மூடுண்ட சமூகங்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகள் – வயலட்

பத்மபாரதியின் திருநங்கையர் சமூக வரைவியல் என்ற நூல் முதல் பதிப்பாக 2013இல் வெளியாகியிருக்கிறது. 2005இல் எழுதிய சிறிய ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட வடிவம் இது என்கிறார். 2007ஆம் ஆண்டு லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’ என்ற சுயசரிதை நூல் வெளியானது. தமிழ் இலக்கிய/சமூக பரப்பில் ஸ்மைலியின் இந்த நூல் பெருமளவு முக்கியமானது. அடையாளம் சார்ந்த பிரச்சினைகள், அனுபவங்கள் என்பதைக் கடந்து தமிழில் முதல்முறையாக ஒரு திருநங்கையின் குரல் தனிநபராக ஒலித்தது ஸ்மைலியின் நூலில் என்றே சொல்லலாம். எனவே தனித்த இனவரைவியலைக் கடந்து திருநங்கையரை அணுகவேண்டிய தேவையை அந்த நூல் உருவாக்கியது. அல்லது திருநங்கையரை ஒரு ‘மூடுண்ட சமூகமாக’ மட்டுமே கருதி பொதுச் சமூகம் தன் பங்கு சலுகைகள் அளிப்பதோடு நிறுத்திக் கொள்வதா (எந்த ஒரு சமூகத்தையும் பொதுச்சமூகம் அவ்வாறு அணுகுவது சரியா என்பதே கேள்வி) அல்லது அவர்களை சமமான, தனித்த பிரச்சினைகள் மட்டுமின்றி பொதுப் பிரச்சினைகளும் கொண்ட குடிமக்களாக கருதுவதா என்ற கேள்வியில் இரண்டாவது நிலை மீதான சார்பு தொடங்கியது எனலாம். அதே ஆண்டுதான் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திருநங்கையர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வை தமிழ்ச் சூழலில் திருநங்கையர் எனப்படும் ‘பிறந்தபோது ஆணாக அடையாளப்படுத்தப்பட்ட பெண்களின்’ அரசியல்படுதலுக்கான அதிகார ஏற்பு எனலாம். ‘அரவாணி’, ‘அலி’ போன்ற சொல்லாடல்களுடைய மதச்சார்பு, இழிவு என்பதைக் கடந்து அவை குறிப்பிட்ட சமூகக் கட்டமைப்புகளையும் பிரதிபலித்தவை. திருநங்கை என்ற சொல்லாடல் தனிநபர் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த அரசியல் பெயர்சூட்டல் என்ற வகையில், ஆங்கிலத்தில் புழங்கும் ட்ரான்ஸ்ஜெண்டர் வுமன் என்ற பதத்துக்கு தமிழில் முதல்முறையாக உருவாகிய பதம் எனலாம். இவை நடந்து ஐந்து வருடங்கள் கழித்து வந்த நூல் என்ற நிலையிலேயே நாம் பத்மபாரதியின் நூலை மதிப்பிட முடியும். 2005இன் புரிதல்களை அடிப்படையாகக் கொண்டது என்று கருதினாலும், இருபதாண்டுகள் கழித்து இதன் மதிப்பு என்னவாக இருக்கிறது என்றும் கேட்டுப் பார்க்கலாம்.
ஸ்மைலியின் புத்தகத்தை பத்மபாரதி சில இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். குறிப்பாக அக்காலத்திய பால்மாற்று சிகிச்சைகள் குறித்த விவரணைகளுக்கும், சமூகப் பிரச்சினைகளுக்கும். ஆல்கா பி ஆரோன் போன்ற திருநங்கையர் எழுத்துகளும் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. கூத்தாண்டவர் கோவில் திருவிழா, அரவாணியர் சமூகச் சடங்குகள் போன்றவற்றை அவர் “கேட்டு” பதிவுசெய்திருக்கிறார். இத்தகைய “சொன்னார்கள்” என்று கேட்டதை எழுதும் மானுடவியல் பிரதிகளுக்கு மதிப்பு என்ன என்று எனக்கு தெளிவில்லை.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உள் செயல்பாடுகளை வெளிநபர் ஒருவர், பெரும்பான்மைச் சமூகத்தின் எல்லா பிரச்சினைகளோடும் மதிப்பீடுகளோடும் அப்படியே பதிவுசெய்வது அவர்களைக் குறித்த தெளிவான பார்வையாக அமைவதில்லை. இவை ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் சில பிரதிநிதிகள் ‘ஆய்வாளர்’ என்ற அதிகார அடையாளத்திடம் ஒப்பித்தவை. இவற்றில் உண்மை இல்லை என்பதல்ல விமர்சனம், இவற்றில் இருக்கும் உண்மைக்கு பயன் மதிப்பில்லை என்பதே விமர்சனம். குறிப்பாக இவற்றில் புதிதாக எத்தகைய அளவுசார் ஆய்வும் நடக்கவில்லை என்றே நான் புரிந்துகொள்கிறேன்.
இருந்தாலும் திருநங்கையர் சமூகங்களின் கலாச்சார பழக்க வழக்கங்கள் மேல் ஆர்வம் கொண்டோருக்கு இவை சில தகவல்களைத் தர இயலும் என்ற அளவில், பிரச்சினைகளும் சார்புநிலையும் கொண்ட வரலாறு என்ற அளவில் இவற்றுக்கு மதிப்பு இருக்கிறது என்று நாம் கருதலாம்.
இதைக் கடந்து இந்த நூலின் அடிப்படையான பிரச்சினையைப் புரிந்துகொள்ள ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் ஆணுடலில் பிறந்த பெண்கள் பலரும், அதையொட்டிய பாலின, பாலியல் அடையாளங்கள் கொண்ட பலரும் கூட தமது குடும்பங்களின் ஆதரவின்மை, சமூக விலக்கம் உள்ளிட்ட பல காரணிகளால் திருநங்கையர் சக-ஆதரவை மட்டும் அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புகளில் வாழ்கிறார்கள். இச்சமூக அமைப்புகள் அவற்றுக்கென்று பலவிதமான நடைமுறைகள், சடங்குகள் எல்லாம் கொண்டவை. இவற்றை இனக்குழுவாக எடுத்து ஆராயும் ஒரு அறிஞர், இந்த இனக்குழு உறுப்பினர்களின் பிற அடையாளங்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்வதில்லை. அதேநேரம் திருநங்கை என்ற பாலின அடையாளத்தின் பின்னுள்ள அறிவியல், தனிநபர் உணர்வுகள் போன்றவற்றை ஆய்வாளர் எந்தளவு அக்கறையோடு அணுகியிருக்கிறார் என்பது முக்கியம். ஏனெனில் ஆய்வாளர் அவற்றையும் இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுத முயன்றிருக்கிறார். ‘சாதாரண மக்களிடமிருந்து அரவாணிகள் தங்கள் உருவத்தோற்றத்தில் வேறுபட்டே காணப்படுகின்றனர்’ என்பது போன்ற வரியை “சாதாரண மக்கள்” என்பார் யார் என்ற ஆய்வு விளக்கங்கள் ஏதுமின்றி உதிர்த்துச் செல்கிறார்.
பத்மபாரதியின் எழுத்து நடையில் எவ்வகையான அறிவியல் தர்க்கங்களையும் நம்மால் காணமுடியவில்லை என்பது மற்றொரு குறைபாடு. கிட்டத்தட்ட காலனிய மானுடவியலாளர்கள் போன்ற தொனியில்தான் எழுதுகிறார். பெரும்பாலும் ‘அரவாணி சொன்னார்’ என்று சொல்லி சொல்லப்பட்டவற்றை அப்படியே பதிவுசெய்கிறாரே தவிர அவற்றை கேள்வி கேட்பதோ புரிந்துகொள்ள முயற்சிப்பதோ இல்லை. அவரது தணிக்கை நடைமுறைகளும் வினோதமாக இருக்கின்றன. திருநங்கையர் மீதான பிரபல வசைச் சொற்களை சரளமாக பதிவுசெய்யும் அவர், பாலியல் செயல்பாடுகளைச் சொல்லும்போது மட்டும் ”fellatio” என்று ஆங்கிலத்தில் பதுங்கிக் கொள்கிறார்.
ஆண் பெண் சேர்க்கையின்போது நிகழும் சில குரோமோசோம் குறைபாடுகளால் அரவாணிகள் பிறக்கின்றனர் என்பது போன்ற எந்தக் காலத்திலும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத, ஆராயவும் தகுதியில்லாத கருத்துகளை ஆய்வாளரின் கருத்தாகவே அவர் நேரடியாகச் சொல்கிறார். இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அரவாணிகளுக்கு இலவச உணவு, குடியிருப்பு, பயணம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறுகின்றனர் என்று சொல்கிறார். இந்தக் கூற்றை அக்காய் பத்மஷாலி போன்று பிறரும் சொல்லியிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி என்னால் சரிபார்க்க இயலவில்லை. பிரச்சினை அதன் உண்மைத்தன்மையைக் கடந்து, இத்தகைய கூற்றுகளை ஆராயவோ சரிபார்க்கவோ விருப்பமில்லாத ஆய்வாளராகவே பத்மபாரதி இருக்கிறார் என்பது. 1987இல் வெளியான சாண்டி ஸ்டோனின் எ போஸ்ட்-டிரான்ஸ்செக்சுவர் மானிஃபெஸ்ட்டோவை திருநர் சமூகவியல் ஆய்வுகளில் ஒரு முக்கியமான புள்ளியாகச் சொல்லலாம். இதற்கு முன்னரும் பின்னரும், நேர்மறையாகவும் மோசமாகவும் பல ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் பத்மபாரதிக்கு ‘அரவாணிகளைப் பற்றிய அறிவியல் விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன.’ இதை நாம் ஒருவகையில் தமிழ் கடந்து அவருக்கு வாசிப்பில்லை என்ற ரீதியில் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் 2013இல் புத்தகமாக்கும் வரை இவர் சமுத்திரம், சதாசிவகுமார் போன்றோரின் தான்தோன்றித்தனமான விளக்கங்களை கேள்வியில்லாமல் பிரதியெடுப்பதை அப்படி விளங்கிக் கொள்ள முடிவதில்லை.
மேலும் திருநங்கையரை இவர் மூன்றாம் பாலினம், பெண்ணுமல்லாதவர்கள் என்ற நோக்கிலிருந்தே அணுகுகிறார். சிலர் தங்களை ஆணுமல்ல பெண்ணுமல்ல என்கிறார்கள், சிலர் தங்களைப் பெண்பட்டியலில் சேர்க்கச் சொல்கிறார்கள் என்று சொல்லும் பத்மபாரதி இவற்றில் தான் ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்று எந்த வாசகரும் எதிர்பார்க்கப் போவதில்லை. அதேநேரம் இந்த ‘சொல்கிறார்கள்’ ’சொன்னார்கள்’ என்ற ஆய்வாளரின் கூற்றுகள் மீது நமக்கு நம்பிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. உதாரணத்துக்கு பழங்குடியினர் நாகரீகமடையாதவர்கள் அதனால் எஸ்.டி பட்டியலில் சேர விருப்பமில்லை ‘என்கின்றனர்’ என்கிறார். இந்த கூற்று ஆய்வாளர் பேசியவர்களில் எத்தனை சதவீத்தினரிடம் வெளிப்பட்டது என்ற குறிப்புகள் ஏதும் இல்லை. இதை ‘அரவாணிகளின் கருத்து’ என்றே ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.
திருநங்கையரைக் கடந்து ஆண்-பெண் பாலினங்கள் குறித்த ஆசிரியரின் புரிதலும் மிகப் பழமைவாத அரசியலுடையதாகவே இருக்கிறது ‘பெண் என்றாலே மென்மை என்றும், ஆண் என்றாலே முரட்டுத்தன்மை என்றும் நிர்ணயிப்பது ஹார்மோன்தான்’ என்கிறார். ஆய்வுப் பிரதி என்பதைக் கடந்து ஒரு ஆசிரியரின் குரல் மிகத் தெளிவாக ஒலிக்கும் கட்டுரைப் பிரதியாகவே அமைந்திருக்கிறது திருநங்கையர். அந்த ஆசிரியரின் குரலுடைய அரசியல் சமூகப் பார்வை அத்தனை முற்போக்கான ஒன்றாக இல்லை. இங்கே முற்போக்கு என்பதை மனிதர்களைச் சமமாகக் காண்பது, பழமைவாத ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து சற்றே அறிவியல் மயப்பட்ட புரிதல் என்றளவில் எடுத்துக்கொண்டாலே போதும்.
இத்தகைய ஒரு ஆய்வுநூலாசிரியருக்கு இருபதாண்டுகள் கழித்து தமிழ் விக்கி விருது அளிக்கப்படுவதையும், அதையொட்டி நேர்மறையாக அவரது ஆய்வுகள் மதிப்பிடப்படுவதையும் எப்படிப் புரிந்துகொள்வது என்பதும் கேள்வியாக இருக்கிறது. ”முற்றிலும் மூடுண்ட சமூகங்களான நரிக்குறவர்கள், திருநங்கையர் ஆகியோரின் உலகங்களுக்குள் நிகழ்ந்த முதன்மையான ஊடுருவல்கள் என்று அவற்றைச் சொல்லலாம். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களுடன் தங்கி, நீண்டநாட்கள் உரையாடி, உருவாக்கப்பட்டவை. அந்தத் தனிச்சமூகங்களின் வெளியே தெரியாத நம்பிக்கைகள், அச்சங்கள், சடங்குகள் ஆகியவற்றுடன் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்கு உருவாக்கிக்கொண்டிருக்கும் தனிமொழியின் சொற்கள் வரை முறையாக ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் அவை” என்ற அ.கா. பெருமாளின் கூற்றை சில நூறாண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேய ஆய்வாளன் ஏதேனுமொரு பழங்குடிச் சமூகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கவும் நிறையவே வாய்ப்பிருக்கிறது. இத்தகைய ஆய்வுகளின் பிரச்சினை அவை மூடுண்ட சமூகங்கள் ஏன் மூடுண்டிருக்கின்றன என்பதை பெரிதாக ஆராய விரும்புவதில்லை. இந்த ஆய்வுகளுக்கு சில பரிதாபங்கள் இருக்கின்றன, அரசும் சமூகமும் இவர்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா என்று கோபம் கூடப் படுகின்றன. ஆனால் ‘இவர்கள்’ ஏன் இவர்களாக இருக்கவேண்டும், ‘நாம்’ யார் என்பன போன்ற கேள்விகள் எதுவும் இல்லாத பிரதிகள் இவை.

தமிழில் அரசியல் மயப்பட்ட, தீவிரமான தன்னுணர்வு கொண்ட திருநர் பிரதிகள் குறைவாகவேனும் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் முற்போக்கு பெண்ணிய அமைப்புகள், எழுத்தாளர்களும் கூட பால் வேறுபாடுகள், திருநர் பாலின அடையாளங்கள் குறித்து சிந்தித்திருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். 2011இல் வெளியான மாற்றுவெளி இதழ் போன்றவை தொடங்கி தற்போது கிரேஸ் பானுவின் திருநங்கை பிரஸ் வரை வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகள் கொண்ட பிரதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்போது திருநங்கையரை மிகத்தனித்த பால் அடையாளமாகவே பார்க்கவேண்டும், அவர்கள் ’பிற பால்புதுமையினரைப்’ போல அல்ல என்ற குரல்கள் சமீபத்தில் தமிழக அரசு ஒரு பால்புதுமையினர் நல வரையறைகளை உருவாக்க முயன்றபோது எழுந்தன. இவற்றுக்கு சி.பி.ஐ.எம் போன்ற கட்சிகள் கூட ஆதரவளித்தன. இத்தகைய குரல்களும் பத்மபாரதி போன்றோரின் ஆய்வுகளைப் போன்றவையே, அவை திருநங்கைகளை மூடுண்ட சமூகமாகவே கருதவும், அதன் வழி கிடைக்கும் மிகச்சில பயனில்லா பயன்களுக்காக அரசியல் தன்னிலையை மறுக்கவும் தயாராக இருப்பவை. பத்மபாரதியின் ஆய்வுகள் மீதான விமர்சனம் என்பது இத்தகைய குரல்களின் மீதான விமர்சனமும்தான்.
*
