ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல் – கி.சரஸ்வதி அம்மாள்

(கி.சரஸ்வதி அம்மாளின் ‘நிழலும் ஒளியும்’ நாவல் குறித்து வெங்கட் சாமிநாதன்)

(வெங்கட் சாமிநாதனின் இக்கட்டுரை தமிழ் இலக்கிய உரையாடல்களில் அதிகம் இடம்பெறாத கி. சரஸ்வதி அம்மாள் எழுதிய ‘நிழலும் ஒளியும்’ நாவலைப்பற்றியது. ‘எழுத்து’ இதழில் வெளியான பெண்களின் படைப்புகள் மிகச் சொற்பமானவை. மூன்றாவது இதழில் (மார்ச் 1959) ஆர். சூடாமணியின் ‘பெரியவன்’ என்ற கதை வெளியானது. அக்கதையைப்பற்றி ஆறாவது இதழின் (ஜூன் 1959) ‘எழுத்து அரங்கம்’ பகுதியில் விரிவான வாசகர் கடிதம் வந்தது. அந்தக் கடித விமர்சனம்தான் வெங்கட் சாமிநாதனின் முதல் எழுத்துப் பிரவேசம். அவரது விமர்சனக் கூர்மையின் ஒரு தெறிப்பை அந்த முதல் கடிதத்திலேயே காணமுடிகிறது. சரஸ்வதி அம்மாளின் ‘நிழலும் ஒளியும்’ நாவல் பற்றிய இக்கட்டுரை நான்கு ஆண்டுகள் கழித்து 55வது இதழில் (ஜூலை, 1963) வெளியானது. இவ்விரு விமர்சனங்களிலும் தமிழ் இலக்கியச் சூழல் பற்றிய அவரது அக்கறையும், பெண் எழுத்தின்மீது அவர் செலுத்திய கவனமும் புலப்படுகிறது. முதல் கடிதத்தில் கலை அமைதி கூடாத கதையை தர்க்கபூர்வமான காரணங்களை முன்வைத்து நிராகரித்தவர், இந்தக் கட்டுரையில் கி. சரஸ்வதி அம்மாளின் நாவல் தமிழ் இலக்கிய வரலாற்றில் அடையக்கூடிய இடத்தை சுட்டிக்காட்டுகிறார். ‘நிழலும் ஒளியும்’ நாவல் பற்றிய இக்கட்டுரை வெங்கட் சாமிநாதனின் ‘என் பார்வையில் சில கதைகளும் நாவல்களும்’ (ராஜராஜன் பதிப்பகம், 2001) என்ற கட்டுரைத் தொகுப்பிலும் இடம்பெற்றது. அத்தொகுப்பு தற்போது அச்சில் இல்லை. சரஸ்வதி அம்மாளின் நாவலை முன்வைத்து அன்றைய இலக்கியச் சூழல் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கிற இக்கட்டுரை இன்றும் முக்கியத்துவம் உடையது. இக்கட்டுரையை ‘நீலி’ மின்னிதழ் நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது.

சரஸ்வதி அம்மாளின் ‘நிழலும் ஒளியும்’ நாவல் மறுபதிப்பு காணவேண்டியதும் அவசியம். அதற்கான முயற்சியையும் ‘நீலி’ முன்னெடுக்கிறது.

-இளைய பரதன்)

ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல்

விமர்சனத்தைப்பற்றியும், விமர்சகர்களைப் பற்றியும், க.நா.சு. ‘க்வெஸ்ட்’டில் கூறியிருந்த கருத்துக்களை ‘எழுத்து’ இதழில் பார்த்தோம். க.நா.சு. படிப்பவராக, சொந்த ரீதியில் தன்னை மட்டும் கருத்தில்கொண்டு சொல்லியிருப்பதால் அதை ஓரளவு சரி என்றே கொள்ளவேண்டும். ஆனால், அந்த அளவு ஒரு அகன்ற பார்வையில், இலக்கிய வளம், வளர்ச்சி இவற்றின் பார்வையில், புறக்கணிக்கத்தக்க அளவே. ஆகவே, க.நா.சு.வின் இக்கருத்துக்கள் பெரும் அளவில் தவறான கருத்துகள்.

சமீபத்தில் சந்தர்ப்பவசமாக ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. உண்மையில் அதை நான் தேடிச் செல்லவில்லை. ஒரு அம்மையாருக்கு படிக்க வாங்கிக் கொடுத்த புத்தகங்களில் ஏதோ ஒன்றை நாமும் படிப்போமே என்ற அலட்சிய பாவத்தில் படிக்கத் தொடங்கிய அந்தப் புத்தகம், கி. சரஸ்வதி அம்மாளின் ‘நிழலும் ஒளியும்’. 16 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாராயணசாமி ஐயர் பரிசு நாவல். அநேகமாக, நாமெல்லாம் மறந்துவிட்ட ஒரு புத்தகம்.

சாதாரண நிலையில் அவ்வாறு நாம் அதை மறந்ததை தவறாக நான் நினைக்கமாட்டேன். 15 வருடங்களில் ஒரு சீரான, நேரிய, இலக்கிய வளர்ச்சியில் மறக்கப்படவேண்டிய நாவல்தான் அது. ஆனால் தமிழ் நாவல் இலக்கியம் வளர்ந்து வரும் போக்கில், அது இன்றிருக்கும் நிலையில், அதை மறந்துவிட்டது சரியா என்று நினைத்துப் பார்த்தால், அது தவறு என்பதுடன், இவ்வாறு நேர்ந்துவிட்டதற்குக் காரணம், க.நா.சு.வுக்கும் மற்றவர்களுக்கும் விமர்சனத்தின் பேரில் இருக்கும் வெறுப்புதான் என்றும் சொல்லவேண்டும். இல்லையெனில் இவ்வெறுப்பு, கி. சரஸ்வதி அம்மாளின் நாவலுக்கு அன்று உரிய இடத்தை அளிக்காது போனதுடன், இன்று க.நா.சு.வுக்கும் நாவலாசிரியராக உரிய இடம் எது என்பதை தமிழர்கள் கண்டுகொள்ள இயலாது செய்துவிட்டிராது; விமர்சனத்தில் அவருக்கு உள்ள வெறுப்பு, நாவலாசிரியராக, அவருக்கே குழிபறித்திருக்கிறது.

அப்படி ஒன்றும் பிரமாதம், இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்றெல்லாம் சொல்லத்தக்க நாவல் இல்லை இது. சீரான, விரும்பத்தக்க வளர்ச்சியில், இடையில் கட்டாயம் தென்படும் ஒரு படைப்பு என்று சொல்லவேண்டும். அப்பாதையில் இருக்கவேண்டிய ஒரு தளக்கல் என்று சொல்லலாம். அதில் ஓர் அங்கமாக இராது போய்விட்டதால் பாதையின் போக்கு மாறிவிட்டது. இப்பாதை மாற்றம் இந்த ஒரு புத்தகத்தின் புறக்கணிப்பால் நிகழ்ந்ததல்ல. விமர்சனம் புறக்கணிக்கப்பட்டதால், இதுவும், இதுபோன்ற மற்றவையும் புறக்கணிக்கப்பட்டதால் நிகழ்ந்தது.

கதையின் நிலைக்களன் ஒரு குக்கிராமம். பண்ணைச் சொந்தக்காரர்களென பிராமணர்களின் ஒரு தெருவும், நிலத்தில் வேலை செய்யும் குடியானவர்களின் இரண்டு தெருக்களுமே கொண்ட ஒரு குக்கிராமம். கதை இருபதுகளில் ஆரம்பிக்கிறது என்று கொள்ளலாம். ஆனாலும், வெளியுலகத் தொடர்பே கொள்ளாது கண்மூடிய பூனையாக வாழ்ந்துவிட்ட கிராமமாதலால், அந்தக் காலத்தை வெகுவாக பின்னால் தள்ளிப்போட்டுக் கொள்ளவேண்டும். அவ்வாறு காலத்தில் பின் தள்ளி நத்தைக் கூட்டுக்குள் சுருங்கி வாழும் அக்கிராம மக்களை வெளியுலக மாறுதல்கள் – சுதேசியப் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கங்கள் – அக்கூட்டினுள் புகுந்து விளைவிக்கும் மாற்றங்களை இக்கதையில் பார்க்கிறோம். இப்போராட்ட காலத்தின் நீட்சி, இக்கதையைப் பொறுத்தவரை சுமார் 15-20 வருடங்கள். நான் வெகுவாக ரசித்தது, குறிப்பிட விரும்புவது – ஆசிரியை கதை எழுத விரும்பியது, அப்போராட்டத்தையும் மாற்றங்களையும் முன்வைத்து, கதையை உருவாக்கும் நோக்கத்தோடோ அல்லது ஏதோ ஒரு காதல் கதையின் இடைச்செருகலாக, ஒட்டுவேலையாக, அம்மாற்றங்களை புகுத்தவோ அல்ல. அக்கிராம மக்களின் அந்தக் குறிப்பிட்ட காலத்தின் வாழ்க்கையை கதைப் பொருளாகக் கொண்டால் அந்நிகழ்ச்சிகளில் அப்போராட்டங்களும், மாற்றங்களும் தவிர்க்க முடியாது உள்நுழைந்துவிடுவதன் காரணத்தால்தான், அக்காலகட்டத்தில் மனித உறவுகளில், அம்மாற்றங்களும் பங்குகொள்வதன் காரணத்தாலேதான் அவை இக்கதையில் இடம் பெறுகின்றன. இந்த நுட்பமான வேறுபாடே படைப்பின் இலக்கியத் தன்மையையும், அதற்ற நிலையையும் விளைவித்துவிடுகிறது. அகிலன், ஆர்வி, முற்போக்கு எழுத்தாளர்கள் முதலியோர் கி. சரஸ்வதி அம்மாளின் எதிர்க்கரையில் காட்சியளிப்பது இதன் காரணத்தால்தான்.

கதையில் சிக்கல்கள் ஏதும் கிடையாது. மிக நேரான கதை, கதைக்குக் காலும் கையும் ஏது, கற்பனையல்லவா என்ற சலுகையுடன் இது இப்படி நடந்திருக்கக் கூடாதா என்ன? என்று வாதிக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. கதையில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும் விஸ்வரூபம் எடுத்து வாழ்க்கைப் போக்கை இனந்தெரியாது, திடீரென மாற்றி அமைத்துவிடுவதில்லை. அவ்வப்போது சிறு சலனங்களை ஏற்படுத்தி, படிப்படியான மாற்றங்களை நிகழ்வித்து மறைகின்றன.

கூடத்து சாய்வு நாற்காலிக்கும் வாசல் திண்ணைக்குமாக மாறி மாறி உட்கார்ந்து வேதாந்தியாக எதிலும் பட்டுக்கொள்ளாது காலத்தைக் கழித்துவரும் கோபாலய்யர், கிராமத்தார் பொறாமைப்படும்வாறே, அவர் தலையிட்டுக்கொள்ளாமலேயே, எல்லாம் மற்றவர்களால் நடந்தேறிவிடும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர். அதிகமாக அலட்டிக்கொள்ளாது பரம்பரைச் சொத்தில் வாழ்ந்து வர, பழங்கால வழிமுறை பிறப்பித்துவிட்டிருக்கும் அவர் போன்ற பலரை கிராமங்களில் நாம் காணலாம். இதற்கெதிராக, வாழ்க்கைப் போராட்டத்தின் அவசியமற்றுவிட்டதன் காரணமாகவோ, தன்னுள்ளேயே அடங்கி வெளியுலகத் தொடர்பு வேண்டாதவாறு தானே ஒரு சிறு உலகமாக நம் கிராமங்களுள் இருந்து வந்ததன் காரணமாகவோ, கிராமத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், நமது அந்நியரது என்ற நகரத்து நாகரிகப் பாகுபாடு இல்லாது தலையிட்டுக்கொள்ளும் பலரையும் அதே வழிமுறை சிருஷ்டித்துள்ளது. அவர்களையும் இக்கதையில் வரும் நாணம்மாள், எதிர்வீட்டு லட்சுமி, வேலைக்கார கிருஷ்ணன் உருவங்களில் பார்க்கிறோம். முக்கியமாக வேலைக்கார கிருஷ்ணன் பாத்திரம் பழைய பண்பாட்டின் மதிப்புகளின் சிறந்த சிருஷ்டிக்கு (product) ஒரு மாதிரி. அந்த மதிப்புகள் இன்று போய்விட்டன. வயிற்றுப் பிழைப்பு காரணமாக ஏற்பட்ட ஓர் உறவு கூலி என்ற ஒரு வியவகார பந்தத்தையும் மீறி மனித உறவுகளின் மதிப்பில் வாழும் நிலைக்கு உயர்ந்துவிடுகிற உன்னதம் அந்தக்கால வாழ்க்கை நோக்கில் இருந்தது. இன்று, நமது மதிப்புகள், நோக்கு அந்த வயிற்றுப் பிழைப்பு, கூலி என்ற ஆரம்ப உறவுநிலையின் மீதே அழுத்தம் விழச்செய்து, மனித உறவை எட்டிக்கூடப் பிடிக்கவிடாது செய்துவிட்டதுடன் அதை விழைவதே, ஆரம்ப உறவுக்கு துரோகம் விளைவிப்பதாகும் என்ற படிப்பினையைக் கொடுத்துவிட்டன. கிருஷ்ணன் பாத்திரத்தில் நாம் இன்று இழந்திருப்பது என்ன என்பது தெரிகிறது. இக்கால பொருளாதார நோக்கிலேயே பிறந்து அதனுள்ளேயே கூடுகட்டிச் சுருங்கிவிட்டன, அரசியல் கொள்கைகளும் வாழ்க்கை நோக்கும். மனித உறவுகளின் நெருக்கத்தைக் கொண்டே மனித சரித்திரத்தின் முன்னேற்றத்தைக் கணிப்பதென்றால் நம் சமூக வளர்ச்சி பின்தங்கிய, பின்னோக்கிய தளர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்.

கோபாலய்யரின் மூன்று பெண்களுக்கும் மூன்று இடங்களில் (அம்மாஞ்சி வெங்குட்டுவின் பிள்ளை நாராயணன், இன்னொரு கிராமத்து பண்ணை முதலாளியின் மகன், அக்கிராமத்திலேயே வாழும் கணபதி, நாணம்மாள் இவர்களின் இரண்டாம் மகன் சங்கரன்) திருமணம் நடக்கிறது. கதையின் ஆரம்பம் நாராயணனின் மனைவியாகும் மகாலட்சுமியின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. அவள் திருமணம் வரைய கதைப்போக்கில், அக்கிராமத்தின் சூழல், மக்களின் வாழ்க்கை நோக்கு, வெளியுலகத்தில் அமர்க்களப்படும் காந்தியின் சமூக சீர்திருத்த போராட்டங்களைப்பற்றிய அவர்கள் பார்வை (அக்கிராமத்தார் மனமும் வாழ்வும் பாதிக்கப்படுவது, அவர்கள் அர்ச்சிப்பது காந்தியின் ஹரிஜன ஆலயப் பிரவேசம், சாதிமத ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போஜனம் இவை போன்றவையே அல்லாது, ஆங்கில ஆட்சி எதிர்ப்பு, சட்டமறுப்பு, உலக யுத்தத்தில் இந்தியாவையும் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு, போன்றவை அல்ல. இவ்வேறுபாட்டின் சிறப்பை, நியாயத்தை நமது வான்கோழி புரட்சி எழுத்தாளர்கள் உணரவேண்டும்) பொதுவாகவே எந்த மாறுதல்களையும் விரும்பாத தங்களின் மரபு வழிவந்த வாழ்க்கை முறையில் கொள்ளும் திருப்தியும் அதற்கு அவர்கள் அளிக்கும் காரணமற்ற புனிதத்வமும் தங்களது இன்றையப் போக்கே, மதிப்புகளே சிருஷ்டியின் உன்னதமான சிகரம் என்ற சிந்திக்காத ஒரு திடநம்பிக்கை இவற்றையெல்லாம் அறிந்துகொள்கிறோம். இத்தோடு மட்டுமல்ல, ஒரு சிறந்த அம்சம் அவர்களது தீவிர சநாதன நோக்கு எவ்வாறு சிற்சில சமயங்களில் சில தங்களுக்குப் பிடிக்காத மாற்றங்களையும்கூட, தாங்கள் வெகுவாக மதிக்கும் குணங்களுடன் உடன் நிகழும்போது, அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அடைந்துவிடுகிறது என்பதையும் காண்கிறோம்.

நாராயணன் சுதந்திரப் போராட்ட அலைகளினால் பாதிக்கப்படுகிறான். ஆனால் அவன் ஈடுபாடு, பிரமிக்கத்தக்க அளவில், கதாநாயகன் என்றால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நம் எழுத்தாளர்கள் கொண்டுள்ள சம்பிரதாய விஸ்வரூப பரிமாணத்தில் அல்ல. வெகு சாதாரணம் (ஆசிரியையின் ஆரம்ப restraint கடைசியில்தான் துரதிர்ஷ்டவசமாக melodramatic proportion ஐ அடைகிறது) பொதுக்கூட்டங்களுக்குப் போகிறான். கிராமத்துக் குடியானவர்களுடன் நெருங்கிப் பழகுகிறான். கீழ்சாதிக்காரனான தர்மராஜூவிடம் தன் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி சிநேகம் கொள்கிறான். சட்ட மறுப்பு இயக்கத்தில் காலேஜ் படிப்பைத் துறந்துவிடுகிறான். அது அவனை சிறையில் தள்ளிவிடுகிறது. தன்னுடன் தேசியப் போராட்டத்தில் தன் மனைவியையும் இறங்கும்படி உபதேசித்தாலும், அவளும் அவ்வாறே சொல்லிக்கொண்டாலும் நிகழ்வதெல்லாம் அவன் கொள்கைகளில், அவனது கஷ்டங்களில் அவளுக்கு அனுதாபமும் இணக்கமும் ஏற்படுவதுதான். தன் கீழ்சாதி நண்பன் தர்மராஜூவிடம் தன் மனைவியையும் சாதிவேறுபாடு பால்வேறுபாடு பாராட்டாது பழகச் செய்கிறான். இதன் காரணமாகவே, பின்னால் கிராமத்தார், அவர்களின் உறவைப்பற்றி அவதூறு எழுப்புகின்றனர். இதுவும்கூட நாவலில் அருவருப்பு மிகுமாறு பூதாகார உருவெடுத்து பேயாட்டம் ஆடவோ, எத்தகைய உருக்க உணர்வு விளைவுகளை உண்டாக்கவோ (melo dramatic turn] இல்லை. கிராமத்து வம்புப்பேச்சுக்களாகவே, சம்பந்தப்பட்ட சிலரின் மன உளைச்சல்களுடனேயே வளர்ந்து மடிந்துவிடுகிறது. இந்த விளைவு மிகக் கட்டுப்பாட்டுடன் (restraint) ஆசிரியையால் கையாளப்பட்டிருக்கிறது.

மற்ற பாத்திரங்கள், தனித்தோ, மொத்தமாகவோ, கிராமத்து வாழ்க்கையின் பல்வேறு குணங்களையும், சுற்றி நிகழும் மாறுதல்களுக்கு அக்குணங்கள் ஈடுகொடுத்தோ, எதிர்த்தோ, அல்லது தனது என்ற ஒரு இயக்கமின்றி இழுத்துச் செல்லும்வழி இழுபடும் தன்மையனவாகவோ காணப்படுகின்றன. கணபதி சாஸ்திரிகள், சேரி ஜனங்கள் கோயிலுக்குள் நுழைவதை சர்க்காரே தூண்டிவிடும் பொழுது நாம் எதுவும் செய்வதற்கில்லை போய்க்கொள்ளட்டும் தினமுமா நடக்கப்போகிறது ஒரு நாள்தானே, பிறகு ஏதாவது சம்ரோக்ஷணம் செய்துவிடலாம் என்று இருந்துவிடுகிறார். கிராமத்துப் பெண்கள், தங்கள் புருஷர்கள் இதைத் தடுத்து நிறுத்தத் தெரியாது கையாலாகாதவர்களாக இருக்கிறார்களே என்று வெறுத்துக்கொள்கின்றனர். சேரிப் பெண்களின் பின் சுற்றியலையும் சுப்புணிக்கோ கோவிலின் பவித்ரத்தைப்பற்றி ஏதும் அக்கறை இல்லாவிட்டாலும் கலகம் செய்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்று உத்சாகம் கொள்கிறான். கிராமத்து சேரி மக்களுக்கு, நாம் செய்வது சரிதானா என்ற ஒரு சந்தேகம். இப்படித்தான் இருக்கவேண்டும் போலும் என்று தலைமுறை தலைமுறையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவிட்ட காரணத்தால் ஏற்பட்ட மனோபாவம்.

ஓர் உத்யோகஸ்தன் பெண்டாட்டியையும் ‘எனக்குப் பிடிக்கவில்லை. யாருக்கு என்ன தெரிகிறது? ராங்கியும் பொறாமையும்; பிறத்தியாரிடம் மதிப்பே கிடையாது.  எல்லாரும் ஒண்ணாப் போகவேண்டியிருக்கு. விஷயம் தெரிஞ்சவா, தெரியாதவா. அந்தஸ்து இருக்கிறவா, இல்லாதவா எல்லாரும் சகட்டு மேனிக்கு ஒண்ணான்னா ஆருக்குப் பிடிக்கிறது’ என்று தனக்குரிய அந்தஸ்தை அளிக்காத கீழ் ஆபீஸர்களின் மனைவிமாரைப் பற்றிப் புகார் செய்துகொள்ளுகிறாள் சப்ஐட்ஜின் மனைவி. சர்க்கிள் இன்ஸ்பெக்டரின் மனைவி தர்மாம்பாளிடம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டிப்டி சூபரின்டெண்டென்ட் ஆனபிறகும்கூட தர்மாம்பாளை தனக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள அவள் மனம் இடங்கொடுப்பதில்லை. “இப்போதானே டிப்டி ஆனார். அதுக்குமுன்னாலே சர்க்கிள் இன்ஸ்பெக்டர்தானே. அவள் எப்படி எனக்குச் சமதையாவாள்” என்பது அவள் வாதம்.

“என்ன விசேஷம். எங்கே தடபுடலா நல்ல புடவை உடுத்தக் கிளம்பறே” என்று கேட்கும் கணபதிக்கு, “எல்லாம் வந்து சொல்றேன். இருங்கோ. உள்ளே பொன்னம்மா இருக்கா. தாகத்துக்கு ஏதாவது வேணுமானா வாங்கிச் சாப்பிடுங்கோ” என்று, திருமணம் நடந்ததிலிருந்து கணவனின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்திய பிறகு தன் இஷ்டம் போல் நடக்க தனக்குச் சுதந்திரம், கணவர் கொடுக்காவிட்டாலும் தானாகவே வந்துவிட்டதென்ற தீர்மானத்தில், திரும்பிக்கூடப் பார்க்காமல், சொல்லிக்கொண்டே போகிறாள் நாணம்மாள்.

கோபாலய்யர் வீட்டுக்குப் பெண்பார்க்க வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், கிராமத்தார் தங்கள் தங்கள் வீட்டு வாசலிலிருந்து வண்டியிலிருந்து இறங்குகிறவர்களை அரைகுறையாகப் பார்த்ததில் திருப்தி கொள்ளாது, அழைக்காவிட்டாலும் அவர் வீட்டிற்கே நேரில் வலுவிலேயே ஏதோ காரணம் கற்பித்துச் சொல்லிக்கொண்டு சென்று, பிள்ளையையும் பார்க்கிறார்கள். பிள்ளை தோற்றத்திலும் வயசிலும் சாரதாவுக்கு சரியானவன்தான் என்று தீர்மானித்துக்கொள்கிறார்கள்.

சுப்புணி சேரிப் பெண்களைத் துரத்திக்கொண்டு செல்வதை, “அதுமாதிரி சின்ன வயசிலே இருக்கிறதுதான்” என்று அதை ஏதோ நடைமுறையாக எடுத்துக்கொள்ளும் ஒருத்தி, நாராயணன் கீழ்சாதிக்காரனான தர்மராஜனுடன் சேர்ந்து உட்சார்ந்து சாப்பிடுவதை, “இருந்தாலும் பறப்பட்டணம்னு பட்டணத்திலே எப்படி இருந்தாலும் பாதகம் இல்லை. நம்ம கிராமத்திலே அதுமாதிரி இருக்கப்படாதுன்னு தெரிஞ்சிக்கவேண்டாமா. அதுக்காக வீட்டுக்குள்ளே அழைச்சு வைச்சுப் பக்கத்திலே வச்சுண்டு சாப்பிடறதுன்னா நன்னாயில்லையே. வீட்டையே கெடுத்துவிடாதோ அநாசாரமின்னா சாமி கண்ணை அவிச்சுப்பிடாதோ” என்று அங்கீகரிக்க மறுக்கும் குளத்தங்கரைப் பெண்மணியின் மனப்போக்கில், பழக்கம், தர்மம், ஆசாரம், நடைமுறை சாத்தியம் இவற்றின் ஒன்றையொன்று சார்ந்து, அச்சார்பினால் மாறும் மதிப்பீடுகளின் பல சாயல்களைக் காண்கிறோம்.

இனி மொத்த உறுப்பாக, நம் கவனத்தை ஈர்ப்பவர்கள் கிராமத்து குளத்தங்கரையில் சந்தித்து ஊர் விவகாரங்களைப்பற்றி அளவளாவிக்கொள்ளும் கிராமத்து பெண்கள். கிராமங்களில் குளத்தங்கரைச் சந்திப்பு, அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம், சடங்காக வளர்ந்துவிட்ட பெருமை வாய்ந்தது. அதில் அவர்கள் உலகத்தையே, அவர்களது பார்வையில் காண்கிறோம். நாவலின் ஆரம்பப் பகுதிகளில் பல நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்கள், இச்சந்திப்புகளிலிருந்தே தெரியவருகின்றன. ஆசிரியை அவ்வப்போது நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப்பற்றி அதிகம் வர்ணிக்காது இச்சந்திப்புகளில், கிராமத்துப் பெண்கள் வம்பளப்பின் விவரணையிலிருந்தே சொல்லிச் செல்வதைக் கண்டு, நாவல் முழுவதையுமே இவ்வாறு எழுதிவிடுகிறாரோ என்று நினைத்தேன், அப்படி எழுதியிருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் ஆசிரியைக்கு உத்திகளைப்பற்றிய அக்கறை இருக்கவில்லை – இச்சந்திப்புகளில், ஊர் வம்பு, அங்கு இல்லாதவர்களின் வீட்டு வம்பு மட்டுமல்லாது மற்ற உலக விஷயங்களும் வாதிக்கப்படுகின்றன. அவ்வாதங்களில் அவர்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளே. அவர்கள் அறிவு, நம்பிக்கை, அனுபவம் இவற்றின் வீச்சு வட்டத்திற்குள்ளாகவே, பெண் பார்வையில் வாதிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்தே, எவ்வாறு படிப்படியாக ஏதோ காரணங்களுக்காக (புரிந்துகொள்ளக்கூடிய, பெண்கள் மட்டுமே தரக்கூடிய காரணங்களுக்காக) வெளியுலக மாறுதல்களை, அறிந்தோ அறியாமலோ, ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் பெற்றுவிடுவதும் நன்கு வெளிப்படுகிறது.

கதையின் ஓட்ட முடிவில், ஒருவிதத்தில் கதாநாயகனின், நாயகியின் வாழ்க்கைச் சுழற்சியை மாத்திரம் நாம் காணவில்லை. அந்த கிராமத்தின் 15 வருட சுழற்சியையே கண்டுவிடுகிறோம். கிட்டத்தட்ட இதை ஒரு கிராமத்தின் கதை என்றே சொல்லிவிடலாம்.

இந்நாவலைப் படித்ததும் எனக்குப் பல எண்ணங்கள் தோன்றின. இன்றைய தலைமுறை, அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட தலைமுறை. நம்முடைய வாழ்க்கை முறையோ, நோக்கோ, மதிப்புகளோ மரபு வழிவந்தது என்றும் சொல்வதற்கில்லை. முற்றிலும் புதியது, எதிர்காலத்தை நோக்குவது என்றும் சொல்வதற்கில்லை. நமக்கென ஒரு பார்வை. ஒரு வாழ்க்கைத் தத்துவம், எதிர்நோக்கு இருக்கிறது என்றும் தெரிவதில்லை. ஒரு மாதிரியான, இருட்டில் துழாவுவதான கீழிறக்கத்தில் வெற்று வெளியில் கைபரப்பி, தட்டுத்தடுமாறி இடறி விழுந்துகொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. நமது பழைய மரபு, நம்பிக்கைகள், தர்மம், தத்துவம் இவற்றையெல்லாம் சகட்டு மேனிக்கு வேண்டியது வேண்டாதது எல்லாவற்றையுமே, அவற்றின் தராதரம், மதிப்பு தெரியாதே கைவிட்டுவிட்டு, அல்லது எதைக் கொள்வது எதைக் கைவிடுவது என்ற தடுமாற்றத்தில், அவசரத்தில் வாய்க்காலைத் தாண்டுபவன், பாதியை அக்கரையில் கைவிட்டு, பாதியை வாய்க்கால் தண்ணீரில் தவறவிட்டு, எதிர்க்கரையில் இடறிலிருந்து கொடியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில், புதிதாக அலைமோதும், தத்துவம், வாழ்க்கை முறைகளிலும் ஆசை, நம்பிக்கையின்மை, புரிந்துகொள்ள இயலாமை, இவற்றால் அவற்றையும் பற்றியும் பற்றாமலும் தவிப்பதான ஒரு திரிசங்குத் தொங்கலாட்டம் நமது தலைமுறையின் நிலை என்று எனக்குத் தோன்றுகிறது. நமது பழைய தலைமுறைக்கு திட்டவட்டமான நம்பிக்கைகள் மதிப்புகள் வாழ்க்கைப் பார்வை, எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கான தயாரான பதில்கள், இக்காலத்திய அர்த்தமற்ற அவசர ஓட்டமின்றி சாவதானமான ஆனால் நிச்சயமான தடம்புரளாத ஒரு வாழ்க்கை நடப்பு இருந்தது. அவற்றில் பல காலந்தப்பி வாழ்ந்தனவாக இருக்கலாம். தவறானவையாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களது மரபு வழிவந்த ரத்தத்தில் ஊறிய தத்துவ நோக்கு எதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தைக் கொடுத்திருந்தது. ஆனால் இன்றைய நமக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. பூரண அறிவு நோக்கும் இல்லை, அடிக்கும் காற்றுக்கெல்லாம், யந்திர பாவனையில் தலையசைத்து உடலாடி நடமாடிக்கொண்டு வருகிறோம். ஆனால் இவ்வளவுக்கும் மாறாது ஆண்களைப் போல, எதற்கும் சுலபமாக இரையாகாது தன்னைக் காத்துக்கொள்ளும் ஒரு இயற்கை இயல்பைப் பெற்றிருக்கும் பெண்கள் பழமையை – அப்பழமை எந்தெந்த மதிப்புகள், நம்பிக்கைகள், பார்வை இவற்றையெல்லாம் உள்ளடக்கி இருந்ததோ அவ்வளவு அர்த்தத்துடனும் – காத்துவரும் திறன் கொண்டவர்கள். கடந்த தலைமுறையில் பிறந்து இன்றைய தலைமுறையின் மாற்றத்தையும் அதனுடன் ஒட்டாது ஒதுங்கி வாழும் அப்பெண்கள் வர்க்கத்தில் எழும் எழுத்தாளர்கள் எழுதவேண்டும் என்பது எனது விருப்பம். அந்நோக்கத்தோடு எழுதப்படாவிட்டாலும், ஏதோ தற்செயலாக அமைந்துவிட்ட, கி. சரஸ்வதி அம்மாளின் இந்நாவலைத் தவிர, வேறு ஏதும் தமிழ் நாவல் இந்நோக்கில் இல்லை. (சி. சு. செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’ ஒரு விதிவிலக்கு) ஏன் இல்லை? இலக்கியமாக எழுதப்படுவதற்கு அத்தலைமுறையிலோ, அவ்வாழ்க்கையிலோ, மனிதர்களிடமோ ஏதும் இல்லை என்பதல்ல. காரணம், துரதிருஷ்டவசமாக அத்தகைய வழிகளில் இலக்கிய நோக்கு எழச்செய்ய விமர்சனங்கள் எழுதப்படவில்லை. விமர்சகர்களால் திசை காட்டப்படவில்லை. விமர்சனமே இருந்தால்தானே. நமது இலக்கிய மதிப்புகள் குரூர உருவம் எடுத்து கோரதாண்டவம் செய்ய ஆரம்பித்துவிட்டன, வாசகக்கூட்டம் என்ற ஒரு இழுப்பின் பாதிப்பால்.

இவ்வளவும் கூறியதன் பிறகு, இன்று இந்நாவல் மறக்கப்படவேண்டிய ஒன்று என்று சொன்னதன் நியாயத்தையும் கூறவேண்டும். எழுத்து முறையில், ஒரு Uniformity இல்லை. அது பல சாயல்களை உருவங்களைக் கொண்டது. பாத்திர அமைப்பில் ஒரு முறை இருந்த கட்டுப்பாடு பின்னர் காணப்படுவதில்லை. நாராயணன், பின் பகுதிகளில் ஒரு ‘ஹீரோ’வாக்கப்படுகிறான். ராஜதானியிலேயே அவன்தான் முதலாவதாக பாஸ் செய்கிறான். ஏன் என்பது தெரிவதில்லை. கிராமத்து மக்களுக்கு அவன் பெரும் தியாகியாக வீரபுருஷனாகக் காட்சியளிக்கிறான். மகாலட்சுமி, கலியாணத்திற்கு முன்னதாக, நாராயணன் தன்னைச் சந்தித்து, “நீ நன்றாகப் படிக்கவேண்டும்” என்று சொன்னதை வேதமந்திரமாகக் கொண்டு, தீவிரமாக படிக்க ஆரம்பிக்கிறாள். அதைப்பற்றிக் கவலையில்லை. ஆசிரியையின் உத்சாகம், அவள் படிக்கும் தீவிரத்தைக் கண்டு கிராமக்குழந்தைகள் எல்லோருமே படிக்க ஆரம்பித்துவிடுவதாகவும், கிராமத்துக் கல்வி முன்னேற்றமே அவளால் சாத்தியமாகிவிடுவதாகவும், எழுதவைக்கிறது. ஒரு இடத்தில் “ஏண்டா அந்த குடியானவனோடெலாம் பழகிறே” என்று கேட்கும் தாயிடம், “சாதி தோன்றிய வரலாற்றையே வர்ணித்து சரித்திரப் பாடம் போதிக்கும் பிரசங்கத்தில் இறங்கிவிடுகிறான். தனித்துக் கோவிலுக்குச் சென்ற மகாலட்சுமியை சுப்புணி வழிமறித்து கைபற்றுகிறான். அங்கு தற்செயலாக வந்த பள்ளன் ஒருவன், கி. சரஸ்வதி அம்மாளுக்கு ‘தீனர்களை ரக்ஷிக்க சமயத்தில் தோன்றும் தயாபரனான சர்வேசுவரனாக’க் காட்சியளிக்கிறான். பின் எழுதுகிறார். ‘சர்வாந்தர்யாமியான அந்த சூரியபகவானே சுப்புணி அவளிடம் நடந்துகொண்டதற்குக் கண்கள் சிவக்கக் கோபித்துக்கொண்டுவிட்டானா என்ன? என்று சொல்லும்படி ஆகாயம் முழுவதும் ஒரே சிவந்த ஒளி பரந்து நின்றது. அந்த ஒளியோடு சேர்ந்து, பூத்துக் குலுங்கின அந்தச் செவ்வரளிக் காடும் பூமி தேவியின் கொழுந்துவிட்டெரியும் கோபக் கனலெனக் காட்சி அளித்தது.’ சரஸ்வதி அம்மாளுக்கு புராணங்களின் பாதிப்பு மிக அதிகம் போலும்.

இவற்றைவிட இன்னும் முக்கிய காரணம் உண்டு. எடுத்துக்கொண்ட பொருளை நேரிய முறையில் (ஒருசில தடுமாற்றங்களைத் தவிர) எழுதியபோதிலும், அப்பிரச்னைகளில் ஆழமோ, ஆசிரியைக்குத்தான் பிரச்னையின் தத்துவப் பார்வையோ இல்லை. ஆசிரியை எழுத விரும்பியது ஒரு சாதாரண கிராமத்து நடப்பில் ஒரு பெண்ணின் கதை. அவர் வார்த்தைகளில்: ‘நம்முடைய சாதாரண வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவங்கள் இருக்கவில்லையா. நம்முடைய மன எழுச்சிகள் பிறருக்கு ஒரு பொருட்டாக இல்லாதிருக்கலாம், ஆனால் நமக்கு அவைகளே உலகம். இந்த அனுபவச் செய்திகளை நம் போக்கில் நாம் ஏன் சொல்லக்கூடாது. இவற்றிலும் ஒரு சுவாரசியம் இருக்கலாமல்லவா’

ஆனால் அவர் செய்ய எண்ணியதற்கு மேலாக அவரது எழுத்தில் பல குணங்களைக் காணமுடிகிறதென்றால் அதற்குக் காரணம் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியில் காட்டிய நேர்மையும், அம்முயற்சிக்கும் புறம்பான நோக்கங்களில் தலையிட்டுக்கொள்ளாது தன்னை விலக்கிக்கொண்டதும்தான். தன்னுடைய எழுத்தில், தனக்கே இயற்கையாய் வாய்ந்த பெண் பார்வையோடு அதற்குமேல் தாண்டிச்செல்ல கண்டிப்பாக தனக்கு சலுகை மறுத்துக்கொள்ளும்போதே அப்பார்வையின் செலுத்து முறையிலும் தீவிரமும் மிகுந்த உற்சாகமும் கொள்கிறார். ஆசிரியைக்கு உத்திமுறையில் ஏதும் சாதிக்கவேண்டுமென்கிற விருப்பம் இல்லை. ஏதும் பெரும் புரட்சிக் காவியம் தீட்டவேண்டும் என்றோ, காதல் கீதம் பாடவேண்டும் என்றோ, எல்லாம் ஆசைக் கனவுகள் இல்லை. பெரும் வாசகக் கூட்டத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்ற வியாபார, பிராபல்ய விருப்பபங்களும் இல்லாத காரணத்தால் அதற்கான விசேஷ சர்க்கஸ் வித்தைகள் கோமாளிக் கூத்துக்கள் செய்யவும் இல்லை. கி. சரஸ்வதி அம்மாளின் எழுத்துக்கும், நமது பிரபல தொடர்கதை பூத உருவங்களுக்கும் உள்ள வித்யாசத்தை, நமது சினிமாக்காரர்களின், எழுத்தாளர்களின் கைகளில் அகப்பட்டு வெளிவரும், குழந்தைகள், காதலர்களின் அவலட்சண ரூபத்திற்கும், அவர்களறியாது, அவர்களது பேச்சையும் நடவடிக்கைகளையும் உறவையும் பதிவுசெய்துவிட்டால், டேப் ரிகார்டரும் சினிமா புகைப்படச் சுருளும் நமக்கு அளிக்கும் அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டில் நாம் உணரலாம். ஆசிரியை தனக்குத் தெரியாத விஷயங்களில், தன் உண்மை அனுபவமாக எழுதமுடியாத விஷயங்களில் தலையிட்டுக்கொள்வதில்லை. தனக்குத் தெரிந்தவற்றில், அவற்றிற்கு சம்பந்தமில்லாதவற்றை உள்நுழைப்பதில்லை. அவரது எல்லை அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதுவே அவரது நாவலுக்கு கிடைத்த வெற்றிக்கும் காரணமாகியுள்ளது. அந்த வெற்றி, எழுத்தாளர்களின் முயற்சிகளின் உண்மைக்கும், நேர்மைக்கும் உதாரணமாகி, இன்னும் திறமையுள்ளவர்களுக்கு, ஆழ்ந்த நோக்கும் தத்துவப் பார்வையும் இன்னும் பரந்த அனுபவமும், அவ்வநுபவத்தின் மூலமே தனக்கு நேரிடை அனுபவம் இல்லாதவற்றைக் கற்பனை செய்து உண்மையிலே சிறந்த இலக்கியங்களைச் சிருஷ்டிக்கும் வாய்ப்பை அளிக்கும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறதே அன்றி, அவர் நாவல் தன்னிலேயே ஏதும் சிறந்த படைப்பாகத் திகழவில்லை – காலத்தையும் கடந்து தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டிக்கொள்ள. இவ்வகையில் விமர்சனம், விமர்சகர்கள் இப்புத்தகத்தின் விசேஷங்களையும் அதன் வெற்றியின் படிப்பினைகளையும் எடுத்துக்காட்டத் தவறியதால், ஏதோ காட்டில் மலர்ந்து யார் கண்ணிலும் படாது, நுகரப்படாது, அலங்கரிக்காது மடிந்துவிட்ட மலரைப்போலவே இதுவும் மறக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே, இதுவும் இதைப்போன்ற மற்ற எழுத்துகளும், அவற்றின் மதிப்பையும், அவை பின்வரும் வளர்ச்சிக்கு அமைத்துக் கொடுக்கும் பாதையை, மற்ற எழுத்தாளர்கள், வாசகர்கள் உணரச் செய்திருந்தால் ஒரு வேளை சீரிய பாதை அமைக்கப்பட்டிருக்கலாம். இன்றைய வளர்ச்சிப் போக்கும் மாறியிருக்கலாம். எந்த சிறந்த கலைப்படைப்பும், படைக்கப்பட்டுவிடுவதாலேயே சிறந்த இலக்கியச் சூழலை அமைத்துவிடுவதில்லை. அச்சூழல் அமைவது முழுக்க முழுக்க க.நா.சு. போன்ற ஓரிரண்டு தனிமனிதர் தமது மௌன வாசிப்பினால் ரசிப்பினால் அல்ல – அத்தகைய தனிமனித ரசனையை, காணும் முழு வாசகப் பரப்பின் எல்லை அளவுக்கு விஸ்தரிப்பதனால்தான் சாத்தியமாகிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் பார்வை, அனுபவ, கற்பனை அறிவு எல்லைகள் அவனவனுக்குக் குறுகியவை. அக்குறுகல், தனது தனித்த – மௌன வாசிப்பில், ரசனையில் குறுகியேதான் இருந்துவரும். ஒவ்வொரு தனிமனிதனின் ரசனைப் பரிமாற்றலில்தான் அக்குறுகிய வட்டம் விரிவடையும். அவ்விரிவில்தான் அப்படைப்பின் பூரண ரசனை சாத்தியமாகும்.

வெங்கட் சாமிநாதன்

க.நா.சு. தன் பார்வைக்கே முக்கியத்துவம் கொடுத்துவிடுவது மட்டுமல்லாமல் அதற்கு மாத்திரமே வாழும் உரிமையும் கொடுத்துவிடுகிறார் என்று தோன்றுகிறது. தன்னைச் சுற்றியே சுழலும் இக்கொள்கைக்கும் இன்னொரு இலக்கியப் படைப்பைப் படிக்கும்போதே தன்னைத் தவிர்த்து இன்னொரு வேற்றுப் பார்வை, அனுபவம், அறிவு உண்டு என்று ஒப்புக்கொண்டுவிடுகிறதாகிவிடும் உண்மைக்கும் முரண்பாடு உண்டு. இச்செயலே தன்னுள் ஒரு முரண்பாட்டைக் கொண்டுவிடுகிறது. விமர்சனத்தின் மீது இருக்கும் நம்பிக்கையின்மை, நமக்கும், கி. சரஸ்வதி அம்மாள் போன்று இருக்கக்கூடிய மற்றவர்களுக்கும், நமது இலக்கியத்திற்கும் பெரும் நஷ்டம் விளைவித்திருக்கிறது. நம்பிக்கையிருந்திருந்தால், செயலாற்றியிருந்தால் ஒருவேளை இன்றைய இலக்கிய நிலை மாறியிருக்கலாம். மதிப்புகள் மாறியிருக்கலாம். தகுதியுள்ளவற்றிற்கு உரிய இடம் கிடைத்திருக்கலாம்.

-வெங்கட் சாமிநாதன்

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *