பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்

தமிழில் இலக்கிய விமர்சன முன்னோடிகளில் ஒருவர் க.நா. சுப்ரமண்யம். அவர் வெவ்வேறு காலத்தில் பெண்ணெழுத்து குறித்து எழுதியவற்றின் தொகுப்பு இது. யதுகிரி அம்மாள், அநுத்தமா, கிருத்திகா, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஆர். சூடாமணி ஆகியோரைப் பற்றி எழுதியவை இத்தொகுப்பில் உள்ளன. இப்போதைக்குக் கிடைப்பவை இவை. க.நா.சு.வின் தொகுக்கப்படாத எழுத்துகளைத் தேடினால் இன்னும் கிடைக்கலாம்.
இங்கே குறிப்பிடவேண்டிய மற்றொரு எழுத்தளார் அம்பை. க.நா.சு. தொகுத்து 1978ஆம் ஆண்டு வெளியான தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் ஒரேயொரு பெண் எழுத்தாளரின் கதை மட்டும் உள்ளது. அது அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’.
– ஶ்ரீநிவாச கோபாலன்
*

1. பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள்
நானும் புதுமைப்பித்தனும் ஒருநாள் வயதான நண்பர் ஒருவருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரும் எழுத்தாளர்தான் என்பதால் சுபாவமாகவே எங்கள் பேச்சு இலக்கியத்தைப் பற்றித்தான் இருந்தது. பழசு, புதுசு எல்லாவற்றையும் பற்றி அலசி அலசிப் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் நானோ, சொ.வி.யோ – எனக்கு ஞாபகமில்லை – எங்கள் நண்பரை பாரதியாரை நேரில் பார்த்ததுண்டா என்று கேட்டோம். தூரத்திலிருந்து பார்த்ததுண்டு இரண்டொரு தடவைகள் என்றும், நெருங்கிப் பார்க்க, பழக, சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் சொன்னார் நண்பர். இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இதே நண்பர் அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்த பத்திரிகையில் பாரதியாரைத் தான் சந்தித்த சம்பவங்கள், சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் பற்றி, வசன காவிய நடையிலே எழுதத் தொடங்கிவிட்டார். இருபது இருபத்தைந்து வாரங்கள் வரையில் எழுதினார் என்றுகூட எனக்கு ஞாபகம். பாரதியார் சமீப காலத்தில் வாழ்ந்தவரென்பதினாலும், அவரைப் பற்றிய நினைவுகளை உற்பத்தி செய்வது, அர்த்தமற்ற நாடோடிப் பாட்டுகளைத் தானே உற்பத்தி செய்து, ஆஹா ஊஹூ என்று புகழ்ந்து பாராட்டுவது போல சுலபமாக இருக்கிறது என்பதனாலும், பாரதியாரைப்பற்றி எழுதிவிடுவது எதையுமே ஒரு தடவைக்கிரண்டு தடவையாகப் புரட்டிப் பார்த்துத்தான் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. உள்ளத்திலே உண்மையொளி இல்லாத காலத்திலே உண்மைக் கவியாகப் பிறந்த பாரதியாருக்கு இது தகுந்த தண்டனை என்றே சொல்லவேண்டும்.
உள்ளத்திலும் வாக்கிலும் உண்மை ஒளியுள்ள பாரதி நினைவு நூல்கள் இல்லையென்று நான் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த அளவில், வ.ரா.வின் ‘பாரதியார் சரித்திர’மும், செல்லம்மாளின் ‘தவப்புதல்வர் பாரதியா’ரும், யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுக’ளும் சிறந்தவையாகத் தோன்றுகின்றன. என் கண்களில் படாத வேறு பல பாரதி நூல்களும் இருக்கலாம் என்பது சாத்தியமே. இந்த மூன்று நல்ல நூல்களில், யதுகிரியம்மாளின் ‘பாரதி நினைவுகள்’, பாரதியாரின் வாழ்வு பூராவையும் சொல்லாவிட்டாலும் ஒரு ஆறேழு வருஷத்திய வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லி நம் கண்முன் பாரதியாரைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. எந்தக் கவியையுமே மனிதனாக அறிந்துகொள்வது மிகவும் சிரமமான காரியம். கவியின் ஏக்கங்களையோ, ஆசைகளையோ, உள்ள நிறைவுகளையோ, உள்ளக் கிளர்ச்சிகளையோ அப்படியொன்றும் சுலபமாக அறிந்துவிட முடியாது. கவியின் ஒரு காரியத்துக்குச் சாதாரண மனிதர்கள் சொல்கிற காரணங்கள் எதுவும் சரியாக இருக்கவேண்டும் என்பது அவசியமேயில்லை.
ஜான்ஸன் என்கிற ஆங்கில ஆசிரியரை இன்று அப்படி ஒன்றும் பெரியவராக யாரும் நினைப்பதில்லை. ஆனால் அவரைப்பற்றி எழுதப்பட்ட ஜீவிய சரித்திரம் ஆங்கில இலக்கியத்திலே ஒரு சிகரமாகக் கருதப்படுகிறது. எந்த ஜீவிய சரித்திர ஆசிரியனும் இன்றுவரையும் சாதிக்காத ஒரு காரியத்தை பாஸ்வெல் என்பவர் சாதித்துவிட்டார். ஜான்ஸனிடம் அவருக்கு அன்பு மட்டுமில்லை – ஒரு ஒற்றுமையே இருந்தது – இருவரையும் பிரித்துச் சொல்லமுடியாத அளவிற்கு ஒரு உளப்பான்மை இருந்தது என்று சொல்லுவார்கள். மகாகவி பாரதியாருக்கு உறுதுணையாகவும் தோழராகவும் இருந்த மண்டயம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்விதான் யதுகிரி அம்மாள். புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறுவயதில் பாரதியாரைத் தாம் அறிந்தவரையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார். ஒரு சிறுமியின் கண்கள் மூலம் இந்த நூலில் நாம் பாரதியாரைக் கண்டு களிக்க முடிகிறது. பெரியவர்கள் சொல்லமுடியாத சில உண்மைகளைச் சிறியவர்கள் எவ்வளவு சுலபமாகப் புரிந்துகொண்டு, எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள்!
‘அதிகாலையில் கடற்கரை சென்று தினசரி ஒருமணிநேரம் நடந்தால் என் தேகம் ஆரோக்கியம் பெறும் என்று டாக்டர் சொன்னார். அதன்படி நடந்து வந்தேன். குழந்தையை என் தாயிடம் விட்டுவிட்டுக் கடற்கரைக்குச் செல்வேன். எனக்குத் துணையாக என் தகப்பனாரும் தங்கையும் வருவார்கள். ஒருநாள் எங்கிருந்தோ பாட்டுச் சத்தம் கேட்டது. உதய ராகத்திலே உள்ளத்தை உருக்கும்படி மதுரமாக இருந்தது அந்தப் பாட்டு… பாரதியாரின் குரல்போல் இருந்தது.
ஒரு கட்டுமரத்தின் மேல் பாரதியார் அமர்ந்திருந்தார். கறுப்புச் சொக்காய், கச்சை போட்ட வேஷ்டி, கூப்பிய கரங்கள். கடலில் உதயமாகும் பால சூரியனை நோக்கியபடி பாடிக்கொண்டிருந்தார் அவர். வெளிச்சம் நன்றாகப் பரவவில்லை; மங்கலாக இருந்தது. கம்பீரமான பாட்டு. உள்ளத்தைக் கவரும் ராகம், பாட்டின் உன்னதமான பொருள் எல்லாம் சேர்ந்து உண்மையில் தெய்வத்தை எதிரில் காண்பது போல் மயிர்க்கூச்செறியச் செய்தன. உள்ளம் குளிர்ந்தது.
பாரதி:- இரவு இங்கே வந்தேன். கற்பனா உலகத்தில் பறந்துகொண்டிருந்தேன். எழுந்து பார்த்தால் கடற்கரை குளிர்ந்த வேளை. திருவாய்மொழிப் பாட்டின் பரவசத்தில் இருந்தேன். நீர் அழைத்தீர்.
ஸ்ரீ ஸ்ரீ (சலிப்புடன்):- வீட்டில் அவர்கள் எவ்வளவு கவலைப்படுவார்கள்? நல்ல கற்பனா உலகம்! நீர் இப்படிச் செய்வது சரியா?
பாரதி (தலை கவிழ்ந்து):- வெய்யிலின் கொடுமை தாளவில்லை. கடற்கரை கற்பனா உலகம் எல்லாவற்றிற்கும் அனுகூலமாக இருந்தது…
பாரதியாரோடு என் தகப்பனார் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பதிலே பேசவில்லை. ஆனால் அவர் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகியது. அந்தக் காட்சி என் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை…
திரும்பும்போது என் தங்கை என் தகப்பனாரைக் கேள்வி கேட்டாள்.
ரங்கநாயகி:- ஐயா பாரதியாரின் கண்களில் ஏன் அவ்வளவு ஜலம் வந்தது! அழுதாரா? என்னத்துக்கு?
ஸ்ரீ ஸ்ரீ:- கண்களில் சமுத்திர மணல் விழுந்திருக்கும்.
நான்:- ஐயா, பாரதியார் இரவெல்லாம் வீட்டுக்கு வராமல் இருந்தும் செல்லம்மாள் ஒன்றும் கேட்கவில்லையே.
ஸ்ரீ ஸ்ரீ:- இது முதல் தடவையாக இருக்காது. இப்படி எவ்வளவு நாளாய் இரவில் சமுத்திரக்கரை, தோப்பு, மடு என்று சுற்றுகிறாரோ! யாருக்குத் தெரியும்?
நான்:- ஐயா, அவர் ஏன் முன்போல் இல்லை. நான் ஊரிலிருந்து வந்தது முதல் பார்க்கிறேன்; அவர்கள் வீட்டில் ஒருமாதிரி குழப்பமாக இருக்கிறதே?
ஸ்ரீ ஸ்ரீ:- செல்லம்மாளையோ பாரதியையோ ஒன்றும் கேட்டுவைக்காதே? மனக்கஷ்டப்படுவார்கள்!
அன்று மாலை ஐயர் (வ. வே. சு. ஐயர்) வந்தார். நடந்ததை நான் சொன்னேன்.
ஐயர்:- ஐயா கூப்பிட்டவுடன் தெரிந்துகொண்டாரா?
நான்:- தெரிந்துகொண்டார். ஆச்சரியப்பட்டார்… எல்லாம் புதிர்போல் இருக்கிறது. நீராவது சொல்லும் ஐயரே.
ஐயர்:- அவருக்கு ஏதாவது புது வழி தோன்றிவிட்டால் அதைச் செய்யலாமா கூடாதா என்றுகூட யோசிப்பதில்லை. வீட்டு எஜமானி குழந்தைகளையோ மற்றவர்களையோ ஒரு வழியாகச் சமாளித்துக்கொண்டு போகலாம். ஆனால் நம் தேசத்தில் கணவனை அடக்கி ஆள்வது முடியாது… குடும்பத் தலைவன் நியாயமாகவும் தருமமாகவும் நடந்துகொண்டால் குழப்பம் இராது. அவன் செய்யும் பிசகினால் வீடு கலகலப்பற்று அழுகையும் முணுமுணுப்பும் குமுறலுமாகி, பெரிய சிறைச்சாலையாகத் தெரியும். எஜமானிக்குக் குழந்தைகளை விடவும் முடியாது; கணவனைத் தள்ளவும் முடியாது; இந்தத் தர்மசங்கட நிலை பெருகி, வீட்டுத் தொல்லைகளை மறக்க ஏதாவது ஒரு வழி தேடுகிறான் குடும்பத் தலைவன். தன் நிலை என்ன, பெருந்தன்மையென்ன, ஒன்றையும் கவனிக்காமல் அந்த நிமிஷ நிலையில் கற்பனா உலகத்தில் சந்தோஷமாக இருக்க லாகிரி வஸ்துக்களை உட்கொண்டால் தொல்லைகளை மறந்து ஆகாயக் கோட்டை கட்டலாம்.
நான்:- அவர் பாடிய உதயராகம் மிகவும் நன்றாக இருந்தது.
ஐயர்:- வெண்கலத் தொனி. காலை வேளை. பட்சிகளின் சலசலப்பு. கடலின் சலசலப்பு. அவரும் கம்பீரமாகப் பாடியிருப்பார். சாமியார், பண்டாரம் முதலிய சிலரின் கூட்டுறவு அவரை வேறு வழியில் இழுத்துச் செல்கிறது. மனத்தை ஆள்பவன்தான் திடமான மனிதன். மனக்குரங்கு எந்த நிமிஷம் எப்படிக் கட்டளை இடுகிறதோ அந்த வழி செல்வது என்பது அப்படிச் செல்பவர்களுக்கும் நல்லதல்ல; அவர்களின் சுற்றத்தாருக்கும் சுகமில்லை. சிலர் வாழ்வு இப்படி ஆகிவிடுகிறது.
இப்படிச் சொல்லிவிட்டு ஐயர் பெருமூச்செறிந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை; எல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது.’
திறம்படத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்ல யதுகிரி அம்மாளுக்குள்ள திறமையைக் காட்ட ஓர் உதாரணமாக இந்தச் சம்பவத்தில் பெரும்பகுதியை இங்கு எடுத்து எழுதினேன். பாரதியாரைக் கவிஞனாகவும், சீர்திருத்தவாதியாகவும், குடும்பஸ்தராகவும், பொறுப்பற்றவராகவும், நண்பராகவும் இங்கு இந்த நூலில் பல இடங்களில் காண்கிறோம். பாண்டிச்சேரியில் ட்யூப்ளேக்ஸ் சிலை முன் வாசித்த பாண்டு வாத்தியக்காரர்களின் ஆங்கில மெட்டுக்கொப்ப அவர் ‘மூன்று காதல்’ என்கிற பாட்டைப் பாடியதை விவரித்திருக்கிறார் ஆசிரியை. இதேபோல நமக்குத் தெரிந்த பல பாரதியார் பாடல்கள் எழுந்த சந்தர்ப்பங்களையும் விவரித்திருக்கிறார்.
‘மாசி மகத்தன்று… மாலை நாலு மணிக்குப் பாரதியார் குழந்தை சகுந்தலாவுடன் வந்தார். என் கடைசித் தங்கை ரங்கநாயகியும் சகுந்தலாவும் சம வயது. இருவரும் விளையாடினார்கள். அவர்கள் பேசிக்கொள்வதைக் கவனித்துக்கொண்டே இருந்த பாரதியார் கலகலவென்று சிரித்து, “பாப்பா, இங்கே ஓடி வாருங்கள். நீங்கள் இருவரும் கிளி போல் பேசுகிறீர்கள். ஒன்று தங்கக் கிளி. ஒன்று இரும்புக் கிளி. யார் எந்தக் கிளியாகிறீர்கள்?” என்றார்.
சகு:- அப்பா நான் தங்கக் கிளி, ரங்கா இரும்புக் கிளி. சரிதானே அப்பா?
ரங்:- நானே தங்கக் கிளி. நீ இரும்புக் கிளியாக இரு.
சகு:- அதெல்லாம் முடியாதடி. எங்கப்பாதானே சொன்னார்? நான்தான் தங்கக்கிளி.
ரங்;- போம்மா. நீ சண்டை போடாதே. நாம் இரண்டுபேருமே தங்கக்கிளிகள்!
பாரதியாருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ரங்காவை எடுத்துக்கொண்டு என் தந்தையிடம் சென்றார். “நான் குழந்தைகளின் மனம் நோகும்படி சொன்னேன். இந்தக் குழந்தை சரிப்படுத்திவிட்டது” என்று அவர்கள் சம்பாஷணையைச் சொன்னார்…
ரங்:- நான் சொல்லியது தப்பா?…
பாரதி:- நீ சொல்லியது சரி. நீங்கள் இருவரும் தங்கக் கிளிகள்தான் அம்மா.
ரங்:- சகுந்தலாவை ஏன் எடுத்துக்கொள்ளவில்லை?
பாரதி:- வா பாப்பா, சகுந்தலா! ரங்கா உன்னையும் தங்கக்கிளி பண்ணிவிட்டாளே!
இந்தமாதிரிச் சம்பவங்கள் பலவற்றை மிகவும் விரிவாகச் சொல்லியிருக்கிறார் யதுகிரி அம்மாள். ஒவ்வொன்றிலும் பாரதி என்கிற மனிதனை நாம் காணமுடிகிறது என்பதுதான் இந்த நினைவுகள் தொகுப்பின் தனிச்சிறப்பு. யதுகிரியின் குழந்தை இறந்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் பாரதியாரைச் சந்தித்தபோது, ‘அவர் பதினைந்து நாள் மௌன விரதம் ஆரம்பித்திருந்தார். ‘குழந்தையில்லாமல் உன்னைப் பார்ப்பது எங்களுடைய பாவம்!’ என்று ஒரு சீட்டில் எழுதி என்னிடம் காட்டினார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு! சிவப்பான கண்கள்! துர்ப்பலமான உடம்பு! பார்க்கச் சகிக்கவில்லை.
‘நான் புதிய வழியில் யோக சாதனம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது’ என்று எழுதிக் காட்டினார்.
‘பாஞ்சாலி சபதம்’ துகிலுரியும் சர்க்கத்தை அன்று முடித்திருந்தார். அதைப் பாடிக்காட்டினார். மௌன நாட்களில் பேசத்தான் மாட்டார்; கவிதைகளைப் பாடுவார்.
அவர் மௌனம் பற்றிச் செல்லம்மாள் கண்ணீர் வடித்தாள். பாரதியார், ‘நான் மந்திரச் சொல்லைக் கண்டுபிடிக்கப் பேசாமல் இருந்தால் செல்லம்மா கலாட்டா செய்கிறாள்’ என்று எழுதிக்காட்டினார்.
“சமுத்திரக்கரையில் யாரோடு பேசினீர்?”
“பராசக்தியோடு, கடலோடு” என்று சிரிப்பார்.
பாரதியாருக்கு மண்டபம் கட்டித் திருப்தியடைந்துவிட்ட தமிழர்கள் இலக்கியபூர்வமாக அவர் கவிதைகளைக் கண்டு அனுபவிக்க ஒரு முயற்சியும் செய்யவில்லை. பாரதி என்கிற மனிதனை அறிந்துகொள்ளவும் அதிகமாக முயற்சிகள் செய்யவில்லை. பாரதி என்கிற கவியின் மனுஷ்யத்துவத்தை அறிய யதுகிரி அம்மாளின் இச்சிறு நூல் நமக்குப் பெரிதும் உதவும்.
‘படித்திருக்கிறீர்களா?’ (தொகுதி 1), நவம்பர் 1957
***
2. கேட்ட வரம் – அநுத்தமா

மலைமேல் எழுந்தருளியிருக்கும் கேட்டவரம் பாளையத்துப் பெருமாள் கேட்ட வரங்களையெல்லாம் கொடுப்பவர். ராயர் பையனுக்கு ராயர் பெண்ணையும், அய்யங்கார் பெண்ணுக்கு அய்யங்கார் பையனையும், ஐயர் பையனுக்கு ஐயர் பெண்ணையும் கொடுத்து மூன்று விவாகங்களைப் பெருமாள் அநுத்தமாவின் ‘கேட்ட வரம்’ என்கிற நாவலிலே முடித்து வைக்கிறார். லௌகீகம் இவ்வளவு நன்றாக அறிந்த பெருமாளையும் அவர் ஊர்மக்களையும் நமக்குச் சற்று நெருங்கியவர்களாகவே பழகிக்கொள்ளுகிறோம் ஆசிரியையின் எழுத்திலே.
“யார் கேட்ட வரம்? என்ன வரம்?” என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள் மாயா.
“அவரவர்கள் கேட்ட வரம் அவரவர்களுக்கு. நீ என்ன வரம் கேட்பாய்? ஓர் அழகான அகமுடையான் வேண்டும் என்பாய்” என்று நிதானமாகக் கூறினாள் மல்லிகா.
“போங்கள் நீங்கள் ஒரு பக்கம்.”
ஆனால், ஊருக்குப் பாதை செப்பனிடப்படாமல்தான் இருந்தது. “அவர் கேட்ட வரத்தையெல்லாம் கொடுத்துவிடுவாராமோ? அப்படியானால், இந்த ஊருக்குப் போகும் வழியைச் சரியாக்க புத்தியை ஏன் ஒருவருக்கும் கொடுக்கவில்லை? உங்கள் ஊர் மனிதர்கள் அந்த வரத்தைக் கேட்கவில்லையாக்கும்?”
“இப்பொழுதுதானே நீ கேட்கிறாய்? அத்துடன் மனுஷ்ய யத்தனமும் வேண்டும். அதற்கு அடிகோல இப்பொழுது வாசு வந்திருக்கிறான். இனிமேல் வெங்கடேசுவரர் அருள்புரிந்துவிடுவார் என்றே சொல்வேன்.”
இப்படி அறிமுகமாகிற கேட்டவரம் பாளையத்தில் ஸ்ரீராம நவமி பஜனைக்கு வெளியூரிலிருந்தும் மனிதர்கள் வருகிறார்கள். உண்மையிலேயே வெளியூர்க்காரிதான் மாயா. ஒரு கலெக்டரின் பெண். அவளை அழைத்துக்கொண்டு கேட்டவரம் பாளையத்துக்கு வருகிறான் வாசுதேவன். ‘மேலதிகாரிக்கு மராமத்து வேலை என்று காரணம். உள்ளூர்க்காரரிடம் ராம பஜனை. சிற்றப்பாவிடம் அவர் வயல்களை மேற்பார்வையிடல், சித்தியிடம் மலைக்கோவிலுக்கு வழக்கமான அபிஷேகம் செய்தல், நம்மிடத்திலெல்லாம் உல்லாசமாகச் சுற்றி நட்சத்திர மலை முதலிய இடங்களைக் காட்டுவது – இப்படியெல்லாம் ஆளுக்கொரு காரணம்.’ ஆனால் பத்துப் பக்கங்கள் படிப்பதற்குக் முன்னாலேயே தெரிந்துவிடுகிறது -உண்மைக் காரணம், வாசுவின் வருகைக்கு அந்தரங்கக் காரணம் – ருக்மிணிதான் என்று.
‘“யார் இந்த ருக்மிணி? எனக்கு ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறீர்களே? இப்படியெல்லாம் வாசுதேவ மாமா பலவிதக் காரியங்களை வைத்துக்கொண்டு இங்கே வருகிறார் என்று எனக்குத் தெரிந்திருந்தால் – அதாவது அம்மாவுக்குத் தெரிந்திருந்தால் – என்னை இங்கே அனுப்பியே இருக்கமாட்டாள்” என்று மாயா போலிக் கோபத்துடன் சொன்னதும் எல்லாரும் சிரித்தனர்.’ கதையைப் படிப்பவர்கள் பி.ஏ. படித்த மாயாவுக்கும் வாசுதேவனுக்கும் எங்கே முடித்துப்போட்டுவிடுவார்களோ என்று ஆசிரியைக்கும் பயம் போலும். அதற்கு இடமில்லாமல் செய்துவிட ஆரம்பம் முதல் முயன்றிருக்கிறார்.
நாவல் வாசகன் என்கிற பாவத்தில் எனக்கு இன்னமும் முதல் அத்தியாயத்தை விட்டுக் கிளம்பிவிட மனமில்லை. ஆசிரியையின் திறமைகளிற் பலவும் இங்கு காணக்கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றையேனும் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றுகிறது. இரு பெண்களை அவர் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் அழகைப் பாருங்கள்.
‘மாயாவும் மல்லிகாவும் சிரித்தார்கள். மாயாவும் அழகான பெண்தான்; மல்லிகாவும் கட்டழகிதான். அவளது ஆனால், இரண்டு பெயர்களிடையிலும் எவ்வளவு வித்தியாசம்! சிவந்த மேனியும், அகன்ற கண்களும், துவண்ட சரீரமும் படைத்துப் பொற்கொடிபோல் இருந்தாள் மாயா. அவளது அழகிய சிரிப்பிலே முல்லை பூத்தது. அவளுடைய கருங்கூந்தல் ஒன்றன்பின் ஒன்றாக வீசும் சமுத்திர அலை போல் படிப்படியாக அமைந்திருந்தது. கருநாகம் போன்ற தலைப்பின்னல் முழங்கால்வரை எட்டிற்று. மெல்லிய சரீரத்திலே அது ஒரு பெரும் பாரம்போல் தோன்றிற்று. அதைத் தாங்கமுடியாதவள்போல் எப்பொழுதும் அவள் தலைப் பின்னலை எடுத்து, இடுப்பைச் சுற்றிச் செருகிக்கொண்டிருந்தாள். மெல்லிய வெள்ளை ரவிக்கையும், வெள்ளை மில் புடவையுமே தரித்திருந்தாள். கழுத்திலே மெல்லிய, வெகு நேர்த்தியாகவும் வேலைப்பாட்டுடனும்கூடிய கருகுமணிச் சங்கிலி. கையிலே ஒரே ஒரு ஐதை யானை மயிர் வளையல் அணிந்திருந்தாள். கலகலவென்று பல வெள்ளி மணிகளின் ஓசைபோல் அழகாகச் சிரிப்பதும், அஞ்சனம் தீட்டிய கண்கள் நின்ற நிலையில் நில்லாமல் துள்ளுவதும் அவளது இளம் வயசை எடுத்துக்காட்டின.
மல்லிகா தந்தப் பதுமைபோல் இருந்தாள். அவளது உடலிலே ஒரு கட்டு, அங்க அமைப்பிலே ஒரு திண்மை. அவள் கண்கள் சற்று நீண்டு, வெகு அழகான புருவங்களின் கீழே, தெளிந்த நீர்த்தேக்கம்போல் திகழ்ந்தன. எடுப்பான மூக்கும், அகன்ற நெற்றியும், குவிந்த வாயும், தெய்விகச் சிற்பியின் கைத்திறனின் வெற்றியை விளக்கமாக்கி, நீளம் அதிகம் இல்லாவிட்டாலும் சுருள் சுருளான தலைமயிர் கட்டுக்கு அடங்காமல் நெற்றியைச் சுற்றி விஷமம்மிக்க சிறுவர்களைப்போல் எட்டி எட்டிப் பார்த்தது. ஆழ்ந்த அவளது பார்வையில் ஒரு சாந்தம். தேர்ந்த தெளிந்த அமைதியும், நிம்மதியும் அதனுடன் தோன்றின.’
முதல் அத்தியாயத்திலேயே இன்னொரு கட்டம்: ‘“அப்பா! இங்கேயே தங்கிவிடலாமா என்று தோன்றுகிறது! என்ன இனிமை! என்ன தனிமை! மாயாவின் கண்கள் பசியால் வாடிய பிச்சைக்காரன் அறுசுவை உண்டியைக் கண்டதுபோல் தன்னைச் சுற்றியிருக்கும் கம்பீர எழிலை அள்ளி அள்ளிப் பருகின.
“இன்னமும் எவ்வளவு தூரம் இருக்கிறது?” என்று மெதுவாகக் கேட்டாள் மாயா.
“மாயா! திடீரென்று உனக்கு என்ன மென்மையும் பயமும் வந்துவிட்டன?” என்று சிரித்தான் வாசுதேவன்.
“இல்லை மாமா, இங்கே இருக்கும் இந்த இயற்கையின் ஏகாந்தத்திலே உரக்கப் பேசினாலே அநாகரிகம்போலத் தோன்றுகிறது.”
“மாயா கவியாக மாறிவிடுகிறாளே!” என்றாள் மல்லிகா.
சிற்றுண்டி புசிப்பதிலேயே லயித்திருந்த ராஜாமணி. இப்பொழுது அந்த வேலை முடிந்துவிட்டது என்று தீர்மானித்தவன்போல் தலை நிமிர்ந்தான்.
“என்ன சொல்லிக்கொண்டிருந்தீர்கள்?”
“மாயா கவிதை எழுத ஆரம்பித்துவிடுவாள் போலிருக்கிறது என்றேன்” என்று மல்லிகா பதில் சொன்னாள்.
“ஏன், அவளே ஒரு கவிதைதானே?” என்றான் ராஜாமணி.
மாயா அவனைச் சுட்டெரித்துவிடுபவள்போல் பார்த்தாள்; அவன் சிரித்தான். வாசுதேவனும் இதைக் கண்டு தகைத்துவிட்டு, தன் மனத்திலுள்ளே இதுவரை யோசித்துவந்ததை வெளியிட்டான். “ஆமாம், மாயா ஒரு கவிதை; மல்லிகா ஒரு எழில் சிற்பம் எப்படி?”
“ருக்மிணி?” என்று கேட்டான் ராஜாமணி.
“அவள் ஓர் ஓவியம். இது தெரியாதா?” என்றாள் மல்லிகா.’
இந்த மாதிரி நின்று சுவைக்கவேண்டிய பல கட்டங்கள், பேச்சுகள், விவரண விஸ்தாரங்கள், விவாதங்கள் இருக்கின்றன நாவலிலே. ஆனால், தமிழிலே எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்கமுடியாத புஸ்தகங்களுக்குத்தானே கிராக்கி அதிகம். அந்தக் கணக்குப்படி பார்த்தாலும்கூட ‘கேட்ட வர’த்துக்குத் தமிழ் நாவல் வாசகர்களிடையே நல்ல ஸ்தானம் உண்டு. கதை விருவிருப்பாகவும் தங்குதடையில்லாமலும் ஓடுகிறது. வேளாவேளைக்கு பஜனை முதலியன அந்த வேகத்தை அதிகப்படுத்துவது போலத் தோன்றினாலும், உண்மையில் அளவுபடுத்தி, கண்ணாடிக்குச் சட்டம் போட்டுக் காட்டுவதுபோலக் காட்டுகின்றன.
கிராமத்துச் சூழ்நிலை மாயாவைப் பரவசப்படுத்துகிறது. ஆனால், மனிதர்களின் பழக்க வழக்கங்கள்தான் சரியானவையல்ல என்று பி.ஏ. படித்தவளாகிய அவளுக்குத் தோன்றுகிறது. பஜனைக்குப் போனால் புருஷர்களுடன், அவர்கள் மத்தியில் வாசுவுக்குப் பக்கத்தில் உட்காருகிறாள் அவள். இது தானாகவே, அவளும் அறியாமல் திருந்துகிறது. ருக்மணி, ருக்மிணி என்று சொன்ன அந்தப் பெண், வாசு மாமாவுடன் பேசுவதுகூட இல்லை. ஒதுங்கி நிற்கிறாள், கட்டுப்பெட்டி என்று தீர்மானிக்கிறாள் மாயா. அவளுக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணமாகிவிடும் போலக்கூட இருக்கிறது. ஆனால், அப்படி நேர்ந்துவிடாமல் கேட்டவரம் பாளையப்பெருமாள் ஆசிரியையின் மனித யத்தனத்துடன் தடுத்துவிடுகிறார். ருக்மிணியும் படாடோபமற்ற எம்.ஏ. பட்டதாரி என்று கடைசியில் அறிந்துகொள்கிறாள் மாயா.
கிராமத்திலே அவள் சந்திக்கிற பலதரப்பட்ட மனிதர்களை நன்கு அறிந்தவர்கள் மதிப்பிடுவதுபோல மாயாவால் முதலில் மதிப்பிட இயலவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே! முதலில் புரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை அவள். பிறகு புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. பிறகு பூர்ணமாக அறிந்துகொள்கிறாள் என்று படிப்படியாக விவரித்திருக்கிறார் ஆசிரியை, மனசுக்கு உல்லாஸம் தருகிற ஒரு முறையில். ஊர்க் குடும்பங்களின் கதைகள் கொஞ்சம் அவள் மனதில் உருவாகி, ஒரு அர்த்தத்தைத் தருகின்றன. கேட்டும் கேட்காமலும், ஒட்டுக்கேட்டும் பார்த்தும் தெரிந்துகொள்கிறாள் அவள்.
மல்லிகாவின் அண்ணன் ராஜாமணி, தன் மனைவி லலிதாவை ஏதோ காரணத்தைக்கொண்டு ஒதுக்கி வைத்துவிட்டான். அவள் கையில் சிறு குழந்தையுடன் கேட்டவரம் பாளையத்துப் பெருமாளை வரம் கேட்டுக்கொண்டு வந்திருக்கிறாள். மல்லிகா தன் அண்ணனிடம் நேராகவே விஷயத்தைப் பிரஸ்தாபித்துப் பார்த்தாள். “யார் வீட்டிலோ வந்து இறங்கியிருக்கிறார்கள். நீ சம்மதப்பட்டு அழைத்துக்கொள்ளாவிட்டால், ஊரார் நான்கு பேர் பஞ்சாயத்துக்கு வருவார்கள். இப்பொழுதே எல்லோரும் உன்னையும் என்னையும் அவளையும் சதா பார்த்துக்கொண்டே யிருக்கிறார்கள். இதில் யாருக்கும் நிம்மதியில்லை. அந்தப் பெண்ணுக்குத்தான் கஷ்டம்!” அண்ணன் அதைப்பற்றி யோசிக்கவே மறுக்கிறான். பின்னர் இரண்டாவது நாள் அவன் ‘மலைக்கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள ஒரு கிணற்றுக்குப் போகக் கிளம்பினான். அங்கு யாருமே வரமாட்டார்கள்… நிதானமாகக் குளித்தான். பிறகு கிணற்றுப் படிக்கட்டிலேயே ஈரத்துணியுடன் உட்கார்ந்து, ராமாயண சுலோகம், கீத கோவிந்தம் முதலியவைகளைச் சொல்லிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தான்.
“அம்மா – ஆ – ஆ- அம்மா!” என்று ஒரு குழந்தையின் பயந்த கூக்குரல் கேட்டு, கண்ணைத் திறந்தான் ராஜாமணி. கிணற்றின் ஓரத்திலே ஒரு குழந்தையின் கிலிபிடித்த முகம் தெரிந்தது. தன் தங்கை மகள் சந்திரிகாவின் ஜாடையைக் கண்டான். அடி பாவி! குழந்தையைச் சாக விட்டுவிட்டு எங்கே ஒழிந்தாய் என்று வாய்விட்டே தன் தங்கையை வைதுவிட்டான் ராஜாமணி…
“ஹரே ராம்!” என்று ஒரு கூக்குரலுடன் ஒரு பெருமூச்சுவிட்டு, ஒரு தாவுத்தாவி, விழும் தறுவாயில் இருக்கும் மகவைப் பிடித்துவிட்டான் ராஜாமணி.
பசண்ண வெங்கடரமணன்னு பெயர் சொல்லிற்று குழந்தை. அம்மாவின் பெயர் லெளிதா என்றது. ராஜாமணிக்குச் சந்தேகம் இருந்ததா என்ன? உடம்பில் படிந்த சேற்றை அலசிவிடுவதுபோலத் தன்னைப் பந்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ள நினைத்தானே? அது சாத்தியமா? குழந்தையுடன் லலிதாவும் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
கிருஷ்ணராவைப் பார்த்தவுடனேயே மாயாவுக்குப் பிடிக்கவில்லை. “நல்ல மாதிரி முகத்திலேயே தெரிகிறதே!” என்றாள். ஆனால் அவன் கறுப்பு ஒட்டிக்கொள்கிற மாதிரி எப்படியோ ஒட்டிக்கொண்டான், அவன் அழகாகப் பாடினான். அதைக் கடுவம் பூனை சீறுகிறது என்றாள் மாயா. ஆனால், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று சலித்துக்கொண்டவள்போல் கேட்டாள் மாயா.
“மாயாதான்.”
மாயா துணுக்குற்றாள்.
“வாசு என்னடா வேண்டும், கிருஷ்ணா? என்று கேட்டதற்கும் ‘மாயாதான்’ என்று அப்பொழுதே அவளிடம் சொன்னேன்” என்றான் கிருஷ்ணராவ்.
மாயாவுக்கும் கிருஷ்ணராவ்தான் வேண்டும் என்று தோன்றத் தொடங்கிவிட்டது. கடைசியாக வந்துசேர்ந்த கலெக்டர், மாயாவின் தகப்பனார், விஷயத்தைப் புரிந்துகொள்ளாமல் என்னென்னவோ சொன்னார். வேண்டுமென்றேதான் சொன்னார். அவள் மனத்தை அவளுக்கே தெளியவைக்க வேண்டும் என்கிற முகாந்திரத்தில்தான் சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ள மாயாவுக்கு அனுபவம் போதாது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அவள் மாறிமாறி சீற்றமும் துக்கமும் அடைந்தாள். அதற்கு அவசியமில்லை என்று அறிந்தபின் ஆனந்தம் அளவுகடந்ததாகத்தானே இருக்கும்?
பத்தொன்பது அத்தியாயங்களில் – அத்தியாயங்களை அந்தாதியாக அமைத்திருப்பதும் சின்ன விஷயம்தான் எனினும் திருப்திகரமாகவே இருக்கிறது – நிறைவு பெறுகிறது இந்த நாவல். ஆண்கள் பெண்கள் என்று இருபது பேர்வழிகளை நாம் சற்றுத் திருப்திகரமாகவே அறிந்துகொள்கிறோம். ஒவ்வொரு நிமிஷமும் பஜனை ஒலியும் ராம நாமமும் காதில் நிறைந்திருக்கிறது. கதையாக ஒரு நிறைவு பெற்றுவிட்ட இந்த நாவலைப்போலவே வாழ்வும் சுலபமாக, சுபமாக சிக்கறுக்கக்கூடிய, புதிர்களில்லாத, ஆழமில்லாத ஒரு கொள்கையுடன் அமைந்துவிடுமானால், நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அது ஒருசிலருக்குத்தான் சாத்தியப்படும்!
‘படித்திருக்கிறீர்களா?’ (தொகுதி 2), செப்டம்பர் 1958
*
3. சத்தியமேவ – கிருத்திகா

மேலைநாடுகளில் விமரிசகர்கள் எல்லோரும் sensibility என்று சொல்லுவார்கள் – அந்த sensibility யுடன் எழுதப்படுகிற தமிழ்க் கதைகள் நாவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. எந்த நாவலைப் படித்தாலும், எந்தக் கதையைப் படித்தாலும் ஒரே மாதிரியாக இருப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது. இதற்கு விலக்காக உள்ளவர்கள் என்று தமிழ் இலக்கியாசிரியர்களிலே விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்.
கிருத்திகா என்கிற புனைபெயர் கொண்ட புது டில்லி வாழ் அம்மணி எழுதியுள்ள இரண்டாவது நாவலான ‘சத்தியமேவ (ஒரு கற்பனை)’ என்கிற நாவலைப் படிக்கும்போது புது டில்லி அரசியல் வாழ்வை மனத்தில் கொண்டு ஒரு பத்து கதாபாத்திரங்களை தமிழில் இதுவரை இல்லாத ஒரு sensibility யுடன் ஆசிரியை உருவாக்கியிருக்கிறாரே என்று உற்சாகத்தடன் படிக்க முடிந்தது. ஆசிரியை உருவாக்கித் தருகிற பாத்திரங்கள் முக்கியமா, அல்லது அந்தப் பாத்திரங்களை நடமாடிச் செயல்பட வைக்கிற அந்தச் சூழ்நிலை முக்கியமா என்கிற சந்தேகம் எனக்கே ஏற்பட்டது. மீண்டும் ஒருதரம் பல பகுதிகளையும் திரும்பிப் படித்தபின்தான் இரண்டுக்குமே முக்கியத்துவம் தந்து கிருத்திகா எழுதியுள்ளதைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.
தலைநகரில் வம்பு, வதந்தி, சூழ்ச்சி, சிறு பெரு போராட்டங்கள், அரசியல் பின்னணி, மந்திரியின் பொதுநலம் வேட்டல், சுயநலம், குமாஸ்தாக்கள், உயர்தர அதிகாரிகள், மந்திரிகள், இவர்களின் மனைவிமார், நல்லது செய்யும் கோடீசுவரன், பட்டும் படாமலும் இருக்கும் எல்லாமறிந்த ஒரு பத்திரிகாசிரியன், ஒரு விஞ்ஞானி, அந்த விஞ்ஞானியின் உதாசீனப்படுத்தப்படுகிற காதலி, லட்சிய யுவதி, எதற்கும் துணிந்த தேச சேவகி என்று பலரையும் நாவலிலே நடமாட விட்டு ஒரு கதையை மிக மிக நன்றாகவே உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா.
எனக்குச் சங்கீதத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லாத காரணத்தினால் ஆசிரியையினுடைய தலைப்புகளின் தகுதி புரியவில்லை. அதனால் பாதகமில்லை. தமிழுக்குக் கிடைத்த ஒரு நல்ல நாவலாக – மற்ற நாவல்களைப் போல இல்லாத, ஒரு லேசான விஷயத்தை sensibility யுடன் எழுதப்பட்ட நாவல் என்று பாராட்டப்படவேண்டியது இது.
சத்தியமேவ (ஒரு கற்பனை) – கிருத்திகா
விற்பனை: மெர்க்குரி புத்தகக் கம்பெனி, கோயமுத்தூர் – விலை ரூ. 5.00.
‘இலக்கிய வட்டம்’, இதழ் 4, 3-1-1964
***
4. புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்

நாவல்களில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று திட்டவட்டமாக முன்கூட்டியே சொல்லிவிட முடியாது – ஒரு நாவலாசிரியரின் திறமையை, கலையை நாம் மதிப்பதே அவர் நாம் எதிர்பாராததைச் செய்துவிடும்போதுதான். வாழ்க்கையெனும் சோலையையோ, பாலைவனத்தையோ, இரண்டுமுள்ள நிலப்பரப்பையோ, வஸந்த காலத்திலோ, கடுங்கோடையிலோ அல்லது மாரியிலோ பார்க்கும்படியாக ஒவ்வொரு நாவலும் ஒரு சிறு சாளரத்தைத் திறந்து காட்ட வேண்டும் என்று பொதுவாகச் சொல்லலாம். தமிழில் வருஷத்தில் பத்திருபது நாவல்கள் – அல்லது அதிகம்கூட எழுதி வெளியிடப்படுகின்றன எனினும் சாளரம், சாளரத்தின் மூலம் அமையும் காட்சி, உலகம் அநேகமாக சிறப்பாக இருப்பதில்லை – உண்மையாக இருப்பதில்லை – கலை அழகுடன் கூடியதாக இருப்ப தில்லை. பெரும்பாலான நாவலாசிரியர்கள் என்று தமிழில் சொல்லப்படும் தொடர்கதாசிரியர்கள் வாசகர்கள் எதிர்பார்ப்பதையே திரும்பத் திரும்ப வேறு வார்த்தைகளில் அளிக்கத் தங்களைப் பழக்கிக்கொள்கிறார்கள் – அதிலேதான் அவர்கள் வெற்றி இருப்பதாக எண்ணுகிறார்கள்.
‘புத்தம் வீடு’ என்கிற நாவல் தொடர்கதையாக வராத, எழுதப்படாத, நாவல். நாகர்கோயில் (தென் திருவாங்கூர்) தமிழர்கள், கிறிஸ்தவர்கள், வாழ்வு என்னும் சோலையை நாம் காண ஒரு சாளரத்தைத் திறந்து தருகிறது. இது ஆசிரியையுடைய முதல் நாவல்தான் எனினும் ஒரு நிதானத்துடன், தடுமாறாமல், அதிகமாகச் சொல்லாமல், விளங்க வைக்கும் ஆற்றலுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதாநாயகி, கதாநாயகியின் சகோதரி, குடிகாரத் தகப்பன், வியாபாரியான (ஆனால் வெற்றி காணாத) அவர் தம்பி, அந்தத் தம்பியின் மனைவி, குடும்பத்தின் தலைவரான கண்ணப்பச்சி, இவர்கள் தவிர சுதாநாயகனாக வருகிற தங்கராஜ், அவன் தகப்பன், உற்றார் உறவினரில் சிலர், உபதேசியார் இருவர், வைத்தியர் என்று நாவலில் வந்துபோகிற கதாபாத்திரங்கள் எல்லோரும் மிகவும் கச்சிதமாக, சிறப்பாக, நினைவிலிருக்கும்படியாக உருவாகியிருக்கிறார்கள். நாவலில் பல காட்சிகள் முக்கியமாக, கண்ணப்பச்சியை (அந்த வாழ்க்கை போலவே) மையமாகக் கொண்டவை, அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. வார்த்தைகளைத் கொட்டி உணர்ச்சிகளை மழுங்கிவிடச் செய்யும் காரியத்தை ஆசிரியை செய்யவில்லை என்பது இந்த நாவலின் தனியோர் சிறப்பாகச் சொல்ல வேண்டும். ஒரு கொலையை விவரிக்கிற இடத்திலும்கூட, மற்றும் அக்காள் தங்கை சண்டையின்போதுகூட, மிகவும் நிதானமாக வார்த்தைச் செட்டுடன் ஆசிரியை எழுதியிருப்பதைத் தனியோர் திறனாகச் சொல்ல வேண்டும்.
ஆர். ஷண்முகசுந்தரம் கோவை ஜில்லா கிராமத்துக்கு உயிர் கொடுத்துள்ள அளவில் (‘நாகம்மாள்’, ‘அறுவடை’) ஹெப்ஸிபா ஜேசுதாசன் பனைவிளை கிராமத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
பிராந்திய மொழிப்பிரயோகம் தமிழின் எதிர்காலம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் -தூய தமிழ்வாதிகள் என்னதான் கரடியாகக் கத்தினாலும் – என்பதைக் காட்டுகிறது. தமிழுக்கு மிகவும் சிறப்பானதோர் நல்ல நாவலை அளித்துள்ளார் ஹெப்ஸிபா ஜேசுதாசன்.
புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 5. ரூ. 3-00 – 192 பக்கங்கள்
-‘இலக்கிய வட்டம்’, இதழ் 19, 31-7-1964
*
5. பிஞ்சு முகம் – ஆர். சூடாமணி

குமாரி சூடாமணியின் கதைகளிலே ஒரு ஏக்கம் இருப்பது அவர் கதைகளுக்கு ஒரு தனித்தன்மையைத் தருகிறது. வாழ்க்கை பூராவையும் கண்டறிந்த ஞானத்துடன் தத்துவ போதனை செய்ய அவர் முன்வரவில்லை என்பதும் திருப்தி தருகிறது. அதே அளவில் கதையைச் சிறுகதையாக்கும் வார்ப்பும் வந்துவிடுகிறது. இருந்தும் அவர் சிறுகதைகள் பத்திரிகைத் தரத்தை – அதில் மிக உயர்ந்த தரத்தையேயானாலும் தாண்டுவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் அவர் உணர்ச்சிகளுக்கு அதிகமாக இடம் தந்து, முக்கியத்துவம் தந்து, எழுதுகிறார். உணர்ச்சி கூடாதா, கண்ணீர்த்துளி வர உள்ளுருக்குதல் தவறா என்று கேட்பவர்களுக்கு, அதன் சமனமே பல இடங்களிலும் இலக்கியமாக அமைகிறது என்று சொல்லவே எனக்குத் தோன்றுகிறது.
பிஞ்சு முகம் – ஆர். சூடாமணி – கலைஞன் – ரூ. 3-00.
‘இலக்கிய வட்டம்’, 12-2-1965
*
ஸ்ரீநிவாச கோபாலன்: அழிசி பதிப்பகத்தின் ஆசிரியர். நெடுங்காலமாக மறுபதிப்பு காணாத அரிய நூல்களை மீண்டும் பதிப்பிப்பது, இலக்கிய முன்னோடிகளின் நூல் வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவது ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 2017 முதல் நூல்களை வெளியிட்டு வருகிறார். இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.