”பெண்ணுக்கு லட்சிய வாழ்க்கை வேண்டாமா?” – சந்திரா தங்கராஜ்

சந்திரா தங்கராஜ்

சந்திரா தங்கராஜ் 2000-இல் தன் எழுத்துப்பயணத்தைத் தொடங்கியவர். இதழியல், சினிமா என பிற துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தவர். இதுவரை நான்கு கவிதைத்தொகுப்புகளும், மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ஒரு வார காலமாக அவருடனான உரையாடல் சிரிப்புகளும், பகிர்தல்களும் நிறைந்ததாக இருந்தது. எந்தக் கசப்புகளும் இல்லாத நேர்மறையான ஆளுமை சந்திரா. அவருடைய நீண்ட பயணம் பற்றிய பகிர்தல்கள் பெரிய உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடியதாக இருந்தது. அவருக்கும் இந்த நேர்காணல் தன்னையே மீட்டுப் பார்க்கக் கூடியதாக அமைந்ததாகச் சொன்னார். நீலிக்காக அவருடனான நேர்காணல்.

-ரம்யா

*

சந்திரா தங்கராஜ்

உங்க முதல் சிறுகதை புளியம்பூ 2000இல் வந்தது. அங்கிருந்து 25 வருடங்கள் இலக்கியத்தில் என்பது எப்படி உள்ளது?

25 வருடம் ஆகிடுச்சா. ஆனால் சினிமாவிலும் செயல்பட்டதால் தொடர்ச்சியா எழுத முடியல. 25 வருடமா வாசிப்ப மட்டும் விடல. புளியம்பூ 2000ல எழுதினேன். அதன்பிறகு முழுவதுமாக இதழியலில் தான் இருந்தேன். அதுல பெண்கள் அப்ப குறைவு. ரொம்ப போட்டியா இருக்கும். ஒரு கட்டுரையை ஓகே வாங்கி அது பிரசுரமாகனும். வேலைலயே நேரம் அதிகமா போயிடுச்சு. அப்பறம் சினிமா. ஆனா எழுத்த விடல.

தமிழ் இலக்கியம் எப்படி அறிமுகமாகியது?

இதழியலில் வேலை செய்யும்போது இலக்கியவாதிகளை நேர்காணல் செய்வது, உரையாடுவது இருந்தது. பெண்களில் ஜெயராணி, சுகிர்தராணி எல்லாம் பழக்கமானாங்க. சென்னையில் காலச்சுவடும், ஆறாம் திணையும் இணைந்து எக்மோரில் ”தமிழினி 2000” நிகழ்வுக்குப் பின் நிறைய பேர் தெரிய ஆரம்பிச்சாங்க. அந்த நிகழ்வுக்கு இலங்கை, பிற வெளிநாடுகளிலிருந்தெல்லாம் பெண் எழுத்தாளர்கள் வந்திருந்தாங்க. அவ்வை, ப.சிவகாமி, சுகிர்தராணி, குட்டிரேவதி, சல்மா என நிறைய பெண் எழுத்தாளர்களை ஒரே இடத்தில் பார்த்தது ரொம்ப ஊக்கமாக இருந்தது. மங்கையின் நாடகம் நிகழ்ந்தது. நான் அப்போ கதைகள் எழுத ஆரம்பிக்கல. இதழியலாளராக தான் அந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா அமர்வுகளிலும் உட்கார்ந்தேன். அப்போ இருபத்தி மூனு வயசு இருக்கும். கையில் கேமராவோடு துருதுருவென சுற்றிக் கொண்டிருப்பேன். அது டிஜிட்டல் கேமரா வந்த சமயம்.

சுந்தர ராமசாமியை அந்த நிகழ்வில் தான் பார்த்தேன். அவரை புகைப்படம் எடுத்தேன். அவர் நான் வைத்திருந்த கேமராவை வாங்கி ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அது பெரிய திறப்பு தான் எனக்கு. இலக்கியத்தைப் பற்றிய பெரிய சித்திரத்தை அது அளித்தது.

எப்ப எழுதனும்னு தோணுச்சு. ஏன்?

கணவர் சுந்தர் குங்குமத்துல வேலை பார்த்துட்டு இருந்தார். அப்ப நேர்காணல்லாம் எடுத்துட்டு வருவார். அதை கேட்டு இதழியலுக்கு ஏற்றாற்போல எழுதி குடுப்பேன். அப்பறம் குங்குமத்துல கட்டுரைகள்லாம் எழுதிட்டு இருந்தேன். மாலன் சார் ஊக்குவித்ததால் எழுதினேன். மூன்று கட்டுரை நல்லா ரீச் ஆச்சு. ஒரு கதை எழுதினேன். அந்த சமயத்துல ஜீவசுந்தரி, அப்பன்னசுவாமி ஆசிரியத்துவத்தில் ஆறாம் திணைனு ஒரு இலக்கிய இணையஇதழ் ஆரம்பிச்சாங்க. பாபு யோகேஷ்வர்னு ஒரு நண்பர்தான் என்னை அந்த வேலைக்கு பரிந்துரைச்சார். 1999ல அதுல சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். 8000ரூபாய் என்பது அந்த சமயத்துல பெரிய சம்பளம் தான். என் கணவரை விட அதிகம் அது. அவருக்கே ஆச்சர்யம். எனக்கு அந்த வேலை ஈஸியா இருந்துச்சு. இலக்கியம் சார்ந்த வேலைன்றதால. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன் பேட்டியெல்லாம் எடுத்து போட்டிருக்கேன். அப்பறம் சுகுமாரன் சார் என் கணவர் மூலமா அறிமுகமானார். அவர் வழியாதான் தமிழ் இலக்கியம் அறிமுகமாச்சுன்னு சொல்லலாம். அந்த காலகட்டத்துல வாசிச்சு தள்ளிருக்கேன்.

என்னோட நண்பர் தாமிரா தான் என்னை எழுத சொல்லி தூண்டியது. இப்போ அவர் இல்லை. உன் வாழ்க்கையும், நீ சொல்ற கதையும் நல்ல இருக்குன்னு சொன்னவர் அவர் தான். அதனால தான் எழுத ஆரம்பிச்சேன். என்னோட முதல் கதை குங்குமம் இதழில் வந்தது. புளியம்பூ ஆனந்த விகடனோட முத்திரைக்கதையா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் வெளி வரல.

அவள் விகடன் இதழுக்காக பல கிராமங்களில் பெண்களைச் சந்தித்து எழுதியிருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க. அது உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

சென்னை புற நகர்ப் பகுதியில் பன்னிரெண்டு கிராமங்களிலுள்ள பெண்கள் போராட்டம் நடத்தி அங்கு டாஸ்மாக் கடைகளை வர விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுடைய கணவன்மார்கள் குடித்துவிட்டு வந்து குடும்பத்தைக் கவனிக்காமல் இருப்பதைத் தடுக்க இதைச் செய்தார்கள். அதேமாதிரி ஒரு பஸ் கூட வராத கிராமத்தில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து பணம் சேர்த்து மினிபஸ் வாங்கி விட்டார்கள். தண்ணி வராத ஒரு ஊரில் பெண்கள் போராட்டம் செய்து தண்ணீர் வர வைத்தார்கள். இப்படியான பெண்களை சென்று சந்தித்து கட்டுரை எழுதினேன்.

போராடும் குணமுள்ள பெண்களையெல்லாம் ஒரே இடத்தில் பார்க்கும்போது அவ்ளோ தைரியம் கிடைத்தது. முதலில் ஒரு இதழியலாளராகவே இந்த அனுபவங்களை சேர்ப்பதற்கான திடம் கிடைத்தது. அப்பறம் இந்த தைரியம் தான் எனக்கு சினிமா துறைக்குள்ள ஒரு பெண்ணா தைரியமா இருக்கறதுக்கு உதவியது. இதழியல், சினிமா எல்லாமே ஆண் உலகம் தான் இல்லயா.

உதாரணமா இதழியலில் அரசியல் சார்ந்த செய்திகளையெல்லாம் நம்ம கிட்ட கேக்க மாட்டாங்க. எனக்கு அரசியல் சார்ந்த இதழியலாளராக (Political Journalist) ஆகத்தான் விருப்பம். அதுக்கான எல்லா திறனும் எனக்கு இருந்தது. ஆனால் உள்ளையே விட மாட்டாங்க. சினிமாவிலும் சரி இதழியலில் இருக்கும்போதும் சரி ஒரு பெண்ணாக பல முறை “இது நமக்கு சரிப்பட்டு வருமா? போய்விடலாமா?” என்ற கேள்வி எழும் தருணங்கள் அதிகம் வாய்க்கும். எனக்கு அப்படியான தருணங்கள் அதிகம் வாய்த்திருக்கு. ஏன்னா இந்த இரண்டு துறையுமே பெண்கள் அதிகமும் செயல்படாத துறை. மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனா ஒவ்வொரு முறையும் என்னை மீட்டு முன்னால் ஒரு அடி எடுத்துச் செல்வதற்கு இந்தப் பெண்களையெல்லாம் சந்தித்தது ஒரு காரணம்.

சந்திரா தங்கராஜ்

துறை ரீதியாக முதல் தலைமுறைப் பெண்களின் போராட்டம் என இதைப் பார்க்க முடிகிறது.

ஆமா. அப்போ சினிமாவில் மணிரத்னம் உட்பட ஒரு ஐந்தாறு டைரக்டர்களிடம் தான் பெண்கள் உதவி இயக்குனராக வேலை பார்த்தார்கள். அதற்கடுத்த நிலையில் இருக்கும் டைரக்டர்களெல்லாம் பெண்களை உதவி இயக்குனராக வைத்திருக்க மாட்டார்கள்.

ஏன்?

வெளி ஊர்களுக்கு கூட்டிச் செல்ல முடியாது. ஆண்கள் மட்டும் வரக்கூடிய வாகனத்தில் பெண்ணுக்கு தனியாக இடம் கொடுக்க வேண்டும். அதில் அவங்களே அடிச்சு புடிச்சு தான் உட்கார்ந்து போவாங்க. போகும் இடத்தில் பாதுகாப்பு, சரியான அறை எல்லாம் கொடுக்க வேண்டும். அதெல்லாம் செலவு என்று நினைப்பார்கள். ஒரு பெண்ணுக்காக அவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதால் தவிர்த்துவிடுவார்கள். அவ்வளவு மெனக்கெட்டு ஒரு பெண் உதவி இயக்குனரை அழைத்து வந்து சாதிக்கப்போவதில்லை என்ற மன நிலையும் கொண்டிருப்பார்கள்.

இலக்கியத்தில் ஒப்பு நோக்க இந்த பாகுபாடு குறைவு என்று தோன்றுகிறது.

ஆமா. ஆனால் இதற்குள் உள்ள அரசியலையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அது இங்கிருந்து பெற்றுக் கொண்ட பார்வையினால் தான். இதழியலாளராக இருக்கும்போதே அதை கவனித்துக் கொண்டிருந்தேன். இலக்கியத்தில் உள்ள பெண்களுக்கு என்ன நடக்கிறது. அவர்களைப் பற்றி என்ன பேச்சு நடக்கிறது என தொடர் கவனிப்பு  இருந்தது.

உதாரணத்திற்கு ஒரு பெண் கதையோ, கவிதையோ எழுதுறாங்கன்னு வைங்க. ஒரு எழுத்தாளரிடம் எப்படி இருக்கிறது என கேட்பதற்கு அனுப்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர் அந்தப் படைப்பை வாசித்து நன்றாக இருக்கிறது என்றோ அல்லது ஏதாவது கருத்தோ சொல்லியிருக்கிறார் என்று வைப்போம். உடனே நான் தான் ஐடியா குடுத்தேன், வளர்த்துவிட்டேன் என இந்த ஆண் எழுத்தாளர் எல்லாரிடமும் சொல்ல ஆரம்பித்துவிடுவார். அப்பறம் அந்தப் பெண் எழுத்தாளருடைய எல்லா எழுத்துக்களிலும் அவர் கை இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். இதனாலேயே நான் எந்த படைப்பையும் யாரிடமும் சரிபார்க்கவோ கருத்துச் சொல்லவோ அனுப்பியதில்லை. என்னவா இருந்தாலும் பரவாயில்ல. அது என் படைப்பாக இருக்கட்டும் என்று நினைப்பேன். (சிரிக்கிறார்)

இது சுவாரசியமாக உள்ளது. ஏனெனில் எனக்கு பெண் எழுத்துக்களைப் பொறுத்து அவர்கள் இலக்கியத்தில் சூழலுடன் ஒரு உரையாடல் நிகழ்த்தவில்லை என்பதால் தான் இன்னும் சரியாக வடிவத்தையோ அல்லது கதையின் கச்சிதத்தையோ அடையவில்லை என்று அவதானித்திருக்கிறேன். அதற்கான விடையாக உங்கள் பதிலைப் பார்க்கிறேன்.

அப்படியா. ஆண் எழுத்தாளர்கள் யாரும் என்னைக் கை நீட்டி நான் தான் அவளை வளர்த்துவிட்டேன் என்றோ, நான் தான் அவளின் கதையை கதையாக்கினேன் என்றோ சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஆனால் இது ஒரு வகையில் பெண் எழுத்தாளர்களுக்கு இருக்கும் பின்னடைவு என்று தான் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்று காலம் சற்று மாறி இருக்கிறது.

ம்.

உங்கள் கதைகள் பற்றிய மதிப்பீடுகளை உங்கள் நண்பர்களிடமாவது கேட்பதுண்டா?

பெரும்பாலும் நேரமிருக்காது. அது நேர்மறையா எதிர்மறையா என்று சொல்லத் தெரியவில்லை. பெரும்பாலும் கதை பிரசுரமான பின் யாராவது வந்து பாராட்டுவார்கள். அதுவே கூட சில சமயம் நெருடலாக இருக்கும். ஏனெனில் நான் இயக்குனராகவும் இருந்து கொண்டிருந்தேன். அப்படி யாராவது பாரட்டும்போது தான் நான் ஒரு எழுத்தாளர் என்று நினைவுக்கு வரும். சில சமயம் விருதுகள் வரும். அது ஊக்கமாக இருக்கும். மண்டைக்கு எதையும் பெருசா கொண்டு போகவே மாட்டேன். ஆனால் என் பொண்ணு பௌஷ்யா சொல்லுவா. ”நீங்க ஒரு விஷயத்துல முன்னோடியா அல்லது சிறப்பா இருக்கீங்கன்னா முதல்ல அதை நீங்க ஏத்துக்கனும். அப்படி ஏத்துக்கிட்டா தான் அதில் இன்னும் தீவிரமா செயல்பட முடியும். உங்க பிரச்சனையே நீங்க எதையும் ஏற்றுக் கொள்ளாதது தான்” என்பாள். ஆனால் இதுவரை நான் செய்த எதிலும் திருப்தி இல்லை. இன்னும் செய்யனும்னு தோணிட்டே இருக்கும். பொற்கிழி விருது அறிவிப்பு வந்தப்பல்லாம் உண்மையா பயமா தான் இருந்தது. ஏதோ ஒன்னு ஒரு உணர்வு அதை ஏத்துக்கிட்டு நிக்க முடியாதபடிக்கு செய்யுது.

சந்திரா தங்கராஜ்

நீங்க எழுத வந்த காலகட்டத்திலிருந்து பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் பெண் எழுத்தை எப்படி அவதானிக்கிறீங்க. முன்னோடி எழுத்தாளர்கள் பட்டியலில் பெண்களில் யாரையாவது வைக்க முடியும்னு தோணுதா?

எனக்கு அம்பையைத் தவிர யாரையும் முன்னோடி எழுத்தாளர்களில் பெண்களை யோசிக்க முடியல. அம்பையோட வீட்டின் மூலையில் சமையலறை எனக்கு மிகவும் பிடித்த கதை. அந்தத் தொகுப்பே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அம்பையோட எழுத்துலகமும் என்னோட எழுத்துலகமும் முற்றிலும் வேற தான். பெண்ணோட உலகத்தை எழுதலாம் அப்படின்ற தன்னம்பிக்கையை அவங்க எழுத்து தான் கொடுத்தது.

நான் மொத்த சமூகத்தைப் பற்றிய எழுத்தை எழுதனும்னு தான் ஆசைப்பட்டேன். வெறுமனே பெண்ணியக் கதைகளோ பெண் உலகத்தை மட்டுமோ எழுதனும்னு தோணல. அம்பை கதைகளில் ஒரு பெண்ணியக் கேள்வி இருந்துகிட்டே இருக்கும். அந்தக் கேள்வி என்கிட்ட இல்ல.

இன்னொரு விஷயம். பெண்கள்னாலே பெண்ணியக் கொடி பிடிப்பாங்கன்ற எண்ணம் இருந்த காலகட்டம் அது. நான் எழுத வந்த காலத்துல உடல் அரசியல், பெண்ணியம்லாம் திரும்பத்திரும்ப பேசி பழையதாகிவிட்டது. தமிழினி2000 கூட்டத்தில் சல்மாவின் கதையைக் கேட்டு அப்படியே உணர்ச்சிவசமாக ஆகியிருக்கேன் தான். ஆனால் ஒரு ஐந்து வருடத்துல அதை எல்லாரும் பேசிப் பேசி பழையதாகிவிட்டது. நான் வேறு ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

எல்லாம் புரியுது. நான் இருக்கேன். என் உடல் இருக்கு. எனக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கு. நீயும்(ஆணும்) நானும் (பெண்ணும்)சமம். என்னை உன்னால் வீட்டில் பூட்டி வைக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் இதற்கும் அப்பால் அல்லது இதைவைத்து அன்றாடத்தில், சமூகத்தில் நாம் எதைச் சொல்லப் போகிறோம் என்ற கேள்வி இருந்தது. ஏனெனில் நான் மறுபடியும் இந்தக் குடும்பத்துக்குள் தான் வாழனும். இந்த சமூகத்தின் ஒரு அங்கமாகத்தான் இருக்கேன். மனைவியா இருக்கனும். அம்மாவா இருக்கனும். வேலை பார்க்கனும். பெண்ணியவாதி ஆகிவிட்டால் எல்லாவற்றிலிருந்து வெளியேறி ஓடிவிட முடியாதுல்ல. இதுக்குள்ள என்ன சிக்கல்கள் இருக்கு என்பதை எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால் நான் உடல் சார்ந்து எழுதக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஆனால் ஒன்னு. நான் “மருதாணி” மாதிரி கதைகள் எழுதுவதற்கு ஊக்கியாக இருந்தது. சுகிர்தராணி, குட்டிரேவதி, சல்மா, மாலதி மைத்ரி போன்றவர்கள் போட்டு வைத்த பாதை தான்.

”அறைக்குள் புகுந்த தனிமை” சிறுகதையையும் சேர்த்துக்கலாம்.

கண்டிப்பா சேர்த்துக்கலாம். (சிரிக்கிறார்..) பெண்களின் காமம், உடல் சார்ந்து அந்தக் கட்டுக்கள் உடைக்கப்படலன்னா இதையெல்லாம் நான் எழுதியிருக்கமாட்டேன் தான்.

சந்திரா தங்கராஜ்

உங்க எழுத்துக்களில் யதார்த்தவாதம், தொன்மம் சார்ந்த கதைகள்தான் பெரும்பாலும். அந்த காலகட்டத்துல எழுதிட்டு இருந்த எழுத்தாளர்களின் தாக்கம் உங்களில் இருந்ததா? ஏன்னா உமா மகேஸ்வரி, சு.வேணுகோபால், பா.சிவகாமி, கண்மணி குணசேகரன், எம்.கோபாலகிருஷ்ணன் எல்லாரும் யதார்த்தவாதக் கதைகள் தான் எழுதிட்டு இருந்தாங்க. அதனால கேக்கறேன்.

இல்ல. நீங்க சொல்ற மாதிரி அந்தக் காலகட்டத்தில இப்படியான எழுத்துக்கள் முன்னிலையில இருந்தது உண்மை தான். நான் ரஷ்ய இலக்கியத்துல இருந்து உந்தப்பட்டு தான் எழுதினேன். அதுல அன்றாடத்துல இருந்து வாழ்க்கையில இருந்து எழுதுவாங்க. புறச்சூழல் பற்றிய விவரிப்பெல்லாம் அங்க இருந்து எடுத்துக்கிட்டது தான்.

ஒட்டுமொத்தமா உங்க எழுத்துக்களைப் பொறுத்து ’கதை சொல்லி மனநிலை’; ’மரபு, பண்பாடு, வேர் நோக்கிச் செல்லல்’; ’சிறுகதைக்கான வடிவம், கச்சிதம் ஆகியவற்றின் மேலான பொருட்டின்மை’ ஆகியவற்றையும் பார்க்க முடிகிறது. நீங்க வருவதற்கு முன் நிகழ்ந்த பின்நவீனத்துவ உரையாடல் ஒரு ஊக்கினு சொல்லலாம் இல்லையா?

ஆமா. சொல்லலாம். அப்ப ஜீரோ டிகிரில்லாம் வச்சு படிச்சிட்டு இருப்பாங்க. எனக்கு அதையெல்லாம் வாசிச்சு பார்த்தா கேள்வி தான் வந்துச்சு. எப்படி? ஏன்?ன்னு. பெரிய கோட்பாட்டு விவாதங்கள் அது இதுன்னு பயங்கரமா பேசிட்டு இருப்பாங்க.

அது ஒரு க்யூபிஸம் காலகட்டம். க்யூபிஸ நாவல்னே எம்.ஜி. சுரேஷ் ஒரு நூல் வெளியிட்டிருந்தார். இப்ப யாரையுமே காணுல. ஆனால் அந்நியன் படிச்சுப்பாக்கறேன். பிடித்திருந்தது. ஜீரோ டிகிரி லாம் படிச்சு பயமா இருந்தது. ஆனாலும் ஒரு உண்மை அதுல இருந்தது. அதோட வடிவம்லாம் நான் ஒருபோதும் அட்டெண்ட் பண்ண மாட்டேன். நீங்க படிச்சிருக்கீங்களா. உங்க கருத்து என்ன. அத மொதல்ல சொல்லுங்க.

நான் விஷ்ணுபுறம் விழாவிற்காக அவரின் அனைத்து நாவல்களையும் படித்திருக்கிறேன். மறுபாதி உண்மை அவரின் எழுத்துக்களில் இருக்கிறது. அவருடைய காலகட்டத்திற்கு முன் இருந்த வடிவம், பேசுபொருள், கூறுமுறை என பலவற்றையும் தகர்த்தவர். அதன் வழியாக ஒரு புதிய பாதையை உருவாக்கியவர் எனலாம். எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று சொல்வது சரியாகவே இருக்கிறது. நீங்கள் சொன்னது போல தான் உடல் அரசியல், பெண்ணியம் பேசிய எழுத்தாளர்கள் வழியாக மருதாணி மாதிரியான கதைகள் எழுத முடிவது போல இந்த மாதிரி முயற்சிகள் புதிய பல சோதனைகளுக்கான ஊக்கத்தை அளிக்கும். ஆனால் அது தன்னளவில் ஒரு கலை அல்லது கதை என்று சொல்ல முடியாது.

அப்ப சரி. எனக்கும் அதே எண்ணம் தான். (சிரிக்கிறார்…)

உங்கள் கதைகளில் ஆண்களின் உலகத்தை எள்ளி நகையாடும் அம்சம் அல்லது அதிலுள்ள இருள் பக்கங்களை அலசும் போக்கு, அவர்களின் பாவனைகள் பற்றிய அவதானிப்புகளையெல்லாம் பார்க்க முடிகிறது. பீத்தோவனும் கலைந்த காதலும் கதை மாதிரி.

ஆமா. அதை எழுதினப்ப ஒரு நண்பர் என்னைத்தான் எழுதியிருக்கன்னு வந்து ஒரே சண்டை. ஒரு சின்ன சம்பவத்தை மட்டும் எடுத்துக்கிட்டு நான் கற்பனைலதான் அந்தக் கதையை எழுதியிருந்தேன். அவ்வளவு பாவனைகள் இருக்கும் சினிமா உலகத்துல. அறிவு ஜீவிகளாக தங்களை காட்டிக் கொள்வதற்கான பாவனை, ரசனையாளராக காட்டிக் கொள்வதற்கான பாவனைனு அதைச் சொல்லலாம். அந்தக் கதைல வர்ற ஆனந்தன் நானாவும் இருக்கலாம். அந்த இடம் அப்படி.

ஆனால் அந்தக் கதையின் இறுதி கவித்துவமானது. முதலில் பீத்தோவனின் இசையை ஒரு பந்தாவுக்காகப் போடுபவன் இறுதியில் அதன் உணர்வை உள்வாங்குவதோடு முடித்தது நன்றாக இருந்தது.

அது எப்பவும் அப்படித்தானே.

துயரமென்னும் சிறுபுள்ளி நீங்க 2014இல் எழுதறீங்க. இன்றும் உங்கள் முத்திரைக் கதைகளில் ஒன்றாக அது இருக்கிறது. ஆனால் அந்த மாதிரியான சினிமாக்கள் ரொம்ப சமீபமாகத் தான் வருது. பாலிவுட்டிலயே Dear Zindagi மாதிரியான படங்கள் 2016 ல் தான் வந்தது. பொதுவாக சமகாலப் பிரச்சனைகளை சினிமாதான் முதலில் பேசும். 2014இல் ஒரு காதல் தோல்வியை கடக்கும் பொருட்டு ஒரு பெண் மனோதத்துவ நிபுணரிடம் செல்வதும், அவள் மனதை அதன் வழியாக ஆழமாக ஊடுறுவிப் பார்ப்பதையும் வாசிக்கக் கிடைப்பது ஆச்சர்யமாக இருந்திருக்கும். துயரமெனுன் சிறுபுள்ளி கதை ஒரு ஹீலிங்க்கான கதையாகச் சொல்லலாம். அது பற்றி சொல்லுங்கள்.

எனக்கு அந்தக் கதைக்கு லெட்டர்லாம் வந்தது. விகடன்ல ஒரு பெரிய பொலிட்டிக்கல் ரிப்போர்ட்டர் அவரு. ’என்னால ஒரு பிரிவுல இருந்து இன்னும் வெளி வர முடியல. ஆனால் உங்கள் கதையை வாசித்தபின் வெளிவந்துவிடுவேன் என்று தோன்றுகிறது’ என்று எழுதியிருந்தார். அவர் என்மேல அக்கறைப்பட்டு வேற எழுதியிருந்தார். ஆனால் அது என் பிரச்சனை இல்ல. சமகாலத்தின் பிரச்சனை அது. அது பற்றி ஆராய்ச்சியெல்லாமும் கூட பண்ணியிருந்தேன். காதல் வரலாறுன்னு ஒரு புத்தகம் இதற்காக படித்தேன். எரிக் ஃபார்ம் என்ன சொல்லிருக்காரு அன்பு, காதல் பற்றின்னுல்லாம் படிச்சேன். அப்பறம் நிறைய உலக சினிமாக்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்ல. அதுவும் உதவுதுன்னு சொல்லலாம்.

சந்திரா தங்கராஜ்

இந்தக் கதையிலும் சரி அறைக்குள் புகுந்த தனிமையிலும் சரி பெண்ணுடைய தரப்பு மிக ஆழமாக வலுவாக உள்ளது. நகரம் சார்ந்த உங்கள் கதைகளில் பெண்ணுக்கு அத்தனை சுதந்திரம் இருக்கு, தோழிகளுடனான அணுக்கம், ஏகாந்தம் எல்லாம் இருக்கு. ஆனால் அதற்கு இணையாகவே உணர்வு சார்ந்து பெரிய உடைதல்களோடு இருக்காங்கன்னும் பார்க்க முடிஞ்சது.

கவிதை எழுதறதுக்கு ஒரு மேட்னஸ் தேவைப்படும். அது ஒரு நிலை. இலக்கியம், சினிமா மாதிரியான அறிவார்ந்த துறைகளில் கலைப்பூர்வமாக ஈடுபடும் நம்மைப் போன்ற பெண்களுக்கு வரும் இந்த மேட்னஸ் நம்மை மிகவும் பாதிக்கும். அந்த மனநிலைகளை அடையாம இந்த ஆழங்களை நான் சென்று தொட்டிருக்க முடியாது. அது இருந்தது. இருக்கு. ஆனால் அதிலிருந்து விலகவும் தெரிந்திருக்க வேண்டும். அதை என்னால் செய்து கொள்ள முடிந்தது. அந்த மேட்னஸிலிருந்து வெளிவராமல் அறிவார்ந்து பார்க்க முடியலைன்னா இந்த மாதிரியான கதைகளை எழுத முடிந்திருக்காது என்று தோன்றுகிறது.

இந்த கதைகளில் உங்களுக்கு ஏன் ஏன் என்ற கேள்வி இருந்துட்டே இருக்கறத பார்க்க முடிஞ்சது.

ஆமா. இருந்தது. இதழியல், சினிமா, இலக்கியம்னு மூன்று தளங்களில் இயங்கிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்துக் கொண்டே தானே இருந்தேன். ஒரு எழுத்தாளராக. அவ்வளவு தைரியமான பெண்கள். பெண்ணியவாதிகள், இறங்கி நின்னு கொடி பிடிப்பாங்க. ஆனா ஆண்களின் காதலில் இருந்து வெளிவர முடியாமல் பித்தாக இருப்பாங்க. அவ்வளவு பெரிய ஆளுமையாக நாம அவங்கள மதிச்சிருப்போம். அவங்க அந்த பித்துல இருக்கறது பாக்க நமக்கு சோர்வா இருக்கும். பித்தா இருக்கது தவறுன்னு சொல்லல. மொட்டை போடும் அளவு. தன்னை காயப்படுத்துமளவு, அழித்துக் கொள்ளும் அளவு கூட. அது அப்ப ஒரு ஃபேஷனா வேற இருந்தது. அந்த மேட்னஸை அவங்களே ரசிப்பாங்க. ஒருத்தரெல்லாம் மொட்டையடித்துவிட்டு அந்த முடியை பாட்டிலில் போட்டு அதை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்ப அவர் ஞாபகம் வரும்னு சொன்னாங்க. எனக்கு அதை கேக்கறதுக்கே பயமா இருந்தது.

அதையெல்லாம் பார்க்கும்போது ஏன் ஏன்னு தோணிட்டே இருக்கும். அப்படி என்ன இதுலன்னு.

இந்த வலிகளை அணுபவிப்பவர்களைப் பார்க்கும்போது அறுவறுப்பு அடைவீர்களா? அல்லது புரிந்து கொள்கிறீர்களா?

சே. நிச்சயமா புரிந்து கொள்கிறேன். அந்த வலி அவங்களுக்கு தேவைப்படுது போல. அதிலிருந்து வெளி வர அப்படி செய்கிறார்களா. தெரியல. ஆனால் எவ்வளவு பெரிய இடத்திற்கு பெண்கள் சென்றாலும் அந்த உணர்வுப்பூர்வமாக பாதிப்படைவது இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் அது இருபாலருக்கும் பொருந்தும்னு தோணுது. உணர்வுப்பூர்வமாக அதிகமும் இருக்கும் இருபாலரும் இந்த வலியை அனுபவிப்பதாகத் தோன்றும்.

ம்..

காவிய முகாமில் சந்தித்தபோது நீங்க பெரிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டீங்க. அது எப்பவும் என் கூட வரும். அதை இங்க சுருக்கமாக சொல்ல முடியுமா. பெண்கள் இந்த துறைகளில் உணர்வுகளை கைவிட்டுத்தான் ஆகனுமா? ஆண்கள் இந்தத் துறைகளில் அறிவார்த்தமா யோசிக்கிறாங்க. அவர்களை இதெல்லாம் பெரியளவு பாதிக்கறதில்ல. ஆனால் அவங்க உணர்வுப்பூர்வமான ஆளாக தங்களை இத்துறையிலிருக்கும் பெண்களிடம் மேனிப்புலேட் செய்து அடைய வேண்டியதை அடைந்து இயல்பாகத் துறந்து செல்கிறார்கள். பெண்களால் அந்த மேனிப்புலேஷனைத் தாள முடியவில்லை என்று தோன்றுகிறது.

அந்தக் கதையில் சொல்லியிருக்கற மாதிரி தான். பெண்ணுக்கு எப்பவும் தன்னுடைய எல்லா உணர்வுகளையும் சொல்ல, நிகழ்த்த ஒரு இடம் தேவைப்படுகிறது. அப்படி ஒன்னு தேவையில்லைன்னு நினைக்கிறேன். (சிரிக்கிறார்) அப்பறம் ஆணுக்கு லட்சிய வாழ்வு இருக்குதுன்னும் அதனால அவங்க உணர்வுப்பூர்வமா இல்லைன்னும் சொல்லிக்கறாங்க. அப்ப பெண்ணுக்கு லட்சிய வாழ்வு இல்லையா? தேவையில்லயா? அப்ப லட்சிய வாழ்வை நோக்கி நாம போக வேணாமா? அப்ப இந்த மாதிரியெல்லாம் துன்பப்படுதல்களால தான் நாம அதை நோக்கிச் செல்வது தடையாக இருக்கு. பெண்கள் தாங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாம போறதுக்கு அந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் தடையாகத் தான் இருக்கு. அப்ப அதைக் கைவிடனும்னு முன்னால இருக்கவங்களப் பார்த்து நாம கற்றுக் கொள்ள வேண்டியது தான்.

சரிதானே.

சந்திரா தங்கராஜ் படப்பிடிப்பில்

மிகச்சரி. ஒருவேளை ஆண்கள் இந்தப் பாதையை வெகு முன்னரே கடந்து சென்றிருக்கலாம். அவங்களுக்கு முன்ன பல உதாரணங்கள் இருக்கு. அதனால அவங்க எளிதாக கடந்திருக்கலாம்.

ஆமா. இப்ப கொஞ்சம் மாறிருக்குன்னு நினைக்கிறேன். அவ்வளவு வருத்தப்பட வேண்டாம்னு சொல்றேன். சுயவிடுதலை தேவைன்னு சொல்றேன்.

பெண்ணுக்கு அன்பு, காதல் எல்லாம் தேவைப்படுது. ஆனா அந்த ஒரு ஆண்கிட்ட மட்டுதான் தேவையா இருக்கு. ஆண்கள் எளிதாக கடந்து போயிட்றாங்க. ஆனா பெண்ணும் அதே போல கடக்கனும்னு சொல்ல முடியாது. யாரையுமே அப்படி சொல்ல முடியாது. வலியில் இருந்து வெளிவர ஒரு காலகட்டம் தேவைப்படும். அந்தக் காலகட்டத்தில் நம்மை மாய்த்துக் கொள்ளாத அளவு மேட் ஆக இல்லாமல் திடமாக இருக்கனும். நான் அந்த மாதிரி வலி தாழ முடியாத துயரமான கதைகளையெல்லாம் பார்த்துட்டேன். ஆண் மனம் பெண் மனம் என்பதற்குள் அது இயங்குதுன்னு தோணுது. ஒரு காலம் எடுக்கும். ம்…

*

சினிமா சார்ந்து உங்க கதைகள்னா மூன்றைச் சொல்லலாம். ’கட் சொன்ன பிறகும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது’, ’பீத்தோவனும் கலைந்த காதலும்’, ‘அந்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டெண்ட் டைரக்டரும்’. இந்தக் கதைகள் சற்று இலகுவாக இருக்கிறது. நகைச்சுவை உணர்வுடனும்.

ஆமா. ஒரு உதவி இயக்குனராக எனக்கு என்ன சிக்கல் இருந்தது. எனக்குன்னு இல்ல அந்த இடத்துல இருக்க சிக்கல்னு நினைக்கறத எழுதினேன். அதை ஒரு நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். கட் சொன்ன பிறகு கேமரா ஓடிக்கொண்டிருக்கிறதெல்லாம் நான் சந்தித்த நிகழ்வு தான். அதை ஒட்டி எழுதினது தான்.

அந்தக் கதையின் இறுதி ஆழமானது. அந்தப் பெண் எந்த வித சலனமும் இல்லாமல் ஜாக்கெட்டின் ஊக்குகளை அவிழ்ப்பதும் எந்தவித சத்தமும் இல்லாமல் கேமரா ஓடிக்கொண்டிருப்பதோடு கதை முடிவதும் ஒரு ஷாக் தான்.

அதுவும் ஒரு நிகழ்வு தான். ஷூட்டிங் முடித்து வந்தவுடன் மனதை அது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்துச்சு. ஒரு பெண்ணாக. ஊறிக்கிட்டே இருந்தது. முன்பு வந்த நடிகைகள் அந்தக்காட்சியில் நடிக்க சிரமப்பட்டார்கள். ஆனா இவங்க வந்ததும் சொன்னதுக்கு மேல நடிக்க ஆரம்பித்ததும் எல்லாரும் தன்னையறியாம சைலண்ட் ஆகிட்டாங்க. பின்ன தான் அவங்க ஒரு பாலியல் தொழிலாளின்னு தெரிஞ்சது. அந்தக்காட்சி படத்துல வரல.

சந்திரா தங்கராஜ், அமீர் (படப்பிடிப்பில்)

இந்தமாதிரி இடங்கள்ல ஒரு பெண்ணா இருக்கறதுல எதும் சிக்கல் இருக்கா?

முதலில் அப்படி இருந்தது. ஆனா எங்க டைரக்டர் அமீர் எப்பவும் ஆண் பெண்ணுன்னு பேதம் பாக்க மாட்டார். ஆனா நான் இருக்கப்ப கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தமாட்டார். அப்படி ஏதும் திட்டனும்னா என்னை வெளில போகச் சொல்லிட்டு திட்டுவார். அந்த வேறுபாடு மட்டும் தான். இந்த வேலை அந்த வேலை செய்யக்கூடாதுன்னு எதுவும் இல்ல. எல்லாத்தையும் செய்யனும். ஆனா நுணுக்கமா ஒரு பாகுபாடு நடக்கும். அதை நான் கவனிச்சுட்டே இருப்பேன். ஒரு பெண் டைரக்டரா அல்லது உதவி இயக்குனரா ஆண்களை வேலை வாங்குவதில் சிக்கல் இருக்கு. சினிமாத்துறைன்றது அன்னன்னைக்கு பரபரப்பானது. யாரு அன்று துடிப்பா வேலை செய்யறாங்களோ அவங்க ஹீரோ. ஆனா நாம எவ்வளவு பரபரப்பா இருந்தாலும், துடிப்பா முன்னால வந்து வேலை செய்தாலும் ஒரு பெண்ணுக்கு மரியாதை குடுக்கனுமான்ற அந்த தயக்கம் இருந்துட்டே இருக்கும். உதாரணமா நாம் முன்ன நிக்கறோம்னா அது ஒரு கமெண்டிங் பொசிஷன். நாம சொல்லி நூறு பேரு ஒரு வேலை செய்யனும். அந்த நிலைமைல சில ஆண்களுக்கு இருக்கும் தயக்கங்களைத் தவிர்க்க அந்த இடத்துல பெண் இல்லாம பாத்துக்குவாங்க. ஆனா நான் அதையெல்லாம் உடைச்சு அந்த இடத்தை நான் அடைஞ்சேன்னு சொல்லுவேன்.

இது ரொம்ப சோர்வா இருக்கும் இல்ல. ஒவ்வொரு முறையும் அந்த சோர்வை உதறி உதறி தான் முன்னால போய் நிக்கனும் இல்லயா?

ஆமா. நம்ம மேலயே நமக்கு நம்பிக்கை இல்லாம போகும்படி செய்திடுவாங்க. நம்மல கண்டுக்க மாட்டிக்கறாங்களே நாம தேவையில்லாம இங்க இருக்கமோ. போய்டலாமான்னு தோணும். திரும்பத்திரும்ப எனக்கு நானே சொல்லிப்பேன். நான் இந்த வேலைக்கு வந்திருக்கேன். இது என்னோடது. நீ என்னென்ன செய்யறியோ அதையெல்லாம் நானும் செய்வேன். ஒரு ஆண் அந்த கமாண்டிங் பொசிஷன்ல இருந்தான்னா என்ன செய்வானோ அதையெல்லாம் நானும் செய்வேன். அப்பதான் அந்த சூழ்நிலைய நான் முழுமையா ஹேண்டில் பண்ற மாதிரி ஆகும். நாம் கொஞ்சம் தன்மையா இருக்கனும்னு அந்த இடத்துல சிரிச்சுட்டு நளினமா இருக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் இதை கையாளனுமா.

ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சனை இருக்காது. ஒரு ப்ராஜெக்டோட ஆரம்பத்துல அப்படி இருக்கும். அமீர் சாரோட படத்துல முதல் நாள் ஓட்டமா ஓடி எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கேன். அப்ப ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர் வந்து ஏன் இப்படி எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யறீங்க அப்படின்னு நக்கலா கேட்டாரு. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. எனக்கு இயக்குனராகனும். அப்ப எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டாதான் ஆக முடியும் இல்ல. அதான் நான் அப்படி ஓடி ஆடி செய்துட்டு இருந்தேன். டைரக்டர் என்ன சொன்னாலும் துருதுருன்னு ஓடிப்போய் செய்வேன். ஆனா அவர் அப்படி கேட்டதும் இரண்டாவது நாள்ல இருந்து அமைதியாகிட்டேன்.

அப்ப எங்க டைரக்டர் என்னை கூப்பிட்டாரு. ”என்ன? நல்லா ஸ்பிரிட்டோட ஓடியாடி வேலை செய்துட்டு இருந்தீங்க. இன்னைக்கு அமைதியா நோட்டைக் கைல வச்சுட்டு நின்னுட்டு இருக்கீங்க” என்று கேட்டார். அதுக்கப்பறம் ஒரு வார்த்தை சொன்னார். ”வந்துட்டீங்க வேலைக்கு. ஆம்பளைங்க வேலை செய்யற இடம். அவனுங்க அப்படிதான் இருப்பானுங்க. வாம்மான்னு ஈஸியால்லாம் விடமாட்டாய்ங்க. எல்லா இடத்துலயும் என்னாலயும் சப்போர்ட் பண்ணிட்டு வந்து உங்களுக்காக நிக்க முடியாது. நீங்க தான் எதையும் கண்டுக்கிறாம, நீங்க என்ன செய்யனும்னு நினைக்கிறீங்களோ அதை செய்யனும். எவனும் என்ன சொல்றான்றத பத்தி கவலப்படாதீங்க”ன்னு சொன்னார். அந்த ஒரு தடவை அவர் சொன்னது தான். அதுக்கப்பறம் நான் அவரே சொன்னாலும் கேக்கமாட்டேன். (சிரிக்கிறார்..) அப்பறம் கமெண்டிங்க் பொசிஷன்ல நின்னேன். என்னப்பாத்தா கொஞ்சம் பயப்படுவாங்க. இவ கிட்ட வச்சுக்கக்கூடாதுன்னு யோசிப்பாங்க. எப்பவும் பின் வாங்கிடக்கூடாது.

ஒரு ஷூட்ல லாம் ஒரு ஆர்ட் டைரக்டர வெளில அனுப்பறாங்க. அவன் வெளில போறப்ப அந்த பொருட்களையும் சேர்த்து தூக்கிட்டு போறான். அது இல்லனா படம் எடுக்க முடியாது. இப்ப நான் போய் அவன்கிட்ட அந்த பொருள வாங்கனும். பெரிய பிரச்சனை. அவன் அவ்ளோ முரட்டு ஆளா இருக்கான். கத்தி கத்தி சண்ட போடறான். கெட்ட வார்த்தைல திட்றான். நான் முதல் முதல்ல வாழ்க்கைல கெட்ட வார்த்தை பேசினது அப்பதான். ஒரு தடித்த எருமை மாட்டுத்தோல் ஒன்னு சினிமாவுக்காக அப்பத்துல இருந்து வச்சுக்கிடேன்.

பெரும்பாலும் இந்த மாதிரியான இடத்துல ஆண்கள் தடித்த தோலோட இருக்கறதுக்கு ஒருவேள இந்த மாதிரி சூழ்நிலைய அதிகம் பார்க்கறதுனால இருக்குமோ.

ஆமா. இருக்கும்.

ஆனா உங்க கதைகள் இதெல்லாத்துக்கும் எதிர்த்திசையில ரொம்ப நுண்மையா இருக்கு.

அந்த தோலுக்குள்ள இருக்க நொய்மையான, உணர்வுப்பூர்வமான ஆள் தான் நானு. இதெல்லாம் ஒரு மாஸ்க் மாதிரி. மாஸ்க்குன்னும் சொல்ல முடியாது. அந்த இடத்துக்கு தேவையான இயல்பா மாற்றிக்கறதுன்னு சொல்லலாம். சினிமால இருக்க ஒரு தடித்த தோல் தேவைப்படுது. ரெண்டுமே வேணும் இங்க.

உங்க கதைகள்ல ஆண்களின் இருள், தடித்த பக்கங்களை அதிகம் சொல்றீங்க.

ஆமா. நான் அந்த ஆண்கள் உலகத்தைப் பார்க்கறேன். கவனிக்கறேன். நல்லதோ கெட்டதோ ரெண்டையும் அவதானிக்கிறேன். எழுதறேன்.

சந்திரா பள்ளித் தோழிகளுடன்

உங்கள் ஆரம்பகால கதைகளில் பன்னீர்பூக்கள் அதிகம் வருது. அது பெண்கள் அமர்ந்து கதை பேசும் இடமாக வந்து கொண்டே இருக்கிறது. அப்பறம் வண்ணங்கள் உங்க கதைல அதிகம் வருது. வெறும் சேலைன்னு சொல்றதில்ல. கத்தரிப்பூ நிறத்துல பூப்போட்ட சேலைன்னு தான் சொல்ல முடியுது. அது மாதிரி நான் உமா மகேஸ்வரி, விந்தியா கதைகள்ல பார்த்திருக்கேன்.

ஆமால்ல. நாம இயல்பிலேயே அப்படிதான்னு நினைக்கிறேன். அப்பறம் ரஷ்யன் லிட்டரேச்சர்ல அப்படிதானே புறச்சூழல் அதிகமும் விவரித்து எழுதியிருப்பாங்க. அதனால் நான் எழுதும்போது இயல்பா நான் பார்த்த புறக்காட்சிகளையும் எழுத்தில் எடுத்துக்கிட்டேன். அது வெறும் பன்னீர் பூக்களோ, மரமோ மட்டும் இல்ல. அதுக்கு கீழ பெண்களோட வாழ்க்கை இருக்கு. துயரமான வாழ்க்கை. அதெல்லாமும் சேர்ந்தது தான்.

அதேபோல ஆலமரத்தை ஆண்கள் உலகமாவும், வேப்ப மரத்தை இருபாலருக்குமாவும் எழுதியிருப்பீங்க. உங்க முதல்காலகட்டத்தைவிட பிற்காலகட்டக்கதைகளில் ஆண்களின் உலகம், மனம் ஆகியவற்றை அவதானிக்கும் போக்கு அதிகமா இருக்கு.

நான் அந்த ஆலமரத்துக்கு போய் விளையாட ரொம்ப ஆசைப்பட்டேன். அவனுங்க விடல. அந்த விழுதுகள பிடிச்சு தொங்கவோ, அங்க ஒரு ஊஞ்சல் இருக்கும் அதுல விளையாடவோ எங்கள அனுமதிக்கல. கோயிலுக்கு உள்ள இருக்க இடம் அவனுகளோடதா இருந்தது. பன்னீர் மரம் வீட்டு பக்கத்துல தெருல இருக்கும். அதுக்கு கீழ உக்கார, விளையாட, கதை பேச தான் இடம் கிடைச்சது. அதனால தான் அதிகமா அதைப்பற்றி எழுதிருப்பேன்.

நான் அந்தமாதிரி ஒரு இடத்துல இருந்து வந்து எழுத்தாளரா ஆனதெல்லாம் நினைச்சுப்பார்க்க முடியாத ஒன்னு. அழகம்மா கதையெல்லாம் எங்க ஊர்ல உள்ளவங்க படிச்சு நெகிழ்ந்ததா சொன்னாங்க. அவங்களுக்கு நான் ஜஸ்டிஸ் செய்ததா நினைச்சாங்க.

சந்திரா தங்கராஜ்

ஒரு சைக்கிள் கூட ஓட்ட முடியாது. சினிமா படத்துல மாதிரி வெளி ஊர்ல இருந்து ஒரு மாடர்ன் பொண்ணு வருவா. எல்லாத்தையும் மாத்துவால்ல. அந்தமாதிரி துர்கான்னு ஒரு பொண்ணு எங்க ஊருக்கு வந்தா. எல்லாரும் விவசாயம் பாக்க போய்டுவாங்க. அப்ப அவ போய் எங்களுக்காக சைக்கிள் கடைல சைக்கிள் எடுத்துட்டு வந்து கத்துக்கொடுப்பா. அதுவும் ஒரு தெருவுல ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ள தான் ஓட்ட முடியும். அப்ப இந்த பசங்க வந்து எங்கள பாட்டுப்பாடி கிண்டலடிச்சு ஓட்ட விடாம தடுப்பானுங்க. சைக்கிள் ஓட்டுனதுக்கே சண்டிராணியேன்னு அப்ப ஒரு ஃபேமஸ் பாட்டு அதைப்பாடி ஓடவுடுவானுக.

நீங்க எழுதின கதைகள் அப்பறம் எழுதப்போற கதைகள் சார்ந்து எந்தக் கேள்வி உங்களை வழி நடத்துது. அல்லது எதை இன்னும் எழுதனும்னு நினைக்கிறீங்க.

ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். இடப்பெயர்வு சார்ந்து. சமூகம் சார்ந்த வரைபடமா அதை நான் பாக்கறேன். அவங்களுக்கு நடந்த ஒடுக்குமுறை, கண்ணீர் இதப்பத்தி எழுதனும். அது சார்ந்து தான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.

உங்க முதல் கதை புளியம்பூ அதை சார்ந்தது தான் இல்லயா. நிலத்தை வாங்கி புளியமரங்களை பார்த்துப்பார்த்து வளர்க்கும் அப்பா. ஒரு உப்பு பெறாத காரணத்திற்காக நிலத்தை விற்கிறார். ஐந்து வருடத்திற்குப்பின்னும் புளியமரம் காய்க்கவில்லை. பூ உதிர்ந்து கிடக்கிறது. அப்பா நிலத்தை விற்ற அன்று இரவு நேரமாகி வீட்டுக்கு வருகிறார். அவர் மேல் புளியப்பூ வாசம். இதை நீங்க சொல்ற அந்த இடம்பெயர்ந்து வந்து நிலத்தைக் கை கொள்ள முடியாமல் பெயர்ந்து கொண்டே இருக்கும் மக்களின் வேதனையோடு ஒப்பிட முடிகிறது.

ஆமா. சமீபத்தில் வால் நட்சத்திரம் கதையும் அது பற்றி தான். எங்க முன்னோர்கள் பெரிய உலைச்சளுக்கு உள்ளாகியிருக்காங்க. இரண்டு தலைமுறைக்கும் மேல நிம்மதியா நாங்க வாழலன்னு தான் சொல்லனும். என் தலைமுறை வரைக்கும் அந்த கஷ்டத்த பார்க்க முடியுது. இது தான் என் நிலம்னு சொல்லி ஒரு எடத்துல உக்காரனும்ல அது அமையல.

ஒட்டுமொத்தமா இதை கட்டாய புலம்பெயர்வுக்கு உள்ளாகும் மக்களைப் பற்றிய கேள்வியாக எடுத்துக்கலாம்.

ஆமா உலகம் முழுக்க இந்த பிரச்சனை இருக்கு. என்னோட மிளகு (கவிதை) தொகுப்புல இது பற்றி அதிகம் பேசியிருப்பேன். ஏதாவது வகையில எங்கள் முன்னோர்களின் ஆன்மாவை எழுத்து வழியா சாந்தியடைய வைக்க முடியுமான்னு யோசிக்கிறேன்.

அதைச் சுற்றி உங்களுக்கு என்னென்ன கேள்விகள் வருது?

இன்னும் அவங்க அமைதி அடைஞ்சாங்களா இல்லயா? அந்த ஆன்மா என்ன நினைக்குது? அதோட வலி எப்படிப்பட்டதுன்னு யோசிக்கிறேன். வால் நட்சத்திரம் கதைல ஊரெல்லாம் காலியாகி போன பிறகு அங்கு குரல்கள் உலவுவது போல ஒரு சித்திரம் வரும். நமக்கு எப்பவும் நம்ம குடும்பம் சார்ந்து அதிக பட்சம் நாலு தலைமுறை தெரியவரும். நான் கேள்விப்பட்டவரை நாலு தலைமுறையா முன்னோர்கள் நிம்மதியா இல்ல. சமூக ஒடுக்குமுறை இருக்கு. இடம்பெயர்ந்துட்டே இருக்காங்க. ஏன்?ன்னு கேள்வி இருக்கு. இந்தக்கேள்வி எப்போ இருந்து ஆரம்பிச்சுதுன்னு சொல்ல முடியல. அனேகமா மிளகு தொகுப்புன்னு நினைக்கிறேன்.

இல்ல. முதல் கதையிலிருந்தே. புளியம்பூ கதைலயும் இதான் இருக்கு. புளியம்பூவின் வாசம் உங்களை உலைச்சளுக்கு உள்ளாக்குவது அதனால் தான். உங்க அப்பாவின் கண்ணீரிலிருந்து நீங்க முன்னோர்களின் கண்ணீருக்கு சென்று சேர்வதாகத் தோன்றுகிறது.

(சிரிக்கிறார்..) ஆமா. அந்த அலைக்கழிப்பு எப்ப முடியும்ன்ற கேள்வி இருக்கு. அப்ப இன்னொரு கேள்வி வருது. ஒரு இடம் கிடைச்சா என்ன நடக்கும்ன்ற கேள்வி. என்னதான் இந்த மனுஷங்களுக்கு தேவைப்படுது. உலகம் முழுக்க நடக்கற இந்த புலம்பெயர்ந்த மக்கள், பூர்வீகக்குடி மக்கள் என நிறைய இது சார்ந்து தான் படிக்கிறேன், படங்கள் பார்க்கறேன். ஒரு நிலையான இடம் ஒன்னு ஏன் தேவைப்படுதுன்னு யோசிக்கிறேன். பணம் இருந்தா ஒரு இடத்துல இல்லாம சுத்திட்டே இருக்கலாம். ஆனா குடும்பத்தோட பெயர்ந்து போய்க்கிட்டே இருக்க முடியாதுல்ல. ஒரு சமூகமாவும்.

எனக்கு நிறைய பழங்குடிகள் நினைவுக்கு வராங்க.

ஆமா. இவங்களும் பழங்குடிகள் தான. நிலையான ஒரு இடத்துல இருந்து தான் துரத்தப்பட்டிருக்காங்க. நான் சாதிய ரீதியா பாக்கல. இதுல இருந்து அந்தக் கேள்விய விரிச்சுக்கப் பாக்கறேன். இப்ப அதிகாரமும், பொருளாதரத் தன்னிறைவும் அடைஞ்சுட்டாங்க. ஆனால் இதை ஒரு பழைய கேள்வின்னு சொல்லலாம். எங்கப்பா பாட்டி சொன்ன கதை இது. அவங்க கஷ்டத்தையெல்லாம் ரெண்டு வயசுல இருந்து கேக்கறேன். சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டது, காட்டிலாகா அதிகாரிகள் என்ன செய்தாங்க, நிலத்தை விட்டு துரத்தினது இதெல்லாம் கேக்கும்போது எனக்கு அவங்க மேல எம்பதி (பரிவு) வந்துட்டே இருக்கு. எம்பதின்றதும் ஒரு வலிதான். என்னோட புறச்சூழல் மாறிட்டே இருந்தாலும் அடியாழத்துல இந்தக் கேள்வி தான் என்னை துரத்திட்டே இருக்கு. அல்லது கனமா அப்படியே கிடக்கு.

உங்கள மாதிரி ஒருத்தர் வந்து இன்னொரு பதில கண்டுபிடிக்கனுமா இருக்கலாம்.

அது நடந்தது நடந்தது தான். வலியும், குற்றவுணர்வும் அப்படியே தான் இருக்கும். கறுப்பின மக்களுக்கு நடந்ததையெல்லாம் பார்த்தா இன்னும் டிஸ்ட்ர்பா இருக்கும். சுதந்திரம் கிடைச்சதுன்னு சொல்றோம். ஆனா இன்னும் இந்த உலகம் மாறல. மேலும் ஒடுக்காம இருக்கா? இன்றைக்கும் ஒடுக்கிக் கொண்டே இருக்குது. ஒருசாரார் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்காங்க. அந்த வலியையெல்லாம் ஞாபகப்படுத்த எங்க அம்மா மாதிரி ஆளுங்க வேற கூட இருக்காங்க. மறக்கவிட மாட்டிக்காங்க. (சிரிக்கிறார்..) எங்க அம்மா ”நாங்கள்லாம் அந்தக்க்காலத்துலனு…” ஆரம்பிச்சா என் பொண்ணு பெளஷ்யா பாட்டி இந்த பெயின் கதையெல்லாம் பேசாதீங்கன்னு சொல்லுவா. அவளுக்கும் எல்லா கதையும் தெரியும். திரும்பத்திரும்ப சொல்லாதீங்கம்பா. எல்லாத்தையும் என் மண்டைல் ஏத்திவிட்டுப் போய்ட்டாங்க. ஒருவேள இந்த மாதிரி கதை எழுதறத்துக்காக இருக்கலாம்.

உங்கள் கதைகளில் பெரும்பாலும் நினைவேக்கம் தருவதாக உள்ளது. வெறும் கடந்த காலத்தைப் பகிரும் கதைசொல்லல் தன்மை தான் அதிகம். ஆனா சில கதைகள் அந்த நினைவேக்கத்திலிருந்து ஒரு படி மேல போய் படிமமாக ஆகிறது. உதாரணமாக புளியப்பூ. சில கதைகள் இறுதியில் அதன் விளங்க இயலாத தன்மை அல்லது பிறழ்வுத்தன்மையை சுட்டிக்க்காட்டி எதுவும் சொல்லாமல் விடுவதன் வழியாக மேலெழுகிறது. உதாரணமாக பன்னீர் பூக்கள்.

அப்படியே தப்பிச்சிடறேன்ல. (சிரிக்கிறார்…)

உங்க அனுபவங்களை அல்லது உங்கள் வாழ்க்கையில் சந்தித்தவை சார்ந்து மட்டுமே கதையாக்கறீங்கன்னு சொல்லலாமா?

அது மட்டுமில்ல. கற்பனையும் தான்.

இப்ப உங்க கிட்ட பேசும்போது கழிவறைக் காதல்பிரதி அப்படியான கதைன்னு தோணுது.

ஆமா. ஒரு பேருந்து பயணத்தின் போது இரவுல ஒரு பெண் கழிப்பறைக்கு முன் உட்கார்ந்து பணம் வாங்கி போட்டுக் கொண்டிருந்த சித்திரத்தைப் பார்த்து கேள்வி எழுந்து அதை அப்படியே விரித்துக் கொண்ட கதை. என்னோட கதை என நினைக்கும் பெரும்பாலான கதையிலும் அப்படி விரித்தெடுக்கறது தான். கற்பனை தான்.

அந்தக் கதையை என் பையன் அபினவ் ஷார்ட் ஃப்லிம் எடுக்கப்போறான்.

*

சென்னைக்கு எப்போ வந்தீங்க?

1995. பதினெட்டு வயசுல கல்யாணமாச்சு. 12வது முடிஞ்சதும். அப்பாவுக்கு படிக்க வைக்க விருப்பம் தான். ஆனா சொந்தக்காரங்க பிரஷர். சொந்த அத்தை பையன் சுந்தர தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க.

சந்திரா திருமணத்தின்போது

பயமா இருந்ததா?

ஆமா. அவருக்கும் எனக்கும் பதினொரு வருஷம் இடைவெளி. ஆனா எனக்கு அப்ப கல்யாணத்து மேலயே பெரிய அபிப்ராயம் இல்ல. அழுது புரண்டாலும் வீட்ல விடல. படிக்கனும்னு சொன்னேன். கணவர் படிக்க வைக்கிறேன்னு சொன்னாங்க. கல்யாணம் பண்ணிட்டு சென்னை வந்தேன். வந்த பத்து நாள்ல BA.BL எக்ஸாம். நல்ல மார்க் வந்துச்சு. அம்பேத்கார் லா காலேஜ்ல சேர்ந்தேன். ஹஸ்பண்ட் இதழியல் துறைல வேலை பார்த்தாங்க. இரண்டு வருஷத்துல Pregnant ஆகிட்டேன். அப்பயும் காலேஜ் போனேன். ஆனால் உடல் ஒத்துழைக்கல. குழந்தை பிறந்தப்பறம் தான் தமிழ் இலக்கிய வாசிப்பு அதிகமானது. அதுக்கு முன்ன ரஷ்யன் லிட்டரேச்சர் அப்பா வழியாக அறிமுகமாகியிருந்தது. வணிக இலக்கியமே வாசிச்சதில்ல. ஐந்தாவது படிக்கும்போதே நான் படிச்ச முதல் நாவல் கேப்டன் மகள். அப்பறம் வீட்ல எல்லாரும் கம்யூனிஸ்ட் பின்புலம் என்பதால் அந்த புத்தகங்கள்லாம் அறிமுகமாகியிருந்தது. கணவரும் அவங்க வீடும் கம்யூனிஸ்ட் பின்புலம் தான். அதுக்கு ஒரு சமூக வரலாற்று பின்புலம் இருக்கு.

சந்திரா தங்கராஜ் குடும்பத்தினருடன்

அது பற்றி சொல்லுங்க.

நாங்க குற்றப்பரம்பரை அந்த சமூக இனக்குழுவைச் சார்ந்தவங்க. தாத்தா காலத்துல வகுரணில இருந்து கம்பம் பள்ளத்தாக்கு கூடலூர் பகுதிக்கு இடம் பெயர்றாங்க. இங்க வந்தா இருக்கறதுக்கு இடம் மட்டும் தான் இருக்கு. கூலி வேலை செய்தாங்க. விவாசாயம் செய்ய நிலம் இல்ல. ஏன்னா அப்ப பென்னிகுவிக் அணை கட்டினதால விவசாயம் செழிப்பா இருக்கு. முக்கியத் தொழிலா ஆனதால நிலம் கிடைக்கறது சிரமமாக இருக்கு. அதனால கூடலூர்ல இருந்து வருஷ நாட்டு ஜமீனுக்கு போறாங்க. அது கரட்டுக்காடு மாதிரி. அங்க விவாசயம் செய்யறதா இருந்தா கவர்மெண்ட் நிலம் கொடுக்கும். 1945- 50 கள்ல. கரட்டுக்காட்ட விவசாய நிலமா மாத்தி புது நிலத்தை உருவாக்குறாங்க. குடியேற்றம் நடக்குது. ஆனா இந்த மக்களுக்கு அதுக்கு பட்டாவாங்கனும்னு தெரில. 1960-65கள்ல கம்யூனிஸ்ட் கட்சி தேனி பகுதிகள்ல வந்து வேலை செய்யறாங்க. அவங்க தான் இந்த மக்களை ஒன்னு சேர்த்து பட்டா வாங்க உதவி செய்யறாங்க. அது அவ்வளவு எளிதாக கிடைக்கல. பத்து வருஷமா நிலப்போராட்டம் நடக்குது. அப்பாவுக்கு அப்ப பத்து வயது இருக்கும். பள்ளிக்கூடத்துக்கெல்லாம் அவரு போனதில்ல. கம்யூஸ்ட் கட்சி வந்தப்பறம் தான் எல்லாம் பள்ளிக்கூடம் போறது, மாலைக்கல்வி போறதுன்னு ஆரம்பிச்சது. எங்க ஊர்ல இருந்த எல்லாரும் கம்யூனிஸ்ட் கட்சில இருந்தாங்க. 1967ல அண்ணா காலத்துல ஒரு வழியா பட்டா கிடைச்சது. ஆனா அது கிடைச்சும் பிரயோஜனம் இல்ல. ஏன்னா அது கரட்டுக்காடுல. ஆமணக்கு, சோளம், சாமை லாம் போட்டாங்க. கூழ் மட்டும் தான் குடிப்பாங்க. சோறே சாப்பிட்டதில்லயாம். ஒரு 1985 வரை இதான் நிலைமை. ஆனால் சீக்கிரம் மண்ணோட சத்து இல்லாம ஆச்சு. மறுபடியும் இடம்பெயர்ந்தாங்க. என்னோட ஆரம்ப கால படைப்புகள்ல அந்த வாழ்க்கை தான் இருக்கும்.

ஆமா. ’கிழவி நாச்சி’, ’அழகம்மா’, ’அழகேசனின் பாடல்’, ’பள்ளிக்கூடம் பூட்டிக் கிடக்கிறது’ இதெல்லாமா?

ஆமா.

அழகு, உடல் இந்த இரண்டும் யாரை விடவும் பெண்ணை ஒரு காலகட்டம் வரை தொந்தரவு செய்யக்கூடியது. அதைக் கடக்கும் தருணம் இருக்கும். அதைப்பற்றி சொல்லுங்க.

நான் ரொம்ப சாதரண ஆள், கறுப்பா இருக்கேன், அழகா இல்ல இதெல்லாம் எனக்கு சின்ன வயசுல இருந்திருக்கு. ஆனால் எங்க அப்பா எப்பவும் என்னை எல்லார்கிட்டயும் நியாயமான பொண்ணு, பொய்சொல்லமாட்டா இப்படி தான் சொல்லிட்டே இருப்பார். எனக்குள்ள எல்லாத்தையும் விட அது ரொம்ப முக்கியம்னு தோணுச்சு. அப்பறம் என்னோட இரண்டு டீச்சர்கள். கமலா டீச்சர் என்னை நல்லா வச்சுப்பாங்க. அப்பறம் ரங்கமணி சார். அவங்க குடுத்த நம்பிக்கைனும் சொல்லலாம்.

அப்பறம் எங்க ஊர்ல இந்த கள்ளிப்பால், நெல்லு விதை போட்டு கொல்றதுல்லாம் சாதாரணமான விஷயம். குறிப்பா மூனாவது குழந்தைகள. தம்பி, பாப்பா வரப்போறாங்கன்னு சொல்லி சந்தோஷமா சொல்லிட்டு இருப்பாங்க பள்ளிக்கூட நண்பர்கள். பாப்பா செத்துப்போச்சுன்னு எத்தனை பேர் சொல்லிருப்பாங்க. இன்னைக்கு யோசிச்சு பார்த்தா அதெல்லாமும் கொல்லப்பட்ட குழந்தைங்க தான். என்னையும் எங்க அம்மா கருக்கலைப்பு செய்ய ஆஸ்பத்திரிக்கு போயிருக்கு. அவங்க ரொம்ப பலவீனமா இருந்ததாலயும், ஐந்தாவது மாசம்ன்றதாலயும் செய்ய மறுத்துட்டாங்க. பிறந்தப்ப நான் வேற கருப்பா, குட்டியா பொண்ணா பொறக்கவும் சொந்தக்காறங்க கொல்றதுக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க. எங்க அம்மா தான் நான் வளக்கறேன்னு நின்னுடுச்சு. இல்லன்னா நான்லாம் இன்னைக்கு இருக்கவே முடியாது. அதுக்கப்பறம் தானே உடல், அழகுல்லாம்.

எப்ப அதை முழுமையாகக் கடந்தீங்க?

ஜார்னலிஸ்ட் ஆனப்பறம். எல்லா இடத்துக்கும் போய் நிக்கறோம்ல. அந்த தைரியம் தான் உடலைப் பற்றிய சிந்தனை இல்லாமல் செய்யுது. ஒரு திமிரோட தான் சுத்திட்டு இருப்பேன். ஆனா நல்லா நீட்டா டிரெஸ் பண்ணிப்பேன். அலங்கரிச்சுப்பேன். அது இல்லாமையும் இருப்பேன். எதுக்குமே தயக்கம் இல்ல.

உறவு சார்ந்து அழகு சார்ந்து உடல் சார்ந்து கடக்க இயலாத பெண்களைப் பார்க்கும் போது என்ன நினைப்பீங்க? அவங்கள எப்படி பாக்கறீங்க.

அந்த அழகை மட்டும் முன்னிறுத்தி நிக்கறவங்கள பார்த்தா பரிதாபமா இருக்கும். சிலர் அத்தனை திறமையானவங்களா இருப்பாங்க. ஆனா உறவு சார்ந்த சிக்கல்களால திறமையை இல்லாமலாக்கிக்கிறவங்களையும் பார்த்திருக்கேன். தன்னையே இழந்திடுவாங்க. நிறைய அப்படி சீரழிந்தவர்களை கண் முன் இந்தத் துறைகளில் பாக்கறேன்.

*

சந்திரா தங்கராஜ் இயக்குனர் அமீருடன்

சினிமா மேல ஆர்வம் எப்படி வந்தது?

சினிமா மேல சின்ன வயசுல இருந்தே ஆர்வம். அந்த சின்ன ஊர்ல இருந்துக்கிட்டு வாரத்துக்கு ரெண்டு படம் பார்ப்பேன். எங்க குடும்பமே செகண்ட் ஷோ போவோம். அந்தக்காலத்துல சிகிரெட் பெட்டில பிலிம்லாம் சுத்தி வச்சு திரை கட்டி படம் போட்டு காமிப்பானுங்க. பொம்பலைப்புள்ளைகள அதுக்கும் சேர்த்துக்க மாட்டானுக. அப்பறம் நானே செட்டியார் கடைக்கு போய் நெகடிவ் எல்லாம் வாங்கி வைப்பேன். அதுக்கு தான் என் காசெல்லாம் செலவாகும். நிறைய படத்தோட நெகடிவ் வாங்கி வச்சிருந்தேன். அதே மாதிரி நானும் வெள்ளை வேட்டில அந்த நெகடிவ் மேல டார்ச் அடிச்சு படம் காமிப்பேன்.

சந்திரா தங்கராஜ், இயக்குனர் ராம்

சினிமாவும் இலக்கியமும் கதை சொல்லும் ஊடகம் தான். இரண்டில் எந்த ஊடகம் உங்களுக்கு பிடித்தமானது.

இலக்கியம் தான். ஆனால் சினிமா இலக்கியத்தையும், இலக்கியம் என் சினிமாவையும் பாதிக்கறத பாக்கறேன். 2005க்குப் பிறகு சினிமாவுல ஒருத்தருக்காக கோஸ்ட் ரைட்டிங்காக ஒரு கதை எழுதிக் கொடுத்தேன். என்னை மதித்து கேட்கிறார்களே என்றும் சினிமாவில் என்னை தக்க வைத்துக் கொள்ளவும் எழுதிக் கொடுத்தேன். அது நல்லா வந்தது. அதுக்குப்பிறகு தான் மீண்டும் கதை எழுத ஆரம்பித்தேன். ஏற்கனவே எழுதி பிரசுரிக்காம வைத்திருக்க கதையும் சேர்த்து புளியம்பூ, கிழவி நாச்சி சிறுகதைகளை காலச்சுவடு இதழில் புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப்போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அப்ப பேர் எழுதக்கூடாது. போன் நம்பர் தான் அனுப்பனும். என் ரெண்டு கதையும் பரிசு வாங்கிருக்கதா எங்க அப்பாவுக்கு தான் கால் வந்திருக்கு. அது ஊக்கமா இருந்தது. 2006ல பூனைகளில்லாத வீடு, பூச்சி சிறுகதைகள் எழுதினேன். பத்து கதைக்கிட்ட 2007ல எழுதிட்டு ஒரு தொகுப்பு போட்டேன். விகடன் விருது கிடைச்சது. 2009ல இரண்டாவது தொகுப்பு. 2009ல அப்பா இறந்துட்டாங்க. அப்பதான் கவிதை எழுத ஆரம்பிச்சேன்.

கள்ளன் படப்பிடிப்பு

கள்ளன் சினிமா எடுத்த அனுபவம் பற்றி சொல்லுங்க.

எட்டு வருடமா உதவி இயக்குனரா வேலை பார்த்துட்டு இருக்கேன். நீங்க எவ்ளோ பெரிய இயக்குனர்கள் கிட்ட வேலை பார்த்தாலும் நீங்க போய் கதை சொல்லும்போது பிரட்யூசர்ஸ், ஹீரோ ஓகே சொல்லனும். 2012 ல இருந்து கதை சொல்றேன். ஆக்‌ஷன் படன், கிரைம் இருக்கு ஒரு பொண்ணு எப்படி இதை செய்வாங்கன்னு தயங்கறாங்க. வாய்ப்பே கிடைக்கல. ராம் நிறைய உதவி செய்தார். ஆனாலும் கிடைக்கல. மன அழுத்தம் இருக்கும். வயசும் போய்ட்டே இருக்கு. கணவர் சம்பாதிக்காரதால பொருளாதாரம் சார்ந்து சிக்கல் இல்ல. இருந்தாலும் நாம சம்பாதிக்கற மாதிரி இருக்காதுல்ல. நான் வேற சின்ன வயசுல இருந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். 2004ல இருந்து சம்பளம்னு எதுவும் இல்ல. எட்டு வருஷம் சினிமாவுக்காக அத்தனை உழைப்பு போட்டிருக்கேன். எல்லாம் நாம் டைரக்டர் ஆகனும்னு தான் ல. இலக்கியம் பத்தி யோசிக்கவே முடியல. கவிதைகள் மட்டும் எழுதிட்டு இருந்தேன். உணர்வு வெளிப்பாடா மட்டும் தான் ஆரம்ப கால கவிதைகள் இருக்கும்.

2016ல கள்ளன் படம் ஆரம்பித்தேன். தனுஷ், விஜய்சேதுபதி, சசிக்குமார் எல்லார்கிட்டயும் கதை சொன்னேன். கிடைக்கல. ஒரு வருடத்துல படம் எடுத்துட்டேன். பட்ஜெட்டும் சரியா கிடைக்கல. ரிலீஸ் ஆக ஐந்து வருடம் ஆச்சு. 2022ல தான் வெளிவந்தது. அதுவும் இந்த சாதி சமூகத்தைச் சேர்ந்த ஆட்கள் இந்த டைடில எடுக்கச் சொல்லி அதை ரிலீஸ் ஆக விடல. “கள்ளன்” என்ற பேரு அவங்கள தவறா காட்டறதா, தங்கள் சாதியைக் குறிக்கறதா சொல்லி பிரச்சனை பண்ணாங்க. சென்னைல மட்டும் தான் ரிலீஸ் ஆச்சு. அப்பறம் OTTல வெளிவந்தது. அடுத்து நான் குற்றப்பரம்பரையைப் பற்றி படம் எடுப்பேன். என்ன பண்ணுவாங்க?

சந்திரா தங்கராஜ் படப்பிடிப்பில்

2019ல சூரரைப் போற்றுல வொர்க் பண்ணினேன். கொரனா காலத்துல முழுவதுமா கவிதைல தான் இருந்தேன். மிளகு கவிதைத் தொகுப்பு, சோளம் மொத்த தொகுப்பு வந்தது.

*

நீங்க உங்களை கவிதைகளை யாருடைய தொடர்ச்சியாக முன் வைப்பீங்க?

தேன்மொழிதாஸ். அவங்களும் அந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் சார்ந்து தான் கவிதைகள் எழுதுவாங்க. அப்பறம் ஆத்மாநாம், தேவதச்சன், சுகுமாரன் மிகவும் ஆதர்சமான கவிஞர்கள். நான் முன்ன கவிதைகள் எழுதியிருந்தாலும் மிளகு தொகுப்புக்குப் பிறகு தான் ‘என்னுடைய கவிதைகள்’னு சொல்லக்கூடிய அளவு எழுதியிருக்கேன். என்னை கவிதைகள் பொறுத்து மதார், ஆனந்தகுமார், தீபு ஹரி, ச.துரை, வே.நி.சூர்யா இவங்க காலகட்டத்தோட வைக்கலாம். இசைக்குப் பிறகுன்னும் சொல்லலாம்.

பி.ராமன் தமிழ்-மலையாளக் கவிதை முகாம்

பி.ராமன் மாஸ்டர் உங்கள் கவிதைகளைப் பற்றி சொல்லும்போது “வட்டாரம் சார்ந்த வண்ணமயமான குரல்” என்கிறார். முதலில் உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக கவிதையை நீங்க அணுகியிருந்தாலும் பின்னாளில் உங்கள் கவிதைகள் நிலம் சார்ந்து அதிலுள்ள மனிதர்களின் வாழ்க்கை, உணர்வுகள் சார்ந்து உள்ளது. மொழி வழியாக அதில் வெளிப்படும் பித்து வழியாக தீவிரமான கனவுநிலை வழியாக கவித்துவம் கைகூடி வருவதாகத் தோன்றுகிறது. புதிய படிமங்கள் அதன்வழியாக உருவாகி வருகிறது.

மிக்க நன்றி. சந்தோஷம் தான். ஆனா நான் எளிமையா இருக்குன்னு நினைச்சேன். புதிதாக நம்மைத் தெரிந்து கொள்வதற்காகவும், நம் அகத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்காகவும், எதிலிருந்தோ விடுபடுவதற்காகவும் எதையோ சென்று சேர்வதற்காகவும் தான் கவிதை எழுதறோம்னு நினைக்கிறேன். அதை எழுதி முடிக்கும்போது அத்தனை மகிழ்ச்சியா இருக்கு. என்னோட நிலம், நிலக்காட்சிகள், பொழுதுகள், பறவைகள், மரங்கள், அது வழியா வர்ற படிமங்கள் கவிதைகளில் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

வேறு வேறு சூரியன்கள் கவிதைத்தொகுப்பில் நகரத்தோட நிலம், மனிதர்கள், காட்சிகள் வருது. மிளகு தொகுப்பை ஒப்பு நோக்க வலி, ஏக்கம் இல்ல.

ஆமா. அது சமகால கவிதைகளோட தாக்கத்தினால இருக்கலாம். அப்பறம் மெல்ல நானும் விடுபடறேன்னும் சொல்லலாம். அங்க இருந்து இங்க நகரத்துள்ள நிலம், மனிதர்கள், உணர்வுகள் பற்றி எழுதுவதன் வழியாக சமகாலத்துக்கு ஒரு தாவல்னும் சொல்லலாம்.

கவிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழிமுறை வைத்திருக்காங்க. சிலர் எழுதிய அத்தனையையும் தொகுப்பாக்குவாங்க. சிலர் எடிட் பண்ணி தேவையானத மட்டும் தொகுப்பாக்குவாங்க. சிலர் மூத்த கவிஞர்கள், சமகால கவிஞர்கள்- நண்பர்கள் கிட்ட கொடுத்து தொகுப்பாக்குவாங்க. உங்க வழிமுறை என்ன?

கவிதை எழுதும் காலகட்டத்துல முழுவதும் அதுக்குள்ள இருப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் அதுக்குன்னு ஒதுக்கி எழுதுவேன். மூன்று மாதம் அல்லது ஆறுமாதம்னா வேறு எந்த சிந்தனையும் இருக்காது. கவிதைகள் வாசிப்பது எழுதுவது மட்டும் தான். குறைவாகத்தான் எழுதுவேன். பெரும்பாலும் என்னோட எடிட்லாம் உள்ளுக்குள்ளேயே நிகழ்வது தான். 80 கவிதைகள் எழுதினா 70 தொகுப்புக்கு வந்திருக்கும். அந்த அளவுக்கு தான் எடிட். அப்பறம் நண்பர்கள் ச.துரை, வே.நி. சூர்யா, சம்யுக்தா மாயா, பூவிதழ் உமேஷ் இவங்க கிட்ட கொடுத்து படிச்சு கருத்து கேட்டுப்பேன்.

கவிதை முகாமில்

பி.ராமன் மாஸ்டரோட முயற்சியால தமிழ்-மலையாளக் கவிதை முகாம் நிகழ்ந்தது. அந்த அனுபவம் எப்படி இருந்தது.

சமகால கவிஞர்களை பார்க்க பழக வாய்ப்பு கிடைத்தது. அம்மு தீபா, ரெம்யாலாம் நல்ல தோழிகளாகிட்டாங்க. எல்லாரும் ஒப்பு நோக்க என்னைவிட கவி மன நிலைல பித்தா இருந்த மாதிரி இருந்தது. அம்முதீபாலாம் பித்தின் உச்சம். என்னோட பத்து கவிதைகளை பி.ராமன், அவங்க மனைவி சந்தியா இருவரும் மலையாளத்துல மொழிபெயர்த்திருந்தாங்க. நான் எழுதினத மலையாளத்துல கேக்கறப்ப சிலிர்ப்பா இருந்தது. சட்டுன்னு ஒரு அழகு கூடுனாப்ல இருந்தது. இங்க எந்த பெரிய கவிஞர்களும் என் பெயரை சொன்னதில்ல. பி.ராமன் என் பெயரை தமிழ் இந்து-ல எழுதும்போதும் சொல்றாரு. அவர் அந்த முகாமுக்காக எடுத்து செய்த வேலைலாம் பெருசு. எல்லாரும் கவிதைக்குள்ளேயே இருக்கறதப் பார்க்கறது அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது. ஆனா என்னால அப்படி இருக்க முடியல. அந்த மேட்னஸ நான் கவிதை எழுதும்போது அடைந்திருக்கேன். அது வழியா தான் அது எவ்வளவு பெருசுன்னும் புரிஞ்சுக்க முடிந்தது.

*

நீங்க எப்படி தனிமை விரும்பியா?

என் வேலை நிறைய பேரோட இருக்கறதுதான். ஆனால் வீட்டுக்கு வந்துட்டா அவ்ளோதான். தனியாதான் இருப்பேன். முன்ன நிறைய நண்பர்கள் இருந்தாங்க. வெளில போவேன். இப்போ அதெல்லாம் இல்ல. செட் ஆகல அப்படி இருக்கறது. மிக நிச்சயமா நான் போக வேண்டிய விழாக்களுக்கு மட்டும் போவேன். பெரும்பாலும் படம் பார்க்கறது, வாசிக்கறது, எழுதறது தான் வீட்ல இருக்கும்போது. அதுக்கு தனிமை தேவைப்படுது. ஒரு எழுத்தாளரால எப்பவும் அந்த கேளிக்கைகளுக்குள்ளேயே இருந்துட்டு இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். நான் இருக்கும் துறையில அது அதிகம். அங்க இருக்கறது எனக்கு எப்படா கிளம்பலாம்னு தோணும். எனக்கு பிடிச்சபடி பயணம் செய்யனும். ஆனா அதுக்கு இன்னும் சரியான சூழல் அமையனும்.

ரொம்ப யோசிச்சா பயணம் போக முடியாது. போயிடனும்னு ஜெ சொல்லுவார்.

இல்ல? இந்த ஜெயமோகன பார்க்கும்போது அப்படித்தோணும். அவர் கூட பேசறதில்ல. தொடர்பு எதுவும் இல்ல. ஆனா நம்மல ஒன்னு இயக்கும்ல. நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேக்கும்ல. அந்த குரல் அவரோடதா தான் எப்பவும் ஒலிச்சிருக்கு. இப்ப வீடியோக்கள்லாம் அதிகம் போடறார். அதுல என் கேள்விக்கு பதில் சொல்லி வச்சிருப்பாரு. தனிமை/ஏகாந்தம் வீடியோ ஒன்னு. அதுல ஒரு படைப்பு மனம் எப்படி இருக்கும்னு சொல்லிருப்பாரு. ‘இதான் நான்’ எனில் நான் ஏன் கவலைப்படனும்னு நானே அதைப்பார்த்து மனசை தேத்திப்பேன். சினிமால இருந்தா தொடர்புகள அதிகப்படுத்தனும், கொண்டாட்டங்கள்ல கலந்துக்கனும். ஆனா என்னால முடியல. நான் ரொம்ப வொர்க்கஹாலிக்.

சந்திரா தங்கராஜ் மகன் அபினவ், மகள் பெளஷ்யா, கணவர் சுந்தர்

குடும்பப் பொறுப்புகள் எவ்வளவு தொலைவு சமாளிக்கிறீங்க?

ஒரு காலகட்டம் வரை அம்மா தான் குழந்தைகளப் பார்த்துக்கிட்டாங்க. இப்ப நான் கட்டாயமா பர்க்க வேண்டிய சூழல் வந்துடுச்சு. பிள்ளைங்க பெரிய ஆளாகிட்டாங்க. இந்தகாலகட்டம் ரொம்ப சிக்கலானதா இருக்கு. அவங்க ட்ரீம் என்ன, எதை நோக்கிப் போகனும் அப்படின்ற குழப்பத்துல இருக்காங்க. நான் இப்ப தான் அவங்கள வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன். அந்தக் கடமையும் இப்ப இருக்கு. முன்ன அம்மா சமையல் செய்வாங்க. இப்ப நான் தான் சமைக்கிறேன். ஒரு வேளை மட்டும் சமைப்பேன். இன்னொரு வேளை பசங்களே சமைக்கிறாங்க. அவங்க தேவைகளை கவனிக்கனும் உணர்வு ரீதியாகவும், எல்லா ரீதியாகவும் உடனிருக்கனும். மற்ற நேரமெல்லாம் வாசிக்கனுமே, எழுதனுமேனு ஓடுவேன். ஒரு பெண்ணா எல்லாமும் தான் இல்ல. சில பிரிவில்லேஜ் இல்லனா அதை ஏத்துக்கனும்.

அப்பப்ப என்ன வருதோ அந்த செயல்ல தீவிரமா இருக்கீங்க.

ஆமா. போன ஒரு வருஷம் முழுசும் ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருந்தேன். வேற எதையுமே செய்யல. இந்த வருஷம் குறுநாவல்கள் தொகுப்பு, நாவல் ஒன்னு அது மட்டும் தான் மண்டைல இருக்கு. அது முடிச்சதும் அந்த ஸ்கிரிப்ட தூக்கிட்டு படம் எடுப்பதற்கான வேலைகள ஆரம்பிக்கனும். அந்த வேலைய ஆரம்பிச்சுட்டேன்னா எழுத முடியாது. அதான் இப்பவே எழுதறேன்.

சந்திரா தங்கராஜ்

இலக்கியமா? சினிமாவா? எது உங்களுக்கு அணுக்கமானது.

இரண்டுமே பிடிக்கும். ஆனால் இலக்கியத்தை விட்டுட்டு நான் சினிமால மட்டும் இயங்க முடியாது. அப்படி அதுல சாதிச்சாலும் எனக்கு அது பெருசு இல்ல. என்னால வாசிக்காம இருக்கவே முடியாது. வாசிச்சா எழுதாம இருக்க முடியாது.

கிரேட்! நாவலுக்கு வாழ்த்துக்கள்!

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *