சம்பங்கியும் வயோலாவும் இன்னபிறவும் – இல சுபத்ரா

(அனுராதா கிருஷ்ணசாமியின் ‘கடவுளுக்கென ஒரு மூலை’ மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு நூலை முன்வைத்து)

சிறுகதைத்தொகுப்பு

*

அனுராதா கிருஷ்ணசாமி அவர்கள் மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கும் ’கடவுளுக்கென ஒரு மூலை’ தொகுப்பில் மொத்தம் 14 கதைகள் உள்ளன. அனைத்துமே போன நூற்றாண்டு இந்தியப் பெண்கள் எழுதிய கதைகள் – 1970ற்கு முன் எழுதப்பட்டவை. உருது, ஹிந்தி, பஞ்சாபி, ஒடியா, டோக்ரி, கன்னடம், குஜராத்தி எனப் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட இக்கதைகளை பெரும்பாலும் ஹிந்தியிலிருந்தும் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் அனுராதா.

இந்தக் கதைகளை எழுதிய அனைத்துப் பெண்களுமே சாகித்ய அகாடமி, ஞானபீடம், பத்மஸ்ரீ தொடங்கி அந்தந்த மாநில அரசின் விருதுகள் வரை பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்கள். விருதுகள் மட்டுமின்றி புதிய வகைமை எழுத்துகளின் முன்னோடிகளாகவும், தங்கள் கதைப்பொருளால் சர்ச்சைக்குள்ளானவர்களாகவும் இருக்கிறார்கள். உள்ளடக்கத்தில் எழுத்தாளர்களின் பெயர்களைப் பார்க்கையிலேயே பரவசமாகிவிடுகிறது நமக்கு: புகழ்பெற்ற ’அக்னி நதி’ நூலை எழுதிய குர்ரத்துலைன் ஹைதர், ’மித்ராவந்தி’ நூலை எழுதிய கிருஷ்ணா சோப்தி, தன் கதைக் களன்களுக்காக நீதிமன்றம் வரை செல்லவேண்டியிருந்த இஸ்மத் சுக்தாய், நயி கஹானி/New Story Literary movement எனப்படும் 1960களில் இந்தி இலக்கியத்தில் எழுச்சிபெற்ற புதிய கதை சொல்லல் முறையின் முன்னோடிகளில் ஒருவராய் இருந்த மன்னு பண்டாரி எனப் பலரும் இதில் அடக்கம்.

இத்தொகுப்பில் இருக்கும் மன்னு பண்டாரியின் ‘இதுவே நிஜம்’ கதை நயி கஹானி இயக்கத்தின் அத்தனை பண்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆண் பெண் உறவுகளின் புதிய பரிமாணங்கள், வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கப் பெண்களின் பிரச்சனைகள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்பவர்களின் சிக்கல்கள், கதாபாத்திரங்களின் ஆழ்மன விசாரங்கள் உள்ளிட்ட புதிய கருதுகோள்களைக் கையில் எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இவை Non lenear, Stream of Consciousness உத்திகளைக் கையாண்டன. இதுவே நிஜம் சிறுகதையில் கதாநாயகி இரண்டு ஆண்களின்மீது தனக்கு ஏற்படும் அன்பினை எப்படிக் கையாள்வது எனத் தவிக்கிறாள், இவனுடன் இருக்கும்போது இந்த அன்பே நிஜம் என அவளுக்குத் தோன்றுகிறது, மற்றவனுடன் இருக்கும்போது அது மட்டும்தான் நிஜம் எனத் தோன்றுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் Dude திரைப்படம் 2020களின் gen Z மனநிலையைத் தைரியமாகப் பேசுகிறது என வாசிக்கும்போது, ’அப்ப 1960ல இதுவே நிஜம் கதைல மன்னு பண்டாரி எழுதினதை என்னனு சொல்வீங்க நீங்க’ எனக் கேட்கத் தோன்றுகிறது. உண்மையிலேயே நயி கஹானி தான். போலவே தமிழில் கவிதா சொர்ணவல்லி எழுதியுள்ள ‘கதவிற்கு வெளியே ஒரு காதல்’ கதையும் நினைவிற்கு வந்தது.

கதை சொல்லும் உத்தியிலும் மன்னு பண்டாரி, நாயகியின் இந்த ஊசலாட்டத்தை வெளிப்படுத்துகிறார். கான்பூர் கல்கத்தா என இரண்டு ஊர்களில் வசிக்கும் நாயகன்களிடையே நாயகியின் மனம் ஊசலாடுவதைச் சுட்டும்விதமாக, கதையின் நிலம் மாறும் பத்திகளுக்கு மேலே கான்பூர் என்றோ கல்கத்தா என்றோ குறிப்பிட்டுக் கொண்டே வருகிறார். அது கதையின் வடிவத்தில் கதையின் கருவினை ஒரு பூமாலை போல் தொடுத்துவிடுகிறது.  இக்கதையினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் புகழ்பெற்ற ரஜினிகந்தா திரைப்படம். வாசம் மிக்க சம்பங்கி மலர்தான் ரஜினிகந்தா. நாயகன் நாயகியைச் சந்திக்க வரும் ஒவ்வொரு முறையும் அப்பூங்கொத்தினைக் கொண்டுவருவான். நாயகி வித்யாவின் கபடமற்ற அழகும் இளமையும் ஒப்பிட இயலாதவை. (you tubeலும் amazon primeலும் காணக் கிடைக்கிறது படம்.)

ரஜினிகந்தா திரைப்படம்

இத்தொகுப்பில், வழக்கமான கதைசொல்லல் முறையிலிருந்து மாறுபட்ட மற்றொரு கதையாக ’நீ அப்படியேதான் இருக்கப் போகிறாய்’ கதையினைக் கூறலாம். கதையில் நிகழ்வுகள் ஏதும் விவரிக்கப் படுவதில்லை. நேரடிக் கதைசொல்லம் முறையும் இல்லை. ஒரே ஒரு குரல் மட்டும் ஒலிக்கிறது – குற்றம் சாட்டும் கணவனது குரல். “நீ ஏன் எதுவுமே படிப்பதில்லை, வீட்டைத் தூய்மையாக வைப்பதில்லை, இந்தப் பருப்புக் குழம்பைத்தவிர வேறெதையும் சமைப்பதில்லை, பிள்ளைகள் பிள்ளைகள் என்று பார்த்துக்கொண்டு என்னைக் கவனிப்பதில்லை, கொஞ்சம் உன்னை அலங்கரித்துக்கொண்டால்தான் என்ன” என முதலில் குற்றம் சாட்டும் அது, பின்பு, “எப்போதும் இப்படிப் புத்தகம் புத்தகம் என்றே திரிந்தால் வீட்டை யார் கவனிப்பது, எப்போதும் ரொட்டி சூப் என்றே சமைக்காமல் என்றாவது ஒருநாள் பருப்புக்குழம்பு வைத்தால் என்ன, இப்போது முடியைக் குட்டையாக வெட்டி நவநாகரீகம் ஆக வேண்டிய அவசியம் என்ன” எனக் குற்றம் சாட்டுகிறது. இந்த எதற்குமே பெண்குரல் எந்தப் பதிலும் பேசுவதில்லை. சம்பவங்கள் ஏதுமின்றி ஒரே ஒரு குரலின் வாயிலாகக் கதையினைக் கொண்டு சென்றிருக்கும் முறை, அதன்மூலம் பெண்களின் பிரச்சனைகளை இக்கதை எடுத்து வைக்கும் விதம் என எல்லாமே மிகக் காத்திரமாய் வெளிப்பட்டிருக்கிறது. முன்னாடி போனா கடிக்கும் பின்னாடி போனா உதைக்கும் என்னும் விதமாக, ஒரு பெண் என்ன செய்தாலும் குற்றச்சாட்டுகள் தலையில் இடைவிடாத குட்டுகளாய் விழுந்துகொண்டே இருக்கின்றன.

இத்தொகுப்பில், பெண்களுக்கான தனிப்பட்ட பிரச்சனைகளைப் பேசும் கதைகளாக ’பெண்கள்’, ‘கதவு’ ‘போர்வை’ கதைகளையும் குறிப்பிடலாம். ஆண்குழந்தையைப் பெற்றுத்தரும் வரை மீண்டும் மீண்டும் குழந்தைப் பேறினை நோக்கிக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களின் நிலையை ‘பெண்கள்’ கதையும், வீட்டில் கழிப்பறை இல்லாமல் பொதுவெளிக்கு அதற்காகச் செல்ல வேண்டியிருக்கும் பதின்வயதுச் சிறுமியின் மனநிலையை ‘கதவு’ கதையும், திருமணம் ஆகியும் பாலியல் தேவை பூர்த்தியாகாமல் தவிப்பிற்குள்ளாகும் பெண்ணையும் அவளால் பாதிக்கப்படும் ஒரு சிறுமியின் நிலையையும் ‘போர்வை’ கதையும் பேசுகின்றன.

’கதவு’ கதையின் கழிவறை பிரச்சனை நம் தமிழகத்திலுமே கூட இருந்துள்ளது. அ. வெண்ணிலாவின் ’வெளிய’ கதை இதைத்தான் பேசுகிறது. திகிலூட்டும் பெரிய பெரிய பன்றிகள் சூழ்ந்திருக்கும் வெளியில் மலம் கழிக்கச் செல்லும் பதின்வயதுச் சிறுமியின் அச்சம்தான் இக்கதையின் மையம். எவ்விதப் பதற்றமுமின்றி ஒரு மூடிய கதவிற்குப் பின்புறம் மலம் கழிப்பதற்கான சிறுமிகளின் ஏக்கத்தினையும் தவிப்பினையும் இந்த இரண்டு கதைகளின் தலைப்புகளிலேயே நம்மால் புரிந்துகொண்டுவிட முடியும்.

‘பெண்கள்’ கதையில் வரும் சிறுமிக்கு மிகக் குழப்பமாக இருக்கிறது. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகத்தான் தன் அம்மா இத்தனை முறை கருவுற்று இத்தனை சிரமத்திற்குள்ளாகிறாள், ஆனால் வீட்டில் பெண்களுக்குத் திலகமிட்டு ’கன்னியாகுமாரி’ பூஜை செய்து ஏகமாகக் கொண்டாடுகிறார்கள். பெண்ணே வேண்டாமென்றால் எதற்காக இந்தக் கொண்டாட்டம்! எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு! நன்றாகக் கவனமாகப் படித்தால் நம்மால் என்னவாக வேண்டுமானாலும் ஆகமுடியும் என்கிற தந்தையிடம் அவள் கேட்கிறாள், “அப்படியானால் நான் ஓர் ஆணாகிவிட முடியுமா?” என. ஆணாக இருப்பதே ஒரு சிறப்புரிமை/privilege என்பதாகத்தான் அவள் பார்க்கும் விஷயங்கள் அவளுக்குத் தோன்றச் செய்கின்றன.

உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் தன் கலகத் தன்மைக்காகவே அறியப்பட்டவர். சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் குடும்ப அமைப்பிற்குள்ளாகவும் பாலியல் வரையறைகளுக்குள்ளாகவும் நிகழும் ஏமாற்றங்கள் ஏமாற்றுகள் சுரண்டல்கள் சார்ந்து தைரியமாக எழுதியவர். எடுத்துக்காட்டாக, பாலுறவில் பெண்கள் பெறுபவர்களாக அன்றி இயங்குபவர்களாகச் சித்தரித்தவர். இத்தொகுப்பில் இருக்கும் புகழ்பெற்ற ‘போர்வை (lihaaf)’ கதைக்காக அவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.

Queer theory எனப்படும் விமர்சனப் பார்வையில் ‘போர்வை’ கதையினைப் பொருத்திப் பார்க்கும் ஒரு கட்டுரை – Ismat Chughtai “The Quilt” and Queer Theory. (Gay, Lesbian உள்ளிட்ட பலவித பாலுறவுக் கோணங்களில் படைப்புகளை அணுகும் முறையே Queer theory)

குடும்ப அமைப்பு சார்ந்து வேறு சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. தாதி, லாட்டி, அடிமரம், உச்சம் கதைகள் அப்படியானவை. கிருஷ்ணா ஸோப்தியின் அடிமரம் கதையினை அவரது மித்ராவந்தி கதையின் மினியேச்சர் என்றும்கூடக் கூறலாம். மாமியார் மருமகள்களின் அதிகார மோதல்களுக்கிடையே ஆண்கள் குரலற்றவர்களாகிவிடுவதும் இக்கதையில் வெளிப்படுகிறது. சீர்ஷேந்து முகோபாத்தியாயின் அத்தைக்கு மரணமில்லை நூலினையும் இது நினைவூட்டியது. உச்சம், லாட்டி கதைகள் நமது எம்.ஜி.ஆர், சிவாஜி காலக் காதல் திரைப்படங்களை நினைவூட்டின.

இத்தொகுப்பில் எனக்கு மிக மிகப் பிடித்த கதைகளாக ’சருகின் ஓசை’,’மோதிரம்’கதைகளைக் குறிப்பிடுவேன். ஒடிய மொழிக் கதையான ‘மோதிரம்’ ஓர் ஏழைத் தாயின் கையறு நிலையையும் துயரத்தையும் மிகக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது. முதலில் தன் கணவனை இழக்கிற அவள் மிகச் சிரமப்பட்டு மகனை வளர்க்கிறாள், பின் மகனையும் இழந்து அவனது மனைவியையும் குழந்தையையும் சேர்த்துக் கவனிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறாள். இத்தருணத்தில் அவளுக்கு கணவன் மீதும் மகன் மீதும் ஏற்படும் கோவம் ஆற்றாமை பிரிவேக்கம் போன்றவற்றை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருப்பார் கதாசிரியர் பிரதிபா ரே. வாழ்வின் இத்தனை சுமைகளை உறுதியுடன் ஏற்று நிற்கும் அத்தாயிடம் வெளிப்படும் அறியாமைதான் இக்கதையினை மேலும் அழகாக்குவதாகத் தோன்றுகிறது. அவள் இறைவனை நம்புகிறாள், மருத்துவர்களை நம்புகிறாள், இயற்கையை நம்புகிறாள்… என்றாலும் கைவிடப் படுகிறாள். அவளுக்கு அவள் மட்டுமே துணை. தன் மகனின் உழைப்பு, நேர்மை, கண்ணனுடையது போன்ற நீண்ட கூந்தல் குறித்து அவள் நினைத்துக் கொள்ளும் இடங்கள் நம்மையும் கலங்கச் செய்பவை.

எழுத்தாளர் பிரதிபா ரே

குர்ரதுலைன் ஹைதர் எழுதிய ‘சருகின் ஓசை’ கதையின் நாயகி மூன்று வெவ்வேறு ஆண்கள் மீது வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் அன்புகொள்கிறாள், இணைந்திருக்கிறாள். இதை வாசிக்கும்போது, ஒரே பெண் மூன்று ஆண்களுடன் வாழ்ந்தாளா என்பதே இயல்பாக நமக்குள் எழும் எண்ணம். ஆனால் அவள் சொல்கிறாள், “இந்த மூன்று ஆண்களைத் தவிர வேறு யாரையும் நான் எண்ணிப் பார்த்ததே இல்லை” என. இந்த வாக்கியம் அவள் மீதும் நமது வழக்கமான சிந்தனை மீதும் வேறொரு கோணத்திலிருந்து ஒளியைப் பாய்ச்சுகிறது. பா திருச்செந்தாழையின் காக்கைப் பொன் சிறுகதையின் நாயகி மஞ்சு வெவ்வேறு நபர்களை நேசித்து ஏமாந்திருப்பாள். அவளது சகோதரன்,  ”உன்னை ஊரே ஏசுகிறது. நீ யோக்கியமற்றவள்,” என்பான். அதற்கு அவள், “நான் யோக்கியந்தான், அவனுகதான் யோக்கியமில்ல” என்பாள்.

குர்ரதுலைன் ஹைதர்

சருகின் ஓசை கதையின் நாயகன்கள் அவள்மீது அன்புகொண்டவர்களாகத்தான் இருப்பார்கள் – குறிப்பாக முதல் காதலன் குஷாவந்த் சிங்! ஆனாலும் அவளுக்கு அவனை மணமுடிக்க விருப்பம் இருக்காது. இறுதியில் அவளுக்கு எவரையுமே மணமுடிக்கும் மனநிலை இல்லாது போய்விடும். தனக்கான ஒரு பாதுகாப்பாக மட்டுமே அவள் மற்ற இருவரையும் பயன்படுத்திக் கொள்கிறாள். இதே காலகட்டத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்து இடப்பெயர்வுகள் ஏற்பட்டதையும், நாயகியின் அம்மா இவள் கல்லூரியில் படிக்கும்போதே இறந்துவிடுவதையும் இணைத்து அவளது வாழ்க்கையை நோக்கும்போது நம்மால் அவளை மேலும் புரிந்துகொள்ள இயலும். ‘அதீத பாலியல் வேட்கை’ என்னும் நோயால் பீடிக்கப்பட்டவள் எனத் தன்னைத் தோழிகள் குறிப்பிடுவதையும் அவள் அறிந்தே இருக்கிறாள். வாழ்வின் இறுதியில் அவள் தன் முதல் காதலன் குஷாவ்ந்த் சிங்கை (அவளே மறுத்தவன்தான் அவன்.) நினைத்து ஏங்குகிறாள். அப்படித்தான் ஆண் மீதான் பெண்ணின் ஏக்கமும் ஈர்ப்பும் விவரிக்கவோ வரையறுக்கவோ தவிர்க்கவோ இயலாததாக இருக்கிறது.

இத்தொகுப்பின் முதல் கதையான அங்கூரியின் நாயகி தன் தோழியையும் பிற பெண்களையும் குறித்து வருத்தம் கொள்கிறாள். அவர்களை ஆண்கள் ஒரு மூலிகை இலையைச் சாப்பிடச் செய்து அவர்கள்பால் மயக்கிவிட்டார்கள் என்கிறாள். அப்படி மயக்கப்பட்ட பெண்கள் இரவெல்லாம் காரணமின்றி அழுதவாறும் பாடல்களைப் பாடியவாறும் துயரடைகிறார்கள். ஷேக்ஸ்பியரின் A Midsummer Night’s dream நாடகத்தில் Puck என்னும் கதாபாத்திரம் love-in-idleness or Wild Pansy எனப்படுகிற வயலோ மலரின் சாறினை நாடகத்தின் நாயக நாயகியரின் கண்களில் அவர்கள் உறங்கும்போது பிழிந்துவிடும். விழித்தவுடன் யாரை அவர்கள் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் மீது காதல்பித்து ஏற்பட்டுவிடும். எந்த நாடாகினும் எந்தக் காலமாகினும் காதல் வரையறுக்க முடியாததும் தவிர்க்க முடியாததும்தானே!  அது ஒரு மாயாஜாலம் போல் மனிதர்களை ஆட்கொண்டுவிடுகிறது.

வயோலா மலர்

ரஜினிகாந்தா மலரில் தொடங்கி வயோலாவில் முடித்திருக்கிறோம். இத்தொகுப்பின் கதைகளும் வெவ்வேறு மலர்களைப் போன்றவைதான். காதல், காமம், வறுமை, குடும்ப அமைப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல்கள், குடும்ப அரசியல், சமூக அமைப்பில் பெண்கள் நேரிடும் போதாமைகள், இரண்டாம் பிரஜைகளாக உணரவேண்டியிருக்கும் சூழல்கள் எனப் பல்வேறு மையக் கருக்களைக் கொண்டுள்ளன. எல்லாக் கதைகளிலுமே, கதைகளை முடித்துள்ள விதத்தில் ஒரு கவித்துவமும் கூடிவந்துள்ளது. பெண்ணிய நோக்கு, அழகியல் நோக்கு என இரு வகைகளிலுமே இக்கதைகள் முக்கியமானவையாக உள்ளன.

அம்மா என்னும் கதாபாத்திரத்தின் இருப்பும் இன்மையும்கூட பெரும்பாலான கதைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அம்மா மகள் இடையேயான love-hate உறவும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. பெண்கள் எழுதிய இந்தக் கதைகள் அனைத்தும் பெண்களையே மையப்பாத்திரமாகக் கொண்டுள்ளன எனக் கூறப்படுவதிலிருந்து விதிவிலக்காக அமைந்திருக்கும் ’வீடு திரும்புதல்’ கதையையும் குறிப்பிட்டாக வேண்டும். பணிநிமித்தம் வெளியூரிலேயே தங்கிப் பழகிவிட்ட குடும்பத் தலைவன் இறுதியில் வீட்டில் தங்க நேரும்போது எதிர்கொள்ளும் ’சங்கடங்களை’ இக்கதை பேசுகிறது. வாசிக்கும்போது என் உதட்டில் ஒரு புன்னகை தேங்கியிருந்தது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக, இக்கதைகளை அனுராதா கிருஷ்ணசாமி அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கும் விதம் என்னை மிகவும் ஈர்த்தது. இத்தனை மொழிகளைச் சேர்ந்த இத்தனை எழுத்தாளர்களை நாமே தேடிக் கண்டடைந்து வாசிப்பதற்கு எத்தனை உழைப்பும் காலமும் தேவைப்பட்டிருக்கும்! அதனை இவர் எளிதாக்கித் தந்திருக்கிறார்.

டெல்லியில் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுடன் அவர்களது ஊரின் எழுத்தாளர்கள் குறித்து விவாதித்து அறிந்துகொண்டது குறித்து முன்னுரையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து அவரிடம் மேலும் உரையாடிய போது, இந்தியா போன்ற ஒரு பன்மைத்துவ நாட்டின் தலைநகரில் வசிக்க நேர்ந்தது தன் வாழ்வின் கொடுப்பினை என்று மகிழ்ந்தார்.

மொழிபெயர்ப்பாளர் இல. சுபத்ரா

ரயில்களில் தத்தம் மாநிலங்களின் செடிகளை எடுத்து வந்து நட்டு வளர்ப்பது முதல் தங்களுக்கான கோயில்களைக் கட்டி விழாக்கள் கொண்டாடுவது வரை டெல்லி தன் ஒட்டுமொத்த நாட்டின் ஒரு சிறுதொகுப்பாக அமையும்விதம் மக்கள் அங்கே வாழ்ந்து வந்துள்ளனர். டெல்லி தமிழ்ச் சங்கம், மலையாளிகள் சங்கம் என மொழிகளையும் இலக்கியத்தையும் வளர்ப்பதற்கான அமைப்புகளும் அங்கு இருப்பது நாம் அறிந்ததே. ஹிந்தி கற்றுக் கொள்வதற்கு பயணப்படி, சாய்சமோசா, ஊக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நாடகங்களை சினிமாக்களை இசைநிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதற்கான உரையாடுவதற்கான எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டிக் கிடந்திருக்கின்றன. குறிப்பாக மலையாளப் படங்களும் வங்கப் படங்களும் செறிவானவையாகக் கருதப்பட்டிருந்திருக்கின்றன, குமார் கந்தாராவின் இசை நிகழ்ச்சியைக் கைக்குழந்தையுடன் சென்று அமர்ந்து ஐந்து மணிநேரம் கேட்டு மகிழ்ந்துள்ளார் அனுராதா. அலுவலகத் தோழிகளுடன் இலக்கியம் குறித்து உரையாடியது தனிப்பட்ட நட்பினை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமின்றி அலுவலக வேலைகளையுமே இலகுவாகக் கொண்டுசெல்ல உதவியிருக்கிறது அவருக்கு. தற்போதும் அவர்களில் பலருடன் அனுராதா தொடர்பில் உள்ளார். வி.கே.என்-னின் பையன் கதைகள் நூலையும் ஆதவன் நூல்களையும் வாசித்து டெல்லி மீது ஏற்பட்டிருந்த ஈர்ப்பு அனுராதாவுடனான உரையாடலால் மேலும் அதிகமாகிவிட்டது.

அனுராதா அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, இத்தொகுப்பில் அவரது மொழியுமே மிகவும் வசீகரமானதாகவும் செழுமையானதாகவும் இருக்கிறது. எங்குமே வாசிப்பில் இடரே இல்லை. ஒவ்வொரு கதையின் ஆசிரியர் குறித்து அவர் தந்துள்ள விவரங்களும் மிகச் சிறப்பாக உள்ளன. எவ்வளவு இடர்களுக்கிடையே இப்பெண்கள் தங்களது வாய்ப்புகளைக் கண்டறிந்து எழுதினார்கள் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.

இவை தவிர்த்து ஒரு துளி வெயில், மணல் சமாதி என வேறு இரு நூல்களும் அவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. கிருஷ்ணா ஸோப்தியின் மித்ராவந்தி, ஏ பெண்ணே குறுநாவல்கள் உள்ளிட்ட இவரது ஏராளமான மொழிபெயர்ப்புகள் சொல்வனம் இதழில் வாசிக்கக் கிடைக்கின்றன(1)

மணல் சமாதி நூலை மொழிபெயர்த்த போது, சில இடங்களில் பொருத்தமான வாத்தைகளைக் கண்டறிவதிலும் 600 பக்க நூலைச் சோர்வின்றி மொழிபெயர்த்ததிலும் அவரது கணவருக்குப் பெரும்பங்கு இருந்ததாக நெகிழ்வுடன் குறிப்பிட்டார். மேலும் அவர் தொடர்ந்து மொழிபெயர்க்க வேண்டும், சொந்தப் படைப்புகளும் எழுத வேண்டும்.

சமகாலத்தில், எப்போதையும்விட நிறையப் பெண் எழுத்தாளர்கள் தமிழ்ப் புனைவுலகில் இயங்குகிறார்கள். இந்நூலின் கதைகளுடன் அவர்கள் தங்கள் படைப்புகளை ஒப்பிட்டு நோக்கிக் கொள்ள முடியும், அவர்களுக்கான வெவ்வேறு சாத்தியங்களையும் நகர்வுகளையும் இந்நூல் கோடிட்டுக் காட்டும் என்னும் வகைகளில் ’கடவுளுக்கென ஒரு மூலை’ நூல் தமிழுக்கு ஓர் அவசியமான வரவும் கூட.

***

அடிக்குறிப்புகள்:

(1)அனுராதா கிருஷ்ணசாமி படைப்புகள் – சொல்வனம்

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *