பெருந்தேவி முன்வைக்கும் இயக்கசக்தி – சுரேஷ் ப்ரதீப்

பெருந்தேவி

1

பழைய சினிமாக்கள் சிலவற்றில் இடம்பெறும் காட்சி. நாயகனுக்குத் திருமணமாகும். முதலிரவில் நாயகனின் மனைவி வேறொருவனைக் காதலிப்பதாகச் சொல்வாள். நாயகன் அவளை அவனுடன் அனுப்பி வைப்பார்.பள்ளிச் சிறுமிகள் மீது ‘ஆசைகொள்ளும்’ ஜமீன்தார்களை நாம் சினிமாக்களில் பார்த்திருப்போம். ஊரில் திருமணமாகி வரும் எந்தப் பெண்ணையும் முதலில் அந்த ஊர் ஜமீன்தார் ‘ருசிபார்த்த’ பிறகே அவள் கணவனுக்குக் கிடைப்பாள் என்பது போன்ற கதைகளையும் வாசித்து இருக்கிறோம். விடலைப் பருவத்தில் அக்கினிப்பிரவேசம் என்ற ஜெயகாந்தனின் கதையை நான் வாசித்தேன். அக்கதை அளித்த உளக்கொந்தளிப்பு இன்றும் நினைவில் இருக்கிறது. அக்கதை பற்றிய என் உளநிலையைக் கட்டமைத்ததில் நான் மேற்சொன்ன உதாரணங்கள் மற்றும் இவற்றைப் போன்றவற்றின் வழியாகப் பெற்ற ‘கற்பு’ என்ற கருத்தாக்கம் குறித்த என் பார்வையுடன் தொடர்பிருக்கிறது.

அக்னிப்பிரவேசம் கதையில் கதைசொல்லியின் அம்மா அவளை நீராட்டுவதன் வழியாக ‘தூய்மைப்படுத்துதல்’ என்ற சடங்கினை நிகழ்த்துவது அன்றைய வாசிப்பில் அபாரமான உளயெழுச்சியை கொடுத்தது. அப்படி அவள் தூய்மையடைந்த பின்னும் அவள் சூயிங்கம் மென்று கொண்டிருந்ததாக எழுதப்பட்டது அன்று எனக்கு ‘ரசக்குறைவாகவே’பட்டது. தூய வெண்ணிற உடையில் கண்ணுக்கு புலப்படும் அளவில் கரைபடிந்தது போன்றுதான் அவள் ‘சூயிங்கம்’ மென்று கொண்டிருப்பது எனக்குப்பட்டது. ஜெயமோகன் அந்த சித்தரிப்புக்கான விளக்கத்தை எழுதியது ஏற்றுக்கொள்ளும்படியாகவு இருந்தது. ஆனால் நான் இங்கு இதைக்குறிப்பிடக் காரணம் அக்கதையை பெருந்தேவியோ அல்லது ஜெயமோகனோ எப்படி அணுகி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்காக அல்ல. நான் கற்பு குறித்து கொண்டிருந்த உளநிலையை விளக்குவதற்காக இதைச் சொல்கிறேன்.

கதைசொல்லியின் மீது அவள் எதிர்பாராத தருணத்தில் ஒரு வல்லுறவு நிகழ்கிறது. அதன் அவலம் ஒரு வாசகனாக எனக்குப் புரிந்தாலும் அந்த உறவுக்குப் பிறகு அவள் வாழ்க்கை ‘அவ்வளவுதான்’ என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். ஏனெனில் என் ஞாபகத்தில் அதுதான் இருக்கிறது. சினிமாக்களில் ‘கெடுத்தவனுக்கே’ பெண்ணை கட்டி வைப்பார்கள். மேலும் கிராமத்தில் பிறந்தவனான எனக்கு திருமணமாகாத பெண்ணைச் சுற்றி பாலியல் சார்ந்த விஷயங்கள் பேசப்படுவது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ‘காதல்’ கூட பாலியலில் இருந்து விலக்கப்பட்டதாகவே கிராமங்களில் இருந்தது. ஏனெனில் கிராமத்தில் பெரும்பாலும் ஒரே சாதியினர் நெருக்கமாக வாழ்கின்றனர். ஒருவரை மற்றவர் வேவுபார்த்தபடி இருக்கின்றனர். ஆகவே காதலர்கள் இந்த நடமாடும் சிசிடிவிக்களிடமிருந்து தப்பிப்போய் கொஞ்சநேரம் தனித்திருப்பது என்பது ஏறத்தாழ முடியாத காரியம் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு. (தொலைக்காட்சியின் பரவலாக்கம் இந்த கிசுகிசு பேசுதல் அதற்கான தரவுகளை சேகரித்தல் போன்ற விஷயங்களில் இருந்து பலரையும் விடுவித்தது என்றே நினைக்கிறேன்.) ஆகவே ஒரு பெண்ணின் ஆகப்பெரிய மீறலே காதல் என்றுதான் என்னுடைய பால்யத்தில் உளப்பதிவு இருந்தது. மேலும் பதிமூன்று வயதுவரை பெண்ணின் முலைகளில் கைபட்டாலே குழந்தை பிறந்துவிடவோ எய்ட்ஸ் வரவோ வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் நம்பி இருக்கிறேன். இதற்கு பாலியல் கல்வியறிவின்மை காரணம் என்பதைவிட பெண்கள் கூட்டத்தில் எட்டிப்பார்க்க ஆர்வமும் விருப்பமும் இல்லாத பெரும்பாலான சிறுவர்களுக்கு இவ்வளவுதான் கிராமம் பாலியல் அறிவினை அனுமதித்தது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுரையைத் தொடங்க இவ்வளவு நீண்ட சுயபுராணத்தை வைத்ததற்கு காரணமுண்டு. பெருந்தேவியின் உடல்-பால்-பொருள் மற்றும் தேசம்-சாதி-சமயம்; அதிகாரத்தைப் புரிந்து கொள்ளுதல் என்ற இரண்டு நூல்களையும் வாசிக்கும் யாரும் பாலுறவு, பாலியல், பாலினம் போன்றவை பற்றிய தங்களுடைய புரிதலை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒருவகையில் இக்கட்டுரை என்னுடைய திரும்பிப் பார்த்தலாகவும் அமைகிறது.

இன்று முப்பது கடந்திருக்கும் பலரைப் போலவும் பாலியல் அறிவு என்பது எனக்கும் பாலியல் படங்களின் வழியாகவே ஏற்பட்டது. பாலியல் படங்கள் என்பவை பெரும்பாலும் ஆணின் பகற்கனவினை பிரதிபலிப்பவை. எந்நேரமும் காமத்திற்காக ஏங்கும் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் வளைத்து அடைவதுதான் பெரும்பாலான பாலியல் படங்களின் ‘தீம்’. அடுத்ததாக இலக்கியம் பாலியலை அறிமுகம் செய்தது. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானுடம் கடுமையான உளத்தொந்தரவினை அளித்த ஆக்கம். ஒரு வகையில் தமிழ் இலக்கியம் ஓரளவுக்கு ஆக்கப்பூர்வமான பாலியல் சொல்லாடல்களையே முன்னெடுத்திருக்கிறது. ஒரு எழுத்தாளனாக நான் ரசனை விமர்சகர்களின் கட்சி. ரசனை விமர்சகர்கள் பெரும்பாலும் கோட்பாடுகளை சந்தேகக் கண் கொண்டே பார்த்தனர். தேசியம், திராவிடம், பொதுவுடைமை, தலித்தியம் என்று என்ன லேபிளோடு வந்தாலும் படைப்பின் ‘உள்ளுறை’ என்று அவர்கள் நம்பிய ஒன்றின் அடிப்படையிலேயே படைப்பினை எடைபோட்டனர். எவ்வளவு செறிவாக ஒரு பிரதி எழுதப்பட்டிருக்கிறது ஆசிரியரின் மனோதர்மம் எவ்வளவு ஆழமாக ஒரு படைப்பில் செயல்பட்டிருக்கிறது என்பதே இலக்கியத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக இருந்தன. பெண்ணிய நோக்கும் இவ்வாறுதான் எதிர்கொள்ளப்பட்டது. இந்த நோக்கு தவறென்று நான் சொல்லவில்லை. ஒரு எல்லைவரை க.நா.சுப்ரமண்யம், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்ற ரசனை விமர்சகர்களை நானும் பின்பற்றவே செய்கின்றன. கோட்பாட்டு சார்ந்த பார்வைகள் மீதான தமிழ் இலக்கிய விமர்சன மரபின் விலக்கம் என்பது வறட்டுப் பிடிவாதம் அல்ல. இம்மரபு ‘கன்வின்சிங்கான’ கோட்பாட்டு தரப்பு எதையும் காணவில்லை. கல்வித்துறை சார்ந்த விமர்சகர்களும் கருத்தியல் சாய்வு கொண்ட விமர்சகர்களும் படைப்பை அதன் தளத்திற்கு சென்று அணுகாமல் தங்களுடைய சட்டகங்களை கையிலெடுத்துக் கொண்டு படைப்பை நோக்கிச் சென்றனர். அதனாலேயே சுவாரஸ்யமான அவதானிப்புகளை அவர்களால் முன்வைக்க முடியாமல் போனது. ரசனை விமர்சன மரபு குறித்து இவ்வளவு விஸ்தாரமாக இங்கு சொல்லக் காரணம், ரசனை விமர்சகர்கள் வழியாக உருவான என் இலக்கியப் பார்வை பெருந்தேவி இவ்விரு நூல்களின் வழியே முன்வைக்கும் பெண்ணிய நோக்குடன் பெரிய அளவில் முரண்படவில்லை என்பதைச் சுட்டுவதற்குத்தான். நவீனத் தமிழ் இலக்கியம் பெண்ணிய நோக்கிலான அரசியல் சரிநிலை என்ற போதத்துடன் இயங்கவில்லை என்றாலும் அந்நோக்கினை சிதைக்கும் தன்மை கொண்டதாக இல்லை. ஆகவே கற்பு குறித்த தூய்மைவாத எண்ணம் கொண்ட பால்யம், பெண் உடல் பற்றிய பகற்கனவு போன்றவற்றின் வழியாக விடலைப் பருவத்தை கடந்திருந்தாலும் நவீன இலக்கியம் பெண்கள் குறித்த என் பார்வையில் ஆழமான நேர்நிலை தாக்கத்தைச் செலுத்தி இருக்கிறது என்பதை உணர்கிறேன். இத்தகைய இயல்பு கொண்ட ஒருவனாகவே பெருந்தேவியின் கட்டுரைகளை நான் வாசிக்கிறேன்.

2

உடல்-பால்-பொருள்:பாலியல் வன்முறை எனும் சமூகச் செயல்பாடு என்ற நூல் தமிழில் வந்திருக்கும் முதல் பெண்ணியக் கோட்பாட்டு நூல் என்று சொல்லலாம். பெண்ணியக் கோட்பாடுகளை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற போதத்துடன் இந்த நூல் எழுதப்படவில்லை. 2017வாக்கில் metoo இயக்கம் கவனம் பெறத் தொடங்கியபோது அது தமிழ்ச்சூழலில் எதிர்கொள்ளப்பட்ட விதத்தினை விவாதிக்கும் தொடர் கட்டுரைகளாக பெருந்தேவி மின்னம்பலம் இதழில் எழுதி இருக்கிறார். அக்கட்டுரைகளை மேலும் விரிவாக்கி இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக வெளியான அதிகாரத்தைப் புரிந்து கொள்ளுதல்:தேசம்-சாதி-சமயம் என்ற நூலில் இடம்பெறும் கட்டுரைகள் உடல்-பால்-பொருள் நூலுக்கு முன்பாகவும் சில கட்டுரைகள் அந்நூலுக்குப் பின்னரும் எழுதப்பட்டுள்ளன.

இவ்விரண்டு நூல்களில் இடம்பெறும் கட்டுரைகளை மூன்று விதமாகப் புரிந்து கொள்ளலாம்.

முதலாவதாக இலக்கியம் ,சினிமா போன்ற கலைத்துறைகள் பெண் என்கிற தன்னிலையை எவ்வாறு அணுகுகின்றன என்ற கேள்வியின் வழியாக கலைகளில் வெளிப்படும் ‘சமூக உள்ளம்’ எவ்வாறானதாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முயலுதல்.

Metoo இயக்கம், கோகுல்ராஜ் கொலை, பொள்ளாச்சியில் பாலியல் துன்புறுத்தலுக்கான ஆளான சம்பவம் போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு பொதுச் சமூகம் இந்நிகழ்வுகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது எதையெல்லாம் தவறவிடுகிறது என்பதை நூலாசிரியரே சொல்லி இருப்பது போல ஒரு பத்திரிக்கையாளயாகவும் ஆய்வாளராகவும் நின்று ஆய்வு செய்தல்.

மூன்றாவதாக பொது அறிவுஜீவியின் இடத்தில் இருந்தபடி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள்.  ஒரு நிகழ்விவ் அல்லது நூலில் பொதுவாக தவறவிடப்பட்டிருக்கும்  பெண்ணிய கோணத்தை தவறவிட்ட இடங்களை சுட்டிக் காட்டுதல்.

கட்டுரைகளின் தன்மையை வைத்து இப்பிரிவிணையை நான் செய்திருக்கிறேன். இக்கட்டுரைகளின் உள்ளுறையாக அமையும் சில புள்ளிகளை குறிப்பிடாமல் இக்கட்டுரைகள் வழியே பெருந்தேவி முன்னெடுக்க விரும்பும் உரையாடலை சாத்தியப்படுத்த இயலாது. மேலும் நூலினை வாசிக்கிறவர்கள் நூலாசிரியரின் பொதுப்பார்வையை புரிந்து கொள்வதும் அவசியம்.

பெருந்தேவி தமிழ்ச்சூழலில் கவிஞராகவே முதலில் அறியப்பட்டவர். தீவிர இலக்கியச்சூழலில் கவிஞரும் கவிதைகளும் எப்போதும் ஒரு வகையான ‘சிறுபான்மையினர்’ என்று சொல்லலாம். ஒரு சூழலில் சிறுபான்மையினராக வாழ்கிறவர்கள் மேற்கொள்ளும் கடுமையான ‘அனுஷ்டானங்கள்’ கவிஞர்களுக்கும் உண்டு‌. கவிதை பற்றிய பேச்சுகளை ஒரு பொது வாசகன் உடனே உள்நுழைந்து புரிந்து கொள்ள முடியாது. மொழியின் நொய்மையான பகுதியை கவிதை கையாள்வதால் கவிதையின் ஆளுமை கவிஞர்களிடம் பிரதிபலிப்பது இயல்பே. நவீன இலக்கிய வடிவங்களிலேயே மிக அதிகபட்ச ‘அழகு’ கொண்டிருந்தாலும் கவிதைக்கான வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே கவிஞனின் நொய்மை மேலும் அதிகரிக்கிறது. இந்தப் புறச்சூழலும் கவிஞர்களின் ‘மூடிய’ தன்மைக்குக் காரணம். ஆனால் பெருந்தேவியை இந்த வகைமைக்குள் வைக்க முடியாது. அவர் ஒரே நேரத்தில் கவிஞராகவும் அறிவுஜீவியாகவும் திகழ்கிறவர். ஒரு கவிஞர் கவிதைக்கு வெளியேயும் திகழ்வது தமிழ்ச்சூழலில் அரிதான ஒன்று. நான் மேற்கூறிய மூன்று வகைப்பாடுகளில் ‘கவிஞர்’ பெருந்தேவி இலக்கியத்தையும் சினிமாவையும் அணுகுவதற்கு தோதானவராக இருக்கிறார். பெருந்தேவியின் கலை சார்ந்த அவதானிப்புக்கு அவர் கவிஞர் என்பது முக்கியமான காரணம். உடல் பால் பொருள் நமக்கு வெறும் கோட்பாட்டு நூலாக மட்டும் தெரியாமல் நுட்பமான இலக்கிய விமர்சன நூலாகவும் தெரிவதற்கு கவிஞர் பெருந்தேவி முக்கியமான காரணம். தமிழ் இலக்கிய வாசகர்கள் இந்த விமர்சனங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

அடுத்ததாகத்தான் பெருந்தேவி விவாதிக்க முனையும் கோட்பாடுகளின் புள்ளி வருகிறது. (‘கோட்பாடு’ என்ற சொல்லை பயமுறுத்தும் தொனியில் இக்கட்டுரையில் பயன்படுத்துகிறேனோ என்ற சந்தேகம் வருகிறது இப்போது.) உடல்-பால்-பொருள் முன்னுரையில் பெருந்தேவி இவ்வாறு எழுதுகிறார்.

/‘பால் என்பது உடற்கூறாக ஏற்கெனவே இயற்கையில் தரப்பட்ட அடிப்படையான அடையாளம், ஆனால் பாலினம் (gender) பண்பாட்டுக் கட்டமைப்பு’ என்ற இருமையை மறுத்ததே பட்லர் முன்வைத்த பெண்ணியத் தத்துவத்தின் அடிப்படை. பால் என்பதை ‘இயற்கை’யானதாக நாம் பார்க்கவைக்கப்பட்டிருக்கிறோம், இப்படி பார்க்க வைத்ததில் பண்பாட்டுரீதியான சொல்லாடலாகப் பாலினம் செயல்படுகிறது எனக் கூறுகிறார் பட்லர். பால் என்பதே பண்பாட்டு ரீதியான, அரசியல்மயமான ஒன்றுதான் என்பதே அவரது புரட்சிகரத் தத்துவப் புரிதல். பால் / பாலினம் ஆகியவற்றை இயற்கை / பண்பாடு முரணோடு இணைவைத்துப் பேசுவதே ‘பால் ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு’ என்பதை மறைக்க உதவும் திரை, ஏனெனில் பண்பாட்டுக்கு வெளியே பால் சுட்டுகிற உயிர்க் கூறு என்று ஒன்றில்லை என்பது அவர் தத்துவச் செறிவு (Judith Butler. Gender Trouble: Feminism and the Subversion of Identity. New York: Routledge, 1990)./

ஜூடித் பட்லரின் இந்த நோக்கிலிருந்தே நூலாசிரியரின் சிந்தனை விரிகிறது. தொடர்ச்சியான நிகழ்த்துதல்கள் வழியாகவே ஆண் பெண் போன்ற அடையாளங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன என்று எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். ‘எதிர்பாலியல்’ என்ற சொல்லை ஆசிரியர் பயன்படுத்துகிறார். ஒரு குழந்தை பிறந்தவுடன் ‘பையனா பெண்ணா’ என்று கேட்பதன் வழியாக இந்த எதிர்பாலியல் சமூக அமைப்புக்குள் ஒரு குழந்தை உள்ளிழுக்கப்பட்டு தொடர்ந்து இந்த நியதியின் அடிப்படையிலேயே பால்நிலைகளைச் சுட்டி குழந்தை வளர்க்கப்படுகிறது என்கிறார். ஒரு விபத்தில் அடிபட்ட மனிதன் அவனைச் சார்ந்தவர்களுக்குத்தான் பதற்றத்தை அளிப்பான். ஆனால் மருத்துவரைப் பொறுத்தவரை அவன் உடலில் எவ்வளவு ரத்தம் வெளியாகி இருக்கிறது, இதயத்துடிப்பு, மூளைச்செயல்பாடு போன்ற காரணிகளே முக்கியமானவை. ஆண் பெண் என்ற பால் பாகுபாடுகளை ‘பதற்றம் கொள்ளும்’ உறவுகளுக்கு ஒப்பிடலாம். பதற்றம் உண்மையாக இருந்தாலும் அதனால் பயனில்லை அல்லவா! எதிர்பால் நியதிகள் குறித்து இக்கட்டுரை பேசுவதை பலரையும் பதறச்செய்யும் ஒன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

உடல்-பால்-பொருள் ஓரளவு எதிர்வினை பெற்ற நூல் தான் என்றாலும் இந்நூலின் மையக்கருதுகோளான இரு நூல்களிலும் பெருந்தேவி பல்வேறு அசைவியக்கங்களை விளக்கப்பயன்படுத்தும் இந்த எதிர்பால் சமூகக் கட்டமைப்பு பெரிதாக விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது ‘காலங்காலமாக’ நாம் பயின்று வந்திருக்கும் ஒரு நியதியை கேள்விக்கு உட்படுத்துகிறது. உடல்-பால்-பொருள் நூலின் உப தலைப்பாக ‘பாலியல் வன்முறை எனும் சமூகச் செயற்பாடு’ என்றொரு வாக்கியம் உள்ளது. பாலியல் வன்முறை என்பதை ஏதோ ‘வக்கிரம் பிடித்த ஆண்களின்’ செயலாகப் பார்க்காமல் அதனை ஒரு சமூகச் செயற்பாடு என்கிறார். மேலோட்டமாக பார்க்கும்போது பெருந்தேவி ஆண் சமூகத்தை குற்றஞ்சாட்டுவது போலத் தெரிகிறது. ஆனால் அவர் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எதிர்பால் நியதிகளைத்தான். ஒரு சமூகச் செயற்பாடு நீடிப்பதற்கு அதற்கான அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் காரணங்கள் இருக்கும். பாலியல் வன்முறை ஒரு சமூகச் செயற்பாடாக நீடிப்பதற்கான காரணமாக பெருந்தேவி இரண்டு காரணிகளைச் சொல்கிறார்.‌ஒன்று குடும்பம். மரபார்ந்த குடும்பம் எதிர்பால் நியதியின் அடிப்படையில்தான் நீடிக்க முடியும். (பால் புதுமையினரை குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளுதல் தற்போது சிறிய அளவில் நடக்கிறது.) அடுத்ததாக இனப்பெருக்க கருத்தியல். குழந்தை உண்டாவதற்காக கொள்ளும் உடலுறவு மட்டுமே ‘இயல்பானது’ என்ற எண்ணம். இந்தக் கோணம் முக்கியமானது.

பொதுச்சமூகம் கொடூரமான வல்லுறவு நடக்கும்போது அதிர்ச்சி அடைகிறது. உடனடி‌ எதிர்வினையாக வருவது வல்லுறவில் ஈடுபட்டவன் கொடூரமாகக் கொல்லப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் அவன் இந்த சமூகத்தின் அங்கமல்ல அவன் ‘தனித்த’ ஒருவன் என்று நம்ப விழைகிறோம். மேலும் வல்லுறவு கொள்வதும் வல்லுறவு செய்வது கொலை செய்வதும் மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறோம். ஆனால் பெருந்தேவி அளிக்கும் பாலியல் தொல்லைக்கான விளக்கம் விரிவானது.

அக்னிப்பிரவேசம் சிறுகதைப் பற்றி எழுதும்போது கதைசொல்லி உறவுக்கு சம்மதித்தாளா இல்லையா என்ற கேள்வியை பெருந்தேவி இவ்வாறு எதிர்கொள்கிறார்.

/பாலியல் சுகத்தை ஒருவர் உணர்வதால் அதை உடனடியாக ஒருவர் அனுபவிக்க விரும்புகிறார் என்றோ அல்லது முக்கியமாக, உடனே இணங்குகிறார் என்றோ எப்படிக் கருத முடியும்? பாலியல் சுகத்தை உணர்தல் வேறு; அதற்கான விருப்பம் வேறு; இணக்கம் வேறு. இந்த மூன்றையுமோ அல்லது மூன்றில் ஏதோ இரண்டையுமோ ஒருங்கிணைத்துவிடுவதுதான் (conflate) பாலியல் உறவில் ஒருவரது ‘சம்மதம்’ பற்றிய நமது புரிதலில் இருக்கும் ஆகப் பெரிய கோளாறு./

உடலுறவு என்பதைத் தாண்டி ஒரு பெண்ணை ‘வழிக்கு கொண்டுவர’ ஆண் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் இந்நூல் விரிவாகவே பேசுகிறது. காதலற்ற ஒரு சூழலில் அதிகாரத்தின் வழியாகவோ தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் வழியாகவோ ஒரு பெண்ணை அடைய முனைவதைப் பற்றியும் இந்நூல் கூர்மையான பார்வையை முன்வைக்கிறது.

பெருந்தேவி முன்வைக்கும் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் எது? அடிப்படையான உயிரியல் இச்சை என்று சொல்லலாமா? ஒரு ஆண் பெண்ணை அடையத் துடிக்கிறான். அதற்காக அவன் ‘என்ன வேண்டுமானாலும்’ செய்யலாம் என்பதை ஓரளவு நம்முடைய பொதுபுத்தி ஏற்கிறது. ஆனால் இங்கு ‘அடையப்படும்’ பெண் ஒரு மனிதராக கருதப்படுவதில்லை என்பதுதான் பிரச்சினை. பெண்களின் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகுகிறவர்கள் கூட அப்பிரச்சினைக்கு தங்களிடமே தீர்வு இருக்க முடியும் என்று நம்புகின்றனர். இக்கட்டுரையை எழுதி வரும்போது பெண்களின் பிரச்சினைக்கும் தலித்துகளின் பிரச்சினைக்கும் உள்ள ஒற்றுமை நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. முந்தைய வரியை எழுதியபோது காந்தியின் ஹரிஜன் என்ற பெயர்சூட்டல் நினைவுக்கு வருகிறது. பேராசிரியர் டி.தருமராஜ் நான் ஏன் தலித்தும் அல்ல நூலில் ஆணவக்கொலைகள் முன்பு கொலை செய்யும் சமூகத்தின் கூட்டு மனதில் பதிவதாகவும் அந்தக் குற்றவுணர்ச்சியே நாட்டார் தெய்வங்களை உற்பத்தி செய்வதாகவும் எழுதி இருப்பார். பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கும் இதைப் பொருத்திப் பார்க்கலாம். ஒரு வல்லுறவை தனித்த நிகழ்வாக அடையாளப்படுத்துவதன் வழியாக குற்றவாளியை கொல்வது அல்லது கொல்லத்துடிப்பதன் வழியாக வல்லுறவுக்கு பின்னிருந்து செயல்படும் சமூக உள்ளத்தின் செயல்முறையை அவசரமாகக் கடந்து போகவே விழைகிறோம்.

ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு நிகழ்வில் ‘தலித்துகள் மீதான வன்முறையை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதற்கு பதிலாக அவர்களுடைய விடுதலை சார்ந்த முன்னெடுப்புகளை பேச வேண்டும்’ என்று சொன்னார். பெருந்தேவியின் வல்லுறவு சார்ந்த கருத்துகளும் இதை ஒட்டியதாதவே இருக்கிறது. வல்லுறவுக்கு ஆளாகும் பெண்ணிடம் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வினை விவரிக்கச் சொல்வதன் வழியாக ஆண் தன்னிலை என்பது வலிமை மிகுந்தது என்றும் பெண் தன்னிலை பாதிக்கப்படக்கூடியது என்றும் சமூக மனதில் பதிய வைக்கப்படுகிறது என்பது பெருந்தேவியின் வாதம்.

இவ்விரண்டு நூல்களின் அடுத்த முக்கியமான புள்ளி இதுதான். பெண்ணியமும் தலித்தியமும் உரையாட வேண்டிய பல இடங்களை இவ்விரு நூல்களும் சுட்டுகின்றன.‌ கௌரவக்கொலை என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல் தேடும் கட்டுரை முக்கியமான ஒன்று. போலவே பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கட்டுரையும் சாதியும் நானும் என்ற நூல் குறித்த கட்டுரையும் தலித்திய நோக்கை விவாதிக்கின்றன.

மூன்றாவதாக பெருந்தேவியின் பொது அறிவுஜீவித்தன்மையை குறிப்பிட வேண்டும். அதிகாரத்தைப் புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பே அவருடைய நிலைப்பாட்டினைச் சுட்டி விடுகிறது. அரசாங்கம், தேசம் போன்ற கருத்துநிலைகளை எந்திரன் திரைப்படத்தை முன்னிட்டு விவாதிக்கும் கட்டுரை முக்கியமான ஒன்று. உலகமயச்சூழலில் தேசம் போன்ற கருதுகோள்களை எவ்வாறு உள்வாங்குவது என்ற நோக்கிலேயே பெருந்தேவியின் பொதுவான பார்வையாக அமைகிறது.

பெண்களின் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களை ஆவேசமாகப் பேசி மனிதாபிமானத்தைக் கோரும் வகையில் இல்லாமல் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கான ஊற்றுமுகத்தைச் சுட்ட முனைகின்றன என்ற வகையில் பெருந்தேவியின் இவ்விரு நூல்களும் முக்கியமானவை.

சுரேஷ் பிரதீப்

எதிர்பால் சொல்லாடல்களை ஆழமாக மனிதர்கள் மனதில் நிறுவி பாலியல் வன்முறையை இயல்பாக்கம் செய்வது குடும்பம்தான் என்பது ஒரு வலுவான குற்றச்சாட்டு. நூலாசிரியர் இதற்கு தீர்வென எதையும் முன்வைக்கவில்லை‌.‌‌ அப்படி இதுதான் தீர்வென்று எதையும் சொல்லிவிட முடியாதுதான். ஆனால் குடும்ப அமைப்பு இந்தக் குற்றச்சாட்டினை எதிர்கொள்வதாகவே எனக்குப்படுகிறது. குடும்பத்தின் செயல்முறை மெதுவாகத்தான் என்றாலும் மாறிவருகிறது. குடும்பத்தை நிலைசக்தி என்று கொண்டால் பெருந்தேவி முன்வைக்கும் இக்கருதுகோள் இயக்கசக்தி. இரண்டும் ஒரு முரணியக்கத்தில் இருப்பதே பெரும்பாலான சிக்கல்களுக்குத் தீர்வென அமையும்.

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *