நடைநாய் (சிறுகதை) – சோஃபியா ஸமடார்

சோஃபியா ஸமடார்

2021, சிறுகதைகளை நான் அதிகம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலம். அதற்கான தேடலில் கண்டடைந்தவைதான் சோஃபியா ஸமடாரின் கதைகள். சோஃபியா ஸமடாரின் கதைகள் முதல் வரியிலேயே நம்மை உள்ளிழுத்துக் கொள்பவை. சமகாலத்தின் சூழலியல் மற்றும் உளவியல் சிக்கல்களை அறிவியல்பூர்வமாகப் பேசுபவை. பேசிக் கொண்டிருக்கையிலேயே உணர்வுவயமாகி, தன்னை மறந்த பித்துநிலைக்குச் சென்றுவிடுபவை. பின் மீண்டுவந்து நிதானமடைபவை. கடல் அலைகளை ஒத்த இந்தக் கலவையான தன்மை ஒரு கவிதையின் அம்சத்தை இவரது கதைகளுக்கு வழங்கிவிடுகின்றது. வாசிப்பே இனிதாகிவிடுகிறது.

பராமரிப்பாளர்’, ’நடைநாய்’ என்னும் அவரது இரண்டு கதைகளை இதுவரை மொழிபெயர்த்துள்ளேன். இரண்டுமே மனதிற்கு மிக நெருக்கமானவை. இக்கதைகள் அடங்கியுள்ள Tender தொகுப்பின் மொத்தக் கதைகளையுமே மொழிபெயர்க்க வேண்டும் என்னும் விழைவு உண்டு.

நடைநாய் கதையைப் பொறுத்தவரை அதன் தலைப்புதான் முதல் தூண்டில். கதையின் வடிவம் இரண்டாவது. இக்கதை ஒரு கட்டுரையின் வடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, கதைசொல்லி தன் கல்லூரியில் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரைதான் இக்கதை. முன்னுரை முடிவுரை ஆய்வுக்கூற்று பின்குறிப்புகள் என அத்தனை அம்சங்களையும் கொண்ட ஓர் ஆய்வுக்கட்டுரை. கதை கட்டுரை என்கிற இரண்டு எதிரெதிர் வடிவங்களை ஒன்றாய்ப் பொருத்தியதுபோலவே, குரல்வளையற்ற நடைநாய் X பாடகியாக விரும்பும் கதைசொல்லி, தொல்குடிகள் X குடியேறிகள், தீராத நடை X மாயக்கம்பளம், வன்முறைXகையறுநிலை என ஏராளமான பிற முரண்களையும் இதில் இவர் ஊடுபாவச் செய்துள்ளார். மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே நடைநாய் என்னும் படிமம் கதைமுழுக்க ஒரு இழை போல் விரவியுள்ளது. ஒரு விக்கிபீடியா பக்கம்கூட இல்லாத நடைநாயாக இருக்கிறது அது. கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மீன்களை உண்ணவேண்டிய நிலையில் அது இருக்கிறது.

பொதுவாக சூழலியல் சார்ந்த விவாதங்களில், காற்று மண் நீர் காடுகள் போன்ற இயற்கை அம்சங்களை நவீன மனிதன் மாசுபடுத்துவதும் அதனால் அவன் அடைகிற பாதிப்புகளும்தான் முக்கியத்துவப்படுத்தப்படும். ஆனால் இந்தச் செயல்பாட்டின் ஓர் விளைவாக தொல்குடிகளின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவது சப்தமற்று அமுங்கிவிடும். நடைநாய் கதை முக்கியத்துவம் பெறுவது இந்த இடத்தில்தான். இண்டியானா மாகாணம் குறித்த ஏராளமான குறிப்புகள் கதையில் உள்ளன. அமெரிக்கத் தொல்குடிகளான செவ்விந்தியர்கள் அதிகம் வாழ்ந்த இடம் அது என்பதே நடைநாய் கதையின் மறைபொருள். நாயகன் நடை நாயின் சித்திரத்தை வரைகிறான், அவனே நடைநாயாக இருக்கிறான், கேலிப்பொருளாகிறான், தாக்கப்படுகிறான். அவனது தாக்குதலுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படுகிறது, ஆனால் ஒருவரும் தண்டிக்கப்படுவதில்லை. சமகாலத்தை ஒரு கதையில் வேறெப்படி எழுதிட முடியும்!

உலகம் முழுக்கவே வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகையான கருப்பொருள்கள் இலக்கிய ஆக்கங்களின் மையப்புள்ளியாய் இருந்து வந்திருக்கின்றன. மன்னர்களின்/மேட்டுக்குடியினரின் வாழ்வைப் பேசுபவை, சுதந்திர வேட்கைகளை முன்வைப்பவை, நகரமயமாக்கலின் நவீனத்துவத்துவத்தின் சிக்கல்களைப் புரிந்துகொள்ளமுயல்பவை, போரின் கொடூரங்களைச் சித்தரிப்பவை, ஒடுக்கப்பட்டோரின் குரல்களாக ஒலிப்பவை என ஏராளமானவற்றை நம்மால் நினைவுகூர இயலும். அந்த வகையில் இந்த தசாப்தத்தில் அதிகம் எழுதப்படும் கருப்பொருளாக ‘சூழலியல் பாதுகாப்பு’ இருந்து வருவதை நாம் கண்ணாரக் காணலாம். அது இலக்கிய உலகின் ஒரு சமூகப் பொறுப்பும்கூட.

மிகக் காத்திரமான சூழலியல் கதைகளை எழுதுபவராக ஸோஃபியா ஸமடார் இருக்கிறார். அதில் அவர் இழைக்கும் உளவியல் தத்தளிப்புகள் அவற்றை அடர்த்தியாக்கி இன்னும் ஒரு படி மேலுயர்த்திவிடுகின்றன.

‘அது உனது ரகசியம் மட்டுமல்ல’ (தமிழினி பதிப்பகம்) தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் நடை நாய் கதையை இந்த நீலி இதழில் வாசிப்பவர்கள், கதையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடலையும் பார்க்கவேண்டும் என விரும்புகிறேன்: 1955 – Morning Song. நடந்து நடந்து தீராத ஓர் வாழ்வல்லவா நமது!

-இல. சுபத்ரா

*

நடைநாய் (சிறுகதை) – சோஃபியா ஸமடார்

இந்தக் கட்டுரையானது ‘சுற்றுச்சூழல் அறிவோம்’ என்னும் தலைப்பின் கீழ் தேர்வுக்காக எழுதப்படுகிறது. நியூ ஜெர்சியிலிருக்கும் என்னுடைய சொந்த ஊரான சௌத் ஆரஞ்சைச் சேர்ந்த நடைநாய் என்னும் விலங்கைப் பற்றி இதில் விவரிக்க இருக்கிறேன். முதலில் நான் அந்த விலங்கினை விவரிப்பேன் (”சுருக்கமான விவரணை”)> அடுத்து அதன் பூர்வீகம் பற்றியும் குணாதிசயங்கள் பற்றியும் விளக்குவேன் (”ஆய்வு”)> அடுத்து இந்த விலங்கைக்குறித்து எழுத ஏன் முடிவு செய்தேன் என்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறி முடிப்பேன்(”முடிவுரை”). 

ஆய்வுக் கூற்று: அதைப்பற்றி அதிகம் எழுதியிருக்கப்படாவிட்டாலும் வட அமெரிக்க வனவாழ்வில் நடைநாய் ஒரு முக்கிய அங்கமாகும்.

1. சுருக்கமான விவரணை

      நடைநாய் என்பது என்ன? இதுகுறித்து உங்களுக்கு என்னைவிட நன்றாகவே தெரிந்திருக்கும் திருமதி பேட்டர்ஸன். என்றாலும், இந்தக் கட்டுரையை எழுதுவது நான் – நீங்கள் அல்ல என்பதாலும், எனக்குத்தான் மதிப்பெண்கள் வேண்டும் என்பதை நீங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள் என்பதாலும், இங்கே எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

      நடை நாய் என்பது, அதன் பெயருக்கு முரணாக, ஒரு நாயே அல்ல. அது கிட்டத்தட்ட ஒரு நீர்நாயையோ பெரிய எலியையோ ஒத்தது. அது பெரும்பாலும் சாக்கடைகளில்தான் வசிக்கிறது என்றாலும் சிறிய ஓடைகளிலும் நதிகளிலும் கூட காணப்படுகிறது.  அது ஒரு இரவில் நடமாடும் உயிரினம், அது மீன்களையும் கழிவுகளையும்(1)(ஆம், மன்னியுங்கள்) உண்பதாக நம்பப்படுகிறது. நடக்கும்போது அது – வாலுடன் சேர்த்து – ஐந்தடி நீளம் கொண்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் எழுந்து நிற்கும்போது அது ஒரு மனிதனை விட உயரமாகத் தெரிகிறது.  அதன் ரோமம் கரியது,  எண்ணெய்ப்பிசுக்குடையது. அது மிக நன்றாக நீந்தக்கூடியது, அதனால் 3 நாட்கள்கூட நீருக்குள்ளேயே – காற்றை ஏங்கி வெளியே வராமல் – தாக்குப்பிடிக்க முடியும். 

      நடைநாயின் பிற பெயர்கள்: முரட்டுநாய், முரட்டுஓநாய், மனிதனை நடக்கச்செய்யும் நாய், தன்னையே நடத்திக்கொள்ளும் நாய், குதிக்கும் கால், மாயநாய், தடிஓநாய்.

      சிலர் அதனை உறுமும் நாய் என்றும் கூட அழைப்பதுண்டு, ஆனால் அது முட்டாள்தனமானது. ஏனென்றால் நடைநாய் உறுமாது, அதற்குக் குரல்வளையே(2) கிடையாது.

      2. ஆய்வு

      நடைநாயைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்போது நீங்கள் ஒரு விஷயத்தைக் கண்டறிய முடியும்; அதைப்பற்றி அதிகம் எழுதப்படவே இல்லை. எங்கோ சில வாக்கியங்களில் அது குறிப்பிடப்படுகிறது என்றாலும் அதனைப் பற்றிய ஒரு புத்தகத்தை நீங்கள் கண்டறியமுடியாது. அதைப்பற்றி ஒரு விக்கிபீடியா பக்கம் கூட இல்லை என்பது விநோதமாகத்தான் இருக்கிறது, இல்லையா?  ஏதோ ஒரு மந்திரத்தால் அது எல்லாவற்றிலிருந்தும் தன்னை மறைத்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.  நடைநாயைப் பற்றி அதிகம் அறிந்த ஒரே ஆள் உங்கள் மருமகனும் இந்தக்கல்லூரியிலேயே அதிமுட்டாளுமான ஆண்ட்ரியூ புக்மேனாகத்தான் இருப்பான். இப்படிச் சொல்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், ஆனால் அது உண்மை. தரவுகள்தான் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையின் அடித்தளம் என்று நீங்கள் எப்போதும் சொல்வீர்கள்(3).

      நடைநாயின் பூர்வீகம் ‘குழப்பமானது’ என்று ஆண்டி குறிப்பிடுவான். அதன் தோற்றம் பற்றி மூன்று முக்கியக் கோட்பாடுகள் இருக்கின்றன:

      அ) அதன் பூர்வீகம் நீர்நாயுடன் தொடர்புடையது.

      ஆ) ஐரோப்பாவிலிருந்தும் ஆசியாவிலிருந்தும் குடிபெயர்ந்தவர்களுடன் இணைந்து இங்கு வந்து சேர்ந்தவை அவை.

      இ) ஆப்பிரிக்க அடிமைகள் கொண்டுவரப்பட்ட கப்பலில் உடன் வந்தவை.(4)

      வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நடை நாயின் பூர்வீகமும் மற்ற அனைவரின் பூர்வீகம் போன்றதுதான். அதனால்தான் அதனை நான் ஒரு உள்ளூர் விலங்கு எனக் குறிப்பிடுகிறேன். அதாவது, நான் ஒரு ஆப்பிரிக்கப் பெண்ணாகவோ ஜெர்மனியைச்சேர்ந்தவளாகவோ ஸ்பெயினைச் சேர்ந்தவளாகவோ அல்லது வேறெதாகவோ(5) (கடவுளே அறிவார்) கூட இருக்கக்கூடும் எனினும் நான் என்னை நியூஜெர்சியின் குடிமகள் எனக் குறிப்பிட்டுக் கொள்கிறேனல்லவா.

      இப்போது நாம் நடைநாயின் குணாதிசயங்கள் பற்றிப் பார்ப்போம். அவற்றின் குணாதிசயங்கள் அப்படி ஒன்றும் சிறப்பானவை அல்ல. அவை குழந்தைகளைத் திருடுவதுண்டு (குழந்தைத்திருடன் என்றும் அதற்குப் பெயருண்டு). உண்பதற்காக அது அவர்களைத் திருடுவதில்லை. முன்னரே சொல்லி இருப்பது போல, அது மீன்களையும் கழிவுகளையுமே அதிகம் உண்கிறது. என்றாலும், அது இரவுகளில் அவர்களைக் கடத்தி நடைக்கு அழைத்துச் செல்கிறது.

      அது அவர்களை நடைக்கு அழைத்துச் செல்கிறது. அது வெறுமனே அவர்களை உடன் அழைத்துச் செல்கிறது. அது எப்படி இருக்கும் என நீங்கள் யோசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு சாதாரண குழந்தை என்றும் உங்களது வழக்கமான படுக்கையில் படுத்திருக்கிறீர்கள் என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆண்டி புக்மேன் போன்ற ஒரு குழந்தையாக உங்களைக் கற்பனை செய்யாதீர்கள், அவன் ஒரு சராசரி குழந்தையே அல்ல. என்னைப் போல ஒரு சாதாரணமானவளாக நீங்கள் உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் – யோலண்டா ப்ரைஸ் ஆகிய என்னைப்போல. நான் ஒரு இயல்பான குழந்தை என்றே நினைக்கிறேன். நான் பிரபலமானவள் அல்ல. உண்மையைச் சொன்னால், தேவையான சமயங்களில் மட்டும் புன்னகைத்தும் வாயை இறுக மூடியும், நான் பெரும்பாலும் தலைகவிழ்ந்தே இருக்கிறேன். ஏனென்றால் நான் கிட்டத்தட்ட ஒரு முட்டாள், பாடத்தெரியும் என்பதால்தான் என்னால் சமாளிக்க முடிகிறது. உங்களுக்கு அது போன்ற ஒரு திறமையும் இருந்து நீங்கள் அறிவாளியாகவும் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். பாடும் திறமை இருந்திருந்தால் ஆண்ட்ரியூ புக்மேனும் தப்பித்திருப்பான் என நான் கூறவில்லை. உங்கள் மருமகன் ஒரு உலகத்தரமான முதல்தர முட்டாள் (இப்படிச்சொல்வதற்கு மன்னியுங்கள்) , எனவே அவன் பாடியிருந்தால் அது அவனை இன்னும் மோசமாகத்தான் ஆக்கியிருக்கும். பட்டப்படிப்பை முடித்ததும் டென்மார்க்கில் ஸ்ட்ராபெர்ரி உண்ணப்போவதாக அவன் எல்லாரிடமும் சொன்னது உங்களுக்குத் தெரியுமா? யார் அப்படிச் சொல்வது!  ஸ்ட்ராபெரிகளும் புதிய உருளைக்கிழங்குகளும் ஹான்ஸ் க்ரிஸ்டியன் ஆண்டர்ஸனின்(Hans Christian Andersen) கல்லறையும். எல்லோரும் அவனை பல வாரங்களுக்கு குட்டிக்கடற்கன்னி என்றே அழைத்துக்கொண்டிருந்தனர். புட்டம் பெருத்தவனே, இன்னொரு தேசத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு நீ ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறாய். நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு ஆதரவாய் இருப்பது விஷயங்களை இன்னும் மோசமாக்கிவிடும் என அஞ்சினீர்களா? ஆம் என்றால், நீங்கள் செய்தது சரிதான். அதை அப்படியே புறக்கணித்ததுதான் மிகச்சரி. உள்ளே ஒருமுறை இறங்கிவிட்டால் வெளியேறவே முடியாத சில இடங்கள் இருக்கின்றன.

      அப்படியாக, நீங்கள்தான் யோலண்டாவாகிய நான். மெத்தையில் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜன்னலை யாரோ தட்டுகிறார்கள். டொக் டொக் டொக். எரிச்சலூட்டுகிறது. மரத்தின் ஒரு கிளைதான் அது என நீங்கள் நினைக்கிறீர்கள். எழுந்து ஜன்னலைத் திறக்கிறீர்கள். அது பனிக்காலமாயினும், அந்த மரக்கிளையை ஒடித்தெறிந்து பயங்கரமான அந்த சப்தத்திலிருந்து தப்பிப்பதற்காக, நீங்கள் ஜன்னலைத் திறப்பீர்கள். அப்படியாக நீங்கள் ஜன்னலைத் திறக்கிறீர்கள், அதுவும் இதே போல ஒரு பனிக்காலம்தான், ஃபிப்ரவரி. காதலர் தினத்தைத் தவிர, எந்த விடுமுறையுமே இல்லாத, ஆண்டின் மோசமான மாதம். அத்தினத்தை உலக சித்திரவதை தினம்  என்றும் கூட அழைக்கலாம். உறங்கமுடியாமல் போவதுதான் உச்சமான சித்திரவதை. நீங்கள் ஜன்னலைத் திறந்ததும், முற்றத்திலிருந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு சிறிய கருப்பு  உருவம் தெரிகிறது. அது என்ன என்று காண்பதற்காக நீங்கள் அங்கேயே நிற்கிறீர்கள். பூனை என்றோ ரக்கூன் என்றோ சொல்ல முடியாத அளவிற்குப் பெரியது. அடுத்து அது நிமிர்கிறது. எழுந்துகொண்டதும் அது உயரமாகி விடுகிறது, அதன் மூச்சு ஜன்னலில் படுகிறது, அதன் கண்கள் சிறிய சிவப்பு விளக்குகள் போல் இருக்கின்றன. இல்லவே இல்லாத ஒரு குரல்வளையிலிருந்து அது உங்களிடம் பேசுகிறது, அக்குரல் உங்கள் தலைக்குள் ஒலிக்கிறது,

      வா பெண்ணே.. நாம் நடக்கலாம்.
      நாம் எங்கே போகிறோம்?
      கீழே சிற்றோடைக்கு.
      நான் வரவில்லை.
      அது சிரிக்கிறது: ஈஈஈஈ ஈஈஈஈ ஈஈஈஈ(6).
      எனக்கு விருப்பமில்லை.

      ஆனால் அதற்குமுன்பே நீங்கள் உங்கள் முழங்காலை ஜன்னலில் வைத்துவிட்டீர்கள். நீங்கள் வெளியே வீழும்போது பாதங்களை மேலே தூக்கி நடைநாய் உங்களைப் பிடித்துக் கொள்கிறது. அது சாக்கடை போல் நாற்றமடிக்கிறது. உங்களைத்தரையில் போட்டுவிட்டு நான்கு கால்களில் நடக்கத்துவங்குகிறது. பாம்! அப்படியே அது சிறிதாகிவிடுகிறது. பனியின் மேல் அது நடக்கத்துவங்கியதும் நீங்கள் அதைப் பின் தொடர்கிறீர்கள். சரிவில் அப்படியே சறுக்கி முற்றத்தின் கடைசிக்குச் சென்று விடுகிறீர்கள். இப்போது நீங்கள் ஆய்வ்(Ave) பல்கலைக்கழகத்திற்குள் வந்துவிட்டீர்கள். அங்கே எல்லாம் இருட்டாக இருக்கிறது. நீங்கள் அழுகிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அழுவீர்களா? சில நட்சத்திரங்கள் சாலை விளக்குகளைப் போலவே பொன்னிறம் கொண்டிருக்கின்றன.

      இப்போது நீங்கள் வெகுநேரத்திற்கு நடக்கப்போகிறீர்கள்.

      வீட்டிற்குத் திரும்புகிற முயற்சியில், கார்ல்டன் ஓ’ நீலின் (Carlton O’Neil) ஓநாய்-சிறுவன் (Wolf-Boy) நடந்த அத்தனை தொலைவிற்குக் கூட நீங்கள் நடக்கக்கூடும். ப்ளூஸ்உமன் மெய்ஸ் ஓட்ஸின் (Blueswoman Maisie Oate) இண்டியானா மார்னிங் (“Indiana Morning”) பாடலில் வருவதுபோல இண்டியானாவிற்குக் கூட உங்களால் சுலபமாக நடந்துவிட முடியும் என எனக்கு நிச்சயமாகத் தெரியும்.(7)

      நடந்து நடந்து நீங்கள் நிறைய விஷயங்களைப் பார்க்க முடியும். ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவரான உங்களுக்கு அது மிகவும் பிடித்தமானதாகக்கூட இருக்கும். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடந்து நடந்து நீங்கள் உங்களுக்குத் தேவையான அத்தனை ஆராய்ச்சிகளையும் செய்துகொள்ள முடியும். நீங்கள் ஜில்லிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சாக்கடைகளிலும் பள்ளங்களிலும் உறங்குவீர்கள். அதன் குரல் உங்களுக்குள் ஒலித்துக்கொண்டிருக்க, குளிருக்கு இதமாக நீங்கள் நடைநாயை அணைத்துக் கொள்ளவும் கூடும். எழுந்துகொள்ளும் நேரமாகிவிட்டது.

      3. முடிவுரை

      இந்த முடிவுரையில், நான் ஏன் இக்கட்டுரைக்கு நடைநாயைத் தேர்ந்தெடுத்தேன் என்பதையும் அது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் குறிப்பிடுவேன்.

      நான் நடைநாயைப் பற்றி ஆண்டியிடமிருந்து கேள்விப்பட்டேன் என்பதனால் நான் அதனைப்பற்றி எழுத முடிவு செய்தேன். என்ன நடந்ததென்றால், இரண்டு மாணவர்கள் – உங்களுக்கு அவர்களை உறுதியாகத் தெரியும் என்பதால் நான் அவர்களது பெயரை இங்கு குறிப்பிடப்போவதில்லை – ஆண்டியின்மீது மோதி அவனது காகிதங்களைப் பிடுங்கி எறிந்தனர். இது தினந்தோறும் நடந்துகொண்டிருந்தது. தோள்பை அணிந்திருந்த போதிலும் அவன் ஏன் எப்போதும் தன் கைகளிலேயே பொருட்களைச் சுமந்து திரிந்தான் என நீங்கள் உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவன் ஏன் எல்லாவற்றையும் பைக்குள் வைத்துக்கொள்ளக்கூடாது, யாரேனும் மோதினால் அவன் மட்டும் கீழே விழுந்து பையிலிருக்கும் பொருட்கள் அறையெங்கும் சிதறாமல் தப்பிக்குமே! உங்களது மேஜையின் மீது “கற்பிக்க முடியாதவரென்று யாருமே இல்லை” என எழுதப்பட்ட ஒரு அட்டை இருக்கிறது. ஆனால் திருமதி பேட்டர்ஸன், நான் அதை மறுக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில் ஆண்டி 100%, கற்பிக்க முடியாதவனாகத்தான்  இருந்தான். எனவே அந்தக் காகிதங்கள் அப்படியே சிதறிக்கொண்டிருக்க, அந்தப் பையன்கள் தொடர்ந்து அவற்றை மிதித்து அதில் தங்கள் பாதச்சுவடுகளைப் பதித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒரு காகிதம் என்மேல் விழுந்து கிட்டத்தட்ட என் பாதத்தையே தொட்டுவிட்டது. நான் அதை எடுக்கவில்லை. ஏனென்றால் நான் ஆண்டியைப்போல கற்பிக்க – முடியாதவன் அல்ல. ஆனால் நான் அதைக் குனிந்து பார்த்தேன். அதில், கருப்பான, குண்டான, சிவப்புக் கண்கள் கொண்ட ஒரு உருவம் வரையப்பட்டிருக்க  அதன் கீழ், நடைநாய் என எழுதப்பட்டிருந்தது.

      அப்போதுதான் இந்த ஆய்வுக்கட்டுரை எழுதும் எண்ணம் எனக்கு ஏற்பட்டதெனச் சொல்லலாம் – இன்னும் நீங்கள் அப்பணியை எங்களுக்கு அளிக்கவே இல்லை என்றாலும் கூட. எனக்கு நடைநாய் பற்றிய ஆர்வம் மேலிட்டுவிட்டது. ஆண்டிக்கும் கூட, வரைவதற்கு அது விசித்திரமானதாகத்தான் இருந்திருக்கிறது. இரவு உணவின் போது நான் என் பெற்றோரிடம் அதுபற்றிக் கேட்டேன், ஆனால் அவர்கள் அது பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லை. எனது ஆய்வுக்கட்டுரையைப்பற்றி பிற்பாடு நான் சொன்னபோது, ஒரு நகர்ப்புற பிரபலம்போல அது தோன்றுகிறது என என் அன்னை சொன்னார். ம்ம்-ம்ம் என்றார் அப்பா. குடியிருப்பில் கார்ல்டன் ஓ’நீல் கண்டுபிடிக்கப்பட்ட போது, அம்மா அதை நினைவில் வைத்திருந்தார். பாவம் அந்த மனிதன் – கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என்றாள். அப்போதுதான் நடைநாய் பற்றிய சிந்தை துவங்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். பாவம், அந்த அலைபாயும்  கால்ர்டன்தான் அங்கிருந்த ஒரே ஒரு நடைநாய். 1955ல் பதிவுசெய்யப்பட்ட “இண்டியானா மார்னிங்” பாடலை அவள் எப்படி விளக்குவாள் என நான் கேட்டேன். அட! அது வெறும் ஒரு உருவகம் என்றாள் அவள். எதற்கான உருவகம்? என்றேன் நான். அவளுக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. மதுபோதைக்குரிய உருவகம்(8)?

      நீங்கள் இந்த வீட்டுப்பாடத்தைத் தந்தபோது நான் யூனியன் சந்தைக்குச் சென்று ஆண்டியை அவனது பெற்றோரின் கடையில் சந்தித்து, நடைநாய் என்ற பெயரில் அவன் வரைந்திருந்த படத்தைப் பற்றி விசாரித்தேன். அது ‘சுற்றுச்சுழலை அறிவோம்’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப் பொருத்தமானதாய் இருக்குமா என்று அவனிடம் கேட்டபோது ”அட்டகாசமாய் இருக்கும்” என்றான். ஆண்டி எப்போதுமே எல்லாவற்றையும் அட்டகாசம் என்றுதான் குறிப்பிடுவான், அப்படிச் சொல்லும்போது அதை அவன் உணர்ந்துதான் சொல்வான். அவர்களுக்கு அடுத்த கடையில் விற்கப்பட்ட ஒரு செடியின் இலைகளுக்குக் கீழிருந்து அவன் என்னை நோக்கிப் புன்னகைத்தான். நான் அவனிடம் பிரச்சனை செய்வதற்கோ அவனைக் கேலி செய்வதற்கோ வந்திருக்கக்கூடும் என  அவன் நினைக்கவேயில்லை – பெரும்பாலான சமயங்களில் அது அப்படித்தான் நடந்திருக்கிறது. திருமதி பேட்டர்ஸன், ஆண்டி ரொம்பவும் சிறப்பானவன். உங்களுக்கே அது தெரியும். எல்லா நாள்களிலும் அவன் நியாமற்றுத் தண்டிக்கப்படுவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.  இதையெல்லாம் நான் அறிவேன். அவன் வகுப்பறையில் கையை உயர்த்தினாலே போதும், யாரோ ஒருவர் புக்மேன் என்று சப்தமெழுப்புவார்கள், உடனே ஒட்டுமொத்த வகுப்பறையிலும் சிறிய சிறிய கேலிச்சிரிப்புகள் ஒலிக்கத்துவங்கி விடும். அவனது மோசமான பட்டப்பெயர்கள் கூட அவர்களுக்குத் தேவையாய் இருக்கவில்லை. உங்களது வெறும் பெயரே எல்லோரையும் சிரிப்பிற்குள்ளாக்கப் போதுமானதாக இருக்கிற நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு சிறிய கண்டனத்தையோ கோபத்தையோ கூட வெளிப்படுத்தியதில்லை, எல்லாமே இயல்பாய் இருக்கிறது என்பதுபோல நீங்கள் வெறுமனே ஆண்டி என்பீர்கள். நான் முன்னரே சொன்னது போல, அதுதான் சரியான செயல்போல! அதன்பிறகு, எல்லோரும் குசுச்சப்தம் எழுப்பியபடியோ நகைத்துக்கொண்டோ எதுவும் செய்துகொண்டோ இருப்பதற்கிடையில்,  ஆண்டி என்ன சொல்ல நினைத்தானோ அதைச் சொல்வான், அது எப்போதுமே அறிவார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா திருமதி பேட்டர்ஸன், இந்தக்கல்லூரி உண்மையில் ஒரு நரகம். ஆண்டி அவ்வாறு உதைக்கப்பட்டபோது  ஏன் எல்லோரும் அதிர்ச்சியுற்றது போல நடந்துகொண்டார்கள் என எனக்குத் தெரியவில்லை. சிறப்பு வழிபாட்டில் முதல்வர் ரீட் தனது தளும்பும் குரலுடன் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் வளர்ந்து முழு ஆள் ஆகிக்கொண்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என அவர் கூறினார். அவர் சொல்வது சரிதான். ஆனால் நாங்கள் மாறிக்கொண்டிருப்பதாக அது பொருள் தராது. அதாவது நாங்கள் பெரியவர்களாகிவிட்டோம், யாரையேனும் மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்குப் பெரியவர்கள்(9).

      உண்மைதான். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் போல நடந்துகொள்கிறவர்களெல்லாம் குழந்தைகள்தான், அவர்களை எல்லா நேரமும் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் நாம் பெரியவர்கள். இதுவே மத்திய காலங்களாக இருந்திருந்தால் நாங்கள் எல்லோரும் திருமணம் செய்திருப்போம் அல்லது போரில் இருந்திருப்போம். அதோடு திருமதி பேட்டர்ஸனாகிய நீங்கள் மிகவும் முதியவளாகக் கருதப்பட்டிருப்பீர்கள். நிஜம் என்னவென்றால் நீங்கள் மிகவும் முதியவர்தான். ஆண்டி அடிவாங்கியதற்கு அடுத்த தினம் நீங்கள் மிகவும் பலவீனமானவராய்த் தோற்றமளித்தீர்கள், எதையோ ஆழமாகச் சிந்திக்கிற முதியவள் போல் இருந்தீர்கள். உண்மை என்னவென்றால், திருமதி பேட்டர்ஸன், எங்களில் பல குழந்தைகள் திருமணம் ஆனவர்கள்,  பல குழந்தைகள் போரில் இருப்பவர்கள். ஆண்டிக்கு இரண்டுமே நிகழ்ந்திருந்தது(10)

      இப்போது நான் ஏன் நடைநாயைத் தேர்ந்தெடுத்தேன் என யோசிக்கும்போது, நான் உண்மையில் ஆண்டியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன். நானே அறியும் முன்னரே நான் அவனைத் தேர்ந்தெடுத்திருந்தேன். காகிதத்திலிருந்த அந்தக் கரிய பெரிய உருவம் ஒரு காரணம் மட்டுமே.  ஆண்டியை அறிந்துகொள்வதுதான்  என் சுற்றுப்புறத்தை அறிந்து கொள்வது எனக் கூறி இந்த இடத்திலேயே என் கட்டுரையை முடிக்க நான் விரும்புகிறேன். அது போன்ற ஒரு கட்டுரைக்கு நீங்கள் A தரக்கூடும் அல்லது F தரக்கூடும், ஆனால் நான் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை.  ஏனென்றால் பள்ளி முடிந்த பிறகு நான் ஆண்டியின் வீட்டிற்குச் செல்வேன், அல்லது அவனை எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று அடித்தளத்தில் அமர்ந்து உலக சித்திரவதை தினத்தன்று பேய்ப்படம் பார்த்துச் சிரித்திருப்போம். எனது தலை அவனது தோளில் இருந்திருக்கும். ஓ! திருமதி பேட்டர்ஸன், அவன் எங்கிருக்கிறான் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இன்னும் உயிருடன் இருக்கிறானா? நடைநாயுடன் இருக்கிறானா? அவ்வளவுதானா? நடந்து சுற்றித்திரிகிறானா? கார்ல்டன் ஓ நீல் போல முப்பது வயதுகளில் ஏதேனும் வனத்தில் தோன்றப்போகிறானா? எல்லோரும் அவனை ஓநாய்ப்பையன் என்று அழைக்கப்போகிறார்களா? ஆண்டி காணாமல் போனபிறகு நான் கார்ல்டனைத் தேடிச் சென்றது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அவனைக் காண முடியவில்லை. அவன் அவனது அம்மாவின் வீட்டில் இப்போது இல்லை. அவனது அம்மாவைக்கண்டபோது அவள் என் முகத்தில் டன் கணக்கில் சிகரெட் புகையை ஊதி, அவன் நடக்கச் சென்றுவிட்டதாகக்கூறி கதவினை அறைந்து சாத்திவிட்டாள். ஆண்டி அங்குதான் இருக்கிறானா? வெறுமனே நடக்கத்தான் சென்றிருக்கிறானா? அப்படியெனில், அவன் கூறியதைக்கேட்டு, மாயக்கம்பளத்தை எடுப்பதற்காக நான் அவன் வீட்டிற்குச் சென்றிருக்க மாட்டேன். ஆம், நான் மீண்டும் அங்கே சென்றேன். மாற்றுச்சாவி எங்கே இருக்கும் என அவன் சொல்லியிருந்தான். நான் அவன் வீட்டிற்குச் சென்று அவனது அறையிலிருந்து மாயக்கம்பளத்தை எடுத்து வந்தேன். அங்கிருந்த மூட சாகச – வீரர்களது உருவங்கள் என்னை அச்சுறுத்துவதுபோல் நோக்கின. கம்பளம் ஒரு அலமாரியின் மேற்பகுதியில் இருந்தது. குத்துவதுபோல் இருந்த அது எனது கையில் வித்தியாசமாகத் தோற்றமளித்தது. எனது மதிய உணவை நான் வைத்துக்கொள்ளும் ஞெகிழிப்பையில் அதை வைத்த நான், அதனை எனது பணப்பையில் திணித்து மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றேன். எதுவோ தவறாக இருக்கிறதென்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் நான் ஆண்டியை ஒருமுறை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினேன், அவனுக்காக நான் கொணர்ந்த மலர்கள் எதையும் செய்யப்போவதில்லை என அவனிடம் சொன்னேன். அவன் வெறுமனே படுக்கையில் அமர்ந்தபடி வெற்றிடத்தை வெறித்தான். மூக்கின் மேல் வெள்ளைத் துணியால் கட்டுப்போடப்பட்டிருக்க, வெண்ணிற ஒளி எங்கிலும் நிறைந்திருந்தது. அவன் அங்கே மிகவும் சோர்வாக இருந்தான். அதிகம் காயமுற்றிருந்த அவனை எப்படித் தொடுவதென எனக்குத் தெரியவில்லை. நான் அழுது கொண்டிருந்தேன், ஆனால் அவன் அதைக் கவனித்ததுபோல் தெரியவில்லை. அடங்கிய குரலில், எனக்கு மாயக்கம்பளத்தை எடுத்து வா என்று மட்டும் சொன்னான். இன்னும் அழுதபடியே, சரி என்று சொன்னேன் நான். ஆண்டியின் பெற்றோர் வெளியே இருந்தனர். நீ அவனது தோழியா? என வினவினார் அவனது அன்னை. நான் சொன்னேன், நான் அவனது பெண்தோழி.

      ஏதோ ஒரு பெண் தோழி, இல்லையா?

       நான் அவனுடன் எங்குமே வெளியே சென்றதில்லை. அவனது முன்வாசல் வழியாகச் சென்றதில்லை.  ஒருபோதும் அவனுடன் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றதில்லை.

       நான் அவனுடன் வீட்டிற்கு நடந்து சென்றிருக்க வேண்டும். நான் சென்றிருக்க வேண்டும். நான் அவனுடன் வீட்டிற்கு நடந்து போயிருக்க வேண்டும்.  

      இப்படியாக, அவன் நினைவாக நிகழ்த்தப்பட்ட பிரார்த்தனைக்கூட்டத்தில் நான் ஏன் எனது தனிப்பாடலை முடிக்கமுடியாமல் போனது என இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆண்ட்ரியூ புக்மேன் காணாமல் போய்விட்ட செய்தியின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட பிரார்த்தனை. குழுப்பாடல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்க நான் அப்படியே நிறுத்திவிட்டேன். நீங்கள் அங்கே ஒரு இருக்கையில் என்னைக்கவனித்தபடி சோகமாக அமர்ந்திருந்ததை நான் பார்த்தேன். என்னால் அதைத் தொடர முடியவில்லை, ஏதோ நான் முழுவதுமாய் தூசிப்படலமாய் இருந்தது போல எனது குரலே வெட்டுப்பட்டு இல்லாமல் போயிருந்தது, குரல்வளையே இல்லாதது போல அங்கே வெறும் காற்றுதான் இருந்தது.

       திருமதி பேட்டர்ஸன், இதுதான் எனது ஆய்வுக்கூற்று: அதைப்பற்றி அதிகம் எழுதப்பட்டிருக்காவிட்டாலும் வட அமெரிக்க வனவாழ்வில் நடைநாய் ஒரு முக்கிய அங்கமாகும். நடைநாய் ஏன் முக்கியமானது என உங்களால் உணர முடிகிறது என நான் நம்புகிறேன். உங்களால் எனக்கு உதவமுடியும் என நம்புகிறேன். உண்மை என்னவெனில், மாயக்கம்பளத்தைக்கொண்டு உங்கள் மருமகன் உருவாக்கியதுதான் நடைநாய் என நான் நினைக்கிறேன். நான் நீங்கள் உள்ளிட்ட எல்லோராலும் தனித்துவிடப்பட்டு, அவன் மிகத் தனிமையாக உணர்ந்திருக்க வேண்டும்.  அதனால்தான் அவன் மிகத்தீவிரமான ஒன்றைச் செய்துவிட்டான்: நடைநாயை வரவழைத்திருக்கிறான், அதுவும் வந்துவிட்டது. நான் சொல்வது சரிதானா என நீங்கள் கூறவேண்டுமென நான் விரும்புகிறேன். உங்களுக்கு அந்த மாயக்கிழவியைத் தெரியுமா? அவள் எப்படி இருந்தாள்? அவள் உங்களுக்கு எதையேனும் விட்டுச்சென்றாளா? மீளும் மந்திரத்தை அவள் உங்களுக்குச் சொன்னாளா?

      நீங்கள் ஆமாம் என்று சொல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன்: அதாவது, உங்களுக்கு ஒரு மந்திரம் தெரியும் என்றோ உங்களிடமே ஒரு மாயக்கம்பளம் இருக்கிறதென்றோ சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.  ஆண்டியை எப்படிக் கண்டறிவதென நீங்கள் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன். எனக்கு அவன் வேண்டும். திருமதி பேட்டர்ஸன், இந்த வேட்டை நாய் என்னை நடத்துகிறது, ரொம்பவும் கட்டாயப்படுத்துகிறது. எங்கே சென்றாலும் அதன் காலடிச் சத்தமும் நகரும் ஓசையும் எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது.

      உங்களால் எனக்கு எந்த மந்திரத்தையும் தரமுடியாதென்றால், குறைந்தபட்சம், நடைநாய் ஒரு பேயோ அச்சுறுத்தும் உயிரியோ அல்ல என்றும் அது ஒரு உதவியாளன், தோழன் என்றும் நீங்கள் சொல்ல வேண்டும். ஆண்டி இப்போது பயந்திருக்கவில்லை என்றும் அவன் தனியாக இல்லை என்றும் நீங்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவன் வெறுமனே நடந்து கொண்டிருக்கிறான். அவன் ஆய்வு செய்துகொண்டிருக்கிறான், அதுவும் இன்னொரு வகையான அறிவுச்சொர்க்கம்தான்.  ஒருவேளை அவன் இந்நேரம் இண்டியானாவிற்கு நடந்திருக்க வேண்டும். ஒருவேளை அவன் டென்மார்க்கிற்கு நடந்துவிடுவான். நீருக்கடியில் மூன்று நாட்கள் இருக்கமுடிகிற நடைநாயுடன் அவன் ஒருவேளை நீந்திக்கொண்டிருக்கலாம். அவனை என்னால் அலைகளுக்கிடையே காணமுடிகிறது, நடைநாயின் சிறிய கரிய காதுகளைப்பற்றியபடி ஸ்ட்ராபெர்ரி பழுக்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். நான் எப்போதும் அவனை மருத்துவமனை உடையிலேயேதான் காண்கிறேன், அவனை நான் கடைசியாகப் பார்த்தபோது இருந்ததுபோல, ஓர் இரவில் கையில் மாயக்கம்பளத்துடன் எழுந்து மருத்துவமனையின் பூதாகரமான ஒளியினூடாக நடந்து கதவினைத் திறந்தபோது அங்கே கீழே தரையருகில் கரிய நடைநாய் காத்துக்கொண்டிருப்பதாக நான் கற்பனை செய்துகொள்கிறபடி. வா, நாம் நடக்கலாம்.  கார்ல்டன் நீலைப்போல உதைபெற்று மெலிந்து ஆண்டி வரப்போவதில்லை என நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும். அவன் ஜில்லிட்டிருக்கவில்லை என நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும். யாரோ அவனுடன் இருந்துகொண்டே இருக்கிறார்கள், அவனுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாரும் அவனை மீண்டும் காயப்படுத்த மாட்டார்கள்.(11)

       [1] நடைநாய் கழிவுகளை உண்கிறது என்பதை அறிய வெறும் அடிப்படை அறிவே போதும். சாக்கடையில் என்ன வகையான மீன் இருக்கப்போகிறது? போலவே அதற்கு வலுவான ஜீரண சக்தியும் அதீத நோய் எதிர்ப்பு சக்தியும்  இருப்பதாகவும் நம்மால் ஊகிக்க முடியும், ஏனென்றால் ஜெர்ஸி சிற்றோடையில் இருக்கும் மீன்களையெல்லாம் உண்ண நேர்ந்தால் உயிரிழந்துதான் தீரவேண்டும். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மீன்களை நடைநாயால் உண்ண முடியுமென்றால், கழிவுகள் அதற்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக நிச்சயம் இருக்கும்

      [2] Marjorie Wilson, “Sounds of the Jersey Night,” in Voices of Nature, ed. Steven Wilkins, Rutgers University Press, 1980, p. 115. “அப்படியாக அங்கே நடைநாய் இருந்தது. தன் நடை ஓசையாலும் நீரில் குதிக்கும் குணத்தினாலும் அறியப்பட்ட குரல்வளையற்ற ஓர் உயிரினம்.

      [3]ஆண்ட்ரியூவைப் பற்றிய உண்மைகள்: தடித்தவன்(பட்டப்பெயர்: பருத்த புட்டம்), கண்ணாடி அணிந்தவன், எப்போதும் வாசித்துக்கொண்டே இருப்பவன்(அவனது பெயரின் இரண்டாம் பகுதி  புத்தகமனிதன் – Bookman!), உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது தன்னை ஆண்டி என அழைத்துக்கொள்ளத் துவங்கினான் – அது ஒரு முட்டாள்தனமான காரியம் என்பதை யாரும் அறிவர். அவன் ஆண்ட்ரியூ வைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், ட்ரியூ கூட சிறப்பானதாய் இருந்திருக்கும். இல்லை, அவன் ஆண்டியாகத்தான் இருக்க வேண்டும். அத்துடன், அவனது அத்தை ஒரு ஆசிரியை (நீங்கள்தான்), ஆனால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை, இப்படிச் சொல்வதற்கு மன்னியுங்கள். அவனைச் சூழ்ந்திருக்கும் அதிமேதாவித்தனத்தின் நெடியானது மிகக் கடுமையானது, அது உங்கள் கண்களிலிருந்து நீர் வழியச் செய்துவிடும்.  அவனிடம் பிரச்சனை செய்வதற்காகத்தான் யாரும் அவனை நெருங்குகிறார்கள். நம்பமுடியாத அளவு கவனமற்றவராக நீங்கள் இருந்தால் ஒழிய, ஒரு ஆசிரியையாக நீங்கள் இதனை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

      [4] ஆதாரம்: ஆண்ட்ரியூ புக்மேனுடனான தனிப்பட்ட உரையாடல். தனிப்பட்ட வகையில், இம்மூன்று கோட்பாடுகளில், ஆண்ட்ரியூவிற்குப் பிடித்தது மூன்றாவது கோட்பாடுதான். ’தடிஓநாய்’ என்பதில் இருக்கும் தடி கரும்பினைத்தான் குறிப்பிடுமாய் இருக்கும், ஏனென்றால் இங்கே ஜெர்ஸியில் அதிகம் கரும்புகள் கிடையாது. ஆண்டியின் பாட்டி – உங்களுக்கும் உறவினளாய் இருப்பாள் என்றுதான் எண்ணுகிறேன் – இறந்தபோது அவனுக்கு ஒரு கம்பளத்தை விட்டுச் சென்றிருந்தாள். அது நடைநாயின் ரோமத்தால் செய்யப்பட்டதென அவன் கூறுகிறான். அவனது பாட்டி அதனை மாயக்கம்பளம் என்று அழைத்தாள். இந்தக் கம்பளம் கரீபியன் பகுதிகளிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது, ஆண்டியும் இக்கோட்பாட்டினை ஆதரிக்கிறான். அவன் அதைச் சொன்னபோது எனக்குச் சரியாகப் புரியவில்லை – ஆர்வமாக எதையாவது சொல்லும்போது அவனது வேகம் அதிகரித்துவிடுகிறது, ஏற்கெனவே எண்ணெய்ப்பிசுக்காய் இருக்கும் அவனது முகம் எப்போதையும்விட அதிக எண்ணெயாகத் துவங்கிவிடுகிறது. அதாவது, நிஜமாகவே நம்பமுடியாத அளவிற்குப் பளபளப்பு, அது நம் கவனத்தைச் சிதைத்துவிடுகிறது  – ஆனால் அது அடிமைகள் வரும் பாதையையும் இடையில் இருக்கும் நிறுத்தங்களையும் பற்றியது, அங்கோலாவிலிருந்தோ வேறு ஏதேனும் இடத்திலிருந்தோ சார்லஸ்டனுக்கு வருவதைப்பற்றியது. எனக்குத் தெரியவில்லை. பாவம் ஆண்டி. காலரில் வெள்ளைப் பித்தான்கள் கொண்ட சட்டை ஒன்று அவன் வைத்திருந்தான்,  அக்குளில் பெரிய வியர்வைக்கறை தெரிகின்ற சட்டை. அவன் சராசரியாய் இருக்க விரும்பவில்லை என்பது போல் இருந்தது எல்லாமும்.

      [5] இக்குறிப்பு மேலே உள்ள குறிப்பிற்கு நேரடியாகத் தொடர்புடையது அல்ல, அண்ட்ரியூ புக்மேனுடனான நேரடி உரையாடல் என நான் குறிப்பிட்டிருக்கும் அதைப்பற்றி சற்று விளக்கம் தரவே நான் விரும்பினேன். ஆனால் பிரச்சனை செய்வதற்காகவே எல்லோரும் அவனிடம் செல்கிறார்கள் என நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். நான் எந்த வகையிலும் உங்கள் மருமகனுடன் பிரச்சனை செய்ததில்லை என்பதை இங்கேயே தெளிவாக்க விரும்புகிறேன். அதுபோலவே, அவனது மேதாவித்தன நெடியினால் மாசுபட்டுவிடக்கூடாதென்னும் எச்சரிக்கையால், நான் பள்ளியிலும் அவனருகில் செல்வதில்லை. வார இறுதியில் யூனியன் சந்தைக்கு மட்டுமே சென்றேன், ஏனென்றால் அங்கேதான் ஆண்டி அவனது பெற்றோருடன் சனிக்கிழமைகளில் பணப்பரிமாற்று வணிகம் செய்கிறான். ஆண்டியின் பெற்றோரும் கூட பயங்கரமான மேதாவிகள்தான், போர்க்காலணி அணிந்த அவனது தந்தையும், சிவப்பு டோப்பா அணிந்த அவனது தாயும் பழங்கால நாணயங்கள் மீது பைத்தியமாய் இருப்பவர்கள். அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள் என்பது இதனை மேலும் மோசமாக்குகிறது. உங்களுக்கே அது தெரியும் என்றுதான் நினைக்கிறேன். நான் அவர்களது கடையில்  இருந்தபோது நீங்கள் அங்கே நிற்காமலேயே கடந்துவிட்டீர்கள்.

       [6] நடைநாய் சிரிக்கும் சப்தம் உங்கள் தலைக்குள் இப்படித்தான் கேட்கும்.  தனது ஏழு வயதில் நடைநாயினால் கடத்தப்பட்டு முப்பத்து ஆறு வயதில்  ஏதோ காரணத்தினால் விடுவிக்கப்பட்ட கார்ல்டன் ஓ நீல், Star Ledgerக்கு அதன் சப்தத்தை அப்படித்தான் விவரித்தார். “அடைத்து வைக்கப்பட்ட ஒரு குழந்தையின் அழுகை போலவோ தூரத்தில் கேட்கும் இரயிலின் ஓசை போலவோ அதன் சப்தம் இருந்தது.” “‘Livingston குடியிருப்பில் ஓநாய்ப்பையன்,” The Star Ledger, August 14 2005, p. 1. கண்டறியப்பட்டபோது, கார்ல்டன் ஓ நீல் மெலிந்தும் சீரழிந்தும் காணப்பட்டான். கனடாவிற்கும் அர்ஜெண்டினாவின் இறுதி எல்லையின் விளிம்பிற்கும் சென்றிருந்ததாக அவன் கூறினான். நடந்தே. தன்னைப்பற்றி எழுதும்படி அவர்கள் அவனிடம் ஒரு பேனாவைத் தந்தனர், தன் பெயரை எப்படி எழுத வேண்டும் என்பதை நினைவுகூர்ந்தவுடன் அவன் மயக்கமுற்றுவிட்டான். நடைநாய் வெறியனான ஆண்டி இந்த செய்தித்தாள் கட்டுரையைக் கத்தரித்து செய்திப்பலகையில் மாட்டி வைத்தான். ஒரு காகிதத்தில் கார்ல்டன் ஓ நீலின் கையெழுத்தையும் கூட அவன் வைத்திருந்தான். அவன் எப்படியோ இவனைக் கண்டறிந்து அக்கையெழுத்தை வாங்கியிருக்கிறான். அச்சமயத்தில் கார்ல்டன் அவனது அன்னையுடன் கிழக்கு ஆரஞ்சில் வசித்திருக்கிறான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என எனக்குத் தெரியாது.

      [7]       இண்டியானாவின் காலை, நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோர்வுற்றிருக்கிறேன்.

      எனது வேட்டை நாயை நடைக்கு அழைத்துச் சென்றிருந்தேன், ஆனால் இப்போது அவன் என்னை நடத்திக் கொண்டிருக்கிறான்.

      இப்பாடல் ப்ளூஸ் உமன் மெய்ஸ் ஓட்ஸின் ’இண்டியானாவின் காலை’ இசைத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கார்ல்டன் ஓ நீல் பற்றிய கட்டுரையை நான் வாசித்த அதே ஆண்டியின் வீட்டில்தான் நான் இப்பாடலையும் கேட்டேன். அதுபோலவே, இது எனது ஆய்வின் ஒரு பகுதி என்பதால், ஆண்டி அவனது பாட்டியிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற ‘மாயக் கம்பளத்தை’ நான் பார்த்தும் தொட்டும் இருக்கிறேன் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். உங்களுக்கு இந்தக் கம்பளத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமா என யோசிக்கிறேன். எப்போதாவது அதைப் பார்த்திருக்கிறீர்களா? அது சாம்பல் நிறம் கொண்டது, ரோமங்களாலானது, சூடான உணவுப்பொருட்களினடியில் நீங்கள் மேஜையில் வைக்கிற பொருளளவு பெரியது. அது கருப்பாய் இருக்கும் என நினைத்தேன் என நான் கூறியபோது, அது ஏன் சாம்பல் நிறம் கொண்டிருக்கிறதெனத் தனக்குத் தெரியவில்லை என ஆண்டி கூறினான் – அதை நடைநாயிலிருந்து கத்தரித்து எடுத்துவிட்டதால் அதற்குப் போதுமான எண்ணெய் கிடைக்காமல் இருக்கக்கூடும் என அவன் கருதினான். அது அவனது அறையில்தான் இருந்தது. சூப்பர் ஹீரோக்களும் மாதிரி விமானங்களும் நிறைந்து அதுவும் அறிவுச்சொர்க்கத்தைப் பறைசாற்றியபடிதான் இருந்தது. எதையாவது நீங்கள் தொட்டால் ஆண்டி கத்த ஆரம்பித்துவிடுவான், நிச்சயம் நான் ஒருபோதும் அவன் வீட்டிற்கு முன்வாசல் வழியாகச் செல்ல மாட்டேன். நான் பின்புறம் சென்றேன். அவன் ஒரு ஜன்னலைத் திறந்தான்.

      [8]மிக மோசமான விஷயங்களுக்கு அம்மா இப்படித்தான் விளக்கம் அளிப்பாள். அது தனிப்பட்ட வாழ்வனுபவத்தின் அடிப்படையில் உருவானது – எனது தாத்தா (அவளது அப்பா) குடித்துக் குடித்துத்தான் உயிரிழந்தார். தான் பணிபுரிகிற வங்கியிலேயே பாதுகாவலனாகப் பணிபுரியும் ஒருவரை (என் அப்பா) அவள் மணந்ததற்கு இதுதான் காரணம் என நினைக்கிறேன். பாதுகாப்புதான் அவளது அடிப்படை விஷயம். என் பெற்றோரின் ஒரு வாரம் இப்படித்தான் இருக்கும்: வங்கி, வங்கி, வங்கி, வங்கி, வங்கி, மளிகைப் பொருட்கள், தேவாலயம். பள்ளிக்கல்விக்குப் பிறகு நான் ரட்ஜர்ஸிற்குச் செல்லப்போகிறேன் – அங்கே நான் கணக்குப்பதிவியல் பிரிவினைத் தேர்ந்தெடுத்துக் கற்பேன் என என் அன்னை நினைக்கிறாள். கணக்குப்பதிவியல் ஒரு சிறந்த பாதுகாப்பான தேர்வு. எனக்கு இசை கற்பதில்தான் விருப்பம். இதைப்பற்றி நான் சொல்லியிருக்கிற ஒரே ஆள் (உங்களைத்தவிர) ஆண்டி புக்மேன்தான். நாங்கள் ‘இண்டியானா மார்னிங்’ கேட்டபிறகு இதைச் சொன்னேன். உனக்கு இசை பிடித்தால் நீ இசையையே கற்க வேண்டும், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக கலைக்கல்லூரிக்குச் செல்லவேண்டும் என அவன் கூறினான். அப்படி நான் நினைத்ததேயில்லை என்று சொன்னேன். நான் மிக முட்டாளாக உணர்ந்தேன். ஆனால் ஆண்டி நகைக்கவில்லை. அவன் அதிக அமைதியாகவும் சிந்தனை வயப்பட்டவனாகவும் காட்சியளித்தான். அது சிரமம்தான், நம் விருப்பங்களின் படி வாழ்வதென்பது சிரமமானதுதான் என அவன் சொன்னான். ஜன்னலருகே நான் விட்டிருந்த எனது காலணிகளை அவன் பார்த்தபடியிருந்தான், அவற்றிலிருந்து பனி தரைக்கு உருகிக்கொண்டிருந்தது.

       [9] சிற்றோடைக்கருகே அவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். அசிங்கம்பிடித்த காவல் நிலையத்திற்குப் பின்னால். மன்னித்துவிடுங்கள், நான் எனது கட்டுரையில் இப்படி எழுதுவது குறித்துக் கவலை கொள்ளவில்லை. அவன் ஏன் அந்த வழியாக நடக்க வேண்டி இருந்தது? எல்லோரையும் போல, தெற்கு ஆரஞ்ச் ஆய்வ் வழியாக அவன் ஏன் சென்றிருக்கக்கூடாது? நான் ஏன் அவனை என் வீட்டிற்கு அழைக்கவில்லை? ஏழாம் வகுப்பிற்குப் பிறகு ஆண்டி புக்மேன் எங்காவது அழைக்கப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் அவனை சிற்றோடைக்கருகே மடக்கிப் பிடித்தார்கள். அவனது புத்தகப்பையைப் பிடுங்கி நீருக்குள் எறிந்தார்கள். அவனது மூக்கை உடைத்தார்கள். விலா எலும்புகளில் மூன்றை நொறுக்கினார்கள். அவனது மணிக்கட்டின் மீது ஏறி அதையும் உடைத்தார்கள். அவனை உதைத்து மிதித்தார்கள். பெயரைச் சொல்லப்போவதில்லை என்று நான் கூறிய அதே இரண்டு பையன்கள்தான் அதைச் செய்தார்கள். எல்லோரும் அறிந்த நல்ல பையன்கள்.  மன்னிப்புக் கோரிவிட்டதால் அவர்கள் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டார்கள். சரியாக காவல் நிலையத்திற்குப் பின்புறம். காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்? ஆண்டிக்குத் தேவைப்பட்ட போது அந்த சனியன்பிடித்த நடைநாய் எங்கே போய்விட்டது? அதன்பிறகு நான் மருத்துவமனைக்குச் சென்றபோது ஆண்டியின் அப்பா முன்னறையில் அழுதுகொண்டிருந்தார்.

      [10] அவனது படுக்கை மிகவும் தொய்வுற்றிருந்தது. ஆறு வயதிலிருந்தே அவன் அங்கே படுத்துக் கொண்டிருக்க வேண்டும். அது ரொம்பவும் சிறியதாகத் தெரிந்தது. அவன் மிக அழகாகச் சிரித்தான் – இரு கன்னங்களிலும் கச்சிதமான குழிகளுடன். எனது கன்னங்களில் அவனது நீண்ட கண் இமைகள் உரசின. நான் எதையும் கெடுக்க விரும்பவில்லை எனச் சொன்னதற்கு அவன் என்ன சொன்னான்? உனது டென்மார்க் பயணத்திற்கு நான் இடைஞ்சலாக விரும்பவில்லை என்றேன். அவன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு என்னுடன் இருப்பான் என நான் நம்பினேன். ஏனென்றால் என்னிடம் எனக்கென பணம் இருந்தால் கூட, எனது பெற்றோர் என்னை ஒரு ஆணுடன் – அது ஆண்டியைப் போன்ற இனிமையானவனாக இருந்தாலும் கூட –  ஐரோப்பாவிற்கு அனுப்ப மாட்டார்கள். ஆண்டியின் கரங்களைப்போல் பாதுகாப்பான இடம் உலகிலேயே இல்லை என்றாலும், அது பாதுகாப்பில்லை என்பார்கள். புன்னகைத்த அவன் என்னை முத்தமிட்டான். நீ எதையும் கெடுக்கவில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன். மாதிரி விமானங்களின் சிறகுகள் திரும்புகிற நிழல் சுவரில் படிய, வெளியே பனிபொழிந்து கொண்டிருந்தது. ஜன்னல் முழுக்க நீலமாய் இருந்தது. அவன் என்னை அணைத்துக் கொண்டதும் நான் அப்படியே மூழ்கிவிட்டேன். ஒருமுறை உள்ளே சென்றுவிட்டால் மீளவேமுடியாத இடங்கள் உலகில் இருக்கின்றன.

      மொழிபெயர்ப்பாளார்: இல. சுபத்ரா

      [11]என்னுடைய ஆய்வுக்கட்டுரையை முடிக்கும் பொருட்டு, மீதமிருக்கும் பாடலை இங்கே தருகிறேன்.

      “இண்டியானாவின் காலை”

      உனக்கு ஒரு டாலர் கிடைத்தால் நீ ஏன் அதில் பாதியை எனக்குத் தரக்கூடாது.
      உனக்கு ஒரு டாலர் கிடைத்தால் அதில் பாதியை எனக்குத் தா. 
      நான் உனக்குச் சொல்கிற கதைகள் ஒரு பாதிரியாரையும் கூட சிரிக்க வைக்கும்
      என்னிடம் ஒரு நல்ல மனிதன் இருந்தபோது கதிரவன் தினமும் பிரகாசித்தது
      என்னிடம் அந்த நல்ல மனிதன் இருந்தபோது கதிரவன் தினமும் பிரகாசித்தது
      இப்போது எனது வலிகளை இல்லாமலாக்க எனக்கு இந்த விஸ்கி தேவைப்படுகிறது
      பருத்தியில் கூட்டுப்புழு, சோளத்தில் வண்டு
      பருத்தியில் கூட்டுப்புழு, சோளத்தில் வண்டு
      பிறந்த தினத்திலிருந்தே நான் நடந்து கொண்டேயிருப்பது போல் தோன்றுகிறது
      அந்த வேட்டை நாயைக் கேளுங்கள். நான் பிறந்த தினத்திலிருந்தே.

      *

      இல.சுபத்ரா – தமிழ்விக்கி

      Add a Comment

      Your email address will not be published. Required fields are marked *