கமலாதேவி சட்டோபாத்யாயா – சித்ரா பாலசுப்ரமணியன்

கமலாதேவி சட்டோபாத்யாயா

காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே
அடங்கிவிடாது.
மங்கைநெஞ்சம் பொங்கும் போது
விலங்குகள் ஏது?

இந்தப் பாடலை நினைவுறும் போதெல்லாம் பலரின் நினைவுகளும் மேலெழும்பி வரும். அவர்களில் சிலர் நான் பழகி அறிந்தவர்கள். பலர் வரலாற்றின் மூலமும் வாசிப்பின் மூலமும் அறிமுகமானவர்கள். முன்னவர்களை விட பின்னவர்கள் இன்னும் அழுத்தமான தடத்தை மனதில் ஏற்படுத்திவிடுகின்றனர். நேரில் காண்பவர்களைக் காட்டிலும் எழுத்தின் மூலம் கண்டவர்களின் விகசம் பெரிது. எழுத்தின் வலிமை அது.

கமலாவின் பெயர் முதலில் எனக்கு எப்போது அறிமுகமானது என நினைவுகளில் துழாவிப் பார்க்கிறேன். காந்தியை வாசிக்கும் முன் அவர் பெயர் எனக்கு நிச்சயம் அறிமுகமில்லை. இத்தனைக்கும் கலைகளின் மீது ஆர்வமுடைய நான் முன்னரே அவர் குறித்து வாசித்திருந்திருக்க வேண்டும். எனினும், எந்தச் சாலையில் எவரைச் சந்திப்போம் என எப்படித் தெரியும். காந்தி குறித்து தொடர்ந்து வாசித்து வருகையில் கொரானா காலகட்டத்தில் தண்டி யாத்திரை குறித்த குறிப்புகளை பேஸ்புக்கில் எழுதும் போது தான் கமலாவின் பெயர் அழுத்தமாகப் பதிந்தது. தண்டி யாத்திரையில் பெண்களுக்கு இடமில்லை. அது குறித்து ஏராளமான பெண்கள் கேள்வி எழுப்பினாலும் வலுவான, சண்டைக்காரிகளான குரல்களாக சிலருடையது ஒலிக்கிறது. பிரேமாபென் காண்டக், கமலாதேவி சட்டோபாத்யாவின் பெயர்கள் அதில் முக்கியமானவை. பிரேமாபென், சாபர்மதி ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். கமலாதேவி, உப்பு சத்தியாகிரகத்தின் நடுவழியிலேயே ஜம்புசார், அமோட் கிராமங்களுக்கிடையே நடைபயணத்திலிருந்த காந்தியை நேரில் சந்தித்து ஏன் இந்த மகத்தான போராட்டத்தில் பெண்களுக்கு இடமில்லை என வினவினார். காந்தி, ஏப்ரல் ஆறாம் தேதி தண்டியில் உப்பெடுத்த பிறகு பெண்களுக்கும் அதில் இடமுண்டு எனக்கூறவே, மகிழ்வோடு பம்பாய் திரும்பிய கமலா, அப்போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். உப்பு சத்தியாகிரகத்தில் பம்பாய்க்கும் தனிச்சிறப்பு கிட்டும் படியாக தீவிரமான முன்னெடுப்புகளைக் கமலா செய்தார். தன்னைக் கைது செய்து நிறுத்திய போது நீதிபதியையே பார்த்து, விடுதலைக்கான இந்த உப்பை நீங்களும் விலைகொடுத்து வாங்குவீர்களா எனக் கேட்டு திகைக்கவைத்தவர் கமலா.

கமலாதேவி நேருவுடன்

1931 இல் ’சேவா தள்’ அமைப்பை இந்திய தேசிய காங்கிரஸ் தன்னுடையதாகச் சுவீகரித்துக்கொண்டபோது அதனை நிர்வகிக்கும் பொறுப்பு கமலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கமலா சிறையிலிருந்து வெளிவந்திருந்தார். சேவா தள் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிதொடங்கியது. ஏழு வயது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள பெண்கள் உறுப்பினராகலாம். முதலுதவி தொடங்கி பல்வேறு வாழ்வியல் பயிற்சிகளும் காங்கிரஸ் கூட்டங்களில் பலதரப்பட்ட தன்னார்வப் பணிகள் மேற்கொள்ளவும் பயிற்சி வழங்கப்படும். இதன் உறுப்பினர் சேர்க்கைக்காக கமலா, மீண்டும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டார். பம்பாயில் போரிவிலி பகுதியில் சேவா தள்ளின் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. தினமும் விதவிமான பயிற்சிகளும் பேரணிகளுமாக அது கவனத்தைக் கவரும் வகையில் செயல்பட்டது. இது குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போது, இவ்வமைப்பு நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டது. பம்பாயில் குழப்பம் விளைவித்ததாக vagarant சட்டவிதியின் கீழ் கமலா கைதுசெய்யப்பட்டார். பம்பாயில் எவரது முகவரியையும் தன்னுடையதாகத் தர மறுத்ததால் இந்தச் சட்டப்பிரிவின் கீழே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பம்பாய் ஆர்தர் ரோடு சிறை இம்முறை. அந்தச் சிறையில் சுவாரஸ்யமாக அரசியல் கைதியாக இருந்த காந்தியின் பிரதம சீடையும் மகளுமான மீராபென்னைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சிறையில் கழித்த நாட்களின் அனுபவங்களை மீராபென் தன்னுடைய சுயசரிதையான The spirit’s pilgrimage என்ற நூலில் விவரித்துள்ளார். சிறையில் சரியான மருத்துவ வசதி இல்லாத்தைக் கண்டு, போராடி சிறு மருந்தகம் ஒன்றைக் கமலா சிறையில் நடத்தினார். கிடைக்கும் வாய்ப்பு எதையும் நழுவ விடாத கமலாவின் அபாரமான குணம் இது. சிறுமி பருவத்திலிருந்து அவரது வாழ்நாளின் நிறைவு வரை இந்தத் தன்மை அவரிடம் இருந்தது.

சிறையிலிருந்து வெளிவந்த கமலாவை, மகாத்மா காந்தி அழைத்திருந்தார். அரசியல் வாழ்வு, சிறைவாசம் ,பொதுவாழ்க்கை என அனைத்தையும் தாண்டி , ஒரு மகனின் தாயாகவும் கமலா செயல்பட வேண்டியதையும் கமலாவின் ஒரே மகனான ராமின் கல்வி குறித்து அக்கறை கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

கமலாதேவி குடும்பம்

கமலா சில காலம் தம்முடைய சொந்த ஊரிலேயே தங்கியிருக்கலாம் என்ற முடிவோடு மங்களூர் நோக்கிப் பயணப்பட்டார். வார்தாவிலிருந்து மங்களூர் செல்லும் வழியில் அவரது அரசியல் தோழமையான காலேஷ்வர் ராவைச் சந்தித்தார். அவர் இரண்டொரு நாட்கள் விஜயவாடாவில் உள்ள தமது இல்லத்தில் விருந்தினராகத் தங்கிச் செல்லவேண்டும் என அழைக்கவே, தமது பழைய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என்பதால் கமலா அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவர்கள் காரில் சென்று, காலேஷ்வர் ராவின் கிராமத்தில் இறங்கியபோது, மக்கள் கூட்டமாகக் கூடி கமலாவை வாழ்த்த வந்திருந்தனர். கமலா எப்போதும் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தவர். எனவே, இந்தக் கூட்டம் காவல்துறைக்கு அவரைக் கைது செய்ய காரணமாக அமைந்தது. வழக்கு என்பதாக எதையும் ஜோடிக்க முடியாவிட்டாலும் பொது அமைதிக்குக் குந்தகம் என வழக்கிடப்பட்டது. இனி இவ்வாறு நடக்காது என நற்சாட்சிப் பத்திரம் எழுதித் தந்தால் விடுவிக்கப்படலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டபோது கமலா, அதைக் கடுமையாக மறுத்துவிட்டார். இப்போது சிறைவாசம் வேலூரில். கடுமையான வெயில் கொண்ட வேலூரின் தனிமைச் சிறை கமலாவின் உடல்நிலையைப் பாதித்தது. வாசிப்பதிலும் எழுதுவதிலும் நேரத்தைக் கடத்த முயன்றார். வாசிப்பு தணிக்கைக்கு உட்பட்டது, சிறை அனுமதிக்கும் புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி. எனினும் கமலா, இதுவரை நீண்ட தம் வாழ்வின் அனுபவங்களையும் தான் சந்தித்தவர்கள் குறித்தும் எழுதினார். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவரது இந்த எழுத்துப் பிரதிகள் பதிப்பாகவில்லை. அவரது நண்பர்களின் கவனக் குறைவால் அவை தொலைந்தன.

கமலாவின் எழுத்து குறித்தும் சில வார்த்தைகள் சொல்லவேண்டும். கமலா தொடர்ந்து தம்மை எழுத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத்தின் இனிமையை உணர்ந்தவர். பல நேரங்களில் அதுவே தன் மனச்சுமைகளிலிருந்து தம்மை மீட்டதாகச் சொன்னவர். கமலா, தொடர்ந்து எழுதியவண்ணமே இருந்திருக்கிறார். தன்னோடு எப்போதும் தட்டச்சு இயந்திரம் ஒன்றையும் வைத்திருந்த கமலா, பயண நேரங்களில் தட்டச்சு செய்வதை வழக்கமாக்க் கொண்டிருந்ததோடு சுருக்கெழுத்தும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

The Awakening of Indian women (1939), Towards a national theatre (1945), Socialism and society (1950), Indian Handicrafts (1963), Carpets and floor coverings of India (1969), The glory of Indian handicrafts (1976), Indian carpets and Floor coverings (1974), Handicrafts of india (1975), Tribalism in India (1978), The glory of Indian handicrafts(1978), Indian women ‘s battle for freedom (1983), Uncle sam’s Empire, In war torn china, Japan, Towards a national theatre, Indian embroideries ஆகியவை கமலா எழுதிய புத்தகங்கள். அவரது தன் வரலாறான ”Inner recesses Outer spaces: memoirs” புத்தகம் குறிப்பிடத்தகுந்தது. அது முழுவதும் தன்னைப் பற்றிக் கூறும் புத்தகமாக அன்றி தான் சந்தித்த முக்கியமானவர்களின் நினைவுக்குறிப்புகளாகவே கமலா அதைப் படைத்திருக்கிறார். தன் முதல் திருமணம், குழந்தை விதவையானது, பின் ஹரீந்திரநாத்தைச் சந்தித்து காதல்வயப்பட்டது, மணமுடித்தது, மகன் பிறப்பு என எதனையும் அவர் விரிவாகப் பேசவிரும்பவில்லை. தன் அக வாழ்வை விடுத்து புறவாழ்வையே அவர் அதிகம் பகிர்ந்துகொண்டுள்ளார். அதுவும் கமலாவின் தனிப்பட்ட சிறப்பு என்றே கருதவேண்டும். தன்னைக் குமைய வைத்த எவையும் தன்னைச் சிறையிலடைக்காதபடி அவர் பார்த்துக்கொண்டார். சிறுமி வயதில் இருந்த கற்பனை செய்யும் திறனைத் தன் கடைசிகாலம் வரை தக்கவைத்திருந்ததும் இருள், பேய்கள் பற்றிய பயம் ஏதும் இல்லாத சிறுமி கமலா, சமூகத்தின் எந்த இருளையும் பேயினும் பயம்தரத்தக்க மனிதர்களையும் கண்டு மோதிமிதித்து முன்னேறியவற்றை மட்டுமே எழுதியுள்ளார்.

ரீனா நந்தா, ஜஸ்லீன் தமீஜா, சகுந்தலா நரசிம்மன், கமலா ரத்னம், ஜமீலா பிரிஷ்ஜ்பூஷன் ஆகியோரும் கமலாவைப் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவர்கள் கமலாவின் வாழ்வைப் பற்றி விரிவாகவே பதிவு செய்துள்ளனர். அண்மையில் வெளிவந்த நிகோ ஸ்லேட் தொகுத்துள்ள Kamaladevi CHATTOPADHYAYA The Art of Freedom புத்தகமும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

நாடு விடுதலை அடைந்தபின் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சினை அகதிகளைக் குடியமர்த்தலும் அவர்களுக்கான மறுவாழ்வும். அதில் கமலாதேவி, உதாரணகரமான முக்கியப்பங்கு ஆற்றினார். டெல்லிக்கு அருகில் இருந்த ஃபரீதாபாத் , ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு இடம் அளித்தது. கமலா, ICU என்ற இந்தியன் கோவாபரேடிவ் யூனியன் என்ற அமைப்பைத் தொடங்கினார். பல வருடங்களுக்கு முந்தைய அதனது ஸகாண்டிநேவிய நாடுகளின் பயணத்தின் போதே அங்கு நடத்தப்பட்டுவந்த கூட்டுறவு அமைப்பு முறை கமலாவைப் பெரிதும் கவர்ந்திருந்தது. அகதிகளின் மறுவாழ்வில் கமலா தீவிர அக்கறை கொண்டிருந்தார். காந்தி கொல்லப்படுவதற்கு முன் சில நாட்கள், அகதிகள் மறுவாழ்விற்கான தனது செயல்திட்டம் குறித்து அவரோடு கலந்துரையாடியிருந்தார். தன்னாலான உதவிகளைச் செய்ய வாக்களித்திருந்த நிலையில் காந்தி கொல்லப்பட்டது கமலாவுக்குப் பெரும் பின்னடைவைத் தந்தது. எனினும், எடுத்துக் கொண்ட செயலை எப்பாடுபட்டேனும் முடிப்பது கமலாவின் குணம். ஏறக்குறைய அன்றைய சுதந்திர இந்தியாவின் அரசோடு ஒவ்வொரு படிநிலையிலும் போராடி அவர் ஃபரீதாபாத் என்ற இடத்தில் ஒரு முன்னுதாரணமான அகதிகள் மறுவாழ்வு குடியிருப்பை நிர்மாணித்துக் காட்டினார்.1951 அக்டோபர் Newyork Times பத்திரிக்கை, “Refugees in India erect model city” எனத் தலைப்புச் செய்தியாக்கி பாராட்டியது. Times பத்திரிக்கை கமலாதேவியின் பணியைப் பாராட்டி எழுதியது.

கமலாதேவி

1952 ஆம் ஆண்டு cottage industries இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது கமலாதேவி , All India Handicrafts Board இன் தலைவராக நியமிக்கப்பட்டார். நேரு அரசில், மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்விஅமைச்சராக இருந்தபோது நிர்மாணிக்கப்பட்ட மூன்று அகாதமிகளில், சங்கீத நாடக அகாதமியின் துணைத் தலைவரானார். கூடவே, 1952 இல் cottage industries emporium அமைப்பின் தலைவராகவும் கமலாதேவி நியமிக்கப்பட்டார். அதன் இலச்சினையான பாங்குரா சுடுமண் குதிரை (மேற்கு வங்காளத்தின் கைவினைப் பொருளான இந்த பாங்குரா Bankura சுடுமண் சிற்பங்களின் மறுமலர்ச்சியிலும் கமலாதேவிக்கு முக்கிய பங்கு உண்டு) கமலாதேவியால் தேர்ந்தெடுக்கப்பட்டதே. இதைப் போன்ற இந்திய கைவினைப் பொருட்களைத் தேடித்தேடி கமலா பயணித்த கதைகள் மிக சுவாரஸ்யமானவை. ஒருவகையில் மிகச் சிறந்த காந்தியராக்க் கமலா இந்த வகையில் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார் எனலாம். கைவினைக் கலைகள் குறித்த அழகியல் பார்வை கமலாவுக்குச் சிறுமி பருவத்திலிருந்தே உண்டு. எனினும் காந்தி, மானுடக் கைகளால் செய்யப்படும் பொருட்களின் மகத்துவம் என்பதை அடிக்கடிச் சொல்லக் கேட்டவரான கமலா, அதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். அவரது ஈடுபாடு, கோடிக்கணக்கணக்கான கைவினைக் கலைஞர்களின் வாழ்வை மலர வைத்தது. மண்ணோடு மறைய இருந்த ஏராளமான கைவினைக் கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டியது. கைவினைப் பொருட்கள் என்பவை செல்வந்தர்கள் வீடுகளை மட்டுமே அலங்கரிக்கமுடியும் என்ற நிலையை மாற்றி, அழகியல் துய்ப்பு கொண்ட எவருக்கும் எட்டும் பொருள்களாக்க் கைவினைப்பொருட்களை மாற்றியது கமலாவின் சாதனை.

தம்முடைய India’s craft Tradition என்ற சிறு புத்தகத்தில் கமலா, ஏராளமான கைவினைப் பொருட்களைப் பட்டியலிடுகிறார். இந்தக் கலைஞர்களின் மிகச்சிறந்த கைவினைத்திறனை ஊக்கிவிக்கும் பொருட்டு 1965 இல் All India Handicrafts Board தேசிய விருதுகளை ஏற்படுத்தியது. இந்தப் புத்தகத்தில் 1965 முதல் 1979 வரை விருது பெற்ற கலைஞர்களின் பட்டியலையும் அவர்கள் தம் எத்திறமைக்காக விருது பெற்றனர் என்ற விவரங்களையும் கமலா தொகுத்தளித்திருக்கிறார். கலைஞர்களின் வாழ்வு கையேந்தும் வாழ்வன்று; மாறாக பெருமித்ததோடும் சுயமரியாதையோடும் வாழ வேண்டிய ஒன்று என்பதை கமலா முக்கியக் குறிக்கோளாக்க் கொண்டிருந்தார். அதனாலேயே, இந்தியா முழுக்க கிட்டத்தட்ட மூலைமுடுக்களுக்கெல்லாம் பயணம் செய்து கைவினைக் கலைகளையும் கலைஞர்களையும் கண்டறியும் முயற்சியில் தம்மை இடையறாது ஈடுபடுத்திக் கொண்டார்.

இன்று ஒரு கைவினை விற்பனையகத்துள் சென்று கலம்காரி புடைவை, பட்டோலா, அஜ்ரக், கொண்டப்பள்ளி பொம்மைகள், பாங்குரா சுடுமண் பொம்மைகள், காஷ்மீர சால்வைகள், கட்ச் பகுதியின் பூவேலைப்பாடுகள், காஷ்மீர சால்வைகள், தரைவிரிப்புகள் என வகைவகையானவற்றைக் காணுகையில் கமலாவின் ஆத்மா அதில் மலர்ந்து நிற்பதைக் காண முடியும். காளஹஸ்தியின் கலம்காரி இன்று புகழ்பெற்றிருப்பதற்கு கமலாவே முக்கியமான காரணம். ஏறக்குறைய அழிய இருந்த அக்கலையைத் தன் குடும்பச் சொத்தாக மட்டும் பாவித்த ஒரு கைவினைக் கலைஞரிடம் பலமுறை நடையாய் நடந்து பிற இளைஞர்களுக்கும் பயிற்சி தரச்சொல்லி அப்பயிற்சிக்கு ஊக்கத்தொகை நல்கி, இன்று உலக அளவில் அதற்கு லாபகரமான வியாபாரச்சந்தையை உருவாக்கியவர் அவர்.

நாடு விடுதலை அடைந்து, பிற விஷயங்களுக்கே முன்னுரிமை என்ற குரல் எழுந்தபோது, கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட இக்கைவினைக் கலைஞர்களை அந்த உரையாடலில் முக்கிய இடத்திற்கு நகர்த்தியது நிச்சயம் கமலாவின் சாதனை. அந்தப் பொருட்களுக்கு உள்ளூரிலேயே மிகச் சிறப்பான லாபகராமான வியாபாரத் தளத்தை உண்டாக்கமுடியும் என்பதை சாதித்துக் காட்டினார். ஒவ்வொரு மாநில அரசோடும் இணைந்து, பயிற்சிக்கூடங்களையும், கைவினைப் பொருள் உற்பத்திக்கான எளிய , அத்தியாவிசிய உபகரணங்களையும் உண்டாக்கியதோடு, அழகியல் மிகுந்த விற்பனையகங்களான எம்போரியங்களையும் உண்டாக்கினார். கூடவே, ஏராளமான கண்காட்சிகளையும் ஒருங்கிணைத்தார். Central cottage industries emporium மூலமாக கீன்,எல்.சி.ஜெயின்,திருமதி.வீர்சிங் மற்றும் பிறரின் உதவியோடு நடத்தப்பட்ட கைவினைப் பொருட்களின் பல்வேறு அம்சங்கள் குறித்த மிக விரிவான தகவல் திரட்டு மிக முக்கியமாக்க் குறிப்பிடப்பட வேண்டியது. இணையத்தில் கிடைக்கும் இந்தத் தொகுப்பை வாசித்துப் பார்த்தால் இந்தக் குழுவினர் 56,000 மைல்கள் பயணம் செய்து இதனைத் தொகுத்தனர் என்ற தகவல் உண்மை என்பது விளங்கும். கமலாவின் நீண்ட விடுதலைப் போராட்ட பயணமும் இந்த வகையில் அவருக்குக் கை கொடுத்தது. நாடு விடுதலையடைந்ததும் தமக்கு வழங்கப்பட்ட பதவி எதையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதிகார பீடங்களை விடக் களத்தில் நின்று பணியாற்றும் காந்தியராகவே தம் வாழ்நாளின் இறுதி வரை கமலா இருந்தார். ஆனால், தம்மைச் சுற்றி கைவினைக் கலைகள் சார்ந்த அழகிய சாம்ராஜியத்தின் அரசியாகவே அவர் திகழ்ந்ததைப் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். விருதுகளும் பல அவர் பெற்றிருக்கிறார் என்றாலும் மகசேசே விருது அளித்து கௌரவப்படுத்தபட்டபோது, அவர் மிக மகிழ்ந்தார். அதற்காகப் பெற்ற பரிசுத்தொகை முழுவதையும் Srinivas Malliaya Trust for Theatre Crafts என்ற அமைப்புக்கு அளித்துவிட்டார்.

கமலாவின் சிறுமி பருவத்து ஈடுபாடுகளில் இந்த நாடகக் கலைக்கு முக்கிய பங்கு உண்டு. அப்பருவத்திலேயே எதிர்ப்புகளை மீறி மேடை நாடகங்களில் நடிக்க ஈடுபாடு காட்டியவர். அந்த ஈடுபாடு தான் பதினாறு வயதில், மதராஸ் வந்து ராணி மேரிக் கல்லூரியில் கல்வி பயில வந்த கமலாவை, அன்றைய நாட்களில் சாந்தோமில் வசித்த முக்கியமான புகழ்பெற்ற குடும்பமாக விளங்கிய சட்டோபாத்யாயா குடும்பத்தின் இளைஞனான ஹரீந்தர்நாத் சட்டோபாத்யாயாவை நோக்கி ஈர்த்தது. ஹரீந்திரநாத் கவி எழுதும் திறனாலும் சங்கீதப் பயிற்சியினாலும் கவர்ந்திழுக்கும் தோற்றப் பொலிவாலும் அன்று மிக அறியப்பட்டவராக இருந்தார். இந்தத் தன்மைகள் அனைத்துமே பதினாறு வயது கமலாவை ஈர்த்திருக்கலாம். அவர்களின் நட்பு திருமணத்தில் முடிந்தது. எனினும் சில வருடங்களே அந்தத் திருமணம் நீடித்ததற்கு ஹரீனின், சமநிலையற்ற மனவார்ப்பும் பிறன்மனைநோக்குதலும் காரணமாக அமைந்தன. வாழ்க்கை மீண்டும் இப்படிப் புரட்டி போட்டபோது, ஒரு மகனைப் பெற்ற இளம் தாயாகவும் கமலா உடனே தைரியமாகத் தெளிவாக முடிவெடுத்தார். விவாகரத்து பெற்றார். அந்த நாட்களில் இது பெரும் புரட்சியாகவும் அவதூறாகவும் பேசப்பட்டிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனினும் அவரது நாத்தனாரும் புகழும் அதிகாரமும் கொண்டவராகவும் வலம் வந்த சரோஜினி நாயுடுவோடு கமலாவுக்கு உரசலற்ற நட்பான உறவே இருந்தது என்பதற்கு அவர்கள் பகிர்ந்துகொண்ட மேடைகளே சான்று. கமலாவின் பிள்ளைப் பருவம் அவரைச் செதுக்கியதற்கான முக்கிய பின்புலமாக அமைந்தது.

கமலாதேவி

அன்றைய வட கர்நாடகத்தில், மங்களூரில் ஏப்ரல் 3, 1903இல் சாரஸ்வத பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் கமலாதேவி. தந்தை அனந்தையா தாரேஸ்வர் செல்வமிகுந்த குடும்பத்தில் பிறந்தவர் இல்லையெனினும் செல்வாக்கானவராக இருந்தார். தாய் கிரிஜாபாய் நல்ல வளம் மிகுந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். பிறந்த நான்கு குழந்தைகளில் இடையில் பிறந்த இரு ஆண் குழந்தைகளும் இறந்துவிட மூத்த பெண்ணான சுகுணாவும் இளையவர் கமலாவுமே தங்கினர். மிக வண்ணமயமான சிறுமிப் பருவம் கமலாவுக்கு வாய்த்தது. வசதி வாய்ப்புகள் நிறைந்த வாழ்வு. தாயாரும் தாய்வழிப் பாட்டியும் புத்தக ஆர்வலர்கள். வீடு நிறைய புத்தகங்கள் இருந்ததைக் கமலா அதனது நூலில் விவரித்துள்ளார். கூடவே, அந்நாளைய தேச நிலையைப் பேசும் பத்திரிக்கைகளும் வீட்டில் வாசிக்கப்பட்டன. சங்கீதம் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டது. பள்ளிப் படிப்பில் பெரிய நாட்டம் கமலாவுக்கு இல்லை. இயற்கையில் தோய்ந்து கற்பனையில் லயிக்கும் பண்பே மிகுதியாகவிருந்தது. அவரது தந்தை அதனை ஊக்குவிக்கவும் செய்தார். ஆனால் பாதியில் பறிக்கப்பட்டது போல கமலாவின் தந்தையின் இறப்பு வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டது. ஆண் வாரிசுகள் இல்லாததால் இருந்த சொத்துகள், குடும்பத்தின் தூரத்துச் சொந்த ஆண்களுக்குச் சென்று விட்டது. இருந்த கொஞ்சநஞ்ச உடைமைகளோடும் குழந்தைகளோடும் நிராதரவு சூழந்தது.

அவரது தாய்க்கும் பெரிய விருப்பம் இல்லையெனினும் சுற்றத்தாரின் வற்புறுத்தலால் நயம்பள்ளி சுப்பாராவின் மகன் கிருஷ்ணா ராவ் என்ற சிறுவனோடு கமலாவுக்குத் திருமணம் நடந்தது. சுப்பாராவ் சீர்திருத்தக் கருத்துகள் கொண்டவர். தன் மகனை மணந்த கமலா ஒரே வருடத்தில் விதவையானதும், அவர் சுற்றத்தினரின் எதிர்ப்புகளை மீறி அக்குழந்தைக்குக் கல்வி அவசியம் எனக் கூறி விட்டார். கமலாவின் தமக்கையின் உடல்நிலை சீர்கெட, மருத்துவத்திற்காகத் தாயுடன் சென்னை வந்த கமலா, 1919 இல் ஹரீனைக் காதலித்து மணந்து கொண்டார். இசை, நாடகம், கவிதை இவை தான் அவர்களை இணைத்தது. கூடவே கமலாவின் அழகும். ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயாய தனது ”life and me” என்ற சுயசரிதையில் அவ்வாறே குறிப்பிடுகிறார். திருமணமான சில மாதங்களில் ஹரீன் இங்கிலாந்து சென்றுவிட, கமலாவும் தன் நகைகளை விற்றுப் பணம் திரட்டிக் கொண்டு இங்கிலாந்தில் சமூகவியல் படிக்கச் சென்றார். சில ஆண்டுகள் வாழ்வில் வசந்தம். 1922 இல் அவர்கள் இந்தியா திரும்பினர்.1923 இல் ராம் என்ற ஆண்குழந்தை. Travelling Theatre group ஒன்றைத் தொடங்கி இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில் கொழும்பிலும் கூட அரங்கு நிறைந்த காட்சிகளை நடத்தினர்.

கமலாதேவி

கமலாவுக்கு அரசியல் ஆர்வம் இயல்பாகவே இருந்தது. அந்நாட்களிலேயே மகளிர் குழுக்களை நடத்திய, தன் தாயிடமிருந்து அது வந்திருக்கலாம். All India women conference இன் மார்க்ரெட் கஸின்ஸ், அன்னி பெசண்ட் இருவரிடமும் கமலாவுக்குத் தனி ஈடுபாடு இருந்தது. மார்கரெட் கமலாவின் வளர்ச்சியில் தனி ஈடுபாடு காட்டினார்.

AIWCஇன் செயல்பாடுகளில் கமலா தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மார்கரெட்டின் ஆலோசனையினால் 1926 ஆம் ஆண்டு தேர்தலிலும் (முதல் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டது) கமலா நின்றார். 1920 களிலேயே மதராஸ் பிராவின்ஸ் பெண்களுக்கும் ஓட்டுரிமை வழங்கிவிட்டது. சில நூறு ஓட்டுகளில் கமலா தோற்றார் எனினும் அது நல்லனுபவமாக அமைந்தது. 1927 இல் AIWC இன் செயலாளராகத் தேர்ந்தெடுகப்பட்ட கமலா, கல்வி சீர்திருத்தங்கள் குறித்த அவ்வமைப்பின் மாநாட்டிற்காக இந்தியா முழுக்க பயணம் செய்து தகவல் திரட்டினார்.

கமலாதேவி சட்டோபாத்யாயாயா தன் வாழ்நாள் முழுக்க இடையறாது பயணித்தவர். இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் அவர் அரசியல், பெண்கள் முன்னேற்றம், கைவினைக் கலைகள்,சமூக முன்னேற்ம் எனப் பல காரணங்களுக்காக பயணித்துள்ளார்.போலவே, அவரது வெளிநாட்டுப் பயணப் பட்டியலும் மிக நீண்டது. இங்கிலாந்து, இலங்கை, பெர்லின், கோபன்ஹாம், பெஷாவர், ஸ்வீடன், அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா, ஜருசலம், பெத்லகேம், அம்மான், வாட்டிகன், துருக்கி, ஆப்பிரிக்கா,ஐயர்லாந்து ,ஈரான்,நைஜீரியா,ஆப்கானிஸ்தான், பிலிபைன்ஸ், ஹங்கேரி என நீண்டது அப்பட்டியல்.

1949 இல் அவர் இரு வேறு வேறு பயணங்கள் மேற்கொண்டார். அவை தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவை. முதலாவது,Gilgit road வழியாகப் பயணித்து Gurais valley இல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தியா ராணுவ வீரர்களைச் சந்தித்து வந்தது. தீரமிக்கப் பயணம் அது உண்மையிலேயே. பெண்கள் எவரும் பயணம் செய்து வந்ததில்லை எனக் கூறிய இராணுவ வீரர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் தங்கள் மேல் அக்கறை கொண்டு கடும்பயணம் மேற்கொண்டு வந்ததைக் கண்டு வியப்பும் பெருமிதமும் அடைந்த பயணம் அது. பின் டெல்லி திரும்பிய கமலா, அவ்வீர்ர்களுக்காக 20,000 ரூபாய் நன்கொடை திரட்டினார். அத்தொகையை ஒரு நிகழ்வில் காசோலையாக நேருவிடம் அளித்தார். புகைப்படம் எடுத்து முடித்தபின் , காசோலையை மீண்டும் வாங்கிக் கொண்டு இந்தத் தொகை , இராணுவப் பொதுநிதிக்குச் சென்றால், இந்த வீர்ர்களுக்கு அதன் பலன் கிடைக்காது எனக்கூறி நேரடியாக அவர்கள் பலன் பெறும் வண்ணம் செய்துவிட்டார். அதே 1949 இல், குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுக்காகத் தொடங்கப்பட்ட Family planning association of India என்ற அமைப்புக்காக. கமலாதேவியின் மனம் கவர்ந்த முக்கிய பேசுபொருளான பெண்களின் உரிமைகள் என்பதற்காக அவர் இதுபோன்ற பல அமைப்புகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1969, 71 ஆம் ஆண்டுகளிலும் மருத்துவ குழுக்களோடு இப்பணிக்காக நாடு முழுதும் பயணித்தார்.

கமலா வெளிப்படையாகத் தன் கருத்துகளை முன்வைக்க எப்போதும் தயங்காதவர். காந்தி, நேரு, வல்லப்பாய் படேல் என எத்தகைய பெருந்தலைவர்களோடும் உண்டான கருத்து வேறுபாடுகளை தைரியமாக வெளிப்படுத்தியவர். அந்த குணம் பலநேரங்களில் அவருக்கு எதிரானதாகவே ஆன போதும் அவர் சமரசம் செய்துகொள்ள மறுத்தவர். நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளின் வரிசையில் கமலாதேவி சட்டோபாத்யாவின் இடம் மகத்தானது. அழகியலும் ஆழ்ந்த மானுட நேயமும் அச்சமின்மையும் சலியாத உழைப்பும் விடாமுயற்சியும் சுயமரியாதையும் இணைந்த அபூர்வமான கலவை அவர்.செயலூக்கம் மிகுந்த தன் வாழ்வின் கோப்பையை பலவித வண்ணங்களால் நிரப்பிக் கொண்டவர் அவர். இந்திய நாட்டின் மீது அவருக்கிருந்த பற்று அலாதியானது. எத்தியொப்பியா சென்ற போது, அங்கு போர்படையில் இருந்து உயரிழந்த இந்திய வீர்ர்களின் சமாதிக்குச் சென்று மலர்களைத் தூவிவிட்டு வந்தார், அது அவருடைய பயண நிரலில் இல்லாதபோதும்.

கமலாவின் மொழி கவித்துவமானது. கலைகளை நேசித்தது போலவே மொழியின் மீதும் அவருக்குத் தனிக்காதல் இருந்தது. வாசிப்பையும் எழுத்தையும் அவர் தன் வாழ்நாளின் நிறைவு வரை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

சித்ரா பாலசுப்ரமணியன்

அவரது தன்வரலாற்று நினைவுக் குறிப்புகள் புத்தகத்திலிருந்து ஒரு பத்தியோடு இதை நிறைவு செய்யலாம்.

“whatever I have achieved has been through my own effort and sheer hard work. I have had no godfathers nor fairy foster mothers to push me up or give me a helping hand. I am proud I began my political career as an ordinary volunteer,a very humble field worker. At heart I stayed so.”

“Now in the fast drawing winter twilight when one is no more poised for a spring and one’s spirit is not on the wing, there is one more the flutter and excitement of new things happening to swing one up in a fresh churning whirlpool. As I lean back and close my eyes to relax and let my memories run back the long aisles of time,to know what are the things I wanted most and discover,the same yearning remains most poignant in me still. It is the little things of life – an unhurried life of leisure to dream,to suck in the slow notes of music,to savour of the gifts of nature,the play of light and shadow so reminiscent of life with its joy and sorrows.For I am very human and it is very human to want the trifles that we usually brush or throw away.” (Inner recesses outer spaces, pg 402)

எண்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த கமலாதேவி சட்டோபாத்யாயா அக்டோபர் 29, 1988 அன்று காலமானார். அவருடைய ஆளுமை, வாழ்வியலோடு ஒப்பிடக் கூடிய மற்றுமொரு இந்திய ஆளுமை கவி இரவீந்திரநாத் தாகூர் என்கிறார் வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா. ’உண்மை’; ‘Beauty is the soul of freedom’ என்பதை இருவரும் நம்பினர்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *