யில்டிஸ் (சிறுகதை) – முகே இப்லிக்சே

(தமிழில்: நரேன்)

முகே இப்லிக்சே

Müge İplikçi (முகே இப்லிக்சே) – 1966ம் ஆண்டு இஸ்தான்புல்லில் பிறந்தவர். தற்போது பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர் நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், சிறார் நூல்கள் என விரிவான தளத்தில் இயங்குகிறார். தன் படைப்புகள் அத்தனையிலும் தற்காலப் பெண்களின் நிலையும் பொதுச்சமூகத்துடனான பெண்களின் உறவுகளையுமே பிரதானமாகக் கையாள்கிறார். சமகால துருக்கிய பெண் எழுத்தாளர்களில் இவர் தனிக் கவனம் பெற்றிருப்பதற்கான காரணம் இவரின் கதை கூறல் முறைதான். வாய்மொழிக் கதைகளிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவரின் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளின் தன்மையைக் கொண்டுள்ளன. இதனால் கதைகளின் நகர்வு சீராக இருப்பதில்லை. கதையின் காலமும் கதை கூறுபவரின் பார்வையும் தெளிவில்லாமல் சற்றே முயங்கியே காணப்பெறுகிறது. ஆனால் இது தொன்மங்களுக்கே உரித்தான ஒரு மர்மத்தைக் கதையினூடாக உருவாக்கி விடுகிறது. படிமங்களுக்கும் பொருட்களுக்கும் கதைக்குள் தொடர்புகளை வலிந்து இவர் உருவாக்குவதில்லை என்பதால் வாசிப்பு சாத்தியங்கள் பன்மடங்கு பெருகுகிறது. துருக்கியில் பல இலக்கிய விருதுகளை வென்றிருக்கும் இவரின் கதைகள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக இலக்கிய வாசகர்களிடையே கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்.

யில்டிஸ் – முகே இப்லிக்சே

                                                            (தமிழில் – நரேன்)

யில்டிஸ் சிறுமியாக இருந்தபோது பெரிய எழுத்துக்கள் அவளுக்கு எப்போதும் பிரச்சினையாகவே இருந்தது. பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த பெரிய கருத்துக்களும் கூடத்தான். உதாரணமாக, அவள் ஆரம்பப் பள்ளியில் இருந்தபோது – அவளுக்கு ஐந்தரை வயதுதான் இருந்திருக்கக் கூடும் அப்போது – ஒரு திங்கள் காலை அவள் தாயிடம் ஆசிரியை ஒரு கேள்வியைக் கேட்டார் – மழைக் காலை மூட்டமாக இருந்தது. கொடியேற்றுதல் முடிந்ததும்தான் அக்கேள்வியைக் கேட்டார் – ஓய்வு பெறக் காத்திருக்கும் அவ்வயதான ஆசிரியையின் குரலில் அருவருப்பு நிறைந்த எரிச்சலையும் கோபத்தையும் உணர முடிந்தது: “உங்கள் குடும்பத்தில் ஏதும் பிரச்சினைகள் இருக்கா? அதென்ன பெரிய எழுத்துக்களைப் பார்த்தால் மட்டும் யில்டிஸ் வித்தியாசமா ஏதோ சொல்றா? அது இருக்கட்டும், இவ்வளவு சின்ன வயசுல ஏன் இவளைப் பள்ளிக்கு அனுப்புறீங்க?”  அவளின் தாய் ஒரு விதவை. இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டு அவள் கன்னங்கள் காது வரை சிவந்தன. ஒரு சொல் கூட அவளால் பதிலெனக் கூற முடியவில்லை. இதன் பிறகு அவர்கள் ஆசிரியை பரிந்துரைத்த கண் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. “உண்மையில் பிரச்சினை உளவியல் ரீதியானதாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.” யில்டிஸ் விரைவில் சற்று வளர்ந்துவிடுவாள். கண் மருத்துவர் தற்செயலாகத் தேர்ந்தெடுத்த பெரிய எழுத்து ’T’யைக் கண்டு சர்க்கஸ் கூடாரத்தின் இருமுனைக் கழிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மீது நடக்கும் ஒரு கழைக்கூத்தாடி எனக் கூறினாள் யில்டிஸ். அவர் காட்டும் எழுத்துக்களுக்கெல்லாம் இப்படியே வித்தியாசமாக ஏதாவது ஒன்றைச் சொன்னாள். அவள் கண்களில் எந்தத் தவறும் இல்லை என்பதைக் கண் மருத்துவர் புரிந்துகொண்டார். ஒரு முழுமையான பரிசோதனைக்குப் பிறகு கண்கள் லேசாக உலர்ந்திருப்பதைத் தவிர வேறு எந்தக் கோளாறும் இல்லையென்று சொன்னார். பின் தொடர்ந்தார்: “பிரச்சினை உளவியல் சம்பந்தப்பட்டது என நினைக்கிறேன்.” படபடக்கும் குரலில் அடுத்து கேட்டார்: “குடும்பத்தில் ஏதும் பிரச்சினைகள் உண்டா?” எதற்கும் இருக்கட்டுமே என்று கண் உலர்தலைத் தடுக்கும் மருந்தைக் கொடுத்தார்.

யில்டிஸ் மேலும் சற்று வளர்வாள்.   

தாயும் மகளும் கடற்படை கல்லூரியில் படிக்கும் அவளின் அண்ணனுடன் சேர்ந்து கண் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மிகப் பிரபலமான தனியார் கல்வி பயிற்சி ஆசிரியரிடம் சென்றார்கள். தங்கைக்கும் அண்ணனுக்கும் இடையில் பல வருட வித்தியாசம். இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதற்குச் சிறுமியும் சித்தப்பாவும் போலத் தோற்றமளித்தார்கள் – அண்ணன் தங்கையைப் போல் அல்ல. இருவரும் – ஒளியும் நிழலும் போல; ஒருவர் கனவுவாசி மற்றொருவர் உற்று நோக்குபவர். ஒற்றைப் பார்வையில் மழலை மனதுடன் அனைத்தையும் வியந்து நோக்கும் இரு வேறு உடல்கள் எனப் பயிற்சி ஆசிரியரின் அலுவலகத்தில் நின்றிருந்தார்கள் இருவரும் – ஒன்று மழலையிலேயே முதிர்ந்தது மற்றொன்று பிறக்கும்போதே இனி வளர்வதில்லை எனக் கங்கணம் கட்டிக்கொண்டது. ஆசிரியரை நோக்கி இவர்கள் சென்ற யாத்திரைகளின்போது இவ்விருவர் மட்டும் விசித்திரமாகத் தோன்றினர். ஆனால் இந்தப் பயணங்கள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இந்தச் செலவினங்களைத் தாயால் சமாளிக்க முடியவில்லை. மறைந்த கணவனின் ஓய்வூதியப் பணத்திலும் தையற் தொழில் மூலம் தான் ஈட்டிய பணத்திலும்தான் அவள் வாழ்ந்து வந்தாள். மாத இறுதிகளில் பெரும் போதையின் அழுத்தம் போன்றதொரு சோர்வில் ஆழ்ந்துவிடுவாள். எது பெரியது எது சிறியது என வேறுபடுத்திப் பார்ப்பது கூட அவளுக்கு சாத்தியமற்றதாகிவிடும். மேல் ஆடை தைப்பதில் நிபுணத்துவம் பெற்றவள் என்று அவளைக் கூறலாம். மினுமினுப்பான ஆடைகளைத் தைப்பதில் வல்லுநர். ஆனால் மாதத்திற்கு ஒரு மேலாடையை மட்டுமே அவளால் தைத்து முடிக்க முடியும். இதனால் செலவுகளைக் கையாள்வது கடினமாகியது. அவள் நிதானமாகவே பணி புரிந்தாள். இதனால்தான் அவளின் பெரும் அன்புக்குரிய யில்டிஸின் சிகிச்சை எனக் கருதப்பட்ட எட்டு வருடத் தனியார் பயிற்சியை நிறைவேற்ற முடியவில்லை. இப்பொழுதுதான் யில்டிஸ் பெரிய எழுத்து ‘A’ எனும் குழப்பத்திற்கான விடையை நெருங்கிக் கொண்டிருந்தாள். சிறிய விஷயங்களைக் கைவிடுவது எப்போதும் பெரிய தியாகத்தைக் கோருகிறது. ஆனால் இந்தக் கைவிடுதலினால் உருவாகும் சிறிய சேமிப்புகள் விரைவிலேயே தீர்ந்தும் போகிறது. அதாவது… கையிருப்பு அத்தனையும் செலவாகிப் போனது.

“ஏன்… என்னாச்சு?” என பிரசித்தி பெற்ற கல்விப் பயிற்சியாளர் கேட்டார். “எவ்வளவு பெரிய முன்னேற்றம் வந்திருக்கு, உங்களுக்குத் தெரியலையா? உதாரணமா, பெரிய A வினுடைய சாய்ந்த இடது கோட்டின் அர்த்தத்தை இப்போ சரியா புரிஞ்சுகிட்டா. ‘பாலத்தின் சாய்ந்த தூண்’ எனச் சொல்வதை நிறுத்திட்டாளே. ஆனா இந்நேரம் பார்த்து நீங்க அவள் பயிற்சியை நிறுத்தப் போறீங்க; இதற்கான பொறுப்பு முழுதும் உங்களோடதுதான்.”

விதவைத் தாய் எடுத்த மிகக் கடினமான முடிவுதான் இது. ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. ஒரு மாதத்தில் அவளால் ஒரு மேலங்கியை மட்டுமே தைக்க முடியும். இந்தப் பிரசித்தி பெற்ற கல்வியாளருடன் ஒரு வார அமர்விற்குத் தான் ஈட்டுவதைவிட ஐந்து மடங்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இந்தத் திறமையான தையற்காரி தனது வேகத்தைக் கூட்ட வேண்டும் என்று விரும்பினால் அது இயல்கிற காரியமாக இல்லை. அழகிய வேலைப்பாடுகளுடைய மேலங்கியைத் தைப்பதற்கு அவள் கண்ணாடித் துண்டுகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகத்தான் கோர்க்கவேண்டும்.  கண்ணாடிகளை அவளால் கைவிடமுடியவில்லை.

“என்னால் முடியாது… என்னால் இதைத் தொடர முடியாது.” தனக்கு முன்னால் நின்று முறைத்துக்கொண்டிருந்த அம்மனிதனின் பார்வையிலிருந்து விலகியவாறு சொன்னாள். அழகாகப் பராமரிக்கப்பட்ட தன்னுடைய விரல்களால் அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஆசிரியர் சொன்னார், “பொறுப்பு… தன்னுடைய பொறுப்பை உணராத தாயின் அவநம்பிக்கை இது. நீ யில்டிஸுக்கு  நெருக்கடி கொடுக்கிறாய். நீ மட்டுமா… அவனும்…” சிறுமியின் பக்கத்தில் வெள்ளை உடுப்பில் நின்றுகொண்டிருந்த அண்ணனின் பக்கம் தலையைச் சாய்த்து, புருவங்கள் உயர மேல் இமைகள் வெளியே பிதுங்க, முன்னோக்கிச் சற்று சாய்ந்தார். “அவனும் கூடத்தான்… தன்னுடைய சொந்த பயங்களை எதிர்கொள்ளத் தெரியாத ஒரு தாயின் அறிகுறிகள் இது என்றுதான் நான் உன் நடத்தையைக் குறிப்பிடுவேன்; உன் பிரச்சினை என்னவென்று ஃபிராய்டு தான் மிகச் சரியாகச் சொல்ல முடியும்…” அந்நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்டது. உள்ளே நுழைந்த செயலாளரின் குரல் இரத்தின நீல அறையை நிறைத்தது. “சொல்லுங்க பேராசிரியரே. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?”

“அடுத்த மாணவனுக்குரிய நேரத்தை முன்கூட்டி நகர்த்திவிடு,” அப்பிரபலமான கல்வியாளர் கசப்பான மாதுளைச் சாற்றைக் கட்டாயத்தில் விழுங்கியதைப் போன்ற கோணலான முகபாவத்துடன் இதைச் சொன்னார்.

யில்டிஸ் மேலும் சற்று வளர்வாள்… சற்றே…

அந்த நாள் அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்கள் வீட்டிற்கு வந்தது; ‘ரிங் ரூட்டில்’ பயணித்த பேருந்தில் ‘நான் ஒரு மோசமான அம்மா’ என்று வழி நெடுக அவள் அம்மா அழுதுகொண்டே வந்தது; நடத்துநர் அவர்கள் அருகே வந்து நின்றது; அங்கே அவர் கூறிய வார்த்தைகள்: அழாதே அன்புத் தங்கையே. உலகம் இத்தோடு நின்றுவிடப்போவதில்லை. அது வெறும் ‘A’. தனிப்பயிற்சி வகுப்புகளைப் பாதியிலேயே நிறுத்தியது யில்டிஸிற்கு நன்மையே தரும். வாசிக்கக் கற்றுக்கொள்வது மட்டும் போதாது. பெரிய எழுத்துக்களின் உள்ளார்ந்த பண்புகளை, அதன் ஆன்மாவை, அவள் அங்கே கற்றுக்கொள்ளப் போவதில்லை. உலகம் பெரிய எழுத்துக்களால் மட்டுமே ஆனது இல்லையே… இவ்வுலகில் எவ்வளவோ சிறிய எழுத்துக்களும் உள்ளன, அவையும் பல்வேறு உணர்வுகளால் ஆனவையே. வரும் காலங்களில் இவள் அவற்றையும் கண்டுபிடிப்பாள்.

அடுத்த மூன்றே மாதங்களில் ஆதரவுக் கரம் நீட்டி ‘அழாதே தங்கையே, உலகம் நின்றுவிடவில்லை’ எனக் கூறிய நடத்துநருடன் சேர்ந்து வாழத் தொடங்கினாள் அம்மா. கண்ணாடிகள் பொதித்த ஆடம்பரமான மேற்சட்டை ஒன்றை அவருக்காகத் தைத்துத் தந்தாள். நடத்துநராக இருந்து இப்போது சித்தப்பாவாக மாறியவர், இனிய மனிதர். தண்டுகளற்ற திராட்சைகளைப் போலச் சிக்கல் ஏதும் இல்லாதவர், குழந்தைகளிடம் மிக எளிதாகப் பழகக்கூடியவர். அனைவருக்கும் எதன் மீதாவது தீராப் பித்து இருக்கும். அவருக்கு பிஸ்தாக்கள். அவளுடைய அண்ணன் உறைவிடக் கல்லூரியில் இருந்தான், பெரியவன் – வயதானவன். ஆனால் யில்டிஸ், வீட்டில், தனிமையில். சனிக்கிழமைகளில் அவளின் அம்மா வேலையில் மூழ்கியிருக்கும்போது, நடத்துநர் அவளை தன்னுடன் அழைத்துச் செல்வார். தனது இருக்கையின் பக்கத்திலுள்ள செர்ரி நிற இருக்கையில் அவளை அமர வைத்து நகரத்தில் அப்போது புதிதாகப் பிரபலமாகியிருந்த டமாஸ்கஸ் பிஸ்தாக்களை அவளுக்குக் கொடுப்பார்; பிஸ்தா ஓடுகளின் கரக் மொரக் ஒலிகளின் துணையுடன் அவர்கள் டக்ஸிமிலிருந்து லாலேலிக்கும் லாலேலியிலிருந்து டக்ஸிமிற்கும் அற்புதமான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அவள் அம்மாவும் இந்த சாகசத்தில் பங்குகொள்வாள். சில சமயங்களில் – அரிதாக – அவள் அண்ணனும் இணைவான். அப்போது நால்வரும் பயணிகளாகிவிடுவர்; உலகம் நம்பவியலாத வகையில் சிறியதாகவும் வட்டமாகவும் ஆகிவிடும். யில்டிஸும் அவள் அண்ணனும் இந்தச் சித்தப்பாவை மிகவும் விரும்பினர். டிக்கெட்டுகளை அவர் கிழித்துக் கொடுக்கும் சத்தத்தால் அவர்கள் பெரிதும் கவரப்பட்டார்கள் – புற்களைக் கிழித்து ஊடுருவும் பாம்பின் சீறும் நாக்கைப் போல – அவர்களனைவருக்கும் காலாதீதத்தை உறுதிசெய்த இப்பயணங்களில் கிட்டத்தட்ட ஒரு கதாநாயகனைப் போல அவர் தோன்றினார்.

பயணங்களின்போது அத்தனையும் உண்மையில் மிகச் சிறியதாக ஆகின; வட்டச் சுற்றுச் சாலை, வாழ்க்கைப் பயணம், இரண்டுமே. விதிகள்… போக்குவரத்து விதிகள், விதவைகளுக்கான விதிகள், ‘வளர்ப்புத் தந்தைகள் நல்லவர்களல்ல’ எனும் விதி… இந்த விதிகளின் மூலம் வலிந்து திணிக்கப்படும் பெரிய எழுத்துக்கள், வாழ்வைச் சிக்கலாக்கும் இந்த விதிகளின் இறுக்கம் என அத்தனையும் விடுபட்டுப் போயின. அல்லது யில்டிஸுக்கு அப்படித் தோன்றியது. யில்டிஸுக்கு, அவள் தாய்க்கு, அண்ணனுக்கு, சித்தப்பாவிற்கு ஒரு புதிய வாழ்வு தொடங்கியது. ஜொலிஜொலிக்கும் தன் மேல்சட்டையை அணிந்து அவர் சீட்டுகளைக் கிழித்துக் கொடுத்தார். அவருடனான தன் திருமணத்தை அம்மா தள்ளிப் போட்டுக்கொண்டே போனாள். தன் மறைந்த கணவனின் ஓய்வூதியப்பணத்தை இழந்துவிடக்கூடாது என்பதுதான் காரணம். ஆனால் டிக்கெட் கிழிக்கும் சித்தப்பாவின் பொறுமை ஒருநாள் காணாமல் போனது. கூட்டத்தினிடையே காற்றைப் போல மறைந்துவிடக்கூடியவர் நடத்துநர். ஆழச் சிந்திப்பவர் ஆனால் கட்டுப்பாடுகள் மிக்கவர்; அந்நியர்களிடையே படபடவென உரக்கக்கூவித் திரியும் காவலாளி… நிச்சயம் இதிலிருந்தும் அவர் வெளியேறிடுவார்.

யில்டிஸ் தன் அப்பாவின் இடத்தில் வைத்திருந்த டிக்கெட் விற்கும் சித்தப்பாவை மூச்சு முட்டும் வரையில் துரத்திப் பின்தொடர்ந்தாள். அந்த நாள் யில்டிஸின் பிறந்த நாள். தன் நிழலைக் கண்டே அனைவரும் அச்சம் கொள்ளும் ஒரு அதிகாலை நேரத்தில், தெருவிலே யாரும் அற்ற பொழுது, தன் வீட்டிலிருந்து வெளியேறும் ஜொலிக்கும் மனிதனை வெறுச்சோடிய தெருவில் துரத்திக் கொண்டு ஓடினாள். துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாவைப் போல அவள் திகைத்து நின்றாள். உலகின் அனைத்து பெரிய எழுத்துக்களும் தாங்கள் விரித்த வலையில் அவளைச் சிக்க வைக்கத் தயாராக இருப்பது போல இருந்தது. அவள் ஓடினாள்…ஓடிக் கொண்டேயிருந்தாள்.

அம்மனிதனின் பின்னாலே அழுதுகொண்டே ஓடினாள். தயவுசெய்து போகாதே…நில்.

சித்தப்பா, நில் போகாதே…நிச்சயம் இன்றைக்கு வேண்டாம். பின்னர், அவள் அதைக் கண்டெடுத்தாள்.

கண் சிமிட்டும், பளபளக்கும் மேல் சட்டை.

அவள் அதைக் குனிந்து எடுக்கும்போது, ஒரு குழந்தை ஒருபோதும் தப்ப முடியாத கனவுகளை அதன் மினுமினுப்பில் கண்டாள். தொலைந்த காதலின் துயரமுற்ற ஆன்மாவின் ஏக்கம் நிரம்பிய நகரம் இது. அதன் கரும் இரவுகளில் நெய்யப்பட்ட சிலிர்க்கும் கண்ணாடி பொதித்த மேல் சட்டை மட்டும் அல்ல அது. ஒப்பற்ற தன் மேல் தோளைச் சத்தமின்றி உதிர்த்து நழுவிய பெரிய பாம்பு ஒன்றின் ‘என்னை மறந்து விடாதே’ என்ற செய்தியும்தான்.

அதிகாலைப் பனியுடன் மழை ஒன்றெனக் கலக்கத் தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமைகளில் வட்டச் சாலைப் பயணங்களில் அவள் சித்தப்பா கூறிய கதைகள் அவள் காதுகளில் எதிரொலிக்க, யில்டிஸ் மேலும் சற்று வளரப் போகிறாள்.

“இங்கே பார் யில்டிஸ்… இங்கே குல்ஹானே பூங்கா இருக்கிறதில்லையா… அதற்கு முன்னால் அற்புதமான ‘டாப்கபி’ அரண்மனை உள்ளது.”

“ஒரு காலத்தில் அரண்மனை அந்தப்புரத்தில் வாழ்ந்த நிம்மெட்டின் கதை தெரியுமா உனக்கு? இந்நகரத்தில் வாழும் மனமுடைந்த அத்தனை பேருக்கும் இக்கதை தெரியும்னு நினைக்கிறேன். உன் அம்மா உன்னிடம் சொல்றதுக்கு முன்னாடி நானே அதைச் சொல்லிடறேன். எனக்குத் தெரிஞ்ச வரையில் நிம்மெட் ஒரு அந்தப்புரப் பெண். நான் இந்த வழியே ஒருமுறை போகும்போது பேருந்துக்குள்ளே எகிறி குதித்த ஒரு பெண் இக்கதையை எனக்குச் சொன்னாள். எல்லா காரணத்துக்கும் ஒரு காரணம் இருக்குனு சொல்வாங்க இல்லையா….! தன்னுடைய அந்தஸ்துல இருக்கிற ஒருத்தர தேர்ந்தெடுக்காம அந்தப் பாவப்பட்ட நிம்மெட் என்ன செஞ்சா?” – நெஞ்சில் சிலுவை குறியிட்டுக் கொண்டார் – “எல்லாரையும் விட்டுட்டு சுல்தானோட மகன் மேலேயே காதல் வயப்பட்டுட்டா. பொறாமை கொண்ட மற்ற அந்தப்புர பெண்கள் அவளைத் தீவிரமா வெறுத்தாங்க. அப்போது, எதிர்காலத்தைக் காட்டும் இளவரசனின் கண்ணாடி பதக்கம் ஒன்று காணாமல் போச்சு. முத்துச் சிப்பி பதிக்கப்பெற்ற அப்பதக்கம் இளவரசனின் தந்தையான சுல்தானால் டமாஸ்கஸிலிருந்து கொண்டுவரப்பட்டது. தகுதியானவர்களுக்கு அநித்தியத்தையும் அத்தனையையும் சாத்தியமாக்கும் வல்லமை கொண்டது அது. அவளைப் பழி வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அப்பெண்கள் முடிவு செய்தாங்க. ‘இளவரசே…அவள்தான் உங்கள் எதிர்காலத்தின் கண்ணாடியைத் திருடிவிட்டாள்… அவள் பெயர் நிம்மெட்.’ ஆசிர்வதிக்கப்பட்ட நிம்மெட் இப்போது பேரழிவை உண்டாக்கும் பிரச்சினைக்குள் சிக்கிக்கொண்டாள்.”

மொழிபெயர்ப்பாளர் நரேன்

“ஆனால் காலப்போக்கில் உலகின் அத்தனை ஆசீர்வாதங்களுக்கும் உரித்தான பெயராக மாறியது நிம்மெட். திருடர்களுக்கானது அல்ல. தன் வாழ்வையும் ஆன்மாவையும் சுத்திகரிக்க விரும்புபவர்களுக்கானது. அநேகமாக சுல்தானின் மகனுக்கும் அவள் மேல் காதல் இருந்ததுன்னுதான் நினைக்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த எதிர்காலத்தைக் காட்டும் கண்ணாடியின் மேல் தனக்கு இப்போது எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதை அறிந்துகொண்டான் இளவரசன். குறிப்பாக, தானாகத் தொலையவில்லை. திருடப்பட்டிருக்கிறது. அன்று காலை, நீதியை நிலை நிறுத்தும் கடமை வருங்கால சுல்தானான தன் மீது அலையலையாக வந்து மூழ்கடிப்பதை உணர்ந்தபோது, அவன் உள்ளங்கைகள் நிம்மெட்டின் பெருந்துயர நீள் இரவுக் கண்ணீரால் நிறைந்தபோது, சுல்தானின் மகன் பாவப்பட்ட தன் அந்தப்புர துணைவி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டால் போதும் என்று ஒரு ஆணையை வெளியிட்டான். இந்த ஆணையை வெளியிட்ட அந்த நாளில்… கவனி.. அதே நாளில் நிம்மெட் அந்தப்புர குளத்தினுள் பாய்ந்தாள். இப்படியொரு அவமானமும் அவப்பெயரும் அதற்குமுன் அவளுக்கு ஏற்பட்டதில்லை; தன் இளவரசனின் மதிமுகத்தை நோக்கி, ‘இளவரசே இதில் உண்மையில்லை, வெறும் அவதூறு’ என்று சொல்ல முடியவில்லை. நீருக்குள் குதித்தாள். அதன் பின் நீரில் அவள் பிம்பம் ஒருபோதும் மீண்டும் தோன்றவில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகுதான்… மிக நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தூசடைந்த அந்தப்புர சுவர்களில் நிம்மெட்டின் கையெழுத்தைக் கண்டனர். சத்தியமா சொல்கிறேன் யில்டிஸ்…சத்தியம்… நான் என்றைக்காவது பொய் சொல்லி நீ கேட்டிருக்கியா? அவள் இப்படி எழுதியிருந்தாள் : ‘இந்த மூன்று நாள் நரகத்தில் ஒன்றுக்கும் உதவாத கண்ணாடியைத் திருடிவிட்டதாக என் மீது குற்றம் சுமத்தினார்கள்; என்னைக் காயப்படுத்தியது அது அல்ல. என் இளவரசே, அவர்கள் சொற்களை நீங்கள் நம்பியதுதான்; ‘ஒன்றுக்கும் உதவாத கண்ணாடி.’ என்னிடம் இக்கதையைச் சொன்ன பெண் அதை மீண்டும் தனக்குள் கூறினாள்; அந்தப் பெண்ணை எனக்கும் இன்றும் நினைவிருக்கிறது. என் கையில் இருக்கும் இந்தப் பிஸ்தாக்களைப் போலப் பெரியதாக இருந்தது, அவள் மனம் முற்றிலுமாக எதிலோ மூழ்கியிருந்தது.”

மழை வேகமெடுத்த அவ்வதிகாலை வேளையில், தன்னைவிடப் பன்மடங்கு பெரியதான ஜொலிஜொலிக்கும் மேற்சட்டைக்குள் யில்டிஸ் தன்னையும் மீறி பெரியதாக வளர்ந்துகொண்டிருந்தாள்.

***

நரேன்: தமிழ்விக்கி

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *