அறமும் அறச்சீற்றமும் – மதுமிதா
(மகாஸ்வேதா தேவியின் ‘கவி வந்த்ய கட்டி காயியின் வாழ்வும் சாவும்’ நாவலை முன் வைத்து)

பீமாதல் நாடு ரூப் நாராயண் ஆற்றின் உந்தி சுழியென அமைந்துள்ளது. என்னதான் பொல்லாத ஆறாக இருந்தாலும், ரூப் நாராயண் பீமாதல் நாட்டை சற்று கருணையோடே காத்து வந்தது. அதை ஆண்டு வந்த கர்க வல்லப மன்னர்களின் வரிசையில் அப்போது பூபால் கர்க வல்லப ராஜா அதை செம்மையாக ஆட்சி செய்து வந்தார். குறை என்றால், அவர் பிராமண, காயஸ்த சாதிக்கு கெடுதல் விளைவிக்கும் எதையும், அது சைதன்யர் கொண்டு வந்த வைஷ்ணவம் ஆனாலும் சரி, அக்பர் கொண்டு வந்த இஸ்லாம் ஆனாலும் சரி, அதை மதிப்பது இல்லை, அவர் நாட்டில் அப்படி மதம் மாறியவர்களுக்கு நீதி என்பது அவர்கள் எந்த விதத்திலும் உரிமை கொண்டாடாத வரை அவர்கள் உயிருக்கு சேதம் இல்லை என்பது மட்டுமே. ஆனால் அப்படிபட்ட பொருமல்கள் கீழ் சாதியினரிடம் இருந்து மட்டுமே வந்ததே ஒழிய, வேறு யாரும் எந்த குறையும் வைக்க முடியாதபடி அவர் ஆட்சி இருந்தது. சைதன்யர் ஒரு புறம், அக்பர் ஒரு புறம் என மத மாற்றங்களுக்கு அனுமதித்த மதங்களை கொண்டு வந்து சண்டாளர், சபர் குடிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள, கலி முற்றி ஆறு வறண்டதாக கதைகள் உலாவும் நாடு. ஆகையால் அவர்களுக்கு பெரிதாய் பூபால் கர்க வல்லப ராஜாவை மோசமான மன்னர் என்று நினைக்கும் எண்ணம் வரவில்லை.
ஆனால், மன்னருக்கு ஒரு குறை இருந்தது. தனது பெருமையை எடுத்து பாட அவருக்கு ஒரு அரச கவி இல்லை. என்னதான் சுற்றியுள்ள நாடுகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு அவர் நாட்டை செல்வ செழிப்போடு ரூப் நாராயண் ஆறு தனது சுங்க பலத்தால் வைத்திருந்தாலும், அவரது பாஞ்சாலியை பாட ஒரு கவி இல்லை. இப்படி அவர் நினைத்திருந்த காலத்தில் தான் கவி வந்த்ய கட்டி காயி வருகிறார். எங்கோ தொலைதூரத்தில் இருந்து நடந்தே வந்து, தூசி நிறைந்த உடைகளுடன் தன் முன் நிற்கும் அந்த அழகிய இளைஞனை அவருக்கு மிகவும் பிடித்து போகிறது. அபயா தேவியே தனது கனவில் வந்து கர்கபூர் சென்று தனது பாஞ்சாலியை எழுதுமாறு சொன்னதாக கவி சொன்னதை அவர் முழுதும் ஏற்கிறார். வெகு சில நாட்களிலேயே கவியை தனது மகனின் தகுதிக்கு சமானமாக நிறுத்துகிறது அவரது மனம். கவியின் அழகும், ஞானமும், செல்வத்திற்கு உளம் கொடுக்காத அவரது செருக்கும் அவரை மன்னரின் நெஞ்சில் உயர்ந்த இடத்தில் வைக்கிறது.
மன்னரை தவிர யாருக்கும் கவியை பிடிப்பதில்லை, அவரை கர்வி என்றே அந்த நாடு நினைக்கிறது. எங்கிருந்தோ வந்து அநியாயமாக புகழும், அதிகாரமும் கொடுக்கப்பட்ட ஒருவானாகவே அவர் அவர்களுக்கு தெரிகிறார். மன்னரின் மதிப்புக்கும், அதிகாரமும் கொண்டவர் இருவர். ஒருவர் மன்னரின் அமைச்சர் ஹரீஷ் ராயா. அவர் ஒரு கொடுங்கோலர் என்றே அறியப்படுபவர். அவரது தண்டனைகள் நாடு முழுதும் புகழ் பெற்றவை, கொஞ்சமும் கருணை இல்லாத, அதே சமயம் ஆட்சியில் நீதி என்று புழங்க பெற்ற அத்தனையையும் கட்டி காப்பாற்றுபவர் என்று பெயர் கொண்டவர். அவர் கவியை ஏற்று கொண்டுவிட்டார் என்றோ, ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ சொல்ல முடியாத அளவிற்கு அவரது நடவடிக்கை இருந்தது. கவியை அவர் மரியாதையோடு நடத்தினார், ஆனால் எதற்கோ காத்து கொண்டும் இருந்தார். எங்கோ, எதுவோ, சரியாக இல்லை என்ற எண்ணம் அவரை விடவில்லை. உலகத்தில் தனக்கு யாருமே இல்லை என்பது போல எப்போதும் தன்னந்தனியாக ரூப் நாராயண் ஆற்றில் படகில் ஏறி அலைந்து வரும் ஒருவனை புரிந்து கொள்ள முடியவில்லை அவரால். சொந்த நாட்டிலேயே யாரும் இல்லாதவனை போல இருப்பவனிடம் நிச்சயம் ஏதும் ரகசியங்கள் இருக்கும் என்று கணக்கிடுகிறார். இன்னொருவர் மாதவாச்சாரியார், ராஜ குரு. மக்களின் அச்சத்தையும், மன்னரின் மதவாதத்தையும் தனது முதலாக கொண்டு அவர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார்.
இது எதையுமே மனதில் வாங்காமல், தனது “அபயா மங்கள்” பாஞ்சாலியை எழுதி சபையில் அரங்கேற்றுகிறார் கவி. தன்னை அந்த நாடு அந்த காவியத்திற்காகவே மதித்து, போற்றி, மிக உயர்ந்த இடத்தில் வைத்ததாக எண்ணுகிறார். மாதவாச்சாரியாரின் கடைசி மகள் ஃபுல்லரா. தாசி தெருவில் சுற்றி வராத ஒரு ஆண்மகனை கண்டுகொண்ட ஃபுல்லரா கவியிடம் காதல் கொள்ள, தனது காவியத்தில் இயற்றிய சுலபா என்ற ஆழ் படிமத்தை ஃபுல்லராவாக மனதில் உருவக படுத்திக்கொள்ளும் கவியும் அவளை தனது துணைவியாக நினைக்கிறார். அவரது செல்வாக்கையும், மன்னர் அவரது குழந்தைகளை விட அதிகம் அன்பு காட்டும் ஒருவராக கவி இருப்பதையும் கண்டு தனது மனதை மாற்றிக்கொள்ளும் மாதவாச்சாரியார், அவரது மகள் ஃபுல்லராவும் கவியும் காதல் கொண்டு வரும் போது, ஏற்றுக் கொள்கிறார்.
அவர்களின் மண ஏற்பிற்கு முன்தினம், கவியின் சொந்த பழங்குடி இனமான சுயாட் மக்கள், தங்களது ராஜாவான கல்ஹனை – கவி வந்த்ய கட்டி காயியை, அழைத்து செல்ல வருகிறார்கள். தனது பிறப்பின் உண்மையை, தான் கவியாக ஆவதே தனது பிறப்பின் காரணமாக கருதும் தனது மனதை கவி அவை முன் வைக்கிறார். அதை அவரை தவிர யாரும் ஏற்கவில்லை என்பது வியப்பும் இல்லை. ஏறி நின்றவன், கீழே விழுவதில் குரூர மகிழ்ச்சி கொள்கிறது பீமாதல். நாடு கை விட்ட நிலையில், ஃபுல்லராவை நாடி செல்கிறார் கவி. ஃபுல்லரா என்ற ஒருத்தியே இல்லாமல் இருக்க வழி செய்து கொண்டிருக்கும் மாதவாச்சாரியாரின் குடும்பம் அவரை விரட்டி அடிக்கிறது. நிதயா காட்டின் உள் சென்றால் தனது உயிரை காத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கும் கவியின் இறுதி கைவிடல் அங்கே நிகழ்கிறது.

காளிதாசன், தெனாலி ராமன் போன்ற தொன்மங்களை ஒரு மெல்லிய அங்காதமாக ஆக்குகிறது இந்த நாவல். அல்லது இப்படி சொல்லலாம், தெய்வங்கள் கனவில் நிகழ ஒரு மனிதனின் பிறப்பு முக்கியமாக ஆகிவிடுவதை முன்நிறுத்துகிறது.
மகா ஸ்வேதா தேவி ஒரு களப்பணியாளர், பழங்குடியினரின், அடிநிலையில் அழுத்தி வைக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அருகிருந்து அறிந்து, அதன் மேம்படலுக்காக உழைத்தவர். அவரின் அறச்சீற்றம் நியாயமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் எழுத்தில் நிறுத்தும் இயல்புகளும் கேட்கும் கேள்விகளும் உண்மை ஒன்றையே அடித்தளமாக கொண்டவை. இலக்கியம் எனும் முறையில் அறச்சீற்றமாக மட்டுமே நின்று விடும் எழுத்தை எப்படி அணுகுவது? வாசகர் மகா ஸ்வேதா தேவியின் எழுத்தில் பெற்றுக்கொள்வது எதை?
மூன்று சரடுகளில் இதன் அழகியலை பிரித்துக்கொள்ள முடியும்.
ஒன்று, மிக முக்கியமான சரடாக ஆசிரியர் முன்வைக்கும் சரடு இதில் இருக்கும் சமூக விமர்சனம். சாதிய மேட்டிமை, பிறன்மை படுத்தி தன்னிலை உயர்வாக ஆக்குதல் போன்ற வழமையான விமர்சனங்கள் தாண்டி, மனித குணங்களின் மீதான விமர்சனங்களும் நாவல் நிறைய உள்ளது. தான் துன்பப்படுவதை காட்டிலும் பிறர் துன்புறுவதில் மகிழும் மனது, பிறரின் வீழ்ச்சி கொடுக்கும் குரூர நிறைவு, துன்பம் என்பதை அறியாமல் வாழ்ந்தவர்கள் அடிக்கொரு முறை தான் “எந்த துன்பத்திற்கும்” துணிவதாக சொல்லும் அபத்தம், ஒடுக்கப்பட்டவர்களே ஆயினும் அவர்களும் பிறரை ஒடுக்கும் இயல்பு, எந்த வகை ஒடுக்கத்திலும் பெண்களின் நிலையே கடை நிலையாக நிற்கும் கொடூரம் என மிக நேரிடையான விமர்சனங்கள். கதை மாந்தர்கள் அவர்களுக்கு தேவையான முன் கதையோடு, காரண காரியத்தோடு உள்ளனர், ஆனால் அந்த காரணங்கள் அவர்களுக்குள் எவ்வித அறச் சிக்கலையும் உருவாக்குவாதில்லை. மாதவாச்சாரியார் ஏழ்மையின் கடை நிலையில் நின்று உழல்கிறார். குரூரத்தை கொண்டு மட்டுமே மதத்தை நிறுவ முடியும், அதை கொண்டு மட்டுமே அதிகாரம் நிறுவ முடியும் என்பதை காண்கிறார், அதையே செய்கிறார், அதிகாரமும் செல்வமும் கிடைக்கிறது. ஒரு சர்வாதிகாரி உருவாகும் விதம் காட்டப்படுகிறது, ஆனால் அவனுக்குள் இருக்கும் மனிதம் என்ன என்பது வெறும் கேள்வியாகிறது. ஒரு நொடியில் தனது ஆசை மகளை, அதிர்ஷ்டத்தை அள்ளித்தருபவள் என்று மனதில் அன்னை வடிவமாய் நிற்கும் மகளை ஒரு தந்தை துறக்கும் இடம் என்னவாக இருக்க முடியும்? வெறும் கேள்விகள் மட்டும் வைத்து, அதற்கான சீற்றத்தை வெளிப்படுத்தி, உலகம் இப்படித்தான் எனும் சோர்வை தரும் ஒன்றாக அன்றி அதை மீறி நாவல் எழ முடியாமல் நின்று விடுகிறது. அதை தாண்டி, இலக்கியத்தை கொண்டு வாசகன் கண்டு அடைய பாதை இருக்கிறது என்றால், அது மீதி இரண்டு சரடுகளில் உள்ளது.
இரண்டாம் சரடு, தொன்மங்களையும், ஆழ்படிமங்களையும் மீட்டுருவாக்கும் பழக்கம் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து வருகிறது என்பதை பற்றி. அந்த மீட்டுருவாக்கங்களை கூர்ந்து அவதானிக்கும் போது கசண்டுகளும் வெளிப்படுகின்றன. ஆரண்ய சபரியின் குழந்தைகளான திக்பாலகர்கள் பதின்மர் திசைகள் பத்தையும் காப்பதை போல, ஐராவதங்கள் தங்கள் தந்தங்களால் உலகை தாங்கி நிறுத்துகின்றன என்ற தொன்மத்துடன் தொடங்கும் இந்த நாவல், அந்த ஆரண்ய சபரி என்ற தெய்வம் நாகரீகம் அடைந்த மக்களுக்கு தெய்வமாக ஆகும் போது இடையில் உடை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறாள். சபரி இனத்தவருடன் அவள் தொடர்புறுத்த படாமல் இருக்க, அவளுக்கு விந்திய வாசினி என்ற பெயர் சூடப்பெறுகிறது. ஒரு குலத்தின் சின்னத்தை வெளியிருந்து வந்தவர்கள் பறிப்பதில்லை , அவர்களே மறக்க, மாற அந்த தெய்வத்தை கைவிடுகிறார்கள், அல்லது மாற்றிககொள்கிறார்கள். இந்த நிகழ்வு வெவ்வேறு வகையில் நாவல் நெடுக நிகழ்கிறது. ஆனால் அப்படி மாறாமல் தங்கிவிடும் மக்களையே வேறு குலமாக ஆக்கி, அவர்களை கீழ்நிலை படுத்துவது தொடர்ந்து நிகழ்கிறது. தன்னிலை உயர்வு என்பது இன்னொருவரை கீழ்நிலையில் தள்ளுவத்தில் மட்டுமே நிகழ்கிறது என்ற சரடை பல இடங்களில் கொண்டுவரப்படுகிறது. இதற்கு நேரத்திரில், மறக்கப்பட்டு விடும் தொன்மங்கள் எல்லாமே நாம் எதிர்மறையான நிலையில் எடுக்கும் முடிவுகள் அல்ல. நாம் நமக்கு தேவையான, அல்லது நமக்கு நெருக்கமான கதைகளையும் தெய்வங்களையும் மட்டும் தான் தொடர்ந்து பேணுகிறோம். இது மிகவும் இயற்கையாக (organic) நிகழும் செயலே. ஆறுகள் பாதை மாதிரி வேறு ஆறுகளாக உருவெடுக்கும் போது, அவற்றின் கதைகளும் அதற்கேற்ப மாறுகின்றன, பழயவை இயற்கையாக மறக்கப்படுகின்றன. ரூப் நாராயண் தெய்வமாக மதிக்கப்படும் பீமாதலில், சிலாயி ஆறு மற்றும் த்வாரகேஸ்வர் ஆறு வெறும் கதைகளில் எஞ்சுகின்றன. “பீமாதல் ஒரு போக்கிரி, அதனாலதான் சிலாயி த்வாரகேஸ்வர் ஆறோட போய் விட்டது. அதனால கோவத்துல பீமாதல் ரெண்டையும் முழுங்கீடுச்சு.” பால காப்ய முனியின் கதையாக சொல்லப்படும் இன்னொரு தொன்மம் இந்த இரண்டு துருவங்களும் கலந்த நிலை கொண்டது. யானைகளை தெய்வங்களாக மதிக்கும் குடிகளின் வழி வந்தவர்கள், தங்கள் மூதாதைகள் யானைகளிடம் இருந்து பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை அழுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள், ஆனால் யானைகள் பயங்கரமானவை, கட்டுக்குள் வைக்க முடியாதவை என்று அவற்றிடம் இருந்து விலகியும், அச்சம் கொண்டும் வாழ்கிறார்கள். இதன் விளைவாக, பால காப்ய முனி சுயாட் இனத்தின் தந்தையாக ஒதுக்கி வைக்கப்படுகிறார், யானைகளை அடக்க, அவற்றுடன் வாழ அவர்களுக்கு கற்றுத்தந்த ஒரு தெய்வமாக – ஆணுக்கும் பிடி யானைக்கும் பிறந்த அந்த மனிதன் மனித குலத்தின் தெய்வமாக இல்லாமல், அந்த விட்டு வந்த குலத்திற்கு மட்டும் தந்தையாகிறார். அவரது தொன்மம் என்பதை கடந்து அவரது வாழ்வில் வந்த இரு பெரும் மனிதர்களும் மொத்தமாகவே மறக்கப்படுகிறார்கள். தாகத்தால் சாக இருந்த மனிதரை மூலையூட்டி காத்த அன்னை என்ற படிமமும், பசியால் வாடிய மனிதரை தான் பசி பொறுத்து உணவளித்த மனிதன் என்ற இன்னொரு படிமமும் அங்கே கை விடப்படுகின்றன.
மூன்றாம் சரடு, நமது தத்துவங்கள். பிறந்து, வளர்ந்து, உண்டு, புணர்ந்து, மறித்து செல்லும் உலகில் மனித மனம் சில சமயம் தேடும் கேள்விகள். யானைகள் கூட்டம் சுற்றி திரியும் நிதயா காட்டில் யாரும் நுழைவதில்லை என்பது மனித குளம் நாகரீகத்துக்காக மறந்த காடு அது என்பதால் மட்டும் அல்ல, அந்த காடு மனித தத்துவத்தின் படிமமாகவும் கூட. அது மனிதன் மறந்த, பார்க்க மறுக்கும் கேள்விகளும் நிறைந்த காடு. அந்த காட்டின் உள்ளே சென்று அந்த யானைகள் அப்படி அங்கே என்ன தான் செய்கின்றன என்று கண்டு வர ஒருவன் செல்கிறான். திரும்பி வந்து கொஞ்சம் பித்து நிலையில் சுற்றி திரியும் அவனிடம் என்ன பார்த்தாய் என்ற கேள்விக்கு, இருட்டு என்பது மட்டுமே அவனது பதிலாக வருகிறது. இருட்டை, அடர்ந்த அளக்க இயலா இருட்டை சாந்ததல்களின் போங்கா-புங்கி எனும் தெய்வமாக, பீமாதல் வணங்கும் பாசுலி, ரங்கினி, துர்கா என்ற பல பல தெய்வங்களாக அளவு வைத்து பார்ப்பதாக சொல்கிறான். “வெறும் இருட்டு, நாம தான் அளக்க நிறைய அளவு கோல் வெச்சிருக்கோம், ஆனா அது எதுல அளந்தாலும் வெறும் இருட்டு,” மக்களுக்கு புரியவில்லை, அவனை பைத்தியம் என முடிவு கட்டிவிடுகிறார்கள். தனது பிறப்பை வேண்டாம் என்று வரும் கவி, இறுதியில் நிதயா காட்டில் தஞ்சம் புகும் போது, காட்டில் சுற்றி வரும் கலை தனக்கு மறந்ததை, அன்னை மாடி என இருந்த காடு பயங்கரமான ஒரு இடமாக மாறுவதை உணரும் இடங்கள் முக்கியமானவை. கல்ஹன், கவி வந்த்ய கட்டி காயி ஆக, அவனது தாயையும் துறந்து வருகிறான், ஆனால் இங்கே அந்த தாயும் அவளை கை விடுகிறாள். இயற்கை அங்கேயே தான் இருக்கிறது, அப்படியே இருக்கிறது. அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் கல்ஹன் துறந்து வந்தான், அதனால் கவி வந்த்ய கட்டி காயி அதை தண்டனையாக மட்டுமே பார்க்க முடியும். இந்த நாவலின் நயம் மிகுந்த தருணம் இது தான். அந்த முடிவில் அந்த தண்டனையை ஏற்பது இருவரில் எவர்? இருவருமே தான், ஆனால் கல்ஹன் தன்னை இழந்த பொது உண்மையில் இழந்தது இதைத்தான்.

1511 ஆம் ஆண்டு நிகழ்வதான கதையாக களம் விரிக்கப்பட்டு, அதன் மக்களின் எண்ணங்கள், வாழ்வியல் முறை, சாதிய கோட்பாடுகள், அவர்களின் பழங்குடிகளுடன் அவர்களுக்கு உண்டான உறவு, அவர்களின் உணவு முறைகள், குடும்ப அமைப்புகள், வணிக தேர்ச்சி, மன்னர் முறையின் மாற்றங்கள், இவற்றை முன் வைத்து கொண்டு செல்கிறது இந்த நாவல். சைதன்யர் தோன்றி வைஷ்ணவ மதத்தை, பக்தி மார்கம் கொண்டு இறைவனை யாரும் அடையலாம் எனும் விழுமியத்தை முன் வைத்த காலம் இது. அந்த நிலையில், பக்தி மார்க்கம் எந்த அளவில் இந்து மத அடிப்படையின் மறுமலர்ச்சியை கொண்டு வந்துள்ளது என்ற அளவில் இந்த நாவலை பார்த்தால், கல்ஹன் சிறிது காலம் சென்று பிறந்திருந்தால், அவன் கவி வந்த்ய கட்டி காயி ஆக நிலைத்து நின்றிருக்க முடியும். பல கல்ஹன்களை பலி கொண்டு தான் அந்த மறுமலர்ச்சி வந்திருக்க முடியும், வரலாறு நமக்கு சொல்வது அதைத் தான்.
*