1 + 1 (சிறுகதை) – பூர்ணிமா தம்மிரெட்டி

(தமிழில் – அவினேனி பாஸ்கர்)

பூர்ணிமா தம்மிரெட்டி

பூர்ணிமா தம்மிரெட்டி – தெலுங்கு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செயல்படுகிறார். 2022ஆம் ஆண்டு சங்கம் ஹவுஸ் இன்டர்நேஷனல் ரைட்டர் ரெசிடென்சியில் தங்கி எழுதும் வாய்ப்பு பெற்றார். மண்டோவின் சியா ஹாஷியே மற்றும் அம்ரிதா பிரிதமின் பிஞ்சர் ஆகியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கானா ஆயுத இயக்கத் தலைவர் மல்லு ஸ்வராஜ்யத்தின் நினைவுக் குறிப்பின் ஆங்கில வடிவம் இவர் மொழிபெயர்ப்பில் விரைவில் வெளிவரவுள்ளது. தெலுங்கு எழுத்தாளர் ஓல்காவின் சமீபத்திய நாவலை ‘ஆன் தி பேங்க்ஸ் ஆஃப் தி பம்பா’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இது ஜூலை 2025இல் ஹார்பர்காலின்ஸால் வெளியிடப்படும். பத்தாண்டுகளில் இவர் தெலுங்கில் எழுதிய சிறுகதைகள் ‘எமோஷனல் பிரெக்னென்சி’ என்ற பெயரில் 24 கதைகளின் தொகுப்பாக 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது.

2022 ஆம் ஆண்டில், பூர்ணிமா எலமி என்ற பதிப்பகத்தை ஆரம்பித்தார் – இதுவரையில் எட்டு புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் புத்தக மதிப்புரைகளுக்காகவே pustakam.net என்ற வலைத்தளத்தை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநரான இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

– அவினேனி பாஸ்கர்

*

பூர்ணிமா தம்மிரெட்டி

*

1+1 (சிறுகதை)

ஐயாம் எ மேன்!
மை ஸ்பெர்ம் கௌண்ட் ஈஸ் குட். 
அண்ட், தட் ஈஸ் மை சின்! 
6:01 PM

உள்ளுக்குள் பொங்கிப் பெருகிக்கொண்டிருந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, மொபைல் கீபோர்டில் தனது முழு வலிமையும் பயன்படுத்தி இரண்டு கட்டைவிரல்களாலும் அழுத்தி, வாட்ஸப்பில் செய்தி அனுப்பினான். ஒரு கணம் பொறுத்திருந்து பார்த்தான். ஒற்றை டிக் குறி வந்தது. உடனே இரண்டாவது டிக். அது நீல நிறமாக மாறவில்லை. பெருமூச்சு விட்டு இன்னும் எதையோ தட்டச்சு செய்ய ஆரம்பித்தான். சொல்ல நினைத்ததை சொல்ல விடாமல் ஆட்டோ-கரெக்ட் தடுத்துக்கொண்டே இருந்தது. உள்ளே அடைத்து வைத்திருந்த கோபம் ‘ஃபக்’ என்ற வசையாக ஒலித்தது. தூக்கி வீசினான். அது சோபாவில் இரண்டு முறை புரண்டடித்துக் கொண்டு இரண்டு மெத்தைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டது.

சோபாவின் முன் இருந்த டீபாயில் கால்களை நீட்டி, அதன் மேலிருந்த மேக்புக்கை கால்களால் நகர்த்திவிட்டு கண்களை மூடினான்.

சற்று நேரத்தில் தொலைபேசி நோட்டிஃபிகேஷன் ஒலி. அசையாமல் அதே நிலையில் கைகளால் துழாவினான். உடலை வளைத்தாலொழிய அது கைக்கு எட்டவில்லை. அதை சைலண்ட் மோடில் வைக்கப் பார்த்தபொழுது லாக்ட் ஸ்க்ரீனில் சந்தியாவின் பெயர். திடீரென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். வந்த செய்தியை படிக்காமலே அவளுக்கு அனுப்பிய செய்திகளைப் படித்துப் பார்த்தான். ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன், அதில் விந்தணு பற்றி எதுவும் எழுதவில்லை என்பதை உறுதி செய்துகொண்டான்.

மாமா, எனக்கு உங்க ரெண்டு பேரபத்தியும் ரொம்ப கவலையா இருக்கு.
டோண்ட் டார்ச்சர் யுவர் பாடீஸ் ப்ளீஸ். 
6:09PM

ஃபோனை மார்பில் குப்புற கவிழ்த்துக் கொண்டான். எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு குடும்ப விழாவில், சந்தியா இதேபோல் தான் கேட்டாள், ‘குழந்தை இல்லைன்னா என்ன? தத்து எடுத்துக்க வேண்டியதது தான்!’ அவ்வளவுதான்! அதைக் கேட்ட அவள் தாய்க்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவன் பெற்றோர் கூட கண்களாலேயே அவளை அதட்டினர். ‘ஏன்? அவ புள்ளைங்கள தன் அக்காவுக்கு கொடுப்பாளாமா?’ கூட்டத்தில் சிலர் கிசுகிசுத்தனர். அதைக் கேட்டதும் அங்கிருந்து வெளியேறிய அவன் மனைவி, அவள் தங்கையிடம் அதன் பிறகு பேசவே இல்லை.

அவன் போனை எடுத்து மீண்டும் வாட்ஸ்அப்பைத் திறந்தான். விஜய்யிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பொறியியல் கல்லூரி விடுதியில் இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டார்கள். நான்கு வருடங்களுக்குப் பிறகு, படிப்பு முடிந்து திரும்புகையில் அந்த அறையை நெஞ்சிலேயே சுமந்து சென்றார்கள். தொலைதூர தொலைபேசி அழைப்புகளில் பேசுவது, விளக்குகள் அணைத்த பின் விடுதி அறை இருட்டில் போர்த்திக்கொண்டு பேசியபடியே தூங்கும் நாட்களைப் போல் உணர முடிந்ததில்லை. மெசஞ்சர்களில் பேசுவது கூட அறையில் இல்லாதபோது ஒருவருக்கொருவர் துண்டு காகிதத்தில் செய்தி பரிமாறிக்கொள்வது போல் தான் தோன்றியது. இவையெல்லாம் அவசரமாக ஏதாவது செய்தி பறிமாறிக் கொள்வதற்கு பயன்படுகிறதே ஒழிய, மனதார/மனம்விட்டு பேசுவதற்கு சாத்தியப்படவில்லை. 

வாட்ஸ்அப் ‘விஜய் டைப்பிங்’ என்று காட்டியது. மொபைல் போனில் தட்டச்சு செய்வதில் இருக்கும் சிரமத்தை தவிர்க்க மேக் புக்கை எடுத்தான். வேறு ஏதேனும் செய்தி வருமென்று எதிர்பார்த்தான். அவன் விஜய்க்கு அனுப்பிய செய்திகளை மீண்டும் படித்துவிட்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான். சற்றுமுன் இருந்த ஆவேசம் தணிந்தது. வாட்ஸ்அப்பில் எந்த மாற்றமும் இல்லை.  அவன் மேக்புக்கை மூடிவிட்டு வெளியே பார்த்தான்.

வெளியே மெதுவாக இருட்டிக்கொண்டிருந்தது. எழுந்து பால்கனியின் கண்ணாடிக் கதவைத் திறக்க முற்பட்டான். அது திறக்கவில்லை. பலமாக இழுத்தான். தான் ஆன்சைட்டில் இருந்த போது இந்த ​​வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள், தத்தி தத்தி நடக்க ஆரம்பித்த குழந்தையின் பாதுகாப்பு கருதி பால்கனி கதவைத் திறக்காமல் மூடியே வைத்திருந்தனர். பயன்படுத்தப் படாததால் கதவு இறுகிக் விட்டிருந்தது.

விளையாட்டு மைதானத்தில் பிரகாசமான விளக்கொளி. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாடியது போதுமென வலுக்கட்டாயமாக வீட்டிற்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தினர். விளையாட்டு மைதானத்திற்கு எதிரே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க சந்தை விலையைவிட அவர்கள் அதிகப் பணம் கொடுத்து இந்த ஃபாளாட்டை வாங்கினார்கள். திருமணமான ஒரு வருடத்திற்குப் பிறகு வாங்கிய ஃப்ளாட். தினமும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு முதலில்  வருவது அவன் தான். ஒன்றரை மணி நேரப் பயணக் களைப்போடு வீடு திரும்பும் அவளுக்கு சாப்பிட எதையாவது செய்து வைத்துவிட்டு, பின்னர் பால்கனியில் நின்றுகொண்டு, மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பான். 

அவள் வீடு திரும்பியதும் அவன் செய்து வைத்த பக்கோடாவையோ, சாண்ட்விச்சையோ மென்று கொண்டே “நமக்கு உன் சாயல்ல கொழந்த பொறந்தா அது கண்டிப்பா மாஸ்டர் செஃப் ஆயிடும்!” என்று சொல்வாள். “எதுவானாலும் பரவாயில்ல… பையன் பொறந்தா சச்சின்,  பொண்ணு பொறந்தா சசி அப்பிடின்னுதான் பேர் வெக்கணும்” என்று சொல்வான். இருவரின் அம்மாக்களும் எப்படியாவது அந்தப் பெயர்களை ‘சாய் வெங்கட சச்சின்’ ஆகதான் மாற்றப் போகிறார்கள் என்று வம்புக்கிழுப்பாள். “அவங்க எப்படி கூப்ட்டாலும் பரவாயில்லை, அத மட்டும் ரிஜிஸ்டரில் எழுத விடமாட்டேன்! குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்ததுக்கப்பறம் சச்சின் இந்தியாவுல ஆடற எல்லா மேட்சுக்கும் கூட்டிட்டு போவேன்” என்று அவன் சொல்லும்போது கண்களில் மின்னல் ஒளி தெறிக்கும். உலகக் கோப்பைக்குப் பிறகு சச்சின் விளையாடமாட்டார் என்பதை அவள் நினைவூட்டிக் கொண்டே இருப்பாள். “ஆமாம் இல்ல? வா வா… நமக்கு நேரமில்ல…” என்று அவளை அருகில் இழுத்து அணைத்துக் கொள்வான். “என்னப்பா இது பால்கனியில… யாராவது பாத்தா…” என்று விடுவித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே உள்ளே நடப்பாள்.

பிடித்திருக்கும் பேட்டின் உயரத்தில் பாதி கூட இல்லாத குழந்தைகளும் இப்போது அண்டர்-10 போட்டிகளில் விளையாடுகிறார்கள். புதிது புதிதாக இப்போட்டிகளுக்கு குழந்தைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தொலைபேசி ஒலித்தது. அம்மா. அழைப்பை எடுக்கவில்லை. 

விஜய்யிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி ஒளிர்ந்தது.

ஆர் யூ ஓகே? கேன் ஐ கால்?
7:23 PM

இப்பொழுது இயலாது. பக்கத்து அறையில் தான் இருக்கிறாள்.
7:23 PM

டேய் கிரி… இஷ்யூவ இன்னும் காம்பிளிகேட் பண்ணிக்காத.
டாக்டர் கிட்ட பேசி கொஞ்ச நாள் ப்ரேக் எடுத்துக்கோங்க.
7:24 PM 

ஒத்துக்கமாட்டா டா
7:24 PM 

இல்லன்னா, திரும்பவும் அவ வேலைக்கு போனா எப்படி இருக்கும்? மைண்ட் ஆக்குப்பைடா இருக்கும் இல்ல?
7:26 PM 

இல்ல டா… வேலைக்கு போனதுனாலதான் இதெல்லாம் அப்பிடின்னு சொல்றா… ஷீ ஈஸ்…
7:26 PM

வளையல் சத்தமும், செல்போன் சத்தமும் நெருங்கி வரவும் அவன் விரல்கள் சட்டென ஹோம் ஸ்க்ரீனை அழுத்தின. தாண்டக் கூடாத ஒரு கோடு இருப்பது போல் அவள் தூரத்திலிருந்தே தொலைபேசியை நீட்டினாள். அவனே பால்கனியிலிருந்து வாசற்படிக்கு வந்தான். அவள் தொலைப்பேசி திரை ‘அத்தை காலிங்’ என்று காட்டியது.

“ஆ, அம்மா, சொல்லு.”

“அம்மா தான்டா… என் போன கூட எடுக்க மாட்டியாடா?!”

“ஃபோன் சைலெண்ட்ல இருக்கு. வேலையா இருக்கேன்” சலிப்பை வெளிக்காட்டாமல் சாக்குப்போக்கு சொல்வது எவ்வளவு கடினம். எதற்காக இதெல்லாம்?

“எப்போப் பாரு பிஸி பிஸி… உங்க வாழ்க்க நல்லா இருக்கணும்ன்னு நாங்க படாத பாடு படணும்…. உங்களுக்கு அதப்பத்தி எந்த கவலையும் இல்ல?”

அவன் பால்கனியில் இருந்து வீட்டிற்குள் வந்தான். அவள் மெதுவாக நடந்து சாப்பாட்டு மேசையை அடைந்தாள். மேஜையில் இருந்த பிரசாதப் பையிலிருந்து தேங்காய் மூடிகளை எடுத்து வெளியே வைத்தாள்.

“ஸ்பீக்கர்ல போடு. உங்க ரெண்டு பேரோடவும் பேசணும்.”

“எதப் பத்தி?”

அவன் மெதுவாக நடந்து சென்று சாப்பாட்டு மேசையை அடைந்தான். ஒரு நாற்காலியை இழுத்து உட்கார்ந்து கொண்டு ஸ்பீக்கரை ஆன் செய்து போனை மேசையில் வைத்தான்.

“நானும் உங்க அப்பாவும் முந்தாநேத்து ஒரு பாபாவ பாத்தோம்னு சொன்னேன் இல்ல!” அவன் தோள்கள் சரிந்தன. கையை முகத்தில் வைத்துக் கொண்டான். அவள் தலையை உயர்த்தாமல் தேங்காய் மூடியிலிருந்து துண்டு துண்டாக தேங்காயை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தாள்.

“உங்க ஜாதகத்தைக் காமிச்சோம். தோஷம் எதுவும் இல்லயாம். கடவுள் உங்கள இவ்ளோ சோதிக்கிறாருன்னா அவரு உங்களுக்கு பெரிய வரமே தரப்போறாருன்னு சொன்னாரு!”

அவள் தேங்காயை கத்தியால் சிறு துண்டுகளாக வெட்ட ஆரம்பித்தாள்.

“அவர் நாளைக்கு ஹைதராபாத்ல இருப்பாரு. நீங்க ரெண்டுபேரும் போயி அவரைப் பாக்கணும்”

“நாளைக்கா? திடுதிப்புன்னு நாளைக்குன்னா எப்படிமா? மத்தியானத்திலிருந்து சித்ராவுக்கு டெஸ்ட்ஸ் செஞ்சோம். காலையில கோவிலுக்கு போயி 108 சுத்து சுத்திட்டு வந்தோம். ரெண்டு பேருமே களைச்சிபோயிருக்கோம்மா…”

“நூத்தி எட்டு இல்லன்னா ஆயிரத்து பதினாறு சுத்துங்க! நான் போக சொல்லலையே… அது விசா வரம் கொடுக்குற கோயில். குழந்தைக்காக வேண்டிக்கிட்டு யாரும் அங்க போனதா நான் கேள்விப்படல. திரும்பவும் வெளிநாடு பறந்திடலாம்னு நெனச்சிட்டிருக்கீங்களா?”

தேங்காய் வெட்டிக்கொண்டிருந்த கத்தி சட்டென்று நின்றது. அந்தக் கோயிலுக்குப் போகச் சொன்னது சித்ராவின் அம்மா என்பது நினைவுக்கு வரவும் அவன் நாக்கைக் கடித்துகொண்டான். ஸ்பீக்கரை அணைத்தான்.

“சரி! எங்கன்னு சொல்லு!”

“சந்திராயங்குட்டா. அப்பாவ அட்ரஸ் அனுப்ப சொல்றேன். நீங்க அங்க அஞ்சு மணிக்கு போயிட்டா ஸ்பெஷல் தரிசனம் கெடைக்கும்னு செக்ரட்ரீ சொன்னாரு.”

“அஞ்சு மணிக்கா! ஒன்றரை மணி நேரம் ஆகும் இங்க இருந்து போறதுக்கு!” என்றான் தன் காலை அழுத்திக் கொண்டு. மறுமுனையில் பொறுமையற்ற மௌனம் நிலவியது.

சுதாரித்துக்கொண்டு “சரி! போறோம்!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

இதற்கிடையில், விஜய்யிடமிருந்து அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. சாரி டா! அர்ஜுனை சாக்கர் ட்ரெயினிங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் உன்னிடம் பிறகு பேசுகிறேன்.

அவன் இரண்டு ஃபோன்களையும் மேசையில் போட்டுவிட்டு கிச்சனுக்கு சென்றான். சட்னிக்குத் தாளிப்பு பொறிந்து கொண்டிருந்தது. கரண்டிக்கும் கிண்ணத்துக்கும் இடையிலான சண்டை போல் தோன்றியது. குழாயிலிருந்து நீர்த்துளிகள் அடைத்துகொண்ட சிங்க்கில் டப் டப் என்று சொட்டிக் கொண்டிருக்கின்றன.

அவள் ஒரு குச்சியால் சிங்க் வடிகாலில் குத்திக் கொண்டிருக்கிறாள். அவன் ஸ்டவ் அருகே சென்றான். அவள் குச்சியால் ஆங்காரமாய் குத்தினாள். தண்ணீர் இறங்கவில்லை. அவள் கையில் இருந்த குச்சியை சிங்க்கில் வீசி எறிந்துவிட்டு, சிங்க் அடியில் இருக்கும் குழாயை இழுக்க கீழே குனிந்தாள். அவன் வேகமாக ஒரே எட்டில் வந்து அவளைப் பிடித்து கொண்டு சென்று நாற்காலியில் உட்கார வைத்தான். அவள் கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் அப்படியே இருந்தாள். அவள் எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு அவன் கையிலிருந்து கரண்டியை பிடுங்கிக் கொண்டு, தேங்காய்த் துண்டுகளோடு தாளிப்பை மிக்ஸியில் கொட்டினாள்.

Emotional Pregnancy (சிறுகதைத் தொகுப்பு)

அவன் வந்து சோபாவில் அமர்ந்தான். அவன் கண்களை மூடிக்கொண்டு கைகளை தலை மேல் வைத்துக் கொண்டான்.

அரைக்கும் மிக்ஸியின் சத்தம் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அவனுக்கு தலை கனப்பது போல் தோன்றியது. கண்கள் எரிந்தன. அவள் மிக்ஸியை அணைத்து மீண்டும் இயக்கினாள். கொஞ்சம் தண்ணீர் சேர்த்திருப்பாள் போலிருக்கிறது. மிக்ஸியின் கரடுமுரடு சத்தம் கொஞ்சம் தணிந்தது.

தன்னுள் நிலைகொள்ளாது சுழலும் எண்ணங்களில் கூட யாராவது கொஞ்சம் தண்ணீர் ஊற்றினால் தன் தலையில் இவ்வளவு இரைச்சலாக இருக்காதல்லவா என்று நினைத்தான்.

“கிரி, கிரீ!” என்ற அழைப்பு! மென்மையான கை அவன் தலையைத் தடவுவது போன்ற உணர்வு. குக்கர் விசில் தூரத்தில் ஒலித்தது.

அவனுக்கு விழிப்பு வந்தது. கண்களைத் திறந்தான். எழுந்து உட்கார்ந்து கொண்டான். தலை மீது கை வைக்கும் அளவுக்கு அருகில் இல்லை அவள்.

அவள் டீபாய்க்கு மறுபுறத்திலேயே நின்று கொண்டு தன் விரல்களை வாயருகே கொண்டு சென்று சாப்பிட வா என்பது போல சைகை செய்தாள். அவன் தலையை உயர்த்தாமலே கண்களை ஏறிட்டு அவளைப் பார்த்தான். அவள் அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு கண்களைத் திருப்பிக் கொண்டாள்.

முகத்தில் தெளித்துக் கொண்ட தண்ணீர் போதவில்லை என்று தோன்றியது. போய் ஷவரின் அடியில் நின்றான். களைப்பாகி இருந்த உடம்பிற்கு வெந்நீர் இதமாய் இருந்தது. 

அவன் டைனிங் டேபிளை நெருங்கியதும் குக்கர் மீண்டும் ஸ்டவ் மீது ஏற்றப்பட்டது.

“நாளைக்கு எப்போ கிளம்பணும்?” அவள் சற்று மெதுவாகவே கேட்டாள்.

“அஞ்சு மணிக்கெல்லாம் அங்க இருக்கணும்னா இங்கிருந்து நாலு மணிக்கு கிளம்பணும்.”

“டயர்டா இருக்கா?” என்று கேட்டு அவன் கையைப் பற்றினாள். கை நிறைய சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள். அவற்றை அணிந்தால் பலன் கிடைக்கும் என்று சொன்னார்கள். திடீரென்று அவனுக்கு அதைச் சொன்னது யார் என்று நினைவுக்கு வரவில்லை. அந்த சிவப்பு நிறத்தைத் தவிர்க்க அவன் அவளைப் பார்த்தான்.

வீங்கிய முகம். சிவப்பேறிய கண்களின் ஓரங்கள். கலைந்தக் கூந்தல்.

“உனக்கு உடம்பு முடியலைன்னா போகவேணாம். அம்மாவ சமாளிச்சுடலாம்.”

“நீ மொதல்ல அவங்க ஃபோன் பண்ணா எடு! நான் தான் ஃபோன எடுக்க விடம பண்றேன் அப்பிடீங்கறமாதிரி பேசறாங்க…”

“…”

அவள் எழுந்து, பாத்திரங்களை சிங்க்கில் போட்டுவிட்டு, மேஜையில் இருந்த அனைத்தையும் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவன் கை காய்ந்து போகும் வரை அங்கேயே அமர்ந்திருந்தான்.

தொலைபேசி தொடர்ந்து அதிர்ந்து கொண்டே இருந்தது. அவன் கையைக் கழுவிக் கொண்டு தொலைபேசியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். அலுவலக மெஸஞ்சர் குழு வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு காம்பஸ் நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுத்தப் பையனுக்கு அன்று மாலை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கையிலேந்திய தந்தையின்  புகைப்படத்துடன், “இட்ஸ் எ பாய் ஃபர் வினித். போத் மதர் அண்ட் பேபீ ஆர் டூயிங்க் ஃபைன்” என்று மேனேஜர் என்ற ரீதியில் டீம் லூப் செய்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை அனுப்பினான்.  நிறுவனத்தின் சார்பாக வழங்கும் கிஃப்ட் வவுச்சர்களை வினித்துக்கு அனுப்பினான். ‘வாழ்த்துக்கள்! நாளைக்குப் பேசலாம்’ என்று செய்தி அனுப்பிவிட்டு, ஃபோனில் அழைத்தான். “கொழந்தைய தொடறதுக்கே நடுங்கிடிச்சு. எவ்ளோ டெலிகேட்டா இருக்கான்!!” அப்பாவான அந்த இளைஞனின் குரலில் மகிழ்ச்சியும், குதூகலமும் கலந்திருந்தன. “வேலைய பத்தி யோசிக்காதே. டேக் யுவர் ஓன் டைம். கங்ராட்ஸ் அகைன்!” என்று வைத்துவிட்டான்.

பலருக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஒன்று+ஒன்று இரண்டு எனக் கூட்டல் கணக்கு போடுவது போல எளிமையானதாக இருக்கிறது. ஏதோ காரணத்தால் இவர்களுக்கு அது மிகவும் சிக்கலான சமன்பாடாக(complex equation) மாறிவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு அலுவலக காண்டீனில் பார்த்த வீ.பி.யின் நினைவு வந்தது. அவனும் அவன் ஈகோ ஆட்டிட்யூடும். ‘ஹெய், கிரி! ப்ளானிங் எனீ கிட்ஸ் யெட்?’ ‘யா, விய் ஆர் ட்ரையிங்…’ ‘ஈஸ் இட்! எங்களுக்கு முதல் முறையே முடிஞ்சுருச்சி. விய் டிட் இட் இன் ஒன் ஷாட் யூ நோ?’  அவர் என்னவோ திட்டமிட்டு அதைச் செய்தது போலவும், தான் ஒரு படி மேலான ஆண்மையுள்ள ஆண் என்பது  போலவும் சொன்னார். எனக்கு உடம்பு பற்றி எரிந்தது. ‘யூ ப்ளடீ மொரான்… இட்ஸ் ஜஸ்ட் டைமிங். இட் ஹாஸ் நதிங் டு டூ வித் யூ, யூ ப்ரீக்.’ என கத்தவேண்டும் போலிருந்தது. கோபத்தை அடக்கிக்கொண்டு, தோள்களைக் குலுக்கி, தட்டை எடுத்துக்கொண்டு, வேறொரு மேசைக்குச் சென்றான். சித்ரா சொல்வதில்லையே தவிர அவளுக்கும் இதுபோன்ற குத்தலான பேச்சுக்கள் அன்றாடம் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது! வேலைக்கு சென்றபொழுது ஒரு மாதிரியும், வேலையை விட்டுவிட்டப் பிறகு வேறு மாதிரியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

மியூட்டில் இருக்கும் டிவியில் இரவு 9 மணி செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. படுக்கையறையிலிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. சிறிய அசைவு இருந்தாலும் அவள் கண்ணாடி வளையல் சத்தம் செய்து தெரியப்படுத்திவிடும். வளையல்கள் – சில விவரங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. அவற்றை கையில் போட்டுக்கொண்டு ஏழு செவ்வாய்க்கிழமைகள் கோவிலில் அன்னதானம் செய்ய வேண்டும். சொன்னது யார்? யாரோ! 

ஒழுகும் கிச்சன் குழாயிலிருந்து தண்ணீர் சொட்டும் சத்தம் அவன் தலையில் சுத்தியால் அடிப்பது போல இருந்தது. அவன் எழுந்து சிங்க்கின் அடியில் இருந்த ப்ளாஸ்டிக் குழாயைக் கழற்றிச் சுத்தம் செய்யச் சென்றான். தொட்டியில் தேங்கி நின்ற தண்ணீர் காற்றுக் குமிழ்களை எழுப்பிக்கொண்டு வெளியேறியது. முழு பலத்தோடு குழாயை மூட முயன்றான். ஆனாலும் துளிகள் கொட்டிக் கொண்டே இருந்தன.

மீண்டும் டிவி முன் வந்து அமர்ந்தான். கிரிக்கெட் ஹைலைட்ஸ். தொலைபேசியை எடுத்து, பிளம்பரை அழைக்கவேண்டும் என ‘டு டூ’ பட்டியலில் குறித்துக் கொண்டான். மறுநாள் காலையில் பேட்மிண்டன் விளையாடச் செல்ல வேண்டும் என்று அது நினைவூட்டியது. இக்னோர் என அழுத்தினான். அந்தச் செயலியிலிருந்து வெளியேறப் போகும் போது, ​​தவறுதலாக விரல் பட்டு பகுப்பாய்வு/analytics இணைப்பைக் கிளிக் செய்துவிட்டான். செய்யவேண்டியவற்றில் மருத்துவமனை சம்பந்தப்பட்டவை – 73%. அலுவலகம் சார்ந்து முடிந்தவை – 89%. உடற்பயிற்சி சார்ந்தவை – 13%. பார்க்கவேண்டிய திரைப்படப் பட்டியலில் பார்த்து முடித்தவை – 4% எனத் திரை பகுத்துக் காட்டியது. 

போகவேண்டிய கோயில்கள், குளங்கள், பார்க்கவேண்டிய பாபாக்கள், சாமியார்களை இன்னும் பட்டியலில் குறிக்கவில்லை. அவற்றுக்கு ஒதுக்கிய நேரமும் கொஞ்ச நஞ்சமில்லை. ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை. மருத்துவ அறிக்கைகளில் பிள்ளை பிறக்காது என்று சொல்லுமளவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘ஒவ்வொரு சஷ்டி நாள் அன்னைக்கும் மஞ்ச கலர் துணி உடுத்தி கோவில்ல இருக்கிற அரசமரத்த சுத்துனா உங்களுக்கு கண்டிப்பா ஒரு வாரிசு பொறக்கும்!’ என்றார் பூசாரி. ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிரி, லெட்ஸ் ட்ரை திஸ் பிரசீஜர் அவுட். பீ ஹோப்ஃபுல். லெட்ஸ் கீப் ட்ரையிங்!’ என்கிறார் மருத்துவர். சற்று ரகசியமாக முயற்சித்த செயற்கை கருவூட்டல் முறையும் வெற்றிபெறவில்லை. செயற்கைக் கருத்தரித்தலின் பெரும்செலவை பற்றிக் கவலைப்படாவிட்டாலும், வீட்டில் பெரியவர்களின் மனத் தடைகள்! என்னவோ அது செய்யக்கூடாத ஒரு செயல்போல பாவிக்கிறார்கள். 

இருபது ஓவர்களோ, ஐந்து நாட்களோ, குறைந்தது ஆடவேண்டிய ஓவர்கள் மிச்சமில்லாமல் போனால்தான் தோல்வியை உறுதிப்படுத்த முடியும். அது மனச்சோர்வை ஏற்படுத்துமா, மறத்துப்போகச் செய்யுமா என்று தெரியவரும்.  நம்பிக்கையும், விரக்தியின் உச்சமுமாகத் தொடரும் இந்த ஊசலாட்டம் இன்னும் எத்தனை நாளென்று புரியவில்லை.

மியூட் செய்த தொலைக்காட்சியில் கூட, விவாதத்தில் எல்லோரும் உச்சக்கட்டக் குரலில் கத்துவது தெரிகிறது. சிறிது நேரம் ட்விட்டரில் உலாவினான். தொழில்நுட்பம், வணிகம், விளையாட்டு, திரைப்படங்கள், ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள் என கலந்து கட்டிப் படித்தான். “யூ ஹேவ் எ மெமரீ” என்று ஃபேஸ்புக், கவனத்தை ஈர்க்க முயன்று கொண்டிருந்தது. அதைத் திறந்து ​​நான்கு வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் ஸ்கை டைவிங் செய்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தைப் பார்த்தான். அவள் ஐரோப்பாவில் இருந்தபோது அவன் அமெரிக்காவிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றான். எங்கே விழுந்து விடுவேனோ என்ற பயத்துடன் சங்கடமாக சிரித்துக்கொண்டு அவனும், மன உறுதியோடு முகமெல்லாம் சிரிப்பாக கட்டைவிரலை உயர்த்திய அவளும். அவள் முகநூல் ப்ரஃபைலை சொடுக்கினான். மூன்று வருடங்களாக எந்தப் பதிவும் இல்லை. ‘என்ன ஆயிட்ட? எங்கே இருக்கே?’ போன்ற கேள்விகள் கேட்டு பதிவிட்டவர்களுக்கு  எந்த பதிலும் இல்லை.

ஃபேஸ்புக்கிலும் அதே அரசியல் மீம்ஸ்கள், புதிதாய் வெளியான தெலுங்கு திரைப்படங்கள் பற்றிய முடிவில்லாத விவாதங்கள், வலதுசாரி-இடதுசாரி சண்டைகள், தங்கள் குழந்தைகளை கோப்பைகள் போல் தூக்கிப் பிடித்து முத்தமிடும் புகைப்படங்கள், குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று புகார் கூறும் பெற்றோரின் பதிவுகளைப் பார்த்தான்.

ஒன்பது மணி செய்தித் தொகுப்பையே பதினொரு மணிக்கும்படித்துக் கொண்டிருக்கிறார்கள். கண்கள் எரிந்தன. டிவியை அணைத்துவிட்டு கண்களை கசக்கிக் கொண்டு படுக்கையறைக்கு சென்றான். அவன் பக்கத்தில் இருந்த படுக்கையறை விளக்கைத் தவிர, அறை இருட்டாக இருந்தது. சத்தம் எழுப்பாமல் முடிந்தவரை மெதுவாக படுக்கையில் சாய்ந்தான். அவள் வளையல்கள் மெல்ல குளுங்கின.

போர்வைக்குள்ளிருந்து வந்த வளையல் சத்தத்திலிருந்து அவள் நாடாவை அவிழ்ப்பதை உணர்ந்தான். இருட்டில், அவள் கால்கள் ஒன்றாக வைத்து பைஜாமாவை கீழே இழுக்கிறாள் என்று தெரிந்தது. அவன் விளக்கை அணைத்துவிட்டு வேறு பக்கம் புரண்டு படுத்தான்.

அறையில் கடிகாரம் மட்டுமே இருப்பது போல் தோன்றியது. அவள் மெதுவாக அவன் தோளில் கை வைத்தாள்.

“ப்ளீஸ் கிரி! பீர்யட் சைக்கிள் முடிய இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு!”

கண்ணீரில் நனைந்த அவள் வார்த்தைகள் அவனை நிலைகுலையச் செய்தன. அவள் பக்கம் திரும்பினான்.

“சாரி. நான் கோபப்பட்டிருக்கக் கூடாது.”

அவன் தலைக்கோத அவள் கண்ணீர் பெருகியது. அவன் அருகில் நகர்ந்தான். அவள் மேல் கால் போட்டு அணைத்துக் கொண்டான். அவளும் அவனை அணைத்துகொண்டு பின்னுக்கு சாய்ந்து கொண்டாள். அவள் தலையைக் கைகளால் வருடிக்கொண்டே குனிந்து முத்தமிட்டான். அவள் தோளில் தலை புதைத்துக் கொண்டான். அவள் புரிந்துகொண்டாள். அவன் முதுகை மெல்ல வருடினாள். 

அவினேனி பாஸ்கர்

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் தோள்களை உயர்த்தினாள், அவனை நகர்த்த!

“இன்னும் ரெண்டு நாள் தான், கிரி! ப்ளீஸ்!”

“என்னால முடியல!” அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்டாள். அவன் அவள் மேலிருந்தே படுக்கையைவிட்டு இறங்கினான்.

“இந்த மாதிரி 1, 2, 3ன்னு எண்ணிகிட்டு… என்னால முடியாது. ஐ கென் மேக் லவ், ஆனா சடங்கு மாதிரி, எக்சைஸ் பண்ற மாதிரி இல்ல…” சத்தமாக சொல்லக்கூடாது என்று எண்ணிக்கொண்டே சொல்லிவிட்டான்.

லைட் ஆன் செய்தான். அவள் போர்வையை மேலே இழுத்துக் கொண்டாள்.

“உனக்கு என்ன? உன்னோட டெஸ்ட் ரிஸல்ட்ஸ் ஃபெயில் ஆயிருந்தா தெரிஞ்சிருக்கும்.”

அவன் ஒரே எட்டில் அவளருகில் வந்து, அவள் கன்னத்தை அழுத்தி, “ஸோ? இது என்னோட டெஸ்ட், உன்னோட டெஸ்ட் பத்தியா? சொல்லு?!” சத்தமாக கத்தினான். 

அவள் குரல் கம்மியது. அந்த வலி அவனை தள்ளிப் போகச் செய்தது. அவள் போர்வைக்குள் ஆடையை சரி செய்து கொண்டாள். தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டாள். போர்வையை ஒதுக்கித் தள்ளினாள்.

“இங்க பார், தினமும்… ஐ கான்ட் கோ த்ரூ திஸ் ஷிட். இந்த டெட்லைன் டார்ச்சர்ஸ் என்னால சகிச்சிக்க முடியல. ஐ நீட் எ ப்ரேக்!”

“அத பத்தி உங்க அம்மாகிட்ட கேளு.” அவள் படுக்கையில் இருந்து எழுந்தாள்.

“எங்க அம்மாவ உள்ள இழுக்காத!”

அவனைக் கடந்து சென்று அலமாரியை நோக்கி வேகமாய் நடந்தாள். மூலையில் பூட்டியிருந்த கதவைத் திறந்து, “ஏன் உன் அம்மாவ இழுக்ககூடாது?” என்று உள்ளே இருந்த பொம்மைகள் ஒவ்வொன்றாக  எடுத்து வெளியே எறிந்தாள்.

“எங்க அம்மாவுக்கு பேரகுழந்தைங்க வேணுங்குற ஏக்கம்… அவ்ளோதான்! ஆனா உங்க வீட்ல ஒரு படி மேல போயி கால் கொலுசும், கை காப்பும் செஞ்சு வெக்கலயா?”

“உங்க ஆளுங்க, எங்க ஆளுங்க… எல்லோரும் வந்து என் தலையில் உட்காரட்டும்! என் வயித்துல தான் ஒரு பூச்சு புழு தங்க மாட்டேங்குது… எல்லோரும் சேர்ந்து என்னை குத்திக் குத்திக் கொன்னுடுங்க…” என்று தலையை சுவரில் மோதிக் கொண்டாள்.

வேகமாய் பொம்மைகளை தாண்டி அவளை நோக்கி நடந்தான்.

“சித்ரா, என்ன பண்ற? பைத்தியம் மாதிரி?” அவளை பிடித்துக் கொண்டான்.

“எனக்கு சாவும் வரமாட்டேங்குதே…” அவள் விடுவித்துக் கொண்டு, கைகளால் நெற்றியில் பலமாக அறைந்து கொண்டு, சத்தமாக அழுதாள்.

“ஷட்டப்! ஜஸ்ட் ஷட்டப்!” என்று அவள் தோள்களை பலமாக உலுக்கி, பாதி திறந்திருந்த கதவின் மீது அவளைத் தள்ளினான். “நானே கொன்னுறுவேன்! இன்னொரு வாட்டி அந்த மாதிரி சொன்னேன்னா!” கதவு மெதுவாக மூடிக்கொண்டது.

“எனக்கு கொழந்தயெல்லாம் எதும் வேணாம்… நீ வேணும்.”

அவள் அப்படியே சரிந்து விழுந்தாள்.

“எனக்கு வேணும் கிரி! எனக்கு ஏன் கொழந்த பிறக்கல? நான் என்ன பாவம் பண்ணேன் கிரி?”

அவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் தோள்களைப் பற்றினான்.

“காட் ப்ராமிஸ்! இந்த மாதிரி நடக்கும்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா… நீ எங்க போனா அங்க நான் உன் கூடவே வந்திருப்பேன்… என் வேல… என் கரியர்… நான்…” அவள் தேம்பி அழுதுகொண்டே சொன்ன வார்த்தைகளை கோர்த்துக்கொண்டான். புரிந்தது போல தலையை ஆட்டினான்.

அவள் கண்களைப் பார்த்து, “விய் டோண்ட் டிசர்வ் திஸ்! நாட் அட் ஆல்!” என்றான். 

“என்னால தான் உனக்கும் இந்த கஷ்டம்!” அவள் வாயை கையால் மூடினான். முகத்தில் விழுந்த அவள் தலைமுடியை சரிசெய்தான்.

“யாராலயும் இல்ல… இது நம்ம பிரச்சனை. இது உன்னோடதோ, என்னோடதோ இல்ல! புரியுதா? பிரச்சனை என்கிட்ட இருந்தா?” அவள் தலைமுடியை சரிசெய்து கொண்டே இருந்தான்.

“நான் அம்மா ஆக முடியாதா கிரி? எப்போவும் முடியாதா?” அவள் பிடியில் அவன் சட்டை கசங்கியது.

“விய் கீப் ட்ரையிங்… சரியா? ஆனால் அதுக்காக நாம இப்படி அழ வேணாம். உங்க ஆளுங்க, எங்க ஆளுங்களுக்காக மட்டுமே இல்ல… வேறு யாருக்காகவும் வேணாம். விய் டூ இட் ஆன் அவர் டர்ம்ஸ். நமக்கு புடிச்சத செய்வோம்…. ஏன்னா எனக்கு நீ முக்கியம். நாம முக்கியம்!” அவன் அவளை இழுத்து இறுக்க அணைத்துக் கொண்டு அலமாரி கதவில் சாய்ந்து சரிந்தான்.

பழைய பொம்மை ஒன்று, காலுக்கடியில் பேட்டரியின் கடைசி சொட்டு மின்சாரத்தில் லேசாக சிணுங்கியது. அதை அவன் தன் காலால் தூரத் தள்ளினான்.

***

மூலம்: https://eemaata.com/em/issues/201807/16473.html (ஜூலை 2018ல் வெளியான கதை)


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *