சொல்லப்படாத சொல்லுதல் – ரம்யா
”தமிழ்க்கவிதை கவித்துவ யதார்த்தத்தின் புதிய தளங்களையும் வெளிச்சங்களையும் அடைய முடியாததாக இருந்து வருகிறது. எனினும் நம்பிக்கையின் வெளிச்சங்களையும் நாம் பார்க்கவே செய்கிறோம். நவீனத் தமிழ்க்கவிதையில் தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் சார்ந்த பேச்சுக்கள் கவிதையின் சில புதிய சாத்தியங்களை நமக்குக் காட்டக்கூடும். மேலும் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் எழுதப்படும் தமிழ்க்கவிதைகள் நமக்கு வேறு பரிமாணங்களை வருங்காலத்தில் உருவாக்கலாம். தமிழ் யதார்த்தம் இன்னும் தமிழ்க்கவிதையில் சொல்லப்படாத சொல்லுதலுக்காக காத்திருப்பதாகத் தெரிகிறது.”
-மனுஷ்யபுத்திரன் (செப்டம்பர் 15, 2000)
எப்போதும் வாழும் கோடை (கட்டுரைத் தொகுப்பு)
கவிதையைப் பற்றிய அசலான அவதானங்கள் நிறைந்ததும், தன் முன்னோடிக் கவிஞர்கள் பற்றிய விமர்சனத்தையும் எப்போதும் வாழும் கோடை நூலில் எழுதிய மனுஷ்யபுத்திரன் தமிழ் இலக்கியச் சூழலை நோக்கி இத்தகைய ஒரு எதிர்பார்ப்பை 21-ஆம் நூற்றாண்டில் முன்வைக்கிறார். தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் ஆகிய மூன்றும் புதிய வீச்சுடன் எழுந்து வந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அதை நோக்கி புதிய சாத்தியங்கள், புதிய பேசுபொருட்கள், புதிய மொழிக்கான கனவை முன்வைப்பதாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் பெங்களூர் புக் பிரம்மா நிகழ்வில் கவிஞர் சுகுமாரன் சாலிகதா கோத்ர கவிதை ஒன்றை வாசித்தார். கோத்ர கவிதை என்பது கேரளத்தின் பழங்குடிகளிலிருந்து எழுந்து வந்த புதிய கவிதைக் குரல். தன்னறம் பதிப்பகம் வெளியீடாக நிர்மால்யா மொழிபெயர்ப்பில் கவிஞர் பி. ராமனின் முன்னுரையுடன் கேரள பழங்குடிக் கவிதைகள் வெளிவந்தது. அதில் தென்படும், புதிய மொழி, பேசுபொருட்களால் அந்தத் தொகுப்பு முக்கியமானது. ஒருபடி மேலாக சுகுமாரன் சாலிகதா அதை ஒலிப்பு முறைகளுடன் வாசித்த போது பி.ராமன் கோத்ர கவிதைகளிலிருந்து பெற விரும்பும் புதிய கூறுமுறைகள், புதிய மொழிக்கான தேடல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. சுகுமாரன் வாசித்த கவிதைக்கு முன்னும் பின்னுமான பறவையின் ஒலி அல்லது அதை பிரதியீடு செய்து காண்பிக்கும் மனிதனின் ஒலிப்பு அக்கவிதைக்கென ஒரு இருப்புவெளியை உருவாக்கியது. அங்கு காடும், அதன் ஒலிகளும், அதைச் சொல்லும் ஓர் பழங்குடி மனமும் இணைந்து கொள்கிறது. ஆனால் கோத்ர கவிதைகள் என்ற வரையறையை நீக்கிவிட்டு, அந்த இயக்கத்தைப் பற்றிய அறிமுகமில்லாமல் இருந்தால் ஒரு வாசகரால் அக்கவிதைகளை ஏற்றுக் கொள்ள இயலாது. மேலும் எளிதாக போலி செய்துவிடக்கூடிய தன்மைகளை அக்கவிதைகளில் கண்டு போலிகள் பல உருவான பின் அவை தனித்துவத்தை இழந்துவிடுகின்றன. ஒரு காலகட்டத்தில் எழுந்து வந்து குரலாக எஞ்சி மீண்டும் மையமான கவிதைச் சூழலுடன் ஒரு சிந்தனையாக, ஒரு கருவியாக மட்டும் இணைந்துவிடுகின்றன.
அதே அரங்கில் பெண் கவிதைகள் பற்றி சந்தியாவும், தலித் கவிதைகள் பற்றி ஜோசஃப்-ம் பேசினார்கள். ஒருவகையில் கவிதையில், இலக்கியத்தில் பழங்குடி, தலித், பெண் என்ற பாகுபாட்டின் தேவை ஒன்று இருப்பதால் இப்படியான தனி அரங்குகள் இலக்கிய அமர்வுகளில் இன்றும் வைக்கப்படுகிறது. போதிய பிரதிநிதித்துவம் இல்லை என இலக்கியவாதிகள் முடிவு செய்து அவற்றை இயக்கமாகவும் ஆக்குவதைப் பார்க்க முடிகிறது.
நான் கிளம்புகிறேன்
காலை தூங்கி எழுந்தேன்
பாட்டி
வானவில்லை வெட்டி
துண்டுகளாக்கி
அடுப்பில் வைத்துக்கொண்டிருக்கிறாள்
சித்தி
மேகங்களை
டொமெக்ஸ் லயனில்
முக்கிப் பிழிந்து
தரை துடைக்கிறாள்.
கொஞ்சம்கூட கவிதையே இல்லாத பெண்கள்
நான் கிளம்புகிறேன்
(மலையாளக் கவிதை: சந்தியா; மொழிபெயர்ப்பு: கதிரேசன்)
இந்தக் கவிதையில் பெண்ணின் புழங்கு தளமான வீட்டிலுள்ள பொருட்கள் கவித்துவமான படிமமாக உருவாகி வருவதைப் பார்ப்பது புத்துணர்ச்சியை அளித்தது. வானவில்லை வெட்டி துண்டுகளாக்கி அடுப்பில் வைக்கும் பெண் என்ற படிமம் உண்மையில் கவிதையில் புதியது. குறிப்பாக பெண்கவிதைகளில். பெண்குரல் என்பது பழங்குடிகளின் குரல் போல புதுமையானது இல்லை. மலையாளத்தில் பெண்ணுக்கான குரல் கமலாதாஸ், லலிதாம்பிகை அந்தர்ஜனம், சுகதகுமாரி ஆகிய எழுத்தாளர்கள் வழியாக தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. வெறுமே பெண்ணியக் கருத்துக்கள் கொண்ட கவிதைகளிலிருந்து இந்தவகையான படிமங்கள் உருவாகி வந்ததற்கான காலகட்டம் பெரியது. தமிழ்க் கவிதையில் தொண்ணூறுகளில் பெண்ணியம், உடல் அரசியல் சார்ந்த பேசுபொருட்கள் மெல்ல இயக்கமாக உருவாகி வந்தது. சுகிர்தராணி, குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்ரி, லீனா மணிமேகலை ஆகியோரின் கவிதைத் தொகுப்புகள் 2000-களில் வெளிவந்து கொண்டிருந்தன. தமிழ்க் கவிதைகளில் அதன் தேவையை, இடத்தை தனியாகப் பேசவேண்டியுள்ளது.
இதே காலகட்டத்தைச் சேர்ந்த பெருந்தேவியை பின்அமைப்பியல் சார்ந்த முதல் பெண்ணியக் குரல் என வகைப்படுத்தலாம். பெண்மைய பேசுபொருட்கள் வழி பெண்ணின் அகம், புறம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசிய கவிஞர்களின் நிரையை விடுதலைக்குமுந்தைய காலகட்டத்திலிருந்து பார்க்க முடிகிறது. விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் பூரணி முக்கியமான கவிஞர். அவருடைய நடை வசனத்தன்மையும், எளிமையும் நிறைந்தது. அன்றாட நிகழ்வுகள், வரலாற்றுச் சம்பவங்களால் உந்தப்பட்டு எழுதியவர்.
ஆண்மைய நோக்கில் எழுதிய புராணங்கள், இதிகாசங்கள், கதைகளை பெண் படிக்கும் போது ஏற்படும் ஒவ்வாமை, கேள்விகளை கவிதைகளில் பூரணி சாடி எழுதினார். அகலிகை, சீதையின் புலம்பல் போன்ற கவிதைகள் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்து மதத்தில் நிலவும் பொய்கள் சாத்திரங்களினால் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், உப்பு பெறாத ஆசாரசீலங்களால் தாழ்த்தப்பட்டவர்களை உயர்சாதி ஹிந்துக்கள் ஒதுக்கி வைத்தது பற்றிய ஒரு எதிர்க்குரல் என்றே பூரணியைச் சொல்லலாம். இந்தக் கவிதைகளில் மரபுக்கும் நவீனத்திற்கும் இடைப்பட்ட ஊசல் தென்படுகிறது. விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்துகளில் பொதுவாகத் தென்படும் அம்சம்.
கண்ணகி சிலை காணாமல் போனது, மதமாற்றத்தடைச் சட்டம் போன்ற அன்றாட நிகழ்வுகள்; தொலைக்காட்சி, தொழில் நுட்ப வரவினால் மனிதர்கள் சொந்தங்களை மறந்து அதில் மூழ்குவது போன்ற அக்காலகட்டத்தின் சிக்கல்கள்; கல்வி, வேலை, பொருளாதாரம், குழந்தை பெற்றுக் கொள்ள சுதந்திரம் என பெண்கள் அடைந்து கொண்டிருந்த முன்னேற்றம்; பெண்ணியம்; முதுமையின் வலிகள் போன்றவை பூரணியின் பேசுபொருட்கள். மையமாக புலம்பல்தன்மை கொண்ட கவிதைகள் என இவற்றை வகைப்படுத்தலாம்.
“சிரிக்காதீர்கள் சிறுசுகளே
அனுபவஸ்வரங்கள் மனதில்
அழுந்தப்பதிந்த பிறகு
நீங்களும் இதே ராகம், தானம், பல்லவியைத்தான்
பாடப் போகிறீர்கள்”
-பூரணி
இரா. மீனாட்சி எழுத்து இதழ் புதுக்கவிதையை அறிமுகம் செய்து ஓர் இயக்கமாக உருவாக்கியபோது எழுந்து வந்த தொடக்ககால நவீனக் கவிஞர்களில் ஒருவராக இடம்பெற்றவர்.
“விதைத்த விதை ஊறு முன்னே
எறும்பிழுத்தது
முளைத்த முளை விரியுமுன்னே
புழு துளைத்தது
இலை படர்ந்து ஏறுமுன்னே
நத்தை ஊர்ந்தது
கதிர் எழுந்து குனியுமுன்னே
கிளி அழித்தது
விசித்த கையில் விரல்கள் தேங்க
பசித்த உழத்தி
பசுங்கிளையில்
முதுகு வைத்தேன்
வயிறு இல்லை
…”
எழுத்து கவிஞர்களின் பாணியையும் அது சார்ந்த தத்துவார்த்தெ தேடலும் ஆழமும் கொண்ட கவிதைகள் இரா. மீனாட்சியினுடையவை.
கவிஞர் சுகந்தி சுப்ரமணியம் பிறழ்வு நிலையில் கவிதையை எழுதியவராக அறியப்படுகிறார்.
ஒரு கவிதை முழுக்க ஒரே விஷயம்
எத்தனை வீர சாகசம் பெண்ணே
முதல் வரியில் வந்தது
குழந்தை சிரிப்பு மனதில்.
இரண்டாவதில் தண்ணீர் பிடி சண்டைகள்.
மூன்றாம் வரியில் குளிரில் விறைத்து
செத்த லட்சுமி கிழவி
நான்காவதில் கேஸ் தீர்ந்த அலுப்பில்
ஸ்டவ்வின் உதவியான இம்சைகள்
ஐந்தாம் வரியில்
ஓசியில் டிவி சினிமாவுக்கு
அலைந்து கதவு தட்டும் குழந்தைகள்
ஆறாவதாய் சின்னம்மாவின்
மெனோபாஸ் கஷ்ட அழுகைகள்
ஏழாவது வரியில்.
இன்னும் சமையல் ஆகவில்லை.
இன்னொரு கடைசி வரியாய்
கவிதையை முடிக்க ஒரு வரி
சொல்லேன் பெண்ணே!
-சுகந்தி சுப்ரமணியன்
கவிஞர்கள் பிறழ்வுடன் எழுதுவது தமிழிலக்கியத்தில் புதிதல்ல. ஆத்மாநாம், கோபிகிருஷ்ணன் போன்ற கவிஞர்களின் வரிசை ஒன்று தமிழுக்கு உண்டு. இந்தப் பிறழ்வின் வழியாக சுகந்தி பெண்ணின் பிரச்சனைகளைப் பேசினார். பெரும்பாலும் நான்கு சுவற்றுக்குள் உள்ள பிரச்சனைகள்.
உமாமகேஸ்வரியின் கவிதைகள் நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டு கற்பனையால் வானைத் தொடும் கவிதைகள் எனலாம்.
மங்கிய இருள் போர்த்த
பாழ் மண்டபமொன்றில்
ஒரு விண்மீன் ஒளிமுள்
சூரிய இரைச்சல்களின்
மத்தியில்
துடிதுடித்து இருக்கிறது
நினைவின் மறுப்பில்
மிக மௌனமாக
மிகத் திண்மையாக
மிக ரகசியமாக.
-உமாமகேஸ்வரி
தொண்ணூறுகளுக்குப் பின்னான கவிஞர்களைப் பற்றி பேசும்போது “பின் நவீனத்துவம்” என்ற கருத்துரு பற்றி சொல்வது இன்றியமையாததாகிறது. இதுவே தலித்தியம், பெண்ணியம், உடலரசியல் சார்ந்த கருத்துவாதங்கள் தமிழில் எழுந்து வரக் காரணமாக அமைந்தது. ஆனால் அவற்றிலிருந்து கவித்துவ தளத்தை நோக்கி விரிந்த ஒரு தொடர்ச்சியான வரிசை உருவாகிவரவில்லை. ஒரு காலகட்டத்தின் கவிதைகளாக மட்டுமே அவை இன்று நின்றுவிட்டன.
இந்த வரிசையில் பெருந்தேவி தமிழில் பின்அமைப்பியலின் பெண்ணியக் குரலைப் பேசிய முன்னோடி என வகைப்படுத்தலாம். பெருந்தேவியின் கவிதைகள் அறிவார்ந்த பெண்ணின் குரலாக முன்வைக்கப்பட வேண்டியவை. தமிழ்ச்சூழலில் தொண்ணூறுகளில் படித்த பெண்கள் வேலைக்குச் சென்று பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வது என்பது இலகுவாகி, இருபத்தியோராம் நூற்றாண்டில் அறிவார்ந்த தளங்களில் பெண்களின் புழக்கம் அதிகமான காலகட்டம். இக்காலகட்டத்தின் ஒரு குரலாக பெருந்தேவியைச் சொல்லலாம். புலம்பல்கள், இன்னல்கள் ஆகியவற்றைத் தாண்டி, பெண்ணியம், உடலரசியல் ஆகிய போராட்ட குரல்களைக் கடந்து, பாலின சமத்துவத்தை வேட்டும் ஒரு அறிவார்ந்த குரல் எனலாம். இந்த எதிர்க்குரல் புலம்பல்களாகவோ, புழுங்குவதாகவோ, கூச்சல்களாகவோ, உணர்வெழுச்சியாகவோ இல்லாமல் அறிவார்ந்து இருந்ததே அக்குரலின் சிறப்பு எனலாம். இலக்கியச்சூழலில் பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் “ன்” விகுதிக்கு எதிராக “ள்” விகுதியை அல்ல, மாறாக “ர்” விகுதியைக் கோருபவராக பெருந்தேவி அறியப்படுகிறார்.
சுரேஷ்குமார இந்திரஜித், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர் ஆகியோரின் இலக்கியப் பாதையை பெருந்தேவியுடன் ஒப்பிட முடிகிறது. தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் எடுத்துக் கொண்ட சட்டகத்தின் வழி பல்வேறு சாத்தியங்களை தொடர்ச்சியாக முயன்று பார்த்தவர்கள் இவர்கள். பெருந்தேவி பின்அமைப்பியல், எதிர்க்கவிதை, நிகனோர் பர்ரா ஆகிய சட்டகங்கள் வழியாகவும் மொழி ஆளுமையாலும் கவிதைமொழி, கவிதையின் வடிவம் சார்ந்து பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தவர். அந்தவகையில் பெருந்தேவியின் பாதையும் தனித்த பாதை என்று வரையறுக்கலாம். மொழியும், வடிவமும் புறமாக வரையறுத்துவிடக் கூடியவை. பேசுபொருள், கவித்துவம் சார்ந்து கவிதைகள் வழியாக ஆராய வேண்டியுள்ளது.
*
இக்காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு எழுத்தாளரின் படைப்புகளை உள்வாங்கிக் கொண்டு அவர் எழுதுவதைப் போலவே மாதிரி படைப்புகளை உருவாக்கி விட இயலும் என்ற கருத்து முதலில் நமக்கு அளிப்பது சோர்வைத்தான். எவற்றை பதிலீடு செய்ய இயலும், இயலாது என்ற வரையறையை மனதிற்குள்ளேயே நாம் போட ஆரம்பிக்கிறோம். ஏற்கனவே இங்கே இருக்கக் கூடிய தகவல்களை உள்வாங்கி அவற்றின் செயல்முறைகளை ஆராய்ந்து உருவாக்கக்கூடிய மாதிரிகள் இருக்கின்றன தான். ஆனால் உண்மையான தேடல் கொண்ட கலைஞர்கள் தொடர்ந்து தங்களையே ஏற்றும் மறுத்தும் சென்று அடையக்கூடிய பயணம் சில சமயம் ஊகிக்க முடியாததாகவே இருக்கின்றன. அந்த ஊசலாட்டத்தின் கலைஞர்களை செயற்கையாக பதிலீடு செய்ய இயலாது. பெருந்தேவியின் எதிர்க்கவிதைகளைப் பார்க்கும் செயற்கை நுண்ணறிவு ஸ்ரீவள்ளியை எழுதவோ, அக்கமகாதேவியை மொழிபெயர்க்கவோ இயலாது. தன் கவிதைப் பயணத்தில் அத்தகைய பெரிய பரப்புச் சாத்தியத்தைக் கொண்டிருப்பவர் பெருந்தேவி.
அவரின் முதல் கவிதைத் தொகுப்பு ’தீயுறைத் தூக்கம்’ 1998-ல் வெளியானது. ’இக்கடல் இச்சுவை’ 2006-லும், ’உலோகருசி’ 2010-லும் வெளியானது. இந்தத் தொகுப்புகளிலுள்ள கவிதைகளை முதல் காலகட்ட கவிதைகளாகச் சொல்லலாம். இவற்றை திட்டவட்டமாக “எதிர்க்கவிதை” என்ற வரையறைக்குள் அடைக்க இயலாது. ஆனால் அவரின் பேசுபொருள் சார்ந்து இயங்கும் அந்த எதிர்மறைத்தன்மை உலோகருசியில் மெல்ல அதை நோக்கிச் செல்வதற்கான சுவடுகளைக் காண்பிக்கிறது. அதன்பின் ”வாயாடிக் கவிதைகள்” 2016-ல் வெளியானது. ’அழுக்கு சாக்ஸ்’, ’பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்’, ’விளையாட வந்த எந்திர பூதம்’, ’இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம்’, ’உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான்புணர்ந்திருக்கிறாய்’ என தொடர்ந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு சூழலுடன் உரையாடிக் கொண்டிருப்பவர்.
பேசுபொருள் சார்ந்து பெருந்தேவியின் கவிதைகளை நான்காக வகைப்படுத்தலாம். முதலாவது இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இயந்திரங்களுடனான மனித வாழ்வில் இருக்கும் தனிமை, சிக்கல் ஆகியவற்றைப் பேசுபவை. இரண்டாவது, அதே காலகட்டத்தில் அறிவார்ந்த பெண்ணுக்கான சிக்கலைப் பேசுபவை. மூன்றாவது ஆண்-பெண் உறவுச்சிக்கல் சார்ந்த கவிதை. நான்காவது அன்றாட யதார்த்தம் மற்றும் வெறும் உலகு நோக்கு சார்ந்த சிக்கலைப் பேசும் கவிதைகள். முதன்மையாக அவர் கவிதைகளின் பேசுபொருளைப் பற்றி பார்க்கலாம்.
பெருந்தேவியின் கவிதைகளில் நாம் முதலில் திறப்பது யதார்த்தம் என்ற கதவைத்தான். அன்றாடம், நிதர்சனம் என்றும் சொல்லலாம். அவை ஒரு காலகட்டத்தினுடையவை. அப்படிச் சொல்லும்போது நாம் அந்த காலகட்டத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாகிறோம்.
பெருந்தேவி தன் கவிதைகளை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுத ஆரம்பிக்கிறார். பெரும்பாலான கவிதைத் தொகுப்புகள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்டவை. 21-ஆம் நூற்றாண்டு “Gen Z”-களின் காலகட்டம் என்கிறோம். தொண்ணூறுகளின் குழந்தைகளில் பெரும்பான்மையானோரும், எண்பதுகளின் குழந்தைகளில் கணிசமானோரும் மனதளவில் அவர்களாக இருக்கும் காலம். மீதமிருப்பவர்களும், பழைய ஆட்களும் மிகுந்த ஆச்சர்யத்துடன் அணுகும் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் Gen z-க்கள். பெருந்தேவியின் கவிதைகளில் நவீனக் கவிஞர்களுக்கு இருந்த ஆழமான தனிமை, அது சார்ந்த தத்துவ விசாரணை, தனிமனிதன், சுதந்திரவேட்கை ஆகிய சிக்கல்கள் இல்லை. மாறாக அவர் கவிதைகளில் வெளிப்படுவது இந்த நூற்றாண்டின் சிக்கலான ஏகாந்தத்தை உணரவியலாத உள்ளீடற்ற தனிமை, அதீத சுதந்திரம் தரும் வெறுமை. ஆன்மா இன்மையால் வாஷிங்டன்னில் நடக்கவிருக்கும் செர்ரி பூக்களின் வசந்தோத்சவத்தை பார்க்கச் செல்லாமலாகும், “ஸ்மார்ட் போன் தான் இருக்கிறது” என்று முணுமுணுக்கும் ஒரு சலிப்பு நிறைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பற்றிய கவிதைகள். ஆழமின்மையால் வரும் வெறுமையைக் கை கொண்டிருக்கும் தலைமுறையைப் பற்றிய கவிதைகள் என இவற்றைச் சொல்லலாம்.
இப்படித்தான் இருக்கிறோம்
தனிமை
போர்வை தேவைப்படும் சீதோஷ்ண நிலை
பின்னணிகள்
கடற்கரை சோலை ரிசார்ட்
ஊஞ்சல் அரண்மனைக் கட்டில் வித்யாசமாகச் சாப்பாட்டு மேஜை
அல்லது கல்யாணச் சத்திரத்தில்
அலமாரிக்கும் சுவருக்கும் இடையில்
ஒன்றரைப் பேர்களுக்கான இடுக்கு
இன்னும் வித்யாசமாக
அமாவாசைச் சுடுகாடு
ஆளுயரக் குளிர்சாதனப் பெட்டிகள்
விற்கும் கடை
உடல்மொழி
அசத்துகிற அரை நிர்வாணம்
ஸ்டாக்கிங்குகள் கிமோனா
சிறு மணிகள் பதித்த
ஒளி ஊடுருவும் உள்ளாடைகள்
அற்புதமான இருவர்
தீரவே தீராத காதல் ரசாயனம்
இவை எதுவுமே பெரிதாக
உதவுவதில்லை
பல சமயங்களில்
தொடுவதை
தொடுவது மட்டுமே
முன்நகர்த்துகிறது
சில சமயங்களில்
அதுவுமில்லை
ஆடிமுடித்த சதுரங்கப் பலகையில்
மறந்து விடப்பட்ட
திருதிருவெனெ விழிக்கும்
காய்கள்
இந்தத்தனிமையை, வெறுமையை, ஆழமின்மையை இலகுவாக, நைஸாக எடுத்துக் கொள்பவை அல்ல பெருந்தேவியின் கவிதைகள். மாறாக அதை நோக்கிய மெல்லிய பதற்றத்தை, ஏக்கத்தை, கரிசனத்தைக் கொண்டிருப்பவை. சில சமயம் மதிப்பீடுகள் ஏதும் செய்யாமல் கொண்டாட்டத்துக்கும் குதூகலத்துக்கும் அல்லது வெறுப்பிற்கும் எதிர்மனநிலைக்கும் செல்லாமல் வெறித்துப் பார்க்கும் பார்வையைக் கொண்டவை.
“…
ஸ்விகி வருவதற்குமுன்
சொர்க்கங்களுக்குப் போய்வந்தவர்கள்
என் வாசலுக்குத் தவறியும் வந்ததில்லை
அவன் தலைமுடியைவிட
சுருளான இருட்டான இரவு
என் வாசலின் மீது கவியப்போவதுமில்லை”
இந்தத்தனிமையால் வரும் துயரத்தைச் சொல்லும் கவிதை ஒன்று…
இந்தக் கவிதை பழைய பாணியில் எழுதப்படுகிறது.
யாருமற்ற ஊரைச் சுற்றி
மிகத் துயரமான ஆறு ஒன்று ஓடுகிறது
யாருமற்ற ஊர் யாருமற்ற ஊராக ஏன் இருக்கிறது
அதற்குப் புரியவில்லை
யாருமற்ற ஊரில் யாரும் அற்றாலும்
ஓடுவது அதன் பழக்கமாகிவிட்டது
யாருமற்ற ஊரில் பழக்கத்தால்
மிகத் துயரமான ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது
யாருமற்ற ஊரில் மிகத்துயரமான நான் வசிக்கிறேன்
யாருமற்ற உலகம் யாருமற்ற உலகமாக ஏன் இருக்கிறது
எனக்குப் புரியவில்லை
…”
ஆனால் இந்தக் கோணத்திலிருந்து ”கவனமாக ஆடு” என்ற கவிதைக்குச் செல்லும்போது மிக உயரத்திலிருந்து ஒரு குறுகிய பரப்பை கூர்மையாகப் பார்ப்பதன் நிதானம் தென்படுகிறது.
கவனமாக ஆடு
முதலில் பாட்டி தாத்தாக்களின் சாவைக்
கேள்விப்படுகிறோம்
பிறகு அம்மா அப்பாக்கள்
பிறகு நண்பர்கள் அவர்கள் குழந்தைகள்
அபூர்வமாக வரிசை மாறுகிறது
…
நிழலை நெருங்கும்போது
வயது உறுதிப்படுகிறது
இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது
கீழே விழாதிருப்பது முக்கியம்”
எங்கும் வெகுளித்தனத்தை பார்க்கவியலாத காலகட்டம் இது. சமூகமாகவே நாம் குழந்தைமையை இழந்துவிட்டு கன்னித்தன்மையை அல்லது முதிர்ச்சியை அடைந்துவிட்ட பாவனையைக் கொண்டிருக்கிறோம். கள்ளமின்மையை பிழைக்கத்தெரியாத எதிர்மறை குணாம்சமாக பார்த்து அவை அழிவதற்கான விதையை விதைத்த நூற்றாண்டின் காலகட்டத்திற்கான படிமம் ஒன்று…
எனக்கு இருப்பதெல்லாம் ஒரே கேள்வி
“எப்போது
நம் சாமிகள் வெகுளித்தனத்தை இழந்தன?
ஏனெனில் அதிலிருந்து தொடங்கியது
நம்முடைய இந்தச் சீரழிவு
இனி தொடர்வதில் அர்த்தமில்லை
படையலை ஒளித்துவைத்துவிட
வேண்டியதுதான்”
ஆண்-பெண் என்ற பகுப்பின் மீது முற்றிலும் நம்பிக்கையில்லாதவர் பெருந்தேவி என்று சொல்லிவிட இயலாது. ஆனால் அந்தப் பகுப்பினால் நிகழும் பாகுபாட்டின் மீது கரிசனம் கொண்டிருப்பவர் என்றே அவரின் எழுத்துக்கள் வழி அறிய முடிகிறது.
பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால்
அவருக்கு உடனடியாகக்
கெட்ட வார்த்தைகளோடு
அதைப் புணரத் தோன்ற வேண்டும்
பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும்
திரைகளற்று வெறுப்பற்று
பொறுப்பற்றுத் தன்னை
கடவுள் நீக்கிக் கொள்ளாத
ஒரு இடம்
ஆனால் கடவுளுக்குப்
பிறப்புறுப்பு உண்டா இல்லையா
எனத் தெரிந்துகொள்ள முடிவதே இல்லை
என் கவிதைக்கு
இழைக்கப்பட்டிருக்கும் ரகசிய அநியாயங்கள்
இதிலிருந்து தொடங்குகின்றன
ஒப்புநோக்க கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவரே நீதிமானின் பீடத்தில் முதன்மையாக அமைபவர். ஆனால் எந்த பிறப்புறுப்பைக் கொண்ட கடவுள் எனும்போது அந்த நீதி வழங்களில் சிக்கல் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற ஐயப்பாட்டை எழுப்புபவராக பெருந்தேவி உள்ளார்.
திட்டமாக ஆண் – பெண் என பகுக்க முடிவதற்கு முன்னால் சிறுவர்களாக இருக்கும் உயிர்களில் சென்று ஏக்கத்துடன் பார்க்கும் பார்வை தரும் கவிதை ஒன்று..
”…
சிறுமி சிறுவனாகவும் சிறுவன் சிறுமியாகவும்
வளர்வதுமுண்டு.
அதி
காலையாகவும்
அந்தி
மாலையாகவும்
தெரிந்த பொழுதுகளோடு கூடவும்
வேறு ரம்மியங்கள் சேர
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
…”
ஆண்-பெண் உறவுச்சிக்கல் சார்ந்த கவிதைகளில் இதயத்திலிருந்து மூளைக்குச் செல்ல முற்படுபவை பெருந்தேவியின் கவிதைகள். காதலின் ஏக்கத்தை, பிரிவை, தனிமையை உணர்வெழுச்சியுடன் பேசுபவை அல்ல. மாறாக தன்னை விடுவித்துக் கொண்டு அறிவார்ந்து அணுகுபவை, உணர்வுப்பூர்வமாக அணுகுவதன் மேலுள்ள குழப்பத்தைப் பேசுபவை.
37 = 2
”…
முத்தங்கள் வாரியணைந்த
யார் யாரோ பிறவிகளின்
தப்பி விழுந்தின்று
சரிசெய்த கணக்கு நாம் என்பாய்.
ஒரு பதிலாக எப்போதும்
அமையப்பெறாத ஏதேதோ
நம் கேள்விகள்
இவ்வெண்ணிக்கை
தாம்தாம் என்று
அறிவிக்கும் தம்மை.
ஒவ்வாது ததும்பும்
என் விடையில் நீயும்
உன் விடையில் நானும்
அன்றி
வேறென்னவாக இருக்கும்
சமமற்ற இரண்டு?
பெருந்தேவிக்கு காதலின் கவிதைகளைவிட கைவிடுதலின் கவிதைகளே பரிசளிக்கப்பட்டிருக்கின்றன.
“என்னை ஏற்றிவிட ஒரு தடவை
வந்திருந்தால் கூட உறவு முடிந்திருக்காது
…
இவன் எந்தக் காதலிக்காகவும்
வரவில்லை
இவன் உருப்படவே போவதில்லை”
என்று சமகாலத்தின்உணர்வற்ற ஆண்களைப் பற்றிய பகடியுடன் கூடிய சித்திரமும் ரசிக்கத்தக்கது.
உறவுகளிலுள்ள ஆழமின்மையை சலிப்பை ஏக்கத்தை சுரண்டலை எழுதியவர் பெருந்தேவி. சங்கத்தின் அகப்பாடல்களில் தொனிக்கும் பெரும் ஏக்கத்தை, பிரிவை இன்றைய யதார்த்த வாழ்க்கையில் தேடினால் கிடைக்கும் பெரும் ஏமாற்றத்தை பேசுபவை. அதில் வெளிப்படும் தனிமை இன்னும் அதை நமக்கு அணுக்கமானதாக்குகிறது. நவீன மனிதனின் தனிமை என்பதைத்தாண்டி ஓர் அறிவார்ந்த பெண்ணின் தனிமையின் உச்சம் கவிதைகளில் வெளிப்படுகிறது. அறிவார்ந்த சிந்திக்கும் பெண்களின் தனிமை இக்காலகட்டத்தின் சிக்கல். உறவை, காமத்தை, மனித மனங்களை மிகவும் நுணுகி அறியும் ஒரு மனது சலித்து சலித்து அடையும் வெறுமை வெளிப்படும் கவிதைகள் அவை. இன்மையின் இருப்பை சதா புலம்பிக் கொண்டிருக்கும் குரல் நமக்கு அணுக்கமாகிறது.
சரக்கொன்றையிடம் மன்னிப்பு
வெகுநாள் கழித்து சிநேகிதி வந்திருந்தாள்
வாடிய முகம்
இருவர் தட்டிலும் சோற்றைப் பரிமாறிவிட்டு
அவளிடம் கேட்டேன்
நீ அவனைக் காதலிக்கிறாயா என்ன?
பல நூற்றாண்டுகளாக
பல உணவு வேளைகளில்
பல சிநேகிதிகள்
அச்சத்தோடு கேட்ட அதே கேள்வி
பிறகு அவளிடம் எடுத்துச் சொன்னேன்
அந்தக் காதலின் அரைக்கிறுக்குத்தனத்தை
சூனியக்கார வலையை
வானில் இல்லாத நட்சத்திரங்களா?
ஒருவனுக்குப் பின்னால் ஏன் ஒருத்தி
தன்மேல் தானே தீப்பந்தம் சுமந்து
நடந்து போக வேண்டும்?
ஒருவனுக்காக ஏன் ஒருத்தி
தன்னையே அரிந்து உப்பிட்டுத்
தின்னத் தரவேண்டும்?
ஒரு பெண்ணியவாதிக்கு இதெல்லாம் என்ன புரியும்?
ஒரு புத்தகப் புழுவோடு யார்தான்
சிநேகமாக இருப்பார்கள்?
வசந்தத்தின் முடிவில் பூக்குமே சரக்கொன்றைப் பூ
அதையாவது பார்த்திருக்கிறாயா நீ?
தட்டை விசிறிவிட்டு எழுந்து போனாள்
சரக்கொன்றை ஏன் பூக்கிறது?
வசந்தம் ஏன் முடிந்துபோகிறது?
வசந்தம் முடியும்போது பூக்கும்
இதுவரை பார்த்திராத
சரக்கொன்றையிடம்
எதற்கென்று நான்
மன்னிப்பு கேட்பது?
நான்காவது வகையான அன்றாட யதார்த்தம் மற்றும் உலகு நோக்கு சார்ந்த கவிதைகளில் உலகின் பார்வையாக வரும் கவிதைகள் வெறும் தகவல்களாக நின்று விடுகின்றன. மோசமான ஆட்சி நடக்கும் நாடுகளைப் பற்றிய கவலை, வீடற்றவர்களைப் பற்றி, சமகாலப் பிரச்சனைகளைப் பற்றி, முகநூல் பிரச்சனை, பலாத்காரம் போன்ற பிரச்சனைகள் வெறும் நோக்காக மட்டுமே நின்று விடுகிறது.
“என்ன நினைக்கிறாய் என முகநூல் தொணதொணக்கிறது
இருளுக்குப்பின் ஒளி என்கிற காவிய வார்த்தைகளின்
பொய்யை நினைக்கிறேன்
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
மூன்றுமே தாயோளி காலம்
என்ற வகைமையில் வருமென நினைக்கிறேன்
…
தொணதொணப்பதை அது நிறுத்த வேண்டும்”
“வந்தேறி” கவிதையையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
வந்தேறி
அந்த மளிகைக்கடையின்
நுழைவாயிலில் ஒரு தொட்டி
வசந்தத்தின் முலைமொக்குகள்
போலவே துலிப்கள்
செழித்த ஆழ்சிவப்பில் அழைத்த
ஒரு பூவைச் சும்மா
தொட்டபோது
ஓடிவந்துவிட்டான் உள்ளேயிருந்து
சீருடைப் பணியாளன்
நாட்டின் வளத்தைத் திருடப்பார்க்கும்
வந்தேறி எனக்
கண்களாலேயே அறிவிப்பது
பெரிய கலையாக
இவர்களுக்குக் கைவந்திருக்கிறது
இந்தக் கவிதை நம்மை எங்குமே அழைத்துச் செல்வதில்லை. ஒரு சிறிய சம்பவ விவரிப்பு. இந்த காலகட்டத்தின் உணர்வு நிலை. ஒரு ஆதங்கம். அவ்வளவே. ஆனால் சிறிய சம்பவ விவரிப்புகளை தன் தனிப்பட்ட உலகு நோக்கால் குறிப்பிடத்தகுந்த அவதானமாக விரிக்க குறுங்கதைகள் அவருக்கு உகந்த இலக்கிய வடிவமாக அமைந்துள்ளது. உதாரணமாக, கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன என்ற குறுங்கதையில் வரும் “புரிய வைக்க முடியாததைப் புரிபடாத மொழியில் கூறும்போது புரிகிறதோ புரியவில்லையோ புரிந்து கொண்ட மாதிரி விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. மற்றபடி கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?” என்ற வரி அக்குறுங்கதையின் மையமான உணர்வைக் கடத்தக்கூடியது. அதைக் கடத்தும் சம்பவ விவரிப்பைக் கொண்டது இக்கதை. ஆனால் குறுங்கதை என்பது இலக்கிய வடிவங்களில் உச்சமான கவிதைக்கும், கச்சிதமாக கதை சொல்ல வேண்டிய சிறுகதை வடிவத்திற்கும் இடைப்பட்டது. சிறுகதையை விடவும் கூர்மையாகக் கடத்த வேண்டியவைகளுக்குப் பயன்பட வேண்டியது. பெரும்பாலும் கவிஞர்கள் நீள் கவிதைகளிலும், குறுங்கதைகளிலும் இந்த சாத்தியத்தை முயன்று பார்க்கின்றனர். அதைப் பற்றிய விமர்சனம் தனியாக பேசப்படவேண்டியது.
*
பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் உருவாகி வருவதற்கான சூழல் தமிழ் இலக்கியத்தில் இருந்தது. அதை முதலில் அடையாளம் கண்டவராக மு. தளையசிங்கத்தை முன்னோடிகள் முன்வைக்கின்றனர். ஆனால் அவரின் சிந்தனை வழியாக அல்லாமல் தெரிதா, காஃப்கா வழியாக எண்பதுகளில் பின்நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகமானது. பெரும்பாலும் கட்டுடைத்தலை மட்டுமே நிகழ்த்தி தனிப்பயணத்தில் சென்று “இங்கு கலைச்சாத்தியம் குறைவு அல்லது இல்லை” என்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் ஒரு வகையினர். ஆனால் அதற்கு இணையாகவே அது தமிழ் இலக்கியத்தில் புனைவுக்கான களத்தை விரிவுபடுத்தி புதுச்-செவ்வியல் தன்மையை நோக்கி அதன் உச்சத்தை கொண்டு சென்ற எழுத்தாளர் ஜெயமோகனையும் உருவாக்கியது. இணையாகவே பல்வேறு வகைப்பட்ட எழுத்துக்களுக்கான இடமும் உருவானது. இன்று பின்-பின் நவீனத்துவ காலத்தில் திட்டவட்டமாக கலை என்பதற்கான வரையறையை அதன் பேசுபொருள், புழங்குதளம் இது மட்டுமே என்று யாரேனும் சொன்னால் எந்தவித தயக்கமுமே இல்லாமல் நம்மால் மறுக்க முடியுமளவு கலையை அடைவதற்கான பல்வேறு சட்டகங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. மேலும் புதிய சட்டகங்கள் சாத்தியமே தவிர ”ஒரு” திட்டவட்டமான சட்டகத்தை நம்மால் எளிமையாக வரையறுத்துவிட இயலாது.
பெருந்தேவியின் ஆரம்பகாலகட்ட கவிதைகளுக்கு மிகவும் திட்டமான பின்நவீனத்துவம், பின் அமைப்பியல், எதிர்க்கவிதைச் சட்டகங்கள் தேவைப்பட்டிருக்கவில்லை. அக்காலகட்டத்தில் எழுந்து வந்த இலகுத்தன்மைக் கவிதைகள் போல இயல்பான எதிர்-மனநிலை அல்லது மறுபாதி-உண்மைக் கவிதைகளாக அவை இருந்தன. அந்த யதார்த்தவாதக் கவிதைகளில் தென்பட்ட கவித்துவ யதார்த்தம் தமிழ் கவிதையில் புதிய வரவு தான்.
ஆனால் பிற்காலக் கவிதைகளை உணர்ந்து கொள்ள நமக்கு நிகனோர் பர்ரா பற்றிய அறிமுகம் தேவைப்படுகிறது. பெரும்பான்மையான பின்நவீனத்துவ எழுத்தாளர்களைப் போலவே தங்களுடைய படைப்புகளைப் பற்றி புரிந்து கொள்வதற்கான கையேட்டை உருவாக்கும் தேவை பெருந்தேவிக்கு பின்னால் எழுதிய கவிதைகளுக்கு தேவைப்பட்டதன் விளைவே “சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக் கொள்கிறேன்” என்ற நிகனோர் பர்ராவின் கவிதைகள் மற்றும் ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு நூல்.
“அரை நூற்றாண்டாக
சீரியஸ் முட்டாள்களின் சொர்க்கமாக
கவிதை இருந்தது
நான் வந்து
என் ரோலர் கோஸ்டரைக் கட்டும்வரை
விரும்பினால் மேலே செல்லுங்கள்
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும்
ரத்தம் கொட்டிக்கொண்டு
கீழே வந்தீர்கள் என்றால் அது என் தவறல்ல”
என்ற பிரகடனத்துடன் தமிழுக்கு அறிமுகமாகும் நிகனோர் பர்ரா தமிழுக்கு அவசியமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அழுத்தமான, துக்கமான, தனிமையின் ஊற்றிடமாக இருந்த நவீனக்கவிதைகளிலிருந்து இலகுவான கவிதைகளை நோக்கிச் சென்ற கவிஞர் இசைக்கு அந்த சூழலின் அவதானிப்பைத் தவிர வேறு யாரும், எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. இயல்பாக உருவாகி வந்த இலகுவான கவிதைகளை எழுத்தாளர் ஜெயமோகன் வகைப்படுத்த கல்பற்றா நாராயணின் ”தொடுதிரை” கவிதையை முன்வைப்பது ஒரு முக்கியமான படிமம்.
”இவ்வளவுதானா?” “இத்தனை எளிதாகவா” என வியந்து பார்க்கும் குழந்தை மனநிலையை இக்காலகட்டத்தை விளக்கும் நேர்நிலை அல்லது ஒளி பொருந்திய கோணம் எனலாம். இந்த தொழில்நுட்ப காலத்தில் கட்டுக்கடங்காத சுதந்திரமும், பரந்துபட்ட சமூக புழங்கு தளமும் விரிந்து கிடக்கும் நிலையில் முற்றிலும் நேர்நிலையான பார்வையும், யாவற்றையும் எளிமையாக, புன்னகையுடன், பகடியாகக் கடந்து செல்வது எல்லா மனிதருக்கும் சாத்தியம் இல்லை. பல நேரங்களில் அவ்வாறு எளிதாகக் கடந்து செல்வதனாலேயே உருவாகும் சிக்கல் ஒன்றுள்ளது. குறிப்பாக புத்தாயிரம் ஆண்டின் உறவுச்சிக்கல்களைச் சொல்லலாம். இதை ஆண்-பெண் உறவுச்சிக்கல் என்று சொல்ல இயலாத அளவு பால் சார்ந்த புரிதல்கள் இன்று விரிவடைந்துள்ளன. மரபார்ந்த யாவற்றையும் எளிமைப்படுத்தியதன் விளைவாக அடிப்படையான உணர்வுகளை இழந்து அவற்றை பல நுண்ணிய உணர்வுகளாகப் பிரித்து வரையறைக்குட்படுத்தும் போக்கு உருவாகி வந்தது. அன்பு, அறம், காதல் என்னும் அடிப்படை உணர்வுகளுக்குள் செயல்படும் நுண் உணர்வுகளைப் பிரித்து நூறாக்கி அறிவார்த்தப்படுத்தி அதன் அடிப்படையை இழந்து தனிமையும் ஏக்கமும் நிறைவின்மையும் கொண்டு மனம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் தென்படும் ஒரு தலைமுறையில் இன்று நின்று கொண்டிருக்கிறோம். இந்த சுரனைத்தன்மை குறைந்த காலகட்டத்தை நோக்கிய நகர்வின் ஆரம்பப்புள்ளியை தொட்டுப் பேசும் கவிதைகளின் சுவடுகள் பெருந்தேவியின் கவிதைகளில் தெரிகிறது. அதற்கு உண்மையில் பர்ரா அவசியமில்லை. ஆனால் பெருந்தேவி கை கொண்ட அந்தத் தரப்பிற்கு, கவிதையின் வடிவத்திற்கு அவர் தேவைப்பட்டிருக்கலாம்.
நாம்
“…
இப்படித்தான்
எளிதாகக் கிடைப்பதை
உங்களுடையதாக்கிக் கொள்கிறீர்கள்
உங்கள் இதயத்தின் இருளுக்கு முன்
ஊழியின் இருள் நாணுகிறது”
-பெருந்தேவி
இத்தனைநாள் இவ்வளவு எளிதான ஒன்றைத்தான் இவ்வளவு சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தேனா என்று பிரமிக்கும் கவிமனத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இணையாகவே அது அத்தனை எளிதல்ல எல்லாம் மாயை தான். இதில் இத்தனை குழப்பங்கள் உள்ளது என்பதையும் சொல்லும் குரலாக பெருந்தேவியின் குரல் ஒன்று தமிழ்க்கவிதையில் அவசியம் என்றே தோன்றுகிறது.
பெருந்தேவியின் இந்த யதார்த்தம் உண்மையில் இக்காலகட்ட வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியதுதான். ஆனால் இந்த வாழ்வின் யதார்த்தத்திலிருந்து அது கவித்துவ யதார்த்தத்தை நோக்கி சென்றதா என்ற கேள்வி எழுகிறது. ஆரம்பகாலகட்ட கவிதைகளில் தென்பட்ட அந்த கவித்துவ யதார்த்தம் அவர் எதிர்க்கவிதைக்கான கவிதை வடிவங்களை வலிந்து அல்லது விருப்பப்பட்டு சூட்டிக் கொண்ட பின் நிகழவில்லை எனலாம். ஆனால் எந்தவிதக் கருவியின் துணையுமில்லாமல் பெருந்தேவியை ஆதர்ச கவிஞராகக் குறிப்பிடும் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் அந்த கவித்துவ யதார்த்தம் இயல்பாக சாத்தியமாகி வருவதைப் பார்க்கலாம். இன்னும் அது செல்லும் திசையை நோக்கி எதிர்பார்ப்பு உள்ளது.
“அடையும் தனிமையை
சொல்லவாகூடும்
தீபம்போல் தனியே எரிகிறேன்
எந்தெந்த காற்றுக்கோ அணைகிறேன்
பின் சொல்கிறேன்
ஒரு கதையை
உண்மையான தனிமைக்கு
சம்மந்தமே இல்லாத
ஒரு கதையை”
என்ற கவிதையிலிருந்து சதீஷ்குமார் சீனிவாசன்…
”காற்றில் அலையும்
ஒரு சுடர்போல்
தீண்டு என ஏங்குகிறாய்
தீண்டிவிட்டு விலக முடிந்த
தீயா இதுவென
யோசித்தவன்
குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்
அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்
சுடர் அணையும்வரை
அத்தனை வெளிச்சம்
இருளென்ற ஒன்று
இல்லவே இல்லை என்பது மாதிரி”
என்ற கவிதையை அடையவும், இதன் வழியாக ஒரு பயணப் பாதை சாத்தியம் என்பதை நம்பி பயணப்படவும் பெருந்தேவி என்ற எதிர்க்கவிஞர் தமிழ்க் கவிதையுலகிற்கு அவசியமாகிறார்.
ஆனால் பெருந்தேவியோ இங்கிருந்து ஸ்ரீவள்ளி நோக்கி நகர்ந்து அக்கமகாதேவியிடம் சென்று அமைந்திருக்கும் சரணாகதிநிலை இன்னொரு தனித்த பாதையைச் சேர்ந்தது. பெருந்தேவி ஸ்ரீவள்ளிக்குச் செல்ல தன்னை மறுக்க வேண்டியுள்ளது. அதை அவர் இன்னொரு முகமூடி என்றோ, இன்னொரு ஆள் என்றோ சொல்லிக் கொண்டாலும் அது முற்றிலுமாக ஒரு உடல் கொண்டவரின் வெவ்வேறு பயணச் சாத்தியம் தான். மேலும் எதிர்க்கவிதைகளில் பெருந்தேவி ஆன்மா குறைந்து கொண்டிருக்கும் தலைமுறையை நோக்கி “நீங்கள் நினைப்பது போல இது அவ்வளவு இலகுவானதில்லை” என்று கூற அவருக்குள் அக்கமகாதேவியை மொழிபெயர்த்தவரும், ஸ்ரீவள்ளியை எழுதியவரும் இருக்க வேண்டியுள்ளது. இந்த எதிர்மறை மனநிலை மீதான கரிசனம் அந்தக் கனிவிலிருந்து தான் வர முடியும்.
“Embrace Complexity; simplicity is the enemy” என்ற மேற்கோள் இக்காலகட்டத்தின் முக்கியமான சிந்தனை. கலையிலும் அதன் தேவை உள்ளது. இலகுவான பறந்தலையும் தன்மை கொண்டு மெய்மையை நோக்கிச் செல்லும் கவிதைகளுக்கு இணையான பாதையில் இக்காலகட்டத்தின் வெறுமையையும், சலிப்பையும், தனிமையும், ஏக்கத்தையும் பேசுபொருட்களாகக் கொண்டு அதே மெய்மையை அடையச் சாத்தியமான கவிதைகளை கணக்கில் கொள்ள வேண்டிய விமர்சனப் பார்வையைக் கோரும் காலகட்டத்தில் இருக்கிறோம்.
*