தெருக்கூத்து மக்களின் கலை – கெளரி

கெளரி

கூத்து பற்றிய அறிமுகம் தமிழ்விக்கிக்காக எழுத்தாளர் ஜெயமோகன் பேராசிரியர் மெளனகுருவின் பழையதும் புதியதும் நூலையும் அவரின் தமிழ்விக்கிக்கான வாழ்த்துக் குறிப்பையும் அனுப்பியதை வாசித்ததிலிருந்து ஆரம்பமானது. “ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள்” பதிவு இதன் வழியாகவே உருவானது. அது மெல்ல தமிழ் நாடக, கூத்துக் கலைஞர்கள் பற்றிய தேடலுக்கு இட்டுச் சென்றது.

புரிசை கூத்துக் கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பி. கிருஷ்ணமூர்த்தியின் மாணவரான ஜெயராம் சென்ற அக்டோபரில் நிகழ்ந்த புரிசை தெருக்கூத்து விழாவையொட்டி பி.கே. சம்பந்தனை சந்தித்ததுடன் என்னையும் நேர்காணலுக்கு தொலைபேசி வழியாக இணைத்துக் கொண்டது மகிழ்வளித்தது. இதன் வழியாகவே கெளரியின் அறிமுகம் கிடைத்தது. தமிழ் தெருக்கூத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றிய தேடலுக்கான முதல் வாயிலாக கெளரியுடனான இந்த உரையாடல் அமைந்தது.

வீராசாமி தம்பிரான், ராகவ தம்பிரான், நடேச தம்பிரான், துரைசாமி தம்பிரான், கண்ணப்ப தம்பிரான், சம்பந்த தம்பிரான் என்ற ஐந்து தலைமுறை கூத்துப் பரம்பரையில் வந்த முதல் பெண் கூத்துக் கலைஞர் கெளரி. கெளரி கர்நாடக இசைக்கலைஞர், நவீன நாடகங்களில் நடித்தவர். குருகு இதழில் வெளிவந்த புரிசை கண்ணப்ப சம்பந்தனின் நேர்காணல், வெளிவரவிருக்கும் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த பழனிமுருகனின் நேர்காணல் மற்றும் இந்த நேர்காணலும் இணைத்து வாசிப்பது தெருக்கூத்து பற்றியும், புரிசை கண்ணப்ப தம்பிரான் பரம்பரையைப் பற்றியும் பெரிய சித்திரத்தை அளிக்க வல்லது. தனித்தனி நேர்காணலாகவும் இவை முழுமையானது. இந்த நேர்காணலை என்னுடன் இணைந்து நடத்திய நண்பர் ஜெயராமிற்கு நன்றி.

-ரம்யா

*

கெளரி – தெருக்கூத்தில்

ஜெயராம்: புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து பரம்பரையைச் சேர்ந்தவர் நீங்கள். பி.கே. சம்பந்தன் அவர்களுக்கு ஐந்து பெண்கள் இருந்தாலும் அதில் நீங்கள் ஒருவரே கூத்து ஆடுகிறீர்கள். உங்கள் பரம்பரையில் முதல் பெண் கூத்துக் கலைஞரும் கூட. தெருக்கூத்து மேல் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

சிறு வயதிலிருந்தே கூத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் தான் ஒத்திகையெல்லாம் நடக்கும். கூத்துப்பாடல்கள் இயல்பாகவே நியாபகத்தில் இருக்கும். பாடுவோம். 2000-2008 ஆண்டுவரை தெருக்கூத்துப் பயிற்சிக்கான C.C.R.T ஊக்கத்தொகையை வாங்கினேன். அப்பறம் 2008-ல் எங்கள் ஊரில் தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை அப்பா ஆரம்பித்தார். அதில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அந்தப்பள்ளியில் பயிற்சி பெற்று தேறிய முதல் தொகுதி மாணவர்களில் நானும் ஒருவர். புரிசையில் தான் என்னுடைய முதல் கூத்து அரங்கேற்றம் நிகழ்ந்தது. இந்திரஜித் கூத்தில் மண்டோதரியாக ஆடினேன். வருடாவருடம் பயிற்சி வகுப்புகள் நடக்கும். அதில் ஆடுவேன். பயிற்சி அளிப்பேன். குறிப்பாக மாணவர்களுக்கு குரல் பயிற்சி அளிப்பேன். அதன்பிறகு புரிசை தெருக்கூத்து மன்றத்தில் இணைந்து கூத்து நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறேன்.

ரம்யா: என்ன மாதிரியான கதாப்பாத்திரங்களில் கூத்து ஆடியிருக்கிறீர்கள்?

கர்ண மோட்சத்தில் பொன்னுருவி, சிலம்புச் செல்வியில் கண்ணகி, அனுமன் தூதில் சீதை, பெரிய இறகுடைய வயோதிக மனிதன் என்ற மார்குவெஸின் கதையில் சிலந்திப்பெண்ணாக நடித்திருக்கிறேன்.

ர: பொதுவாகவே கூத்து என்றால் மகாபாரதம் தான் ஆடுவார்கள். சிலம்பு, நவீன சிறுகதைகள் இதெல்லாம் கூத்தாக்கும் முயற்சி புதியதாக உள்ளது.

ஆமா. தெனாலிராமன் கதைகள் கூட கூத்தாக்கியிருக்கிறோம். மூன்று தலைமுறைக்கு முன் கண்ணகி கூத்து ஆடியிருக்கிறார்கள். அதன்பிறகு அதை மீள நிகழ்த்த வேண்டும் என முயற்சி எடுத்து சமீபத்தில் சிலம்புச் செல்வி கொண்டு வந்தோம். எஸ்.எம். திருவேங்கடம் ஐயா தான் சிலம்புச் செல்விக்கான பிரதியை எழுதியது. ஸ்பானிஷ், ஜெர்மன் கதைகளையும் கூத்தாக்கியிருக்கிறோம்.

கெளரி கணவருடன்

ஜெ: உங்கள் கணவர் மு.சிவா நவீன ஓவியக் கலைஞர். அவர் உங்கள் கலையிலிருந்தும், நீங்கள் அவர் கலையிலிருந்தும் எடுத்துக் கொள்வது என்ன?

அவர் மகாபாரதக் கதைகள் சார்ந்து ஒரு ஓவியக் காட்சி(show) வைத்திருக்கிறார். மகாபாரதக் கதைகள், தெருக்கூத்து நிகழ்ச்சிகள்லாம் பார்த்து வளர்ந்ததால அது தொடர்பான ஓவியங்களை வரைந்துள்ளார்.

ர: நீங்கள் ஆய்வு சார்ந்தும் இயங்கிறீர்கள். தெருக்கூத்து சார்ந்தும் இயங்குகிறீர்கள். உங்கள் முதன்மையான களமாக எதை நினைக்கிறீர்கள்?

தெருக்கூத்து தான் முதன்மை. ஆனால் நான் முழு நேர கூத்துக் கலைஞராக இப்போது இல்லை. ஆய்வில் ஈடுபடுவது தெருக்கூத்து ஆடுவதற்கு உதவியிருக்கிறது. ஆய்வு சார்ந்து நூலாக்கும் முயற்சியில் இருக்கிறேன். இன்னும் சில வேலைகள் அதில் உள்ளது. இசை ஆசிரியராக இருக்கிறேன். பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பாடகராகச் செல்கிறேன். வருடத்தில் புரிசை கூத்து மன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்போது கூத்துப் பயிற்சி எடுத்துக் கொண்டு கலந்து கொள்வேன்.

ஜெ: உங்கள் கூத்துப் பரம்பரை பத்தொன்பது நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விடுகிறது. நூற்றாண்டுகளாக நினைவுகூரப்படுபவர்கள் தொன்மக் கதைகளாக ஆவதையே நிதர்சனத்தில் பார்க்க முடிகிறது. அப்படி ஏதும் உங்கள் பரம்பரையில் யாரைப் பற்றியாவது தொன்மக் கதைகள் உள்ளதா?

ஆமா. எங்கள் முன்னோரான வீராசாமி தம்பிரான் ஒரு மந்திரவாதியாக இருந்ததாகச் சொல்வார்கள். எங்கள் ஊரில் உள்ள ஒரு ஏரியில் ஒரு வணிகர் அவரை போட்டிக்கு அழைத்தபோது தண்ணீர் மேல் நடந்ததாகச் சொல்வார்கள். பாட்டியோட தாத்தா ஒருத்தர் நாடி பிடித்து வைத்தியம் செய்பவர். ஒருவருடைய நாடியைப் பிடித்தால் அவருடைய இறப்பைக் கணிக்கக் கூடியவர். என் தாத்தா கண்ணப்ப தம்பிரானுக்கே சில வைத்தியங்கள் தெரியும்’ என்றும் ‘அப்படி ஒருமுறை ஒருவரை நாடி பிடித்து பார்த்த போது அவர் மரணமடைய போகிறார் என்பது தெரிந்தது. அது தாத்தாவை மிகவும் பாதித்தது. அதன்பின் அவர் வைத்தியத்தையே கைவிட்டதாகச் சொல்வார்கள்

புரிசை கண்ணப்ப சம்ந்தன்

ர: கண்ணப்ப தம்பிரானுடனான உங்கள் நினைவுகள் பற்றி சொல்ல முடியுமா?

தாத்தா நான் எட்டாவது படிக்கும்போது இறந்து போனார். பெரிய நினைவுகள் இல்லை. அவர் கூத்தில் கிருஷ்ணர் வேடம் போட்டது நினைவில் இருக்கிறது. அதன்பிறகு பெரும்பாலும் பின்பாட்டுக்கு உட்கார்ந்துவிடுவார். கூத்தை முழுவதுமாக கட்டமைப்பது அவர்தான். வாத்தியார் இல்ல. அதனால தான். உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடந்த காலங்களில் கூட இரவெல்லாம் நிறைய கூத்து பாடல்களைத்தான் பாடிக் கொண்டே இருப்பார். எங்க பேரெல்லாம் கூட அவருக்கு மறந்து போய்விட்டது. ஆனாலும் அந்த கூத்துப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவார். அதற்கு முன்னால் உடல்நிலை நல்லா இருக்கறப்ப’ என்ற வாக்கியத்தை ‘அதற்கு முன்னால் உடல்நிலை கொஞ்சம் நல்லா இருக்கறப்ப என்னைக்கூப்பிட்டு பேப்பர், பேனா எடுத்து வரச்சொல்லி கூத்துப்பாடல் எழுதிட்டு இருப்பார். எனக்கு CCRT உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும்போது முதல் முறையாக அவர்தான் “தா-தித்-தக-தை”-னு கையில் தட்டி அடவு கற்றுக் கொடுத்தார்.

கெளரி

ஜெ: கர்நாடக சங்கீதம் நீங்கள் கற்றிருக்கிறீர்கள். அது உங்களுடைய தெருக்கூத்து நிகழ்த்துகைக்கு உதவியுள்ளதா? தெருக்கூத்து ஏதாவது வகையில் கர்நாடக சங்கீதத்துக்கு உதவியுள்ளதா?

நான் முதலில் கற்றுக் கொண்டது கூத்துப்பாடல் தான். கர்நாடக சங்கீதம் பள்ளி முடித்து கல்லூரி சேரும் நேரத்தில் தான் கற்க ஆரம்பித்தேன். இசையில் ஸ்ருதியும், தாளமும் தான் முக்கியம் இல்லிங்களா? அந்த அறிவு எனக்கு கூத்து மூலமாகவே தெரிந்திருந்ததால கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள எளிமையாக இருந்தது.

ர: கூத்தில் பாடல், அடவுகள் ஆகியவற்றைப் பார்த்தால் கர்நாடக சங்கீதத்திற்கும், பரதநாட்டியத்திற்கும் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. செவ்வியல் தன்மையைப் பொறுத்து கூத்தில் எத்தனை தொலைவு கர்நாடக சங்கீதமும், நாட்டியமும் வெளிப்படுகிறது?

கர்நாடக சங்கீதத்தில் இருக்கும் ராகங்கள் தான் தெருக்கூத்திலும் உள்ளது. ஆரோகணம், அவரோகணம் இருக்கிறது எனில் கர்நாடக சங்கீததில் ஏழு ஸ்வரமும் வரும். தெருக்கூத்தில் நான்கு ஸ்வரத்தோடு முடிந்துவிடும். ஏனெனில் தெருக்கூத்து மக்கள் முன்பு உச்ச ஸ்ருதியில் பாடப்படுவது. தெருக்கூத்து ராகமும் தாளமும் அச்சு அசலாக கர்நாடக சங்கீத பாணியில் இருக்காது. உதாரணமாக கர்நாடக சங்கீதத்தின் மோகன ராகமும் தெருக்கூத்தின் மோகன ராகமும் வித்தியாசமாக இருக்கும். தெருக்கூத்துக் கலைஞர்கள் இந்த ராகம், இந்த அடாணா என்றெல்லாம் தொடர்புறுத்திக் கொள்ள மாட்டார்கள். இந்த பாட்டுக்கு இந்த ”மெட்டு” சொல்லிக் கொள்வார்கள். பிரதியில் வசனத்திற்கு மேல் மெட்டு என்று தலைப்பிட்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு பாடலை எழுதிவிடுவார்கள். கலைஞர்கள் அதைப் பார்த்து இந்த மெட்டு என்று புரிந்து கொண்டு அதை எடுத்து பாடி விடுவார்கள். பிரதி உருவாக்குனரிடம் கூத்து ஆசிரியர் இந்த மெட்டுக்கு வேண்டும் என்று கேட்டு தான் வசனமே எழுதி வாங்குவார்கள்.

அதேபோல தான் அடவுகளுக்கும். புரிசையில் உள்ள அடவுகள் பரதநாட்டியத்திற்கு நெருக்கமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஓரளவுக்கு அடவுகள் ஒரே மாதிரி உள்ளது.

கூத்துப் பிரதி உருவாக்குனர் செங்காடு எம். திருவேங்கடம்

ர: செங்காடு எம். திருவேங்கடம் ஐயா ஒரு பேட்டியில் தான் எழுதும்போதே ஒரு மெட்டு அவருள் இருக்கும் என்றும் சாதரணமாக தெருக்கூத்துக்கு எழுதிவிட முடியாதென்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆமா. உண்மைதான். பிரதி எழுதுவதற்கு முன்னே கூத்து ஆசிரியர் கூத்துக்கான களத்தையும், உணர்ச்சிகளையும் அதற்கு தேவையான ராகத்தையும், மெட்டையும் சொல்லி விடுவார். அந்த சந்த நடைக்கு ஏற்றாற்போல பிரதி உருவாக்குனர் எழுதுவார்.

ர: நீங்க இளநிலை, முதுநிலை எல்லாமுமே இசையில் தான் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். முனைவர் பட்டம் தெருக்கூத்து சார்ந்து என்று சொல்லியிருந்தீர்கள். அதற்கான குறிப்பிட்ட காரணம் ஏதும் உள்ளதா?

ஆமாம். இளநிலை, முதுநிலை இரண்டுமே குயின்மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றேன். தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கலைக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு செய்தேன். ஆனால் என்னோட வழிகாட்டி திருவையாறு இசைக்கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ. ஸ்ரீவித்யா. என்னோட ஆய்வுத்தலைப்பு “தெருக்கூத்தில் இரணிய சம்ஹாரம் – திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகள்”. எனக்கு தெருக்கூத்தில் புரிசை பரம்பரை மட்டும் தான் அறிமுகமாகியிருந்தது. அதனால் பிற பகுதிகளில் தெருக்கூத்து எவ்வாறு உள்ளது என்று பார்க்கும் ஆர்வத்தில் இந்தத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். நான் இந்தத் தலைப்பை எடுக்க இன்னொரு காரணம் பெரியப்பா காசி மற்றும் அப்பா. பெரியப்பா அவர்களின் பங்கு புரிசை தெருக்கூத்து மன்றத்தில் மிகவும் முக்கியமானது.

புரிசை கண்ணப்ப காசி

ர: இசை சார்ந்த பின்னனி கொண்ட ஆய்வறிஞர் தெருக்கூத்துக்கு வழிகாட்ட முடியுமா? இல்லைனா உங்க ஆய்வு தெருக்கூத்து சார்ந்த இசையில் அதிக கவனம் கொண்டதாக இருந்ததா?

இல்லை. இசை மட்டுமல்ல. தெருக்கூத்து சார்ந்த எல்லா கோணத்துலயும் இருந்தது. இசை, அடவுகள், உடை, ஒப்பனை, சடங்கு, பாணி என பலவற்றையும் உள்ளடக்கிய ஆய்வு. தலைப்பு தேர்ந்தெடுக்கும்போதே என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு அடிப்படைச் சித்திரம் இருந்தது. வழிகாட்டி அவருடைய அனுபவத்தைக் கொண்டு அதற்கான சாத்தியத்தை மேலும் விரிவாக்கிக் கொடுப்பார். அப்படி ஸ்ரீவித்யா மேம் இன்னும் எப்படி விரிவாக ஆய்வு செய்யலாம் என்று சொன்னது என்னை அது சார்ந்து சந்திக்க வேண்டிய மனிதர்கள், போக வேண்டிய இடங்கள் நோக்கி கொண்டு சென்றது.

ர: புரிசை தெருக்கூத்துப் பரம்பரைக்கும் நீங்கள் ஆய்வு செய்த தெருக்கூத்து குழுக்களுக்கும் வித்தியாசம் இருந்ததா?

ஆம். எல்லா வகையிலும் வித்தியாசம் இருந்தது. உடை, அலங்காரம், அடவுகள், தாளக்கட்டு என பலவற்றிலும். ஆனாலும் அடிப்படையில் ஒற்றுமையும் இருந்தது.

ஜெ: உங்கள் ஆய்வுப்பயணம் வழியாக நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?

என்னோட ஆய்வுத்தலைப்பு ”தெருக்கூத்தில் இரணிய மோட்சம்” – திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்”. இரண்ய சம்ஹாரம் நிறைய மாவட்டங்கள்ல ஆடறதா என்னோட அப்பா, பெரியப்பா இரண்டு பேருமே சொல்லிருக்காங்க. விழுப்புரத்தின் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் ஏழு நாள் இரண்ய சம்ஹாரம் நடந்திருக்கிறது. அது மெல்ல ஐந்து நாளாகி, இப்போது இரண்டு நாள் தான் ஆடுகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆர்.சுத்திப்பட்டு கிராம பகுதியில் நரசிம்மர் ஜெயந்திக்கு மட்டும் ஆடுவார்கள். திருவண்ணாமலையில் மூன்று நாள் ஆடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இரண்ய சம்ஹாரம் கூத்தை எழுதிய குமாரசாமித்தம்பிரானிடமிருந்து எங்க முன்னோர்களில் ஒருவர் ஏழு நாள் கூத்தை ஒரு நாளாக சுருக்கி எழுதித்தரக் கேட்டு வாங்கி புரிசையில் ஆடியதாகச் சொல்வார்கள்.

இரணிய மோட்சத்தின் கூத்துப் பிரதிகளை ஆய்வு செய்தேன். அடவுகள், ஒப்பனை, ஆடை என யாவற்றையும் பார்த்தேன். குறிப்பாக கதைப்போக்கு. நம்ம எல்லாருக்கும் கதையைத் தெரியும். ஆனால் ஒவ்வொரு இடத்தில் எப்படி அந்தக் கதையை நிகழ்த்துகிறார்கள் என்று ஆய்வு செய்தேன். சில மாவட்டத்தில் இடையில் புதுப்புது கதாப்பாத்திரங்கள் உள்ள வரும். மக்களை பொழுதுபோக்க வரும் சம்மந்தமில்லாத கதாப்பாத்திரங்களும் வரும். ஆனால் கதைக்கு சம்பந்தமான காதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்பது போன்ற ஆய்வுகளைச் செய்தேன்.

ஜெ: குமாரசாமித்தம்பிரான் காலம் எனில் இங்க ராகவத்தம்பிரான் அல்லது வீராசாமித்தம்பிரான் யாராவது இருக்கலாம்.

ஆமா. ராகவத்தம்பிரான் தான் இதைச் செய்தது.

புரிசை தெருக்கூத்து (படம்: மனோ)

ர: ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய நாடகங்களை அரங்கேற்றுவது பற்றி டி.கே.எஸ் சண்முகம் குறிப்பிடும்போது நாடக ஒத்திகையை ரங்கராஜு ஒப்புதல் செய்த பின்னரே அரங்கேற்ற முடியும் என்கிறார். சில நாடகங்களை ரங்கராஜு மறுக்கும் இடங்களையும், அதனால் நாடகம் பாதிப்பது குறித்தும் பதிவு செய்திருக்கிறார். பிரதி உருவாக்குனருக்கும் தெருக்கூத்துக் கலைஞருக்கும் எந்தவகையான தொடர்பு உள்ளது?

ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு மெட்டு அமைப்பு உள்ளது. காஞ்சிபுரத்தில் பாடுவதற்கும் திருவண்ணாமலையில் பாடுவதற்குமே மெட்டு சார்ந்து வித்தியாசம் உள்ளது. அதுபோலதான் விழுப்புரத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையே அந்த மெட்டு வித்தியாசம் உள்ளது. நம் கையில் கிடைப்பது பிரதி மட்டும் தான். அதைப் பாடுவதும் ஆடுவதும் நாம் தான். அதனால் நீங்கள் சொல்லுமளவு இறுக்கம் இல்லை என்று நினைக்கிறேன்.

ர: வெளிநாட்டு ஆய்வாளர்கள், உலக அளவிலான தியேட்டர் கலை நிகழ்வுகள், இந்திய அளவிலான தியேட்டர் அமைப்புகள் எந்த அளவில் தெருக்கூத்திற்கான முக்கியத்துவத்தை அளிக்கிறது?

முக்கியத்துவம் இருக்கிறது. தெருக்கூத்து சம்பந்தமான ஆய்வுகள் ஆங்கிலத்தில் வருவதில்லை. தமிழில் தான் அதிகம் உள்ளது. ஆங்கிலத்தில் இருப்பதும் அடிப்படையானவை தான். வெளிநாட்டு திருவிழாக்கள் சார்ந்து பங்கெடுப்பதற்காக விண்ணப்பிப்பவர்கள் குறைவு. பெரும்பாலும் கூத்துக் கலைஞர்கள் திருவிழாக்கள், சடங்குகளில் ஆடுபவர்கள். பள்ளிப்படிப்பு முடிக்காதவர்களே அதிகம். எல்லோருக்கும் தெரிந்த தெருக்கூத்துக் குழுக்களை விட வெளியில் தெரியாத குழுக்கள் அதிகம் உள்ளது.  ஆனால் அவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்வதில்லை. தெருக்கூத்தை மிகவும் சுத்தமாக ஆடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வர வேண்டும்.

ர: அப்படி நீங்கள் நினைக்கும் சில குழுக்களின் பெயர்கள் சொல்ல இயலுமா?

நான் ஆய்வுக்காக எடுத்த விழுப்புரம் மாவட்டத்தின் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள “கீதாஞ்சலி கர்நாடக இசை நாடகக்குழு”, ”ஆர்.சுத்துப்பட்டு இசை-நாடகக் குழு” ஆகிய இரண்டையுமே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்களுடைய முன்னோர்கள் எப்படி ஆடினார்களோ அந்த பாரம்பரியத்தை மேலும் மெருகேற்றி ஆடுகிறார்கள். சினிமா பாடல்களோ, கொச்சை வசனங்களோ எதுவும் இல்லாமல்.

ஜெ: ஏன் தெருக்கூத்துக் குழுவிற்கு “கர்நாடக இசை” என்ற பெயரை போட்டிருக்கிறார்கள்?

அந்தக் குழுவின் பாடல் கர்நாடக இசை பாணியில் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த அப்படி இட்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் குழுவில் நாங்கள் பாடுவது போல் தான் அதில் இருக்கிறது.

கெளரி (படம்: நாராயண சங்கர்)

ர: இது முக்கியமான தகவல். பேராசியர் மெளனகுரு சார் சொல்லும்போது தெருக்கூத்தின் இசை கர்நாடக இசைக்கு நெருக்கமானதாகவும், அடவுகள் பரதநாட்டியத்திற்கு நெருக்கமானதாகவும் இருப்பதாகச் சொல்வார். ஒரு செவ்வியல் வடிவமான தெருக்கூத்து முன்பு இருந்து திரிந்திருக்கலாம் என்பார்.

தெருக்கூத்து மக்களின் கலை. அதில் செவ்வியல் அம்சம் இருக்கிறது. அது பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் கண்கள் வழியாகத் தான் கண்டறிய வேண்டும். புரிசையில் ஆறாவது தலைமுறையாக தெருக்கூத்துக் கலை ஆடப்படுகிறது. முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த நுட்பத்தை மேலும் கூர்மையாக்கி ஆடுகிறார்கள்.

ர: பரதநாட்டியம் போல தெருக்கூத்து பரவலாக கலை மேடைகளில்  ஏற்பு பெருகிறதா? தெருக்கூத்து திருவிழாக்களிலும், சடங்குகளிலும் தான் அதிகம் ஆடப்படுகிறது. அதன் திரிபுகள் சினிமா பாடல்கள், கொச்சை சொற்கள் வரை கீழே இருக்கிறது.

நீங்கள் சொல்லும் திரிபு நிலைகள் எல்லா கலைகளிலும் இருக்கிறது. இப்படிச் சொல்கிறேனே. பரதநாட்டியத்தில்  பாலசரஸ்வதி பாணிக்கும், ருக்மிணிதேவி பாணிக்கும் ஒரே மதிப்பு தான் கிடைத்ததா? இது அந்தப் பாகுபாடுதான். இது சரியாவதற்கு இன்னும் காலம் ஆகும். தெருக்கூத்து தான் மற்ற நிகழ்த்துக்கலைகளோட அடிப்படை. பிற கலைகளைப் போல இங்கும் ஆசிரியர்-மாணவர் பரம்பரை உண்டு. இசை, நடனம், வசனம், அடவு, ஒப்பனை, ஆடை, அணிகள் என எல்லாமும் இருக்கிறது. நுட்பம் உள்ளது.

புரிசை தெருக்கூத்து (படம்: மனோ)

ஜெ: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் ஆடும் கூத்திற்கும்  உங்கள் புரிசை கூத்திற்கும் நீங்கள் பார்த்த வித்தியாசத்தை சொல்ல இயலுமா?

அவர்களுடைய வசன உச்சரிப்பு வித்தியாசம் இருக்கும். அவர்களுடைய உடையில் புடவை அதிகமும் சுற்றுவார்கள். திருவண்ணாமலையில் டவுறு கட்டுவது என்று சொல்வார்கள். அதாவது வைக்கோல் வைத்து கட்டுவது. விழுப்புரம் மாவட்டத்தில் கூத்து கட்டுபவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள். நான்கைந்து புடவையை கட்டுவார்கள். ஆடும் முறை, கதையைக் கொண்டு செல்லும் விதமும் வேறாக உள்ளது.

புரசையில் அடவுகள் அதிகமாக ஆடுகிறோம் என்பதை பிற குழுக்களைப் பார்க்கும்போது அறிந்து கொண்டேன். பெரும்பாலும் நான்கு அடவுகள் பிற குழுக்களில் ஆடுவார்கள். நாங்கள் பதினான்கு முதல் பதினைந்து அடவுகள் போடுகிறோம். ஒப்பனை வித்தியாசமாக உள்ளது.

ஜெ: இந்த வித்தியாசத்திற்கான காரணம் என்ன? ஏனெனில் விழுப்புரத்திற்கும் புரசைக்கும் பெரிய தூரம் இல்லை. அதனால் கேட்கிறேன்?

நீங்கள் விழுப்புரம் வரை கூட செல்ல வேண்டாம். திருவண்ணாமலையிலுள்ள குழுக்களுக்குள்ளேயே வித்தியாசத்தைக் காணலாம். இது மக்கள் சார்ந்த கலை இல்லயா? மக்கள் எப்படி எப்படியெல்லாம் அந்தக்கூத்து போகனும்னு அல்லது மேம்படுத்தனும்னு நினைக்கிறாங்களோ அப்படி கூத்து ஆடுவாங்க. கூத்து ஒரு வளரும் கலை. அதனால தான் இடத்துக்கு இடம் மாறுபடுது. இப்ப புரிசைல முன்னோர்கள் எப்படி தெருக்கூத்து ஆடினாங்களோ அதன்படி ஆடறோம். மக்களுக்காக மாற்றிக் கொள்வதில்லை. இப்ப புதிதாக உருவாகும் தெருக்கூத்துக் குழுவை எடுத்துக் கொண்டால் அது ஏற்கனவே இருக்கும் ஒரு பெரிய குழுவிலிருந்து சென்ற ஒரு நபரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். அந்த நபர் எப்படி கூத்து கற்றுக் கொண்டாரோ அது மாதிரி கற்றுக் கொடுப்பார். பின்ன மக்களுக்கு ஏற்றாற்போல மாற்ற வேண்டும் என அவர் நினைத்தால் மாற்றுவார். எல்லா கலைகளிலும் இப்படித்தான் மாற்றம் நிகழும்.

ஜெ: கூத்து முன்னோர் காலத்திலிருந்து மாறாமல் இருப்பதை நீங்கள் ஒரு இடத்தில் நேர்மறையாகவும் சொல்கிறீர்கள். இன்னொரு இடத்தில் மக்கள் கலை, மாறிக் கொண்டே இருக்கிறது என்றும் சொல்கிறீர்கள். விஜயநகரா காலத்திலிருந்து இப்போது வரை சில அம்சங்கள் கூத்தில் மாறாமல் வந்திருக்கிறது. மாறுவது – மாறாமல் இருப்பது இந்த இரண்டில் எது முன்னேற்றமாக கூத்தில் நீங்கள் கருதுகிறீர்கள்?

கூத்துக்கான பிரதி நம்மிடம் இருக்கிறது. ஆனால் மக்களின் ரசனைக்காக சினிமா பாடல்களைப் பாடுவது, கொச்சை சொற்கள் பேசுவது, ஏ ஜோக்ஸ் சொல்வது, மிகையான வட்டார வழக்குப் பிரயோகங்கள் இதெல்லாம் நடக்கிறது. கதைக்கும் வசனத்திற்கும் சம்பந்தமில்லாமல் சில சமயம் கூத்து ஆடுவார்கள். கதாப்பாத்ரதிற்கான ஒரு மரியாதை இல்லாமல் செய்துவிடுவார்கள். உதாரணமாக திரெளபதி வஸ்திராபரணத்தில் “வாடி போடி” என்று அழைத்து சிரிப்பு வரவைப்பது மாதிரியான சம்பவங்கள் நடக்கும். மக்களும் இதை அதிகம் விரும்புவதையும் பார்க்க முடிகிறது. சிலர் வாழ்வாதாரத்திற்காக இதைச் செய்கிறார்கள். ஏனெனில் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் கலைஞர்களின் வாழ்வாதாரமும் கூட. இந்த மாதிரி போக்கு அதிகரிக்கும்போது தெருக்கூத்து என்றாலே இது தான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துவிடும். அந்த மாதிரியான மாற்றம் வேண்டாம் என்று சொல்கிறேன். கதை தான் பிரதானமாக இருக்க வேண்டும். அது வளர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு செழுமையான ஒரு கூத்துபாணியைத்தான் நாம் கொடுக்க வேண்டும். அவர்களை நம்பிக்கை இழக்க வைக்கக் கூடாது.

தெருக்கூத்து (பி.கே.சம்பந்தன்)

ஜெ: நீங்கள் பேசியதை வைத்து இப்படி தொகுத்துக் கொள்கிறேன். இது ஒரு நாட்டாரியல் கலைதான். ஆனால் இதற்குள் ஒரு செவ்வியல் தன்மை இருக்கிறது. அது பாதுகாக்கப்பட வேண்டும். குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆமாம். ஆனாலும் இது நாட்டாரியல் தன்மை, செவ்வியல் தன்மை என்பது மக்கள் பார்க்கும் கண்ணோட்டத்திலும் உள்ளது. தெருக்கூத்தில் இரண்டு அம்சங்களுமே உள்ளது.

ஜெ: ஆம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதுன்னு சொல்லலாம். ஏன்னா வீராசாமித் தம்பிரான், நடேச தம்பிரான் காலத்தில் ஆடப்பட்ட தெருக்கூத்து அல்ல இன்று புரிசையில் இருப்பது. கண்ணப்ப தம்பிரான் காலத்தில் நவீன நாடகங்கள், அறிஞர்களுடனான தொடர்புகள் வழியாக அது அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றதைப் பார்க்க முடிகிறது.

ஆமாம்.

ர: கட்டைக்கூத்து என்று சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். இது ஒரு சம்பிரதாயமான கேள்வியாக எடுத்துக் கொள்ளலாம். ஆய்வுப்பணியில் பொதுவாக தெருக்கூத்துக் கலைஞர்களிடம் கேட்டதைப் பார்த்திருக்கிறேன். அதனால்.

முதன்மையாக ”கூத்து” தான். அப்பறம் மெல்ல பல தலைமுறையாக தெருக்கூத்து என்று தான் முன்னோர்கள் சொல்லி வருகிறார்கள். தெரு’க்கூத்து என்று சொல்வதை இழிவாக அவர்கள் கருதுவதையும் கேட்டிருக்கிறேன். தங்களை பிற குழுக்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள கட்டைக்கூத்து என்று வைத்திருக்கலாம். அதுவும் தவறில்லை. ஆனால் இது தெருக்கூத்து தான்.

ர: ஒரு கூத்து பதின்மூன்று நாள் ஆடுவது, ஒரே நாளில் ஆடுவது முதல் ஒரு மணி நேரம் ஆடுவது வரை நிகழ முடியும் என்று தெரிகிறது. நீங்கள் சொல்வது போல கூத்து மக்களுடைய கலை, வளர்ந்து கொண்டே இருக்கும் கலை” என்ற அளவில் பதின்மூன்று முதல் ஒரு மாதம் வரை நிகழ்வது சரி. போலவே யக்‌ஷகானா போன்ற கலைகள் நகரத்தில் பெரிய மேடைகளில் ஒரு மணி நேரத்தில் அதன் சாரம் குறையாமல் ஆடப்பட்டு பரவலாக அறியவைக்கப்படுவது போன்றவைகளும் நிகழ்கின்றது. இந்த இரண்டிலுமுள்ள சாதக பாதகங்கள் பற்றி சொல்ல முடியுமா?

தெருக்கூத்தையே ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை நாங்கள் செய்கிறோம். சென்னை போன்ற நகரங்களில் மக்களுக்கு நேரமும் பொறுமையும் குறைவு. அவர்களிடம் எடுத்துச் செல்ல ஒரு மணி நேரக்கூத்து பயன்படுகிறது. சில இடங்களில் அரை மணி நேரத்தில் கேட்பார்கள். அரைமணி நேரத்தில் மகாபாரதத்தைப் பற்றிய அறிமுகமே இல்லாத பார்வையாளர்களுக்கு எப்படி கதையைப் புரிய வைக்க முடியும். கூத்தில் ஒரு கதாப்பாத்திரத்தை விளங்க வைப்பதற்கே இருபது நிமிடம் ஆகும். ஒரு கதாப்பாத்திரத்தின் அறிமுகத்திற்கு முன்னால் திரைக்குப் பின்னால் அந்த கதாப்பாத்திற்கு விருப்பமான தெய்வத்தின் துதிப்பாடல், கதாப்பாத்திரத்திற்கான திரை விருத்தம் பாடி ”வந்தேன்” என்று சொல்லி திரையை விலக்குவார்கள். அந்தக் கதாப்பாத்திரத்தின் பெருமைகள், அவங்களோட பெயர், எங்கிருந்து வராங்க, குணம் இதெல்லாம் பதிய நேரம் எடுக்கும். ஆனால் ஒரு மணி நேரத்தில் யாரு, என்ன, இந்த காட்சி என்பதைத் தவிர எதையும் சொல்ல முடியாது. இரண்டு மணி நேரம் குறைந்தது தேவை. எனக்கு ஏழு நாள், பதின்மூன்று நாள் நடப்பது தான் பிடித்துள்ளது. ஒரு கலைஞனைக் கேட்டால் மேடை தானே தேவை. அப்பறம் கூத்து ஒவ்வொரு மேடையிலும் நிகழ்த்தப்படும்போது கலைஞன் மேலும் மெருகேற்றி (Improvisation) மக்களுடைய பங்களிப்பு வழியாகவே வளர்கிறது. தெருக்கூத்து நாட்டுப்புறக்கலை. மக்களும், கடவுள் நம்பிக்கையும், திருவிழாக்களும், சடங்குகளும் இருக்கும் வரை அழியாது. மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும் பாணி இருப்பதும் அழகானது. அப்போது தான் வளரும். இல்லையெனில் தேங்கிவிடும்.

புரிசை தெருக்கூத்து (படம்: மனோ)

ர: ஈழத்தில் சு.வித்தியானந்தன், மெளனகுரு ஐயா வரை ஒரு பேராசிரியர் வரிசை கல்விப்புலத்திலிருந்து கூத்துக்கு தொடர்ச்சியாக பெரும் பங்களிப்பாற்றி இருக்கிறார்கள். கூத்துக்கலைஞர்கள்-ஆய்வாளர்கள்-கல்வி அமைப்பு ஆகியவை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். இங்கு அப்படி தொடர்ச்சியாக செயல்படும் ஒரு கல்வி நிறுவனம் மாநில அரசமைப்பில் இருக்கிறதா?

தொடர்ச்சியாக என்றால் இல்லை. ஆனால் ரவீந்திரன் சார் மாதிரி இருக்காங்க. சின்ன சின்ன வொர்க் ஷாப் போல நடத்துகிறார்கள். அப்பா நிறைய வொர்க்‌ஷாப் போறாங்க. எல்லா கலைக்கல்லூரியிலும் நாடகத்திற்கான தனித்துறை இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு இத்தனை வொர்க்‌ஷாப் நடக்க வேண்டும் என்றால் அது நடப்பதற்கான முயற்சியை எடுக்கிறார்களே தவிர அதை முழுமையாக சிரத்தையோடு தொடர்ந்து கொண்டு சேர்க்கும் ஒரு போக்கு இல்லை. அதற்கான முயற்சியை எடுக்கலாம். ஆனால் கல்விப்புலத்திற்கு அதிகம் முக்கியத்துவம் வந்துவிட்டால் கூத்து கட்டமைப்பு இன்னும் இறுக்கமாக ஆகிவிடும். பரதநாட்டியம் போல இறுக்கமாகிவிடக்கூடாது என்பது என் கருத்து. சதிர் இருந்த காலகட்டத்தில் கூத்தும் பிரபலமாக இருந்தது. அது பரதநாட்டியமாக மாற்றம் அடைந்தபின் கூத்துக்கான இடம் குறைக்கப்பட்டது. யாரோ ஒரு சாரார் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூத்தின் அசல் தன்மையைக் குலைக்கக்கூடாது.

ஆனால் நீங்கள் சொல்லும் முயற்சிகள் வழியாக தெருக்கூத்து பரவலாக அறியவைக்க முடியும் என்பதையும் மறுக்க முடியாது. இப்போ நிறைய பேருக்குத் தெரியுது.

கோ.பழனி, முத்துகந்தன் தொகுத்த தெருக்கூத்து கலைக்களஞ்சியம் புத்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களில் பள்ளிக் கல்வியை நிறவு செய்யாதவர்களே அதிகம். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம், கூலி வேலை பார்ப்பவர்கள் பெரும்பான்மையினர். தெருக்கூத்து படித்தவர்களிடமும் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா?

படித்தவர்கள் கட்டாயம் வர வேண்டும். இப்போ உள்ள தலைமுறை பெரும்பாலும் பத்து முடித்தவர்களாவது இருக்கிறார்கள். இசையை கல்லூரியில் சென்று பயில்வதைப் போல தெருக்கூத்தையும் கல்லூரியில் பயிலும் நிலை வர வேண்டும்.  

ர: கூத்து தவிர நாடகங்களில் நடித்திருக்கிறீர்களா?

ஆம். 2008-ல் புரிசை தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். ஒரு வருடம் பயிற்சி முடித்தேன். பாண்டிச்சேரி இந்தியன் ஆம்ஸ்ட்ராங் குழுவுடன் சேர்ந்து நாடகத்தில் நடித்திருக்கிறேன். இரண்டு வருடங்கள் அங்கு இருந்தேன். என்னுடைய தெருக்கூத்தில் நான் ஆடியதைப் பார்த்து தான் குமரன் வளவன் ஐயா கூப்பிட்டார்.

ர: இரண்டு வருடத்தில் எத்தனை நாடகங்கள் நடிச்சீங்க? அந்த அனுபவம் பற்றி?

இரண்டு நாடகங்கள் நடித்தேன். ஆனால் அது பெரிய ப்ராஸஸ். முதல் நாடகம் “லட்சுமணன் கனவு”, இரண்டாவது நாடகம் “Land of Ashes”. இதற்கு தனியாக பிரதி எல்லாம் கிடையாது. ஒரு ஐடியா தான். பின்னர் நடிகர்களின் இம்ப்ரோவைசேஷன் வழியாக நாடகமாக வளர்த்து எடுப்பது. அது புது அனுபவம்.

கெளரி

ர: தெருக்கூத்து, நவீன நாடகம் இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீங்க. நேர்மறை, எதிர்மறை வித்தியாசம் பற்றி?

நேர்மறை, எதிர்மறை அப்படி நான் பார்க்கல. தெருக்கூத்துல நடித்ததால நவீன நாடகம் எனக்கு சுலபமாக இருந்தது. ஒரு தைரியம் வந்தது. லட்சுமனன் ட்ரீம்ஸ் கதை தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றிய நாடகம். ஒரு குழுக்குள் நடக்கும் பூசல், போட்டி, ஆணவம் பற்றியது. இரண்டாவது போர் சம்பந்தமானது.

ர: நீங்கள் கூத்து நடிக்கும் போது உணர்வெழுச்சியாகி பித்து நிலைக்குச் சென்றதுண்டா?

நான் இதுவரை ஆனதில்லை. பெரும்பாலும் கலைஞர்கள் உணர்வு சார்ந்து கட்டுக்குள் தான் இருப்பார்கள். ஆவேசம் வந்து மிகச் சிறப்பாக நடிப்பவர்கள் உண்டு. எதிர்க்கதாப்பாத்திரங்களை உண்மையாகவே அடிப்பதையும் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் அதைப் பார்த்தால் பயமாக இருக்கும். மக்கள் கூட்டத்திலிருந்து நமக்கு பக்கத்திலிருக்கும் ஆட்களே எழுந்து மேடையை நோக்கி ஓடுவதைப் பார்த்து அழுதிருக்கிறேன். சாமி வந்திருக்கு என்று சொல்லி வீட்டிலுள்ளவர்கள் தேற்றுவார்கள் என்னை. இப்போ கூத்திற்குள் வந்தபிறகு அந்த உணர்வுகள் சார்ந்து மரியாதை உள்ளது. அந்தக் கதாப்பாத்திரங்களாக தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். அந்த உணர்வு தான்.

ர: தெருக்கூத்தில் மகாபாரதம் தான் பிரதானம். பின்னர் ராமாயணமும் ஆடப்பட்டது. இப்போது உங்கள் தெருக்கூத்து மன்றத்தில் நவீன நாடகங்களும் அரங்காற்றுகை செய்யப்படுகிறது. மகாபாரதக்கூத்து காலம்காலமாக ஆடப்படுவதன் தேவை உள்ளதாக நினைக்கிறீர்களா?

நம்ம புராணக் கதைகள நாம தெரிஞ்சுக்கறது முக்கியம். அது வழியாக அடிப்படையாக நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கறோம். அப்பறம் இந்தக் கதைகள் எதுவுமே இன்னைக்கும் முடிஞ்சபாடு இல்ல. கூத்துல கட்டியங்காரன் அதை கீழே உட்கார்ந்திருக்கிற மக்களிடம் சொல்லும் விதமாக கேள்வி கேட்கும் விதமாக உரையாடுவான். அவங்களும் அவனுக்கு பதில் சொல்லுவாங்க. உதாரணமா கட்டியங்காரன் மக்களிடம் “இவன் இப்படி பொம்பளைய பண்ணின பாவத்துக்கு நரகத்துக்கு தான் போவான் பாருங்க” என்று கேட்க, மக்கள், “ஆமா நரகத்துக்கு தான் போவான்” என்றூ கத்துவார்கள். இப்படி உரையாடல் நிகழும். ஜனங்களோட பிரதிநிதியா கட்டியங்காரன் நின்னு மக்களுக்கு என்னெல்லாம் கேள்வி வருமோ அதெல்லாத்தையும் கதாப்பாத்திரங்களை நோக்கியும் பேசுவான். அவர் ஒருத்தர் மட்டும் தான் ராஜாவை வாடா போடான்னு சொல்ல முடியும். எப்போதுமே மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் கதைகளின் வழியாக ஒன்றை சொல்லி புரிய வைப்பது எளிது. கதை தெரிந்திருக்கும் என்பதால் உரையாடுவது எளிதாகிவிடும்.

கூத்துக்கலைஞர் முனுசாமி செட்டியார்

ர: நீங்கள் பார்த்த அளவில் உங்களுக்குப் பிடித்த கூத்துக் கலைஞர்கள் யார்?

முனுசாமி செட்டியார் தாத்தா. கட்டியங்காரனாக மிகச் சிறப்பாக செய்யக் கூடியவர். கீசக வதம், அர்ஜுனன் தபசுல அவர் பண்ற ரகல ரசிக்கும்படியானது. அதற்கப்பறம் அப்பா சம்பந்தன். சீக்கிரம் மக்களைக் கவர்ந்துவிடுவார்கள். வேதாசல நாயுடு ஐயாவும் ரொம்ப பிடிக்கும். அர்ஜுனன், துரியோதனன் மாதிரியான கதாப்பாத்திரங்கள் ஆடக்கூடியவர்.

ர: தெருக்கூத்து, நவீன நாடகம் இந்த இரண்டிலும் தொடர்ச்சியாக ஈடுபடும் பெண்களின் பங்கு நீங்கள் பார்த்த வரை எப்படி உள்ளது.

 பெண்கள் தெருக்கூத்தை விட நவீன நாடகங்களில் அதிகம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கூத்தைப் பொறுத்தவரை பெண்களின் பங்களிப்பு குறைவு தான். இப்போது மெல்ல மெல்ல வளர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது. காஞ்சிபுரத்தில் ராஜகோபால் அவர்களின் குருகுலத்தில் சிறுவர், சிறுமியர் இருவருக்கும் கட்டைக்கூத்து கற்பிக்கப்பட்டது. இப்போது பெண்கள் மட்டுமே கொண்ட கட்டைக்கூத்துக்குழு ஒன்று இருக்கிறது. பெண்கள்-ஆண்கள் சேர்ந்து ஆடும் குழுவும் உள்ளது. திருநங்கைகள் இப்போது குழுக்களிலும், தனிக்குழுவாகவும் ஆடுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையாக இன்னும் வரவில்லை. ஒருமுறை தஞ்சையிலிருந்து எனக்கு தெருக்கூத்து ஆடுவதற்கு அழைப்பு வந்தது. அவர்கள் சொல்லும்போதே நீங்கள் வந்து எங்கள் பெண்கள் முன்னால் ஆடினால் தான் தெருக்கூத்தில் பெண்கள் ஆட இயலும் என நம்புவார்கள். ஒரு உந்துதலுக்காக வரச் சொல்லி கேட்டபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

கட்டைக்கூத்து குருகுலம் நிறுவனர்கள் பொ. ராஜகோபால், மனைவி ஹன்னே ப்ரூயின்

ர: தெருக்கூத்துக் கலைக்களஞ்சியத்தின் வழியாக கலைஞர்கள் பலரும் குறிப்பிடும் பெயராக அங்கம்மாள் என்ற பெயர் இருந்தது. மேலும் காளியம்மாள், பாப்பம்மாள் போன்ற பெயர்கள் வருவதைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த சிறப்பான பெண் கலைஞர்கள் யாரும் இருக்கிறார்களா?

பெண்களின் பங்களிப்பு சங்ககாலத்திலிருந்தே இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. கூத்தியர், விரலியர் என்ற பெயர்கள் வழியாகவே அதை அறியலாம். கூத்தும் முன்பிருந்தே இருந்திருக்கிறது. ஆனால் அது தான் தற்போது இருக்கும் இந்தக் கூத்து வடிவமா என்று சரியாக சொல்ல முடியாது. எப்போதோ கூத்து சடங்கு சார்ந்த கலை வடிவமாக மட்டுமாக ஆகியிருக்கிறது. பாரதக்கூத்து பதினைந்து நாள் முதல் ஒரு மாதம் கூட நடக்கும். இந்தக் காலத்தில் பெண் கூத்தர்கள் மாதவிலக்கு ஆகிவிட்டால் பிரச்சனையாகிவிடும். அதனால் ஆடமலாகியிருக்கிறார்கள். முழு நேரமாக ஈடுபடுவதும் குறைந்து போயிருக்கிறது. புரிசையிலேயே தாத்தா காலகட்டத்துல கூத்து நலிந்து போயிருக்கும்போது நாடகம் ஆடியிருக்காங்க. அப்போ இரண்டு பெண்கள் ஆடியதாக தாத்தா சொல்லியிருக்கிறார். அதன்பிறகு யாரும் இல்லை. இப்போ புரிசை கூத்து மன்றத்தின் சார்பில் பயிற்சி அளிக்கும்போது பெண்கள் அதிகமும் கலந்து கொள்கிறார்கள். அரங்கேற்றம் செய்வார்கள். ஆனால் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களாக இல்லை.

என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பாதுகாப்பு ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கு. பொதுவாக தெருக்கூத்தில் ஆண்கள் தான் பெண் வேடம் போடுகிறார்கள். அப்படி ஆண்கள் பெண் வேடம் போடும்போதே பாதுகாப்பு இல்லை. அதுவும் கூத்து நடப்பது கிராமங்களில். உடை மாற்றுவது போன்ற பிரச்சனைகளும் உள்ளது. இப்போது நிலைமை மாறியுள்ளது. காஞ்சிபுரத்தில் கட்டைக்கூத்து சார்ந்து பெண்களுக்கான தனிக்குழுவே உள்ளது. சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கெளரி, சரஸ்வதி (அம்மா), சகோதரிகள்: ராகவி, பல்லவி

ர: புரிசைப் பரம்பரையில் ஆறு தலைமுறைகள் தாண்டிவிட்டது. பரசுராம தம்பிரான் முதற்கொண்டு கண்ணப்ப சம்பந்தன் வரைக்கும் அவரவர் மனைவி, பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

எனக்கு எங்கள் பாட்டி காலத்திலிருந்து தான் தெரியும். பாட்டி கூத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் கிடையாது. ஆனால் அம்மா ரொம்ப கூத்தின் மேல் விருப்பம் உள்ளவர்கள். ஒரு ஆறு மாதம் தொடர்ச்சியாக கூத்து இருக்கும். பாரதக் கூத்தெல்லாம் பத்து முதல் பன்னிரெண்டு நாள் வேறு ஊரில் தங்குவார்கள். வீட்டைப் பார்த்துக் கொள்வது எல்லாமே பெண்கள் தான். என்ன வருமானம் வந்தாலும் சமாளித்துக் கொண்டு வீட்டைப் பார்த்துக் கொள்வது பெரிய ஒத்துழைப்பு தான்.

ர: தெருக்கூத்தில் ஆண், பெண் வேடத்தில் ஆண்களுக்கு தான் அடவுகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பாடலும், உடைகளும், ஒப்பனையும் ஆண் வேடங்களுக்குத்தான் சிறப்பாக இருக்கும். பெண்கள் பெண் வேடம் போடுவது இயலாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும் பெண் கதாப்பாத்திரங்களும் அத்தனை சிறப்பாக கூத்தில் வெளிப்படாமல் போவதன் காரணம் என்ன? கூத்துக் கலைஞர்கள் தங்கள் கூத்துப் பயணத்தில் ஸ்த்ரிபார்ட்டிலிருந்து தொடங்கி ராஜபார்ட் செல்வதையே வளர்ச்சியாகக் கருதுவதைப் பார்த்திருக்கிறேன்.

கதையைப் பொறுத்து தானே எது சிறப்பாக வெளிப்படுகிறது என்பது? இப்போ நளாயினி கூத்தில் நளாயினிக்கு தான் முதலிடம். சிலம்புச் செல்வியில் கண்ணகி தான். ஆனால் கர்ணமோட்சத்தில் கர்ணனுக்கு முதலிடம். திரெளபதி வஸ்திராபரணத்தில் திரெளபதி, துச்சாதன் இரண்டு பேருக்குமே முக்கியமான இடம். ஆனால் நீங்கள் கேட்பது புரிகிறது. இதிகாசங்களிலும் புராணங்களிலும் யாரு சக்திவாய்ந்தவராக இருக்கிறார் பாருங்கள். வில்லன் தான்.

ர: இல்ல. இதிகாசங்களில் நல்ல சக்திவாய்ந்த பெண் கதாப்பாத்திரங்கள் இருக்கிறது. அம்பை, திரெளபதி, தேவையாணி, இடும்பி, பொன்னுருவி, கண்ணகி, சூர்ப்பனகை, தாடகை, சீதை என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஆண்கள் தான் பிரதானமாக தெருக்கூத்து ஆடிவருவதால் இந்த கதாப்பாத்திரங்கள் பிரதானமாகக் கொண்ட கூத்து எழுந்து வரவில்லையோ அல்லது அந்தக் கூத்து தொடர்ந்து ஆடப்படவில்லையோ?

இப்போது புரிகிறது. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. கதையில் பெரும்பாலும் பெண் கதாப்பாத்திரங்கள் ஆண் போருக்குப் புறப்படும்போது அழுவது, காப்பாற்றச் சொல்லி அழுவது, நீதி கேட்டு அழுவது போன்ற காட்சிகள் தான் அதிகமுள்ளது. அழுகை, சோகம், தவிப்பு, அவமானம் போன்றவையே பெண் கதாப்பாத்திரங்களுக்கு இருக்கு. கதையே இப்படி இருப்பதால் நாம ஒன்னும் செய்ய முடியல.

ஆனா இன்னொன்னும் இருக்கு. கர்ணமோட்சத்துல பொன்னுருவி வரும் காட்சி ஒன்றரை மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை வரும். அது கிராமங்களில் ரொம்ப பிரபலமானது. பொன்னுருவி கதாப்பாத்திரத்திற்கென்றே தனியாக காசு வசூல் செய்து கிராம மக்கள் அந்தக் கலைஞருக்குக் கொடுப்பார்கள். திரெளபதி துகில் கூத்தில் திரெளபதியாக நடிப்பவர்களுக்கு ஊரிலிருப்பவர்கள் எல்லாரும் சேலை கொடுப்பாங்க. நீங்க சூர்ப்பனகை பற்றி சொன்னீங்கள்ல. சூர்ப்பனகையோட கணவர் இறக்கும் போது அவங்க சபதம் செய்வாங்க. கூத்தில் அந்தப்பகுதி அதிகாலை நடக்கும். அப்ப ஒட்டுமொத்த ஊரே அழுவதைப் பார்த்திருக்கிறேன். மண்டோதரி, பொன்னுருவி கதாப்பாத்திரங்களும் அப்படித்தான் இருக்கும். பொன்னுருவி கர்ணனனை போருக்கு போகவிடாமல் தடுக்கும் இடமும் உணர்வுப்பூர்வமா இருக்கும். ஒட்டுமொத்த கிராமத்திலிருக்கும் பெண்களும் கூத்தில் உள்ள பெண் கதாப்பாத்திரத்தால் தான் கவரப்பட்டிருப்பார்கள். கூத்திலுள்ள பெண் கதாப்பாத்திரங்கள் ஊரையே அழ வச்சிடுவாங்க.

தெருக்கூத்துக் கலைஞர் வீரராகவன்

ர: நீங்கள் இனி நடிக்க வேண்டும் என்று விரும்பும் கூத்து கதாப்பாத்திரம் என்ன?

திரெளபதி. பாஞ்சாலி சபதம், திரெளபதி துகில் நடிக்க விருப்பம். அந்த கூத்திற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். எனக்கு மிகவும் பிடித்த கூத்துக் கலைஞர் வீரராகவன் ஐயா பிடிக்கக் காரணமே அவர் ஆடிய சூர்ப்பனகை, திரெளபதி கூத்தினால் தான். சூர்ப்பனகை சபதம் எடுக்கும் காட்சி அதிகாலை வரும் என்று சொல்லியிருந்தேன்ல. அது அவர் நடித்து தான் மனதில் தங்கிப் போனது. தெருக்கூத்தில் பெண் கதாப்பாத்திரத்துக்கு பேர் போனவர். நான் கூத்து ஆடும்போது அவர் போல ஆட வேண்டும் என்று நினைப்பேன். திரெளபதியாக நின்னு அவர் பாடும் பாடல் மனப்பாடமாக உள்ளது. பாடுகிறார்…

திரெளபதி பாடல்: கெளரி

கொளரி – சிலம்புச்செல்வி தெருக்கூத்து (படம்: V. விஜய்குமார்)

***

***

ஜெயராம்: ஓவியர்/வடிவமைப்பாளர். கலை இலக்கிய ஆர்வலர். சிற்றிதழ்களில் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். சொந்த ஊர் குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.

ஓவியர் ஜெயராம்

ரம்யா: எழுத்தாளர். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ்விக்கி கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர். சிற்றிதழ்களில் சிறுகதைகள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவருகிறார். நீலத்தாவணி சிறுகதைத்தொகுப்பு 2024-ல் வெளிவந்துள்ளது.

ரம்யா

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *