விழிப்பிற்கான சொல் – கமலதேவி

(அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)

எழுத்தாளர் அம்பை

‘ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறைகள், தூக்குமரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கியிருக்கலாம்.

நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?’

என்ற அம்பை அவர்களின் வரிகளுடன் இந்தக் கட்டுரையை தொடங்குகிறேன். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற கதையில் வரும் வரிகள் இவை. பொதுவாகவே அம்பையின் கதைகளின் ஆதாரமான, பெண்களை நோக்கிய அம்பையின் சொற்கள் இவை. ஒரு பிரார்த்தனையைப்போல ஒரு வேண்டுகோளைப்போல பெண்களை நோக்கி ஒலிப்பவை.

1988-இல் வெளியான இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. நான் முதன்முதலில் வாசித்த பெண் எழுத்தாளர் அம்பை. பதினாறு வயதில் என்று நினைக்கிறேன். அதுவரை எழுத்தாளர்கள் என்றால் ஆண்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எழுத்தாளர் என்றில்லை – பேருந்து ஓட்டுனர், நடத்துனர் என்ற அன்றாடத்திலிருந்து எழுத்தாளர் என்பது வரையான விஷயங்களில் பெண்கள் இருக்கலாம் என்ற பிரக்ஞையே இருந்ததில்லை.

புத்தகம் என்ற விஷயத்தில் ஒரு பெண்ணின் பெயரை கண்டுகொண்ட நாளை இங்கு நினைத்துப் பார்க்கிறேன். ‘பிளாஸ்ட்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்’ என்ற கதை அது. அந்தக்கதையை வாசிக்காமல் கூட அம்பை என்ற பெயரைப் பார்த்த பரவசத்தில் புத்தகத்துடன் முற்றத்து கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த அய்யாவிடம் ஓடினேன். அவரின் விலாபக்கமாக அமர்ந்து புத்தகத்தை காட்டும்போது என் குரலை மீறி அவ்வாவின் குரல், “அது என்ன வயசுக்கு வந்த பிள்ள சடார்ன்னு ஓடிப்போய் கட்டிலுல ஒக்காரது. கீழ ஒக்காந்து கேக்கனும்,” என்று திட்டியதும் எழுந்து கொண்டேன். அய்யா அவ்வாவை, “நீங்க போங்க,” என்றபடி என் கையைப்பிடித்து அவர் அருகில் அமரவைத்தார்.

“இப்படியே உச்சாட்டம் குடு . பொட்டப்பிள்ள ஒம் பேரக்கெடுக்குதா இல்லையான்னு பாரு,”

நான் அம்பயை மறந்துவிட்டு, ”நான் எதுக்குய்யா உங்க பேரைக் கெடுக்கனும்,” என்று சொல்லும்பொழுதே எனக்கு கண்கள் கலங்கத் தொடங்கியிருந்தன. “முதல்ல அழாத.. சொல்றத தைரியமா சொல்லனும்,” என்று அதட்டினார். இந்த வாழ்வில் அவர் என்னிடம் திரும்பத்திரும்ப சொல்லிய சொற்கள் இவைதான்.

அம்பையின் ‘வெளிப்பாடு’ என்ற கதையில், ஒரு நாளைக்கு இத்தனை தோசைகள் என்றால் நாற்பது ஆண்டுகளில் எத்தனை தோசைகள்? என்ற கணக்கு மாதிரிதான் இந்த வார்த்தைகளும்! முக்கியமான நேரங்களில் அனிச்சையாக நான் நினைத்ததை, உண்மை என்று நம்புவதை பேச வைப்பவை அந்த சொற்கள்தான். அய்யாவிலும் ஒரு அம்பை இருந்தார் என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு அம்பை என்பது ஒரு எழுத்தாளரோ பெண்ணோ மட்டுமல்ல. அப்படி அறிமுகமானவர். அவரிலிருந்து இதுவரையான என் வாழ்வில் நிறைய அம்பைகளை கண்டுகொண்டிருக்கிறேன். அதில் கணிசமானவர்கள் ஆண்கள்.

இத்தனை கதைகளிலும் தனித்துத் தெரிவது ஒன்றுண்டு. விதவிதமான தோற்றமுள்ள, எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே வார்ப்பிலான பெண்கள். எப்படி இப்படி இருக்க முடியும்! ஆனால் இதுதான் உண்மை. அது குடும்பத்திற்கான அச்சில் உருக்கி வார்க்கப்படுதல். எத்தனை வெப்பம்! அம்பை பெண் என்பதால் பெண்ணிய எழுத்தாளர் என்று சொல்லப்படவில்லை. அவர் பெண்களை ஆழ்ந்து எழுதினார் என்பதால் அப்படி தோன்றுகிறது. ஒரு வானவில்லில் எத்தனை நிறங்கள் இருந்தாலும்  சிகப்புநிறம் உடனே கண்களில் படுகிறது என்பதால் மற்ற வண்ணங்களை கவனிக்காமல் விடமுடியுமா என்ன? அம்பையின் மென்மையான நிறங்களும் இந்தக்கதைகளில் விரவிக்கிடக்கின்றன என்று ஒரு வாசகியாக குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன்.

மஞ்சள்மீன்‘ என்ற கதையில் இறந்த குழந்தையின் அஸ்தியை கரைப்பதற்காக கடற்கரையில் வந்து நிற்கும்  தாயின் மனநிலையை சொல்கிறார். அது குறை மாதத்தில் பிறந்த குழந்தை. மீனவர் வலையில் மாட்டிய மஞ்சள் மீனின் திறந்து திறந்து மூடும் மஞ்சள் சிறுவாய் அவளை தொந்தரவு செய்கிறது. அதை எடுத்து கடலில் விடச்சொல்லி அது கடலிற்குள் மறைவதை நின்று பார்க்கிறாள். அஸ்தி இருக்கும் பானையின் வாயை திறக்கச் சொல்கிறாள். குறைமாதத்தில் பிறந்த சிசு மூச்சுவிடமுடியாமல் இறக்கும் என்பது அறிவியல் உண்மை. உயிர்வாழ்தலுக்கான நிலதகவமைப்பிற்குண்டான நுரையீரல் இறுதியாக உருவாகும். அந்த மூச்சுத்திணறல் இந்தக் கதையில் வெவ்வேறு விதமாக கையாளப்பட்டுள்ளது. சேயை இழந்த தாய்மனதின் மூச்சுத்திணறலில் இருந்து, ஒரு மீனிற்கு நிலத்தில் மூச்சுத்திணறல் ஆவது வரை. அவள் அந்த மீனை கடலில் விடுவதன் மூலம் அடையும் ஒரு ஈடுசெய்தலை இந்தக்கதை கலாபூர்வமாக தொட்டுச் செல்கிறது. அந்த மஞ்சள் மீனை கடலில் விடும் போது அவளின் மனத்திணறல் ஒரு பெருமூச்சாகிறது. இந்தக்கதை மிகச்சிறிய கதை. இது அம்பையின் கதைகளில் உள்ள சீற்றம், போதம் என்ற எதுவும் தொடாத  கதைகளில் ஒன்று. சேயின் இறப்பை எதிர்கொள்ளும் தாயின் மனம் மட்டுமே பிரதானமாக அமைந்து கதையை நம்முள் உணரச்செய்கிறது.

இதே வரிசையில் வரும் இன்னொரு கதை ‘ஆறு‘. ஒரு பெண் ஆற்றில் குளிக்க இறங்குவது என்ன பெரிய அதிசயம், இதெல்லாம் ஒரு கதையா? என்று கடக்க முடியக்கூடிய கதைதான். அம்பை இரண்டு கதைகளில் இந்த ஆற்றில் குளிக்கும் விஷயத்தை வெவ்வேறு மாதிரி சொல்கிறார். ஆண்டு முழுவதும் நீர் ஓடக்கூடிய அய்யாறு பாயும் ஊர் என்னுடையது. நான் பதிமூன்று வயதிற்குப்பிறகு ஆற்றில் குளித்ததில்லை. இது நவீன பெண் மனதின் தடை. எங்கள் ஊரில் இன்றும் கூட ஆற்றில் குளித்துவிட்டு பாவாடையை மேலே ஏற்றிக்கட்டிக் கொண்டு  ஈரச்சேலையை சுற்றிக்கொண்டு வரும் அம்மா வயதில் உள்ளவர்களை காண்கிறேன். அதுவும் இந்த மார்கழியில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கிறேன் என்று வீட்டு சாமான்களை வீதியில் போட்டுவிட்டு, தாங்களும் வீதியில்தான் குளிக்கிறார்கள். ஆனால் ஒரு பயல் ஏறிட்டு பார்க்கமுடியாது. எடு விளக்குமாறை என்று ஒரு அடியாவது விழுந்துவிடும். இன்றைய பதின் பிள்ளைகளின் ஆடைகள் வெகுவாக மாறிவிட்டன. இயல்பாக இருக்கிறார்கள். இடையில் ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு என்னவாயிற்று? அதீத  கட்டுப்பாடுகளால் உருவான மனமும், கல்வியும், சுயபிரக்ஞையும் அழுத்தும் இடம் அது. நீ பெண்தானே என்பது நமக்கு சிறுகுமிழ் மார்பகங்கள்  எழத் தொடங்கும் சின்னஞ்சிறு வயதிலேயே உரக்கச்சொல்லி சுட்டிக் காண்பிக்கப்படுகிறது. நமக்கு முன்னிருந்த அம்மாக்களின் அக்காக்களின் ரகசியமற்ற தன்மைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இடையில் இரண்டு மூன்று தலைமுறைகள் உள்ளன. அவர்களின் பிரதானமான சிக்கல் இது. உடல் எப்போதும் பிரக்ஞைக்கு உரியதுதான். அது ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய ஆதிப்பிரக்ஞை.

வெளிப்பாடு’ கதையில் அந்த ரிப்போர்ட்டர் பெண் கும்பலாக மக்கள் குளிக்கும் தாமிரபரணி ஆற்றில் இறங்கவே மாட்டாள். ஆனால் ‘ஆறு’ கதையில் அதன் நாயகியான தரூ செல்லும் ஆழமே வேறு. கதை இயல்பாக தன் ஆழத்தில் சென்று முடிகிறது. அவள் ஒரு நதியை தன்னுள் உணரும் தருணம் அது. விடுதலையாகி ஆற்றில் இறங்கும் போது கதை ஒரு விடுபடல் உணர்வைத் தருகிறது. மிகச்சிறிய கதை. ஒரு பெண் ஆற்றில் இறங்கத்  தயங்குகிறாள். மக்கள் அரவமற்ற தனிமையான ஆறு. ஒரு நதியை தன் உடலுக்குள் உணர்ந்து விடுதலையாகி, ஆற்றை பிடிமானமாக கருதும் இடத்தில் கதை சட்டென்று வேறொன்றாக மாறுகிறது. பெண்மையின் பிடிமானம் பெண்மையில்தான் உள்ளதா? என்று சட்டென்று முதல் வாசிப்பிலேயே தோன்றியது. அம்பை தனக்கே எதிராக புனைவில் வெளிப்பட்டு விட்டாரோ என்று புன்னகைத்தேன். ஏனெனில் கதையில்….‘அது ஆறு இல்லை. வாழ்க்கையின் ஆதார நீர். கருப்பை நீர்’ என்று தரூவின் மனதிற்குள் ஓடுகிறது. ‘

தரூ தன் கருப்பையில் உள்ள ஆம்னியாட்டிக் ப்லூயிட்டை தான் இங்கு ஆற்றுடன் இணைத்துக் கொள்கிறாள். அதன் பௌதீகநீட்சியாக ஆற்று நீரை உணர்கிறாள். நீரைப் பற்றிய அச்சத்தை, தன்னுள் உள்ள பெண் அம்சமான ஒன்றிலிருந்தே கடக்கிறாள்.

இந்தக் கதையில் குந்தி தன் கர்ணமூங்கில் கூடையுடன் வந்து இயல்பாக இணைகிறாள். நம் சிந்தனை எப்படியோ நம் புராண இதிகாச பெருங்காவியங்களுடன் இணைந்தே சிந்திக்கிறது. இந்தத்தொகுப்பில் உள்ள கதைகளில் அப்படி பெரும்பாலான பாத்திரங்கள் புராணங்களுடன், நம் கடவுளர்களுடன் இணைத்தே ஒரு விஷயத்தை சிந்திக்கின்றன அல்லது ஒப்புமைப்படுத்துகின்றன. ஒன்று அவற்றை விமர்சிக்கிறது அல்லது அதனுடன் இணைந்து புதிய திறப்பை அடைகிறது. இந்தத்தொகுப்பில் இந்த அம்சம் பெரும்பாலான கதைகளில் உள்ளது. கதைமாந்தர்கள் பீமனை, குந்தியை ஆழ்மனத்திலிருந்து எடுத்து தங்களுக்கான தனிப்பட்ட அனுபவங்களில், பேச்சில் வைத்து சிந்திக்கிறார்கள் அல்லது அது இயல்பாகவே ஒரு மனநிகழ்வாக உள்ளது.

இதே போல ‘வாமனன்’ என்ற கதையில் பீமன் வருகிறான். கணினி ஆய்வகத்தில் பீமனுக்கு என்ன வேலை? முக்கியமான வேலை உண்டு. அந்தக்கதையில் கணினி என்ற இயந்திரம், உணர்வு என்ற உயிரியல் பண்பை பெறுவதே கதையின் கரு.

இந்தக்கதையில் ஒரு பொறுமையான காதல் பற்றி சொல்லவா? என்று ஒரு பெண்ணின் உரையாடல் தொடங்கும். அதற்கு முந்தின பக்கத்தில் ஒரு கவிதை வரும்.

‘எனக்கு ஒரு கவிதை எழுத வேண்டும் பெண்ணைப்பற்றி…

ஒரு கருப்பை

இரு முலைகள்

ஒரு யோனி

இது ஒரு பெண்.

இது மட்டுமே பெண்’ என்று முடியும். கதை அதற்குப் பின் வேறொன்றை பேசச் சென்று விட்டு இந்தப் பொறுமையான காதலுக்கு திரும்பும். நாம் அந்த வரிகளை அங்கேயே விட்டு விட்டு இங்கே வருவது வாசிப்பிற்கு செய்யும் நியாயம் இல்லை.

பாண்டவர்களின் இறுதி இமயமலைப் பயணத்தில் காதலை கொண்டு வரும் கதை இது. எல்லோரும் அந்தப் பனிமலைமீது இறந்து விட்டிருந்தார்கள். பீமன் தன் கனத்த உடலுடன் சிரமப்பட்டு அவள் அருகில் வந்து ‘திரௌபதீ’ என்று அழைப்பான்.  அவள் ‘நீ எனக்கான உன் கடமைகளை சரிவர செய்தாய்’ என்பாள்.

‘நான் உன்னை காதலித்தேன் திரௌபதி. எப்போதும் காதலித்தேன்,’ என்பான். அவள் வியப்புடன் பார்க்கிறாள். ஆண் என்றால் கோபம் தவிர எந்த உணர்வையும் வெளிப்படுத்தக்கூடாது என்ற நம் எண்ணத்தின் மீது ஒரு கேள்வியை அங்கே எழுப்புகிறார். அம்பையை இந்த இரு எல்லைகளில் வைத்து சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சில மரணங்கள்’ என்ற கதையில் எழுத்தாளர் ஒருவர் விமர்சகரின் இறப்புச் செய்தியை கேட்டதும் அவரை தன் தந்தையின் மரணத்துடன் இணைத்து மனதிற்குள் அந்த இறப்பை எதிர்கொள்ளும் தருணத்தை கதையாக்கி இருக்கிறார். அப்பாவுக்கு காலில்தான் அவர் வலிமையெல்லாம். கோபம் வந்தால் எட்டி உதைப்பேன் என்றுதான் வசனம் சொல்வார். இப்படி அப்பாவை விவரித்து முடித்த கதாபாத்திரம் விமர்சகரை காணச்செல்லும் போது இறந்தபின் அவர் அமர்ந்திருப்பதை இப்படி சொல்கிறார்.

‘முக்காலியின் வெளியே ஒரு கால் நீண்டது’

அவருக்கு அப்பா போலத்தான் விமர்சகரும். நீளும் கால்கள்  இருவருக்கும் ஒன்றுதான். அந்த நீளும் கால்களை உணராத பெண்கள் இல்லை என்று நினைக்கிறேன். கைநீட்டக்கூட விரும்பாமல் காலால் உதைப்பது எது என்று மனதிற்கு தெளியும்போது கதை நம் மனதில் ஒரு பாய்ச்சலை நடத்துகிறது.

‘அணில்‘ என்ற கதையில் ஒரு பழைய நூலகம் வருகிறது. பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை தேடும் ஒரு வாசகி அங்கு வருகிறாள். ஒருவரும் சரியாக கிடைக்கவில்லை அல்லது அவர்களின் புத்தகங்கள் கவனிக்கப்படவில்லை. சில அழியும் நிலையில் உள்ளன. இந்தக்கதையில் சிந்தாமணி, பாலம்மாள் நடத்திய பெண்களுக்கான பத்திரிகைகள் எங்கே என்று அவள் தேடுகிறாள். பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை ஒரு பூச்சி படிந்து அழிக்கிறது. அது காலத்தின் கவனமின்மைதான். கவனிக்கப்படாத ஆவணப்படுத்தப்படாத, பெண்எழுத்தை ஒரு இருண்ட பழைய நூலகத்தின் வழியே சொல்கிறார். தனியே நிற்கும் கதை இது. இத்தனை கதைகளில் சொல்லப்பட்டவைகளை கடந்து எழுதிய இவர்களும் மறக்கப்படுவதைப் பற்றி அக்கறையும், தவிப்பும் கொண்ட கதை.

புத்தகத் தலைப்பான ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற கதை தொகுப்பில் உள்ள பக்க அளவில் பெரிய கதைகளில் ஒன்று.

இந்தக்கதையில் பெண்களின் அன்றாடமான சமையலறையே கதைக்களம். எங்கு சென்றாலும் அந்தக்களம் அவர்களுக்காக காத்திருக்கிறது. ஏரி பார்க்க சுற்றுலா செல்லும் போதும் ஸ்டவ்வுடனும், ஒரு மூட்டை உணவை தயாரித்துக்கொண்டு செல்பவர்களை வேதனையுடன், அந்த வேதனை வெளிப்படாமல் காட்டுகிறார். இன்று அப்படியில்லை என்று சொல்லிவிட முடியுமா? மூன்று நாளுக்கானதை குளிர்ப்பதன பெட்டியில் சமைத்துவைத்து விட்டுதான் செல்கிறோம். இங்கு சொல்லப்படுவது நடுத்தர வர்க்கத்து அன்றாடம். பொருளாதாரத்தால் மேம்பட்ட பெண்களுக்கு ஒரு வகையில் சமையலில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது.  ஆனால் அந்த விடுதலையை எப்படி பயன்படுத்துகிறது என்று சிந்திக்க வேண்டும். விவசாயக்கூலிகள் போன்ற உடல் உழைப்பை சார்ந்த பெண்களுக்கு என்று ஒரு அழகான முறை உண்டு. மதியத்திற்கு மேல் வந்ததும் குளித்துவிட்டு சமைப்பது. சோறும் குழம்பும் வைத்து ஒரு மணிநேரத்தில் வேலையை முடித்துவிடுவார்கள். வாரத்தில் ஒருநாள் சமையல் வேலை அதிகமாக இருக்கும். காலையில் வயலுக்கு செல்லும் முன் சோறு வைக்கும் வேலை மட்டும்தான். அவர்கள் ஆண்களுக்கு  சமமாக வயலில் கிடப்பவர்கள். அவர்கள் இயல்பாகவே சுதந்திரமானவர்கள். அவர்களில் குடிக்கும் கணவனிடம் அடி வாங்குபவர்கள் மிகவும் குறைவு. கணவனை மிரட்டி உருட்டிப் பார்ப்பார்கள். இல்லையெனில் இரண்டு தட்டுதட்டி திண்ணையில் போட்டுவிடுவார்கள். அராஜகம் செய்தால் தெருவில் தள்ளி துரத்தக்கூடியவர்கள். அதன் அடியில் நடுக்கம் இல்லாமலில்லை. அவர்கள் மன உறுதியால் அதை கடக்கமுடிந்த வலிமை கொண்டவர்கள். நடுத்தர வர்க்கத்தில்தான் அத்தனை அழுத்தம். சமையல் என்றாலும் பலவித பதார்த்தங்கள், மூன்றுவேளையும் சமைப்பது என்பதிலிருந்து ஆண்களின் குடியை எப்படி கையாள்வது என்றே தெரியாமல்  மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்தக்கதையில் அதுதான் பேசப்படுகிறது. அது இன்றில்லை என்று சொல்லவிட முடியாது. இன்று மிகப்பெரிய சிக்கலே பெண்குழந்தைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதுதான். அன்பு என்பது விசாலமானது. இந்த வளர்ப்பு சுயநலமானது. இந்தப்பிள்ளைகள்தான் பின்னால் சமையலறையில் கிடந்து வெந்து சாகிறார்கள். இந்தக்கதையில் ஜீஜியின் சமையலறை வாழ்க்கை அவர் மருமகளாக வந்ததில் இருந்து அவரின் கடைசி மருமகள் வரை விரிகிறது. அதில் அவர் தன் மருமகளிடம் ‘இந்த வீட்டிற்கு திருமணமாகி வந்து முதன்முதலாக ஐந்து கிலோ ஆட்டா பிசைந்து சாப்பாத்தி தேய்த்தேன். கைகள் இரண்டும் இரத்தம் கட்டி  நீலமாகிவிட்டது’ என்று சொல்வார்.

வெளிப்பாடு’ என்ற கதையில் இதே போல தோசைகள் வரும். நாற்பது ஆண்டுகளாக தோசை சுடும் அம்மா. தோசைகள் கிடக்கட்டும் அதன் பின் சமைத்தவைகளின் கணக்கு, பிள்ளை பேற்றின் கணக்கு, கருக்கலைப்புகளின் கணக்கு, மாதவிடாய் கணக்கு என்று வெவ்வேறு கதைகளில் அவை நீள்கின்றன.  அம்பையை தொடர்ந்து தொந்தரவு செய்வது இதுதான். அவர் தோசை சுடுவதையோ, சாப்பாத்தி சுடுவதையோ இங்கு பேசவில்லை. அவற்றை சுட வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

இதையெல்லாம் ஆண் உலகிற்கு சொல்ல வேண்டும் என்பது உபரியான ஒரு விஷயம்தான். அதை பெண்களுக்கு கடத்தவே அவர் விழைகிறார் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில்  இலக்கியத்திற்கான கலையம்சங்கள் பற்றி பேசவேண்டும். இந்தத் தொகுப்பு முழுவதும் வீசும் குருதி வீச்சம் முக்கியமானது. இதில் இயங்கும் வெளிப்படையான படைப்பாளியின் மனம் நம் இலக்கியத்திற்கு முக்கியம். செறித்து சொல்வதும், குறிப்புணர்த்துவதும் ஒருவகை என்றால் இவரின் எழுத்து வெளிப்படையாக ஒரு ஓளிவீசும் முத்தை கடலில் இருந்து எடுத்து கரையில் வைப்பதை போன்றது. ஆனால் அது தூய்மை செய்யப்படாத சதைத்துணுக்குகளும், வீச்சமும், குருதியும் ஒட்டிய கவிச்சியான முத்து.  அதுவும் முத்து தானே… ஆதிமுத்து. சொல்லப்போனால் நம் நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் உள்ளதைப் போன்ற ஆதி குணங்களை கொண்ட கதைகள். இது ஒரு வகையான அதிதூய தன்மையுடன் இருப்பது. எதையும் கவர்ச்சிக்காக சொல்வதில்லை.

நம் மரபில் ”பிரக்ஞை” என்ற விழிப்பிற்கு மிக முக்கியமான இடம் உண்டு. சொல்லப்போனால் அதுதான் தொடக்கம். நம் பிரபஞ்சம் இருளின்றி ஔியின்றி கிடந்தபின் இரவு பகல் உருவானது என்பது ஒரு விழிப்பு. அங்கிருந்தே காலம் தொடங்குகிறது. உயிர்க் குலங்களில் ஔியை நோக்கிய விழிப்புதான் கண்களானது. உயிர்களில் அகவிழிப்புதான் மூளையானது. இம்மண்ணில் அதன் உச்சம் மனிதரில் உள்ளது. நான் என்று ஒரு குழந்தை உணர்வதிலிருந்து, ஒரு ஞானி உணர்வது வரை பலவிதங்களில் அது நிகழ்கிறது. அதே போல இந்தக்கதைகள் பெண்களை நோக்கிய விழிப்பிற்கான அழைப்பு அல்லது லட்சுமி என்ற பெண்ணின் பிரக்ஞை என்று இந்தக்கதைகளை சொல்வேன்.

எழுத்தாளர் கமலதேவி

பிரக்ஞை என்றால் தன்னை அறிதல். அது எளிய நிலையில் உள்ள அறிதலும், ஞான நிலையில் உள்ள அறிதலுக்குமான வெவ்வேறு எல்லைகளில் இயங்கும் ஒரு சொல். இங்கே பெண் தான் யார்? என்று அறியும் எல்லையில் உள்ள விழிப்பில்  நின்று சொல்கிறேன். மகளோ, தங்கையோ, தாயோ, தோழியோ, காதலியோ, மனைவியோ சமையல்காரியோ, வீட்டு வேலைக்காரியோ, கணினி பொறியாளரோ என்ற அடையாளங்களை கடந்து ‘நான் பெண்’ என்பதை உணரும் நிலை. இப்புவியில் ஆண் போன்றே, நானும் ஒரு பெண். என்மீது வைக்கப்பட்டுள்ள, நானென செய்யும் கடமைகளுக்கான பெயரல்ல நான் என்பது.  எத்தனை அவதாரம் எடுத்தாலும், எந்தப்பெயரில் அழைத்தாலும் அவள் சக்தி என்பதைப் போன்ற ஒன்று என்றே அம்பை நம்மை தொட்டு எழுப்ப முயல்கிறார். ‘பொண்ணா பெறந்திட்டில்ல… கட்டையில எரியற வரைக்கும் கஷ்டம்தான்’ என்றழும் தாய்பாசத்தை மீறி, நம்மை விழிக்கச்சொல்லும் அக்கறையும், அதன் ஆதாரமான பேரன்பும்  இந்தக்கதைகளுக்கான வலிமை. அதை இன்றும் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

*

அம்பை: தமிழ் விக்கி

கமலதேவி: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *