விளையாட்டு (சிறுகதை) – ஸ்ரீசுதா மோதுகு

(தமிழில்: அவினேனி பாஸ்கர்)

ஸ்ரீசுதா மோதுகு

ஸ்ரீசுதா மோதுகு, 2017இல் ‘’அமோகம்’’ என்ற முதல் கவிதைத் தொகுப்புடன் தெலுங்கு இலக்கிய உலகத்தில் தடம் பதித்தார்.  இந்தத் தொகுப்பு உம்மிடிசெட்டி இலக்கிய விருதை வென்றது. பல்வேறு இலக்கிய இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள் எழுதிவரும் இவர் பல்நாடு (பழைய குண்டூர்) மாவட்டம், ரெண்ட்டசிந்த்தல என்ற ஊரில் பிறந்தார். தற்போது ஜமைக்கா நாட்டில் கிங்ஸ்டன் நகரில் மருத்துவராக பணிபுரிகிறார். இவர் எழுதிய மற்ற நூல்கள்: ‘விஹார், The song of The unborn Voice’ (2019), – கவிதை; ரெக்கலபில்ல (2019) [சிறகுப்பெண்] – சிறுகதைகள்; டிஸ்ட்டேப்பியா, Musings of Imperfect existences (2021) – சிறுகதைகள்; அந்த்தர்ஹித (2022) [மறைக்கப்பட்டது]- நாவல்; கொங்களிபுருகு சாம்ராஜ்யம் (2024) [கம்பளிப்பூச்சியின் சாம்ராஜ்ஜியம்]  – கவிதை

-அவினேனி பாஸ்கர்

*

விளையாட்டு (சிறுகதை)

“இந்த மாதிரி பண்ணிட்டானே இந்த பாவிப்பய கிரி! கூட பொறந்த அண்ணன்னு கூடா பாக்காம குத்திட்டானே! ரவுடி தாயோளி எப்போவும் இப்பிடிதான். ஏதுன்னா புத்திமதி சொல்லலாமுன்னு பாத்தா கண்ட மேனிக்கு திட்றான். வீணாப்போன கிரி, எவ்ளோ சண்ட போட்டாலும் நாராயணன் மட்டும் எப்போவும் சிரிச்சிகிட்டே பொறுத்துட்டு போறான். என்ன இருந்தாலும் நாராயணன் பெரியமனுஷன், அடக்க ஒடுக்கமானவன்.”

எல்லோரும் அவனைத் திட்டுகிறார்கள். என் மீது அனுதாப மழை பொழிந்து கொண்டிருக்கிறது. என்னைத் தூக்கி ஆம்புலன்சில் ஏற்றுகிறார்கள். லட்சுமியின் கதறலான அழுகை கேட்கிறது. ஆம்புலன்ஸ் தனக்கே உறிய சத்தத்தோடு புறப்பட்டது.

இதெல்லாம் எப்பொழுதோ தொடங்கியது.

அவன் பிறப்பதற்கு முன்பே என்னுள் சுயநலம் பிறந்தது. எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும் நானே என்று நிறைந்துவிட்டிருந்த நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் திடுத்திபென்று வந்து பிறந்தான், அதுவும் துறுதுறுவென்று அழகாகா வேறு இருந்தான்! தன் ஒளிரும் கண்களால் என்னைப் பார்த்து சிரித்தான். அந்த சிரிப்புதான் அவனை எனக்குப் பிடிக்காமல் செய்த முதல் தருணம். மரியம்மாளின் மடியில் அவன் விளையாடிக் கொண்டிருந்த தருணங்களைச் சுத்தமாக பிடிக்கவில்லை. அது தான் என் வெறுப்புக்கு காரணமாக இருக்க வேண்டும்! அந்த வெறுப்பு வெளிப்பட்டுவிடாமல் எவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொண்டேன் என்றால், அவன் மீது எனக்கிருந்த வெறுப்பை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் வளர வளர அவன் மீதான என் வெறுப்பும் வளர்ந்தது. எனக்குள் இருக்கும் வெறுப்பு அவனுக்குத் தெரிந்துவிடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனாலும் அவனுக்குத் தெரிந்துவிட்டது.

மரியம்மா அவனைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டே போய்ச் சேர்ந்துவிட்டாள். என்னை அல்லவா மரியம்மா முதலில் வளர்த்தாள்? அவள் ஆயம்மாவாக இருந்தாலும் அவள் என்ன கேட்டாலும் நான் கொடுத்தேன். ஆனால் அவளுக்கு அவனைத்தான் பிடித்திருந்தது, அவன் அவளை அம்மா என்று கூப்பிட்டதாலா? அவ்வளவு ஏன் லட்சுமி கூட அவனை சிரித்த முகத்தோடுதான் பார்ப்பாள். அந்தக் கண்களில் அவ்வளவு அன்பு வெளிப்படும். அவள் என் வாழ்க்கைக்குள் அல்வா வந்தாள்? என்னை எப்போதும் பயத்தோடோ, பக்தியோடோ பார்ப்பாளே தவிர அன்பாய் பார்த்ததில்லை. 

லட்சுமி இப்போது மெதுவாக அழுவது போல் தோன்றியது. ‘தம்பீ! அவருக்கு ஒன்னும் ஆகாதுல்ல?’ பக்கத்தில் இருந்த காம்பவுண்டரிடம் கேட்டாள் போலிருக்கிறது. லட்சுமி உண்மையிலேயே அழுது கொண்டிருக்கிறாள். அழாமல் என்ன செய்வாள்? என்ன இருந்தாலும் கட்டின புருஷன் அல்லவா?

“ஒன்னும் ஆகாதும்மா! என்ன நடந்துச்சு? தம்பியே குத்துற அளவுக்கு?”

“என்ன சொல்றது, தம்பீ! வாய்க்கா வரப்பு சண்ட முத்தி  பெரிசாயிடுச்சு. கிரி வேணும்னே எதுக்கெடுத்தாலும் சண்ட போடுவான். அவன் என்ன அட்டூழியம் பண்ணாலும் பொறுத்துக்கிட்டு எல்லாத்தையும் மன்னிச்சுடுவாரு இந்தாளு. கடைசியில அது இவரையே குத்துற அளவுக்குப் வந்துருச்சு”, லட்சுமி ஒரு விசும்பி அழுது கொண்டே சொன்னாள். 

உண்மையிலேயே நான் பொறுத்துக் கொண்டு சென்றேனா? நான் அவனைத் தூண்டிவிடவே இல்லையா? மீண்டும் மீண்டும் மன்னித்து அவனுடைய கையாலாகாதனத்தைக் கண்டு நான் எத்தனை முறை சிரிக்கவில்லை? சிரித்தேன், உள்ளுக்குள் சத்தமாகவே சிரித்திருக்கிறேன். யாரும் காண்டுபிடித்துவிட முடியாத அளவுக்கு வலுவானதொரு முகமூடியிட்டு நான் என்னை மறைத்தாலும், அவன் மட்டும் முகமூடிக்குப் பின்னால் இருக்கும் என் உண்மையான முகத்தை கண்டுபிடித்து விடுவான். அதைத் தாங்க முடியாமல் தான் அவன் ஒவ்வொரு முறையும் சண்டை போடுவான். போலித்தனமில்லாமல் உண்மையாக  இருப்பதென்றால் அதுதானோ என்னவோ! எல்லோருக்கும் அவனை தவறான மனிதனாகக் காட்டுவது அந்த வெளிப்படையான குணம்தான். ஒவ்வொரு சண்டையின் மூலமும் அவன் என் முகமூடியைக் கழற்ற மூர்க்கமாக முயற்சிப்பான். நான் என்ன செய்தேன்? சற்றும் தளர்ந்துவிடாமல் அமைதி காத்து, முகமூடி விலகிவிடாமல் பாதுகாத்துக்கொண்டு ஜெயித்துக் கொண்டே இருந்தேன். அவன் மீண்டும் மீண்டும் சோர்வடைந்து வெறுப்பின் உச்சியில் என்னைக் குத்திவிட்டான். நான் சாதித்து விட்டேன். எல்லோர் முன்னிலையிலும் அவனை முழுக்க முழுக்கக் கெட்டவனாய் காட்டுவதில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். இவ்வளவு செய்தும் என்னை மீண்டும் கேலி செய்வதுபோல் அவன் குத்திவிட்டு, பின் ஆம்புலன்ஸை அழைத்து, சரண் அடைய காவல் நிலையம் சென்றானாம். அவன் என்னை குத்திவிட்டு போகும் போது பார்த்த அந்தப் பார்வையும், சொன்ன வார்த்தையும் என்னை பின் தொடரந்துகொண்டே இருக்கின்றன. ‘இதுக்குத்தானே ஆசப்பட்ட?’ என்பது போல பார்தான். “பயப்படாத, செத்துபோற அளவுக்கு குத்தல” என்றான் மிகவும் அமைதியாக! சோகத்தோடும், நீர் ததும்பும் கண்களோடும் அவன் முகம் சோர்வாக காணப்பட்டாலும் மனம் மிகவும் தெளிவாக இருந்தது, அது அவன் என்னுடன் செய்துகொள்ளும் கடைசி ஒப்பந்தம் போல இருந்தது. மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய இந்த தருணம் ஏன் துக்கம் சூழ்ந்ததாக மாறியது? இந்த வெற்றி தானே உனக்கு வேண்டியது என்று வெற்றியை எனக்கு கொடுத்துவிட்டு என்னைத் தோற்கடித்தானா? 

ஆம்புலன்ஸின் அலறல் என் காதில் சத்தமாக ஒலித்தது. இப்பொழுது  லட்சுமியின் அழுகை கேட்கவில்லை. சிட்டி நினைவுக்கு வந்தாள். சிட்டி கூட அவள் அப்பாவைப் போல தான். அவளுக்கு ஐந்து வயது. அவள் சுவருக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து கை அசைப்பாள்.  தன் விரலைக் காட்டி என் மூக்கை வெட்டுவிடுவேன் என்பதாக சைகை செய்வாள். அடுத்த நொடியே குளிர்விக்கும் சிரிப்பொன்றை வீசுவாள். அப்படியே அசல் அவள் அப்பாவின் பிரகாசமான புன்னகையைப் போலவே இருக்கும். லட்சுமிக்கு அவளென்றால் கொள்ளைப் பிரியம். சிட்டி எவ்ளோ அழகா சிரிக்கிறா? என்பாள். லட்சுமிக்கு ஏன் சிட்டியின் சிரிப்பு பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்! சிட்டியின் சிரிப்பு என்னை கேள்விகளால் துளைப்பது போல் இருக்கும்.

குத்துப்பட்ட இடத்தில் மிகுந்த வலி, எரிச்சல். மருத்துவமனை எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ! சதுப்பு கழனியிலிருந்நது சுமார் இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? சதுப்பு கழனி என் கைக்கு வந்தபோது, ​​அந்த கழனி தனக்கு வேண்டும் என்று எவ்வளவு சண்டைப் போட்டான்? “உன் அண்ணன் தரிசு நெலத்த தனக்கு வெச்சிகிட்டு ஒனக்கு விளைச்சல் நெலத்த தந்திருக்கான். இருந்தும் நீ ஏன்டா இப்படி வம்பு பண்ற?” என்று ஊரார்கள் கேட்டபோது, அவன் கோபமாக என்னைப் பார்த்த பார்வையும், அவனைச் சீண்டுவதைப் போல் நான் சிரித்த சிரிப்பும் நினைவுக்கு வந்தன. சதுப்பு கழனி கன்மாய்க்கு ஒரு பக்கத்தில் மேட்டில் இருக்கும். “எப்போ வேணும்னாலும் தங்கம் விளையுற கழனிடா இது. பல காலமா தரிசாக் கெடந்தது” என்று அப்பா என்னை உட்காரவைத்து சொன்னபோது அவன் அங்கேயே அந்த மண்ணில் எருது பொம்மைகளைச் செய்து கொண்டிருந்தான். ​​அவன் எங்கள் பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தெரியும். அவன் கேட்பது எனக்குத் தெரியும் என்பதும் அவனுக்கு தெரியும். “இவன் கைல ஏதோ கலை இருக்குடா… களிமண்ல எவ்ளோ நல்லா எருது பொம்ம  பண்ணியிருக்கான் பாரு?” அவனை பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டே சொன்னார் அப்பா! அவரும் அப்படித்தான். 

“அண்ணா! இந்த மாட்ட கட்டி சதுப்பு கழனில ஏரோட்டுவேன்!” காளை பொம்மைகளை எனக்கு காட்டிச் சொன்னான் கிரி.

அதன் பிறகு, காய்வதற்காக வைத்திருந்த எருது பொம்மைகளில் ஒன்று சிதறிப் போய் விட்டது. அன்று நாள் முழுக்க சோறு சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தான். என் செருப்பில் ஒட்டியிருப்பதைப் சதுப்பு களிமண்ணை பார்த்துபோது என்ன புரிந்ததோ என்னவோ, கோபமாக என்னோடு சண்டையிட்டு அன்று என் கையில் பேனாவால் குத்திய வடு இப்பொழுது சுறீர் என்றது. கன்மாய்க் கரையை வெட்டி அறுத்து, அவன் கழனிக்கு தண்ணீர் போகவிடாமல் செய்தது நான்தான் என்பது அவனுக்கு தெரியும். அவனுக்கு மட்டுமே தெரியும். இப்பொழுது வயிற்றில் குத்தினான். வலி அதிகமாகியது.

லட்சுமி, ஆம்புலன்ஸ் காம்பவுண்டரிடம் “பெரிய ஆஸ்பத்ரியில எவ்வளோ ஆகும்? நீங்க எந்த ஊரு?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.  இப்போது ஏனே அவள் குரல் தணிந்திருந்தது. ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு அவளுக்கிருந்ந அந்த பதற்றமான அழுகைக் குரல் இப்போது இல்லை. அத்தனைப் பேர் முன்னிலையிலும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத லட்சுமி! இவள் எப்போதாவது மனதார நேசித்தாளா என்னை?

“தம்பியே குத்துறது எவ்ளோ அநியாயமஂ!” என்று அந்த காம்பவுண்டர் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான். முடிந்தவரை அனுதாபத்தைக் கொட்டிவிட முயன்று கொண்டிருந்தான். இப்பொழுது, லட்சுமியின் குரல் மெல்ல ஒலித்தது, “ஆமா, இவரென்ன லேசுபட்ட ஆளா? வெளிய தெரியாது அவ்ளோதான்…” இப்படி ஏதோ சொன்னாள். எனக்கு காது சரியாகத்தான் கேட்கிறதா? அப்படி என்றால் லட்சுமிக்கு என்னைப் பற்றித் தெரியுமா? வேறு யாருக்குகெல்லாம் தெரியும்? எனக்கு ஊரில் பெரிய மனிதன் என்ற பெயர் இருக்கிறதே? எல்லோரும் என்னை நம்புகிறார்களா? நான் உள்ளே எப்படிப்பட்டவன் என்று எல்லோருக்கும் தெரியுமா? அப்பாவுக்கும் சிட்டிக்கும் தெரிந்துவிட்டதைப் போல லட்சுமிக்கும் தெரிந்துவிட்டதா? அப்பா சாகும் போது, “‘நாராயணா, உன்ன மாதிரி அவனுக்கு பொழக்க வராது டா… உலகம் தெரியாது,  பத்திரம் டா” என்று சொன்னார். அப்பா யாருக்கு பத்திரம் என்று சொன்னார்? அவனை பத்திரமாக பார்த்துகொள்ளச் சொன்னாரா? என்னை அவனிடம் பத்திரமாக இருக்கச் சொன்னாரா? இல்லை என்னிடம் அவனை பத்திரமாக இருக்கச் சொன்னாரா? இதயத்தை ஈட்டியால் குத்துவது போன்ற  சொல்லைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

இப்போது லட்சுமி – அவனை முறைக்கும் கண்களால் பார்க்கும் இந்த லட்சுமி.

இவ்வளவு நாள் நான் கஷ்டப்பட்டு நடித்ததெல்லாம் வெறும் நடிப்பு என்று எல்லோருக்கும் தெரியுமா? என்னை விட அவனே சந்தோஷமாய் வாழ்ந்தான், நடிக்க வேண்டிய தேவையில்லாமல், இயல்பாய், உள்ளே எந்த வலியும் இல்லாமல்! நானோ எல்லாவற்றையும் உள்ளுக்குள் சுமந்து கொண்டு நடித்தேன். வலி தாங்க முடியாத அளவிற்கு பெருகிக்கொண்டேயிருக்கிறது. ஆம்புலன்ஸ் ஏதோ ஒரு திருப்பத்தில் திரும்புவது போல் தெரிகிறது. வலியால் முனகினேன். “வண்டி மெயின் ரோட்டுக்கு வந்துருச்சி. கொஞ்ச நேரந்தான்… போயிடலாம். பொறுத்துக்கோங்க” என்கிறான் காம்பவுண்டர்.

ஸ்ரீசுதா மோதுகு

எதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்?

நான் குத்தப்பட்டிருந்தாலும், குத்தும்படி செய்தது நான்தான் என்று லட்சுமிக்கு தெரிந்துவிட்டது. இனி வெளியே வந்து அதே முகமூடியின் பின்னால் வாழ்தென்ன் பயன்? இனி எப்படி வாழ்ந்தால் என்னை இவர்கள் நம்புவார்கள்? சுருட்டு புகைத்துக்கொண்டே துப்பிவிட்டு பக்கவாட்டில் திரும்பி என்னைப் பார்க்கும் அப்பா, அவனுக்கு உலகம் தெரியாதுடா என்று சிரிக்கும் அப்பா, வாழறதுக்கு உனக்கு தான்டா தெரியல என்று கேலி செய்வது போல் இருகிறது… முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. நான் சம்பாதித்த எல்லாம் போய்விட்டது.

எந்த சத்தமும் கேட்கவில்லை.

*** 

லேசான  ஈரத் தீண்டல். கண்களைத் திறந்தேன்.

கண்ணாடிக்குப் பின்னால் இருந்து லட்சுமி என்னைப் பார்ப்பது போல் தோன்றியது. அந்தப் பார்வை எனக்கு பிடிபடவில்லை. அந்தப் பார்வைக்குப் பின்னால் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. ஐசியுவில் இருப்பது போல் இருந்தது. சுற்றிலும் என்னைப் போன்ற நோயாளிகள். மரணத்தின் விளிம்புவரைச் சென்றவர்கள். சென்று திரும்பி வந்தவர்கள். அந்த எல்லையைத் தாண்டிச் செல்லத் தயாராக இருந்தவர்கள். இங்கே யாரும் அருகருகில் இல்லை. இடையே கண்ணாடிகள் இருந்தன. ஒருவரின் காற்று மற்றவரைத் தீண்டாது. இங்கே நடிக்க வேண்டிய அவசியமில்லை. யாரையும் புன்னகையுடன் பேசி, வரவேற்று அன்பு காட்ட வேண்டிய அவசியமில்லை.

நர்ஸ் சிரித்துக் கொண்டே வந்து, “மொத்தமா நாலு நாள் கழிச்சி கண்ணத் தொறந்திருக்கீங்க” என்றாள். நான்கு நாட்களா? மேலே இருக்கும் அப்பா தென்படவில்லையே! இந்த நான்கு நாட்கள் எங்கே போனேன்?

“நாளைக்கு ரூமுக்கு மாத்திருவோம்.”

மீண்டும் நடிக்க வேண்டுமா? நான் யார் என்று எல்லோருக்கும் தெரிந்துபோய்விட்ட பிறகு இந்த உலகத்தில் என்ன செய்வது?

ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். மனிதர்கள யாரும் கண்ணில் படவில்லை. ஒரு கருப்பு நாய் எச்சில் இலையை கவ்விக்கொண்டுச் சென்றது. இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு வெள்ளை நாய் ஓடி வந்து அதைப் பிடுங்கப் பார்த்தது. இரண்டு நாய்களும் அந்த எச்சில் இலைக்காக சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன. வெள்ளை நாய் எச்சிலிலையைப் பிடிங்கிக்கொண்டு ஓடப்பார்த்தது. திடீரெனக் குரைப்பொலி சத்தம் பெருகியது. யாரோ வந்து நாய்கள் மீது ஒரு கல்லை எறிந்தார்கள். இப்பொழுது அந்த எச்சிலிலையை விட்டு விட்டு இரண்டும் வேறுவேறு திசையில் கத்திக்கொண்டே ஓட்டம் எடுத்தன. 

லட்சுமி சாப்பாட்டு கூடையுடன் உள்ளே நுழைந்தாள். சோற்றைத் தட்டில் போட்டு குழம்பு ஊற்றி பிசைந்து தட்டை நீட்டினாள்.

“என்னா இது? உப்பு சப்பில்லாம?” என்றேன் கோபமாக. 

“கொஞ்ச நாளைக்கி பத்திய சாப்பாடுதான் குடுக்கணும்னு எங்க அம்மா சொன்னாங்க. உப்பு, காரம் இல்லாம ஒடம்பு தணியற செய்யற கொழம்பாமா” என்றாள் லட்சுமி.

காரமும், உப்பும் இல்லாத ருசியற்ற சாப்பாடு. நடிப்பில்லாத வாழ்க்கை. நடிக்காமல் இருக்க முடியாத முகம்.

“கிரி ஸ்டேஷன்லயே இருக்கானாம். எவ்ளே கேட்டாலும் வாயத் தொறக்கலையாம். சாயந்தரம் போலீஸ் வராங்களாம் உங்ககிட்ட பேசறதுக்கு.”

நான் தலையைத் திருப்பிக்கொண்டு ஜன்னலைப் பார்த்தேன். வெள்ளை நாய் அரக்கப் பறக்க ஓடி வந்து எச்சில் இலையைக் கவ்விக்கொண்டுச் சென்றது.

*** 

“என்ன நடந்துச்சு?”

நான் எதுவும் சொல்லவில்லை.

“சொல்லுங்க, உங்க தம்பி உங்கள குத்துனாரா?”

“இல்ல, யாரும் குத்தல. திடீர்னு தடுமாறி முன் பக்கமா சரிஞ்சு விழுந்தேன். கடப்பாரை வயித்துலு எறங்கிருச்சி.”

“உங்க தம்பிதான் குத்துனதான் சொல்றாங்களே அங்க இருந்து பார்த்தவங்க.”

“இல்லை, அவன் குத்தல. ஆனா அவன் அங்கதான் இருந்தான். தண்ணி கால்வாய் கிட்ட நின்னுட்டு ஒருத்தர ஒருத்தர் சத்தமா திட்டிகிட்டோம். அவன்தான் ஆம்புலன்ஸுக்கே ஃபோன் பண்ணி கூப்ட்டான்.”

அவர்கள் என்னை பெருமிதத்தோடும், பூரிப்போடும் பார்த்துக் கொண்டே வெளியேறினார்கள்.

“உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசுங்க!” என்றாள் லட்சுமி. அவள் கண்களில் அந்த மின்னல் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.

அவினேனி பாஸ்கர்

எனக்கு சிரிப்பு வந்தது. உண்மையிலேயே எனக்கு பெரிய மனதுதானா? இனிமேல் நான் இன்னும் சிறப்பாக நடிக்கப் போகிறேனா? இப்பொழுது எல்லாம் மறைந்துபோகும், ​​இந்தக் கொலை முயற்சியில் என் பங்கென்ன என்பதைப் பற்றி இனி யாரும் யோசிக்க மாட்டார்கள். இது ஒரு புத்திசாலித்தனமா திட்டம். நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இன்று எனக்கு எவர் மீதும் எந்தக் கோபமும் இல்லை. குறிப்பாக அவன் மீது.  இரத்தத்தைப் பகிர்ந்து கொண்டு ஒரே வயிற்றில் பிறந்தவன் மீது. வயிற்றைக் குத்தியவுடன் பீறிட்டுக்  கொண்டு வந்த ரத்தம் போலே உள்ளுக்குள்ளே சந்தோஷம். இனி கண்டிப்பாக என் கை தான் மேலோங்கி இருக்கும். அப்படி என்றால் என் ஒவ்வொரு நகர்வும் நன்கு அறிந்த அவன் இப்பொழுது என்ன செய்வான்?

ஜன்னலுக்கு வெளியில் அந்தக் கருப்பு நாய் மீண்டும் வந்து தேடிக்கொண்டிருக்கிறது. மேலே பார்த்துக்கொண்டே விட்டு விட்டு ஊளையிட்டது. யாரோ தூக்கி எறிந்த ஒரு எச்சிலிலை கிடைத்தது அதற்கு. எங்கிருந்தோ, மற்றொரு நாய் குரைத்தது.

இப்போது அவன் கூட உலகத்தின் பார்வையில் என்னைப் போலவே!

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *