஆச், டை ஃப்ராவ் வான் ஹெர்ன் டொக்டோர் குப்ஃபர்.” எல்லோரும் என் பக்கம் திரும்பி முறைத்தனர். என் சீனப் பெயரை உச்சரிக்க அவளின் இயலாமையால் என் அடையாளம் டாக்டரின் மனைவி என்று சுருக்கப்பட்டது. எனக்கு முன்னாள் இருந்த பழுப்பு மஞ்சள் தலைமுடி கொண்ட குழந்தைகள் கூட அவர்கள் பெயர்களால்தான் அழைக்கப்பட்டனர் என்று என் கணவரிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் நாக்கைக் கடித்துக்கொண்டு சிலந்திப் படிக்கட்டுகள் வழியாக அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
காற்று புழங்கும் வசதியின்மையால் அந்நிலையமே நோய்வாய்ப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தை அங்குதான் கழித்தோம் – என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்னைப் பற்றி பேசினார்கள், எனக்குப் பின்னால் பேசினார்கள், என் குரலை மீறி பேசினார்கள், நான் சொல்வதைப் பொருட்படுத்தாமல் பேசினார்கள். அவர்கள் மொழியை என்னால் பேசமுடியாது என்ற எண்ணத்தை என் தோற்றம் அவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். ஜெர்மானியர்கள் நடைமுறைவாதிகள் என்று சொல்வார்கள்; நானோ அங்கே வெறும் ஒரு இருப்பு.
5
மருத்துவரைச் சந்திப்பதில் எனக்கு ஆழ்ந்த வெறுப்பு இருந்தபோதிலும் இம்முறை மகளிர் நல மருத்துவரைச் சந்திப்பதற்கான நாட்களை எண்ணத் தொடங்கினேன். ஐந்து நாட்கள். நான்கு. மூன்று. இரண்டு. ஒன்று.
இது ஞாயிற்றுக்கிழமை இரவு; நள்ளிரவுக்குச் சற்று முன்பு.
நான் முழு இருளில் படுத்திருக்கிறேன். என் வலது கை பருத்தி மேலாடையின் உள்ளே நழுவியது. என் விரல்கள் தட்டையான வயிற்றுப் பரப்பில் பயணித்து மிகப் பழகிய எழும்பிய சதையினை வந்தடைந்தன. ஒரு தலையணை போல என் விரல் பட்டையின் கீழே சதை விளைந்திருந்தது. அந்த பட்டாணி அளவு திரட்டை உணர்வதற்கு நீண்ட நேரம் ஆகவில்லை.
இந்த உருண்டையை ஜெர்மன் மொழியில் விவரிப்பது எப்படி என்று என் கணவரிடம் கேட்டேன். பல மாதங்களுக்கு முன்னரே நான் உயர்நிலை ஜெர்மன் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். ஆனால் இனி எதிர்கொள்ள இருப்பதைக் கடந்து செல்ல அது போதுமானதா என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. அவர் உதடுகளிலிருந்து பிரியும் உச்சரிப்பை மிக உன்னிப்பாகக் கவனித்தேன். பின்னர் எழுத்து கூட்டிப் படிப்பதைப் போல அச்சொற்களைப் பேசிப் பார்த்தேன்: என் மார்பில் ஒரு கட்டி உள்ளது. ‘இச் ஹேபே ஐனென் நோட்டன் இன் மெய்னர் பிரஸ்ட்’.
நான் மூன்றாவது முறையாகச் சொல்லிப் பார்த்தபோது என் கணவர் என் கைகளை அவர் கைகளால் அள்ளிக்கொண்டார் – அவர் கைகள் வெதுவெதுப்பாக இருந்தன, என்னுடையவை குளிர்ந்திருந்தன. ‘அல்லெஸ் விர்ட் க்குட்,’ என்று சொன்னார். எல்லாம் சரியாகும். அவரை எப்போதும் ஆறுதல்படுத்த நான் சொன்ன வார்த்தைகள்.
“உங்களுக்கு அது தெரியாது,” என்றேன்.
இரவு விளக்கு ஒளிர்ந்தது, அவரது அடர்த்தியான புருவங்களையும் ஆழமான கண்களையும் அத்தேனொழுகும் ஒளி முழுக்காட்டியது. “என்ன நடந்தாலும் நாம் இருவரும் சேர்ந்தே அதை எதிர்கொள்வோம்.”
அவர் என் கைகளை அழுத்தியதும், கண நேரத்திற்கு நிச்சயமின்மையின் குளிர் துளிகள் என்னிலிருந்து வெளியேறியதாக உணர்ந்தேன். ஆனாலும் நான் தனியாகப் பயணிக்க வேண்டிய பாதைகள் இன்னமும் பல உள்ளன என்பதை அறிவேன்.
6
திங்கட்கிழமை காலை. பேருந்தைப் பிடிப்பதற்காக என் அடுக்ககத்திலிருந்து வெளியே எத்தனித்தபோது என் அம்மாவிடம் இருந்து குறுஞ்செய்தி என் செல்பேசியில் தோன்றியது. இந்த வாரம் முழுதும் அவள் கேட்டுக்கொண்டிருந்த அதே கேள்விதான். என் கணவர் மருத்துவரைச் சந்திக்க இன்று என்னுடன் வருகிறாரா? மீண்டும் நான் இல்லையென்று பதிலளித்தேன். நேற்றே அவளிடம் சொல்லியிருந்தேன், அவரின் துறையிலிருக்கும் மற்ற மருத்துவர்களில் சிலர் உடல்நலமின்றி விடுப்பில் இருக்கிறார்கள். சிலர் விடுமுறையில் சென்றுவிட்டார்கள். அவரால் வேலையை விட்டுவிட்டு வர முடியாது. என் தோள்களை பின்னிழுத்து கதவைத் திறந்தேன். அதற்கான தருணமில்லைதான் ஆனாலும் என் தன்னம்பிக்கை சட்டெனத் தளர்ந்துபோனது.
நாற்பது நிமிடங்கள் கழித்து நான் பேருந்தை விட்டு இறங்கினேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் நிலையில் அருகிலிருந்த புத்தகக் கடையை நோக்கிச் சென்றேன். சிங்கப்பூரில் நான் எல்லாவற்றுக்கும் தாமதமாகத்தான் செல்வேன் என்பது நினைவிற்கு வந்தபோது வினோதமாக இருந்தது. காலந்தவறாமையைக் கொள்கையெனக் கடை பிடிக்கும் இத்தேசத்தில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கத்தை உதிர்த்திருக்கிறேன். ஆங்கிலப் புனைகதை பகுதிக்குச் செல்லும்போது என் செல்பேசி ஒளிர்ந்து, ‘நான் எப்படி உணர்கிறேன்’ என்று கேட்டு என் கணவர் அனுப்பிய செய்தியைக் காட்டியது.
‘இச் ஹாபே ஆங்ஸ்ட்’, என்று பதிலளித்தேன். ஜெர்மனியில் ‘ஆங்ஸ்ட்’ என்ற சொல் உலகியலைப் பற்றி ஒருவர் கொள்ளும் தெளிவற்ற கவலையைக் குறிக்கவில்லை. மாறாக, நேரடியாக, ‘பயம்’ என்பதே அதன் அர்த்தம். நேரடி மொழிபெயர்ப்பு: எனக்குப் பயமாக இருக்கிறது. இணையான ஆங்கில வரியான ‘நான் பயப்படுகிறேன்’ என்பதற்கு எதிராக எடை போட்டுப் பார்த்தேன். உள்ளொழுக்காக ஒரு ஆறுதல் என்னைத் தழுவியது. இத்தருணத்தில் நான் இறுகப் பற்றியிருக்கும் இப்பயம் அடுத்த நொடியில் என்னை விட்டு விலகிவிடும் என்று என் ஆழ்மன அறிவு நம்பியிருக்கக்கூடும். இந்தப் பயம் என்னை வரையறுக்கவில்லை; இந்தப் பயத்தை விட, என் இடது மார்பில் கூடிட்டிருக்கும் பட்டாணியளவு கட்டியைவிட, நான் பெரியவள்.
‘இச் ஷாஃப்பே தாஸ்’, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என்னால் முடியும்.
என் கணவரிடம் இருந்து பதிலில்லை. அவர் தன் நோயாளிகளுடன் இருக்கக்கூடும். கைப்பேசியைப் பைக்குள் போட்டுவிட்டு புத்தக அலமாரிகளை நோக்கிச் சென்றேன். அடுத்த முப்பது நிமிடங்களுக்கு நான் மின்னொளிரும் கற்பனை உலகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பறந்து திரிந்தேன். என் எதிரே ஊசலாடும் கடுஞ்சோதனைகளிலிருந்து என் கவனம் சற்றே திசை திரும்பியது.
7
மகளிர் நல மருத்துவமனையின் நுழைவாயிலில் அழைப்பு மணியை அடித்தேன்.
ஒருமுறை, இருமுறை, பலமுறை. ஒவ்வொருமுறை நான் கதவைத் திறக்க முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை. எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, யாரோ வெளியேறியபோதுதான் என்னால் உள்ளே நுழைய முடிந்தது. நான் உள்ளே நுழையும்போது குளிர்வளி பெட்டியைக் காண முடிந்தது, சட்டென இது சிங்கப்பூரில் எங்கும் நிறைந்திருக்கும் என்பது நினைவிற்கு வந்தது. இங்கே கோடைக்காலம் முடிந்துவிட்டதால் இப்போது இது அமைதியாகத்தான் இருந்தது. வரவேற்பறையை நோக்கி நான் சென்றபோது எனக்குப் பின்னால் இருந்த கதவு திறந்தது. உயிர் நிறைந்து வயிறு பெருத்த சிவந்த முகம் கொண்ட பெண் உள்ளே வந்தாள். ஒரு மாடி படி ஏறியதில் அவளுக்கு மூச்சு வாங்கியது. எனக்கும் மூச்சு திணறுகிறது, வேறு காரணங்களால்.
கண்ணாடி அணிந்த பெண் வரவேற்பாளரிடம் என் பேசும் முறை வரும் வரை நான் மருத்துவரின் பெயரை என் மூச்சின் அடியில் உச்சரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் புன்னகைக்கு அவள் பதிலளிக்கவில்லை, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் காப்பீட்டு அட்டையை அவளிடம் கொடுத்தேன், படிவத்தை நிரப்பினேன், கடைசியாக எப்போது மகளிர் மருத்துவரைச் சந்தித்தேன் என்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியைத் தவிர்த்தேன். இடைவழியின் முடிவில் இருந்த மூன்றாவது காத்திருப்பு அறைக்கு என்னை அனுப்பினாள்.
இருக்கையில் அமர்ந்தேன். அங்கே, தனியாக இருந்தேன்.
மூச்சை உள்ளிழுத்தேன். வெளியேற்றினேன். என் நுரையீரல் விரிந்து சுருங்குவதின் மீது என் கவனத்தைச் செலுத்தினேன்.
நேற்றிரவு கனவில் என் பாட்டி வந்தாள், அவளைச் சந்தித்து ஐந்து வருடங்களாகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, என் குடும்பத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தார்களா என்று மருத்துவர் கேட்ட பிறகுதான் என் பாட்டி புற்று நோயால் இறந்ததும் அவள் தன் கடைசி மூச்சை விட்டபோது அவள் கைகளைப் பற்றிக் கொள்ள நான் அருகில் இல்லாமல் போனதும் நினைவுக்கு வந்தது. ஆனால் காத்திருப்பறையில் அந்த உண்மை என்னிடமிருந்து நழுவிப்போனது. என் கனவினை நான் நினவுகூறும் தோறும் அது மேலும் தெளிவற்றதாக ஆனது. என் பாட்டியின் முகத்தில் தூய்மையான மகிழ்ச்சியின் தோற்றம் மட்டுமே எனக்கு நினைவில் இருந்தது. அவள் சிரிக்கும்போது கிட்டத்தட்ட என்னை வந்து தொடுமளவு அவள் கண்களிலிருந்து விரிந்தன சிரிப்பு வரிகள்; செதுக்கிய அவள் உள்ளங்கைகளிலிருந்து வழிந்து என் விரல்களின், எலும்புகளின், இடையே பாய்ந்தது அவளின் நேசம்.
இது ஏதும் அறிகுறியோ என்று வியந்தேன் – ஒரு நல்ல அறிகுறி.
என்னையறியாமலேயே, என் பாட்டி நான் சிறுமியாக இருந்தபோது எனக்குச் சொல்லிக்கொடுத்ததைப் போல இரண்டு கைகளையும் ஒன்றிணைத்து பிரார்த்தனை செய்தேன். அவளின் இரண்டு படுக்கையறை கொண்ட இல்லத்தில் பிரார்த்தனை மேசையின் முன்னால் நிற்கும்போது தூபக்காலில் அவள் நட்டிருக்கும் ஊதுபத்திக் குச்சிகளின் ஒளிரும் நுனிகளைக் கூட காண முடியாத உயரத்தில்தான் இருந்தேன். உச்சரித்த மந்திரங்களின் சொற்கள் இப்போது என் நினைவில் இல்லை, ஆனால் அவளின் முன்னால் நின்றது எவ்வளவு ஆறுதலாக இருந்தது என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. உள்ளுணர்வினால் நான் தலை குனிந்து கண்களை மூடினேன்.
இங்கே, வெறுமையான காத்திருப்பு அறையில் என் சிறுவயதின் பாதுகாப்பு எதுவுமின்றி என் தாய்நாட்டிலிருந்து கடல்களுக்கு அப்பால் அமர்ந்திருக்கிறேன். ஒருவேளை நான் உண்மையில் தனியாக இல்லையோ என்னவோ.
8
“ஃப்ராவ் வீ?”
‘வுயீ’, என் வாய்க்குள்ளேயே அதைத் திருத்தினேன். இங்குள்ள பெரும்பாலான பெண்களைப் போல அல்லாமல் கணவரின் குடும்பப் பெயரைப் போட்டுக்கொள்வதைத் தவிர்த்தேன்.
எழுந்து நின்று குரல் வந்த திசையை நோக்கி நடந்தேன். இதுவொரு சோதனையைப் போல உணர்ந்தேன். ‘தன்னால் தடுமாறி விழமாட்டேன். ஒவ்வொரு அடியாக வை’, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
மருத்துவர் முழு வெள்ளை நிற உடுப்பில் இருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், அவர் பார்வையைச் சந்திக்க நான் துணியவில்லை. எனக்குப் பின்னால் இருந்த கதவை மூடச் சொன்னார், அப்படியே செய்தேன். அதன் பின்னர் கேள்விகள் தொடங்கின. உரையாடலை ஆங்கிலத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்த நினைத்தேன்; என் நுனி நாக்கிலேயே இருந்தது, ஆனால் நான் அதை விழுங்கிவிட்டேன்.
எனவே நாங்கள் ஜெர்மனியிலேயே தொடர்ந்தோம் – எனது மூன்றாவது மொழி, இளமைப் பருவத்தில்தான் நான் கற்கத் தொடங்கியது. அனைத்திலிருந்தும் ஒரு நிலை நீக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன்; அதிலும் அது மொழியாக இருக்கும்போது, உரையாடலே போலியானதைப் போலத் தோன்றுகிறது. ஒருவேளை அதனால்தான் அல்ட்ராசவுண்டிற்கும் கூடுதலாக அவ்விடத்திலேயே கருப்பை சோதனையும் செய்யவேண்டுமென என் மருத்துவர் கேட்டுக்கொண்டபோது நான் ஒப்புக்கொண்டேன். என்னால் என்னை நம்பமுடியவில்லை, எனக்கு நானே அந்நியமாகத் தோன்றினேன். அவர் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தேன், கட்டளைகளைப் பின்பற்றினேன். உள்ளாடைகளைக் கழற்றி சாய்ந்த நாற்காலியில் அமர்ந்து கால்களை அகற்றினேன். பின்னர் என் மேல் கச்சையை விடுத்து தலைக்குக் கீழ் கைகளை வைத்துப் படுத்தேன்.
அல்ட்ராசவுண்டின் பசை என் தோள்களில் குத்தியபோதுதான் நான் அதை உணர்ந்தேன்: இங்கே நான் வந்திருப்பதன் காரணம். என் விரல்களை ஒன்றாகப் பற்றிக்கொண்டேன். என் கண்களை போதுமான அளவு இறுக மூடிக்கொண்டால் – நான் இங்கு இல்லையெனப் பாசாங்கு செய்துவிட முடியுமா? ஆனால் என் கண்கள் அகலத் திறந்து திரையைப் பார்த்துக்கொண்டிருந்தன. என் இடது மார்பின் மீது சோதனைக் கோல் சறுக்கியபோது, இருண்ட, அறியாத நீர்வெளி தென்பட்டது. படிமங்கள் வெள்ளை நிறத்தில் சுழன்று அடர்ந்து தெளிவற்றதாகத் தோன்றின. பின்னர் கோல் சுழல்வது நின்றது. நான் அதைக் கண்டுகொண்டேன்: நுரை அலைகளுக்கு மத்தியில் ஒரு கருப்பு குமிழ். அந்தத் திரட்டு. என் தொண்டையில் மூச்சு அடைபட்டது. வெள்ளை நிறத்தில் இருந்த மருத்துவர் எதுவும் சொல்லவில்லை.
நான் காத்திருந்தேன், பிறகு அந்தக் கோல் மேலும் நகர்ந்தது.
9
நான் மருத்துவமனையை விட்டு வெளியேறி கண்ணொளிரும் வெளிச்சத்தில் இறங்கினேன். காற்று அலையென வீசி அருகிலிருந்த மரக் கிளையின் மஞ்சள் இலைகளை அகற்றி கடந்து போனது. எனக்கு மேலே வலசை வந்த வாத்துக்களின் கூச்சல் எதிரொலிக்கிறது. இலையுதிர்கால காற்றை உள்ளிழுத்து என் நுரையீரலை மட்கிய நறுமணத்தால் நிரப்பினேன். அலைபேசியை எடுத்து என் கணவரிடமிருந்தும் தாயிடமிருந்தும் வந்திருந்த குறுஞ்செய்திகளை மேலோட்டமாக ஓட்டிப் பார்த்தேன்.
ஆலோசனை அறையில் மருத்துவர் என்னிடம் என்ன சொன்னார் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியப்போவதில்லை. என் மார்பில் ஒரு உருண்டை மட்டுமல்ல பல உள்ளன என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. என் மார்பக திசுக்களின் வெண்மையான நீரில் பதுங்கியிருக்கின்றன பல இருட்குமிழிகள். இந்த மருத்துவமனைக்கு என் வருகையைத் துரிதப்படுத்தியதுதான் இருப்பதிலேயே பெரியது. ஒன்றரை செண்டிமீட்டர் அகலம் கொண்டது.
விரைவில் என் கணவர் அழைத்தார், அவரிடம் செய்தியைச் சொன்னேன். அதையே என் அம்மாவிற்கு நீண்ட செய்தியாக அனுப்பினேன். அவளுடைய பதிலைப் படித்ததும் அழத் தொடங்கினேன். கன்னங்களில் கண்ணீர் வழிய ஐரோப்பியத் தெருக்களில் நடந்துபோகும் நான் ஒரு வளர்ந்த ஆசியப் பெண்மணி என்பது இப்போது ஒரு பொருட்டல்ல. என் அம்மாவிடமிருந்த வந்த செய்தியை மீண்டும் மீண்டும் படித்தேன். அவள் என்னுடன் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று வருத்தப்பட்டாள். பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு அவள் கருப்பையில் இருந்த நார்த்திசுக்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நான் தோன்றிய முதல் ஒன்பது மாதங்களுக்கு அவள் என்னைச் சுமந்த அதே கருப்பை. அப்போது நான் எங்கே இருந்தேன்? லண்டனில், மாணவர் பரிமாற்ற திட்டத்தில். அப்போது நான் எதை விரும்பினேன்? நார்த்திசுக்கட்டி அவளுக்கு இருக்காது, நான் முன்கூட்டியே வீட்டுக்குத் திரும்ப வேண்டியதில்லை என்று.
கண்ணீர் நிற்கவில்லை. மூச்சுவிட வலித்தது.
10
குளியலறையின் கதவை மூடினேன். என் ஆடைகளை அவிழ்க்கும்போது என் கைக் குழிகளின் அருகே பிசுபிசுப்பான அல்ட்ராசவுண்டு பசைகளின் தடயங்கள் மீது என் விரல்கள் தீண்டின. கண்ணாடியில் பார்த்தேன் என் முகத்தில் சிரிப்பு தோன்றியது.
நீ நன்றியுடன் இருக்கவேண்டும், வலியுறுத்திக் கொண்டேன். என் நெஞ்சுக்குள் பதுங்கியிருக்கும் இருட் குமிழிகளை மருத்துவர் மிகக் கொடியவை என வகைப்படுத்தாததற்கு நன்றி. அடுத்த பரிசோதனைக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அதுவரை நான் வாழலாம் என்று அறிவித்ததற்கு நன்றி. என் அத்தனை குறைபாடுகளையும் மீறி என் கணவரின் அம்மாவின் பாட்டியின் மன உறுதிக்கு நன்றி.
ஆனால் நான் அவர்களிடம் சொல்லாத ஒன்று உள்ளது.

என் கருவறைக்குள் ஒரு நெல்லி அளவு மற்றொரு திரட்சி உருவாகியிருக்கிறது. அதன் உயிர் இப்போது என் தயவில் உள்ளது.
*
தன் நோயின் தீவிரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கதைசொல்லி முடிவெடுக்கும்போது வாசகனுக்கான வலி அதிகரிக்கத் துவங்குகிறது. மூலக் கதையில் உணர்வு அச்சு அசலாகக் கடத்தப்பட்டிருக்கிறது. தரமான கதை. காமென்வெல்த் பரிசுக் கதையை நான் தேடிக்கொண்டுதான் இருந்தேன். நன்றி நரேன்.
நன்றி சார்.
அற்புதமான கதை அழகு தமிழ் , வாழ்த்துகள்