கவிதையுடன் தட்டாமாலை ஆடும் பெருந்தேவி – லதா

பெருந்தேவி

நவீன தமிழ்க் கவிதை, கல்லூரி மாணவனைப்போல உற்சாகத்தோடும் புதிய படிமங்களோடும் புத்தெழுச்சியோடும் தன் பயணத்தைத் தொடங்கிய 70களிலிருந்து இன்றுவரையிலான காலகட்டத்தின் பொருட்படுத்தி வாசிக்கக்கூடிய முக்கியக் கவிஞர்களில் ஒருவர் பெருந்தேவி.  அவர் எழுதத் தொடங்கிய 1990கள், தலித் மக்கள், பெண்கள் என்று ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் பற்றிய எழுத்துகள் எழுச்சிபெறத் தொடங்கிய காலம். இந்தியாவிலும் மற்ற பல ஆசிய நாடுகளிலும் பொருளியல் மாற்றங்கள் ஏற்பட்டு, உலகமயமாக்கலும் இணையம், கணினி தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித குல வாழ்வை மாற்றியமைக்கிறது. லட்சியவாதங்கள் நீர்த்துப் போகத் தொடங்கின.  வாழ்வில், உறவில் புதிய சிக்கல், புதிய பிரச்சினைகள், புதிய தீர்வுகள், புதிய சிந்தனை என்று சமூகவியல் மாற்றம் பெறத் தொடங்கியது. இத்தகைய ஏராளமான மாற்றங்களை உள்வாங்கி வந்தவர் பெருந்தேவி.

கவிஞராகவே நீடிப்பது பெருந்தேவியின் தனித்தன்மை. அவரிடமுள்ள விசாலமான பார்வையும், வெளிப்படையாகப் பேசும் துணிவும் அவர் கவிதைகளை அசலானவையும் புதியனவாகவும் ஆக்குகின்றன.

சமூகமயமாக்கல், உலகமயமாக்கலில் உள்ள சிக்கல்கள், நிறுவனங்களுக்கும் தனி மனிதர்களுக்குமான உறவுகள் போன்ற களங்களிலேயே சொல்ல வருவதையெல்லாம் சொல்லிவிட முடியும் ஆற்றல் பெற்றவர். அவரது தனித்துவமான குரல் அதுதான்.

“எலன் மஸ்கின் SpaceX ராக்கெட்டில் பயணப்பட்ட எறும்பு/ எப்படி ஊர்ந்து சென்று

எந்தச் சர்க்கரைக் கிண்ணத்தைத் / தேடும்?” என்று கவலைப்பட்டு, “அதன் நினைவில்/ தங்கியிருக்கும்/ இனிப்புத் துகள்/ கொஞ்சம் கொஞ்சமாகவாவது

சுவையை/ இழக்கட்டும்,” (எலன் மஸ்கின் SpaceX ராக்கெட்டில் பயணப்பட்ட எறும்பு) என்று வேண்டிக்கொள்ளும்  கபடமற்ற இன்னொசண்ட் ஆன மனநிலையிலேயே அவரது கவிதைகள் அதிகம் பயணிக்கின்றன.

அத்தகைய மனம் படைப்பூக்கம் மிக்கது. அங்கு ஒவ்வொன்றுமே கவித்துமாகப் பரிணாமம் அடைகிறது. அது இருப்பை மிகவும் மகிழ்ச்சியாவே வைத்திருக்கிறது. வளர்ச்சிநிலையை ஆக்ரோஷமாகவும் வைத்திருக்கிறது. அதனாலேயே கடவுளும் மனிதர்களும், வெய்யிலும் இரவும், உறவும் பிரிவும், தனிமையும் தனித்திருத்தலும் அற்புதமானவையாக, விதவிதமானவையாக அவர் கவிதைகளில் மாறிக்கொண்டே இருக்கின்றன.

காலத்தின் ஊஞ்சல்தான் வாழ்வு. நாடுகளின் எல்லாவிதமான வளர்ச்சியும் அந்த ஊஞ்லை ஆட்டுகின்றன. வளர்ச்சியின் வேகமாக ஊஞ்சலின் வேகம். பல நேரங்களில் மேலும் கீழும், சில நேரங்களில் வட்டமடித்து, இன்னும் சில நேரங்களில் தளிராட்டமாக வாழ்வெனும் ஊஞ்சல் ஆடிக்கொண்டேதான் இருக்கிறது.  இந்த ஆட்டத்தில் கவிதையின் அகத்திலும் புறத்திலும் நிகழ்ந்த மாற்றங்களைக் கண்டு, உள்வாங்கி எழுதுபவர் பெருந்தேவி.

*

‘தீயுறைத் தக்கம்’ (1997) தொடங்கி, ‘அவள் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வளரி பூக்கிறது’ (2023) வரையில் அவரது பத்துக் கவிதை நூல்களையும் வாசிக்கும்போது (அவர் ஸ்ரீவள்ளியாக இருந்தால், ஸ்ரீவள்ளி கவிதைகள் தனி) கணினிக்  காலத்தின் அசுர மாற்றத்தை, பக்கங்களைப் புரட்டுவதுபோல எத்தனை எளிதாகக் கடந்துவிட்டார் என்பதும் எளிதாகவே புரிந்துவிடும்.

சமூக, தனிமனித அன்பு, அறம், அநீதி சார்ந்த ‘கொதிநிலை’, அதைச் சரிசெய்யும் போராட்டம், யதார்த்த நிலையின் புரிதல், அதனால் ஏற்படும் சலிப்பு, உடனே  துடித்து மீண்டெழுதல் இப்படியாகவே பெருந்தேவியின் கவிதை உலகம் உள்ளது. அந்த உணர்வுநிலையையும் அதற்கான அறிவு நிலைப்பாட்டையும் சொல் மொழியாக்க உகந்த வடிவம் கவிதை என்பதைக் கண்டடைந்தவர் அவர்.  அந்த வடிவத்தை மொழி கடந்து செயல்படும் கலையாக்கி, அதைத் தீட்டி தீட்டி வழுவமைதி கூட்டி வருபவர்.

நயமிக்க தமிழில் மயக்கிய நூல் தீயுறைத் தூக்கம். சொல் சேர்த்து, பொருள் சேர்த்து சித்திரங்கள் போல் அவர் வரைந்த அக்கவிதைகள் இனிமையானவை. படிக்க படிக்க புதிய பொருள் தருபவை.

“நிழல்கள் வெட்டுப்பட/ பின்தொடர்வாரில்லை/ யென்றும்/ உரையாடிப்போகும் காலடிகள்/ முட்டுச்சந்தில்.”

முதல் தொகுப்பிலேயே தனித்துத் தெரிந்த பெருந்தேவி, ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்து இரண்டாவது தொகுப்பான ‘இக்கடல் இச்சுவை’யைக் கொண்டு வந்தார். குறீயிடுகளாலும் படிமங்களாலும் ஆன அத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள், சொல் முறையில் பெரிதும் மாறுபட்டவை.

ஆண் – பெண் சமநிலையிலிருந்து மனிதம், மனித உணர்வு எனப் பேசும் அக்கவிதைகளின் மொழி புதியது. வாழ்வின் மாற்றங்களால் திரண்டு வரும் மொழிப் புழக்கம், மொழிச் சிந்தினை மாற்றங்களைப் பிரதிபலிப்பவை  பெருந்தேவியின் கவிதைகள்.

அவரது மூன்றாவது தொகுப்பான  ‘உலோக ருசி’யில் (2010) உள்ள  ‘புஷ்பா சேலையணிந்த முதல் நாள்’ கவிதையின் புஷ்பாவுக்கும், ‘அவள் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’ (2023) ‘தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள இந்தித் திரைப்படம்’ புஷ்பாவுக்கும் எவ்வளது நீளத் தாண்டல்? சிந்தனையில், சொல்லடுக்கில், சொல்முறையில் என எல்லாவற்றிலும். ஆனாலும் அதே எள்ளல், அதே சீண்டல், அதே அங்கதம்.

‘விளையாட வந்த எந்திர பூதம்’, ‘இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம்’, ‘உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்’, ‘அவள் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வளரி பூக்கிறது’  ஆகிய பெருந்தேவியின் அண்மைய  தொகுப்புகள், பல்வேறு சாத்தியப்பாடுகளை நிகழ்த்திப் பார்க்கும் கவிதைச் செயற்பாட்டையும் அணுகுமுறையயும் காட்டுகின்றன. கவிதைத் தலைப்புகள் நூல் தலைப்புகளும் அட்டைப்படங்களுமே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நீள நீள தலைப்புகள், வாக்கியங்களான தலைப்புகள், சில கவிதைத் தலைப்புகள் கவிதையைவிடவும் நீளமாகவும் இருப்பதுண்டு. தமிழில் இதுவரை கவிதைக்கும் மொழிக்கும் இருந்த இணக்கத்தைக் குலைப்பது, அழகியலுக்கும் கவித்துவத்துக்குமான உடன்பாட்டை விலக்குவது என்று   முரண்பாடுகளில் சமநிலையைக் காண விளைவதே அவரது கவியாடல்.

வார்த்தை ஜாலத்தில் தொடங்கி உருவகம், படிமம் என கவிதையின் புற அலங்காரங்களைக் களைகிறார்.

கவிதையின் அகத்திலிருந்து பாசாங்கை, வரட்டுத்தனத்தை, தேய்வழக்கை, பேசியதையே பேசுவதை முக்கியமாக, போலியான நாமே கட்டமைத்துக்கொண்டிருக்கும் முகத்தை  உரித்தெடுக்கிறார்.

“காலம் காலமாக/ மூடி வைத்த கதவையே/ ஏன் காற்று/ தட்டியபடி இருக்கிறது/ கவிதையிலும்?” (யதார்த்தத்தை எழுதுதல்) என்றபடி பிரகடனங்களை, சடங்கானவற்றெயெல்லாம் உதறிவிட்டு வேறொன்றைப் பேச விழைகிறார்.

பொதுவாக நவீன தமிழ்க் கவிதை தரத் தொடங்கியுள்ள அலுப்பிலிருந்து மீள வேண்டும் என்பதே அவரது போராட்டமாக உள்ளது.

அதை அவர் எதிர்கவிதை என்கிறார். எதிர்கவிதை,  எதிர் எதிர்கவிதை என எதுவாக இருந்தாலும் பெருந்தேவி கோருவது ஒன்றுதான், அது கவிதை.

உண்மையான, செவ்வியலான கவிதை.

உண்மைகளைப் வெளிப்படையாக பேசுவது, அதைக் கவிதைக்குள் வைப்பது, அதைக் கவித்துவமாக நிறுவதன் வழி, அதை அவர் கண்டடைகிறார்.

அதற்காக கவிதையெனும் கலைக்குள்ளே அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டே இருக்கிறார். கவிதை எழுதுவதுடன் மொழிபெயர்ப்பு, ஆய்வு, கட்டுரை, விவாதம் என கவிதை உலகில் அயராது உழைக்கிறார்.

நிலவுகின்ற எல்லாவற்றின் மீதும் பாசாங்கான திரைச்சீலைகளைக் கிழிக்கிறார் அல்லது இழுத்துவிட்டுக்கொண்டே இருக்கிறார். கேள்விகளற்ற ஒழுக்கக்கூறுகளை கேள்வி கேட்கும் அவரது கவிதைகள் வாசிப்பவரைச் சலனமடையச் செய்கின்றன.

“…எந்த வழக்கமான அற்புதத்தையும்
நிகழ்த்த முடியாது
தண்ணீரை ஒயின் ஆக்குவதோ
வானத்திலிருந்து வெட்டுக்கிளிகளைச் சொரிவதோ
இருக்கட்டும்
அதனால் கைக்கெட்டிய தூரத்தில்
ஒரு சாதாரணக் கதவைக்கூட
திறந்துவிட முடியாது..” (கவிதையாலானது)

போன்ற கவிதைகளை விரக்தியான அவநம்பிக்கையான கவிதைகளாக வாசிக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், அவை தனக்குள் முடங்கி அழுபவையல்ல. அவை யதார்த்தத்தில் எழுந்துநின்று, நம்பிக்கையை நோக்கிச் செல்வன. 

“சிட்டுக்குருவி வெளியே வந்து தத்தும் போதுதான்
இந்த மாபெரும் கண்டம்
வசந்தத்துக்குள் வரவே போகிறது
சிட்டுக்குருவிக்கு அந்த அளவு
சக்தி இருக்கிறது.” (கடுங் குளிர்: நான்கு கவிதைகள்)

தனிமனிதத் துயரத்தைப் பொதுவானதாக்கி, உலக இயக்கத்துடன் இணைக்கிறார். துயரத்தைக் கலையாக்கி, கலையின் கொதிப்பில் சொல்லெடுக்கிறார். பாசாங்கு களைந்து விழுகின்றன வரிகள்.

“யாருமற்ற உலகத்தில்
மிகத் துயரமான நான் வசிக்கிறேன்
யாருமற்ற உலகம் யாருமற்ற உலகமாக ஏன் இருக்கிறது
எனக்குப் புரியவில்லை
யாருமற்ற உலகத்தில் யாரும் அற்றாலும்
வசிப்பது என் பழக்கமாகி விட்டது
யாருமற்ற உலகத்தில் பழக்கத்தால்
மிகத் துயரமான நான் வசித்துக்கொண்டிருக்கிறேன்

இந்தக் கவிதை பழைய பாணியில்
எழுதப்படுகிறது
யாருமற்ற ஊரைச் சுற்றி ஓடும் ஆற்றையும்
யாருமற்ற உலகத்தில் வசிக்கும் என்னையும்
மயிராக நினைப்பவர்களுக்காக.” (இந்தக் கவிதை பழைய பாணியில் எழுதப்படுகிறது)

ஆழ் துயரின் கனத்த அமைதி, நதியாகப் பெருக்கெடுக்கிறது. நம் மனத்தின் ஆழத்தில் ஓடும் நதி குபீரென உள்ளுக்குள்ளே பெருக்கிறது.

‘யுகத்தின் களைப்பு’ கவிதையிலும் பெரும் அயர்வையும் அதை உணரும்பொழுதில் ஏற்படும் அலட்சியத்தையும் அது உள்ளுக்குள்ளே உருண்டோவதையும் உணரலாம்.

அரசியல் அங்கதம் என்பது பெருந்தேவிக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவதுபோல். வயிறு வரை குளிரக் குளிர விளையாடுவார்.  அதற்கு ‘சீனாக்காரன்’ ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

“சப்பைமூக்குக் குழந்தையாக
என்னைச்
சீனாக்காரனிடமிருந்து தவிட்டுக்கு வாங்கியதாகச்
சொல்வாள் என் அம்மா
பிளாஸ்டிக் அரிசி
பிளாஸ்டிக் முட்டை
பிளாஸ்டிக் துடப்பம்
ஆயிரம் பிளாஸ்டிக்குகள் மலரட்டுமே
எனத் தத்துவம் பாடுகிறான் சீனாக்காரன்
தவிட்டுக்குக் குழந்தையை
இன்றைக்கு விற்றிருந்தால்
குட்டி பிளாஸ்டிக் மூக்கையும்
ஒட்டிக் கொடுத்திருப்பான்.”

“ஆயிரம் தாமரைகள் மலரட்டும்” எனும் சீனர்களின் கம்யூனிசத்தின் தத்துவத்தையும் உலகெல்லாம் தங்கள் தாமரைகளை மலரைச் செய்வதில் அவர்களின் வேகத்தையும் ஒரு சின்னக் கவிதையில் அவரால் சொல்லிவிடமுடிகிறது.

‘பெருமிதம் மிக்க குடிமக்களே!’ அத்தனை பாசாங்குகளையும் துடைத்துவிட்டு வெறுமனே நின்று தன் அரசியல் நிலையைப் பேசும் மற்றொரு கவிதை. நாட்டு அரசியல், சமூக அரசியல், குடும்ப அரசியல், பணியிட அரசியல், உறவுகளுக்கிடையிலான அரசியல் என எந்த அரசியலுக்கும் பொருத்திப் பார்க்கக்கூடியவை பெருந்தேவியின் அரசியல் கவிதைகள்.  அவரது வாசிப்பு, அனுபவம், நாட்டு நடப்புகளில் அவர் காட்டி வரும் அக்கறையை அக்கவிதைகள் வழி அறிய முடிகிறது.

‘பெசன்ட் நகரில் ராஜநாகம்’ கவிதை ஒரு காட்சியாக, கதையாக அப்படியே வாசித்து வாய்விட்டுச் சிரிக்கலாம். சமூகக் கோழைத்தனத்தை எள்ளி நகையாடும் அங்கதமாகப் பார்த்தால் நமட்டுச் சிரிப்பை உதிர்க்கலாம்.  இலக்கியத்தின் அந்தச் சுதந்திரத்தோடு உலவும் கவிதைகள் பெருந்தேவியுடயவை. ‘தென் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பு’, ‘கண்களைத் திருப்புதல்’ என இந்த வரிசையில் பல கவிதைகள் உண்டு.

கவிதை வாசிப்பவராலேயே முழுமை பெறுகிறது. அனுபவத்தின் திரட்சியில் அவ்விலக்கியங்களுப் பொருள் கூற முழு சுதந்திரம் உண்டு. காட்சி படிமமாவது பார்வையையும் சிந்தனையும் அனுபவங்களையும் பொருத்தது. ஒரு காட்சி வேறு பொருளைத் தரலாம்,  தராமலும் இருக்கலாம். ஒட்டுமொத்தப் படிமமும் நேரடிக் கவிதைகளாகவும் புரிந்துகொள்ளப்படலாம். அல்லது படிமங்களாகவும் புரிந்துகொள்ளப்படலாம்.

‘தரிசனம்’ கவிதையும் அத்தகைய ஒரு கவிதை. “…பூச்சிகள் ஒரு பூச்சி என்றைக்குத்தான் தானொரு பூச்சி என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.” என்று முடியும் அந்தக் கவிதையில் பூச்சிகளை அப்படியே வாசித்து, அப்படியே பொருள் கொள்ளலாம்.  பூச்சிகளுக்குப் பொருள் கொடுக்கும்போது கவிதையே முழுப் படிமமாகிறது.

‘கறுப்பு வெள்ளைக்கு/ அப்பாற்பட்ட வாசனை’ என்று வீடற்றதன் வாசனையைப் பேசும் ‘வீடற்றதன் வாசனை’ கவிதை, இப்படி முடிகிறது:

“மூன்று பைகளில் என்னால்
என் உலகத்தைக் கொண்டுசெல்ல முடியுமா
அதற்கு முன்னால் அதை முதலில்
கூட்டிச் சேர்க்க வேண்டும்
லைசால் மணக்கும் தரையில்
ஒரு ராட்சசப் பாதத்தால்
மிதிபட்ட எறும்பு வரிசை
சிதறிக் கிடக்கிறது..”

இதில் கடைசி நான்கு வரிகளின் உண்மை நிலை, தமிழ் புரிந்து வாசிப்பவர் எவரையும் ஒரு கணம் திகைக்க வைப்பது. எளிய வார்த்தைகளில் உண்மையை முகத்தில் அறைந்துவிட்டு, நகர்ந்து விடுபவை.

அதேநேரத்தில், எப்போதும் இருக்கும் வாழ்வின் சோகத்தையும் துன்பத்தையும் மகிழ்வையும் சமகால மொழியில் சொல்வதாலேயே பெருந்தேவி கவிதைகள் பலராலும் வாசிக்கப்படுபவையாக உள்ளன.

“…எதிரில் மின்திரையில்/ விரிந்திருக்கிறது உலக வரைபடம்/ நீ இருக்கும் ஊரை/ உன்னைத் தொடுகிறேன்/ இங்கிருந்து/ சில சென்டிமீட்டர் தொலைவுதான்…” (சில சென்டிமீட்டர் தொலைவுதான்)

இன்றைய புழங்குமொழியில், உள்ள இந்த வரிகள் பிரிவேக்கத்தின் ஆதித் துயரின் வேதனையும் கேவலும்  பல்லியாக ஒட்டிக்கொள்கின்றன.

‘ஐந்து வேலைகள்’ கவிதையில் காணக்கூடிய தோல்விகளால் ஏற்படும் பித்துநிலை, எக்காலத்திலும் எவருக்கும் ஏற்படக்கூடியது. அத்தகைய பித்து நிலையில் அர்த்தமில்லாத வேலைகளைச் செய்வதும் எப்போதுமுள்ளது. இக்கவிதையில் கற்பனையில் மிதப்பது, வானத்தில் நட்சத்திரங்களை எண்ணுவது, தெருவில் அலைவது போன்ற ‘வேலைகளுடன்’ சமகாலத்தவராக ஃபேஸ்புக்கில் காதலனைப் பின்தொடர்கிறார். “தோற்றவர்கள் இருக்கும் இடத்தில்/ ஜெயித்தவராக ஒருவர் இருக்க வாய்ப்பில்லை,” என்று வாழ்தலின் அபத்தத்தைச் சுட்டி, “பின்னிரவில் அழுவது/ அதைச் செய்யாதவர்கள் இருக்கலாம்/ செய்ய நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது.” போர்வைகளால்  மூடப்பட்டிருக்கும் பாவனையை படீரென்று உடைக்கிறார்.  தோல்வியிலிருந்து மீள்வதான பாவனை, பாவனையாகவே இருக்கும் என்பதை பல கவிஞர்களும் எழுதியுள்ளனர். அதை பெருந்தேவியின் மொழியில் வாசிக்கும்போது, எல்லாருக்கும் இருப்பதுதானே அதனாலென்ன என்ற ஆறுதல் ஏற்படுகிறது.

அடிமைத்தனத்திலிருந்து மீண்ட உறவுகளின் அச்சமற்ற மனநிலையிலிருந்து யோசிக்கும் இவரது உறவுகளைப் பற்றிய கவிதைகள்,  ‘ஓர் ஆணுடன் கிடப்பது எப்போதாவது தேவையாகத்தான் இருக்கிறது’ என்று வெளிப்படையாகச் சொல்பவை. 

“…ஒருவனுக்குப் பின்னால் ஏன் ஒருத்தி/ தன்மேல் தானே தீப்பந்தம் சுமந்து/ நடந்து போக வேண்டும்?/ ஒருவனுக்காக ஏன் ஒருத்தி/ தன்னையே அரிந்து உப்பிட்டுத்/ தின்னத் தரவேண்டும்?” (‘சரக்கொன்றையிடம் மன்னிப்பு’) எனக் கேள்வி கேட்பவை.

பெருந்தேவி கவிதைகளின் மற்றோர் அம்சம் ஒரு வரியிலிருந்து மற்றொரு வரிக்கு சட்டென நகர்தல். அது வாசக இடைவெளியைத் தருவதுடன், கவித்துவத்தையும் கலையையும் நுண்மையாக்குகின்றன. எடுத்துக்காட்டாக,

“…கடவுளின் கண்ணாய்க்/ கணினியின் ஒளித்திரை/ பச்சைச் சிறுதுளி/ மின்னி அருளுகிறது/

ஏன் ஏன் கைவிட்டீர்/ ஒரு துளிக்/ கண்ணீரை/ நாளை அவளுக்குத் தாரும்…” (ஏன் ஏன்)

இக்கவிதையில் மின்னி அருளுகிறது என்ற வரியிலிருந்து ஏன் ஏன் கைவிட்டீர் என்ற வரிக்கு கவிதை கணமென நகர்ந்து விடுகிறது. அருளுக்குப் பின் என்ன நடந்தது என்று ஆயிரம் சிந்தனைகள் எழுகின்றன. அருளலும் கைவிடுதலும் ஒருங்கே வியக்க வைக்கின்றன.

ஒரு கவிஞராக எதையும் பொருட்படுத்தாது எதற்கும் அஞ்சாது தன் தேர்வில் வாழும் பெருந்தேவி, தான் பெண் எனும் எண்ணம் தோன்றும்பொழுதுகளில், ஆண்களின் ஆதிக்கத்தினால் ஆன உலகிலிருந்தும் அதன் வம்புகளிலிருந்தும் ஒதுங்கிப் போகவே நினைக்கிறார்.

“கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும் நள்ளிரவில் பசிக்கலாம்/ பெண்களுக்கு நள்ளிரவில் பசிக்கக்கூடாது” என்ற பயப்படுகிறார். “ஏன் பெண்கள் டெலிவரி வேலைக்கு வருவதில்லை?” என அங்கலாய்க்கிறார். ‘நள்ளிரவில் ஃப்ரெஞ்சு ஃப்ரை தின்பவள்’ சிங்கப்பூரில் இருந்தாலும் “பாதிக் கதவைத் திறந்து”, “ப்ரோ, சாப்பாடு வந்துவிட்டது,” என்று “வீட்டுக்குள்  வேறொரு திசையைப் பார்த்து” சொல்ல வேண்டியிருக்கிறது.

எந்தப் பாசாங்கும் இல்லாமல் நேரடியாகப் பேசுவதே பெருந்தேவி கவிதைகளின் பலம்.

அவை கேள்விகளை எழுப்புகின்றன, சலனப்படுத்துகின்றன, நிலைகுலைய வைக்கின்றன, திக்குமுக்காடச் செய்கின்றன. விரும்பாதவற்றை, தவிர்க்க விரும்புவதைக் கண்முன்னே நிறுத்திச் சிந்திக்க வைக்கின்றன.

இந்திய நகரங்களில்/ புலம்பெயர் நாடுகளில்/ இந்தியாவுக்கும் புலம்பெயர் நாட்டுக்குமாக இடம்பெயர்தலில் காணக்கூடிய  பார்வையும் நோக்குமாக வாசிக்க வாசிக்க வாசிப்பைத் தூண்டும் இந்தக் கவிதைகளைப் பெண் எழுத்து, பெண்ணியக் கவிதைகள் என்றெல்லாம் முத்திரை குத்தாமல், “ஒரு பெண் கவிஞரின் வாசகராக அன்றி/ ஒரு கவிஞரின் வாசகராக மாத்திரம்/ உங்களால் வாசிக்க முடிந்தால்/ ஊற்று உங்களுடையதும்தான்,” (எழுத்தாளர் மனத் தடை) என்று பெருந்தேவி சொல்வதைப்போல, அவர் கவிதைகளை கவிதைகளாக வாசிக்கும்போது மனம் நிறைகிறது.

பெருந்தேவி கவிதைகளில் வெளிதான் முக்கியப் பதிவாய் இருக்கிறது; வாழ்க்கைக்கும் புரிந்துணர்வுக்கும் உள்ள இடைவெளிகளை கவித்துவ ஆவியால் பார்க்க முயலுகிறார். கூர்ந்து கூர்ந்து  பார்க்கும் அவர் சொல்லப்பட்ட தர்க்கத்தால் உருவாகும் மனசில் அல்லாடுகிறார்.  அது சுய தனிமையை உருவாக்குவிடுகிறது; வாழ்கை துன்பமிக்கதாக மாற்றப் பார்க்கிறது.   பார்வையின் துருத்தல் நிகழ்வுகளிலும் விரவிக்கிடக்கிறது. ஈரங்களால் உருவானது இந்த உலகம். கருத்தளவில் ஊக இடைவெளி இம்மையால்  மனித மனசு நிலையின்மை வலியுறுக்கிறது. இங்குதான் கவிஞர் தன் இடைவெளியை அடையாளம் காண முயலுகிறார்.

அழகியல், ரொமாண்டிசம்,  தத்துவம், அன்றாட வாழ்க்கை என எல்லாவற்றையும் கவனமின்றி வீசி விளையாடும் அதே வேளையில், மிகக் கவனத்துடன் அவதானிக்கிறார். அதேபோல் அவற்றைக் கவிதையும் ஆக்குகிறார். இதையெல்லாவற்றையுமே மீண்டும் மீண்டும் வெவ்வேறாக எழுதிப்பார்க்கும்  கவிஞராகவும் பெருந்தேவி உள்ளார். இப்படி எல்லாவற்றுக்கும் நாடிப் போகக் கூடிய கவிஞர்களில் தமிழில் மிகக் குறைவு. அதனாலாயே பெருந்தேவியைக் கொண்டாடுவதும், திரும்ப திரும்ப வாசிப்பதும் தேவையாகின்றன.

“நல்லகவிதை
அன்பைக் கோருவதில்லை
நல்ல கவிதை தன்னை
எழுதுவதையே கோருகிறது….” (என்றான் யூதாஸ்)

கவிதை குறித்த பெருந்தேவியின் கவிதைகளைத் தனிக்கட்டுரையாகவே எழுதலாம். அந்தளவுக்கு கவிதையை விசாரணை செய்கிறார்.

“…கவிஞராக வாழ்தல் என்பது/ ஒரு தருணத்திலிருந்து இன்னொரு/ தருணத்தைத் திறப்பது/ ஆனால் இங்கே தருணங்களே இல்லை…”  என்று சோர்கிறார். அக்கணமே “தருணத்தை உருவாக்குகிறார்….. அதிலிருந்து கவிதைக்காகத் திறக்கும்போது…” அவருக்கு  “பியர் போல் நுரைத்துப் பொங்குகிறது”. “தருணத்தை உருவாக்க/ நேசிப்பவரின் மூக்கில்/ குத்துவிடும் கவிஞர்/ மன்னிக்கப்பட எதிர்பார்ப்பதில்லை” என அதே கணத்தில் நையாண்டியும் செய்கிறார் (கவிஞராக வாழ்தல்).

“…ஒரு தடித்த ஆய்வுநூலுக்கில்லாத கண்கள்/ ஒரு கட்டுரைக்கில்லாத உதடுதல்/ திமிர்பிடித்த கவிதைக்குண்டு…. “(அடையாளம்) என்று பெருந்தேவி சொல்வது மிக உண்மை.

“ஒரு கவிதையைப்/ பகடியாகக் காண்பதிலிருந்து/ கவிதையாக கண்ணடித்தலாக/ அரசியலாக அறிவித்தலாகக்/ கண்டடையப் பழக வேண்டும்/ இதில் இத்தனை இருக்கிறது/ மலை உச்சியில்/ ஒரு கோப்பைத் தேநீருக்காகத்/ தண்ணீரைச் சுட வைப்பதைவிட இது எளிது” (அது எப்படியென்றால் இப்படித்தான்) என்பது வாசிக்க வாசிக்கவே உணர முடிகிறது.

லதா

சில நேரங்களில் கவிதை குறித்த கவிதைகளில் அவரது வைக்கும் வாதங்களும் எதிர்வாதங்களும் ஒரு பிரசாரத்தன்மையுடன் தோன்றுகிறதோ என யோசிக்கும்போது,  “என் கவிதையின் குரல் என்னுடையதல்ல/ … உங்களைப் போல்தான் அதன் கண்ணாடியில்/ என் முகத்தைப் பார்த்துக்கொள்கிறேன்” (நகரலாமே) என தன் கவிதைகளுக்குத் தானே பார்வையாளனாகி விடுவதை உணர்த்துகிறார்.

கவிதையுடன் தட்டாமாலை ஆடுபவர் பெருந்தேவி. அந்த ஆட்டத்தில் தலைக்குப்புறக் கவிழ்வதற்கான அத்தனை சாத்தியமும் உள்ளது. பயங்கர ஆபத்துகள் உள்ளன. பயமே அறியாத குழந்தையின் கண்களை கழட்டிவைக்காமல் இருக்க துணிவு மிக மிகத் தேவை. அவரை வாசித்து ரசிக்கவும் அந்தத் துணியும் அதைத்தாங்கும் வலுவும் தேவைப்படுகிறது.

***

பெருந்தேவி – தமிழ்விக்கி

லதா – தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *