திரிபுறும் தாய்மை – லாவண்யா சுந்தர்ராஜன்

சங்ககாலம் தொடங்கித் தற்காலம் வரை பெண், பெண்மை, பெண் பாலினம் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் பற்பல. மடமை, அடிபணிந்திருத்தல், கள்ளமின்மை இன்னபிற அவற்றில் சிலது. பல்வேறு பருவநிலைப் பெண்களும் அவற்றில் பிரயோகக் குணங்களும் என்ற தலைப்பில் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை தேடி எடுத்து ஆராய்ச்சியே செய்யலாம். அதில் குறிப்பாகத் தாய்மையைப் பற்றிப் பேசத் தொடங்கினால் அது புனிதத்தின் உச்சம், தியாகப் பிம்பம், சுயநலமற்ற சுயரூபம் என்பது போன்ற குணாதியங்களைக் கொண்டு வரையப்பட்ட சித்திரம். சங்ககாலத் தாய் தனது மகள் குறிப்பாக இளம் பெண்களுக்கு வரையறுத்து வைத்த எல்லை மிகக் குறுகியது. தலைவிக்கு வீடும், அவள் கண்ணால் காணும் விஷயங்களைப் பற்றிப் பேச மட்டுமே உரிமை. அவள் மடமை மீறும் இடங்கள் களவொழுக்கம் கொள்ளும் போது மட்டுமே. அதைத் தாயும் அறிந்தே இருக்கிறாள். அதைத் தாண்டி வேறு எந்தப் பிறழ்நிலைகளும் அதில் பேசப்படுவதில்லை. சிலம்பிலிருந்து கிளர்ந்த மணிமேகலைக் காப்பியத்தில் இந்த ஒழுக்கம் இன்னுமும் திண்மை கொள்கிறது. தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவள் தன் மகளைக் கன்னிமை நோன்பு எடுக்கப் பணிகிறாள். கற்பொழுக்கம் உயிரினும் மேலாகப் பேணப்படுகிறது. தியாகத்தின் மொத்த உருவமாய், சுயநலமே இல்லாத சுத்த ஆத்மாக்களாக, குழந்தைகளுக்குக் கடுகளவு பிரச்சனையென்றால் கடலளவு துயருதல் போன்ற பல்வேறு வடிவப் பாத்திரங்களை நிறைக்கிறது தாய்மை. பாகவதக் கதைகளிலிருந்து இதற்கு அடையாளம் காட்ட முடியும். தான் பெற்ற பிள்ளைகள் வளர்ந்து தன் இல்லத்தைப் பேணும் அழகை மகிழும் குணத்தை எடுத்துக்காட்ட அக இலக்கியத்தைத் துணைக்கு அழைக்கலாம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஜீவராசியின் முக்கியமான பண்புகளில் ஒன்று தன் இனத்தைப் பெருக்குதல். ஓர் அறிவுள்ள நுண்ணுயிரிகள் தொடங்கி ஆறு அறிவுள்ள மனிதர்கள் வரை எல்லா உயிரினங்களின் இருத்தலின் இன்றியமையாத தேவை, தன் இனத்தை இந்தப் பிரபஞ்சத்தில் தொடர்ந்து இருக்கச் செய்தல். அந்த தத்துவத்தில் அடியொட்டிப் பார்த்தால் இனபெருக்கம் என்பது சாதாரண விஷயம். மனிதர்கள் தங்களது தலைமுறையை நீடிக்கச் செய்வது இதன் அடிப்படையில் தான். அப்படியிருக்க தன் பிரதிகளை மண்ணில் உருவாக்கும் இந்த சராசரி வினை எந்த விதத்தில் தாய்மையை உன்னதநிலைக்குப் பெயர்த்த முடியும்? இயற்கையாக ஒவ்வொரு மனிதனும் தங்களின் நீட்சியாகக் காண்பது அவர்களால் உருவக்கப்பட்ட குழந்தைகளையே. அதற்குப் பெரிய புறக் காரணங்கள் அவசியமில்லை. இதுவே இயக்கத்தின் இருத்தலில் ஆதார விதி. ஆனால் அது பெண்ணுக்கு இன்னும் அதீதமான ஒன்றாக மாறுகிறது. காரணம் சிசு வயிற்றில் உருவாக்கும் அசைவுகள், அவள் பயம் கொள்ளும் போது அந்தச் சிசுவும் அதிர்ச்சியடைதல், வயிற்றில் சிசு உதைத்தல் இப்படியான உயிரோட்டமான விஷயங்களும், பிறந்த பின் பாலூட்டுவதால் உண்டாகும் பிணைப்புத் தாய்க்கும் மகவுக்கும் இடையில் மகத்தான பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் குழந்தைகள் வளர வளர தாய்மையின் பலவேறு அம்சங்கள் அவர்களுக்கும் குழந்தைக்குமான விருப்பு வெறுப்பை அதிகரிக்கச் செய்யலாம். அது சூழல், பொருளாதாரம், தன்னலம் சார்ந்து மாறுபடலாம். உணவளிக்க முடியாமல் தன் சொந்தக் குழந்தைகளைக் கொன்றத் தாயும் நம் தொன்ம கதைகளில் உண்டு. தன் ரத்தத்தில் உருவாகிய வாரிசு தான் ஆரசாள வேண்டும் பிடிவாதச் சுயநலத்தால் உருவான இருபெரும் இதிகாசம் கொண்டது நமது வரலாறு. தாய்மைப் போற்றுதலுக்குறிய மகானுபவம் அல்ல, அது சூழல் சார்ந்துத் திரிபு கொள்ளச் சாத்தியமுண்டு என்பதற்கான சான்றுகள் அங்கிருந்தே தொடங்கி விடுகின்றன. தாய்மையின் பிறழ்நிலைகளை சமகால சிறுகதை சிலவற்றை அடியொட்டி ஆராய்ச்சி செய்கிறது இந்த கட்டுரை.

சங்க இலக்கியத்திலிருந்து காப்பியக் காலம் வரை கட்டிக் காக்கப்பட்ட கற்புநிலைப் பிறழாப் பெண்டிரை உருவாக்கும் அதைப் பாதுகாக்கும் பிரதிநிதிகளான தாய்க்குணத்தை அசைத்துப் பார்க்கிறது கு. அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ மற்றும் கரிச்சான் குஞ்சுவின் ‘இடம்’. இயல்புநிலையிலிருந்து முரண்படும் பாத்திரங்கள் வரலாற்றில் நித்தியத்துவம் பெறுகின்றன. கு அழகிர்சாமியின் கதை எழுதப்பட்ட காலம் 1949. இந்திய நாட்டில் பெரும் பஞ்சம் 1946 பிறகு இல்லை என்ற மேலோட்டமான தகவல் இணையத்தில் கிடைக்கிறது. இந்தக் கதை 1946க்கு முன்னர் நிலவியப் பஞ்சக் கால பாதிப்பில் எழுதப்பட்டதாக இருக்கலாம்.

உயிர்த்திருத்தலின் ஆதாரம் பசி. வயிற்றுபசி சற்றே ஆசுவாசமானால் உடல்பசி. வயிற்றுத் தீ எல்லாப் புனிதங்களையும் துறக்க வைக்கும். அது தாய் ஒருத்தி ‘புழு அரித்த ஒரு சொத்தை வெள்ளரிக்காயை’ மகள் அறியாமல் ‘பாவம் மகளும் பசியில் தானே இருக்கிறாள் என்று அவளுக்கு கொடுக்க தோன்றாமல் தான் மட்டும் உண்டால் போதுமென்று உண்ணச் சொல்லும், அதே போலவே கன்னி மகளைப் பணம் பெற்றுக் கொண்டு வாலிப விருந்துக்கு அனுப்பி வைக்கும். நாற்பத்தை வயது தாய் “என்னைத் தின்று என் மகளை விட்டு விடுங்கள் என்று கதறவில்லை” மாறாக இந்த விஷயத்துக்கு உடன்பட மறுக்கும் மகளை “சண்டாளி! கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்து விடுவாய் போலிருக்கிறதே!” என்று திட்டுகிறாள். “இடம்” இதே விஷயத்தை இவ்வளவு அப்பட்டமாக இல்லாமல் நாசுக்காகச் செய்கிறது. அதுவும் உண்ண உடை உறைவிடத் தேவைகள் மீறித் தனது லௌகீகச் சுகங்களுக்காகத் தன் மகள் அவ்வப்போது வந்து அம்மாவுக்குக் காசு மழைப் பொழியும் ஒருவனுடன் கொஞ்ச நாள் இருந்து விட்டு போக வேண்டுமென்று அம்மா  தன் மகளிடம் எதிர்பார்க்கிறாள்.

கற்புடைமையைக் கட்டி எழுப்பும் பொதுக் குணத்தின் தொடர்ச்சியாக மகள்களுக்கு அன்னை விதிக்கும் கட்டுபாடுகளில் மிக முக்கியமான ஒன்று, தன் வீட்டு மகள் செல்ல வேண்டிய இடங்களை நிலப்பரப்பு எல்லைகளை வரையறுத்தல். சங்ககாலத்துத் தலைவி திணைப்புலம் காக்கச் செல்லலாம், தோழிகளோடு நீர் விளையாட நதி அருவிப்புலங்களுக்குச் செல்லலாம். அதைத் தாண்டி அன்னையின் கண்ணுக்குள் இருக்கும் தூரத்திலேயே அவள் நடமாட வேண்டும். இரவு பொழுதுகளில் களவொக்கம் நாடி தலைவி செல்வதை அன்னை தன்னால் முடிந்த அளவுக்குத் தடுக்கிறாள். தன் மகளோடு பிணைந்த இன்னொரு உடலாக உடனிருந்து மகளைக் காக்கிறாள். இந்த விதிமுறைகளைக் கரிச்சான் குஞ்சுவின் ”இடம்” தன் இஷ்டத்துக்கு மாற்றிக் கொள்கிறது. அம்மா பருவமெய்தி மகளை வீட்டின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் பொருட்டுப் பருவ வயது பையனோடு எங்கும் போக அனுமதிக்கிறாள். அவர்கள் நேரம் சென்று வீடு திரும்பினாலும் அவர்களைக் கண்டும் காணாமல் விடுகிறாள். அப்படி இருக்க ஊக்குவிக்கிறாள். அவர்கள் இருவரும் சகோதர சகோதரிகள் போல என்று பிறரிடம் பிம்பத்தை ஏற்படுத்தி வைக்கிறாள். ஆனாலும் அது மீறப் படவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறாள்.

தன் குறுமகளைத் தன்னுடைய வீட்டில் தறியிட்டிருக்கும் மகனுக்கு வேலை செய்வதிலிருந்து விலக்கி வேறொருவரிடம் வேலைக்கு அனுப்பப் போகிறேன் என்று மிரட்டும் அன்னைப் பாத்திரத்தைத் தனது “பைத்தியக்காரப் பிள்ளை” கதையில் வாழ விட்டிருக்கிறார் எம்.வி வெங்கட்ராமன். அப்படி அவள் தனது மகனிடம் மிரட்டல் விடுப்பது சகோதரி சகோதரனுக்குத் தொழிலில் உதவச் சம்பள உயர்வு வேண்டுமென்பதற்காக. அவளைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பிள்ளையும் சம்பாதித்துக் கொடுத்து அவள் உடல் வளர்க்கக் கடவுளால் கொடுக்கப்பட்ட வாழ்வாதாரங்கள்.

தாய்மை தன்னலம் மறந்த தியாகப் பிம்பம் என்னும் கட்டமைப்பைப் புரட்டிப் போட்டு அவர்களின் சுயநலத்தைக் காண்பிக்கிறது எம்.வி வெட்கட்ராமனின் பைத்தியகாரப் பிள்ளை கதையும் மற்றும் கலைச்செல்வியின் அன்னை கதையும். பைத்தியக்காரப் பிள்ளையில் வரும் விதவைத் தாய் தனது பிள்ளைகளுக்கு அவள் உழைத்துக் கஞ்சி ஊற்றுவதில்லை. மாறாக அவர்களின் உழைப்பை முழுமையாக அவள் சுரண்டிக் கொள்கிறாள். தான் பெற்று போட்ட புண்ணியத்துக்காகப் பதிலாக ஒவ்வொரு குழந்தையும் பாடுபட்டுத் தனக்குச் சோறு போடவேண்டும் என்று எதிர்பார்ப்பது சுயநலத்தின் உச்சம். பத்து பிள்ளைகளைப் பெற்றுக் கணவன் கண் மூடியதும் ஒவ்வொரு பிள்ளைகளையும் ஐந்து வயதாகும் போதே நெசவுத் தொழிலில் ஈடுபடுத்துவது அவர்களின் சம்பாத்தியத்தில் அவள் உடல் வளர்க்கவே.

கலைச்செல்வியின் அன்னைக் கதையில் வரும் தாய் தனது சுயநலத்துக்காகத் தன் மகனின் தொழில் லாபத்துக்காக அவன் சகோதரிக்குக் கொண்டு வந்த வரன் நோய்பாடுடையவன் என்றாலும், நேர்பார்வைக்கு அழகற்றவன் என்றாலும் பெண்ணுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ என்ற கேள்விக்கே இடம் வைக்காமலும், மகள் மனதளவில் இந்த வரனுக்கு உடன்படவில்லை என்றாலும் அந்த மாப்பிள்ளையை மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறாள். அதில் மகனிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. திருமண வயதை மெல்லக் கடந்து முதிர்கன்னியாகிவிட்ட மகள் தனிமையில் வாடக்கூடாது என்ற தாய்மை அக்கரையை மீறிய தன்னலம் “இந்தக் காலத்தில யாருக்குதான்டீ சக்கரை இல்ல..?” என்று மகளை சமாதானம் செய்ய எத்தனிக்கும் இடத்தில் வெளிபடையாகத் தெரியத் தொடங்கும் போது அன்னை என்ற புனிதப் பிம்பம் சல்லி சல்லியாக நொறுங்கிப் போகிறது.

அம்மா என்ற சொல்லைச் சொல்லும் போதே எழும் மென்மையும் தாய்பாசமும் பரிவும் எல்லாம் பிணைந்த ஏதோ ஒன்றாகத் தன் மகவை உயிரினும் மேலாகப் பாவிக்கும் குணத்தை உடைக்கின்றன ”திரிபுரம்”, ”பைத்தியக்காரப் பிள்ளை”, ”இடம்” மற்றும் அம்பையின் ”அம்மா ஒரு கொலை செய்தாள்” சிறுகதைகள்.

கரிசான் குஞ்சுவின் திரிபுரத்தில் தன் மகள் உடல் விற்றுப் பெற்றுத் தரவிருந்த சம்பாத்தியம் போய் விடுமோ என்ற எண்ணம் எழும் போது “நரசம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. பத்ரகாளி போல எழுந்தாள். வெங்கட்டம்மாவைக்கொன்றுவிடவேண்டும் என்றே தீர்மானித்து விட்டாள்” என்ற இடம் எல்லாப் புனித மதிப்பீடுகளையும் உடைத்தெரிகிறது. எம்.வி.வியின் பைத்தியக்காரப் பிள்ளைச் சிறுகதையில் பதிவாகியிருக்கும் அம்மாவோ இதற்கும் ஒரு படி மேலே சென்று “சினத்தில் தலையில் ஓர் ஓய்ச்சல் இருந்தது. சுருட்டிப் படுத்துத் தூங்கி விட வேண்டும். எழுந்திருக்கவே கூடாது” என்று மகனை உலகை விட்டே வெளியேற்றத் தூண்டுகிறாள். தன் மக்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பொதுப்படையான எண்ணத்தை எதிர்திசையில் பைத்தியக்காரப் பிள்ளைக் கதையில் வரும் தாய்ப் பாத்திரம் அவன் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் சென்று சின்னாபின்னம் செய்கிறது. அவள் தன் பற்களைத் தன் கணவன் செய்யும் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் கருவியாகப் பயன்படுத்துபவள். மகனிடம் தர்க்கம் செய்யும் போது அவளுடைய வார்த்தைகள் அவள் பற்களை விடக் கூர்மையாகிக் கொல்கிறது.

அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதை பருவமெய்திய பெண் தன் உடலும், அது தரும் உளைச்சல், வித்தியாசமான உணர்வு, உதிரப்போக்கால் ஏற்படும் பயம், பருவம் அடைந்த சமயத்தில் சுற்றியிருப்பவரும் பேச்சும் ஏற்படுத்தியிருந்த புதிர் உணர்வுகளை அம்மா மாற்றுவாள் என்று நம்புகிறாள். அவளுடைய தாய் எந்தச் சிக்கலையும் தீர்த்து வைக்கும் தன்மைக் கொண்டவள். சிறுவயதிலிருந்தே அவளுக்கிருக்கும் ஆதங்கம் எல்லாவற்றையும் மாற்றியவள் தனது தாய் தான். எனவே “வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள்” என்று ஏங்கிக் காத்திருந்தவளை “உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்” என்ற ஒரே நொடியில் அத்தனையையும் தலைகீழாக்குகிறாள். “அசுத்தங்களை எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானுகோடி அழகுகளைத் தோரணமாட வைப்பவள் அவள். சிருஷ்டி கர்த்தா” என்று தன் தாயின் மீது மகள் தெய்வீக ரூபத்தைக் கருணையூற்றைத் தீயிட்டுப் பொசுக்கிவிடுகிறாள். கதை சொல்லி சொல்வது போல அக்கனி அசுத்தத்தை மட்டுமல்ல சில மொட்டுகளையும் மலர்களையும் கூடப் பொசுக்கி விடுகிறது.

எந்த உறவும் ஒவ்வாத உறவாக மாறக் காரணம் பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் வெளிபடும் தருணங்களே. அது தாய்மை என்ற ஆயுதம் பின் ஒளிந்து கொள்ளும் போது அது உருவாக்கும் கையறுநிலை சொற்களால் காட்ட முடியாத உணர்வுநிலை. ”பைத்தியக்காரப் பிள்ளை” சிறுகதையில் வரும் தாய் தன் தலைமகன் குடும்பப் பாரத்தைப் பெரும்பகுதிச் சுமப்பதைக் கண்டு அவன் மேல் இரக்கம் கொள்வதில்லை. மாறாகத் தன்னுடைய வாழ்க்கையைப் பகிர நிச்சயித்தத் துணையை அவனது முதலாளி வழி தேடிக் கொண்டதும், அவன் திருமணத்துக்கென்று சிறுகச் சிறுகச் சேர்த்துச் செய்தத் தாலியும் பட்டுபுடவையும் பார்த்துப் பொறாமைப் படுகிறாள். மகனை மணக்கயிருக்கும் பெண் மீது மட்டும் அவளுக்குப் பொறாமையில்லை. தன்னை மீறி தானாகத் தேடிக் கொண்ட சம்மந்தம். அதனால் அவளுக்குத் தட்சணையாகக் கிடைக்கும் ரொக்கத்தை இழந்து விட்ட வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் வெடித்துக் கிளம்புகிறது. திருமணத்திற்கென ரொக்கமாக அவன் சேர்ந்த்து வைத்திருக்கும் பணத்தை ஏதோ காரணம் காட்டிப் பறிக்க அவன் வேலைக்கு இடையூறு செய்கிறாள். காழ்ப்புணர்ச்சியினால் நடக்காத திருமணத்தில் மகனின் மனைவியாக வர இருப்பவளை அவமதிக்கிறாள். இத்தனைக்கும் அந்த எதிர்வீட்டுப் பெண் பங்கஜம் கதையின் இறுதி வரியில் மட்டுமே உயிர்ப்பிண்டமாக வருகிறாள். மற்ற இடங்களில் பைத்தியக்காரப் பிள்ளையின் மனதின் நாயகியாக நற்குணங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளிலும், அவன் அம்மா வாயில் வரும் அபாண்ட வார்த்தைகளிலும் பாவப்பட்ட பெண்ணாகவும் வருகிறாள். தாய்மைத் திரிபின் முக்கியப் பிரதிநிதி பைத்தியக்காரப் பிள்ளையில் வரும் ராஜத்தின் அம்மா.

பெண்களில் இயல்பு நிலை திரிபுறுவதை ஆண்களை விடப் பெண்கள் மிக நுட்பமாக எழுதுகின்றார்கள். அதற்குக் காரணம் பெண்ணின் நுண்உணர்வுகளைப் பெண்ணாகவே உணர முடிந்த காரணமாக இருக்கலாம். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்கட்டுக் குலையாமல் இருக்கவும், முகமோ தலையோ வயதைக் காட்டித் தராமல் இருக்கவும் பெரும்பாடுபடுகின்றார்கள். தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆண்கள் ஒப்புடுகையில் தலைக்கு வண்ணமடிக்கும் சதவிகிதத்தில் பெண்கள் முன்னிலை வகிப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பெரும்பாலான பெண்கள் தங்கள் உண்மையான வயதை யாரும் கணித்துச் சொன்னாலோ அல்லது வெட்கமற்றுக் கேட்டாலோ கொஞ்சமும் சகித்துக் கொள்ளமாட்டார்கள்.

எல்லாப் பெண்களும் தங்கள் மனதில் என்றும் பதினாறை எட்டி அதன் பிறகு அதைத் தாண்டுவதே இல்லை என்பதை மிக மிக நுட்பமாக அசாதாரணமாகச் சொல்லி நகர்கிறது ரம்யாவின் “நீலத்தாவணி.” மைய்யத் தமிழகத்தில் பெண் தனது தலைமுடியைக் கொண்டையிட்டிருந்தால் அவளுக்கு வயதுக்கு வந்த பெண்பிள்ளை இருக்கிறதென்று அர்த்தமென்று ஒரு செவிவழிச் செய்திக் கேட்டிருக்கிறேன். இந்தக் கதை அந்தச் செய்திக்கு உள்ளொளி பாய்ச்சுகிறது. விரித்துக் கிடக்கும் சடை முடி இளமையின் இன்னொரு அடையாளமாக மாறுவது அந்தக் கதையில் ரசவாதம். அதே கதையில் பருவமெய்திய மகளிருக்கும் தாய் மார்கச்சையணியக் கூடாதென்று இன்னொரு தகவலும் ஊடாடி வருகிறது. இந்த இரண்டையும் இணைத்த சரடில் நீலதாவணியில் வரும் நாயகி தனது மார்கச்சையின் சரியான அளவை இதுவரை அம்மா தனக்குத் தேர்ந்தெடுத்துத் தரவில்லை என்பதும், அவள் தாவணியே அணியக்கூடாதென்று அம்மா தடைச் செய்து கொண்டிருந்ததையும் வைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் தாய்மையின் திரிபு நிலையைப் பார்த்துச் சற்று உரக்க நகைக்கிறது.

லாவண்யா சுந்தரராஜனின் “புறாக்களை எனக்குப் பிடிப்பத்தில்லை” கதையில் வரும் வயதான அம்மா தன் உடல் மீது அத்தனை பிரஞ்சையற்று இருக்கும் போது மகளுக்குக் கிடைக்கும் அசூகையான உணர்வும் பெண் தன் வயது பருவம் உடல் சார்ந்து கொண்டிருக்கும் பெரும் உவகைப் பிடிப்பின் நீட்சி. அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதையில் கதைசொல்லியைப் பார்த்து அவள் அம்மா “நீ இப்படியே இருடீம்மா பாவாடைய அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு…” என்று சொல்வது இதை ஒட்டித் தான்.

தாய் மகவுப் பிணைப்பு மகத்துவமானது. பிறந்ததிலிருந்தே தாய் தனது குழந்தைக்கு முதல் தோழியாகிறாள். குழந்தைக்கு எப்படி உண்பது உடுப்பது என்று சொல்லித் தரும் ஆசானாகிறாள். பலருக்கு அவர் தம் தாய் இக்கட்டான சூழலில் மனாசீகமாகவோ நேரலோ சொல்லி அரட்டக் கூடுமிடத்தில் இருக்கிறாள். அப்படிச் சொன்னால் அவர்களை ரட்சித்து காத்திடும் தெய்வம் போன்றவளாக இருக்கிறாள் என்று நம்பப்படுகிறாள். பெரும்பாலான தாய் மகவு உறவுகளில் சிறு சிறு உரசல்கள் இருந்தாலும் அது மிகவும் மேம்பட்ட உறவுப் பிணைப்பாக இருக்கும் என்பதே எதிர்ப்பார்ப்பு. ஆனால் தாய் தன் இயல்புகளில் இருந்து மீறியிருக்கும் அதே நேரம் அந்தத் தாயின் மகவுகள் அவளை நோக்கி எரியும் கணைகள் அதைத் தாண்டியக் குரூரமாக இருக்கின்றன. பைத்தியக்காரப் பிள்ளையின் கதைசொல்லி தனது தாயைப் பின்வருமாறு நினைக்கிறான். “பெண்களும் பிள்ளைகளும் சம்பாதித்துப் போட இவளுக்குச் சதைக் கூடிக் கொண்டே போகிறது. நாள் முழுக்கக் கொறிக்கிற கொழுப்புத் தான் இவளை இப்படிப் பேச வைக்கிறது” அம்மாவின் உணவு முறைகளை நோக்கி மகன் நினைக்கும் இந்த வார்த்தைகள் அம்மாவுக்கு மகன் இளைத்தவனல்ல என்ற எண்ணத்தையே உண்டாக்குகிறது.

“இடம்” கதையில் லல்லி தன் அம்மாவை “நீயும் நானும் மகாபாவிகள்” என்று அரிவாள் மனையால் அம்மாவை வெட்டுகிறாள். “திரிபுரம்” கதையில் வெங்கடம்மாத் தன் தாயை மூக்கில் குத்தித் தாய்க்கு ரத்தமே வழிகிறது. அன்னை சிறுகதையில் தன் அன்னையின் சாவில் அழும் போது “அகம் விரிந்து விரிந்து மகிழ்வைப் பருகித் தன்னை நிறைந்துக் கொள்ளத் தொடங்கியது” என்று எழுதப்பட்டுள்ளது. புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை கதையில் வரும் பவித்ரா சதா சர்வகாலம் தன் அன்னைக்குச் சுத்தம் உடல் சார்ந்த அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். தாய் மகளுக்குச் சொல்லும் கட்டுப்பாடு ஒழுக்கம் சார்ந்த அறிவுரைகளைப் போலவே இந்த அறிவுரைகள் அம்மாவுக்கு வழங்கப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் சுவாரஸ்யமானவை.

லாவண்யா சுந்தர்ராஜன்

பெண்கள் தங்களது உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்றால் பைசாசம் போல மாற்றமடைவது உண்டு. ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பூதகரமாக்கிவிடுவது. சம்மந்தமே இல்லாமல் சண்டைக்கு அலைவது. இட்டுகட்டிப் பேசுவது என்ற எல்லாமும் பைசாசம் போல் திரிந்த பெண்ணின் குணம். பைத்தியக்காரப் பிள்ளைச் சிறுகதையின் அம்மா அப்படிப் பைசாசம் பிடித்தவளாகவே வருகிறாள். சின்னஞ்சிறு மகளுக்குப் பழையதை உண்ணக் கொடுப்பவள் தனக்குத் தோசையும் சாம்பாரும் வாங்கி வரவேண்டும் என்று சண்டையிடுகிறாள். கோப மிகுதியின் கடிப்பாயா என்று மகன் கேட்பதற்கு என்னை நாயென்றச் சொல்கிறாய் என்று சண்டையிடுகிறாள். தேவையே இல்லாமல் எதிர்வீட்டுப் பெண்ணை மேனாமினுக்கி என்கிறாள். அவளைத் திருமணம் செய்தாள் கொலை விழும் என்று மிரட்டுவது அதே பைசாசத்தின் கைவேலை தான். மேலே சொன்ன எல்லாவற்றையும் அடித்து நொருக்கிச் சாப்பிடும் அளவுக்கு “உன்னைப் பாடையில் ஏத்த” என்று ஏசுகிறாள். இவை அனைத்துக்கும் பிண்ணனியாக இருப்பது இப்படி அவள் மாறுவதற்கு முன்னாள் அவள் பட்ட துயரங்களாக இருக்கும் என்று ஒரு சிறிய ஆறுதலை நோக்கி மனம் செல்லாமல் இல்லை. அதற்கான உளவியலை ஆராயும் போது கதையில் கதைச் சொல்லி அம்மாவைக் கொடூரியாகச் சித்திரிக்கிறாள் சதா அவளைக் கரித்துக் கொட்டுகிறார் “அப்பா இருந்தவரை எலிக்குஞ்சிப் போலிருந்தவள், அப்பா போனவுடன் பெருச்சாளி போல் ஆகிவிட்டாள்.” என்ற இடத்தில் அதுவரை ராஜத்தின் அம்மாவாக வரும் அந்த அம்மாவின் மீதிருந்த வெறுப்பெல்லாம் போய்ச் சிறு கரிசனம் உருவாகிறது. ராஜத்தின் அம்மாவை அவன் அப்பா குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். யோக ஜாதகமுள்ள பிள்ளைப் பெறச் சொல்லி அவளைப் பத்துப் பிள்ளைகள் பெற வைக்கிறார். பத்தாவது பிள்ளையை மனைவி பெற்ற பின் செத்தும் போகிறார். பத்துப் பிள்ளைப் பெறும் வரை அவள் எலிக்குஞ்சுப் போலிருந்திருக்கிறாள். அவளுக்குப் பசிக்குச் சரியான உணவு கிடைத்திருக்குமாத் தெரியவில்லை. இந்த இடத்திலிருந்து அந்த அம்மாவின் மீதான விசாரணை வேறு விதமாக உருகொள்கிறது. கதையில் துர்நிகழ்வாக ஆகிவிடும் தருணம் ராஜம் தனது வருங்கால மனைவிக்கென்று சேர்த்து வைத்திருக்கும் பட்டுப் புடவை, தாம்புகயிறுச் சங்கிலி, பொன் தாலி எல்லாம் அவள் தானே துப்பறிந்துக் கண்டறிய வேண்டியிருக்கிறது என்றால் பாவம் அந்த அன்னையின் நிலை அந்த வீட்டில் என்ன? அவளுக்குத் தன் பிள்ளைகள் மீது எந்தப் பாசமும் ஏற்படாமல் அவர்கள் அனைவரும் அவளுக்குச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டுமென்ற நிலைக்குத் தள்ளியது அவளது முற்காலக் கசப்பனுபவங்கள் அன்றி வேறெதுவாக இருக்க முடியும்.

கலைச்செல்வியின் சிறுகதை அன்னையில் வரும் தாயின் நிலையோ அதை விடக் கொடூரம் தனது மகனின் தொழில் முன்னேற்றத்துகெனத் தனது மகள் வாழ்க்கையைப் பிணைகாக வைக்க வேண்டியிருக்கிறது. அந்தத் திருமணம் முறிவுறும் எந்த இக்காடான சூழலிலும் உடன் பிறக்குகளின் உதவி கிடைக்காமல் அந்த ஆதங்கத்தை வெளிபடுத்தினால் அதை எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருக்கிறாள். மகளுக்கு இது சரித்திரம் அறிந்திடாதத் துரோகமாக இருந்தாலும் அன்னை ஆறுமாதம் நடையுடையில்லாமல் இருந்து இறந்தால் என்பது கதைசொல்லிக்கு அன்னை இறந்த பின்பே தெரிகிறது. அப்படி ஒருவேளை இறுதிகாலத்தில் இப்படி ஆனால் மகனும் அவன் மனைவி தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும், அதனால் அவனுக்கு லாபம் தரும் செயல்களைச் செய்வதும், அவனுக்கோ அவன் மனைவிக்கோ ஒரு அல்ப ஆசுவாசம் கிடைக்குமென்றால் மகளுக்குப் பரிந்துப் பேசிப் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்பதே சராசரி அன்னையின் நோக்கமாக இருக்கக்கூடும். இந்த உளவியலில் எந்தத் தவறுமில்லையே. போலவே திரிபுரத்தில் வரும் தாய்த் தன் மகளையும் தன்னையும் வயிற்றுபசியிலிருந்து காத்துக் கொள்ள அந்த நிலைக்கு இறங்குகிறாள். இதிலென்ன தவறிருக்க முடியும்? அப்படியொரு பஞ்சமும், கடன் தொல்லையால் வீடு விற்று வேறு மாநிலம் தேடிப் பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு, கௌவுரமான தொழில் செய்ய வழியில்லாமல் போனது சமூகச் சாபம் தானே அன்றி அங்கே தாய்மை என்ன செய்யமுடியும்? இடம் கதையில் வரும் ராஜம் அவளுடைய புருஷர் பரமசாது. செட்டியார். ரொக்கக்கடை குமாஸ்தா. சம்பளத்தையும் தீபாவளி இனாமையும் தவிர வேறு எந்தச் சலுகையையும் எதிர்பார்க்க மாட்டார்.

இப்படிப்பட்ட தாய் தனது மகள்களை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க நினைத்து அதற்காக வழிமுறைகளைச் செயல்படுத்துவது அத்தனையொன்றும் கொலைபாதகமில்லை என்றே எனக்குப்படுகிறது. பிரச்சனை எல்லாம் நமது கட்டமைப்பின் மேல் இருக்கிறது. தாய்மை என்பதை போற்றத்தகு புனிதமாகக் கட்டியமைத்த சமூகம் அவர்களும் சாதாரணப் பெண்களே இயல்பாகத் திரிபு நிலையும் கொண்டவர்கள் என்று யாராவது சொல்லும் போது பதறுகிறது? ஒருவேளை இந்த உளவியல் அலசல் கூட ஒருவிதத்தில் தாய்மையைப் புனிதப்படுத்தும் பிம்பம் தானே?

*

லாவண்யா சுந்தரராஜன் – தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *