நல்ல புத்தகங்களை வெளியிட்டோம் என்ற திருப்தி : லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

‘வாசகர் வட்டம்’ லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி நேர்காணலை ‘நீலி’ மறுபிரசுரம் செய்கிறது. லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் லட்சிய வேட்கையினால் நிகழ்ந்த அற்புதம் வாசகர் வட்ட வெளியீடுகள். அவை குறுகிய காலத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த நூல்களின் உள்ளடக்கமும் தயாரிப்பு நேர்த்தியும் தமிழ்ப் பதிப்புலகில் காலத்தைக் கடந்து நிற்கும் முன்மாதிரியாக உள்ளன. வாசகர் வட்ட நூல் பட்டியல் ஒன்றே லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் சாதனையை உணர்த்திவிடும்.

இந்த நேர்காணலில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி கூறும் பதிப்புலகப் பிரச்சினைகள் இன்றும் தீரவில்லை. தரமான நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் நூலக ஆணை பெறுவது குதிரைக்கொம்பாக இருக்கிறது. புத்தகங்களை பரவலாக விநியோகிப்பதற்கு பொதுவான நடைமுறை ஒன்று உருவாகவில்லை. பல பதிப்பகங்கள் குடிசைத்தொழில் போலவே இயங்கிவருகின்றன. அவற்றிற்கு ஊக்கம் அளிக்க அரசாங்கக் கரங்கள் நீள்வதில்லை. இன்று முழு ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் இயங்கும் பதிப்பாளர்கள் பின்னாளில் ‘நல்ல புத்தகங்களை வெளியிட்டோம் என்ற திருப்தி’ போதும் என்றுதான் இருக்கவேண்டுமா?

-ஸ்ரீநிவாச கோபாலன்

*

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

தீரர் சத்தியமூர்த்தி என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சுதந்திரப் போராட்ட வீரரான அவர் காமராஜரின் அரசியல் குரு என்று அழைக்கப்பட்டவர் சுதந்திரப் போராட்டத்திலும் இந்திய அரசியலிலும் தீரர் சத்தியமூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது. அது தெரிந்த அளவுக்கு தமிழ்ப் பதிப்புத்துறையில் அவர் குடும்பத்தினர் ஆற்றிய பங்கு பலருக்கும் தெரியாதது.

கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியாக நேர்த்தியான அச்சமைப்புடன், பைண்டிங்குடன் வெளிவந்த வாசகர் வட்ட நூல்களை சென்ற தலைமுறை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

வாசகர் வட்டத்தைத் துவக்கி நடத்தியவர்கள் கிருஷ்ணமூர்த்தியும், லக்ஷ்மி கிருஷ்ணாமூர்த்தியும். லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தீரர் சத்தியமூர்த்தியின் மகள், 84 வயதான லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை சிறப்பிதழுக்காக அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அவருடைய நேர்காணல் வெளியாகும் இத்தருணத்தில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நம்மிடையே இல்லை. ஆம். கடந்த ஜூன் மாதம் அவர் மறைந்துவிட்டார். அவரைச் சந்தித்துப் பேசிய அந்த இனிய நினைவுகளுடன் இதுவரை வெளிவராத அந்த நேர்காணலை இங்கே தருகிறோம்.

பேட்டி கண்டவர்: ந. ஜீவா
படங்கள்: ஏ.எஸ். கணேஷ்
தினமணி கதிர்: ஆகஸ்ட் 2, 2009

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

“வாசகர் வட்டத்தின் முதல் புத்தகம் ராஜாஜி எழுதிய ‘ஸோக்ரதர் ஆத்ம சிந்தனை’ என்ற நூல்தான். அது 1965ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்தது. ஆனால் பதிப்பகம் ஆரம்பிப்பதற்கான ஆரம்ப வேலைகள் 1963 இலேயே ஆரம்பமாகியிட்டன என்று சொல்லலாம். 1963 இல் ஸ்டாலின் சீனிவாசனின் வீட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளியில் இலக்கியக் கூட்டம் நடக்கும். அதில் தி. ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், சிட்டி எல்லாரும் கலந்துகொள்வார்கள். அதை ‘வெள்ளி வட்ட’க் கூட்டம் என்பார்கள்.

ஸ்டாலின் சீனிவாசன் அதற்கு முன்பாக பம்பாயில் ‘ஃபிரி பிரஸ்’ என்ற பத்திரிகையை நடத்தியவர். ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் துணிந்து தனது கருத்துகளை அதில் எழுதியவர். அவர் அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் அதை முடிவிட்டுச் சென்னைக்கு வந்து ‘மணிக்கொடி’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். அதன்பின் ‘மணிக்கொடி’ சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். என்றாலும் நாங்கள் எல்லாம் ஸ்டாலின் சீனிவாசன் என்றுதான் கூப்பிடுவோம். ஏனென்றால் ஸ்டாலின் மாதிரி பெரிய மீசை வைத்திருப்பார்.

‘வெள்ளி வட்ட’க் கூட்டத்தில் 20-30 பேர் கலந்துகொள்வார்கள். ஒரே காக்காய்ச் சண்டையாக இருக்கும். அந்தப் புத்தகம்தான் உசத்தி இந்தப் புத்தகம்தான் உசத்தி என்று அடித்துக்கொள்வார்கள். ஆனால் பகைமை பாராட்டமாட்டார்கள். அந்தக் கூட்டம் பிறகு எங்கள் வீட்டில் நடந்தது. கூட்டங்களுக்கு ஆலோசகராகவும் அவற்றை நடத்துபவராகவும் சிட்டி இருப்பார்.

எனது கணவர் புத்தகப் பிரியர். இலக்கிய அன்பர். அவருக்குப் புத்தகங்களின்மீது நேசம் இருந்தது.

எனக்கும் சிறுவயதிலிருந்தே புத்தகம் மீது பற்று இருந்தது. எனது அப்பா நான் சிறுமியாக இருக்கும்போது ஒவ்வொரு பிறந்தநாளன்றும் ‘அருமைப் புதல்விக்கு’ என்று எழுதிப் புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவார்கள்.

நானேகூட ஒரு சிறுபுத்தகம் எழுதியிருக்கிறேன். ‘ஐந்தாவது சுதந்திரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு அது. பதிப்புலகத்தில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த வை. கோவிந்தன்தான் அதை வெளியிட்டார். இப்படி இயல்பாகவே எனக்கும் எனது கணவருக்கும் புத்தகங்களின் மீது ஆர்வம் இருந்தது. அது பதிப்பகத்தில் கொண்டுபோய் விட்டது.

வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்கள்

அந்தக் காலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிட்டால் பதிப்பகம் உரிய பணம் கொடுப்பதில்லை என்ற சூழ்நிலை இருந்தது.

எழுத்தாளர்களுடன் காண்ட்ராக்ட் போட்டு அவர்களுக்கு உரிய ராயல்டி அளித்தோம். ஒரு பதிப்பு முடிந்தால் பதிப்பகத்திற்கு அந்த நூலில் எந்த உரிமையும் கிடையாது.

பதிப்பகத்தில் நஷ்டம் வரும் என்று தெரிந்தே ஆரம்பித்தோம். அப்போது நல்ல நூல்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. தமிழனுக்கு எல்லாம் தெரியவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. தமிழ் மக்களின் மீது அன்பு வைத்து புத்தகம் போட்டோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்காகச் சில திட்டங்களைக்கூட அறிவித்தோம்.

1965 இல் அறிவித்த திட்டமும் அதில் ஒன்று. ரூ.25 செலுத்தினால் தபால் செலவு இன்றி வீடு தேடி புத்தகங்களை அனுப்பிவைக்கிறோம் என்றோம். சிலோன் தமிழர்கள்கூட அந்தத் திட்டத்தில் புத்தகங்கள் வாங்கினார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் வாங்கவில்லை.

பம்பாயில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்களே என்று 1000 பிரசுரங்கள் அச்சடித்து பம்பாயில் விநியோகித்துப் பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூலுக்கு அந்தக் காலத்திலேயே ரூ.800 செலவழித்து ஹிண்டுவில் விளம்பரம் போட்டோம்.

ஆனால் அந்தப் புத்தகம் விற்கவில்லை. நாங்கள் நல்ல புத்தகப் பதிப்பாளராக இருந்தோம். நல்ல விற்பனையாளராக இருக்கவில்லை. காமராஜர்கூட நாங்கள் பதிப்பகம் ஆரம்பித்ததைச் கேள்விப்பட்டு, “புஸ்தகத்திலையா பணத்தைப் போடுறாங்க. ஏதாவது பிஸினஸ்ல போடலாமே” என்றாராம்.

இத்தனைக்கும் நாங்கள் வெளியிட்ட நூல்கள் அவ்வளவு தரமானவை.

நல்ல பேப்பரில், நல்ல அட்டை போட்ட பைண்டிங்கில் புத்தகங்களை வெளியிட்டோம். புத்தகத்தின் மேல் பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் பக்கவாட்டிலும் தூசி படிந்து அசிங்கமாகத் தெரியும் என்பதற்காக கலர் போட்டோம்.

நடந்தாய் வாழி காவேரி‘ என்ற புத்தகம் காவிரி தோன்றும் இடத்தில் இருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை உள்ள இடங்களைப் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்வது. அந்தப் புத்தகத்தைத் தயாரிக்க எழுத்தாளர் ஜானகிராமன், ஓவியர் கலாசாகரம் ராஜகோபால் ஆகியோர் நேரில் சென்றார்கள். ஜானகிராமன் விஷயங்களைத் திரட்ட ஓவியர் அந்தந்த இடங்களை ஓவியமாக வரைவார். மிகுந்த பொருட்செலவுடன் அந்தப் புத்தகத்தைத் தயாரித்தோம். அந்தக் காலத்தில் படங்களை வெளியிடுவது சாதாரண விஷயமல்ல. பிளாக் செய்துதான் படங்களை வெளியிட முடியும். ஆனாலும் தொடர்ந்து எங்களால் பதிப்பகத்தை நடத்த முடியவில்லை. நஷ்டம்தான் காரணம். சுஜாதா எழுதிய கம்ப்யூட்டர் நூலான ‘காசளவில் ஓர் உலகம்’ என்ற நூலுடன் எங்கள் பதிப்பு முயற்சிகள் முடிவடைந்தன. பேங்க் லோன் வெறும் தாளுக்குத் தந்தார்கள். அச்சடித்த புத்தகங்களுக்குத் தர மறுத்தார்கள்.

லைப்ரரி ஆர்டரில் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பது விசித்திரமாக இருக்கும். பக்கங்களின் எண்ணிக்கையை வைத்துத் தேர்ந்தெடுப்பார்கள். நாங்கள் நிறைய செலவு செய்துத் தயாரித்த புத்தகமும், சாதாரண புத்தகமும் செலவிலும் சரி, தரத்திலும் சரி ஒன்றாகிவிடுமா?

எனவே லைப்ரரி ஆர்டரும் எங்களுக்கு உகந்ததாக இல்லை.

‘நூலகம்’ என்றொரு சிற்றிதழை நூலகங்கள் பற்றியும் புத்தகங்களுக்காகவும் நடத்தினோம். அதையும் தொடர்ந்து கொண்டுவர முடியவில்லை. பண நஷ்டம் என்றாலும் நாங்கள் வெளியிட்ட புத்தகங்கள் எங்களுக்கு இப்போதும் மனநிறைவைத் தருகின்றன.

வரலாறு, பூகோளம், மருத்துவம், இலக்கியம் ஆகிய எல்லாத் துறை நூல்களையும் வெளியிட்டிருக்கிறோம். பி.ஜி.எஸ். ஸ்வாமி எழுதிய ‘போதையின் பாதையில்’ புத்தகம் காபி, டீ உட்பட எல்லா லாகிரி வஸ்துகளைப் பற்றிய புத்தகம்.

மனித இன வரைவியல் நூலான ‘எல்வின் கண்ட பழங்குடி மக்கள்’ நூல் நாங்கள் வெளியிட்ட குறிப்பிடத்தக்க புத்தகம். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, லா.ச.ரா.வின் ‘புத்ர’, நரசய்யாவின் ‘கடலோடி’ எல்லாம் நாங்கள் வெளியிட்ட நூல்கள்தாம்.

பி. கேசவதேவ்வின் மலையாள நாவல் ‘அயல்க்கார்’ தமிழில் ‘அண்டை வீட்டார்’ என்கிற பெயரில் எங்கள் பதிப்பகம் வெளிவிட்டது.

எழுத்தாளர்களிடம் கேட்டு வாங்கிப் போட்டோம். தி. ஜானகிராமனை வேலை வாங்குவது பெரிய விஷயம், நல்ல சங்கீத ரசிகர். அவர் ‘அம்மா வந்தாள்’ எழுதியபோது லா.ச.ரா. அதற்குப் போட்டி போல ‘புத்ர’ எழுத முன்வந்தார்.

ந.பிச்சமூர்த்தி எதையும் நெகடிவ்வாக எடுத்துக்கொள்ளாத மனிதர்.

“இப்படிப்பட்ட மனிதர்கள் எழுதிய நல்லப் புத்தகங்களை வெளியிட்டோம் என்ற திருப்தி மட்டும்தான் இப்போது எங்களுக்கு மிச்சம்” என்றார் சிரித்துக்கொண்டே.

*

(இந்த நேர்காணல்கள் பிரதியை வழங்கிய திரு. துரை. லட்சுமிபதி, ‘தினமணி கதிர்’ இதழுக்கும் நன்றி)

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *