ஈடித் ஸ்டைன்: உண்மையை நோக்கிய தேடல் – விவேக் சுப்ரமணியன்

வாழ்க்கை, சிந்தனை மற்றும் உண்மையை நோக்கிய தேடல்

ஈடித் ஸ்டைன்

ஆகஸ்ட் 1942-இல் எக்ட் நகரின் கார்மலைட் மடாலயத்திற்குள் நுழைந்த ஜெர்மானிய நாஜி காவல் துறையினர், ஈடித் ஸ்டைனையும் அவரது சகோதரி ரோசாவையும் பலவந்தமாக அழைத்துச் சென்றனர். அந்த இக்கட்டான தருணத்தில் ஈடித் ஸ்டைன் வெளிப்படுத்திய அமைதியும் தெளிவும் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. “வாருங்கள், நம் மக்களுக்காக நாம் செல்வோம்” என்று அவர் கூறிய அந்த ஒற்றை வரியில் எந்தவித நாடகத்தனமோ அல்லது மிகையான உணர்ச்சியோ தென்படவில்லை. அது  சரணாகதியோ அல்லது தற்காலிக ஆறுதலோ அல்ல;   நீண்ட காலத்திற்கு முன்பே, தன்னுள் நிகழ்த்தி முடித்திருந்த உடன்படிக்கையாகவே அந்தச் சொற்கள் வெளிப்பட்டன. அவரை தியாகி என்று அடையாளப்படுத்தும் வழக்கமான பிம்பங்களுக்குப் பின்னால் இருக்கும் அவரது தீவிரமான அறிவுசார் வாழ்க்கையை உற்று நோக்கினால் மட்டுமே அந்தச் சொற்களின் கனத்தை உணர முடியும்.

ஈடித் ஸ்டைனின் குழந்தைப் பருவம் ஆழமான மத உணர்வுகளும், தீவிரமான அறிவுத் தேடலும் சரிபாதி கலந்த ஒரு களம். 1891-ஆம் ஆண்டு பிரெஸ்லாவ் நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்த ஈடித், தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். அவரது தாய் அகஸ்டா, உறுதியான பெண்மணியாகத் திகழ்ந்து, யூத மத நெறிமுறைகளின்படி குடும்பத்தை வழிநடத்தினார். யூத மதத்தின் புனிதமான யோம் கிப்பூர் போன்ற நோன்பு நாட்களும், குடும்பத்தின் பாரம்பரிய வழிபாடுகளும் ஈடித்தின் மனதிற்கு ஒழுக்கத்தையும், அர்ப்பணிப்பையும் போதித்தன. இருப்பினும், அவரது சிந்தனை முறை வழக்கமான குழந்தைகள்  போல இருக்கவில்லை; அவர் எப்போதும் எதையும் ஆழமாக வினவும்  இயல்புடையவராக இருந்தார். தனது 14-ஆம் வயதில், அவர் அதிரடியான முடிவை எடுத்தார்.  நான் இனி பிரார்த்தனை செய்வதை நிறுத்திக்கொள்கிறேன் என்று அறிவித்து, தன்னை ஒரு நாத்திகராக அடையாளப்படுத்திக் கொண்டார். மதத்தை  தாண்டி உண்மையை  அதன் அசல் தன்மையோடு கண்டடைய வேண்டும் என்கிற அவரது சிந்தனை முறையின் ஆரம்பப்புள்ளி அது. அவரது குடும்பம் காட்டிய கடும் உழைப்பும், தாயின் உறுதியும் ஈடித்திற்குள் ஒரு வலுவான ஆளுமையை உருவாக்கியது. அந்தத் தீவிரமான அறிவுத் தேடலே, பின்னாளில் அவரைத் தத்துவத்தின் ஆய்வை நோக்கி அழைத்துச் சென்றது. குடும்பத்தின் யூதப் பின்னணியும், அவர் சுயமாகக் கண்டடைந்த தர்க்கரீதியான பாதையும் இணைந்துதான்,  தேர்ந்த தத்துவவாதிக்கே உரிய அந்தத் தெளிவை அவருக்கு வழங்கின.

இந்த அறிவுத் தேடலே  அவரைப் பின்னாளில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் புகழ்பெற்ற தத்துவாதி  எட்மண்ட் ஹுஸர்லிடம் அழைத்துச் சென்றது. அங்கு அவர் தோற்றப்பாட்டியல்  என்னும் தத்துவ ஆய்வு முறையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார். 

முன்முடிவுகளைத் தவிர்த்து ஒரு பொருளை அதன் அசல் தன்மையோடு நோக்குதல் என்கிற தீவிரமான நெறிமுறை அவரை வெகுவாக ஈர்த்தது. பரிவுணர்வு குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வேட்டின் வழியே, ஒரு மனிதன் மற்றொருவரின் அக உலகைப் புரிந்துகொள்ளும் அந்த நுட்பமான புள்ளியை அவர் ஆராய்ந்தார். ஆனால், ஆய்வுகளின் முடிவில் அவர் பெரும் நெருக்கடியைச் சந்தித்தார். மனிதனின் தியாகத்தையும், அன்பையும், வாழ்வின் சாரத்தையும் வெறும் தர்க்க ரீதியான சூத்திரங்களால் மட்டும் முழுமையாக விளக்கிவிட முடியாது என்பதை அவர் மெல்ல உணரத் தொடங்கினார்.அவர் எவ்வளவு தீவிரமாகத் தனது ஆய்வு முறையைப் பயிற்சி செய்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தத் தத்துவக் கட்டமைப்பால் முழுமையாக உள்வாங்க முடியாத புதிரான பகுதியை அது வெளிப்படுத்தியது. அதுதான் மற்றுமொரு அக வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மை. அந்தத் தனித்துவமான உண்மை, வெறும் தர்க்கக் கட்டமைப்புக்கோ அல்லது அறிவுசார் பகுப்பாய்விற்கோ அடங்க மறுத்துத் தனித்து நின்றது.

இந்தத் தருணத்தில் ஈடித் ஸ்டைனின் தத்துவார்த்தப் பார்வை, தரிசனமாக மாறத் தொடங்குகிறது. மற்றவரை ஒரு பொருளாக  அணுகாமல், அவரை அனுபவ மையமாக அவர் கண்டடைந்தார். தர்க்கம் எங்கே தன் பிடியை இழக்கிறதோ, அங்கேதான் உண்மை அதன் அசல் தன்மையோடு வெளிப்படுகிறது என்பதை அவர் உணர்ந்தார். இந்தப் புரிதல்தான், பின்னாளில் அவர் தர்க்கத்திலிருந்து ஆன்மீகத்தின் பேரமைதியை நோக்கி நகர்வதற்கு அடித்தளமாக அமைந்தது. அறிவின் எல்லை முடிவடையும் இடத்தில் ஏதோ ஒரு பேருண்மை எஞ்சியிருப்பதை அவரது தத்துவ மனம் ஊகித்தது. இந்தப் புரிதல்தான் அவரைப் பகுத்தறிவின் உச்சத்திலிருந்து, ஆன்மீகத்தின் பேரமைதியை நோக்கி நகர்த்தியது. ஒரு தத்துவ மாணவியாக அவர் மேற்கொண்ட அந்த கண்டிப்பான நெறிமுறைகள் தான், பின்னாளில் நாஜிக்களின் வன்முறைக்கு முன்னால் அவர் காட்டிய அந்த அசாத்தியமான நிதானத்திற்கும், தன்னுள் அவர் நிகழ்த்தி முடித்திருந்த அந்த ரகசிய உடன்படிக்கைக்கும் அடித்தளமாக அமைந்தன.

ஈடித் ஸ்டைன்

1921-ஆம் ஆண்டு ஒரு கோடைக்காலத்தில், தனது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது தற்செயலாகப் புனித அவிலா தெரசாவின் சுயசரிதையை அவர் வாசிக்க நேர்ந்தது. இரவு முழுவதும் அந்தப் புத்தகத்தை ஒரு மூச்சில் வாசித்து முடித்த ஈடித், அதிகாலையில் அந்தப் புத்தகத்தை மூடிவிட்டுச் சொன்ன ஒரே ஒரு வாக்கியம்: “இதுவே உண்மை”. தெரசாவின் எழுத்துக்களில் அவர் கண்டது வெறும் ஆன்மீகக் கதைகள் அல்லாது  தன்னை முழுமையாகத் தேடி, கண்டடைந்து, ஒரு பேருண்மையிடம் சரணடையும் அந்தத் தீர்க்கமான வடிவத்தை. இத்தனை காலம் தத்துவத்தில் அவர் தேடிய அந்த அசல் தன்மை, தெரசாவின் நேரடி அனுபவத்தில் துலங்கியதைக் கண்டு அவர் வியந்தார்.

ஸ்டைனின் வாழ்க்கை, அறிவிலிருந்து நம்பிக்கை என்ற உணர்ச்சிவசப்பட்ட பாதையில் நகரவில்லை; மாறாக, அறிவின் எல்லைகளுடனான ஒரு தொடர்ச்சியான , நேரடியான போராட்டத்தின் வழியாகவே அது நகர்ந்தது. இந்தக் கட்டத்தில் அவர் பின்வாங்காமல், தனது தேடலை இன்னும் தீவிரப்படுத்தி, ஒரு கட்டத்தில் அதன் எல்லைகள் புலப்படும் வரை அந்த ஆய்வு முறையை அவர் அழுத்தம் கொடுத்துப் பரிசோதித்தார். பின்னாளில் அவர் ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியது இந்த அறிவுதளத்தின் அழுத்தத்திலிருந்து உருவானதுதான். உண்மை என்பது ஒரு ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது, அதை அமைப்பிற்குள் மட்டும் சிறைப்படுத்த முடியாது என்ற அங்கீகாரமே அந்தத் திருப்பத்திற்கு அடித்தளமாக அமைந்தது. உண்மை என்பது நாம் சிந்திப்பது மட்டுமல்ல, நாம் என்னவாக மாறுகிறோம் என்பதுதான் என்பதைத் தனது வாழ்வின் இறுதிப் புள்ளியின் மூலம் அவர் நிரூபித்தார்.

ஈடித் ஸ்டைனின் தத்துவார்த்த அழுத்தம் வெற்றுக் கருத்தியலாகவோ அல்லது வெறும் அருவமான சிந்தனையாகவோ மாறாமல், உண்மை அணுகப்படும் முறையையே அது ஒரு புதிய வடிவத்திற்கு மாற்றக் கட்டாயப்படுத்தியது. அவிலா நகர் புனித தெரேசாவின் எழுத்துக்களுடனான ஸ்டைனின் சந்திப்பு இங்குதான் ஒரு தீர்மானமான திருப்புமுனையாக மாறுகிறது. இது தத்துவத்திற்குப் பதிலாக ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்த நிகழ்வாக  அல்லாமல் , அறிவுத்திறனை வாழ்வியலில் இருந்து பிரிக்க மறுக்கும் ஒரு அறியும் முறையை (Form of knowing) அது கொண்டிருந்ததாலேயே முக்கியத்துவம் பெறுகிறது. அவர் சாதாரண நம்பிக்கையாளராக அந்த நூலை அணுகாமல், ஒரு தத்துவஞானியாக, தெளிவு, ஒழுக்கம் மற்றும் அகமாற்றம் ஆகியவற்றை ஒருசேரத் தாங்கி நிற்கும் வாழ்வியல் பதிவையே  எதிர்கொண்டார்.

ஈடித் ஸ்டைன்

அவர் அதுவரை நம்பியிருந்த தத்துவ வகைப்பாடுகள் இதன் மூலம் விரிவடையத் தொடங்கின. பிரக்ஞை என்பது இனி விவரிப்பு சார்ந்தது மட்டுமல்ல , அது ஒரு பங்கேற்பு அல்லது பங்களிப்பு சார்ந்தது . அறிவு என்பது இனி வெறும் பகுப்பாய்வுகளால் தீர்ந்து போவதல்ல, அது முழுமையான ஈடுபாட்டைக் கோருவது. இது பகுத்தறிவற்ற  நிலைக்கு மாறாக, அவரது ஆரம்பகால ஆய்வு முறைகள் ஏற்கனவே தயார் செய்திருந்த, ஆனால் அவற்றால் மட்டும் முழுமைப்படுத்த முடியாத அறிவார்ந்த விரிவாக்கம். ஸ்டைன் தனது மத மாற்றத்தை நோக்கி நகரும் முன்பே, அவரது தத்துவார்த்த திசைவழியில் இந்த மாற்றம் ஆழமாக நிகழ்ந்துவிட்டது. தத்துவம் இங்கே முழுமையாக  கைவிடப்படவில்லை; ஆனால் தன்னைத்தானே ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து முழுமையான வாழ்வியல் முறையாக (Form of life) மலர வேண்டும் என்ற ஒரு நெருக்கடிப் புள்ளிக்குத் தள்ளப்பட்டது. அவர் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். அந்தத் தெரிவுதான் அவரது சிந்தனை, விருப்பம் மற்றும் இருப்பு ஆகியவற்றை ஒரு சமரசமற்ற ஒற்றைத் திசைப் பாதையில் பிணைக்கத் தொடங்கியது.

ஈடித் ஸ்டைனின் பரிவுணர்வு தத்துவம்: நான்கு முக்கிய நிலைகள்

1. பரிவுணர்வு என்பது ஒருவரைப் பற்றி நாம் செய்யும் தர்க்கரீதியான கணக்கீடோ அல்லது அனுமானமோ அல்ல. அது தனித்துவமான புலனுணர்வுச் செயல் (Sui Generis). நாம் மற்றவரின் உணர்வை அறிவால் கண்டடைவதில்லை; மாறாக, ஒரு காட்சியை நேரடியாகக் காண்பது போல, மற்றவரின் அனுபவத்தை நாம் நேரடியாக எதிர்கொள்கிறோம். இது மூளையினால் பெறப்படும் தகவல் அல்லாது உணர்வால் நிகழும் நேரடித் தரிசனம்.

2. ஸ்டைன் ஒரு நுட்பமான வேறுபாட்டை முன்வைக்கிறார்: உங்கள் வலியை நான் உணரும்போது, அது என் உடலில் ஏற்படும் வலியல்ல (அது உங்களின் முதன்மை அனுபவம்). இருப்பினும், அது எனக்கு  கற்பனையோ அல்லது கடந்த கால நினைவோ அல்ல; அது அந்த நொடிக் கணத்திலேயே நிகழும் ஒரு நேரடி நிதர்சனம். சுருக்கமாகச் சொன்னால், “வலி உங்களுடையது, ஆனால் அதை உணரும் தருணம் என்னுடையது.”

3. சுயத்திற்கும் பிறருக்குமான எல்லையை ஸ்டைன் மிகத் தெளிவாக வரையறுக்கிறார். நாம் மற்றவரின் உணர்வுகளுக்குள் ஊடுருவிச் செல்லும்போதும், அந்த உணர்வு நமக்கு அந்நியமானது என்ற விழிப்புணர்வு எப்போதும் இருக்கும். உதாரணமாக, ஒருவரது வலியைக் கண்டு நாம் வருந்தும்போது, அந்த வலி வேறொரு உடலுக்குச் சொந்தமானது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். இங்கே இரண்டு மனங்கள் இணைகின்றனவே தவிர, ஒருவரின் அடையாளம் மற்றவருடன் கலந்து போவதில்லை.

4. எட்மண்ட் ஹுஸர்லின் தத்துவத்தில் விடுபட்ட ஒரு முக்கியமான புள்ளியை  ஸ்டைன் பூர்த்தி செய்தார். பல மனிதர்கள் சேர்ந்து வாழும் இந்த உலகில், ஒரு பொதுவான புரிதல் (Shared Reality) எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கு ஸ்டைன் விடையளித்தார். பரிவுணர்வு தான் மனிதர்களுக்கிடையிலான அந்தப் பாலத்தை உருவாக்குகிறது. நாம் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இல்லாமல், ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்துகொள்வதற்கான அடிப்படை இயந்திரமாகப் பரிவுணர்வு செயல்படுகிறது என்று அவர் நிரூபித்தார்.

ஈடித் ஸ்டைன்

தோற்றப்பாட்டியல்: தர்க்க ரீதியான குறைப்புவாதத்திலிருந்து ஆன்மீகப் புரிதல் நோக்கி

ஈடித் ஸ்டைனின் உளவியல் மற்றும் மானுடவியல் குறித்த தத்துவார்த்தப் பார்வை, மனித ஆளுமையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்ப்பதிலிருந்து விடுவிக்கும் பெரும் முயற்சியாகும். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய, உளவியலை  இயற்கை அறிவியலாக அதாவது மனிதர்களை அளவிடக்கூடிய புறநிலைச் செயல்பாடுகளாகக் கருதும் போக்கை அவர் கடுமையாக எதிர்த்தார்.மனிதர்களை வெறும் நடத்தை சார்ந்த இயந்திரங்களாகவோ , உயிரியல் கூறுகளின் தொகுப்பாகவோ அல்லது ஆய்வகத்தில் விலகி நின்று கவனிக்கும் பொருளாகவோ குறைத்து மதிப்பிடும் எந்தவொரு அணுகுமுறையும் மனிதத்தின் சாரத்தை இழந்துவிடும் என்பது ஸ்டைனின் மிக முக்கியமான வாதம். இத்தகைய குறைப்புவாதம் மனிதனை ஜடப்பொருளாக மட்டுமே பார்க்கிறது; ஆனால் மனிதன் என்பவன் அத்தகைய வரையறைகளுக்குள் அடங்காத ஒரு பேருண்மை.

ஸ்டைனின் இந்தப் பார்வை  கவித்துவமான கூற்று அல்ல; இது ஆய்வுமுறை சார்ந்த அணுகுமுறை. உண்மையான புரிதல் என்பது ஒரு கோட்பாட்டிலிருந்து தொடங்காமல், அனுபவிக்கப்படும் பிரக்ஞையிலிருந்து தொடங்க வேண்டும். அவர் ஹுஸர்லின் தோற்றப்பாட்டியலை அப்படியே பின்பற்றவில்லை; மாறாக அதன் தாக்கத்தைக் கூர்மைப்படுத்தினார். அனுபவம் என்பது முறையான கட்டமைப்பைக் கொண்டது என்றும், அதைத் தனிநபர் சார்ந்ததாகவோ அல்லது வெறும் பருப்பொருள் உண்மையாகவோ சுருக்காமல் ஆராய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த மனித ஆளுமை என்பது இந்தத் தத்துவத்தின் மிக முக்கியமான பங்களிப்பு, மனிதனை ஒருங்கிணைந்த அடுக்குகளைக் கொண்ட உயிரியாகப் பார்ப்பதுதான். மனம், உடல், உணர்வு என மனிதனைத் துண்டு துண்டாகப் பிரிக்க அவர் மறுத்தார். மாறாக, மனம், உடல் ரீதியான இருப்பு மற்றும் ஆன்மீக நோக்குநிலை ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த  முழுமையான வடிவமாகவே அவர் மனிதனைக் கண்டார். தனித்தனி அனுபவங்களை விவரிப்பதோடு நின்றுவிடாமல், அந்த அனுபவங்கள் எவ்வாறு காலப்போக்கில் ஒத்திசைவான தனிநபர் அடையாளத்தை  உருவாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அவர் முயன்றார்.

ஸ்டைனின் பரிவுணர்வு குறித்த பார்வை மிக நுட்பமானது. அவருக்குப் பரிவுணர்வு என்பது உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதோ அல்லது பரிதாபப்படுவதோ அல்ல, அதன் மூலம் ஒருவர் மற்றவருடைய அனுபவத்தைத் தன்னுடைய அனுபவத்திலிருந்து வேறுபடுத்திப் புரிந்துகொள்கிறார். வரலாறு, இலக்கியம், கலாச்சார ஆய்வுகள் போன்ற மானுடவியல் துறைகள் வெறும் இரண்டாம் நிலைத் துறைகள் அல்ல என்பதை அவர் வாதிட்டார். தரவுகளாகச் சுருக்க முடியாத மனித இருப்பின் அர்த்தங்களை இவைதான் தாங்கி நிற்கின்றன. ஒரு வரலாற்று நிகழ்வு ஏன் முக்கியமானது அல்லது ஒரு கலைப்படைப்பு ஏன் நம்மை நெகிழ வைக்கிறது என்பதை அறிவியல் ரீதியான உளவியலால் விளக்க முடியாது. மனித வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகவோ அல்லது ஒரு உள்நோக்கம் கொண்ட செயலாகவோ அமைகிறது. ஒரு மனிதனின் துயரம் அல்லது மகிழ்ச்சி என்பது புறவயமான தரவு அல்ல ; அது அந்த நபர் தனது உலகைக் கட்டமைக்கும் விதம் சார்ந்தது. இந்த அர்த்தங்களின் உலகிற்குள் நுழைவதற்கு, நாம் அந்த மனிதனை வெறும் பொருளாக  அணுகக் கூடாது என்பதே அவரின் வாதம்.

அறிவியலின் எல்லைகளும் இன்றைய தேவையும்:

ஈடித் ஸ்டைன் அறிவியலுக்கு எதிரானவர் அல்ல; மாறாக, அறிவியலின் எல்லைகளை மிகத் துல்லியமாக உணர்ந்தவர். அறிவியலுக்கு என்று சில வரம்புகள் உண்டு என்றும், அந்த வரம்புகளை மீறி அது மனித இருப்பை முழுமையாகத் தீர்மானிக்க முற்படும்போது அது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார். உளவியல் அல்லது நரம்பியல் போன்ற துறைகள் மனித அனுபவங்களை வெறும் காரண-காரியங்களாக அல்லது அளவுசார்ந்த தரவுகளாக விளக்க முற்படும்போது, அவை எதை ஆராயப் புறப்பட்டவோ அந்த மனிதத் தன்மையையே சிதைத்துவிடுகின்றன. இன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் பிரக்ஞை குறித்த விவாதங்களில் ஸ்டைனின் கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவீன  அமைப்புகள் மொழியையும் உணர்வுகளையும் மிக நேர்த்தியாகப் பிரதிபலிக்கின்றன என்றாலும், ஸ்டைன் கூறுவது போல அனுபவம் என்பது உள்ளிருந்து வாழப்படுவது . ஒரு இயந்திரத்தால் வலியைப் பற்றிய தரவுகளைத் தொகுத்து வழங்க முடியுமே தவிர, அந்த வலியை ஒரு தன்னிலையாக உணர முடியாது. மனித அனுபவத்தைப் புறநிலை வடிவங்களாகவும் கணித சூத்திரங்களாகவும் சுருக்கும் அதே குறைப்புவாதத் தவறு, இன்று அதிநவீன அல்காரிதங்களுடன் மீண்டும் நிகழ்கிறது. நாம் உண்மையில் மனித மனத்தைப் புரிந்து கொள்கிறோமா அல்லது மனிதத் தன்மையை முற்றிலும் புறக்கணிக்கும் ஒரு மேம்பட்ட அமைப்பைக் கட்டமைக்கிறோமா என்ற கடினமான கேள்வியை ஸ்டைனின் படைப்புகள் நம் முன் வைக்கின்றன. மனிதனை ஒரு இயந்திரமாக அணுகுவதற்கும், அவனை ஒரு உன்னத இருப்பாக அங்கீகரிப்பதற்கும் இடையே இருக்கும் அந்த மெல்லிய கோட்டை ஸ்டைன் இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் நமக்கு நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார்.

ஈடித் ஸ்டைனின் பகுப்பாய்வில் மிகத் தெளிவாகப் புலப்படுவது, அவர் பின்பற்றிய ஆய்வுமுறை அதன் சொந்த எல்லைகளுக்கு எதிராகவே பெரும் அழுத்தத்தை உருவாக்கத் தொடங்குகிறது. அனுபவங்களை நுணுக்கமாக விவரிப்பதன் மூலம் பிரக்ஞையின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை வெளிப்படுத்த முடியும் என்ற கருத்தாக்கத்தின் மீதே தோற்றப்பாட்டியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டைன் வெறும் விவரிப்புடன் நின்றுவிடவில்லை; ஆளுமை, விழுமியங்கள் மற்றும் அகத்தின் ஆழம் குறித்த கேள்விகளை நோக்கி அவர் நகர்கிறார். இவை வெறும் ஆய்வுமுறையினால் மட்டும் நிலைநிறுத்தப்பட முடியாதவை. இங்குதான் அவர் ஒருபோதும் முழுமையாகத் தீர்க்காத ஒரு முரண் எழுகிறது: அனுபவமே அடிப்படை என்றால், காலப்போக்கில் அந்தச் சுயம் சிதறாமல் இருப்பதற்குக் காரணமான ஒத்திசைவு எது? விவரிப்புகள் பிரக்ஞையின் கணங்களை வரைபடமாக்கலாம், ஆனால் ஒரு மனிதனின் தொடர்ச்சி, மாற்றம் மற்றும் அறம் சார்ந்த திசைவழியை அவற்றால் முழுமையாக விளக்க முடிவதில்லை. ஸ்டைன் இந்த இடைவெளியை உணர்கிறார்; அதைத் தவிர்க்காமல், அதனுள்ளேயே ஆழமாக நுழைகிறார்.

இங்குதான் அவரது படைப்புகள் மெல்ல உருமாறத் தொடங்குகின்றன. எவ்வித அதிரடியான தத்துவப் பிரகடனங்களும் இன்றி, மனிதனை வெறும் அனுபவங்களின் கட்டமைப்பாக மட்டும் பார்க்காமல், உடனடித் தரவுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அவர் கருதத் தொடங்குகிறார். அவரது மொழி நுட்பமாகவும் அதே சமயம் உறுதியாகவும் ஆழம், அகத்தன்மை மற்றும் ஆய்வுமுறைகளால் முழுமையாகப் பிடிக்க முடியாத ஓர் ஒத்திசைந்த ஒற்றுமையை நோக்கி நகர்கிறது. இது இறையியல் கோட்பாடு அல்ல, ஆனால் அதே சமயம் வெறும் தோற்றப்பாட்டியலும் அல்ல. தனது ஆய்வுமுறை அதன் எல்லையைத் தொடுவதையும், அந்த எல்லையை எட்டவில்லை என்று பாசாங்கு செய்ய அவர் மறுப்பதையும் நம்மால் இங்கே காண முடிகிறது.

மானுடவியல் துறைகளை அவர் கையாளும் விதம் இந்த மாற்றத்தை இன்னும் உறுதிப்படுத்துகிறது. இலக்கியம், வரலாறு அல்லது கலாச்சாரத்தை அவர் வெறும் ஆய்வுப் பொருட்களாக அணுகாமல், தனித்த பகுப்பாய்வுகளால் மட்டும் அணுக முடியாத அர்த்தங்களின் வெளிப்பாடாகவே அவற்றைக் கருதுகிறார். ஒரு வரலாற்று நாயகனையோ அல்லது ஓர் இலக்கியக் கதாபாத்திரத்தையோ புரிந்துகொள்வது என்பது அவர்களுக்குக் காரண-காரிய விளக்கம் அளிப்பது மட்டும்  அல்ல, அவர்களின் தனித்துவத்தைச் சிதைக்காமல் அவர்களின் அனுபவக் கட்டமைப்பிற்குள் நுழைவதாகும். இது கடினமான நிலைப்பாடு, ஏனெனில் இதற்கு ஒரே நேரத்தில் தத்துவ ஒழுங்கும்   மற்றும் திறந்த மனமும் தேவைப்படுகிறது. பொருள் மீது நாம்  ஒரு கோட்பாட்டைத் திணிக்க முடியாது, அதே சமயம் தத்துவக் கட்டமைப்பையும் கைவிட முடியாது. பெரும்பாலான சிந்தனையாளர்கள் இங்குதான் தோற்கிறார்கள், அவர்கள் மிக அதிகமான அருவத்தன்மைக்கு ஆட்படுகிறார்கள் அல்லது சார்புநிலை வாதத்திற்குள் வீழ்கிறார்கள். ஸ்டைன் இவ்விரண்டையும் தவிர்க்கிறார், ஆனால் அதன் விலை என்னவென்றால், அவரது தத்துவக் கட்டமைப்பு நிலைநிறுத்தப்படுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாக மாறுகிறது.

புறநிலைத்தன்மை என்பதை ஒரு விலகலாகவோ அல்லது மனங்களுக்கு இடையிலான இடைவெளியாகவோ கருதிப் போற்றும் நவீனத்துவத்தின் தீவிரப் போக்கை, அவர் தனது படைப்புகளின் வழியே நுட்பமாக விமர்சிக்கிறார். புரிதலுக்கு ஒருவித விலகல் அவசியம் என்ற கருத்தை ஸ்டைன் சவாலுக்கு உட்படுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை, உண்மையான புரிதலுக்கு பெரும்பாலும் ஒருவித அண்மை  தேவைப்படுகிறது. உணர்ச்சிப்பூர்வமான அடையாளம் காணல் அல்ல, மாறாக மற்றவரின் பார்வையில் ஒரு ஒழுங்குமுறை சார்ந்த பங்கேற்பு. நடுநிலைமையே அறிவின் மிக உயர்ந்த வடிவம் என்று போற்றும் அறிவியல் மாதிரிகளுக்கு இது நேரடி சவால். ஸ்டைன் புறநிலைத்தன்மையை நிராகரிக்கவில்லை; அவர் அதை மறுவரையறை செய்கிறார். அவரது கட்டமைப்பில், புறநிலைத்தன்மை என்பது பார்வைகளே இல்லாத நிலை அல்ல, மாறாக மற்றவரின் அனுபவத்தைச் சிதைக்காமல் அதை உண்மையுடன் உள்வாங்குவதாகும்.

இதை இன்றைய சூழலுடன் இணைத்துப் பார்த்தால், அதன் பொருத்தப்பாடு சற்று அசௌகரியமான உண்மைகளையே முன்வைக்கிறது. இன்றைய செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவியலின் பெரும்பகுதி, மனித அனுபவத்தைப் புறநிலை வடிவங்கள் மூலம் மாதிரியாக்கலாம், கணிக்கலாம் மற்றும் நகலெடுக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. மூளையின் மின் சமிக்ஞைகளை ஆய்வு செய்யும் brain-computer interface போன்ற அறிவியல் முன்னெடுப்புகளை ஸ்டைன் தனது தத்துவப் பின்புலத்திலிருந்து உடனடியாகத் நிராகரித்திருப்பார். அவரது பார்வையில், வெறும் அவதானிக்கத்தக்க தரவுகளின் அடிப்படையில் இயங்கும் எந்தவொரு அமைப்பும், மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அகப் பரிமாணத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் தரிசனமற்றது. வாழும் அனுபவத்தைப் புரிந்து கொள்ளாமல் பிரக்ஞையைக் கையாளவில்லை, அதன் நிழலையே கையாளுகிறீர்கள் என்பதே அவரது வாதமாக இருந்திருக்கும். அவரது படைப்பின் ஆழமான தாக்கம் தத்துவார்த்தமானது மட்டுமல்ல, அது இருத்தியல் சார்ந்தது கூட. மனிதனை வெறும் தரவுகளாகவோ, நடத்தையாகவோ அல்லது கட்டமைக்கப்பட்ட விவரிப்பாகவோ சுருக்க முடியாது என்றால், மனிதர்களைச் சுருக்கப்படக்கூடிய உருப்படிகளாகக் கருதும் எந்தவொரு அறிவியல், தொழில்நுட்ப அல்லது சமூக அமைப்பும் தவறான அடித்தளத்திலேயே இயங்குகிறது. ஸ்டைன் இதை நேரடியான அறம் சார்ந்த வாதமாக முன்வைக்கவில்லை என்றாலும், அதன் முடிவு தவிர்க்க முடியாமல் அவ்வாறே மாறுகிறது. அவரது தத்துவக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வது என்பது, மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்வதில் கட்டுப்பாடு, கணிப்பு மற்றும் எளிமைப்படுத்தல் ஆகியவற்றின் எல்லைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதாகும்.

ஈடித் ஸ்டைனின் தத்துவார்த்தப் பயணத்தில் ஏற்படும் இந்த அக முரண்பாடு, தோற்றப்பாட்டியலை நிராகரிப்பதில் முடிவடையவில்லை; மாறாக, மனித ஆளுமையின் முழுமையான ஆழத்தை எதிர்கொள்ளும்போது அந்த ஆய்வு முறையின் போதாமையை அது அம்பலப்படுத்துகிறது. இந்த மாற்றம் நுட்பமானது, ஆனால் தீர்மானமானது: பிரக்ஞையை முழுமையாக விவரிக்கப்படக்கூடிய ஒன்றாகக் கருதுவதற்குப் பதிலாக, மனித இருப்பின் சில பரிமாணங்களான சுதந்திரம், விழுமியங்கள் மற்றும் அக ஒத்திசைவு போன்றவை வெறும் அனுபவத்தின் எல்லைக்குள் மட்டும் முழுமையாகத் துலங்க முடியாது என்பதை அவர் அங்கீகரிக்கத் தொடங்குகிறார். இந்தத் தெளிவு அவரது படைப்புகள் சார்புநிலை வாதமாகவோ அல்லது மேலோட்டமான அகநிலை வாதமாகவோ சிதைந்து விடாமல் தடுக்கிறது. அதே நேரத்தில், வெறும் தத்துவார்த்தமானது என்று சொல்ல முடியாத ஒரு புதிய தேடலுக்கான கதவையும் திறக்கிறது. மெய்யியல் மற்றும் இறுதியில் இறையியல் நோக்கிய அவரது நகர்வு, இந்த அழுத்தத்தின் உட்புறத்திலிருந்தே புரிந்து கொள்ளப்பட வேண்டும். மனித ஆளுமை என்பது அனுபவ ரீதியான அவதானிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட விவரிப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆழத்தைக் கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டால், “இந்த ஆழத்தின் அடிப்படை எது?” என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. நாம் அர்த்தத்தை எப்படி அனுபவிக்கிறோம் என்பதைத் தோற்றப்பாட்டியலால் விவரிக்க முடியும், ஆனால் அந்த அர்த்தத்திற்கு ஏன் அத்தகைய தார்மீக அதிகாரம் இருக்கிறது என்பதை அதனால் முழுமையாக விளக்க முடியாது. அந்தத் தார்மீகக் கேள்வியைப் புறக்கணிக்க ஸ்டைன் மறுக்கிறார். பல தத்துவஞானிகள் பிரக்ஞையின் கட்டமைப்புகளை வரைபடமாக்குவதோடு திருப்தியடைந்து நின்றுவிடும் இடத்தில், ஸ்டைன் அந்தக் கட்டமைப்புகளுக்கு அடியில் இருக்கும் ஆதாரத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்கிறார்.

இங்கே பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் கருத்தும் உள்ளது. மனித அனுபவத்தை முழுமையாக ஒரு முறைமைக்குள்  கொண்டு வரும் எந்தவொரு முயற்சியும், தவிர்க்க முடியாமல் அதாவது முழுமையான விளக்கத்திற்கு அடங்க மறுக்கும் ஏதோ ஒன்றை எதிர்கொள்ளும் என்று ஸ்டைனின் படைப்புகள் உணர்த்துகின்றன. எஞ்சியிருப்பது என்பது தத்துவ முறையின் குறைபாடு அல்ல; அது யதார்த்தத்தின் ஒரு அம்சம். நாம் பிரக்ஞையை எவ்வளவு துல்லியமாகப் பகுப்பாய்வு செய்கிறோமோ , அவ்வளவுக்கு அவ்வளவு எதைக் குறைக்க  முடியாதோ அதை எதிர்கொள்ள நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இதனால்தான் அவரது படைப்புகள் ஒரே நேரத்தில் செழுமையாகவும் அதே சமயம் முடிவற்றதாகவும்  உணரப்படுகின்றன. நிச்சயமாக அது மூடிய கோட்பாடாக முடிவடைவதில்லை, ஏனெனில் அவை கையாளும் பொருள்—மனித ஆளுமை எந்த ஒரு எல்லைக்குள்ளும் அடைபடாதது.ஈடித் ஸ்டைனின் இந்தப் பயணம், ஒரு கவிஞன் சொற்களைக் கொண்டு மௌனத்தைப் பிடிக்க முயல்வதைப் போன்றது. எவ்வளவுதான் துல்லியமான சொற்களைப் பயன்படுத்தினாலும், அந்த மௌனத்தின் சாராம்சம் சொற்களுக்கு அப்பாற்பட்டே நிற்கிறது.இறுதியில் வெளிப்படுவது நவீன அறிவியலின் நிராகரிப்பு என்பதை எடுத்துக்கொள்ளாமல்  முன்னுரிமைகளை மறுசீரமைப்பதே ஆகும். அறிவியல் அறிவு இன்றும் அத்தியாவசியமானது, ஆனால் அதுவே எதார்த்தத்தின் இறுதி அளவுகோல் அல்ல. மாறாக, அது இருப்பைப் புரிந்துகொள்வதற்கான பரிமாணமாக மட்டுமே மாறுகிறது. வாழும் அனுபவத்தின் முதன்மை, உறவுசார்ந்த இருப்பின் மையம் மற்றும் நோக்கத்தின் அவசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான புரிதலே இன்று நமக்குத் தேவை. இந்த மறுசீரமைப்பு இல்லையெனில், நவீன உலகம் ஒரு முரண்பாட்டிற்குள்ளேயே சிக்கிக் கிடக்கும். இயற்கையைப் பற்றிய முன்னெப்போதும் இல்லாத அறிவைப் பெற்றிருந்தும், அதை முழுமையான மனிதத் தன்மையோடு புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் முரண்பாடே அது.

இயற்கையின் ஆன்மீக ஒழுங்கு:

நவீன உலகில் இயற்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சி மகத்தான பரிணாமத்தை அடைந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலாச்சாரம் நமக்கு இயற்கையின் செயல்பாடுகளைப் பற்றிய துல்லியமான தரவுகளையும், வியக்கத்தக்க ஆற்றலையும் வழங்கியுள்ளது.இந்தச் செயல்பாட்டில் அறிவியல் நமக்கு “எப்படி?” என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெளிவாகத் தருகிறது. ஈடித் ஸ்டைனின் தத்துவப் பார்வை, இந்தத் தேடலோடு “ஏன்?” என்ற ஆழமான நோக்கவியல் புரிதலையும் இணைக்க வழிகாட்டுகிறது.

இயற்கை குறித்து இன்று நிலவும் முதன்மையான அணுகுமுறைகள் இப்பிரச்சினையின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. ஒரு அணுகுமுறை இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாக அல்லது மூலப்பொருளாகச் சுருக்குகிறது; அளவிடப்பட வேண்டிய, கட்டுப்படுத்தப்பட வேண்டிய மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே அதைக் கருதுகிறது. இந்தச் சட்டகம் அறிவியல் பகுத்தறிவோடு ஒத்துப்போனாலும், அது உயிர்த்துடிப்புள்ள இயற்கையை வெறும் ஜடப்பொருளாக மாற்றிவிடுகிறது. இரண்டாவது அணுகுமுறை இதற்கு நேர் எதிராகச் சென்று, இயற்கையை புனிதமான தாய்மைப் பண்பு கொண்டதாக மெருகூட்டுகிறது. இது தர்க்கத்தை விட உணர்வுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது; ஆனால் இதுவும் தோல்வியடைகிறது, ஏனெனில் இது உண்மையான புரிதலுக்குப் பதிலாகத் தன் கற்பனைகளை இயற்கை மீது திணிக்கிறது. இயற்கையின் பாராமுகத்தையும், அதன் சிக்கலையும் இது முழுமையாகப் புறக்கணிக்கிறது. மூன்றாவது நிலையோ, மனிதத் தாக்கத்தைக் குறைப்பதன் மூலம் இயற்கையைப் பாதுகாக்க முயல்கிறது; ஆனால் இது மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே ஒரு செயற்கையான பிளவை உருவாக்குகிறது. இந்த அணுகுமுறைகள் எவையும் இயற்கையோடு ஒரு உண்மையான உறவை ஏற்படுத்தவில்லை. ஈடித் ஸ்டைனின் பார்வையில், இவை இயற்கையை ஆதிக்கம் செய்கின்றன, அல்லது வெறும் புகழுரைகளால் மூடுகின்றன, அல்லது அதிலிருந்து விலகி நிற்கின்றன. ஸ்டைன் முன்வைக்கும் மாற்று வழி என்பது, இயற்கையை அதன் அந்நியத்தன்மையோடு ஒரு நேரடி இருப்பாக அங்கீகரிப்பதாகும். நம்முடைய பிம்பத்தையோ அல்லது தேவைகளையோ அதன் மீது திணிக்காமல், அது நமக்காக அன்றி தனக்கென ஒரு இருப்பைக் கொண்டுள்ளது என்பதை உணர்வதே இயற்கையுடனான உண்மையான அறப்பரிமாற்றம் என்று அவர் கருதியிருப்பார்.

இயற்கையை பற்றிய ஸ்டைனின் வாதம் அடிப்படையிலிருந்து தொடங்குகிறது: மனிதனைப் பற்றிய சரியான புரிதலின் மூலமே இயற்கையைப் புரிந்துகொள்ள முடியும். இது மேலோட்டமான மனித மைய வாதம் அல்ல.  அனைத்து அறிவும் வாழும் அனுபவத்திலிருந்தே தொடங்குகின்றன. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட உலகில் நாம் உடலார்ந்த, பகுத்தறிவுள்ள உயிரியாக நம்மை உணரும் உண்மையிலிருந்தே அறிவு பிறக்கிறது. இந்தத் தொடக்கப்புள்ளியைத் தவிர்த்துவிட்டு வெறும் அருவமான அமைப்புகளையோ அல்லது தரவுகளையோ மட்டும் நாடுவது பெரும் சிதைவுகளுக்கு இட்டுச் செல்லும். ஏனெனில் அறிவு சாத்தியமாவதற்கான அடிப்படை நிபந்தனைகளையே அவை புறக்கணிக்கின்றன. மனித அனுபவம் என்பது புறநிலைத் தன்மைக்கு  ஒரு தடையல்ல; அதுவே அதன் அடித்தளம்.

இந்தக் கட்டமைப்பில் பரிவுணர்வு   மையப் பாத்திரத்தை வகிக்கிறது.  வெறும் அறம் சார்ந்த குணமாக மட்டுமல்ல, மற்றவர்களின் எதார்த்தத்தை நாம் அணுகுவதற்கான ஒரு அறிதல் முறை. பரிவுணர்வு மூலம் தனிமனிதன் ஒரு சமூகத்திற்குள் ஈர்க்கப்படுகிறான்; அறிவு என்பது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பிறப்பதல்ல, அது உறவுசார்ந்த இருப்பிலிருந்தே உருவாகிறது. சுயம் என்பது தனித்து இயங்கக்கூடியது என்ற நவீனக் கருத்தாக்கத்திற்குச் சவால் விடுகிறது. மனிதன் இயற்கையைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பார்வையாளன் அல்ல, மாறாக அவன் அந்தப் பெரு ஒழுங்கில் ஒரு பங்கேற்பாளன். எனவே, இயற்கையைப் புரிந்துகொள்வது என்பது அதற்குக் வெளியே நின்று ஆராய்வது அல்ல, மாறாகப் பொதுவான ஓர் இருப்பின் வரிசையில் ஒருவனுடைய இடத்தைத் தெரிந்துகொள்வதாகும்.

அறிவியல் விளக்கங்களின் எல்லைகள் இந்தப் புள்ளியில் தெளிவாகின்றன. வடிவங்கள், வழிமுறைகள் மற்றும் காரண-காரியத் தொடர்புகளை விவரிப்பதில் அறிவியல் சிறந்து விளங்குகிறது; ஆனால் அது வாழும் அனுபவத்திலிருந்து விலகி நின்றே இயங்குகிறது. இதனால் அது எதார்த்தத்தை வெறும் கணிதச் சூத்திரங்களாகச் சுருக்க முற்படுகிறது. இது தனித்துவத்தையும், அகத்தன்மையையும் அழித்துவிடுகிறது. அறிவியல் மாதிரிகள் விரிவடைய விரிவடைய, அவை தனித்துவமான உயிரினங்களின் சிறப்புகளை மழுங்கடிக்கச் செய்கின்றன. இது அறிவியலின் தோல்வி அல்ல, மாறாக அதன் ஆய்வு முறையை அதன் எல்லைக்கு அப்பால் நீட்டிப்பதன் விளைவு. விஷயங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிவியல் சொல்லலாம், ஆனால் அவை முழுமையாக என்னவாக இருக்கின்றன அல்லது அவை ஏன் முக்கியமானவை என்பதை அதால் தீர்மானிக்க முடியாது.

இயற்கையின் நோக்கவியல் புரிதல் இந்தச் சட்டகத்தில் விடுபட்டவற்றை மீட்டெடுக்கிறது. நோக்கவியல் என்பது இயற்கையின் மீது வெளிப்புற நோக்கங்களைத் திணிப்பது அல்ல; மாறாக உயிரினங்கள் வெறும் காரண-காரியங்களுக்கு அடங்காத திசைவழியையும், ஒழுங்கையும் கொண்டிருப்பதை அங்கீகரிப்பதாகும். குறிப்பாக, உயிரினங்களின் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கியே அமைகின்றன; இத்தகைய இலக்குகளை இயந்திரத்தனமான செயல்பாடுகளால் மட்டும் விளக்கிவிட முடியாது. இந்தப் பரிமாணம் புறக்கணிக்கப்படும்போது, மிக முக்கியமான நிலையில் இயற்கை நமக்குப் புரியாத ஒன்றாக மாறிவிடுகிறது. இந்த நோக்கம் விரிவான மெய்யியல் தளத்தை நோக்கித் திறக்கிறது. இயற்கை என்பது  கட்டமைக்கப்பட்ட, புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் திசை சார்ந்தது என்றால், அதற்கான ஆதாரத்தைத் தேடுவது தவிர்க்க முடியாததாகிறது. ஸ்டைனின் தத்துவப் பயணம், இருப்பின் ஒத்திசைவை வெறும் அனுபவங்களால் மட்டும் விளக்கிவிட முடியாது என்பதை உணர்த்துகிறது. இறையியல் நோக்கிய அவரது நகர்வு என்பது அறிவிலிருந்து விலகிச் செல்வதல்ல, மாறாக அறிவின் நீட்சியே ஆகும். ஒரு இறையியல் பார்வை அறிவியல் அறிவை மறுக்கவில்லை; மாறாக அதை ஒரு பெரிய கட்டமைப்பிற்குள் நிலைநிறுத்துகிறது. அங்கு அனுபவ அறிவு, தத்துவ அறிவு மற்றும் அறிவியல் அறிவு ஆகிய அனைத்தும் ஒன்றிணைகின்றன.

தர்க்கத்திலிருந்து இறைமை நோக்கிய பயணம்:

நவீன தத்துவவியலில் கடவுள் என்பது நிரூபிக்கப்படாத விஷயமாகக் கருதப்படவில்லை; மாறாக, தத்துவ விசாரணையின் கட்டமைப்பே அவரை அணுக முடியாத ஒரு இடத்திற்குத் தள்ளிவிட்டது. முந்தைய மரபுகள் இறை அறிவை அறிவின் உச்சமாகக் கருதின. ஆனால் நவீன தத்துவம் அதை அறியமுடியாத ஒன்றாகவோ அல்லது தேவையற்ற ஒன்றாகவோ மாற்றியது.

இம்மானுவேல் கான்ட் இதில் முக்கியமான பிரிவினைக்கோட்டை உருவாக்கினார். மனித அறிவாற்றல் என்பது புலன்களுக்கு எட்டும் தோற்றப்பாடுகளுக்கு (phenomena) மட்டுமே உட்பட்டது; அவற்றிற்கு அப்பால் உள்ள உண்மைப் பொருளை (noumenal realm) நேரடியாக அறிய முடியாது என்று அவர் வாதிட்டார். இதன் மூலம் கடவுள் மறுக்கப்படவில்லை, ஆனால் அவர்  தர்க்கரீதியான அனுமானமாக (postulate) மட்டுமே மாற்றப்பட்டார். இது கடவுளை நேரடி அனுபவமாகவோ அல்லது அறிவாகவோ அணுகுவதைத் தடுத்தது. இந்தச் சரிவு ஃபிரடெரிக் நீட்சேவின் “கடவுள் இறந்துவிட்டார்” என்ற பிரகடனத்தில் உச்சமடைந்தது. கடவுள் நம்பிக்கையைத் தாங்கிப் பிடித்த தத்துவங்கள்  மற்றும் நிறுவன மதக் கட்டமைப்புகள் நவீனத்துவத்தின் அழுத்தத்தால் சரிந்துவிட்டன. ஒரு நிலையான கோட்பாடு  இல்லாத நிலையில், வாழ்வின் அர்த்தம் என்பது நிலையற்றதாகவும், மனிதனால் சுயவிருப்பத்தின் பேரில் உருவாக்கப்படும் ஒன்றாகவும் மாறியது.

இந்த முறிவின் பின்னணியில் எட்மண்ட் ஹுஸர்ல் தோற்றவியலை  அறிமுகப்படுத்தினார். கடவுளைப் பற்றி நேரடியான விவரணையல்லாது ஒரு விஷயம் நமது பிரக்ஞையில் எவ்வாறு தோன்றுகிறது என்பதை ஆராயும் வழிமுறை. “விஷயங்கள் அவையாகவே இருக்கும் இடத்திற்குத் திரும்புவோம்” என்பதே இதன் நோக்கம். இச்சிந்தனை எதிர்பாராத திறப்பை உருவாக்கியது: புறவயமான பொருட்களைத் தாண்டி, பிரக்ஞையில் வேறு ஏதேனும் வெளிப்படுகிறதா? இங்குதான் எடித் ஸ்டைன் மற்றொரு சிந்தனையை முன்வைக்கிறார். ஹுஸர்லிடம் பயிற்சி பெற்ற ஸ்டைன், அறிவு என்பது வெறும் அனுபவப் பகிர்வு அல்லது பகுத்தறிவுக்கு மட்டுமே உட்பட்டது என்பதை ஏற்க மறுத்தார். அனுதாபம் குறித்த அவரது ஆரம்பகால ஆய்வுகள், மற்ற மனிதர்களை நாம் வெறும் பொருட்களாகப் பார்க்காமல், அக உணர்வு கொண்டவர்களாக உணர்வதைச் சுட்டிக்காட்டின. ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு மையம் அல்லது அக ஆழம் இருப்பதாகவும், அது பகுத்தறிவு ஆய்வுக்கு முழுமையாகப் பிடிபடாதது என்றும் அவர் வாதிட்டார்.

இதன் மூலம் கடவுள் பற்றிய கேள்வி ஒரு தத்துவார்த்த அனுபவமாக மாறுகிறது:

  1. மனிதப் பிரக்ஞை தனக்கு அப்பாற்பட்ட ஒன்றைத் தேடுகிறதா?
  2. மனித இருப்பின் ஆழத்தை, அதைத் தாங்கி நிற்கும் ஒரு பேராதாரத்தின் துணையின்றி முழுமையாகத் தரிசிக்க முடியுமா?
  3. பிரக்ஞை என்பது தனக்குள் மூடிக்கொண்ட ஒன்றா அல்லது எல்லையற்றதை நோக்கித் திறக்கப்பட்டுள்ளதா?

ஸ்டைன் கடவுளை நிரூபிக்கப்பட வேண்டிய கோட்பாடாகப் பார்க்கவில்லை. மாறாக, மனித அனுபவத்தின் கட்டமைப்பே அந்தப் பேராற்றலை நோக்கித்தான் திரும்பியுள்ளதா என்று ஆராய்ந்தார். தனது பிற்காலப் படைப்புகளில் தாமஸ் அக்குவைனஸின் தத்துவங்களுடன் இணைந்து, கடவுளை இருப்பின் முழுமை (fullness of being) என்று அவர் விளக்கினார். பல சிந்தனையாளர்கள் தங்களுக்குக் கிடைத்த மரபுவழி நம்பிக்கையைத் தத்துவ ரீதியாக மெருகேற்றுவார்கள். ஆனால் ஸ்டைன், தனது இளமையிலேயே திட்டமிட்டு மத ஈடுபாடுகளைக் கைவிட்டார். பிரார்த்தனை செய்வதை நிறுத்திவிட்டு, தனிப்பட சிந்தனையை தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிடுகிறார். அவரது ஆரம்பகால நாத்திகம்  முறையியல் சார்ந்த முடிவு. இதன் காரணமாகவே, அவரது பிற்கால இறை-தேடலை நாம் மரபுவழி நம்பிக்கையாகப் பார்க்க முடியாது; அது தொடர்ச்சியான தத்துவ விசாரணையின் விளைவாகவே கொள்ளவேண்டும்.

1. ஸ்டைன் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது, தத்துவம் பெரும் மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அப்போது நிலவிய தர்க்கங்கள் தத்துவத்தை வெறும் அனுபவ அறிவியலாகவோ அல்லது வரலாற்று விளக்கங்களாகவோ சுருக்கின. இதற்கு மாற்றாக, எட்மண்ட் ஹுஸர்லின் தோற்றவிலாக  தீவிரமான மாற்றாக உருவெடுத்தது. ஹுஸர்லின் தாக்கத்தால், ஸ்டைன் தோற்றப்பாட்டியலை  போக்காகப் பார்க்காமல், கட்டுப்பாடான ஒழுக்கமாக ஏற்றுக்கொண்டார். இந்த முறை எப்போக்கே எனப்படும் ஒரு செயல்முறையை வலியுறுத்துகிறது. அதாவது, ஒரு விஷயத்தை ஆராயும்போது அது குறித்த நமது முன்முடிவுகள், அறிவியல் நம்பிக்கைகள் மற்றும் மதக் கருத்துக்கள் அனைத்தையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த விஷயம் நமது பிரக்ஞையில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். ஸ்டைன் இதை மிகத் தீவிரமாகப் பின்பற்றினார். கடவுள் என்று ஒன்று இருப்பின், அது தன்னிச்சையாக உள்ளே நுழைக்கப்படக் கூடாது; அது அனுபவத்தின் கட்டமைப்பிலிருந்தே வெளிப்பட வேண்டும் என்று அவர் கருதினார்.

2. அவரது முனைவர் பட்ட ஆய்வான அனுதாபம் குறித்த சிக்கல்கள் (On the Problem of Empathy), அவரது தத்துவப் பாதை வழக்கமான எல்லைகளுக்குள் இருக்காது என்பதைக் காட்டியது. ஸ்டைனைப் பொறுத்தவரை, அனுதாபம் என்பது உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை அல்ல. அது மற்றொரு மனிதரை ஒரு பொருளாக பார்க்காமல், அவரை அனுபவத்தின் மையம் அல்லது மற்றொரு அக உணர்வு என நேரடியாக உணரும் தனித்துவமான வழிமுறை.

 3. இந்த ஆய்வை ஸ்டைன் மனித ஆளுமை குறித்த விரிவான விசாரணைக்கு நகர்த்தினார். ஒவ்வொரு மனிதருக்கும் மூன்று அடுக்குகளான இருப்பு இருப்பதாக அவர் வாதிட்டார். உடல் சார்ந்த இருப்பு (Bodily existence). உளவியல் சார்ந்த வாழ்வு (Psychic life – உணர்ச்சிகள், எதிர்வினைகள்).  மற்றும் ஆழமான தனித்துவ மையம்  (Personal core). இந்த மையம் என்பது ஒருவருக்கு அவரே கூட முழுமையாகப் புலப்படாத ஒன்று. அது காலப்போக்கிலேயே மெல்ல வெளிப்படுகிறது. மனிதன் தன்னைத்தானே முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்ற நவீனத்துவ நம்பிக்கையை இது தகர்க்கிறது. மனித பிரக்ஞை என்பது ஒரு மூடிய அமைப்பு அல்ல; அது தன்னைத் தாண்டிய, தன்னை விட மேலான ஒன்றை நோக்கித் திறக்கப்பட்டிருக்கிறது 

4. ஸ்டைனின் பிற்கால மத மாற்றத்தை அவரது தத்துவத்திலிருந்து பிரிந்த ஒரு நிகழ்வாகப் பார்க்க முடியாது. அதில் ஒரு தெளிவான தொடர்ச்சி இருக்கிறது: தோற்றவியல்  குறித்த ஆய்வு, புலன்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை உணர முடியும் என்று காட்டியது. மனித ஆளுமையின் கட்டமைப்பு, சுய-அறிவுக்கு அப்பாற்பட்ட ஆழத்தை வெளிப்படுத்தியது. பிரக்ஞையின் திறப்பு, எல்லையற்ற ஒன்றை நோக்கிய திசையைக் காட்டியது. அவர் புனித தெரெசாவின் நூல்களைப் படித்தபோது, அதுவரை அவரது தத்துவத் தேடல் எதைக் கண்டடைந்ததோ, அதற்கான ஒரு முறையான வடிவத்தை அந்தப் பிரதிகளில் கண்டார். இது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான தத்துவத் தேடல் அதன் எல்லையைத் தொடும்போது ஏற்படும் ஒரு புரிதல்.

எடித் ஸ்டைன் அனுதாபத்தை வெறும் விளக்கத்தோடு நிறுத்தியிருந்தால், அவர் பல தோற்றப்பாட்டியலாராகவே இருந்திருப்பார். நவீன தத்துவம், குறிப்பாகக் கான்ட்டிற்குப் பிறகு, பிரக்ஞையை (consciousness) ஒரு மூடிய பெட்டியாகவே பார்த்தது. உலகம் என்பது அந்தப் பெட்டிக்குள்ளே தோன்றும் பிம்பங்களாகவே கருதப்பட்டது. மற்ற மனிதர்கள் கூட அந்தப் பெட்டிக்குள் தெரியும் ஒரு பொருளாகவோ அல்லது அவர்களின் நடத்தையை வைத்து நாம் ஊகிக்கும் ஒரு கருத்தாக்கமாகவோ மட்டுமே சுருக்கப்பட்டனர். ஸ்டைன் இந்தச் சுருக்கத்தை வன்மையாக மறுக்கிறார். அவரது பகுப்பாய்வில், அனுதாபம் (Einfühlung) என்பது ஒரு தனித்துவமான அனுபவம். இதில் மற்றொரு மனிதர் ஒரு பொருளாகத் தெரிவதில்லை; மாறாக, அக வாழ்வு கொண்ட ஒரு உணர்வ மையமாக அவர் எதிர்கொள்ளப்படுகிறார். அந்த அக வாழ்வை நாம் தொட்டுணர முடியாது என்றாலும், அது உண்மை என்பதை நாம் நேரடியாக உணர்கிறோம். ஒரு நாற்காலியைப் பார்க்கும்போது அதன் வடிவம், நிறம் போன்ற பண்புகளை ஒரு ‘பொருளாக’ அறிகிறோம். ஆனால் ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, நாம் ஒரு உடலை மட்டும் பார்ப்பதில்லை; ஒரு இருப்பை எதிர்கொள்கிறோம். அவர்களின் மகிழ்ச்சியோ அல்லது துயரமோ நாம் கணக்கிடும் ஒன்றல்ல; அது நாம் சட்டென்று அடையாளம் காணும் ஒரு உண்மை. இங்குதான் நவீன அறிவாராய்ச்சியின் எல்லைகள் உடையத் தொடங்குகின்றன. ஏனெனில், அனுதாபம் என்பது உண்மையானது என்றால், மனிதப் பிரக்ஞை என்பது தனக்குள் பூட்டப்பட்ட ஒன்றல்ல. அது தனது எல்லைகளைத் தாண்டி, மற்றுமொரு உணர்வு மையத்தைச் சந்திக்கும் திறன் கொண்டது. இதன் தத்துவார்த்த விளைவுகள் மிக முக்கியமானவை, அதை இவ்வாறு வரையறைக்கலாம்.

1. இந்த அணுகுமுறை சுயமைய வாதத்தை (subjectivism) தகர்க்கிறது. உலகம் என்பது வெறும் எனது பிம்பம் அல்ல, எனக்கு வெளியே மற்றவர் என்ற உண்மை இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

2. நேரடி மற்றும் மறைமுக அறிவுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. மற்றொருவரின் அக வாழ்வு என்பது ஒரு பொருளைப் போல நேரடியாகப் புலப்படுவதும் அல்ல, அல்லது ஒரு அறிவியல் கோட்பாட்டைப் போல ஊகிப்பதும் அல்ல; அது ஒரு தனித்துவமான ‘வெளிப்பாடு’.

புறவயமான பொருட்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகள் இருக்கக்கூடும் என்றால், அனுபவத்திலிருந்து கடவுளைப் புறக்கணிப்பது என்பது வலுவான தர்க்கமாக இருக்க முடியாது. நவீன தத்துவம் புலன் காட்சியை (sensory perception) மட்டுமே அறிவின் அளவுகோலாகக் கொண்டது. அந்த அளவுகோலுக்குள் வராத எதையும் அது மாயை என்று தள்ளுபடி செய்தது. ஆனால் அனுதாபம் அந்த அளவுகோலின் போதாமையைத் தோலுரித்துக் காட்டுகிறது. அந்த அறிவு உண்மையானது, ஆனால் அது புலன் சார்ந்தது அல்ல. ஒருமுறை இதை ஏற்றுக்கொண்டால், அனுபவத்தின் களம் விரிவடைகிறது. அந்த விரிவடைந்த களத்தில், எல்லையற்ற இருப்பை   எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு உருவாகிறது. சுருக்கமாகச் சொன்னால், அனுதாபம் கடவுளை நிரூபிக்கவில்லை; ஆனால் கடவுளை அனுபவிப்பது என்பது தர்க்கத்திற்கு முரணானது அல்ல என்பதை அது தெளிவுபடுத்துகிறது. கடவுளை நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியை விட, கடவுளை எதிர்கொள்ளும் ஒரு அனுபவ நிலை மனிதனிடம் உள்ளதா என்ற ஆழமான கேள்விக்கு இது இட்டுச் செல்கிறது.

ஈடித் ஸ்டைன்

மடாலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஈடித் ஸ்டைன் ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நரகத்தைக் காட்டிலும் கொடிய சூழலில் சுற்றியிருந்தவர்கள் பீதியிலும் நம்பிக்கையற்ற நிலையிலும் உறைந்து போயிருந்தனர். ஆனால் ஈடித் அங்கே அமைதியான மையமாகத் திகழ்ந்தார். முகாமின் அழுக்கிலும் வன்முறையிலும் சிக்குண்டு தங்கள் குழந்தைகளைக்கூடக் கவனிக்க முடியாத நிலையில் இருந்த தாய்மார்களுக்கு அவர் உதவினார். ஆகஸ்ட் 9, 1942 அன்று ஆஷ்விட்ஸின் நச்சுப்புகைக் கூடத்தில் ஈடித் ஸ்டைனின் வாழ்வு முடிவுக்கு வந்தது. 1998-ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஈடித் ஸ்டைனை புனிதராக அறிவித்தார். ஒரு யூதப் பின்னணியில் பிறந்து தத்துவ ஞானியாக வளர்ந்து பின்னர் கத்தோலிக்கத் துறவியாக மாறிய அவரது வாழ்க்கை சமய நல்லிணக்கத்திற்கும் அறிவுசார் தேடலுக்கும் ஒரு பாலமாக அமைந்தது. நாஜி வன்முறைக்கு எதிராக அமைதியான வழியில் தனது உயிரைத் தியாகம் செய்ததற்காகவும் ஐரோப்பாவின் ஆன்மீக ஒருமைப்பாட்டிற்கு அவர் ஆற்றிய பங்கிற்காகவும் ஐரோப்பாவின் புனிதர்களில் ஒருவராக அவர் போற்றப்படுகிறார். 

*

விவேக் சுப்ரமணியன்

விவேக் சுப்ரமணியன்: எழுத்தாளர். அமெரிக்காவின் Spillwords தளத்தில் இவரின் நான்கு கதைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவியல் கதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *