பதினோராவது சொல் – லூலூ மில்லர்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்)

லூலூ மில்லர்

வானம் கருநீலப் பலகையாக இருந்தது. என் ஒன்றரை வயது மகனும் நானும் எங்கள் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்தோம். என் மனைவி கதவு திறந்து எட்டிப் பார்த்தாள். அவளைப் பார்த்தவுடன் – என்னால் ஒருபோதும் பொருள்கொள்ள முடியாத மோனப் புன்னகை ஒன்றை உதிர்த்தபடி – சுவரில் இருந்த கருஞ்சிவப்பு நிற மீன் படத்தைச் சுட்டி, “ஷீஷ்” என்றான் எங்கள் மகன்.

“ஃபிஷ் ஆ?” என்றாள் அவள்.

“ஷீஷ்!” என்றான் அவன்.

தோராயமாக, அது அவனது பதினோராவது சொல் என்று நினைக்கிறேன். ஏற்கனவே, அவனிடம் “டாக்” (நாய்), “பால்” (பந்து), “டக்”(வாத்து), “பப்புல்” (குமிழி), “மாமா” (அம்மா), தன்பாலினத் தம்பதியினரான எங்களது வீட்டிற்குள் எப்படியோ மர்மமான முறையில் “டாடா” (அப்பா), “நாநா” (வாழைப்பழம்), “வ்ரூம்-வ்ரூம்” (மகிழுந்து), “ஹா-ஹா” (சூடு/காரம்), எங்கள் துன்பங்கள் பலவற்றுக்கும் ஆணி வேராக அமையும் “வாட்ஸ் தட்? வாட்ஸ் தட்?” (என்னது அது?) ஆகிய சொற்கள் வந்து சேர்ந்திருந்தன. அவற்றுக்குப் பின், இதோ வந்துவிட்டது: “ஃபிஷ்”.

உண்மையில் அது எனக்கு ஒரு வருந்தத்தக்க தருணமாகத்தான் இருந்திருக்க வேண்டும். வேறு எவரைவிடவும் அந்த தருணத்தின் ஆபத்தை முதலில் உணர்ந்திருக்க வேண்டியவள் நான்தான். மிகச் சமீபத்தில்தான், என் வாழ்வின் பத்து ஆண்டுகளைச் செலவழித்து, மனிதர்களால் இந்த உலகத்தின் உண்மையான விரிவைப் பார்க்க முடியாமல் இருப்பதற்கு “ஃபிஷ்” (மீன்) எனும் பொதுச் சொல் எப்படி ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது என்பதை “ஏன் மீன்கள் வாழ்வதில்லை” எனும் புத்தகமாக எழுதியிருந்தேன். சுருங்கச் சொன்னால், நம்மால் மீன்கள் என வகைப்படுத்தப்பட்ட பல உயிரினங்கள் எப்படித் தம்மைவிட நமக்கு நெருக்கமான உயிரியல் இயல்புகளைக் கொண்டுள்ளன என்பதை சமீபத்தில்தான் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அறிவியல் உண்மையை நாம் புரிந்துகொண்டால், எப்படி “மீன்கள்” எனும் வகைமையே ஒரு ‘மக்கு’ வகைமையாக – நம் உள்ளுணர்வுகளுக்கு ஏற்ப இயற்கையை வளைக்க முற்படும் வகைமையாக – இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். எனவே மீன்கள் எனும் வகைமையே ஒரு பொய்தான், பிழைதான், இயற்கையில் இருக்கும் அபாரமான நுட்பங்களையும் சிக்கல்களையும் மறைக்கும் அர்த்தமற்ற தொகுப்புதான்.

மேலும், “மீன்” என்பது நாம் அன்றாடம் செய்யும் அந்தச் செயலின் – சம்பந்தமில்லாதவற்றை நம் வசதிக்காகவும், சௌகரியத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் ஒரே வகைமையில் அடைத்துப் பார்க்கும் அந்தச் செயலின் – ஒரு நேரடி எடுத்துக்காட்டு மட்டும்தான். என் புத்தகத்தின் பெரும் பகுதி, நாம் இந்த உலகத்தை இன்னும் அதிக ஐயத்தோடு – நம் வகைமைகளின் மீதான ஐயம், நம் சொற்களின் மீதான ஐயம், நம் மொழியின் ஊசிமுனைக்கு அடியில் சிக்கியிருக்கும் உயிரினங்களின் மீதான ஆர்வம் – அணுக வேண்டும் என்று இறைஞ்சும் முறையீடுதான். (நான் புத்தகத்தில் உறுதியளிப்பதைப்போல) அப்படிச் செய்வதன் பலனாக நமக்குக் கிடைப்பதோ, இன்னும் பரந்துபட்ட ஓர் உலகம். ஒவ்வொரு மலரிதழிலும் நாம் அறிந்தவற்றுக்கு அப்பால் புதிய சாத்தியங்களைப் பொதிந்து வைத்திருக்கும் பிரம்மாண்டமான கானகம்.

எனவே, என் மகனின் நாவிலிருந்து “ஃபிஷ்” என்ற சொல் முதன் முதலாக நழுவி விழுந்தபோது நான் உணர்ந்திருக்க வேண்டியது அவனது கள்ளமின்மையில் விழுந்த முதல் ஓட்டையிலிருந்து “ஷீஈஈஈஈஷ்” என பீறி வரும் காற்றின் வெம்மையைத்தான். அது சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு வரும் அவனது வீழ்ச்சி. நான் ஒரு தசாப்தமாக பாதை அமைத்துத் திரும்ப முயன்றுகொண்டிருந்த சொற்களற்ற ஏதேன் தோட்டத்திலிருந்து அவனது வெளியேற்றம். நியாயப்படி, நான் அவன் வாயைப் பொத்தி, அதற்கு மேல் அதனுள்ளிருந்து எந்தச் சொல்லும் உதிர்ந்துவிடாமல் தடுக்க முயன்றிருக்க வேண்டும்.

ஆனால், நான் அவனை சோதித்துப் பார்க்கத் தொடங்கினேன். என் கைபேசியில் ஒரு தங்கமீனின் நிழற்படத்தை எடுத்துக் காட்டினேன். “ஷீஷ்”. அடுத்து ஒரு கிழங்கு மீன். “ஷீஷ்”. தடித்த, தசைப்பிடிப்பான நீலப்புள்ளி சீலக்காந்து. “ஷீஷ்”.

“அதேதான்!”, என்னால் எட்ட முடிந்த உச்சக் குரலில் கிரீச்சிட்டு அவன் செய்த பிழையை உறுதிப்படுத்தினேன்.

*

அடுத்த சில வாரங்களில் அவன் எனக்கு சிகாகோ நகரம் முழுவதும் மீன்கள் நிறைந்திருப்பதைக் காட்டினான். கோவிட் தொற்றைத் தடுப்பதற்காக இப்போது மூடப்பட்டிருக்கும் ஷோர் டிரைவ் ஏரிக்குச் செல்லும் நடைபாதையின் மொசைக் சுவர்களில் உள்ள மீன்கள்; நாங்கள் திருப்பிக் கொடுக்க முடியாமல் வைத்திருக்கும் நூலகப் புத்தகங்களில் இருந்த மீன்கள்; கிளார்க் பகுதியில் உள்ள மூடப்பட்ட மழலையர்ப் பள்ளியின் ஜன்னல்களில் வரையப்பட்டிருந்த மீன்கள். “ஷீஷ், ஷீஷ், ஷீஷ்” என தன் மந்திரக்கோல் விரலால் சுட்டி, அவனது முந்தைய குழப்பங்களை எல்லாம் தெளிவுகளாக்கினான். அவனைப் பொறுத்தவரை, பாம்பும் மீன்தான், ஆமையும் மீன்தான். ஒரு நாள், ஏப்ரல் மாதத் தென்றலை எங்கள் வீட்டினுள்ளும் வீச அனுமதிப்பதற்காக, எங்கள் வீட்டு ஜன்னலைத் திறந்தபோது பூத்தொட்டியில் இருந்த வாழைப் பனைச் (banana palm) செடி காற்றில் சிறகசைத்து நீந்தும் “ஃபிஷ்” ஆனது.

எங்கள் உலகங்கள் மூடப்படுகையில் அவனது உலகம் வெடித்துத் திறந்துகொண்டிருந்தது. “ஃபிஷ்” எனும் சொல் ஒட்டுமொத்த விலங்கினங்களையும் அவனுக்குத் திறந்து காட்டும் மந்திரச் சாவியானது. திடீரென்று அவனுக்குத் தெரியாத மிருகங்களே இல்லை என்று ஆனது. நடந்து போகும் நாய்: “டாக்”. தவ்விச் செல்லும் முயலும் “டாக்”. எங்கள் சிறுவர் புத்தகங்களில் நிறைந்திருந்த மாடுகள், கரடிகள், வரிக்குதிரைகள், கங்காருகள், ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள் அனைத்தும் “டாக்” ஆயின. பறவைகளைப் பொறுத்தவரை, எங்கள் வீட்டு முகப்பில் வந்து கூவிச் செல்லும் கருஞ்சிட்டும், புதர்களில் இருந்த செஞ்சிட்டும், அமைதியான வானில் அச்சடித்த கச்சிதத்துடன் பறந்து திரியும் புறாக்களும் “டக்” ஆயின. மற்றவை யாவும் “ஃபிஷ்”தான். இது அரிஸ்டாட்டில் விலங்குகளை நிலம்வாழ் உயிரிகள், நீர்வாழ் உயிரிகள், பறவைகள் என மூன்று வகைமைகளாகப் பிரிக்கப் பயன்படுத்திய அதே தர்க்க முறைதான்.

ஒரு நாள், அவன் ஒரு எறும்பை “டாக்” என்று அழைத்து, பெருமிதத்தில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தியபோது, நானும் அவனோடு இணைந்துகொண்டேன். அப்போது, அதன் ஆபத்தை நான் உணர்ந்திருக்கவில்லை.

ஏப்ரல் இறுதியில், கொஞ்சமும் பொறுப்பின்றி, பார்வையாளர்களை அனுமதித்துக் கொண்டிருந்த ஓர் வனக் காப்பகத்தைப் பற்றித் தெரியவந்ததும் நாங்கள் அங்கு சென்று இறங்கினோம். கட்டற்று வளர்ந்த காட்டுப் புதர்களும், மொக்குவிடத் தொடங்கியிருந்த முட்புதர்களும், தரையெங்கும் பச்சைக் கம்பளம் விரித்து கவனம் ஈர்த்த பாசியும் நிறைந்த பாதைகளின் வழியே நாங்கள் நடந்தோம்.

“டர்ட்” (அழுக்கு) என்றான் எங்கள் மகன்.

“ஆமாம்! டர்ட்!” என்றோம் நாங்களும் – எங்கள் கால்களுக்கு அடியில் கிடந்த எண்ணிலடங்கா கனிமங்களையும், பூச்சியினங்களையும், பூஞ்சைகளையும், மின்னணுக்களையும் கொண்ட சிக்கலான உயிர்ச் சுழலை ஒற்றைச் சொல்லால் சுட்டியபடி.

அன்றே, எங்கள் மலையேற்றத்தின் முடிவில் பார்த்த சிற்றோடை “வாவா” (தண்ணீர்) ஆனது. அதே சொல் மழைக்கும், குளியலுக்கும், தாகத்துக்கும் பரவியது. அடுத்து “ஸ்டிக்” (குச்சி) வந்தது. ஒரு நாள் மட்டும் மலர்ந்து மறைந்தது “யெல்லோ” (மஞ்சள்). எங்கள் முகப்பு விரிசல்களில் ஊர்ந்து திரிந்த “டாக்”கள் கொஞ்ச நாளில் “பக்” (பூச்சி) ஆகி, பிறகு “ஏன்ட்” (எறும்பு) ஆயின. எங்கள் மொழியின் உலகத்திற்குள் அவனை வரவேற்கும் ஆவலில் அதன் வாயிலில் பூரித்து நிற்கும் இரண்டு பெண்களாக அவனது ஒவ்வொரு சொல்லையும் நாங்கள் ஆரவாரத்துடன் ஊக்கப்படுத்தினோம்.

பிறகொரு நாள், அவனது முதல் சொல்லான “ஃபிஷ்” வெளிவந்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு, அது நிகழ்ந்தது.

நாங்கள் என் மாமனார்-மாமியாரைச் சந்திக்கச் சென்றிருக்கக் கூடாது. ஆனால், அவர்களும் ஒரு வகையில் இளைஞர்கள்தான். இன்னும் அறுபது வயதுகூட ஆகாதவர்கள். அவர்கள் டென்னிஸ் ஆடுவதில்லை. ஆனால் அவர்களால் நினைத்தால் ஆட முடியும் .

எங்கள் முகமூடிகளை அணிந்தபடி செவ்வக உணவு மேஜையின் எதிர் விளிம்புகளில் அமர்ந்திருந்தோம். விரைகலனில் (instant pot) சமைக்கப்பட்ட காளான் ரிசோட்டோ பரிமாறப்பட்டது. கூடவே, இருக்கட்டுமே என்று, மாம்பழமும், ஸ்டிராபெரியும் போடப்பட்ட தயிரும், சிறிய கண்ணாடிக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. விருந்தினர் அறையில் எங்கள் மகனைத் தூங்கவைத்தோம்.

இரவு, சுமார் பத்து மணியளவில், நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, எங்கள் மகன் வீறிட்டுக் கத்தத் தொடங்கினான். அழுகையல்ல, வீறிடல். நாங்கள் இதுவரை கேட்டிராத புதிய சத்தம். என் மனைவி மாடிக்குச் சென்று சில நிமிடங்களுக்குப் பிறகும் அது குறையவில்லை. ஒரு வேளை அவனுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறோ, ஜுரமோ, என்ற பயத்தில் படிகளில் தாவி ஏறிச் சென்றேன். ஆனால் என் மனைவி அவன் நெற்றியில் கைவைத்து, “சுடவில்லை!” என்று கிசுகிசுத்தாள். அவனைத் தூக்கிச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவன் என் கைகளில் இருக்க மறுத்தான். என்னை அடையாளமே தெரியாதவன்போல் வெறித்தான்.

எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்தோம். தாலாட்டு, அவனுக்குப் பிடித்த – பென்குயின் இணைகளைப் பற்றிய – கதைப் புத்தகம், சூடான பால், என எதுவும் பயனளிக்கவில்லை. இறுதியாக, என் மனைவி அவனை அறைச் சுவரில் மாட்டியிருந்த (பண்டைய எகிப்திய முறைப்படி நெய்யப்பட்ட) காப்டிக் ஓவியத் திரைச்சீலைக்கு அருகில் கொண்டு சென்றாள். வளைந்த கொம்புடைய ஆடுகள் போன்ற உயிரினங்களைப் பிரசவிக்கும் மரங்கள், சுழல் ஓடுகளைக் கொண்ட நத்தை போன்ற விலங்குகள், பாம்புகளைப் போன்ற கொடிகள், கொடிகளைப் போன்ற பாம்புகள் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மயங்கி மருளும் அந்த உருவெளித்தோற்றக் காட்சியை என் மகனின் குழம்பிய நிலையில் நான் பார்த்திருந்தால் எனக்கு மனப் பிறழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், என் மனைவி அவனை ஓவியத்திரைச்சீலையின் கண்ணாடிச் சட்டகத்திற்கு அருகில் கொண்டு சென்று அதில் அவளால் அடையாளம் காணமுடிந்த ஒவ்வொரு உயிரினமாகக் கண்ணாடியின் மேற்பரப்பில் விரலால் தட்டி சுட்டத் தொடங்கினாள். “கோட் (ஆடு), ஃபிளவர் (பூ), ஸ்னைல் (நத்தை), டக் (வாத்து)”. டொக். டொக். டொக். டொக். அப்படியே, மெதுவாக, உடல் நடுங்கும் பெரு மூச்சுகளின் வழி, அவன் அமைதியானான். அவன் ஓரளவு அடங்கியதும், அவனைத் தூக்கிகொண்டு, எங்கள் காரில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினோம்.

*

முன்னொரு காலத்தில் – நான் அடிக்கடி பெயர் மறந்துபோகும், அந்தப் பெயர் மறதியே இந்தப் பத்தியிலும் ஒரு சுவாரசியமான பங்காற்றும் – ஒரு ஜெர்மானிய உளவியலாளர் இருந்தார். அவர், “நாம் ஒரு பொருளுக்குப் பெயரிடாமல் இருக்கையிலேயே அது நம் மூளையில் அதிக வினையூக்கத்துடன் இருக்கிறது” என்றார். குறிப்பாக, முடிக்கப்படாத செயல்களும், தீர்க்கப்படாத புதிர்களும், பெயரிடப்படாத உளவியல் செயல்பாடுகளுமே, புரிந்து பெயரிட்டு வகுக்கப்பட்டப் பொருட்களைவிட எளிதாக நினைவுகூறப்படுகின்றன என்றார். அவர் அந்த விதிக்கு, “விளங்காதது வாழும்” என்று பெயரிட்டிருக்கலாம். ஆனால் அவர் அதற்கு – என் குறிப்புகளைப் பார்த்துச் சொல்கிறேன் – செய்கர்னிக் விதி என்று பெயரிட்டார். அந்த உளவியலாளரின் பெயர் செய்கர்னிக். அப்புறம், அவர் ஆண் அல்ல, பெண். அவர் ஜெர்மானியரும் அல்ல, ருஷியர். எது எப்படி இருந்தாலும், பெயரிடப்படாதவை எப்படிச் சுலபமாக நினைவுகூறப்படுகின்றன என்பதைப் பற்றிய இந்தக் கடினமான பெயர் கொண்ட விதி என் நினைவில் தங்கிவிட்டது. எப்படி பெயரிட்டு முத்திரைக் குத்தப்படாத பொருட்களே நம் சிந்தனைகளைப் பிய்த்துப் பிடுங்குகின்றன என்றும்; எப்படி நம் சொற்களின் கூண்டுகளுக்கு அப்பால் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் பொருட்களின் பகுதிகளும் ஆற்றல்களுமே நம் மூளையில் அதிக உயிர்ப்புடன் இருக்கின்றன என்றும் குறிப்புணர்த்துகிறது இந்தக் கிறுக்குத்தனமான விதி.

ஒவ்வொரு பெயரிலும் ஒரு வகையான செயலின்மை தொற்றியிருகிறது. உருவகமாகச் சொன்னால், பெயர் என்பதே பொறிதான். ஜாடியில் பிடிபட்ட மின்மினிகளின் சுடரணைக்கும் மூடி அது.

*

மறுநாள், எங்கள் மகன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டான்.

ஆனால் எங்களால் முடியவில்லை.

காப்பிப் போடும்போதும், பாத்திரங்கள் துலக்கும்போதும் – தன் உயர நாற்காலியில் உற்சாகமாக அமர்ந்திருந்த – அவனைத் திரும்பிப் பார்த்தபடியே, “என்னதான் நடந்தது?” என்று எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம்.

என் மனைவி காலையிலேயே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாள். அவள் (விதி வசத்தால்) உறுப்பிழப்பாலோ, முடக்குவாதத்தாலோ, குறைப் பிரசவத்தாலோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உளவியல் மருத்துவர். அவள் தன் மேலாளரைத் தனியாகச் சந்தித்து, முந்தைய இரவு நாங்கள் கண்டவற்றை விவரித்து, இத்தகைய கொடுங்கனவுச் சம்பவங்களைக் குறித்து அவருக்கு ஏதேனும் தெரியுமா என்று வினவினாள். அவளது மேலாளர், “நீங்கள் பயப்படத் தேவையில்லை. பதினெட்டு மாதங்களை நெருங்கும் குழந்தைகளுக்கு இத்தகைய கனவுகள் வருவது இயல்பானதுதான். இது அவர்களின் மூளையில் நிகழும் நரம்பு வளர்ச்சியின் உபவிளைவு” என்றார். என் மகனின் மூளையில் உருவாகும் அனுப்புயலில் (atomic storm) ஒரு மின்னல் வெட்டுவதாக நான் கற்பனை செய்து பார்த்தேன்.

என் பங்குக்கு நானும் சில அரைவேக்காட்டுப் புலனாய்வுகளைச் செய்திருந்தேன். சில பயனற்ற கூகுள் தேடல்களுக்குப் பிறகு, யதேச்சையாக நிகழ்ந்த ஒரு சக பணியாளருடனான தொலைபேசி உரையாடலில் அவரது மகளுக்கும் அன்று இரவு கொடுங்கனவு வந்ததை அறிந்து, “அன்று காற்றில் ஏதோ கலந்திருக்க வேண்டும்” என்று சொல்லி சிரித்துக்கொண்டோம். “கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது” என்று எனக்கு நானே ஆறுதலின்றி சொல்லிக்கொண்டேன்.

*

என் குடும்பத்தை விட்டு ஒரு ஐந்து நாள் பயணம் சென்றேன். என் புத்தகத்துக்கான விற்பனை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. எனக்கும் கொஞ்சம் இயற்கைச் சூழல் தேவைப்பட்டது. மனதில் ஏதோ ஒரு தேடல். மேற்கு விர்ஜினியாவுக்குப் போனேன். அங்கு ஒரு சிற்றோடைப் பாதையில் மலையேற்றம் சென்றேன். அப்போது – மலையேற்றம் முடிந்து சில வாரங்களுக்குப் பிறகு நான் பெயர் தெரிந்துகொண்ட – ஒரு காலணி மந்தாரையைக் (lady’s slipper orchid) கண்டேன். மலைமுகடுகளெனும் பீடத்தில் எழுந்தருளும் யோனியென அவள் வீற்றிருந்தாள். அவளது பனித்துளி போர்த்திய மேனியையும், புடைத்த மென்வெளிர் நரம்புகளையும் கண்டபோது, நான் காண்பது உருவெளித் தோற்றமோ என மயங்கினேன். என் மனைவியின் நினைவில் ஏங்கினேன்.

மலையேற்றத்தின்போது ஆலன் வாட்ஸின் “பாதுகாப்பின்மையுணர்வின் ஞானம்” (The wisdom of insecurity) எனும் ஒலிப்புத்தகத்தைக் கேட்டேன். அதில் அவர் நம் பிரச்சனைகள் அனைத்துக்குமான மூலக்காரணம் நம் பற்றுதான் என்றார். வாழ்க்கை தன்போக்கில் ஒழுகிச் செல்வது, அதில் எதையோ பற்றிக்கொள்ளும் நம் முனைப்புதான் நம்மை நலம்கெடச் செய்கிறது என்றார். அவர் சொன்னவற்றுக்கெல்லாம் தலையாட்டியபடியே அங்கு என் கண்ணில் பட்ட அத்தனை அழகையும் பதிவு செய்துவிடப் போராடிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த மூடுபனியையும், தேரையையும், கற்குவையையும் படம் பிடித்தேன். சூரிய அஸ்தமனத்தை ஒளிப்பதிவு செய்தேன். தன் குஞ்சுகளுக்காகக் கூவும் காட்டுக்கோழியின் அழைப்பை ஒலிப்பதிவு செய்தேன். காலணி மந்தாரையை மட்டும் ஆறு படங்கள் பிடித்தேன். அந்தப் புல்வெளியில் மலர்ந்த பூக்களைக் கொண்டு – ஊதா, மஞ்சள், வெள்ளை நிறங்களாலான – ஒரு பூங்கொத்து செய்து, வீட்டுக்கு அனுப்பவேண்டிய தபால் உறையில் வைத்தேன்.

நான் வீடு திரும்பியபோது இரு புதிய சொற்கள் – “ஆப்பிள்”, “ஹெல்ப்” (உதவி) – அரும்பியிருந்தன. ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்துக்கும், நகரம் முழுவதற்குமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுக்கும் இடையில் வீடு திரும்பினேன். ஒரு நாள் நள்ளிரவில் என் மனைவி என்னை எழுப்பி, “லூலூ, வா போகலாம்” என்றாள். அவள் நேராகக் கூடத்தைக் கடந்து எங்கள் மகனை தூக்கச் சென்றாள். எங்கள் குளியலறை ஜன்னல், வெளியில் பற்றி எரிந்த நெருப்பால், சிவந்திருந்தது.

“இது ஒரு சமிக்ஞை” என்று நினைத்தபடியே, கையில் எதை எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் குழம்பினேன். பிறகு எங்கள் மடிக்கணினிகளைத் தேர்வு செய்தேன். கூடவே என் மகனின் மொத்த வாழ்க்கையையும் – மையில் நனைத்து பதியப்பட்ட அவனது காலடித் தடங்கள், அவன் விரலால் வரைந்த  ஓவியங்கள், அவன் சொற்கள் என – பதிவு செய்து நான் உருவாக்கியிருந்த துணுக்குச் சேகரப் புத்தகத்தையும் (Scrapbook) எடுத்துக்கொண்டேன். 

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு மனைகள் தள்ளியிருந்த வாகனங்கள் பழுதுபார்க்குமிடம் தீக்கிரையானது. அது திட்டமிட்ட தீவைப்புதான் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. ஆனால் யாருக்கும் எந்த காயமும் இல்லை. அன்றிரவு அங்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்களையும் என் மகன் கண்கள் மினுங்கப் பார்த்தான். அவன் வாழ்வின் மிகச் சிறந்த இரவு அதுதான். அவனுக்கு இதுவரை தெரியாத பலவற்றைப் பற்றி நான் சிந்தித்தேன். அவனை ஒரு நல்ல வெள்ளையின ஆணாக – சமூகம் அவனுக்காக ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் அதிகாரக் கட்டமைப்பின் உச்சிப் பீடத்தில் தான் ஏற்கனவே அமர்ந்திருப்பதாக நினைக்காதவனாக – எப்படி வளர்க்கப் போகிறோம் என்றெண்ணி மலைத்தேன்.

ஜுனில் அவன் “அப்” (மேல்) என்று சொல்லத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்த அவுரிநெல்லிக் கனிகளை (ப்ளூபெர்ரி) நிராகரித்துத் தரையில் போட்டான். அப்போது நான் – நான் என்ன செய்வேன்? – அந்தக் கனிகளை எடுத்து “மேலே” வைத்தேன்.

ஜூலையில் நாங்கள் எங்கள் விந்தணுக் கொடையாளரைச் சந்திக்கச் சென்றோம். எங்கள் நண்பரான அவரை தற்சமயம் “அங்கிள்” என அழைப்பதாக முடிவெடுத்திருந்தோம். எங்கள் மகனின் முகம் அவருடையதுதான். ஆனால் அவனிடம் அவருக்கான சொல் இல்லை. அந்த மாதத்திற்கான அவனது புதிய சொல் “பஸ்” (பேருந்து).

ஆகஸ்டில் சிகாகோவில் ஒரு சூறாவளி வந்தது. வீழ்ந்த மரங்களின் வேர்கள் பறக்கும் தட்டுகளாகி வானில் பறந்தன. நான் என் மகனுடன் குளியலறையில் இருந்தேன். இடி முழக்கத்தின் அதிர்வில் எங்கள் கார்களின் அபாய மணிகள் விழித்தெழுந்தன. என் மகன் பேதலித்த விழிகளுடன் என்னைப் பார்த்தான். “தன்டர்” (இடி) என்றேன் நான். “ஹம்மர்” என்றான் அவன். “ஆமாம், ஹம்மர்” என்றேன்.

செப்டம்பரில் குளவிகளையும் குளிரையும் கொண்டுவரும் கூதற் காற்று வீசத் தொடங்கியது. என் மகனுக்கு இரண்டு வயதானது. அவன் “ஹா”க்களுக்கு “ட்” முளைத்து “ஹாட்” (சூடு/காரம்) ஆனது. அவன் “நாநா”வுக்கு “ப” முளைத்து “பனானா” (வாழைப்பழம்) ஆனது. அவன் தன் பெயரை முதல் முறையாக உறக்கச் சொன்னான். அது தவிர “நோ”வும் (இல்லை/வேண்டாம்) “கொரோனா”வும் முளைத்தன.

இப்போது அக்டோபர். எங்கள் முகப்பில் மாட்டப்பட்டிருந்த வினோத ஜந்துவை அவன் “ஸ்கெ-லி-டா” (எலும்புக்கூடு) என்று அழைக்கக் கற்றுவிட்டான். அதற்கு அடியில் தொங்கும் ஆரஞ்சு வண்ண உருளையை “ஆப்பிள்” என அழைத்து, அதை அவ்வப்போது கடிக்கவும் முயன்று தோற்றுவிட்டான். இந்த மாதத்தின் மத்தியில் நாங்கள் இதுவரை காணாத வேறொரு நிச்சயமின்மையும் காத்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நிகழும்? நிகழுமா? ஒருவேளை தேர்தலில் அதிபர் (டிரம்ப்) தோற்றுவிட்டாலும், அவரே தொடர முயல்வாரா? அப்படி முயல அவர் இருப்பாரா? இந்தச் சமூக அமைப்பு தொடருமா? ஒருவேளை அப்படித் தொடர்ந்தால் அதுவே நம் கெடுவினை ஆகுமா? நவம்பர் மாதமும் இருக்குமா?

நான் இப்போது மீண்டும் தனியாக இருக்கிறேன். என் மனைவியும் மகனும் உறங்குகிறார்கள். நான் மெல்ல பால்கனிக்கு வருகிறேன். வானை மூடிய மேகங்களின் இடைவெளிகளில் என்னால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவை அங்குதான் இருக்கும் என்று எனக்குச் சொல்லப்பட்டதை நான் நம்புகிறேன். இந்தப் பரந்த உலகத்தின் விரிவை கௌரவிக்கும் பொருட்டும், ஐயத்தின் வழியே நம் வளர்ச்சிக்கான பாதையை அமைக்கும் பொருட்டும், ஒரு நிமிடம், நட்சத்திரங்கள் இல்லாமல் போனதாகக் கற்பனை செய்து பார்க்கிறேன். “நட்சத்திரம்” எனும் சொல்லின் ஆணியை நட்சத்திரங்களிலிருந்து திருகியெடுத்து என் தலைக்கு மேலே விரிந்து கிடக்கும் வெற்று ஓட்டைகளை மட்டும் பார்க்க முயல்கிறேன். இப்போது மேலே எனும் சொல்லையும் விடுத்து நட்சத்திரங்கள் எனக்குக் கீழேயோ எனக்குள்ளேயோ இருக்க முடியுமா என்று பரிசீலிக்கிறேன். எவ்வளவு முயன்றும் என்னை நினைத்து நானே சலிப்படைவதைத் தடுக்க முடியவில்லை.

திடீரென இந்தக் கட்டுரையின் சொற்கள் யாவும் சாயங்களாகி உருகுகின்றன. அல்லது ஒட்டுக்கம்பளங்களாகிவிடுகின்றன. நீலமும் பச்சையும் அலையடிக்கும் மரங்களாகின்றன. நிறங்கள் மங்கியும் ஆழமாகத் தெரிகின்றன. நட்சத்திரங்களுக்கு இடையில் மீன்கள் உடல் வளைத்து நீந்துகின்றன. அந்த வளைவு காற்றாகி வீசத் தொடங்குகிறது. வீசும் காற்று சூறாவளியாகிறது. அந்தச் சூறாவளியின் மையத்தில் ஆன்மாவை விழுங்கும் உலகமும், உலகத்தை விழுங்கும் ஆன்மாவும் தெரிகின்றன. சிரிப்பொலி கேட்கிறது. அது அன்டார்டிகாவின் முனை உருகிச் சொட்டும் நீர்த்துளிகளின் ஒலியாகிறது. இப்போது “அன்டார்டிகா” எனும் சொல் அடிக்கப்படுகிறது. “அன்டார்டிகா” என்ற சொல்லே இல்லை. சுழலும் பூமிப்பந்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பித்தளைக் கம்பத்திலிருந்து உருகும் பனி மீண்டும் இறுகுகிறது. பிறகு பதங்கமாகிறது.

நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். இந்த சொல்லற்ற வெளியில். இத்தனை ஆண்டுகளாகச் சொற்களைக் கூர்ந்து ஆராய்ந்த பின், இப்போது அவற்றின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருக்கிறேன். பெரும்பாலும், அவை கூட்டங்களிலிருந்து – அதன் பாதுகாப்பு, அதன் வெம்மை, அது அளிக்கும் நீதிக்கான உத்தரவாதம் ஆகியவற்றிலிருந்து – தனிச் சுயங்களை நறுக்கி எடுக்கும் அறுவைக் கத்தியாகவே பயன்படுகின்றன என்று அறிவேன். ஆனால் ஏனோ இன்னும் சில சொற்களை அள்ளிக் காற்றில் வீசினால் அவை நிகழவிருக்கும் சில தீங்குகளைத் தவிர்த்துவிடாதோ என்று ஏங்குகிறேன்.

“நம் தேர்ச்சியைப் பற்றிய உணர்வு பெருகும்தோறும் நாம் அறியாதவற்றைப் பற்றிய அச்சமும் பெருகுகிறது”. இந்த பகட்டான வாக்கியத்தை இந்த இரவினுள் வீசிவிட விரும்புகிறேன்.

அந்த ஏப்ரல் இரவில், என் மகன் கொடுங்கனவு கண்டு வீறிட்டதற்கு, அவன் தனக்குப் பரிச்சயமில்லாத, என் மாமனார்-மாமியாரின் விருந்தினர் அறையில், விழித்து எழுந்தபோது உருவான பயமும் குழப்பமும்தான் காரணம் என்று நாம் கோட்பாட்டாக்கம் செய்ய முயலலாம்.

ஆனால் நாடடங்கு அமலுக்கு வரும் முன் நாங்கள் இந்தக் குழந்தையை ஊரெல்லாம் இழுத்துத் திருந்திருக்கிறோம். அவனுடைய இந்தச் சின்ன வாழ்நாளில் அவன் மூன்று வீடுகளிலும், இரண்டு மாநிலங்களிலும் வாழ்ந்திருக்கிறான். கார்களிலும், மதுபான விடுதிகளிலும், கூடாரங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும், விடுதி அறைகளிலுமென (அவற்றை நினைவிருக்கிறதா?) எண்ணற்ற பரிச்சயமில்லாத அறைகளில் விழித்திருக்கிறான். அவை எவையும் அவனை பயமுறுத்தியதில்லை.

அப்படியென்றால் அந்த இரவு மட்டும் எப்படி மாறுபட்டது? அதுதான் அவனுக்குள் சொற்கள் உருவான பின் அவன் பரிச்சயமில்லாத அறையில் விழித்த முதல் இரவு. அதற்கு முந்தைய 569 நாட்களிலும் அவன் அறியமுடியாமையில் (unknown) உறங்கி அறியமுடியாமையில் விழித்திருக்கிறான். ஆனால் அது அவனை உறுத்தியதோ அச்சுறுத்தியதோ இல்லை. மாறாக, அவன் அவளது தெளிவோ நிச்சயமோ அற்ற, அரூப அணைப்பில் ஒடுங்கிக்கொண்டான்.

சொற்களின் பிறப்பால் அவன் மனதில் உருவான – இந்த உலகத்தை, அதன் கடைக்கோடி மூலைவரை, ஒட்டுமொத்தமாகப் பெயரிட்டு, வரையறுத்து, அறிந்துவிட முடியும் எனும் – நம்பிக்கையால்தான், அறியமுடியாமை அவனுக்கு எதிரியானாள். அவனை அச்சுறுத்தினாள்.

அந்த அறியமுடியாமையின் தேவதைதான், இந்த ஆண்டின் மீது, சிறகுலர்த்தி அமர்ந்து பாசாங்கு செய்கிறாள். தன் தழலுடை ஒளிர ஆகாய வெளியிலிருந்து நம்மை நோக்கிக் கையசைக்கிறாள். உலோகப் பரப்புகளில் நின்றொளிர்கிறாள். அவள் இந்த உலகில் எப்போதும் இருந்த அளவுதான் இப்போதும் இருக்கிறாள். ஆனால் இப்போது தன் இருப்பைத் தெளிவாக உணர்த்துகிறாள். தேய்ந்து வரும் நம் பற்களிலும், அதிகரித்து வரும் தற்கொலைகளின் எண்ணிக்கையிலும், உளவியல் சிகிச்சை வல்லுனர்களுக்கான அதிகப்படியான தேவையிலும் அவளது இருப்பு புலனாகிறது. உடல் உணரும் வலிகளினும் வலிமிக்கது நிச்சயமின்மை என்பது தெரிகிறது. ஏனோ, நாம் அறியமுடியாமையை அஞ்சுமாறு படைக்கப்பட்டிருக்கிறோம் என்கின்றனர் நரம்பியல் வல்லுநர்கள். நம் மூளையில், நிச்சயமின்மையைக் கையாள்வதற்காகவே, கட்டைவிரல் நக அளவுச் சிப்பாய் ஒருவர் இருக்கிறார், அவர் பெயர் லோகஸ்  கொரலியஸ் (Locus Coeruleus) என்கின்றனர். அவர் கொஞ்சம் பயனுள்ளவர்தான்; நாம் நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கையில் நம் மூளை விரைந்தியங்கி வியூகங்களை வகுக்க வசதியாக அதை லாவகமான நிலையில் வைத்திருப்பவர் இவர்தான் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் அந்த நிச்சயமற்ற நிலை நீங்காதபோது அந்த லாவகமான நிலையே நம் உடலை அயர்ச்சியுறச் செய்கிறது. அத்தகைய அதீத எச்சரிக்கை நிலை சோர்வையும், மன அழுத்தத்தையும் கூட்டுகிறது. இதைத்தான் “அச்சத்துள் வலியது அறியமுடியாமையைப் பற்றிய அச்சம்” என்றார் ஹெச். பி. லவ்கிராஃப்ட், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்.

ஆனால் அவர்கள் அனைவரது கூற்றுகளும் தவறாக இருந்தால்? நாம் அறியமுடியாமையைக் கண்டு அஞ்சவேண்டியது இல்லையோ? நம் அச்சமே சொற்களால் உருவாவதுதானோ? ஒரு பொருளுக்குப் பெயரிட்டுவிடுவதாலேயே அதை நாம் அறிந்துவிடுவதான நம் மூடநம்பிக்கைதான் அச்சத்தின் தொடக்கமோ? ஒருவேளை, நம் சொற்கள்தான் அந்த ராட்சத அறியமுடியாமையை நம் தோழியாக இருக்கவிடாமல் எதிரியாக்குகிறது போலும்.

இது ஒரு நேர்த்தியான கோட்பாடுதான்.

என் குழந்தையின் வாதையை என்னால் ஒருபோதும் அறிந்துகொள்ளவோ தீர்த்துவிடவோ முடியாதோ எனும் பயத்தைப் போக்க இத்தகைய விளக்கம் உதவும். இதன்படி, அன்று அவன் கண்ணில் தெரிந்த அந்தப் பீடிப்பின் – என்னை அடையாளம் தெரியாத மருட்சியின் – பெயரை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் அதை நிரந்தரமாக ஓட்டிவிட முடியும்.

*

மீன்களுடனே உலகின் எல்லா உயிரினங்களும் வந்து சேர்ந்தன. வாத்துகள் இன்னும் “டக்”குகளாகத்தான் இருக்கின்றன. ஆனால் ஆந்தைகள் இப்போது “ஹூ-ஹூ”க்கள் ஆகிவிட்டன. தடுப்புக்கற்களும் பாறைகளும் “ஸ்டோன்”கள்தான். “ஃபெர்ன்” (பன்னம்), “மஷ்ரூம்” (காளான்), “அம்பிரெல்லா” (குடை), “பஸ்-டிரக்” (பேருந்து) எல்லாம் வந்துவிட்டன. ஆனால் அவனது “சாக்” (சாக்கட்டி) “காக்” ஆகவே இருக்கிறது. எங்கள் அண்டைவீட்டாருக்குச் சிரித்து மாளவில்லை. கடலில் உள்ள “பாப்பாய்ஸ்”களுக்கெல்லாம் நீண்ட, மடித்துவிடப்பட்ட கழுத்துப்பட்டைகள் முளைத்துவிட்டன. “டால்-ஃபிஷ்” என்கிறான் அவன், தன் தவறுகளால் இந்த உலகத்தை அதன் செயலின்மையிலிருந்து தற்காலிகமாக உயிர்ப்பித்தபடி.

சில வாரங்களுக்கு முன், பூங்காவில், என்னை நொடியில் நசுக்கிவிடக்கூடிய ஒரு பெரிய மரக்கம்பத்துக்கு அடியில் உட்கார்ந்திருந்தேன். ஆனால் அது என்னை நசுக்காது என்று நம்பினேன். ஏனென்றால் அதற்கு நான் “பிரான்ச்” (மரக்கிளை) என்று பெயரிட்டிருந்தேன். அதே பூங்காவில், முகம் கோண ஓடும் ஒரு மனிதனையும் கண்டேன். ஆனால் அவன் என்னைக் கொல்லவோ என்னைக் கொல்லக்கூடிய ஏதோவொன்றிடமிருந்து ஓடவோ மாட்டான் என்று நம்பினேன். ஏனென்றால் அவனுக்கு நான் “ஜாக்கர்” (மிதவோட்டக்காரன்) என்று பெயரிட்டிருந்தேன். அதே பூங்காவில் என்னைக் கொல்லக்கூடிய பல பத்து-டன் எடைகொண்ட கொலை இயந்திரங்கள் சுற்றித் திரிந்தன. அவற்றுக்கு நான் “டிரக்” (சரக்குந்து) என்று பெயரிட்டிருந்தேன். அவை ஊர்ந்து சென்ற தார் பட்டைக்கு, “ரோட்” (சாலை) என்று பெயரிட்டிருந்தேன். அதனால் அதை நம்பினேன். ஒவ்வொரு சொல்லும்  சில போலியான உத்தரவாதகங்களோடுதான் வருகிறது. அது சுட்டும் பொருட்கள் எப்படிச் செயல்படும் என்று நமக்குத் தெரியும் என்று நம்மை நம்பவைக்கிறது.    

“கொரோனா வைரஸை நாங்கள் முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்” என்றார் அதிபர் (டிரம்ப்), அமெரிக்காவில் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நாளில்.

செவிலியர்களாகப் பணியாற்றும், இணையர்களான, என் நண்பர்கள் ஒரு முறை, ஊஞ்சல் படுக்கையில் படுத்திருந்த பெண்ணின் தலையில் – அந்த ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த ஆணி அடிக்கப்பட்டிருந்த – செங்கல் விழுந்து, அவள் இறந்துபோன கதையைச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“மீன்களுடனே மொத்த விலங்கினங்களும் வந்தன”, என்று நான் நினைத்தது தவறாகவும் இருக்கலாம். அவன் இன்னும் பெயர் சூட்டாத சில விலங்குகளும் இந்த உலகத்தில் மிச்சமிருக்கக்கூடும். இப்போதுவரை அவனிடம் சில்வண்டுக்கான சொல் இல்லை. அவன் ஒரு மின்மினிக்குப் பெயர் சூட்டியதே இல்லை.

அன்றிரவு, பல திங்கள்களுக்கு முன் – அதே திங்கள்தான் – ஒளியின் கடைசிப் பொறிகள் வீழ்கையில், என் மகன், தன் குளியலுக்கு நடுவில், தன் பதினோராவது சொல்லைச் சொன்னான். அப்போது நான் அதை ஒரு தாயாகத்தான் கேட்டேன். துடுப்புள்ள அத்தனை உயிரினங்களையும் அவன் ஒற்றைச் சொல்லில் அடக்குவதைக் கேட்டு கை தட்டினேன். அவன் ஒவ்வொரு சொல்லாகப் பாதை அமைத்து என்னை நோக்கி நெருங்கி வருவதாக நம்பினேன். ஆனால், ஒவ்வொரு சொல்லும் எங்களுக்கு இடையில் கட்டி எழுப்பப்படும் சுவரில் ஒரு செங்கல்தான் என்பதை நான் அப்போதும் உணர்ந்தே இருக்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும், பெயரிடப்பட்ட, ஆனால் பகிரப்படாத, ஒரு அனுபவம்.

விக்னேஷ் ஹரிஹரன்

குளியல் தொட்டியின் வடிகால் மூடியைத் திறந்தவுடன் நீர் வடிவதை அவனோடு சேர்ந்து நானும் பார்த்துக் களித்திருந்தேன். தண்ணீர் முழுவதுமாக வடிந்து முடிந்தபோது இரவாகியிருந்தது. இப்போது தோன்றுகிறது, அந்த நீரின் வெதுவெதுப்பில், அப்போதே தேய்ந்துகொண்டிருந்த அவனது சொல்லற்ற நாட்களில், எல்லா இடங்களிலும் நிறைந்திருந்த தெளிவின்மையில், தெளிவின்மையைக் கண்டு அஞ்சவேண்டிய தேவை ஏற்பட்டிராத அந்தத் தருணங்களில், இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என்று. 

*

லூலூ மில்லர்: உலகப் புகழ்பெற்ற ரேடியோ லேப்ஸ் (Radiolabs) வலையொலிபரப்பு நிகழ்ச்சியின் (podcast) இணை ஒருங்கிணைப்பாளர். இன்விசிபிலியா (Invisibilia) எனும் மற்றொரு வலையொலிபரப்பு நிகழ்ச்சியின் நிறுவனர். “ஏன் மீன்கள் வாழ்வதில்லை” (Why Fish Don’t Exist) எனும் புத்தகத்தின் ஆசிரியர். இவரது கட்டுரைகள் நியூ யார்க்கர், வி.கியூ.ஆர்., ஓரியன், கேடபுல்ட், பாரிஸ் ரெவியூ போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *