களிநெல்லிக்கனி: கைகவர் முயக்கம்

                                   (ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை)

ஆத்தூர் ஒளவை மேடு (புகைப்படம்: அகச்சேரன்)

சங்கப்  பாடல்களை வாசிப்பதில் உள்ள முதன்மையான சிக்கல் அதன்  மொழி பழையது என்பது. வாழ்வு நிகழும் களமும் பழையது.  பாடல்களில்  பாடபேதங்கள் வேறு உள்ளன.  உரைகளிலும் பேதங்களைக் காண முடிகிறது. சங்கப்பாடல்களுக்கு உரை செய்தல் சிக்கலான பணிதான்.  அது மெச்சத்தகு உழைப்புதான். ஆயினும் சின்ன சிக்கலென்றால் அது சங்கத்திற்கு கம்பீரக்குறைவு எனக்கருதி மீசையை முறுக்குவது போல அந்தச்  சிக்கலை முறுக்கிவிடும் உரையாசிரியர்களும் உண்டு. அவர்களிடமிருந்து தப்பிவிடுதல் சங்கப்பாடல்களின்பாலான  நமது நேயத்தை அணையாது காக்க உதவும். தவிர சில சங்க இலக்கிய அறிஞர்களிடம் ஒரு வித உடைமை உணர்வு செயல்படுகிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன். ‘ உலகில் யாருக்குமே கிடைக்காத  ஞானப்பழம் ஒன்று என்னிடத்தில் உள்ளது’ என்பது போல. அதைத்  தருவது போல் நீட்டித் தாராதிருக்கும வித்தையும் அவர்களுக்குத் தெரியும். இத்தனை சிக்கல்களையும் தாண்டி சங்கப்பாடல்கள் என்னை ஈர்க்கவே செய்கின்றன.முழுப்பாடலும் கூட வேண்டியதில்லை. அதன்  ஒரு வரி கூட போதும். மொத்த உலகமும் வேறெங்கோ இருக்க, தனித்தீவில் குட்டி அலையின் மீது நானும் அந்த வரியும் மாத்திரம் மிதந்து கிடக்க முடியும்.  “கைகவர் முயக்கம்” என்கிற அவ்வையின் வரியொன்று அப்படியானது.

தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிகிறான். தாராளமாகப் போ,  ஆனால் கூடவே என்னையும் அழைத்துப் போ என்கிறாள். செல்லும் வழியில் நாம் கூடிக்கூடி இன்பம் துய்க்கலாம். என் கண்களும் உன்னைக் காணாது கண்ணீர் வடித்து  வருந்தாது என்கிறாள். இவள் “இளமை நிலையாமை” யை அறிந்தவள். இன்பத்திற்குக் குறைவு படாமல் பொருள் ஈட்டச் சொல்கிறாள்.

“மெய் புகுவு அன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே ” (அக:11)

தாக மிகுதியால் அழுந்தப் பிணைந்த கைகளின் முயக்கத்தை “கைகவர் முயக்கம்” என்கிறாள் அவ்வை. அது முயக்கத்தின் ஒரு சிறு அலகல்ல. மாறாக மொத்த முயக்கத்தின் தீவிரத்தையும் காட்டி நிற்கும் காட்சி. “ porn”  வீடியோக்களில் கைகவர் முயக்கத்திற்கு ஷாட் வைக்கும் இரசனைக்காரர்கள் இன்னும் மிச்சமிருப்பதாக உவகையுடன் பகிர்ந்து கொண்டான் பக்கத்துவீட்டுப் பையன்.  “தம்பி!  பார்த்தது போதும் படி” என்று சொல்லி அவனை அடுத்த வரிக்கு அழைத்துச் சென்றேன்.

“மெய் புகுவ அன்ன” எனில் ஒருவர் உடலுக்குள் ஒருவர் புகுந்து கொண்டது போன்ற முயக்கம். 

“நீர்வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறுகுளம் நிறைகுந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே”

எமது கண்களும் அற்ற குளத்தை நிறைப்பது போலே அழுது வடியாது உறக்கம் பெறும். 

தலைவன் பிரிந்து செல்லும் பாலை நிலம் நெருப்பெனச் சிவந்த ஊரும் சூரியனால் எரிக்கப்பட்ட காடு. அக்காட்டில் இலவம் பூக்கள் மலர்ந்துள்ளன. அதைப் பாடுகிறாள் அவ்வை..

“இலை இல மலர்ந்த  முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த 
அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி…”

இலையின்றி மலர்ந்துள்ள இலவம் பூக்கள் பெண்கள் கூட்டம் உவகை பொங்க  ஏந்தி வரும் கார்த்திகை தீபம் போன்று பூத்திருக்கிறதாம். இலவம் பூக்களில் ஒளிரும் அழகை நெருப்புச் சுடருடன் ஒப்பிடுகிறாள் அவ்வை. ‘அழகில் கொதிக்கும் அழல்” என்கிற  என்  நூலின் தலைப்பு அன்னை மீது ஆணையாக என் சொந்தச் சொற்கட்டு. ஆனால் நம் பாட்டியைப் பாருங்கள் …  ஒரே எட்டில் எத்தனை  நூற்றாண்டுகளைத்  தாண்டப் பார்க்கிறாள்!

ஒளவையின் ஒரு பாடலில் வெள்ளிவீதி குறிப்பிடப்படுகிறாள். வெள்ளிவீதி தலைவனைக் காணாது ஊர் ஊராக அலைந்து திரிந்ததைப் போலே பிரிவுத் துயர் தாளாது தானும் தலைவனைத் தேடி, செல்லச் செல்லச் தீராத பாதை வழியே செல்லப் போகிறேன் என்கிறாள் ஒரு தலைவி.

“ …. நிரம்பா  நீளிடை,  
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே”
(அக: 147)

அவள் அப்படி செல்லத் துணிந்த பாலை வழி குறித்த சித்திரிப்பு பயங்கரமானது.

“ஊன்பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவுப்பசி கூர்ந்தென
பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை…”

மூன்று குட்டிகளை ஈன்று போட்ட களைப்போடும், அந்தத் தளர்ச்சியால் வருத்தும் கொடிய பசியோடும் கிடக்கிறது பெண் புலி. துணையின் மீது அன்பும், அதன் பசியைப் போக்க வேண்டிய இன்றியமையாத கடமையிலும் இருக்கும் ஆண்புலி,  தூரத்தில் கேட்கும் ஒரு மானின் குரலை உற்றுக் கேட்கும் படியான பாலை வழி அது. இங்கு வேட்டை சித்தரிக்கப்படவில்லை. ஆனால் நடந்து முடிந்து விட்டது. தூரத்தில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் மான் இப்போது புலியின் வயிற்றுக்குள்தான் உள்ளது.

புலிக்குட்டியை குறிப்பிடும் அவ்வை அதன் உருவை  வேங்கை மலருக்கு உவமை சொல்கிறாள். வேங்கை மரம் “பாயா வேங்கை” என்றும், வேங்கை விலங்கு பாயும் வேங்கை என்றும் நம் முன்னோர்களால் பகுத்துரைக்கப்பட்டுள்ளது.  எவ்வளவு கச்சிதமான, ரசமான சுட்டல்!  ஆயுளுக்கும் மறக்காத சுவாரஸ்யம்.

ஒளவையின் பாடலில் வெள்ளி வீதி வந்துள்ளது போல வெள்ளிவீதியின் பாடல் ஒன்றில் ஆதிமந்தி குறிப்பிடப்படுகிறார்.

“யானே காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென்…”
(அக: 45)

இந்தப் பாடல்களின் வழியே மூன்று புலவர்களின் காலத்தையும் அறியமுடிகிறது. இப்படி ஒரு பெண்கவி  இன்னொரு பெண் கவியை தன் பாடலில் வைத்து எழுதியது போல,  ஆண்கவிகள்  யாரேனும் இன்னொரு கவியைக் குறிப்பிட்டு பாடியுள்ளார்களா என்கிற தகவல் உடனடியாக நினைவிற்கு வரவில்லை.  ஆய்வு  மாணாக்கர் ஆராய்ந்து கொள்ளலாம்.

‘வானத்தில் எறியப்பட்ட கூதள மாலை போல குருகுக் கூட்டம் பறந்து செல்லும் வாடைக் காலம்’ என்று எழுதுகிறாள் அவ்வை. மாலை ஒன்று வானத்தில் பறந்து செல்லும் காட்சியை ஒரு முறை கண் மூடிப் பாருங்கள். ‘கூதளம்’ என்பது வெண்ணிறக் கொடி மலர். நாகர்கோவிலில் இவை அதிகம் காணப்படுவதாக ஜெயமோகனின் கட்டுரை வழி அறிந்து கொண்டேன்.  கொக்கு, நாரை, குருகு போன்றவற்றின் வேறுபாட்டினை அறிய விரும்புவோர் ‘சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்’ என்கிற நூலினை நாடலாம். வேட்கை  முளைவிட்டு காதல் நோய் மரமாகத் துவங்குகிறது.  நாணத்தை துறந்து விட்டதால் அது பெருமரமாக வளர்ந்து விட்டது. காதல் வருத்தம்  மரத்தின் அடிப்பகுதி போல பருத்துக் கனக்கிறது. அந்த மரம் தளிர்த்துச் செறிந்து அலர் மலர்களை பெய்யத் துவங்கி விட்டது. ஆனாலும் தலைவன் வருவானில்லை. (அக: 273)

பேய் ஒரு கனவு கண்டால் அது எப்படி இருக்கும்? நம் கனவில் பேய் வருவது போல் பேய் கனவில் நாம் வருமோமா? ‘நல்ல வேட்டை ‘ போன்ற இனிய கனவா? அல்லது இரை தப்பிவிடும் அதிர்ஷம் கெட்ட கனவா? ஒரு வேளை பேய் கனவில்  அதை விட கொடிய பேய் வருமோ?

 “பேய் கண்ட கனவின்” என்கிறாள் அவ்வை.  “பேய், தான்  கண்ட கனவினை கூறாதது போன்று” என்று உரை சொல்கிறது ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை. பேயிற்கு என்ன அச்சம்? கடவுளையே எதிர்த்து நிற்கும் அவை யாருக்கு அஞ்ச வேண்டும்? “பேயைக்  கண்ட கனவின்” என்று விரித்துப் பொருள் கொள்ளும் பிற்கால உரைகள்  சரியான உரையாக இருக்கக் கூடும். பேயைக் கனவில்  காண்பது என்பது ஒரு  துர்நிமித்தமல்லவா? ஆகவே அது மறைக்கப்பட வேண்டியதுதானே?  ‘காம நோய் தாளாது தலைவியின் உயிர் சீக்கிரமே பிரிந்து விடும். அவ்வுடல் நமக்கு நல்ல உணவு என்று பேய் காணும் கனவு..’ இப்படியும் பொருள் கொள்ளலாம் என்கிறது புலியூர்க் கேசிகன் உரை. எனக்கு இது பிடித்துள்ளது. பேயிடம் பேச முடியாது. அவ்வையிடமும் கேட்க முடியாது என்பதால் அவ்வரி வளர்ந்து கொண்டே இருக்கிறது. பேய்க் கனவின் நிமித்தங்களை விளக்கி உரைக்கும் சில கட்டுரைகளை இவ்வரிக்காக வாசிக்க நேர்ந்தது. அவை  பேயே எழுதியவை போல் இருந்தன.

“இடை பிறர் அறிதல் அஞ்சி மறைகரந்து 
பேய் கண்ட கனவிற் பன்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம்..” (அக: 303)

பேயைக் கண்ட கனவை மறைப்பது போன்று பிறர் அறியா வண்ணம் மறைத்த காதல் , கொல்லி மலையின் உச்சியிலிருந்து பெருகி வீழும் அருவியின் பேரோசை போல்  அலர் எழ எல்லோருக்கும் தெரியும்படி ஆகிவிட்டது. அப்போது பிரிந்து சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. 

‘பாரியின் பறம்பில் காலையில் நெற்கதிர் கொண்டு வரப்போன குருவிகள் கூட்டம் பொழுது பட திரும்பி வந்து விடுவது போல் தலைவனும் வந்து விடுவான் என்று நம்பி ஏமாந்த  என் மனமே’ என்று வருந்துகிறாள் தலைவி. மீனானது  வற்றிய நீர் பரப்பிலிருந்து வளமான பரப்பிற்கு இடம் பெயர்வதைப் போல தானும் தலைவனைத் தேடிச் செல்லத் துணிந்தேன் என்கிறாள்.  

“உரைசால் வண்புகழ் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினம் காலை போகி
முடங்கு புறச் செந்நெல்  தரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பின ஆகி
பொழுது படப் படர்கொள் மாலை படர் தந்தாங்கு
வருவர் என்று உணர்ந்த மடம்கெழு நெஞ்சம்!”

இப்பாடலின் பழம் உரைகளில்  ஒரு செய்தி சொல்லப்படுகிறது. பாரியின் பறம்புக் கோட்டையை மூவேந்தர் முற்றுகையிட்ட போது பாரியின் நண்பர் கபிலர் பயிற்றுவித்த கிளிக்கூட்டம் நெற்கதிர்களை கொத்தி வந்து தந்து பசி போக்கியதாம். இந்தப் பாடலில் ஒளிந்திருக்கும் இச்செய்தி இன்னொரு அகநானூற்றுப் பாடலில் வெளிப்படையாகவே  பேசப்பட்டுள்ளது. 

“உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய் மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு…” (அக: 78)

குருவி கொணர்ந்த நெல்லையும்,  ஆம்பல்  மலரையும்  சேர்த்து உணவாக்கி வீரர்களின் பசியைப் போக்கியதின் மூலம் மூவேந்தர்களை எதிர்த்துப் போரிட உதவினார் கபிலர் என்கிறது இப்பாடல். ந.மு.வே எழுதிய “கபிலர்” என்கிற நூலிலும் இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.  இதை வாசிக்க வாசிக்கவே கபிலர் என் கண் முன் தோன்றி, “தம்பி, மேஜிக்கல் ரியலிசமெல்லாம் உங்களுக்கு சப்ஜெக்டு; எங்களுக்கு சாப்பாடு.” என்று பஞ்ச் வசனம் பேசியபடியே தன் சிகரெட் புகையை வளையமிட்டார். 

அவ்வையின் ஒரு நற்றிணைப் பாடலில் மழைப்பெருக்கின் காட்சி காட்டப்படுகிறது. அதன் வழி காமமும், அதை ஆற்ற இயலாத தனிமையும்  புனையப்பட்டுள்ளது.  தோழி தலைவியிடம் சொல்கிறாள்.. ‘தலைவன் ஒரு நாள் பிரிந்தாலே நீ உயிர் வேறுபடுபவள். அவன் இப்போது நம்மை  தனியே விட்டுவிட்டு நெடுங்காலம் வினை செய்யப் போகப் போகிறானாம்? அவனது இந்த அசட்டுத் தனத்தை நினைத்தால் உனக்கே  சிரிப்பாய் இல்லை?’ 

“பெரு நகை கேளாய் , தோழி, காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடும்
மொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே ; சென்று
தம் வினை முற்றி வரும் வரை, நம் மனை
வாழ்வதும் என்ப” ( நற்: 129)
மொம்மல்ஓதி !-  பொலிவுடைய கூந்தலை உடையவளே!

காமத்துப்பாலில் ஒரு குறள் உண்டு..

“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வோர்க்கு உரை.”

அவளுக்கு ஒரே  ஒரு சொல் தான் வேண்டும்.  அது “செல்லவில்லை” என்னும் சொல். வேறு பேச்சுவார்த்தைகள் எதற்கும் அவள் தயாரில்லை. நீ போவதைப் பார்க்கும் நான் வருவதைப் பார்க்க இருக்கப்போவதில்லை. எனவே அது குறித்தெல்லாம் என்னிடம் பிதற்றாதே.

கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே”

‘படப்பொறி கொண்ட பாம்பின் தலை நடுங்கும் படி வலுத்துக்  கொட்டும் மழையிரவில் அதிர்ந்து அதிர்ந்து இடிக்கும் இடியோசையை கேட்ட படியே  நம்மை தனித்திருக்க சொல்கிறான் தலைவன்’ 

நகுலன் சொல்கிறார் நினைவுகள் ஊர்வன என்று. ஆம், பளபளப்பான  நச்சரவம் . 

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமலும் இருக்க முடியவில்லை.

பிரிந்து போவோர் பெட்டி படுக்கையோடு நினைவுகளையும் வாரிச் சுருட்டி எடுத்துப் போய்விட்டால் கண்ணீர் இல்லை, கசப்பு இல்லை. 

“தேரும் செல் புறம் மறையும்” (நற்: 187) என்கிறது ஒரு வரி.

அவள் பார்க்கப் பார்க்கப் பார்க்க கண் மறைந்து போகிறான் தலைவன்.  ‘இன்நகை மேவி நாம் ஆடிய பொழில்’ இனி வெறும் நினைவாகி ஊர்ந்து ஊர்ந்து வருமே என்று அஞ்சுகிறாள் தலைவி. 

“மெய்மலி காமம்” என்கிறாள் பாட்டி.  மெய்முழுக்க விரவிக் கிடப்பதை எப்படிதான் வெல்வது? அழகான சொற்கட்டு . ‘தமிழினி ‘ எழுத்தாளர்கள் முந்தும் முன் முந்தினால்  தலைப்பிற்குத்  தலை சொரியும் எழுத்தாளனுக்கு ஒரு கச்சிதமான தலைப்பு கிடைக்கும்.

ஒளவை

தலைவியின் காதலை அன்னை அறிந்துவிடுகிறாள். வீட்டிற்குள் போட்டு பூட்டி விடுகிறாள். தலைவி வருத்தம் தாளாது வள்ளிக் கிழங்கு வாடுவது போல் வாடிப் போனாள். இனியும் நீ  மணம் முடிக்க காலம் தாழ்த்தினால்  அவள் வீட்டிற்குள்ளேயே முதிர்ந்து சாக வேண்டியதுதான் என்று தோழி தலைவனை எச்சரிக்கிறாள். அவள் ஒரு உவமை சொல்கிறாள்…

“வேறு பல்நாட்டுக் கால்தர வந்த
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை,
கலிமடைக் கள்ளின் சாடி அன்ன..”

(நற்: 295)

‘பல்வேறு நாடுகளிலிருந்து கடல் வணிகர்கள் வந்து குவியும் இடத்திலுள்ள கள்ளுக் கடையில் எவ்வளவு சீக்கிரம் கள் விற்றுவிடுமோ, எவ்வளவு ஊறுதியாக கள் தீர்ந்துவிடுமோ,  அவ்வளவு சீக்கிரம்,  அவ்வளவு உறுதியாக இற்செறிக்கப்பட்டுள்ள தலைவியின் இளமை நலம் சிதைந்துவிடும்’.

 ‘கலிமடை’  எனில் பெருங் கொண்டாட்டத்தோடு காய்ச்சப் பெற்ற கள் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்கடற்பரப்பும் , அங்கு நெருக்கியடிக்கும்  மக்கள்  கூட்டமும் தெரிகிறது இவ்வரியில்.  கலயங்கள் உரசும் சத்தமும், களிமகன்களின் வாய்குழறலும் கூட கேட்கிறது எனக்கு.  

காயா மலர் கருநீல நிறம். சரக்கொன்றை பொன் நிறம். மலைவெளியில் மின்னற் கீற்று வெட்டிப் பாய்வதை “காயாங் குன்றத்து கொன்றை போல” என்கிறாள். (நற்: 371) 

தலைவன் மழைக்காலத்தில் வந்து விடுவதாக சொல்லிப் பிரிந்திருக்கிறான். இதோ மழை பெய்யத் துவங்கிவிட்டது. தலைவனைக் காணாது தலைவி அழத் துவங்குகிறாள். அப்போது தூரத்திலிருந்து கேட்கும் கோவலர் குழலோசை அவள் காதலை மிகுவித்து துயரத்தைக் கூட்டுகிறது. 

“அழல் தொடங்கினளே ஆயிழை;  அதனெதிர்
குழல் தொடங்கினரே கோவலர்..”

ஒரு இசைக் கலைஞன் இந்த வரிகளைப் பார்த்த மாத்திரத்தில் பாட்டாக்கி விடுவான். 

காட்டாற்றின் கரையில் வேர் பிடிப்பற்று நிற்கும் மரத்தின் தளிர்கள் எப்படி நொடிக்கு நொடி அஞ்சி நடுங்குமோ அப்படி இந்தப் பிரிவுத்துயரால் நான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன் என்கிறாள் ஒரு தலைவி.

“கரை பொருது இழிதரும் கான்யாற்று  இகுகரை
வேர்கிளர் மராஅத்து  அம்தளிர் போல
நடுங்கல் ஆன நெஞ்சமோடு, இடும்பை
யாங்கனம் தாங்குமென்மற்றே? “
(நற்: 381)

அவ்வை பாடியுள்ள நற்றிணையின் 390 வது பாடல்  எனக்குப் பொருள் கொள்ள சிரமமாக இருந்தது. அது காமக் கிழத்தி கூற்றென்றும், தலைவி கூற்றென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அது தவிரவும் அப்பாடலை ஒட்டிய  சில குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள பழைய உரை, புதிய உரை என பலவற்றைப்  புரட்டியும் தெளிவு கிடைக்கவில்லை. ஆயினும் அப்பாடல்  நினைவில் இனிக்க அதன் முதல்வரியே கூட போதுமானதுதான். “வாளை வாளின் பிறழ” என்பது அவ்வரி.  நீரில் துள்ளும் வாளையின் பளபளப்பை வாளிற்கு உவமை சொல்கிறாள் அவ்வை.

“வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி..”

கிள்ளி வளவனின் வெண்ணியில் உள்ள பொய்கையில் வாளை மீன்கள் நிரம்பிப் புரள அதைப் பிடித்து உண்ணாது சோம்பி உறங்குகிறது நீர் நாய். அது போல விழாக் காலத்தில் புதிய பரத்தை ஒருத்தியிடமிருந்து தலைவனைக் காக்காமல் நான்  இப்படி  பொறுப்பின்றி வீட்டில் இருக்கிறேனே? என்று பதறுகிறாள் ஒரு காமக் கிழத்தி. 

பொதுவாக தலைவன்கள் சொன்ன சொல்லைக் காப்பதில்லை. அன்றும் இன்றும் அப்படித்தான். சமயங்களில் தலைவன் சொன்ன நாளில் திரும்பியும்  விடுகிறான். பனிக்கடு நாளில் பிரிந்து சென்றவன் மழைக்காலம் துவங்கியதும் திரும்பி விடுகிறான். அதற்கு மகிழ்ந்து பாடுகிறாள் ஒரு தோழி.  அவன் பிரிந்த சென்ற காட்டு வழியின் கடுமை சொல்ல .. ” பொற் கொல்லனின் தொழிலிடத்தில் இருந்து எழுகிற ஒலி போல காய்ந்த ஞெமை மரத்தில் அமர்ந்து  ஆந்தை அலறும் காடு” என்கிறாள். 

கவிஞர் இசை

பொற் கொல்லர் தொழிலில் எந்த இடத்தில் ஆந்தை அலறும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஊது குழலால் நெருப்பூதும் போதா? அல்லது பொன்னைத் தட்டும் போதா?. (நற்: 394)

இணையத் தொடர்பு பெருகிவிட்ட இன்றைய காலத்தில் சங்கப்பாடல்களுக்கு இணையத்திலும்  நிறைய உரைகள் கிடைக்கின்றன. அதில் ஒரு உரை “ஊரன்” என்கிற சொல்லிற்கு “ஊர் மேய்பவன்” என்று அர்த்தம் சொல்கிறது. ஒருவேளை இது ஒட்டுமொத்த சங்கத்தலைவன்களின் மீதான நுட்பமான விமர்சனமாக இருக்கக்கூடும்.

                                                                                               (தொடரும்)

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *