சக்தி ரூபேணம் – ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

பாக்தேரிய இளவரசி

சமீபத்தில் அபுதாபி சென்றிருந்த போது அங்குள்ள லூவர் கலை அருங்காட்சியகத்தில் (Louvre Museum) ஓர் அன்னை தெய்வத்தின் உருவ சிலையிருந்தது. சிகையும், உடல் முழுவதும் கம்பளியால் மூடப்பட்ட பெண்ணின் வடிவம். பொ.மு. 2-ஆம் நூற்றாண்டு இளவரசியின் சிற்பமது. பாக்திரியா என்ற பழைய மத்திய ஆசியாவில் வழிபடப்பட்டது. உதட்டில் இளம் பெண்களுக்கே உரிய குறுநகையோடு, கண்ணுக்குழியில் கண்கள் விரிய திறந்திருப்பதாகவும், காது மடல் கம்பளியால் மூடப்பட்டு மேலும் பெரிதாக காட்டப்பட்டதாகவும் இருந்தது. ஒரே நேரத்தில் அன்னையெனவும், சிறுமி எனவும் காட்டக்கூடிய சிற்ப அமைதி கொண்டது. சாந்தமும், வீரியமும் ஒருங்கே கூடியது.

இனம் தெரியாத ஒரு பழங்குடி அரசின் இளவரசி. கன்னி தெய்வம். அதிலிருக்கும் முரண் அவள் அன்னையென என் கண்களுக்கு தெரிந்தாள் என்பதே. கீழே வாசகத்தை வாசித்த போது அது மேலும் உறுதியானது. இயற்கையிலுள்ள பெரும் சக்திகள் அனைத்தையும் சாந்தமாக்கும் ஆற்றல் கொண்ட கடவுள் இவள். நம் சாக்த மரபின் படி ஆதிபராசக்தி. அதே வேளையில் அன்பின், கருணையின் கடவுள். செல்வத்தையும், வளத்தையும் வழங்கக்கூடியவள். பேராற்றலும், பேரன்பும் ஒருங்கே இணைய பெற்றவள். இதிலென்ன வியப்பு என ஒருவர் யோசிக்கலாம். ஆனால் இதிலுள்ள அன்னையெனும் ஆழ்படிமத்தின் சூக்குமமான விரிவையும், உளவியல் சாத்தியங்களையும் அறிந்துக் கொள்ள இப்படிமத்தை மேலும் அகம் நோக்கி ஆராய வேண்டியுள்ளது.

அன்னையெனும் படிமத்தைப் பற்றி புரிந்துக் கொள்ள நித்ய சைதன்ய யதி நம் சிந்தனை மரபு எவ்வாறு உருவாகி வந்தது என்பதை ஒரு கட்டுரையில் விளக்குகிறார். நாம் சிந்திக்கும் முறை ”அகத்தில் தோன்றி அவை புறவயமாக விரிந்து பின்னர் அகத்தே குவியும் தொடர் செயல்பாடே அறிதல்” என்கிறார் அவர். நம் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய புரிதல் நமக்கு கிடைப்பது வேத, உபநிட மந்திரங்கள் வழியே தான். அதனைத் தொகுத்து நித்யா நம் சிந்தனை முறையை உருவாக்குகிறார். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி ஐத்ரேய உபநிடதத்தின் பாடல் வரி இது,

ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார். இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லைநான் உலகங்களைப் படைப்பேன்என்று அவர் நினைத்தார்.

அம்பலோகம், மரீசீலோகம், மரலோகம், ஆபலோகம் ஆகிய உலகங்களைக் கடவுள் படைத்தார். அம்பலோகம் சொர்க்கலோகத்திற்கு மேலே உள்ளது. அம்பலோகத்திற்குச் சொர்க்கம் ஆதாரமாக உள்ளது. மரீசீலோகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடைவெளி. மரலோகம் என்பது பூமி, பூமிக்குக் கீழே உள்ளது ஆபலோகம்”

கடவுளின் நினைவிலிருந்து நீராலான நான்கு உலகங்கள் தோன்றுகிறது. அம்ப, மரீசி, மரம், ஆப் ஆகிய நான்கு அம்சங்களையும் தன்னுள் கொண்டு உயிரண்டம் உருவானது. அந்த உயிரண்டத்தின் செயற்புலன்கள் மேலே சொன்ன நான்கு அம்சங்களுடன் தொடர்புக் கொண்டு உருவாகிறது. அண்டமெனும் முட்டை உடைந்து கண்ணாகிறது. அதிலிருந்து சூரியன் தன் கண்ணை திறந்து பார்க்கிறான். அவன் ஒளி வழியாக நம் கண் (செயற்புலன்) காட்சியை காண்கிறது. அதிலிருந்து நம் அறிபுலன் அறிகிறது. இவ்வாறு அருவமான ஒன்று துலங்கி நம் செயற்புலன் வழியே அகத்தை நோக்கி குவியும் தொடர் செயல்பாடு நம்முடையது என்கிறார் நித்யா.

இதில் ஐத்ரேய உபநிடதம் முன்வைக்கும் கடவுள் யார் என்பது இங்கே அடுத்த வினா? இங்கே குறிப்பிடும் கடவுள் என்பது பிரம்மன் இல்லை. உலகங்கள் உருவானதும் உலகின் காவலர்களைப் படைக்க பிரம்மனை கடவுள் உருவாக்குகிறார் (ஐத்ரேய உபநிஷத்தின் அடுத்த பகுதி). இங்கே கடவுள் என்பது அறிய முடியாமையின், சொல், பொருள் கொள்ள முடியாமையின், வடிவமற்ற ஒன்று. அந்த ஏதுமில்லாத ஒன்று உருவாக்கிய சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டு முதலில் உதித்த அக்னியை ‘வைஸ்வாநரன்’ என ரிக் வேதம் சொல்கிறது (மண்டலம் – 1, பாடல்: 98). நித்யா இந்த வைஸ்வாநரன் என்னும் முதற் ஆழ்படிமத்திலிருந்து தொடர்ந்து நம் நினைவிலியை உருவாக்கும் பல ஆழ்படிமங்கள் உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்.

ரிஷி குத்ஸ ஆங்கிரசன் அக்னியை நோக்கி பாடுவது,

“நாங்கள் வைஸ்வநரனுடைய சுமதியில் இருப்போமாக. ஏனெனில் அவன் ஜீவன்களுக்கு போற்றத்தகுந்த அரசனாகிறான். அவன் இங்கு கட்டையிலிருந்து பிறப்பிக்கப்பட்டவுடன் விசுவத்தைக் கவனிக்கிறான். எழும் சூரியனைத் தொடர்கிறான்.”  

உலகம் முழுக்க உண்டு எரியும் நெருப்பை வைஸ்வநரன் என்று ரிஷி சுட்டுகிறார். அவன் பசிக்கு அன்னமாக வேண்டி மனிதன் உருவாகிறான். அன்னம் (மனிதன்) நெருப்பை உண்கிறது. நெருப்பு அவனை உண்கிறது.

இந்த நெருப்பு அன்னம் என்னும் இருமையிலிருந்து அடுத்தக்கட்டமாக ஆண் – பெண் என்னும் படிமம் உருவாகிறது. பெண்ணின் பிறப்புறுப்பில் ஆணைத் தின்னும் பசி உள்ளது. ஆணின் பிறப்புறுப்பில் பெண்ணை உண்ணும் பசி உள்ளது. நெருப்பும், அன்னமும் அவர்கள் இருவருமே. அவை ஒன்றை மற்றொன்று வளர்க்கின்றன, பின்பு அவற்றை உண்டு இவை வளர்கின்றன. இதிலிருந்து செயல் என்னும் அடுத்த நிலை தொடர்கிறது. இப்படி படிமங்களின் சாத்தியங்கள் தொடர்ந்த படி உள்ளன.

முழுமை எனப் பொருள்படும் ‘பிரம்ம’ என்னும் ஒலியிலிருந்து தொடங்கிய அறிதல் பிற அறிதல்களை உருவாக்கும் தொடர் சங்கிலியாய் ஆவது நம் மரபின் சிருஷ்டி தத்துவம். அதில் ஆண் – பெண் என்பது நெருப்பும், அன்னமும் போல ஒன்றிணைவின் அம்சம்.

நம் சிந்தனையில் முதல் அறிதலிலேயே ஒளியும், இருளும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் தொடர் நேர்-எதிர்-நேர் நிலைகளே நம் அறிதல்.

அன்னை என்னும் ஆழ்படிமத்தை முதன்முதலில் முன்வைத்தவர் கார்ல் யுங். யுங் ஆழ்படிமங்களில் நான்கு உலகளாவியது என்று தன் ‘Four Archetypes’ நூலில் குறிப்பிடுகிறார். ’அன்னை’, ’மறுபிறப்பு’, ’மந்திரவாதி’, ’தந்திரக்காரன்’ ஆகிய நான்கின் வழியே மனித மனத்தின் கூட்டு நினைவிலி உருவாகுகிறது என்கிறார். நித்யா  இதற்கு எதிர்வினையாக நம் மரபின் கூட்டு நினைவிலி எண்ணற்ற ஆழ்படிமங்களின் உருவாக்கத்தால் நிகழ்கிறது என்கிறார்.

நித்ய சைதன்ய யதி

யுங் சொல்லும் நான்கில் அன்னை என்பது முதல் ஆழ்படிமம். கன்னிமேரி இயேசு கிறிஸ்துவின் அன்னையாகவும், சிலுவையாகவும் இருக்கும் படிமத்திலிருந்து அன்னை என்ற அருவமான ஒன்றிற்கு செல்கிறார். அதனை மற்ற சிந்தனை மரபிலுள்ள அன்னையெனும் படிமத்துடன் பொருத்திப் பார்க்கிறார். உதாரணமாக, யுங் அன்னையெனும் ஆழ்படிமம் கீழத்தேய மரபில் எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுகிறது என்கிறார். தூய்மை என உணரப்படும் நதியை பெண்ணென உருவகிக்கின்றனர். அவளே கவர்ந்திழுக்கும் கட்டற்ற தன்மையையும் தன்னுள் கொண்டிருக்கிறாள். அவள் இந்திய மரபில் உமையென்றும், காளி என்றும் இருமையில் உருவகிக்கப்படுகிறாள்.

நம் தமிழ் பழங்குடி மரபிலிருந்து வழிபடப்பட்டு வரும் தெய்வம் இசக்கி. சங்க காலம் தொடங்கி இன்று வரை அவளது வெவ்வேறு வடிவங்களை நாம் பார்க்கிறோம். நம் பழங்குடி மரபின் ஆதி அன்னை தெய்வம் அவள். அவள் சங்ககாலம் தொடங்கி இன்று வரை நம் நாட்டார் மரபில் வளத்தின் தெய்வம், காவல் தெய்வம், அருளும் தெய்வம், செழிப்பின் தெய்வம். ஆனால் அவளே கவர்ந்திழுக்கும் தன்மைக் கொண்டவள். விஷத்தை தன்னுள் வைத்திருப்பவள், கட்டற்றவள், கொலை செய்பவள். அவள் நன்மை, தீமை என்ற பாகுபாடற்றவள். யுங் முன்வைக்கும் அன்னை படிமத்திலுள்ள இரு எதிரீடுகள் நம் பழங்குடி தெய்வங்களிடமிருந்தே தோன்றி வந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த இரண்டு எல்லைக்குள்ளும் சாத்தியமான அனைத்து அம்சங்களையும் கொண்டவள் இசக்கி. அனைத்தும் அவளாகி நிற்பது. முப்பெரும் தேவர்களும் அவளது குழந்தைகள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தேவி கதையில் எனக்கு பிடித்த ஒரு வரி வரும், “கங்கைக்கு கோடி முகம்…” நம் மரபில் சாக்த தெய்வத்திற்கு வழங்கப்படும் இந்த முழுமை தன்மை சைவ, வைணவம், சௌரம், குமாரம், காணபதியம் என பிற ஐந்து மத தெய்வங்களுக்கும் வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

வேத உபநிடத காலங்களுக்கு அடுத்த ஆகம, காவிய காலங்களை நோக்கினால் இதில் ஒரு தெளிவு கிடைக்கும். ஆகமங்கள் பெருமதங்களை உருவாக்கிய போது எண்ணற்ற அன்னை தெய்வங்கள் இணைந்து சாக்த மதம் உருவானது. சாக்த ஆகம நூல்களின் படி ஆதிபராசக்தியிலிருந்து ’சாந்தை’, ’வாமை’, ’ஜேஷ்டை’, ’ரௌத்ரி’ முதலிய தேவியர் உருவாகினர். இவர்கள் சத்வ, தமோ, ரஜோ குணங்களை தன்னகத்தே கொண்டவர்கள். இந்த தேவியரில் எழும் குணசாத்தியங்களிலிருந்து எண்ணற்ற தேவியரின் படிமங்கள் உருவாயின. சாக்த ஆகமங்கள் இந்த எண்ணற்ற தேவியரை அவர்களின் தன்மைக்கு ஏற்ப தொகுத்து ஏழு வழிபாட்டு முறைகளை தேவியருக்கு உருவாக்கியது.

ஆகமங்கள் பற்றிய விரிவான விளக்கத்திற்கு பதில் நம் காவியங்கள் காட்டும் எண்ணற்ற சாத்தியங்களைக் கவனிக்கலாம். அது நாம் புரிந்துக் கொள்ள தெளிவான உதாரணங்களை அளிக்கும். அவற்றின் மூலம் நாம் நம் தேவியரின் வடிவை புரிந்துக் கொள்ளவும். அன்னையெனும் ஆழ்படிமத்திலுள்ள எண்ணற்ற உளவியல் மாதிரிகளை அணுகவும் ஏதுவாக இருக்கும்.

நாம் கடந்த ஒரு நூற்றாண்டிற்குள் தான் சீதை என்னும் படிமத்தை மட்டும் அன்னையென்றும், பூமாதேவியென்றும் பார்க்கும் தன்மை உருவாகியுள்ளது. அதற்கு முந்தைய காலங்களில் பிற காவிய கதாபாத்திரங்களைவிட சீதை அந்த உருவகத்திற்கு அதிகம் பொருந்தியிருக்கலாம். கம்பனின் பெருங்காவியம் மற்றொரு காரணம்.

சீதைக்கு எதிர்நிலையாக கருததக்கவர்கள் திரௌபதியும்/கண்ணகியும். யுங் முன்வைப்பது போல் சீதை உமையின் அம்சம் என்றால், திரௌபதியும், கண்ணகியும் காளியின் அம்சம். ஆனால் இந்த இரு எல்லைகளைப் பொருத்திக் கொண்டு காவியங்களில் உள்ள அன்னையர் கதாபாத்திரங்களை அணுகினால் கணக்கில்லாத சாத்தியங்கள் உருவாவதைக் காணலாம்.

குந்தியும், காந்தாரியும் சீதையின் அம்சம் ஓங்கியவர்கள். ஆனால் அதே வேளையில் திரௌபதியிடம் உள்ள கட்டற்ற விளைவைக் கொண்டவர்கள். சத்தியவதை இவர்களுக்கு ஒரு படி மேலாக திரௌபதியின் அருகே கொண்டு செல்லலாம். பானுமதி திரௌபதியை விட்டு விலகி வருபவள்.

இதே போல் ராமாயண கதாபாத்திரங்களையும் பகுக்கலாம். தமிழ் காவியங்களில் இந்த இரு எல்லைகள் கண்ணகியும், மணிமேகலையும். ஆனால் இருவரும் உமையின் அம்சமும், காளியின் அம்சமும். அதன் பல்கி பெருகும் சாத்தியத்தின் படிமங்கள். மேலே சொன்னவற்றின் ஒவ்வொன்றிலும் உருவாகும் உளவியல் சாத்தியங்கள் எத்தனை என ஆராய்ந்தால் நம் அன்னை தெய்வம் பற்றிய சாத்தியத்தின் விரிவும் தெரியும். நித்யா, நம் நவீன இலக்கியம் அன்னையெனும் ஆழ்படிமத்துள் ஒளிந்துள்ள இந்த அனைத்து சாத்தியத்தின் புரிதலில் இருந்து தொடங்க வேண்டுமென்கிறார்.

இங்கே, அன்னையெனும் படிமத்தின் மேல் வரலாற்று ரீதியாக நாம் நிகழ்த்திவரும் தொகுக்கும், பகுக்கும் அம்சமே நாம் கவனிக்க வேண்டியது. சங்க காலத்திற்கு முன் வழிபடப்பட்ட இசக்கி என்னும் ஒரு தெய்வம் எத்தனை கோடியாக மாறி இங்குள்ளது. அவை அனைத்தும் மீண்டும் தொகுக்கப்பட்டு நம் தேவி என உள்ளது. இந்த ஒரு புள்ளியே நாம் அன்னை எனச் சொல்லும் நம் ஆழ்படிமத்தின் சிறப்பம்சம். அதுவே நம் காவியங்களிலும், இலக்கியங்களிலும் பரிணமித்து வருவதைப் பார்க்கிறோம்.

கார்ல் யுங் தன் நூலில் குறிப்பிடும் போதே காளியும், பார்வதியும் கீழை மரபில் ஒரே தெய்வம் என்பதை கவனிக்க வேண்டும் என வலியுறுத்தி சொல்கிறார். மேலை மதங்களில் தற்போது அத்தகைய ஒரு அரிதான கருதுகோள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இத்தகைய அர்த்தப்படுத்துதல் நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது. ஒன்று, நம் வேதங்கள் உருவான காலத்திலும் சரி, பின்னாளில் பெருமதங்கள் உருவான காலத்திலும் சரி. நாம் நம் நாட்டார்/பழங்குடி மரபை இழக்காமல் இன்று வரை உடன் அழைத்து வருகிறோம் என்பதே. எனவே இசக்கியில் குறிப்பிட்ட அந்த சக்தியின் வடிவம் இன்று வரை தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம். மேலே சொன்ன அறிதலின் அறுபடாத தொடர் சங்கிலி தான் நம் கூட்டு மனதின் நினைவிலியை உருவாக்குபவை. அந்த கூட்டு நினைவிலியில் இருந்தே நம் ஆழ்படிமங்கள் தோன்றுகின்றன. அவற்றிலிருந்தே நம் தெய்வங்கள் உருவாகின்றன.

ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை நாவல் அந்த சவாலை ஏற்று எழுதப்பட்ட நவீன காவியம். மகாபாரதத்தின் நவீன நாவலான வெண்முரசு நாவலில் வரும் பெண்/அன்னையர் கதாபாத்திரம் எண்ணற்று விரிவதற்கான வாய்ப்பு நிகழ்ந்தது மேலே சொன்ன இந்த புரிதலின் வழியே தான்.

இந்த கணக்கில்லாத கோடி வடிவங்களின் ஒருங்கிணைவே நான் முதலில் சொன்ன பாக்தேரிய இளவரசி. அவள் கொண்டிருப்பது அவளுள் இருக்கும் அனைத்து வடிவையும் தான்.

சக்தி ரூபேணம் அனைத்தும், அனைத்தெல்லாம் ஆதிபராசக்தியே.

***

மேலதிக வாசிப்புக்கு:

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *