விண்ணினும் மண்ணினும் 2 – கடலாழத்து மொழி
(”பெண்ணெழுத்து – ஓர் உலகளாவிய பார்வை”: சுசித்ரா)
ஒரு நொடிக்கூட அமைதியில்லை.
அவிழும் மலர்களை விரும்பும் நெஞ்சில்
காற்று எப்போதோ வீசத்தொடங்கிவிட்டது.
(இசுமி ஷிகிபு, 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜப்பானிய பெண் கவிஞர்.)
நம்முடைய சங்கக் கவிதைகளைப்போல் ஜப்பானில் ‘வாகா’ (waka) என்று ஒரு செவ்விலக்கிய கவிதை தொகுப்பு முறை உள்ளது. ‘வாகா’ என்பது ஹைக்குவைப்போல ஒரு கவிதை வடிவம். காலப்போக்கில் சீனக்கவிதை முதல் மேற்கத்திய கவிதை வரை பல தாக்கங்களை உள்ளிழுத்துக்கொண்டது. வடிவபேதங்களும் உருவானது. ஆனால் ஒரு தொகுப்பாக ‘வாகா’ என்றே அறியப்படுகிறது.
வாகா கவிதைகள் பெரும்பாலும் காதல், துயறம், பிரிவு, இறப்பு போன்ற தலைப்புகளில் இயற்றப்பட்டன. நேரடியாக சொல்லமுடியாத, நுண்மையான, ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்த யத்தனித்தன. இன்று தூய ஜப்பானிய அழகியல் என்று நாம் உணரும் அம்சங்கள் – குறைவாக, சன்னமாக சொல்வது, இயற்கையை குறிப்புணர்த்திச் சொல்வது, எளிமையில் ஆழத்தை உணர்த்துவது – போன்ற அம்சங்கள் வாகாவின் அழகியலிலிருந்து உருவானவை.
உலகமொழிகள் அனைத்திலுமே இந்த வகைக் கவிதைகள் உள்ளன. கிரேக்க மரபில் எழுத்தை மூன்று விதங்களாக பிரிப்பது வழக்கம்: லிரிக், அல்லது பாடல்-கவிதை; டிராமா, அல்லது நாடகம்; எபிக், அல்லது காவியம். கவிஞன் தனக்கே உரித்தான உணர்வுகளை தன்னியல்பாக, தீவிரமாக மொழியில் வெளிப்படுத்துவதே லிரிக். வாகா கவிதைகளும் சரி, நம்முடைய சங்கப் பாடல்களும் சரி, ‘லிரிக் பொயெற்றி’ எனப்படும் பாடல்-கவிதை வகையைச் சார்ந்தவை அல்லது அவற்றுக்கு நெருக்கமானவை.
லிரிக் கவிதை வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஒன்று புலப்படும். பெண் எழுத்தாளர்களும் கவிஞர்களும் – உலகெங்கிலுமே – தங்களை வெளிப்படுத்த லிரிக் கவிதையின் ஊடகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான் தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய காலத்தில் இதை ஒரு சுவாரஸ்யமான அவதானமாகக் கண்டேன். என்னுடையது தமிழ் மரபு. அதில் எனக்கு முன்னோடிகளென்று நான் கொள்ளும் பெண் படைப்பாளிகள் அனைவருமே – ஆம், அனைவருமே – லிரிக் கவிஞர்கள் தான். அவ்வை, அள்ளூர் நன்முல்லை, காக்கைப்பாடினி, மாற்பித்தி, வெள்ளிவீதியார் முதல் ஆண்டாள், காரைக்காலம்மை வரை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெருந்தேவி கூட ஒரு கணக்கில் லிரிக் கவிஞர். தமிழின் தங்கைமொழியான மலையாளத்தின் முதன்மை பெண் எழுத்தாளரான மாதவிக்குட்டி நவீன வடிவங்களில் எழுதியிருந்தாலும் தன் ஆன்மாவில் அவள் முழுக்க முழுக்க ஒரு லிரிக் போயட்.
தமிழிலும் சரி, மலையாளத்திலும் சரி, நான் அறிந்தவரையில் பெண்கள் எபிக், டிராமா என்று சொல்லத்தக்க விசாலமான ஆக்கங்களை படைத்ததில்லை. சில விதிவிலக்குகளைத் தாண்டி உலக மொழிகள் அனைத்திலுமே பெண்கள் பெரும்பாலும் காவியமோ நாடகமோ எழுதியதில்லை. அதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள் பொதுவாகச் சொல்லப்படுகிறது. காவியமும் நாடகமும் எழுத வடிவப்பயிற்சியும் புறஅனுபவ சேகரிப்பும் அவசியம். அந்தக்கல்வி சென்றகாலத்தில் பொதுவாக பெண்களுக்கு கிடைக்கும் வகையில் இல்லை. ஆகவே, தங்கள் அனுபவவட்டத்துக்குள் வரும் சிறிய உலகை, சிறிய அரங்கினுள் நிகழ்த்திப்பார்த்தார்கள். இப்படி சொல்லப்படுகிறது.
ஆனால் பெண்கள் கவிதை எழுதுவதற்கும், கவிதையின் நுண்ணிய கூரிய மொழியில தங்கள் இலக்கியச்சாதனைகளை நிகழ்த்தியதற்கு, அனுபவ வறுமை மட்டுமே காரணமா என்ன? அப்படியென்றால் வெளியுலகு பெருமளவுக்கு திறந்துவிட்ட இந்த நவீன காலகட்டத்தில் பெண்கள் அநேகம்பேர் காவியமும் நாடகமும் – அல்லது அதன் சாயல் கொண்ட நவீன கலைவடிவங்களான நாவலும் சினிமாவும் – உருவாக்க முன்வந்திருக்க வேண்டும் இல்லையா? ஆனால் இன்றும் எழுத்து வழியாக தங்களை வெளிப்படுத்த நினைக்கும் பெண்கள் முதன்மையாக கவிதையையே தங்கள் ஊடகமாக தேர்ந்தெடுப்பதை காண முடிகிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒன்றின் வறுமை, அல்லது இயலாமையை மட்டும் காரணமாக சுட்டுவதில் ஒரு குறுகல் உள்ளதாக நினைக்கிறேன். கவிதை என்ற வடிவத்தை பெண்கள் இயல்பாக தேர்வு செய்கிறார்கள். ஏன் அந்தத் தேர்வு? கவிதை வழியாக பெண் எதையோ பெறுகிறாள். அது என்ன?
லிரிக் கவிதைகள் தீவிரமான, தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. பெரும்பாலும் தன்னிலையில், ‘நான்’ என்ற இடத்திலிருந்து தொடங்குகின்றன. நேரடியான வாழ்க்கைத்தருணங்களின் வெளிப்பாடாக (அல்லது அப்படி ஒரு பாவனையை சூடிக்கொண்டவகையில்) அமைகின்றன.
இது அல்லூர் நன்முல்லையின் சங்ககாலக் கவிதை –
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்புஅன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே.
இந்தக் கவிதையில் உள்ள தீவிரமான, தனிமனித உணர்வு – ‘நோம் என் நெஞ்சே’ என்று மாரில் அறைந்துகொள்வது போல் உரைப்பது, அதில் உள்ள ‘என்’ என்ற வார்த்தையின் வலி, ‘இமை தீய்ப்புஅன்ன கண்ணீர்’ என்ற உணர்வின் தீவிரம், இவையே இந்தக் கவிதையை அத்தனை ஆற்றல்மிக்கதாக ஆக்குகின்றன.
இது போன்ற வரிகளை நாம் தொடர்ந்து சங்ககால, பக்திகால பெண்பாற் கவிஞர்களில் காண முடிகிறது. ‘முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்’ என்கிறாள் அவ்வை. ‘கொங்கையை கிழங்கோடு பறித்து அவன் மார்பில் எரிந்து என் அழல் தீர்வேன்’ என்கிறாள் கோதை. இந்த உணர்வுத்தீவிரம், நேரடிக்கூற்று, வலியில் உடலைக் கிழித்து மாரை அறைந்து பிடுங்கி எரியும் ஆவேசம் ஆண் கவிஞர்களின் குரல்களில் காணமுடிவதில்லை. இத்தனைத் தீவிரமான தன்னுணர்வின் வெளிப்பாட்டால் – அல்லது தன்னை நிராகரிக்கும் வலியுணர்வின் வெளிப்பாட்டால் – இந்தக் கவிஞர்கள் என்ன அடைந்தார்கள்? இந்த மொழிகளில் நாம் உணரும் பிரத்யேகமான பெண்தன்மை எங்கிருந்து வருகிறது?
எனக்கு இப்படித் தோன்றுகிறது. கலை என்பதே இவ்வுலகையும் அதன் நிர்பந்தங்களையும் மீண்டெழுவதற்க்கான ஒரு யத்தனம் தான். இரண்டு வகைக் கலைகள் உள்ளன. ஒன்று, உடலை ஊடகமாகக் கொண்டக் கலைகள் – நடிப்பு, பாட்டு, நடனம் போன்றவை. இரண்டு, உடலை மீரிய தளத்தில் நிகழும் கலைகள். அரூப இசை, ஓவியம், இலக்கியம் போன்றவை. சுவாரஸ்யமாக, வரலாறெங்கும் கலைஞர்களாக புகழ்பெற்ற பெண்கள் பெரும்பாலும் முதல்வகைக் கலை வெளிப்பாட்டாளர்களாகவே இருந்துள்ளனர். ஒப்பெராவில் ‘டீவா’ என்று சொல்லப்படும் பெரும் பெண் கலைஞர்கள் உண்டு. கிரெடா கார்போ போன்ற மகாநடிகைகள், பாலசரஸ்வதி போல் ஆளுமைக் கொண்ட நாட்டியக் கலைஞர்கள் உண்டு. இவர்களிடம் ஒரு ‘பெர்சோனா’ உள்ளதை நாம் அவதானித்திருப்போம். அதிபெண்மையுடன் வெளிப்படும் ஒரு மாற்றாளுமை. அவர்களின் கலையின் ஒரு பகுதியாகவே இந்த ஆளுமை வெளிப்படுகிறது. அது ஒரு பாத்திர வார்ப்பாக இருக்கக்கூடும். ஒருவேளை இப்படிப்பட்ட ஆளுமையுடையவர்கள் நடிக்காமல் நடனமாடாமல் கவிதை எழுதினால், அது தன்னிலையில், தீவிர உணர்வுஃபாவங்களை நடிப்பது போன்ற மொழியில் லிரிக் கவிதைகளாகவே அமையும் என எண்ணுகிறேன்.
நாடகமும் காவியமும் தூரத்தை, விலக்கத்தை அளிப்பவை. மாறாக லிரிக் கவிதையோ கூர்முனை கொள்வது. இணைவு, பிரிவு, மரணம் என்று உச்ச சந்தர்ப்பங்களில் நிற்பது. உடலையும் உள்ளத்தையும் சுட்டெரிக்கும் சொற்களால் நெய்யப்பட்டது. அதிலும் பெண் கவிஞர்கள் தங்களுக்கே உரித்தான படிமங்களை பயன்படுத்துவதை காண்கிறோம். ‘இமைதீய்ப்பன்ன’ என்னும் போது அந்த சூட்டை நாம் நம் இமைகளிலேயே உணர்கிறோம். அவ்வளவு நெருக்கமான உணர்வுகளிலிருந்து மேலெழுவது எப்படி சாத்தியமாகிறது?
எனக்குத் தோன்றுகிறது, லிரிக் கவிதை வழியாக கவிஞர் தனக்கென்று ஒரு நாடகத்தன்னிலையை உருவாக்கிக்கொள்கிறார் என்று. ஒரு டிரமாட்டிக் செல்ஃப். அதில் தீவிரமாக தன்னை மொத்தமாக கரைத்து நடிப்பது வழியாக ஒரு விடுதலையை அடைகிறார். நாடகக்கர்த்தா தனக்கு வெளியே தூரமாக உருவாக்கிக்கொள்ளும் நாடகத்தை லிரிக் கவிஞர் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொள்கிறாள். அவளே அதன் ஆசிரியையாகவும் ஒரே நடிகையாகவும் அமைகிறாள். ஒரு நடிகை அரங்கில் அடையும் விஸரூபத்தை மொழி வழியாக அடைகிறாள். கற்பூரம் உடல் எரிந்து நறுமணப்புகை ஆகி காற்றில் கரைவது போல் உணர்வுகளை நேரடியாக மொழியில் பஸ்மமாக்குகிறாள்.
ஆக லிரிக் கவிதை என்பது மொழியில் நிகழ்த்தப்படும் ஒரு சிறிய, தீவிரமான சிற்றரங்கு நடனக் காட்சி என்று சொல்லலாம் என தோன்றுகிறது. நடிகை கதாபாத்திரத்தில் அடையும் லயத்தைப் போல இங்கே கவிதையை இயற்றுபவளும் ஒரு கண நேரத்துக்கு முற்றான சுய அழிவை அடைகிறாள்.
பெண் கலைஞர்கள் மட்டுமல்ல, பெண்மை ஃபாவத்தை சுவீகரித்துக்கொண்ட ஆண் கலைஞர்கள் கூட – பக்தி மரபு கவிஞர்கள் தொடங்கி ரொமாண்டிக் கவிஞர்கள் வரை – தங்களுடய ‘சுய அழிப்பை’ வேண்டுபவர்களாகவே இருப்பதைக் காண்கிறோம். ஆகவே இது பெண் கலைஞர்களுக்கு மட்டும் சொந்தமான பண்பு என்று நான் வாதிடவில்லை. என்னும்போதும், இதில் ஒரு ‘பெண்நிலைவாதாம்’ உள்ளது. சில வைணவ மரபுகள் எல்லா ஜீவாத்மாக்களும் பெண்கள், பரமனான நாராயணன் மட்டும் ஒரே ஆண் எனக் கொள்வதை இதனுடன் இணைத்துப் பார்க்கிறேன். நம்முடைய பெண்பாற் கவிஞர்களின் கவிதைகளைக் கண்டால், தொடர்ந்து அவர்களின் பாக்களில் வெளிப்படும் உணர்வு இது. நான் கைவிடப்பட்டேன் – பிரிவில் அழல்கிறேன் – என்னைக் கூட்டிக்கொண்டு போக ஏன் இன்னும் வரவில்லை – என்னை பிரிந்த நீயும் ஓர் இழிமகன் – தெய்வங்களும் உன்னை சும்மா விடாது – இந்தப் பிரிவைத் தாளேண் – என்னை கரைத்துக்கொள் – நான் அழிகிறேன். இப்படியே செல்கிறது இந்த உணர்வுநிலை. கரைதல், அழிதலுக்கான மன்றாட்டு தொடர்ந்து இந்தக் கவிதைகளில் ஒலிப்பதை நாம் காண்கிறோம். அதே உணர்வுகள் ஒவ்வொரு முறையும் தீவிரமாக நடிக்கப்படுகின்றன.
லிரிக் கவிதைகளை எழுதிய பெண்பாற் கவிஞர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களை (அல்லது இப்போது நமக்கும் கிடைக்கும் தகவல்களை) எடுத்துப்பார்த்தால் சில சுவாரஸ்யமான பொதுத்தன்மைகளை காணலாம். இவர்களில் பலரது ஆரம்ப வாழ்க்கை ஆடாம்பரமானதாக இருந்திருக்கிறது. சிலர் சுயமோகிகளாக தங்களில் மூழ்கி, தங்கள் அழகைப்பற்றி கர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆம், நடிகைகளைப்போலவே. ஜப்பானிய வாகா கவிஞர்களில் முதன்மையான பெண் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓனோ நொ கோமாச்சி. இவள் தன் காதலர்களை குரூரமாக அலைக்கழித்ததைப்பற்றி ஏராளமான கதைகள் உள்ளன.
ஆனால் ஏதோ கணத்தில் தீவிரமான உணர்வுகளினால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ‘பதுங்கிவந்த மிருகத்தைப்போல் அந்தக் காதல் என்னை ஆட்கொண்டது’ என்று மெடிட்டரேனியன் கடலின் மணிநீலத்தீவுகள் ஒன்றில் பொ.மு.6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கவிஞர் சாஃபோ பாடுகிறாள். பிறகு அவர்கள் பிரிவும் ஆற்றாமையும் வலியும் கொள்கிறார்கள். காதலனையோ கணவனையோ பிரிந்து ஊர் ஊராக அலைகிறார்கள். ஆதிமந்தியைப் போல, வெள்ளிவீதியாரைப்போல. தூக்கமிழக்கிறார்கள். தேடல், அலைக்கழிவு, அடையமுடியாமை என்று சில உணர்வுகளை இந்த வகைக் கவிதைகள் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். இதற்கான வாழ்க்கைத் தருணங்கள் நேரடியாக கவிஞரின் வாழ்க்கையிலிருந்து எடுத்தவையா அல்லது கவிதையின் தன்னிலையென்று உருவாக்கப்பட்டவையா என்று நாம் இன்று தெளிவாக சொல்லிவிட முடியாது. ஆனால் இந்தக் கவிதைகளின் பொதுவான உணர்வுதள வரைபடத்தை பார்க்கும்போது, ஆணுக்கு ஆழ்ப்படிமரீதியாக ஒரு பயணம் இருப்பது போல், பெண்ணுக்கும் ஓர் பயணம் உண்டு என்று இந்த கவிதை மரபு வகுத்துக் கூறுவது போல் தோன்றுகிறது.
ஆம், இதை எழுதும் போது தீராக்காத்திருப்பையும் ஏக்கத்தையும் திரும்பத்திரும்ப பாடும் தமிழ் பெண்பாற் சங்கக்கவிதை தன் ஆற்றலை குமரி என்ற தொல்படிமத்திலிருந்து எடுத்துக்கொண்டிருக்கலாம் என்ற வலுவான எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. நிலமும் இயற்கையும் அதன் வழியாக பழங்கதையும் அந்த ஆதிக்காத்திருப்பைத்தானே திரும்பத் திரும்ப சொல்கின்றன? அந்த உணர்வு தானே இந்தக் கவிதைகளின் ஊற்று?
தன்னை வந்து சேராத மணாளனை எண்ணி விரிந்த முடிவில்லா கடல் நடுவே காலமெல்லாம் காத்திருக்கும் கன்னி. அவள் மணவாளனோ பெருநிலத்த்க்கு மறுகோடியில் பனிசூடிய முகடுகளின் உச்சியில் வாழும் பித்தன். ஆம், அவன் விண்ணில், இவள் மண்ணில். நடுவே எத்தனைப்பெரிய நிலம்! மேலே எத்தனை தூரம் வானம்! கடலிலிருந்து எழும் வெம்மையான பெருமூச்சுகள் முகில்களாக கனத்து கனத்து செல்கின்றன. குளிர்ந்து கண்ணீரென மழை பொழிகின்றன.
இந்தக் கவிதைகளும் ஒரு வகையில் அந்த மழையைப் போலத்தான். ஒவ்வொன்றும் சுருக்கமான, மேகம் வெடித்தாற்போல் தீவிரமான மழை. கடலாழத்திலிருந்து எழுந்து வரும் மேகதூது. ஒவ்வொரு மழையும் கடலாழத்தின் குரலே. பொழிகையில் மழையும் கடல் தான், உப்பு சுத்தீகரிக்கப்பட்ட கடல்.
அந்தக் கடலை அலைகள் சுனாமிகளாக எழுந்து வந்து நிலம் மூடும் ஜப்பானியர்களும் அறிவார்கள்.
என் கண்ணீரை சிறு பனித்துளிகள் என்று நினைத்துவிடாதே
என்னை மையமாக்கிக் கடலென எழக்கூடும் அது
இது இசே என்ற 9-ஆம் நூற்றாண்டு வாகா கவிஞர் பாடும் பாடல்.
கடலாழத்தில் உள்ளன இந்தத் தொன்மையான வேடங்கள். இப்பெண் கவிஞர்கள் அவற்றைச் சூடிக்கொண்டு வருகிறார்கள். ஆடிக்கடந்து செல்கிறார்கள். ஒவ்வொரு கவிதையும் ஒரு சிற்றரங்கு நடனம். கடலைப்போலவே, தீராக்கொதிநிலையில் நிகழ்த்தப்படுவது.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் கொதிநிலியிலிருந்து பெண்ணுக்கான அகவிடுதலைக்கான முகவாசலாகவும் இவ்வகைக் கவிதைகள் அமைகின்றன என்பது தான். ஆம், தன் நோய்க்குத் தானே மருந்து.
பெண்பாற் கவிஞர்களின் லிரிக் கவிதைகளின் சிறப்பியல்புகளில் ஒன்றாக இன்று எனக்குத் தோன்றுவது, அவை பெண்ணின் தன்னிலை உணரும் ஒரு குறிப்பிட்டவகை தனிமையை, விரக்தியை, வெளிப்படுத்த இடம் கொடுக்கிறது. அலைக்கழிவும், அமையமுடியாமையும், நிறைவுரா ஏக்கமும் சென்று சேரும் ஓர் உடைவுப் புள்ளி அது. அந்த உடைவுனாலேயே அது ஓர் ஆன்மீகமான இடம் என எண்ணுகிறேன். இளமையில் காதலர்களை அலைக்கழித்த ஓனோ நொ கோமாச்சி தன் முதுமையில் எழுதியதாக கருதப்படும் புகழ்பெற்ற கவிதை இது –
ஒரு வீண் வாழ்க்கை.
என் அழகும் திறமைகளும் பொலிந்துபோயின.
முடிவில்லாத மழைப்பொழிவில்
நிறம் வெளிரும் செர்ரி மலர்களை
நான் இங்கிருந்து
தன்னந்தனிமையில்
நோக்கிக்கொண்டிருக்கிறேன்.
பல நடிகைகளுக்கு ஒப்பனையை கலைத்தால் பிடிக்காது. ஒரு துக்கம் பீடித்துக்கொண்டு வரும் அவர் மேல். சில நடிகைகள் ஒரு கட்டத்தில் உலகத்திலிருந்து மொத்தமாக விலகிவிடுவதைக் காண்கிறோம்.
இது என்ன மனநிலை? வகுத்துக்கூறத்தெரியவில்லை. ஆனால் பெண்பாற் பக்தி கவிஞர்களில் பெரும்பாலானோர் உலகின் மீது இந்த நிராசையை பதிவு செய்வதை வாசிக்கிறோம்.
ஓனோ நொ கோமாச்சியும் இசுமி ஷிகிபுவும் தங்கள் இறுதி நாட்களில் புத்த பிக்குனிகளானார்கள் என்று கூறப்படுகிறது. அவ்வை தன் இளமையை பரிகொடுத்து கவிஞரான கதை பிரசித்தம். மேற்கில் அவிலாவின் தெரெஸா, சோர் யுவானா போன்ற முக்கியமான பெண் கவிஞர்கள் துருதுருப்பான இளமையைக் கடந்து வந்து துறவு பூண்டவர்களே. சில கவிஞர்கள் குடும்ப வாழ்க்கையின் நிராசைகள் வழியாக வந்தவர்களாக, அல்லது அதை மீறி, விலக்கி, எழுந்தவர்களாக, இருந்திருக்கிறார்கள். மீரா, காரைக்கால் அம்மைய்யார், லல்லேஷ்வரி, அக்காமகாதேவி என்று நீள்கிறது இந்தப் பட்டியல்.
பெண்பாற் லிரிக் கவிஞர்களின் வாழ்க்கையில் உள்ள இந்த பொது அம்சங்களே அவர்கள் கவிதையில் கூர்கொள்கின்றன. அலைக்கழிதல் கொண்ட ஆரம்ப வாழ்க்கை, கவிதை வழியாக அந்த உணர்வுகளை நடித்துக் கடப்பது, சில சமயம் அதன் வழியாக ஆன்மீகமான ஓர் உயர்நிலையை அடைதல், இவ்வாறு செல்லும் ஒரு வாழ்க்கைப் பயணத்தையே இவர்களது கவிதையில் காண முடிகிறது.
இது பெண் நிலைக்கே உரித்தான ஓர் தனித்துவமான ஆற்றல் வெளிப்பாடு என்று நினைக்கிறேன். காலம்தோறும் இந்த சக்தியை தங்கள் ஆக்கங்களில் வெளிப்படுத்தும் சில பெண் கவிஞர்கள் உருவாகிக்கொண்டே தான் இருக்கிறார்கள் என்பதே அதற்குச் சான்று. அவர் வாழ்க்கையையும் எழுத்தையும் தேடல்களையும் வைத்துப்பார்க்கும் போது மாதவிக்குட்டியை நம் காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த பழைய மரபினளான ஓர் அசலான லிரிக் கவிஞராகவே என் மனம் அடையாளம் கொள்கிறது. தலைமுறைதோறும் சிலர் கடலாழத்திலிருந்து அந்த மொழியை பெற்றுக்கொண்டே இருப்பார்கள்.
பெண்கள் பெரும்பாலும் லிரிக் கவிதைகளையே எழுதியிருப்பதாக சொல்லி இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன். பெண்கள் நாடகங்களோ, காவியங்களோ எழுதியதில்லையா?
ஜப்பானிய வாகா கவிஞர் இசுமி ஷிகிபுவின் சகோதரியின் பெயர் முராசாகி ஷிகிபு. உலகின் முதல் நாவலென்று கருதப்படும் ‘ஜெஞ்சி கதை’ என்ற காவியத் தன்மை கொண்ட ஆக்கத்தை எழுதியவர் இவர். பத்தாம் நூற்றாண்டில் காவியம் எழுதிய பெண் எழுத்தாளரைப்பற்றி அடுத்தக் கட்டுரையில்.
*
- சுசித்ரா: தமிழ்விக்கி
- முந்தைய கட்டுரை: விண்ணினும் மண்ணினும் 1: இணைக்கும் கயிறுகள்
செறிவான கட்டுரை சுசித்ரா மேம். நன்றி. பல அறியாத தகவல்கள், அறிமுகங்கள்…Getting the depthness of the series.
Venky
லிரிக் கவிதைகளில் வெளிப்படும் ‘பெர்சோனா’வை ஓர் தீவிரமான தன்னை இழக்க வைக்கும் அக நாடகமாக காண்பது முற்றிலும் புதிய பார்வையாக தோன்றுகிறது. அதைக் கொண்டு வந்து குமரி படிமத்துடன் இணைக்கும் இடம் இந்த கட்டுரையில் ஒரு உச்சம். நிலம் ஒரு புறம் கடல் மறுபுறம். இதில் கடலை நோக்கி தீராக்காத்திருப்பின், ஏக்கத்தின் குறியீடாக நின்று கொண்டு இருப்பவர்களாக சாஃபோவிலிருந்து கோமாச்சி, ஷிகிபு வரை உலகின் அனைத்து லிரிக் கவிஞர்களும் வந்து விடுகிறார்கள். ஒன்றின் வறுமை அல்லது குறையாக மட்டும் பெண் கவிஞர்களின் லிரிக்கல் தன்மையையும், தன்னிலை பாவத்தையும் காண்பவர்கள் இவ்வளவு ஆழங்கள் இழக்கிறார்கள். கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கவிதைகள் அனைத்துமே இமையை சுட்டெரிக்கும் வெம்மையுடன் உள்ளன!
மிக அருமையான கட்டுரை!
அருமை! சுச்சி.. very insightful…
Proud of u..
comment
niraya puthu puthu thagavalgalai therinthu konden….ezhuthukkalai kuritha puthu parimanam kidaithirukkirathu…thank you