“நினைவும் வரலாறும்” – சுரேஷ் பிரதீப்
(முத்தம்மாள் பழனிசாமியின் “நாடு விட்டு நாடு” நூலை முன்வைத்து)
நவீனத் தமிழிலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஆண் எழுத்தாளர்களை ஒப்பிடும் போது மிகக்குறைவு. பெண் என்பது உடல் அடையாளமா மனவார்ப்பா போன்ற சுத்தலான கேள்விகளுக்குள் நுழைவது பெண்கள் எழுத வருவதில் இருக்கும் சிக்கல்கள் என்று பேசத் தொடங்குவது எல்லாம் இந்த எளிமையான நேரடியான உண்மையை மறுத்துக் கொள்வதுதான். இதன் காரணகாரியங்களைத் தேடிப்போவது வேறு ஒரு செயல்பாடு. ஆனால் இதுவரையிலான தமிழ் இலக்கியப் பரப்பில் ‘பெண்’ என்ற படிமத்தின் மீதான வலுவான கவனத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் ஆண் படைப்பாளிகள் தான். சாதாரண யோசனைக்கே நம் நினைவில் சிக்கும் யமுனா, கங்கா,அஞ்சலை போன்ற பெண்களை எழுதியவர்கள் ஆண் எழுத்தாளர்கள்தான். பெண் என்ற பிம்பம் குறித்த மனப்பதிவுகளை இலக்கியத்தில் உருவாக்கியதில் ஆண் எழுத்தாளர்களின் குற்றவுணர்வுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொதுவாக தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான அழுத்தமான பெண் பாத்திரங்கள் கடுமையான துயரங்களை அதிலும் குறிப்பாக ஆண்களிடமிருந்து சந்திப்பவர்கள். ஆண்களால் உருவாக்கப்பட்ட ஒரு உலகத்தில் ஆடித் தோற்பவர்கள். ஆண்களால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறவர்கள். தன்னால் விரும்பப்பட்ட பெண் சீரழிவதை தள்ளி நின்று ஒன்றும் செய்ய முடியாமல் குற்றவுணர்வுடன் வேடிக்கைப் பார்க்கும் எண்ணற்ற ஆண் பாத்திரங்கள் நம்முடைய புனைக்கதையுலகில் இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே இலக்கிய விமர்சன நோக்கில் பெண்களை அணுகும்போது உபவிளைவாக சமூகவியல் நோக்கும் உள்நுழைந்து விடுகிறது. பெண்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற ஒரு எல்லைக்கும் மரபார்ந்த பார்வையின் காரணமாக பெண்கள் என்றால் பூமாதேவி காளி நீலி என்று மற்றொரு எல்லைக்கும் விவாதங்கள் நகர்ந்து விடுகின்றன. உண்மையான பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் தொடங்கப்படாமலேயே இருக்கின்றன. நாட்டார் தெய்வங்கள் குலச் சடங்குகள் போன்றவையெல்லாம் மறுவடிவம் கொள்ளும் இக்காலத்தில் இந்த விவாதம் மேலும் குழப்பம் நிறைந்ததாக மாறிவிடுகிறது. ஏனெனில் நம் மரபிலும் ஏகப்பட்ட வஞ்சிக்கப்பட்ட பெண் தெய்வங்கள் அமர்ந்திருக்கின்றன. அவை ரௌத்ர ரூபம் கொண்டு எழுந்து வருகின்றன. ஒரு வகையில் இவை எல்லாமும் பெண் என்கிற படிமம் பற்றி யதார்த்தத்தில் ஒரு போதம் உருவாவதை தடுக்கவே செய்கின்றன. ஆகவே இருக்கும் ஒரே வாய்ப்பு சமகாலப் பெண் எழுத்து மட்டுமே. ஆனால் ஒரு பெண் படைப்பாளி முன்னோடிகளென எடுத்துக் கொள்ளும்படியான முன்னோடிகளின் வரிசையோ தொடர்ச்சியோ நம்மிடம் இல்லை. அதாவது பெண் எழுத்தின் அடிப்படையில் இருந்து தொடங்குவதற்கான களம் நம் சூழலில் ஒருங்கவே இல்லை.
முத்தம்மாள் பழனிசாமியின் நாடு விட்டு நாடு என்ற இந்த நூல் முக்கியத்துவம் பெறுவது அத்தகையதொரு அடிப்படை உருவாக்கத்தில் அந்நூலுக்கு இருக்கும் பங்கினால்தான். தமிழில் எழுதப்பட்ட முதன்மையான சுயசரிதை நூல்களில் ஒன்றாகவும் இந்நூலினை சுட்ட முடியும். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்னர் பிறந்த முத்தம்மாள் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் சில ஆண்டுகள் வரையிலான தன் வாழ்க்கை நிகழ்வுகளை இந்நூலின் வழியே நம்மிடம் ஒரு கதை போலச் சொல்கிறார்.
நூலாசிரியர் இந்த சுயசரிதையை எழுபது வயது கடந்த பிறகே எழுதி இருக்கிறார். காலத்தில் பின் சென்றுவிட்ட நிகழ்வுகளே பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கின்றன. நிகழ்வுகளுடன் இருக்கும் உணர்ச்சிப் பிணைப்பை காலம் இயல்பாகவே குறைத்து விடுகிறது. ஆகவே மிகக் கடுமையான குடும்பச் சூழல்களை விவரிக்கும்போது கூட அதனுடன் பெரிய உணர்வொட்டுதல் இல்லாமல் விவரித்து இருக்கிறார். உதாரணமாக முத்தம்மாளின் தாய் பழனியம்மாளை அவருடைய தந்தை பழனிசாமி மணந்து கொள்ளும் இடம். இரண்டாம் தாரமாக கூட வாழ்க்கைப்பட முடியாத அவருடைய சூழலை விலகி நின்றே விவரிக்கிறார். ஆகவே எந்தவொரு சம்பவத்திற்கும் நியாயம் கற்பிக்கவோ எந்த ஒரு சம்பவத்தையும் விமர்சிக்கவோ செய்யாமல் மிக இயல்பாக கதைத் தன்மையுடன் முத்தம்மாளின் வாழ்க்கை நூலில் ஒழுகிச் செல்கிறது.
இரண்டாவதாக நூலில் ஒரு இனக்குழுத் தன்மை உள்ளது. எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் படைப்புகள் மீது ஒரு விதமான ஜாதிய சாயம் பூசப்படுவதை கவனித்து இருக்கிறேன். அவர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் ஒரு நெருக்கத்தை பேணுவதைக் கொண்டு அவருடைய படைப்புகளில் இருந்து விலகி நிற்கிறவர்கள் உண்டு. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து அவர் படைப்புகளை அணுகுகிறவர்கள் கூட அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் ஜாதிய அடையாளங்களால் மனவிலக்கம் கொள்கின்றனர். ஆனால் தன்னுடைய இனத்துடன் தன்னை நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மனநிலையால் கண்மணி குணசேகரன் தன் நாவல்களில் உருவாக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த அர்த்தவெளியையும் அதன் பிரதான சிக்கல்களையும் பெரும்பாலோனோர் கவனிக்கத் தவறுகின்றனர். இடப்பெயர்வு அதிலும் நிலத்தோடு புழங்கிய ஒரு விவசாயியின் இடப்பெயர்வின் அவசங்கள் குறித்து வந்தாரங்குடி அளவு விரிவாகப் பேசிய இன்னொரு படைப்பு தமிழில் இல்லை. முத்தம்மாள் பழனிசாமியும் தன்னுடைய கொங்கு வேளாளர் அடையாளத்தைப் பற்றி பேசியபடி தான் இந்த சுயசரிதையைத் தொடங்குகிறார். தன்னுடைய தந்தையின் குணங்களான முன்கோபம் பழிவாங்கும் உணர்ச்சி போன்றவற்றை தானும் சுவீகரித்துக் கொண்டிருப்பதை எந்த தயக்கமும் இல்லாமல் ஒத்துக் கொள்கிறார். ஆனால் முத்தம்மாள் பழனிசாமி தன் ஜாதிக்குள் ஒடுங்கிவிட்டவர் அல்ல. அவருடைய கணவர் ஸ்பென்ஸ் க்ராண்ட் ஒரு ஐரோப்பிய-ஆப்பிரிக்க கலப்பினத்தவர். அவருடைய பிள்ளைகளும் வெவ்வேறு நாடுகளில் மணம் புரிந்திருக்கின்றனர். ஆகவே முத்தம்மாள் மிகத் தெளிவாக தன்னுடைய பூர்வீகத்தை வரையறுத்துக் கொண்டு அங்கிருந்து தன் நட்புகள் உறவுகள் என விரித்துக் கொண்டு செல்வதைக் காண்கின்றோம். இளமையில் தன்னை முற்போக்காக காட்டிக் கொண்டு முதுமையில் தன் ஜாதியில் அடைக்கலம் கொள்கிறவர்கள் போலன்றி திருமதி.க்ராண்டின் பயணம் எதிரிடையாக இருக்கிறது.
மூன்றாவதாக இந்நூலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது முத்தம்மாள் என்ற சிறுமியின் துடுக்குத் தனமும் பிடிவாதமும் மெல்லமெல்ல கனியும் சித்திரம். இறந்து கிடக்கும் பைத்தியத்தின் பல்லைப் பிடித்துப் பார்க்கும் துடுக்கான சிறுமியாகவே முத்தம்மாள் நமக்கு அறிமுகமாகிறாள். வீட்டில் தங்கி இருப்பவரின் மேல் தேளைக் கொட்டுவது பீடியில் வெடி வைப்பது என முத்தம்மாளின் சாகசங்கள் வளர்ந்தபடியே இருக்கின்றன. தனக்கு தீங்கிழைத்தவர்களை பழிவாங்கியே தீரவேண்டும் என்ற முத்தம்மாளின் இந்த குணம் தான் பின்னாட்களில் அவரை காதலில் உறுதியாக நிற்கச் செய்கிறது. படிப்பே வராது என்று எல்லோரும் முடிவு செய்துவிட்ட தன் தம்பி ராமசாமியை விடாப்பிடியாக தேர்வெழுதச் செய்து பேராசிரியர் ஆக்குகிறது. பொதுவாக தமிழ் எழுத்துக்களில் நாம் காணும் பெண்ணாக முத்தமாளின் சித்திரம் இந்த நூலில் இல்லை. பிறந்த சில வருடங்கள் நீங்கலாக மலேசியாவிலும் இந்தியாவிலுமாக வறுமை நிறைந்த ஒரு வாழ்க்கையைத் தான் முத்தம்மாள் எதிர் கொள்கிறார். இரண்டாம் உலகப்போர் ஜப்பானிய ஆதிக்கம் மலேசியாவின் மீள்கட்டுமானம் என அவருடைய வரலாற்று காலமும் சாதகமானதாக அமையவில்லை. ஆனால் இந்நூலில் இவை எதையும் முத்தம்மாள் தன்னுடைய துயரார்ந்த வாழ்க்கை விவரிப்புகளாக முன்வைக்கவில்லை. தன்னுடைய இருத்தலியல் சிக்கல்களை பேசுவதற்கான களமாக முத்தம்மாள் இந்நூலினை பாவிக்கவில்லை. மலேசியத் தோட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வரும் அப்பா. அவரும் வாழ்க்கையில் எண்ணற்ற அடிகளைப்பட்டவர். அப்படி அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் சூழவே முத்தம்மாள் வளர்கிறார். ஆகவே இயல்பாகவே தன் துயர்களை பெரிதாக பொருட்படுத்தாத மனம் வாய்க்கப்பெற்றவராக தன்னுடைய கல்வி முன்னேற்றம் குடும்பப் பொறுப்பு என்று நிற்க நேரமற்றவராகவே அவர் காலம் நகர்கிறது. எளிய தண்டனைகளையும் வசைகளையும் பூதாகரப்படுத்தி குழந்தைகளை பூஞ்சை மணம் கொண்டவர்களாக வளர்க்கும் இச்சூழலில் முத்தம்மாள் போன்றவரின் வாழ்க்கை வியப்பேற்படுத்துவதாகவே உள்ளது.
நூல் முழுக்கவே விரவியிருக்கும் நகைச்சுவை உணர்வு உவேசாவின் என் சரித்திரம் நூலை நினைவூட்டுகிறது. மலேசியாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் தீவிர விசிறிகள் பலர் இருந்திருக்கின்றனர். அப்படி ஒருவர் முத்தம்மாளின் நண்பர். குழந்தைக்கு தன் நாயகனின் பெயரை வைப்பதற்கென்றே தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நண்பர் ஆசைப்படுகிறார். ஆண் குழந்தையும் பிறக்கிறது. முத்தம்மாள் ‘குழந்தை பெயர் ராஜேந்திரன் தானே?’ என்று கேட்கிறார். ‘இல்லை அம்மா எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ என்று அவர் சொல்கிறார். இதுபோன்ற எண்ணற்ற குறுஞ்சித்தரிப்புகள் நூல் முழுக்க விரவி இருக்கின்றன.
இந்நூலின் வழியாக தன்னுடைய பெற்றோர் கணவர் பிள்ளைகள் மட்டுமின்றி அவருடைய நண்பர்கள் மாணவர்கள் என எண்ணற்ற மனிதர்களின் ஆளுமையை முத்தம்மாள் நம்மிடம் சொல்கிறார். ஏகப்பட்ட கதாமாந்தர்கள் உலவும் ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு நூலின் பல பக்கங்களில் தோன்றுகிறது. யுவன் சந்திரசேகர் நாவல்களைப் போல ஏராளமான கிளைக்கதைகளை இந்நூல் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. வெறுமனே ஒரு நபரின் வாழ்க்கை போராட்டம் என்பதாக இல்லாமல் குடும்பம் நட்பு பணியிடம் என எல்லாவற்றினூடாகவும் ஒரு முழுமையான வாழ்க்கையை முத்தம்மாள் முன்வைக்கிறார். இயல்பாகவே பிரியம் ஊடாடும் மொழி என்பதால் ஆசிரியரின் உணர்ச்சி நிலையை நாமும் அடைகின்றோம். கடந்து போனவற்றை திரும்ப மறு உருவாக்கம் செய்து கொள்வது புதிய நினைவுகளை உருவாக்கிக் கொள்ளும் செயல் அல்லது நினைவுத் தொகுப்பினை பராமரிக்கும் வழி. பொதுவாக புனைவினை வாசிக்கும் போது வாசகனுக்கும் எழுதும் போது எழுத்தாளனுக்கும் கிடைக்கும் இன்பம் இந்த நினைவு உற்பத்தி என்ற செயலிலிருந்தே நிகழ்கிறது. முத்தம்மாளின் இந்த சுயசரிதை பிரதி நமக்களிக்கும் மகிழ்ச்சி பொதிந்திருப்பது இந்த ‘நினைத்துப் பார்க்கும்’ செயல்பாட்டில் தான். நினைத்துப் பார்த்தல் என்பது மிக மிகக் கடினமான ஒரு செயல். ஏனெனில் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு புள்ளியில் கொண்ட தனிப்பட்ட வஞ்சத்தாலோ மயக்கத்தாலோ முழு வாழ்வையும் ஏராளமானோர் ஒருவிதமாக வகுத்துக் கொள்கின்றனர். அவர்களால் தங்களுடைய வாழ்வை முழுமையாக நினைத்துப் பார்க்க இயலாது. ஒரு வகையில் புனைக்கதை எழுதுதல் அத்தகைய வரையறுப்பு பார்வையில் இருந்து தான் உருவாகும். அந்தப் புள்ளியில் இருந்து எழுந்து விரிந்து செல்லும் படைப்பாளிகள் எல்லாக் களங்களையும் தொட்டு எழுதுகின்றனர். ஆனால் அப்படி விரிவதற்கான வாய்ப்பற்றவர்கள் தேங்கி ஓரிடத்திலேயே நின்று விடுகின்றனர். பெண் படைப்பாளிகளின் தேக்கம் ஏற்படுவது இவ்விடத்தில் தான். இருபதாண்டுகளோ முப்பதாண்டுகளோ தொடர்ந்து இலக்கியப் பரப்பில் இயங்கும் பெண்களை அரிதாகவே நம்மால் காண முடிகிறது. வாழ்வின் சகல பரிணாமங்கள் வழியாகவும் பயணித்து அங்கு கண்ணுற்றவற்றை முத்தம்மாள் பழனிசாமி இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். வெறுமனே வாழ்க்கைத் தரவுகள் என்றில்லாமல் நாட்டார் பாடல்கள் நாட்டார் தெய்வங்கள் என தன்னுடைய பூர்வீகம் நோக்கியும் முத்தம்மாள் பயணித்திருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்நூல் ஒரு மாபெரும் காலமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. பழனிச்சாமியின் சிக்கலான திருமண வாழ்க்கைத் தொடங்கி திருமணமும் விவாகரத்தும் எளிதானவையாக வன்முறை குறைந்தவையாக மாறிவிட்ட காலம்வரை பேசப்படுகிறது. காலணியாதிக்கம் முடிந்து ஜனநாயகம் தழைப்பதன் சித்திரமும் வெவ்வேறு நாட்டு மனிதர்கள் ஒன்று கலக்கத் தொடங்கும் சித்திரமும் மிக இயல்பாக உள்நுழைகின்றன.
முத்தம்மாள் இந்நூலினை சுயசரிதையாக வரித்துக் கொண்டதாலேயே மிக விரிவாக எழுதிச் செல்ல வாய்ப்பிருக்கும் இடங்களனைத்தும் ஆங்காங்கு குறிப்புகளாக நின்று விடுகின்றன. ஆனால் குடும்ப சரிதத்தை எழுதுவதற்கான ஒரு முன்மாதிரியாக இந்நூலினை எடுத்துக் கொள்ள இயலும். இதுபோன்ற விரிவான வாழ்க்கைச்சூழலை பெண்கள் தங்கள் பார்வையிலிருந்து எழுதத் தொடங்குவதே தமிழில் பெண்ணெழுத்து விரிவடைவதற்கான கச்சாப்பொருளாக மாறும். இந்நூலில் முத்தம்மாள் எங்கும் தன் பெருமிதத்தை முன்வைத்துச் செல்லவில்லை. மாறாக தன் உயிரோட்டமான நினைவுகளை எழுத்தின் வழியே தொடுகிறார். புனைவின் சுவாரஸ்யமும் மர்மமும் மிக இயல்பாக எழுத்தில் வந்து அமைகின்றன. அதேநேரம் ஒரு நூற்றாண்டு வரலாறும் பக்கங்கள் வழியே ஓடிச் செல்கின்றன.
*
நன்றி சுபி. நல்லறிமுகம். நூலையும் முத்தம்மாள் பழனிசாமி அவர்களையும் இன்றுதான் அறிந்தேன். நான் உங்கள் கட்டுரைகளின் ரஸிகன். ஆழமும். சரளமும். மகிழ்வும் அன்பும்.
-வெங்கி
எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி இன்று மதியம் காலமானார் ( April 10,24) என்ற செய்தியரிந்து ( https://www.jeyamohan.in/199380/) மிக்க மனவருத்தத்துடன், உங்கள் அறிமுகக் கட்டுரையை மீண்டும் ஒரு முறை வாசித்தேன். சாதாரண பின்புலத்தில் இருந்து உயர்ந்தெழுந்த ஒரு மிக அருமையான பெண் சக்தியைப் பற்றி ஆழ்ந்த ஈடுபாடுடன் நீங்கள் படைத்த இந்தக் கட்டுரைக்கு முன்னேமே சொல்லாத நன்றியை , இப்போது மன்னிப்புடன் தெரிவிக்கிறேன்.