”கலையும் கைவிடுதலும்”: ம.நவீன்

(லதாவின் சிறுகதைகளை முன்வைத்து ம.நவீன்)

எழுத்தாளர் லதா

லதா சிங்கப்பூரின் முதன்மையான எழுத்தாளர். இளமையிலேயே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர். நவீன கவிதைகள் வழியாக  1990களில் இலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கியவர்.  பத்திரிகையாளராகவும் இலக்கியச் செயல்பாட்டாளராகவும்  தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கு அறிமுகம் கண்டவர். 2008இல் வெளிவந்த இவரது ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ எனும் தொகுப்பின் வழி சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்பட்டார். இத்தொகுப்புக்கு சிங்கப்பூர் இலக்கிய விருது கிடைத்தபோது பரவலான கவனத்திற்குச் சென்றது.

லதாவின் அந்த முதல் தொகுப்பை மறுவாசிப்பு செய்தபோது முதன்மையாக எனக்குத் தோன்றிய விமர்சனம் அவை கைவிடப்படாத கலை என்பதுதான்.

சிறந்த கலை வெளிபாட்டை உருவாக்கும் கலைஞர்களிடம் பொதுவான ஓர் அம்சமுண்டு. அவர்கள் கலையில் ஈடுபடும் தருணம் அதிலிருந்து தன்னியல்பாக வெளியேறி விடுவர். அங்கு நிகழ்த்துபர் இருப்பதில்லை; நிகழ்வே இருக்கிறது. நடனம், இசை கலைஞர்களிடம் இந்த அம்சத்தை வெளிப்படையாகவே காணலாம். தற்காப்புக் கலைஞர்களிடமும் இந்த வெளியேறும் அம்சத்தை நான் கண்டதுண்டு. ஆனால் இச்சாத்தியத்தை இலக்கியத்தில் சொல்லும்போது கேலியும் கிண்டலும் எழுந்து வருவது இயல்பு. இங்கு மொழி கைவந்துவிட்டால் இலக்கியம் கைகூடிவிட்டதாக நம்புபவர்கள்தான் அதிகம். ஆனால் இலக்கியம் தன்னியல்பாக உச்சத்தை அடையும் கணம் என்பது எழுத்தாளனின் கை விலகிக்கொள்ளும் தருணம்தான். அப்படி விலகும்போது  அவ்விடத்தை கடவுளின் மாயக் கரங்கள் பற்றிக்கொள்கின்றன. மருள் வந்தவனின் உடலில் நுழையும் வேறொன்றின் ஆட்டம் அவன் ஆழுள்ளம் வழிவிடும்போது மட்டுமே நிகழ்வதுபோன்றது அது.

முதல் வாசிப்பில் தோன்றியது போலவே அத்தொகுப்பில் இருந்த சிறுகதைகள் சிங்கப்பூர் சூழலில் முக்கியமானவை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கவில்லை. புதிய கருப்பொருள்களைக் கொண்ட கதைகள் அவை. ஆனால் பறந்து அடையும் உச்சங்களின் சாகசம் அறியாமல்  சுருக்கிடப்பட்ட பட்டங்களாக லதாவின் விரல்களில் சிக்கி ஓர் எல்லையில் நின்று மிதந்தன.

லதா  1990களில் எழுத வந்தவர். எழுத்தாளராகத் தன்னை அடையாளம் கண்டபோது பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரனை வாசிக்கத் தொடங்கினார். இவர்கள் வடிவ ஒழுங்கை முதன்மையாக வைத்த நவீன எழுத்தாளர்கள். தனிமனித பார்வையை எழுதியவர்கள். தொகுத்து கூர்மையுடன் கூற முனைந்தவர்கள். அறிவார்ந்த (logic) தன்மையை மட்டுமே கையாண்டவர்கள். இவர்களை வாசித்து வளர்ந்த பல எழுத்தாளர்களைப் போல லதாவும் தர்க்கபூர்வத்தையும் வடிவ ஒழுங்கையும் தன் தொடக்க கட்ட எழுத்தில் கையாண்டுள்ளார். 

எதார்த்த வாழ்வில் வரும் பெண்களின் இருப்பே லதாவின் முதல் சிறுகதை தொகுப்பின் தளம். சிங்கை போன்ற நகரத்தில் அன்பு, உறவுகள் எல்லாவற்றையும் மீறி பணம் எப்படி தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்கிறது என்பதை சொல்லும் ‘பயணம்’, மனித உடலின் அடிப்படை இச்சைகளைகயும் அதன்மேல் அவன் மனம் கட்டமைக்கு பாவனைகளையும் பேசும் ‘நாளை ஒரு விடுதலை’, பெருநகரம் மனிதர்களை எவ்வாறு உடல், உணர்வு ரீதியாக அந்நியப்படுத்தி வைக்கிறது என்பதைக் காட்டும் ‘அறை’, நகர வாழ்வில் சிடுக்குகளுள் உள்நுழைந்து பின் வெளிவரத் தெரியாமல் தவிக்கும் செண்பகவள்ளியின் மன உணர்வுகளை தொன்மத்தின் படிமத்தில் ஏற்றிச் சொல்லும் ‘படுகளம்’ போன்றவை முதல் தொகுப்பில் இருக்கும் முக்கியமான சிறுகதைகள்.

இந்தக் கதைகள் அனைத்துமே மின்னல் கீற்றுபோன்று சட்டென பிரகாசித்து மறையும்  வாழ்க்கைச் சித்திரத்தை முன்வைப்பவை. அவை அன்றாடங்களில் உண்மைதான். ஆனால் தனி மனிதனின் அன்றாட உண்மை என்பது மானுட உண்மையாக பொதுமைப்படும்போதே உச்சம் கொள்கின்றன. அப்படி பொதுமைப்பட்டு ஒரு புனைவு பயணிக்கும் சுதந்திரத்தை லதா வழங்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது.

***

நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதாவின் சிறுகதையை நான் 2012ல் ‘குவர்னிகா’ பணியின்போது வாசித்தேன். ‘குவர்னிகா’ புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் பெருந்தொகுப்பாக ஷோபா சக்தி தலைமையில் உருவான களஞ்சியம். நான் அதன் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தேன். மலேசிய – சிங்கை படைப்புகளைத் தொகுத்து வழங்குவதில் மும்முரமாக இருந்தபோது லதாவின் ‘அலிசா’ சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லதா எழுதியிருந்த கதை அது. அந்தச் சிறுகதையை வாசித்தபோது எனக்கு மீன் குஞ்சுகளும் கடலாமை குஞ்சுகளும் உடனடியாக நினைவுக்கு வந்தன.

மீன் குஞ்சுகளின் உயிர்துடிப்பு உணவுத்தேவைக்கானது. உயிர் ஜீவித்தல் மட்டுமே அதன் ஆதி உணர்வில் உள்ளது. உணவின் பொருட்டே உடலொடிய துடித்து அவை காலத்தை விழுங்குகின்றன. கடலாமை குஞ்சுகள் அதற்கு நேர் எதிரானவை. பிறந்து இருவாரங்கள் அவை அசைவதே இல்லை. பிணம்போல மிதந்து கொண்டிருக்கும். அவற்றுக்கான உணவு பிறக்கும்போதே அடிவயிற்றில் நிரப்பப்பட்டிருக்கும். உணவு தீர்ந்தபிறகே அவை அசைகின்றன; நீந்துகின்றன. இரண்டையும் பார்த்தபிறகு நண்பரிடம் சொன்னேன், “நிறைவு அசைவின்மையை உருவாக்குகிறது.”

அபோதத்தின் துடிப்புடன் இருக்கும் பத்து வயதுச் சிறுமிக்கும் அனுபவம் நிறைந்த அவள் தாத்தாவுக்கு இடையில் உள்ள உறவைப் பேசும் கதை ‘அலிசா’.

பத்து வயதுச் சிறுமியான அலிசா தனது பள்ளி விடுப்புக்கு தாத்தா, பாட்டி வசிக்கும் உபின் தீவுக்கு வருகிறாள். விடுப்பு முடிந்தும் அம்மா வந்து அழைத்துச் செல்லாததால் அந்தத் தீவிலேயே தங்கிப் படிக்கிறாள். சிங்கப்பூரின் பரபரத்த நகரச் சூழலில் வாழ்ந்த துடிப்பான சிறுமி அவள். தேங்கிய குளத்தின் மீது அலையும் நீர்ப்பூச்சிபோல அவள் மட்டுமே உபின் தீவின் முழு உயிர்விசையுடன் சுற்றுகிறாள். புதிய இடத்தை அறிந்துகொள்ள எத்தனிக்கும் அவளுக்கு தீவும் தாத்தாவும் வேறு வாழ்வை சொல்லித்தருகின்றனர். அது சொல்லால் வடிவமைக்கப்படாத போதனை. 

உபின் தீவு சிங்கப்பூரின் சராசரிச் சூழலில் இருந்து வித்தியாசப்பட்டது. பெரும்பாறைகளை உடைத்து அனுப்பும் கல்குவாரியில்தான் அங்குப் பலரும் வேலை செய்கிறார்கள். தாத்தாவிற்கும் அங்குதான் வேலை. கல்குவாரிகள் மூடப்பட்டபோது பலரும் வெவ்வேறு இடங்களுக்குப் பிழைப்பு தேடிப்போக தாத்தா மட்டும் அங்கேயே இருக்கிறார். தாத்தாவின் வாழ்வில் நாளை என்ற தினமே கேள்விக்குட்பட்டதுதான். ஆனால் அவருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எந்தச் சுழலும் அவரை சலனப்படுத்துவதில்லை. எல்லாமே அவர் தன் வாழ்வில் முன்னெப்போதோ பார்த்தவை. அலிசாவும் அவருக்கு அப்படித்தான். ஒருவகையில் அலிசா தன் மகளின் பிரதி.

காலம் முழுவதும் கழுத்தில் கயிறு முடிச்சிட்டு வளர்ந்த ஆட்டுக்குட்டி கட்டு அவிழ்த்து விடுவிக்கப்பட்டதும் நெடுதூரம் ஓடி உரிமையாளரைக் குழப்பத்துடன் திரும்பிப் பார்க்கும் மிரட்சியான கண்களுடன் சுற்றுகிறாள் அலிசா. நிபந்தனையற்று அவளுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம் அவளுக்கே ஆச்சரியமானது. கையில் கிடைத்துள்ள அரிய ஒளிபந்துபோல அதைக் கையாள்கிறாள். அந்தச் சுதந்திரம் கொடுக்கும் அனுபவத்தை தன்னுள் தானே தேடி நிறைக்கும்போது அவள் தாத்தாவை அறிந்தவளாகிறாள்.

இந்தக் கதையின் பலம் என்பது அது உருவாக்கும் வாழ்வின் அனுபவம்தான். நடத்தைகளைக் கூர்மையாக விவரிப்பதன் மூலம் உள்ளம் வெளிப்படும் தருணங்களை லதா ஏற்படுத்துகிறார்.  ஒரு தீவின் நிசப்தத்தை மொழியில் உருவாக்குகிறார். கடல் சூழ்ந்த உப்பு நிலத்தின் சாவகாசமான பொழுதுகளை நிகர் வாழ்வின் அனுபவங்களாக சொற்களின் இடைவெளிகள் எங்கும் கடத்துகிறார். அந்த  இடைவெளியில் ஒரு சிறுமியின் பரிணாமத்தை சித்திரித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளில் லதாவின் வாசிப்பு அடைந்துள்ள மாற்றமும்  மொழியில் அடைந்துள்ள தாவலும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. புனைவின் உடலில் இருந்து அவர் மெல்ல ஆன்மாவை நோக்கி நகர்ந்திருந்தார். தொகுத்துக் குவிதலில் இருந்து வெடித்து படர்வதாக அவர் புனைவு இருந்தது. அறிவார்த்தத்திலிருந்து (logic) உன்னதமாக்கலுக்கு (Sublime) அவர் எழுத்து நகர்ந்திருந்தது. மொழியின் சுவர்களை மென்மையாகத் தட்டினால் திறந்துகொள்ளும் சுரங்கங்களை அவர் அடையாளம் கண்டிருந்தார்.

‘நான் கொலை செய்யும் பெண்கள்’ தொகுப்பிலிருந்து லதா செய்துள்ள மிகப்பெரிய பாய்ச்சலுக்கு வலுவான சான்றாக ‘அலிசா’ இருந்தது. 2012 தொடங்கி 2022 வரை அவர் எழுதிய ஒன்பது சிறுகதைகள் ‘சீனலட்சுமி’ எனும் பெயரில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாக வந்தபோது அது தமிழில் வெளிவந்த எழுத்துகளில் முக்கியமானது என உணர்ந்துகொள்ள முடிந்தது.

***

தாய்மையின் உன்னதங்கள் குறித்து தமிழில் ஏராளமாக எழுதப்பட்டுவிட்ட சூழலில் சிங்கப்பூர் போன்ற பொருளியல் அழுத்தங்கள் நிறைந்த நாட்டில் தாய்மையின் மதிப்பு என்ன என்பதை கவித்துவமாகச் சித்திரிக்கும் சிறுகதையான ‘இளவெய்யில்’ இத்தொகுப்பில் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. 

ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நீலமலர் முதலில் தன் தூக்கத்தை இழக்கிறாள். கிடைக்க வேண்டிய பதவி உயர்வை இழந்தவள் பின்னர் வேலையையும் இழக்கிறாள். கணவனின்,  அவன் குடும்பத்தின் அருகாமையை இழக்கிறாள். தன் உடலின் மீதுள்ள பிடிப்பை இழக்கிறாள். உடை நழுவிய நிர்வாண உடலை யார் பார்த்தால் என்ன என்று கடக்கிறாள். இந்த இழப்புகளின் அழுத்தம் அவளை தெளிவற்ற வாழ்க்கைக்குள் தள்ளுகிறது. தாய்மையினால் அனைத்தையும் இழந்து தூக்கத்தை மட்டும் கடைசியாக இரைஞ்சுகிற ஒரு பெண் உலாவும் அந்தரத்து நிலைதான் இக்கதை. அந்த அந்தரங்க மனநிலையை சொற்களின் மூலம் கடத்துவதுதான் இந்த புனைவின் சாகசம். கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவில் அலைபவள் குழந்தையை பல சமயம் தொலைப்பவளாகிறாள். தொலைக்கும் ஒவ்வொரு தருணமும் பதறும் அவள் ஒவ்வொருமுறையும் ஓடிச்சென்று குழந்தையை மீட்கிறாள். இந்த பிறழ்ந்த நிலைக்கு அவள் செல்லும் காரணங்களும் அதன் வெளிப்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று முறுக்கி சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சிறுகதைகளை வாசிக்கும்போது எனக்கு விலகலாகத் தெரியும் விசயம் ஒரு படைப்பை சிங்கைப் படைப்பாக மாற்ற முனையும் எழுத்தாளர்களின் மெனக்கெடல். பெரும்பாலும் சிங்கப்பூருக்கு அண்மையில் புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்படும் ஆக்கங்கள் இந்த பாவனையை ஏந்திக்கொள்கின்றன. உரையாடல்களில் அவசியமற்று ‘ல’ சேர்ப்பது, மலாய்ச் சொற்களை வலிந்து திணிப்பது போன்றவை இயல்பாக அக்கதைகளுக்குள் பிளாஸ்டிக் தன்மையைக்கொண்டு வந்துவிடுகின்றன. ஒரு நிலத்தில் உருவாகும் கதை அங்கு புழங்கும் சொற்களால் அடையாளம் பெறுவதல்ல. அந்நிலத்தின் ஆன்மாவை உள்வாங்குவதால் உருவாவது. இக்கதை இங்கு மட்டுமே நடக்க முடியும் என உணர்த்துவது. இளவெய்யில் அப்படியான கதை. ஒரு பெண்ணின் வழியாக ஒரு சமூக மனத்தை வடிவமைத்துக் காட்டும் கதை. பிள்ளைப்பேறு ஒரு தேசத்தில் வேறென்னவாக பரிணாமம் அடைந்துள்ளது எனப் புரிய வைக்கும் கதை.

தாய்மையும் அது சார்ந்த உளவியல் சிக்கலையும் பேசுவதைப் போலவே மகளின் வழியாக தாயை அறியும் தருணம் ஒன்றையும் இத்தொகுப்பில் உள்ள ‘நிர்வாணம்’ சிறுகதை பேசுகிறது.

சிக்கல்கள் சிறுகதையின் பின்னலை உருவாக்கும் அடிப்படையான முனை. லதா இந்த முனைகளை உருவாக்கும் இடங்கள் சுவாரசியமானவை. சம்பவங்கள் சிறுகதைகள் அல்ல. சம்பவங்களைச் சொல்லும் விதமே ஒன்றைத் தேர்ந்த புனைவாக மாற்றுகிறது.

‘நிர்வாணம்’ சிறுகதையில் தன் வாழ்வை திருமணத்தின் வழி தொடங்க நினைக்கிறாள் மகள். அப்போதுதான் அவளது அம்மாவுக்கும் புற்றுநோய் என மருத்துவ பரிசோதனை அறிக்கை வருகிறது. இந்த முடிச்சில் இருந்து கதை பின்னப்படுகிறது. திருமண ஏற்பாட்டில் மட்டுமே நடக்கும் மன இடையூறுகளுக்கு மத்தியில் அம்மாவை இழுத்துக்கொண்டு வீடு, மருத்துவமனை என அலைகிறாள். காதலனுடன் முரணும் விலகலும் அதிகரிக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் அழைக்காமல் காலம் கடத்துகின்றனர். எல்லா எரிச்சல்களோடும் அம்மாவை அணுகுபவளுக்குள் அவள் தொலைத்து வைத்திருந்த சிறுமி நுழைகிறாள். அம்மாவை அந்தச் சிறுமியாக அணுகும்போது அத்தனை சுமைகளும் கழண்டு கொள்கின்றன. அந்தச் சிறுமியை அடையாளம் கண்டுகொண்ட அம்மா துணிக்கடையில் அவள் முன் நிர்வாணமாக ஆடை மாற்றுகிறாள். நானா, நீயா எனும் போட்டியை அந்தக் கணம் காதலன் தீர்த்து வைக்கிறான். அவனிடமிருந்து அத்தருணம் அழைப்பு வருகிறது. ஆனால் அது அவளுக்கு அப்போது தேவையாக இல்லை. அவள் அப்போது குழந்தையாக அம்மாவின் முன் நிர்வாணமாக இருக்கிறாள். குழந்தையிடம் அப்போது போட்டிகள் இல்லை, ஆணவம் இல்லை. எனவே காதலனும் தேவையாக இல்லை. 

‘இளவெய்யில்’ சிறுகதையில் வரும் தாய் தன் ஆழுள்ளத்தில் குழந்தையிடம் இருந்து விலகி புறத்தில் குழந்தையைத் தேடிச் செல்பவளாக இருக்கிறாள். குழந்தையை ஒவ்வொரு முறையும் வாரியணைக்கும் அவள் தன்னிடமே தன் குழந்தையின் மீதுள்ள பாசத்தை உறுதி செய்துகொண்டே இருக்கிறாள். ‘நிர்வாணம்’ சிறுகதையில் வரும் மகள் புறத்தில் அன்னையை விட்டு விலகி விலகி செல்கிறாள். அப்படி செய்வதன் மூலமாகவே தான் ஒரு தனி மனிதன் என்றும் தனக்கு தன் வாழ்க்கை முக்கியம் என்றும் தனக்குத் தானே உறுதி செய்கிறாள். ஆனால் அகத்தில் அவள் இன்னமும் அன்னையைத் தேடும் சிறுமி.

மனம் தனக்குத்தானே செய்துகொள்ளும் பாவனைகள் இந்தக் கதைகளின் பலம். இரண்டு கதைகளில் வரும் இளம் பெண்களுக்கும் ‘நான்’ என்பது முக்கியமானது. தாய்மை அவர்களின் பிடியைத் தளர்த்துகிறது. அது இன்னொரு சதையாக உடலோடு ஒட்டி வருகிறது. அதுவே அவர்களின் வண்ணங்களை மாற்றி அமைக்கிறது.

லதா தன் கதைகளில் மீண்டும் மீண்டும் தாய்மையை விவாதப் பொருளாக மாற்றுகிறார். மொழியின் கூர்மையும் அதன் வழி ஏற்படுத்தும் உணர்வுத்தளமும் அதை கலை பெருமதி மிக்கதாக மாற்றுகிறது. ‘வலி’ அப்படியான கதை. கடலில் மீன் பிடிப்பதில் வல்லமை கொண்ட பெண் ஒரு விபத்தில் கைகளை இழந்து வீட்டில் உள்ள மீன் தொட்டியினுள் தன் செயற்கை கைகளுடன் பொழுதை ஓட்டும் கதை. மீன்கடை வைத்து மீன்கறி சமைப்பதில் பிரபலமாக இருந்த அவள் இனி எப்போதும் தொட்டுணர முடியாத மீனில் வழுவழுப்பை நினைவுகளில் மீட்க முயல்கிறாள். கணவனின் வன்முறையும் அதன் வழி மகளை பிரித்து எடுத்துச் சென்ற கதையும் அவளது பின்னணியில் சொல்லப்படுகிறது. அவள் பெருங்கடல் மீன்; ஆனால் சின்னஞ்சிறிய வீட்டின் தொட்டியில் எஞ்சிய காலத்தை ஓட்டுகிறாள். குழந்தையைப் பாதுகாக்கும் திறன் தாய்க்கு இல்லை என நீதிமன்றம் சொல்ல ரப்பர் கைகளில் உணர்ச்சி வந்ததாக நீரில் அலையும் கரங்களில் உணர்கிறாள். அது மகளின் மீதுள்ள ஏக்க உருவாக்கும் கனவு உணர்ச்சி. அதன் சிறிய நிம்மதி மட்டுமே அவளது வாழ்வாகிறது.

கொதிப்புக் கொண்ட கடலின் நீரை கொஞ்சம் மொண்டு மீன் தொட்டியில் ஊற்றி வைத்ததுபோன்ற கதை சொல்லல் முறையை கையாண்ட கதை இது. இனி எதுவும் இல்லாத வாழ்வில் பிள்ளைக்காக தினம் தினம் போராடி சலித்த பெண் ஒருத்தி தன்னந்தனியாக தன் போலிக் கைகளால் மீன் தொட்டியை அழகு செய்வதில் இருந்து தொடங்கி முடிகிறது. அது என்றோ கொதித்த கடல் எனும் நிஜத்தை கதை முழுவதும் படர விடுகிறார் லதா.

லதாவை தமிழின் தவிர்க்க முடியாத ஆளுமை எனச் சொல்ல முதன்மையான காரணம் பெண்ணிய நிலைப்பாட்டை அவர் சென்றடையும் கோணம். அது அன்றாடம் பேசப்படும் எளிய சலம்பலல்ல. ஒடுக்கப்பட்ட பெண்களின் துன்பங்களை பேசும் பிரச்சாரக் கதைகள் அல்ல. கொள்கைகளை அடிவேராகப் பிடித்துக்கொண்டு எழும் விருட்சமல்ல. அவை பெண்ணியம் சார்ந்த ஒரு உணர்வுத்தளத்தை அழுத்தமாக முன்வைக்கின்றன. பின்னர் அதை விவாதப்பொருளாக மாற்றுகிறது.

‘காவடி’ சிறுகதை ஒரு பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடலாகத் தொடங்கி முடிகிறது. பாட்டி தன் இறுதிக் காலத்தில் மருத்துவமனையில் இருக்கிறாள். அவளுக்கு சிலாவு காவடி பார்த்துவிட ஆசை. அந்த விண்ணப்பத்தை தன் பேத்தியிடம் வைத்தபடி இருக்கிறாள். மருத்துவமனையில் கருவிகளால் பிணைந்துகிடக்கும் பாட்டியிடம் பேத்தி மெல்ல மெல்ல சமாதானம் செய்கிறாள். அந்த உரையாடலில் பாட்டியின் கடந்த வாழ்க்கைத் தடங்கள் காவடியுடன் பிணைந்து உழன்று உருவாகிறது.

பேத்தி சிறுமியாக இருக்கும்போதே பாட்டி தனக்கு சிவாவு காவடி எடுக்கும் ஆசையைச் சொல்லியிருக்கிறாள். ஆனால் பெண்கள் காவடி எடுத்தால் அவர்கள் உடல் நோகும். உடல் நொந்தால் பூமித்தாய் வெகுண்டெழுவாள் எனும் மரபால் தனக்கு அவ்வாய்ப்பு தவிர்க்கப் பட்டதையும் சொல்லி புலம்புகிறாள். ஆனால் பாட்டியின் அப்பா நாத்திகர். எனவே காவடி பார்ப்பதிலேயே தடை உள்ளது. பெற்றோர்களை இள வயதிலேயே இழக்க ஏற்கெனவே திருமணமாகி ஏழு குழந்தைகளுடன் இருக்கும் தன்னைவிட இருபது வயது மூத்தவருக்கு மண முடித்து வைக்கப்படுகிறார். பின்னர் முப்பது வயதில் விதவையாகி குடும்பத்தைக் கரை சேர்க்கிறார். திருமண வாழ்க்கையில் அவர் அடைந்த இன்பம் என்பது காவடியைப் பார்க்கும் தடையற்ற சுதந்திரம்தான்.

பாட்டியை சமாதானம் செய்துகொண்டிருக்கும் பேத்திக்கு மெல்ல மெல்ல தன் பாட்டி காலம் முழுவதும் சுமந்து வந்த காவடி அரூபமாகத் தெரியத் தொடங்குகிறது. சக்கரை நோயினால் கால்களை இழந்த அவளது இடுப்பில் குத்தப்பட்ட ஊசியின் வடுக்கள் அரிகண்டம் கோடுகளின் இடுப்பை நினைவுபடுத்துகிறது. உண்மையில் பூமி அன்னை, பெண்கள் உடல் நோவதால் துடித்தெழுவாளா எனும் கேள்வியை வாசகனுக்குள் நுழைத்துவிட்டுச் செல்கிறது. மரபுகளில் கட்டமைக்கப்படும் பெண்களின் மேன்மையை லதா சீண்டிப் பார்க்கிறார். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு பகடி செய்து பார்க்கிறார்.

‘காவடி’ போலவே குடும்பத்தில் உள்ள பெண்களின் இருப்பை வேறொரு கோணத்தில் ஆராயும் சிறுகதை ‘தேக்காவில் ஒரு பாலம் இருந்தது.’ நேதாஜி ஒருங்கிணைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்த இரு இளம் தமிழ்ச் சகோதரிகளின் கதை இது. தங்கையே நடந்தவற்றை சொல்லும் கதைச்சொல்லி. அவளது வழிகாட்டி அக்கா. ஐ.என்.ஏவின் பெரும் கனவுடனும் கணவனின் பலத்த எதிர்ப்புடன் இணையும் அக்காவுடன் அவளும் செல்கிறாள். அவளுக்கும் அப்பாவிடமிருந்து எதிர்ப்பு எழுகிறது. அவள் அக்காளின் கைகளைப் பற்றியவள். அக்காதான் அவள் கண்ட முதல் கதாநாயகி. படையில் அவர்களுக்கு சமையல் வேலைதான் ஒதுக்கப்படுகிறது. பின்னர் வட இந்தியர்களாலும் ஒதுக்கப்படுகின்றனர். கலையார்வம் கொண்ட அக்கா ஒரு நாடகத்தில் நடிக்க மறுநாளே மேலதிகாரியால் அதற்கும் தடை வருகிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த சாதிய மனப்பான்மையையும் தமிழ்ச் சமூகத்தின் மீதான வட இந்தியர்கள் வெறுப்பையும் அக்காள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்கிறாள். இந்த நிராகரிப்பு அவளை இராணுவத்தில் இருந்து அந்நியப்படுத்துகிறது. தங்கையுடன் வெளியேறுகிறாள்.

நுட்பமான கதை இது. போர்க்காலப் பின்னணி அபாரமான பின்னணிக் காட்சியாக வருகிறது. கதையில் வரும் அப்பா நேதாஜியின் பக்தராக இருந்தாலும் அவருக்கு மகள்கள் படைக்குச் செல்வதில் விருப்பம் இல்லை. ஆனாலும் திருமணமான அக்கா பிடிவாதமாகச் செல்கிறாள். அவள் எதிலிருந்து விடுதலை அடைய நினைக்கிறாள் என்பதும் பின்னர் எதை போர் என உணர்கிறாள் என்பதுமே கதை.

***

‘நான் கொலை செய்யும் பெண்கள்’ தொகுப்பு போலவே ‘சீனலட்சுமி’ தொகுப்பு பெண்களின் வாழ்வியலைப் பேசுபவைதான். ஆனால், ஆண்களைக் குறைசொல்லி ஓங்கி ஒலிக்காத குரலுடன் அடங்கிய மொழியில் அதீத வீரியத்துடன் வெளிப்பட்டவை. பொதுவாக பெண்களின் உளவியலைப் பேசும் கதைகள் கொண்டுள்ள அகவயமான நடையிலிருந்து மாறுபட்டுள்ளது இத்தொகுப்பின் தனித்துவம். நிலமும் வரலாறும் பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் ஊடுபாவியுள்ளன. இத்தன்மை மலேசிய, சிங்கை புனைவுகளில் காண்பது அரிது.

‘சிலந்தி’ சிறுகதை 1960களில் மலாயாவுக்கு இந்தோனேஷியாவுக்கும் நடந்த போரில் சிங்கப்பூர் ராணுவமும் பங்கெடுத்த வரலாற்றுச் சித்திரம் வருகிறது. ‘சீனலட்சுமியின் வரிசை’ கதையில் வரும் சீனலட்சுமி வரலாற்றின் ஒரு முக்கியக் குறியீடு. இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில்  ஜப்பானியர் சீனர்களை குறிவைத்துக் கொன்றனர். தங்கள் சந்ததிகள் வாழ வேண்டும் எனும் நிலை சீனர்களுக்கு. வசதியின்மையாலும், ஆண்பிள்ளைகளைக் காப்பாற்றினாலே போதும் எனுப் ஆசிய மனப்போக்கினாலும், அநாதரவாகக் கைவிடப்பட்ட சீனப் பெண் பிள்ளைகள் தமிழ்க்குடும்பங்களால் வளர்க்கப்பட்டனர். அந்தத் வரலாற்றின் பிரதிநிதியாக சீனலட்சுமி வருகிறார்.  ‘தேக்காவில் ஒரு பாலம் இருந்தது’ சிறுகதையில் இந்திய தேசிய ராணுவம் பற்றிய விமர்சனமும் அன்றைய வரலாற்று பின்புலமும் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

துருத்திக்கொண்டு தெரியாத வரலாற்று தகவல்களால் இக்கதைகளின் கலையம்சம் மேலோங்குகிறது. புனைவுக்குள் வரலாற்றை நுழைத்து பின்னும் செய்நேர்த்தியை அறிந்துள்ளார் லதா. அதற்கு ஈடாகவே புதிர்த்தன்மை மிக்க மானுட உளவியலையும் நுன்மையாக கோர்த்துச் செல்கிறார்.

‘சிலந்தி’ சிறுகதையில் வரும் மசாஜ் நிபுணரான ஓய், ஒரு விடுதியில் வசிக்கும் உடல்குறையுள்ளவருக்கு சேவையை செய்யும்போதெல்லாம் கதை ஒன்றை சொல்கிறார். உடல்குறையுள்ள அந்தச் சிறுவன்தான் கதைசொல்லி. அது அவருள்ளத்தில் பதுங்கியுள்ள விஷக்கதை. ஒருவனை வன்மமாகப் பலி தீர்த்த கதை. சிங்கை வரலாற்றில் அனைவராலும் தவறாக அறிந்துகொள்ளப்பட்ட கதை. அதை பேச்சு வராத, யாரிடமும் இனி சொல்லவே சொல்ல முடியாட கதைசொல்லியிடம் கடத்திவிட்டு செல்கிறார். அந்த நஞ்சை சுமந்த அவன் தன்னளவில் வண்ணத்திப் பூச்சியை நசுக்கி வன்மத்தை கக்கத் தொடங்குகிறான். ஓய் செய்யும் சிலந்திச் சண்டையில் தொடங்கும் கதை பின்னர் சிலந்தி வலை பின்னல்போல எட்டுப் பக்கமும் விரிகிறது. அதன் மத்தியில் கதை கேட்கும் சிறுவன் சிலந்தியாக எப்படி உறுமாறுகிறான் என்பதை குறியீடுகளால் காட்சியாக்குகிறார் லதா.

‘சீனலட்சுமியின் வரிசை’ அடையாளச் சிக்கலால் அல்லல்படும் ஒரு பெண்ணின் உளவியலை பேசும் சிறுகதைதான். தமிழர்கள் சீனலட்சுமியை சீனராகப் பார்க்கின்றனர். சீனர்கள் அவரை இந்தியராகப் பார்க்கின்றனர். மனதளவில் தமிழ்ப் பெண்ணாக உணரும் அவரும் தமிழ் அடையாளங்களை தன்மேல் வாரிவாரி போட்டுக்கொள்வதும் வரிசைகளில் நின்று அந்நியப்பட்ட தன் நிலையை நிறைவு செய்துகொள்வதுமாக இருக்கிறார். ‘வரிசை’ என்பது தங்களை தனிமையாக உணர்பவர்களுக்கு எத்தகைய ஆறுதலாக உள்ளது என லதா சித்தரித்துக் காட்டும் இடங்கள் அங்கதமும் அழுத்தமும் மிக்கவை.


வடிவத்திலும் நடையிலும் உத்தியிலும் மற்ற கதைகளில் இருந்து முழுவதும் மாறுபட்ட பாணியில் எழுதப்பட்டிருக்கும் கதை ‘பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை’. புதிரும் இருண்மையும் பயமும் சாவும் ரொமாண்டிசமும் கலந்த கொதே பாணி எழுத்து. பூனையைப் பற்றிக் கதை எழுதவேண்டிய கட்டாயத்தில் பூனையைத் தேடிச் செல்லும் அனா, பூனையைப் பற்றி தன்னால் எழுத முடியாது என்பதை உணர்கிறாள். இந்தக் கதையின் சிங்கப்பூரில் அரசியல், சமூக உளவியலின் படிமங்களாக புரியாத மொழிபேசும் சீனக் கிழவனையும் பச்சைக் கண் கறுப்புப் பூனையையும் திறம்படக் கையாண்டுள்ளார். ஒற்றைப் பார்வை ஒரே சிந்தாந்தம் எந்த மாதிரியான மனப்போக்கையும் சிந்தனைகளையும் ஏற்படுத்தும் என்பதை அங்கதமாக எழுதியிருக்கிறார். சிங்கப்பூரைத் தெரியாதவர்களும் வாசித்து ரசிக்கக்கூடிய அங்கத எழுத்து. இக்கதை உருவாக்கும் படிமம் பல இன மக்கள் உரசல்களோடும் நெருடல்களோடும் ஒன்றுகலந்து வாழும் சிங்கப்பூரின் வாழ்க்கையின் உள்முகப் புரிதலை தருகிறது. பூனை குறித்த தகவல்களும் சிங்கப்பூரில் மட்டுமே காணப்படக்கூடிய நடைமுறைகளும் சொல்லப்பட்டிருப்பது தெரியாமலே கவனத்துக்கு வருகின்றன.

எழுத்தாளர் ம. நவீன்

தமிழ் இலக்கியம் என்பது தமிழகத்தைக் கடந்து பல ஆண்டுகள் ஆகின்றன. மலேசிய சிங்கப்பூரில் மிகச்சிறந்த புனைவுகள் உருவாகி வருகின்றன. இப்பிரதேசங்களில் விமர்சனச் சூழலற்ற நிலையில், குவியும் பிரதிகள் எல்லாமே மேலெழுந்து கைதூக்கி கண்களை இருளடையச் செய்யும் சூழலில் இலக்கியத்தில் தடாலடி அரசியல் கைவராத லதாவின் இத்தொகுப்பு அடையாளம் காணப்பட கூடுதலான உரையாடல்கள் அவசியமாக உள்ளது. அப்படிக் வாய்க்கும்போது 2022இல் தமிழில் வெளிவந்த சிறந்த சிறுகதை தொகுப்புகளில் ஒன்றாக இதனை முன்னிறுத்த சாத்தியங்கள் அதிகம்.

-ம. நவீன்

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *