நாட்டார் இசை ஆன்மிகமானது – தேஜாஸ்ரீ இங்கவ்லெ

நாட்டார் இசை என்று சொன்ன உடனே நமக்கு மெல்லிய இசை நினைவுக்கு வருவது இல்லை. கட்டுப்படுத்தப்படாத நிலையில் வெளிப்படும் மனித உணர்வுகள் என்றவுடனும் நமக்கு முதலில் உக்கிரமான வன்மையான இசை கொண்ட பாடல்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நாட்டுப்புற இசை (கிராமம்), கானா பாடல்கள்(நகரம்) என இரு பிரிவு பாடல்களிலும் இத்தகைய தன்மையான பாடல்களே இன்று மக்கள் மத்தியில் பரவலாக கவனத்தில் உள்ளது. இந்திய நாட்டார் இசை மரபு, பக்தி இசை மரபு ஆகிய இரண்டையும் நோக்கினால் சமூகத்துடன் பின்னிப் பிணைந்தும் (சடங்குகள், திருவிழாக்கள்), அதிலிருந்து தனித்தும் (நாடோடி இசை) இந்த இசை மரபு பல வகைப்பட்டு இருப்பதைக் காணலாம். சாதி, மத, இனம் ஆகிய அடையாளங்களைத் தாங்கிய நாட்டார் இசை மரபுகளையும் தாண்டி மனித உணர்வுகள், வாழ்க்கை நோக்கு, உயர் தத்துவம் சார்ந்து இயங்கிய ஒரு மரபும் நமக்கு உண்டு.
கட்டுக்கடங்காத கோபம், உக்கிரம், கொண்டாட்டம், வன்மை ஆகிய உணர்வுகளுக்கு இணையாகவே நாட்டார் மரபில் வைக்கப்படவேண்டிய இன்னொரு தரப்பு கட்டுப்பாட்டை மீறி வெளிப்படும் அன்பு, கருணை, பக்தி, காதல், ஏகாந்தம், அகமகிழ்வு போன்ற மெல்லுணர்வுகள். இம்மரபின் பெரும்பான்மையானவர்கள் வீட்டைத் துறந்து இந்தியாவின் பெரும் நிலப்பரப்பில் அலைந்து திரிந்து மக்களின் மனத்தை இசையால், சொல்லால், கவிதைகளால், கதைகளால் குணப்படுத்துபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். நம் தமிழ் மரபில் ஒளவையார் அப்படியான ஒரு ஆளாக இருந்திருக்கலாம் என்று தேஜாவுடனான இந்த நேர்காணலின் போது தோன்றியது. இன்றும் ஒளவையாரப்பன், ஒளவையார் என பெயர் சூட்டும் வழக்கம் தென் தமிழகத்தில் இருக்கிறது. பாடினிகள், பாணினிகள், பாணர்கள், பொருணர்கள், சூதர்கள், விறலியர்கள் என பல பெயர்களால் அழைக்கப்பட்ட ஒரு நாடோடி குழு இருந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்களின் வழியாக அறியலாம். அவர்கள் உபயோகித்த பல்வகை யாழ்களைப் பற்றியும், இசைத்த பண்ணைப் பற்றியும் சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரை (பொ.யு. 13), பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் (பொ.மு. 5) ஆகியவற்றில் காண முடிகிறது. எனில் இக்குலத்தின் தொன்மை அதற்கும் முற்பட்டது.
இசை உலகப்பொதுமையானது எனினும் நம்மால் இந்திய மரபைப் பொறுத்து கர்நாடகம், ஹிந்துஸ்தானி என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிட இயலும். தமிழ் இசைமரபு கர்நாடக இசை மரபுக்கு நெருக்கமானது. கர்நாடக இசைக்கான திட்டவட்டமான வரையறை அல்லது கீர்த்தனை மரபு தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் மற்றும் சியாமா சாஸ்திரி ஆகியோரின் காலத்தில் பொ.யு. 18 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. இந்த செவ்வியல் இசைக்கான மூலம் கொண்ட ஓர் பாணர் இசை மரபு இல்லாமல் அவை இத்தனை துல்லியமாக உருவாகி வந்திருக்க இயலாது.
தனியாக அலைந்து திரியும் இந்த இசைஞர்கள் தங்களுக்கான எந்தத் தொடர்ச்சியையும் வலிந்து உருவாக்குவதில்லை. அங்ஙனம் தமிழ் மரபில் அது எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய திட்டவட்டமான ஆராய்ச்சி இன்றளவும் நம்மிடம் இல்லை. நாட்டாரியல் இசையில் மெல்லுணர்வு, ஆன்மிகம், பக்தி சார்ந்த இசை மரபு ஒன்றைப்பற்றிய தேடல் வழியாக நாம் அதில் பயன்படுத்தப்பட்ட ராகங்கள், இசைக்கருவிகள், கவிதை, வாழ்க்கை நோக்கு, தத்துவம் என யாவற்றையும் மீட்டெடுக்க முடியும். ஓர் மறக்கப்பட்ட வரலாற்றை அதன் வழியாக எழுத முடியும். இந்த நேர்காணல் நாட்டார் இசை மரபு சார்ந்து பல கோணங்களில் சிந்திக்க உதவலாம்.
தன் ஆன்ம ஈடேற்றத்திற்காக வீட்டைத் துறந்து செல்பவர்களில் பெண்கள் இருந்தனரா? இருக்கின்றனரா? என்ற கேள்விக்கு திட்டவட்டமாக ”ஆம்” என்று சொல்லக்கூடிய ஒரு மரபின் தொடர்ச்சியை தேஜாஸ்ரீ வழியாக பார்க்க முடிந்தது. தேஜாஸ்ரீ இங்கவ்லெ (Tejashree Ingawale) மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். குடும்ப வழியில் நாட்டார் இசையைக் கைகொண்ட தன் தாத்தா, பாட்டி வழியாக அவருக்கு அதைப் பற்றிய பரிட்சயம் இருந்தாலும் அவருடைய பயணம் எல்லா இந்திய இளைஞர்களைப் போலவே இயல்பாக அமைந்து அதன்பின் மீண்டும் தன் வேருக்கே திரும்பிய கதை சுவாரசியமானது. தேஜா நாட்டார் மற்றும் பக்தி இசைப் பாடகர், இசைப் பயிற்றுனர், சமூகச் செயல்பாட்டாளர். இசை, கலை, அன்பு ஆகியவற்றின் வெளிப்பாட்டின் மூலமே மனிதர் விடுதலையடைய முடியும் என்று நம்புபவர். ஷேஜோ சங் (Sahajo Sang) என்ற அமைப்பின் மூலம் மனித மனங்களை குணப்படுத்தும் வழிமுறைகளை முன்னெடுப்பவர். இந்திய நாட்டார், பாரம்பரிய இசையில் தென்படும் பக்தி-யோக மரபுகள், மொழி, ஞானம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவர். நாட்டார் இசை நோக்கி அவருடைய பயணம், செயல்பாடுகள், கனவுகளைப் பற்றி நீலிக்காக ஓர் உரையாடல்
-ரம்யா
*

*
உங்களின் நாட்டார் இசைப்பயணம் எங்கிருந்து துவங்கியது?
2017 முதல் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. நான் அப்போது என் வாழ்க்கையின் மிக மோசமான நிலையில் இருந்தேன். அடுத்தடுத்து நெருக்கமானவர்களின் மரணங்கள். அது எனக்கு என் வாழ்க்கையை நோக்கிய பல கேள்விகளை எழுப்பியது. அதனால் என் அம்மாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்தேன். அப்படிச் செல்வதற்கு முன் என்னுடைய தாத்தாவின் நண்பரை சந்திக்கச் சென்றேன். அவர் ஒரு ஏக்தாரியை கையில் பரிசளித்தார். என் இசைப்பயணம் அவர் என் கையில் அதைத் தந்த கணத்திலிருந்து ஆரம்பித்தது எனலாம். ஏக்தாரி என்பது எங்கள் குடும்ப மரபிலிருந்து வந்தது. என் பாட்டிக்குப் பிறகு அந்த மரபை எடுத்துச் செல்ல யாரும் இல்லை. நான் இதைத் தேர்ந்தெடுத்தது மிகவும் இயல்பாக நிகழ்ந்தது. 2017 முதல் 2020 வரை நான் பல இடங்களில் அந்த ஏக்தாரியை வைத்துக் கொண்டு பாடியிருக்கிறேன். எங்கெல்லாம் என்னை அழைத்து என் குரலைக் காணிக்கையாகக் கேட்டார்களோ எல்லா இடங்களிலும் பாடினேன். யாரிடமும் எந்தப்பணமும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தப்பாதையை நான் ஓர் அழைப்பாகத் தான் பார்க்கிறேன். இந்தியா முழுவதும் பல கேள்விகளுடன் சுற்றித் திரிந்து நான் என் எல்லா கேள்விகளுக்குமான விடையாக இசையைப் பெற்றேன். இந்தப்பயணத்தில் நான் பல ஃபகிர்கர்கள் (fakir), பவுல்கள் (Bauls), கின்னர்கள் (kinnar) என பலரையும் சந்தித்தேன். அவர்களிடமிருந்து கபீர், மீரா, அக்கமகாதேவி ஆகியோரின் பாடல்களைத் தெரிந்து கொண்டேன். மிக சக்திவாய்ந்த பெண் சாதவிக்களைக் கண்டேன். அவர்கள் எனக்கு பல பாடல்களைப் பரிசளித்தார்கள்.
இந்த வாழ்க்கைக்கு முன்னர் உங்கள் இயல்பு வாழ்க்கை எப்படி இருந்தது?
நான் டிசைனராக இருந்தேன். விளம்பரப்படங்களுக்கான டிசைனிங் வேலைகள் செய்து கொண்டிருந்தேன். தனியாகவே பல பெரிய பதிப்பகங்களுக்கு டிசைனிங் வேலைகள் செய்து கொடுத்திருக்கிறேன். இந்தத்துறையில் நான் நன்கு அறியப்பட்ட கலைஞராக இருந்தேன். எல்லா வகையிலும் நிறைவாக இருந்தேன்.
உங்கள் புகைப்படத்தை முதன்முதலில் பார்த்த போது… தலையில் கொண்டை போட்டு கண்களை மூடி அமர்ந்திருக்கும் ஓர் புகைப்படம். அது எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு நிலை என்று தோன்றியது. எந்தக்கேள்வி எந்த ஒன்று உங்களை அந்த நிலை நோக்கி உங்களைச் செலுத்தியது என்று அறிய விரும்புகிறேன்?
மரணம் தான்.
நம் வாழ்க்கையில் மிகவும் நெருங்கிய நபர்கள் என சிலர் இருப்பார்கள் இல்லயா. அந்தமாதிரி என் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமானவர் என் அப்பா. அவரைத் தவிற இன்னொரு நபர் எனக்குத் தேவையேயில்லை எனுமளவு என் வாழ்க்கைக்கான எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். என்னுடையை எல்லா முடிவுகளிலும் உடன் இருந்தவர். விளம்பரத்துறையில் கான்ஸ் விருது இரு முறை வென்றிருக்கிறேன். மும்பையில் எட்டு வருடங்கள் விளம்பரத்துறையில் இருந்தேன். அதில் பெரிய பெரிய திட்டங்கள் வைத்திருந்தேன். ஒரு நாள் இதையெல்லாம் விட்டு விட்டு புனே வர விரும்புவதாகவும் என் உள்ளுக்குள் ஏதோ நடப்பதாகவும் என் அப்பாவிடம் சொன்னபோது முதலில் அறிவுரை சொன்னார். நான் வேலையை விட்டு விட்டு இரு மாதங்கள் வீட்டில் சும்மா இருந்தேன். எங்கும் செல்லவில்லை. அப்பாவிடம் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். “நீ என்னவாக விரும்புகிறாய்” என்று கேட்டார். நான் அழ ஆரம்பித்துவிட்டேன். நடு ராத்திரி அது. ஒரு மணி இருக்கும். அப்பா என்னை ஆறுதல் படுத்தி எனக்கு டீயெல்லாம் போட்டுக் கொடுத்தார். “நான் தூய கலைஞராக ஆக வேண்டும்” என்று சொன்னேன். “இந்த சாதி, பாலினம்” என யாவற்றையும் தாண்டி எதுவுமில்லாமல் நான் மட்டுமேயான கலைஞராக இருக்க வேண்டும் என்று சொன்னேன். நான் விளம்பரத் துறையில் செய்து கொண்டிருந்த கலை சார்ந்த கிரியேட்டிவ் வேலைகளில் அதை என்னால் உணர முடியவில்லை என்றேன். குழந்தைகளுக்கான ஓவியப்பயிற்சி ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக தன் வாழ்க்கைச் சூழலால் குணமடைதல் தேவைப்படுபவர்களுக்கு ஓவியம் பயிற்றுவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தனியாக ஓவியக் கலைஞராக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது இசையெல்லாம் என் எண்ணத்தில் கூட இல்லை. அடுத்த ஓரிரு நாட்களில் என் தந்தை இறந்தார். அவருக்கு மாரடைப்பு வந்தபோது நான் சரியாக அவர் அறைக்குள் நுழைந்தேன். வீட்டில் யாருமே இல்லை. நான் அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். அவர் இறந்து போனார். இறுதியாக அவருடைய கண்கள் என்னை சந்தித்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. அடுத்து அடுத்து நெருக்கமானவர்களின் மரணம் என் தேடலை இன்னும் தீவிரமாக்கியது. வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் உள்ளது. என்னை அது இசைக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது. நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டுச் சென்றாலும் கூட நமக்கு நல்லதே செய்கிறார்கள். இன்று திரும்பிப் பார்த்தால் இது எதுவுமே நடக்கவில்லையெனில் நான் இத்தனை தீவிரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. இன்று என்னுடைய இருப்பே மகிழ்ச்சிக்குரியதாக, நான் வாழ்வதற்கு பணமும், ஏன் உணவும் கூட மிகப்பெரிய தேவையாகத் தெரியவில்லை. வெறும் காலில் தான் இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். பல நல்ல மனிதர்களை சந்தித்திருக்கிறேன்.

இந்தப்பயணத்தில் நீங்கள் சந்தித்த மனிதர்கள், கற்றுக் கொண்டவை பற்றி சொல்லுங்கள். உங்களுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா?
ஒரு கேள்வி இல்ல ரம்யா. பல கேள்விகள் இருந்தது. இந்தப்பயணத்தின் வழியாக அந்தக்கேள்விகளெல்லாம் இல்லாமல் ஆனது எனலாம். ”பரிபூரண சரணடைதல்” என்பதை உணர்ந்தேன்.
நான் சந்தித்த ஃபகிர்கள் (fakir), பவுல்கள்(Baul), கின்னர்கள்(kinnar) என யாவரிடமும் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். பாடல் வழியாக, கவிதைகள் வழியாக என. என் வலியைப் பற்றி சொன்னால், “இப்போது இந்த வலியை நாம் கொண்டாடுவோமா?” என்று சொல்லி பாட ஆரம்பித்துவிடுவார்கள். நான் அழுது கொண்டே அந்தப்பாடலைக் கேட்டிருக்கிறேன். மகிழ்ச்சியின் அழுகை தான். நான் வீட்டில் முடங்கி அழுது கொண்டிருந்திருந்தால் வலியை இப்படிக் கொண்டாடியிருப்பேனா தெரியாது.
அப்படியான வேறு தருணங்களைப் பற்றியும் சொல்லுங்கள்…
மத்தியப்பிரதேசத்தில் அலைந்து கொண்டிருந்தபோது பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்தேன். அவர் அருகில் உட்கார்ந்தேன். அவர் கபீர் பற்றி பாடினார்.
“நீ அந்தக் கடவுளின்/அன்பாளனின்/எந்த ஆற்றலை நீ வழிபடுகிறாயோ அவன் நாமத்தை.. அத்தனை காதலுடன் பாடவில்லை எனில் நீ இந்த உடலை/மூச்சுக் காற்றை/வாழ்வை வைத்திருந்து என்ன பிரயோஜனம்” என்ற பொருளில் வரும் ஒரு பாடல் அது. கபீர் மட்டுமல்ல, மீரா, அக்கமாகாதேவி, ரூமி, துக்காராம், ஜனாபாய், சாவதாமல்லி, அமீர் குஸ்ரூ, பவாணி தாஸ், புல்லே ஷா, பாபா கோரக்நாத், மச்சிந்திரநாத், அக்கோ தாஸ், முக்தாபாய், ஏக்நாத் என பலருடைய பாடலும் இந்தப்பயணத்தில் என்னை ஆட்கொண்டது. இவர்களுடைய காலம் தான் வேறு. ஆனால் ஆன்மா ஒன்று தான். அந்த ஆன்மாக்களை நான் நேரடியாக ஃபகிர்கள் வழியாக சந்தித்துக் கொண்டிருந்தேன். ஞானத்தின் இருப்பிடமாக அவர்கள் எனக்குத் தெரிந்தார்கள். சில சமயம் இது எதுவுமே கூட நடக்காது. சும்மா அவர்களுடன் இருப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. எங்கு வேண்டுமானாலும் ரோட்டோரங்களில் அவர்களுடன் உட்கார்ந்து கொள்வேன். உணவு கிடைத்தால் சாப்பிடுவேன். இல்லையெனில் பட்டினியாக இருப்பேன். பொதுமக்களும் சில சமயம் பேச வருவார்கள். அவர்கள் வழியாகவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். அத்தனை காதலை, அன்பை நான் மக்களிடமிருந்து பெற்றேன். அது என் தந்தையின், என் உற்றவர்களின் அன்பு தான். நான் பார்க்கும் மனிதர்கள் அனைவரும் எத்தனை நல்லவர்கள், அன்பானர்கள், காதல் ததும்பியவர்கள் என்று தோன்றியது. எனக்கு உணவூட்டிய அத்தனை பெண்களையும் காதலித்தேன். இந்தியா அத்தனை அழகான நாடு! எல்லாவகையிலும். எல்லா இடமும். எத்தனை அழகு! கண்கள் பொங்கி அதை நினைத்து பல முறை அழுதிருக்கிறேன். நான் நிறைய பெற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அல்லது இந்தப் பயணம் என் பெற்றுக் கொள்ளலை(Receiving) வேறு விதமாக ஆக்கியது.
பாதுகாப்பு சார்ந்த பிரச்சனை இருந்ததில்லையா?
மொழி தெரியாத இடங்களுக்குக் கூட சென்றிருக்கிறேன். தொடர்பு கொள்ளவே முடிந்திருக்காது. ஆனால் இந்தப்பயணத்தில் அப்படி எதுவுமே எனக்கு பிரச்சனையாக இல்லை.
ஓர் பழங்குடி கிராமத்துக்கு குழந்தைகளுக்கான இசைப் பயிற்சி அளிக்கச் சென்றிருக்கிறேன். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு என சென்று கொண்டே இருந்தேன். அவர்கள் கொடுக்கல் வாங்கல் முறையில் எனக்கு உணவு, தங்குமிடம், தட்சிணை அளிப்பார்கள். எதுவும் பிரச்சனை இல்லை.
ஆனால் முற்றிலும் அறிவு சார்ந்து இயங்கும் மனிதர்கள் மட்டுமே எனக்கு அசெளகரியத்தை அளித்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தகவல்களால் நிரம்பியிருக்கிறார்கள். அவர்களால் இதயத்திலிருந்து யோசிக்கவே முடியாது. ”ஏன் ஏன் – எப்படி எப்படி” என என்னைக் கேள்விகளால் துழைத்திருக்கிறார்கள். புத்தரால் இந்தியா முழுவதும் செல்ல முடிந்திருக்கிறது. ஒரு பெண் புத்தர் ஏன் இல்லை? ஏன் இருக்கக் கூடாது? அவர்களின் பல கேள்விகளுக்கு என்னால் சிரிக்க மட்டுமே முடிந்திருக்கிறது. என் அம்மா பத்தாவது வரைதான் படித்திருக்கிறார். ஆனால் அவர்களுக்கு இருக்கும் புரிதல் கூட இல்லாமல் இருப்பவர்களால் தான் பிரச்சனை. அம்மா என் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டு, ”உன் கேள்விக்கான விடையை நீ அடந்து நீ திரும்பி வருவாய். இல்லையெனிலும் பிரச்சனையில்லை நான் இருக்கிறேன்” என்றார். என் வாழ்நாளில் என் தாத்தா, அப்பா என எனக்கான எல்லா ஆண்களையும் இழந்தவள் நான். ஆனால் அம்மா ஒருவர் போதும் என்று தோன்றுமளவு அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். என்னை இதுவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதில்லை. நாம் நம் இளமை நாட்களில் இருக்கிறோம் இல்லையா. மக்களின் கண்கள் முதலில் கவனிப்பது அதைத்தான். அது சமூக அமைப்பு சார்ந்த சிந்தனை. அதை குறையும் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் அந்த அமைப்புக்குள் தானே இருக்கிறார்கள். பாவம் என்று தோன்றும். இந்தப்பயணங்களின் வழியாக தெரிந்து கொண்ட இன்னொன்றுண்டு. வறுமை என்பது எப்போதும் பணத்தைப் பற்றியதல்ல என்பது. அன்பு செய்ய முடியாதவர்கள், காதலிக்க முடியாதவர்களும் வறுமையானவர்கள் தான். வாழ்க்கையைப் பற்றி, காதலைப் பற்றி, அன்பு பற்றி அறியமுடியாதவர்களும் வறுமையானவர்கள் தான். அவர்கள் பாவம்!
ஆழத்தில் யாருமே கெட்ட மனிதர்கள் இல்லை. ஒரு மனிதர் தன் வாழ்க்கையில் யாரிடமும் சொல்ல முடியாத வலியை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். சிலர் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டிருக்கலாம், சிலர் வேறு வகையில் ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவர்கள் வாழ்க்கை அவர்களை வேறு வழிக்கு கொண்டு சென்றிருக்கலாம். நான் எல்லாருக்காகவும் பாட வேண்டும் என்று நினைத்தேன். எல்லாருக்காகவும். எல்லா மனிதர்களும் ஏதோ வகையில் வலியை சந்திக்கிறார்கள். ஆனால் எல்லோரும் நான் சென்ற பாதையை தேர்ந்தெடுக்க முடியாதல்லவா. அப்படித் தேர்ந்தெடுக்க முடியாதவர்கள் அனைவருக்குமாக நான் பாட வேண்டும் என்று நினைத்தேன். நான் பெற்றுக் கொண்டதையெல்லாம் அளிக்கவும் வேண்டுமல்லவா. ஏனெனில் இது என்னுடையது அல்ல. சிறிது காலத்திற்கு ”அது” என்னுடையதாக இருந்தது. நான் உரிமை கொண்டாட முடியாது. கோயில்கள், தர்காக்கள், வீடுகள், வீதிகள் என எல்லா இடங்களிலும் பாடியிருக்கிறேன். எனக்கு மேடைகளில் அமர்ந்து பாடுவதன் மேல் பெரிய விருப்பம் இல்லை. நான் மக்களுடன் அமர்ந்து அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து பாடவே பெரும்பாலும் விரும்புவேன். எனக்கும் இன்னொரு மனிதருக்கும் மத்தியில் இருக்கும் வெளியை, இடைவெளியை விரும்பவில்லை. இசை வழியாக ஒன்றாக விரும்புகிறேன். அனைவருக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.
இந்திய செவ்வியல் இசை மரபைப் பொறுத்து கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி என இரு பெரும் மரபுகள் உள்ளன. அதிலிருந்து இந்த இசைமரபு எவ்வாறு வேறுபடுகிறது?
நான் ஒரு ஓவியக்கல்லூரி மாணவர். கணக்கு, பிற பாடங்கள் மேல் எனக்கு ஆர்வம் வந்ததே இல்லை. நான் எப்போதும் எனக்கான கனவுலகில் இருப்பேன். ஓவியக்கல்லூரி இருக்கிறது என்று தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் அங்கு சென்று ஓவியம் மட்டும் வரைந்தால் போதும் என்பது எத்தனை ஆறுதல்! நான் தனியாகச் சென்று மிகுந்த உற்சாகத்துடன் அக்கல்லூரியில் சேருவதற்கான வேலைகளைப் பார்த்தேன். அப்பா மிகுந்த ஆச்சர்யப்பட்டார். அங்கு கவிதை, நாடகம் என பலவும் என்னை ஈர்த்தது. பல கலைகளின் பரிட்சயமும் எனக்கு உண்டு.
மனிதர்கள் உடலுக்கு அப்பாற்பட்டவர்கள், மூளைக்கு அப்பாற்பட்டவர்கள், இதயத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை உணரும் வாய்ப்பு எப்போதாவது நிகழும். நான் பாடும்போது சில சமயம் அழுகை வரும். சில சமயம் எத்தனை நேரம் பாடிக்கொண்டிருந்தோம் என்பதை மறந்து போய் பாடிக் கொண்டிருந்திருக்கிறேன். அது நம்மை மீறிய ஒன்றை நாம் கண்டடைந்ததின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். இடத்தையும், காலத்தையும் சில சமயம் மறந்துவிடுகிறோம். தன்னையே கூட மறக்கும் லயிப்பு நிலை வாய்க்கும். இது தான் கலை. இது அரிதாகத் தான் நடக்கும். அப்படி நடக்கும் போது யார் உங்களுக்கு அருகில் இருந்தாலும் அது ஒரு “Collectiv energy” தான். அந்தக் கலையை நீங்கள் ரசிக்கும்போது உங்களை அறியாமல் நீங்கள் அழுவது, சிரிப்பது, உடல் சிலிர்ப்பது என்பது அந்த ஆற்றலை நீங்களும் அடைவது தான். நீங்கள் கலைக்கு அருகில் இருந்தால் தான் அது நடக்கும். பல சமயங்களில் அப்படி அடைந்தவர்கள் தாங்கள் என்ன அடைந்தோம் என்பதை வெளிப்படுத்தக்கூடத் தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அவர்களும் அந்த கலைஅனுபவத்தை அடைந்திருக்கிறார்கள் என்பது தான் சரி.

நாட்டார் இசைப் பயிற்சி சார்ந்த பயணம் பற்றி சொல்லுங்கள். உங்களின் குரு/ஆசிரியர் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்தப்பயணத்தில் குறிப்பிட்ட குரு இவர் என்றோ, இப்படிக் கற்றுக் கொண்டேன் என்றோ சொல்ல முடியாது. அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னைச் செலுத்தியது. முழுமையான சரணடைதல் வழியாக வாழ்க்கையின் போக்கு வழியாக அதை அனுமதித்தேன். நான் பெரிய பாடகராக வர வேண்டும் பெரிய கலைஞராக வர வேண்டும் என ஒருவர் நினைக்கலாம். அவர் எது ஆக வேண்டும் என முடிவு செய்கிறாரோ அதற்கு முயற்சி செய்தால் அதை அடையலாம் தான். ஆனால் குருவுக்கு வேறு விஷயங்களும் தருவதற்கு இருக்கலாம். நீங்கள் இன்னது தான் வேண்டும் என்று நினைத்து ஒன்றில் இறங்கினால் அதை நிச்சயமாக அடைவீர்கள் அல்லது அடையாமல் போகலாம். ஆனால் முழுமையான சரணடைதல் வழியாக குரு நமக்காக விழைந்ததை பெற்றுக் கொள்ளலாம். அது நாம் நினைத்ததை விடவும் மேலானதாக இருக்கும். நாம் கோவிலுக்குச் செல்லும் முன்பு நம் செருப்பைக் கழற்றி வைக்கிறோம். செருப்பு என்பது ஆணவத்தின் ஒரு முகம். செருப்பை வைத்து நாம் ஒரு மனிதரை எடை போட முடியும். அவர் பணக்காரரா? ஏழையா? பெண்ணா? ஆணா? குழந்தையா? என. நாம் கடவுளுக்கு முன் அல்லது குருவிற்கு முன் அல்லது ஃபகிருக்கு முன் அல்லது யோகி/யோகினிக்கு முன் செல்லும் போது செருப்பைக் கழற்றிவைத்து விட்டுச் செல்கிறோம். நாம் யார் என்ற அடையாளத்தைத் துறந்து செல்கிறோம் என்பதே அதன் பொருள். குரு என்பது அரூபமானதாகவும் இருக்கலாம்.
எனக்கு நான் இந்த வாழ்க்கை முழுவதுமாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மட்டுமே ஆசை. கடைசி மூச்சு வரை. ஆசிரியர்களை சந்தித்துக் கொண்டே இருப்பேன். நான் காலையில் எழுந்ததும் வேண்டிக் கொள்வது “என்னை எக்காரணம் கொண்டும் மாற்றிவிடாதே. கடைசிப் பிறவி வரை”. இந்த உலகம் முழுவதும் இசையால் ஆனது. மெளனத்திலும் கூட இசை உண்டு. நான் இப்படியே இதிலேயே இருக்க விரும்புகிறேன்.
ஒருமுறை ஒரு ஃபகிரிடம் துடுக்காக “நீங்கள் ஏன் ஃப்கீராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
அவர் “நான் பிறந்ததிலிருந்தே ஃபகீராக இருக்கிறேன்” என்றார்.
“நான் பாவம். இதையெல்லாம் விளங்கிக்கொள்ள முடியாது. கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்” என்று பரிதாபமாகச் சொன்னேன்.
”ஃபகிரி என்பது அன்பிலிருந்து வருவது. ஒருவர் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது அன்பு தான்”
“எப்படி” என்று கேட்டேன்.
“அன்பு வழியாகத்தான் உன்னால் பச்சையைப் பார்க்க முடியும். அன்பு வழியாகவே உனக்கு ஆசை, இச்சை, காமம் பிறக்கும். அன்பு வழியாக மாயாவிற்குள் வருவாய். அன்பு வழியாக இந்த அனைத்திற்குள்ளும் நீ பிணைக்கப்படுவாய். அதனால் ஒரு நாள் நான் முடிவு செய்தேன். நான் எதையெல்லாம் அன்பு செய்கிறேனோ அதையெல்லாம் கொடுத்துவிடுவேன் என. அப்படித்தான் என் அன்னையை, என் வீட்டைத் துறந்தேன். நான் அனைத்தையும் பொதிமூட்டை போல ஏற்றிக் கொள்ளாமல் விடுதலையாகி நிற்க வேண்டும் என்று அனைத்து அன்பையும் துறந்தேன். லேசாக காற்று போல ஆனேன். ஒன்றுமில்லாமல் ஆனேன். ஃபகிராக ஆன போது பல வித ஆபரணங்கள், மாலைகள், மோதிரங்கள் என அன்பின் நிமித்தமாக மக்கள் அளித்தார்கள். அவற்றின் மீது பற்று கொள்ள ஆரம்பிக்கும்போதே அதைக் கழற்றி யாரிடமாவது கொடுத்துவிடுவேன்.” என்றார்.
அவரை ஒரு இடத்தில் பார்க்கவே முடியாது. சென்று கொண்டே பயணத்திலேயே இருப்பார். என்னிடம் ஒருமுறை “நம் சந்திப்பு முடிவடைந்தது. இனி சந்திக்க வேண்டாம்” என்றார். மனிதர்களையும் அவர் துறந்து கொண்டே இருப்பார். நான் கடைசியாக சந்தித்தபோது ஓர் அழகான நீல நிற மாலை அணிந்திருந்தார்.
அவர் பெயர் என்ன?
மஸ்தான் பாபா.
நீங்கள் பார்வதி பவுலை வணங்குவது போல ஒரு புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அவருடனான உங்களின் உறவு அல்லது சந்திப்பு பற்றி சொல்லுங்கள்.
அவரை பல முறை சந்திக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் மேற்கு வங்கத்திற்கு சென்றால் கேரளாவிற்குச் சென்றிருப்பார். கேரளாவுக்கு வந்தால் மேற்கு வங்கம் சென்றிருப்பார். அதன்பிறகு 2023-ல் தான் முதல் முறையாக அவரை சந்தித்தேன். பத்து வருடங்களாக அவரைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவரிடம் கூறினேன். என் வாழ்க்கை இந்த பத்து வருடங்களில் எப்படியெல்லாம் மாறிவிட்டது என்பதைப் பற்றியும் சொன்னேன். அவர் “அப்படியானால் நீ உன் வனவாசத்தையெல்லாம் முடித்துவிட்டுத்தான் என்னை சந்திக்க வந்திருக்கிறாய்” என்றார். அது மிகப்பெரிய வார்த்தை. ஏனெனில் குருவிடமிருந்து “ஏற்கனவே முடித்துவிட்டு” என்று வரும் வார்த்தை பெரியது. அவர் பெரிய சக்திவாய்ந்த பெண்மணி. பவுல்களின் மரபை எத்தனை காத்திரமாக உலகெல்லாம் கொண்டு சேர்த்துள்ளார் என்று பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். அவரின் இருப்பே எனக்கு அதிகமாகத் தந்தது எனலாம். என் கண்களைப் பார்த்து “என்னை அணைத்துக் கொள்ள வேண்டுமா?” என்று கேட்டார். ”ஆம். ஆம்” என்று பலமாகத் தலையாட்டினேன். அணைத்துக் கொண்டார். குழந்தை போல் அவர் மேல் சாய்ந்து அழுது கொண்டே இருந்தேன். மனம் முழுவதும் நான் இங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினேன். ஏழு நாள் இசைப்பயிற்சிக்காகத்தான் சென்றிருந்தேன். என்னை இரு நாட்கள் மட்டும் ஷாந்தி நிகேதனில் தங்கச் சொன்னார். அதன்பின் எனக்கான ஏற்பாடுகளைச் செய்து ஆறு மாதங்கள் அவருடன் ஆசிரமத்தில் தங்கச் செய்தார். அதுவும் பெரிய கொடுப்பினை. ஒரு நாள் நான் செய்ய வேண்டியதெல்லாம் முடித்துவிட்டும் வெறுமே அவர் காலடிகளில் சென்று சரணடைய வேண்டும் என்று தோன்றுகிறது. வேறு எதுவும் வேண்டாம். பார்ப்போம்.
உங்களுடைய நிகழ்ச்சி நிரல் ஒன்றில் ரபீந்திர சங்கீத் என எழுதியிருந்தது. அது என்ன?
ரபீந்திரநாத் தாகூரின் கவிதைகள் மற்றும் பாடல்கள்.
அதிலேயே வங்காள மற்றும் மராத்திய நாட்டுப்புற பாடல்கள் என்று எழுதியிருந்தது. கவிதைகள், நாட்டுப்புற பாடல்கள் மேல் கவனம் சென்றதற்கான காரணம் என்ன?
நாட்டுப்புற பாடல்கள் தான் கலைகளின் பிறப்பிடம். இசை தான் முதல்ல. அதன்பிறகு மனித உணர்வுகளிலிருந்து ராகங்கள், தாளங்கள். இந்தியா முழுவதிலும் இந்த நாட்டுப்புற பாடல் கலாச்சாரம் இருக்கிறது. நான் இந்தியா முழுவதும் அலைந்து இந்த இசையை கோர்வைப்படுத்த விரும்பினேன். கவிதைகளுடன் அது நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஆரம்ப காலத்தில் கவிதை வரிகள் தான் என்னை மிகவும் ஈர்த்தது. அதை சேகரிக்க ஆரம்பித்தேன். நான் சேகரிக்கும் போது வங்காள மொழியை நான் அறிந்திருக்கவில்லை. அல்லது மராத்தியைத்தவிர பிற இந்திய மொழிகளிலுள்ள கவிதைக்கான அர்த்தங்கள் புரியவில்லை. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களின் இசையும் அது பயன்படுத்தும் கவிதைகளும் ராகத்துடன் அமைந்தவை. கவிதைகள் இசையின் ராகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைப் பார்த்தேன். கவிதைகள் புரியாத போது கூட என்னால் இசை வழியாக அதன் அர்த்தத்தை உணர முடிந்ததது. அதன் பின் தான் இசை மேல் கவனம் சென்றது. ஒரு பொதுவான தொடர்பு மொழி ஒன்றை கண்டு கொண்டது போல. இந்தியா முழுவதுமாக பயணம் சென்றேன். சென்ற இடங்களிலெல்லாம் இந்த நாட்டுப்புறப்பாடல் மரபைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன். நான் அந்த மரபின் தொடர்ச்சியாக என்னை உணர்ந்தேன். வங்காளம், கன்னடம், சூஃபி என எந்த இசையை நான் கேட்டாலும் அதை அப்படியே பாட என்னால் முடிந்தது அவ்வாறு என்னை உணரச் செய்தது. ரொம்ப ஆழமான தொடர்பை உணர்ந்தேன். நான் இதற்காகத்தான் பிறந்திருக்கிறேன் என்று தோன்றியது.
உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார்?
எனக்கு கபீரை மிகவும் பிடிக்கும். ரூமி, சூஃபி கவிஞர் கையம், செளத்த மாலிக் மகாராஷ்டிரா, மீரா, அக்கமகாதேவி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த லால் மற்றும் ஃபகீர், சண்டிதாஸ்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு லீலா கிருஷ்ணா (கேரளா) அவர்களை சமீபத்தில் பார்த்தேன். அவர் ஒரு கவிஞர். இப்போது பாடவும் செய்கிறார். எனக்கு மலையாளக் கவிதைகள் பலவற்றை அறிமுகப்படுத்தியவர். அவர் என்னைப் பார்த்தபோது நீ ஏன் இப்போதெல்லாம் ஓவியம் வரைவதில்லை என்று கேட்டார். உன்னுடைய ஓவியங்களிலுள்ள இம்ப்ரெஷன்களை நாங்கள் மிஸ் செய்கிறோம் என்றார். நான் அவரிடம், “அண்ணா, நான் கவிதைகள் வாசிப்பதும் பாடுவதும் எல்லாமும் ஓவியம் வரைவது போல தான். வித்தியாசம் என்னன்னா நான் மட்டுமே அந்த ஓவியத்திலுள்ள வண்ணங்களையும், இம்ப்ரெஷன்களையும் வாங்கிக் கொள்கிறேன். நான் எப்போதும் வரைந்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அந்த கேன்வாஸ் அரூபமானது” என்றேன்.
அண்ணா மேலும் சொன்னார், “நீ மிகவும் கொடுத்து வைத்தவள். நீ இசையை கவிதை வழியாகக் காண்கிறாய். நீ ஒரு ஃபகீர், நீ ஒரு மோகினி. உலகமெல்லாம் சுற்றி வார்த்தைகளை, இசைக்கருவிகளை, இசையை சேகரிக்கிறாய். உன் பாதங்கள் எங்கெல்லாம் போகிறதோ அதுவே ஓவியம்” என்றார். நான் இதைக் கேட்டு மிகவும் அழுதேன். அவர் கலையை, கவிதையை, இசையை ஏற்றுக் கொள்ளும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் அந்த நேரத்தில் எனக்கு குருவாக ஆனார். புதிய கதவுகளை, புதிய பரிமாணங்களை நமக்குத் திறந்து காட்டும் எவரும் குருவே. எனக்கு இசை, ஓவியம், கவிதை யாவும் ஒன்றெனவே படுகிறது.

சமீபத்தில் ஒளவையார் என்ற தமிழ்க்கவிஞர் பற்றிய கலந்துரையாடல் வைத்தோம். அவரை நீங்கள் சொல்வது வழியாக தொகுத்துக் கொள்கிறேன். அவரைக் கவிஞர் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. சங்கமரபிற்குள்ளோ, செவ்வியல் கவிஞர்கள் வரிசையிலோ, நாட்டாரியல் கவி மரபிலோ மட்டும் அடைத்துவிட முடியாது. ஆனால் அவரை இந்த ஃபகீர் மரபின் தொடர்ச்சியாகப் பார்க்கும் போது பெரிய சித்திரம் கிடைக்கிறது.
கவிஞர்களுக்கு இயல்பாகவே இசைமீது நாட்டம் இருப்பதைக் காண முடிகிறது. கவிஞர்கள் அனைவரையும் பெரும் இசை மரபின் தொடர்ச்சியாக ஓவியர்களாகப் பார்க்கும் பார்வை கிடைக்கிறது.
என்னுடைய குடும்பத்தில் எங்கள் தாத்தாக்களும், பாட்டிகளும் ஃபகீர்கள், யோகிகள், கர்நாடக இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். ஆன்மிக சாதகங்கள் செய்து வந்தவர்கள். எங்கள் வீட்டில் எப்போதும் இந்தக்கூட்டம் இருக்கும். என் தாத்தா சொன்ன வரி நினைவுக்கு வருகிறது. “நாட்டாரிசை இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வது” என்பார். நாட்டார் பாடலின் குரலுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு என்பதை இப்போது உணர்கிறேன். அவர், “நாட்டார் பழம்பாடல்களைப் பாடுவது என்பது இதற்கு முன்பு பாடிய ஆயிரம் குரல்களுக்கு அருகில் நிற்பது. பாடும்போது நீ மட்டுமல்ல. உனக்கு முன்னும் பின்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நீ இறந்துவிடுவாய். இந்தப்பாடல்கள்/கருவிகள் இறக்காது. நீ பாடும்போது உனக்கு முன் பாடிய அத்தனை பேரின் ஆசியும் உனக்கு உண்டு” என்றும் சொல்வார். இது நான் சிறுமியாக இருக்கும்போது காதில் விழுந்தது. அப்போது என்னுடைய பாதை இதுவாக இருக்கும் என்று தெரியாது. ஆனால் இந்த வரிகள் ஆழமாக என்னுள் இன்றும் நினைவில் உள்ளது. சிறுமியாக இருந்தால் எதிர்காலத்திலோ இறந்தகாலத்திலோ இருக்க முடியாதல்லவா. ஒரே காலம் மட்டும் தான். நிகழ்காலம் மட்டுமே.
இன்று நான் இந்தியா முழுவதும் சுற்றுகிறேன். நிறைய மனிதர்களை சந்திக்கிறேன். அவர்கள் எனக்கு கவிதைகளை, இசையை, வாழ்வுக்கான வார்த்தைகளை பரிசளிக்கிறார்கள். சில சமயம் எதுவுமில்லை. வெறும் மெளனம். இவையாவற்றின் வழியாகவும் என்னை ஆசிர்வதிக்கிறார்கள். இது என் தாத்தாவின் அப்பாவின் ஆசியும் கூட.
நீங்கள் கவிதை எழுதுவது உண்டா?
ஏதோ வகையில் எழுத்துடன் நான் தொடர்பில் இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். முன்பு எழுதியதில்லை. இப்போது அதிகம் எழுத்து வழியாக வெளிப்படுகிறேன். சில பத்திகள், கவிதைகள். லீலா கிருஷ்ணன் அண்ணாவிடம் இதைச் சொன்னபோது “இப்போது நீ அடுத்த கட்ட வாழ்விற்குள் வந்திருக்கிறாய்” என்றார். ஒரு கட்டத்தில் நான் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு இசைக்கோர்வையில் மூழ்கியிருந்தேன். ஒன்றை பெற்றுக் கொள்ளும்போது, அதாவது இதுவரை பெற்றுக் கொள்ளாத ஒன்றை பெற்றுக் கொள்ளும்போது அதற்காகவே நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
இன்று அதிகாலை உனக்கு தொலைபேசியில் அழைக்கும் முன் நான் இருக்கும் இடத்திற்கு முன்னால் வெள்ளை மலர்கள் பூத்து நின்று கொண்டிருந்தது. அதில் முதலில் லயிக்க விரும்பினேன். ரம்யாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணமும். அதிலிருந்து இரு மலர்களை பறித்து என் அருகில் வைத்துக் கொண்டேன். இப்போது அந்த மலர்களை என் அருகில் வைத்திருக்கிறேன். அதைப் பற்றி, அந்த உணர்வைப்பற்றி எழுத விரும்புகிறேன். எனக்கு அருகிலிருக்கும் இந்த மலரையும், எனக்கு முன்னால் பூத்துக் குலுங்கும் நிறைய மலர்களைப் பற்றியும் எழுத விரும்புகிறேன். சில சமயம் பாடத் தோன்றும். சில சமயம் ஒரு இசைத்துணுக்கு வந்தமரும். அதை நான் பெற்றுக் கொள்கிறேன். அவ்வளவு தான்.”

இந்த நிலையை நீங்கள் அடைவதற்கு முன் இந்த மரபு சார்ந்த பரிட்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் செய்த பயணம், அதன் வழியான அறிதல் ஆகியவை முக்கியம் என்பதை உணர்கிறேன். நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு முன் யாரிடம் என்பதை முடிவு செய்யும் பயணத்தை நீங்கள் மேற்கொண்டதை உணர்கிறேன்.
இது ரொம்ப அழகான உணர்வு. இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கூட அழகான ஓவியம் தான். நான் முன்பு ஓவியம் வரைந்து கொண்டே இருந்திருக்கிறேன். முழு நாளும் அதற்குள்ளேயே திழைத்திருக்கிறேன். வண்ணங்களால் நிறைத்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் அந்த காலகட்டம் மிக அழகானது ரம்யா. என்னுடைய ஆசிரியர் ஒருவர் “நீ ஒரு கட்டத்தில் அனைத்தையும் ஓவியமாக பார்க்க ஆரம்பித்துவிடுவாய். எந்த லேயர்ஸும் இல்லாமல்” என்றார். உன்னிடம் பேசிக் கொண்டிருப்பது கூட எனக்கு அவ்வாறு தோன்றுகிறது. நாம் இருவரும் இணைந்து இந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கிறோம். Collective painting. புரியாத மொழியில் ஒருவர் பாடும்போது அந்த மொழியிலுள்ள வார்த்தைகளைக்கூட அந்த மொழியில் தேர்ச்சி பெற்றவரை விட, நெருக்கமான உணர்வுகளை என்னால் அந்த வகையில் தான் உணரமுடிகிறது.
இசை ஓவியத்தை விட உயர்ந்த கலையாக சொல்லப்படுகிறது. நீங்கள் சொல்வதை இன்னொரு வகையிலும் புரிந்து கொள்கிறேன். நீங்கள் ஓவியம் வரைவதும் ஒரு வகையில் பாடுவதற்கு ஒப்பனது தான். நீங்கள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்போது போடு இசையில் ஈடுபட்டிருந்திருக்கிறீர்கள். மொழியும் எழுத்தும் இசையாக பாவிக்கப்படுவதுண்டு. நீங்கள் செய்வதை இசையாகவும் பார்க்கலாம். இதை இன்னொரு பார்வைக்கோணமாக சொல்கிறேன்.
புரிகிறது. கலைஞர் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வலி/துக்கம் உள்ளுக்குள் இருக்கிறது. என் ஸ்டூடியோவில் வரைந்து கொண்டிருக்கிறேன். அந்த வலியின் ஆழமான வெளிப்பாட்டை அந்த ஓவியத்தில் கடத்த முற்படுகிறேன். வலியின் அழகைத் தேடுகிறேன். அதை ஓவியத்தில் கண்டுகொள்ள முற்படுகிறேன். ஓவியத்திலுள்ள வண்ணங்களும், கோடுகளும் அதை வெளிப்படுத்த உதவி செய்கின்றன. ஆனால் வரைந்து முடித்தபின் அது என்னுடையதல்ல. அந்த ஓவியம் பார்ப்பவருடையதாகிறது. நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ, எதை விரும்புகிறீர்களோ அது அதுவாக ஆகிறது. நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்களானால் அது வேறொரு பொருள் படுகிறது. நான் வலியில் துக்கத்தில் வரையும் அந்தக் காலமும் வெளியும் வேறு இல்லயா. அதனால் தான் மனிதர்கள் ஓவியத்தை வீட்டில் சட்டகமாக்கி வைக்கிறார்கள். அது ஒவ்வொரு காலத்திலும், வெளியிலும் ஒவ்வொரு பொருளை அளிக்கிறது. காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வேளைகளில் கூட அது மாறும். அதனால் தான் ஓவியத்தில் ஓவியர் மெல்ல இல்லாமல் ஆகிவிடுகிறார். வீட்டில் வைக்கும் ஓவியம் அந்த வீட்டிலுள்ளவர்களின் வெளிப்பாடாக மாறிவிடும். ஓவியம் ரசிப்பவருடைய பார்வைக்கோணங்கள் வழி இவ்வாறாக மாறுகிறது.
ஆனால் இசை அப்படியல்ல. நான் பாடும்போது ஒரு மேடையில் அல்லது இடத்தில் காலத்தில் அமர்ந்திருக்கிறேன். நான் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறேன் இல்லயா? பாடும்போது எங்கோ ஒரு தருணத்தில் நாம் இதுவரை பெற்றுக் கொள்ளாததை பெற்றுக் கொள்ளும் நிலை ஒன்று வரும். அழுகை வரும். அல்லது சிறிய தடங்கல். ஆழத்தில் ஏதோ ஒன்று நிகழ்கிறது. நான் பாடுகிறேன் ஆனால் அழவும் செய்கிறேன். என்னைப் பார்ப்பவர் அதே உணர்வை தான் அடைய முடியும். ஏனெனில் நான் முன்னால் இருக்கிறேன். என்னால் மறைக்க இயலாது. இந்த உலகத்தில் மிகத்தூய்மையான, மறைக்க இயலாத விஷயம் “சுவாசித்தல்” தானே. என் உடல் முழுவதும் அதற்கு சரணடைந்துவிடும். என்னைக் கேட்டுக் கொண்டிருப்பவரும் அந்தத் தருணத்தில் இயல்பாக என் அழுகையை அடைகிறார்கள். ஆனால் அவர்கள் அழுவதற்காக வேறு காரணங்களை வைத்திருக்கலாம். சிலர் தங்கள் அப்பாவை, மறைந்தவர்களை, அன்புக்குரியவர்களை நினைத்துக் கொண்டிருக்கலாம். இந்த வாழ்க்கைக்காக, தருணத்திற்காக நன்றி சொல்லிக் கொண்டிருக்கலாம். சிலர் இந்த நிகழ்வுக்கு முன் வாழ்க்கையிலிருந்து பிய்த்துக் கொண்டு சென்று விடலாம் என்று கிளம்பி வந்திருக்கலாம். கூட்டாக (collective) இது அந்த இடத்தில் நிகழ்கிறது. அழுதுகொண்டிருக்கும்போதே நான் புன்னகைத்தால் பிறரும் புன்னகைப்பார்கள். எவ்வளவு ஆச்சர்யமானது இல்லயா? இந்த நிகழ்வுகளுக்கிடையில் தொடர்ந்து மூச்சு விடுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அனைவரும் ஒரே படகில் இருப்பவர்கள் போல மிதந்து கொண்டிருக்கிறோம்.
கபீரின் ஒரு வரி உண்டு. நீங்கள் ஒன்றிணைந்துவிட்டால் அதன்பிறகு பிரிய முடியாது. (When u become one. You cant apart)
இசைக்கச்சேரியிலும் அவ்வாறு நிகழ்வதுண்டு. ஒரு தருணம் உள்ளது. அதை நீங்கள் உடைத்துச் செல்லும்போது அனைவரும் ஒன்றிணையும் தருணம் வரும். கவிதையிலும் இது நிகழும். ஒரு வார்த்தை வழியாக நாம் அனைவரும் அந்தப்படகில் ஏறிவிட முடியும். இப்போது அனைவரும் வேறு வேறு படகில் இருக்கிறோம். (சிரிக்கிறார்..). இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் மக்களை கவனித்திருக்கிறேன். அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். குழந்தைகளைக் கொண்டு வந்திருப்பார்கள். சிலரின் துக்கமான முகம் தெரியும். சிலரின் அசிரத்தையான முகம். வயதான தம்பதிகள், இளைஞர்கள் என வெவ்வேறு மனநிலையில் வெவ்வேறு மனிதர்கள். ஆனால் இசை நிகழ்ச்சி ஆரம்பித்து எந்த கணத்திலோ, ஒரு வார்த்தையில் அனைவரும் ஒரு படகிற்குள் வந்துவிடுகிறார்கள். அது தான் இசையின் ஆற்றல்.
என்னால் ”ஒரு வார்த்தை” என்று சொன்னதை இலக்கியத்துடன் மிக ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. உணர்ந்திருக்கிறேன். இது கால பேதமில்லாமல் இயங்கும் ஒரு குழு இல்லயா?
ஆம் மிகப்பெரிய குழு. கவிதையின், கலையின் காதலர்கள்.
நீங்கள் ஹிந்துஸ்தானி இசை கற்றவர். ஆனால் நாட்டார் பாடல்கள் பாடுபவர். கலைகள் செவ்வியல் ஆகும்போது உறைந்து போவதாக நான் முந்தைய பேட்டி எடுத்த கெளரி குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு தெருக்கூத்துக் கலைஞர். நீங்கள் நாட்டார் மரபு என்று சொல்வதால் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். இந்த பார்வைக்கோணத்தைப் பற்றி எப்படிப் பார்க்கிறீர்கள்?
செவ்வியல் கலை மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. யாரோ ஒருவர் அந்த நிலையில் மிகப்பெரிய ஒன்றை பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து பின் வருபவர் அந்த நிலையை அடைய நினைக்கும் முயற்சி என்று அதைப் பார்க்கும்போது தோன்றும். நல்ல கலைஞர்கள் அந்த வழியில் அந்த நிலையை அடையவும் செய்கிறார்கள்.
நீங்கள் செவ்வியல் – நாட்டாரியல் கலை இந்த இரண்டையும் எப்படிப்பார்க்கிறீர்கள்?
முதலில் நாட்டாரியல் பாடல் பயிற்சி பற்றி சொல்கிறேன். நான் முதலில் அனைத்தையும் துறந்து வெளியில் செல்கிறேன். என்னுடைய குடும்ப மரபு உட்பட அனைத்தையும் இழந்து பாடல்கள் கற்கச் செல்கிறேன். பல நேரங்களில் என் வயிற்றில் உணவு இருக்காது. பசித்து இருப்பேன். நாட்டார் பாடகராக இருப்பது கெளரவமாக இருப்பது இல்லை. அது ஒரு வாழ்க்கை முறை. அதன் வழியாக வருவது தான் அந்த வெளிப்பாடு. நாட்டார் இசை குழுத்தன்மை கொண்டது. மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டது. பாடலுக்கிடையில் நான் அழுகை வந்தால் அழுவேன். சிரிப்பு வந்தால் சிரிப்பேன். அதை நான் கட்டுப்படுத்தத் தேவையில்லை. மக்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள். புரிந்து கொள்வார்கள். அது தான் தூய வெளிப்பாடு என்று நினைக்கிறேன். எதையும் மறைக்காமல் வெளிப்படுத்துவதே நாட்டார்தன்மை.
இது யாரும் கற்றுக் கொடுத்து வருவதல்ல. ஆசிரியர் இவர். இவரின் சிஷ்யர் இவர் என்று சொல்லிவிட முடியாது. தனிச் சட்டமோ, ஒழுங்கோ கிடையாது. ஆனால் தனித்தனியாக ஒவ்வொருவரும் அந்த விதிகளையும் ஒழுங்கையும் வைத்திருப்பார்கள். எந்த லஜ்ஜையையும் எடுத்து சுமந்து கொள்ளக் கூடாது. லஜ்ஜை என்றால் புரிகிறது இல்லயா.
ஆம்.
உங்களை விட இன்னொருவர் நன்றாகப் பாடுகிறார் எனில் பொறாமை கொள்ளாமல் இருப்பது. நாட்டார் தன்மை என்பது என்னைப் பற்றியது மட்டுமல்ல. தனி மனிதனைப் பற்றியது அல்ல. கூட்டான மனிதர்களைப் பற்றியது. பொறாமையை சுமப்பவர்களால் எப்படி பாட முடியும்? லஜ்ஜை என்றால் எப்படிச் சொல்வது.
புரிகிறது. அசிரத்தையாக. எதைப்பற்றிய போதமும் இல்லாமல் இருத்தல்?
ஆம். நீர் போல ஒழுகுவது என்று சொல்லலாம். தங்கு தடை இல்லாமல் பாட வேண்டும். இருக்க வேண்டும். பயம் இருக்கக் கூடாது. பயம் இருந்தால் எப்படிப் பாட முடியும்?
செவ்வியல் இசை கற்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும். ரியாஸ் (riyaaz) செய்ய வேண்டும். சா (sa) செய்ய வேண்டும். பைரவ் ராகம், யமா ராகம் ஆகியவற்றை ரியாஸ் செய்ய வேண்டும். இந்த இரு ராகங்களும் செவ்வியல் இசைஞர்களுக்கு முக்கியமானது. எத்தனை நூற்றாண்டுகளாக எத்தனை சிரத்தையுடனும் ஒழுக்கத்துடன் இந்த ராகங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்!
ஆனால் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. வாழ்வு தன்னிடம் முழு சரணாகதியையும் கோருவது. காதல் வந்தால் காதலில் விழுகிறோம். அந்த நபர் கைவிட்டுச் சென்றால் வலியில் வருந்துகிறோம். என்ன நேர்ந்தாலும் பாடலாம். வலி இருந்தால் வலியை. மகிழ்ச்சி இருந்தால் மகிழ்ச்சியை. அனைத்தையும் கொண்டாட வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் உடையலாம். Just sing madly!! (சிரிக்கிறார்…) ”ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பாடுங்கள். அது தான் அழகு!”
நாட்டார் பாடகர்களுக்கு எந்தச் சலுகையும் வசதியும் கிடையாது. ஒரு கோயிலில் பாட அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மழை பெய்கிறது. எந்த வாகனமும் கிடைக்கவில்லை. மழையோடே நடந்து சென்று தான் பாட வேண்டும். பாட வேண்டும் என்பது தான் முதன்மையாக இருக்கும். வசதியை முன்னால் நிறுத்த மாட்டார்கள். பாடுவதற்காக பல மைல்கள் நடந்து செல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அழகானவர்கள். இசையை எவ்வளவு விரும்புகிறார்கள் பாருங்கள். மனிதர்களை, அவர்களின் நேரத்தை எவ்வளவு மதிக்கிறார்கள் பாருங்கள். பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. பசியுடனும் பாடுவார்கள். பிறந்த குழந்தைக்கும், மரணத் தருவாயிலிருப்பவர்களுக்கும், உடலைவிட்டுச் சென்றவர்களுக்கும் பாடுவார்கள். திருமணங்களில், அதில் நடக்கும் சடங்குகளுக்குப் பாடுவார்கள். மனித உணர்வுகளை, மானுட குலத்தை கொண்டாடுபவர்கள் இவர்கள். மீராவிற்கு, கிருஷ்ணருக்கு, க்வாஜாவிற்கு எல்லா தெய்வங்களுக்கும் பாடுவார்கள். அவர்கள் எதற்குத்தான் பாடாமல் இருப்பார்கள்?
இது எதுவும் இல்லாமல் தானக்காகவும் பாடிக்கொள்வார்கள்…
ஆம். இயற்கையின் முன் பாடுவார்கள். நதிக்காகப் பாடுவார்கள். பாடிக் கொண்டே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களைப் பார்த்திருக்கிறீர்களா. அவர்கள் யாருக்காகப் பாடுகிறார்கள்? ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நம்மை விடச் செல்லும் படகோட்டி பாடிக் கொண்டே வருவார். எதற்காக? இது தான் நாட்டார்பாடல். மனிதர்களுடன் தொடர்புடையது.
உணர்வுகளை வெளிப்படுத்துதல் மட்டுமே பிரதானம் இல்லயா?
ஆம். மிக ஆழமான வகையில்.
உணர்வுகளும் காலம் தோறும் கடந்து வரும் ஒன்று தானே. நாம் படும் உணர்வு என்பது மானுடகுலம் கடந்து வந்த உணர்வு தானே. ஒரு உணர்வு நிலையில் நாம் தொடர்பு கொள்ளும் மானுட மனம் எத்தனை! என யோசித்திருக்கிறேன்.
இந்த நாட்டார் இசைப் பயணம் ஆன்மிகமானது. ஆனால் நாட்டார் இசையை மக்கள் அந்தக் கோணத்தில் பார்ப்பதில்லை. ஏனெனில் தூய நாட்டார் இசைக்கென ஒரு மரபு உள்ளது. அதன் எளிமைத்தனமையால் மிக எளிதாக திரிபடையக் கூடியது. கிராமப்புரங்களில் நாட்டார் பாடல்களின் மரபை எந்த எதிர்பார்ப்புமின்றி கடத்தி வந்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அத்தனை தூய்மையாக இருக்கும். ஆனால் புகழ்ச்சிக்காகவும், ட்ரெண்ட்க்காகவும் இளைய தலைமுறையில் நாட்டார் பாடல் வேறொன்றாக இன்று நிலை நிறுத்தப்படுகிறது. துரிதமாக ஒருவர் புகழடைவதைப் பார்த்து இன்னொருவர் அதே போல முயற்சிக்கிறார். நாட்டார் இசை என்றாலே இது தான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து விடுகிறது. அவ்வளவு சிரமப்பட்டு காப்பாற்றி வந்த மரபை எளிதில் திரிபடையச் செய்கிறார்கள்.
இப்போது தான் நிதர்சனத்தில் தமிழ்ச்சமூகத்தில் நாட்டார் இசை என்பது எதுவாக பிரபலமாக இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கிறேன். நாட்டாரியல் இசையில் ஆன்மிகத் தன்மை இல்லை என்பது இயல்பாக எல்லோர் மனதில் பதிந்திருப்பதற்கான காரணம் எது நாட்டாரியல் இசையாக முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பதாலும் வருகிறது இல்லயா. ஆன்மிகத்தேடல் கொண்ட நாட்டாரியல் இசைஞர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதுமில்லை. அவர்களிடம் புகழ், பணம் சார்ந்த போதமும் இல்லை. அதனால் சாதாரண தளத்தில் அவர்கள் நமக்கு அறிமுகமாவதேயில்லை.
ஆம்.
நாட்டாரியல் இசை உண்மையில் உயர்ந்த ஆன்மிக அனுபவம் கொண்டது. இந்தியா பழமையான பல மொழிகளைக் கொண்டது. மலையாளம், தமிழ், வங்காளம் என எந்த மொழியைச் சென்று ஆராய்ந்தாலும் அங்கு அழகான நாட்டாரியல் இசை உள்ளது. எளிமையான, அழகான, ஆழமான இசையும் அதனுடன் இணைந்துள்ள வார்த்தைகளும் உள்ளது. அந்த மரபு இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது.
உங்கள் இந்த நாட்டாரியல் இசைப்பயணம் முதன்மையாக ஆன்மிகமானது தானா?
ஆன்மிகம் என்றால் என்ன? உங்கள் வாழ்க்கையில் என்னென்ன நிகழ்கிறதோ அதையெல்லாம் நீங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஓடிவிட முடியாது இல்லயா? அதை எதிர்கொண்டு கடந்தால் தான் நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். இல்லையேல் அதற்குள்ளேயே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.
நாட்டார் இசை மிகவும் எளியது. மிக எளிதில் தொடர்புறுத்திக் கொள்ளக் கூடியது. உணர்வுகளை ஆழமாக எந்தத் திரையும் இல்லாமல் வெளிப்படுத்தக் கூடியது. அப்படி வெளிப்படுத்தும்போது தானே கேள்விகள் எழுகின்றது. அதை எதிர்கொள்வதன் வழியாகவே ஒருவர் குணமடைகிறார். அதிலிருந்து குணமடையாமல் ஒருவர் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது. அது தான் ஆன்மிகம். நாட்டார் இசை வலியை, உணர்வுகளைக் கொண்டாடுகிறது. நாட்டார் இசை, இசை மரபு மட்டுமல்ல. அது கவிதை மரபும், கதை சொல்லல் மரபையும் ஒருங்கே கொண்டது. கவிஞர்களின் வாழ்க்கையைப் பற்றி பாடுகிறார்கள். அதன்வழியாகவே நாம் நமக்கு நடந்து கொண்டிருப்பவற்றிலிருந்து மேலெழ, மேலும் செல்ல, கடந்து செல்ல தூண்டுதல் அடைகிறோம். இது தானே ’ஞானம்’ என்பது.
ஒருவர் மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரால் தன் வாழ்வின் மிகச்சிறந்த காலத்தை/தருணத்தை அடைய முடிகிறது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும், அதில் நன்மை/தீமை என்ற பாகுபாடு இல்லை, வெறும் வாழ்க்கை அனுபவம் மட்டுமே என்று வாழ்வது. வாழ்க்கையில் எப்போதுமே எதாவது நிகழ்ந்து கொண்டே தானே இருக்கும். அனுபவங்கள் தான் எல்லாமுமே என்று இருப்பது. நாட்டார் இசை எதையும் மாற்ற முயல்வதில்லை. ஆனால் ஆழத்தில் குணப்படுத்தல் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
செவ்வியல் இசை டியூன்களால் ஆனது. ஒவ்வொரு நாளும் அதைக் கற்கிறார்கள். பயிற்சி செய்கிறார்கள். நாட்டார் இசையும் அவ்வாறு தான். எல்லா ராகமும் டியூன்களுக்குக் கீழ் தான் வரும். உதாரணமாக பைரவ் ராகாவை எடுத்துக் கொள்வோம். செவ்வியல் இசையில் பைரவ் ராகத்தின் சரகத்தை பயிற்சி செய்கிறார்கள். அது ஒரு உணர்வு சார்ந்தது. அந்த ஒரு உணர்வை தொடர்ந்து தியானிப்பார்கள். நாட்டார் இசையில் நாம் கவிதையை தியானிக்கிறோம்.
மராத்தியில் ஒரு கவிதை உள்ளது. “நீ அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வர வேண்டும். இல்லையெனில் நீ என்ன நிகழப்போகிறதோ அதைத் தவற விட்டுவிடுவாய்” என்று வரும். ஒரு முறை பற்றவைக்கப்பட்ட நெருப்பு அணையும் வரை எரிந்து கொண்டுதான் இருக்கும். நம்மால் அதை மறுக்க முடியாது. நம் வாழ்க்கை அப்படி ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தான். அது எரிந்து கொண்டே தான் இருக்கும். மரணம் வரையில். இப்பொழுது தான் இந்த தீ பற்றவைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும் அது அனுபவிக்க வேண்டும். அவ்வளவு தான். உன்னுடைய கால, வெளிக்குள் இருக்கும் அதை நீ மறுக்க இயலாது. Be there.
உனக்கு வேலை கொடுத்தவர் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார். Just Be There. இந்த ஒரு பாடலை தியானிக்க ஆரம்பித்தால் உங்கள் உணர்வுகளின் பல அடுக்குகளில் நீங்கள் பயணம் செய்ய ஆரம்பிப்பீர்கள். இது தான் ஆன்மிகம் என நான் சொல்வது. இந்த ஒரு பாடல் எத்தனை தலைமுறையாக பாடப்பட்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அதன் மூலம் குணமடைந்திருப்பார்கள். இங்கு இந்த இசையும், கவிதையும் அத்தனை வெளிப்பாட்டையும், உணர்வுகளையும் சுமந்து வருகிறது. அது உங்களை குணமடையச் செய்யும்.
நாம் செய்யும் இந்த உரையாடலும் பல தலைமுறைகளாக நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது.
நான் என்னை மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். உன்னிடமிருந்து அத்தனை அழகை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஒருவரை அவர் எப்படி இருக்கிறாரோ அந்த நிலையிலேயே காதலிப்பது. இது தான் நாட்டார்தன்மை என்று சொல்கிறேன். நீ எதையும் மாற்ற முற்படுவதில்லை. நீ வெறுமே காதலிக்கிறாய். ஒவ்வொன்றையும்.

அனுபவங்கள், மனிதர்கள் சார்ந்து எதிர்மறை/கெட்ட/தீய பரிமாணங்களை அப்படியே அதன் இயல்புப்படி ஏற்றுக் கொள்வதைப் பற்றி முன்பு சொன்னால் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இப்போது ஒரு புன்னகையுடன் “சரி!” என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். “It is Life“ என்று நீங்கள் சொல்வதை நினைத்துக் கொள்கிறேன்.
ம்…
ஆனால் இது தொடர்பான ஒரே ஒரு கேள்வி மட்டும். இந்த எதிர் அனுபவம் பொறுத்து எப்படி எதிர்கொள்வது. அந்த இடத்தில் இருந்து கொண்டே அதை ஏற்றுக் கொள்வதா அல்லது அதிலிருந்து அடுத்த கட்ட நிலைக்குச் சென்று அந்த வலியை கவனிப்பதா? எதை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?
ம்… இப்படி வைத்துக் கொள்வோம். உங்களை ஒருவர் மிகவும் காயப்படுத்திவிட்டார். மிக ஆழமாக உணர்வு சார்ந்து நீங்கள் பாதிக்கப்பட்டதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அதை கொண்டாட்டமாக மாற்றிக் கொண்டு அந்த வலியை அனுபவிக்க ஆரம்பித்தால் முதலில் அந்த வலியும், பின்னர் வலியை அளித்தவர்களும் அந்த விஷயத்தைப் பொறுத்து உங்களில் புதிய பார்வைக்கோணத்தை அடைவார்கள். எல்லோரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பது எவ்வளவு அழகானது இல்ல. நாம் எல்லோரும் மனிதர்கள். இயற்கையின் ஒரு பகுதி தானே. எல்லாமும் மாறும். எத்தனை கவிஞர்கள் இதைப் பாடியிருக்கிறார்கள். எத்தனை நூறு ஆண்டுகளுக்கு முன் பாடினாலும் அது மனிதர்களை, அவர்களின் உணர்வுகளைப் பற்றி, ஆன்மிகத்தைப் பற்றி, யாவற்றுக்கும் அப்பால் உள்ளதைப் பற்றியே பாடுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது கவனிப்பது மட்டுமே.
பிற மொழிக் கவிதைகளுக்கான பொருளைத் தேடும்போது மூன்று விதமான அர்த்தங்கள் கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். மூன்றுமே அழகாக இருக்கும். முதலில் கிடைப்பது புரிதலுக்கான ஆரம்ப அர்த்தம். இரண்டாவது ஒரு முற்றும் புரிந்த அர்த்தம். மூன்றாவது அர்த்தத்துக்கு அப்பாலான அர்த்தம். ஒவ்வொரு கவிதையும் அப்படி ஒரு அடுக்காக அமைந்திருப்பதைக் காண்கிறேன். ஒருவர் கவிதையை இப்படி வாசிக்க ஆரம்பித்தால் அதன்பிறகு ஒளி, அன்பு, ஞானம் எல்லாம் வரும். ஒருமுறை அதை உணர்ந்துவிட்டால் ஒரு அழகான அலைவரிசைக்குள் நாம் வந்துவிடுவோம். எல்லாவற்றையும் துறந்து மகிழ்வாகிவிடலாம். நீங்கள் எத்தனை பேருடன் இருந்தாலும் அத்தனை எடையை உணரமுடியாதளவுக்கு இலகுவாக இருப்பீர்கள்.
நீங்கள் கவிதைக்கு சொல்லும் இந்த மூன்று நிலைகளை நான் எல்லா கலைகளுக்கும் பொருத்திக் கொள்கிறேன்.
பக்தி இலக்கியத்தில் கவிதையில் ஏழு கதவுகள் பற்றி சொல்வார்கள். நீங்கள் தட்டி திறந்து வர வேண்டிய கதவுகளாக அவை சொல்லப்பட்டிருக்கும். தேக தத்துவம் என்பார்கள். நம்மையறியமலேயே ஒவ்வொருவரும் நாட்டார் இசைப் பாடகர்கள் தான். தட்ட வேண்டும் அவ்வளவு தான். வெளிப்பட வேண்டும்.
அந்த ஏழு கதவுகள் பற்றி விளக்க முடியுமா?
நாம் என்ன செய்தாலும் இறுதியில் இறக்கப் போகிறோம் இல்லயா? இறக்கும் போது உதட்டில் புன்னகையுடன் இறக்க வேண்டும். இந்தக் கவிதைகளில் பெரும்பாலும் சொல்லப்பட்டுக் கொண்டே இருப்பது அமைதியான நிம்மதியான இறப்பைப் பற்றித்தான். நீ முழுமையாக மகிழ்ச்சியாக இருக்கிறாய். ஒன்றும் மிச்சமில்லை. இது தான் உன்னுடைய இறுதி மூச்சு. இனி ஒரு முறை இதே தேகம், இதே பிறப்பு இருக்குமா என்பது தெரியாது. இது எத்தனை அழகானது. இன்னும் ஆழமாக அவர்கள் சொல்கிறார்கள். நான் இப்போதைக்கு இதைச் சொல்கிறேன். இந்த உடல் இருப்பதால் தான் இந்த சந்திப்பு உரையாடல் எல்லாமே இல்லயா. நாம் இதைக் கொண்டாடலாமா? இது இந்திரியம் என்பதைப் பற்றியது. உங்கள் அனைத்தையும் உள்வாங்குகிறது. இதயம் சொன்ன அனைத்தையும் அது செய்ய விடுவதில்லை. தேக தத்துவம் அதைப் பற்றியது. அடுத்து அடுத்து என்று கதவுகளை தட்டிக் கடந்து செல்வது.
இந்திய தத்துவத்தில் “நேதி நேதி” என மறுத்துச் செல்வதைப் பற்றி சொல்வார்கள். நீங்கள் மரணத்தைச் சொல்கிறீர்கள். அது அதற்கும் அப்பாலான ஒன்றைப் பேசுவது.
ஆம். அப்பாலான ஒன்று தான். தியானத்தைப் பற்றி சொல்லும்போது பாட அமரும்போது முடிவே அற்ற வெளி பற்றி சொல்வார்கள். நான் எங்கிருந்தும் வரவில்லை, எங்கும் செல்ல விரும்பவில்லை , தட்டுவதற்கும் திறக்கப்படுவதற்கும் எதுவுமில்லை, எதையும் இங்கு நிரூபிப்பதற்காக நீ இல்லை, எல்லா செயலிலும் இந்த நிலையை எய்துவது தான் முதன்மை.
கபீரின் கவிதை ஒன்று…
”நீருக்குள் இருக்கும் மீன் தாகத்தோடு அலைகிறது”
எத்தனை பைத்தியக்காரத்தனம் பார்த்தியா. (சத்தமாக சிரிக்கிறார்…) இதைக் கேட்ட போது நான் இப்படித்தான் சத்தமாக சிரித்தேன்.
தன்னிடம் அத்தனை வாசனையை வைத்துக் கொண்டிருக்கும் கஸ்தூரி மானுக்கு அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தேடிக் கொண்டே இருக்கிறது. ஏழு கதவுகளையும் அந்த மான் தன் வாசனையைத் தேடுவது போலவே நாம் தட்டிக் கொண்டும் தேடிக் கொண்டும் இருப்பதாக கற்பனை செய்து பார்த்தால் இன்னும் சிரிப்பாக இருக்கும்.
இன்னொரு கவிதை ஒரு மஞ்சள் நிற மலரைப் பற்றியது. அந்த மஞ்சள் மலர் எப்போதும் தன்னை அழகில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்குமாம். ஆனால் தேனீ வந்து அதன் தேனின் சுவையில் மயங்கி அந்தப் பூவின் இனிமையை எடுத்துக் கொண்டு போய் சேர்த்து வைக்கிறது. எவ்வளவு முரண் பாரு.

நீங்கள் உருவாக்கிய Sahajo Sang என்ற அமைப்பு பற்றி சொல்லுங்கள்
2017 வாக்கில் Sahajo Sang இயல்பாக தானே உருவாகியது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்பு ஐம்பது அறுபது இசைக் கச்சேரிகள் செய்திருந்தேன். அதை கச்சேரி என்று சொல்லிவிட முடியாது. எனக்கு கிடைத்தவற்றை மக்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன் என்று சொல்லலாம். பல ஆசிரமங்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போ முதன்முதலில் ஓஷோ கம்யூனில் இருந்த சன்னியாசி ஒருவர் என்னை ”நீ ஒரு Sahajo தான்” என்று அழைத்தார். அதுவரை நான் அந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கவில்லை. இன்னொரு முறை மத்தியப் பிரதேசத்தில் பாடிக் கொண்டிருக்கும்போதும் கூட்டத்திலிருந்து ஒருவர் அவ்வாறு ஆழைத்தார். அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்தப் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்தன. ஒரு முதியவர் என்னிடம் வந்து உனக்கு ஷேஜோவைத் தெரியுமா என்ற போது தான் அவரைப் பற்றி தேடி கண்டுகொண்டேன். அவர் மஹாராஷ்டிர மரபில் வந்த சன்னியாசி. அதன்பின் என் புதிய பிறப்பின் பெயராக “ஷேஜோ” என்பதை எடுத்துக் கொண்டேன். என்னை எல்லோரும் அந்தப்பெயர் சொன்னால் தான் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எனக்கும் என் சொந்தப்பெயரை சொல்வதை விடவும் இப்பெயரை சொல்லிக் கொள்வது துள்ளலாக உள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய பின் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதற்கு எனக்கு பதில் கிடையாது. பெயரும் பார்த்தவர்கள் சூட்டியது. மெல்ல அது ஷேஜோ பயணம் ஷேஜோ சங்-காக மாறியது. நான் என் இந்தியப் பயணத்தின் வழியாக நிறைய பெற்றுக் கொண்டேன் ரம்யா. இதை நான் மக்களுக்கோ இயற்கைக்கோ திருப்பியளிக்கவில்லை எனில் நான் எனக்கு அளித்த அந்த ஒன்றிற்கு நியாயம் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். எனக்கே எனக்கு என மட்டும் இதை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. “சங்” என்றால் ஒரு மரபுக்குழு என்று கொள்ளலாம். பாடும் ஒரு மரபைச் சேர்ந்த குழு. ஷெஹ்ஜோ என்றால் ”எளிமை” என்று பொருள். The essence of simplicity.
ஓஷோ கம்யூனா?
ஆம். பல ஆசிரமங்களுக்குச் சென்று பாடியுள்ளேன். ஓஷோ கம்யூன், ரமண மஹரிஷி ஆசிரமம், மாதா அமிர்தானமந்தாயி ஆகியோரின் ஆசிரமத்திற்குச் சென்றுள்ளேன். தங்கியுள்ளேன். இசை கற்பித்துள்ளேன்.
Sahajo Sang வழியாக என்ன செய்கிறீர்கள்?
நிறைய இளையர்கள், முதிர்ச்சியடைந்தவர்களுக்கு இசை சார்ந்த பயிற்சிப் பட்டறைகள் நடத்தியிருக்கிறோம். வயதானவர்களுக்கு ஒரு நிகழ்வு நடத்தினோம். ஒரு வருடத்திற்கு முன் என் பாட்டி இறந்தார். வார்க்கரி சம்பிரதாயம் என்பது மகாராஷ்டிராவில் ஆன்மிக சாதகராக இருப்பவர்கள் செய்வது. இசை, நடனம் வழியாக. என் பாட்டி அதைச் சேர்ந்தவர். அவர் வாரி என்ற ஆன்மிகப் பயணத்தை அறுபது வயது வரை வழி நடத்தினார். மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர். என் வீட்டில் என்னை மனு என்று அழைப்பார்கள். “மனு நீ முதியவர்களுக்காக பாட வேண்டும். மிகவும் முதிர்ந்தவர்கள். மரணத்திற்கு மிகவும் அருகில் இருப்பவர்களுக்காகப் பாட வேண்டும் என்று கேட்டார்.” அதன் பின் நான் முதியவர்களுக்காக பிரத்யேகமாகப் பாட ஆரம்பித்தேன். அவர்கள் வீட்டில் சென்று பாடுவேன். சிறிய குழுவாக ஒரு கிராமத்தில், இடத்தில் சிறிய முதியவர்கள் கூட்டத்திற்கும் பாடுவேன்.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக நான் பார்ப்பது நாட்டார் இசையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. அதன் உண்மையான சாரத்தை எடுத்துச் செல்வது. இந்தப்பயணத்தில் நான் சந்தித்த முக்கியமான நாட்டார் இசைப் பாடகர்களை அழைத்து வந்து குழந்தைகள், இளைஞர்கள், வயது வந்தோர் என அனைவருக்கும் பயிற்சி அளிப்பதற்கான சூழலை ஏற்படுத்துகிறேன். அவர்களின் வாழ்வு அனுபங்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைக்கிறேன். சில இணைய வகுப்புகளை வேலைக்குச் செல்பவர்களுக்காகவும் நடத்துகிறேன். அவர்களுக்குத்தான் அதிகம் இது தேவைப்படுகிறது என்பதை உணர முடிகிறது. வீட்டிலிருந்து நகர முடியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் அதிகமாக இந்த இசை வகுப்புகள் தேவை. அவர்களுக்காகவும் இணைய வகுப்புகள் நடத்துகிறேன்.
“Voice of many land” என்ற திட்டம். இதன் நோக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் பல வகையான கவிதைகள், அதன் மொழி, குரல் வேறுபாடுகள் (voice culture) ஆகியவற்றை சேகரிப்பது பயிற்சியளிப்பது. அக்கமகாதேவி கவிதைகளுக்கு நீங்கள் வெவ்வேறு விதமான குரல் மாறுபாடுகளை பயன்படுத்தவேண்டும். வயிறு, மார்பு, கழுத்து என. மூச்சுப்பயிற்சி, உடல் சார்ந்த பயிற்சி என பலவகைகளும் கற்பிக்கப்பட வேண்டும். உடல்-குரல்-மொழி-கவிதை-இசை என ஒட்டுமொத்தமாக இதைச் சொல்லலாம். அனைத்திற்கான பயிற்சியும். இதை நோக்கமாகக் கொண்டு தான் ஆரம்பித்தேன்.
கடந்து மூன்று ஆண்டுகளாக இசைக் கோர்வையும் செய்து வருகிறேன். இந்த வருடம் என் முதல் ஆல்பம் வெளிவரும்.
இதை செயல்படுத்தும்போது தடைகள் ஏதும் எதிர்கொண்டீர்களா? அல்லது இந்தப்பாதையில் எதுவெல்லாம் தடையாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
முதலில் சாதி. இரண்டாவது பணம் வைத்திருப்பவர்-இல்லாதவர் மூன்று பாலின பேதம். ஷேஜோ சங் இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டு இயங்கும். யார் வேண்டுமானாலும் பாடலாம். இந்த அமைப்பில் “song craft circle” உள்ளது. முதலில் வருபவர்களிடம் அவர்கள் இணைவதற்கான காரணம் கேட்டு அவர்களிடம் பேசுவோம். பாடுவதற்கு விருப்பம் இருந்தால் போதும். உணர்வு வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக இதைக் கருதுபவர்களுக்கு எந்தத்தடையும் இல்லாமல் பயிற்சி அளிக்கிறேன்.
இது எந்த மாதிரியான அமைப்பிற்குள் வருகிறது?
N.G.O வாக பதிவு செய்ய விரும்புகிறோம்.
அதன் வழியாக எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்.
நான்கு வருடங்களாக மகாராஷ்டிராவிலுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று நாட்டாரியல் பாடல்கள் அனைத்தையும் சேகரித்திருக்கிறேன். இந்தக் கலைஞர்கள் பெரும்பாலும் வறுமையில் உழல்வதைப் பார்க்கிறேன். பக்தி இசைப் பாடகர்கள், நாட்டார் இசைப் பாடகர்கள் எல்லோருடைய நிலைமையும் இப்படித்தான் உள்ளது. பல தலைமுறைகளாக பணம் வாங்காமல் தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர்களுக்கு வாழ்வாதாரமும் முக்கியம் இல்லயா. நான் குறிப்பாக பக்தி இசைக் கலைஞர்களை மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். பல இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். ஆனால் அவ்வபோது எதிரில் தென்படுபவர்களிடம் பணம் கேட்டுப் பெறுகிறார்கள். அவர்களால் நாம் குணமடைகிறோம். ஆனால் அவர்கள் வீட்டிற்குச் சென்றால் உணவுக்கு வழி இருக்காது. எனக்கு இந்த உலகம் திறந்து கொண்ட பின்னால் வழியில் யாராவது ஒருவர் உடகார்ந்து பாடிக் கொண்டிருக்கிறார் எனில் நின்று அதைக் கேட்டு அவர்களுக்கு பணம் கொடுத்து வருவதை முக்கியமான கடமையாகக் கருத ஆரம்பித்தேன். அவர் அந்த ரோட்டில் உட்கார்ந்து கலையை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நம்மிடம் அவர்களுக்குக் கொடுக்க புன்னகையோ, பாராட்டோ, பணமோ இருந்தால் தாராளமாகக் கொடுத்து கொண்டாடலாமே. நமக்கு தேவைப்படுவதற்கு மேல் பொருட்களை சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் கலைஞர்கள் அன்றாடத்திற்காக உடல் உழைப்பு செய்கிறார்கள். உண்மையில் அந்த உழைப்பிற்கான காரணம் உணவு மட்டுமே. அது இருந்தால் அன்றாடத்தை கவலையின்றி நடத்துவதற்கான குறைந்தபட்ச பணம் அவர்களுக்கு கிடைத்துவிட்டால் அவர்களால் முழு நேரக் கலைஞராக இருக்கலாம்.
எனக்கு நாட்டார் இசை மேல் காதல் உள்ளது என்று சொல்லிவிட்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் பார்க்கிறேன். அதற்காக, அதிலுள்ள கலைஞர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு கலைஞரையாவது இந்த வாழ்வில் ஷேஜோ சங் வழியாக காப்பாற்ற முடிந்துவிட்டால் கூட போதும். இந்த உலகத்தில் அதைச் செய்ய முடிந்த ஒவ்வொருவரும் இது போல ஒரு கலைஞரைக் காப்பாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இந்தக் கலைஞர்கள் சினிமாவுக்குப் போக மாட்டார்கள். முறைப்படுத்தப்பட்ட தனியார் கச்சேரிகள் செய்ய மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் சமூகத்திலிருந்து தனித்து வாழ்பவர்கள். ஆனால் சமூகத்திற்காக கலை வழியாக அன்பைக் கொடுப்பவர்கள். அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.
ஷேஜோ சங் வழியாக ஒன்றிணையும் அனைவருமே இந்தியா முழுமைக்கும் இதைச் செய்ய விரும்புகிறோம். நான் மிகச் சிறிய ஆள். ஆனால் என்னால் என் வாழ்நாளுக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய விரும்புகிறேன்.
நாட்டார் இசைக்கருவிகளை ஆவணப்படுத்தலும் மீட்டெடுத்தலும் செய்கிறீர்கள். அதுபற்றி சொல்லுங்கள்.
ஏக்தாராவிலேயே பல வகைகளைப் பார்க்க முடிந்தது. பழங்குடி மக்களிடமுள்ள கருவிகள், மகாராஷ்டிரா மாநிலத்தின் பழங்குடி மக்களிடமிருந்து தர்பா (Tarpa), துந்துனா (Tuntuna), துதாரி (Tutari), சொந்த்கா (Chondka) என பல கருவிகள். வெறும் கருவிகள் மட்டுமல்ல. கதைகள், நினைவுகள், மொழி, அன்பு, சிந்தனைகள், குரல் என அவர்கள் காலம் காலமாக கடத்த விரும்புவதையெல்லாம் ஆவணப்படுத்தினேன். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், ஹிமாசல் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதுவரை பயணம் செய்துள்ளேன். முடிந்தவரையில் இந்த ஆவணப்படுத்தல் வேலைகளைச் செய்ய வேண்டும்.
இறுதியாக… மக்களிடம் எதைக் கோர விரும்புகிறீர்கள்?
மறந்து போனவற்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
”நாட்டாரியல் இசைக் குழுமம் ஒன்று இங்குள்ளது. அது நம் மரபின், பண்பாட்டின் குரலை, இசையை, புனிதமான அமைதியைக் கொண்டுள்ளது. அதன் குரலுக்கு செவிசாயுங்கள். வெறும் காதுகளால் மட்டுமல்ல. இதயத்தால். எங்காவது அப்படிப் பாடும் கலைஞர்களை வழியில் சந்திக்க நேர்ந்தால் அவர்களைக் கேளுங்கள். அவர்களின் பெயரை தொடர்ந்து பொதுவெளியில் உச்சரியுங்கள். அவர்களை அழைத்து இசைக்கச்சேரிகள் செய்யுங்கள். அவர்களுக்குத் தகுந்த தட்சணையை அளியுங்கள். அவர்களின் பாடலை ஆவணப்படுத்துங்கள்”
மிகுந்த வேண்டுகோளாக வைக்க விரும்புவது ”பழைய ராகங்களை குழைக்காதீர்கள். செவ்வியல் கவிதைகளை கூரு போட்டு பார்க்காதீர்கள். சிலவிஷயங்கள் மீளஎடுத்து குழப்புவதற்கும், மீட்டுருவாக்குவதற்குமானதல்ல. நாட்டாரியல் பாடகர்கள் வெறும் பாடகர்கள் மட்டுமல்ல. அவர்கள் சாமானியர்களின் பண்பாட்டை, மரபை தலைமுறை தோறும் நினைவிழக்காமல் கடத்திச் செல்பவர்கள், கதை சொல்லிகள், உண்மை சொல்லிகள், வலி நிவாரணிகள். அவர்களைக் கொண்டாட வேண்டியது நம் கடமை. அதைச் செய்ய வேண்டும்”

*
- தேஜாஸ்ரீ இங்கவலெ – தமிழ்விக்கி
- நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா? – ஜெயமோகன்
- தமிழ் இசை மரபு – வெங்கட் சாமிநாதன் – சொல்வனம்
- Tejashree_ingawale – Instagram
- Sahajo sang – Instagram
*

நீண்ட ஆழமான பேட்டி. இதுமாதிரியான மனதோடு பேசும் எழுத்துக்களை படித்து நீண்ட நாளாயிற்று. ஒரு பெண்மணியின் இசைத் தேடலை, ஒரு நாவல் போல எழுதி இருக்கிறீர்கள். மிகச் சிறப்பு. நான் இந்தியா டுடே தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக இருந்தவன். மிகத் திருப்தியான பேட்டிக் கட்டுரை இது. வாழ்த்துகிறேன். நன்றி
அன்புள்ள ரம்யா
தேஜாஸ்ரீ இதனான கலந்துரையாடல் அவருடைய ஆன்மாவை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நல்ல படைப்பாக வந்துள்ளது அவற்றிற்கு உங்களுக்கு நன்றிகள்.
தேஜாஷ்டியை நான் முதலில் பார்த்தது ஒரு புகைப்படத்தில் தான். அதில் தலையில் கொண்டை குடிமி வைத்துக்கொண்டு, கையில் ஏக் தாருடன் கண்ணை சுருங்க மூடி ஆகாச புன்னகையுடன் பின்னே பரந்து விரிந்திருக்கும் மழைச்சூழலுடன் ரம்யமாக அமைந்திருக்கும் புகைப்படம் அதில் அவரிடம் யாரிடமும் இல்லாத ஒரு யுனிக் தன்மை வெளிப்படும் அது என்னவென்று அப்பொழுது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் ஒன்றை என்னகம் உணர்ந்து கொண்டிருந்தது.
உங்கள் உரையாடலில் அவரைப் பற்றி மேலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அவரின் தேடல், நாடோடி வாழ்க்கை, கலை – ஆன்மீகம், அன்பையே இங்கு முழு முதலாக கொண்டு லயித்திருக்கும் இருப்பு, நாடோடி இசை கலைஞர்களுக்காக அவர் கொண்டிருக்கும் நோக்கம் என்று..
மிக சிறப்பான பேட்டி..
மனதில் தேஜாஶ்ரீ இசை உருவாக்கிய மென்மையான அதிர்வுடன்
சதீஸ்குமார்
மிகவும் அருமையான நேர்காணல். உயிரும் மெய்யுமான கேள்வி பதில்கள். தூய மனம் அடைய விரும்பும் இடமே இது. தெளிந்த நீரில் தெரியும் யாவும் தூயவை போல, மனதின் மந்திரமே தேஜாஸ்ரீ யின் – இந்த இருப்பு. மகிழ்ச்சி.