மரணம் ஒருபோதும் புதுமையை இழக்காதது – கே.ஆர்.மீரா
(மோ. செந்தில்குமார் மொழிபெயர்த்த கே.ஆர். மீராவின் ஆராச்சார் நாவலை முன்வைத்து பா.கண்மணி)
“மரணம் ஒருபோதும் புதுமையை இழக்காதது” என்கிற ஒற்றை வரியே 782 பக்கங்களைக் கொண்ட நாவலை ஒரேவீச்சில் வாசிக்கத் தூண்டியது. மொழிபெயர்ப்பாளர் மோ. செந்தில் குமாரின் விரிவான முன்னுரை, பொ.யு. 4ஆம் நூற்றாண்டிலிருந்து இந்திய வரலாறைப் படிப்பதற்கு தயாராக்கிவிடுகிறது. கொல்கத்தாவில் 2000 ஆண்டுகளாக தூக்கிலிடும் தொழிலை பரம்பரையாகச் செய்யும் ‘ஆராச்சார்’ குடும்பத்தினரைப் பற்றியது கதை. பாடைகளும் பிண வண்டிகளும் செல்லும் ஸ்ட்ராண்ட் ரோட்டில், கங்கைக் கரையிலிருக்கும் பழமையான மயானத்திற்கருகில் அவர்களது சிற்றில். சிதையில் எரிகின்ற பிணவாடையோடும் அழுகை சத்தங்களோடும் அந்த கூட்டுக்குடும்பம் வாழ்கிறது. மரணம் அவர்களுடைய வீட்டில் மீன் குழம்பு அல்லது நெய்யில் பொரித்தெடுத்த லுச்சியின் மணம்போல தங்கியிருக்கிறது. பாபா, தாதா, தாக்குமா போன்ற உறவுச் சொற்கள், வங்காளச் சூழலை உணரச் செய்கின்றன. புரிதலை வேண்டி, அவற்றிற்கான தமிழ் முறைச்சொற்கள் கொடுக்கப் பட்டிருகிக்கின்றன.
செந்திலுடைய பொருத்தமான மொழிநடை, மூல நாவலைப் படித்ததற்கான நிறைவைத் தருகிறது. இதற்காக அவர் பேருழைப்பை நல்கியிருக்கவேண்டும். முதிர்ந்த பெண்களுக்கெல்லாம் ‘ர்’ விகுதி கொடுத்ததற்காக வணக்கங்கள். கதைசொல்லியான 22 வயது சேதனா, +2 வரையே படித்த பெண் என்பதால் தமிழாசிரியர் தன் பாண்டித்தியத்தை மறந்து எளிய சொற்களையே எடுத்தாண்டிருக்கிறார். ‘ங்ஹா ங்ஹா’ என்று ஆங்காங்கு வருவது உறுத்துகிறது.
3 மாதங்களுக்குள் நிகழ்வதுதான் சமகாலக் கதை; 2012இல் வெளிவந்தது. கைகளை முன்னால் வீசிக் கோர்த்தும் பிரித்துப் பின்பக்கம் வீசியும் கடைக்கும் திரும்ப வீட்டிற்கும் உல்லாசமாக நடக்கும் எளிய பெண்ணான சேதனா, இந்த 3 மாதத்திற்குள்ளாக எப்படி தெளிவையும் பலத்தையும் சேகரித்து, பெண் ஆராச்சாராக வரலாற்றில் இடம் பிடிக்கிறாள் என்பதே கதை. இதற்குள் தாக்குமா(பாட்டி) சேதனாவுக்குக் கூறிடும் எண்ணற்ற குறுங்கதைகள் பொதிந்திருக்கின்றன. அவற்றில் சில, வழிவழியாக அவர்களது பரம்பரையில் வந்துபோன முப்பாட்டனார்களான ஆராச்சார்களின் கதை. மற்றவை எல்லா நிலைகளிலுமான பல்வேறு காலகட்டத்தைய பெண்களின் கதை. அவர்கள் எல்லோருமே ஆண்களால் துன்புறுத்தப்பட்டு போராடுபவர்கள். போராட்டத்தில் சிலர் வெற்றியடையவும் செய்கிறார்கள். எந்தப் பெண்ணுமே கண்ணீர் பெருக்குவதில்லை. இருட்டிலும் தனிமையிலும் பெண்களின் கண்ணீருக்கு என்ன விலையிருக்கிறது? கிளைக்கதைகள் கதைப்போக்கோடு வந்தாலும் சமயங்களில் அவை வேகத்தடைகளாகின்றன. இத்தனை கதாபாத்திரங்களையும் நினைவிலிருத்திக் கொள்வது அயர்ச்சியூட்டுவது. ஆனால் சிலவற்றை மறந்தாலும் பாதகமில்லை.
இவற்றில் மறக்கவியலாத பாத்திரம் 13ஆம் நூற்றாண்டின் பிங்களகேஷினி. சுல்தான் துகல்கானின் அந்தப்புரத்திற்கு அழைக்கப்பட்டு திரும்பும்போதெல்லாம் அவளுடைய காயமடைந்த உடல் படைவீரர்களால் தூக்கியெடுக்கப்பட்டுத்தான் திரும்பி வந்தது. பின்னாளில் துகல்கானை பால்பன் சிறைபிடிக்க உதவிய பிங்களகேஷினி, பிரதிபலனாக துகல்கானின் உடலை கேட்டார். “இனி எனக்கு என் உடம்பு மட்டும் போதும்”, என்ற அந்தப் புண்பட்ட பெண்- துகல்கானை ஓரிரவில் 728 முறை தன் கையால் தூக்கிலேற்றி பழிதீர்த்துக் கொன்றார். நிகழ்காலத்து புரோத்திமாதீ, வறுமையிலும் செம்மை குலையாதவர். “என்ன பிச்சையெடுக்க வைக்குறதுக்கு இந்த மாநகரம் நெறைய முயற்சி பண்ணிப் பாத்துருச்சு….. நடக்கல”. இத்தனை இத்தனை குறுங்கதைகளை மீரா, உள்நோக்கத்தோடு பொதிந்திருக்க வேண்டும். “வரலாற்றைக் கண்டு பெண்களல்ல, பெண்களைக் கண்டுதான் வரலாறு அஞ்சுகிறது”.
தாகூரின் பாடல்களை சேதனாவும் அவளது தமையன் ராமுதாவும் சூழல்களுக்குத் தக்கவாறு பாடுவது ஊக்க ஊதியம். சாந்திநிகேதனில் கற்ற இந்திராகாந்தி அமலாக்கிய எமர்ஜென்சியின்போது, தாகூர் பாடலைப் பாடியதற்காக கைது செய்யப்பட்டு காலுடைக்கப்பட்ட பத்திகையாளர் மனோதா முரணின் சாட்சி. தலையை மட்டுமே அசைக்கமுடிந்த ராமுதாவுக்கு காது கொடுப்பது சேதனா மட்டுமே. தொலைக்காட்சியில் ஆர்வத்தோடு கால்பந்து விளையாட்டைப் பார்த்தபடி பொழுதைத் தள்ளும் ராமுதாவின் இருப்பு, நம்மை வதைத்துக்கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் ராமுதா, கண்ணாடியின் பிரதிபலிப்பாக மட்டும் ஆகிப்போகிறான்.
காரைபெயர்ந்த வரலாற்றுக் கட்டிடங்கள், அலிப்பூர் சிறை, சுதந்திரப் போராட்ட வீரன் தினேஷ் சந்திர குப்தா, நேர்மையான பத்திரிகையாளரின் சிதிலமடைந்த அச்சகம், பழசும் புதுசுமான புத்தகங்களின் மணம்வீசிடும் தெருக்கள், அழுக்கில் கருத்த கங்கைநதி, சாக்கடைகள், வியர்த்தொழுக வைக்கும் புழுக்கம், சி.பி.எம்முக்கும் திரிணமூல் காங்கிரசுக்கும் இடையேயான வெட்டுக்குத்து, ரத்தம் உறைந்த பலிபீடத்திற்கருகில் ஆடுமாட்டுத் தலைகள் குவிந்துகிடக்கும் காளிகோயில், துருப்பிடித்த கட்டிலுக்குமேல் சீழும் ரத்தமும் கறையான படுக்கைகளுள்ள பிசுக்கான அரசு மருத்துவமனை, பிச்சைக்காரர்களின் கும்பல், குறுகிய சந்துகளுக்குள் கடைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் நீளக்கண் துர்க்கைகள், ஊர்கின்ற டிராம் வண்டிகள், ஜன நெரிசல், மண் குவளைகளில் டீயும் சந்தேஷும், செல்வச் செழிப்புள்ள அசுதோஷ் முகர்ஜி ரோட், பால்கனியில் துணிகளைத் துவைத்துக் காயப்போட்ட தென்னை உயரமுள்ள கச்சேரி…… என கொல்கொத்தாவின் முரணான சித்திரம் அசலாய் விரிகிறது. பௌ பஜாரில் திப்புசுல்தானின் எலும்பும் தோலுமான வாரிசு, தலைப்பாகையோடு ரிக்ஷா மிதிக்கிறார்.
முதலிலிருந்து முடிவுவரை சீர்குலையாத பாத்திரக் கட்டமைப்புக்கள் நாவலின் பலமாகின்றன. இவற்றில் அழுத்தமான பாத்திரவார்ப்பும் ரசனைக்குரியதும் சேதனாவின் அப்பாவான ‘ஃபணிபூஷன் கிருத்தா மல்லிக்’குடையது. கிருத்தா என்றால் கழுகு என்று பொருள். ஆறடி இரண்டங்குல உயரத்தில் கருத்த ஆஜானுபாகுவான கிருத்தாமல்லிக், உருண்ட கண்களுடையவர். 88 வயதிலும் உடல்வலுவும் மனோதிடமும் அறிவும் குன்றாத அவர், ஆணாதிக்கத்தின் பிரதிபிம்பம். தீய பழக்கங்களின் உறைவிடமான கிருத்தாதா, ஆராச்சாருடைய தொழில் தர்மத்திலிருந்து மட்டும் பிசகாதவர். லஞ்சத்தை மறுத்து கணித்த நாளில் தூக்கை நிறைவேற்றியதால், கிருத்தாதாவின் மகன் ராமுவின் கைகால்களை வெட்டி பழிவாங்குகிறார் இறந்தவனின் தந்தை. அதன் பிறகும் கிருத்தாதா தன்னுடைய ஆராச்சார் தொழிலை வெறுக்கவோ விடவோ இல்லை. அந்த ஆளு ஒரு ஆளல்ல…. பல மனுசங்க…… யாவற்றிலும் ஆதாயம் தேடிடும் வஞ்சகமான கிருத்தாதா, மகளை ஆராச்சாராக்க வேண்டி ஊடகங்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு அரசோடு மல்லுக்கட்டுகிறார்; அவர்களுக்கு கையில் சிகரெட்டோடு நேர்காணல்கள் கொடுக்கிறார். அதற்கு விலையாக கொஞ்சம் பணத்தோடு அவரது கட்டிலுக்கு அடியிலும் ஸ்டேண்டில் வைத்துள்ள காளி மாதா, தாது ஆகியோரின் படங்களுக்குப் பின்னாலும் பாட்டில்கள் குவிந்தன. 451 பேரை தூக்கிலேற்றிய கை என்று நரைத்த மீசையை முறுக்கிக்கொண்டு எக்களித்துக் கொள்வார் கிருத்தாதா. நாடக நடிகராகவும் இருந்த கிருத்தாதாவின் மிடுக்கும் ஏற்ற இரக்கத்தோடு அவர் பேசிடும் தோரணையும் சுவையான நாடக அனுபவமாகும். இந்த அனுபவச் சுவைக்காக, கிருத்தாதா பிரவேசிக்கும் போதெல்லாம் ‘நாடகீயம்’ என்கிற சொல் எண்ணற்ற முறை புழங்கப்படுவதை மன்னிக்கலாம் .
“செத்தவங்கள நேசிக்கறது உயிரோட இருக்குறவுங்களோட உயிர்ச்சக்திய அழிக்கும்.”
“நினைவுகள்தா மனுசனோட கவசம். எல்லா நினைவுகளையும் உங்களுக்கு விக்கிறதவிட நல்லது, துணியில்லாம தெருவுல போயிப் பிச்சையெடுக்குறது.”
“டயலாக் ரைட் ஹை ந?”
104 வயதில் நடமாட்டத்திலிருக்கும் கிருத்தாதாவின் தாயார் தாக்குமா, குலப்பெருமை பேசுபவர். தன் வாரிசு கொலையுண்டபோதும் துளி கண்ணீர் சிந்தாதவர். எல்லா மரணமும் ஒரேமாதிரிதானே? எல்லா வாழ்க்கையும் ஒண்ணுதானே? படிக்காவிடினும் பொது விஷயங்கள் அறிந்தவர் தாக்குமா . “பாரதத்திலிருந்து வெளிநாட்டவர் கடத்திச்சென்றது பருத்தியும் அவுரியும் அபினும் மட்டுமல்ல, மரணத்தைக் குறித்த நாட்டறிவையும் சேர்த்துத்தான்”. 1943-பஞ்சத்தை உருவாக்கியது அரசாங்கமே என்கிறார். அபார நினைவாற்றல் கொண்ட அவரது வற்றிய நெஞ்சிலிருந்து கதைகள் ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கும். ஒரு வருடத்தில் வரக்கூடிய மரணம் வரைக்கும் தாக்குமாவால் முகத்தைப் பார்த்து ஊகிக்க முடியும். அதிகப்படியாக ஈக்கள் மொய்ப்பவரை மரணம் உடனே தேடிக்கொண்டு வருமென்பார்.
அழகிய சஞ்சீவ்குமார் வர்மா, பாசிபோன்ற மேலோட்டமான இளைஞன். துடிப்பான தொலைக்காட்சி நிருபரான அவன், தனது சேனலின் TRPக்காக எதையும் செய்யத் துணிந்தவன். தொலைக்காட்சியில் தூக்கிலிடுவதை செய்துகாட்டியதைப் பார்த்து சில குழந்தைகள் சுருக்கிட்டு இறந்தபோதும் (அதீதம்) நிகழ்ச்சியை நிறுத்தாதவன். எதையும் பணத்தால் வாங்க நினைக்குமவன், சேதனா தானாக முன்வந்து தன்னை கொடுக்கையில் பயந்து பின்வாங்குகிறான். பார்வையாளர்களின் நாடித்துடிப்பை துல்லியமாகக் கணிக்க வல்லவனுக்கு, ஒரு பெண்ணை உளப்பூர்வமாக காதலிக்கத் தெரியவில்லை. மனிதர்களை பலவீனப்படுத்துவது அவர்களின் இறந்தகாலம்தான். அதுவே சஞ்சீவின் பலவீனம். சஞ்சீவ்குமாரின் அம்மா…. ஒட்டாமல் துருத்திக்கொண்டு நிற்கிறார். ஆராச்சாரான சேதனாவை அவர் ஏற்பது இயல்பாக இல்லை.
சேதனா தன்னுடைய வீடும் குடும்பமுமே உலகமாக வளர்ந்தவள். அவளுடைய அவயவங்களோ உடற்கூறோ அதிகம் விவரிக்கப் படவில்லை. டிஸ்டிங்ஷனில் +2 தேறிய தன்னை படிக்க வைக்காததைப் பற்றி அவளுக்கு புகாரில்லை. பொருளாசையற்றவள். வரலாறும் தாக்குமா சொல்லும் கதைகளும் கனவுகளுமாக அவளுடைய வாழ்க்கை நிம்மதியாக கழிகிறது. சஞ்சீவைப் பார்த்தது முதல் நீளம் குறைந்த கயிற்றில் தொங்கிய குற்றவாளியைப்போல இதயம் சாகாமலும் கயிறு அறுபடாமலும் துடிப்பது தொடர்ந்தது. காதல், நல்லது, கெட்டது என எல்லாவற்றிற்கும் கயிறும் சுருக்குமே பயன்படுத்தப்பட்டிருப்பது திகட்டுகிறது. ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் சேதனா, தன் துப்பட்டாவில் முடிச்சிட்டுக் கொள்கிறாள். அவனது முதல் தொடுகையில் பிரியமில்லாமல் தொடுகின்ற ஆணின் கைகள் எத்தனை முரட்டுத்தனமாக இருக்கும் என்பதை உணர்ந்து பின்வாங்குகிறாள். ஆனால் பூமியில் சாவைவிட நிச்சயமற்ற தன்மை காதலுக்கே உண்டு. சஞ்சீவோடு, தலைப்பாகை பிய்ந்துபோன கூரையும் ஆடைகள் பெயர்ந்துபோன சுவர்களும் வெடிப்புறப் பிளந்துகிடக்கும் தரைகளுமாக அமைதியாக நிற்கும் பாழடைந்த வீட்டில் சேர்ந்திருக்கும் அத்தியாயத்தில் கவித்துவமும் அழகியலும் செழித்து மண்டியிருக்கின்றன. மரணத்தை விவாதிக்கும் நாவலில் 20ஆவது அத்தியாயம், வெளிச்சமாய் இருக்கிறது. சேதனாவின் நுண்ணிய மனவுணர்வுகள் கூட மீராவின் பேனாவுக்கு தப்புவதில்லை. ஒரு பெண்ணாக இவற்றைப் புரிந்து படிக்கையில் கூடுதல் அணுக்கமாய் இருக்கிறது. நீல சங்குப்பூக்கொடியை லதா என்று மொழிபெயர்த்த நுட்பத்தை பாராட்டலாம்.
நாவல் நெடுக சஞ்சீவுடன் அவளுடைய விருப்பும் வெறுப்புமான உறவு தொடர்கிறது. அவனது சேனல் வண்டியைப் பார்த்து இதயம் ஒரே சமயம் சந்தோஷமும் சோர்வும் துக்கமும் உற்சாகமும் அடைந்து மூச்சு மூட்டியது. அன்பு மனங்கொண்ட சேதனாவால் யாரையும் நிரந்தரமாக வெறுக்கமுடியாது. சிறுமியைக் கற்பழித்த கொலையாளியை தூக்கிலேற்றும்போது கூட ‘மன்னித்துவிடுங்கள் அண்ணா’ என்று முணுமுணுக்கிறாள். வெளியுலகம் அவளை கடுமையாகவும் தந்திரமாகவும் மாற்றுகிறது. “நான் ஆராச்சாரின் மகள் அல்ல; ஆராச்சாரேதான்”, என தந்தையதிகாரத்தை சுருக்கில் தொங்கவிடுகிறாள். தன்னிடம் வரம்பு மீற முயற்சித்த சிறை I.G.ஐ, தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பாக எச்சரிக்கிறாள். இறகுகளில் தீப்பிடித்த பறவையால் பெண் சக்தியைப் பற்றியும் சுயமரியாதையைக் குறித்துமான கவலையை உணரமுடியாது என்பதால், காதலை கடந்து போகிறாள்.
எல்லோரையும் தாண்டி, தூக்குக்கயிறே மையப்பாத்திரம் வகிக்கிறது. “முந்தியெல்லாம் கயிறு கொண்டுவார நாள்லயே சக்திபூஜ ஆரம்பமாகும். நெய்யும் வெண்ணெயும் பழமும் தேச்சு மென்மையாக்குன உடனே பெரிய மரப்பொட்டியில பூட்டி வச்சிருவோம். தூக்குல போட்டு கொன்ன கயிற ஆராச்சார் வீட்டுக்கு எடுத்துட்டுப்போயி அறுத்தறுத்து விப்பாங்க. அத எரிச்ச சாம்பல கலக்கிக் குடிச்சா தீராத நோயெல்லாம் தீரும்ங்கறது நம்பிக்கை. அப்பா தயார் செய்து வைத்துள்ள சுருக்கு, முட்டை இடுவதற்குத் தயாராக இருக்கும் பாம்பைப்போல் சிறையின் இருண்ட அறையில் இருக்கும் பெரிய இரும்புப் பெட்டிகள் ஒன்றில் படுத்திருந்தது.”
மீரா, துணிச்சலான தன் எழுத்தை, விரசத்தையோ குரூரத்தையோ தொடவிடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். “நாளு சட்டுனு காணாமப் போவுது”, போன்ற விறுவிறுப்பான நேரிடையான மொழி. நீட்டி முழங்காத வரிகள். ஒருவர் எந்தவிதத்தில் மற்றொருவரைக் கொல்கிறார் என்று துல்லியமாகச் சொல்ல யாருக்கு முடியும்? பொருள் பொதிந்த வாக்கியங்கள். தூக்கு மாட்டியதும், தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் பையை அழுத்திப் பிடித்ததுபோல அவனது உயிர் பல வழிகளில் வெளியே குதிப்பதற்கு முயற்சித்தது. திகில், கிருமியாக உடலுக்குள் பரவுகிறது. இப்புதினத்திற்கு மத்திய சாகித்திய அகாதெமி உட்பட பல்வேறு விருதுகள் கிடைத்ததில் வியப்பில்லை. எல்லாவற்றையும் தாண்டி, ‘ஏன் கூடாது?’ என்று சிந்திக்க வைப்பதே புதினத்தின் வெற்றி!
காலடியில் பற்றி உயரும் நெருப்பைப் போன்ற தீவிரமான நடையில் எல்லா மதங்களும் சாடப்படுகின்றன. மதங்கள் ஒன்றுபடுவது பெண்களைப் புறக்கணிப்பதிலும் ஒடுக்குவதிலும் தானே. ஆண்களைப் பற்றி,“ஆம்பளைங்க தெய்வங்கள் மாதிரிதான். யாராவது கால்ல உழுந்து கெஞ்சறதுக்கோ மூணு நேரமும் பூச செய்யறதுக்கோ இல்லாட்டி அவனுக வெறும் கல்லுதான்.”
சூடான அரசியல் சாடல்களுக்கும் பஞ்சமில்லை.
விலைக்கு வாங்குவதற்கு ஏழைகள் இல்லாவிட்டால் யாரும் பணக்காரர்களாக மாட்டார்கள்.
ஜனநாயகாம்னா இதான். என்ன நடக்கணும்னு சனங்க தீர்மானிப்பாங்க. எல்லா மக்களுமல்ல. சிலர்…..சிலர் மட்டும்…..
இது ஒரு ஜனநாயக நாடு. மக்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கான அரசாங்கந்தான் மக்கள் எப்படி வாழவேண்டும் என்றும் சாகவேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும்.
“தூக்குக்கைதி நிலவறையில் விழும்போது கயிற்றுச்சுருக்கு இறுக்கி சூட்சும நாடிக்கு பாதிப்பு ஏற்படும். விழுகின்ற சக்தியால் சுருக்கு இறுக்கும். இதயத்தமனிகள் அடைக்கும். அதனால் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் அறுபடும். தலை துண்டிக்கப்படும். “
இந்த நாவலுக்காக மீரா, இலீஷ் மீனைப்போல கொல்கொத்தாவிற்குப் பயணித்து நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரிந்து பல நூல்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அதனால்தான் தகவல்கள் துல்லியமாக இருக்கின்றன.
மரணதண்டனை குறித்த இருதரப்பு விவாதங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காதவை. மரண தண்டனை நீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தின் அடையாளப் படுத்துதலுக்கும் சேர்த்துதான். இந்த விவாதங்களெல்லாம் நலிந்தவர்களுக்கு தேவையற்றவை. தூக்குல போட்டுக் கொல்லவேண்டியது எங்களமாதிரி இருக்கறவங்களத்தான். நாங்களும் தப்பிச்சுக்குவோம். அரசாங்கத்துக்கு லாபமும் கெடைக்கும். மலையாள சஞ்சிகையில் இந்நாவல் தொடராக வந்ததால் சம்பவங்களுக்கும் திருப்பங்களுக்கும் குறைவேயில்லை. இந்த அளவிற்கு செறிவான, காத்திரமான சமகாலப் படைப்பு நம் மொழியில் இல்லையே என்கிற ஏக்கம் எழத்தான் செய்தது.
திட்டவட்டமானதும் நிச்சயமற்றதுமான சாவின் மீதிருந்த அச்சத்தாலும் வெறுப்பாலும் அதைவிட்டு விலகியே இருந்தேன். ஆனால் மரணத்தோடு கைகுலுக்குவதற்கு என்னை தயாராக்கிவிட்டது-“ஆராச்சார்”. வாழ்வின் பின்னேடுகளை புரட்டிக் கொண்டிருக்கையில் இதனை சாத்தியப்படுத்திய செந்திலுக்கும் மீராவுக்குமான என் கடப்பாடு தீர்க்கமுடியாதது.
டயலாக் ரைட் ஹை ந?
-பா.கண்மணி
*
முக்கியமான நூல் அறிமுகம். கண்மணி அவர்களுக்கும், நீலிக்கும் மிக்க நன்றி. நாவலை தேடிப் பிடிக்க வேண்டும். நாவல்களில் என் முதல் தேர்வு மொழிபெயர்ப்பு நாவல்கள்தான்; அதிலும் பெரிய நாவல்கள். “ஆராச்சா”ரை என் வாசிக்க வேண்டிய நூல்கள் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன்.
வெங்கி