உலகம் முழுதும் என் நாடே – அனுராதா ஆனந்த்

(வெர்ஜீனியா உல்ஃப் புனைவுலகம் குறித்து)

வெர்ஜீனியா உல்ஃப்

‘ஒரு பெண்ணாக எனக்கென்று எந்த நாடும் கிடையாது , ஒரு பெண்ணாக  எந்த நாடும் தேவையில்லை, ஒரு பெண்ணாக  உலகம் முழுதும் என் நாடு

 உலகில் தனித்தனி நாடுகளும், அதன் எல்லைகளைக் காக்க போர்களும் , எந்த வகையிலும் இந்தப் போர்களில் பங்கு கொள்ளாத பெண்கள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாததனாலேயே போரருக்கு எதிராக உலக அமைதியை கோரும்  தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் வெர்ஜீனியா உல்ஃப். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இவ்வுலகத்தில் ,பெண்கள் மீதி திணிப்பட்டவைகளிலேயே மிகக் கொடூரமானது போர் என்ற வன்முறைதான் என்கிறார். 1938 இல் ‘ 3 கினீஸ்’ என்ற புரட்சிகரமான கட்டுரையில் நாட்டுப்பற்று என்ற கோட்பாட்டையே மறுக்கிறார். அது பொய்யாக கட்டமைக்கப்பட்டதொன்று என்றும், மக்கள் சுய  அறிவின்றி உயிரையும் தியாகம் செய்ய வைக்கவே இந்த நாட்டுப்பற்றை அரசியலில் கையாளுகிறார்கள் என்று கூறுகிறார். இந்த கட்டுறை உலகப் போர் நிகழ்ந்த அந்த காலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .  

“இந்த உலகம் யாரையும் எழுதுமாறு பணிப்பதில்லை – நாவல்களை, கவிதைகளை, வரலாறு எதையும் எழுதச் சொல்லவதில்லை;  அவையெல்லாம் இவ்வுலகிற்குத்  தேவையில்லை. ஃப்ளாபர்டிற்கு பொருத்தமான வார்த்தை கிடைத்ததா, கார்லைல் தன் தகவல்களை சரி பார்த்தாரா என்பதைப் பற்றியெல்லாம் அது  கவலைப்படுவதில்லை. எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் எழுதினார்கள் என்பதும் அது உன்னதமான இலக்கியமானது என்பதும் ஒரு  ஆச்சரியம் என்று தான் சொல்லவேண்டும்.இது ஆண்களுக்கு பொருந்தும் .ஆனால் பெண்களுக்கோ கடக்கமுடியாததொரு முட்டுக்கட்டையை இவ்வுலகம்  முன்வைக்கிறது .தன் முழு சக்தியையும் கொண்டு, எழுதும் பெண்களை மூர்க்கமாக எதிர்க்கிறது. பெருட்படுத்தாத் தன்மை ஆண் மனங்களை காயப்படுத்துகிறதென்றால் இந்த வன்மம் கொண்ட  எதிர்ப்பு , படைப்பூக்கம் நிறைந்த  எத்தனை பெண் மனங்களை அப்படியே முடக்கிப் போட்டிருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இன்றைய செய்தித்தாளை திறந்தால்  “தேர்வு தாள்களை பார்க்கும் போது  – தன்னளவில்  மிகச் சிறந்த அறிவுள்ள பெண்,  அறிவில்லாத  மிக மோசமானதொரு   ஆணைக் காட்டிலும்  கீழானவாளாகவே இருக்கிறாள்”  என்று ஆஸ்கர் ப்ரௌனிங் (கேம்ப்ரிட்ஜின் மூத்த பேராசிரியர் மற்றும் அறிவு புலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்) ஒரு கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதை வேறு  தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். இதை ஒரு மகளின் தந்தை உண்மையென்று நம்பினால் அவளது கல்விக்கு பொருட்ச்செலவு செய்யத் தயங்குவார்.இயல்பாகவே பெண்களை அவர்களின் அறிவு சார்ந்து மதிக்காத பொருட்படுத்தாத  ஆண்களின் கூட்டு மனநிலையை இது மேலும் கட்டிப்பட வைக்கும். தந்தையை விடுங்கள் இதைப் படிக்கும் இளம் பெண்கள் பலர் தாங்களே தங்களை குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள மாட்டார்களா?  ஒரு மனத்தடை ஏற்பட்டு இந்த கல்வி புலங்களில் நுழையக் கூட  மாட்டார்கள் இல்லையா?. இந்த 19 ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் இப்படி நுணுக்கமாக வாயடக்கப்படுகிறார்கள் என்பது இந்த நோய்மையான சமுகத்தின் சாபக்கேடு”

என்று தனது ‘எ ரூம் ஆஃப்  ஒன்ஸ் ஓன்’ என்ற கட்டுறை தொகுப்பில் குறிப்பிடுகிறார் நவீத்துவ  எழுத்தின் முன்னோடிகளுள் ஒருவராக கருதப்படும் அடிலைன் வர்ஜீனியா உல்ஃப்   (ஸ்டீபன்) . பெண்களும் புனைவும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய இரு  உரைகளின் தொகுப்பே இப் புத்தகம்.  பெண்கள் எழுத வேண்டுமானால் எந்த மாதிரியான சூழலும், வசதியும் , சமூக புரிதலும் தேவை என்று  தர்க பூர்வமாக அலசியிருப்பார். அந்த காலத்திய விக்டொரிய சமூகத்தின் மதிப்பீடுகளையும் அது மக்களையும் குறிப்பாக பெண்களை எவ்வாறு வரையறுக்கிறது, எவ்வாறு முடக்குகிறது என்று விளக்கியிருப்பார்.

வெர்ஜீனியா உல்ஃப்

‘ஒரு பெண் புனைவிலக்கியம் படைக்க வேண்டுமெனில், அவளுக்கென்று பிரத்யேகமான ஒரு அறையும் , அவள் கையில் பணமும் இருக்க வேண்டும்’

வெர்ஜீனியா ஜனவரி 25, 1882 ஆம் ஆண்டு  இங்கிலாந்தில் (லண்டனில்) தெற்கு  கென்சிங்டனில் பிறந்தவர். அவரது தந்தை லெஸ்லீ ஸ்டீபன் எழுத்தாளர், வரலாற்றாசிரியர், கட்டுறையாளர், மற்றும் மலையேற்றத்தில் நாட்டம் கொண்டவர். வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பலரது சரிதைகளை எழுதியுள்ளார். இங்கிலாந்தில் குறிப்பாக லண்டனின் அறிவார்ந்த சமூகத்தால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.1857 இல் ஈடன் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.   1700 களிலேயே அடிமை முறையை ஒழிக்க போராட்டம் நடத்தியவர். திருச்சபைக்கு குருமாராக வேண்டி தத்துவயியல் படித்து கொண்டிருந்த ஸ்டீபன் டார்வினின் ‘ஒரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ்’ படித்ததும் கடவுள் மறுப்பாளராக மாறினார்.கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.பல புத்தகங்களையும் ஆய்வு நூல்களையும் பிரசுரித்தவர்.  பலதரப்பட்ட ஆர்வங்களைக் கொண்டவர். மலையேற்றம் பற்றிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.  ‘டிக்‌ஷனெரி ஆஃப் நேஷனல் பையோக்ரஃபி’ யின் எடிட்டராக 1885 முதல் 1891 வரை பணியாற்றியவர். ‘சர்’ என்ற உயரிய பட்டம் பெற்றவர். 

அவரது தாய் ஜூலியா ஸ்டீபன் மும்பாயில் (இந்தியாவில்) பிறந்தவர். ஜீலியாவின் பாட்டி மும்பாயைச் சேர்ந்த பார்ஸி இனத்தவர் என்றே சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அக்காலத்திலேயே பெண் புகைப்படக் கலைஞராக விளங்கிய ஜீலியா மார்க்ரேட் கமரூன் வெர்ஜீனியாவின் சித்தியாவார். பெண்களின் வாக்குரிமைக்காகவும், பெண் தொழிலாளர்களுக்கு,  சம ஊதியம் தர வேண்டி  போராடிய லேடி ஹென்றி சோமர்செட்டும் ஜூலியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவரே. ஜூலியாவும்  முற்போக்கு சிந்தனைக் கொண்டவராக பெண்ணியவாதியாக இருந்தார் .மேலும் புகழ்பெற்ற நவீன ஓவியர்கள் (impressionists) மற்றும் சிற்பிகளுக்கு மாடலாக திகழ்ந்தவர். கூரான நாசியும் , திருத்தமான முக லட்சனமுமாக  விக்டோரியன் காலத்தின் மிக அழகான பெண்ணாக (classic victorian beauty) பரவலாக அறியப்பட்டவர்.

வெர்ஜீனியாவின்  தந்தை ஸ்டீபன், தாய் ஜூலியா இருவருக்கும் அது  இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தின் இணையை இழந்தவர்கள் . ஜீலியாவிற்கு முதல் திருமணத்தின் மூலம்  மூன்று குழந்தைகளும் ஸ்டீபனுக்கு ஒரு மகளும் இருந்தனர். இரண்டாம் திருமணத்தில் வெர்ஜீனியாவையும் சேர்த்து நான்கு குழந்தைகள்.  ஆக எட்டு குழந்தைகளுடன் வெர்ஜீனியாவின் குடும்பம்  ஹைட் பார்க் என்ற இடத்தில்   ஸ்டீபனின்  பூர்விக வீட்டில் வசித்து வந்தனர். வெர்ஜீனிய ஏழாவது குழந்தை .அவருக்கு  தாய் தந்தை இருவரும் வீட்டிலேயே கல்வி பயிற்றுவித்தனர்.  அவரது தாய் ஜீலியா லத்தீன் மற்றும் ஃப்ரெஞ்ச் மொழிகளும், வரலாறு  தத்துவம் ஆகியவற்றையும், தந்தை கணிதம் மற்றும்  அறிவியலையும் வெர்ஜீனியாவிற்கு முறையாக பயிற்றுவித்தனர். 

வெர்ஜீனியா உல்ஃப் குடும்பம்

இருவரும் இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்கள் ஆதலால் வெர்ஜீனியாவிற்கும் விக்டோரிய காலத்து  இலக்கியத்தை, மற்ற பாடங்களை விட மிகுதியாக சொல்லிக் கொடுத்தனர். பியானோ வாசிப்பதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். மேலும் அவரது தந்தையின் பெரிய நூலகத்தில் எந்த புத்தகத்தையும் எந்த நேரத்திலும்  எந்தத் தணிக்கையுமற்று படிக்கும் வாய்ப்பும் அனுமதியும் இருந்தது. வயதிற்கு மீறிய செவ்வியல் இலக்கிய வாசிப்பும் அவருக்கு சாத்தியப்பட்டதினால் பின்னாளில் கல்லூரியில் தன் அளவு  வாசித்த  மாணவர்கள் யாரும் இல்லை எனவும் ,அப்படி வாசித்த ஆசிரியர்கள் கூட அரிதாகவே இருந்ததாகவும் கர்வத்துடன் குறிப்பிடுகிறார். 

1897 முதல் 1901 வரை லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் பெண்கள் பிரிவில் வரலாறு மற்றும் இலக்கியம் பயின்றார். தன் இளமைப் பருவத்தைப் பற்றி வெர்ஜீனியா

பிரகாசமான உயிர்புள்ள நிறங்கள்,தெளிவான சப்தங்கள், சில மனிதர்கள், தீவிர குணாதிசயங்கள், கேலிச் சித்திர கதைகள், வன்முறை நிறைந்த கணங்கள் பல, அனைத்துமே அழகிய  இயற்கை சூழலின் பின்னணியில், பரந்து விரிந்த வெட்டவெளியில்’

என்று விவரிக்கிறார்.  அவரது சகோதரர்கள்  ஜெரால்ட் மற்றும்  ஜார்ஜ் ( அவரது தாயின் முதல் திருமணத்தில் பிறந்தவர்கள்)  இருவராலும் மிகச்சிறிய வயதில் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக   ‘ எ ஸ்கெட்ச் ஆஃப் த பாஸ்ட்’ என்ற கட்டுரையிலும் வேறு சில இடங்களிலும் குறிப்புட்டுள்ளார் . ஆனால்  அதற்கு முரணாக 1904 அல் அவரது தந்தையின் இறப்பு வரை தன் வாழ்வு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவே அவரது நாட்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

‘செல்வந்தர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் எட்டு குழந்தைகளை வளர்த்து படிக்க வைக்கக் கூடிய வசதி படைத்தவர்களாக என் பெற்றோர் இருந்தனர். எப்போதும் இலக்கியமும், பேச்சும், கலையும், பலதரபட்ட நணபர்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்த நாட்கள் …  பேச்சும், விளையாட்டும் , மகிழ்ச்சியான சப்தங்களும் நிறைந்த வீடு …அறைகலன்கள் நிறைந்த, எல்லாச் சுவர்களிலும் செவ்வியல் ஓவியங்கள் பல மாட்டப்பட்ம, அந்த வீட்டில் பிள்ளைகள்  நாங்கள் நெருக்கமாக வளர்ந்தோம்’

வெர்ஜீனீயாவின் டயரி குறிப்புகள்.

வெர்ஜீனியா 5 வயதிலிருந்தே எழுதத் தொடங்கியுள்ளார். கடிதங்கள் , சிறு சிறு பத்திகள் கவிதைகள் எழுதியுள்ளார். இதன் காரணமாக தந்தைக்குச் செல்லப் பிள்ளையாக , மற்ற சகோதரர்களை விட தந்தையுடன் அதிக நேரம் செலவிட்டவராக இருந்துள்ளார். இருவரும் புத்தகங்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.  தன்னிச்சையாக சிந்திக்க, சிந்தித்ததை தெளிவாக எடுத்துரைக்க, தம் கருத்தை ஆணித்தரமாக நிலை நாட்ட தகுந்த மேற்கோள்களுடன் விவாதிக்க  தந்தை தனக்குக் கற்றுத் தந்தார் என்று  குறிப்பிடுகிறார். தனது பத்தாவது வயதில் அக்கா வெனஸ்ஸாவுடன் இணைந்து  ‘ ஹைட் பார்க் கேட் ந்யூஸ்’  என்ற கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை தொடங்கி, 1895  வரை நடத்தி வந்தார். அதை அக்காலத்தில் பிரபலமாக இருந்த ‘டிட் பிட்ஸ்’ என்ற பத்திரிக்கையின் சாயலில் வடிவமைத்திருந்தார். இதில் தனது பெரிய குடும்பத்திற்குள் நடந்தவைகள், அவர்கள் வீட்டிற்கு விருந்தினராக வருகைத் வந்தவர்கள், மற்றும் இவர்கள் விருந்தினராக போன வீடுகளைப் பற்றியெல்லாம் சுவரசியமாக எழுதியுள்ளார். இவரது அக்கா  வெனஸ்ஸா பொருத்தமான ஓவியங்கள் வரைந்துள்ளார். பிற்காலத்தில் வெனஸ்ஸா முக்கியமான 

ஓவியராக (impressionist,   post impressionist) திகழ்ந்தார். 1895-ல் தனது தாயின் மறைவிற்குப் பின் சகோதரிகள் இருவரும் இதைக் கைவிட்டனர்.

வெர்ஜீனியா உல்ஃப் எழுத்து மேசை

1882இல்  இங்கிலாந்தின் கிராமப்புறமான கார்ன்வாலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வருடத்தின் மூன்று மாதங்கள் (வேனிர்கால வசிப்பிடமாக) தன் குடும்பத்தை அங்கு கூட்டிச் செல்கிறார் வெர்ஜீனியாவின் தந்தை . அதற்கு டாலன்ட் ஹௌஸ் என்று பெயரிடுகின்றனர். வெர்ஜீனியாவின்  13 ஆவது வயது வரை இந்தப் பழக்கம் தொடர்கிறது . அது கடற்கரையோரத்தில் அமைந்த சிறிய குடில். அந்த வீட்டிலிருந்து கடலும் ‘ காட்ரெவி லைட்ஹௌஸ்’ என்ற கலங்கரை விளக்கமும் தெளிவாகத் தெரிந்தன. அவரது  ‘ஜேகப்ஸ் ரூம்’, ‘டூ த லைட் ஹௌஸ்’ மற்றும் ‘ வேவ்ஸ்’  போன்ற படைப்புகளில் இந்த வீட்டில், இந்தக் கடற்கரையோரம்  வசித்த நாட்களின் தாக்கத்தை நன்றாகக் காண முடியும். 

அவரது முதல் நாவல் ‘தி வோயேஜ் அவுட்’ 1915 இல் வெளிவந்தது . இரண்டாவது ‘நைட் அன் டே’ 1919 இல் வந்தது. இந்த இரண்டிலிருந்தும் முற்றிலுமாக வேறுபட்ட மூன்றாவது படைப்புதான் ‘ஜேகப்ஸ் ரூம்’. இது நவீனத்துவ நாவலுக்கான முன்னோடியாகக் கருதப்படுகிறது.ஜேகப்  ஃப்ளான்டர்ஸ் என்ற மைய கதாபாத்திரத்தின்  பால்ய பருவம் தொட்டு அவரது நடு வயது வரை கதையில் சொல்லப்படுகிறது .அவரது வாழ்வில் இருக்கும் பெண்கள் மற்றும்  அவர் சந்திக்கும் பெண்களின் பார்வையில்  ஜேகப் என்னவாக இருந்தார் என்பதை மட்டுமே வைத்து கதை சொல்லப் படுகிறது . இருண்மையும், வெறுமையும் நிறைந்த இக் கதையின் நாயகனை , நினைவுகள் மற்றும் அவரது வாழ்விலுள்ள பெண்களின் உரையாடல்கள் வழி மட்டுமே அறிகிறோம். அறியாத பக்கங்கள் அப்படியே இடைவெளிகளாக நமது கற்பனைக்கே விடப்பட்டுள்ளன். இது எழுத்துலகத்தில் ஒரு புதிய திரப்பை ஏற்படுத்தியது.  அவரது சிறுகதை தொகுப்பான ‘மண்டே ஆர் ட்யூஸ்டே’ விலும் சிறிய அளவில் இந்த யுக்தியை கையாண்டிருப்பார். 

“அதனால்  நாங்கள் இங்கிருந்து கிளம்புவதைத் தவிர வேறொன்றும் செய்வதிற்கில்லை” என்று எழுதியபடியே, பெட்டி ஃப்ளான்டர்ஸ்  தேவைக்கு அதிகமான அழுத்தத்துடன் அவளது கால்களை கடற்கரை மணலில் புதைத்துக் கொண்டாள்.

அவளது பேனாவின் பொன் முனையிலிருந்து வெளிர் நீல மை பொங்கி அங்கு நிறுத்தப் புள்ளி இடும் இடத்தைத் துளைத்தது. அவளது கண்கள் உறைந்தன; நீரால் மெதுவாக நிறைந்தன. கடற்கறையே தத்தளித்தது. கலங்கரை விளக்கம் வளைந்து வளைந்தாடியது.

                     -ஜேகப்ஸ் ரூம்

‘வீடு தனியாக இருந்தது. யாருமற்று காலியாக இருந்தது.  கரையில் ஒதுங்கிய உயிரற்ற  சிப்பியைப்  போல. உயிர் அதை விட்டுச் சென்றதனால் உப்புத் துகள்களால் நிரப்பப்பட வேண்டிய சிப்பியாக  காலியாகக் கிடந்தது வீடு’

               -டு த லைட்ஹௌஸ்

‘எனக்குள்ளும் அலையொன்று மேலெழும்புகிறது , பெருகி பொங்குகிறது , புதிதாக ஒரு  விருப்பம், குதிரை வீரனால் அடக்கப்படும், சீறீப் பாயும் ஒரு இளங்குதிரையைப் போல ஒரு விருப்பம். நாம் எந்த எதிரிக்காக காத்து நிற்கிறோம்? இறப்பு… . என் கூந்தல் காற்றில் பறக்க இறப்பை நோக்கிதான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்…. என்னையே செலுத்தி உன்னைத் ( இறப்பை) தாக்குவேன்… உனக்காக நெகிழாத , யாரிடமும் தோற்காத என்னை….’

      -வேவ்ஸ்

அவர்களது லண்டன் வீடு ஹைட் பார்க் கேட்டிலும், இந்த கோடைகால வீடு டாலன்ட் ஹௌஸிலும்  வரலாற்று ஆய்வாளர்கள், கலைஞர்கள், கல்விப் புலத்தில் இயங்கும் பேராசிரியர்கள் வருவதும், தங்குவதுமாகவும் அரசியல், கலை இலக்கியம் தத்துவம், மரபுகள் , நவீனத்துவ போக்குகள் பற்றியெல்லாம் காரசாரமான விவாதங்கள் நடப்பதுவுமாக ஒரு அறிவார்த்தமான சூழலில் அவரது இளமைக் காலம் கழிந்துள்ளது.

வெர்ஜீனியா உல்ஃப்

1895 ஃபெப்ரவரியில், 13 ஆவது வயதில்  அவரது  தாயின் மறைவு அவரை கடுமையாக பாதிக்கிறது. முதல்முறையாக மனச்சிக்கலில் ஆழ்கிறார். தாயின் மரணத்தைப் பற்றி ஒரு கடித்த்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நடந்துவரும் பாதையில் ஒரு நீர் தேங்கி குட்டையாக கிடப்பதைப் போல திடுக்கிட்டு நின்றேன். அதை என்னால் தாண்டிக் கடக்க முடியவில்லை. எல்லாமே மீமெய்மையாக மாறியது’

அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவரால் ஒரு வார்த்தைக் கூட எழுதமுடியவில்லை. முதல் முறையாக மனது தன் வசமில்லை என்று உணர்கிறார். பதின் பருவத்தில் தாயின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியமாக தேவைப்படும் கட்டத்தில் அதை இழந்து, இந்த பொல்லாத சமூகத்தின் முன் தனித்து நிற்க வேண்டிய கொடுமையான காலமாக அதை குறிப்பிடுகிறார். 1897 யில் எழுதத் தொடங்கிய புது டயரியில். அதற்கு பின் வரும் நாட்களில் அவரது வாழ்விலிருந்த நிகழ்வுகளும், அவரது எண்ணவோட்டங்களும், சிறு சிறு பத்திகளும்,  அவர் சந்தித்த மனிதர்களின் குணவார்ப்புகளைப் பற்றிய பத்திகளுமாக , மிகவும் இலக்கியத் தரமான குறிப்புகளால் பல பல நோட்டு புத்தகங்களை எழுதி நிரப்புகிறார்.

1904யில், அவரது தந்தையின் இறப்பிற்குப் பின் மறுபடி  மனச்சிக்கலில் மூழ்கிய காலகட்டத்தில் ஒரு தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்படுகிறார். பிற்காலத்தில் இந்த ஏழாண்டுகளை 1897 – 1904 ‘ ஏழு துன்பியல் ஆண்டுகள்’ எனக் குறிப்பிடுகிறார்.

தீராத மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். ஒரு சுழற்ச்சியில் சில ஆண்டுகள் இடைவெளியில் வாழ்நாள் முழுதும்  தொடர்ந்து பீடிக்கப்படுறார். கடுமையான தலைவலி , தூக்கமின்மை, காதில் குரல்கள் கேட்பது என்று ஒரு பீதியூட்டும் உள்ளுலகம் அவரை முழுவதுமாக தன்னுள் இழுக்கத் தொடங்குகிறது .

தந்தையின் இறப்பிற்கு பின்  அவர்களது லண்டன் ,தெற்கு கெனசிங்டன் வீட்டை விற்றுவிட்டு ப்ளூம்ஸ்பெரி என்ற இடத்திற்கு குடிபெயர்கிறார்கள்.1905 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் முதல் கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்த சகோதரர் டோபி தனது  நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வரத்  தொடங்குகிறார். இவர்கள் முக்கியமாக கேம்ப்ரிட்ஜ் ‘அபோஸ்லிஸ்’ என்று அழைக்கப்பட்ட கல்லூரியின் மிக அறிவார்ந்த மாணாக்கர்கள் ஆவர். ‘வியாழக்கிழமை சாயுங்காலங்கள்’ என்று முதலில் பெயரிடப்பட்ட இந்த கூடுகைகள் பிறகு ப்ளூம்ஸ்பெரி வட்டம் எனவும் இதில் பங்குகொண்டு பின்நாட்களில் பிரபலமானவர்கள்  ‘ப்ளூம்ஸ்பெரி க்ரூப்’ எனவும் அழைக்கப்பட்டனர். இ. எம் ஃபாரஸ்டர், மேய்நார்ட் கீயிஸ் , ராஜர் ஃப்ரை போன்றவர்களும் இந்த கூடுகைகளில் பங்குகொண்டவர்கள். இந்த கூட்டங்களில் கிடைத்த திரப்புகளும் இலக்கிய அறிவும், ஒரு குறிப்பிட்ட நவீனத்துவ  பாதையை நோக்கி  அவர்களைக் கொண்டு செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூடுகைகள் நிகழ்ந்த நாட்கள்   வர்ஜீனியாவின் சிக்கலான  மனதிற்கும் இயல்பிற்கும் எவ்வளவு ஆசுவாசம் அளித்தன என்பதை  அவரது எழுத்துக்களில் காணலாம்.

‘நாங்கள் வாசிக்கப்போகிறோம், எழுதப் போகிறோம், ஒவியங்கள் தீட்டப் போகிறோம்,  காதலிக்கப் போகிறோம் , ஆண் பெண் என்ற எந்தப் பாகுபாடுமற்று கூடியிருக்கப் போகிறோம், இரவு உணவிற்குப் பின் தேநீரைத் தவிர்த்து காபியை பருகப் போகிறோம். எல்லாமே புதிதாக இருக்கப் போகிறது. எந்த  விதிகளுமற்று வாழப் போகிறோம்.  புனிதங்கள் என்ற கட்டமைப்புகள் அனைத்தையும் உடைக்கப்  போகிறோம். உண்மைகளை உறுதியாக முன்வைக்கப் போகிறோம். பாவங்களனைத்தையும் தழுவிக் கொள்ளப் போகிறோம்’

தந்தையின் இறப்பிற்கு பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க , கார்டியன் மற்றும் நாஷனல் ரிவ்யூ போன்ற தினசரிகளில்  இலக்கிய விமர்சனம் எழுதத் தொடங்குகிறார் . மேலும் மார்லி கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராக  பணியாற்றத் தொடங்குகிறார். அவரது ‘ மிஸ்ஸ் டாலோவே’ என்ற நாவலில் கல்வி சார்ந்தும், வார்க்கம் சார்ந்தும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும்  இந்த அனுபவங்களின் பயனாக கிடைக்கப்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“வீட்டில் ஏதோ ஒரு சண்டை . அந்த இரவில், அவர்களது வீட்டிற்கு வந்த போது அவளிடம் ஒரு பென்னி (இங்கிலாந்தின் பணம் ) கூட இல்லை. தனது ப்ரூச் ( அணிகலன்) ஒன்றை அடகு வைத்ததில் தான் இந்த பயணமே சாத்தியமானது. ஏதோ ஒரு வித உணர்ச்சிக் கொந்தளிப்பில் கிளம்பி வந்துவிட்டாள்.பல மணி நேரங்கள் இரவிற்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸாலிதான் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியவள். காதல், காமம், சமூகம் , அதன் ஏற்றத்தாழ்வுகள் எதைப் பற்றியும் எந்த புரிதலும் இல்லாதவளாக இருந்திருக்கிறாள். எப்படியொரு பாதுகாப்பான , பிரச்சனைகளற்ற வாழ்வை ,பர்ட்டனில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.என்றோ  ஒரு நாள், வயதான ஒருவர் புல் வெளியில் மயங்கி விழுந்து இறந்து போனதைப் பார்த்திருக்கிறாள். அவ்வளவுதான்.

அவளது படுக்கை அறையில் உட்கார்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்- வாழ்வைப் பற்றி, உலகை மாற்றியமைப்பதைப் பற்றி , சமூகத்தை சீர்திருத்துவதைப்பற்றி, 

பொதுவுடைமை சமூகத்தைப் பற்றி…”

மிஸஸ் டாலோவே.

இதற்கிடையில் வனெஸ்ஸா ‘ப்ரைடே க்ளப்’ என்று ஓவியங்களைப் பற்றி உரையாடுவதற்காக ஒரு வெள்ளிக்கிழமை கூடுகை ஒன்றைத் தொடங்கினார். ஹென்றி லாம்ப், க்வென் டார்வின், கதெரின் காக்ஸ் பொன்ற கலைஞர்கள் இதில் முக்கிய பங்கு வகித்தனர். கதெரின் காக்ஸிற்கு அப்போது 18 வயது அவர் வெர்ஜீனியாவின் நெருக்கமான தோழியும் பின்னர் காதலியாகவும் விளங்கினார். அவரது சகோதரர் டோபி டைஃபாய்டு காய்ச்சலில் இருந்து மீள முடியாமல்  இறந்து போகிறார். சகோதரிகள் இருவராலும் (வெர்ஜீனியா , வனெஸ்ஸா) அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 டோபியின் உற்ற தோழனான க்லைவ் பெல்லை வனெஸ்ஸா மணமுடித்தார். வெர்ஜீனியா மற்றும் அவரது சகோதரர் ஏட்ரியன் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்கள் வேறு வீட்டிற்கு இடம் பெயர்ந்த பிறகும் ப்ளூம்ஸ்பெரி கூட்டங்களை மட்டும்   தொடர்ந்து நடத்துகின்றனர்.  ஆனால் அதன் தன்மை வெகுவாக மாறியிருந்தது.  கவிதை வாசிப்பு , நாடகம், நாடக வாசிப்பு என்று வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருந்தது.அது மட்டுமல்லாமல்  பழைமைவாதத்தை எல்லா இடத்திலும் எல்லா வகையிலும் எதிர்ப்பது , சீர்திருத்தம், உலக அமைதி , என்பதையெல்லாம்  பேச்சு பிரசாரம் என்பதைத் தாண்டி செயல்பாடாகவும் முன்னெடுத்துச் செல்வது என்று முடிவெடுத்து அதை கடைப்பிடித்தும் வந்தனர். மீரல் என்பதே குழுவின் நோக்கமாக , அடிநாதமாக மாறியது.  அதன் உறுப்பினர்கள் பலர் தற்பால்  விழைபவர்களாகவும், அதை தைரியமாக  ஆதரிப்பவர்களாக இருந்தனர். ( அந்தக் காலகட்டத்தில் தற்பால் ஈர்பாளர்கள் தண்டனைக் குறிய குற்றவாளிகளாகப் பாவிக்கப்பட்டனர். சிறையிலும் மன நல விடுதிகளிலும்  அடைக்கப்படனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கே ஆபத்தான  முறைகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது ).  இந்த முற்போக்கு செயல்பாடுகள்  அனைத்திலும் வெர்ஜீனியாவின் முன்னெடுப்பும், பங்கும் கணிசமாக இருந்தது.

1910 யில்  இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான ஹெச் எம் எஸ் ட்ரெட்நாட் என்ற போர்கப்பலை பார்வையிட அபிசீனியாவிலிருந்து வந்த மன்னர் மற்றும் அவரது பரிவாரங்கள் போல  வேடமணிந்து, ஏட்ரியனின் தலைமையில்  ப்ளூம்ஸ்பெரி குழுவினர்  எட்டு பேர், அரசின் பாதுகாப்பு வட்டத்தை உடைத்து, உள்நுழைந்து   போர்க்கப்பலை  பார்வையிட்டனர். சிறந்த முறையில் உடையலங்காரம், ஒப்பனைகள் (முகத்தில் கருப்படித்துக் கொண்டு),  செய்துக் கொண்டு, தகுந்த நகைகளை வாடகைக்கு எடுத்து , அணிந்துச் சென்றனர். வெர்ஜீனியா அபிசீனியாவின் இளம் மன்னனாக மாறுவேடத்தில் பொருத்தமாக இருந்தார்.கடற்ப்படை தளபதிகள் இவர்கள் அனுப்பிய தந்தியை நம்பி இவர்களை ராஜமரியாதையுடன் வரவேற்று உபசரித்தனர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் பேசி, தளபதிகளுக்கு பொய்யான பரிசுகளும் பட்டங்களும்  தந்து மிகவும் நம்பத்துகுந்த வகையில் நடித்து இந்நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இது வெளியில் தெரிந்த போது அரசிற்கு பெருத்த அவமானத்தை ஏற்ப்படுத்தியது.  அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள்  கேலிப் பொருளாக  பத்திரிகைகளால் விமர்சிக்கப்பட்டன.  அந்தக்காலத்திய  சட்டம் எதையும் மீறவில்லை என்பதால்  அவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கமுடியவில்லை. எனினும் வெர்ஜீனியாவைத் தவிர மற்ற எழுவருக்கும் கசையடிகள் தண்டனையாக கொடுக்கப்பட்டன. 30 வருடங்களுக்குப் பின்னர் வெர்ஜீனியா ஒரு  மேடைப் பேச்சில், ‘ராயல் நேவி’ அபிசீனியாவின் தேசிய கீதத்திற்கு பதிலாக  ஸான்ஸிபாரின் தேசிய கீதத்தை இசைத்தார்கள் என்று அந்த அதிகாரிகளின் அறியாமையைப் பற்றி பகடியாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில்  இந்த ப்ளூம்ஸ்பெரி குழுவினர்  கூட்டுக் காமக் கழியாட்டங்களில்   ஈடுபடுபவர்களாக மாறினர். அந்நேரம் வெர்ஜீனியாவின் அக்கா வனெஸ்ஸா  குழுவை இத்திசைகளில் வழிநடுத்துபவராக இருந்தார். அந்த காலகட்டங்களில் வெர்ஜீனியா  , இந்தப் போக்கில் உடன்பாடற்றவராக, ஒதிங்கிக் கொள்ள தொடங்கினார். காதல், காமம் எல்லாமுமே எழுத்தின் மூலமே வெளிப்படுத்துபவராக இருந்தார்.அவரது சொந்த வாழ்வை, காதல்களை மிகவும் அந்தரங்கமாக வைத்துக் கொள்பவராகவே இருந்தார்.

லியனார்ட் உல்ஃப், வெர்ஜீனியா உல்ஃப்

லியனார்ட் உல்ஃப் டோபியின் கேம்ப்ரிட்ஜ் நண்பர்களுள் ஒருவர் .அவர் 1904 முதல் 1911 வரை சிலோனில் ஆங்கிலேய அரசின் குடிமைப்பணியில் இருந்தவர். அவர் விடுமுறை நாட்களில் லண்டன் திரும்புகையில் ப்ளூம்ஸ்பெரி கூடுகைகளில் கலந்து கொள்பவராக இருந்தார். அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் வெர்ஜீனியா வைப் பற்றி 

“வெள்ளை உடையும் பெரிய தொப்பியும் கையில் சிறிய குடையும் எடுத்து வருகையில் அவளது அழகால் நான் மூச்சு விடுவதையே மறந்துவிடுகிறேன்” 

என்று எழுதுயுள்ளார். அவரது  விருப்பத்தை முதலில் மறுத்த வெர்ஜீனியா பின்னர் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். ஆகஸ்ட் 10, 1912-ல் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.புதுமணத் தம்பதிகள் நீண்ட பயணங்கள் மேற் கொள்கின்றனர். தெற்கு ஃப்ரான்ஸ், ஸ்பேயின், இதாலி மற்றும் இங்கிலாந்திற்கு உள்ளேயே க்வான்டாக் மலைதொடர் என பயணம் முடித்த பின், அஷம் என்கிற இடத்திலும் லண்டனிலும் மாறி மாறி வசிக்கத் தொடங்குகின்றனர்.  ப்ளூம்ஸ்பெரி வட்டத்தின் மூலமாக வெர்ஜீனியாவிற்கு நிறைய தொடர்புகள் இருந்தன. அவர் இருபால் பால் ஈர்ப்பு கொண்டவராக இருந்துள்ளார் என்றாலும் காதலிகளே அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளனர். ஆணிண் ஆதிக்க குணமும  அதிகார தோரணையும  தனக்கு உவப்பானதாக இல்லை என்றும் பெண்களே தன்னுடைய படைப்பூக்கத்தை கிளர்ந்தெழச் செய்கிறார்கள் என்றும் தன்னுடைய முக்கியமான காதலியான வீட்டா ஸாக்வீலிடம் கூறியுள்ளார். பெண்மையும், நளினமும், வாழ்வே கலையாக மாற்றும் அவர்களின் சௌந்தர்யமுமே தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். 

வெர்ஜீனியாவும் அவரது கணவர் லியனார்டும் கட்டுப்பாடுகளற்ற உறவுமுறையில் இருந்துள்ளனர். இருவரும் வேறு இணைகளுடன் வேறு உறவுகளை  வெளிப்படையாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், நட்புடனும், காதலுடனும், ஒருவரையொருவர்  விட்டுக் கொடுக்காமலும் பழகி வந்துள்ளனர். 

திருமணத்திற்கு முன்பே தனது முதல் படைப்பான ‘தி வாயேஜ் அவுட்’ ஐ எழுதி முடித்திருந்தாலும், நிறைவு ஏற்படாமல் திருத்தங்கள் செய்து கொண்டே இருக்கிறார் வெர்ஜீனியா. 1912 டிசம்பர் மாதம் முதல் 1913 மார்ச் மாதம் வரை, பல மாற்றங்களைச் செய்து  இறுதியில் அந்த நாவலை முற்றிலுமாக வேறாக மாற்றிவிடுகிறார். இந்த திருத்தங்கள், நிறைவுறாத் தன்மை , தன் மேலே ஏற்படும் சந்தேகங்கள் எல்லாம் அவரை கடுமையான மன உழைச்சல்களுக்கு ஆளாக்குகிறது . 1913, செப்டெம்பர் மாதம் 9ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படுகிறார்.

அவரது அண்ணன் நடத்தும் பிரசுரத்திலேயே மிகவும்   தாமதமாக 1915 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி அவரது முதல் நாவல் வெளியிடப்படுகிறது . 

“அவளது முகம் வலுவற்றிருந்தது.  குறிப்பிட்டு சொல்வதற்கு ஏதுமற்ற முகம் என்று சொல்லமுடியாதபடிக்கு அவளது கண்கள் மட்டும் பெரிதாக  பிரகாசமாக ஒளர்ந்தன . மேலும் பேசுவதில் உள்ள தடுமாற்றம் … தப்பான மற்றும் பொருத்தமற்ற  வார்த்தைப் பிரயோகம்   அவளை தன் வயதிற்குரிய திறமையோ தகுதியோ இல்லாதவளாகக் காட்டியது . தனது  வயதொத்த  பெண்களே தன்னை அயர்வடைய செய்வார்கள் ,தன்னைவிட  சிறு வயதுள்ள பெண்கள் அதைவிட மோசமாகதான்  இருப்பார்கள் என மிஸ்ஸ் ஆம்ப்ரோஸ் எண்ணினார்”

தி வாயேஜ் அவுட்.

இதற்குள் ரிச்மண்ட் க்ரீன்  என்ற இடத்திற்கு  மறுபடி இடம்பெயர்கிறார்கள்.  இந்த வீட்டின் பெயர் ஹோகர்த் ஹௌஸ்  , அந்த பெயரிலேயே ஒரு பதிப்பகத்தை 1917யில் தொடங்குகிறார்கள். வெர்ஜீனியாவின் மனச்சிக்கல்களுக்கு இந்த இடப் பெயர்வு உகந்ததாக இருக்கும் என்று மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் ஒவ்வொரு மாற்றமும் அவரை மேலும் மேலும் மன உழைச்சளுக்கு ஆளாக்கியதாக தனது டயரியில் குறிப்பிடுகிறார். உலகப் போர் நடந்து கொண்டிருப்பதும் அவரை வெகுவாக பாதிக்கிறது . இருட்டறையில் யாருடனும் பேசாமல், படிக்காமல் எழுதாமல் உறங்குவதே இந்த மனச்சக்கலுக்கு உகந்ததாக இருக்கும் என்று அவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்துத் தனிமைப் படுத்துகின்றனர். அது அவரது நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது. குரல்கள், ஆண்குரல்கள் விடாது  கேட்டுக் கொண்டே இருக்கிறது . அந்தக் குரல்கள் அவரை எதற்கும் லாயிக்கற்றவர் என்று குற்றம் சாட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

 அந்த கடினமான  காலகட்டத்தை பெருமுயற்சி கொண்டு தானே கடக்கிறார். மருத்துவர்களின் பிரிந்துறைகளை எல்லாம் மீறி, தொடர்ந்து எழுதுக் கொண்டிருந்தார் வெர்ஜீனியா . எழுத்தே தன்னை இவ்வளவு நாட்கள் உயிருடன் இருக்க உதவியதாகவும் திண்ணமாக நம்பினார்.

போரின் காரணமாக இடைப்பட்ட காலத்தில்  சுணங்கியிருந்த  ப்ளூம்ஸ்பெரி குழு  1920 இல் ‘மெமுவார் க்ளப்’ என்ற புதுப் பெயருடன் மறுபடி  கூடுகிறார்கள்.  ப்ரௌஸ்டின் ‘ஆ லா ரிசர்ஷ்’  போன்ற படைப்புகள் பரவலாக பேசப்பட்ட அந்நாட்களில் , அதன் அடியொட்டி ‘தன்னெழுத்து’ என்ற பாணியில்  (memoires) படைப்பாளர்களின் சொந்த அனுபவங்களை , வேறு எவருடைய பாதிப்பும் இல்லாமல், வேறு எந்த பாணியையும் பின்பற்றாமல் எழுதும் யுக்தியை முன்வைக்கிறார்கள். 

போருக்கு முன்பு போல அல்லாமல், குழுவின் செயல்பாடு காமக் கழியாட்டங்கள், கலகச் செயல்பாடுகள், பகடிகள் என்று திசைமாறாமல் இலக்கியம் கலை என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக ஒரு எழுதாத் தீர்மானமும் எடுக்கப்படுகிறது. ப்ளூம்ஸ்பெரீஸ் என்றும் தங்களை பெயரிட்டுக்கொள்கிறார்கள். இதில் முக்கியமாக ( கேம்ப்ரிட்ஜ் கல்லூரியின் சட்டதிட்டங்களை ஏற்று ). இலக்கிய விமர்சனங்களை விருப்பு வெறுப்பற்று வெளிப்படையாக காத்திரமாக முன்வைப்பது என்பதே அவர்களின் தலையாய செயல்பாடாக இருந்துள்ளது . சொந்தங்கள்( சகோதர சகோதரிகள், கணவன் மனைவி , காதலன் காதலிகள்) , நண்பர்கள் எல்லோரும் ஒருவர் படைப்பை மற்றவர் காத்திரமாக விமர்சிப்பதும்

 எதிரிகளின் படைப்பைக் கூட தகுதியுடையதாக இருந்தால் ஏற்புடன் பாராட்டுவதும் என்று  இன்று வரை தொடரும் மிக ஆரோக்கியமானதொரு மரபை உருவாக்கியதில் பெரும் பங்கு இந்த ப்ளூம்ஸ்பெரிஸிற்கு உண்டு . 125 படைப்புகள் கொண்ட  ‘ மோமென்ட்ஸ் ஆஃப் பியிங்’  என்ற தொகுப்பொன்று  இந்த குழுவால் வெளியிடப்பட்டன.அதில் வெர்ஜீனியாவின் ‘22 ஹைட் பார்க் கேட்’ ( 1921 யில் எழுதயது ),

‘ஓல்ட் ப்ளூம்ஸ்பெரி’ ( 1922), ‘ ஆம் ஐ அ ஸ்நாப்’ (1936) என்ற கட்டுரைகள் மூன்றும் இடம்பெற்றன. 

‘ஆம் ஐ அ ஸ்நாப்’ என்ற கட்டுரையில் தன்னுடைய மேட்டிமை குணத்தை  சுய விமர்சனம் செயதிருப்பார். அதில் பிற இலக்கிய படைப்புகளை எவ்வளவு கடுமையாக விமர்சிப்பாரோ அதே போலவே தன்னையும் தன் மேட்டிமை குணத்தையும் பற்றி குறிப்பிடுகிறார். இலக்கியத்தில் தனக்கு கீழானவர்கள் என்று அவர் எண்ணும் யாரொருவரையும் எப்படி மதிக்காமல், சந்திக்காமல் , நேரில் பார்த்தால் கூட சரியாக பேசாமல் தவிர்த்துவிடுவார் என்பதில் தொடங்கி, என்னதான் அறிவுத் தளத்தில் தனது செயல்பாடு இருந்தாலும் சராசரியாக நல்ல உடை உடுத்துவதைப் பற்றி தான்  மிகக் கவனமாக இருப்பதைப் பற்றியும்  தன் அழகின் மூலம் ஆண்களையும், பெண்களையும் கவர்வதில் கர்வம் கொள்வது வரை மிகவும் வெளிப்படையாக நுணுக்கமாக உளவியல் பூர்வமாக விவரித்துள்ளார். மேலும் அவரது மனதில் தோன்றும் போட்டி பொறாமை வன்மங்களைப் பற்றி உள்ளது உள்ளபடியே வெளிப்படையாக எழுதியிருப்பார். மனித மனத்தின் கசடுகளை களையக் கூடிய திராணியில்லாதவர்களாக நாம் இருக்கிறோம் என்பதையும் குறைந்தபட்சம் அதை ஏற்றுக்கொண்டு உண்மையை உரைப்பவர்களாகவேனும் இருக்க வேண்டிய அவசியத்தை பற்றிக் கூறியிருப்பார்

 ‘ஓல்ட் ப்ளூம்ஸ்பெரி’ இல் தன்னுடைய முதல் கட்டுரையின் நிறைகுறைகள் ஆராய்கிறார். பின் தனது சகோதரன்( அம்மாவின் முதல் கணவனின் மகன்) ஜார்ஜ் எப்படி தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுதினான் என்றும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.  தன் குழுவின் செயல்பாடுகளையும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஆனால் அதே நேரம்  கட்டுப்பாடுகளும் கட்டுப்பெட்டித்தனங்களும் நிரம்பிய அந்த சமூகத்தில் எல்லாவற்றையும் உடைத்து வெளியேற இதைப் போன்றதெரு செயல்பாடு எவ்வளவு அவசியமாகிறது என்பதையும்  தவறாது கூறுகிறார். 

இக்கட்டுரைகள் அனைத்தும் இந்த கூடுகைகளில் வெர்ஜீனியாவால் வாசிக்கப்பட்டவைகள். 

கடக்கமுடியாத சிக்கலானவைகளைக்கூட அவரால் துணிவுடன், அவரது குடும்பமும் நண்பர்களும் எதிரிலேயே அமர்ந்திருக்கும் கூடுகைகளில் சொல்ல முடிந்திருக்கிறதென்பது மிகவும் அரிதான மனத்திண்மையை காட்டுகிறது.

 அவரது ஆக்கங்களில் பெரும்பான்மையானவை சொந்தப் பதிப்பகமான  ‘ஹோகர்த்ஸ் ப்ரஸ்’ இல் பிரசுரமாயின.

‘மிஸஸ் டாலோவே தனது வாழ்வை ஒரு இறந்த குழந்தையைப் போல தூக்கிச் செல்கிறாள். அதை தனது கல்லறையின் அடியிலேயே சமர்பிக்கிறார். 

‘இது தான் என் வாழ்வு, இதை இப்பிடித்தான் நான் வாழ்ந்தேன்’ என்று சொல்வது போல’

மிஸஸ் டாலோவே.

தனது எழுத்தில்  புதிய யுக்திகளை எந்த மனத் தடையுமற்று பிரயோகிக்கிறார். நனவோடை (stream of consciousness) யுக்தியின் வழி கதைசொலல் முறையை  கைக்கொண்டவர்களில் முதன்மையானவர். அவரது சம காலத்தவர்களான மார்சல் ப்ரௌஸ்ட், டோரோத்தி ரிசர்ட்சன் மற்றும் ஜேம்ஸ் ஜாய்ஸ்  போன்ற எழுத்தாளர்களும் இந்த யுக்தியை அவரவர் பாணியில் பிரயோகித்துள்ளனர்.

கதாபாத்திரங்களின் பேச்சிற்கும் செயலிற்கும் மேலாக அவர்களது மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள், உணர்வுகள் ஒன்றைத் தொட்டு ஒன்றென குறைந்த நேரத்தில்  மனம் மேற்கொள்ளும் பாய்ச்சல்கள் என இவை எல்லாவற்றையும் எந்த வித தணிக்கையுமற்று துல்லியமாக  எழுத்தில் கொண்டுவந்ததில் அவரது எழுத்து. தனது  எழுத்து நடையின் மூலம்  சாதரணமான நாளொன்றின் வழமையை கூட அடர்த்தியான மனதின் பலவண்ணக் கண்ணாடியின் வழி  மாறும் கலைடஸ்கோப்பாக பார்க்கக் கொடுக்கிறார். நம் எல்லாப் புலன்களும் நிறைவடையும் வண்ணம் காண, கேட்க வென பலவிதமான கூறுகளை அவரது புனைவுலகம் விரித்துக் காண்பிக்கிறது. அவரது உணர்வின் தீவிரமும், தனித்துவமான பாணியும் பெண்களின் அன்றாடங்களை கவித்துவமாக சுட்டும் விதமும் அவரை நவீனத்துவ காலத்தின் முக்கியமான பெண்ணிய எழுத்தாளராக முன் நிறுத்திகின்றன. அவருடைய புதினங்களை த்தாண்டி  நாட்குறிப்புகளிலும் கடிதங்களிலும் காணக்கிடைப்பது   வேறோர் தன்மையிலான எழுத்தும் ,மனமும் ஆகும்.  அது  கனவுத் தன்மையினதாக இருந்தாலும்  யதார்த்தத்தை விட்டும் அதிகம் விலகவில்லை. எல்லாவற்றையும், எல்லா மனிதர்களையும் பேரன்புடன் அணைத்துக் கொண்டு, கூடவே இட்டுச் செல்லும் நல்மனதின் உன்னத வெளிப்பாடாகவும் இருக்கிறது.

வெர்ஜீனியா உல்ஃப்

‘ஞாயிற்றுக் கிழமை 9 செப்டெம்பர்

கிட்டதட்ட அசைவற்ற நாள். நீலம் தொலைத்த வானம்.  இந்த வெக்கை இல்லாவிட்டால் கூதிர் கால வானம் என்றே கொள்ளலாம். பேரமைதி. மதியம் நெஸ்ஸாவுடனும்  (அக்கா வனெஸ்ஸா) 5 குழந்தைகளுடனும் வெளியில், மரத்தடியில் அமர்ந்திருந்தோம். கடலின் மேல் செவ்வானம். புல்வெளிகளில் நடந்து வீடு திரும்பினோம். மரங்களின் அடர்த்தி குறைந்து கூதிர் காலத்தைப் போல காட்சியளித்தன. எங்கும் வண்ணங்களே இல்லை…..

காலை ரம்மியமாக விடிந்தது . நிறைய புகைப்படங்கள் எடுக்க ஏதுவாக இருந்தது. விமானங்கள் வீட்டின் மேல் பறக்கின்றன. (போரில் ரெய்டு வரப் போகிறது ). மலையின் மேல் ஒரு கைக்குட்டையை கண்டெடுத்தேன் —  கைக்குட்டையில்  காளான்களை  முடிந்துவைத்திருந்தது ….’

1922 இல் வெர்ஜீனியா விட்டா ஸாக்வீல் வெஸ்ட் என்ற எழுத்தாளரை சந்திக்கிறார். அவரது இறப்பு வரை இருவரும் தோழிகளாகவும் காதலிகளாகவும் இருந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் அவருடைய படைப்பூக்கம் மலர்ந்து மணம் பரப்பியது . 1927 இல் ‘டு த லைட்ஹௌஸ், 1928 இல் ‘ஒர்லாண்டோ’, 1931 இல் ‘வேவ்ஸ்’ என்ற புதினங்களும், 1924 இல் ‘மிஸ்டர் பெனட் அண்ட் மிஸ்டர் ப்ரௌன்’ 1932 இல் ‘ அ லெட்டர் டு அ யங் போய்ட்’ என்ற கட்டுரைகளையும் எழுதினார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின் அவரது மனச்சிக்கல்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. காதில் கேட்கும் குரல்கள் தினமும் அவரை இழிவு செய்தன.  மேலும் அவரது லண்டன் வீடு  குண்டு வீச்சில் சிதைந்து போகிறது. போர் விமான சப்தங்களும் சைரன்களும்,  குண்டு வீச்சுகளும், இறப்புப் பற்றிய செய்திகளும் அவரை நம்மதியிழக்கச் செய்தன. கடுமையான வலிகளுடன் தூங்க முடியாமல் இரவு முழுதும் விழித்திருந்ததாக கூறுகிறார்.  ஒரு நாள் விடாது இவையனைத்தையும் நாட்குறிப்பில்  பதிந்து  வைக்கிறார். 

‘நாம் ஒன்றை  விவரித்து எழுதவில்லை எனில் உண்மையில்  ஒன்றுமே நடக்கவில்லை என்று பொருள். கடிதங்கள் எழுதுங்கள். நாட்குறிப்பைத் தவறாது எழுதுங்கள். பதிவு செய்யாமல் ஒரு நாளைக் கூடக் கடந்து செல்லாதீர்கள். நாள் தோறும் சுவாரஸ்மான ஏதோவொன்று உறுதியாக  நடக்கும்’

1935 இல் ‘ஃப்ரஷ் வாட்டர்’ என்று  ஒரு  நாடகமும் எழுதியுள்ளார். அவரது அம்மாவின் சித்தியும், புகைப்பட கலைஞருமான  ஜூலியா மார்க்ரேட் காமரூனின் வாழ்க்கையை பற்றியது இந்நாடகம். இதை அவரது அக்காவே சொந்தமாக தயாரித்து மேடையேற்றியுள்ளார். அதை வெர்ஜீனியாவே இயக்குகிறார். ப்ளூம்ஸ் பெரியினரே நடிகர்களாகவும் இதுல் பங்குகொள்கின்றனர். அவரே ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கிறார். வெளித்தோற்றத்திற்கு ஒரு பகடியைப் போல எழுதப்பட்ட நாடகத்தின் அடிநாதமாக  தலைமுறை மாற்றம் , கலைஞர்களுக்கான வெளி மற்றும் விடுதலை இருக்கின்றது. 

இந்த புள்ளியின்  தொடர்ச்சியாக ‘டு த லைட்ஹௌஸ்’ மற்றும் ‘அ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன்’ உருவாகியிருக்கிறது என்று கூறலாம். ஆல்ஃப்ரெட் டெனிஸன் ஒரு பாத்திரமாக இடம் பெற்றுள்ளார்.

‘தி இயார்ஸ்’ என்ற புதினத்தை முடித்தவுடன் அவரது உடல்நிலையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது . ‘பிட்வீன் த ஆக்ட்ஸ்’(அவர் இறந்த பின்பு வெளிவந்த) என்ற நாவலின் இறுதி வரைவை சரிபார்த்த பின்னான காலங்களில் மூன்றாம் முறையாக கடுமையான உளச்சிக்கலின் அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. மேலும் அவர் எழுதிய  ராஜர் ப்ரையின் வாழ்க்கை வரலாற்றிற்கு மோசமான மதிப்புரைகள் வந்திருந்தன. அதை வெர்ஜீனியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை ஒரு சிறந்த ‘பயோக்ராஃபராக’ கருதினார். காழ்ப்புணர்வினால் இத்தகைய மதிப்பீடுகள் வருகின்றன என்று நம்பினார். 

எல்லாமுமாக சேர்ந்து இறப்புப் பற்றிய சிந்தனை அவரை விடாது பீடித்து வந்தது . வேகமாக ஓடும் நீரீல்  நன்றாக எதிர் நீச்சல் செய்யக் கூடியவர் என்பதால் அவரது உடையின் பாக்கெட்டில் பெரிய கல்லொன்றை வைத்துக் கொண்டு வீட்டிற்கு பக்கத்தில் ஓடும் ஓஸ் நதியில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார். மார்ச் 28, 1941 -இல் நீரில் மூழ்கிய வெர்ஜீனியாவின் உடலை ஏப்ரல் 18-ல் தான் கண்டெடுத்தனர். சஸ்ஸெக்ஸில் அவர்களது ‘மங்ஸ் ஹௌஸ்’ என்ற வீட்டின் தோட்டத்தில் எல்ம் மரத்தடியில் அவரது கல்லறை உள்ளது.

லியனார்ட் – வெர்ஜீனியா உல்ஃப்

அவரது கணவன் லியனார்டிற்கு எழுதிய தற்கொலை கடிதம்

பேரன்பே, சர்வ நிச்சயமாக  நான் மறுபடி பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன். திரும்பவும் அந்தக் கொடுமையான நாட்களை நம்மால் கடக்க இயலாதென்று நம்புகிறேன்.மேலும் இம்முறை இந்நோயிலிருந்து நான் மீளப் போவதில்லை. குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் இந்நேரத்தில் எது சிறந்தத்தோ அதைச் செய்கிறேன்.  பெரு மகிழ்வு நிறை தருணங்கள் பல தந்துள்ளாய். எல்லா வகையிலும் எனக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறாய். நம்மைப் போல மகிழ்ச்சியாக வேறு எவரும்  இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே— இந்த மோசமான நோய் தாக்கும் வரை. இதற்கு மேல் என்னால் அதனுடன் சமர் செய்ய முடியாது. நான் உன் வாழ்வையும் சேர்த்து நாசமாக்குகிறேன். நான் இல்லையென்றால் உன்னால் இடையூரின்றி  எழுத முடியும். நீ அவ்வாறு எழுதுவாய் என்றும் எனக்குத் தெரியும். நீ தான் பார்க்கிறாயே, இதைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியவில்லை. என்னால் வாசிக்க முடியவில்லை. என் வாழ்வின் வசந்தம் அனைத்தும் உன் பொருட்டே என்பதைத்  சொல்ல விரும்புகிறேன். அசாத்திய பொறுமையுடன்  என்னை கவனித்துக் கொண்டாய்- நம்பமுடியாத அளவு நல்லவனாகவும் இருந்திருக்கிறாய் என்பதை  கண்டிப்பாக உன்னிடம் சொல்லியாக வேண்டும்— இது மற்றவர்களுக்கெல்லாம்  தெரிந்ததே.  என்னை  ஒருவர் காப்பற்ற முடியுமென்றால் அது நீ மட்டுமே. நீ மிகவும் நல்லவன் என்ற  நம்பிக்கையைத் தவிர மற்ற எல்லாமும் என்னிடமிருந்து போய்விட்டது. இனிமேலும் தெடர்ந்து உன் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்க முடியாது. நம்மைப் போல மகிழ்ச்சியாக  வேறெவரும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

வி.

1998 இல் எழுதப்பட்ட ‘தி அர்ஸ்’ (The Hours) என்ற மைக்கேல் கன்னிங்ஹாமின் புலிட்சர் பரிசு பெற்ற நாவல். அது வெவ்வேறு காலகட்டத்தின் மூன்று பெண்களின் ஒரு நாளைப் பற்றிய புனைவும் நிஜமும் கலந்த கதை. வெர்ஜீனியாவையே ஒரு கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார். அவர் தற்கொலை செய்து கொண்ட அவரது கடைசி நாளை விவரித்திருப்பார். இன்னொரு பெண்ணாக அவரது மிஸஸ் டாலோவே நாவலின் மய்யக் கதாபாத்திரமான க்லாரிலஸா இடம்பெற்றிருப்பார் . மூன்றுப் பெண்களின் வாழ்வும் உணர்வும்‌ அவர்கள்‌ தங்கள் சுயங்களை மீட்டெடுத்ததும் , வாழ்வின் அர்த்தத்தை கண்டடைந்ததையும் மிக உருக்கமாக எடுத்துரைக்கும் அக்கதை . இது 2002 யில் ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டு 9 ஆஸ்கர் பரிந்துரைகளும் பெற்றது . வர்ஜீனிய‌ உல்ஃபாக நடித்த நிக்கோல் கிட்மேனுக்கு சிறந்த நடிகைக்கான‌ ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது .

அவரது படைப்புகள் 50 மொழிகளுக்கும் மேலாக  மொழிபெயர்புகளைக் கண்டுள்ளன. மார்க்ரேட் அட்வுட், டோனி மாரிஸன், கேப்ரியல் கார்சியா மார்கெஸ் உட்பட பல எழுத்தாளர்கள் அவரது எழுத்து தங்களை பாதித்ததாக கூறுகிறார்கள்.   டஸ்டாவெயஸ்கியே  தன்னை  மிகவும் கவர்ந்த எழுத்தாளரென குறிப்பிடுகிறார். அவரது அரசியலில் தனக்கு உடன்பாடு இல்லையென்றாலும்  அவரது எழுதும் பாணி தனக்கு உகந்ததாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மற்ற ரஷ்ய எழுத்தாளர்களான ஆன்டன் செக்காவ் மற்றும் டால்ட்டாய் மட்டுமல்லாது அமெரிக்க எழுத்தாளரான ஹென்றி டெவிட் தொரோவையும் வெர்ஜீனியா சிலாகிக்கிறார். குறிப்பாக 

‘விழிப்புடன் இருப்பதே உயிர்ப்புடன் இருப்பது’ 

என்று தோரோ சென்னதை அடிகோடிட்டு வைத்துள்ளார். 

அதி தீவிரமான  ஒழுங்கை தன் ஆக்கங்களின் மூலம் கொண்டுவர முனைந்தவர். தன் எழுத்தில் வேறெந்த சாயலும் வந்துவிடக்கூடாது என்பதில் கறாராக இருந்தவர்.

அனுராதா ஆனந்த்

‘அவசரங்கொள்ளத் தேவையில்லை, பரந்து ஒளிர்ந்திடத் தேவையில்லை, நம்மைத்தவிர வேறு யாராகவும் இருக்கத் தேவையில்லை’

வெர்ஜீனியா தனித்துவமிக்க சிந்தனையாளராக , தேர்ந்த கட்டுரையாளராக,  நவீன இலக்கியத்தின் போக்கை தீர்மானித்த இணையற்ற  எழுத்தாளராக, பெண்ணிய கோட்பாடுகளை முன்வைத்தவராக, பெண்ணிய செயல்பாட்டாளர்களின் வரிசையில் ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாக விளங்கியவர். அவரது வாழ்வு மற்றும் ஆக்கங்கள் அனைத்திற்கும்  ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தவறாது ஒரு  தன்மை  எங்கும் இழையோடுகிறது.  கடைசியாக எழுதிய ‘தி வேவ்ஸ்’ என்ற நாவலில் அவருக்கே உரித்தான  வார்த்தைகளில் அந்த சாரத்தை இவ்வாறு  கூறுகிறார்.

‘நான் நிலையாக வேரூன்றியவள் இருந்தாலும் நீராக வழிந்தோடுவேன்’. 

*

அனுராதா ஆனந்த் – தமிழ்விக்கி

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *