ராஜி என்னும் சல்மா

(எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் மனைவி ராஜி (எ) சல்மாவுடனான நேர்காணல்)

ராஜி என்ற சல்மா

*

எழுத்தாளர்களுடைய இல்லத்தார்களின் கருத்துக்களை  எழுத்தாகவோ ஆவணப்படமாகவோ காண்கையில் இருவருக்குமிடையே ஒரு பரஸ்பரம் ஒப்பந்தம் இருப்பது போலவே தோன்றும். எழுத்தாளர் தனது படைப்புலகம் குறித்தும் அவரது துணை இல்வாழ்க்கை குறித்தும் அதிகம் அக்கறை கொண்டவர்களாக ஒரு தோற்றம் உருவாகிறது. அது பொதுவான தோற்றம். இதற்கு தமிழக / உலகளாவிய என்கிற பாகுபாடு ஏதும் இருப்பதில்லை. எழுத்தாளர் லெளகீக வாழ்க்கையை புறந்தள்ளலாம்.  எழுத்தாளரின் துணை அவ்வாறு புறந்தள்ள இயலாது. எழுத்தாளரின் தனிமையை கெளரவிப்பதும் குடும்பத்தின் அன்றாடத்தை கவனித்துக் கொள்வதும் துணையின் பொறுப்பாகிறது. இதில் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் எழுத்தை மிகவும் அந்தரங்கமானதாக வைத்துக் கொள்பவர்கள். வாசகர் ஒருவித இணை பயணி. ஆகவே படைப்பு குறித்து உரையாட வாசகர்களே ஏதுவானர்கள். குடும்பத்தனர் அல்ல. எல்லா லெளகீகப் பணியின் வாரிசாகவும்  குடும்பத்தினர் வர இயலும். ஆனால்  கலை இலக்கிய உலகில் அவ்வாறு நிகழ்வதில்லை. அங்கு வாரிசாக அவரது மாணக்கர்களே திகழ்கிறார்கள். ஆகவே இணை பயணி, தொடர்ச்சி என்று வாழ்க்கைத்துணையை அறிவிக்க இயலவில்லை. எதிலும் இருப்பது போல இதிலும் விதிவிலக்குகள் உண்டு. தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி அன்னா அவரது எழுத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்தவர். தமிழிலும் சிலர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். பாரதியின் செல்லம்மாள் துவங்கி ஒரு நிரை உள்ளது. அந்த வரிசையில்  எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் மனைவி சல்மா அவர்களும் வருகிறார்.

க.நா.சு.வின் மனைவி ராஜி அவர்களை தஞ்சை பிரகாஷ் பேட்டி கண்டுள்ளார். எழுத்தாளரின் தனிப்பட்ட உலகை அனைவருக்கும் அறியச்செய்த பேட்டியாக அது விளங்குகிறது. அவர் ராஜி என்று அழைக்கப்படுவது தற்செயலானதாகவும் மிகவும் பொருத்தம் கொண்டதாகவும் அமைந்துவிட்டது.  ராஜி என்ற சல்மா அவர்கள்  தனது கணவரான எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ரஜா அவர்களின் படைப்புகள் குறித்த நற்றுணை கலந்துரையாடலில்  ஆற்றிய உரை கவனத்தை ஈர்த்த ஒன்று. அந்த உரையில் கீரனூர்  ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புலகம் குறித்தும் ஆளுமை குறித்தும் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை அளித்தார். இந்தப் பேட்டி வெளியாக அந்த உரை ஒரு முக்கிய காரணம். 

கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களை ஒரு கட்டத்தில் அடைத்து விட இயலாது. மீன்காரத்தெரு, இத்தா ஆகிய நாவல்கள் வழியாக யதார்த்தவாத எழுத்தாளர் என்றும் குட்டிச்சுவர் கலைஞன், வடக்கேமுறி அலிமா வழியாக பின்நவீனத்துவ பாணி் எழுத்தாளர் என்றும் வகைப்படுத்த இயலும். கலகக்காரர் என்றும் அடித்தட்டு் மக்கள் வாழ்க்கையை எழுதுபவர் என்றும் வகைப்படுத்த இயலும். அவரது எழுத்துக்கள் தனது உள்ளடக்கத்தில் கொண்டிருக்கும் உணர்ச்சிக்கொதிப்பை தனது நடையில் வெளிப்படுத்துவது இல்லை. இந்தப் பேட்டியில் சல்மா அவர்கள் அந்த இடத்தை தொட்டுச் செல்கிறார். ஒரு உணர்ச்சிகரமான ஜாகிர்ராஜாவை காணவியல்கிறது.

கீரனூர் ஜாகிர்ராஜா, தனது ஒரு ஏற்புரையின் போது சல்மாவைக் குறிப்பிட்டு ஒரு  எழுத்தாளராக உருவாகி வருவதற்கான அத்தனை வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டிருப்பவர் என்று கூறினார். இந்தப் பேட்டியில் அதற்கான சாத்தியங்களும் தென்படுகின்றன. நீலி இதழ் சார்பாக அவருக்கு அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும்.

-எழுத்தாளர் ஆர். காளிப்ரசாத்

*

ராஜி (எ) சல்மா, கீரனூர் ஜாகிர்ராஜா

ராஜியிலிருந்து சல்மாவுக்கான பயணத்தைப் பற்றி கூறுங்கள்

எனக்கு 18 வயதிருக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு இஸ்லாமிய குடும்பம் வசித்து வந்தார்கள். அந்த வீட்டுப் பெண் பாத்திமா வுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது அவர்கள் 30 நாட்கள் தொடர்ந்து நோன்பு வைப்பது எனக்கு நிறைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது பற்றி பாத்திமாவிம் கேட்பேன். நிறைய சொல்லுவாள் . ஒருநாள் ஒரு இஸ்லாமியர் ஒருவரின் இறுதி ஊர்வலம் எங்களை கடந்து செல்லும் போது அனைவரும் எழுந்த நின்று மரியாதை செலுத்துவதை பார்த்து மிக பிரமிப்பாக இருந்தது. அதன் பிறகு இஸ்லாத்தின் முழு சட்டங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன் . பாத்திமாவிடமும் அவள் அம்மாவிடமும் நிறைய தெரிந்துக் கொள்ள முடிந்தது. அதன் பிறகு ஒரு முஸ்லிமாக வாழ்ந்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது கூட உண்டு..

அந்த நேரத்தில் தனது சொந்த ஊரை விட்டுவிட்டு தஞ்சைக்கு இடம் பெயர்ந்து இவர் வந்திருந்தார். தஞ்சை அவ்வளவு பெரிய வணிக நகரம் எல்லாம் கிடையாது. இவர் இங்கு வர ஒரே காரணம் இலக்கியம். ஒரு ஊரில் உள்ள எழுத்தாளர்களுக்காக ஒருவர் இடம் பெயர்ந்து வருவதும் தனது வாழ்க்கையை அந்த ஊரில் அமைத்துக்கொள்வதும் சிலருக்கு நம்புவதற்கு சிரமமாக கூட இருக்கலாம். ஆனால் இவர் அப்படி வந்து இங்கு தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் தஞ்சையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தஞ்சைக்கு இடம் பெயர்ந்த இவரும் அதே நிறுவனத்தில் பணியில் இருந்தார். அங்கு எங்களுக்குள் அறிமுகம் உருவானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவரது மாமி, பாத்திமா வீட்டுக்கு வந்து என்னைப்பற்றியும் என் குடும்பம் பற்றியும் விசாரித்து பெண் கேட்ட போது எங்கள் வீட்டில் திருமணத்திற்குச் சம்மதிக்க வில்லை. எனக்கு இவரையும் இவருக்கு என்னையும் பிடித்திருந்ததால் என் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டோம் இவருக்கு நான் ராஜியாக இருப்பதுதான் பிடிக்கும். இவர் எந்தவொரு விஷயத்திலும் ஒரு போதும் என்னைக் கட்டுப்படுத்தியது கிடையாது. இவர் அப்போது பெரியார் கட்சிக்காரராக இருந்தார். திருமணத்தற்குப் பிறகு இருவரும் தத்தமது அடையாளத்துடனேயே இருப்போம் என்று கூறினார். இஸ்லாத்தில் உள்ள ஈடுபாட்டாலும் எனது மாமனார், மாமியாரின் மீது இருந்த நேசத்தாலும் நான் முழுமையான இஸ்லாமியப்பெண் சல்மாவாக மாறி விட்டேன்.

திருமணத்திற்குப் பின்னர் வாசிப்பில் ஆர்வம் கொண்டு வாசிக்கத் துவங்கியதாக கூறினீர்கள். ஒரு வாசகராக தங்களை ஈர்த்த தமிழிலக்கியப் படைப்புகள் என எவற்றைச் சொல்வீர்கள்?

திருமணத்திற்கு முன்பே கவிதைகள் எழுதுவேன், ஆனால் எங்கள் வீட்டில், கதைப்புத்தகம் படிக்க, கவிதை, டைரி எழுதவெல்லாம் அனுமதி கிடையாது. 1993 ல் ஒரு டைரி எழுதினேன். அதைக் கிழித்து அடுப்பில் போட்டு விட்டார்கள். அதன்பிறகு எழுதவோ வாசிக்கவோ வாய்க்கவில்லை. எங்கள் திருமணத்திற்குப் பிறகுதான் நவீன இலக்கியம் என்கிற விஷயத்தையே தெரிந்து கொண்டேன். இவர் விசித்ரன் என்கிற பெயரில் கையெழுத்து இதழ் வெளியிட்டார். அதற்கு வரும் படைப்புகளையும் வாசிப்பேன். இவர் வைத்திருந்த புக்ஸ் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கும். மெல்ல மெல்ல வாசிக்க ஆரம்பித்தேன். புதுமைப்பித்தன் பற்றியும் அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைப் பற்றியும் நிறைய சொல்லிக்கொண்டே இருப்பார். முதலில் புதுமைப்பித்தன் அவர் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் வாசித்தேன். அதன்பிறகு புதுமைப்பித்தன் என்றாலே மனதிற்குள் ஒரு பதற்றம் வரும். இவர் ஷெல்பில் இருக்கும் புதுமைப்பித்தன் புத்தகங்களில்  முன்னாடி முகம் தெரிவது போல வைத்து இருக்கும் புத்தகங்களை எடுத்து முகம் தெரியாமல் மாற்றி வைப்பேன். அதற்கு கோபப்படுவார். புதுமைப்பித்தன் டி.பி வந்து இறந்தார் என்று தெரிந்த பின்புதான் எனக்கு அந்த மாதிரி படபடப்பு வந்தது.

புதுமைப்பித்தன் கதைகளைப் பிறகுதான் ஒவ்வொன்றாகப் படித்தேன். “செல்லம்மாள்” எனக்குப் பிடித்த கதை. ‘சந்திரகிரி ஆற்றீன் கரையில்’, ‘அம்மா வந்தாள்’, ‘அவன் காட்டை வென்றான்’, தூங்கும் அழகிகள் இல்லம்’, ’பசித்த மானிடம்’, ‘புளியமரத்தின் கதை’, ‘ஏழாம் உலகம்’, ‘சாய்வு நாற்காலி’, ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘கடலும் கிழவனும்’, உள்ளிட்ட இன்னும் பல நாவல்கள் இவர் சொல்லித்தான் நான் படித்தேன். நானே எடுத்துப் படித்தது நிறைய இருக்கிறது. 2000-ல் நாங்கள் வள்ளலார் நகரில் ஒரு சின்ன வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். இவர் அப்போது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ படித்துக்கிட்டு இருந்தார். நிறைய வரிகளுக்குக் கீழே பென்சில் கோடுகள் போடுவார். ஜெயமோகன் சாருக்கு அதுபற்றிக் கடிதம் எழுதுவார். அவரும் பதில் கடிதம் போடுவார். ஒருநாள், ‘நல்லா இருக்குமா? படிக்கலாமா?’ என்று கேட்டேன். ‘இல்ல இப்ப வேணாம். கொஞ்சநாள் ஆகட்டும் என்றார். இவர் சென்னை போயிருக்கும்போது எடுத்து படித்துப் பார்த்தேன். தொடக்கம் நல்லா இருந்தது. போகப்போக சில விஷயங்கள் புரியவில்லை. இவர் சொன்னது சரிதான்னு நினைத்துக் கொண்டேன். சின்ன சின்ன நாவல்கள்தான் எனக்குப் படிக்கக் கொடுப்பார். ’பின் தொடரும் நிழலின் குரல்’ பெரிய நாவல். கம்யூனிசம் பற்றி எல்லாம் எனக்கு அப்போது தெரியாது. ஒவ்வொரு நாள் இரவும் படுக்கும்போது அந்த நாவல் பற்றி இவர் சொல்லி சொல்லி விளக்கமாச்சு. நிறைய நண்பர்கள் இவரைப் பார்க்க வரும்போதெல்லாம் அந்த நாவல் பத்தி பேசிக்கிட்டே இருப்பார். சமீபத்தில் நேசனுக்கு சொல்லி அவர் படிச்சுட்டுப் பேசினார்.

சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், தமிழ்ச் செல்வன், ஆ. மாதவன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன் சிறுகதைகளில் இது இது படி என்று குறிப்பாகச் சொல்லுவார். கதையெல்லாம் படித்துவிட்டு இரவு முழுக்க பேசிக்கிட்டே இருப்போம். இப்போது அந்த மாதிரி பேச்செல்லாம் குறைந்து விட்டது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு குடும்ப பாரம் அதிகமாகி விட்டது. இப்பவும் ஏதாவது புதுசா இவருக்கு வரும் புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்ப்பதுண்டு. திரும்பவும் படிக்க ஆரம்பிக்கனும்.

தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரான கீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் பத்து நாவல்கள் ஆறு சிறுகதைத் தொகுப்புகள் உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இலக்கிய உலகில் அது ஒரு பெரிய பங்களிப்பு ஆகும். அவரது கதைப் பின்புலமும் தனித்துவமானது. ஆனால்  நட்சத்திர எழுத்தாளருக்கான வாசகப் பரப்பும் எழுத்துக்கான உரிமைத் தொகையும் வருவதில்லை. இந்த உலகியல் பொருளாதார சவாலை தாங்கள் இருவரும் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

நீங்க சொல்லுகிற அந்த நட்சத்திர எழுத்தாளர் ஆக வேண்டும் என்கிற ஆசை இவருக்கே இல்லைன்னுதான் நான் நினைக்கிறேன். ஏன்னா இவர் அடிக்கடி சொல்லுவார்,’தமிழ்நாட்டில் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதி பெரிய லெவலுக்கு வர முடியாது’ என்று. ஆனால் நான் நினைப்பேன், என் குழந்தைகளே நினைக்கிறார்கள், சாகித்திய அகாடமி விருது எல்லாம் இவருக்கு எப்பவோ கிடைத்திருக்க வேண்டும் என்று. அதற்கு இவர் சொல்லுவார்,’ ஒரு சுந்தர ராமசாமிக்கு, ஜெயமோகனுக்கு, வண்ணநிலவனுக்கு, கலாப்ரியாவுக்கு கொடுக்கப்படாத விருது, நான் வாங்கி என்ன ஆகிவிடப் போகிறது?’ என்று. இவருக்கு வாசகர் இல்லைன்னா நீங்க நினைக்கிறீங்க..? அன்றாடம் எங்கிருந்தெல்லாமோ நாலைந்து பேர் பேசிக்கிட்டேதான் இருக்காங்க. வாசகர் இல்லாமல் இவர் பெயர் எப்படி வெளியே தெரிஞ்சிருக்கும்?

இவர் எழுத வருவதற்கு முன்னே சினிமாவில் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கார். சந்தான பாரதி, சுந்தர் கே விஜயன் எல்லோரிடமும் வேலை செய்திருக்கிறார். ராதாரவி சார், இவரைத் தன் தம்பியைப் போல கூடவே வைத்திருந்திருக்கிறார். எழுத வந்தபிறகு இவருக்கு சினிமா ஆர்வம் குறைந்து போய் விட்டது. ஆனாலும் சினிமாவில் இருக்கிற இவரின் நண்பர்கள் இவர்கிட்ட வந்து பேசி ஆலோசனை கேட்டுப் போய்கிட்டேதான் இருக்கிறார்கள். எனக்கும், பிள்ளைகளுக்கும் இவர் சினிமாவில் எழுதனும்ங்கிற ஆசை இருந்தது. நாசர் சாருடைய மனைவி கமீலா மேடம் இவருடைய படைப்புகள் மேல ரொம்ப பரியாதை உள்ளவங்க. இவருடைய ‘துருக்கித் தொப்பி’ நாவல்லை அவுங்க ‘புதுயுகம்’ சேனலுக்கு ஒரு மெகா சீரியலா பண்ணனும்னு இவரைக் கூப்பிட்டு, இவரும் போய் நாகூர் அங்க இங்கன்னு லொகேஷன்லாம் பார்த்து டிஸ்கஷன் எல்லாம் நடந்துச்சு. திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. அதிலிருந்து விலகிவிட்டார். கேட்டதுக்கு பதிலேயில்லை. பிறகு சிலநாட்கள் கழித்துச் சொன்னார். ‘துருக்கித் தொப்பி’ நாவலை சினிமாவாகவோ டி.வி. சீரியலாகவோ எடுக்க முடியது என்று. எனக்கும் பிள்ளைகளுக்கும் வருத்தமாக இருந்துச்சு. இவருடைய வாசகர் நண்பர் வெள்ளைச்சாமியின் ‘கொம்புத்தேன்’ படத்துக்கு வசனம் எழுதி சம்பளம் எல்லாம் வாங்கினார். படம் முக்கால்வாசி எடுத்து நின்று விட்டது. பிறகும் சில வாய்ப்பு வந்தது. எல்லாம் ஆரம்பித்த உடனே நின்றுவிட்டது. சுந்தர் கே விஜயன் சார் சினிமா எடுப்பதை விட்டுவிட்டு சீரியல் எடுக்க ஆரம்பித்தார். அப்போது இவரை வரச்சொல்லி தன் கைப்பட கடிதம் எழுதியிருந்தார். இவர் போகவில்லை. அப்போது சுந்தர் சாரிடம் போய்ச் சேர்ந்த நடிகர் டைரக்டர் சமுத்திரக்கனி எல்லாம் பிறகு பெரிய ஆளாக சினிமாவில் வந்ததாக இவரே சொல்லுவார். நானும் குழந்தைகளும் ‘அடப்போய்யா’ என்று நினைப்போம். அப்போது சுந்தர் கே விஜயன் எழுதிய அந்தக் கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது.

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் எடுத்த சுதா கொங்கரா மேடமுடனும் இவருக்கு நல்ல பழக்கம் உண்டு. பாப்பா திருமணத்திற்கு சுதா மேடம் பெரிய கிப்ட் கொடுத்து அனுப்பினார்கள். போனில் இவரிடம் பேசி கதை கேட்டாங்க. இதுவரை இவர் அதுக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதையெல்லாம் சொல்லிக்கிட்டே வரும்போது இவர் தவறவிட்ட நல்ல நல்ல வாய்ப்புகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை நடராஜன் (சசிகலா) தன் கைப்பட இவருக்கு ஒரு கடிதம் எழுதி தனக்கு உதவியாளராகவும் அவருடைய பத்திரிக்கையில் வேலை செய்யும்படியும் கேட்டார். போனிலும் பேசினார். இவர் போகவேயில்லை. இன்னும் அந்தக் கடிதத்தை நான் அப்படியே வைத்திருக்கிறேன். சிலநாள் கழித்து, ‘ஏன் போகவில்லை?’ என்று நான் கேட்டபோது, ’அதிகார மட்டத்துல உள்ளவங்க கிட்ட என்னால் அடங்கி வேலை பார்க்க முடியாது’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டார். பதிப்பகங்கள் சரியாக ராயல்டி கொடுப்பதில்லை. உண்மைதான். சில பதிப்பகங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் இவருடைய புத்தகங்களைப் போட்டு விற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நம்மால் என்ன நடவடிக்கை எடுக்கமுடியும்? அவங்கவங்களுக்கு மனசாட்சி இருக்கனும். “ஆழிப் பதிப்பகமும்’ ‘ஸீரோ டிகிரி பதிப்பகமும்’தான் நேர்மையாக நடந்து கொண்டார்கள் என்று இவர் சொல்லுவார்.

சரி, நம்முடைய புக்ஸையெல்லம் நாமே போடலாம் என்றுதான் ‘கீரனூர் புக்ஸ்’ ஆரம்பித்தது. ஆனால் இவருடைய 25 நூல்கள் போட பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது என்று வைத்திருக்கிறோம்

கீரனூர் ஜாகிர்ராஜா நட்சத்திர எழுத்தாளர் ஆகவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கலாம். எனக்கு அவர் அந்த அந்தஸ்தையெல்லாம் அடைந்து விட்டார் என்கிற மாதிரிதான் நினைக்கத் தோணுது. முரண்டு பிடிக்கிற மனுஷர்தான். இவர் எந்த சந்தோஷத்தையும் துக்கத்தைய்ம் பிரியத்தையும் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டார். ஆனால் மனசுக்குள் அன்பான ஆள். இதை நான் புரிந்து கொள்ளவே ரொம்ப நாள் ஆனது. இவருக்காக எதையும் செய்யகூடிய நண்பர்கள் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பலதடவை, இவருடைய சுபாவத்துக்கு இதெல்லாம் எப்படி என்று நானே ஆச்சரியப் படுவேன். அப்புறம்தான் எல்லாமே இவருடைய எழுத்துக்கு கிடைக்கக்கூடிய மரியாதைன்னு புரிஞ்சுகிட்டேன். திருமணமானபோதும் அதற்குப் பிறகும் நாங்கள் பட்டக் கஷ்டத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவ்வளவு பட்டோம். எல்லாத்துக்குள்ளேயும் இருந்துதான் இவர் எழுதி மேலே வந்திருக்கிறார். நானும் இவரை எந்தளவு நேசிக்கிறேனோ அந்த அளவு இவர் எழுத்தையும் இலட்சியத்தையும் நேசிப்பதால் நிறைய விட்டுக் கொடுத்தும் குடும்ப பிரச்சனைகளை அதிகம் திணிக்காமலும் அக்கறையோடு பார்த்துக் கொண்டுள்ளேன்.

ராஜி (எ) சல்மா

முழுநேர எழுத்தாளரின் இல்லத்தரசியாக இருப்பது என்பதைக் குறித்து தங்களின் அனுபவப் பகிர்வு என்பது என்னவாக இருக்கும்?

இவர் முழுநேர எழுத்தாளரானது இப்போதுதான். அதற்கு முன்பு என் ஜி ஓ, பத்திரிகை, பதிப்பகத்தில் வேலை பார்த்திருக்கிறார். தஞ்சாவூரில் இவர் நண்பருடன் வண்டியில் போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகி, தலை, கால், கைவிரலில் பலத்த அடிபட்டு ரொம்ப முடியாமல் இருந்தார். எழுதுகிற ரெண்டு விரல்களும் கட் ஆகி தையல் போட்டு இருந்தார்கள். விரல்களைப் பார்த்துப் பார்த்து அழுவார்.  நானும் பிள்ளைகளும் பக்கத்திலேயே இருப்போம். ஹெச்.ஜி.ரசூல் அண்ணன் தினமும் ரெண்டுமுறை போன் செய்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருப்பார். இப்படியான சூழ்நிலையிலும், பண நெருக்கடியான சூழ்நிலையிலும் இவர் மீதான என் அன்பையும் காதலையும் அதிகமாக வெளிப்படுத்துவேன். நிறைய சப்போர்ட்டாக இருப்பேன்.

எழுத்தைப் போலவே பிள்ளைகளும் அவருக்குக் கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எதற்காகவும் ஆசைப்பட்டு கஷ்டப் படுத்த மாட்டார்கள். சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள். முன்பெல்லாம் சிகரெட் குடிப்பார். அதைவிட்டு பத்து வருஷம் இருக்கும். இப்போது யாராவது சிகரெட் குடித்தால் அந்தப் புகை கூட இவருக்கு மூச்சுப் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது. அது மட்டுமல்ல, செண்ட், ஊதுபத்தி, சாம்பிராணி புகை கூட ஒத்துக்காது. அதனால் இவர் வீட்டில் இருக்கும்போது பத்தி கூட பொருத்த மாட்டேன். வாசிக்கும்போதும் எழுதும் போதும் அமைதியாக இருக்க வேண்டும். ஏதாவது சத்தம் வந்தால் கோபப்படுவார். மற்ற நேரங்களில் குழந்தை மாதிரி ஆகிவிடுவார். பாட்டு பாடுவார், ஜோக் அடிப்பார், சில நேரங்களில் இவர் காமெடியாக பேசுவதைக் கூட புரிந்து கொள்ளாமல் நான் கோபப்பட்டுள்ளேன். உண்மையில் இவர் முன்பு பெரியார் கட்சிக்காரர். அப்புறம் கம்யூனிஸ்ட். நாங்கள் பழகிக் கொண்டிருந்த போது இவர் எனக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்த புத்தகம் “பெண் ஏன் அடிமையானாள்?’. அந்த சின்னப் புத்தகத்தைப் படித்துவிட்டு 28 வருடங்களாக இன்னும் நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். அவ்வப்போது எடுத்துப் பார்த்துக் கொள்வேன்.

கோயமுத்தூருக்கு இவருடைய அத்தை வீட்டிற்குப் போயிருந்த போதுதான் இவரைப் பற்றிய பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டேன். இவர் எத்தனை பேரைக் காதலித்தார் என்றெல்லாம் சொன்னார்கள். இவர் கோவையிலேயே வாழ்ந்தவர். அங்குள்ள சந்து பொந்துகள் எல்லாம் நல்ல பழக்கம்.கதைகளிலும் எழுதியுள்ளார். கீரனூரில் இவர் குடும்பம் பெரிய குடும்பம். நானே இவர் பூர்வீக வீட்டைப் பார்த்து பயந்து போயிருக்கிறேன். அரண்மனை மாதிரி பெரிய வீடு. இப்போது அந்த வீட்டை விற்று விட்டார்கள். இவர் ஊருக்குப் போனால் அந்த வீடு இருக்கும் தெருவிலேயே நடக்க மாட்டார். அந்த வீட்டை என்னாலேயே மறக்க முடியவில்லை என்றால் அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த இவருக்கு எப்படியிருக்கும்? முதலாளி பேரன் என்று அந்த ஊர் ஆட்கள் இவரை சொல்லிக் கேட்டிருக்கிறேன். அந்த பரம்பரைத் திமிர் இவருக்கு இப்பவும் இருக்கிறது.

நல்ல சாப்பாட்டுப் பிரியர். ஆனால் அளவாகத்தான் சாப்பிடுவார். கீரனூர் சமையல் வித்தியாசமாக இருக்கும். அது எல்லாம் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. ஒவ்வொரு சமையலாக எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவருக்கு சமைக்கத் தெரியாது. ஆனால் பக்குவம் சொல்லுவார். காரம் கம்மி, உப்பு ஜாஸ்தி, லேசா முறுக விட்டிருக்கனும் என்று ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பார். எனக்கு எரிச்சலாக இருக்கும். இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதானே. சாதாரண ரசம், சோறு, பருப்பு துவையல் சுட்ட அப்பளம் கூட இவருக்குப் பிடித்தமான சாப்ப்பாடுதான். பாகற்காய்ப் பிரியர். வகைவகையாய் மீன் சாப்பிடுவார்.

எழுத்தாளர்கள் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து போடுவதில் இவருக்கு அவ்வளவு சந்தோஷம். இதற்காக பல நாட்கள் ப்ளான் பண்ணுவோம். எந்த நேரத்தில் படிப்பார் எந்த நேரத்தில் எழுதுவார் என்றே தெரியாது. நினைத்த போது எழுதுவார். படித்துப் பார்த்துவிட்டு அவருக்கே பிடிக்கவில்லையென்றால் கிழித்து வீசி விடுவார். அதே மாதிரி எப்பெலாம் குளிப்பார் என்றே தெரியாது. இரவு இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து குளித்ததைப் பார்த்து நான் அரண்டு போயிருக்கிறேன். படுக்கையில் தலைமாட்டிலேயே ஒரு சீட்டுக்கட்டு இருக்கும். எடுத்து இரண்டு பங்காகப் போட்டு அவரே இரண்டு பேருக்குமாக விளையாடுவார். எதிரில் ஒரு ஆள் அவருடன் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு பேசுவார். சிரிப்பார். கோபப்படுவார். கேட்டால் ‘சீட்டு விளையாட்டு மூளைக்குப் பயிற்சி’ என்பார். சரி விளையாடிக்கிட்டே யாரோட பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டால் சிரித்துக் கொண்டே கூடலிங்கத்தோட என்பார். கூடலிங்கம் இவரோட கீரனூர் நண்பர். கதைகளிலும் அவரை எழுதியிருக்கிறார். கொரோனாவில் இறந்து விட்டார்.

‘முழுநேர எழுத்தாளாரின் இல்லத்தரசி’ என்ற இந்தக் கேள்வியைப் படித்துவிட்டு ஒரு நல்ல தமாஷ் கதைக்கான தலைப்பு.. நீ இதுக்கெல்லாம் எப்படி பதில் எழுதப்போறியோ.. ஆண்டவன் தான் ரட்சிக்கனும்’ என்று சொன்னார். இப்படி நிறைய சொல்லலாம்தான். ஒருமுறை இவருடைய வாசகர் வெளிநாட்டு நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் அப்போதுதான் முதல்தடவை இவரைப் பார்க்கிறார். ’எழுத்தாளர் சரி.. வருமானத்துக்கு என்ன பண்றீங்க’ என்று கேட்டு விட்டார். வழக்கமாக இவருக்கு கோவம் வரும் கேள்வி இது. இவர் அப்போது கோவப்படாமல் FTW ல் வேலை பார்க்கிறேன் என்று அமைதியாக சொன்னார். வந்த நன்பர் “ஓ நல்ல பெரிய கம்பெனியாச்சே” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பின்பு இவரிடம் அதென்ன FTW கம்பெனி என்று கேட்டேன். FULL TIME WRITER என்பதன் சுருக்கம்தான் என்றார். சிரிசிரி என்று சிரித்துக் கொண்டேன். அந்த வெளிநாட்டுக்காரர் அறிவையும் நினச்சு வருத்தப்பட்டேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 2020 ஆம் வருடம் இவர் வருகை தரும் இலக்கிய ஆளுமையாகப் பணியாற்றியுள்ளார். நிறைய மாணவர்கள் இவர் படைப்புகளை ஆய்வு செய்துள்ளனர். அவர்களுடனும் நட்பாகப் பழகுவார். நிறைய மாணவர்களை அழைத்து விருந்தும் கொடுத்திருக்கிறோம்.

இவருக்கு பாட்டு ரொம்ப பிடித்த விஷயம். இவர் பாடுவது எனக்கும் ரொம்பப் பிடிக்கும். இவருக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், கேவி மகாதேவனைப. பிடிக்கும். நல்ல இசை ரசிகர். இளையராஜாவை ரொம்பப் பிடிக்கும் இவருக்கு. சிலசமயம் மலையாள சினிமாப் பாடல்கள் பாடுவார். மலையாளத்தில் பேசுவார். சிறுவயதில் கேரளா முழுக்கச் சுற்றியிருக்கிறார்.

சில நேரங்களில் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு ‘அரண்மனைக் கிளி’ படத்தில் வரும் ‘ராத்திரியில் பாடும் பாட்டு; கேட்க கேட்க ஆசையாச்சு’ பாடலைப் பாடுவார். அருண்மொழி பாடுகிற மாதிரியே இருக்கும்.

ஊருக்கவ ராணி போல; எனக்கு அவ அம்மன் போல,
சொல்லப்போனா என்னப்போல; பாக்கியவான் யாரும் இல்ல,
தாரம் கூட தாயைப்போல; ஈடு சொல்ல யாருமில்ல
எல்லாம் என் யோகம்

என்ற வரிகளை இவர் எனக்காகவே பாடுவார். சில சமயம் அழுகையே வந்துவிடும்.

கஷ்டமான காலங்களில் இவருடைய எழுத்து கதை புத்தகம் என்று பேசிப் பேசி அந்த கஷ்டங்களை மறைத்து வாழ்ந்திருக்கிறோம். 28 வருட வாழ்க்கையில் தஞ்சையில் 18 வீடுகள் மாறியிருக்கிறோம். அந்த சமயங்களிலெல்லாம் புத்தகங்களை பேக் செய்து பத்திரப்படுத்தி எடுத்து வந்து புது வீட்டில் அடுக்கி வைப்பதற்கே ஒரு வாரம் ஆகிவிடும். ரொம்ப சிரமப்படுவேன். இவர்கூட மட்டுமல்ல புத்தகங்களோடும்தான் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

முழுநேர எழுத்தாளரின் இல்லத்தரசியாக வாழ்வதென்பது நிறைய கஷ்டங்களும் ஓரளவு சந்தோஷமும் கலந்தது. அப்படிப்பட்ட வாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்துவிட முடியுமா என்று தெரியவில்லை

கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகள் உருவாகும் போது அவரது மனநிலை எவ்வாறு இருக்கும்? அது குறித்து அவருடன் உரையாடும் போது தங்களின் கருத்துக்கள் கதாபாத்தி்த்தின் மனவோட்டம் சார்ந்து இருக்குமா அல்லது எழுத்தாளரின் பாணி சார்ந்து யோசிப்பீர்களா?

ஒரு நாவல் எழுத ஆரம்பிக்கும்போது மிகவும் டென்ஷனாகத்தான் இருப்பார். நகங்களைக் கடித்துக் கொண்டே எங்கேயாவது வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார். நாவல் ஐந்தாறு அத்தியாயம் வரை எழுதிவிட்டால் குஷியாகி விடுவார். ஒவ்வொரு அத்தியாயமாக நானும் படித்துப் பார்த்துக் கருத்து சொல்வேன். அவரே கேட்கவும் செய்வார். நான் விமர்சனம் எல்லாம் செய்ய மாட்டேன். ‘பிடிச்சிருக்கு’ ‘பிடிக்கவில்லை’ என்று மட்டும் சொல்வேன். ஏன் பிடிக்கவில்லை என்று காரணம் கேட்பார். சொன்னவுடன் அமைதியாக கேட்டுக் கொள்வார். அப்போது என்னை ஒரு வாசகியாக நினைக்கிறார் என்று நினைப்பேன்.  கதாபாத்திரம் பொருத்து ’அதுவும் நல்லா இருக்கு’ என்றுதான் பெரும்பாலும் சொல்லியிருக்கிறேன். அது உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். அவருடைய படைப்புகளில் பெண் கதாபாத்திரத்தை விசேஷமாகவே எழுதுவார். இது நான் மட்டும் அல்ல எல்லோரும் சொன்னது தான். (மீன்காரத்தெரு) ஆமினா, (கருத்த லெப்பை) ருக்கையா, (துருக்கித் தொப்பி ) நூர்ஜஹான், வடக்கேமுறி அலிமா இப்படி நிறைய இருக்கிறது.

ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் வித்தியாசமாக எழுதினார். எனக்கு அது இரண்டும் முதல்முறை வாசிக்கும் போது ஏனோ சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. ஞாயிறு கடை உண்டு, சாமானியனைப் பற்றிய குறிப்புகள் இரண்டையும் பலமுறை வாசித்தேன். நான் எழுத்தாளரின் பாணியில்தான் யோசிப்பேன். சில இடங்களில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் என்றும் சில இடங்களில் வர்ணனைகளை தவிர்க்கலாம் என்றும் இவரிடம் சொல்லியதுண்டு.

ராஜி (எ) சல்மா

எழுத்தாளரின் படைப்புகள் தான் சார்ந்த சமூகத்தின் அதிகார மையங்களை கேள்வி கேட்பது வழமையே. பாரதி, தி.ஜா, பெருமாள் முருகன் எனப் பலர் அதை எதிர்கொண்டு வந்தவர்கள். அந்த வரிசையில் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களும் தனது படைப்புலகம் சார்ந்து சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ளார். அப்போது தங்களின் எதிர்வினை என்னவாக இருந்த்து?

சுகனில் சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கும்போதே இவரை நிறைய வாசகர்களுக்குத் தெரிந்து விட்டது. அசோக மித்திரன் எவ்வளவு பெரிய எழுத்தாளர்! அவரே இவரது கதைகளைப் படித்து விட்டு கடிதம் எழுதினார். இவரை நாவல் எழுதத் தூண்டியதே அசோகமித்திரன் தான். தமிழில் எழுதுகிற முஸ்லீம் எழுத்தாளர்களில் இவர் அளவுக்கு துணிச்சலாக எழுதியவர்கள் கிடையாது. நான் எல்லோரையும் படித்துவிட்டுச் சொல்கிறேன். ஜாகிர் ராஜாவைப் படியுங்கள் என்று அசோகமித்திரன் சிபாரிசு செய்திருக்கிறார்.

தோப்பில் முகமதுமீரானே ‘என்னைத் தாண்டி ஜாகீர்ராஜா எழுதுகிறார்’ என்று நேரடியாக ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். இவர் கேள்வி கேட்பது மதத்தை அல்ல மதவாதிகளைத்தான். தெளஹீதுகள் வந்து எவ்வளவு குழப்பத்தை செய்திருக்கிறார்கள் என்று ரசூல் அண்ணன் எங்கள் வீட்டிற்கு வந்தபோது இவரும் ரசூல் அண்ணனும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபோதுதான் எனக்கே நிறைய புரிந்தது.

மீன்காரத்தெரு நாவல் வந்தபிறகு இவரை நிறையப்பேர் கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்நாவலை வெளியிட்ட மருதாபாலகுரு அண்ணனுக்கு நிறைய மிரட்டல் போன் வந்ததை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் சென்னைக்குப் போன பின்பு என் நம்பரை எப்படியோ தெரிந்து கொண்டு நடு இரவில் பலமுறை பல மிரட்டல் போன் வந்திருக்கிறது. சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பலநாட்கள் தூக்கமில்லாமல் இருந்திருக்கிறேன். கீரனூரில் பள்ளிவாசலுக்கு முன்பு வைத்துக்கொண்டே இவரை அடிக்க முயற்சி நடந்திருக்கிறது. திருவண்ணாமலையிலோ எங்கேயோ சரியாக நினைவில்லை. இவருக்கு ஒரு கூட்டம் நடந்த போது பேசிய ஒருவர், ’ஜாகிர்ராஜா தமிழ்நாட்டின் சல்மான் ருஷ்டி’ என்று பேசினார். அது தனக்கு மிகவும் எரிச்சலை உருவாக்கியாதவும் இவர் வந்து சொன்னார். கூட்டங்களில் கலந்துகொண்டு ஊருக்கு வந்தவுடன் கூட்டத்தில் எப்படிப் பேசினேன், மற்றவர்கள் எல்லோரும் எப்படிப் பேசினார்கள் என்பதை எல்லாம் சொல்லுவார். அதைக் கேட்க எனக்கும் பிடிக்கும்.

உண்மையைச் சொன்னால் இவருக்கு முஸ்லீம் வாசகர்களே நிறையப் பேர் இருக்கிறார்கள். இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து பி.எச்.டி வாங்கியவர்களில் முஸ்லீம் பெண்கள் தான் அதிகம். இவர் எழுதியதில் நியாயம் இருப்பதால் தானே ஈதை எல்லாம் செய்கிறார்கள். அடிக்க முயற்சி நடந்த போது, மிரட்டல்கள் வந்த போது இவர் அதை விளம்பரப் படுத்தவில்லை. சாதாரணமாகத்தன் எடுத்துக் கொள்வார். பயமெல்லாம் எனக்கும் பிள்ளைகளுக்கும் தான்.

ஒரு எழுத்தாளராக உருவாவதற்கு ஏற்ற வாழ்க்கைப்பாடு கொண்டவர் என்று தங்களைக் குறித்து  தங்கள் கணவர் எழுத்தாளர் கீரனுர் ஜாகிர்ராஜா கூறுகிறார். அது மிகவும் ஆர்வமூட்டுவதாக உள்ளது. எல்லா மனிதருக்குள்ளும் ஒரு கதை உண்டு எனினும் அனைவரும் எழுதிவது இல்லை.  எந்தப் பின்புலத்தில் அவர் அதைக் கூறுகிறார் என்று சொல்லவியலுமா? எழுத்தாளராகும் எண்ணம் உள்ளதா?

எனக்கு மூன்று வயதாகும்போதே என் அம்மா நான்காவது பிரசவத்தில் இறந்து விட்டார்கள்.  மூன்றாவது பெண்ணாக நான் பிறந்த போதே, ‘இனி பிள்ளைப்பேறு கூடாது” என்ற மருத்துவரின் அறிவுரையையும் மீறி ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஆசையில் நான்காவதும் பெண்பிள்ளையைப் பெற்று அதிக இரத்தப்போக்கால் இறந்து விட்டார்கள். என் சித்தியையே என் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

என்னுடன் பிறந்தவர்கள் 5 பெண்களும் 2 ஆண்பிள்ளைகளும். எனக்கு பதினைந்து வயது ஆகும்போதே, பழனியில் டெப்டி தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்ற என் அப்பா மிகவும் நேர்மையானவர்; லஞ்சம் என்று ஒரு பைசா கூட வாங்காதவர்; ‘பிராவிடண்டி பண்ட்’ பணத்தை வாங்கிக் கொண்டு வரும் வழியில் மாரடைப்பால் காரிலேயே இறந்து விட்டார்.  அதன்பிறகு என் இரண்டு சகோதரிகளின் கணவர்களும் வேறு வேறு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள்.என் வாழ்க்கையில் நடந்த் நிறைய சூழ்ச்சிகள், ஏமாற்றங்கள், துரோகங்கள் பற்றியெல்லாம் நிறைய இவரிடம் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் இவர் சொல்வார் எழுத்தாளர் பொன்னீலனின் தாயார் அழகிய நாயகி அம்மாள் ‘கவலை’ என்று நாவல் எழுதின மாதிரி நீயும் உன் வாழ்க்கையை வைத்து ஒரு நாவல் எழுது என்று சொல்லுவார். எப்படித் தொடங்குவது என்று ஐடியாவும் சொன்னார். எனக்கும் கொஞ்சம் வாசிப்பு பழக்கமும் இருந்ததால் அந்த வருட புது டைரியை எடுத்து வைத்து எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால் எழுத எழுத என் வாழ்க்கையை நினைத்து அழுகை வந்தது. கட்டுப்படுத்த முடியவில்லை. என்னெனமோ பழைய நினைவுகள். இப்படி எழுத்து என்னைக் கட்டுப் படுத்த முடியாமல் நின்று விட்டது.

எழுத்தாளர் ஆர். காளிப்ரசாத்

நற்றுணைக் கூட்டத்தில் பேசிய பிறகு ஜெயமோகன் சார் மாதிரிப் பலரும் அந்தப் பேச்சைப் பற்றி சொன்னபிறகு எழுதலாம் என்று தோன்றுகிறது. நாஞ்சில் சார் கூட என் பேச்சு அலங்காரம் இல்லாமல், அமைதியாக இருந்தது என்று சொன்னதாக இவர் சொன்னார். இனி எழுதுவேனோ தெரியவில்லை. எழுதினாலும் சொந்த வாழ்க்கையை எழுதக் கூடாது.

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *