கைப்பையில் கடலை அளப்பவர் – பார்கவி

தொலைந்தவர்கள் செல்லும் கடைசி நரகம் எழுத்தாக
தொலைந்தவர்களுக்குக் கிடைக்கும் கடைசி சுவர்க்கம் வாசிப்பாக (மட்டுமே) இருக்கலாம் – பெருந்தேவி (ஒரு வேளை)
எழுத்து குறிப்பாக கவிதை எல்லோருக்கும் ஒரே பொருளை தருவதில்லை. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகை கவிதைகள் தேடப்பட்டு கண்டடையப்படுகின்றன. வடிவம் சார்ந்த தளை நீங்கினால் போதும் என்று காத்திருந்தது போல் பிறந்த புதுக்கவிதை என்ற வடிவம் கடந்த எண்பது ஆண்டுகளில் தன்னை மறுபரீசலனை செய்து கொண்டே வந்திருக்கிறது. தனித்த இருப்பையும் மானுடத்தின் கூட்டு இருப்பையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதற்கு முகாந்திரமாக இவ்வடிவம் அமைந்திருக்கிறது. அவ்வகையில் கவிஞர் பெருந்தேவியின் கவிதைகளை ஒளி அல்லது இருள் நிலைக் கவிதைகள் என்று இருமையாக புரிந்து கொள்ள முடியாது. அரசியல் உணர்வு மிகுந்திருந்தாலும் நேரடி அரசியலில் சார்பு கொள்ளாதது. அவர் வெறும் எதிர் கவி மட்டும் அல்ல, எதிரல்லாத, வழக்கமான சொல் ஜாலங்களை நிகழ்த்தும் கவியும் தான். உயர்தர புகைப்பட கருவியில் வேண்டுமென்றே தெளிவற்று எடுக்கப்பட்ட பொக்கே (bokeh) சித்திரங்கள் இவருடைய கவிதைகள். அவருடைய கவிதைகள் மிகச் சரியான சொற்கள் எனும் எக்ஸ்-ரே கதிர்களை கொண்டு ஆழம்பட்ட காயங்களை உற்று நோக்கிப் பெயரிட்டு பரிசோதனையும் செய்கின்றன. அவற்றோடு விளையாடவும் கற்றுத்தரப்படுகிறது. ஆனால் மருந்து பூசப்படுவதில்லை. அதிகம் தொடர்பில் இல்லாத கூச்ச சுபாவம் கொண்ட தோழி துன்பகாலத்தில் அண்மித்திருப்பது போல பெருந்தேவியின் சொற்கள் பிடிவாதமாக நம்முடன் தங்கி விடுகின்றன .
இயற்கை
நவீன உலகம் இயற்கையிலிருந்து மிக விலகி வாழ்கிறது என்பதற்கான ஆதாரத்தை நாம் நவீன கவிதைகளில் இருந்தே கவனிக்கலாம். பெருந்தேவி இயற்கை குறித்து எழுதிய பாடல்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும் முக்கியமானவை. பொதுவாக, பெருந்தேவியின் கவிதைகளில் உணரக்கூடிய கூர்மையான பகடிக்கு பின்னால் சலித்து களைத்த ஓர் ஆளுமையை பார்க்க முடிகிறது. யுகம் யுகமாக பிரபஞ்சத்தை கூர்ந்து அவதானிக்கும் ஒருவரின் பொறுமையும் பொறுமையின்மையும் ஒன்று கூடிய தவிப்பு கலந்த சலிப்பு. யுகத்தின் களைப்பு என்று தலைப்பிட்ட கவிதையில் பெருந்தேவியின் குலைவுற்ற மனம் கவிஞர் ஆத்மாநாமின் கவிதைக் களத்தொடு விளையாடுகிறது.
நதியை பார்க்கும்போதெல்லாம்
கேட்க நினைக்கிறேன்
எப்படிக் களைத்துப் போகாமல்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
மற்றபடி
அதன் கரைகள், கூழாங்கற்கள்
மரத்தில் தாவி ஏறும் அணில்கள், பறவை நிழல்
எதுவும் லட்சியமில்லை
என் களைத்துப் போன கண்களுக்கு
அதோ
களைத்துப்போன காலத்திலிருந்து
களைத்துப்போன மலரொன்று
களைத்துப்போன நிலத்தில்
உதிர்கையில்
கண்மூடி
போதும் என்கிறது பார்!
நதியை இந்தப் பிரபஞ்சத்தின் கூறாகப் பார்த்து அத்துடன் பேச விழையும் மனம் தான் என்னை ஆத்மாநாமை நினைவுகூரச் செய்கிறது. பொதுவாக நதிக்கரையில் அமர்ந்து நாம் பெருக்கிக்கொள்ளும் சில சம்பிரதாயமான கற்பனாவாத கூறுகள் இங்கே மறுக்கப்படுகின்றன. நரைத்த மூதாட்டியை கேட்பது போல, நதியிடம் அது எப்படி நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்று வருத்தமும் வியப்பும் கலந்து கேட்கிறார். தானே ஒரு சக்கரமாக சுழலும் மானுடத்தில் ஓட்டப்பந்தயத்தை கவிதை கவனிக்கிறது. அதிவேகமாகவும் அவசரகதியிலும் செல்லும் நவீன வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வேறொரு ஓட்டத்தை நோக்கி சிந்தனை திரும்பி ஆச்சரிய குறியுடன் முடிகிறது. பெருந்தேவியில் நான் இதுவரை பார்த்த ஒரே ஆச்சரிய குறி பிரயோகம் இதில் தான். அது ‘போதும்’ என்று சொல்லும் பொழுது தன்னியல்பாக எழும் ஆச்சரியத்தின் வெளிப்பாடு. பாலஸ்தீனப் பெண் குண்டுகளால் அழிந்த ஏதோ ஒரு (அல்லது மற்றுமொரு) மருத்துவமனையின் முன்னால் நின்று கண்ணீருடன் கதறுகிறாள், ‘சத்தியமாக சொல்கிறேன், இது போதும், போதும்!’ அந்த சொல்லில் தெரிக்கும் ஆழ்ந்த வேதனையும் கோபமும் தற்காப்புணர்வும் இணைந்த உயிராற்றல் இந்த பூமியை தேய்க்கும் படை அல்லவா? அதனால் தான் தன்னிலையில் ‘கேட்க நினைக்கிறேன்’ என்றவர், பிறகு ஒரு முறிவு ஏற்படும் தருணத்தில் வாசகருடைய தோளை உலுக்கி ‘பார்!’ என்கிறார். உடனே பார், இப்பொழுதாவது பார், பார்த்தாய் தானே – இதில் எல்லாமே அடக்கம். கனமேறிய கண்களுக்கு நதியின் அந்த விழி மூடல் ஒரு ஆசுவாசத்தை கொடுத்து விடுகிறது. சுதந்திரமாகவும் வேறெந்த கலப்படம் இல்லாமலும் யாதொரு சுமையும் இல்லாமல் ஒரு நதி நமக்காக எங்காவது மீண்டு ஓடும், அல்லது இளைப்பாறும்.
இன்னொரு பக்கம் இயற்கையின் இரக்கமற்ற நிலைத்தன்மை கலையில் அலசப்பட்ட ஒன்று. இது பழந்தமிழ் கவிதைகளில் அக-புற உலகின் மோதலாக வருகிறது. தொடர்ச்சியாக இயற்கை அன்றாடப்பட்டு லோகசாட்சிகளாக பதிவு செய்யப்படிருக்கின்றன. பெருந்தேவியின் ‘வெயில் பதரே’ என்ற கவிதை நமக்கு வேறொன்றை காட்டுகிறது.
இந்த வருடம் யாரும்
வெயில் அதிகம் என்று
புகார் சொல்லவில்லை
கோடையில் கவலைப்பட நிறைய இருந்தது
யாரோ பெருந்தொற்றில் செத்துப்போயிருந்தார்கள்
யாருக்கோ வேலை போயிருந்தது
வெயில் தன்பாட்டுக்கு வந்தது
விரைகளைப் புழுங்க வைத்தது
தலைமுடியை சுட்டெரித்தது
அக்குள்களை வெப்பக் குட்டைகளாக மாற்றியது
தன்னை யாரும் கண்டுகொள்ளாதபோது
புலப்படாத எதன் முன்போ மண்டியிட்டது
பின் பூனையாக
மெல்ல அடிவைத்து நகர்ந்துவிட்டது
அடுத்த வருடம் வரும் வெய்யிலுக்கு
இந்தக் கோடையில் தான் பம்மியது
நினைவிருக்க வேண்டும்
கொள்ளை நோய் காலத்து கோடைக் காலம் பாடுபொருளாகிறது. எல்லோரும் ஒன்றையே பேசி ஒரு சிறு வட்டத்திற்குள் வாழும் பொழுதுகள் அனைத்தும் உருகி இணைந்து ஒற்றை காலத்தை உருவாக்குகின்றன. ஒரு பொழுதின் அல்லது ஒரு நிகழச்சியின் உச்சப் புள்ளியாக அமையாமல் நோய் தொற்று என்ற ஒட்டு மொத்த நிகழ்வை வெய்யிலுக்கு ஒப்புமையாக வைக்கிறது கவிதை. முதலில் கண்டுகொள்ளப் படவில்லை, பின்பு காலமற்ற தன்மைக்குள் செல்கிறது, பின்பு வலுக்கட்டாயமாக தரை இறங்கி காலத்தை முடித்து வைக்கிறது, தன்னை நிறுவிக்கொள்கிறது, இறைஞ்சி பம்மி நகர்ந்து அடுத்த வருடத்திற்கு தயாராகிறது. வெயிலுக்கே உரிய சில வழக்கமான விஷயங்களைச் செய்தாலும் ‘இந்தக் கோடை’ ஒரு வினோதமான தனிமையின் வெற்றிடத்தை நிரப்பித் தேற்றுகிறது.
காலமெனும் நோய், இழப்பு, வானிலை, பக்தன், வீட்டு மிருகம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடும் நினைவாற்றல் இழந்த திருடன், ஆனாலும் பதர். கவிதை படர்க்கையில் அமைந்திருக்க தலைப்பு மட்டும் முன்னிலை விளியை தாங்கி இருப்பது ஒரு நுட்பம். நாமறியாத பெருவெளியிலிருந்து வந்தடைந்த கருணைக்கு பதிலாக நமக்குத் தெரிந்த மொழியில் வாஞ்சையையும் நன்றியுணர்வையும் அந்த விளி தாங்கி இருக்கிறது.
உலகத்து நிகழ்வுகளுக்கு சாட்சி என்பது இறை-நிகர் பதவி என்பதிலிருந்து மனித ஆளுமை வட்டத்திற்குள் வருகிறது. இந்தப் பதர் லோகசாட்சி தான், விதி சமைப்பவரோ, நீதி அளிப்பவரோ இவரில்லை. இயற்கையின் பேராற்றல் இந்த மானுட வாழ்விற்கு முன்னால் மண்டியிட்டு எதை வேண்டுகிறது? இந்த கேள்வி தரும் உள் நகர்வை அதற்கான பதிலாக கொள்ளலாம்.
இறை
கலைக்கும் கடவுளுக்கும் தொப்புள் கொடி உறவுண்டு. இரண்டும் ஒன்றை ஒன்று படைத்த பெருமையை மார் தட்டிக் கொள்ளும். இங்கு கடவுள் என்றால் அதில் இல்-கடவுள்களும், எதிர்-கடவுள்களும், வலிமை குறைந்த கடவுள்களும் சேர்த்தி . பெருந்தேவியின் கவிதைகளில் இல்லாத (ஆனால் அவர் எப்படியோ விழைந்து நாடும்) இறையை நோக்கி பேசிக்கொண்டிருக்கிறார். ‘வேண்டுதல்’ என்ற கவிதை பக்தி இயக்க கவியின் மனம் விவிலிய மொழியுடன் இணைந்த மொழியில் அமைந்த பிரார்த்தனையாக அமைகிறது. அமைதி, தன்னுணர்வு நீக்கம், பாதுகாப்பான கனவுகள், துக்க நிவாரணம் என்று நீளும் கோரிக்கைகள், இப்படி நிறைவடைகிறது:
…அல்லது
இப்போது
கதவெமதைத் தட்டுவது
ஊழ்வினையல்ல
என்ற உத்திரவாத்தையாவது
தாரும்.
‘கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற விவிலிய வாசகத்தோடு சிலப்பதிகாரத்தின் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்ற வரியும் இணைகிறது. ஒரே சமயத்தில் தியானமாகவும் அறிவுரையாகவும் ஒலிக்கிறது. தட்டப்படும் கதவு இங்கு கவிஞருடையதாக தெரிவது எனக்கு மட்டும் என்று தோன்றவில்லை. எனில், இவர் இவை அனைத்தையும் தன்னை நோக்கித் தான் கேட்டுக் கொண்டிருக்கிறாரா?
‘விண்ணப்பம்’ என்ற கவிதையையும் இத்துடன் சேர்த்தே வாசிக்க முடியும்.
சின்ன ஆன்மாக்கள் அழுகின்றன
பெரிய ஆன்மாக்கள்
மன்னிகின்றன
இடைப்பட்ட மறுகுகின்றன
அவமானத்தில் அல்லது அச்சத்தில்
இறை
(ஒன்று இருந்தால்)
சின்னவற்றை தேற்றட்டும்
பெரியவற்றைப் பொறுக்கட்டும்.
தவறினாலும்
ஒன்றை மட்டும் செய்துவிடட்டும்
இடைப்பட்டவற்றை
சிறிதாகவோ
பெரிதாகவோ
ஆக்கிவிடட்டும்.
வேண்டுதலில் இருந்த பட்டியலில் ஒளிக்கும் நிழலுக்குமான ஊசலாட்டம் இதில் இல்லை. ஒரு சாத்தியமற்ற ஆனால் கருணையும் கரிசனையும் கொண்ட ஒரு விலக்கு வேண்டப்படுகிறது. ஒரு குறைந்தபட்ச அன்பைக் கேட்கும் இறைஞ்சல் தொனி அதற்கு வந்துவிடுகிறது. மிகவும் உறுதியான கனமான ஒரு தன்னிலையிலிருந்து உடையும் மென்மை கொண்ட கவியின் ஆன்மாவை இதில் கண்டு கொள்ளலாம். இறை என்று ஒன்று ‘இருந்தால்’ என்ற சொல்லில் தொனிக்கும் சந்தேகத்தின் குரூரத்தை இந்த இருந்துவிடட்டும் என்ற இறைஞ்சல் குரல் சற்று தணிக்கிறது.
கவி–வாசகர்
வாசிப்பவரோடு நேரடியாக உரையாடும் கவிதைகள் சுவாரஸ்யமானவை. பிரகடனமும், கெஞ்சலும், தன்னிலை விளக்கங்களும், செல்வழிக்கான முறைமைகளும் இருக்கும் வரிகள் கொண்டவை. எதிர் கவிதை என்ற வடிவத்தை முழுமையாக தழுவிக்கொண்ட பின் அதற்குள் வாசகரை சரியாக கொண்டு வர எத்தனிக்கிறார் என்று கொள்ளலாம்.
சொல் பொருள் நியதி என்ற கவிதையில் சொல்லுக்கும் பொருளுக்கும் இருக்கும் தூரங்கள், அர்த்த சாத்தியங்கள் அணியும் முக்காடுகள், பாவனைகள் என்று சான்று விளக்கங்களோடு சொல்லிச் செல்கிறார். ‘உனக்கு’, ‘நீ’ என்று நேரடியாகவே வாசகனோடு உரையாடுகிறது கவிதை. இறுதியில் ஒரு உச்ச தருணத்தை உண்டாக்கி நிறைவு கொள்கிறது –
வேண்டாத நிழலைத் தவிர்க்கும் பொருள்
மௌனத்தில் பதுங்கு குழியில்
புதைந்துகொள்கிறது
வேண்டாத நிழலிடமிருந்து தப்பிக்கும்பொருள்
தானும் மற்றொரு சொல்லாகிவிடுகிறது
குகையென அசப்பில் தோன்றும்
வெறுங்கதவுக்குப் பின்னே
நீளும் வெட்டவெளியைப் போலே.
இரண்டு தருணச் சாத்தியங்களின் வேறுபாடு மனதைப் புரட்டிப் போடுகின்றது. பொருள் ‘தவிர்க்க’ எண்ணினால் மௌனத்தில் பதுங்கிப் புதைந்து கொள்கிறது, ஒரு எலியைப் போல அல்லது சடலத்தைப் போல. ஆனால் தப்பித்துவிட்டால் வேறொரு சொல்லாகிறது, அதாவது கவிதையாகிறதா? அதைத் திறக்க சற்று உடலை வளைக்க வேண்டி இருக்கிறது. குகை, ரகசியம், இருள் என்றெல்லாம் தோன்றுகிறது. அல்லது, மூடிவைத்த கதவு என்று தன் இருப்பை உறுதியாக காட்டிக்கொள்கிறது. ஆனால் பின்னால் இருப்பது வெட்டவெளியின் விடுதலையும் இன்பமும். இந்த வரிகள் தரும் திரை விலக்க அனுபவம் பெருந்தேவியின் கவிதைகளின் தனித்தனமையாக பார்க்கிறேன்.
கவிதைகளும் எதிர் கவிதைகளும்
எதிர் கவிதை என்ற பெயரிடுகை சிறிது திசை திருப்புவதாக இருந்தாலும் அது கவிதை என்று நவீன வாசகர் பழகிய வடிவத்திற்கு முற்றிலும் புதிதானது அல்ல. ‘புரிபடாத இருண்மையோடும் அதீத உருவகங்களோடும் கூடிய அகவைய கவிதைகளை மறுப்பதாக’ = கவிஞர் நிகானோர் பார்ராவின் எதிர்கவிதைகளை பெருந்தேவி வகைப்படுத்துகிறார். பறவைகள் பாடட்டும், மனிதர்கள் பேசட்டும்’ என்பது பார்ராவின் புகழ்பெற்ற வரி. இரண்டாம் உலகப்போரின் முடிவில் எழுந்த முக்கியமான கவிதை இயக்கம் இது. கவிதையை நேரடியான உரையாடலுக்குள் கொண்டு வருவதற்காக சில அணிகளை தவிர்த்து அழகியலுக்கு அப்பால் உள்ள ஒரு உலகை எழுதும் முயற்சியை நாம் காணலாம். மொழிக்குள்ளேயே, வெளிபடுத்தக் கூடியது, வெளிபடுத்த முடியாதது என்று ஒரு இருமையை இந்த வகைமை கற்பனை செய்கிறதா என்ற கேள்விக்கு பார்ராவின் ரோலர் கோஸ்டர் என்ற கவிதையில் இதற்கு ஒரு பதில் இருக்கிறது.
அரை நூற்றாண்டாக
சீரியஸ் முட்டாள்களின் சொர்க்கமாக
கவிதை இருந்தது
நான் வந்து என் ரோலர் கோஸ்டரைக் கட்டும் வரை
விரும்பினால் மேலே செல்லுங்கள்
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும்
ரத்தம் கொட்டிக்கொண்டு கீழே வந்தீர்கள் என்றால் அது என் தவறல்ல
இது ஒரு பாணி, ஒரு உத்தி, ஒரு உண்மை. உடைந்த உலகத்தின் முன் தன் உடைந்த சுயத்தை நிறுத்தி, கண்ணில் ஒரு பக்கம் லென்ஸ் இல்லாத கண்ணாடியை மாட்டிக் கொண்டு நிற்கும் துணிவு. பாடுபொருளோடு கவிஞருக்கு எந்த வித நேரடி பந்தமும் இல்லை என்பது போன்ற ஒரு உணர்வு நமக்கு கடத்தப் படுகிறது. அப்படி உணர்ச்சிப் பூர்வமாக தன்னிலைப் படாததாலேயே, தன்னை தீவிரமாக காட்டிக்கொள்ள எந்தவித தனி முயற்சியும் எடுத்துக்கொள்ளாததாலேயே, கவிதைகள் நம்மை நேரடியாக வந்தடைகின்றன.
தொல்கவிதைகளின் உருவக மொழிக்கு முன்னால் ஒரு தொல் உலகம் இருந்தது, அதன் அறியமுடியாமைகள் இருந்தன. இன்று வேறொரு உலகம் இருக்கிறது. தகவல் புரட்சி உலகத்திற்கு அதே கனத்த உவமைகளும் உருவகங்களும் தேவைப்படாது என்ற உணர்வு கொண்ட கவிதைகளை பார்ராவின் தாக்கத்தில் எழுந்த பெருந்தேவி வகைக் கவிதைகள் என்று சொல்லத் தோன்றுகிறது. மீண்டும், கவிதையின், கவிஞரின், மொழியின் அபரிமிதமான காலப் பிரக்ஞை இங்கு கவனம் பெறுகிறது.
பெருந்தேவி தன் ஆரம்பாகால தொகுப்பிலேயே தன் பேசுபொருளை கண்டுகொண்டிருந்தாலும் கவிதையின் கூறுமுறையில் இருக்கும் மாற்றத்தை, மனநிலையில் ஏற்பட்ட நகர்வை தான் நான் பார்ராவின் தாக்கமாக முன்வைக்கிறேன்.
லேப்டாப் நளினப் படுகளம் (இக்கடல் இச்சுவை தொகுப்பு) என்ற கவிதையில் இருக்கும் பூடகம் அடுத்தடுத்த கவிதைகள் இல்லை.
…என் திரை திரை மட்டுமா
ஓரடி தூரத்தில்
என்னுரு விழுந்த விழிகளை பிய்த்துக்
கோளங்களை எறிகின்றனர்
இதோ இனி நான்?
வெகுசமீபம் எனும் சிறுபரப்பில்
விரல்களின் அறத்தைப்
பழக்கிக்கொள்ளாததால்
இறந்தபடிக்கே.
டெக்னாலஜி கடவுளான பின்-இல் (அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது தொகுப்பு) காதல் மொழிவுக்கு எமோஜி பதிலாகப்பெறுவதன் துயரத்தைப் பகடியாகச் சொல்லப்படுகிறது.
நேர்த்திக்கடன் நிறைவேற்றும் எமொஜிகளும்
சீக்கிரத்திலேயே உருவாகி வந்து விடும்
அப்போது
பால்குடம் தூக்கிக் கொண்டுபோகும்
என் மஞ்சள் மூஞ்சியை
நூற்றியோரு நண்பர்களுக்கு
கடவுளே நான் அனுப்பி வைக்கிறேன்
ஃபேஸ்புக்கில் நவீன கவிதை, ‘நேற்று வெப்காமின் நீலசுடரில்’ (உலோக ருசி) ஆகிய கவிதைகள் நிகழ்வுக் கலை (Performance Art) போல தொனிக்கின்றன. அந்தக் கவிதை நம் முன்னே அச்சமயத்தில் ‘லைவாக’ உருவாவது போல தோன்றுகிறது. அது வேறொரு கணத்தில் வேறொன்றாக இருக்கலாம் என்பது அசல் தன்மையை கூட்டி விடுகிறது.
‘நேற்று வெப்காமின் நீலசுடரில்’ கவிதையில் எல்லாச் சேனல்களிலும் பிடித்த நடிகரின் திரைப்படம் போடும் நாளில் ஒரு இணைய தற்கொலைக்கான இணைய பாணி எதிர்வினையின் திரட்டு. தற்கொலையை நேரில் பார்ப்பவர்களை பார்ப்பது. பேஸ்புக் பதில்கள் எப்படி கவிதையாகும் என்ற கேள்வியை ரத்து செய்து அங்கு கவிதை நிகழ்கிறது.
…A3: எங்கேயும் எந்நேரமும் எவ்விடத்திலும்
வாழ்தல் ஒரு மாளாவரம்,
வரமிடையே தடைப்படுதல் விதியின் சாபம்: இப்படிக்கு இன்னொரு கவிஞர்
சாவின் தொட்டில் இளைஞர்களை
எப்போதுதான் காவுகேட்கவில்லை?
கவிஞனுங்கள கட்டிவச்சி (எடிட்செய்யப்படுகிறது)
இவனுங்களோட (எடிட்செய்யப்படுகிறது)
கூட அர்த்தம் இல்ல
என்னென்னவோ நடக்குது எடிட்டிங்-கில்
காவல் துறை பார்த்தவர்களையும்
கைதுசெய்திருக்க வேண்டும்
ஏண்டா வெண்ண நீ பாக்கலியா அதான்
சரிடி தொன்ன
மேலே இரு கமெண்ட் போட்டவர்கள் படிப்பில் வல்லவர்கள் அல்லர், ஆனாலும் நல்லவர்கள், தங்கள் காசில் அடுத்தவர்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருபவர்கள் என்பதைப் பதிவுசெய்கிறேன். …
விரல் நுனியால் திரையைத் தள்ளி தள்ளி சிருஷ்டித்தும் அழித்தும் தாவித்தாவி எங்கோ சென்றுகொண்டிருக்கும் நம் நிகழ்காலமும் எதிர்காலமும் தெளிவாக பாசாங்கில்லாமல் முன்வைக்கப்படுகிறது. நாம் வெட்டி அரட்டைகள், வம்பு பேச்சுக்கள் என்று இடக்கையால் தட்டிவிட்ட உரையாடல்களில் இருந்து டிகொலாஜ் (décollage) போல வேறொரு வடிவம் எழுந்து வருகிறது. கவிதை என்பது மொழியின் அழகு என்ற சிந்தனையிலிருந்து மொழிவழியாக மொழிக்கு அப்பால் உள்ள உணர்வை கிளர்த்துகிறது.
பெரும்பாலும் இவ்வகை கவிதைகள் வாசக ஏற்பைப் பெற்றாலும் கவிதை அந்தஸ்து பெறுவதில் ஒரு தடை இருப்பதாக நான் பார்க்கிறேன். நம்முடைய சார்புநிலைகளை வைத்துகொண்டு கவிதையின் பாடுபொருளை மதிப்பிடுவது கவிதையின் அனுபவ வெளிக்கு அப்பால் இட்டு செல்லக்கூடியது.
பெண் பால்
பெண்ணுடல் என்பது எல்லா காலத்திலும் கவிஞர்களாலும் கலைஞர்களாலும் வெளிச்சப்படுத்தப்பட்டும் அரசியல்பட்டும் வந்த பொருள். பெண்ணிய அலைகளின் வழியாக இன்று பெண்ணுடைய உடலின் மீது அவள் இருத்தலின் முகமையை தக்க வைத்திருக்கும் கவிதைகள் எழுதப்படுகின்றன. உடலெழுத்து, பெண்நிலை எழுத்து, பெண் அனுபவ எழுத்து என்று அதை பல கோணங்களில் கூராய்ந்து வருகிறோம் . பால் புதுமையரும் பங்குகொள்ளும் உலகத்தில் இந்த நிலைகளும் அனுபவங்களும் உடல் மட்டும் சார்ந்தவையா அல்லது ஆன்மீகமானவையா, அல்லது இரண்டுமா என்ற கேள்வி எஞ்சுகிறது.
பெண்ணெழுத்து என்ற ஒரு நிகழ்வை பற்றி விரிவாகவே பெருந்தேவி கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தன்னைப் பெண் எழுத்தாளர் என்று அழைப்பதை அவர் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே எழுதி இருக்கிறார். ‘பொருந்தாத இடம்’ என்ற கவிதையில் கிட்டத்தட்ட கெஞ்சும் தொனியிலேயே அந்த முன்னொட்டை மறுக்கிறார். அதை அவர் சொல்வதே பிற ‘பெண்’ எழுத்தாளர்களிடம் என்ற கோணம் நேர்மையானது. தன்னிச்சையாக வடிவமாற்றம் கொள்ளும் ஒரு பிறவியை வட்ட வடிவத்தில் அடக்க முடியாது தானே. இது பெருந்தேவிக்கு முற்றிலுமாகப் பொருந்தும். இதைப் பொது அளவீடாக வைத்தால் அது எழுத்துலகத்திற்கு பயன் தரும் என்று நான் நம்புகிறேன்.
பெருந்தேவியின் கவிதைகளில் இடம்பெறும் பெண்களை, அவள் சந்திக்கும் வன்முறைகளை, அவளுடைய காதலை, இச்சையை, பெண் உடலோடு தொடர்புற்றிருக்கிற உணர்வுகளை மையப்படுத்தி, அது சார்ந்த மொழி வெளிப்பாடுகள் ஆண்மைய சிந்தனைப் போக்கில் இருந்து எவ்வகையில் மாறுபடுகிறது என்ற நோக்கு இந்த காலத்திலும் மதிப்பழியாத ஒன்று.
‘நல்ல’, ‘மதிப்பு’, ‘சில ஆலோசனைகள்’ ஆகிய கவிதைகள் நவீன மனம் வழியாக மரபான பெண்களை சந்தித்து உறவுகளின் வீழ்ச்சியை எந்த கழிவிரக்கமும் இல்லாமல் சொல்லுபவை. ‘ஒரு ஆணுடன் கிடப்பது எப்போதாவது தேவையாகத் தான் இருக்கிறது’ பெண்மோகத்தை சொல்லும் கவிதை. சங்கம், பிரபந்தம் என்று இதற்கொரு நீண்ட வழிப்பாதை மரபில் உண்டு.
நவீன கவிதைகளில் இரண்டு போக்குகளை கவனிக்கலாம். ஒன்று பால்யகால நேசங்களை சுட்டும் பிரிவேக்க கவிதைகள். இன்னொன்று உடலையும் காமத்தையும் பெண் வலுவாக முன்வைக்கும் கவிதைகள். குறிப்பாக இரண்டாம் வகை பெண் பால் கவிஞர்கள் எழுதியே தீர வேண்டிய வகைமையாக மாறி இருப்பது சுவாரஸ்யமானது. ஆனால் அங்கும் அதிகப்படியான கவிதைகள் பெண் தன்னுடலை குனிந்து நோக்கி எழுதுவது சற்று அதிகம். அதை நம்முடைய இல்லங்களின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து புறமொதுக்க வேண்டியதில்லை என்ற பிரக்ஞையோடு பெருந்தேவியின் கவிதைகள் இவ்விரண்டு வகையில் அடைபடுவதற்கோ அல்லது பெண்ணிய கவிதையாக உருமாறுவதற்கோ போராடுவதில்லை என்பதை குறிப்பிடுகிறேன்.
இரவு, நிலவு, அழகு, ரசனை, காதல், மது, முத்தம் என்று ஆண் எழுத்தளர்களின் ஆடம்பரங்களாக இருந்த வஸ்துக்கள் கவிதையில் இடம் பெறுகின்றன. இதை வலுக்கட்டாயமாக பாலியல் சமநிலையை அல்லது பாலியல் ஏக்கத்தை அல்லது உன்னத காதலைச் சொல்லும் பாடலாக பார்க்க வேண்டியதில்லை. பெண் தானல்லாத பிறரோடு கலக்க எண்ணும் உணர்வாக, பெண்-பார்வையாக (female gaze) கொள்ளலாம்; அதில் வேட்கை இரண்டாம் நிலை சாதனமாக வருவதை கவனிக்கலாம்.
எப்போதாவது
என்றாலும் தேவைப்படுகிறது
உன் மார்பகம் சட்டென ஆமோதிக்க
ஒரு அணைப்பு
சில மணி நேரங்களுக்குப் பின்
குற்றசாட்டில்லாமல்
எதிர்பாப்பில்லாமல்
காலையோடு காலையாய்
அகன்றுவிடும் முழு நிலவென
ஒரு ஆண்
அவன் உடல்
அன்று முழும் சீட்டியடித்தபடி
உன் வாழ்க்கையின் முட்சக்கரத்தை
ஓரடி முன் நகர்த்துவாய்.
மறுபக்கம் தொன்மங்கள் நவீனத்தோடு முயங்கி ஒரு கனவு வெளியை உருவாக்கும் கவிதைகள் அமைகின்றன. இதுவும் பெண்ணரசியல் பேசுவது தான்.
இருத்தல் நிமித்தம்
வெளியே போய்விட்டான் வழக்கம்போல
நேரங்கழித்துதான் வருவான் வழக்கம்போல
ஆம்பிளை என்றாலே ஆயிரமிருக்கும்
ஒன்றேயானாலும் ஆயிரம்தானே
உணவுமேசைமேல் சுடுகலனில்
ஆறிக்கொண்டிருக்கிறது இரவு
காத்திருந்தபடியே அசருகிறேன்
பாத்திரங்களை ஒழித்துப்போட வேண்டும்
வருகிறான்
வந்துவிட்டான்
உணவுக்குப் பின் உண்ண
நறுக்க மறந்துவிட்டேன் ஆப்பிளை
அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்
இதோ
சிறுகத்திதான் என்றாலும் கூர்மை
அறுக்கிறேன்
என் ஒரு முலை துடிக்க இன்னொன்று
அதற்குச் சாட்சியாகிறது
ஏன் என்று கத்துகிறான்
கிறுக்கா என்று கதறுகிறான்
முலைகளுக்குக் கேட்கிறது ஆனால்
அவைகளுக்குக் கேள்விகள் பிடிக்காது
குளியலறையில் முனையற்ற
முலையைக் கழுவுகிறேன்
பாத்திரங்களைக் கழுவப்போட வேண்டும்
அவன் சாப்பிட்டானா
தெரியவில்லை
அல்லது அக்கறையில்லை
காலையில் எழுந்ததும் கத்தியை
கைக்கெட்டாத தூரத்தில் வைக்க வேண்டும்
அதற்கு முன் நன்றாகத் தூங்க வேண்டும்
தூங்கிக்கொண்டிருக்கிறேன்.
ஆதாம் ஏவாளின் ஆப்பிள்கள், கண்ணகி முலை அறுக்கும் நிகழ்வு ஆகிய இரு வேறு பண்பாட்டுப் பின்புலத்திலிருக்கும் கதைகளை இணைத்து அதற்கு நவீன அடையாளங்களை அளிக்கிறார். ‘ஒன்றே என்றாலும் ஆயிரம் தானே’, ‘சிறு கத்தி என்றாலும் கூர்மை’ ஆகிய வரிகள் துடுக்குத்தனம் கலந்தவை. ஆதி ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகழ்ந்த ஒன்று நிகழ் காலத்தில் நேர் வர்ணனைப் போல சொல்லப்படுவதால் ஏதோ ஒரு மர்ம விளையாட்டு என்று தோன்றச் செய்கிறது. விளையாட்டு என்றால் வெற்றியும் தோல்வியும் இருக்க வேண்டும், இங்கு அது இல்லை. உலக தொன்மங்களில் முலை திருகுதல் என்பது பெண் அடுத்த நிலைக்கு செல்வதற்கான குறியீடாக வருகிறது. அதை ஒரு பழத்தை ஏந்தி இருப்பது போல பெண் சுமந்து நிற்கும் காட்சி மனதை உலுக்குவது. இங்கும் அது பழம் தான், ஆனால் காம்புகள் மட்டுமே நறுக்கப்படுகின்றன. அதற்கே அந்த ஆண் நிலையழிகிறான்.
அவனுடைய புறக்கணிப்பிற்கும் அவளின் அக்கறை இன்மைக்கும் இடையில் ஒரு பெரிய வன்முறை நிகழ்கிறது. இவள் நன்றாகத் தூங்குவது மூலமாக இருப்பு சாத்தியமாகிறது என்பது ஒரு அரதப் பழைய உண்மை தான். ஆனால் கவிதை அதற்கு முன்னாலுள்ள வரிகளில் நிகழ்கிறது – சங்கிலித் தொடரான தனிச்சை செயல்கள் மூலம் அவள் மீண்டும் இங்கு இவ்வுலகிற்குள் நுழைகிறாள், அடுத்த நாள் காலையில் விழிப்பவளின் இருப்பு முன்பு ஆறிக்கொண்டிருந்த இரவில் இருந்த ஒன்றல்ல. அன்றாடக் கேள்விக்குள் சிக்காத இருப்பு அவளுடையது. அது இருத்தலுக்கான நிமித்தம் தான்.
பெருந்தேவியை எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் வாத பிரகிருதி வகை எழுத்தாளர் என்று வகைப்படுத்துகிறார், அது பாதி உண்மை. பித்தேறிய சலிப்பு என்று ஒன்று இருக்க முடியுமானால் அது பெருந்தேவியின் கவிதையின் மைய இயல்பு. ஒரு வகையில் நம் காலத்து இயல்பு. இனி முடியாது என்று அறிவித்தப்பின் ஆடும் உணர்ச்சிகரமான நடனம். பெருந்தேவியின் மொழியில், சின்ன தம்ப்ளரின் நாலாப்பக்கங்களிலும் வழியும் பால். சொற்களின் நேர்த்தியான தேர்வுகளும் பாடுபொருள் காட்டும் நிதானமும் சமநிலையை நோக்கியது அல்ல. அது உள்ளார்ந்த கொந்தளிப்பின் வெளிப்பாடு.

கவிஞர் என்பவர் முதல் மனிதரா அல்லது இறுதி மனிதரா என்பதை ரில்க (Rilke) தீர்மானிக்கட்டும். எனினும் முடிவுக்கும் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தின் நெருப்பை விழுங்க ஒரு கோப்பை ஒயின், ஒரு துளிக் கண்ணீர் மற்றும் கூர்மையான ஒரு சிறு கத்தியை பிடித்துக் கொண்டு மூச்சிளைக்கக் காத்திருப்பதும் ஒரு கவியின் மனம் தானே?
***