குறைபடவே சொல்லல் – சரோஜா ராமமூர்த்தி

(சரோஜா ராமமூர்த்தியின் படைப்புலகத்தை முன்வைத்து ரம்யா)

சரோஜா ராமமூர்த்தி

1

”தொடர்கதைகளாக வரும் கதைகளில் உள்ள திடீர்த் திருப்பங்கள், மற்ற அதீதங்கள் இவை எல்லாம் இல்லாமல் எழுதியதற்கு ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மிகையில்லாமல் சற்று குறைபடவே சொல்லி நம் மனதில் பாத்திரங்களையும் சம்பவங்களையும் பதிய வைக்கிறார் ஆசிரியை. தமிழில் வெளிவந்திருக்கிற குடும்ப நாவல்களில் சிறப்பான இரண்டு மூன்றில் இதுவும் ஒன்று என்று சொல்ல வேண்டும்” என சரோஜா ராமமூர்த்தியின் முத்துச்சிப்பி நாவலை க.நா.சு மதிப்பிடுகிறார். பொதுவாகவே சரோஜாவின் புனைவுலகத்தை அதன் வடிவம், பேசுபொருள், உணர்வு சார்ந்து “குறைபடவே சொல்லல்” என்பதற்குள் அடக்கலாம்.

சரோஜாவின் சிறுகதைகள் அனைத்துமே ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடியவை. எளிய நடையும், மொழியும் வாசகர்களை உடனேயே உள்ளிழுத்துக் கொண்டு அவரின் புனைவுப்பிரபஞ்சத்திற்கான வாயிலை அளித்துவிடுகிறது. சிறுகதைகள் பெரும்பாலும் ஓரடுக்கு கொண்டவை. ஒரு மனிதரின் வாழ்க்கை, ஒரு சம்பவம், ஒரு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது. அதற்கான விடையாக அல்லது அதன் முடிவை நோக்கி நகரக்கூடியது. இறுதி திருப்பம் என பெரும்பாலும் இல்லை. ஊகிக்கக்கூடிய கேள்வியாக, விடையாகவே கதையின் இறுதி உள்ளது. சிறுகதைகளை கடித உரையாடல், நாடக பாணியில் இருவருக்கான உரையாடல் என வெவ்வேறு வகையான வடிவச் சோதனைகளுக்கு உட்படுத்தியிருக்கிறார். கதையின் ஆரம்பம் பெரும்பாலும் இயற்கை வர்ணனையோடு ஆரம்பிக்கிறது. அந்தந்த கதாப்பாத்திரத்தின் உணர்வுக்கு ஏற்றாற்போல பருவகாலத்தையும், வெப்ப நிலையையும் முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் நுழைகிறார். பேரனால் உணர்வு ரீதியாக துன்பப்படும் பாட்டியின் கண்ணீர் வெளிவரும் ஒரு தருணத்தில் ”மழை பெய்ய அவளின் கண்களில் கண்ணீர் வந்தது” என முடிக்கிறார். பருவ நிலைகளைகளையும் உணர்வுகளையும் தொடர்புறுத்தும் கதைகளாக வாசிக்கும்போது சிறுகதைகள் மேலும் பொருள்படுவதை உணர முடிகிறது.

இயற்கையையும், காலத்தையும் கூட குறைவாகவே பயன்படுத்திக் கொண்டார் சரோஜா. சிந்தனையைத் தூண்டும் அளவுக்கான இயற்கைச் சூழல், வர்ணனைகள், காலச் சித்தரிப்புகள், மனிதச் சித்தரிப்புகளை வைத்துக் கொண்டார். மையத்தை நோக்கி எந்தவித பாவனைகளும், நாடகீயத்தருணங்களும் இல்லாமல் சென்று தொட்டு சட்டென கதையை முடித்து விடுகிறார்.

சரோஜாவின், புனைவுலகின் பேசு பொருட்கள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்தவை. அதிலும் குறிப்பாக பெண்கள். சிறுகதைகள் குடும்பத்தின் சில சம்பவங்களை, தருணத்தை மையமாகக் கொண்டவை. அதில் உழலும் காதலிகள், மனைவிகள், அன்னைகள், பாட்டிகள், பெண் குழந்தைகள் என பெண் உலகத்தின் ஒரு காலகட்டத்தைய சித்திரத்தை அளிக்கிறார். இரண்டாம் உலகப்போரின் சுவடுகளையும், அதனால் குடும்பங்களில் ஏற்பட்ட தாக்கத்தையும் சில கதைகளில் காணமுடிகிறது. இதன் வழி சராசரியான நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பங்களில் போரின், சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் பாதிப்புகளைப் பதிவு செய்தவர் என சரோஜாவைச் சொல்லலாம்.

சரோஜா 1921இல் பிறந்தவர். சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றவர், காந்தியவாதி. இரண்டாம் உலகப்போரைக் கண்டவர். இவரின் முதல் சிறுகதை புதுவெள்ளம் 1938இல் ஆனந்த விகடனில் வெளியானது. 1946-ல் முதல் நாவலான ’மனைவி’ கலைமகள் வெளியீடாக வந்தது. 1947-ல் இருபத்தியிரண்டு சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பான “நவராத்திரிப் பரிசு” வெளிவந்தது. கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், அசோகா, சுதேசமித்திரன் போன்ற இதழ்களிலேயே பெரும்பாலும் எழுதியுள்ளார். முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிய சரோஜா தன் காலகட்டத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். அனைத்து இதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு அவரின் கதைகளை பிரசுரித்திருக்கின்றன. அதன் வழியாக வருமானமும் போதுமான அளவு வந்தது. சரோஜா கதை பிறக்கும் போது ஆழ்ந்து சிந்தனையில் மூழ்கியிருப்பவர். மனதில் திரண்டவற்றை அடித்தல் திருத்தல் இல்லாமல் ஒரே மூச்சில் எழுதியவர். “எழுதியதைத் திருத்தி எழுதியதும் கிடையாது. எழுதினால் எழுதியது தான். முற்றுப்புள்ளி வைத்தால் வைத்தது தான்” என்கிறார் கணவரும் எழுத்தாளருமான து.ரா.

சரோஜா தனக்கான புனைவின் கருக்கள் யாவற்றையும் தன் வாழ்க்கையிலிருந்தும், தான் சந்திக்கும் மனிதர்களிடமிருந்துமே எடுத்துக் கொண்டார். எளிதாக மனிதர்களுடன் உறவாடக் கூடியவர். எவரும் அணுகி தங்களை, தங்கள் வாழ்க்கையை அவரிடம் திறந்து வைக்க ஏதுவான மனதைக் கொண்டிருந்தார். ஊட்டிக்குப் பயணம் சென்ற போது சரோஜாவிடம் ஒரு பால்காரப்பெண் பகிர்ந்துகொண்ட தன்வாழ்க்கைக் கதையைப் புனைவாக்கியதே ’மலையில் ஒரு மாளிகை’ நாவல். கதைகளில் கூட கதைசொல்லியாக வரும்போது வித்தியாசமான பெண்களைத் தொடர்ந்து சென்று அவர்களின் கதைகளைக் கேட்கும் நபராகக் காணப்படுகிறார். ’பனித்துளி’ நாவலில் பத்து வயதில் இழந்த தன் தாயையே பதிவு செய்துள்ளார். “கதைக்கருவைத்தேடி அலைய வேண்டியதில்லை. அது வாழ்க்கையிலேயே உள்ளது.” என ஒரு கதையில் சொல்கிறார். ஆனால் அவரின் கதைகளைப் படிக்கும் போது அது ஏதோ தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கத்தை படிப்பது போலல்லாமல் ஒரு காலகட்டத்தை, அதன் மன நிலையை, சிக்கலை, இன்பங்களைப் பார்ப்பது போலவே உள்ளது.

புவியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் ஒரு சாளரமாக கற்பனை செய்து கொண்டால் அவ்வாழ்வின் ஒவ்வொரு துளியும் பல்லாயிரக்கணக்கான சாளரங்களாக விரியும். சரோஜா காண்பிக்கும் ஒவ்வொரு சாளரமும் ஒரு வாழ்க்கையின் ஒரு துளியை, ஒரு சிந்தனையை வழங்கக்கூடியது.

சரோஜா மிகுபுனைவுகளின் சற்று அருகே கூட செல்லவில்லை. அவர் துள்ளிக் கொண்டு ஒவ்வொரு மனிதராகச் சென்று கொண்டே இருந்தார் எனப்படுகிறது. தன் வாழ்வில், தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் கனத்தையும் சிந்தித்து கதையாக்க முடிந்த யாவையும் கதையாக்கினார். ஒருமுறை ரயில் வரும்பொருட்டு மூடப்பட்டிருந்த ரயில்வே தடத்தில் கால்நடையாகச் சென்ற து.ரா நின்றுகொண்டிருக்க இருசக்கர வாகனக்காரர்கள் பலர் செல்ல முற்பட்டபோது நடந்த சுவாரசியமான சம்பவத்தை அவர் விவரித்தபோது நீண்ட சிந்தனைக்குள் சரோஜா ஆழ்ந்து அதைப்பற்றி அவரை சிறுகதை எழுதச் சொன்னதாகவும், “இந்த மாதிரி சப்ஜெக்ட்ஸை நீ தான் டீல் செய்கிறாய். நீயே எழுது” என து.ரா சொல்லி அது சிறுகதையாகப் பிறந்தது எனவும் து.ரா குறிப்பிடுகிறார். ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களின் புழங்கு தளத்தை சரியாக புரிந்து வைத்திருப்பதும், சிந்தனையோட்டங்களைப் புரிந்து வைத்திருப்பதும், “அது நான் அல்ல” என சொல்லிக் கொண்டு இயங்குவதற்கான சூழலும் சரோஜாவிற்கு குடும்பத்தில் அமைந்திருந்தது. எழுதிக் கொண்டே இருக்கும் சரோஜாவும், குறைவாக எழுதி பிரசுரிக்காமல் தொடர்ந்து செம்மைப்படுத்தி தன்னிடமே வைத்துக் கொண்ட ராமமூர்த்தியும் எழுத்துலகம் சார்ந்து வெவ்வேறு முனைகள் எனலாம்.

சிற்றிதழ் சூழல் சார்ந்து து.ரா விற்கு மனவருத்தம் இருந்தது. பக்க எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவரிடம் கேட்காமல் வெட்டிய சிறுகதைகளுக்காக, திருத்தங்கள் செய்து வெளியிட்ட சிறுகதைகளுக்காக என அவர் பல இதழாசிரியர்களிடம் சண்டை பிடித்துக் கொண்டு தன் கதைகளை பிரசுரிக்காமலேயே இருந்தார். ’சற்று தளர்வாக இருக்கலாமே’ என சரோஜா அறிவுறுத்தியும் கூட. பொதுவாசிப்புக்குரிய பல கதைகளை சரோஜா எழுதியதற்குக் காரணம் அவர் அதிகம் புழங்கிய பொதுவாசிப்பு இதழ்கள் தான். தீவிரமான பேசுபொருள்கள் மறுக்கப்பட்டதும், பொதுவாசிப்புக்கான மொழியைக் கோரியதும் சில தடைகளாக சரோஜாவிற்கு அமைந்திருக்கலாம். உண்மையில் அறுபதுகளில் தீவிரமாக இயங்கிய எழுத்து போன்ற சிற்றிதழ்களில் இவர்களின் படைப்புகள் வராமல் இருந்ததற்கான காரணத்தையோ, கலைமகள் இதழில் பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் அதிகமாக எழுதியதற்கான காரணத்தையோ திட்டவட்டமாக அறிய முடியவில்லை.

2

சமூகத்தில் ”குடும்பம் என்பது அடிப்படை அலகு”. உலக மனித உரிமைப் பிரகடனத்தில்(1948) குடும்பம் என்ற அமைப்பைக் காக்க வேண்டியதன் பொறுப்பு அரசுக்கு(State) உள்ளதாக விதிகளில் சேர்க்கப்பட்டது. நாம் வாழும் இச்சமூகத்தில் குடும்ப அமைப்பு மதம், சாதி அடிப்படையில் அதற்கான கட்டுப்பாடுகள், மரபுகளுடன் இயங்கி வருகிறது. நவீன யுகத்தில் இந்தப் பிரிவுகள் குறைந்துவந்தாலும், மரபு, சடங்குகள் என்ற அடிப்படையில் மதமும், சாதியும் தன்னிலையில் முக்கியமான பங்கை இன்னும் வகிக்கின்றன.

ஆர்.எஸ்.சுப்புலட்சுமியால் தொடங்கப்பட்ட சராதா இல்லத்தில் அதிகமும் பிராமணப் பெண்கள் இருப்பதாக நீதிக்கட்சியினரால் குற்றம்சாட்டப்பட்டபோது அந்தச் சமூகத்தில் தான் அதிகமும் கைம்பெண்கள் இருப்பதாக விளக்கமளித்தார் சுப்புலட்சுமி. எதிர்வாதங்கள் பல சமயம் மறைக்கப்படுகின்றன. இந்த எதிர்வாதம் இல்லாமல் ’சாதிப்பாகுபாடு காட்டினார் சுப்புலட்சுமி’ என ஒற்றை வார்த்தையில் அந்த இல்லத்தையே மூடியிருக்கும் வாய்ப்பு அதிகம்.

விடுதலைக்கு முந்தைய பெண்ணெழுத்துக்களின் வழி தெரியவந்தது பெண்ணெழுத்தாளர்களில் பெரும்பாலும் பிராமணர்களே என்பது. பண்டிதைகளும் அவர்களே. அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இருந்தது தான். ஆனால் அதற்கான தேவைகளும் இருந்ததாக ஒப்புக் கொள்ளச் செய்தது அந்த சமுதாயத்தில் மரபுகளின் பேரில் பெண்களுக்கு நிலவிய அதீத கட்டுப்பாடுகளும், கொடுமைகளும் தான். சாதிய மட்டத்தில் மேல் செல்லச் செல்ல பெண்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு, குடும்பத்தின் மரியாதையைக் காக்கும் பொறுப்புகளை அவர்களின் கருப்பையோடு முடிச்சிடுவது அதிகமும் நம் சமூகத்தில் நிகழ்கிறது. குழந்தைத்திருமணமும், இளவயதிலேயே கைம்பெண் ஆனவர்களும் பிராமண சமுதாயத்தில் அதிகமாக விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தனர்.

ஆனால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் ஆங்கிலக்கல்விதான் இல்லையே ஒழிய குடும்ப அமைப்பிற்குள் இத்தகைய அதீத கட்டுப்பாடுகள் இல்லை. அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம், பாலியல் சுதந்திரமும் இருந்தது. இளவயதிலேயே உடல் சார்ந்த வேலைகளுக்குச் செல்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். கையில் அன்றைக்கு சாப்பிடுவதற்கு அவர்கள் யாரையும் நம்பி இருக்க வேண்டியதில்லை. ஓர் பெண்ணை ஆணிடம் அடிபணியச் செய்வது பொருளாதார(Economical independence), இயங்கு சுதந்திரம் (movement independence) இன்மை மட்டுமே. வைதீகச் சடங்குகளைத் தொழிலாகக் கொண்ட பிராமண சமுதாயத்தில் ஆண் முன் நிமிர்ந்து சுயமாக நிற்பதற்கு அவள் படிக்க வேண்டியிருந்தது. வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

3

பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த சரோஜா படித்தவர், சுயசிந்தனையுள்ளவர், பொருளாதாரச் சுதந்திரத்தை தன் கல்வியின் மூலம் அடைந்தவர். எதிர்க்கேள்விகள் கேட்கும் வாய்ப்பமைந்த சரோஜா அதை எழுத்தின் வழி பயன்படுத்திக் கொண்டார். வெறும் ஆயுதமாக இல்லாமல் பல பெண்களின் வழி தேடிப்பார்த்தார் எனலாம். அந்த தேடலும் அலைக்கழிதலும் அவரின் கதைகளில் தெரிகிறது. பிராமண சமுதாயத்திலுள்ள குடும்ப அமைப்பை பல்வேறு கதைகளின் வழியே சட்டகமிடுகிறார். அதில் பெண்களின் நிலையை பல கதைகளில் வெறுமே காட்சிப்படுத்துகிறார். அந்த அமைப்பில் தங்களை அர்ப்பணித்து சோர்ந்து போன பெண்களின் குரல்களைப் பதிவு செய்கிறார். அவ்வமைப்பில் ஆணுக்கான அதிகாரத்தையும், அதைக் கொண்டு அவன் இப்பெண்களை பயன்படுத்திக் கொள்ளும் சித்திரத்தையும் காண்பிக்கிறார். இங்கு பெண்ணின் எதிரியாக ஆணைச் சித்தரிக்காமல் பிரச்சனைகளின் வேரைத் தொடுகிறார். குடும்பத்திற்குள் ஒரு ஆணுக்கு மனைவியாக நுழையும் பெண் தன் மாமியாரால், நாத்தனாரால், சுற்றத்தாரால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சொல்லி அதற்கான இயல்பான தீர்வுகளை வழங்குகிறார். சில கதைகளில் தீர்வுகளை வழங்குவதில்லை.

”சில வீடுகள்ல அவாத்து மாடு கன்னுக்கும் மாட்டுப் பொண்ணுக்கும் அதிக வித்தியாசம இருக்காது” என குடும்பம் என்ற அமைப்புக்குள் நுழையும் பெண்ணின் நிலைமையைப் பகடி செய்கிறார்.

சரோஜாவின் பெண்கள் பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் உழலும் பெண்கள், பாடத்தெரிந்தவர்கள். அவர்களின் ஆசைகள், ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்ள அந்த மரபு அளிக்கும் அறிவுரைகள், அவர்களின் துன்பங்கள், துன்பங்களுக்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள், தீர்க்க முடியாத பிரச்சனைகளைக் காண்பிக்கிறார். நான்கு சுவர்களுக்குள் உழலும் பெண் தன் மனத்தால் மட்டுமே பயணத்தை செய்ய முடிகிறது. கட்டற்ற சிந்தனைகளால் அவள் மனம் செல்லும் போக்கையும் கதைகளின் வழி பதிவு செய்கிறார்.

குடும்ப அமைப்பிற்கு வெளியேயுள்ள பெண்கள், அதாவது திருமணமாகாமல் வாழும் நடிகைகள், விவாகரத்து பெற்றவர்கள், தாசி குலத்தைச் சேர்ந்தவர்களை இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையையும், நடத்தும் விதத்தையும் சிறுகதைகளில் காண்பிப்பதோடு அதனுடன் தான் உடன்படவில்லை என்பதையும் பதிவு செய்கிறார்.

இளமையில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் அத்தனை நிகழ்த்தகவுகளையும் கனவு காண்கிறார்கள். சுயமாக பெண்கள் இயங்க முடியாத காலகட்டங்களில் தன்னை மீட்க ஒரு ”ராஜகுமாரன்” வருவான் எனும் சிந்தனை கொண்ட பெண்கள் அதிகமும் இருந்தார்கள். படித்த, அழகான, பட்டணத்து மாப்பிள்ளை, அவர்களைத் தன் கனவு நாயகனாகக் காணும் ஒரு மனம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே எளிய பெண்களுக்கு இருந்தது. ”கற்பனைக்கணவன்” என்ற சிறுகதையில் அப்படி பட்டணத்து மாப்பிள்ளையைக் கனவு காண்கிறாள் சம்பகம். ஆனால் இறுதியில் அதிக வரதட்சிணை கேட்பவர்களாகவே அமையும் பட்டணத்து படித்த மாப்பிள்ளைகளை விட்டுவிட்டு தன் அருகிலேயே கோவிலில் பூஜை செய்யும் தன்னைக் காதலிக்கும் ரங்கநாதனை மணந்து கொள்கிறாள். அதேபோல ஊமைப்பெண்ணும், குணவதியுமான சுதாவை எதேச்சையாக ரயிலில் சந்தித்த நீலகண்டன் அவள் மேல் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வது ”தெய்வசங்கல்பம்” சிறுகதையில் அமைகிறது. பெண்களின் லட்சிய ஆணுக்கான காத்திருப்பை பல கதைகளில் காணமுடிகிறது.

’தெய்வ சங்கல்பம்’, ’வரப்பிரசாதம்’, ’விதியின் விளையாட்டு’, போன்ற சிறுகதைத் தலைப்புகள் வழியே கூட அதிர்ஷ்டம், ஊழ் என்பதன் மேல் அவர் கொண்ட நம்பிக்கைகளை அறியலாம். பணம், அழகு போன்ற நிலையற்றவைகளுக்கு மாற்றாக குணத்தையும், கலையையும், நிரந்தர மகிழ்ச்சியையுமே முன்வைக்கிறார். எப்போதும் ஏதோ ஒரு மனக்குறை கொண்ட, காத்திருப்பு நிறைந்த பெண்கள், பெரும்பாலும் ஆண்களுக்காக, உறவுக்காக, “எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும்” எனவும், யாவற்றையும் சரி செய்து கரையேற்றும் ஒரு நபர் வருவார் என நம்பும் அப்பாவிப் பெண்களைக் காண்பிக்கிறார்.

”பொம்பள என்னவோ அளகா தான் இருக்குது. அப்படியே பாத்துகினு இருக்கலாம்! வயிறு நிறையுங்களா?” என்ற ஒரு ஆணின் தரப்பையும் சொல்கிறார். இளமையில் ஆண்களுக்கு பெண்களிடம் அழகு தேவையாக உள்ளது. பாட்டும், படிப்பும் இரண்டாவதாக தேவைப்படுகிறது. இவையில்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஒருவன் அவளின் குணத்தினால் அன்பினால் தனக்கானவள் இவள் தான் என கண்டு கொள்கிறான் போன்ற கதைகள் உள்ளன.

எவ்வகையிலும் காமமே பிரதானமாகக் கருதும் ஆண்கள் தரப்பையும் காண்பிக்கிறார். அவர்கள் பெரும்பாலும் பெண்ணை காமத்திற்காக மட்டுமே காதலிப்பவர்கள், திருமணம் செய்து கொள்பவர்கள். பிள்ளைகளைக் கூட அவர்கள் மறந்து அல்லது கண்டு கொள்ளாமல் சுயநலமியாக இருப்பவர்கள். ”இளமையின் ருசியை அனுபவித்த சாமியப்பன் விரைவில் இன்னொரு திருமணம் செய்து கொண்டான்” என சாமியப்பன்களின் மனநிலையைக் கதைகளில் காண்பிக்கிறார். அவர்களால் பாதிக்கப்படும் குடும்ப அமைப்பிலுள்ள குழந்தைகளையும் பதிவு செய்கிறார். ஏதோவொரு வகையில் அதே குடும்ப அமைப்பிலுள்ள உறவினர்களால் அவர்கள் காப்பாற்றப்படுவதையும் சொல்கிறார்.

சுயநலமில்லாமல், அன்பையே பிரதானமாகக் கொண்டு குடும்ப அமைப்புக்குள் இயங்கும் பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களையும், அவர்களால் ஏமாற்றப்படுவது தெரிந்தும் அவ்வமைப்புக்குள் ஏதோவொரு பிடிபடாத நம்பிக்கையின் நிமித்தமிருந்த மரபின் மனுஷிகளையும் காண்பிக்கிறார். அதை ஒரு பார்வையாளனாக பார்ப்பதைத் தவிரவும் அவர் அதற்கு அறிவுரைகள் வழங்குவதில்லை. ”மூட்டைக் கணக்கில் எவ்வளவோ இடங்களில் அரிசி சலித்திருப்பாள். நெல்லையும் கல்லையும் வேறாகப் பிரித்திருப்பாள். பல இடங்களில். மனிதப்பண்பில் ஊறிப்போயிருக்கும் சுய நலம் என்கிற துர்குணத்தைப் பிரித்துப் பார்க்கும் தன்மையை மட்டும் அவள் உணரவில்லை” என்ற வரி பார்வதிப்பாட்டியைப் பற்றிச் சொல்லும் சிறுகதையில் வருகிறது. சதா குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் இப்பெண்கள் பேரன்களின் மகன்கள் தங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறியும் வரை அவர்களை விட்டு நகர்வதில்லை. கிழமாக நகரும்போது கூட ஒரு கவளம் சோறு போட்டால் போதும் அன்பையும் உடலுழைப்பையும் அளிக்கிறேன் என சரணடைபவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர்.

சரோஜா ராமமூர்த்தி

4

எழுத்தாளராக அமைந்த சரோஜா எழுத்தாளரும் மனைவியுமான ஒருத்தியைப் பற்றி எழுதிய சிறுகதையாக “மனைவி” சிறுகதையை முயன்றிருக்கிறார். “மனைவி” என்ற தலைப்பிலிருந்தே அவரின் சாய்வு எதை நோக்கியதென்று புரிகிறது. எழுத்தாளர் மனைவிக்கும் கணவனுக்குமான உரையாடல் கொண்ட சிறுகதையை நாடக உரையாடல் வடிவில் எழுதியுள்ளார். அன்புக்காக ஏங்கும் கணவனும், இந்தக்கதையை முடித்து விட்டு நேரம் செலவிட வருகிறேன் என்று கெஞ்சும் எழுத்தாளர் பெண்ணுக்கும் இருக்கும் ஒரு சின்ன ஊடாட்டத்தைச் சொல்லும் கதை. ”தேனின் சுவையைச் சிறிது சிறிதாகச் சுவைக்காமல் தேன் பாத்திரத்தில் விழும் ஈயைப்போல்…” என மனைவி கடிந்து கொள்கிறாள். ஆண்களுக்கேயுரிய கெஞ்சல்களும் அதன்பின் சீற்றங்களும், அதிகாரமும், மேலும் முரண்டு பிடித்தால் கோபமும் அதட்டல்களும், அவள் மிஞ்சிச் செல்கையில் மீண்டும் கெஞ்சல்களாக அமைந்து, ”நான் தேனைப்பருகி மயங்கும் வண்டின் நிலையை ஒத்தவன்.  தேனீயைப்போல் நிதான புத்தியுடன் சேகரித்து உண்ணும் திறமை வண்டுக்கு இல்லை” என கணவன் சரணடையும் கதை. இறுதியில் அவளை அன்பிற்கு/காமத்திற்கு இணங்கச் செய்யும் உரையாடல் அமைந்த கதை.

எழுத்தாளர் என்றில்லை, எத்துறையிலும் சாதிக்க விரும்பும், செயல்பாடுகளிலுள்ள பெண்களின் தனி வாழ்க்கையில் உள்ள சிக்கல் தான் இது. இன்றைய காலகட்டத்தில் அதை இருபாலருக்கும் பொருத்திப்பார்க்கலாம். இந்த உரையாடலில் நுட்பமான இடம் ஒன்று உள்ளது. அதை அந்தப் பெண்ணும் ஆணும் கடக்கும் இடத்தில் இந்தக் கதை ஒட்டுமொத்தமாக இனிமையானதாக மாறிவிடுகிறது. உறவுகளை இனிமையாக மாற்றிக் கொள்ளும் பாதையையே சரோஜா உறவுச்சிக்கல்களில் முடிவாக எடுக்கிறார். எதற்கும் விலகிச் செல்வதையும், முறித்துக் கொள்வதையும் அவர் தீர்வாக வைப்பதில்லை. இது மரபார்ந்த சிந்தனை என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய இடமும் கூட.

எழுத்தாளர் ஜெயமோகன் தன் குழந்தையான சைதன்யா வளைய வரும் புகைப்படத்தை விளக்கும்போது “என்னை விட முக்கியமான எதில் மூழ்கியிருக்கிறாய்” என்று அவள் அன்று கேட்டிருக்கக்கூடும் என்று பதிவு செய்கிறார். சிற்றின்பங்கள் என நினைத்து ஒதுக்கி செயல் செயல் என திகழும் பலரும் பின்னால் நினைத்து ஏங்கும் தான் ஒதுக்கிய அன்பின் மனிதர்களை/தருணங்களை அந்த ஒரு இடத்தில் நினைவுறுத்திவிடுகிறார் சரோஜா.

பதினாறு வயதில் எழுத ஆரம்பித்த சரோஜா முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு போதும் மனைவி என்றானபின் அந்தக் கடமைகளில் இருந்து விலகியோ, ஏழு குழந்தைகளுக்கு அன்னையானபின் ஒவ்வொருவருக்கும் அன்னை என்ற இடத்திலிருந்து தான் ஆற்ற வேண்டிய கடமைகளையோ அவர் ஆற்றாமல் விடவில்லை. மகள் பாரதி சொல்லும்போது அந்தக் கடமைகளை அவர் மன நிறைவுடன் செய்ததாகவும் சிறந்த அன்னையாக இருந்தார் எனவும் தாங்கள் சிறந்த பெண்ணாகவும், அன்னையாக ஆவதற்கான கல்வியையும், அனைத்தையும் கொடுத்ததாகவே சொல்கிறார். ஆனால் ஆண்களுக்கு மிக இயல்பாகவே இந்தச் சலுகைகள் கிடைத்துவிடுகின்றன. எந்தவித பிரயத்தனமும் இல்லாமல் அவர்களால் குடும்பப் பொறுப்புகளிலிருந்து மரபு தந்த சலுகைகளால் விலகிச் சென்று சாதனைகள் செய்ய முடிகிறது.

சுயமோகத்துடனும், தன் இன்பத்திற்காக மட்டுமே காதலையும் காமத்தையும் அன்பையும் மகிழ்ச்சியையும் தேடி அலையும் உணர்வுகள் குறைவுபட்ட இக்காலகட்டத்தில் சரோஜா காட்டும் உலகம் முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு. எத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் குடும்பம் என்ற அமைப்பின் கட்டு குலையாமல் இருக்க அவர்கள் பல நூற்றாண்டுகளாக சகித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். சகிக்க முடியாத பலவற்றை எதிர்த்து சிந்தனையாகவும், சொல்லாகவும், செயலாகவும் இரு நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் போராடி ஒரு பாதையை ஏற்படுத்தியுள்ளனர். சுயமே பிரதானமாகிவரும் காலகட்டத்தில் வாழ்கிறோம். யாவற்றையும் ஒரு தரப்பு என்று சொல்லிவிட்டு எளிதாகக் கடந்து ஒளியின் பாதையை நிராகரிக்கிறோம். சுயத்திற்காக சிதைந்து வரும் உறவுச்சிக்கல்களால் உணர்வு பாதிப்படைந்து மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுவரும் குழந்தைகள், காதலர்கள், குடும்ப உறுப்பினர்கள் அதிகம் கொண்ட நூற்றாண்டில் வாழ்கிறோம். “மனநோயை” ஒரு நோயாக உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும்படி அது மிகப்பெரிய உருவெடுத்துள்ள காலகட்டமிது. எல்லா சமூகவலைதளமும் இன்று உறவுச்சிக்கலுக்கான தீர்வையும், அதற்கான போக்கு வழிகளையும் பேசிக் கொண்டிருக்கிறது. அதற்கு இணையாகவே இலக்கியத்தில் இன்று அன்பை வன்முறை என்றும், உணர்வெழுச்சிகள் என சாடும் எழுத்துக்கள், சுயமோக உறவுகளைப் பேசும் கதைகளை/வாழ்க்கைகளை இத்தலைமுறைகளுக்குச் சொல்லி குடும்பம் என்ற அமைப்பின் மேல் எதிர்மன நிலைகளை உருவாக்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் சரோஜா காட்டும் சாளரத்தின் வழி நாம் முன்பிருந்த குடும்ப அமைப்பின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதனைக் களைந்து அதைப் புதுப் பொலிவுடன் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அதற்காக குடும்ப அமைப்பை தூக்கியெறிந்துவிட முடியாது.

5

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த பெண்ணியம் சார்ந்த இதழ்களை தமிழ்விக்கிக்காக பதிவு இடுகையில் சில அவதானிப்புகளைச் செய்ய முடிந்தது. மிகச்சில மட்டுமே அறிவார்ந்த இதழ்களாக, ஒவ்வொரு இதழிலும் செறிவான கட்டுரைகளாக, அறிவார்ந்து பெண்ணின்/பெண் எழுத்தாளர்களின் சிக்கலை அணுகக்கூடியவையாக இருந்தது. ஆனால் பெரும்பான்மையான இதழ்கள் ஆண்களைச் சாடுவதாக, குடும்ப அமைப்பைச் சாடுவதாக, அவற்றிலிருந்து வெளிவரும் குரலாக, அதற்கான ஆலோசனைகள் வழங்குவதாக, பெண்கள் யாவற்றையும் தனியாகவே செய்துவிட முடியும் என்ற மாய நம்பிக்கையை அளிக்கும் இதழ்களாக இருந்தன. புரட்சிகள் அனைத்துமே ஆணை அழிக்கும் நோக்குடையதாகவும், வசைபாடுவதாகவுமே இருந்தது. பெண்ணின் உடலை, பாலியல் தேவையை பிரதானமாகக் கொண்டு தனித்திருக்கச் சொன்னது. கட்டற்ற காமத்தையும், குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறுவதையும், தனித்தலைதலையும், அப்படி இருந்தால் தான் சாதிக்க முடியும் என்பதையும் தீர்வாகச் சொன்னது.

உண்மையில் நம் மரபில் பெண்ணுக்கு உடல் மேலான இத்தனை சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ”அன்னையாதல்” வழி பெண்ணால் இந்தச் சிக்கலைக் கடந்து உடலைக் கடக்க முடியும். ஆண்கள் அந்த வாய்ப்பமையாததாலேயே காமத்தில் அலைக்கழிப்புக்கு உள்ளாகிறார்கள். வீடுதுறந்து அலைந்து மட்டுமே கடக்கமுடிபவர்கள். அதனால் பரிதாபத்திற்குரியவர்கள். தொண்ணூறுகளின் மிகத்தீவிர பெண்ணிய போக்கிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அது சார்ந்த இயக்கங்களும், இதழ்களும், கண்ணுக்குத் தெரியாத குழுக்களும் செயலாற்றியுள்ளன. இக்காலகட்டத்தில் தமிழிலும் பெண்ணியம் சார்ந்து, உடலரசியல் சார்ந்து ஓர் அலை இலக்கியத்தில் எழுந்து வந்தது. ஆனால் இவை மரபார்ந்து ஏற்கனவே மையத்திலிருந்த தீவிர இலக்கியப் போக்கின் நீட்சியாக இருந்ததா, நம் சமூக அமைப்பில் உண்மையாகவே இருந்த சிக்கலைப் பேசியதா அல்லது மேற்கின் அலையை எந்த வேர்ப்பிடிமானமும் இல்லாமல் பாவனை செய்து கொண்டதா என்ற கேள்வி எழுகிறது. அநேகமாக இக்காலகட்டத்தில் சரோஜா எழுதாமலிருந்தார்.

சரோஜா (நன்றி: சரோஜா திறக்கும் உலகம் தொகுப்பு)

சரோஜா மரபார்ந்த பழங்கதைகள் பேசும் பெண்மணியா என்றால் இல்லை. ஆனால் அப்படி வாழ்ந்த பெண்களை, அவர்களின் கதைகளை, இன்னல்களைப் பதிவு செய்திருக்கிறார். அதற்கு எதிரான குரலை எழுப்பியுள்ளார்.

“வரதட்சிணை” என்ற கதையில் தன்னை நான்காயிரம் வரதட்சிணைக்காக விட்டுப் போன நாகராஜன் நான்கு வருடம் கழித்து வரும்போது “நாகராஜனின் உருவத்தில் மாற்றம் இல்லை” என மறைமுகமாக சாடுகிறார். ”ஏற்கனவே பணம் காசு வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேலும் பணத்துக்காக இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள்” என வரதட்சிணை வாங்குபவர்கள் பற்றி குறிப்பிடுகிறார்.

”படிப்புக்கும் உத்தியோகத்துக்கும் விலை எல்லாரும் கேட்கிறார்கள் அல்லவா? அப்படிக் கேட்பதர்கு ஆண்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதா என்ன? எனக்கு வரதட்சிணை நாலாயிரம் தருவதானால் உங்களை மணந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.” என கதையின் நாயகி கேட்பது உச்சமான கேள்வியாக அமைகிறது.

அதே கதையில் ”இந்தப் பெண்களின் போக்கே அலாதியாக இருக்கிறது. கடையில் கத்தரிக்காய்க்கு மேலே ஓரணாக் கொடுத்து வாங்கிவிட்டால் காசை கரியாக்குவதாகப் புலம்பித் தீர்த்துவிடுகிறார்கள். ஆனால் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணுவதற்கு மட்டும் தலையை அடகு வைத்தாவது செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறார்கள்! நல்ல பெண்கள்” என தந்தையின் சிரமத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.

6

எந்த எதிர்ப்புகளும் இல்லாத அல்லது எதிர்ப்புகள் இருந்து அதை சமாளிக்க முடிந்த பெரும்பாலான காதல் கதைகளை இனிமையாகவே முடித்திருக்கிறார் சரோஜா. அழகிற்காக பணத்திற்காக பிற பெண்ணைத் தேடிச் செல்லும் கணவன்கள் மீண்டும் மனைவியுடன் இணையும் நாடகமான கதைகள் உள்ளன. உண்மையான காதலுக்காக ஏங்கிய தாசி குலத்துப் பெண்ணான மந்தாகிணியின் துன்பியல் காதல் கதையை “சிதைந்த காதல்” சிறுகதை சொல்கிறது. அவளின் அழகை, கலையை புகழ்ந்து காதலில் விழும் சத்தியவிரதன் தந்தையின் அழைப்பின் பேரில் காசிக்குச் சென்று அங்கு கவிதாவைத் திருமணம் செய்து கொள்கிறான். அவன் இந்த இரு பெண்களையும் மதிப்பிடும் இடம் ஒன்றுள்ளது

”பெண் கவிதா சக்தி நிரம்பியவள். உள்ளத்தின் கம்பீரமும் முகத்தில் பிரதிபலித்தது. மந்தாகிணியைப் போல் பேதையல்ல. மந்தாகிணி வியாகரணம், இலக்கியம், வேதாந்தம் முதலிய புராணங்களைப் படிக்கவில்லை” என சமாதானம் செய்து கொண்டு அந்த உறவில் தலைப்பட்டு மந்தாகிணியை மறக்கிறான்.

அவள் “இருதயத்தை அர்ப்பணமாக்க ஒருவராவது வருவார்களா? காதல், அன்பு என்பதை அறியக்கூடாத பிறவியா இது” என அரற்றி அலைக்கழிந்து காசிக்கே அவனைத் தேடிச் சென்று தன்னை மறந்தான் என்று தெரிய வரும்போது செய்வதறியாது கங்கையில் குதித்து உயிரை விடுகிறாள். இறுதியில் ஸ்படிகம் போல கங்கை போய்க் கொண்டிருந்தது என்ற வரி வருகிறது. கங்கையுடன் மந்தாகிணி கலக்கும் இடத்தை இங்கு நினைவுகூரலாம். அப்படி காலம் நெடுக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் தங்களை இணைத்துக் கொண்ட காதல் மறுக்கப்பட்ட மந்தாகிணிகளை இங்கு நினைவுகூரலாம். ”பிரேமையின் ஆழத்தை நான் அறியமாட்டேனோ” என்று முன்பு அவன் சொன்ன வரி இறுதியில் நினைவு வருகிறது. தன்னிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் தீரும்போது பிரேமை கங்கை சென்றமையும் ஆழத்தையே தேர்ந்தெடுக்கிறது.

7

பிறழ்வான எந்த உறவுகளையும் குடும்பத்தின் சட்டகத்திலிருந்து வெளியில் வைத்தே சரோஜா காண்பிக்கிறார். அத்தகைய உறவுகளை சமூகம் ஒவ்வாமல் பார்க்கும் கண்ணோட்டத்தையும் பதிவு செய்கிறார். நோய்வாய் பட்ட கணவனைக் கொண்ட பாகீரதி தங்கையின் கணவன் மீது கொண்ட சிறு சலனமே அக்காலக் குடும்ப அமைப்பில் பிறழ்வு தான். அழகில்லாத கல்வியறிவற்ற துறுதுறுப்பான தங்கைக்கு நல்ல கணவன் வாய்த்திருப்பது கண்டு தன் மனதில் ஏற்பட்ட சிறு பொறாமையையும் அறிவித்துக் கொள்கிறாள் பாகீரதி. ஆனால் தங்கை இறந்த பிறகும் துணிந்து அந்த சலனத்தைக் கை கொள்ளாமல் அவளின் கணவரையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு தன் வாழ்நாளை அவர்களுடன் கழிக்க வந்த பாகீரதியை வேலையில் மூழ்குபவளாக, காமத்தை ஒறுத்தவளாகவே பதிவு செய்கிறார்.

அதிகமும் தொடர்பிலிருக்க முடியும் என்பதாலேயே சீக்கிரம் யாவும் சலித்துவிடும் காலமிது. இங்கு நின்று கொண்டு இத்தகைய ஒறுத்தல்கள் சாத்தியமா அவசியமா என்ற கேள்வி எழாமலில்லை. சிறு தொடுதல்களையும் பேச்சுகளையுமே மிகுந்து ஆசையாக சொல்லும் ஒரு காலகட்டம் அது. மெல்லுணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் காலம். சாத்தியமாகியிருந்திருக்கிறது என கடக்கவே முடிகிறது. ஆனால் அன்று பிறழ்வுகளை மீறல்களாகப் பதிவு செய்த பிற எழுத்துக்கள் காலத்தில் நின்றிருக்கின்றன.

ஊரில் குடியேறும் நடிகை வரும் “அவள்” சிறுகதையில் அவள் நடத்தையை சந்தேகிக்கும் பெண்களை, அவர்களின் புரணியைக் குறை சொல்கிறாரே தவிர அவள் ஒழுக்கமானவளாக இருக்கவே வாய்ப்பிருப்பது போன்ற சித்திரத்தை இறுதியில் ஏற்படுத்துகிறார்.

8

விளங்கிக் கொள்ள முடியாதவைகள் பற்றிய விசாரணையை சில கதைகளில் நிகழ்த்தியுள்ளார் சரோஜா. அப்படியான சிறுகதைகளில் “பார்வதி” சிறுகதை ஒன்று. உலகயுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அதன் சுவடே தெரியாமல் மறைந்திருக்கும் சிறு மருதன்பட்டி கிராமத்தில் வேலை நிமித்தமாக வந்த தம்பதிகளுடன் வந்த பார்வதி அங்கு தினமும் வந்த ஒரு மலைக்கிராமத்து ஆளுடன் தொடர்பு கொண்டு எப்படி சாமியாகிறாள் என்பது கதை. சாமியாகும் பார்வதியை ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான வாழ்க்கையையும் நடவடிக்கைகளில் அதீதத்தையும் காண்பித்திருப்பார். விளக்க முடியாத ஒன்றின் சாட்சியாய் மட்டுமே இக்கதையைச் சொல்லியிருக்கிறார்.

மகனுடன் இரவு சேர விடாத மாமியார் இறந்தபின்னும் தீய/பயமான எண்ணங்களாக வந்து மருமகளை வதைக்கும் சம்பவம் ”மூன்று உள்ளங்கள்” சிறுகதையில் வருகிறது. அவ்வீட்டிலிருந்து வெளியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மருமகள் பற்றிய கதையிது. இதன் தலைப்பின் வழி மூன்று உள்ளங்களுக்கிடையேயான போராட்டமாக கதை அமைந்துள்ளது. எண்ணங்களின் தாக்கம் வழியே பாதிப்படையும் மாமியார், தொடர் புறக்கணிப்பின் வழியே பாதுகாப்பற்ற சிந்தனைகளால் மனநலம்குலையும் மருமகள். இவ்விருவரையும் போராட்டத்துடன் எதிர்கொள்ளும் மகன் என மூன்று உள்ளங்களைக் கதையில் சொல்லியிருக்கிறார். அதில் மர்மமாக மாமியாரின் ஆவி உலவுகிறது.

புரியாதவைகளையும், மாற்ற முடியாதவைகளையும், தீர்வற்றவைகளையும் பேசும்போது வெறும் பார்வையாளராக மட்டுமே சரோஜா அமைந்துவிடுகிறார்.

9

நெருங்கியவர்களின் மரணம், நோய் மனிதர்களை அசைத்துவிடுகிறது. தன் பத்து வயதில் தாயைப் பறிகொடுத்தவர் சரோஜா. அதன்பின் தந்தையிடம் அன்பு கிடைக்கவில்லை என்பதற்கு இணையாகவே மனச்சோர்வுகளை பெற்றுக் கொண்டவர். பதின்ம வயதில் தந்தையை எதிர்த்து பம்பாயில் அத்தை மாமாவுடன் மிகவும் இடுங்கலான சிறிய வீட்டில் குடியேறினார். அன்பு கிடைக்காத குழந்தைகள் இளமையில் போராட்ட குணம் நிறைந்தவர்களாக அல்லது முற்றிலும் நம்பிக்கையிழந்து சோர்ந்தவர்களாக ஆகலாம். சரோஜா துறுதுறுப் பெண்ணாக எழுத்தாளராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவராக இருந்தார். காந்தியின் கைகளில் தன் தங்க வளையல்களை கழற்றிப் போட்டவராக தெருவெங்கும் சுவரொட்டி ஒட்டியவராக சிறை சென்றவராக அவரை அறியும்போதே அந்த இளமையின் சரோஜாவை ஊகிக்கமுடிகிறது.

சரோஜா – து.ராமமூர்த்தி (நன்றி: பாரதி)

அன்பின் ஏக்கத்தை காதல் சில சமயங்களில் தீர்த்து வைப்பது சிலருக்கு முழுமையாகக் கைகூடுகிறது. அது கைவரப் பெறாதவர்கள் அன்னையாகி அதை அடைந்து விட முயல்வார்கள். சரோஜாவிற்கு இரண்டும் வாய்த்தது. எழுத்தாளரான து.ராமமூர்த்தியை அவரின் ஒரு கதையை திருத்தி பிரசுரத்திற்கு அனுப்பியதன் வழியே சந்தித்தவர். சந்தித்ததும், காதலைப் பரிமாறிக் கொண்டதும், பம்பாய் சென்ற பிறகு அவர்களின் பிரிவை காதல் கடிதங்கள் வழியாக நிரப்பிக் கொண்டதும், அப்பாவை எதிர்த்து பதிவுத்திருமணம் செய்து கொண்டதுமாக ஒரு காதல் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திருக்கிறார். இணைமனம் காதலாக வாய்க்கப்பெற்ற அளவில் கொடுத்து வைத்தவர் சரோஜா. தன் எழுத்தின் ஆசிரியராகவும் து.ராவையே குறிப்பிடுகிறார்.

சரோஜா அறுநூறு சிறுகதைகளையும், ஏழு நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். தன் இறுதிக்காலங்களில் எழுதவில்லை. பல வகையான காரணங்களை இதற்கு ஊகிக்கமுடிகிறது. மாறிவந்த நவீன எழுத்துச் சூழல், விமர்சன சூழல் மேல் நம்பிக்கை இழந்ததாகத் தெரிகிறது. எழுத்தாளர் குடும்பத்தில் இருக்கையில் அடையும் தர்ம சங்கடங்களில் ஒன்று உங்கள் கதையை யார் எழுதியது, அதில் எவ்வளவு பங்களிப்பு இன்னொருவரிடமிருந்து வருகிறது என்ற சந்தேகப் பார்வையை வீசிக் கொண்டேயிருப்பது. அது தந்த சோர்வாக இருக்கலாம்.

தன் முப்பத்தி நான்கு வயதில் நான்கு குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார் சரோஜா. பத்து வருடங்கள் நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட து.ரா. நோய்வாய்ப்பட்ட தன் இரு மகன்கள், தான் மிகவும் நேசித்த தம்பி, மகள் பாரதியின் கணவரான சுப்ரமண்ய ராஜுவின் இறப்பு ஆகியவை அவரை சமன்குலைவுக்கு உள்ளாக்கியிருக்கலாம். தன் மூன்று பெண் குழந்தைகளுக்கும் பிரசவம் பார்த்து பேரன் பேத்திகள் வரை அனைவருக்கும் உடனிருந்து, காதல் கணவனை இழந்த தன் மகளுக்கு இறுதிவரை வாழ்வை எதிர்கொள்வதற்கான அனைத்துக் கடமைகளையும் முழுமையாக ஆற்றியவர். அது தந்த சோர்வும் அல்லது நிறைவுமாக இருக்கலாம். “ஆகாயத்தில் பறக்கலாம். ஆனால் வேர்கள் பூமியில் தான் இருக்கணும்” என்ற சிந்தனையைக் கொண்டவர். காஞ்சி பரமாச்சார்யரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சரோஜா இறுதிக்காலங்களில் முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.

உண்மையில் இப்பொறுப்புகளையெல்லாம் துறந்து அமைவதற்கான தைரியத்தையும், புரட்சி உணர்வுகளையும் கொண்டிருந்தவர் தான் சரோஜா. ஆனால் எல்லா கடமைகளையும் தன் தலையில் ஏற்றி மரபின் அனைத்தையும் எந்த இஸங்களுக்காகவும் விட்டுக் கொடுக்காமல் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆம்! குறைபடவே சொல்லல் தான். மரபிலிருந்தும் நவீனத்திலிருந்தும் தான் நம்பியவைகளை எந்தவித பாவனையுமில்லாமல் சொல்லிச் சென்ற எழுத்தாளர். தீர்க்கமாக!

*

(நன்றி: சரோஜாவின் மகள் பாரதியுடனான தொலைபேசி உரையாடல் அவரைப் பற்றிய விரிவான சித்திரத்தை அளித்தது. ஜெ பரிந்துரைத்த அரவிந்த் சுவாமிநாதனின் ”விடுதலைக்கு முந்தைய தமிழ்ச்சிறுகதைகள் பெண்ணெழுத்து” (யாவரும் பப்ளிஷர்ஸ்) இதன் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. எழுத்தாளர் அம்பை தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த சரோஜா ராமமூர்த்தியின் சிறுகதைகள் அடங்கிய “சரோஜா திறக்கும் உலகம்” நூலில் அமைந்த கதைகளும், து.ராவின் முன்னுரையும், அவரின் பதிப்புரையும் இக்கட்டுரைக்கு உதவியாக அமைந்தது. அம்பை “எழுத்தாளர் மாமி” என சரோஜாவுடன் சிறுவயதில் பேச, அருகமைய வாய்ப்பமைந்தவர். அவரின் தொகுப்பும் பார்வையும் அவரின் சிந்தனைகள், ரசனை சார்ந்தே அமைந்துள்ளது. அந்த அறுநூறு சிறுகதைகளிலிருந்து அம்பை தொகுத்திருப்பது தனக்கான சரோஜாவை என்பதை அக்கதைத் தேர்வின் வழியே அறிய முடிகிறது. சரோஜா இந்த மரபின் கடமைகளால் பாதிக்கப்பட்டிருப்பார் என்ற அவதானிப்பும் கூட இதன் வழிதான் நிகழ்கிறது. கலையாக, விளக்கமுடியாதவைகளின் கதைகளாக அமைந்த சரோஜாவின் தேர்ந்தெடுத்த கதைகள் தொகுப்பை கொண்டு வரும் முயற்சியை நீலி பதிப்பகம் முன்னெடுக்கும்.)

-ரம்யா

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *