இன்னும் நூறு வீடு கட்டிக் கொடுக்கனும் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
”சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் வாசித்த அன்றிலிருந்து கிருஷ்ணம்மாள் அம்மாவை சந்தித்து வர வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது. அவரின் உடல்நிலை, மனநிலை, இருப்பு சார்ந்து பல தடைகளுக்குப் பின் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நீலி இதழில் எழுத்தாளர் சாம்ராஜ் இயக்குனர் R.V. ரமணி இயக்கிய “oh! Thats Banu” என்ற ஆவணப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார் (இது ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இல்லை). அந்த ஆவணப்படத்தைக் காணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அதில் ரமணி தொண்ணூற்றி ஐந்து வயதாகியிருந்த பானுமதிராவ் என்ற நடனக் கலைஞரை மூன்று வருடங்களாக அவ்வபோது சென்று சந்தித்து, உரையாடி அவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருந்தார். கலையைத் தன் வாழ்வாகக் கொண்ட ஒருவரின் மிகமுதிர்ந்த வயதில் எடுக்கப்பட்ட ஆவணப்ப்டம் என்ற நோக்கில் அது முக்கியமானது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடனான சந்திப்பைப் பற்றி எழுத அமர்ந்தபோது ரமணியின் ஞாபகம் வந்தது. ஒவ்வொருமுறை ரமணி பானுவை சந்திக்க வரும்போதும் அவரை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்குமளவு பானுவுக்கு நினைவு மங்கியிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை பேசும்போதும் அவர் மறக்காத நினைவுகள், மனிதர்கள், தருணங்கள் வழியாக அவரின் வாழ்க்கையைப் பார்க்க முடிந்தது. பாடல்களை ரசிக்கும் விதமும் அதைக் கேட்டதும் சென்று அபிநயம் பிடித்து நிற்கும் விதமும் அதில் அவர் அமிழும் விதத்தையும் நோக்கும் போது எளிய உலகியல் வாழ்க்கையை வாழ்ந்து, மகிழ்ந்திருந்ததாக நினைத்து இந்த மண்ணை நீங்கிச் சென்றவர்கள் ஒருபோதும் அறிய முடியாத பேரின்பம் என்றே தோன்றியது. எது மெய்யான நிறை வாழ்வு என்பதை அந்த ஆவணப்படம் வழியாக உணரமுடிந்தது.
கிருஷ்ணம்மாள் செயற்களத்தை வாழ்வாகக் கொண்டவர். சுதந்திரத்திற்கு முன்-பின் என நீண்ட வாழ்வைக் கொண்டவர். அவரிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென்றோ, நேர்காணல் செய்ய வேண்டும் என்றோ செல்லவில்லை. முதலில் அவர் நூறு வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் என்றபோதே பேசுவாரா என்ற ஐயம் தான் முதலில் வந்தது. பேசினாலும் நினைவுகள் இருக்குமா என்று அடுத்த கேள்வி வந்தது. மேலும் அவருக்கு சமீபமாக சில உடல் சார்ந்த பிரச்சனைகள் இருந்ததால் வெறுமே பார்க்க மட்டுமே அனுமதி கிடைக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். அதனால் திட்டமிடல்கள் ஏதுமில்லாமல் சென்றேன்.
இவையாவற்றையும் தாண்டி காந்தி கிராமம் செல்லப் போகிறோம் என்று சொன்னதும் மனதில் வந்து நின்ற இன்னொரு உருவம் டி.எஸ். செளந்தரம். அவரைப் பற்றி சுதந்திரத்தின் நிறம் வழியாகவே அறிந்தேன். அதன்பின் தமிழ்விக்கி பதிவுக்காக வாசித்த ”அறம்வளர்த்த அம்மா” என்ற நூலின் வழியாக மேலும் நெருக்கமாக அறிந்து கொள்ள முடிந்தது. திருக்குறுங்குடி சென்றபோது டி.வி.எஸ் குழுமத்திற்குச் சொந்தமான அவர்களுடைய இடத்தைப் பார்த்திருக்கிறேன். காந்திகிராமத்தை கட்டி எழுப்பியவர் செளந்தரம் அம்மா. உறுதுணையாக இருந்தவர் கிருஷ்ணம்மாள். சமூகசேவை, அரசியல் என விரிந்த தளங்களில் இயங்கியவர். காந்திக்கு மிகவும் அணுக்கமானவர். இந்திராகாந்தியின் தோழி. அவர் நடமாடிய இடம் என்ற குதூகலமும் இந்த சந்திப்பில் உடன் சேர்ந்து கொண்டது.
இது நேர்காணல் என்பதை விட நினைவில் எப்போதும் நீடிக்கக்கூடிய ஒரு சந்திப்பு. செயற்களத்திற்கென தன் வாழ்நாள் முழுவதும் ஒப்புக்கொடுத்த ஒரு பெண்ணின் தொண்ணூற்று ஒன்பது வயதில் அவரால் ஒரு புதியவரிடம் எதையெல்லாம் உரையாட முடிகிறது; நினைவுகூற முடிகிறது; அவரின் ஒரு நாள் எப்படிச் செல்கிறது என்பதை அறியும்படியான உரையாடல் நிறைந்தது. அந்த நாளின் முடிவில் தான் இதை நேர்காணலாக பதிவு செய்யும் அளவு அவர் உரையாடியிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். நண்பர்களுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் ஒரு துண்டு நாள் வழியாக அவரைச் சென்று காணும் வாய்ப்பு இதன் வழியாக கைகூடும்.
-ரம்யா
***
காலை ஆறு மணிக்கு காந்தி கிராம் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தேன். அம்மா அதிகாலை பிரார்த்தனை முடித்துவிட்டு மீண்டும் படுத்திருந்தார். நான் சென்றவுடன் சற்று முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்தார். முகம் கழுவுவதற்கு ஒருவர் சற்றேனும் உதவி செய்ய வேண்டியிருந்தது. வந்ததும் கையைப் பிடித்துக் கொண்டார். உள்ளிருந்து துடிப்பு அதிக விசையுடன் ஆனால் மெதுவாக கைகளில் எதிரொலித்தது. வெறும் இதயத்தின் துடிப்பு அல்ல. ஒட்டுமொத்த உடலுக்கான துடிப்பும் அதில் இருந்தது. வயது முதிர்வின் காரணமாக இருக்கலாம். கெட்டிப்பட்ட பெரிய கைகள். எலும்புகளின் அந்த கெட்டித்தன்மை வயதாகும் போது அதிகரிக்கிறது. உடல் உழைப்பு அதிகம் செய்தவர்களின் எலும்புகள் அவ்வாறு திடமாக நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். என் தாத்தாவின் கைகள் அப்படியானவை.
கண்கள் ஒளி நிரம்பியிருந்தது. மிகக் கூர்மையானவை என்று தோன்றியது. அது நம்மை ஊடுருவிப் பார்க்கும் தன்மையவை. எத்தனை மனிதர்களை சந்தித்திருப்பார். என் பெயரைக் கேட்டுக் கொள்ளவில்லை. நானும் சொல்லவில்லை. ஏன் எதற்கு என்ற கேள்வி இல்லை. கைகளைப் பிடித்தவாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்.
அவரை இப்போது கவனித்துக் கொள்ளும் இளங்கோ அண்ணா “உங்கள பத்தி எழுதிருக்காங்களாம். ஸ்டாலின் சொன்னாப்ல” என்றார். உடனே என்னைப் என்னைப் பார்த்து “ம்” என்றார்.
“தமிழ்விக்கின்னு எழுத்தாளர் ஜெயமோகன் ஆரம்பித்தது. அதுல…” என கலைந்து கலைந்து சொல்ல ஆரம்பித்தேன். வலது காது சற்று குறைபாடு இருப்பதாகத் தெரிந்தது. அவர் என்னிடம் இடது பக்கக் காதை கூர்மையாக்கி என்ன என்பது போல கேட்டார். உரையாடலை வலிக்கக் கூடாது என்று மனதில் தோன்றியதும் அமைதியானேன். அவர்கள் என்ன பேச வேண்டுமோ பேசட்டும். அவர்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று அப்போது தோன்றியது. மிகப் பெரிய அளவில் அங்கு செளந்தரம் அம்மாவின் உருவப்படம் இருந்தது. அதைப் பார்த்தபோதே சிலிர்ப்பாக இருந்தது. அவர்களுக்குப் பின்புறமிருந்த அந்த பெரிய படத்தைக் காட்டி “செளந்தம் அம்மா” என உரையாடலை ஆரம்பிக்கும் பொருட்டு சொன்னேன்.
“ஆ… அம்மா” என்றவாறு “நான் இன்னொரு அம்மாவப்பத்தி சொல்றேன் ஒனக்கு. அவளுக்கு ஒரு வித்தியாசமான குணம் உண்டு. எப்ப பாரு அவ தன்ன கண்ணாடில பாத்துட்டே இருப்பா. தலைமாட்டுக்கு அடியில எப்பவும் கண்ணாடி வச்சிட்டு இருப்பா. சின்ன குழந்தங்க எல்லாம் கிண்டல் பண்ணும். கிழடிக்கு எதுக்கு கண்ணாடின்னு. எடுத்து ஒளிச்சு வச்சாலும் குழந்தைங்க தூங்கினதும் அத எடுத்து மறுபடியும் வச்சுக்குவா. பாத்துக் கிட்டே இருப்பா. ஏன்னே தெரியாது. ஆனா ரொம்ப நல்லவ. எப்பவும் கையத் தூக்கி நாராயணா, நாராயணா, அனாத ரட்சகான்னு கும்பிட்டுக்கிட்டே இருப்பா. எல்லாக் கஷ்டத்துக்கும் அதயே தான் சொல்லுவா. அவ வீட்டுக்கு வெளில எப்படியும் பதினஞ்சு இருபது பிச்சைக்காரங்க இருப்பாங்க. அண்ணனும் அண்ணியும் எழுந்திரிக்கறதுக்கு முன்னாடி அவங்களுக்கு சோறு பொங்கிப் போடுவா. அண்ணி டீச்சரா இருந்தாங்க. அண்ணன் வக்கீல். ரெண்டு பேரும் சாய்ங்காலம் வர்றதுக்கு முன்னாடியும் சாப்பாடு செஞ்சு அள்ளி அள்ளிப் போடுவா. யாராவது வீட்டுக்கு வந்தா கையெடுத்துக் கும்பிட்டு சாப்பிட்டு போங்கன்னு சொல்லி சாப்பிட வைப்பா. எங்க அம்மா. நாகம்மா.”
“ஆனா ரொம்ப கண்டிப்பா இருப்பா. நாங்க நிறைய கொழந்தைக அப்ப வீட்ல. அண்ணன் பிள்ளைங்க நாங்கன்னு நிறைய பேரு, எல்லாரையும் நல்லா பாத்துக்குவா. படிக்கலைனா மட்டும் கோவம் வரும் அவளுக்கு. கத புஸ்தகத்த கைல வச்சிருந்தா அவ்வளவு தான். அவ அப்படி இருக்கப் போயி தான் இன்னைக்கு எங்க வீட்ல பதினெட்டு பேரு டாக்டரா இருக்காங்க” என்றார் பெருமிதமான குரலில்.”
“கத புக்கு படிக்க விடமாட்டாங்களா? நீங்க கதையெல்லாம் படிக்க மாட்டிங்களா?” என வருத்தமாகக் கேட்டேன். (நாம கதையெல்லாம் எழுதறோம் என சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று உறுதியாகத் தோன்றியது)
“என் வாழ்க்கையே ஒரு கதை தான்” என்றார்.
(ஆமாம். கதையின் நாயகராகவே வாழ்க்கை வாழும் ஒருவர் கதை எழுதத் தேவையில்லைதான். புன்னகைத்துக் கொண்டேன்)
”அப்ப நல்ல படிப்பீங்களா?” என்று கேட்டேன்
”ஆமா. ஆனா எங்க மாமா ஒருத்தர். அம்மாவோட தம்பி. அவர் குரல் ரொம்ப இனிமையா இருக்கும். ஒவ்வொரு கோயில்லயும் போயி பாட்டு பாடிட்டு வருவார். எங்கிட்ட வந்து நீயெல்லாம் பள்ளிக்கூடத்துப் போகக் கூடாது. படிக்கக் கூடாது. பொம்பளைக படிச்சு என்ன ஆகப்போகுதுனு சொல்வார். பொம்பள படிக்கக்கூடாதுன்னு ஊர்ல தண்டோரா போட்டு வச்சிருக்கானுக. போயிடாதம்பாரு. அவர் சொல்லும்போது எனக்கு அப்படியே உயிரே போகற மாதிரி இருக்கும். வீட்ட விட்டு ஓடிப்போயிறனும்னு மனசு சொல்லும். எங்க வீட்ல நாளு அம்பளைப் பயங்க இருக்காங்க. யாரயாவது ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கம்பாரு. நல்லவர் தான். ஆனா இது ஒன்னு தான் எனக்குப் பிடிக்காது. ஒருமுறை எங்க அப்பாவ எனக்கு பொண்ணு குடுக்கறியா இல்லையானுஅடிச்சிட்டாரு.”
”எனக்கு மூத்த அண்ணன் மதுரைல படிச்சிட்டு இருந்தாரு. அவரு வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர பிடிச்சு கிள்ளி வைப்பேன். கொரங்கே நீ மட்டும் போய் படிக்கற. எனக்கும் படிக்கனும்னு நல்லா கிள்ளி வாச்சிடுவேன்”
”எங்க தாத்தா சோழவந்தான்ல வெள்ளச்சினு ஒரு ஜல்லிக்கட்டுக் காளைய பிடிச்சதுக்கு பரிசா ஒரு ஆறு ஏக்கர் நிலம் எங்களுக்கு கிராமத்துல கிடச்சது. அதுல விவசாயம் செய்துட்டு இருந்தோம் குடும்பத்தோட. வசதியா தான் இருந்தோம். நல்ல சாப்பாடு. அங்க வயலுக்கு கதிர் அறுக்க காலைல எங்க வீட்ல உள்ளவங்கள்லாம் போயிடுவாங்க. அந்த சமயத்துல நானும் அண்ணனும் கொஞ்சம் காசு எடுத்துட்டு கிளம்பி பட்டிவீரன்பட்டில இருந்து கொடரோட்டுக்குப் போனோம். என்ன ஸ்கூல்ல சேர்த்துவிடறதா சொல்லி அண்ணன் என்னக் கூப்பிட்டுக்கிட்டு போனான். அங்க டிக்கட் எடுக்கப்போனப்ப தான் அண்ணனுக்குத் தெரிஞ்சது ஒரு டிக்கட்டுக்குத்தான் காசு இருந்ததுன்னு. திரும்பி வர கொஞ்சம் வச்சிருந்தாரு. அப்ப அவர் காலுக்கு அடில என்ன ஒழிஞ்சுக்க சொன்னாரு. எனக்கு முதல் முறையா ரயில்ல போறோம்னு ரொம்ப சந்தோஷம். அவர் என்ன சொன்னாரோ அதைக் கேட்டேன். மதுரை கேப்ரன் ஹால்-ல (Capron hall) வண்டி நின்னுச்சு. ஒரு இடத்துல என்ன நிக்க வச்சிட்டு சாப்பிடறதுக்கு மாம்பழத்த கைல குடுத்துட்டு அண்ணன் பள்ளிக்கூடம் பாக்க போனாரு. எனக்கு சாப்பாடு இல்லன்னாலும் பள்ளிக்கூடத்துல சேரப்போறோம்னு ஒரே சந்தோஷம். அண்ணன் திரும்பி வந்து வேற ஒரு ஸ்கூல பாக்கனும் வான்னு சொன்னாரு. உன்ன ஐஞ்சாவதுல தான் சேக்க முடியும்னு சொல்றாங்கன்னாரு.”
”நான் ஆறாவது முடிச்சிட்டேன். ஏழாவது தான் சேரனும்னு சொன்னேன். அப்படி சொன்னதுக்கு ஒரு அடிபோட்டு கூப்பிட்டு போனாறு. ஒரு கான்வெண்ட் பள்ளிக்கு கூப்பிட்டு போனாரு. அங்க வாடர்ன் என்ன வேணும்னு கேட்டப்ப நான் பள்ளிக்கூடம் படிக்கனும். எட்டாவது படிக்கனும். அப்படியே பெரிய படிப்பெல்லாம் படிக்கனும்னு சொன்னேன். ஆலிஸ் மகாராஜான்னு ஒருத்தர்கிட்ட கூப்பிட்டு போறதா சொன்னாரு. நைட்ல ஸ்கூல்ல தூங்குவேன். மத்த நேரத்துல அவங்க வீட்ல இருப்பேன். சாப்பாடு குடுப்பாங்க. அவங்க பிள்ளைங்களுக்கு வாங்கற புத்தகத்த எனக்கு வாங்கிக் குடுப்பாங்க. ஒரு வழியா எட்டாவது வரை படிச்சேன். எனக்கு இன்னும் மேல படிக்கனும்னு சொன்னேன். ஆனா வீட்ட விட்டு வந்து ரொம்ப நாளாச்சு அதனால அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவப்பார்க்கனும்னு வார்டன் கிட்ட கேட்டப்ப இன்னொரு அம்மா இருக்காங்க. அவங்கள பார்த்துட்டு அப்பறம் போலாம்னு சொன்னார். அவங்க பேரு செளந்தரம் அம்மா. உனக்கு மேல படிக்கனும்னா அவங்கள தான் பாக்கனும்னு சொன்னார். நான் ஒடனே சரின்னு சொல்லிட்டேன்.
“செளந்தரம் அம்மா அப்ப தெற்குமாசி வீதியில் மறவர் சாவடி பக்கத்துல ஒரு டிஸ்பன்ஸரி வச்சிருந்தாங்க. அவங்க ஒரு விதவை. வீட்டுக்காரர் பெரிய டாக்டர். இப்ப கொரானா வந்துச்சுல்ல. அது மாதிரி அப்ப ஒரு தொற்று வியாதி வந்தப்ப அவர் இறந்து போய்ட்டார். அதுக்கப்பறம் இவங்க தீவிரமா டாக்டர் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க.”
”விடியக் காலைல எழுந்ததும் நீராகாரம் குடிச்சிட்டு அவங்கள பாக்க என்ன கூட்டிட்டு போனாங்க. நான் போனப்ப ஏதோ மருத்துவம் பார்த்துட்டு இருந்தாங்க. நான் வந்திருக்கேன்னு வார்டன் போய் சொன்னப்ப என்ன எட்டிப் பார்த்தாங்க. அப்படியே ஓடி வந்து சந்தோஷமா கட்டிப் பிடிச்சுக்கிட்டு ”எங்க அம்மா வந்துட்டா” அப்படீன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியல.
(எனக்கு கண்கள் கலங்கி விட்டது. நிமிர்ந்து செளந்தரன் அம்மாவின் அந்த ஆளுயர புகைப்படத்தைப் பார்த்தேன். எங்கிருந்து மனிதர்களுக்குத் தங்களுடையவர்கள் என அடையாளம் காணத்தக்க சமிக்ஞை பார்த்த நொடியிலேயே கிடைக்கிறது என்று நான் வியக்கும் கேள்வி வந்து முன் நின்றது.)
”நான் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்னு சொல்லிட்டு மருத்துவம் பார்க்க உள்ள போனாங்க. நான் அங்கினயே உட்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். மதியம் சாப்பிடச் சொன்னப்ப சாப்பிட மாட்டேன்னு சொன்னேன். நான் படிக்கனும். பள்ளிக்கூடத்துல சேராம சாப்பிட மாட்டேன்னு சொன்னேன். சிரிச்சாங்க. அன்னிக்கு சாய்ந்தரம் ஒரு கார் வந்துச்சு. அதுல ஒரு போலீஸ். நான் பயந்து அழ ஆரம்பிச்சுட்டேன். என்ன பிடிச்சுட்டு போக வந்தாங்கன்னு நினச்சேன். (சிரிக்கிறார்) அப்பறம் அம்மா என்ன சமாதானப்படுத்தினாங்க. அது அவங்களுக்குத் தெரிஞ்சவங்கன்னு சொன்னாங்க.”
”ஒரு முக்கியமான காரியத்துக்கு உன்ன இப்ப கூட்டிட்டு போகப் போறேன்னு சொன்னாங்க. அவங்ககிட்ட ஒரு கார் கம்பெனியே இருந்துச்சு. டி.வி.எஸ் தெரியும்ல?” என்று கேட்டார்.
”ம்… தெரியும்” என்றேன்.
”அவங்க கம்பெனில இருந்து போலிஸ்காரரோட ஒரு கார் வந்திருந்தது. ஏன் எதுக்குன்னு தெரில. அவங்க கூட போனேன்.”
”மொதல்ல மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துல இருந்து ஆரம்பிப்போம்னு அம்மா என்னப்பார்த்து சொன்னாங்க. நான் முழிச்சேன். ஒரு வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனாங்க. ஒரு சின்னப்பொண்ணு. நாலாவது படிக்கற வயசு இருக்கும். வீட்ல ஒரு மூலைல இருட்டுல முக்காடு போட்டு ஒக்கார வச்சிருந்தாங்க. எப்பவாவது வீட்ல உள்ளவங்க ஏதாவது சாப்பிடத்தருவாங்க. சில சமயம் அதுவும் தர மாட்டாங்க. ஏன்னா அது வீட்டுக்கு அமங்களம், அவலட்சணம். சீக்கிரம் செத்துப்போனா நல்லதுன்னு நினப்பாங்க. இந்தமாதிரி தெருவுக்கு நாலு பேராவது இருந்தாங்க. அவங்க நாளைக்கு ஒரு தடவ நைட் பத்து மணிக்கு மேல ஒரு ஓட்டம் ஓடிட்டு வந்து ஒட்கார்ந்துக்கலாம். இது மட்டும்தான் அவங்க பண்ணிக்க முடியும். வேலை கூட செய்ய விட மாட்டாங்க. எப்டி இருக்கும்!”
”அம்மா கூட இப்படியான ஒரு விதவை தான். ஆனா அவங்க வீட்ல படிச்சவங்க, காசு பணம் உள்ளவங்க. அதனால அவங்கள இப்படி ஆக விடல. டெல்லிக்குப் போய் லேடி வெல்லிங்க்டன் மருத்துவக் கல்லூரில படிச்சாங்க. அங்க தான் சுஷிலா நாயர்ன்ற தோழி கிடச்சாங்க. நல்ல ஆத்மா. அவங்க வழியாதான் அம்மாவுக்கு காந்தியோட அறிமுகம். அப்பறம் அம்மா காந்திய சேவைல முழுசா இறங்கிட்டாங்க.”
”இந்த இளம் விதவைகள பிடிச்சு போலீஸ் லைன் பக்கத்துல விஜிலன்ஸ் ஹோம்னு ஒன்னு இருந்தது. அங்க கொண்டு போய் விட்டுட்டு வந்து படுத்துத் தூங்குவோம். இந்தப் பெண்கள ஆதரவு படுத்தறது தான் நானும் அம்மாவும் சேர்ந்து பண்ண முதல் வேலை. அப்படி கூப்பிட்டு வரும்போது ரெளடிங்க வந்து எங்கள அடிப்பாய்ங்க. தப்பா பேசுவாய்ங்க. கெட்ட எண்ணத்தோட வருவாய்ங்க. அதுக்கு தான் போலீஸ கூட கூப்பிட்டு போறது. தினமும் எட்டு மணியிலயிருந்து காலைல ரெண்டு மணி வரைக்கும் இந்த வேலை செய்துட்டு தான் தூங்குவோம்.”
”கோயம்புத்தூர்ல கிரி கெளண்டருக்கு எங்க வேலை மேல நம்பிக்கை வந்தது. அவங்க அக்கா அப்போ ஒரு இளம் விதவையா இருந்தாங்க. இந்த ஹோம்ல தங்க வச்சவங்களுக்கு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கனும், வாழ்க்கைக்கு ஒரு வழி பண்ணனும்னு நினச்சப்ப அவர் உதவி செய்தார். ஹோம்ல 52 பேர் சேர்ந்தாங்க. ஆனா வெறும் சமைக்கறது சாப்பிடறது தூங்கறது மட்டும் தான் முதல்ல இருந்தது. சமைச்சாலும் கூடஇருக்கிற எனக்குத் தர மாட்டாங்க. நானும் சுத்தபத்தமா தானே இருக்கேன்னு அவங்க கிட்ட கேட்டிருக்கேன். அவங்கள்லாம் சேர்ந்து ஒரு சட்டில சமைச்சு சாப்பிட்டு கழுவிப் போட்டு வச்சிடுவாங்க. நான் பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டு வந்து நானே பண்ணி சாப்பிடுவேன். அவங்க கூட தான் தங்கியிருந்தேன்”
(ஏன் என்று கேடக் வேண்டும் போல் இருந்தது. ஆனால் என்னால் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இத்தனைக்கு மத்தியிலும் நிகழும் ஒரு தீண்டாமை. நானும் நீயும் வேறு வேறு என்று நினைக்கும் மனநிலை. அது பாதிக்கப்பட்ட இடத்தில் நின்று கூட தன்னை அதிலிருந்து மீட்டவரிடம் காண்பிக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கிருஷ்ணம்மாள் அதைப் பற்றிப் பேசும் இடங்களில் இடதுகை சுண்டு விரலில் தட்டி விட்டுச் செல்வது போல் செல்வதைப் பார்த்தேன். அதனால் பாதிப்படைந்ததாகவோ மனவருத்தம் கொண்டதாகவோ துளியும் வெளிப்படுத்தவில்லை)
”அம்மா எர்சீனியா மருத்துவனையில் வேலையில் இருந்தார்கள். நான் இவர்களுக்கு பாடம் சொல்லி படிக்க வைக்க முயற்சி செய்தேன். வாசிக்கக் கற்றுக் கொடுத்தால் அப்படியே மருத்துவமனையில் சில வேலைகள் வாங்கிக் கொடுக்கலாம் என அம்மா நினைத்தார்கள். எதுவும் இல்லன்னாலும் அவங்க எங்கையாவது போய் வரவாவது உதவியா இருக்கும்னு நினச்சோம். “நாங்க என்ன படிச்சு கலெக்டர் உத்தியோகமா பாக்கப்போறோம்? கடவுள் எங்கள இப்படி படச்சிட்டாரு. நாங்க இப்படியே இருந்து செத்துப் போறோம்”னு அந்தப் பொண்ணுங்க சொன்னாங்க. அப்ப ரெட்டியார்சத்திரத்துல ஒரு எம்.எல்.ஏ வோட பொண்ணு, மாரியம்மான்னு பேரு. அவங்க கொஞ்சம் விவரம் புரிஞ்சவங்க. அவங்க முதல்ல படிக்க ஆரம்பிச்சாங்க. மத்தவங்க நான் எழுத கற்றுக் கொடுத்தால் அடிக்க வருவார்கள். நான் எல்லோரையும் அக்கா என்று அழைப்பேன். சிறிது சிறிதாக அவர்களுடன் சினேகம் ஆனேன். அவர்கள் குளிக்கச் சென்றால் குளியலறைக்கு வெளியில் நின்று ’அ,இம்,மா அம்மா’ என கத்தி கத்தி சொல்லுவேன். அப்படியே மெல்ல படிக்க ஆரம்பித்தார்கள். காந்தி கிராமத்தில் சேவா ஆசிரமம் உண்டானது. அதற்கு ஆசிரியரானேன்.”
”அப்படியே அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன். ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன். மெட்ராஸ் லேடி வெல்லிங்டன் கல்லூரியில் படித்தேன். இங்க சேவா ஆசிரமத்திலும் ஆட்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.”
”அம்மா அரசியலில் குதித்தபின் எங்களுக்கு எதிர்ப்பு வந்தது. காமராஜர் தான் அம்மாவை அரசியலில் ஈடுபடச் சொல்லி சம்மதிக்க வச்சது. காந்தியவாதிகள் எப்படி அரசியலில் ஈடுபடலாம் என பல தரப்பிலிருந்தும் அம்மாவுக்கு எதிர்ப்பு வந்தது. பலரும் காந்தி கிராமத்தில இருக்கவங்க கூட பேசாம ஆனாங்க” (சற்று நேரம் அமைதியாக இருந்தார்)
“சுதந்திரம் வந்தப்போ எல்லாரும் பன்னிரெண்டு மணிக்கு ரேடியோவ போட்டு உட்கார்ந்து நேரு என்ன சொல்றாருன்னு கேட்டோம். வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போய்ட்டான்னு நேரு சொன்னார். அம்மா ஒரே சந்தோஷமா எங்கள கூப்பிட்டு ஊரெல்லாம் போய் சொல்லிட்டு வரச் சொன்னாங்க. நானெல்லாம் ஓடிப்போய் ”நமக்கு சுதந்திரம் வந்தாச்சு, சுதந்திரம் வந்தாச்சுன்னு (அதே குதூகலத்துடன் கத்திச் சொல்கிறார்) இங்க சுத்தி இருக்கிற கிராமத்தில போய் சத்தம்போட்டு சொல்லிட்டு வந்தேன்” (நான் சிரித்தேன்)
நான் மீனாட்சி ஹாஸ்டல்ல இருந்து படிச்சேன்ல அப்ப ஸ்கூலுக்கு கிளம்பிப் போய்ட்டு இருக்கும்போது காரைக்குடில இருந்து ஒருத்தர் வந்து பாட்டுவார்.
சுதந்திரப்பாடல் 1:
இப்படி பாடிவிட்டு அவர் ஓடிவிடுவார். சுதந்திரம் பற்றி பாடியதால் போலீஸ் பிடித்துவிட்டு போய் விடுவார்கள்.
சுதந்திரப்பாடல் 2:
வகுப்புக்குப் போய் வந்ததும் வைத்தியநாத ஐயர், இன்னொரு வக்கீல் வந்து எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாங்க.
அப்ப உங்க ஒரு நாள் எப்டி இருக்கும்? என்னவெல்லாம் செய்வீர்கள்?
காலைல நாலு மணிக்கு எழுந்திரிக்கனும். வியர்வை வரும்வரை வேலை செய்யனும். அங்க அந்தப்படத்துல வெள்ளக்காரர் ஒருத்தர் இருக்கார் பாரு. (சுவரில் வரிசையாக மாட்டப்பட்ட படத்தில் ஒரு குறிப்பிட்ட படத்தைக் காண்பித்தார். நான் எழுந்து போய் அதன் அருகில் நின்று அதை சுட்டிக் காட்டினேன். அதான் என்பது போல தலையசைத்தபடி தொடர்ந்து பேச ஆரம்பித்தார்) ஆ.. அவர் பேரு கைத்தான் ஜி. அவர்கிட்ட கொண்டு போய் வேலை செய்த கையைக் காண்பிப்போம். பழைய சோறு சாப்பிடுவோம். மதியம் அதுவும் கூட கிடைக்காது. அதுக்குப் பிறகு ராத்திரி தான். சிலசமயம் சக்கரவள்ளிக் கிழங்கு மட்டும்.
(சிறிய இடைவெளிக்குப் பிறகு) சுதந்திரத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் கலவரம். மூன்று பேரை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். வினோபா அங்க போனாரு. நானும் அப்படியே போய்ட்டேன். (அமைதியாகிவிட்டார்.)
(திடீரென இங்கு இப்போதைக்கு வந்துவிட்டவர் போல ஆனார்) இந்த ஜூன் வந்தா எனக்கு நூறு வயசு. வேலை செய்யப்போய் தான் உடம்பு இப்படி இருக்கு என்று சொல்லி கையை உயர்த்திக் காண்பித்தார். எல்லாருக்கும் இந்தக்கைல தான் துணி துவச்சு போட்டிருக்கேன். சோறு பொங்கிப் போட்டிருக்கேன். எத்தனை போராட்டத்துக்கு போயிருப்பேன். ஜெயிலுக்குப் போயிருக்கேன். போராட்டத்துக்குன்னு போய்ட்டா எப்பையாவது தான் குளிக்க நேரம் கிடைக்கும். அப்பவும் ஆம்பளையும் பொம்பளையும் ஒன்னா இருக்க எடத்துல எங்க மறைவா குளிக்கறது. குளிக்கப்போனா போலீஸ் வந்து வேணும்னே நின்னுக்குவாங்க. எதுவும் செய்ய முடியாது. எல்லாருக்கும் ஒரே சட்டில தான் சோறு பொங்குவோம். ஏதோ கொஞ்சம் சாப்பிடக் கிடைக்கும். நடந்துக்கிட்டே தான் வாழ்க்கை.
நீங்க இப்ப தனியா இருக்கும்போது அடிக்கடி நினைக்கறதுன்னா யாரை?
எங்க அம்மாவத்தான். அவங்க நாராயணா நாராயணான்னு சொல்றத நினைச்சிட்டே இருப்பேன்.
அப்பறம் செளந்தரம் அம்மாவ. நான் பத்தாவது படிக்கும் போது அவங்க இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. காந்தி விதவை மறுமணத்தை ஆதரிப்பவர். அவர் முன்னிலையில் கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரனை இரண்டாவதா காதலிச்சு திருமணம் செய்துக்கிட்டாங்க. அவரும் காந்தியவாதிதான்.
ஆனா கல்யாணம் முடிந்தபிறகுதான் அவரோட உண்மையான முகம் தெரிய ஆரம்பித்தது. சேவா கிராமத்துல இருந்தப்ப அவரோட நடவடிக்கை சரியில்ல. அவர் பிற பெண்களிடம் தொடர்பிலிருந்தார். அது அம்மாவை ரொம்பவும் பாதிச்சது. கடைசி வரை ஒருத்தருக்கொருத்தர் அவங்க பேசிக்கவே இல்லை. அம்மா வாழ்க்கைல பண்ணின ஒரே ஒரு தவறு அவனை நன்கு புரிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டது தான்.
(உண்மையில் எனக்கு மெல்லிய அதிர்ச்சி உருவானது. அவரின் இன்னொரு பரிமாணத்தை, வெற்றியாளர்களின் வரலாற்றில் சொல்லப்படாத ஒரு அடக்கிக் கொள்ளப்பட்ட துயரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது.)
அம்மா இதை கஷ்டமா எடுத்துக்கொண்டிருக்காங்களா? (இருக்காது என்ற நம்பிக்கையில் தான் இக்கேள்வியைக் கேட்டேன்)
மனவருத்தம் இருக்கும்ல. நான் அவங்களோடதானே படுத்திருப்பேன். அம்மா எங்கிட்ட சொல்லி வருத்தப்படுவாங்க. கட்டினவனும் இறந்துட்டான். காதலிச்சவனும் இப்படினு சொல்லி வருத்தப்படுவாங்க. எனக்குன்னா அவன் மேல கோபமா வரும். அந்த… (இரண்டு கெட்ட வார்த்தைகளில் திட்டு)
அம்மா எப்படி அதில் இருந்து மீண்டாங்க? (சற்று பதட்டமாகிவிட்டது)
அவங்க தான் வேலை செய்துட்டே இருப்பாங்களே. கிராமங்கிராமமா போய் இறங்கி நின்னு வேலை செய்வாங்க. அம்புஜம்மாள் தெரியுமா?
ஆமா. தெரியும்.
நிறைய படிச்சவங்க. அவங்கல்லாம் அம்மா கூடதான் இருப்பாங்க. அவங்கள மாதிரி ஒரு பதினைந்து பேரு அம்மா கூட எப்பவும் இருப்பாங்க. கிராம சேவைல இருப்போம். சேவை, அரசியல்ன்னு நிறையா செயல் செய்துக்கிட்டே இருந்தாங்க. அம்மா சாகறதுக்கு முன்ன எண்பது நாள் படுக்கைல கிடந்தாங்க. அப்பவும் அந்த மனவேதனையோட இருந்தாங்க. அது போகவே இல்லனு அப்பதான் தெரிஞ்சது. டி.வி.எஸ் வீட்ல இல்லாத பணமா சொல்லு. ஆனா அம்மா அப்படி வேதனைப்படறத பாக்கும்போது அதெல்லாம் ஒண்ணுமே இல்லனு தோணும். எனக்கு அந்த மாதிரி மனவேதனை அடையக்கூடிய எதுவும் நடக்கல. நான் அம்மாவையும் பாத்துக்கிட்டு, ஓடியாடி எந்த வேலையும் செஞ்சிட்டு வருவேன். நிலச்சுவாந்தாரர்கள எதிர்த்துப் போராடுவேன். ஜெயிலுக்குப் போயிருக்கேன்.
அம்மாவுக்கு குழந்தைங்க? (தமிழ்விக்கிப் பதிவில் அப்படியொரு தகவல் இல்லை. ஒருவேளை இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவருக்குப் பின் அவருடைய சந்ததிகள் என்ன செய்கிறார்கள் என்று அறியும் ஆர்வத்திலும் கேட்டேன்)
நாங்க தான் குழந்தைங்க. எங்களையெல்லாம் இப்படி கைய விரிச்சு அணைச்சுக்குவாங்க எங்க அம்மா. அவங்களுக்கு என்ன மாதிரி நிறைய குழந்தைங்க.
(நான் கீழே குனிந்து சரி என்பது போல் தலையை மட்டும் ஆட்டினேன். கண்களில் வழிய வந்த நீரை துடைத்துக் கொண்டேன்.)
இப்ப இந்த கொரானாக்குப் பிறகு தான் கட்ட அசந்து போச்சு. எப்படா படுப்பம்னு இருக்கும்.
எனக்காக ஒருவேளை சிரமப்பட்டு பேசுகிறாரோ என்ற எண்ணம் எட்டிப் பார்த்தது. ஒரு குற்றவுணர்ச்சியுடன் “இப்ப படுத்துக்கறீங்களா?” என்று கேட்டேன்.
இல்ல இல்ல. இப்ப நல்லா உற்சாகமா இருக்கேன். கேளு. ஒரு நாள் செங்கல்பட்டு வீட்டில் நானும் மகள் சத்யாவும் தூங்கிட்டு இருந்தோம். தண்ணி ஒரே கொட்டு கொட்டுனு கொட்டுட்டு இருக்கு. (மழையைச் சொன்னார்களா அல்லது அந்த வீடு முழுவது தண்ணீர் கொட்டுவது மாதிரி இருந்த கனவு நிலையைச் சொன்னார்களா என்று புரியவில்லை) எவ்ளோ நேரம் உட்கார்ந்து பாக்கறது. எழுந்து பாத்ரூம் போக ஸ்விட்ச் போடப்போனேன். காலை எடுத்து வைத்தபோது ஒரே தண்ணி. அப்படியே மல்லாக்க விழுந்துட்டேன். இந்தப் பல்லெல்லாம் அப்படியே மேல போச்சு. நான் எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தேன். சத்யா முழிச்சு பாத்ததும் அப்படியே என்னைத் தூக்கி தோளில் போட்டுட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனாள். எப்டி? தோள்ல போட்டு (ஒரு பெருமிதத் தோரணையுடன்). ஐந்து நாள் தங்கியிருந்தேன். அவளுடைய நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து நல்லா பார்த்த்க்கிட்டாங்க. அப்பறம் தான் இப்படி உட்கார்ந்திருக்கேன். இல்லைனா இப்படி ஒரு நாளும் உட்கார மாட்டேன்.
இந்த வெயில் மட்டும் போயிடுச்சுனா…
(இடைவெளி விட்டார்)
”என்ன பண்ணுவீங்க?”
”என் ரூம்ல போய் ஒரு சிவப்புப் பை இருக்கும் அத எடுத்துட்டு வா.” என்று சொன்னார். அதிலிருந்து முதலில் அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுக்கான விவரம் அடங்கிய நூலைக் காண்பித்தார். பின்னர் ஒரு கையடக்க ஆல்பத்தை எடுத்தார். அதை விரித்து என்னிடம் நீட்டி “இதெல்லாம் நான் கட்டிக் கொடுத்த வீடுங்க” என்றார்.
வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினம் வரை ஒவ்வொரு பொம்பளைக்கும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்தேன். அதில் ஒரு இருபது பேருக்கு வீடு கட்டி முடித்தேன். மீதி பேருக்கு கட்டிட்டு இருக்கும் போது தான் புயல் வந்தது. கட்டின வீடுகளில் ஒரு பத்து வீடு சேதமாகியது. அங்க உள்ள எல்லாருக்கும் வீட்டை மட்டும் கட்டிக் கொடுத்துட்டேன்னா போதும். என்னை மட்டும் யாராவது கையைப் பிடிச்சுக்கிட்டு அங்க கொண்டு போய் விட்டா போதும். கட்டிடலாம். நான் அங்க இருந்தாலே போதும். “அம்மா வந்துட்டாங்கன்னு” ஓடியாந்து ஒரே உற்சாகமா வேலை செய்ய ஆரம்பிச்சிடுவாங்க.
”என்னோட வாழ்க்கையே ஒரு கதை என்ன?” என்று சிரித்தார்.
”ஆமா” என்றேன்
வீடு கட்டுறதுக்குக்காக மொதல்ல வினோபா ஆசிரமத்துக்கு நானும் காந்தின்ற பையனும் போனோம். அங்க மழை. தங்க முடியல. அப்ப ஒருத்தர் அவரோட வீட்ல முந்நூறு ரூபாய் வாடகைக்குத் தர்றதா சொன்னார். தங்கறதுக்காகல்லாம் அவ்ளோ செலவு செய்ய முடியாது. வேணாம்னு சொல்லிட்டு ஒரு பள்ளிக்கூடத்துல தங்கினேன். அங்க எல்லாரும் அம்மா அம்மான்னு ஓடியாந்துட்டாங்க.
“வீடு கட்டனும்னு நினைக்கறவங்கல்லாம் கைத்தூக்குங்க” -னு சொன்னேன். கையத்தூக்கினாங்க. “என் கூடயே இப்படி வீடு கட்டி முடிக்கிற வரை உட்காந்திருப்பேன்றவங்க கைத்தூக்குங்க” -னு கேட்டேன். கையத்தூக்கினாங்க.
“கையத்தூக்கினவங்கல்லாம் என் கூடயே இருந்தீங்கன்னா நானும் உங்களோட இருப்பேன்” என்றேன். சரின்னு சொன்னாங்க. எல்லாரோட வீடும் கட்டி முடியற வரை எல்லாரும் கூட இருக்கனும்னு சொன்னேன். சத்தியம் பண்ணிக் குடுக்கச் சொன்னேன். பண்ணினாங்க.
ஒரு நாள் ஒருத்தன் வந்தான். நான் பி.இ. படிச்சிருக்கேன். வேலை கிடைக்கல. நான் இங்க மண்ணப்பிசைஞ்சு கல்லு எடுக்கேன். உங்களுக்கு மட்டும் தான் குடுப்பேன்னு சொன்னான். அடுத்து ஒருத்தன். கரூர்ல போய் மணல் எடுத்துட்டு வந்து குடுக்கறேன் நீங்க எங்களுக்கு வீடு கட்டிக் குடுங்கன்னு சொன்னான். இப்படி ஒவ்வொருத்தரா வந்தாங்க. எல்லாரும் எங்கூட இருந்தாங்க. நாங்க ஒன்னா சாப்பிட்டு, ஒன்னா வேலை செஞ்சோம். அப்படி கட்டும்போது தான் புயல் வந்துச்சு. வேலை நின்னு போச்சு. அந்த புயல் அடிச்ச வேகத்துல மனசுல ஒரு தைரியம் இல்லாமப் போச்சு.
அங்க இருக்கவங்கல்லாம் காலங்காலமா நிலமில்லாம இருந்தவங்க. அவங்களுக்கெல்லாம் ரெண்டு ஏக்கர் நிலம் போராடி வாங்கிக் கொடுத்தேன். “நிலம் கொடுத்த மகராசி” -ன்னு சொல்லுவாங்க. அத வச்சு தான் சாப்பிடறாங்க இப்ப. அம்மா சொன்னபடி கேட்டா வீடு கட்டிடலாம்னு நம்பிக்கையா இருக்காங்க.
ஒரு நாள் ஒருத்தன் இங்க வந்தான். அவன் கூட இன்னும் ரெண்டு ஆள். ஒரே அழுகை. எனக்கு நெலம் குடுத்தீங்க. என் மனைவி இப்ப செத்துட்டா. அதை என் பிள்ளைக்கு மாத்திக் குடுங்கன்னு வந்தாங்க. நான் வரேன்ன்னு சொன்னேன் அவங்க கிட்ட. அப்பறம் அவங்க திரும்பி போறப்ப ரெண்டாயிரம் காசு குடுத்தேன். எப்பவும் நான் சுருக்குப் பைல காசு கொஞ்சம் வச்சிருப்பேன். அவரோட (சங்கரலிங்கம் ஜெகந்நாதன்) சுதந்திரப் பென்சன் வரும். யாருகிட்டயும் போய் நிக்கக் கூடாதுன்னு சொல்லுவார்.
எல்லாரும் என்ன எதிர்பார்த்து கூப்பிட்டுகிட்டு இருக்காங்க.
கொஞ்சம் வெயில் தாழட்டும். வெயில் ரொம்ப அசதியாக்கிடுது இப்ப. போகனும். ஜூன்ல குறையும்ல அப்ப போகனும். சத்யா என்னை இந்தப் படில இருந்து கீழ இறங்க விடமாட்டிக்கு.
என்ன சொல்வது என்று தெரியாமல் “ம்..” என்றேன்.
நான் எப்பவும் சுருக்குப் பைல காசு வச்சிருப்பேன் என அவர் சுருக்குப் பையை எடுத்து என்னிடம் காண்பித்தார். எங்க வீட்டு ஐயாவுக்கு விடுதலைப் போராட்ட தியாகி பென்சன் கிடச்சது. ஒரு நாள் மத்யானம் என்னையக் கூப்பிட்டு சொன்னாரு. எனக்குப் பின்னால உனக்கு பென்சன் வர்ற மாதிரி எழுதி வச்சிருக்கேன்ன்னு. அதை வைச்சு தான் பெரும்பாலும் செலவு செய்வதுண்டு.
”அந்தப் பையில ஒரு டைரி இருக்கும் அதை எடு.” என்று சொன்னார்.
(அந்த சிவப்புப் பையைத் துழாவி ஒரு பழைய டைரியை எடுத்தேன். அதில் பலரின் முகவரிகள், தொலைபேசி எண்கள் இருந்தன. பெரும்பாலும் அவரை சந்தித்தவர்கள் பெயர், அவர் காசு கொடுத்தவர்களின் பெயர்களும் அதை அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைக் கையெழுத்துகள் ஆகியவை இருந்தன.)
”நான் போய் அங்க ஒக்காந்தாப் போதும். எல்லாரும் வந்திடுவாங்க. வீடு கட்ட” என புரட்டிக் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்து ஒருமுறை சொன்னார்.
“எதுக்கும் நீங்க சத்யா அக்கா சொல்றதையே கேளுங்க” என்றேன்.
”ஜெய்கீர்த்தின்னு ஒருத்தர். தமிழாசிரியர். (டைரியில் தேடுகிறார். கிடைத்துவிட்டது போல.) அதை என்னிடம் கொடுத்துவிட்டு சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.
“என்ன எழுதியிருக்கு?”
“ஜெயகீர்த்தி 55,500 ரூபாய் பெற்றுக் கொண்டேன்” அப்படின்னு எழுதியிருக்கு என்றேன்.
ம். ஜெயகீர்த்தின்னு பேரு. தமிழ் பண்டிட். அருமையான குணம். எழுத்தும் அவ்வளவு நல்லா இருக்கும். திருவாரூர்ல அவன ஜாதியச் சொல்லி வேலைய விட்டு விலக்கிட்டாங்க. அவன் வந்திருந்தாங்க இங்க என்னப்பார்க்க. அப்பறம் அப்பாவோட(சங்கரலிங்கம்) பென்சன் பணத்தில இருந்து தான் எடுத்துக் கொடுத்தேன். எனக்கென்ன செலவு இருக்கு. இப்டி யாராவது வந்து நின்னா கொடுத்து அனுப்பறது தான். அவன் எந்த ஸ்கூல்லயாவது இப்ப வேல பார்த்துட்டு இருப்பான்னு நினைக்கிறேன்.
(நீண்ட இடைவேளை. நான் அந்த டைரியை புரட்டிக் கொண்டிருந்தேன்.)
”லாப்டி (LAFTI) ஒரு முக்கியமான முன்னெடுப்பு” என்றேன்.
“என்னது” என்று கேட்டார்.
”LAFTI”
”ஆ.. ஆமா” என்று சொல்லிவிட்டு உனக்கு இதெல்லாம் தெரிகிறதே என்ற மகிழ்ச்சியில் சிரிப்பது போல சிரித்தார். (அமைதியானார்.)
சுதந்திரத்திற்குப் பிறகு நீங்கள் நிலமற்றவர்களுக்கான நிலம் என்பதின் மேல் உங்கள் கவனத்தை அதிகளவு செலுத்தியிருந்தீர்கள். அது ஏன் அவ்வளவு முக்கியம் என உங்களுக்குப்பட்டது?
ஒரு மனிதனுக்கு அடிப்படையான தேவைகள்ல முக்கியமானது நிலம் தான். சோறு, துணியை விட நிலம் தான் முக்கியம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பார்த்தா ஒருசிலர்கிட்ட ஆயிரம் ஏக்கர், ஐயாயிரம் ஏக்கர்னு நிலம் இருந்தது. இன்னும் சிலருக்கு நிலமே இல்ல. நிலம் இல்லாதவங்க இப்படி ஆயிரம் ஏக்கர் வச்சிருக்கவங்க கிட்ட கூலிக்கு வேலை செய்தாங்க. பெண்கள் நிலைமை தான் இன்னும் மோசம். அடிமைகள் மாதிரி அந்த நிலத்துல வேலை செய்தாலும் நல்ல சாப்படு இல்லாம நல்ல வாழ்க்கை இல்லாம கஷ்டப்பட்டாங்க. (அமைதியானார்.)
”நிலம் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறீங்க இல்ல?” என மீண்டும் ஆரம்பித்தேன்.
ஆமா. நிலம்னு இல்லாட்டியுங்கூட குறைந்தபட்சம் தலைசாய்க்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடு இருக்கனும். யார்கிட்டயாவது பிச்ச கேட்டு இம்புட்டு சாப்பிட்டுட்டலாம். சாப்பாட்டுக்கு இங்க பஞ்சம் இல்ல. வேலை செஞ்சு அத இத சாப்பிட்டு வந்து படுக்கறதுக்கு ஒரு இடம் வேணும். அது இல்லாம இந்த ஜனம் திண்டாடுதுக. ரோட்டுல படுக்க முடியுமா பொம்பளைங்களும் குழந்தைங்களும்?
(இல்லை என தலையாட்டினேன்)
நிலச்சுவாந்தார்கிட்ட ஆயிரம் ஏக்கர் இருக்கு. ஆனா இந்த மக்கள்… வலிவளம்னு ஒரு ஊரு. அதுல தேசிங்குன்னு ஒருத்தன் ஆயிரம் ஏக்கர் கோயில் நிலத்த எடுத்து வச்சிருந்தான். அந்த நிலம் ரெண்டு ஊர்ல இருந்தது. அந்த ஊர்ல இருக்க பொம்பளைங்க ஐந்தரை மணிக்கு வேலைக்குப் போகனும் அந்த நிலத்துக்கு. வராட்டி போனா ஒரு கொட்டகைக்கு உள்ள போட்டு அவங்களைப் பூட்டி சாவியை வச்சுக்குவான்.
ஐந்தரை மணிக்கு வந்தவங்க அவங்க பிள்ளைகளையெல்லாம் இடுப்புல கயிற கட்டி கூரை முனைல முடிச்சு போட்டுட்டு நிலத்துல வேலைக்குப் போகனும். அதைப் பார்த்தப்ப அந்த பிள்ளைகள அவுத்துவிடனும், அவன்கிட்ட இருந்து அந்தத் தாய்மார்கள விடுதலை பண்ணனும்னு தோணுச்சு. வேற சாதிக்காரன தெருவழியா நடக்கக் கூடாதுன்னு சட்டம் வேற போட்டிருந்தானுக. அப்ப எப்புடி எனக்கு நிம்மதியா இருக்குமா?
(நான் பலமாக இல்லை என்பது போல தலையை ஆட்டினேன்)
அதுல அய்யாக்கண்ணுன்னு ஒருத்தன். எதிலயும் துணிஞ்சவன். அந்த தேசிங் பண்ற கொடுமைய எப்ப தீர்ப்பீங்கன்னு கேப்பான்.
சத்யா அப்ப மூனாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தா. அவளக் கொண்டு போய் ஈரோட்டில விட்டுட்டேன். பூமி(மகன்) என்ன விட்டுப் போகல. அவன் என்ன பண்ணுவான் தெரியுமா? (சிரிக்கிறார்) இந்த டாம் டாம் -னு அடிச்சிட்டு போவாங்கல்ல. அதுல குடுக்கற நோட்டீஸ்ல உக்காந்து எழுதி என்கிட்ட காட்டி பத்து காசு பத்து காசு -னு கேப்பான். அந்த பத்து காசுக்கு ஒரு தோசை வாங்கி சாப்பிடுவான். அப்படியே தமிழ் படிச்சான். இங்கிலீஷ் எப்படி படிப்பனு கேட்பேன். அப்ப அங்க ஆபீஸ்ல இருக்க பேப்பர ஒன்னொன்னா கேட்டு வாசிப்பான். அப்டியே தான் படிச்சான். பள்ளிக்கூடத்துக்குப் போகல.
அப்பதான் ஒருத்தர் பூமிய இங்கிலாந்துக்கு கூப்பிட்டுப் போனார். ஹாஸ்டல்ல பிள்ளைகளைப் பார்த்துக்க, வேலை செய்ய ஆள் வேணும்னு சொல்லி கூப்பிட்டுப் போனார். வேலை செஞ்சுட்டே அப்படியே அதப் புடிச்சு படிச்சான். படியேறிப் போவம்ல. அதுக்குக் கீழ உள்ள ஒரு சின்ன எடத்துல அவனுக்கு இடம் குடுத்தாங்க. அங்க படுத்துப்பான். இப்டியே படிச்சான். எங்ககிட்டலாம் எந்தக் கஷ்டத்தையும் சொல்ல மாட்டான்.
ஒருமுறை இவனோட மாமன் மகன் எஞ்சினியரிங் முடிச்சிட்டு இங்கிலந்துக்கு ஏதோ வேலையா போனான். அவன் ஒரு ஆய்வுக்காகப் போயிருந்தான். முதல் தடவையா இங்கிலாந்து போறதால தம்பிய பார்த்து தங்கிக்கலாம்னு போயிருக்கான். அப்பதான் இவன் இப்படிக் கிடந்து படிக்கறதப் பாத்திருக்கான்.
அதவச்சே படிச்சுட்டானே! (பெரு மூச்சு)
படிச்சிட்டு இருக்கும்போது அவனோட டீச்சர் ஒருத்தவங்க அவனக் கூப்பிட்டு “ஒனக்கு நல்ல சான்ஸ் வந்திருக்கு. கம்போடியாவும் பக்கத்து நாடும் சண்டை போட்டதுல நிறைய ஆண்கள் இறந்துட்டாங்க. பெண்கள் ஈக்களை அடித்து சாப்பிடறாங்க. அங்க நோயும், பசியுமா மக்கள் அவதிப்படறாங்க. இந்த நிலைமையை நீ போனால் மாற்றலாம்” -னு சொல்லி அனுப்பி வச்சாங்க. இருபத்தியெட்டு வருஷமாச்சு அவன் அங்க போயி. போன மூனே நாள்ல சின்னதா ஒரு ஹாஸ்பிடல் கட்டினான். நிறைய நாடுகளுக்கு எழுதிப்போட்டு உதவி வாங்கினான். அங்க ஒரு கிறுஸ்தவ ஃபாதர நண்பராக்கிக்கிட்டான். அப்படியே அந்த மக்களுக்கு சேவை செய்துட்டு அங்க இருக்கான்.
இப்ப ஆறாம் தேதி (ஏப்ரல் 6) வருவான். பள்ளிக்கூடம் முறையா படிக்கல. ஆனா மண்வெட்டி எடுத்தா கீழ வைக்காமாட்டான். அப்படி வேலை செய்வான். பூமி கல்யாணம் பண்ணல. சத்யாவும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா.
”நீங்க எதும் சொல்லலையா?” என்று கேட்டேன்
சொன்னேன். அவன் தான் பண்ணிக்கல. நீயாவது பண்ணிக்கோன்னு சொன்னேன். அவ மாட்டேன்னு நின்னுட்டா. கல்யாணம் பண்ணிக்கறது குழந்தை பெத்துக்கறதுல்லாம் பெரிய விஷயம் இல்ல. அப்பறம் அது அவங்கவங்க விருப்பம்ல.
“ஆமா” என்றேன்.
ஏன் சொன்னேன்னா நான் பிள்ளைகள இப்டி விட்டுட்டு இந்த ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் வச்சிருக்கவன், முப்பதாயிரம் ஏக்கர் வச்சிருக்கவன் எல்லாத்தையும் புடிச்சு போராடி நிலம் இல்லாதவங்களுக்கு எல்லாம் ரெண்டு ரெண்டு ஏக்கரா நிலம் வாங்கிக் கொடுத்து பட்டா போட வச்சேன். விடுவேனா நானு? (சிரிப்பு.. நானும் சிரித்தேன்)
”எழுபதுகள்ல Land ceiling சட்டமெல்லாம் வந்ததே. இன்னமும் இதுமாதிரி போராடி வாங்கனுமா?
சட்டம்லாம் இருக்கு தான். ஆனா அத ஏமாத்துறவன் எத்தன பேரு. எந்த சட்டம் இருந்தாலும் ஏமாத்துறவன கட்டுப்படுத்த முடியாது. அவன் அது அதுக்கு ஒரு வழி கண்டுபிடிப்பான். நான் விடமாட்டேன்.
”சரிதான்” என்றேன்.
திருவாரூர்ல இருந்து வேதாரண்யம் வரை எங்கல்லாம் யாருக்கெல்லாம் வீடு இல்லனு கணக்கெடுத்தோம். நூறு வீடு இன்னும் கட்டிக் கொடுக்கனும்.
நீங்க தான் பண்ணனுமா? வேற யாரும் செய்யலாம் இல்லயா?
வேலை செய்ய ஆள் இருக்கு. ”காந்தி”-ன்னு ஒருத்தன் இருக்கான். நல்லா எங்கூட நின்னு வேலை செய்வான். ஆனாலும் மலைச்சிடுங்க. நேத்து கூட வந்திருந்தான். செக்ல கையெழுத்து வாங்கிட்டுப் போக.
கொஞ்சம் வெயில் போகட்டும்னு இருக்கேன். சத்தி(சத்யா) கொஞ்சம் பெர்மிஷன் கொடுத்தா போயிடுவேன். முன்னாடின்னா எதிர்த்துப் பேசிட்டு கிளம்பிப் போயிடுவேன். இப்பதான் வயசாகிடுச்சு. கீழ விழுந்துட்டேன்ல. கடைசி காலத்துல அவதான் எனக்கு இம்புட்டு தண்ணி ஊத்திட்டு இருக்கா. என்ன தோள்ல போட்டு ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டுப் போய் பதினஞ்சு நாள் வச்சு கவனிச்சுக்கிட்டா. அவ பேச்ச கேக்கனும்ல. வெயில் முடியிற வரைக்கும் இந்த படிக்கட்ட தாண்டக்கூடாதுன்னு உத்தரவு. சரின்னு இருக்கேன்.
“சரி. அவங்க பேச்ச கேளுங்க தயவுசெய்து” என்றேன்.
இன்னொரு பதினஞ்சு நாள் தான். வெயில் குறைஞ்சிடும். கிளம்பிடுவேன்.
(அமைதியானார்.)
”அப்பறம் இந்த நிலச்சுவாந்தார் இருக்கானுகல்ல அவனுக வேலை வாங்கிட்டு கூலி குடுக்கமாட்டானுங்க” என எங்கிருந்தோ ஆரம்பித்தார்.
“ஏன் அப்படி சிலர் மோசமா இருக்காங்க?” என்று கேட்டேன்.
“Selfish” என அழுத்தமாகச் சொன்னார். தான் மட்டும் நல்லா வாழனும்னு நினைக்கறவங்க அவங்க”
”இயல்பாவே அப்படி இருக்கவங்கள எப்படி மாத்தறது. முடியுமா?” என்று கேட்டேன்.
”முடியும். நான் எத்தனை பேரை மாத்தியிருக்கேன். இருநூற்று ஐம்பது ஆத்மாக்கள் வாழக்கூடிய ஒரு ஊர்ல ஒருத்தன் மட்டும் எல்லா நிலத்தையும் வச்சிருக்கான். அதைப் போய் நான் கேட்டு எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்திருக்கேன். முடியுதுல்ல. ஒருத்தனே இருநூற்று ஐம்பது பேருக்குமானதையும் சாப்பிட்டான்ன அது தப்புல்ல. தப்புன்னா புரிய வைக்கனும்.”
எந்த ஊர்?
திருவாரூர்ல. கீழ்வெண்மணில நெருப்பு வச்சாங்கல்ல. அவங்க தான்.
என்ன தான் தீர்வு? கல்வியை ஒரு தீர்வா சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?
”கல்வின்னா பள்ளிக்கூடக் கல்வி மட்டும் போதாது. கூடவே தெளிவான அறிவும் வேணும். மனதில் ஒரு உறுதியெடுக்கனும் யாரையும் எந்த சக மனுஷனையும் துன்பப்படுத்தக்கூடாதுன்னு.”
தெருல நடந்து போறதுக்குக் கூட இன்னும் அனுமதியில்லாம இருக்கு. நான் அங்க போனேன். போடா ஒரு மாட்டு வண்டி கொண்டு வாடான்னு இரண்டு மூட்டை நெல்லைத் தூக்கிப் போட்டு ஆட்களயும் கூட்டிக்கிட்டு மாவு அரைக்கப் போறேன்னு போனேன். பொது இடம் தானே யாரு நம்மள விடறதுன்னு கேட்டுட்டு வண்டில போனேன். ஒடனே அந்தத் தெருக்காரன் ஒருத்தன் வந்து என்கிட்ட பிரச்சனை பண்ணாம, மாட ஓட்டிட்டு போறவன் கிட்டப்போய் ஒங்க அப்பன் பதினெட்டு ரூவா என்கிட்ட கடன் வாங்கிருக்கான், அதைக் கொடுத்துட்டுப் போன்னு நின்னான். நான் சுருக்குப் பைல இருந்து காசு எடுத்து அவன்கிட்ட குடுத்துட்டு “வேற என்ன? வேணும். எனக்கு நேரமாகுது மாவு அரைக்கப் போகனும்” என்று சத்தமாகச் சொன்னேன். அவனால ஒன்னும் செய்ய முடியல. என்னையப் பார்த்து எல்லாரும் மாவு அரைக்கறேன்னு கிளம்பி என்கூடயே வந்தாங்க.
நாம பயப்படக்கூடாது. அதான் பலம்.
“இன்னும் மாறல இல்ல?”
நாங்க போன ஏரியால மாற்றம் இருக்கு. கொன்னுடுவாய்ங்க. அந்த எடத்துல எல்லாம் போய் நின்றுக்கேன். பயப்படக்கூடாது. இன்னும் மாறனும். எங்கல்லாம் அப்படி நடக்குதோ அங்க போய் தைரியமா நின்னு கேக்கனும். கேரளா இருந்து ஒரு பொண்ணு. நல்லா என்கூடயே வேல செய்வா. ம். நிறைய பண்ணினோம்.
(மதிய உணவுசாப்பிட அமர்ந்தோம். அங்கு தோட்டத்தில் விளைந்திருந்த வெண்டைக்காய் வைத்து சாம்பார் வைத்திருந்தார்கள். ரசம். அப்பளம், தயிர் இருந்தது. கொத்தவரங்காய் அவித்து வைத்திருந்தார்கள். உங்களுக்குப் பிடித்த உணவு எது என்று கேட்டேன். பக்கத்திலிருந்த சமையல் செய்யும் அக்கா அவங்களுக்கு உப்பு, ஒரப்பு, இனிப்பு இது இல்லாம எதுன்னாலும் சாப்பிடுவாங்க என்றார். இது எதுவுமே இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் ஒருவர் சாப்பிட்டாலும் எப்படி அவர் ரசித்து ரசித்து சாப்பிடுகிறார் என்ற கேள்வி தான் எழுந்தது.
காலையில் பொங்கலும் சாம்பாரும் வைத்திருந்தார்கள். அம்மா அதைப் பார்த்து சமைப்பவரை திட்டிக் கொண்டிருந்தார். சும்மா இருக்கவங்க மூன்று வேலையும் சோறு சாப்பிடக்கூடாது என்று கடிந்தார். தோசை, இட்லி, பனியாரம், சப்பாத்தி இப்படி ஏதாவது செய்யலாம்ல என்று கேட்டார். சரிம்மா எதாவது செய்ய முடிதான்னு பாக்கறேன் என சமையல் செய்யும் அக்கா சமாதானப்படுத்தினார். ஆனால் பின்னர் பரிமாறப்பட்டபோது மிகவும் குறைவான அளவு பொங்கலில் கொஞ்சம் தயிர் விட்டு “அமிர்தமாட்டம் இருக்கே” என்று பலமுறை சொல்லி முகம் விரிய சாப்பிட்டார்கள். சமையல் செய்யும் அக்காவை எப்படியும் மூன்று முறை அறிமுகப்படுத்தியிருப்பார் என்னிடம். அவரின் கணவர் மலைக்குச் சென்றபோது தேன்குழவி கடித்து இறந்தவர். இருபிள்ளைகளை வைத்து சிரமப்படுவதால் அவரைத் தன்னுடன் சமையலுக்கு வைத்துக் கொண்டதாகச் சொன்னார். பாட்டியைக் குளிக்க வைப்பது, தலைசீவி விடுவது என பார்த்துக் கொள்கிறார். இளங்கோ அண்ணா பிறவற்றை கவனித்துக் கொள்கிறார். சத்யா அக்கா எப்போதும் பாட்டியுடன் தான் இருக்கிறார். நான் சென்றபோது அவர் ஒரு தவிர்க்கமுடியாத நண்பரின் திருமணவிழாவிற்கு சென்றதாக பாட்டி சொன்னார். உணவுக்குப் பின் பாட்டி எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள் தேதிவாரியாக குறிக்கப்பட்ட சிறிய கம்பார்ட்மெண்டுகள் கொண்ட பிளாஸ்டிக் பெட்டியில் இருந்தது. அதை இளங்கோ அண்ணா சரியாக உணவு இடைவேளையின் போது வந்து எடுத்துக் கொடுக்கிறார். அண்ணா குடும்பத்துடன் ஊழியரகத்தில் வழிக்கிறார். இன்னொரு பாட்டி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், தோட்டத்தை தினமும் வந்து பார்த்துக் கொண்டு பாட்டியிடமும் பேச்சுக் கொடுப்பார். அவரிடம் கிருஷ்ணம்மாள் ”சாப்பிட்டியாடி. சாப்பிடு” என எப்படியும் பத்துமுறைக்குமேலாவது சொல்லிப் பார்த்தேன்.
“எப்பவுமே இதெல்லாம் சாப்பிட மாட்டிங்களா” என்று கேட்டேன்
”ஆமா. உப்பு, ஒரப்பு, இனிப்பு எதுவும் சேர்க்க மாட்டேன்.” என்றார்.
உண்மையில் சாம்பாரும், வெண்டைக்காயும், கொத்தவரங்காயும் ரசமும் பருப்பும் என உப்பின்றி வேறொரு உலகத்தின் சுவை போல இருந்தது. அதன் மணமும் சுவையும் வித்தியாசமானது என்பதாலேயே நினைவில் தங்கிவிட்டது. உணவு முடிந்தபின் கைகளை உதட்டின் மேல் வைத்து உட்கார்ந்திருந்தார். மெல்ல என் கைகளைத் தொட்டார்.
“காந்தியைத் தொட்டுப் பாக்கனும்னு எனக்கு ஆசை இருந்தது.” என்றார்.
”பாத்திருக்கீங்களா?” என்று கேட்டேன்.
“ம்… முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான பிரிச்சு குடுக்கனுமா வேணாமா அப்படின்னு பேசுறதுக்காக இமயமலைல இருந்து கன்னியாகுமரி வரை இருக்கற நல்ல நல்ல தலைவர்கள் மதுரைல கூடனும்னு சொன்னாங்க. அப்ப மதுரைல நான் அமெரிக்கன் காலேஜ்ல மூன்றாவது வருடம் படிச்சிட்டு இருந்தேன். ஐந்து லட்சம் பேரு கூடினாங்க. மாட்டு வண்டி கட்டிட்டு வந்து அங்க ஒக்கார்ந்து சமைச்சு சாப்பிட்டுட்டு அந்த கூட்டத்துல கலந்துக்கிட்டாங்க. அந்தக்காலத்துல மதுரைல தமுக்கம் மைதானம்லாம் கிடையாது. அப்ப தான் கொஞ்சம் காந்தி மியூசியம் கட்ட ஆரம்பிச்சிருந்தாங்க. எங்க பார்த்தாலும் ஒரே மதுரைல கூட்டம். காந்தி வந்தா ஒரு முறையாவது தொட்டுப் பாக்கனும்னு நிறைய மக்கள் கூடியிருந்தாங்க. எனக்கும் ஆசை இருந்தது. இத்தனை கூட்டத்திற்கு மத்தியில நானெல்லாம் எப்படி காந்தியைப் பார்க்கறதுன்னு ரூம்குள்ள போய் கதவை மூடிட்டு உக்காந்திருந்தேன். அம்மா(செளந்தரம்) மெட்ராஸ்ல இருந்து காலைல ஐந்தரை மணிக்கு நேரா என்னை வந்து கதவைத் தட்டி எழுப்பி “என்னடீ ஊரே வெளிய தான் இருக்கு நீ கதவைப் பூட்டிட்டு என்ன செய்யிற. ஐஞ்சு நிமிஷத்துல புறப்படு” என்று சொல்லி ஒரு கதர்ச்சேலையை கைல கொடுத்தாங்க. ”நாம ரெண்டு பேரும் வைத்திய நாதர் ஐயர் வீட்டுக்குப் போகனும். (அவர் தான் மீனாட்யம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் முன் நின்றவர்.) காந்தி எந்த இடத்தில் டிரெயினிலிருந்து இறங்குவது என்பது பெரிய குழப்பமாக இருந்தது. அதைப் பற்றி பேச அங்க நாம ரெண்டு பேரும் போகனும்” என்றார்.
காந்தியை விளாங்குடி என்ற கிராமத்தில் ரயிலை விட்டு இறக்கி ராஜாஜி காரில் ஏற்றிவிட்டு, நான் அம்மா கூட காரில் வந்தேன். ஆனா காந்தியால அங்க இறங்கவும் சிரமமாக இருந்தது. எல்லா ஜனங்களும் வந்து அவர் காலைத் தொட முயற்சி செய்யறாங்க. எப்படியோ சமாளிச்சு மேடைக்கு வந்துட்டார். அங்க ஒரே கூச்சல். காந்தி அப்படியே மேடைல படுத்துக்கிட்டாரு. அப்பப்ப எழுந்து ஒரு கும்பிடு போட்டு ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தால் தான் நான் பேசுவேன் இல்லைனா இப்படியே இங்கையே தூங்கிடுவேன் என்று சொன்னார். (சிரிக்கிறார்)
மதுரையிலிருந்து முக்கியமான தலைவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடெல்லாம் வந்தது. ஆனால் மக்களின் கூச்சலால் காந்தி பேசமுடியாமல் ஆனது. அம்மா எனக்கு ஒரு டி.வி.எஸ் கார், அதுக்கு ஒரு டிரைவரையும் போட்டு என்னிடம் கொடுத்தார். அந்த கூட்டத்திற்கு பெண் தலைவர்கள் அறுபத்தியொன்பது பேர் வந்திருந்தார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணின் மனைவி வந்திருந்தார்கள். எல்லாரையும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். நான்கு மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போக வேண்டும் என்றார்கள். அப்போது தான் காந்தியைக் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றேன். அடுத்த நாள் பழனி சென்றோம்.
”தெலுங்கானால வினோபா கூட போராட்டத்துக்கு போனதா சொன்னீங்களே”
தெலுங்கானல நூறு பேரை கொன்னுட்டாய்ங்க. அங்க போராட்டம் இருந்தது. வினோபா தெலுங்கானாவிலிருந்து ஆரம்பிக்கலாம்னு சொன்னார். அவருகூட நடக்க ஆரம்பிச்சா நடந்துட்டே இருக்கனும். எங்கையாவது சாப்பிடலாம் இல்ல ஓய்வா உட்காரலாம்னா வினோபா என் முன்ன வந்து இப்படி உட்கார்ந்து ஒரு பாட்டுப் பாடுவார்.
“முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”
வினோபா பாடல்:
அப்படின்னு பாடிட்டு போய் உட்கார்ந்துப்பார். திரும்பி என்னைப் பார்த்துட்டே இருப்பார். மறுபடியும் வந்து நின்னு பாடுவார். இப்படி மூனு தடவை பாடுவார். தமிழ்ப்பாட்டு செய்யுள் எல்லாம் அவருக்கு நல்லா தெரியும்.
உங்களுக்கு இந்த உலகத்துலயே ரொம்ப பிடிச்சது யாரு?
வினோபா (நீண்ட இடைவெளி).
அவர் ஒரு ஞானி.
பெருசா சாப்பிடமாட்டார். இவ்ளோ சின்ன கப். அதுல பால் விட்டு கொஞ்சமா தயிர் விட்டு வச்சிடுவோம். காலைல ஆறு மணிக்கு முதல் பிரார்த்தனை. அதன்பிறகு ஒன்பது கிலோமீட்டர் நடக்கனும். அப்படி நடக்கும் போது நாங்களும் அவர் கூட நடப்போம். எங்கையாவது இடைல தண்ணீர் குடிக்க நின்னாலோ உட்கார்ந்தாலோ நேரா வந்து உட்கார்ந்து ஆரம்பிச்சிடுவார். அம்மா மீண்டும் பாடுகிறார்…
“முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”
இதை ஒரு தடவை பாடினால் கூட பரவாயில்லை.
”நீங்க என்ன பண்ணுவீங்க?”
எனக்கு பயமா இருக்கும்
“ஏன்”
”திரும்பி இன்னொரு பாட்டு பாடினார்னா என்ன பண்றது. (சிரிக்கிறார்) அவருக்கு பதினெட்டு பாஷை தெரியும். அதுலயும் பாடுவார். அவர் பாடும் போது எப்படா முடிப்பார் எழுந்து ஓடலாம்னு இருக்கும்.
காலையில் முதல் நடைக்குப் பின்னர் கீதையோட பதினெட்டு அதிகாரமும் ஒவ்வொன்னா ஒரு நாளின் இடைவெளியில் மனப்பாடமா சொல்லுவார். ஒவ்வொரு அதிகாரத்தின் போது ரொம்ப சின்ன கப்ல தயிர் ஊற்றிய பாலைக் குடிப்பார். அதான் அவருடைய உணவு. மாலை நான்கரையோடு அந்த பதினெட்டு அதிகாரத்தையும் முடித்திருப்பார். அப்பறம் தூங்கறதுக்கு முன்ன சத்தமா “Today I am Dead” என உறக்கச் சொல்லிவிட்டு எங்களுக்கெல்லாம் கையை அசைத்துவிட்டு படுத்துவிடுவார். சரியாக அதிகாலை இரண்டு மணிக்கு எழுவார். சங்கரரின் வேதத்தை முழுசா சொல்லுவார். நானெல்லாம் எப்ப தனியா உட்கார்ந்து இதெல்லாம் படிக்கப் போறேன்னு அவர் எழும்போதே எழுந்து உட்கார்ந்து அதைக் கேட்பேன். நேருக்கு நேர் உட்கார்ந்து கேட்டா எதுவும் கேள்வி கேட்பார் என்று ஒளிந்து கொண்டே கேட்பேன். ஒவ்வொரு புதிய மொழி ஆள் வந்தால் அவருடன் அந்த பாஷையிலுள்ள செய்யுளைச் சொல்வார்.
கையைத்தட்டிக் கொண்டே “பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்” -னு பாடிட்டே நடக்க ஆரம்பிப்பார். அவர் பாடுகிற சத்தத்தில் எல்லோரும் எழுந்துவிடுவார்கள். எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படியே நடந்து போவோம். எங்கையாவது ஒரு இடத்துல பல் தேய்த்துவிட்டு சாப்பிடுவோம். அவருக்கு இந்த பதினெட்டு கப் ஒரு நாளைக்கு. ஒரு ஒரு கப் குடிக்கும்போது ஒவ்வொரு கீதை அதிகாரம்.
கீதை அவரிடம் விளக்கம் கேட்டிருக்கீங்களா?
எங்கிட்ட தனியா சொல்றதுன்னா ”முக்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை” தான். கீதை எல்லார் முன்னாடியும் பாடும்போது கேட்பேன். விளக்கம்லாம் கேட்டதில்ல.
(சிறிய இடைவேளை. ஓய்வெடுக்கச் சென்றார். அவர் படுக்கை அருகில் வினோபாவின் படம் இருந்தது. தூங்கும் வரை வினோபாவின் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். எனக்கு அருகிலுள்ள ஒரு அறையில் படுக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்தார். நான் ’தூங்கல உட்கார்ந்திருக்கேன்’ என்று சொன்ன போது எனக்கு சில புத்தகம் கொடுத்து படிக்கச் சொன்னார். நான் அங்கிருந்த புத்தகங்களையும் புகைப்படங்களையும் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரத்தில் மீண்டும் குளித்துவிட்டு புதிய கதர்சேலை அணிந்து வந்தார். இன்னும் புத்துணர்ச்சியும் அழகும் கூடியிருந்தது. சமையல் செய்யும் அக்கா வந்து அவருக்கு எண்ணெய் சிறிது தேய்த்து தலை வாரி விட்டார்.)
”அழகா இருக்கீங்க” என்றேன் சேலையைத் தொட்டபடி.
(சிரித்தார்) ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன்ல. அப்பறம் ஓ.சி.பி உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். அப்பறம் அமெரிக்கன் கல்லூரி. இரண்டு கதர் சேலை தான் வச்சிருப்பேன். ஒன்ன போட்டுக்குவேன். இன்னொன்ன துவைச்சு காயப் போட்டுடுவேன். ஹாஸ்டல் வார்டனுக்கு என்னைப் பிடிக்காது. துணி காயப்போடுவதற்கு திட்டுவார்கள். எப்பவும் திட்டு.
வெறுப்புகளையெல்லாம் எப்படி சமாளிப்பீங்க?
சிலர் அப்படித்தான். ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டு விட்டுவேன். இல்லைனா சமாளிக்க முடியுமா? வெறுப்புன்னா என்ன மாதிரி வெறுப்பு அந்த அம்மாவுக்கு என் மேல. “அங்க பனமரத்தடில நிறைய ஆம்பளைங்க உனக்காக காத்துக்கிட்டு இருக்கானுங்க பாரு” என்று சொல்லி திட்டுவார்கள். அப்ப என்னை நிறைய பேர் பார்க்க வருவாங்க. பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு சேர்க்க, ஊருக்கு வழி கேட்டு, படிக்க, வேலைக்கு வாய்ப்பு கேட்டு என பலரும் வருவார்கள். சொல்லிட்டுப் போறாங்கன்னு விட்டாதான் அதைச் செய்ய முடியும் இல்ல?
”ஆமா” என்றேன்
கடவுள் நம்பிக்கை உண்டா?
அதுல தான் வண்டி ஓடுது. காலைல எப்பவும் மொதல்ல என்னைப் பெத்த அம்மாவ நினச்சு வேண்டுவேன். “கிருஷ்ணா என் தெய்வம்” -ன்னு சொல்லுவேன். ஏன்னா அவ அப்படிதான் வேண்டிக்குவா. அப்பறம் திருவாசகம் சொல்வேன். சத்யாவ திருவாசகம் படிக்கச் சொல்லுவேன்.
பள்ளிக்கூடத்துல என்னோட ஹாஸ்டல் வார்டன் ஒரு இளம் விதவை. நானும் அவங்களும் தினமும் சாய்ங்காலம் கோயிலுக்குப் போவோம். அங்கு கிருபானந்தவாரியார் சப்ளாக்கட்டையை வைத்துக் கொண்டு பாடுவார். அதைக் கேட்பேன்.
(பாடுகிறார்…)
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”
தினமும் கோயிலுக்குப் போவோம். போய்ட்டு வந்து அருட்பெருஞ்ஜோதி சிலைக்கு ஒரு மாலை போட்டுவிட்டு படுப்போம். அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் அருட்பெருஞ்ஜோதி தான். அந்த ஜோதி உள்ள தானே இருக்கு. அந்த ஜோதியை நினைத்தால் நடக்காத காரியமெல்லாம் நடக்கும். நான் இவ்வளவெல்லாம் படிச்சு, இந்த அவார்டெல்லாம் வாங்கனும்னா சாதாரணம் இல்ல. எல்லாம் ஐயாவோட அருள் தான்.
எல்லாம் செயல்கூடும்
என்னாணையம்பலத்தே
எல்லாம்வல்லான்றனையே ஏத்து.
இன்று வருமோ
நாளைக்கே வருமோ அல்லது
மற்று என்று வருமோ
அறியேன் எங்கோவே
துன்றுமல
வெம்மாயை யற்று
வெளிக்குள் வெளிகடந்து
சும்மா கிடக்கும் சுகம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல்கூடும் பாடல்:
இந்த சரீரத்தில இருக்கும் ஆத்மா ஒரு ஜோதி. அது உள்ள போய் பார்த்து அதோட ஒடுங்கி இருக்கிறது தான் அறிவு. அதை வைத்து தான் எல்லாம். என்கிட்ட காசு பணம் அது இதெல்லாம் இல்லை. (மீண்டும் பாடுகிறார்…)
எல்லாம் செயல்கூடும்
என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல் லான்ற னையே ஏத்து.
இன்று வருமோ
நாளைக்கே வருமோ அல்லது
மற்று என்று வருமோ
அறியேன் எங்கோவே
துன்றுமல
வெம்மாயை யற்று
வெளிக்குள் வெளிகடந்து
அந்த வெம்மாயை எல்லாம் கடந்து உள்ள போய் அதோட இருக்கனும்
“அருட்பெருஞ்ஜோதி”
அந்த ஜோதி இங்க தான் (தன் கையை நெஞ்சில் வைத்துக் காண்பிக்கிறார்)
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”
அந்த ஜோதியை நினைக்க வேண்டியது தான். அந்த ஜோதி வேறு எங்கையும் இல்ல. உன்னிலேயே இருக்கு. இது வெறும் கட்டை இல்ல. ஜோதி இருக்கிற கட்டை
இதைத்தான் கிருபானந்தவாரியார் சப்ளாக்கட்டையை அடித்துக் கொண்டே சொல்வார். அதைக் கேட்டு வந்து ஐயாவிற்கு மாலையைப் போட்டுட்டு
அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
அந்த ஜோதியை அடைவதற்கான தடைகளை எப்படி வெல்வது?
தடையை நாம தான் வெல்ல முடியும். தடை வரும். தடை எதுன்னு கண்டுபிடிச்சு விரட்டிவிடனும். அப்படிதான் ஓட்டினேன் வாழ்க்கையை. காசில்ல பணமில்ல. ஒரு உத்யோகமும் பாக்கல. ஆனா… (பாட ஆரம்பித்தார்)
என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல்லான்றனையே ஏத்து.
என்று வருமோ
நாளைக்கே வருமோ அல்லது
மற்று என்று வருமோ
அறியேன் எங்கோவே
துன்றுமல வெம்மாயை யற்று
வெளிக்குள் வெளிகடந்து
சும்மா கிடக்கும் சுகம்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தடையைக் கடக்கறதுக்கு முதல்ல உள்ள ஒரு ஜோதி இருக்குன்னு உணரனும். அது என்னோடயே எங்க போனாலும் கூடவே தொடருதுன்னு உணரனும்.
உனக்கு இன்னொரு கதை சொல்றேன்
திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்ல சத்யா படிச்சிட்டு இருக்கா. நான் அங்கதான் இருக்கேன். சத்யா ஒரு நாள் திடீர்னு சித்தி ஞாபகமா இருக்குன்னு சொன்னா நடுராத்திரில. சென்னை ஆவடில தான் என் தங்கை டாக்டரா இருக்கா. அங்க போனோம். உடம்பு முடியலையான்னு கேட்டேன். ஆமான்னு சொன்னாங்க. உங்களுக்காக கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து வச்சிருக்கேன் எதுக்காகவாவது பயன்படுத்திக்கோங்கன்னு சொல்லி கொடுத்தாங்க. தெரிஞ்சவங்க வீட்ல அதைக் கொண்டு கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். ஒருவாரத்துல பணம் வாங்கினவங்க என்னைத் தேடி வந்து அந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார்கள். அந்த சமயத்துல தான் ஐயாவுக்கு உடல் நிலை சரியில்லை.
ஐயா இறந்து போனாரு. சின்னாளப்பட்டில கதிர்வேல் -னு ஒரு ஆசாரி. அவரிடம் மூன்று லட்ச ரூபாயைக் கொடுத்து நினைவிடம் செய்யச் சொல்லிவிட்டோம். பின்னால நடக்கப்போறது எனக்குத் தெரியுமா? அதுக்கான பணம், ஆளுங்க எல்லாமும் கண் முன்ன வர்றதையும் செய்யறதையும் தான் நான் பாக்கறேன். இதெல்லாம் பின்னால யோசிச்சுப் பார்க்கும்போது தெரியும். என் வேலை எல்லாமும் இப்படித்தான்.
நீங்க நிகழ்த்தின செயல்களும் போராட்டங்களும் இப்படித்தான்னு சொல்றீங்களா?
ஆமா. எல்லாமும் அப்படித்தான். என் கையில இல்ல. அதுவா நடக்கும். நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இந்தக் காரியம் செய்யனும்னு நினப்பேன். அதுக்கு தேவையான எல்லாமும் என் கைல கிடைச்சிடும். ஆனா அந்த காரியத்த நினைக்கனும்ல. அதுக்கு தான் நாம.
”எல்லாம் செயல் கூடும். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்று சொல்லி கையை உயர்த்தினார்.
”நீ கருணையாய் இருந்து எனக்கு வழி நடத்துறப்பா” என்று கூறி கையெடுத்துக் கும்பிட்டார். கோயில் கட்டறதோ அலங்கரம் பண்றதோ இல்ல கடவுள். “எல்லாம் செயல் கூடும். என் ஆணை அம்பலத்தே”
ஓட்டிட்டேன் என் காரியத்தையெல்லாம் இப்படி. (நீண்ட மெளனம்)
”நூறு வயசாகப்போகுது எனக்கு.” என்று என்னைப் பார்த்தார்.
“ம்…” என்றேன்
“ நீ எந்த ஊர்ல இருந்து வர்ற”
“கரிவலம்வந்தநல்லூர்ல…” தயக்கத்துடன் “தெரியுமா” என்று கேட்டேன்.
“ம்…” என் அழுத்திச் சொல்லியபடி அவருடைய வலது காலைத் தன் கைகளால் தூக்கி ஒரு அடி முன்வைத்துக்காட்டி “இந்தக் கால்படாத ஊர் எதுவும் இங்க இல்ல.” என்றார்.
நான் அவரின் வலது தொடையைத் தொட்டபடி “சரி” என்றேன்.
(குழந்தைகள் சில சமயம் உட்காருவது போல கைகள் தாடையைத் தாங்கியபடி மெளனமாக அமர்ந்திருந்தார். நான் கிளம்பிச் செல்லும்போது வள்ளலார் முன் இருந்த ஜோதியைக் கும்பிட்டு திருநீறு பூசி விட்டு தலையைத் தொட்டு ஆசிர்வதித்து அனுப்பினார். ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்த டைரியில் என் பெயரையும் முகவரியையும் எழுதச் சொன்னார். எழுதியதும் விடைபெற்றுக் கொண்டேன். “லெட்டர் போடு” என்றார். “சரி” என்றேன்.)
***
மிக அரிய நேர்காணல் பதிவு. டி.எஸ்.சௌந்தரம் மற்றும் வினோபா பற்றிய கிருஷ்ணம்மாளின் நினைவுகள் இந்த கட்டுரையை ஒரு பொக்கிஷம் ஆக்குகின்றன. நன்றி ரம்யா.
செயலுக்கென வாழ்வை கொடுத்த மனுஷி, கட்டி ஒரு இடத்தில் இப்போதும் உட்காராத மனம், இன்னும் செய்ய வேண்டுமென்ற மனம் வாய்க்க பெற்றவர். அருமையான பதிவு.
மனம் உருகி உருகி எழுதி இருக்கீங்க ரம்யா. நடக்கும் அரசியல் சாக்கடைகளை படித்து பார்த்து நொந்து கிடக்கும் வேளையில் உங்கள் பதிவு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. பணம் பணம் என்று அலைந்து ஒரு நாள் கூட வாழாமல் இந்த அற்புத பூமியை விட்டு நிரந்தரமாக அகல்வது எவ்வளவு பெரிய வேதனை என்ற உணர்வை உங்கள் பதிவு கொடுத்தது, ரம்யா.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பற்றிய முழுமையான பதிவு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த ஒரே ஒரு பேட்டியில் ஒரு முழு வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களை எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்க. ஒரு முழுமையான பயோகிராபி படித்தது போல் கொடுத்து கலக்கி இருக்கீங்க.