அசடனின் ”நாஸ்தாசியா” – நந்தகுமார்
கனவுலகவாதியின் புனிதங்களிலிருந்து முற்றிலும் தலைகீழாகும், கரமசோவின் நிலத்தில் ஒரு பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டிருந்தேன். நன்மை, தீமைகள் எனும் தீர்க்கமான இருமைகளின் பாவங்களிலிருந்து முற்றிலும் தனிப்பட்ட மற்றும் இன்னும் அணுக்கமான பாவனைகளின், பிம்பங்களின், சமூக ஊடாடுதலில் தவிர்க்க இயலாத சிக்கல்களின் ஊடுபாவுகள் நிறைந்த ஒன்றிடம், மன்றாடுவதும், வெறி கொள்ளக் குதறுவதும், சரணடடைவதும், ரத்தம் பீறிடக் கிழித்து எறிவதுமாய் தத்தளிப்பின் வன்மம் மிகுந்த, இல்லையேல் ஏக்கமும், தாபமும் மிகுந்த கைகளின் பிடிமானங்களையும், பற்றுதல்களையும் ஒரு மூணு சீட்டுக்காரன் போல அவர் மாற்றி மாற்றி உருவாக்குகையில் என்னையும் உன்னையும் நான் அதில் நிச்சயமாகப் பார்த்து விடுகிறேன். கூடவே நம் கணக்கற்ற பாவனைகளையும்.
சமூகத்திலிருந்து விடுபடுதல், ஆட்படுதல் என்பதற்கான எதிர்வினைகளைப் பலப் பலப் பெண்கள் மூலம் சதா முட்டிக் கொண்டிருக்கும் அந்த உலகில், பெண்கள் நிச்சயமாக முன்னும் பின்னும் சுழன்றடிக்கப்படுகிறார்கள். முரண் கொள்ளுதல் மட்டும் அல்லாது, தன் பாவனைகளின் வழிகள் மூலமும், பின் உண்மையின், சத்தியத்தின் வழிகள் மூலமும் பிறாண்டிக் கொண்டிருக்கும் அந்த உலகின் பெண்கள். ஒரு சேர அலட்சிய பாவத்தையும், புனிதத்தையும் வரிக்கிறார்கள். எதிர்ப்பின் பக்கங்களில் தங்களின் உடல்களைக் கருவியாக்குகின்றனர். ஒரு சமயம் உடல்களின் மொழியினால் அவர்கள் மோதிக் கொண்டே இருப்பது, அவர்களுக்கான இயல்பினை விட்டுத் தர முடியாத தன்மையினாலேயும், சமூகத்தில் தன் இருப்பை நிலைப்படுத்தும் சாத்தியங்களை விடுக்க முடியாததாலும் தான் என்று தோன்றியது. ஆனால் ஒட்டு மொத்த சமூகமும், ஒவ்வொரு வகையிலும் பெண் என்பதன் சுதந்திரத் தன்மையை மறுதலிக்க முயலும் பொழுது அவளின் எதிர்வினை உடலாக இருக்கிறது. அது ஆண் எனும் உடல் தன்மையைப் பூச்சியாக மாற்றி விடுகிறது. சரியானத் தருணத்தில் அதை நசுக்குவதில் கை தேர்கிறது.
மறுபுறம் தூய அன்பின், காதலின், மாசுமருவற்றத் தன்மையின் புனிதத்தினை உடலாகக் கொண்டப் பெண்கள். எல்லா எதிர்ப்புகளுக்கும், வன்முறைகளுக்கும், சமூகத்தின் உமிழ்தலுக்கும், பொறுமையையும், அன்பையும் மட்டுமேத் தேர்ந்தெடுத்துக் கொண்டப் பெண்கள். அவர்கள் ஒரு ஆடியைப் போல. நம் அனைத்துத் தரப்புகளுக்கும், வன்மங்களுக்கும், தீமைகளுக்கும் மாற்றாக அன்பை மட்டுமே நிகர் வைக்கிறார்கள். அதற்கு இரையாகவும் செய்கிறார்கள். அதை முற்றிலும் அறிந்து கொண்டே அவர்கள் அந்த பலி பீடத்தில் தலை கொடுக்கிறார்கள்.
சில சமயம் ஒரே நேரத்தில் இருவேறு முகங்களுடன் நம் முன் வருகிறார்கள். அன்பின் கருணையாலும், வன்மத்தின் கூர் நகங்களாலும் ஒரே போல நம்மை ரத்த விளாறாக்குகிறார்கள். அங்கு நம்மைப் பேதலிக்க வைப்பதும், நம் தூய இருப்பின் உன்னதங்களின் சங்கீதங்களை நம்மோடுச் சேர்ந்து பாடுவதும் அவளின் ஒரே குரல், ஒரே உடல் என்பதன் அழுத்தமே அவசியமாகிறது என்று நம்புகிறேன்.
முற்றிலுமாய் மறுதலிக்கப்படும் பெண்களின் உலகில், ஆண்கள் உருவாகும் கேலித் தன்மையினை, அதன் கழன்ற விகார இருப்பினை மறுக்க மறுக்க வெவ்வேறுத் தருணங்களில் கடல் அலைகள் இழுத்து இழுத்து வந்து முக்கிச் செல்லும் காலி மதுகுப்பியினைப் போல, என்னையும் என் உள்ளீடற்றத் தன்மையினையும் உணர்கிறேன். அவர்கள் ராட்சச ரூபம் கொள்கையில் நம்மால் என்ன செய்திட முடியும். உண்மையில் மறுதலிப்பின் அலைக்கழிதலில் அவளைப் பிணமாக்கிக் கிடத்தி என் காதலைக் கூற முயல்வது ஒன்றே சாத்தியமாக ஆக்கி விடும் துரதிஷ்டத்தை ஒன்றும் செய்வதற்கில்லை.
தன்னைக் கேலியாக்கி, சமூகத்திற்கு எதிரிடையான ஒரு பிம்பத்தை ஏற்றிக் கொண்டுப் பிரஸ்தாபித்துப் பின் தன் அக உலகில் உள்ளொடுங்கித் தன் ஸ்பரிசத்தின் சூட்டினுள் ஒரு ஆண் மகனை ஏற்றுக் கொள்ள விரும்புகையில் அவனும் அதே போலத் தன்னை உற்று நோக்குகையில் அவனைப் பிதுக்குவதைப் பற்றி மட்டும் தானே அவளால் யோசிக்க முடியும்.
தெரியவில்லை. ஆனால் திரும்பக் கரமசோவின் உலகில், எந்த மாதிரியானப் பெண்ணும் ஏதோ ஒருவகையில் கவர்ச்சியாகவும், வசீகரமாகவும் தான் இருக்கிறாள் என்றுக் கிழவர் சொல்லும் பொழுது ஒரு ஆணின் உலகில் அது எத்தனை உண்மையானது மற்றும் நேரிடையானது என்பதிலிருந்து திரும்ப யோசிக்கத் தொடங்கினேன்.
மறுதலித்தலும், ஏற்றுக் கொள்ளுதலுமான அவரின் பெண்களின் உலகில் உண்மையில் அவரைப் போலவே முன்னும் பின்னும் அலைகிறது. ஆனால் அவர் அதற்காக நிச்சயமாகக் கருணையைப் போதிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
ஒருவகையில் அந்த எதிர்ப்பும் நசுக்குதலும் ஒரு அவசியமான ஒன்றாகவும். மறுசமயம் பித்துடன் அவளை, அவளின் சின்னச்சிறிய அசைவுகளைக் கூட உட்கிரகித்துக் கொண்டு அவளின் சவுக்கடிகளை வாங்கத் திடமாக, அவள் காலடிச் சத்தங்களைக் கேட்பதற்காக காலமற்று வாசலில் வன்மத்துடன் காத்திருக்கும் அந்த முரட்டு ரோகோசினைப் போல இருப்பதுதான் எவ்வளவு சாசுவதமானது என எண்ணத் தோன்றுகிறது.
நல்லதின் விளைவுகள் உண்மையில் நரம்புக் கோளாறுடையது. அனிச்ச பாவமாய் நாம் ஏற்பதும், ஏற்க நினைப்பதும் ஒருவிதமானக் கெட்டத் தன்மையையே. அதுவே இன்னும் நம் வாழ்க்கையினை சுவாரஸ்யமாக்குகிறதோ என்ற சந்தேகம் எப்பொழுதுமே உண்டு. மறுசமயம் அப்படித் திட்டவட்டமான நன்மை தீமை என்பதன் லட்சியம், ஒன்றை இது இப்படி என்று வகுப்பதற்குத் தான். அப்படி வகுத்தவுடன் அது நமக்குத் தெரிந்த உருவம் கொள்கிறது என்பது தான் அதன் ஆசுவாசம். நமக்குத் தெரிந்த, நாம் வகுத்த, நாம் அனுபவத்தில் பார்த்த நல்லத் தன்மை என்று நிர்ணயித்துக் கொண்ட ஒன்றிலிருந்து முற்றிலும் வேறு பட்ட ஒரு நல்லத் தன்மை நம்மிடம் வந்து மன்றாடும் பொழுது நம்மால் என்ன செய்து விட முடியும்.
நாஸ்தாசியா அப்படி ஒரு நல்லத் தன்மையை உண்மையில் பயக்கிறாள். அது ஒருவகையில் அவளை அவளின் இது நாள் வரை வரையறுத்து வைத்திருந்த நாஸ்தாசியா எனும் தன்மையினை முற்றிலுமாக மறுதலிக்கிறது. அவள் அதனை ஒரே சமயம் ஏற்கவும் மறுக்கவும் செய்கிறாள். அது அவள் இது நாள் வரைப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு தனித்தன்மையினை இழக்கக் கேட்கிறது. அதே சமயம் அதை இழப்பதன் மூலம் மாசுமருவற்ற ஒன்றினை அதற்கு ஈடாக வைக்கிறது. தராசின் முனை சாய்கிறது. அவள் மறுமுனை பிடித்திழுக்கிறாள். அங்கே அவள் கட்டிக் காத்து வைத்திருந்தவைகளின் காவல் பூதம் அவளைத் தோளில் ஏற்றுகிறது. அவள் மறுபடியும் அதிலிருந்து குப்புற வீழ முயல்கிறாள்.
இப்பொழுது அந்த பூதம் ஒரு குழந்தையைப் போல உருமாறி அவளின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அவளைச் சிதறடிக்க முயல்கிறது. நல்ல தன்மையின் பரிசுத்தம் ஒரு அடர்ந்த ரத்தமாய், உப்பு வீச்சத்துடன் அவளது நாவில் சொட்டுகிறது. கரிப்புடன் அதனை விழுங்குகிறாள். அதன் விராட உரு, அவளை அவளின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதே நேரம் அவள் தன் தூய உடலின் வாதைகளுடன் அதன் அருகே செல்கிறாள். அது அவளுக்கு, அவளை ஒத்த, அவளுடன் அணுக்கமான, ஆதியிலிருந்தே அவளின் அனைத்து பாவனைகளையும் அறிந்து அவளை நீக்கமுற அணைத்துக் கொள்ளும் ஒரு பரிசுத்தத்தின் உடல். அது நரம்புகள் இழுபட்டு, இழுபட்டு இன்னுமேத் தன்னை ஆவியாக்கி ஒரு புகை போல அவளைப் பற்றிக் கொள்கிறது.
அவளால் மறுக்க இயலாத ஒன்றிடம், அவளைப் போலவே அந்த தூயதும் மன்றாடுகிறது. அவளின் புனிதத்தின் அமைதியின்மையை தன் ஈரக்கரங்களால் வருடி விடுகிறது. அவளின் அன்பின் நித்தியத்தை, அவளைப் போலவே ஆதுரத்துடன் முத்தமிடுகிறது. அவளின் நீச பாவத்திடம் அவளல்லாமல் மண்டியிடுகிறது. அவள் சாட்டை வீசும் பொழுது அதன் தீர்க்கமான வலியின் அழுத்தமானத் தீற்றல்களைத் தன் சதையில் இருத்தி உமிழ்கிறது.
அவள் சொல்கிறாள், என்னை விட்டுப் போ என்று! ஆனால் அது அவளருகில் அமைதியாக வந்தமர்கிறது. தன் ரத்தம் பொங்கும் உதடுகளால் அழுத்தப் பற்றுகிறது. ஓருடல் ஆகிறது. ஆனால் ஒரு கணம். ஒரே ஒரு ஒற்றைக் கணம், அவளின் வன்மம் துளிர்க்கும் நொடியில், அது பிளர்கிறது. தன் உடலின் பலவீனங்களைத் தூண்டுகிறது. தான் மறுக்க முடியாத வலியிடம் தன்னை ஒப்புவிக்கிறது. தன்னையே அது பலியாக்குகிறது.
அவள் மறுபடியும் மன்றாடுகிறாள். ஆனால் இம்முறை உடலற்று, சமூகமற்று, எந்த இடர்பாடுகளுமற்று, ஒரு வகையில் தான் எனும் இருப்புமற்று. அவளது பிணத்தின் முன், அந்த நல்லத் தன்மையின் உடல் ஒரு வெற்றாகிறது, தன்னை இழக்கிறது. தன் பலவீனங்களின் சுருக்குகளுக்குள் முடிச்சிடுகிறது. தன்னை ஒரு வலிப்பாக்கி வெளிப்படுத்தித் தன்னைத் தானே, மறுதலிக்கிறது.
ஒரு தூயது இதைத் தவிர என்னதான் மாற்று செய்திருக்க முடியும்.
*