அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் – சைதன்யா

”மனிதன் உருவாக்கும் எந்தவொரு அரசாங்கத்தை விடவும் தங்கள் உரிமைகளை பற்றி தாங்களே சிந்திக்கும் மக்களின் குரல் அதிக ஆற்றல் கொண்டது; இந்த புனித உண்மையை அறியாத ஒவ்வொரு அரசாங்கமும் ஏதோ ஒரு கட்டத்தில் திடீரென கவிழ்க்கப்படும்”

– மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் (பிரெஞ்சு புரட்சியை குறித்து).

1789 ஆம் ஆண்டு ஐரோப்பிய வரலாற்றின் ஒரு திருப்புமுனை. பாரிஸில் அரசரின் ஆணையை மீறி உருவாக்கப்பட்ட பொது மன்றம் (Estates General) பிரெஞ்சு புரட்சியை துவக்கியது. பேஸ்ட்டில் சிறைத் தகர்ப்பில் (Storming of the Bastille) அந்த கலகங்கள் ஓர் உச்சத்தை எட்டின. முடியாட்சிக்காகவோ மத மேலாதிக்கதிற்காகவோ அல்லாமல் வரலாற்றில் முதன்முறையாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களுக்காக  போர் குரல்கள்  ஒலிக்கத் தொடங்கின.

பிரஞ்சு புரட்சி (Tennis court oath by Jacques Louis David)

ஐரோப்பாவின் எல்லா முனைகளிலிருந்தும் அதற்கு எதிர்வினைகள் எழுந்தன. “அந்த விடியலில் உயிர் வாழ்தலே பேரின்பமாகியது” (Bliss was it in that dawn to be alive) என்று  வோர்ட்ஸ்வொர்த் போன்ற இளம் முற்போக்குவாதிகளின் குரல்கள் ஒருபுறம், “பண்பாட்டின் எல்லா உயர்ந்த ஆடைகளும் முரட்டுத்தனமாக கிழிக்கப்பட்டன” என்று எட்மண்ட் பர்க் (Edmund Burke) போன்ற முடியரசு ஆதரவாளர்களின் பழமைவாத குரல்கள் மறுபுறம் என இரு எல்லைகளிலிருந்தும் எழுந்த கருத்து மோதல்களால் நிறைந்திருந்தது 1790இன்  ஐரோப்பிய சிந்தனைத் தளம். இந்த சலனமிக்க சூழல் தான் நவீன பெண்ணியத்தின் முன்னோடியாக கருதப்படும் மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் (Mary Wollstonecraft) வாழ்ந்த காலம். ஃபிராங்கன்ஸ்டைன் (Frankenstein) எழுதிய புகழ்பெற்ற நாவலாசிரியையான மேரி ஷெல்லியின் (Mary Shelley)  தாய்.

மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் 1790 இல் இங்கிலாந்தில் எழுந்த பழமைவாதக் குரல்களுக்கு எதிர்வினையாக ‘மனித உரிமைகளுக்கான நியாயங்கள்’ (A Vindication of the Rights of Men) என்ற நீள் கட்டுரையை எழுதினார். உணர்வெழுச்சி கொண்டதாகவும், நேரடியாக எட்மண்ட் பர்க் போன்ற முடியாட்சி ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியும் இக்கட்டுரை எழுதப்பட்டதால் இது அக்காலத்தில் பெரிதாக பேசப்பட்டது.

மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் (Mary Wollstonecraft)

அந்த கட்டுரையில் வோல்ஸ்டோன்கிராஃப்ட் முடியாட்சியை ஆதரிப்பவர்களுக்கு அதிகாரம் மேலுள்ள மூர்க்கமான பக்தியை சுட்டிக்காட்டினார். எட்மண்ட் பர்க் மீண்டும்  மீண்டும் ஒழுங்கு (order) என்று கூறுவது அவருக்குள் உறையும்  ‘கொடுங்கோல் கொள்கைகள்’ தான் என்றார். அக்காலகட்டத்தில் எழுந்த உணர்ச்சிகரமான எதிர்குரல்களில் ஒன்று என்ற வகையிலேயே வோல்ஸ்டோன்கிராஃப்ட்டின்  இந்த கட்டுரைக்கு இன்றைக்கு மதிப்பிருக்கிறது. 

பிரெஞ்சு புரட்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், அதற்கு காரணமாக இருந்த பெண்களின் ஒடுக்குமுறை குறித்தும் அந்த கட்டுரை பேசியது. கருவுறுதல் என்னும் ஒரு செயலுக்குள் ஒடுங்கிவிட்ட பிரெஞ்சு அரசரின் மனைவியான மரீ அன்டோய்னெட்டை (Marie Antoinette) நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் பெண் ஒடுக்குமுறையின் உச்ச வெளிப்பாடாக அவர் கண்டார். அத்தகைய ஒருவரை பெண்ணின் பூரண வடிவம் என்று காண்பது பிரபுக்குல பெண்களுக்கும் நடுத்தரவர்க்க பெண்களுக்கும் எவ்வளவு பெரிய தளை!  புரட்சியில் உணவிற்காக உரிமைகளுக்காக தெருவில் இறங்கிய ஏழை அன்னைகளுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு தொலைவு! இதற்கு பின்னால் இருக்கும் பொருளாதார காரணிகள் என்னென்ன!  என அந்த கட்டுரையில் அவர் குரலெழுப்பினார்.

அதன் வரவேற்பை தொடர்ந்து, அந்த கட்டுரையிலேயே வெளிப்பட்ட பெண்ணிய உணர்ச்சிகளை தொகுத்துகொண்டு  1792 இல் அவர் எழுதிய  ‘பெண் உரிமைகளுக்கான நியாயங்கள்’ (A Vindication of the Rights of Woman) என்னும் கட்டுரை வரலாற்றுரீதியாக மேலும் முக்கியமானது.

அதற்கு முன்பாகவே வோல்ஸ்டோன்கிராஃப்ட் ‘பெண் கல்வி குறித்த எண்ணங்கள்’ (Thoughts on the Education of Daughters) என்ற கட்டுரையில் பெண் கல்வியின் தேவையை பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதில் ரூஸோ (Rousseau) போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்களை மறுத்து பெண்ணின் தனி வாழ்க்கை, தேடல், அறம் ஆகியவற்றை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். அதே சமயம் அன்னை, மனைவி, ஆசிரியை என்னும் சமூக பொறுப்புகளை பெண்கள் உதறாமல்  இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கிறார்.

பெண்ணியத்தின் மூன்று அலைகள் என்று இன்றுவரை கூறப்படுவது சமூகம், பொருளாதாரம் மற்றும் உளவியல் ஆகிய மூன்று தளங்களிலான விடுதலை. ஓட்டுரிமைக்கான போராட்டங்கள் பெண்ணியத்தின் முதல் அலை. வேலைவாய்ப்பு, சம ஊதியம், சொத்துரிமை போன்றவை பேசப்பட்டது பெண்ணியத்தின் இரண்டாவது அலை. வீடு, குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரம், ஒரு கருத்தை வெளிப்படுத்துவதில் ஏற்படும் உளவியல் தடைகள் மூன்றாவது அலையில் பேசப்பட்டது.    வோல்ஸ்டோன்கிராஃப்ட் அவரது கட்டுரைகளில் கல்வி உரிமை போன்ற சமூக உரிமைகளில் தொடங்கி  ஒரு பெண் படைப்பாளியின் அந்தரங்க தளைகள், நெருக்கடிகள் என இந்த மூன்று தளங்களையும் தொட்டு பேசியதன் வழியாக இன்றுவரை நீளும் பெண்ணிய விவாதங்களை துவக்கிவைத்துள்ளார்.

தங்களது உரிமைகள் என்பதைவிட ஒரு சமூகத்தின் விடுதலை, அடுத்தகட்ட வளர்ச்சி போன்றவற்றில் பெண்ணின் கடமை மிக முக்கியம் என்றும் அதற்கு தடையாக  ஆணாதிக்க சமூகத்தின் கட்டமைப்பை காண்பதுமே சுதந்திர போராட்ட காலகட்டத்தின் இந்திய பெண்ணிய பார்வையாக இருந்தது. இதே பார்வையை வோல்ஸ்டோன்கிராஃப்ட்டின் ‘பெண் கல்வி குறித்த எண்ணங்கள்’ கட்டுரையில் காணமுடிகிறது. பெண்ணின் சமூக கடமைகள் எவ்வளவு முக்கியமானது, பெண்ணின் வாழ்க்கை எப்படி வெவ்வேறு தளங்களில் விரிவடையவேண்டியது என முழுக்க முழுக்க எதிர்மறை நோக்கை  எடுக்காமல் பெண்கள் செல்லவேண்டிய தொலைவை அவர் அதில் சுட்டிக்காட்டுகிறார். 

பிரஞ்சு புரட்சியின் முகமாக கருதப்படும் ரூஸோ போன்ற முற்போக்குவாதி கூட “ஆண் வலுவாகவும் செயலூக்கம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்; பெண் பலவீனமாகவும் செயலூக்கமற்றவளாகவும் இருக்க வேண்டும்” போன்ற கருத்தை கொண்டிருந்தார். ரூஸோ 1762 இல் எழுதிய எமீல் (Emile, or On Education) என்னும் நூலில் பெண்ணின் கல்வி குறித்த பகுதியில் ஒரு பெண் தன் தகுதியாக சமூகத்தின் முன் அவளது மதிப்பையும், தன் இலக்காக ஆணின் இன்பத்தையும் கொள்ள வேண்டும் என கூறுகிறார். “பெண்ணிற்கு தகுதி மட்டும் போதாது, தகுதியானவள் என்று சமூகத்தால் கருதப்பட வேண்டும்” என்று கூறும் ரூசோ “பிறர் என்ன நினைப்பார்கள் என்பது ஆணின் நல்லொழுக்கத்தின் கல்லறை. அது பெண்ணின் சிம்மாசனம்.” என்றார். பெண்ணின் மதம் மற்றும் நம்பிக்கைகள் அதிகாரத்தால் முடிவுசெய்யபட வேண்டும், இதுவே இயற்கையின் நியதி என்றார். பொ.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே பிளேட்டோ அவரது குடியரசில் (Republic) பெண்களுக்கு சமத்துவ கல்வியை வகுத்தார். ஆனால் ரூஸோ அதை எதிர்த்து அது அவர்களை ஆண்களாக மாற்றும், பெண் தன்மையை இழக்க வழிவகுக்கும் என்றார்.

இது போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவில் நிலவியிருந்த காலகட்டத்தில் தான் வோல்ஸ்டோன்கிராஃப்ட் இதழ்களில் கட்டுரைகள், சிறுவர் கதைகள் எழுதியும்; மொழிபெயர்ப்புகள் செய்தும் பொருளாதாரரீதியாக பிறர் உதவியின்றி வாழ்ந்தார். அவரது வாழ்வின் ஒரு பெரும் பகுதி  அப்போதிருந்த அறிவுலகத்தை  சார்ந்தே இருந்தது. இறுதி வரை அதில் தீவிரமாக ஈடுபட்டார்.

‘உயர்குடி கல்வி கற்றும் வறுமையில் வாழும் பெண்களின் அவலநிலை’ (Unfortunate Situation of Females, fashionably educated, and left without a Fortune)  என்னும் கட்டுரையில் தன்னை போன்ற பெண்களின் பெருந்தனிமையை குறித்து பதிவுசெய்துள்ளார். “அவள் இடம் என்பது வேலையாட்களுக்கு மேலே. ஆனால் அவர்களால் மேட்டுக்குடியின் உளவாளியாகக் கருதப்படுகிறாள். மேட்டுகுடியோ ஒவ்வொரு உரையாடலிலும் அவள் தாழ்ந்தவள் என சுட்டிக்காட்டுகிறது. வெளியாள் ஒருவரின் கவனம்பெற்று அவள் ஒரு கணம் தன் கீழ்நிலையை மறந்தால் மறுகணமே அது அவளுக்கு நினைவு படுத்தப்படுகிறது” என்பது போன்ற மிக நுட்பமான சுய அனுபவ குறிப்புகள் அதில் இடம்பெற்றன.

அவர் எதிர்கொண்ட இந்த தனிமை அவரை வெவ்வேறு தளங்களில் செயல்பட தூண்டியது எனலாம். அவரது தோழியுடன் சேர்ந்து பெண்களுக்கான கல்விக்கூடம் நடத்தினார். தாமஸ் பெய்ன் (Thomas Paine), பின்னாளில் அவர் கணவரான வில்லியம் காட்வின் (William Godwin) போன்ற அக்காலத்தைய அறிஞர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார். அரசியல் மற்றும் பண்பாடு ஆகிய தளங்களில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவுசெய்தார்.

வோல்ஸ்டோன்கிராஃப்ட் பிற்பாடு எழுதிய ‘பிரெஞ்சுப் புரட்சி பற்றிய வரலாற்றுப் பார்வை’ ( An Historical and Moral View of the French Revolution; and the Effect It Has produced in Europe. ) என்னும் நூல் அவருடைய  ‘மனித உரிமைகளுக்கான நியாயங்கள்’’ போல் அல்லாமல் நிதானமான உணர்ச்சிகளுடன் எழுதப்பட்டது. அதில் புரட்சியாளர்களின் வன்முறைக்கு ஒரு வரலாற்றுபூர்வமான நியாயப்படுத்தலை அளித்தார். எல்லா  பக்கங்களிலும் ஆட்களை கில்லட்டினிற்கு (guillotine) பலிகொடுத்து கொண்டிருந்த அந்த ‘பயங்கர ஆட்சி’ (Reign of Terror) காலத்தில் வோல்ஸ்டோன்கிராஃப்ட் பிரான்சிஸில்  இந்நூலை எழுதியிருக்கிறார். பிரிட்டானியர் என்பதால் அவரே பல நெருக்கடிகளையும் சந்தித்திருக்கிறார். சுற்றிலும் இவ்வளவு வன்முறைகள் நிகழ்ந்தபோதும் மனித ஆற்றல், புரட்சியின் விழுமியங்கள், அறிவியல், தத்துவம், தனி மனித தேடல் போன்ற உயர் இலட்சியங்கள்  வலிமையிழந்துவிட கூடாது என்னும் பதற்றத்தை அவர் எழுத்தில் காணமுடிகிறது.

மேரி ஷெல்லி (Mary Wollstonecraft Shelley)

ஆனால் வோல்ஸ்டோன்கிராஃப்ட்டின் மகள் மேரி ஷெல்லி 1818இல் எழுதிய ஃபிராங்கன்ஸ்டைன் (Frankenstein) நாவலின் ஆரம்பமே “மகிழ்ச்சியற்ற மனிதனே! என்  பித்து  உன்னையும் பற்றிக்கொண்டுள்ளதா?” என்று கட்டற்ற அறிவு தேடல், ஆற்றல், பேராவல் ஆகியவற்றை மகத்தான அழிவு சக்தியாக காண்கிறது. சற்றே நிதானம் கொண்டிருந்தால், தன் நிலையில் மனநிறைவே உயர்ந்தது என்றிருந்தால்,  “கிரேக்கம் அடிமைப்படுத்தப்பட்டிருக்காது, ஸீஸர் தன் நாட்டை அழிவுக்கு இட்டுச்சென்றிருக்கமாட்டார், அமெரிக்கா படிப்படியாக கண்டுபிடிக்கபட்டிருக்கும், மெக்ஸிகோ, பெரு சாம்ராஜ்யங்கள் அழிக்கப்பட்டிருக்காது” என்று நாவலின் கதாநாயகன் விக்டர் ஃபிராங்கன்ஸ்டைன் ஓர் இடத்தில் கூறுகிறான்.

மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் லட்சிய சமூகம், லட்சிய வாழ்க்கை,  உயர்ந்த காதல், உணர்வெழுச்சியில் உருவாகிவரும் விழுமியங்கள் அதன் அலைக்கழிப்புகள் அவற்றிலேயே வாழ்ந்தார். இரு முறை தற்கொலைக்கு தள்ளப்பட்டார். அவர் வாழும்போதே பிரெஞ்சு புரட்சியின் விழுமியங்கள் வெறும் கொலை இயந்திரங்களாக மாறுவதை கண்டார். ஆனால் அவர் எழுத்தில் அந்த அவநம்பிக்கையோ ஏமாற்றமோ வெளிவரவில்லை.

வில்லியம் காட்வினுக்கும் அவருக்கும் மணமாகி சிலகாலத்திலேயே மகள் மேரியின் பிரசவத்தின்போது வோல்ஸ்டோன்கிராஃப்ட் இறந்தார். மேரி இன்றுவரை மேற்கின் அழியாத குறியீடாக மாறிவிட்ட ஃபிராங்கன்ஸ்டைன் நாவலை எழுதினார். அது அவள் அன்னையின் அடியாழத்தில் தோன்றிய “நிலைகொள்க. நிதானம் அடைக” என்ற குரலின் வெளிப்பாடு என்று கூறலாம்.

ஒரு தலைமுறைக்குள் மனிதன், ஆற்றல், அறிவியல் மீதான நம்பிக்கை எப்படி தலைகீழாகியது என்பது ஆச்சரியமே.

சைதன்யா

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில்  மேற்கின் சிந்தனைத்தளம் முழுக்க நிலவியிருந்தது வோர்ட்ஸ்வொர்த் கூறும் அந்த விடியலின் பேரின்பம். அந்த பேரலையில் அடித்துச்செல்லப்பட்டவர்கள் உருவாக்கிய கவிதை, இசை, எழுத்து இன்றும் மனிதனின் உச்ச கலைவெளிப்பாடுகளின் வரிசையில் இடம் வகிக்கின்றன.  முதன்முதலில் மக்களின் நாயகன் ஒருவன் எழுந்துவருவதை பீத்தோவனின் 3ஆவது சிம்ஃபொனி கொண்டாடுகிறது. கலை தனிமனிதனின் அந்தரங்க குரலாகிறது. அவ்வாறு அடித்துசெல்லபட்டவர்களில் ஒருவர் மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட். அந்த பித்தின் அலைக்கழிப்புகளிலேயே அவர் வாழ்ந்தார். அவர் தொட்டெழுப்பிய நவீன பெண்ணிய அலைக்கும் அந்த விடியலின் பேரின்பமே தொடக்கப்புள்ளி.

*

சைதன்யா: தமிழ்விக்கி

16 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *