எண்டபள்ளி பாரதி கதைகள்

(தமிழில்: அவினேனி பாஸ்கர்)

எண்டபள்ளி பாரதி

எண்டப்பள்ளி பாரதி தெலுங்கு மொழி எழுத்தாளர். மார்ச் 22,1981 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே நிம்மனப்பள்ளி வட்டம், திகுவபுருஜு என்ற கிராமத்தில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை படித்தார்.

சிறு வயதிலேயே தாயார் இறந்துவிட, பாட்டியால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். 25 ஆண்டுகளாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் ‘நவோதயம்’ என்ற பத்திரிகைக்கு  நிருபராகவும், இணையாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். பத்திரிகை வேலை, வீட்டு வேலை, விவசாய வேலை, மாடு மேய்க்கும் வேலையோடு, விவசாயக் கூலி வேலைக்கும் செல்கிறார். பத்திரிகை வேலைக்காக தொடர்ந்து பல கிராமங்களுக்கும், மாவட்டத் தலைமையகமான சித்தூருக்கும்,  திருப்பதிக்கும், பத்திரிகையாளர் மாநாடுகளுக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் செய்கிறார். கிராமத்தில் இயற்கையோடு வாழும் பாரதி, ஒரு இயல்பான கதைசொல்லி. அந்த வட்டாரத்தின் கலாச்சார அடையாளங்களாகத் திகழும் ஆடல், பாடல்களையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் பின்புலமாகக் கொண்ட கதைகளை எழுதுகிறார். அவரது கதைகள் பல்வேறு வார, மாத, தினசரி மற்றும் ஆன்லைன் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. பல கதைகள் பரிசுகளை வென்றுள்ளன.

ஏழைப் பெண்களின் குரலாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கப்பட்ட நவோதயம்  பத்திரிகையை தொடர்ந்து நடத்துவதில் பாரதியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவர் அந்தப் பத்திரிகையை கிராமப்புற ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த பத்திரிகையை மாவட்டத்தின் அனைத்து மகளிர் உதவிக்குழுக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கிராமப்புறங்களில் அனைவரும் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதை நடைமுறைப்படுத்த பல்வேறு புதிய யோசனைகளை முன்வைத்தார். பத்திரிகை மூலமாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் சமூக ஆய்வுகளை நடத்தினார். 750 பிரதிகளுடன் தொடங்கிய இந்த இதழ் தற்போது 40,000 பிரதிகளை எட்டியுள்ளது. ஆந்திரத்தின் தென் மாவட்டங்களில் சுய உதவிக் குழுக்களால் படிக்கப்படுகிறது. 25 ஆண்டுகால நீண்ட பயணத்தில், அந்தப் பத்திரிகை சர்வதேச மற்றும் தேசிய அளவில் புகழையும் கௌரவத்தையும் பெறுவதற்கு அவர் கடுமையாக உழைத்துள்ளார். பத்திரிகைத் துறையில் பல விருதுகளையும் வென்றுள்ளார். மாநில அளவிலான SERP அமைப்பால் தேர்வு செய்யப்பட்ட பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இரு தெலுங்கு மாநிலங்களிலும் மைக்ரோ ஃபைனான்ஸ் குறித்த 500 ஆய்வுக் கட்டுரைகள்(case studies), சமூகத்தின் கீழ் அடுக்குகளிலிருந்து கல்வியாலும், சிறுதொழில்களாலும் பொருளாதார ரீதியில் வளர்ந்த பெண்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள், விவசாயிகளுடன் இணைந்து பல்வேறு இயற்கை வேளாண்மை முறைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள், கதிரியில் பெண்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வறிக்கை, எம்.பி. தொகுதி நிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த அறிக்கைகள், அரசின் ‘பிரஜ்வலிகா’ திட்டத்தின் கீழ் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் குறித்த ஆய்வறிக்கைகள், ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் நடந்த சாதி மோதல்கள் குறித்து அவர் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

சமூகப் பிரச்சினைகள் குறித்து பாரதி பல குறும்படங்களை எடுத்துள்ளார். சிறப்பு பொருளாதார மண்டலம் (சத்யவேடு), காசநோய், பெண்கள் கடத்தல், மணல் பரிவர்த்தனை, நவோதயம் இதழ், குழுக்களில் இணைந்து வளர்ச்சியை அடைந்த பெண்கள் குறித்து என பல குறும்படங்களை அவர் எடுத்துள்ளார். “ராயி பலிகின ராகாலு” என்ற திரைப்படம் இயக்கினார்.

எழுத்தாளராக இதுவரை, அவர் எழுதிய கதைகள் ‘எதாரி பதுகுலு’, ‘பதுகீத்த’, ‘ஜாலாரி புவ்வுலு’ மற்றும் ‘தேவ ராஹஸ்யாலு’ என்ற கதைத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘ஜக்கீக்கு’ நாவல் வெளியாகியுள்ளது. அவர் மதனப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியின் பேசும் பேச்சு மொழியில், அழகான தனித் தெலுங்கு சொற்களில் எழுதுகிறார். அவரது கதைகள் உழைக்கும் ஏழை பெண்களின் போராட்டங்கள், அவர்களின் தனித்துவமான கலாச்சாரம், சமூக அக்கறைகள் மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளை சித்தரிக்கின்றன. இதுவரை அவரது படைப்புகள் கிடுகு ராமமூர்த்தி விருது, சித்தூர் 2018, டாக்டர் வி. சந்திரசேகர ராவ் இலக்கிய விருது, குண்ட்டூர் 2019, மதுஸ்ரீ கதா விருது, பள்ளிபாலம், காக்கிநாடா 2024 உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளது. ’எதாரி பதுகுலு’ என்ற நூலிலிருந்து நீலிக்காக நான்கு கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

-அவினேனி பாஸ்கர்

*

எங்கண்ணன் படிப்பு (1)

“அம்மா, அம்மா… தூங்கி ஏந்து ஆத்துக்கு வெளிக்கி போயி, அங்கியே கழுவிகினு, கரயில வேப்பங்குச்சி ஒட்ச்சிகினு பல்லே தேச்சிகினே வந்துனு இர்ந்தேன். என் பின்னால திட்டோள்ளபள்ளி முனுசாமண்ணன் வேவமா வந்துனுகீறாரு. ‘ஓ முன்சாமிண்ணா, என்னாணா பொழுதால எங்க செக்கிலீரு ஊட்டாண்டிக்கி வந்துனுகீறிங்க?’ அப்பிடீன்னே கேட்டன். ‘ஒண்ணும் இல்லடா, எங்கூர்ல கௌனிகாரமூட்ல பசுமாடு செத்துபோச்சி. ஊங்கூரு செக்கிலியானுக்கு சொல்ட்டு போலாம்னு போயினுகீறண்டா’ அப்பிடீன்னு சொன்னாரு. நம்மளும் கறிதுண்டம் எட்த்தார்துக்கு போலாம்மா”ன்னு மூச்சி வாங்கினே ஓடியாந்து அம்மாகிட்ட சொன்னான் எங்கண்ணன். அண்ணன்னா, பெரிம்மா பையன். எங்கூட்ல இர்ந்துகினு பட்சினுகீறான்.

கறிதுண்டம் பேரு கேக்க சொல்லவே எனுக்கு வாயில எச்சிலு ஊருச்சி, எந்திர்சி அண்ணன் கிட்ட போனன்.

“நம்ப கொம்பு செக்கிலியருடா, நம்புளுக்கு எதிலியும் அதிகாரம் இல்ல. நம்மூர்ல ‘ஊருசெக்கிலிய’ருங்களுக்குதான் உரிம. அவங்க குட்த்தா அப்ப நம்ம வாங்கிகிலாம்”  அப்பிடின்னு சொல்லிச்சி அம்மா.

“நமகென்னாத்துக்கும்மா இல்ல அதிகாரம்?” நான் கேட்டன்.

“ஊர்ல சாவாவட்டும், கல்யாணமாவட்டும் எது நட்ந்தாலும் அவங்கதான் போயி மோளம் அடிப்பாங்க. அதுக்குதான் ஊர்ல பசுமாடு செத்துபோனா அவங்கதான் போயி எட்தாந்துகீனும்” அப்பிடின்னு சொல்லிச்சி அம்மா.

எனுக்கும் எங்கண்ணனுக்கும் மாட்டுகறிதுண்டங்கள நெனக்கிவே வாயில எச்சிலு ஒழிகினு கீது. வேவமா ஓடி ஊருசெக்கிலியாருங்கு தெருவுக்கு போனோம். மல்லதாத்தா ஊட்டாண்ட குர்ரப்பன், சின்னன், மல்லதாத்தா, வெங்கடதாத்தா எல்லாரும் பாறாங்கல்லுமேல ஒக்காந்துகினு பேசினுகீறாங்க. ஒரோரு ஊடா தேடிகினே அங்க வந்த முனுசாமண்ணன் அவங்கள பாத்து, “டேய், எங்கூர்ல பசுமாடு செத்துபோச்சிடா. நீங்கெல்லாம் போயி எட்த்தாந்துகோங்கடா”ன்னு சொல்ட்டு போயிட்டாரு.

அந்த பேச்சோடவே அங்கிர்ந்த எல்லாரும் எந்திர்ச்சி, அவங்கவங்க ஊட்டுக்குப்போயி பையி, கத்தி, அருவாளு எட்த்துகினு திட்டோள்ளபள்ளிக்கி கெளம்பனாங்க. நானும் எங்கண்ணனும் எங்கம்மாகிட்ட சொல்லாம ஆளுக்கொரு பையெட்த்துகினு அவங்க பின்னாலயே போனோம்.

அங்க போயி பார்த்தாக்கா செத்துகீறது பெரியபசுமாடு. கொல்லியாண்ட சாமரசோளம் வெதச்சிர்ந்தாங்களாம், எளம் பயிர மேஞ்சி ஜன்னிவந்து வயிறு வீங்கி செத்துபோச்சாம். ‘தங்கமாட்டம் பசுமாடு செத்துபோச்சி’ன்னு மாட்டுகாரங்க அழுதுக்குனு இர்ந்தா எங்காளுங்களுக்கு சந்தோசமா கீது.

கௌனிகாரங்ககிட்ட பெரிய நொகதடி, கவுறு வாங்கினு, பசுமாட்டு காலுங்கள நொகதடிக்கி கட்டி, நொகதடிய எட்த்து தோளுமேல தூக்கினு கொரத்தாத்துக்கு போனாங்க. நாங்க அவங்க பின்னாலயே போனோம்.

கொரத்தாத்து பெரிய பாறயாண்ட பசுமாட்ட எறக்கி வெச்சி, அற்த்துனு கீறாங்க. சின்னன் கழுத்த அற்த்து தூரமா வெச்சாரு. குர்ரப்பன் தோலு உற்ச்சினு கீறாரு. வெங்கடப்ப தாத்தா வயித்த மெதுவா அற்த்து, உள்ள இர்க்குற போட்டிய தூரமா தள்ளிட்டு, நெஞ்சுகறி, இடுப்புகறி, தொடகறி, நெஞ்சாங்கொல, ஈரலு, கல்லு… ஒன்னொன்னா அற்த்து பக்கத்துல வெச்சினுகீறாரு.

அறக்குற வேல முட்ஞ்சிதுக்கப்புறம், அவங்கெல்லாம் பங்குபோட்டுனு கீறாங்க. பக்கத்துல ஒக்காந்துனுகீற எங்கள கண்டுக்கவே இல்ல. நமக்கு எங்கடா துண்டங்க கெடிக்க போதுன்னு வெச்சகண்ணு வாங்காம ஆசயா பாத்துனுகீறோம்.

குருத்தெலும்பு கோசரம், ஈரலு கோசரம், நெஞ்சாங்கொல கோசரம், ‘எனுக்கு கம்மியா போட்டியே’ ஒர்த்தரு, ‘எனுக்குதான் கம்மியா கீது’ன்னு இன்னொர்த்தரு. இப்பிடியே எல்லாரும் பேசிகினே சண்டபோட்னுகீறாங்க. இதான் சான்சுன்னு நாங்க மொல்ல போயி கெட்டியா இர்ந்த பின்னங்காலு தொடகறி, விலா எலும்புகறி எல்லாம் எட்த்துகினு, பையில போட்டு, பையிங்கள முள்ளு பொதர்ல ஒள்ச்சிட்டோம்.

பங்கு செரியா வர்லன்னு மாட்டெலும்ப எட்த்துகினு சண்ட போட்டுகீனாங்க. பாதி கறிதுண்டங்க எட்த்துகினு, பாதி அங்கியே அலங்கோலமா உட்டுட்டு ஊட்டுக்கு போயிட்டாங்க.  கீழ கெட்ந்த கறியெல்லாம் தூக்கி பைலபோட்டுகினு ஊட்டுக்கு எட்த்தாந்து அம்மா கைல குட்த்தோம். எங்க அம்மா, அப்பா ரெண்டுபேரும் கறிய சின்ன சின்னு துண்டுங்களா அறிஞ்சி, பாறாங்கல்லுமேல போட்டு வெய்ல்ல ஒணத்தி, பெரிய பானயில போட்டு வெச்சாங்க. எங்கூட்டுல அப்போ ஒரு மாசத்துக்கு தெனிக்கும் வெறும் துண்டங்க கொயம்புதான்.

எங்கூட்டல எங்குளுக்கு துட்டு குடுக்கமாட்டாங்க. ஊட்டுல கூட தூண்றதுக்கு எதுவும் இர்க்காது. நானு, எங்கண்ணனும் இஸ்கூலுக்கு போனா, பசங்க எல்லாம ஒன்னுக்கு மணியட்ச்சப்போ, கடயிலயோ, ஊட்டுலிர்ந்து எட்த்தாந்தோ ஏதோ ஒன்னு துண்ணுனு இர்ப்பாங்க. எங்களுக்கு ஒன்னும் இர்க்காது. இப்பு அந்த கவலயே இல்ல. காலீல எங்கம்மா களிகிண்டிட்டு, கொயம்பு ஆக்கிட்டு வெளில வேலை செஞ்சினிர்க்கும். அப்போ எங்கண்ணன் ஊட்டுக்குள்ள போயி சட்டிபானைங்க கீழ இர்க்கற பானைலிர்ந்து கறிதுண்டங்கள ஒரு புடி எட்த்துகினு, அடுப்புல போட்டு நெருப்புல சுட்டுகினு, ஜோபீல ரொப்பிகினு வழியெல்லாம் துண்ணுகினே இஸ்கூலுக்கு போவான். எனுக்கும் ஒன்னு ரெண்டு துண்டு குடுப்பான்.

எப்பிடி வாசன புட்சானோ தெர்ல, காப்புகார(உயர் சாதி) ஊட்டு நாகராஜன் எங்கண்ணன் பின்னாலயே வந்து ‘டேய், எனுக்கொரு துண்டு குட்றா’ அப்பிடின்னு நச்சரிச்சிகினே இர்ப்பான். போனாபோவுதுன்னு ஒன்னு குட்த்தா, அத துண்ட்டு திரிப்பியும் வந்து கேட்டுனிருப்பான். எங்கண்ணன் ஒரு துண்டுக்கு மேல குடுக்கமாட்டான்.

ஒருவாட்டி இஸ்கூல்ல பூனக்கண்ணு வாத்தியாரு பாடம் சொல்லிங்கீறாரு. எங்கண்ணன் தலகுனிஞ்சிகினு மொல்லமா ஒரு துண்டம் எட்த்து வாயில வெச்சிகீனான். அத்த இந்த நாகராஜன் பாத்துட்டான். அவனுக்கு குடுக்கல அப்பிடீன்ற கோவத்துல ஏந்துகினு, “சார், இவன் இஸ்கூல்ல கறிதுண்டுங்க துண்ணுனுகீறான் சார்” அப்பிடீன்னு வாத்தியாருக்கு போட்டுகுட்த்துட்டான்.

வாத்தியாரு எவ்ளோ ஒயரம் கீறாரோ அவ்ளோ ஒயரம் கீது கைலகீற கொம்பு. அத எட்த்துகீனு “எழுந்துர்ரா” அப்பிடீன்னாரு. எங்கண்ணன் பயிந்துகீனு ஏந்ச்சாம்.

“என்னாதுடா அது?” அப்பிடீன்னு கேட்டாரு. எங்கண்ணன் அழுக அடக்கிகினே நின்னுனுகீறான்.

“சார், மாட்டு கறி சார்” அப்பிடீன்னு சத்தமா சொன்னான் நாகராஜன். பசங்கெல்லாம் சத்தமா சிர்ச்சாங்க.

வாத்தியாரு கைல இர்க்கற கொம்பால அட்ச்சி “மாட்டுகறிய இஸ்கூலுக்கு எட்த்தார்ரியாடா செக்கிலிமகனே. அதுனால தாண்டா செக்கிலியானுங்கள தூரமா வெக்கிணும்னு சொல்ற்து” அப்பிடின்னு பொளந்து கட்டி வெளிய அனுப்பிச்சிட்டாரு.

வாத்தியாரு அட்ச்ச அடிக்கு பயிந்துகீனு அன்னிக்கே நின்னுட்டான், அதுகப்பறம் இஸ்கூலு பக்கமே போல எங்கண்ணன். கொதிக்கிற வெயில்ல கூலி வேல செஞ்சிகினுகீற எங்கண்ணன பாக்க்சொல்ல எல்லாம் ‘அன்னிக்கிகண்டி அந்த வாத்தியாரு அடிக்காம, திட்டாம இர்ந்திர்ந்தா எங்கண்ணன் கூட நல்லா பட்ச்சிட்டு நெகல்ல வேல செஞ்சினு இர்ந்திருப்பான்’ அப்பிடின்னு தோணும் எனுக்கு.

மூலம்: மாயன்ன சதுவு, 2016

***

நெஞ்சுலர்ந்த பொழப்பு (2)

இந்த வருசம் அடிச்ச மாதிரி வெயில் எந்த வருசமும் இல்ல. இந்த வெயிலுக்கு பயந்துகினு தினோம் கூலி வேலைக்கி போற நாங்க கூட மூனுவேளைக்கி ஒரு வேள சாப்ட்டா போதுமுன்னு ஒரு நாளு வுட்டு ஒரு நாளு வேலைக்கி போயினு இருக்கிறோம். செவ்வாகெழமைன்னா பொம்பளீங்க ஊட்லயோ இருந்து ஊட்டு வேல செஞ்சினு இருந்தா, ஆம்பளைங்க தான் சந்தைக்கு போயி வருவாங்க.

அன்னிக்கி செவ்வாகெழம. காத்தால களிகிண்ட்ற நேரத்துக்கே பாறைங்க பொளக்குறமாரி வெயில் அடிச்சினு இருக்குது. சீக்கிரமா அடுப்பாங்கரைல வேலைய முடிசிகினு டி.வி முன்னாடி ஒக்காந்தேன். டி.வில ‘ஆ நலுகுரு’ சினிமா வந்துனு இருக்குது. மனுசனுக்கு வாழறப்பன்னாலும், சாகறப்பன்னாலும் நாலு ஆளு தொணையிருக்கணுமாம். நெஜந்தான் நெனச்சிகினே கம்முனு பாத்துகுனு இர்ந்தேன். திடுதிப்புனு கரண்ட்டு போயிடிச்சி. என்னாடா இதுன்னு வேர்த்துகினே நாலு செவுத்தயும் ஆராய்ஞ்சு பாத்துகுனிர்ந்தேன். மூலைங்களெல்லாம் ஒரே ஒட்டட புட்சிபோயிருக்குது. ஒட்டட அட்சி ரொம்ப நாளாச்சி. ‘வேலைக்கி போயி வந்து டி.வி முன்னால ஒக்கார்ரதான் வேல, பின்ன ஊடு எப்டி இருக்கும்?’ அப்பிடின்னு நென்சிகினே ஊட்டுகுள்ள கசகசன்னு இருக்குதேன்னு வெளியே போனேன்.

பேருக்குதான் நூறு ஊடு இருக்குற ஊரு எங்களுது. தெருவுல ஒரு காக்கா குருவிகூட இல்ல. இன்னிக்கே இல்ல, இந்த டி.வி வந்தப்பத்திலிர்ந்து இப்பிடிதான். பகலாவட்டும், ராத்ரியாவட்டும் ஊட்டு வெளியில ஒரு தலயும் தெம்படாது. இத்தினி பேரு இருக்குற ஊர்ல எல்லாரும் ஒண்டியாளாயிட்டம்.

எங்க தெருவு கடைசீல ஒரு புங்கமரம் இருக்குது. அது கீழ பத்து பதனஞ்சு பேரு ஒக்காரலாம். நானு போயி அந்த மரத்துகீழ ஒக்காந்தேன். புங்கமரம் பெத்த தாயிமாதிரின்னு சொல்வாங்க பெரியவங்க. அது நெகலு அப்டி இருக்கும். சொக்கற மாதிரி ஜில்லுனு காத்து உடம்பெல்லாம் தடவுது.

அப்போதான் எங்க தெரு பொம்பளைங்க, சூட்டுக்கு தாங்காம புத்துலிர்ந்து வெளியவர்ற பாம்புங்க மாதிரி ஒர்தொர்த்தரா வெளியவர்றாங்க. ஊட்டு முன்னாடி நின்னுகினு சுத்திமுத்தி பாத்துட்டு மரத்துகீழ இர்க்கிற என்னாண்டக்கி வந்தாங்க. ஒரு பத்து பேரு கிட்ட சேந்திருப்பாங்க.

எங்க நாத்தனாரு வந்தது வராததுமா “நல்ல நாடகம் போயினிர்ந்துச்சி. பாழாபோன கரண்ட்டு போயிர்ச்சி. எனுக்கு நெஞ்சில பாறாங்கல்லு வீந்தமாதிரி ஆயிட்சி”ன்னு சொல்லிகினே வந்து ஒக்காந்துகீனா. நாங்க ஒர்த்தரு மூஞ்ச ஒர்த்தரு பாத்துகினே பேசி குசலம் விசார்ச்சிகினோம்.

நாங்க எல்லாருமே ஒரே ஊரு, ஒரு தெரு காரங்கதான். பக்கத்து பக்கத்துல இர்ந்தாலும் பேசாம கொள்ளாம போயிட்சின்னா டி.வி எங்கள எப்டி ஊட்லயே கட்டி போட்டிருக்குதோ புரிஞ்சிருக்கும். டி.வில வர்ற பொம்மைங்க எங்கள எப்டி ஆடவெச்சா அப்டி ஆடினுகீறோம் நாங்க. அதுங்க சிரிச்சா சிரிச்சிகினு, அழுதா அழுதுகினு இருக்கிறமேகாண்டி நாங்க மனுசங்களோட பேசர்துக்கு மறந்துட்டோம். கரண்ட்டு போனதுகூட நல்லதா போச்சு. இப்டியாவது பொம்பளைங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து கொழம்பென்னா, ரசமென்னான்னு பேசினுகீறோம்.

பேசினிர்க்கசொல்லவே எங்கி ஜெயா சித்தி முந்தானைய போர்த்தி சுத்திகினு, மொல்லமா இஸ்துகினு இஸ்துகினு நட்ந்து வந்து ஒக்காந்தாங்க. “என்னா சித்தீ, ஆளு டல்லாகீற?” அப்டீன்னு கேட்டேன்.

“ஒரு வாரமா அதுக்கு ஜொரம்” அப்டீன்னு யாரோ சொன்னாங்க.

“அப்டியா சித்தீ? ஜொரமா? எனுகு தெரியாதே!” அப்டீன்னேன்.

நான் அப்டி கேட்டனோ இல்லியோ சித்தி கொரலு கம்மி, “நான் செத்தப்பறம் கேட்டிருக்கலாம்… இப்ப கேட்டுங்கீற? ஒரு வாரமா ஏந்துக்கவேயில்ல, பட்த்த படுக்கையாகீறேன்”னு சொல்லிச்சி. எனுக்கு தூக்கிவாரி போட்டுச்சி. நான் ஒண்ணுமே பேசல. சித்தியே பேசிச்சி.

“ஊர்ல இத்தினி பேரு இருக்கறாங்க. இருக்கிறியா செத்தியான்னு கேட்கிறவங்கில்ல. ஜொரம் அடிச்ச மூணுநாலு நாளு பச்சதண்ணி தவர வயித்துகுள்ள ஒண்ணும் போல. குளிரெடுத்துகினு நடிங்கினே பாயில சுருண்டுகினு இர்ந்தேன். ஏந்துகீர்துக்கு கூட ஒடம்புல வலுவில்ல. பாத்துகீர்துக்கு ஊட்ல ஒர்த்தரும் இல்ல. அக்கம் பக்கத்து ஊட்டுகாரங்க யார்னா வந்து தொண்டையில ஒரு வாயி தண்ணி ஊத்துவாங்கனு பாத்தா அதூம் இல்ல. மூணுநாளா தொர்ந்து போட்ட கதுவு தொர்ந்தே இர்ந்திச்சி. ஒர்த்தரு வந்து என்னா ஏதுன்னு பாக்கல.

உள்ளயே இர்ந்தா யாருக்கு தெரியும்னு, மூணாநாளு தவந்துகினே வந்து ஊட்டு முன்னால பட்த்திகினேன். தெருவுலு போறவங்க வெட்டி கீசிட்ற வேலைக்கி போறமாதிரி, மூஞ்சி மேல துணி போட்னு போறாங்க. திரும்பி பாத்த ஒரு பொம்பள கூட ‘யாம்மா போத்திகினு நடுங்கினுகீற? ஜொரமா? அதுகிட்ட யாம்போன? ஆசுபத்ரிக்கி போவேண்டிதுதானே?’ அப்பிடீன்னு தூரமாவே எகத்தாளம்பேசிட்டு போனாளேகாண்டி, கிட்ட வந்து என்னா ஏதுன்னு கேட்டது யாரு? அடுப்புல சுள்ளி எரிஞ்சி மூணுநாளாச்சி, புடி சோறோ, ஒரு வாயி கஞ்சியோ யாரன்னா குட்த்தாங்களா?

நான் செத்திர்ந்தா கூட ஊட்லிர்ந்து நாத்தம் வர்ரவரிக்கும் யாரும் பாத்திருக்க மாட்டாங்க இல்ல! சமைக்கிர்துக்கு தெம்பில்லன்னாகூட செத்து போவபோரன்னு பய்ந்துகினு ஏஞ்சிபோயி அடுப்பு பத்தவெச்சி கஞ்சி வட்ச்சிகினு குட்ச்சி ஒடம்பு கொஞ்சம் தேத்திகினேன்.

எனுக்கு கல்யாணமான புதுசுல எங்க மாமியா என்ன பாடாபட்த்திட்டா. ஊட்டுகாரன் என்னான்னு கேக்கமாட்டான். என் மாமியா ஒரு வேற கஞ்சி ஊத்தி, மறுவேள பட்னி போடுவா. வேல மட்டும் ஓயாம செய்யணும். அவ்ளோ வேல செய்யணும்னா ஒரு வேள களி எந்த மூலைக்கி பத்தும்? அந்மாரி காலத்துல, இந்த ஊருகாரங்கதான் மாமியாருக்கு தெரியாம களி, கஞ்சி, சோறுன்னு குட்த்து என்ன பாத்துகினாங்க. தனி குட்த்தனம் போற வரிக்கும்… பத்து வருசம்… என்ன மட்டுமா? என் கொழந்தைங்களயும் ஊட்டி வளத்தாங்க. ஊர்ல ஒர்த்தொத்தரும் என்ன பெத்த பொண்ணாட்டம் பாத்துகினாங்க.

அப்போ நம்மூர்ல சுமாரா நாப்பதூடு இர்ந்திச்சி. ஊர்ல ஒரோரு அடுப்பங்கரையும் எனுக்கு தெரியும். எந்த நேரத்திலயும், எனுக்கு எப்போ பசி எட்த்தாலும் நேரா யாரோ ஒர்த்தரு ஊட்டுகு போயி சட்டியிலிர்ந்து சோத்த தட்ல போட்டுகினு, துண்ணுட்டு மூஞ்சி தொட்ச்சிகினு வந்துருவேன். மாமியாகாரி அவ்ளோ கொடும பண்ணாலும் பொறந்து ஊட்டுக்கு போவல நானு. இந்த ஊரதான் நானு பொறந்த ஊடுன்னு நென்ச்சிகினேன். அவ்ள நல்லா இர்ந்திச்சி ஊரு. இப்ப இருக்கறாப்போல அப்போ இர்ந்திர்ந்தா நானு பொயச்சே இருக்கமாட்டேன், செத்து போயிருப்பேன்.

ஒரு காக்கா கண்ணுல சோறு தெம்புட்டா, நேரா போயி அதுல வாயி வெக்காது. வாய தொர்ந்து சத்தமா கத்தி கத்தி சாப்புட்றதுக்கு பத்து காக்காய கூட்னுவரும். நம்ம ஊரு கூட அப்டிதான் இர்ந்திச்சி. அந்த காலம் போயிட்ச்சி. நாயி பொயப்பு பொயச்சினு கீறோம். பெரிவுங்க சொல்வாங்க, ‘பல்லுபோன நாயிக்கி எலும்பு கெடச்சா மாதிரின்னு. அதும் கடிக்காது, வேற நாயயும் கடிக்க உடாது’ன்னு… அப்டி ஆயிபோச்சி நம்ம பொயப்புன்னு ஜெயா சித்தி உள்ள அடக்கி வெச்சிர்ந்த கஸ்டமெல்லாத்தையும் அழாத கொறையா சொல்லிச்சி.

எனுக்கு அத்தை மொறயாவுற சியாமளா அத்தை சித்திக்கு ஒத்தாசயா “ஜெயம்மா, ஊங்கதை முட்ஞிபோச்சா? ஏங்கத கேக்கணும் நிய்யி. முந்தநேத்து ஞாத்திகெழம என் ஊட்டுகாரன் பேட்டைக்கி போயி கரி எட்த்தாந்தான். வர்சொல்லவே தண்ணிகூட ஊத்தினு வந்ட்டான். நான் வேலைக்கி போயி அப்போதான் வந்தேன். என்னடா இது வம்பா போச்சேன்னுகினு, வேகமா கரி கொழம்பு செஞ்சி, களியாக்கி போட்டன். எல்லாரும் துண்ணோம். எங்கூட்ல டி.வி இல்லல்ல, செரி தூங்கலாம்னு பாயி போட்னிந்தேன். சூடா களி துண்ணவே எங்க ஊட்டுகாரனுக்கு சூடேறிபோச்சோ என்னாவோ – வேக்காடுன்னு தொட்சிகினே தெருவுக்கு போனான்.

போனவன் சும்மா இருக்கவேணாம்? தெருவுல போயினிர்ந்த அவங்க தாய் மாமன் கொண்டய்யன துண்ணுட்டு போவ வான்னு கூப்டானாம். எங்கூட்ல கவுச்சி கொழம்பு வெச்சிகீறோம் வா அப்ட்டீன்னு கூட சொன்னானாம். அந்தாளு செரியான ஆளுன்னா நின்னு பதில் சொல்லணும். துண்ணா துண்றேன்னு சொல்லணும், இல்லன்னா இல்லன்னு சொல்லணும். ஒண்ணுமே பேசாம போயினே இர்ந்தாராம். என் ஊட்டுகாரன் போயி கூப்ட்டுனிர்ந்தா கண்டுக்காம போரியேன்னு கைபுட்சா அந்த பாடையில போறவன் என்னா பண்ணான் தெரிமா? என் ஊட்டு காரம் செவுள்ல ஒண்ணு உட்டானாம். அவன் எருமாடு மாதிரி இருப்பான். என் ஊட்டுகாரன் வீக் இல்ல? அந்த அடிக்கி கபால்னு கீழ ஊந்துட்டான்.

என்னடா சத்தமா இருக்குதேன்னு நான் ஊட்லிர்ந்து வெளிய வந்தேன். ஓடிபோயி என் ஊட்டுகாரன தூக்கனேன். அந்தாளு திருப்பியும் அடிக்கிர்துக்கு வந்துனுகீறான். எனுக்கு வந்திச்சி பாரு கோவம் மேல்துண்ட புட்சிகினு தள்ளிவுட்டேன். என் புள்ளங்க வெளிய ஓடியாந்து சத்தமா அழுதுனு கீறாங்க.

‘அந்த வக்காளிய என்னா சொன்னன் நானு, ஊட்டுகு வந்து துண்ட்டுபோ சொன்னன். அது தப்பா?’ அப்பிடின்னு கத்திகினே பக்கத்ல இர்ந்த கொம்பெட்துகினு அடிக்கிர்துகு போயினு கீறான் என் ஊட்டுகாரன். ‘நீ என்னாடா மயிரு எனுக்கு சோறு போட்றது? நா என்னா பிச்சகார்னா? கோவணம் கட்டாத மயிரான் எனுக்கு சோறு போட்றானாம்’ அப்டீன்னு அடிக்கிறது எகிர்னு கீறான்.

ரெண்டுபேரும் ரத்தம் வர்ரமாதிரி அட்சிகிறானுங்க. நான் நடுவுல போயி எவ்ளோ அத்துவுட்டாலும் அடங்கமாட்டன்றாங்க. புள்ளைங்கோ அம்மா அய்யோன்னு கத்தி அழுதுனு கீதுங்க. நடுவுல போன எனுக்கு நாலடி ஊந்திச்சி. என் கால மெரிச்சிட்டானுங்க. கீழ ஊந்து கத்திங்கீறேன் நானு. அட்சிகினு எங்க செத்துபோவபோறானுங்களோன்னு பயந்துகீனேன்.

தெருவுல இவ்ளோ சண்ட சத்தம் வந்துனிர்ந்தாகூட ஒரு காக்கா, குருவி கூட ஊட்லிர்ந்து வெளிய வந்து எட்டிபாக்கல. எட்டு மணிதான் ஆயிருக்கும். அக்கம்பக்கத்து ஊட்லிர்ந்து ஒர்த்தரு வர்ல. சத்தமா டி.வி வெச்சி பார்த்துனு இர்ந்துட்டாங்க.

பாடயில போறவனுங்களா, ஊர்ல ஆளுங்களே இல்லியாடா? எல்லாரும் செத்தீங்களா என்னாடா? வந்து இவங்கள பிர்ச்சி உடுங்கடான்னு கத்தினுகீறேன் நானு. கடவுளா பாத்து என் தம்பியும் அவன் பொண்டாட்டியும் கழினிக்கி தண்ணி கட்டிட்டு போயிகினு இர்ந்தாங்க. எங்கூட்டு முன்னால கலாட்டா பாத்துட்டு ஓட்டமா ஓடியாந்தாங்க. ரெண்டு பேரயும் பிர்ச்சி உட்டு, திட்டி, அடிபட்டதுக்கு கட்டு கட்டிட்டு போனாங்க. இவ்ளோ கலாட்டா நட்ந்தாலும் ஒர்த்தரு எட்டிப்பாக்கல. அன்னிக்கிலிர்ந்து இந்த ஊர்ல ஏன்டா கீறோம்னு ஒரோ கொட்சலா இருக்குது எனுக்கு”ன்னு நிர்த்திச்சி சியாமளா அத்தை.

அவங்க கஸ்டமெல்லாம் ரொம்ப நேரமா கேட்னே இர்ந்தோம். “அம்மா, கரண்ட் வந்திர்ச்சி, வாம்மா” அப்பிடின்னு ஒரு ஊட்லிர்ந்து கொரலு வந்த்சி. எல்லாரும் வேகமா எந்திர்ச்சி கலைஞ்சி ஊட்டுக்கு போயி டி.வி முன்னாடி ஒக்காந்துகினாங்க.


“சித்தீ, வா நாலு நாளு என் ஊட்ல இர்ந்துட்டு போவ” அப்படீன்னு எங்க ஜெயா சித்திய கைபுட்சி எயிப்பினு போயி எங்கூட்ல டி.வி முன்னாடி ஒக்காரவெச்சேன்.

மூலம்: எதாரி பதுகுலு (மார்ச், 2018)

எதாரி பதுகுலு நூல்

***

சிக்கு முடி (3)

கிலு கிலுன்னு சத்தமா கிலுகிலுப்பய சுத்திகினே ஊருக்குள்ள நரிகொறவங்க வருவாங்க. சத்தம் கேட்டு “பாட்டீ, கொறவங்க வந்துகீறாங்க. சிக்குமுடி குடு பாட்டீ” அப்பிடீன்னு ஊட்லு இருக்குற பெரிவுங்க உயிரெட்த்துடுவோம். தலவார்ரப்போ உதுர்ர சிக்கு முடிய கூரையில சொருவி வெச்சிர்ப்பாங்க பெரிவுங்க. அதெல்லாம் தேடி எட்த்தாந்து எங்க கைல குடுப்பாங்க. நாங்க போயி கொறவங்களுக்கு சிக்குமுடி குட்த்துட்டு கிலுகிலுப்ப, பீப்பீ வாங்கிக்குவோம். பசங்க அன்னிக்கு பொழுதுக்கும் கிலுகிலுப்ப சுத்திகினு, தவடைங்க வீங்கிபோறமாரி பீப்பீ ஊதிகினு கெடப்போம். சிக்குமுடிகாரங்க வந்தன்னைக்கி ஊரெல்லாம் கோலாகலமா இருக்கும்.

கட்ட சீப்பு, ஈறுபேனு சீப்பு எட்த்துகினு பசங்களுக்கு தலவாரி, பெரிவுங்க தலவாரிகின்துகப்புறம், கொட்ன சிக்குமுடிங்கள ஒன்னு உடாம பொறுக்கி எட்த்துகினு வெரல்ல ரவுண்டா சுத்தி, குடிச கூரைல சொருவி சேத்துவெப்போம். எங்க கிலுகிலுப்ப கோசரமோ, பீப்பீகோசரமோ இல்ல; கொட்ன முடி தவிறிபோயி சோத்துலயோ, மாடு துண்ற புல்லு, புண்ணாக்குல வுழுந்ததுன்னா, அது போயி கொடல்ல மாட்டிகினு சுத்திக்கும் அப்பிடின்ற பயத்துல. எவள்ளோ பத்தரமா எட்த்து வெச்சாலும், எப்பாவது ஒரோருமுற எங்கப்பா துண்ற சோத்துலயோ, தாத்தா தட்லயோ கெடக்கும் ஒரு முடி. அவ்ளோதான் அன்னிக்கிபூராம் ஊட்ல இருக்குற பொம்பளங்களுக்கெல்லாம் திட்டுவுழும்.

அதெல்லாம் என் சின்ன வயசுல நடந்த கத. இப்பெல்லாம் தேட்னாகூடா கெடைக்கிறதில்ல சிக்குமுடி. ஏன் இப்போ முடி கொட்றதில்லியான்னா கொட்டினுதான் கீது. சீக்காயும், பூந்திகொட்டையும் கரச்சி தலைக்கி போட்டு குளிச்சப்போ கொட்டந்தவிட சாம்ப்பு போட்ற இப்போதான் ஜாஸ்தியா கொட்டுது. ஆனா கொட்ன முடி கொட்னாப்புல பத்ரமா ஒளிச்சி வெச்சிட்றாங்க எல்லாரும்.

அன்னிக்கி ஒருநாளு மத்தியானநேரம் களி துண்ட்டு வாசபடில ஒக்காந்துகினு வெத்தல பாக்கு போட்டுகினு இர்ந்தேன். எங்க மாமியாகூட எங்கிட்ட ரவ்வ சுண்ணாம்பு குடுன்னு கேட்டு வெத்தல மென்னுனு கீது.

“யாம்மா, இந்த பாயாபோன பேனு தலயெல்லாம் கட்ச்சினுகீது, பாரும்மா” அப்பிடீன்னு சொல்லிகினு எங்க சித்தி முடி அவுத்து உட்டுகினே வந்து எங்க மாமியா முன்னால ஒக்காந்துகீச்சி. எங்க மாமியா பேனு பார்த்து, நாலுவாட்டி தலய நல்லா வாரியெட்த்து ஜடை போட்டு உட்டுச்சி. சீப்புக்கு ஒட்டிக்கினு இர்ந்த முடிய பிர்ச்சி எட்த்து யாருக்கும் தெரியாம இடுப்புல சொருவிகிச்சி.

கீழ கொட்டிர்ந்த முடிய பொறுக்கிகினே “இவ்ளதானா கொட்டிச்சி?” அப்பிடின்னு சந்தேகமா திரிம்பி திரிம்பி கேட்டிச்சி சித்தி.

“உன் மயிறு எனுக்கு என்னாத்துக்குடீ? கொட்னது அவ்ளதான்” அப்பிடின்னிச்சி எங்க மாமியா.

சித்தி மூஞ்சி தூக்கி வெச்சிகினு போயிட்ச்சி. இதெல்லாம் பாத்தினு இருந்தா நானு ‘காலம் மாறிபோச்சுடா சாமீ’ன்னு நென்ச்சிகீனேன். எதுக்குன்னா , சிக்குமுடிக்கி இருக்குற வெல வேற எதுக்கும் இல்ல. கிலோ முடி ஆறாயிரமோ ஏழாயிரமோவாம். கொறவங்க கூட கிலுகிலுப்ப எட்த்தார்ரது நிற்த்திட்டு சமயல் பாத்ரங்க, எவர்சில்வர் சாமானும் எட்த்தாந்து வித்துனுகீறாங்க.

எங்க சீத்தா அத்த எப்போமே ஒரு புது சாமான் வாங்கி இருக்கமாட்டா. எல்லாம் பழய மண்ணு சட்டிங்க, பானைங்க, மண்ணு பாத்திரங்கள வெச்சிகினு காலத்த ஓட்டினு இர்ந்திச்சி. ஏதோ வேலையா ஒருநாளு அவங்க ஊட்டுக்கு போனேன். சாமான் கட்ட மேல பாத்தரங்க, அலமாரில கிண்ணங்கெல்லாம் சில்வரா மின்னினு கீது.

நான் அதெல்லாம் பாத்து மெரண்ட்டுபோயி “என்னா அத்தே, எந்த சாமி வரம் குட்த்தான் உனுக்கு, எல்லாம் மண்ணு சட்டியா இர்ந்திச்சி! இப்போ இத்தினி எவர்சில்வர் சாமான் அடிக்கி வெச்சிங்கீற?” அப்பிடீன்னேன்.

“அய்யோ ஏன்டீ கேக்கற? நானு துட்டு குட்த்து வாங்கல. எல்லாம் சிக்குமுடி குட்த்து வாங்குன்து” அப்பிடின்னு சொல்லிச்சி.

“போவட்டும் உடு அத்தே, இத்தினி வருசமா இல்லாம இப்பாச்சும் உங்கூட்ல எவர்சில்வர் சாமான பாத்தேனே. சந்தோசமா கீது” அப்பிடீன்னு சொல்ட்டு வந்தன்.

அதுக்கு அட்த்த நாளு எங்க மாமியா எவர்சில்வர் கிண்ணத்துல கொழம்பு ஊத்தி யாருக்கு குட்த்து கீது. அத எப்டியோ மறந்துட்ச்சி. அவங்க அந்த கிண்ணத்த திரிப்பி குடக்காத மறச்சிட்டாங்க. அந்த கிண்ணம் தெம்புட்லைன்னு எங்க மாமியா தெருவுல போயி சாபம் உட்டுனு கீது.

“ஏன்டீ, சக்களத்திங்களா… மாசமெல்லாம் யாரு கண்லயும் படாம ஒள்ச்சி, ஒரு புடி சிக்குமுடி சேத்துவெச்சி வாங்கின கிண்ணம்டீ அது. பத்துபேருக்கு கொயம்பு ஊத்தலாம்டீ அதுல. சாமானுகாரன் தரமாட்டேன்னாகூட கெஞ்சி கூத்தாடி வாங்க்கீனேன்டீ! எந்த தேவிடியா எட்த்துனு போச்சோ, எந்த சம்சாரி ஒள்ச்சி வெச்சினுகீறாளோ!” அப்பிடின்னு பச்சபச்சயா திட்டினுகீது.

எங்க மாமியா சாபம் உட்றத கேட்டுகினே ‘இந்த சிக்குமுடிங்களுக்க வந்த வாழ்வ பார்ரான்னு’ நென்ச்சிகினு இருக்க சொல்லவே, எங்க பெரிம்மா ஊட்டுக்கு வந்திச்சி.

“என்னா குட்டிம்மா என்னாவோ யோசனயா கீற?” அப்பிடீன்னு கேட்டிச்சி பெரிம்மா.

“ஒண்ணும் இல்ல பெரிம்மா. கடவுளு எல்லாத்தயும் சமமா பாக்கறான்னு சொன்னா நானு நம்பல. இந்த சிக்குமுடி விவகாரத்துல மட்டும் நம்பனுன்னு தோணுது. முடி கொட்றதுக்குண்ணு சாம்ப்பு குட்த்து, அதனால கொட்ற முடிக்கு நல்ல வெல குட்த்து, தலையில இருக்குற மயித்தையும், கொட்ன மயித்தையும் சமமாக்கிட்டான் இல்ல!” அப்பிடீன்னேன். ரெண்டுபேரும் உழுந்து உழுந்து சிரிச்சிகீனோம்.

-மூலம்: சிக்கெண்ட்டுகலு (ஆகஸ்ட், 2017)

***

எது தப்பு எது சரி (4)

எங்கூர்ல கடிசி ஊட்டம்மா கத இது. அந்தம்மா எனுக்கு அண்ணி மொற வோணும். பட்னி கெடக்கற வயித்த பாத்தா தாங்கமுடியாது அந்தம்மாவால; அப்பிடியாபட்ட நல்ல கொணம். ஊருகுள்ள புது ஆளு யார்னா வந்தாக்கா எல்லாரும் கதுவு சாத்திருவாங்க. அந்தம்மா ஊட்டு கதுவுமட்டும் தொற்ந்தே இருக்கும். நடுராத்ரி ஆனாகூட யார்னா வந்தாங்கன்னா வயித்துக்கு புடி சோறு போட்டு, கால் நீட்டிகீறதுக்கு திண்ணமேல கொஞ்சம் எடம்குடுப்பாங்க. அதுக்கு தோதா எங்கண்ணன் கூட அண்ணிய ஒரு சொல்லு சொல்லமாட்டாரு, இத்தினி வருசத்துல ஒரு அடி அட்சிர்க்கமாட்டாரு. அண்ணிக்கு அவ்ளோ ஒத்தாசயா இர்ப்பாரு.

ஒரு நாளு ஊருக்கு பகல் கூத்துகாரங்க ரெண்டுபேரு வந்தாங்க. ரொம்ப ஜோரா ஆட்டம் ஆடி, பாட்டு பாடி வேடிக்க காட்னாங்க. பாத்தவங்கெல்லாம் ஆளாளுக்கு கொஞ்சம் துட்டு குட்த்தாங்க. யாரும் சோறு போட்ல. அவங்களுக்கு நாலு சின்ன புள்ளங்க. ‘கொஞ்சம் சோறு போடுங்கம்மா’ன்னு கேட்டுகினு ஊரெல்லாம் சுத்தனாங்க. நாங்க யாருமே கண்டுகில. அப்போ எங்கண்ணி போயி அவங்கள கூட்டியாந்து, சேரு அரிசி ஒலையில போட்டு, இன்னோரு சேரு கேவுரு மாவு போட்டு களி கிண்டனாங்க. புளி, மொளகா, உப்பும் பெசஞ்சி தொகயலு செஞ்சி போட்டனுப்பிச்சி. அப்டியாபட்டவங்க எங்க அண்ணி.

*

பொங்கலு போனதுக்கப்பறம், சிவராத்ரிக்கி முன்னால. பகல்ல வெயில் சுரீன்னு அடிக்க ஆரம்பிச்சாலும், ராத்ரில குளுரு கொறையல. சுடசுட களி கிண்டி துண்ணுட்டு, கதுவு சாத்திகினு ஒக்காந்துகினு அரட்ட அட்சினுகீறோம். வெளிய போன எங்க மாமியா அப்போதான் கதுவு தொர்ந்துகினு உள்ள வந்திச்சி.

“பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனுமாம். ஒரு ஆம்படியான், பொண்டாட்டி நம்ம ஊருக்கு வந்துகீறாங்க. தெரிமா?” அப்டின்னு கேட்டுச்சி.

“தெரியும் அத்த. நம்மூட்டுக்கு கூட வந்திர்ந்தாங்க. ஒரு பொடவ குட்த்து, பத்து ரூபா துட்டு குட்த்து அனப்பனேன். என்னா ஆச்சி இப்போ?” அப்டீன்னு கேட்டன்.

“ஒண்ணும் இல்ல. குளுருக்கு அங்க பஞ்சாயத்து திண்ணமேல நடிங்கினு ஒண்டினுகீறாங்க. வயித்துக்கு கவளம் சோறு போட்றவங்க இல்லாம அல்லாடினுகீறாங்க. அவங்களுக்கு இவ்ளோ களி இர்ந்தா போட்டனுப்பு” அப்டின்னாங்க மாமியா.

“எப்டியோ போறாங்க உடு அத்தே! இன்னோருவாட்டி நா எங்க ஒல வெக்கிற்து? ஒரு வேள நம்மூட்டுக்கு தேட்னு வந்தாங்கன்னா பாக்கலாம்” அப்டீன்ட்டேன் நானு.

“எந்தூரு காரங்களோ, இன்னிக்கி இந்தூர்ல பொயுது போச்சி அவங்களுக்கு. பொயுது சாஞ்சப்பத்திலிர்ந்து பஞ்சாயத்து திண்ணமேல ஒக்காந்துனுகீறாங்க. ஆம்பளங்களும் பொம்பளங்களும் அந்த வயியா போயினு வந்துகினு அவங்கள பாத்துனே கீறாங்க. என்னா, ஏதுன்னு ஒர்த்தரும் கேக்கல. ஒரோரு ஊட்லயும் எரியிற அடுப்பு எரிஞ்சினே கீது, கொதிக்கிற சோறு கொத்ச்சினே கீது. துண்ணறவங்க துண்ணுனே கீறாங்க. அடே, ஊருக்குள்ள ரெண்டு வெளியாளுங்க வந்துகீறாங்களே, அவங்கு துண்ணாங்களோ இல்லியோ, எங்க தூங்கறாங்களோன்னு கண்டுகீறவங்களே இல்லியே” அப்படீன்னு முணுமுணுத்துனு கீது எங்க மாமியா.

“பொழ்தன்னிக்கும் நெல்த்துல வேல செஞ்சிட்டு வந்து, பொழ்து போன்துகப்பறம் ஊட்லயும் வேல செய்யணும். சோறாக்கி போட்ணும். ஊட்டு ஆளுங்களுக்கு ஆக்கறதே கஸ்டம், இதுல வெளியாளுங்களுக்கு எங்க ஆக்கிபோட்றது? சரி, போவுதுன்னு கூப்ட்டு களிகிண்டி போட்டா போதுமா? இத்துனூண்டு ஊட்ல அவங்க தூங்கற்துக்கு எடம் எங்க கீது?”

எங்க மாமியாருக்கு நான் சொல்லற்து காதுல வீழ்ந்துச்சோ இல்லியோ, அந்தம்மா பாட்டுக்கு அது பேசினேகீது. “முன்னெல்லாம் இவ்ளோ பெரிய ஊடுங்க எங்கிர்ந்திச்சி? அந்த ஊட்டு அடுப்பு இந்த ஊட்லிர்ந்து கண்ணுக்கு தெரியும். ஊருக்குள்ள ஒரு புது ஆளு வந்தா ‘எங்க ஊட்டுக்கு வா, எங்க ஊட்டுக்கு வா’ அப்பிடீன்னு எல்லாரும் கூப்புடுவாங்க. எல்லா ஊட்லயும் இருக்குற கொயம்பு, ரசம் எட்த்தாந்து அவங்குளுக்கு போட்றது. ஈச்சம் பாயோ, கோணிபையோ குட்த்து சின்னுதா ஒரு மூலீல அம்மாம் எடம் காட்டி பட்த்துக்க சொல்றது. இப்பமாரி பெரிய ஊடுங்க, ஊட்டுக்கு சுத்தீரம் காம்போண்ட்டு, இரும்பு கேட்டு அப்ப இல்ல…”

அந்த பேச்சு கேக்க கேக்க ஒரு மாரி இர்ந்திச்சி… மெய்தானே என் மாமியா சொல்லற்துன்னு நென்சிகீனேன். ‘செய்யற்துக்கு மனுசிருக்கணும், களிப் பான, பாயி இல்ல இருக்கவேண்டிது’ அப்டீன்னு எங்க பாட்டி சொல்ற பேச்சி நெனப்பு வந்திச்சி. “போ அத்தே! அவங்கள கூட்ணு வா போ, நம்மூட்ல இருக்கற்து செய்லாம்” அப்டீன்னேன்.

எங்ம மாமியா வெளிய போயி, போன வேகத்லயே தனியா வந்திச்சி. “எங்க அத்த அவங்க?”ன்னு கேட்டன்.

“கடிசி ஊட்டம்மா கூட்ணு போயிட்ச்சாம்” அப்பிடின்னிச்சி மாமியா.

*

மறுநாளு காலீல கொடம் எட்த்துகிணு தண்ணி புட்ச்சார போனேன். பொம்பளிங்கெல்லாம் போர்கொழாவ சுத்தி பேசினுகீறாங்க.

“பாத்தியா பாரதிம்மா, ராத்ரி அந்த கடிசி ஊட்டம்மா ஊருக்கு வந்த ஆம்படியான், பொண்டாட்டிய ஊட்டுக்கு கூட்னு போயி சோறு போட்டு, பட்த்துகீற்துக்கு எடங்குட்த்து, காலீல பழயசோறு போட்டு அனுப்பிச்சாளாம். அவங்க போவ சொல்ல கண்ல தெம்பட்டவங்கெல்லாருக்கும் கடிசி ஊட்டு பொம்பளயபத்தி சொல்ட்டு போனாங்க” அப்பிடின்னு சொல்லிச்சு ஒரு பொம்பள.

“ஊர்ல யாருக்கும் இல்லாத அக்கற அவுளுகென்னாத்துக்கு? யாருக்கு தெரிம்? சோறே போட்டாளோ, புது ஆளுக்கு முந்தானையே விர்ச்சாளோ!” அப்பிடின்னு பொரணியா பேசிச்சி ஒரு பொம்பள.

“அவளுக்கு கட்டுபாடு, வரமொற ஏது? எல்லாத்தயும் உட்டுட்ட பஜாரி அவ. என்னா வேண்ணா பண்ணும் அது” திட்டினு கீது இன்னோரு பொம்பள.

“அப்பிடியா பட்டவளா இருக்கத்தொட்டுதான் ஊர்ல பாதி ஆம்பளிங்கள அது பின்னால சுத்த வெச்சிக்கீறா” பல்லு கட்ச்சிகினே சொல்லிச்சி இன்னோரு பொம்பள.

இதுக்குள்ள எங்க பெரிம்மா தண்ணி புடிக்க வந்திச்சி. எல்லாரு பேசன பேச்சிம் கேட்டிச்சி. கேட்டுகினு “நா ஒரு கத சொல்றன் கேக்கறிங்களா” அப்டீன்னு கத ஆரம்பிச்சிச்சி.

“தேவிடியாளுங்க யாரு, பத்தினிங்க யாருன்னு சிவனுக்கும், பார்வதிக்கும் சந்தேகம் வந்ச்சாம். ஜனம் கூட்டம் கூட்டமா திருவிழாவுக்கு போயினுகீறாங்களாம். சிவன் தள்ளாத கெழவனா மாறி, வழி பக்கத்துல இருக்குற ஒரு பொதகுழில வீழ்ந்து, மேல வரமுடியாம தவிச்சினுகீறானாம். புருசனுக்கு மட்டுமே முந்தான விர்ச்ச பத்தினி பொம்பளங்க பட்டுப்பொடவ கட்டிகினு அந்த வழில வந்தாங்களாம். கெழவன் அவங்கள பாத்து ‘அம்மா காப்பாத்துங்கம்மா’ன்னு கத்தனானாம். ‘நாங்க திருவிழாவுக்கு போறோம். உனுக்காக எறங்கனா பொடவெல்லாம் சேறாவும்’ அப்டீன்னுட்டு திரிம்பி பாக்காம போயிட்டாங்களாம். கொஞ்ச நேர்த்துல அந்த வழியில பத்துபேர்க்கு முந்தானை விர்ச்சி பொழக்கிற தேவிடியாளுங்க வந்தாங்களாம். அவங்களும் பட்டு பொடவ எல்லாம் கட்டினு இர்ந்தாங்களாம். பொதகுழில வீழ்ந்து தவிச்சினுகீற கெழவன பாத்து, அந்தாளு வாயி தொற்ந்து கேக்கற்துக்குள்ளயே, நாலு பேரும் நாலு பக்கமா போயி நின்னுகினு, அவங்க பொடவ அவுத்து, பொதகுழில போட்டு அந்த கெழவன வெளிய இழுத்து போட்டாங்களாம். ‘பத்தினிங்க யாரு, தேவிடியாளுங்க யாருன்னு இப்போ தெர்ஞ்சதா?’ன்னு சிவன் பார்வதிய கேட்டானாம். இப்போ நீங்க சொல்லுங்கடி… வாசப்படிக்கி வந்தவுங்களுக்கு இம்மாம் சோறு போட்டனுப்பிச்ச கடிசி ஊட்டுக்காரி பஜாரியா, இல்ல தேவிடியாளா?” அப்பிடின்னு கதய முட்சா எங்க பெரிம்மா. நாங்க எல்லாம் பேசற்துக்கு எதும் இல்லாம வாய மூடிகினு போனோம்.

*

நானு ஆத்தோரமா மாடு மேச்சினு இருக்கசொல்ல, அருவா எட்த்துகினு புல்லு அறுத்துனு போற்துக்கு அங்க வந்த்சி கடிசி ஊட்டு அண்ணி.

மொழிபெயர்ப்பாளர்: அவினேனி பாஸ்கர்

“அண்ணீ, யாரு கேட்டாலும் இல்லன்னு சொல்லமாட்டியாமே, என்னாத்துக்குமா நீ எல்லாருக்கும் முந்தானை விரிக்கிற?” அப்பிடீன்னு கேட்டன்.

“அதில்ல பாரதிம்மா, என்கிட்ட கேக்கறான்னா, என்மேல எவ்ளோ ஆச வெச்சினு இர்ந்திருப்பான். நான் முடியாதுன்னா எப்டி? அதுவே நானு யாருமேலயாவுது ஆச பட்டு, அவுங்க முடியாதுன்னா, எனுக்கு எவ்ளோ கஸ்ட்டமா இர்க்கும்? அவுங்குளுக்கும் அப்டிதானே இர்க்கும்? இப்போ என்னா ஆயிட்ச்சி மா? எந்து தேய்ஞ்சி போவபோதா, அவுனுது ஒடஞ்சி போவபோதா?” அப்பிடீன்னு சொல்லிச்சி கடிசி ஊட்டு அண்ணி.

மூலம்: தப்பேதி, ஒப்பேதி (2017, டிசம்பர்)

***

தமிழில்: அவினேனி பாஸ்கர்: மொழிபெயர்ப்பாளராக இதுவரை, தமிழிலிருந்து தெலுங்கிற்கு 2013இல் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட கதைகளும். 50க்கும் மேற்பட்ட கவிதைகளும், ஒரு நாவலும் மொழியாக்கம் செய்துள்ளார். அ.முத்துலிங்கம் அவர்களின் 15 கதைகள் அடங்கிய தெலுங்கு மொழிபெயர்ப்பு தொகுப்பு 2021லும். ஜெயமோகனின் அறம் தொகுதி 2024லும் புத்தகமாக வெளிவந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு வட்டம் குமாரராஜுபேட்டை என்ற ஊரில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி சென்னையில் பயின்று பெங்களூரில் மின்னணு பொறியாளராக வேலை செய்கிறார்.

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *